Showing posts with label avnv. Show all posts
Showing posts with label avnv. Show all posts

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 4 11

அதிரைநிருபர் பதிப்பகம் | July 31, 2013 | , , , ,


அல்லாஹ்வின் திருப்பெயரால்..

முந்தைய அத்தியாயத்தில் ஈமானில் உறுதிமிக்க தியாகச் செம்மலாகத் திகழ்ந்த அன்னை ஹதீஜா (ரலி) அவர்களைப் பற்றிய வரலாற்றுச் சம்பவத்தைங்களைப் பார்த்தோம். அதுபோல் மற்றுமொரு ஓர் ஈமானியத் தாயின் உறுதியான உயிரோட்டமான ஈமானைப் பற்றிய ஒரு சில வரலாற்றுச் சம்பங்களைப் பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் நம்முடைய தலைச்சிறந்த மூதாதையர்களில் முன்னணியில் இருப்பவர்கள் தான் நம் அருமை நபி இபுறாஹீம்(அலை) அவர்கள். அவர்களின் மனைவி அன்னை ஹாஜரா(அலை) அவர்களின் வயது முதிர்ந்த பருவத்தில் அந்த தம்பதியர் அவர்கள் இருவருக்கும் இஸ்மாயில்(அலை) என்னும் அழகிய குழந்தை பிறக்கிறது. (மேலும் பார்க்க அல்குர்ஆன் 14:39) தவமாய்த் தவமிருந்து கிடைத்த அந்த பொக்கிஷமாக நபி இஸ்மாயில்(அலை), இவர்களின் வழித்தோன்றலில் வந்தவர்கள் தான் நம்முடைய ரஹ்மத்துலில் ஆலமீன் அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள். நபி இபுறாஹீம் (அலை) அவர்களின் வழியைப் பின்பற்றுமாறு அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகிறான் (மேலும் பார்க்க அல்குர்ஆன் 3:95)

நபி இபுறாஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளை வருகிறது, அன்னை ஹாஜரா (அலை) அவர்களையும், பால்குடிப் பச்சிளம் குழந்தை நபி இஸ்மாயில் (அலை) அவர்களையும் மக்காவின் மானுட புழக்கம் இல்லாத அந்த வெட்டவெளி பாலைவனத்தில் விட்டு விட்டுச் செல்லும்படி அல்லாஹ் கட்டளையிடுகிறன். நபி (இபுறாஹீம் அலை) அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்தவர்களாக எவ்வித மறுதலிப்பின்றி அன்றைய மக்கா பிரதேசத்தை விட்டு செல்ல ஆரம்பத்து விடுகிறார்கள். அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் நபி இபுராஹீம் (அலை) அவர்களிடம் கேட்கிறார்கள் “பச்சை பயிர்கள் அற்ற இந்த வரண்ட பூமியில் என்னை விட்டுவிட்டு எங்கே செல்கிறீர்கள்” இபுறாஹீம் அலை) அவர்களிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. அன்னை ஹாஜரா (அலை) மீண்டும் “அல்லாஹ் கட்டளையிட்டானா?” என்றும் கேட்கிறார்கள், அதற்கு இபுறாஹீம் (அலை) அவர்கள் “ஆம் அல்லாஹ் தான் இப்படி விட்டு விட்டுப் போகச் சொன்னான்” என்று பதிலுரைத்தார்கள்.

உடனே அந்த ஈமானியத் தாயிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் இஸ்லாமிய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவைகள். “அப்படியானால் அல்லாஹ் எங்களை கை விடமாட்டான்” என்று தன்னுடைய ஈமானிய உறுதியை கியாம நாள் வரை மக்களும் சொல்லும் விதமாக அந்த தியாகப் பெண்மணி அன்னை ஹாஜரா(அலை) அவர்கள் சொன்னார்கள். பின்னர், அல்லாஹ்வே அன்னை ஹாஜராவுக்கும், நபி இஸ்மாயீலுக்கும் (அலை) உணவளித்தான். ஸஃபா-மர்வா மலைக் குன்றுகளுக்கு இடையே அன்னை ஹாஜரா அவர்கள் தண்ணீருக்காக அங்குமிங்கும் ஓடினார்கள், அல்லாஹ் ஜம்-ஜம் என்ற நீரூற்றை வரவைத்து, இவ்வுலக இறுதி நாள் வரை அன்னை ஹாஜராவின் ஈமானை ஞாபகப்படுத்தும் விதமாக செய்துள்ளான். (மேலும் பார்க்க புகாரி:3364 Volume :4 Book :60)

அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் அல்லாஹ் மேல் வைத்திருந்த நம்பிக்கை, அவர்களின் ஈமானிய உறுதியில் சிறிதளவேனும் நம்மிடம் ஈமானிய உறுதி அல்லாஹ் மேல் முழு நம்பிக்கையாக இருக்கிறதா என்பதை சிந்திக்க வேண்டும். 

அல்லாஹ்வின் தீனை எத்திவைக்க இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக ஒரு ஆண் வேறு ஊருக்கு செல்ல நினைத்தால், நம் தாய் தந்தையர்கள், மனைவிமார்களிடம் அன்னை ஹாஜரா ஈமானிய உறுதியுடன் சொன்னது போன்ற வார்த்தையை எதிர்ப்பார்க்க முடியுமா? நபி(ஸல்) அவர்களின் அருமை மனைவி அன்னை ஹதீஜா (ரலி) அவர்கள் சொன்ன ஆறுதல் வார்த்தைகளைப் போன்று நாம் செவியுற முடியுமா?

பொருளாதாரத்தில் இலட்சங்கள் செலவு செய்து கடமையான ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கு செல்கிறோம், அங்கே ஜம்-ஜம் நீரையும் பருகுகிறோம் அதனை ஊரில் இருக்கும் சொந்தங்களோடு பகிர்ந்து கொள்ளவும் எடுத்து வருகிறோம், அந்த தருணத்தில் ஈமானிய தாய் அன்னை ஹாஜரா அவர்கள் செய்த தியாகத்தை எண்ணி அவர்கள் பட்ட கஷ்டத்திற்காக என்றைக்காவது நாம் கண்ணீர் சிந்தியிருப்போமா? தன்னுடைய ஈமானின் உறுதியோடு தன் மகனின் உயிரைக் காப்பாற்ற போராடிய போராட்டத்தால் கண்டெடுத்த ஜம்-ஜம் தண்ணீரை ஒரு புனித நீராக மட்டுமே காண்கிறோமே, அதை அல்லாஹ்வுக்காக செய்த தியாகத்தின் ஒரு அத்தாட்சியாக நாம் கண்டு அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் ஈமானிய உறுதியை நினைவு கூர்ந்து நம்முடைய ஈமானை  வலுப்படுத்த முயற்சித்திருப்போமா?

ஈமானைச் சோதனை செய்து பார்க்க நம்முடைய சமுகத்தின் முன்னோடி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு மீண்டும் அல்லாஹ்வின் கட்டளை வருகிறது, தன்னுடைய மகனை அல்லாஹ்வுக்காக அறுத்து பலியிட வேண்டும் என்ற கட்டளை வருகிறது.

வயது முதிர்ந்த பருவத்தில் கிடைத்த பொக்கிஷம், நீண்ட காலம் தன் மனைவியையும், மகனையும் பிரிந்திருந்தார்கள் அல்லாஹ்வின் தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள். தன்னுடைய மகனை அறுத்து பலியிட தயாராகிறார்கள் தந்தை இப்றாஹீம் (அலை) அவர்கள், தன் அருமை மகன் இஸ்மாயிலிடம் கேட்கிறார்கள், “அல்லாஹ் உன்னை அறுத்து பலியிட கட்டையிட்டுள்ளான் என் அருமை மகனே உன்னுடைய நிலை என்ன?” அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் “எனதருமை தந்தையே அல்லாஹ் ஏவியதை நீங்கள் செய்யுங்கள், என்னை பொறுமைசாலியாக காண்பீர்கள்” என்று தன்னுடைய ஈமானின் உறுதியை உலகுக்கு காட்டிய முன்மாதிரி தியாகத்தின் சுடராகத் திகழ்ந்தார்கள் இஸ்மாயீல் (அலை) அவர்கள்.

நம்முடைய பிள்ளைகள் மார்க்கச் சூழல் கல்வியோடு உலக கல்வி படிக்க அரபு மதர்ஸாவோடு ஒன்றிணைந்த பள்ளிக் கூடத்திலோ அல்லது வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ படிக்க வைக்க வேண்டும், குறைந்தபட்சம் இந்த தியாகத்தை செய்ய நாம் பல முறை யோசிக்கிறோம், மார்க்க கல்வியை கற்கப்போகும் அந்த பிள்ளையின் எதிர்காலம் என்னவாகும் என்கிற ஒருவித குழப்பத்தோடு தள்ளாடுகிறோம். ஆனால், யூத கிருஸ்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வித் திட்டமான இந்த அற்ப உலக கல்விக்காக கண்டம் விட்டு கண்டம் தாண்டி படிக்க வைக்க உடனே முடிவு செய்து தன் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நம்பி அனுப்பி வைக்கிறோமே, மார்க்க கல்வியோடு உலக கல்வி பயிலப்போகும் நம் பிள்ளையின் எதிர்காலத்தை அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பான் என்ற நம்பிக்கை ஏன் நம்மிடன் உறுதியாக வர மறுக்கிறது?

எத்தனை ஆடுகள், மாடுகள் உணவுக்காவும், உலுஹியாவுக்காகவும் அறுத்திருப்போம்? எத்தனை விதமான பொட்டலங்களாக அந்த கறியினை பங்கு வைத்திருப்போம்? அவன் இத்தனை ஆடு / மாடு அறுத்திருக்கிறான், நாம் அதைவிட இரண்டு கூடுதலாக அறுக்க வேண்டும், அவன் மாடு கொடுக்கிறான், நான் ஒட்டகம் கொடுக்க வேண்டும் என்று மனிதர்களுக்காக போட்டி போடுகிறோமே, என்றைக்காவது அந்த தியாகங்கள் செய்த தாய் தந்தையரான இபுறாஹீம் (அலை) ஹாஜரா (அலை) அவர்களின் அருமை மகனார் இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் ஈமானிய உறுதியையும் அவர்கள் அல்லாஹ் மேல் வைத்திருந்த முழு நம்பிக்கையையும் ஞாபகப்படுத்திக் கொண்டு ஆடு / மாடு / ஒட்டகம் அறுத்து பங்கிட்டு வைத்திருக்கிறோமா? அதன் மூலம் நம்முடைய ஈமானை உறுதிப்படுத்த முயற்சி செய்திருப்போமா? பங்கு வைத்த கறியில் பற்றாக்குறை என்பதற்காக கடையில் கறி வாங்கி உலுஹிய்யா என்று அல்லாஹ்வை ஏமாற்றி மனிதர்களை திருப்திபடுத்தும் நிலையில் அல்லவா நம்முடைய ஈமான் பலவீனமாக உள்ளது என்பதை என்றைக்காவது சிந்தித்திருப்போமா?

அல்லாஹ்வின் கட்டளையை நம்பி ஈமானிய உறுதிமிக்க அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் போன்றவர்கள் வளர்ப்பில் தான் ஈமானில் உறுதிமிக்க பொறுமைசாலியான இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ்வின் உதவியால் வளர்த்தெடுக்க முடிந்தது. அல்லாஹ்வின் கட்டளைப்படி நடக்கும் ஈமானில் உறுதிமிக்க தாய் தந்தையின் துஆ மற்றும் அவர்களின் வளர்ப்பால் வளர்ந்த பிள்ளைகள் பொறுமைசாலியாக இருந்து இஸ்லாத்திற்காக தியாகம் செய்யும் பிள்ளையாக அல்லாஹ்வின் உதவியால் வாழ முடியும், இதுவே நாம் இந்த அத்தியாயத்தில் பெறும் படிப்பினை.

தந்தை, தாய், மகன் ஆகியோரின் ஈமானில் நிலைத்த உறுதிக்கு முன்மாதிரியான இப்றாஹீம் (அலை), அன்னை ஹாஜரா (அலை) இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் வாழ்விலிருந்து படிப்பினை பெற்று நம்முடைய ஈமானை உறுதி படுத்த முயற்சி செய்வோம். நம் சந்ததியரை ஈமானிய உறுதியுடன் இறுதிநாள் வரை நிலைத்திருக்க பக்குவப்படுத்துவோம். அல்லாஹ் நம் எல்லோரையும் ஈமானில் உறுதி மிக்கவர்களாக ஆக்கி அருள்புரிவானாக.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
M தாஜுதீன்

குறிப்பு : கட்டுரையில் மேலும் பார்க்க என்று அடைப்புக்குறிக்குள் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் எண்கள் மட்டும் இடப்பட்டிருக்கும் நோக்கம் நீங்களும் தேடியெடுத்து அல்குர்ஆனையும் ஹதீஸ் களையும் புரட்டிப் பார்த்து அறிய வேண்டும் என்பதற்காகவே.

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும்..! - தொடர் - 3 24

அதிரைநிருபர் பதிப்பகம் | July 24, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்.

சென்ற அத்தியாயத்தில் ஈமானில் உறுதிமிக்கவர்களாக அல்லாஹ் குறிப்பிட்ட இரு பெண்மணிகளில் ஃபிர்அவ்னுடைய மனைவி ஆசியா அவர்கள் பற்றிய வரலாற்று சம்பவங்களில் அவர்களுடையை ஈமானின் உறுதியை கண்டோம்.

இஸ்லாமிய வரலாற்று ஏடுகளைப் புரட்டி பார்த்தால் இஸ்லாத்தின் பண்புகளுக்கும், தியாங்களுக்கும் முன்னுதாரணமாக இருப்பவர்கள் நம்முடைய ஈமானிய தாய்மார்கள். இபுறாஹீம் (அலை) அவர்களின் மனைவி அன்னை ஹாஜரா(அலை) அவர்கள், ஈசா (அலை) அவர்களின் தாய் மர்யம் (அலை) அவர்கள் என்று தொடர்ந்து அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களின் மனைவியர்களில் அன்னை கதீஜா (ரலி) அவர்களை தொடர்ந்து இன்னும் ஏராளமான ஈமானிய, வீரமிக்க தியாகப் பெண்மணிகளின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து பெறவேண்டிய படிப்பினைகள் நிரம்பி இருக்கிறது.

நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த நிகழ்வு இஸ்லாமிய வரலாற்றில் நடைபெற்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. புகாரி போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹிரா குகையில் வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்களின் மூலம் அல்லாஹ்வால் நபி(ஸல்) அவர்கள் நபித்துவம் (வஹீ) கிடைக்கபெற்றது, நபித்துவம் பெற்ற நபி(ஸல்) அவர்கள் உள்ளம் நடு நடுங்கியவர்களாக, தன் அருமை மனைவி அன்னை ஹதீஜா அவர்களிடம் “என்னை போர்த்துங்கள் என்னை போர்த்துங்கள்” என்று சொல்லியவர்களாக நபி(ஸல்) அவர்கள் பதற்றமான நிலையுடன் வருகிறார்கள். அன்று அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் முஸ்லீமாக இருக்கவில்லை, ஆனால் அல்லாஹ்வை வாயளவில் நம்பியவர்களாக இருந்தார்கள், அல்லாஹ் தான் நம்மை படைத்தான் அவன் தான் நம்மை பாதுகாப்பான் என்ற நம்பிக்கை கொண்ட மக்காவாசிகளில் ஒருவராக மட்டுமே இருந்தார்கள். அல்லாஹ்வின் இல்லம் கஃபத்துல்லாவை இடிக்க வந்த அப்ரஹா என்ற மன்னனை, அபாபீல் பறவை கொண்டு அல்லாஹ் அழித்ததை மக்காவின் மலைகளில் நின்று அல்லாஹ்வின் வல்லமையை இலவசமாக கண்டுகழித்த அந்த மக்கத்துவாசிகளில் ஒருவராக அல்லாஹ்வை நாவளவில் நம்பியவர்களாக இருந்தார்கள்.

தன்னுடைய கணவர் பதற்றத்துடன் வேர்த்து விறுவிறுத்து வருகிறார், இங்கு அன்னை ஹதீஜா(ரலி) அவர்களின் அனுகுமுறை தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பெரும்பாலான மார்க்க அறிஞர்களால் எடுத்துரைக்கப்படுகிறது.

இது போன்ற நியாயமான சந்தர்ப்பத்தை நம்முடைய வாழ்வில் நடைபெறுவதை கொஞ்சம் நாம் அவதானிக்க கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ்வுடைய பள்ளியில் மார்க்கத்துக்கு விரோதமான காரியம் நடைபெறுகிறது, அதனை ஒருவர் தடுக்கிறார் அல்லது கண்டிக்கிறார். இதனால் பிரச்சினைகள் ஏற்படுகிறது. பள்ளிவாசலை விட்டு தன் வீட்டிற்கும் வருகிறார். உடனே செய்தி கேள்விபட்ட வீட்டிலுள்ளோர்களின் அடுத்த்டக்கட்ட கேள்வி அல்லது கண்டிப்பு “உங்களுக்கு / உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை? யாரு எக்கேடு கெட்டு போனால் என்ன? ஏன் இந்த ஊர் வம்பு?” என்று சொல்லி அல்லாஹ்வின் மார்க்கத்தை மற்றவர்கள் குழி தோண்டி புதைத்தாலும், நமக்கு கவலையில்லை நாம் பிரச்சினையில்லாமல் சந்தோசமாக இருந்தால் போதும் என்று சுயநலவாதிகளாக அல்லவா நாம் உள்ளோம்.

ஆனால் நபி(ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட அந்த இறுக்கமான ஒருவித மனநிம்மதியற்ற சூழலில் தனக்கு ஏதோ தீங்கு நடந்து விட்டது என்று எண்ணி வருந்திய நிலையில் இருந்தார்கள். அந்த சந்தர்பத்தில் தான் அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் கூறினார்கள். “நீங்கள் நினைப்பது போல் உங்களுக்கு எந்த தீங்கும் வரவில்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அல்லாஹ் உங்களை இழிவுபடுத்த மாட்டான், அவன் உங்களை கேவலப்படுத்த மாட்டான். ஏழைகளுக்கு உதவி செய்கிறீர்கள், பிரச்சினைகளில் அவதியுறுபவர்களுக்கு உதவி செய்கிறீர்கள், அனாதைகளை ஆதரிக்கிறீர்கள், குடும்பத்தவர்களை அனுசரித்து நடக்கிறீர்கள், விருந்தாளிகளை கண்ணியப்படுத்துகிறீர்கள். இப்படிப்பட்ட நல்ல மனிதரை அல்லாஹ் நிச்சயம் இழிவுபடுத்தமாட்டான்” இப்படியாக அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் ஆறுதல் கூறியதோடு அல்லாமல். ஒரு முக்கியமான வேலையைச் செய்கிறார்கள், முந்தைய வேதமான இன்ஞ்சீல் வேதத்தை கற்றறிந்த தன்னுடைய சிறிய தந்தையின் மகனார் ‘வரகத்து இப்னு நவ்ஃபுல்’ அவர்களிடம் அழைத்து சென்றார்கள்.

வரகத்து இப்னு நவ்ஃபல் அவர்கள் நபி(ஸல்) அவர்களைப் பார்த்து சொல்கிறார், “உங்களிடம் மூஸாவிடம் வந்த நாமூஸ் என்ற ஜிப்ரீல் வந்திருக்கிறார்”. என்று இஞ்சீல் வேதத்தில் உள்ள உண்மையை எடுத்துச் சொல்லி, முஹம்மதே நீங்கள் ஜிப்ரீல் கொண்டு வரும் இறை செய்தியை வைத்து பிரச்சாரம் செய்ய வேண்டும், அப்படி நீங்கள் பிரச்சாரம் செய்யும் போது உங்கள் மக்களை உங்களை ஊரைவிட்டு விரட்டுவார்கள் என்ற மிகப்பெரிய அதிர்ச்சியான செய்தியைச் சொல்கிறார் அந்த வரகத்து இப்னு நவ்ஃபல். நபி(ஸல்) அவர்கள் என் மக்கள் என்னையுமா ஊரைவிட்டு துரத்துவார்கள் என்று ஏங்கியவர்களாகக் கேட்டார்கள். இந்த சந்தர்ப்பத்தில்தான் அன்னை ஹதீஜா(ரலி) அவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். 

நம்முடைய பெண்களாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? “உங்களுக்கு ஏதோ பேய் பிசாசு பிடித்திருக்கிறது” தட்டு தாயத்து என்று குஃப்ரின் பக்கம் இழுத்துச் செல்லப்பட்டிருப்போம், ஜின் வைத்தியம் என்று போலி வைத்தியங்களுக்கு நம்முடைய ஈமானை பறிகொடுத்திருப்போம். ஆனால் வார்த்தை அளவில் அல்லாஹ்வை நம்பிய அந்த ஈமானியப் பெண் அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு ஆறுதல் கூறி இஸ்லாத்தை ஏற்றதோடு அல்லாமல் தன்னுடைய செல்வத்தாலும், உடமைகளாலும், உள்ளத்தாலும் தூய இஸ்லாத்திற்காக தியாகம் செய்தார்கள். 

அன்னை ஹதீஜா(ரலி) அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த பரிசு என்ன தெரியுமா? அன்னை ஹதீஜா அவர்களுக்கு சலாம் சொல்லச் சொல்லி ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ் கூறி, அவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு அமைதியான மாளிகை கட்டப்பட்டுள்ளது என்று நன்மாராயம் கூறுங்கள் என்று அல்லாஹ் தன்னுடைய உண்மை அடியார் மீது அருள் பொழிந்தான் என்று வரலாறுகளில் படிக்கும் போது நம் கண்கள் கலங்குகிறது. 

ஒரு ஊரின் பெரியவர், அல்லது நல்ல அந்தஸ்தில் இருப்பவர், ஏன் மார்க்க பிரச்சாரம் செய்யும் ஆலிம் யாராவது நம் ஊருக்கு வந்திருந்து நம்மைக் கண்டதும் அவர் சலாம் சொல்லும் போதும் எப்படி நம்முடைய உள்ளம் சந்தோசப்படும், இது ஒரு இயல்பான அன்றாட நடவடிக்கைகள், ஆனால், யார் யாருக்கு சலாம் சொல்வது?  இந்த உலகில் இறுதி இறைத்தூதர் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களின் மூலம் உலகின் முதல் பெண்மணியாக இஸ்லாத்தை ஏற்ற அன்னை ஹதீஜா(ரலி) அவர்களுக்கு அல்லாஹ் சலாம் சொன்னான் என்றால், இந்த பாக்கியம் அவர்களுக்கு எதனால் கிடைத்தது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 

இஸ்லாத்திற்காக இவ்வுலக இன்பங்களை இழந்தார்கள், தன்னிடம் இருந்த அனைத்து பொருளாதாரத்தையும் இஸ்லாத்திற்காக அற்பனித்தார்கள் அந்த செல்வ சீமாட்டி. அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களின் மிகவும் பிரியமான மனைவி அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள். அல்லாஹ்விடமிருந்து சலாத்தையும், சொர்க்கத்தில் தனக்கான வீட்டையும் பெற்றுக் கொண்டவர்கள்.

நம்மில் ஓவ்வொரு இஸ்லாமிய சகோதரனும், சகோதரியும் தங்களுடையை மனசாட்சியைத் தொட்டு சிந்தித்துப் பாருங்கள். மார்க்க விசயத்தை பேசும்போது பிரச்சினை என்று வந்தவுடன் வீட்டில் உள்ளோர் தனது பிள்ளையைப் பார்த்தோ, மனைவி தன் கணவனை பார்த்தோ அல்லது ஒரு கணவன் தன் மனைவியை பார்த்தோ  “அல்லாஹ்வின் மார்க்கத்தை தானே பேசினீர்கள், குர்ஆன் ஹதீஸை தானே பேசினீர்கள், ஹக்கை தானே எடுத்துச் சொன்னீர்கள் அல்லாஹ் உங்களைக் கைவிட மாட்டான், அல்லாஹ் உங்களை பாதுகாப்பான் என்று சொல்லும் பிறப்பின் அடிப்படையில் முஸ்லீம்களாக வாழ்ந்து வரும் பெண்களையும் / ஆண்களையும் இன்று பார்க்க முடியுமா?

நபித்துவத்தின் 10ம் ஆண்டு நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய அருமை மனைவி அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் மரணமடந்த போது நபி(ஸல்) அவர்கள் மிகவும் கவலையுற்றார்கள். இஸ்லாத்தில் அந்த ஆண்டை கவலைக்குரிய வருடம் என்று வர்ணித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் எத்தனையோ நெருக்கமானவர்களை இழந்திருக்கலாம், எத்தனையோ சொத்துக்களை இழந்திருக்கலாம், ஆனால் இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக தன்னுடைய பொருளாலும், உடலாலும், உணர்வுகளாலும் பாடுபட்ட ஒரு சொத்தையை அல்லவா நான் இழந்துள்ளேன் என்று சொல்லி கவலையுற்றார்கள் நபி(ஸல்) அவர்கள். செல்வங்கள் நிறைந்த பெண்களாக உள்ள மனைவிமார்கள் இஸ்லாத்திற்காக தங்களுடைய பொருளாதாரத்தை செலவழித்த அன்னை ஹதீஜாவுக்கு எடுத்துக்காட்டாக வாழ்கிறார்கள் என்று நம் பெண்கள் யாரையாவது உதாரணமாக இன்று காட்ட முடியுமா?

அன்னை ஹதீஜா(ரலி) அவர்களின் வாழ்வின் மூலம் நமக்கு மிகப்பெரும் படிப்பினைகள் உள்ளது.

இவ்வுலகில் முஸ்லீமாக வாழும் போது பல இன்னல்கள், சிரமங்கள் ஏன் நம் சகோதரர்களின் உயிர் பறிப்போகும் நிலை ஏற்பட்டாலும் நம்முடைய ஈமானை பறிகொடுத்து விடக்கூடாது.

அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் வாழ்வைப் போல் வாழ்ந்து அவர்களின் நற்கருமங்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, இஸ்லாத்திற்காக தியாகம் செய்து மரணிக்க வேண்டும், எப்படி நபி(ஸல்) அவர்கள் ஹதீஜா(ரலி) அவர்கள் மரணித்தபோது கவலையுற்றார்களோ அதுபோல். என் கணவரும் என்னுடைய மரணித்திற்கு பிறகு பொருளாலும், உடல் உழைப்பாலும், அறிவாலும் இஸ்லாத்திற்காக நான் செய்த தியாகத்தை நினைத்து என் நினைப்பில் அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும் என்று என்றைக்காவது நம் இஸ்லாமிய பெண்மணிகள் எண்ணத்தில் துளிர்த்ததுண்டா? ஆம் நாம் நினைக்க வேண்டும்.

அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் போல் இஸ்லாத்திற்காக பொருளாலும், அறிவாலும், உடலுழைப்பாலும் உள்ளத்தாலும்  தியாகம் செய்யும் பெண் / ஆண் மக்கள் உருவாக வேண்டும்.

இஸ்லாமிய உறுதியில் அன்னை ஹதீஜா (ரலி)அவர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்தார்கள் என்று சொன்னால் மிகையில்லை.

அல்லாஹ் நம் எல்லோரையும் இது போன்ற ஈமானியத் தாய்மார்களிடமிருந்து நல்ல படிப்பினை பெற்று நன்மக்களாக ஆக்கி அருள் புரிவானாக. ஆமீன்.

M தாஜுதீன்

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் – தொடர் – 2 13

அதிரைநிருபர் பதிப்பகம் | July 17, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அல்ஹம்துலில்லாஹ் ! தொடரின் முகவுரையில் பதிக்கப்பட்ட பின்னூட்டங்களில் ஆர்வமுடன் ஊக்கமும் உற்சாகமும் வழங்கி துஆ செய்த அன்புச் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹும் ஹைரா.

இஸ்லாத்திற்காக இவ்வுலக வாழ்வைத் தியாகம் செய்த எத்தனையோ நபிமார்கள், நல்லடியார்களில் ஆண்கள் பெண்கள் இருபாலரின் வரலாற்று சம்பவங்கள் இங்கு குறிப்பிடப்படும். இதில் ஈமானிய ஆண்கள் பற்றிய வரலாற்றுச் சம்பவங்களைக் குறிப்பிட்டிருந்தால் ஆண்களுக்கு மட்டும் தானே, அல்லது ஈமானிய பெண்கள் பற்றிய வரலாற்றுச் சம்பவங்களைக் குறிப்பிட்டிருந்தால் அது பெண்களுக்கு மட்டும் தானே என்ற எண்ணம் கொள்ள வேண்டாம். ஈமான் கொண்ட ஆணாக பெண்ணாக இருந்தாலும், இஸ்லாத்தின்படி வாழ்ந்த அந்த நல்லவர்களிடமிருந்து நமக்கு என்ன படிப்பினை இருக்கிறது என்ற எதிர்பார்ப்பை உள்ளத்தில் நிறுத்திக் கொண்டு இந்த தொடரை வாசிக்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள். 

அல்லாஹ் தன்னுடைய அருள்மறையாம் திருமறை அல்குர்ஆனில் இறை விசுவாசிகளுக்கு உதாரணமாக சொல்லும் போது யாரைக் குறிப்பிடுகிறான் தெரியுமா? ஒரு ஆணைச் சொல்லவில்லை மாறாக இரு பெண்களை உதாரணமாக காட்டுகிறான். அதில் பிர்அவ்னுடைய மனைவியையும், மரியம்(அலை) அவர்களையும் இறை விசுவாசிகளுக்கு முன்மாதியாக சுட்டிக்காட்டுகிறான். திருக்குர்ஆனின் பின் வரும் வசனத்தை நிதானமாக அதன் பொருளுணர்ந்து வாசியுங்கள்.

 وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِن فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ

மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் “இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِن رُّوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ

மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்; நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்); இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.(1)

இங்கு அல்லாஹ் ஏன் ஃபிர்அவுனுடைய மனைவியை  ஓர் எடுத்துக்காட்டாக எடுத்து வைக்கிறான் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அந்தப் பெண்மணி சாதாரண பெண்மணியல்ல. உலகத்திலே தான் மட்டுமே மிகப்பெரிய இறைவன் என்று சூளுரைத்த அந்த ஃபிர்அவுனின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள மாடமாளிகையில் வாழ்ந்து வந்த பட்டத்து ராணி தான் அந்த பெண். இவர் எப்படி இந்த உலகத்தில் வாழ்ந்திருப்பார் என்று நாம் சிந்தனை செய்து பார்க்க வேண்டும். இன்று ஒரு ஜனநாயக நாட்டின் அதிபரின் மனைவியர் எப்படி ஒரு கவுரமான வாழ்க்கை, நிம்மதியான வாழ்க்கை, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார்கள். அந்த அதிபர் தவறு செய்தால் அந்த அதிபரை மாற்ற முடியும். ஆனால் அன்றைய ஃபிர்அவுன் தன்னை எதிர்த்த அனைத்து மக்களையும் கொன்று குவித்தான், கொடுமை படுத்தினான். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நபி மூஸா(அலை) அவர்களின் ஏகத்துவ அழைப்புப் பணியைக் கேட்டு இஸ்லாத்தை ஏற்றார் அந்த ஈமானிய பெண்மணி. யாஅல்லாஹ்! எனக்காக உன்னிடத்தில், சுவர்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக, இந்த ஃபிர்அவுனிடமிருந்து, அவன் கூட்டத்தாரிடமிருந்தும் என்னை காப்பாற்றுவாயாக என்று அல்லாஹ்விடம் துஆ செய்து, இந்த உலகத்தில் கொடுங்கோலன் ஃபிர்அவுனின் மாட மாளிகை, சொகுசு வாழ்வு எனக்கு தேவையில்லை என்று அவைகளை தூக்கி தன் காலுக்கடியில் வீசிய அந்த உறுதிமிக்க ஈமானுடைய பெண்ணை உலக முஸ்லீம்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக அல்லாஹ் எடுத்துரைக்கிறானே, ஆனால் உலக ஆதாயத்திற்காக இன்று நம்மில் பெரும்பாலோர் வாழ்வு எப்படி உள்ளது என்பதை சிந்திக்க வேண்டும்.

இந்த உலகின் அற்ப ஆதாயத்திற்காக இன்றையச் சூழலில் படைத்தவன் அல்லாஹ்வை மறந்து எதையும் செய்ய துணிந்திருக்கிறோம். வட்டி வாங்குகிறோம், வட்டி கொடுக்குகிறோம், அடுத்தவனின் சொத்தை மிக எளிதாக திருடி விடுகிறோம். இஸ்லாத்தை ஆசாபாசங்களுக்காகவும் அற்பத்திற்காகவும் விற்று விடுகிறோம். உலகத்தின் அற்பமான இலாபத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சீதனக் கொள்ளை, வரதட்சனைக் கொடூரங்கள் இவைகளுக்கு முன்னின்று இருப்பது நம் சமுதாயத்து பெண்கள் அல்லவா அதில் நிறைந்து இருக்கிறோம். நம்மைச் சுற்றியிருக்கும் ஒவ்வொரு வீடுகளிலும் அதற்கான காட்டுகளைக் கண்டுவருகிறோம்.

இவ்வுலக அற்ப சுகத்திற்காக கேடுகெட்ட சினிமா, தொலைக்காட்சி தொடர் நாடகங்களைப் பார்த்து இன்பம் கண்டவர்களாக, அல்லாஹ்வை மறந்து வாழும் சமுதாயமாக அல்லவா நம் பெண்மக்கள் சிக்கியிருக்கிறார்கள்.

பல தியாகங்களின் வரலாற்றுக்கு உரிமையுடைய மார்க்கத்தில் இருந்து கொண்டு, அந்த தூய இஸ்லாம் எப்படி போனாலும் எனக்கு கவலையில்லை என்று வாழும் நாம், ஈமானில் உறுதிமிக்க பெண் (ஃபிர்அவுனின் மனைவி) அவர்களின் வாழ்விலிருந்து அவசியம் படிப்பினை பெற வேண்டும்.

அடுத்த பெண் நகை ஆபரணம் அணிந்திருந்தால், நான் அவளைவிட அதிகமாக நகை ஆபரணங்கள் அணிய வேண்டும் என்று தன் கணவனைத் தீய வழியில் சம்பாதிக்கத் தூண்டும் பேராசை கொண்ட நம் பெண் சமூகம் எப்படி முன்னுதாரன சமூகமாக இருக்க முடியும்?

ஒரு சாதாரண ஆண்மகனோ மிக எளிதாக அல்லாஹ்வுக்காக உலக ஆசையைத் தூக்கிப் போட்டுவிட்டு போய்விடுவான். அவனுக்கு எந்த பிரச்சினையும் வராது. ஆனால் ஓர் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசனின் மனைவி, பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்த அரசி, அல்லாஹ்வுக்காக இந்த உலக வாழ்வை தூக்கி எறிவது என்பது ஒரு சாதாரண காரியமல்ல. மூஸா(அலை) அவர்களை ஏற்றுக் கொண்டவர்களைக் கால் மாற்றி கை மாற்றி வெட்டுவேன் என்று சொன்னவன்தான் அந்த ஃபிர்அவுன். மூஸா(அலை) அவர்களுக்கு ஆதரவளித்த ஒரே காரணத்திற்காக ஆண் மக்களையெல்லாம் கொன்று குவித்தவன் ஃபிர் அவுன். இஸ்லாத்தை ஏற்ற ஒரே கரணத்திற்காக எவ்வளவு கொடுமைகளை ஃபிர்அவுனிடமிருந்து அந்த உறுதிமிக்க ஈமானை பெற்ற பெண் சந்தித்திருப்பார்? என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அல்லாஹு அக்பர்.

நாம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அல்லாஹ்வின் சுவனத்தை அடைந்து கொள்வதற்காக, பிர்அவுனின் மனைவி ஈமானில் உறுதிமிக்க அந்தப் பெண் தன் கணவனின் மாடமாளிகைகள் தேவையில்லை என்று தூக்கி விசினார்களே, அது போல் அல்லாஹ்வின் சுவர்கத்தை அடைந்து கொள்வதற்காக உலகத்தில் ஹராமாக்கப்பட்ட அனைத்து காரியங்களையும் தூக்கி விசியிருக்கிறோமா நாம் உள்ளச்சத்துடன் சிந்தனை செய்து பார்க்க வேண்டும்.

மார்க்க விசயத்தில் ஹக்கை (உண்மையை) எடுத்துச் சொல்லுகிறார் கணவன், அவருக்கு எதிராக பிரச்சினைகள் உருவாகிறது. உடனே மனைவி பதிலுரைக்கிறாள் “ஏன் உங்களுக்கு தேவையில்லாத வேலை, அதை  வேறு யாராவது பார்த்துக் கொள்வார்கள்” என்று இவ்வுலக இன்பத்திற்காக யாரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது என்று இஸ்லாத்தை தூக்கி ஓரம் கட்டும் மனப்பான்மை அல்லவா நம்மிடம் உள்ளது. இந்தச் சூழல் நம்மில் பெரும்பாலோருக்கு இருக்கத்தான் செய்கிறது.

உலக ஆதாயத்திற்காவும், அற்ப இன்பங்களுக்காகவும் அல்லாஹ்வின் மார்க்கத்தைத் துச்சமாக நினைத்து புறக்கனிக்கும் வாழ்வு நம்முடையது என்றால், அல்லாஹ்வின் சொர்கத்திற்காக உலக இன்பங்களை தன்னுடைய காலுக்கடியில் போட்டு மிதித்த ஈமானில் உறுதி கொண்ட பெண்மணியை, அல்லாஹ் உதரணமாக காட்டும் அந்த ஃபிர்அவுனுடைய மனைவியின் வாழ்விலிருந்து நாம் படிப்பினைகள் பெற வேண்டும்.

வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாகவும் இறைத்தூதரின் தூய வழியில் நிலைத்து நின்ற நல்லோர்களிடமிருந்து படிப்பினை பெரும் நன்மக்களாகவும் ஆக்கி, அவனுக்கு மட்டுமே அஞ்சி அடிபணியும் நல்லவர்களாக்கி வைப்பானாக. ஆமீன்.

ஆதாரங்கள்:
(1) திருக்குர் ஆன் (66:11, 12)
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
M. தாஜுதீன்