Showing posts with label h1. Show all posts
Showing posts with label h1. Show all posts

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 015 0

அதிரைநிருபர் பதிப்பகம் | November 20, 2015 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

அவதூறு:

நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர். (அல்குர்ஆன்: 33:58)

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 49:6)

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

'புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?' என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது,'அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்' என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் 'புறம்' 'என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)' என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1523)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),  (புகாரி)

நற்செயல்கள், சந்தேகம், அநீதம்

...நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்...  (அல்குர்ஆன் : 2:148)

'உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சொர்க்கத்தின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது இறையச்சமுடையயோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.' (அல்குர்ஆன் : 3:133)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு. (அல்குர்ஆன்: 13:29)

'என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் நல்லதை ஏவுங்கள். தீயவற்றிலிருந்து தடுங்கள். இல்லையெனில் உங்கள் மீது தனது தண்டனையை அல்லாஹ் இறக்கி வைப்பான். பின் அவனை அழைத்தாலும், அவன் உங்களுக்கு பதில் கூறமாட்டான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி) அவர்கள் (திர்மிதீ). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 193)

'இருள் நிறைந்த இரவு போல் (தொடரும்) குழப்பத்தை அஞ்சி, நீங்கள் நற்செயல் புரிய விரையுங்கள். ஒருவன் காலையில் மூஃமினாக இருப்பான். மாலையில் காபிராக இருப்பான். அல்லது மூஃமினாக மாலையில் இருப்பான். காபிராக காலையில் எழுவான். உலக நோக்கங்களுக்காக தன் மார்க்கத்தையே விற்று விடுவான்என்று    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)  அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 87)

'நிச்சயமாக உண்மையை பேசுதல், நல்லது செய்வதை ஏற்படுத்தும். நல்லது செய்வது சொர்க்கத்தை பெற்றுத்தரும். நிச்சயமாக! உண்மையை பேசுபவர், இதில் உண்மையாளர் என அல்லாஹ்விடம் பதிவு செய்யப்படுவார். நிச்சயமாக! பொய் பேசுதல், தவறுகள் செய்வதை ஏற்படுத்தும். தவறுகள் நரகைப் பெற்றுத்தரும். நிச்சயமாக ஒருவர் பொய் பேசினால், அல்லாஹ்விடம் பொய்யர் என பதிவு செய்யப்படுவார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.''  (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்).    ரியாளுஸ்ஸாலிஹீன்: 54 )

'உனக்கு சந்தேகம் ஏற்படுத்துவதை விட்டு விடுவீராக! உனக்கு சந்தேகம் ஏற்படாதவை பக்கம் செல்வீராக! நிச்சயமாக உண்மை, அமைதி (அளிக்கும்). பொய் சந்தேக(த்தை வளர்க்கு)ம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமுஹம்மத் ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்கள். (திர்மிதீ). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 55 )

'உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் தன் கையால் அதைத் தடுக்கட்டும், அதற்கு இயலாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும் அதற்கும் இயலாவிட்டால் தன் இதயத்தால் (வெறுக்கட்டும்). இது, இறை நம்பிக்கையில் மிக பலவீனமானதாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்  (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 184)

அநீதம் இழைத்தோருக்கு  எந்த நண்பனும், அங்கீகரிக்கப்படும் பரிந்துரையாளனும் இல்லை. (அல்குர்ஆன் : 40:18)

அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளனும் இல்லை. (அல்குர்ஆன் : 22:71)

''ஓர் அடியான் (நல்லதா? கெட்டதா?) என சிந்திக்காமல் பேசுகிறான். அதன் மூலம் அவன் கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையே உள்ள மிக தூரமான அளவுக்கு நரகில்  வீழ்வான்'' என, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)  அவர்கள் (புகாரி,முஸ்லிம்).    ரியாளுஸ்ஸாலிஹீன்: 1514 )

''ஒவ்வொரு முஸ்லிமின் ரத்தம், அவரின் கண்ணியம், அவரின் பொருள் அனைத்தும் (சீர்குலைக்க) இன்னொரு முஸ்லிமின் மீது தடையாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)  அவர்கள் (முஸ்லிம்).    ரியாளுஸ்ஸாலிஹீன்: 1527 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
அலாவுதீன் S.

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 014 0

அதிரைநிருபர் பதிப்பகம் | November 13, 2015 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

முஸ்லிம்களை கண்ணியப்படுத்துதல், அவர்களின் உரிமைகளை வழங்குதல், அவர்கள் மீது கருணை, இரக்கம் கொள்ளுதல் பற்றி...:

நேர்வழி அல்லாஹ்வின் பொறுப்பாகும். கோணல் வழியும் உள்ளது. அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவருக்கும் நேர் வழி காட்டியிருப்பான். (அல்குர்ஆன்: 16:9)

...“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். (அல்குர்ஆன்: 5:32)

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை, (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் : 6:32)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரை அல்லாஹ் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும், தங்கக் காப்புகளும், முத்தும் அவர்களுக்கு அணிவிக்கப்படும், அங்கே அவர்களின் ஆடை பட்டாகும். (அல்குர்ஆன் : 22:30)

'மக்களிடம் ஒருவன் இரக்கம் காட்டவில்லையானால், அவனுக்கு  அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்'' என நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 227)

'உங்களில் ஒருவர் மக்களுக்கு தொழ வைத்தால்,அவர் (தொழுகையை) எளிதாக்கட்டும்! ஏனெனில் அவர்களில் பலவீனர், நோயாளி, முதியவர் உள்ளனர். உங்களில் ஒருவர் தனித்துத் தொழுதால், தான் விரும்பியபடி தொழுகையை நீட்டிக் கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 228)

''ஒரு முஸ்லிம், மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான். அவர் மற்றவருக்கு அநீதி இழைக்க வேண்டாம். அவரை ஆதரவற்றவராக விட்டு விட வேண்டாம். தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுபவனாக ஒருவன் இருந்தால், அவனது தேவையில் (உதவிட) அல்லாஹ் இருப்பான். ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை (இவ்வுலகில்) ஒருவன் நீக்கி வைத்தால், மறுமையில் பல கஷ்டங்களில், ஒரு கஷ்டத்தை அவனை விட்டும் அல்லாஹ் நீக்கி வைப்பான். ஒரு முஸ்லிமின் குறையை (இவ்வுலகில்) மறைத்தால், மறுமை நாளில், அல்லாஹ் அவனது குறையை மறைப்பான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 233)

'ஒரு முஸ்லிம், மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவருக்கு இவர் மோசடி செய்யமாட்டார். அவரிடம் இவர் பொய் கூறமாட்டார். அவருக்கு இவர் உதவி செய்வதை விட்டு விட மாட்டார். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இன்னொரு முஸ்லிம் மீது அவரது கண்ணியமும், அவரது சொத்தும், அவரது ரத்தமும் விலக்கப்பட்டதாகும். இறையச்சம் இங்கே (இதயத்தில்) உள்ளது. ஒரு முஸ்லிமான சகோதரரை இழிவாக எண்ணுவதே, மனிதனுக்குத் தீமையால் போதுமானதாகும்'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 234)

'நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள்! (பொருளை வாங்கும் எண்ணமில்லாமல்)  பொருளின் விலையை ஏற்றி விடாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் கோபப்படாதீர்கள். புறக்கணிக்காதீர்கள், குறை பேசிக் கொள்ளாதீர்கள். உங்களில் ஒருவர், இன்னொருவார் வாங்கும் பொருளை விலை பேச வேண்டாம். நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களாக சகோதரர்களாக ஆகி விடுங்கள். ஒரு முஸ்லிம், மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு இவன் அநீதம் செய்யமாட்டான். அவனை இழிவுபடுத்திடமாட்டான். அவனுக்கு உதவி செய்வதை விட்டு விடமாட்டான். இறையச்சம் இங்கே உள்ளது'' என்று கூறி தன் நெஞ்சை மூன்று முறை சுட்டிக் காட்டிய நபி(ஸல்) அவர்கள், ''ஒருவனின் தீமையை கணக்கிடுவதில் முஸ்லிமான தன் சகோதரனை இழிவுபடுத்துவதும் அமையும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இன்னொரு முஸ்லிம் மீது அவனது ரத்தம், அவனது சொத்து, அவனது கண்ணியம் விலக்கப்பட்டதாகும்'' என்றும்   நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் ( முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 235)

 ''தனக்கு விரும்பியதை தன் சகோதரனுக்கும் விரும்பும் வரை உங்களில் ஒருவர் இறைவிசுவாசியாக ஆக மாட்டார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 236)

'உன் சகோதரன் அநீதம் இழைப்பவனாயினும், அல்லது அநீதம் செய்யப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு நீ உதவி செய் என்று நபி(ஸல்) கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அநீதம் செய்யப்பட்டவனுக்கு நான் உதவி செய்வேன். அநீதம் இழைப்பவனாக இருந்தால் அவனுக்கு எப்படி உதவுவேன்? என்று ஒருவர் கேட்டார். ''அநீதம் செய்வதிலிருந்து அவரை நீக்கு! அதுவே அவருக்கு உதவி செய்வதாகும் என்று  நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, ).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 237)

'ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள கடமை ஐந்தாகும்:
1) ஸலாமிற்கு பதில் கூறுவது 2) நோயாளியை நலம் விசாரிப்பது 3) ஜனாஸாவில் கலந்து கொள்வது 4) விருந்தை ஏற்பது 5) தும்மியவருக்கு பதில் கூறுவது என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில்:-
ஒரு முஸ்லிமின் கடமை ஆறாகும். அவரை நீ சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறு! உன்னை அவர் விருந்துக்கு அழைத்தால் அவருக்கு பதில் கூறு! உன்னிடம் உபதேசம் செய்ய வேண்டினால், அவருக்கு நீ உபதேசம் செய்! தும்மியப்பின் அல்லாஹ்வை புகழ்ந்தால் அவருக்கு நீ பதில் கூறு! அவர் நோயுற்றால் அவரை நலம் விசாரி. அவர் இறந்தால் அவரை பின் தொடர்ந்து செல்! என்று உள்ளது. 
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 238)

''நபி(ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களை எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஏழு விஷயங்களை விட்டும் எங்களை தடுத்தார்கள். 'நோயாளியை நலம் விசாரித்தல், ஜனாஸாவில் கலந்து கொள்ளுதல், தும்மியவருக்கு பதில் கூறுதல், சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்றுதல், அநீதம் செய்யப்பட்டவருக்கு உதவுதல், (விருந்துக்கு) அழைத்தவனுக்கு பதில் கூறுதல், ஸலாமிற்கு பதில் கூறுதல் என, எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.
தங்க மோதிரங்கள் அணிவது, வெள்ளி பாத்திரத்தில் பருகுவது, பட்டு கலந்த சிவப்பு நிறத் துணி, பட்டு மற்றும் கித்தான் நூலால் உள்ள துணி, பட்டு அணிதல், கெட்டியான பட்டு, குறுக்கிலும், நெடுகிலும் பட்டு நூலால் நெய்யப்பட்ட துணி ஆகியவற்றை விட்டும் எங்களைத் தடுத்தார்கள். (அறிவிப்பவர்: அபூ உமாரா என்ற பாரஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 239)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

அலாவுதீன் S.
முந்தைய பகுதிகள் : 001 - 002 -  004 - 005 - 006 - 007 - 008 - 009 - 010 - 011 - 012 013

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 013 0

அதிரைநிருபர் பதிப்பகம் | November 06, 2015 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.

அமானிதத்தை நிறைவேற்றிடுதல்

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். (அல்குர்ஆன்: 4:58)

''நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும் 1) பேசினால் பொய் பேசுவான் 2) வாக்குறுதி அளித்தால் மாறு செய்வான் 3) அவனை நம்பினால் மோசடி செய்வான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 199)

அநீதம் புரிதல் கூடாது

அநீதம் இழைத்தோருக்கு  எந்த நண்பனும், அங்கீகரிக்கப்படும் பரிந்துரையாளனும் இல்லை. (அல்குர்ஆன் : 40:18)

அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளனும் இல்லை. (அல்குர்ஆன் : 22:71)

 ''அநீதம் செய்வதை அஞ்சிக் கொள்ளுங்கள். அநீதம் என்பது, மறுமை நாளின் இருள்களில் உள்ளதாகும். கஞ்சத்தனத்தை அஞ்சிக் கொள்ளுங்கள். கஞ்சத்தனம் தான், உங்களுக்கு முன் இருந்தவர்களை அழித்தது. மேலும் அது (கொலை மூலம்) இரத்தங்களை ஓட்டிடவும், தடுக்கப்பட்டதை ஆகுமாக்கிக் கொள்ளவும் அவர்களை தூண்டியது.'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 203)

'உரிமைகளை அதற்குரியவர்களிடம் மறுமையில் நிறைவேற்றித் தரப்படும். எதுவரை எனில், இறுதியில் கொம்பில்லா ஆடு, கொம்புள்ள ஆட்டிடம் (அது முன்பு முட்டி இருந்தால்) பழி வாங்கப்படும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 204)

''நிலத்தில் ஒரு சாண் அளவுக்கு (பிறரிடம் இருந்து பறித்து) ஒருவன் அநீதம் செய்தால், (அது போன்ற) ஏழு நிலங்களை (மாலையாக மறுமையில்) அவன் (கழுத்தில்) போடப்படும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 206)

 ''நிச்சயமாக அல்லாஹ் அநீதக்காரனுக்கு (தண்டனை தருவதில்) தாமதம் செய்வான். பிறகு அவனை அல்லாஹ் பிடித்தால் அவனை விடவும் மாட்டான்'' என்று நபி(ஸல்) கூறி விட்டு, பின்வரும் வசனத்தை ஓதினார்கள்.
''அநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் - நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவும் மிகக் கடினமானதாகவும் இருக்கும்.''  (அல்குர்ஆன் : 11:102)
(அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 207) 

'ஒருவனிடம், தன் சகோதரனுக்குரிய கண்ணியத்திலோ அல்லது வேறு பொருளிலோ அநீதம் செய்து இருந்தால், இதற்காக இன்றே தீனாரும், திர்ஹமும் இல்லாத (அந்த மறுமை) நாள் வரும் முன் தன்னை தூய்மையாக்கிக் கொள்ளட்டும்! அவனிடம் நற்செயல் இருந்தால் அவன் அநீதமிழைத்தலுக்கு ஏற்ப அவனிடம் எடுத்து, (அவனது சகோதரனிடம் கொடுக்கப்படும்). அவனிடம் நன்மைகள் இல்லை என்றால், அவனது சகோதரனிடம் தீமைகள் இருந்தால் அந்த தீமைகள் எடுக்கப்படும் - இவனிடம் அது தரப்படும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 210)

''ஒருவனின் நாவிலிருந்தும். அவனின் கையிலிருந்தும் முஸ்லிம்கள் அமைதி பெற்றுவிட்டால் அவனே (சிறந்த) முஸ்லிமாவான். அல்லாஹ் தடுத்துள்ளவைகளை விலக்கிக்கொள்பவனே 'முஹாஜிர்' ஆவான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்அப்துல்லா இப்னு அம்ரூப்னு ஆஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 211)

'ஒரு முஸ்லிமின் உரிமையை தன் வலக்கரத்தால் ஒருவன் எடுத்தால், அவனுக்கு  அல்லாஹ் நரகத்தை கட்டாயமாக்கி விட்டான். அவன் மீது சொர்க்கத்தை தடை செய்து விட்டான் என்று நபி(ஸல்) கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே! அது சாதரணமாக இருந்தாலுமா?''என்று ஒருவர் கேட்டார். ''ஒரு 'அராக்' மரக்குச்சியாக இருந்தாலும்தான்'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஉமாமா என்ற இயாஸ் இப்னு ஸஹ்லபா அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 214)

'ஒருவரை (பொருட்களை பாதுகாக்கும்) ஒரு பொறுப்புக்கு பணியாளராக நாம் நியமித்து, அவர் நம்மிடம் ஓர் ஊசியையோ,அதற்கும் மேல் உள்ளதையோ நம்மிடம் மறைத்து விட்டால், இது மோசடியாகும். இதை மறுமை நாளில் அவர் கொண்டு வருவார்' என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அப்போது மதீனாவாசிகளில் ஒருகறுப்பு நிறத்தவர் - (அவரை இப்போது நான் பார்ப்பது போல உள்ளது அறிவிப்பாளர்). அவர் எழுந்து, இறைத்தூதர் அவர்களே! நீங்கள் எனக்கு தந்த பொறுப்பை என்னிடமிருந்து (திரும்ப) ஏற்றுக்கொள்ளுங்கள்' என்றார். உனக்கு என்ன நேர்ந்தது? என்று நபி (ஸல்) கேட்டார்கள். 'இவ்வாறு நீங்கள் கூறுவதை உங்களிடம் கேட்டேனே!' என்று கூறினார். 'நான் இப்போதும் அதையே கூறுகிறேன். பொறுப்புக்கு பணியாளராக ஒருவரை நாம் நியமித்தால், அவர் குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் கொண்டு வரட்டும், அதிலிருந்து கொடுக்கப்பட்டதை எடுத்துக் கொள்வார். அதில் தடுக்கப்பட்டதை விலகிக் கொள்வார்.'என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அதீஇப்னு உமய்ரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 215)

''ஏழை யார்? என்பதை நீங்கள் அறிவீர்களா?என எங்களிடம் நபி(ஸல்) கேட்டார்கள்.  ''எவரிடம் வெள்ளிக் காசும், பொருள்களும்,இல்லையோ அவரே எங்களில் ஏழை'' என்று நபித்தோழர்கள் கூறினார்கள். 'என் சமுதாயத்தில் ஏழை என்பவன், மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகிய நன்மைகளுடன் வருவான். ஆனாலும் அவன் இவனை ஏசினான், இவனை இட்டுக்கட்டினான். இவர் பொருளை சாப்பிட்டான் (கொலை செய்து) இவனது இரத்தத்தை ஓட்டினான். இவனை அடித்தான் என்ற குற்ற நிலையிலும் வருவான். அப்போது இவனது நன்மைகளிலிருந்து (இவனால் பாதிக்கப்பட்ட)வர்களுக்கு பிரித்து வழங்கப்படும். இவனது குற்றத்திற்கு தீர்வு ஏற்படும் முன் இவனது நன்மைகள் அழிந்து விட்டால், பாதிக்கப்பட்டவர்களின் குற்றங்களிலிருந்து எடுக்கப்பட்டு இவனிடம் தரப்படும். பின்பு நரகில் வீசப்படுவான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 218)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
அலாவுதீன் S.
முந்தைய பகுதிகள் : 001 - 002 -  004 - 005 - 006 - 007 - 008 - 009 - 010 - 011 - 012