அது 1977 ஜூன் மாதம். நடு இரவு கழிந்து, சுமார் ஒரு மணி இருக்கும். பம்பாயிலிருந்து புறப்பட்டு, சஊதியின் ‘தஹ்ரான்’ விமான நிலையத்தில் வந்து சேர்ந்த எம்மை வரவேற்று, ‘அராம்கோ’ கேம்ப்புக்கு அழைத்துச் செல்ல, பம்பாய்க்காரர்கள் சிலர் வந்திருந்தார்கள். நாங்கள் வருவதற்குச் சில மாதங்களுக்கு முன் சஊதிக்கு வந்து, நல்ல நல்ல இடங்களைப் பிடித்திருந்த அவர்கள், இந்தியன் என்பதற்கான அடையாளமாக, இந்தியில் நலம் விசாரித்தார்கள். நான் அந்த உறக்க நேரத்திலும், இந்தியில் பதில் அளித்தேன்.
இந்தியின் முக்கியத்துவத்தை என் மூத்தவர்கள் என்னில் வித்திட்டிருந்ததால், SSLC வரை இந்தியைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்து, இந்தியில் இரண்டு அரசுத் தேர்வுகளையும் எழுதி, முழு ஆண்டுத் தேர்வில் மூன்று மணி நேரமும் இந்திப் பரீட்சை எழுதிய KMHS மாணவன் நான் ஒருவன் மட்டுமே! மற்றவர்களெல்லாரும் கேள்விகளை அப்படியே விடைத்தாளில் எழுதி வைத்துவிட்டு, அரை மணி நேரத்தில் தேர்வுக் கூடத்தை விட்டு வெளிவந்து, என்னை ஒரு UFO வைப் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டு நின்றதை நானும் கவனிக்கத் தவறவில்லை. அத்துணைத் தொடர்பு இந்தியுடன் எனக்கு! இனி, மீண்டும் சஊதிக்கு வருவோம்.
இரவு இரண்டு மணிக்கு ‘ஜுஅய்மா’ Aramco கேம்புக்கு வந்து சேர்ந்தோம். Camp House-keeping அலுவலகத்தில் பதிவு செய்து வந்து, எப்படியோ தூக்கம் வந்தது; தூங்கி விட்டேன். நான் கண் விழித்தபோது, எனக்குக் கீழிருந்த கட்டிலில் உறங்கியவர்கள் பணிக்குச் சென்றுவிட்டிருந்தார்கள். உறக்கத்திலிருந்து எழுந்து வெளியில் வந்தேன்; சூரியன் தன் வெம்மைக் கதிர்களை உச்ச கட்டத்தில் பாய்ச்சிக் கொண்டிருந்தான். பகல் பன்னிரண்டு மணியாயிருக்குமோ? என்னைத் தவிர வேறு யாருமே இல்லாதிருந்த அந்தத் தகிக்கும் வேளையில், எதிரில் ஒருவர் வந்தார். இந்திக்காரனாக இருக்குமோ?! “பாய் சாப் டைம் க்யா ஹய்?” என்று கேட்டேன். அவன், “சுபா சாடே சாத்” என்று பதில் தந்தான்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு, இயல்பாக உதிக்கும் ஆவல், என்னுள்ளும் உதித்தது. ‘யாராவது தமிழ்க்காரர்கள் வரமாட்டார்களா?’ இப்படி நினைத்துத் திரும்பிய என் காதில் சிலரின் தமிழ் உரையாடல் கேட்டது! அவ்வளவுதான். காதில் தேன் வந்து பாயும் என்பார்களே, அதற்கு மாறாக, தகிக்கும் அந்த வேளையில் தென்றல் வந்து பாய்ந்தது! அவர்கள் Saudi Catering என்ற இன்னொரு கம்பெனிப் பணியாளர்களாம். அந்தக் கேம்பின் துப்புரவு மற்றும் சாப்பாட்டின் ஒப்பந்தக் கம்பெனியின் பணியாளர்களாம். “என்னங்க இப்டி வெயிலடிக்குது?” என்று வியந்து கேட்ட எனக்கு, “இது ஏழு எட்டு மணி வெயில். உச்சிப் பொழுது எப்டி இருக்கும் பாருங்க” என்று கூறி, எனக்கு ஒரு shock treatment கொடுத்துச் சென்றனர்.
அன்றைய அதிகாலை ஐந்து மணிக்கே கேம்பில் தங்கியிருந்தவர்களை ஏற்றிக்கொண்டு job site க்குச் செல்லும் பஸ்கள் எல்லாம் சென்றுவிட்டதால், அன்றைய Aramco சவூதி அதிகாரிக்கு முன் interview கொடுக்கவேண்டிய என் தவணை பிந்திவிட்டது! என்ன செய்வது? இனி, அடுத்த நாள்தான் போய் நேர்முகத் தேர்வு கொடுக்கவேண்டும். அச்சத்துடன் தொடங்கிய அந்த முதல் நாள் ஒருவாறு கழிந்தது. அடுத்த நாள், நேரத்தோடு உறங்கச் சென்று, நேரத்தோடு விழித்து, ‘மெஸ்’ஸை விட்டுவிட்டு,பஸ்ஸைப் பிடிக்க ஓடினேன்!.
“நீ இந்தியாவில் என்ன செய்துகொண்டிருந்தாய்?” என்று கேட்ட அதிகாரியிடம், “ஆசிரியப் பணி செய்துகொண்டிருந்தேன்” என்றேன். எனது பள்ளிப் படிப்பு நாட்களில் ‘ரஹ்மானியா மதரசா’வில் இரண்டாண்டுகள் படித்த அரபி மொழியறிவும், கல்லூரிப் படிப்பு முடிந்த பின் அதைக் கூட்டிக்கொள்ள வேலூர் ‘பாகியாத்’ மத்ரசாவில் ஐந்தாண்டு தமிழ் / ஆங்கில ஆசிரியப் பணியோடு அரபி அறிவை வளர்க்க உதவிய சூழலும் நன்கு கை கொடுத்தன. இலக்கணச் செறிவுடன் நான் கொடுத்த பதிலும், அவரை அண்ணாந்து பார்க்க வைத்தது. இருப்பினும், அலுவலகப் பணியில் பம்பாய்க்காரர்கள் முதல் நாளே அமர்ந்துகொண்டதால், அடுத்த நாள் வந்த எனக்கு ஆபீஸ் வேலைக்கு வாய்ப்பில்லாது போயிற்று!
“ஆசிரியருக்கெல்லாம் இங்கு வேலையில்லை” என்ற மேனேஜர், “இந்த ஆளை open yard வலுத் தூக்கும் கிரேனில் லேபர் வேலை பார்க்கக் கொண்டுபோய் விட்டுவா” என்று yard superviser க்கு ஆணையிட்டார்!
‘விதியோ? தலை எழுத்தோ?’ என்று எண்ணிக் கொண்டு, ஆயுள் தண்டனைக் கைதி போல், மிரட்சியுடன் பாம்பேக்கார சூப்பர்வைசரின் காரில் ஏறியமர்ந்து, இந்தியில் நலம் விசாரிக்கத் தொடங்கினேன். “அரே, மவ்லிசாப் மதராசி தும்கூ ஹிந்தி ஆத்தா ஹய்!” (தாடி, தொப்பி அணிந்தவர்களை ஈசியாக ‘மவ்லவி’யாக்கிவிடுவார்கள் பம்பாய்க்காரர்கள்.) வியந்து கேள்வி எழுப்பியவருக்கு, நான் கற்ற ஹிந்தி மொழியைப் பற்றி, சற்றுக் கூடுதலாகவே சொல்லிக்கொண்டு வந்தேன்.
தொப்பி வைத்து, தாடியுடன் இருந்த என் மேல் அந்த ஆளுக்கு இரக்கம் ஏற்பட்டு. பாம்பேக்கார ‘கிரேன் ஆப்பரேட்டர்’ ஷஃபி பாயிடம் கொண்டுபோய் விட்டார். தேநீர் ஒய்வு நேரம் அது. “அரே, ஆஜாவ் மோல்வி சாப்” என்று வரவேற்ற ஷஃபி பாய், குர்பானி கொடுக்கப் போகும் பிராணியைப்போல் மிரண்டிருந்த என் முகத் தோற்றத்தைக் கண்டு, அன்புடன் உபசரித்தார். ‘டீட்டைம்’ முடிந்தவுடன், எல்லோரும் எழுந்தனர். நானும் எழுந்தேன், ‘வேலை’ பார்க்க!
(இன்னும் உண்டு, இன்ஷா அல்லாஹ்)
அதிரை அஹ்மது









