Showing posts with label கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு. Show all posts
Showing posts with label கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு. Show all posts

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 27

தொடர் நிறைவுறுகிறது

17

அதிரைநிருபர் பதிப்பகம் | August 28, 2012 | , ,

இறையருட்கவிமணி அவர்கள் தமது கவிதைத் திறனால் ஏற்படுத்திய சிந்தனைப் புரட்சிகள் ஏராளம்.  மழலைச் செல்வங்களுக்கான குழந்தைப் பாடல்களானாலும் சரி, கவியரங்கப் பாக்களாயினும் சரி, அவற்றினூடே இழைந்தோடும் கருத்துக் கருவூலங்கள் அன்னார் செய்த சிந்தனைப் புரட்சிகளுக்கான சான்றுகளாகத் திகழ்கின்றன.

கல்வியாளர்களும் அறிஞர்களும் சமுதாயத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகளைப் பட்டியலிட விழந்த கவிமணியவர்கள், அறிஞர்கள் தாம் கற்ற கல்வியைச் சமுதாயத்திற்குப் பயன்படும் விதத்தில், ஆழிய அறிவுக் கருவூலங்களையும் இறையருள் இலக்கியங்களையும் தமிழ் மொழியில் வார்த்தெடுத்துக் கொடுக்க வேண்டிய தேவையைக் கீழ்க்காணும் கவியடிகளில் பாடுகின்றார்:

          “வான்போற்றும் கருத்துகளை வடித்தெடுத்துக் கொடுப்பதுதான்
           தீன்போற்றும் நமக்கெல்லாம் திகழ்கின்ற பணியாகும்
           அறிவுப் பசிஎடுத்தே அலமந்து நிற்போர்க்குச்
           செறிவு மிகைத்திருக்கும் சீர்மறையின் கருத்துகளைச்
           சேர்த்தெடுத்துக் கொடுத்திடுவோம்; செந்தமிழின் சுவைசேர்த்துப்
           பார்த்தெடுத்து வழங்கிடுவோம்; பாருலகில் ஓங்கிடுவோம்!”

இல்லாவிட்டால், ‘கற்றதனால் ஆய பயனென்?’ என்று கேட்பது போல் தோன்றுகின்றதல்லவா?

கற்றோர் செய்ய வேண்டிய அப்பணியை இன்னும் அழகாகப் பாடுவதைக் கேளுங்கள்:

                   “கண்ணைக் கவர்கின்ற கண்ணாடிக் கிண்ணத்தில்
                   வண்ணப் பழச்சாற்றை வார்த்துக் கொடுப்பதுபோல்
                   காதைப் பிடித்திழுக்கும் காந்தத் தமிழ்நடையில்
                   ஓதப் படைத்திடுவோம் ஓங்கும் நெறிக்கருத்தை!”

‘காதைப் பிடித்திழுக்கும் காந்தத் தமிழ் நடையில்’ எழுதுவது எல்லாராலும் சாலுமோ?  அறிவுப் பெருக்கமும் சிந்தனைச் சீர்மையும் உள்ளவர்களால்தான் இயலும்.  அத்தகைய முன்னேற்றத்தைத்தான் அறிஞர்களிடம் எதிர்பார்க்கின்றார் ‘இறையருட்கவிமணி’.

வையகத்தைக் கவிஞன் நோக்குவதற்கும் பிறர் நோக்குவதற்கும் பெருத்த வேறுபாடுண்டு.  நிறைகளைப் போற்றும் அதே வேளை, குறைகளைச் சாடும் உணர்ச்சி மிக்க மனப்பாங்கு கவிஞர்களிடம் காணப்படும் ஒன்றாகும்.

                             “பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்
                                 பாலித் திடவேணும்” என்று பாரதி பாடினான் அல்லவா?

இதுதான் கவிஞன் காணும் வையகப் பரிவு.  அதே பாரதி, “தனியொருவனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை அழித்திடுவோம்!” என்றும் சீற்றம் கொண்டு சீறிப் பாய்ந்தான்.  சமூகத்தில் குற்றம் காணின், கொதித்தெழுவான் கவிஞன்.  இது போன்று கொதித்தெழுகின்றார் நம் கவிஞர்:

                   “அறந்தேயும் தீச்செயலும் அடுத்தாரைக் கெடுப்பதுவும்
                   புறம்பேசும் தீக்குணமும் பொய்புரட்டும் வஞ்சனையும்
                   குணமொன்றும் நாடாமல் குழிபறிக்கும் குறுமனமும்
                   பணமொன்றே குறியாகும் பண்பில்லா உளப்பாங்கும்
                   உள்ளத்தில் பிறக்காமல் உதட்டளவில் உறைகின்ற
                   கள்ளத்தின் பொய்நகையும் கழுத்தறுக்கும் கொடுமைகளும்
                   மெய்யோட்டும் பையூட்டும் மேதினியைப் பாழாக்கும்
                   கையூட்டும் களியாட்டும் கள்ளூட்டும் பேயாட்டும் .....”

என்றெல்லாம் பாடிச் சாடிவிட்டு,

                   “மனிதகுல வரலாற்றின் மாண்பனைத்தும் போக்கிவிடும்
                   புனிதநபி நெறியினிலே புழுதியினைச் சேர்த்துவிடும்”

என்று பாடி எச்சரிக்கை செய்கின்றார்.   நேர்வழிக்கு ஒரே வழி,

                   “உளம்வாழும் நிலைகாண உயர்மறையின் நெறிசெல்வோம்!”

என்று முடிவுரை பாடுகின்றார் நம் முதுபெரும் கவிஞர். 

கல்வி கற்றல் என்ற பெயரில், மேலை நாட்டு மேதைகள், கீழை நாட்டுக் கெழுதகையோர் பற்றியெல்லாம் படிக்கின்றோம்.  ஆனால், எவருடைய வாழ்க்கை நமது முன்மாதிரியாக இருக்கவேண்டுமோ, அந்த அருள் தூதரின் வாழ்க்கையினைப் படிப்பதில்லை என்று இடித்துரைக்கும் முகமாக,

                   “அறிவுலகப் பேரொளியை அனைத்துலகப் பெருமகரை
                   முறையுடனே நாமறியோம்; முகவரியும் நாமறியோம்.
                   ஆப்பிள் திராட்சையுடன் ஆரஞ்சுப் பழமிருக்கத்
                   தோப்பில் மாங்காயைத் துழாவிக் கடிப்பதுபோல்,
                   குற்றாலத் தருவியிலே குளிக்காமல் பக்கத்துக்
                   கற்றாழைக் குட்டையினைக் கலக்கிப் புரளுதல்போல்
                   விண்கவரும் விரிநூல்கள் வீட்டின் அகத்திருக்கக்
                   கண்கவரும் நூல்படித்துக் கால்வழுக்கிக் கிடக்கின்றோம்!”

அருமை!  எத்துணை அழகிய உவமையுடன் கூடிய உணர்வூட்டல்?!

                   “வணக்கமிலாப் பள்ளிகளும் வாஞ்சையிலா மன்றுகளும்
                   இணக்கமிலா இல்லறமும் இறக்கமிலா நெஞ்சுகளும்
                   உறுதியிலா அறிஞர்களும் ஒழுக்கமிலா இளைஞர்களும்
                   நாணமிலா அரிவையரும் நலன்காணாத் தலைவர்களும்
                   நம்மிடையே பெருகிவிட்டார்; நாடகமே ஆடுகின்றார்!”

குற்றம் களையும் பணியில் கூடி நிற்குமாறு தம்மைப் போன்ற தரமான கவிஞர்களை அறைகூவல் விடுத்து அழைக்கின்றார் அருட்கவிஞர்:

                   “வணிகத்தில் கலப்படமும் வாழ்க்கையிலே பெறுகின்ற
                   அணிசிதைக்கும் சூதுமது ஆகாத கொலைகளவும்
                   வஞ்சனைகள் பொய்புரட்டு வன்முறைகள் தீச்செயல்கள்
                   மிஞ்சிவரும் உலகுக்கு மெய்விளக்காம் கவிதேவை.
                   பணமென்றால் வாய்பிளக்கும் பிணமாக மாறாதீர்!
                   செல்வர்க்கே அடிவருடும் சிறுமையிலே சிக்காதீர்!
                   அனல்கக்கும் கவிதைகளால் அநீதியினைச் சுட்டெரிப்பீர்!
                   புனல்வார்க்கும் கவிதைகளால் புனிதத்தை வளர்த்திடுவீர்!
                   அறவாழ்வு தழைப்பதற்காம் அரும்பணிகள் புரிந்திடுவீர்!”

இவ்வாறு, சீர்திருத்தக்காரர்களாகக் கவிஞர்கள் ஆகும்போது எவர்தான் கவிதைகளை வெறுப்பார்?

                   “கலைகளுக்கே அரசியெனக் கவினடையும் கவிதைகளில்
                   பலவகைகள் பகர்ந்திடுவார் பாருலகின் ஆய்வாளர்
                   உள்ளத்தில் கருவெடுத்தும் உணர்ச்சியிலே ஊற்றெடுத்தும்
                   தெள்ளமுதச் சொற்களிலே தெவிட்டாத உருவெடுத்தும்
                   பள்ளத்துள் பாய்கின்ற வெள்ளமென வெளியாகிக்
                   கள்ளமிலாக் காதுகளைக் கவ்விப் பிடித்திழுத்து
                   நெஞ்சத்தில் விளையாடி நாளெல்லாம் நம்முடனே
                   கொஞ்சுகின்ற குழவிகளே குடியுயர்த்தும் கவிதைகளாம்.

மாசற்ற மனித வாழ்க்கைக்காகக் கவிதைகளின் தேவையை – இஸ்லாம் வகுத்த இனிய நெறியில் இயங்கவேண்டிய கவிதைகளின் தேவையை – மேற்காணும் இறையருள் கவி மணிகளால் நாம் உணரலாம்.

كلام فحسنه حسن وقبيحه قبيح

(நற்கருத்துள்ளவை நல்ல கவிதைகளாகும்;  மோசமான கருத்துள்ளவை மோசமான கவிதைகளாகும்.)

என்று இஸ்லாம் கூறும் இலக்கணத்தில் இணைவோம்!  நம் மறுமை இலக்கினை அடைவோம்!.


(சான்றுகள் கணக்கின்றி உள.  விரிவஞ்சி, இத்துடன் நிறைவாக்குகின்றேன்.) 




முடிவுரை

இக்கவிதை இலக்கிய மரபு மேலும் தொடரவேண்டும்.  இந்த ஆய்வுத் தொடரில் நான் குறிப்பிட்டதற்கொப்ப, கவிதை என்பது மானிட இயல்புத் தன்மையுடன் பின்னிப் பிணைந்ததாகும்.  மனிதனை மனிதனாக வாழ வழி வகுப்பது;  வாழ்வின் உண்மை நிலைகளை உணர்த்துவது;  காலத்தால் கறை படாத கருத்துகளைத் தன்னகத்தே கொண்டது;  கற்பனை அழகை விரும்பும் மனித இயல்புக்குக் கருத்துணர்வைத் தர வல்லது;  உண்மையும் அழகுணர்ச்சியும் நிறைந்த சொல் வளத்தால் வாழ்வைச் சொல்லோவியமாகத் தீட்டிக் காட்ட வல்லது;  மனித வாழ்வின் ஆன்மிக இயல்பை உணர்த்த வல்லது;  அதனை ஆர்வத்துடன் படிக்கும் / பாடும் மனிதனுக்குப் புதிய வாழ்வையும் புத்துணர்வையும் கொடுப்பது.

இந்த ஆய்வின் தொடக்கத்தில் மேற்கோள் காட்டிய இறைமறை குர்ஆன் வசனத்தில், இஸ்லாமிய அழைப்புப் பணி செய்ய ‘ஹிக்மத்’ (நுண்ணறிவு) எனும் சொல் இடம்பெற்றிருப்பதாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவிதையைப் புகழ்ந்துரைத்தபோது ‘ஹிக்மத்’ எனும் அதே சொல்லைப் பயன்படுத்தியிருப்பதாலும், “கவிதை என்பது பொய்யால் நிறைந்தது; கவிஞன் பொய்யுரைப்பவன்” என்றெல்லாம் கருத்துக் கொள்ளாமல், கவிதைகள் மூலமும் உண்மைகளை உணர்த்தலாம்;  மனித நேயத்தை மலரச் செய்யலாம்;  மார்க்கத்தை எடுத்துரைக்கலாம் என்றே நம்பவேண்டும்.

இஸ்லாம் என்பது குர்ஆனும் நபிவழியும், அப்பழுக்கில்லாமல் இவ்விரண்டின் அடியொட்டி வாழ்ந்த முன்னோரின் வாழ்க்கை முன்மாதிரிகளும் மட்டுமே.  இந்த அளவுகோள் (yardstick) கொண்டுதான் எதையும் – அது இலக்கியமாகட்டும், இசையாகட்டும், எதுவுமாகட்டும் – வரையறை செய்யவேண்டும்.  இந்த இலக்கணத்தில் அனைத்தும் அடங்கிவிட்டன.

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கு என்பதுவே எமது அழைப்பியல் நெறியின் துவக்கமும் முடிவுமாகும்!

இத்தனை நாட்கள் என்னுடன் பொறுமை காத்த அனைவருக்கும் நன்றி.
     
அதிரை அஹமது
adiraiahmed@gmail.com

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 26 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 13, 2012 | , , ,


தமிழ் மண்ணில் கவியரங்குகள் அறவே நடைபெறாத காலம் அது!  சுமார் 1950களில் என்று சொல்லலாம்.  இந்தியாவின் வட பகுதியிலும், ஹைதராபாத் பெங்களூர் போன்ற உர்தூ பேசும் தென்பகுதிகளிலும், ‘முஷாயிரா’க்கள் எனும் உர்தூக் கவியரங்குகள் பல்லாண்டுகளாக வழக்கமாக நடைபெற்று வந்துள்ளன.  அம்மரபைப் பின்பற்றி, தமிழைத் தாய்மொழியாகவும், உர்துவைப் பேச்சுமொழியாகவும் கொண்டுள்ள தமிழகத்தின் வட ஆர்க்காட்டு முஸ்லிம்களும் ‘முஷாயிரா’க்கள் நடத்திவந்தனர்.  அந்தக் காலகட்டத்தில்தான் ‘இறையருள் கவிமணி’ அவர்கள் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியை மேற்கொண்டார்கள்.

‘கருவிலே திருவான’ கவிஞர் அல்லவா?  ‘இந்த முறையைத் தமிழ் கூறும் நல்லுலகிலும் அறிமுகப் படுத்தினால் என்ன?’ என்ற எண்ணம் தோன்றவே, தமிழ்நாட்டில் தமிழ்க் கவியரங்கிற்கு வித்திட்டுவிட்டார் நம் பேராசிரியர்.  பெரிய அளவிலான மாநாடுகளின் கவியரங்கத் தலைமைப் பொறுப்பு, பேராசிரியருக்கு வழங்கப்பட்டது.  அப்பொறுப்பினைத் திறம்பட நிறைவேற்றி, 1990வரை கவியரங்கத் தலைமைக்கு ‘இறையருள் கவிமணி’யே தகுமானவர் என்ற நிலை நீடித்தது.  அன்னாரின் கவியரங்கக் கவிதைகளின் தொகுப்பு, ‘தலைப் பா’ எனும் பெயரில் நூலுருவில் வந்துள்ளது.  அதில் மூழ்கி எடுத்த முத்துகளே பின்வரும் கருத்துக் கோவை.

இறையச்சமும் இறைநினைவும் இன்றி வாழும் மக்களைப் பற்றி எண்ணிக் கவலைப்பட்ட இறையருள் கவிமணியார்,

                    “கலியாட்டே மிகுந்தின்று காவலனை மறந்துள்ளோம்
                    புலிவாழும் குகைகளிலே பூனைகளாய்க் கிடக்கின்றோம்”

என்று சலித்துப் பாடுகின்றார்.  அந்த இழிநிலையினைப் போக்க வழி வகுத்துத் தருகின்றார் பின்வரும் அடிகளில்:

                   “இதயந் திறந்து இறைவனை வேண்டுவோம்!
                   அனைத்துப் புகழும் அல்லாஹ் வுக்கே
                   அனைத்தையும் காக்கும் ஆண்டவன் ஒருவன்
                   அவனையே நாடினால் அனைத்துமே பெறலாம்
                   அவனையே மாற்றினால் நம்மையே மாற்றுவோம்!”  

இக்கவியடிகளுள் இறுதி அடியைக் கவனியுங்கள்.  அதில் ஓர் இலக்கிய நயம்  பொதிந்துள்ளது.  ‘அவனையே’ என்பதை, ‘அவனை+ஏ’ எனப் பிரித்து, ‘அவனை ஏமாற்றினால்’ என்றும், ‘நம்மையே’ என்பதை, ‘நம்மை+ஏ’ எனப் பிரித்து, ‘நம்மை ஏமாற்றினால்’   என்றும் இலக்கிய நயம்பட விரித்துரைக்கும் தனித் திறன் பேராசிரியருக்குக் கைவந்த கலையாகும்.

மக்களுக்கு நீதியைக் கற்பிப்பதில் கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் இருக்கும் வீரியத்தைவிடக் கவிதைகளின் வீரியம் கூடுதலானது என்பதை இலக்கிய வல்லார் இயம்புவர்.  இவ்வுண்மை, சங்கப் பாடல்கள் மூலமும் நம் சமகாலப் பாடல்கள் மூலமும் தெளிவாக உணரப்படும் ஒன்றாகும்.  ‘இறையருள் கவிமணி’ அவர்களின் நிறையருள் கவியடிகளில் இது போன்று அறவுரைக் கவிகளாகப் பதிவாகியுள்ளதை நாம் காணலாம்.

                    “நம்நிழலை நாம்தொடர்ந்தால் நாமதனைப் பிடிக்கமாட்டோம்
                    நம்போக்கில் நாம்நடந்தால் நிழல்நம்மைத் தொடர்ந்துவரும்.”

எத்துணை அற்புதமான அறிவுரை!

நபிவழியை நம் வாழ்க்கை நெறியாகக் கொள்வதன் தேவையை இனிமையுறப் பாடுவார் இறையருட்கவிமணியார்:

                   “‘நானாடி’ எனநவின்ற நபிகள்பிரான் நல்லுரைமுன்
                   தீனாடி நின்றிடுவோர் திகழழகை நோக்கிடுவோம்
                   ஊனோடும் உயிரோடும் உலகோடும் உறவாடும்
                   தேனோடும் உரையாடும் திருநபியின் மொழிகற்போம்
                   வளங்காணும் வாழ்வினிக்க வள்ளல்நபி வழிநிற்போம்
                   உளம்வாழும் நிலைகாண உயர்மறையின் நெறிச்செல்வோம்”

திருமறை நெறி முறையையும் திருநபி வழிமுறையையும் கற்று, அவற்றின்படி நிற்றலின் தேவையைப் பாடும் முறை, படித்துப் பின்பற்றத் தக்கது.  (நானாடி = நான் + ஆடி = நான் கண்ணாடி, தீனாடி = தீன் + நாடி = மார்க்கத்தை நாடி, தேனோடும் = தேன் + ஓடும்)

நபியவர்களின் ஒப்பற்ற மேன்மைத் தன்மையினை விளக்க, கீழ்க்காணும் இரண்டடிகளில் இலகுவாகப் பாடுகின்றார்:
                  
“மானிடரின் உயர்வுக்கு மாநபியே சான்றாவார்
                   மானிடரின் இழிநிலைக்கு நாமின்று சான்றாவோம்.”  

நமது அழுகிய குணங்களால் நம் இழிநிலையும், நபியவர்களின் அழகிய குணங்களால் அவர்களின் உயர் நிலையும் ஒப்பு நோக்கிப் பாடுவது நம் சிந்தனைக்கு உரியவையாகும்.  இன்னும் இரண்டு வரிகளும் நம் சிந்தனைக்குரியவை:

                   “நற்குனத்தின் நாயகராம் நன்னபியார் பிறந்திலரேல்
                   கற்சிலைசெய் சிற்பிகளால் கல்மலைகள் மறைந்திருக்கும்.”

அன்று மக்காவில் இருந்த சிலை வணக்கம் மறைந்து போனதற்குக் காரணம், மாநபி (ஸல்) அவர்கள் பிறந்ததுதான் என்பதை இலக்கிய நயத்துடன் பாடும் விதம் படித்து மகிழத் தக்கது.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்திருக்காவிட்டால், மக்கத்து மலைகளெல்லாம் கற்சிலைகள் செய்வதற்காக உடைபட்டுச் சிலைகளாகச் செதுக்கப்பட்டிருக்குமாம்!  எத்துணை அழகிய கற்பனை!

இது போன்ற கற்பனை வளத்தினை வேறொரு கருத்தில் கவியரங்கில் பாடுகின்றார் பேராசிரியர்.  அது, பெருமானார் அவர்களை அருமைத் தோழர்கள் பின்பற்றிய விதம்  பற்றிக்  கூறுவதாகும்.

                             “ஊசியைத் தொடரும் நூலினைப் போன்று
                             காசிம் நபியைக் கருத்துடன் தொடர்ந்தனர்”

என்று அழகாகப் பாடுகின்றார்.  இவ்வரிகளைப் படிக்கும்போது, நமக்கும் அந்த நபியவர்கள்தாம் வழிகாட்டி; நாமும் அவர்களின் அடியொட்டியே வாழவேண்டும் என்ற இன்னுரையை வழங்குகின்றார் ‘இறையருட்கவிமணி’.

இனி, பேராசிரியரின் கவியரங்கப் பாடல்கள் செய்த சிந்தனைப் புரட்சி, கல்விச் சிந்தனை, கவிதை பற்றிய கருத்து, இஸ்லாமிய விழுமிய உணர்வு முதலானவற்றைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.

அதிரை அஹ்மது

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 25 :: தொடர்கிறது... 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 02, 2012 | ,

அண்மையில், ‘இலக்கியம், ஓர் இஸ்லாமியப் பார்வை’ எனும் தலைப்பில் இலங்கை அறிஞர் மன்ஸூர் நலீமி அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுக் காணொளியைக் கேட்டேன்.  தேர்ந்த மார்க்க அறிஞரானதால், அவர் அரபு இலக்கியத்திலிருந்து மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளை விவரித்திருந்தார்.  இலக்கியம் என்பது கட்டுரை, கதை, கவிதை போன்ற பல இயல்களை உள்ளடக்கியதாகும்.  ஆனால், இவ்வறிஞர் கவிதையை மட்டும் இலக்கியமாகக் கருதித் தம் சொற்பொழிவைத் தொகுத்து வழங்கியிருந்தார்.  http://adiraipost.blogspot.in/2012/07/blog-post_23.html 

அவர் ஓரிடத்தில் ஆதங்கத்துடன், “தமிழில், குறிப்பாக இஸ்லாமியத் தமிழில் சிறந்த இலக்கியங்கள் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை” என்று குறிப்பிட்டார்.  அவர் அரபு மொழியை மட்டும் சிறப்புறக் கற்றதால் – தமிழிலக்கிய ஈடுபாடு கொள்ளாதவராக இருப்பதால் - அதிலும், நம் சமகால இலக்கியச் செழுமை பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறாதவராக இருப்பதால், அவ்வாறு கூறினார் போலும்.  அவருடைய கண்ணுக்கும் கருத்துக்கும் படாமல், இன்று இஸ்லாமியத் தமிழில் இலக்கியப் பரப்பு விரிந்திருக்கின்றது என்பதுவே உண்மை.

பொதுவான தமிழிலக்கியங்களாகப் பேசப்படும் கம்பராமாயணம், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலானவற்றின் இலக்கியத் தரத்திற்கு எவ்விதத்திலும் குறையாத விதத்தில் ‘இஸ்லாமிய’ இலக்கியங்களைப் படைத்துள்ளனர் நம் இஸ்லாமியப் புலவர்கள்.  இத்தகைய இலக்கிய முன்னேற்றம், பொதுவான இலக்கிய வளர்ச்சி தடை பட்டிருந்த பதினாறாம் நூற்றாண்டில் நம் தமிழ் முஸ்லிம் புலவர்கள் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தி, தமிழிலக்கியத் தொண்டாற்றியுள்ளனர் என்பதுவே உண்மையாகும்.  இத்தகைய இலக்கியங்களுள் சிலவற்றை நான் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து, சென்ற 1970களில் ‘இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சிந்தனை’ எனும் பெயரில் தொகுப்புக் கட்டுரைகள் வரைந்து, பின்னர் அது நூலுருப் பெற்று, இரண்டு பதிப்புகளையும் கண்டுள்ளது. 

ஒரு வேளை, அறிஞர் மன்ஸூர்  கருதியது, குர்ஆன் – சுன்னா அடிப்படையில் இல்லை என்பதாக இருக்கலாம்.  இவ்வாறு இருந்தாலும், நாம் அவர் கூற்றை ஏற்க முடியாது.  மாறாக, கடல் போல் பரந்துள்ள கவிதை இலக்கியங்கள் நம் கண் முன்னே காணக் கிடைக்கின்றன.  அப்பெருங்கடலில் மூழ்கிச் சில முத்துகளையாவது எடுத்து வாசகர்களுக்குத் தரலாம் என்பதுவே எனது அவா.
  
சென்ற இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய அறிவுப் பின்னணியில், தமிழில் ‘கவிதைப் புரட்சி’ செய்தவர்களுள் குறிப்பிடத் தக்க பேரறிஞர், என் தமிழ்ப் பேராசிரியர், ‘இறையருட்கவிமணி’ கா. அப்துல் கபூர் அவர்களாவார்.  அரபி மொழியறிவும் ஆங்கிலப் புலமையும் தமிழ்ப் பெரும்புலமையும் கொண்டு அன்னார் யாத்தளித்த கவிதை நூல்கள், கவியரங்கக் கவிதைகள் ஏராளம்.  அவை பற்றிய சிறியதோர் அறிமுகத்தை இப்பதிவில் காணலாம் வாருங்கள்!

‘நபியின் கவிஞர்’ என்ற பெயரைப் பெற்ற ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் இறப்பெய்திய பின்னர் யாத்த ‘மர்திய்யா’ எனும் இரங்கற்பா ‘ஷபீஹுக்க பத்ரின்’ என்று தொடங்குகின்றது.  அதனை ‘முழுமதி’ எனும் பெயரில் அழகுதமிழ்க் கவியாக்கி அளிக்கின்றார் என் ஆசான்:

 “நும்தோற்றம் முழுமதியாம்; நுவல்வேனதிற் பேரொளியாம்
நும்முகமோ நறுமணத்தின் நுவலழகே சொட்டுவதாம்
சீருலகின் பேரழகே! சிந்தனையின் எல்லையதே!
ஈருலகில் பொறுப்பார்யார் எழில்பொழியும் முகங்கண்டு?
ஆதநபி வழிமுறையில் ஹவ்வாக்கள் ஈன்றதில்லை
வேதநபி போன்றொருவர் வெகுசொர்க்கத் திலுமில்லை!”

இந்த நெடிய கவிதையடிகளை மொழியாக்கம் செய்துவந்த ‘இறையருட்கவிமணி’, இறுதியாக,

“பரிந்திடுவார் ரசூலுல்லாஹ்; பாரல்லாஹ் பிழைபொறுப்பான்
உரியநெறி அனைத்திலுமே உயர்வுபெறும் காலமெல்லாம்
இறைமறையே எம்தலைமை; இறையவனே எம்’கிப்லா’
இறையன்றிக் காப்பில்லை; இறையவனே மாபெரியோன்”

என்று தம் கவியாக்கத்தை நிறைவு செய்கின்றார்.  

பேராசிரியரின் படைப்பிலக்கியங்களுள் ஒன்று, ‘இறையருள் மாலை’ எனும் அருள் வேட்டல் ஆகும்.  இப்பனுவலின் கண்ணிகள் அனைத்தும் கசிந்துருகி இறையருளைக் கோரும் பாமாலையாகும்.  கசிந்துருகும் கவிமணியின் எண்ணப் பிரதிபளிப்பின் ஓர் எடுத்துக்காட்டு:
“உன்னிடத் திருந்தே உலகுக்கு வந்தோம் 
உன்னிடத் தன்றோ மீட்சியும் அல்லாஹ்!
மண்ணுறை வாழ்வை மகிழ்வாக்கித் தந்து 
விண்ணுறை வாழ்வை விரிவுசெய் அல்லாஹ்!”

இப்பாமாலை முழுவதுமே ‘துஆ’ எனும் இறைவேட்டலாக இருப்பதால், படித்துப் பரவசம் கொண்டு, கசிந்து கண்ணீர் சொரியும் நிலைக்கு நம்மை ஆக்குகின்றது. 

பேராசிரியரின் புகழ்பெற்ற பாமாலைகளுள் குறிப்பிடத் தக்கது, ‘நாயகமே!’ எனும் படைப்பாகும்.

“அருளாளன் அன்புடையோன் அல்லாஹு வின்கருணைப்
பெருங்கொடையாய் வந்துதித்த பெருமானே நாயகமே!”

என்று தொடங்கி, நபியவர்களின் நல்வாழ்வு, நற்போதனைகள், முன்மாதிரி ஆகியவற்றை அழகுறக் கோர்த்து, அரும்புகள்கூடப் பாடி அகம்  மகிழும் விதத்தில் அமைத்தளித்துள்ளார் என் பேராசான்.

“பாலைகளில் காடுகளில் பனிபடர்ந்த நாடுகளில் 
சோலைகளில் தீவுகளில் சொல்நாட்டும் நாயகமே!”    

என்றெல்லாம் பாடித் தமது ‘ஹுப்புன்நபி’ எனப்படும் நபிநேசத்தைப் பதிவு செய்கின்றார்கள்.

இளம் சிறார்கள் மீது எல்லையற்ற பாசத்தைப் பொழிந்த ‘இறையருட்கவிமணி’யவர்கள், அந்த அரும்புகள் பாடி மகிழ்வதற்காகக் கோர்த்த பாமாலைதான் ‘அரும்பூ’ எனும் தொகுப்பு.  இந்நூலைப் பற்றிக் கவிதையால் தமது கருத்தைப் பதிக்கின்றார் நம் ‘அதிரை அறிஞர்’ புலவர் அஹ்மது பஷீர் அவர்கள்:

“கரும்புக் காட்டைக் கவியாக்கிக் காதிற் குள்ளே ஊற்றியவர்
  சுருங்கிப் போன மானிடரைச் சொற்பொழி வாலே நிமிர்த்தியவர் 
விருந்து படைத்து வெகுநாட்கள் விலகிச் சென்றன எனும்போதில் 
அரும்பு மலரைக் கண்டேனே அதிக இன்பங் கொண்டேனே!
படிக்க எடுத்தேன்; வெடுக்கென்று பற்றிக் கொண்டார் வீட்டிலுளோர்
முடித்தார் ஒருவர் பின்னாக முடிக்கப் பொறுக்க மாட்டாமல் 
படிக்க முனைந்தார் அனைவருமே பழுத்த குலையில் ஈக்கள்போல்
தொடுத்த ‘அரும்பூ’ அத்தனையும் சுவைத்’தேன்’ ‘சுவைத்தேன்’ என்றாரே!” 


என் ஆசான் ‘இறையருட்கவிமணி’ அவர்களின் கவியரங்கத் தலைமைக் கவிதைகளின் தாக்கத்தைப் பற்றிய தகவல்களை, இன்ஷா அல்லாஹ், அடுத்த பதிவில் பார்ப்போம்.


அதிரை அஹ்மது
adiraiahmad@gmail.com

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 24 18

அதிரைநிருபர் பதிப்பகம் | July 23, 2012 | , ,

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவி பாடியுள்ளார்களா?!’ 

இந்த வினாவும் வியப்பும் பலருக்கும் தோன்றியிருக்கக் கூடும்.  குறிப்பாக, நம் சமகாலக் கவிஞர்கள் இதில் தம் கண்களையும் கருத்தையும் பதித்து, இதற்கான விடையை எதிர்பார்த்துக் காத்திருப்பதை அறிய முடிகின்றது.

மனிதர்கள் எவரிடத்தும் மண்டியிட்டுப் பாடம் படிக்காத மாமனிதரும் மனிதப் புனிதரும் ஆவார்கள் நபியவர்கள்.  இவ்வுண்மையை,

الذين يتبعو ن الرسول النبي الامي

(அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத நபியாகிய (நம்) தூதரைப் பின்பற்றுகின்றார்கள்.)

எனும் (7:157) இறைவசனத்தால் வல்ல இறைவன் அல்லாஹ் உறுதிப் படுத்துகின்றான்.  எழுதப் படிக்கத் தெரியாத நபியால் இத்துணைப் பெரிய சமூக மாற்றத்தையும் விழிப்புணர்வையும் எவ்வாறு ஏற்படுத்த முடிந்தது என்பதுதான் அன்றைய மற்றும் இன்றைய அறிவு ஜீவிகளால் வியந்து பாராட்ட வைத்த பண்பாகும்.

இலக்கிய விற்பன்னர்களும் கவிஞர்களும் சொற்போர் வீரர்களும் நிறைந்திருந்த அன்றைய அரபுச் சூழலில், அறிவார்ந்த சொற்களால் மறுப்புரை செய்து மாற்றத்தை ஏற்படுத்த இந்த இறை இறுதித் தூதரால் முடிந்தது என்றால், அது இறைவன் அவர்களுக்கு அளித்த சிறப்புத் தகுதியே அன்றி வேறில்லை. 

ஆதிக்க வலிமையால் அடக்கி ஒடுக்கப் பார்த்தார்கள் குறைஷியர்;  முடியவில்லை!  கேலி கிண்டல்கள் செய்து பார்த்தார்கள்;  தோல்வியைத் தழுவினார்கள்!  இறுதியாக அவர்கள் கைகளில் எடுத்த போர்க்கருவிதான் கவிதை!  அவர்களுள் இருந்த கவிஞர்கள் தம் திறமை முழுவதையும் கொண்டு கவிதை பாடினார்கள்; இறைப் பேரொளியைத் தம் நாவுகளால் ஊதி அணைக்கப் பார்த்தார்கள்!  அப்போது,

والشعرآء يتبعهم الغاون،  الم تر انهم في كل واد يهيمون، وانهم يقولون ما لا يفعلون

(இன்னும் கவிஞர்கள் எத்தகையோரென்றால், அவர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுகின்றார்கள்.  திண்ணமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிவதை (நபியே) நீர் பார்க்கவில்லையா?  இன்னும் திண்ணமாகத் தாம் செய்யாததைச் செய்ததாகச் சொல்கின்றார்கள்.)

எனும் (26:2 இறை வசனங்களைக் கொண்டு நபியவர்களை ஆற்றுப் படுத்தினான்; தேற்றினான் அல்லாஹ்.  ஆனாலும், அத்தகைய கவிஞர்களுக்கும் வாயாப்புக் கொடுக்கும் வாய்ப்பினை, நபியவர்களின் ‘ஹிஜ்ரத்’ எனும் புலம்பெயர்தலுக்குப் பின்னால் அமைத்துக் கொடுக்கின்றான்.    இதற்கான பல சான்றுகளை இத்தொடரின் இடையிடையே கண்டுவந்துள்ளோம்.

புலம் பெயர்ந்த நபியவர்களும் முஸ்லிம்களும் மதீனாவில் தம் வாழ்க்கையைத் தொடங்கிய காலகட்டத்தில் முதலாவதாகச் செய்த பணிகளுள் ஒன்று, தொழுகைப் பள்ளி கட்டியதாகும்.  தோழர்களுக்குத் தோள் கொடுக்கும் விதமாக, நபியவர்களும் கற்களைச் சுமந்துவந்து இறைவணக்கத்திற்கான இல்லம் கட்டும் பணியில் உதவினார்கள்.  அந்த ஆர்வம் மிக்க நேரத்தில் இறைத் தூதரின் இதயத்திலிருந்து கீழ்க்காணும் கவிதையடிகள் வெளிவந்தன:

هذا الحمال لا حمال خيبر ، هذا ابر ربنا و اطهر
اللهم إن الأجرأجرالآخرة ، فارحم الأنصار والمهاجرة

இதன் தமிழ்க் கவியாக்கம்:

                                   கற்கள் சுமக்கும் இச்சுமையோ
                                               கைபர்ச் சந்தைச் சுமையன்று
                                   பொற்புள தூய நன்மையினைப்  
                                                பொழியும் இறையின் சுமையாகும். 

                                    இறைவா!  எமது கூலியதோ 
                                                இறவா மறுமைக் கூலியதே 
                                    நிறைவாய் மக்கா மதீனாவின்
                                                நேசர்க் குதவி புரிந்திடுவாய்!
(சஹீஹுல் புகாரீ – 3906)
                  
அண்ணலெம் பெருமான் (ஸல்) அவர்கள் தமது நபித்துவத்தின் தொடக்கத்தில் எதிர்கொண்ட போரின்போது ஒரு மலை மீது ஏறிச்  சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது கற்பாறையொன்றில் தடுக்கி விழப் போனார்கள்!  கல் தடுக்கிய காலை நோக்கினார்கள்;  முன் விரலிலிருந்து குருதி வடிந்துகொண்டிருந்தது!  அந்த வேதனை அவர்களை வருத்தியபோதும், தமது கால் விரலைப் பார்த்துக் கீழ்க்கண்டவாறு கவியடியொன்றைக் கூறி, வேதனையை மாற்றிக்கொண்டார்கள்:

إصبع دميت هل أنت إلا 
و في سبيل الله ما لقيت

இதன் தமிழ்க் கவியாக்கம்:

                                      செங்குருதி சிந்துகின்ற விரலே உன்கால்
                                                     செல்லுகின்ற பாதையிறைப் பாதை யன்றோ?
(சஹீஹுல் புகாரி – 2802 / 6146, சஹீஹ் முஸ்லிம் - 3675)
         
ஹிஜ்ரி ஐந்தாமாண்டில் நடைபெற்ற அகழ்ப் போரின் முன்னேற்பாடாக மதீனாவைச் சுற்றி அகழ் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த அருமைத் தோழர்களைக் கண்டு கவலையுற்றும், அவர்களுக்கு ஆர்வமூட்டியும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்,

اللهم  لا عيش إلا عيش الآخرة
فاغفر للأنصار و المهاجرة     

என்ற ஈரடிக் கவிதையினைப் பாடினார்கள்.
(சஹீஹுல் புகாரீ – 2834,4099)

அக்கவியடிகளின் தமிழ்க் கவியாக்கம் இதோ:

                                      இறைவா!  உண்மை வாழ்வதுவோ 
                                                    என்றும் நிலைத்த மறுமையதே
                                       நிறைவாய் மதினா மக்காவின் 
                                                     நேசர் களைநீ மன்னிப்பாய்!   

கருணை நபியவர்கள் கவிகளும் பாடியுள்ளார்கள் என்பதற்கான சில சான்றுகளே இவை.  அவர்கள் காரணமின்றிக் கவிதைகளை வெறுக்கவுமில்லை;  அவர்களுக்கு இறைவன் கொடுத்திருந்த ‘வஹி’ என்ற உயர் இலக்கியத் திறன் கொண்டு, கவிதைகளைக் கேட்டு மகிழ்ந்தும் உள்ளார்கள்;  பாடுவோரை ஊக்கப்படுத்தியும் உள்ளார்கள் என்பதுவே உண்மையிலும் உண்மையாகும்.  
                                                                                                                     (போதுமா...?)
அதிரை அஹ்மது
adiraiahmad@gmail.com

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 23 27

அதிரைநிருபர் பதிப்பகம் | July 16, 2012 | ,


அண்மையில் ‘கவிதையின் தேவை’  (وظيفة الشعر) என்ற ஆய்வடிப்படையிலான அரபிக் கட்டுரை ஒன்று என் பார்வைக்குக் கிடைத்தது.  அந்தக் கட்டுரையை வரைந்தவர், அப்துல் அஸீஸ் பின் ஸாலிஹ் அல் -அஸ்கர் என்ற சஊதி அரேபிய அறிஞர் ஆவார்.  கட்டுரையின் தொடக்கம் இவ்வாறு அமைந்தது:

கவிதை என்பது யாது?  அதன் உருவ அமைப்பா?  யாப்பு விதிகளா?  அல்லது அதன் கருப்பொருளா?  அல்லது இவையனைத்தும் சேர்ந்த கலவையா?  இக்கேள்வியானது, இலக்கியவாதிகள், கவிஞர்கள், வாசகர்கள் ஆகிய அனைவரின் உள்ளங்களிலும் எழும் ஒன்றாகும்.

இவ்வாறு கூறிவிட்டு, ‘நபியின் கவிஞர்’ எனப் பெயர் பெற்ற ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) அவர்கள் கவிதை பற்றிக் கூறிய ஈரடிப் பாவொன்றை மேற்கோள் காட்டுகின்றார் அவ்வறிஞர்:

وإنما الشعر لب المرء يعرضه   على المجالس إن كيسا وإن حمقا
وإن أشعر بيت أنت قائله     بيت يقال إذا أنشدته : صدقا

இதன் தமிழ்க் கவியாக்கம்:

                        மனிதத்தின் கருப்பொருளாம் கவிதை தன்னை  
மன்றத்தில் அறிஞர்க்கும் பாம ரர்க்கும்
புனிதத்தின் துணைகொண்டு பாடும் போது
புரிதலிலே மாற்றங்கள் இருந்த போதும் 
உனதுள்ளத் துணர்வுக்குத் தோன்றும் ஒன்றை 
உண்மையென எடுத்துரைக்கக் கேட்போ ரெல்லாம்
இனிதுற்றுச் செவியேற்றுப் போற்றி நின்றே 
‘ஈதுண்மை ஈதுண்மை’ என்பா ரன்றோ!  

இதைத்தான் நம் தமிழ்க் கவிஞனும்கூட இலகுவான கண்ணிகளில்,

உள்ளத் துள்ளது கவிதை – இன்ப
உருவெ டுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை 
தெளிந்து ரைப்பது கவிதை 

என்று கூறினான் போலும்.  ‘Great minds think alike’ என்று இதனைத்தான் கூறுவர். 

அந்த ஆய்வாளர் அடுத்து எடுத்துரைக்கும் சான்று, அரபுலகின் சமகாலக் கவிஞரான உமர்  பஹாவுத்தீன் என்பவருடைய கருத்தாகும். “கவிதை என்பது, அதில் எடுத்தாளப்பெறும் சொல்லாடல், அமைப்பு, அணி மற்றும் யாப்பு போன்ற அனைத்தையும் கடந்த ஒன்றாகும்.  கவிஞனின் உள்ளுணர்வு, அவனது நோக்கம், செயல்பாடு, வரலாற்றுப் பின்னணி போன்ற முழு வாழ்க்கையின் பிரதிபலிப்பே கவிஞனின் கவிதை” என்கிறார் உமர் பஹாவுத்தீன். 

இந்த ஆய்வாளர் நம் சமகால மார்க்க அறிஞரான அஷ்ஷைக் அப்துல்லாஹ் பின் கமீஸ் என்பவர் கவிதை பற்றிக் கூறிய கருத்தையும் தமது ஆய்வுக்குச் சான்றாகக் கூறுகின்றார்.

أن الشعر سلاح من أسلحة الأمة

(கவிதை என்பது, இந்தச் சமுதாயத்தின் போர்க் கருவிகளுள் ஒன்றாகும்.)

உண்மை!  அதனால்தான் அரபுகள் ‘அய்யாமுல் ஜாஹிலிய்யா’ எனும் அறியாமைக் காலத்திலும் சரி, இஸ்லாத்தின் எழுச்சிக்குப் பின்னும் சரி, போர்க்களத்தில் ஆயுதமேந்திப் போரிட்டபோது, கவிதையையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தினர்.  ஏன்,  அண்ணல் நபி (ஸல்) அவர்கள்கூடப் பலபோது கவியடிகளை மொழிந்துள்ளார்கள்; அவற்றைப் பாடி உணர்வூட்டிய தம் தோழர்களை ஊக்கப் படுத்தியும் உள்ளார்களே!  இவ்வுண்மையை நம் இத்தொடரில் விரிவாகப் படித்துள்ளோம் அல்லவா?

மாற்றம் தேடும் மக்கள் எழுச்சி, மறுமலர்ச்சிப் போராட்டம், உரிமைக்கான எதிர்க்குரல் போன்றவற்றில், உணர்ச்சிப் பெருக்கால் பாமரன்கூடப் பாடத் தொடங்கிவிடுகின்றான் அல்லவா?  அந்த இதய எழுச்சிதான் கவிதை!  உணர்வின் ஊற்றுதான் கவிதை!  உலக அளவில் நாம் கண்டுவரும் அன்றாட எழுச்சிக் குரல்களுள்  அரபு நாடுகள் பலவற்றில் நடக்கும் அராஜகத்தை எதிர்த்து மக்கள் எழுப்பும் குரல்களினூடே கேட்கப்படும் கவிதைக் குரல்கள்!

அஷ்ஷைக் அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் எனும் அரபுப் பேரறிஞரின் கருத்துப்படி, 

الشعر هو : فيض العواطف 

(கவிதை என்பது, உணர்வுகளின் சிறப்பாகும்.)

ஆம்.  அதனால்தான், உள்ளங்களின் உணர்வுகளில் உள்ளொளியைப் பரப்ப வந்த உண்மைத் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வப்போது தாமும் கவிதையடிகளைப் பாடினார்கள்;  தம்  தோழர்கள் பாடக் கேட்டு மகிழவும் செய்தார்கள்!   இதற்கான சான்றுகளை நாம் முந்திய பதிவுகளில் பார்த்து வந்துள்ளோம்.
(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
அதிரை அஹ்மது
adiraiahmad@gmail.com