Showing posts with label அபூஇப்ராஹிம். Show all posts
Showing posts with label அபூஇப்ராஹிம். Show all posts

வாய் துர்நாற்றம்...! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | April 06, 2015 | , , , ,

வாய் - எப்போதும் நீரோட்டம் இருக்கும் பகுதி. வெதுவெதுப்பான சூழல். இந்தக் காரணங்களால் அது, பாக்டீரியா கிருமிகளுக்கு. குடித்தனம் நடத்த ஓர் அற்புதமான இடமாக இருப்பதோடு வெகுவேகமாக தங்கள் வாரிசுகளையும் பெற்றுத் தள்ளுகின்றன இவை. இதன் விளைவு - வாய் துர்நாற்றம்.

காலை எழுந்தவுடன், வாயில் இருந்து துர்நாற்றம் எழுவது என்பது மிகவும் சகஜமான ஒன்றுதான். இதற்குக் காரனம், எந்த உடல்நலக் கோளாறும் இல்லை. பற்களுக்கிடையே அகப்பட்டுக் கொண்ட சின்னச் சின்ன உணவுத் துகள்களை வாயில் இருந்து வெளியேற்றுவது (அதாவது உடலுக்குள் அனுப்புவது) எச்சில்தான். இது வழக்கமான ஒரு நடவடிக்கை. கூடவே, வேண்டாத பாக்டீரியாவால் உண்டாகும் வேண்டாத நாற்றங்களையும் உள்ளே தள்ளிவிடும்.

ஆனால், நாம் தூங்கும்போது எச்சில் சுரப்பது மிகவும் குறைந்துவிடுகிறது. வாய்ப் பகுதி உலர்ந்து போகிறது. இறந்த செல்கள் நாக்கில் தங்கிவிடுகின்றன. இவற்றையே உணவாகக் கொண்டு துர்நாற்றம் உண்டாகக்கூடிய ரசாயனப் பொருள்களை பாக்டீரியா வெளியேற்றுகிறது. இதனால்தான், காலையில் வாய் துர்நாற்றம். பற்களைத் துலக்கும்போது, நாக்கும் சுத்தம் செய்யப்பட, எச்சிலும் அதிகமாகச் சுரந்து நிலைமை சரியாகிவிடுகிறது.

சரி, பொதுவான வாய் துர்நாற்றத்துக்கு என்ன காரணம் ? பற்களைத் துலக்காததன் கரணமாக, அவற்றுக்கு இடையே உணவு தங்கிய உணவுப் பொருட்கள் அழுகிப்போய் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். ஈறுகளில் உண்டாகும் நோய்கூட இதற்குக் காரனமாக அமையலாம். அப்போது, ஈறுகள் சிவந்து பருத்துக் காணப்படும். சிலசமயம் அவற்றில் இருந்து ரத்தம் கசியலாம்.

பூண்டு, வெங்காயம், சிக்ரெட், புகையிலை ஆகியவற்றை எடுத்துக் கொண்ட பிறகு வாயில் ஏற்படும் ரசாயண மாற்றங்கள் வாய் துர்நாற்றத்துக்குக் காரணம் ஆகலாம்.

வாய் அல்லாத பிற பகுதிகளும்கூட வாய் துர்நாற்றத்துக்குக் காரணமாக அமையலாம். தொன்டை நுரையீரல், சைனஸ் ஆகிய பகுதிகளில் ஏற்படும் தொற்றுகள், வாய் துர்நாற்றத்துக்கு வழி வகுக்கலாம். எச்சில் சுரப்பிகளில் சிக்கல்கள் ஏற்பட்டாலும் இந்த நிலை தோன்றலாம். வாயால் மூச்சு விடும் பழக்கம் உள்ளவர்களுக்கும் வாய் துர்நாற்றம் உண்டாவது இயல்பு.

சர்க்கரை நோய், சிறுநீரக நோய், குடல் நோய் போன்றவற்றால் நீண்டகாலமாக அவதிப்படுபவர்களுக்கும் வாய் துர்நாற்ரம் உண்டாகலாம்.

இதன் காரணமாக, சுற்றி இருப்பவர்கள் விலகிப் போனாலும் சம்பந்தப்படவர், தனது வாய் துர்நாற்றத்தை உணர்ந்து கொள்வதில்லை. ஏன் தெரியுமா? மூக்கில் உள்ள வாசனையை அறியும் செல்கள், தங்களுக்கு வெகு அருகிலேயே தொடர்ந்து எழுந்து கொண்டு இருக்கும் வாய் துர்நாற்றத்துக்குப் பழகிவிடுகின்றன, அவ்வளவுதான்.

இதற்கு நேர் எதிராக, வேறு சிலர் தங்கள் வாயில் இருந்து எந்த துர்நாற்றமும் வெளிப்படாதபோதும், அப்படி இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

ஒரு பல் மருத்துவரால், எதிரே அமர்ந்திருப்பவரின் வாய் துர்நாற்றத்தை எளிதில் அறியமுடியும். தவிர, அதைக் கொண்டு அவரது உடல்நலக் கோளாறு என்ன என்பதைக்கூட அவர் கண்டு பிடிக்கக் கூடும்.

உதாரணத்துக்கு, வாய் சுவாசத்தில் பழ வாசனை வந்தால், அவரது இரத்தத்தில் சர்க்கரை மிக அதிகமாக இருக்கிறது என்று கூறலாம். சிறுநீரக பாதிப்பு கொண்டவர்களிடம் இருந்து சிறுநீர் போன்ற துர்நாற்றம் எழுந்தால், அவரது சிறுநீரகங்கள் செயலிழக்கத் தொடங்கியுள்ளதற்கான அறிகுறி அது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

வாய் துர்நாற்றத்துக்கு சரியான காரணம் எது என்பதைக் கண்டு பிடித்து அதை நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டால் வாய் துர்நாற்றம் நீங்கிவிடும். முக்கியமாக, தினமும் இருவேளை பற்களை சரியாகத் துலக்குங்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதாலும், எச்சில் அதிகமாக சுரக்கும் என்பதால், வாய் துர்நாற்றம் நீங்கக் கூடும். வாய் துர்நாற்றத்திற்கு வயிறும் ஒரு காரணம் ஆதலால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் வயிற்றை dulcolax போன்ற மாத்திரைகளின் மூலமோ விளக்கெண்ணெய் குடித்தோ சுத்தம் செய்வது நல்லது.

இப்படிக்கு
கா.மூ.தொ.கூட்டணி

கச்சா எண்ணெய் வடியுது ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | February 08, 2015 | , , , ,

நேற்று முன்தினம் வலை மேய்ச்சலில் சிக்கிய தொடர் சுட்டியை தட்டிக் கொண்டிருக்கும்போது ஒரு முகநூல் நிலைத் தகவல் சட்டென்று முதுகில் ஓங்கிய அடித்த மாதிரி இருந்தது... ;)

"நம் பிரதமர் ரஷ்யாவுடன் போட்ட ஒப்பந்தத்தால்தான் உலக அளவில் கச்சா எண்ணை விலை குறைஞ்சதுன்னு சொல்றாங்களே........ உண்மையா?

(முதல் கமெண்ட் பார்க்க)"


மேலும் பதிவில் கண்ட முதல் கருத்து இதோ :-


// Anand Venkat

சில நாட்கள் முன் எண்ணெய் விலை குறைந்ததற்கு நரேந்திர மோதி காரணம் என்று பதிவிட்டேன். பலர் உடன்படவில்லை. இதோ ஆதாரம்...

பெட்ரோல் விலை யாரால் குறைந்தது?? விளக்கம் இதோ...

சமீபத்தில் பாரத பிரதமர் ரஷ்யாவிடம் 13 க்கும் மேற்பட்ட ஒப்பந்தகளில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தத்தில் எரிபொருளும் உள்ளடக்கம் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

பெட்ரோல் விலை இறங்கியதற்கு காரணம் என்னவென்று எதிர்கட்சிகளிடம் கேட்டால்.... கச்சா எண்ணெய் விலை குறைந்துவிட்டதாம்.

சரி.... இத்தனை காலமாக இறங்காத பெட்ரோல் விலை தீடீர் என்று ஏன் இறங்கு முகமாகவே இருக்கிறது? இப்படிப்பட்டவர்களுக்கு புரியும் படியாக சொல்லவேண்டும் என்றால்... ரஷ்யாவிடம் போடப்பட்ட அந்த எரிபொருளின் ஒப்பந்தங்களே முக்கிய காரணம் என்பதுதான்...

பல கோடிக்கணக்கான லிட்டர் எரிபொருள் எந்த ஒரு தடங்களும் இன்றி இந்தியாவிற்க்கு வழங்கிக்கொண்டே இருக்கவேண்டும். மேலும் இந்தியாவில் இருக்கும் எரிபொருளை எடுக்கும் தொழில்நுட்பத்தையும் இந்தியாவிற்க்கு கொடுக்கவேண்டும் என்பதுதான் அதன் சிறப்பம்சம்..

சவுதி போன்ற நாடுகளில் இருப்பது போன்ற எரிபொருள்கள் நமது நாட்டிலும் இருக்கிறது. ஆனால் அதை நமது நாட்டு தொழில்நுட்பத்தில் எடுத்தால் அதற்கு ஆகும் செலவு ஒரு லிட்டர் எரிபொருளின் விலை 100 ரூபாய் அளவிற்க்கு இட்டுச்செல்லும். இத்தனை காலமாக மக்களை ஏமாற்றி ஆட்சி புரிந்த அயல்நாட்டு மதத்து கைக்கூலிகள் இந்த விஷயம் தெரிந்தும் முயற்சி எடுக்கவே இல்லை. ஆகவே அந்த தொழில்நுட்பத்தினை இந்தியாவிற்க்கு வழங்கி எதிர்கால பெட்ரோலிய பொருட்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அந்த ஒப்பந்தத்தில் இதையும் சேர்த்து பல மாங்காய் அடிப்பது போன்று மத்திய அரசு அடித்துள்ளது.

பெட்ரோலிய பொருட்களை நம்பி இருக்கும் உலகத்தின் மிகப்பெரிய மக்கள் தொகை உள்ள ஒரு (இந்தியா) நாடு ரஷ்யாவிடம் ஒப்பந்த்த்தை மேற்கொண்டு அரபு நாட்டிற்க்குக் சிறிய ஆப்பை வைத்தது.

இதை சற்றும் எதிர்பார்க்காத சீனா.. இந்தியாவிற்க்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை விட சில மடங்கு அதிக எரிபொருள் வழங்கவேண்டும் என ஒப்பந்தம் ரஷ்யாவிடம் செய்துகொண்டது. சீனாவும், இந்திய பிரதமர் திரு நரேந்திரமோடி ஒப்பந்ததிற்க்கு பயந்து இப்படி ஒரு பதில் ஒப்பந்தத்தை செய்தது, அரபு நாடு வருமானத்திற்க்கு அடுத்த பேரிடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் ஜனத்தொகையில் இருக்கும் இரு மிகப்பெரிய நாடுகளும் சென்ற காரணத்தால் கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துகொண்டு இருக்கிறது.

மேலும் உலக வல்லரசுகளுடன் இணைந்து இந்தியா உலக பயங்கரவாதிகளுக்கு மதத்தின் அடிப்படையில் உறுதுணையாக இருக்கும் அரபு நாடுகளின் கொட்டத்தை முழுவதும் அடக்கி ஆள பாரதப்பிரதமர் உட்பட பல வல்லரசுகளால் போடப்பட்ட திட்டம்தான் இது.

எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்படும் இந்திய பற்றுடைய பாரத பிரதமர் அவர்கள் ஏற்படுத்திய இந்த திட்டத்தின் மூலம் உலக சந்தையில் மாற்றம் ஏற்ப்பட்டதோடு மட்டுமில்லாமல் வரும் காலங்களில் மாநிலங்களில் வரும் தேர்தல்களில் அரசியல்வாதிகள் பெட்ரோலை இலவசமாகவே வழங்குவார்கள் என்பதை நாம் திடகாத்திரமாக நம்பலாம்.

இதனால் மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்... இந்தியா மட்டுமல்லாமல் உலகமுழுவதும் கச்சா எண்ணெய் விலை குறைந்த அனைவரும் பலன் அடைய காரணம் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களின் செயல்பாடும் ஒரு முக்கிய காரணம் ..//

***************(0)(0)(0)(0)(0)(0)(0)(0)***************

இதற்கு அன்புச் சகோதரர் புதுசுரபி ரஃபீக் அவர்களின் கீழ்கண்ட கருத்தையும் அவசியம் வாசியுங்கள்


"உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்ட..."
----------------------------------------------------------------

”உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்ட” இப்படியொரு சொலவடை நம்ம ஊருப்பக்கம் பேசிக்கிட்டுருப்பத கேட்டிருப்போமுல்ல, இப்ப அதை அமெரிக்காவும், அதன் பேச்சைக் கேட்ட சவூதி, வெனிசூலா போன்ற எண்ணெய் ஏற்றுமதி நாடுகளெல்லாம் சொல்லிப் புலம்பப் போறத வெகு சீக்க்ரம் கேட்கப்போறோம்...

இப்போது, ஒருவழியாக உலகின் மிகப் பெரிய எண்ணெய் இறக்குமதி நாடான சீனாவை தம் பக்கம் சாய்த்து வெற்றி கண்டிருக்கிறது ரஷ்யா. மேற்குலகம் ரஷ்யாவை புறந்தள்ளி அந்நியப்படுத்தியும், பொருளாதாரத்தில் நசிக்கியும் சதிவேலை நடத்திக் கொண்டிருந்த வேளையில், சீனாவுடனான உறவினை பலப்படுத்தி அடக்க விலையில் எண்ணெய் விற்று தமது எதிர்காலத்தின் திட்டத்திற்கு வலுசேர்த்துக் கொண்டிருந்தது ரஷ்யா.

2014ம் ஆண்டில் சீனாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில், 36 சதவீதத்தினை ரஷ்யா கொடுத்திருக்கிறது . இதனால் உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவிற்கு 8% இழப்பினையும், வெனிசூலாவிற்கு 11% இழப்பினையும் பரிசாகக் கொடுத்தது சீனா.
இச்சூழ்நிலையில்தான் ரஷ்யாவின் வயிற்றிலடிப்பதற்காக, மேற்சொன்ன எண்ணெய் ஏற்றுமதி நாடுகளைப் பணிய வைத்து விலை குறைப்பு நாடகத்தை அமெரிக்கா அரங்கேற்றி வந்தது. (அமெரிக்கா செய்த இந்த சூழ்ச்சிகளுக்கு / இந்த நாடகத்திற்கு நம்நாட்டில் வேறு வண்ணம் பூசப்பட்டது நகையான ஒன்று.)

ஆனால் ’ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பது போல உக்ரைன் உடனான உரசல் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் போன்ற பின்னடைவுகளை மிக சாதுர்யமாக கையாண்டு சீனாவுக்கும் ரஷ்யாவிற்குமிடையிலான இயற்கை எரிவாயு திட்டத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு ஒப்பந்தத்தை 2014ம் ஆண்டு மே மாதாம் சீனாவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தத்தின் படி 2018ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 38 பில்லியன் கன மீட்டர் அளவிலான இயற்கை எரிவாயுவை சீனாவிற்கு ரஷ்யா ஏற்றுமதி செய்யும். பிறகு இது படிப்படியாக ஆண்டொன்றுக்கு 60 பில்லியன் கன மீட்டர் அளவிற்கு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யப்படும். இதில் சிறப்பம்சம் என்னவெனில், ஐரோப்பா கொடுத்தும் வாங்கும் விலையை விட ‘தரை’ ரேட்டுக்கு சீனா பேரம் பேசி முடித்திருக்கிறது. அதாவது ஒரு மில்லியன் BTu அளவிலான எரிவாயு 9 முதல் 10 அமெரிக்க டாலருக்கு வாங்குவதென முடிவு செய்திருக்கிறது. பக்கத்திலிருக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கே கூட இந்த அளவுக்கு விற்றது இல்லையாம் ரஷ்யா.

ரஷ்ய நிறுவனங்களுக்கு உதவும் பொருட்டு, சீனா முன்பணம் கொடுத்து எரிவாயு/ எண்ணெய் இறக்குமதி செய்கிறது சீனா. அதுமாத்திரமல்லாமல், சில நிறுவனங்களுக்கு சீனா தன் வங்கி மூலம் கடனுதவியும் செய்கிறது.

இதன் காரணமாக மிகவும் குறைந்த விலைக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு பரிவத்தனைக்கு இரு வல்லரசுகளும் பரஸ்பரம் ஒத்துழைக்கின்றது. இன்னும் ஒருபடி மேலே போய் சில பெரிய நிறுவனங்களில் கனிசமான பங்குகளை வாங்கி வைத்திருக்கிறது.

இதன் மூலம் மேற்கின் பொருளாதாரத்தடை விலக்கக் கோரல் மற்றும் சர்வதேச நிதியங்களை நாடவேண்டியதில்லை என்ற புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது சீனா.
இனியும் அமெரிக்காவின் யோசனையக் கேட்பதா மறுப்பதா என்று OPEC நாடுகள் குழப்பத்தில் புலம்புவதும் தெளிவாய் கேட்கிறது.

உலகம் இப்படிப் போய்க்கொண்டிருக்கையில், இங்கோ எல்லா அற்புதங்களுக்கும் எங்கள் விளக்கே காரணம் என்று விளக்கம் சொல்லி நம்மை ஏமாற்றும் வியாபாரம் கொழிக்கிறது.

பரிந்துரை : அபூஇப்ராஹீம்

மலை மேல் மழை... [காணொளி...] 2

அதிரைநிருபர் பதிப்பகம் | October 17, 2014 | , , , ,


ஊர் ஞாபகம் அதிகம் வரவைக்கும் காலம்தான் அழகிய மழைக்காலம்...

ஊரில் (நல்ல) மழையாமே !?

மலைமேல் விழும் மழையே...! ஓடோடிவா...!

எங்களூரில் பள்ளங்கள் தோண்டி வைத்திருக்கின்றனர் குளங்கள் நிறைவதற்கு, தடுக்கி விழ அல்ல உன்னை தடுத்து அங்கே விழவைத்து நாங்கள் எழத்தான்.

நாங்கள்தான் சாலையை கடக்க கரடுமுரடான பாதைகளை தவிர்ப்பதில் மும்முரமாக இருப்போம், ஆனால்... மழையே உனக்கென்ன எங்கிருந்தாலும் பள்ளம் தேடித்தானே பாய்ந்து செல்வாய் அதனை சமநிலைப்படுத்துவதற்கு...!

இனி...,! இந்த காணொளியை இரண்டு காதுகளில் ஹெட்ஃபோன் வைத்துக் கொண்டு பாருங்கள் எந்தச் சூழலில் நீங்கள் இருந்தாலும் மழையருகில் இருந்து கொண்டு அதில் நனைந்த உணர்வு ஏற்படும்.


அபூஇப்ராஹிம்

மதீனா ஒப்பந்தம்... 5

அதிரைநிருபர் பதிப்பகம் | August 07, 2014 | , , ,

எல்லையில்லா அருளும் அன்பும் கொண்ட அல்லாஹ்வின் பெயர் கூறி, இந்த ஒப்பந்தத்தைத் தொடங்குகின்றோம். இந்த ஒற்றுமைக்கான ஆவணம், உம்மி நபியாகிய முஹம்மதால் உருவாக்கப் பெற்றது. இந்த ஒப்பந்தமானது, மக்காவிலிருந்து புலம் பெயர்ந்து மதினாவுக்கு வந்துள்ளவர்களுக்கும், மதினாவில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாத அரபுகளுக்கும் இந்தப் புனிதப் பகுதியில் வந்து பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் யூதர்களுக்கும் இடையேயான நல்லாட்சி ஒப்பந்தமாகும் இங்கு வாழும் மக்கள் பல்வேறுபட்ட இனத்தவர்களாயினும், இது அவர்கள் அனைவருக்குமான அமைதிக்குரிய ஒப்பந்தமாகும்.

* மக்காவிலிருந்து 'ஹிஜ்ரத்' செய்து மதீனாவுக்கு வந்த 'முஜாஹிர்' சகோதரர்கள், இங்குள்ள 'அன்ஸார்'களுடன் ஒரே இனம் என்ற உணர்விலும், இஸ்லாமிய சகோதரத்துவ அடிப்படையிலும் சேர்ந்து வாழவேண்டும்.

* மக்காவிலிருந்து 'ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வந்த குறைஷி 'முஹாஜிர்'கள் தாம் முன்னதாக மக்காவில் கடைபிடித்து வந்த கொலைக்குப் பகரமான பிணைத் தொகை கொடுக்கும் வழக்கம் இங்கும் தொடர வேண்டும்.

* பிணைத் தொகை கொடுக்க முடியாத பொருளாதார வலமையற்ற உறவினருடன் இணக்கமாகவும் இரக்கமாகவும் வாழ வேண்டும்.

* மதினாவில் உள்ள 'பனூ அஃவ்ப்' முதலான 'அன்ஸார்'கள் தற்போது வரை நடைமுறையில் உள்ள வழக்கங்களை பலவீனமான மற்ற இனத்தவர்களோடு பரிவுடனும் சகோதரத்துவ உணர்வுடனும் தொடர வேண்டும்.

* மக்காவிலிருந்து புலம் பெயர்ந்து வந்த முஸ்லிம்கள், பலவீனமான தமது இனத்தவர்களுக்காகப் பணயத் தொகை அல்லது கொலைக்குரிய பிணைத் தண்டனைப் போன்றவற்றைக் கொடுத்துதவி, மக்கத்தவர்களின் பிடியிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும்.

* அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு, சுதந்திரமான வாழ்க்கையைப் பெற்ற எவருடனும் முஸ்லிம்கள் கூட்டு சேர்ந்து அவ்வினத்தவருக்கு எதிராகச் செயல்படக் கூடாது.

* உண்மையான இறைநம்பிக்கை கொண்டவர்கள், நீதி நேர்மைக்கு எதிராகத் தம் இனைத்தவருடன் கூட்டு சேரக் கூடாது. அத்தகையவர்கள் முஸ்லிம்களாக மறிவிட்டிருந்தாலும் சரியே.

* முஸ்லிம்கள் தமது இனத்தைச் சேர்ந்த முஸ்லிமல்லாவருக்கு ஆதரவாக, எந்த முஸ்லிமையும் கொலை செய்வதில் கூட்டு சேரக்கூடாது.

* முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களே. நீதி செலுத்துபவன் அல்லாஹ் ஒருவன்தான் என்ற அடிப்படையில், தண்டனையோ மன்னிப்போ எதுவாயினும்,  அவனிடத்திலிருந்தே வரவேண்டும் என்று நம்ப வேண்டும்.

* யூத இனத்தவர் நம்மைப் பின்பற்றுவராயின், அவர் தம்முடைய உதவிகள் மற்றும் சமத்துவம் ஆகியவற்றைப் பெறுவார். அவர் பாரபட்சமாக நடத்தபட மாட்டார்; அல்லது அவருக்கு எதிராக, அவருடைய எதிரிகளுக்கு உதவியும் செய்யப்பட மாட்டாது.

* அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போர் நடக்கும்போது, எந்த இறை நம்பிக்கையாளருக்கும் சார்பாக, அவருடைய இனத்தவரைத் தனிமைப் படுத்தி விட்டு, எதிரிகளுடன் சமாதான உடண்படிக்கை செய்யப்பட மாட்டது எங்கும் சமநீதிதான் நிகழ்வுறும்.

* போருக்குச் செல்லும்போது ஏறிச் செல்ல வாகனப் பற்றாக்குறை ஏற்பட்டால், இறை நம்பிக்கையாளார்கள் தமக்குள் வாகனத்தை மாறி மாறிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

* இறை நம்பிக்கையாளார்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடும்போது, குருதி சிந்த நேர்ந்தால், அதற்குக் காரணமானவரைப் பழி வாங்கலாம்.

* இறைப் பற்று மிகுந்த இறை நம்பிக்கையாளர் எவரும் உதவி வழங்கப்பட்டு, நேர்வழியில் நடாத்தப்படுவார்.

* மக்கத்து குறைஷியருக்கும் அவருடைய சொத்துக்கும் பாதுகாவலர் என்ற தகுதியில் வரும் இணைவைப்பாளர் எவரும் உதவி செய்யப்பட மாட்டார். அல்லது, இறைநம்பிக்கையாளர் எவருடனும் கூட்டு சேர்ந்து பரிந்துரை கூறவும் அனுமதிக்கப்பட மாட்டார்.

* உண்மையில் வரம்பு மீறி, எவருடைய இறப்பிற்காவது காரணமானவர், அவருக்குத் தண்டனை கொடுக்க உரிமைப்பட்டவர் ஆறுதல் அடையும் வரை, தண்டனைக்கு ஆளாவார்.

* இறைநம்பிக்கையாளர் ஒருவரின் இறப்பிற்குக் காரணமான எவரும், தண்டனைக்கு உரியவர் ஆவர். அதற்காகப் பழிவாங்குவது முஸ்லிம்கள் அனைவர் மீதும் கடமையாகும்.

* அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்த இறை நம்பிக்கையாளரும், இந்த ஒற்றுமை ஆவணத்திற்கு எதிராக, தீங்கிழைத்த எவருக்கும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது. அவ்வாறு செய்பவர், இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாவார். அதற்கு பகரமாக எவ்வித நஷ்ட ஈடும் எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

* எவருக்காவது இந்த ஒற்றுமை ஆவணத்தின் ஏதேனும் பகுதியை ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அப்போது அவர் அல்லாஹ்வின் வேதத்தையும் நபியின் தீர்ப்பையும் நாடுவார்.

* முஸ்லிம்களும், யூதர்களும், இறைமறுப்பாளர் மற்றும் இணை வைப்பவர்களோடு போரில் ஈடுபட்டிருக்கும் போதெல்லாம், அப்போருக்கான செலவை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வது போன்றே யூதர்களும் பணப் பங்களிப்புச் செய்ய வேண்டும்.

* 'பனூனி அவ்ஃப்' யூதப் பிரிவைச் சார்ந்தவர்கள் முஸ்லிம்களுடன் ஒரே இனமாகக் கருதப்படுவர். யூதர்களுக்கு, அவர்களின் மதத்தைப் பின்பற்றுவதும், முஸ்லிம்களுக்கு அவர்களின் மார்க்கத்தைச் சாந்திருப்பதும் சாலும்.

* யூதர்களின் 'பனூ அவ்ஃபுக்கு' வழங்கப்பட்ட உரிமைகள் மற்ற யூத இனத்தவர்களான 'பனூ நஜ்ஜார்', 'பனில் ஹாரிதா', 'பனூ ஸாஇதா', 'பனூ ஜுஉஷும்', பனூ தஅலபா', 'ஜுஃப்னா', 'பனூ ஷுத்தைபா' ஆகியோருக்கும் பொருந்தும்.

* யூத இனத்தவருக்குள்ளேயே பகை ஏற்பட்டு, அவர்களுக்குள் சண்டை நடக்கும் சூழல் உருவானால், முஹம்மது(ஸல்) அவர்களின் ஒப்புதலின்றிப் போர் நடைபெறாது.

* இனப்போர் மூளும் நிலை வந்தால், அவர்களின் பெண்களையும், சிறார்களையும் பாதுகாப்பதில் முனைப்புக் காட்ட வேண்டும். இனப்பகையால் யூதர்களோ முஸ்லிம்களோ போருக்குச் செல்லும்போது, அதன் செலவினங்களை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.

* போரைத் தவிர்ப்பதற்காக, தீமையைக் களைந்து நன்மையைப் புகுத்தி, அவர்கள் முதலில் தமக்குள் சமாதானப் போதனை செய்ய வேண்டும்.

* ஓர் இனம் தவறிழைத்தால், அதன் தனி மனிதன் குற்றம் சாட்டப்படக் கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்ய வேண்டும்.

* யாரெல்லாம் உந்த உடன்படிக்கையில் பங்களிப்புச் செய்து இணக்கம் காட்டுவாரோ, அவர்கள் அனைவரும் மதீனாவின் மையப் பகுதியைப் புனிதமாகக் கருதவேண்டும்.

* அடுத்தடுத்த அண்டை வீட்டார் ஒற்றுமையுடன் இணைந்து வாழவேண்டும். பாவம் செய்தும் தொந்தரவு செய்தும், ஒருவருக்கொருவர் பகைவர்களாகிப் போய்விடக் கூடாது.

* தன்னுடையது அல்லாத சொத்தில் அதன் உரிமையாளரின் அனுமதியின்றி நுழையக் கூடாது.

* இவ்வொப்பந்தத்தின்படி, முஸ்லிமாகாத மக்கத்து குறைஷிகளும், அவர்களின் உடன்படிக்கையாளர்களும் எவ்வித பாதுகாப்பையும் பெற முடியாது.

* இந்த ஆவணத்தை மதித்து ஏற்றுக் கொண்டு கையொப்பமிட்ட ஒவ்வொருவரும், எதிரிகளிடமிருந்து மதினாவைப் பாதுகாப்பது தம் கடமைகளுள் தலையாயது என்று கருத வேண்டும்.

* எவருடனாவது பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள முஸ்லிம்களால் மற்றவர்கள் அழைக்கப்பட்டால் அவர்கள் அதற்குத் தமது முழுமையான ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும்.

* முஸ்லிம்கள் அல்லாத மற்றவர்கள் இதுபோன்ற அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ள முஸ்லிம்களை அழைத்தால், போர் முழுமையாக முடிந்து விட்ட நிலையில், அதற்கு முஸ்லிம்கள் இணங்குவதும் அல்லது இணங்காதிருப்பதும் முஸ்லிம்களின் முடிவைப் பொறுத்தது.

* எவருடனாவது போர் செய்து வெற்றியைப் பெற்றால், எதிர்களிடமிருந்து கவர்ந்த போர்க் கருவிகளும் மற்ற உடமைகளும் அவரவருக்கே சொந்தமாகும். இவ்வொப்பந்தமானது, பாவம் மற்றும் அநீதியைப் புரியும் எவருக்கும் பாதுகாப்பு தராது. போரில் பங்களிப்புச் செய்பவர்களும், செய்யாமல் தம் வீடுகளில் இருப்பவர்களும் பாதுகாப்பைப் பெறுவார்கள். ஆனால், அநீதியும் பாவமும் செய்பவருக்குப் பாதுகாப்பு கொடுக்க இயலாது. நல்லவர்களுக்கும், தமது மார்க்கத்தில் பற்றுடையவர்களுக்கும் இவ்வொப்பந்தத்தில் பங்குண்டு. இது, அல்லாஹ்வின் கருணையும் ஆகும்.

'அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம்' என்ற புத்தகத்திலிருந்து...
மூலம் : மிர்ஸா யாவர் பெய்க்
தமிழாக்கம் :  அதிரை அஹ்மது

பரிந்துரை : அபூஇப்ராஹீம்

ஆஞ்சியோ ப்ளாஸ்ட்டும் அருமை சகாவும் ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | January 19, 2014 | , , , , ,

சனவரி 1ம் தேதி 2014 - துபாய் மக்களுக்கு தூங்கி எழுந்த புத்தம் புது வருடம் காலை 11:30 மணியளவில் அலைபேசி அழைப்பு எங்கள் ஃபேக்டரியில் வேலை செய்யும் தமிழகத்தை சார்ந்த சகோதரர் விடுமுறை தினமாதலால் சொந்தங்களைச் சந்திக்க தேரா (ஜெபல் அலியிலிருந்து துபாய்) வந்த ஒருவருக்கு (வயது 50) நெஞ்சு வலி. அவரை துபாயில் எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என்ற கேள்வியோடு அவரின் உறவினர் கேட்டார்.

சற்றே பதற்றமான என் பதிலோ "சட்டென்று அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள், வலி அதிகமென்றால் ஆம்புலன்ஸை அழையுங்கள்" என்று சொல்லி அழுத்தம் கொடுத்தேன். அவர்களோ அருகில் இருந்த பெல்ஹோல் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கே முதலுதவியைச் செய்த மருத்துவர் உடணடியாக அவருக்கு ஆஞ்சியோ கிராஃபி செய்யனும் என்று மருத்தவமனை (வியாபாரிகள்) அடுத்த கட்டமாக விலைப்பட்டியலை எடுத்து, இதற்கு இவ்வளவு அதற்கு இவ்வளவு என்று பேரம் மட்டுமல்ல இன்சூரன்ஸ் இதுக்கு அனுமதி அதுக்கு அனுமதியில்லை என்று கிட்டத்தட்ட பகல் மூன்று மணி வரை கடத்திக் கொண்டு இருந்தார்கள்.

நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட சகோதரரின் உறவினர்களும் அவர்களின் நண்பர்களும் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்று அனுமதி கேட்டால் பெல்ஹொல் மருத்துவமனைக் காரர்கள் அனுமதிக்க மறுத்து விட்டனர். அடுத்து அவர்களாகவே இன்னும் பிற இரண்டு பெரிய மருத்துவமனைகளுக்கு தொடர்பு கொண்டிருக்கிறார்கள் அவர்களும் இதேபோல் இவ்வளாவு செலவாகும், முதலில் அட்வான்ஸ் இவ்வளவு கட்டனும் என்ற பேரமும் தொடர்ந்திருக்கிறது.

மாலை ஐந்து அரை மணிக்கு அவரின் உறவினர்கள் எனக்கு மீண்டும் ஃபோன் செய்தனர் மேற்சொன்னவைகள் விளக்கிய பின்னர், உடணடியாக பெல்ஹொல் மருத்துவமனைக்குச் சென்றேன், அதற்குள் அவர்களாகவே ஈரானியன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல அனுமதி பெற்று ஆம்புலன்ஸும் ரெடியாகி இருந்தது.

அங்கிருந்து அவரை அழைத்துக் கொண்டு ஆம்புலன்ஸ் ஈரானியன் மருத்துவமனைக்கு சென்றது. அவர்களின் ஆரம்ப கட்ட ஆயத்தங்கள் மற்றும் முதலுதவியின் தொடர்ச்சி ஆனதும். காத்திருந்தோம், அடுத்ததாக ஆஞ்சியோ கிராஃபி டெஸ்ட் உடணடியாக துவங்கியது அதில் அந்த சகோதரருக்கு மூன்று அடைப்புகள் இருப்பதாகவும் அதனை உடணடியாக செய்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்தினர்.

அதற்கிடையில் வீட்டாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, வீட்டாரும் எப்படியாவது ஊருக்கு அனுப்பி வைக்க இயலுமா என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அதுவே எங்கள் முயற்சியாகவும் இருந்தது. ஆனால் மருத்துவமனை மருத்துவர்கள் இந்த நிலையில் விமானப் பயணம் சரிப்பட்டு வராது, அதோடு அவருடைய ஹைபர் டென்சன் கொஞ்சம் கூட குறையவில்லை என்று மறுத்து விட்டனர். அப்படியே வலுக்கட்டாயமாக அனுப்ப முயன்றாலும் ஒருவாரம் கழித்துதான் முடியும் என்று சொல்லி விட்டனர்.

அன்றைய பொழுது கழிந்தது, அடுத்த நாள் காலை 06:00 மணிக்கு நேரில் சென்று பார்த்தேன் நன்றாக இருந்தார், வழக்கமான சாப்பாடும் சாப்பிட்டிருக்கிறார். ஆறுதல் வார்த்தைகள் சொல்லிவிட்டு அலுவலகம் சென்று விட்டேன்.

சனவரி 2ம் தேதியும் அமைதியாகவே சென்றது, அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ். பொழுதும் நன்றாகவே கழிந்தது, அந்த சகோதரரின் குடும்பத்தினரும் ஊரில் நிம்மதியாயினர்.

சனவரி 3ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 11:00 மணிக்கு அவரின் உறவினரின் மொபைலில் அந்த சகோதரரோடு பேசிக் கொண்டேன். நலமுடன் தெளிவாக பேசிக் கொண்டு இருந்தார். மேலும் அங்கே மருத்துவமனையில் மீண்டும் பெல்ஹோல் மருத்துவமனையில் சொன்னதையேச் சொன்னார்கள், அதில் அதிக அவசரம் இருந்தது. உடணடியாக அதனைச் செய்தே ஆகவேண்டும் என்று சொன்னதால் பதற்றம் தொற்றியது. 

மாலை ஏழு அரையானது இன்சூரன்ஸ் அனுமதி கிடைக்க தாமதமானதால் முதலில் டெப்பாசிட் செய்யுங்கள் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டச் சொன்னார்கள். அவசரத் தேவையறிந்து அன்று விடுமுறையானதால் நானும் எனக்கு அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு மேல் இருந்ததால் என்னோட முதலாளிக்கு தகவல் தெரிவித்தேன்.

எட்டு மணிக்கு எங்கள் முதலாளியே நேரில் வந்து அந்த தொகையை தனது கார்டு மூலம் அவர்கள் கட்டச் சொன்ன தொகையை செலுத்தி விட்டு பதிக்கப்பட்ட சகோதரருக்கு ஆறுதல் சொல்லி விட்டுச் சென்றார்.

மருத்துவமனை கேட்ட தொகையை செலுத்தியதும், வேலைகள் வேகமெடுத்தது... இரவு 10:30 மணிக்கு மேல் ஆஞ்சியோ ப்ளாஸ்ட் செய்ய இருக்கிறோம் என்றனர். ஆஞ்சியோ பளாஸ்ட் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தாலும் இன்னும் என்னவெல்லாம் என்று மேலும் விபரங்களை இரவு வெகு நேரமாக தேடியெடுத்து அறிய முற்பட்டேன்.

இரவு 11:15 மணியளவில் ஒரு எஸ்.எம்.எஸ். அந்த சகோதரரின் சொந்தக்கார் "அஞ்சியோ ப்ளாஸ்ட் முடிந்து விட்டது  நல்லவிதமாக இருப்பதாக" அனுப்பியிருந்தார்.

அந்த எஸ் எம் எஸ்ஸை 15 நிமிடம் கழித்துதான் பார்க்க நேர்ந்தது, அதனப் பார்த்ததும் உடணடியாக அவருக்கு ஃபோன் செய்தேன், அவரோ சற்றே தளர்ந்திருந்தார், குரலில் அழுகையின் கசிவு தெரிந்தது. "மூன்று அடைப்பில் இரண்டைதான் சரி செய்து இருக்கின்றனர் இன்னும் ஒன்றைச் செய்ய இயலவில்லையாம், காரணம் இருதயத்தின் இயக்கத்தில் வேகம் குறைந்து விட்டது, அதோடு உள்ளிருக்கும் தசைகளில் தளர்ச்சி இருப்பதாலும் இரண்டு நாட்கள் கழித்துதான் செய்ய வேண்டும்" என்று மருத்துவர்கள் சொன்னதாகச் சொன்னார். எனக்கும் எதோ குழப்பமாக இருந்தது, இந்த சிகிச்சை முறையை ஒரே நேரத்தில்தானே செய்வார்கள் அவ்வாறு செய்வதற்கு முன்னர் அதற்கான தகுதியுடன் உடல் ஒத்துழைக்குமா என்று சரி பார்த்துதானே செய்திருக்கனும். அப்படியிருக்க ஏன் இந்த குளறுபடி என்ற அச்சமும் தொற்றிக் கொண்டது.

அதன் பின்னர் உறக்கமும் கலைந்தது, சிந்தனையோட்டம் சற்றே கவலையுடன் குழப்பத்தில் இருந்தேன். ஈரானியன் மருத்துவமனைக்கு ஃபோன் செய்தேன் டியூட்டி மருத்தவரிடம் பேசினேன் அவரும் மேற்சொன்னவையே அப்படியே விளக்கமாச் சொன்னார். அதோடு கொஞ்ச நேரத்தில் சரியாயிடும் என்றும் ஆறுதல் சொன்னார்.

நள்ளிரவு 12:50 மணியளவில் அதாவது சனவரி 4ம் தேதி மீண்டும் அந்த சகோதரரின் உறவினரின் அலைபேசி அழைப்பு "மாமா மவுத் ஆகிவிட்டார்கள்" என்ற குரலின் அழுகையை சமாதானப் படுத்த தடுமாறினேன் "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்".

அடுத்த 15 நிமிடத்தில் நானும் அங்கே சென்று விட்டேன், அந்த அதிர்விலிருந்து மீளுவதற்கு தவித்துக் கொண்டிருந்தேன். அனுதாபமும் வருத்தமும் கலந்து எனது குரலை கோபத்தில் உயர்த்த வைத்து விட்டது சத்தம் கேட்டதும். ஓடிவந்தனர் மருத்துவர்கள், கூலாக "வருந்துகிறோம் சட்டென்று ஹார்ட் அட்டாக் வந்து விட்டது அதனால் இறந்து விட்டார்" என்று சொன்னதும் வல்லமை நிறைந்த அல்லாஹ் அந்த நேரத்தில் அதிமாகவே பொறுமையை கொடுத்து அருளினான். அதன் காரணமாக சாந்தமாகவே மேலும் நடக்க வேண்டியதை கவனிக்க ஆரம்பித்து விட்டேன்.

வீட்டாருக்கு (ஊருக்கு) தகவல் கொடுக்கும் பொறுப்பை அவரின் சொந்தக் காரர்கள் செய்தனர், அதோடு மார்க்கம் அனுமதித்ததையே ஊரிலிருக்கும் அவருடைய மனைவி மக்கள் பொருந்திக் கொண்டு இங்கே (துபாயிலேயே) நல்லடக்கம் செய்ய அனுமதித்தனர் (அல்ஹம்துலில்லாஹ்).

முறையாகச் செய்ய வேண்டிய அனைத்து காகிதச் சடங்குகளையும் முடித்தெடுக்க ஒன்றரை நாள் ஆனது,  சனவரி ஐந்தாம் தேதி அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் அல்குஸ் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது (அன்னாரின் பாவங்களை அல்லாஹ் மன்னித்தருள்வானாக). 

இந்தப் பதிவு எழுதக் காரணம், மருத்துமனை (வியாபாரிகள்) பேரமும் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் குதிரைச் சவாரியும் இன்னும் வேறு விஷயங்களையும் எழுதச் சொல்லி உசுப்பேத்தி விட்டிருக்கிறது.

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அபூஇப்ராஹீம்

எச்சரிக்கை : புகைபிடிப்பதனால் ஏற்பட்ட விளைவுகளை கண்கூடாக கண்டதன் கண்ணீர் கசிவே இந்தப் பதிவு !