இறைவன் நியதியில் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்காக விதிக்கப்பட்ட ரிஜ்க் (உணவு) அவர்களை வந்தடையும் வரை மரணம் அவர்களை நெருங்காது. இது ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதில் பதிய வேண்டிய ஒரு விஷயம்.
குறுகியகால வாழ்வில் நிறைய திரட்டி விடவேண்டும் என்னும் பேராசை மேலோங்கும் போது தான் செல்வம் வரும் வழி என்னவென்று யோசிக்க விடாமல் நம் அறிவு செயலிழக்கின்றது. அப்பொழுது, அங்கே ஷைத்தான் ஆஜராகின்றான். மற்றவர்கள் வாழும் பகட்டு வாழ்வும் நம் கண் முன்னே வந்து போகும் போது, அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் அங்கே ஷைத்தானின் தூண்டுதல் மூலம் புறக்கணிக்கப் படுகின்றனர் இந்நிலையில் தான்.
பகட்டு வாழ்வு
இப்பூவுலகின் பகட்டு வாழ்வின் வாழ்க்கைப் பாதை, ஒவ்வொரு சராசரி மனிதனையும் அதுபோல் வாழத்தான் தன்னை உந்தித் தள்ளும். அந்த வாழ்க்கைக்கு சொந்தமாகிப் போனவன், அவன் செல்வம் வந்த வழி, அவன் போகின்ற போக்கு, அந்த செல்வம் அவனை விட்டு ஒவ்வொரு நாளும் செல்கின்ற விதம் ஒவ்வொன்றும் அவன் சிந்தனைக்கும், அவன் செயல்பாட்டுக்கும் அப்பாற்பட்டு நடக்கும். கறை படிந்த கைகள் மூலம் ஈட்டிய செல்வம், குறுகிய காலப் பயிர் போல விளைச்சல் நல்லதாக தெரியும், ஆனால் அல்லாஹ்வின் பரகத் (நம் புலன்களுக்கு எட்டாத அல்லாஹ்வின் அருள்) அதில் கடுகளவும் நிலைத்திருக்காது.
ஆதலால் எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்தாலும், பாரம்பரிய பணக்காரனாக இருந்தாலும் அவன் வாழ்வில், அவன் இறுதி மூச்சு வரை உழைப்பு என்று ஒன்று இருந்தே ஆகவேண்டும். ஏனெனில் சோம்பேறித்தனத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை. மாறாக அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித் தந்த வழியில் அவன் தந்த இந்த உடலை, நேர்மையான வழியில், தன் புத்தியாலோ அல்லது, உடலாலோ அல்லது இன்னபிற மார்க்கம் அனுமதித்த வழிகளிலோ உழைப்பில் ஈடுபடுத்த வேண்டும்.
அந்த உழைப்பின் மூலம் இறைவனிடம் மட்டுமே கையேந்த வேண்டும். யா அல்லாஹ் இந்த உழைப்பில் எனக்கு உன் பரகத் (அபிவிருத்தி) என்னும் அருளை தந்து என் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்வாயாக ! என்னை எவரிடமும் கையேந்த வைத்துவிடாதே யா அல்லாஹ்! என்று இறைவனிடத்தில் தூய மனதோடு இறைஞ்சினால், புலனுக்கெட்டாத அந்த பரகத் என்னும் அல்லாஹ்வின் அருள் கிடைக்க வெகு நாட்களோ நேரமோ ஆகாது.
பரகத் என்றால் என்ன ?
நம் சமுதாயம் தவறாக புரிந்து வைத்திருக்கும் பல விஷயங்களில் ஒன்று. சாதாரணமாக நாம் இருவர் சந்தித்துக் கொண்டு வாதிக்கும் போதே இதுவும் பேசிக் கொள்வோம், அவனுக்கு அல்லாஹ் கோடி கோடியாய் கொடுத்து பரகத் செய்திருக்கின்றான் என்று. ஆனால் உண்மையில் அதுவல்ல பரகத் என்பது.
பரகத் என்ற சொல்லுக்கு சுருங்கச் சொன்னால், "குறைந்த பொருள் நிறைந்த பயன்". இதுதான் அதன் பொருள். எடுத்துக்காட்டாக, ஒருவன் 100 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு காரியத்தை செய்ய புறப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அதே காரியத்தை செய்ய ஒருவன் 200 ரூபாய் கொண்டு செல்கின்றான். முதலாமவன் காரியம் முடிந்து 100 ரூபாய் மிச்சம் கொண்டு வருகின்றான். இரண்டாமவனோ, ஏதோ ஒரு சிக்கலில் மாட்டி அல்லது, வேறு ஏதோ தேவை ஏற்ப்பட்டு அந்த காரியத்திற்காக மட்டுமே 250 ரூபாய் செலவழித்து 50 ரூபாய் கடனோடு திரும்புகின்றான் என்று சொன்னால் அந்த 100ரூபாயில் உள்ள பரகத் இந்த 200 ரூபாயில் அல்லாஹ் வைத்திருக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
இது எப்படி செலவானது என்று சொன்னால் அதுதான் நம் புலனுக்கெட்டாத அல்லாஹ்வின் அருள் என்பது ரூபாய் 200-ல் இல்லை. 100-ல்இருக்கின்றது.
இந்த பரக்கத்தான விஷயம் அல்லாஹ்வின் ஏற்பாட்டில் உள்ளது, இதில் நாம் அல்லாஹ்வோடு போரிட முடியாது. நம் நடத்தை, நம் அன்றாட செயல் பாடுகள், நம் செல்வம் வந்த விதம், அது ரூபாய் 1-ஆக இருந்தாலும் 1-கோடியாக இருந்தாலும்,நாம் அல்லாஹ்விடம் மன்றாடி கேட்ட விதம், அது வந்த வழி, செலவழிக்கும் வழி ஒவ்வொன்றையும் வைத்து, அல்லாஹ் நமக்கு தர இருப்பதை, பல இலட்சம் கணினி செய்யாத கணக்குகளை துல்லியமாக கணக்கிட்டு தருவதுதான். இதில் அல்லாஹ்வின் அந்த மறைமுகமான அருளை அந்த வரவுக்குள் பொதிய வைப்பது, அல்லாஹ்விடத்தில் நாம் நடந்து கொள்ளும், அவனிடத்தில் தக்வாவுடன் (இறையச்சத்துடன்) கேட்டுப் பெறும் உள்ளத்தைப் பொருத்தது.
கறை படிந்த கரம்
கறை படிந்த கரம் என்ற இந்த பதிவில் நான் சொல்ல வருவது என்னவென்றால் தம் வருவாயின் மூல காரணி எதுவென்று தெரியாமலும், அது நம்மை வந்தடையும் விதம் எதுவென்று புரியாமலும் ஒரு சிலர் கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இதன் பின் விளைவைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் நம் கையில், வங்கி இருப்பில் கணக்கு கூடினால் சரி என்று வரும் வழியை சட்டை செய்வதில்லை.
மேலும் தன் குடும்ப உறுப்பினர்களையும் அந்த செல்வத்தை செலவழிக்கும் வாய்ப்பைக் கொடுத்து அவர்களையும் பாவக் கறைகள் படிந்தவர்களாக இவ்வுலகிலேயே உலவ விடுவது , ஒட்டு மொத்த குடும்பமும், பாவமெனும் நதியில் நீராட வைப்பது எந்த விதத்தில் நியாயம் ?
தன் கணவன் நேர்மையற்ற முறையில் சம்பாதிக்கின்றான் என்று தெரிந்தும் சூழ்நிலைக் கைதியாக உள்ள அவனை விட்டால் வேறு நாதி இல்லை என்ற நிலையில் தன்னை நாடி வந்தவளை அவள் தெரியும் படியாகவே அவளை பாவக் காரியங்களில் மூழ்கடிப்பது எந்த விதத்தில் நியாயம் ?
அவள் இறைவனையும் அவன் தூதரையும் புறக்கணிப்பவளாக இருந்தால் இவன் தூய்மையற்ற செல்வத்தோடு ஒத்துப் போகும் மாறாக இவள், குரானையும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகளையும் தன் உயிராக மதிப்பவளாக இருந்தால் இவள் கதி ? இவனை விட்டு பிரியும் நிலை ஏற்படும்போது, ஒரு மு'மினான பெண்ணை உதாசீனப்படுத்திய பாவமும் இவனை சேர்ந்து கொள்ளும் ஒரு குடும்பத்தை தன் பகட்டு வாழ்க்கைக்காக சிதைத்த பாவத்தை அல்லவா இவன் அல்லாஹ் கணக்கில் வரவு வைப்பான்.
இந்த செல்வம் எவ்வளவு மிகப்பெரிய கைசேதம் தெரியுமா?யோசித்துப் பார்க்கையில் உள்ளமும் உடலும் ஒரு சேர நடுங்குகின்றது. அதாவது.இறைவனுக்கு மாறான வழியில் ஒருவன் செல்வத்தை தேடும்போது இவ்வுலகில் வாழும் வரை அவன் நல்ல மதிப்போடு,மரியாதையோடு, போலி கௌரவத்தோடு, நான்கு பேரை நண்பர்களாக்கிக் கொண்டு பகட்டான வாகனங்களில் வலம் வரலாம்.
நம் ஒவ்வொரு தவறையும் நம்மிடம் உள்ள செல்வாக்கும், பேரும், புகழும் மறைத்து விடலாம். நாம் கோபித்துக் கொள்வோமோ என்று நாம் செய்யும் தவறுகளைக்கூட நம்மிடமிருந்து உதவி பெறுபவர்கள் மறைத்து நீங்கள் செய்வது தான் சரி என்று நம் தவறை கூட நியாயப் படுத்தலாம்.
இந்த போலியான வாழ்க்கை, தவறான வழியில் செல்வம் வந்தவனை ஒரு போதும் சிந்திக்கத் தூண்டாது. மேலும் சிந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் வாய்த்தாலும் நம் சிந்தனையில் நாம் செய்யும் தவறு நிழலாடாது. இறைவனை முற்றிலும் பயந்து உள்ளச்சத்துடன் வாழும் வாழ்க்கைக்கு திரும்பும் வரை இந்த பகட்டு வாழ்வு இவன் இறுதி மூச்சு வரை இவனுக்கு சொந்தமாகிப்போகும். அதன் இறுதி விளைவு மறுமை வாழ்வில் கைசேதமெனும் நஷ்டமே.
இறப்புக்குப் பின்
இறப்புக்குப்பின் உள்ள வாழ்க்கையில், அவனுடன் வர இருக்கும் இவ்வுலகில் அவன் செய்த செயல்களில் இந்த கறை படிந்த சொத்தும் பாவம் என்னும் வரவோடு சேர்ந்து கொள்ளும். சொந்தக்கரனான அவன் மகனோ, மகளோ அல்லது மனைவியோ, எவன் தமக்காக சொத்தை சேர்த்தானோ அவன் மீது கொஞ்சமும் இரக்கமில்லாமல் மண்ணை அள்ளி போட்டு மூடிவிட்டு தங்கள் வேலையில் கவனம் செலுத்த தொடங்கி விடுவார்கள்.
இது எப்பேர்ப்பட்ட அன்புள்ளம், கொண்ட, பாசமிக்க நேசமிக்க, இவ்வுலகிலேயே அதிக பிரியமான நபராக இருந்தாலும் இதுதான் உலகநியதி.
விழித்துக் கொண்ட இவன் கதி. (உலகில் உள்ள நாம் அனைவரும் உறக்கத்தில் இருக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ளவும்) ஒவ்வொரு பைசாவுக்கும் இறைவனிடத்தில் கணக்கு வைக்க வேண்டும். இவன் மகனோ அல்லது மகளோ, சொத்தில் பங்குள்ள எவருமோ, செல்வம் வந்த வழியைப் பற்றி இறைவனிடத்தில் கணக்கு கொடுக்க தேவை இருக்காது. அதை செலவழிக்கும் விதம் பற்றியே உலகில் உள்ளோருக்கு அந்த செல்வத்தைப் பற்றிய கேள்வி.
செல்வத்தை திரட்டி, அது இறைவன் தந்த அமானிதம் அதை அவனிடத்தில் ஒப்படைக்கும் போது, கொடுக்கும் கணக்கு சீராக, அவன் சொன்ன வழியின் பிரகாரம், இருக்க வேண்டும் என்பதில் கொஞ்சமும் அக்கறை இல்லாமல் வாழ்ந்து சென்றானே அவன் கதி?. .
செல்வத்தை திரட்டிய விதம் பற்றியும் இறைவனிடத்தில் விசாரணையின் முன் பதில் வைக்க வேண்டும், அதில் செலவழித்தது பற்றியும், குடும்பப் பங்கீடு என்று வரும்போது நீதமான முறையில் பங்கீடு செய்யப்பட்டதா என்பது பற்றியும், மற்றும் மார்க்கம் சொல்லும், ஜக்காத், ஹஜ், மற்றும் பர்லான கடமைகளில் இவன் சேர்த்த செல்வத்தின் பங்கு செலவழிக்கப்பட்டதா? தன் குடும்பத்தாரின் கடமை நிறைவேற்றப்பட்டதா? தன் குடும்பத்தின் ஏழை எளியவர்கள் கவனிக்கப்பட்டார்களா? தன் ஏழை அண்டை அயலார் புறக்கணிக்கப் பட்டார்களா?,அல்லது ஆதரிக்கப்பட்டார்களா? என்று அடுக்கிக் கொண்டே போவான் இறைவன் கேள்விக் கணைகளை.`
இறைவனிடத்தில் அங்கீகாரம் இல்லை
இது கறை படிந்த சொத்தாக இருந்தால் இவன் மேற்சொன்ன அனைத்து கடமைகளையும் நிறைவேற்றி இருந்தாலும் வீணே. ஏனெனில் இறைவனுடைய, அவனின் திருத்தூதருடைய வழிக்கு மாற்றமான எந்த வருவாய் காரணியும் அதன் மூலம் செய்யும் எந்த நல்ல செயலும் அங்கீகாரமற்றதே.
இப்படி இறைவனிடத்திலும் அவன் தூதரிடத்திலும் அங்கீகாரம் பெறாத இந்த செல்வம் நாளை மஹ்ஷரில் மிகப்பெரும் சோதனையாக அவன் முன்னே காட்சி அளிக்கும். செல்வத்துக்கு சொந்தக்காரனென்று இவ்வுலகில் இவன் நினைத்தான். அல்லாஹ்வோ, இல்லை இல்லை அதன் சொந்தக்காரன் நானே. என் செல்வம் சொற்ப காலத்திற்கு உன்னிடத்தில் அமானிதமாக தரப்பட்டிருந்தது. அதன் கணக்கு வழக்குகளை இப்பொழுது நீ சமர்ப்பிக்க வேண்டும் என்ற அல்லாஹ்வின் அந்த எஜமானனின், அந்த செல்வத்திற்கான உண்மை சொந்தக்காரனின் விசாரணைக்கு நீ தயாராகி பதில் சொல்லியே தீரவேண்டும்
அவன் இவ்வுலகில் உன்னிடம் தந்த செல்வத்தில் நீ ஜக்காத் முறையாக செலுத்தாமல் அதை பெறத் தகுதி உள்ளோரை புறக்கணித்து இருந்தால், ஹஜ் உன்மீது கடமை என்று தெரிந்திருந்தும் அதை நிறைவேற்ற தவறி இருந்தால் உன் குடும்பத்திலேய வெளியில் வர வெட்கப்பட்டு, தன் ஏழ்மையை வெளிக் காட்டாமல், தன் இயலாமையை யாரிடமும் பகிரங்கப் படுத்தி விடாமல் வீட்டிலேயே பொறுமையோடு ஏழ்மையை சகித்துக் கொண்டிருந்தவர்களை, தெரிந்தும் உதாசீனப்படுத்தி இருந்தால் உன் குடும்பத்திலேயே ஜக்காத் பெற தகுதி உள்ள நபர்கள் என்று தெரிந்தும் கண்டும் காணாமல் இருந்திருந்தால், தர்மத்திற்காக ஏழை எளியவர்கள் வீடு நோக்கி வரும்பொழுது, அவர்களை பாராமுகமாக, ஏறெடுத்துப் பாராத நிலையில் அவர்கள் குரல் உன் காதில் விழாமல் இருந்திருந்தால், உன் கண் முன்னே சமுதாயத்தில் எத்தனையோ முதிர் கன்னிப் பெண்கள், ஆதரவற்ற விதவைகள், அனாதைகள், முதியவர்கள், ஏழைகள் மற்றும் பல பொருளாதார ரீதியில் தேவை உள்ளவர்கள் என்று தெரிந்துருந்தும் அவர்களின் மனவெதும்பல் உன் மனதை தொடாமல் இருந்திருந்தால்.
சதக்கா, தர்மம், மற்றும் இறைவழியில், உன் செல்வம் பயனளிக்காமல் இந்த உலகத்தின் தேவையோடு நின்று விட்டிருந்தால், அல்லாஹ்விடத்தில் உன் செல்வம் தூய்மையற்ற உனக்கு அவனிடத்தில் தண்டனை பெற்றுத்தர போதுமானதாக கரை படிந்த செல்வமே முன்னிருக்கும்.
உன் கறை படிந்த கரம் அல்லாஹ்வின் இரும்புக்கரத்தின் முன் நிற்கும் நிலையை... யோசனை செய்து பார்.
ஆதலால், கறை இல்லாத செல்வத்தை தேடுவோம், அல்லாஹ்வின் திருப் பொருத்தத்துடன் செல்வம் தேடுவோம் அதனை இறை வழியில் செலவழித்து நம் செயல்களையும் செல்வத்தையும் தூய்மைப்படுத்துவோம் சுவனத்து பாதைக்கு அதை வடிகாலாய் அமைப்போம்.
அபு ஆசிப் (என்ற) அப்துல் காதர்



