Showing posts with label இஸ்லாமியப் பெண்மணி. Show all posts
Showing posts with label இஸ்லாமியப் பெண்மணி. Show all posts

பொதுசிவில் - பெண்களின் கருத்தென்ன? 5

அதிரைநிருபர் பதிப்பகம் | October 29, 2016 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்...

பொதுச்சிவில் சட்டம் பற்றிய கருத்துக்கள் நாளுக்கு நாள் வலுத்துவந்த நிலையில், இஸ்லாமியப் பெண்கள் இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது எல்லோரின் கேள்வியாக இருந்தது. பொதுச்சிவில் குறித்து ஆண்கள் பேசுவதை விடவும் பெண்கள் சாதகபாதகங்களை அலசுவதே சிறப்பென கருதினோம். பொதுச்சிவில் குறித்த கேள்வியை இஸ்லாமியப்பெண்மணி.காம் சார்பில் மொழிந்து இஸ்லாமியப் பெண்களின் கருத்துக்களை திரட்டினோம். ஒவ்வொருவரின் பதிலிலும் தீர்க்கமான பார்வைகள் இருந்தன. அவை அனைத்துக்கூறுகளையும் அலசிய கருத்துக்களாக அமைந்தன. பொதுச்சிவில் எதிர்க்கும் அதே வேளையில் நடுநிலையுடன் இன்றைய குழப்பங்களின் காரணங்களையும் விவரித்துள்ளனர். அவற்றை கீழே தொகுத்துள்ளோம்.

ஜெ.பானு ஹாரூன் ( வடகரை) - நாவல் எழுத்தாளர் 

இஸ்லாமியர்கள் திட்டவட்டமாக எக்காலமும் ஏற்றுக்கொள்வது ஷரியாவை மட்டுமே ! ஆடு நனைகிறதே என்று அழுது ஊளையிடாமல் கீழ் மட்டத்திலிருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு கல்விக்கும் ,வேலை வாய்ப்பிற்குமான சட்டத்திருத்தங்கள் செய்யுங்கள் ; உணவுத்தேவைக்கான வழிகளை காட்டுங்கள்; தினம் இடைக்காலத்தடை போடுபவர்களுக்கு அடைக்கலமளிக்காதீர்கள்-இதுவே இஸ்லாமியர்களுக்கு அரசு செய்யும் பேருதவி

ஒருவருக்கொருவர் அநியாயம் செய்து இறைவனுக்கும் மாறு செய்து துணையை விட்டுவிட்டு ஓடி ஒளிவதை விட, உடனிருந்துகொண்டே பிடிக்காத இணையை கொடுமை படுத்தி நச்சு உணர்வுடன் நெறுக்கிப்பிடித்து வாழ்ந்துகொண்டிருப்பதை விட இஸ்லாமிய சட்டப்படி செய்து கொள்ளப்படும் ''தலாக் '' -- க்கில் எவ்வித குறையுமில்லை.

மனநோய் , தாம்பத்யத்தில் ஒத்துழையாமை , குடும்பத்தில் நெருக்கமின்மை ,கடமைகளை புறக்கணித்தல் ,துணைக்கு மாறு செய்தல் ,சொத்துக்களை அபகரித்தல் ,குழந்தைகளை பிரித்துவைத்தல் போன்ற பல காரணங்கள் ! சிலவை வெளியே சொல்லாமல் பெண்களின் நலன் கருதி மறைக்கப்பட்டும் விடும் . தலாக்கினால் ஆண்களின் நடைமுறை வாழ்க்கையும் , பொது வாழ்க்கையும் பாதிப்பிற்குள்ளாகிறது . மனைவியை தவிர வேறு எந்த பெண் உறவுகளும் ஒரு ஆண்மகனுக்கு நெருக்கமான பணிவிடைகள் செய்ய இஸ்லாத்தில் அனுமதியில்லை . அதனால் இன்னொரு திருமண வாழ்க்கையின் தேவையும் ஏற்படுகிறது.

வெறுமனே கேட்பவருக்கெல்லாம் ''தலாக் ''-கை அனுமதித்து விடுவதில்லை . சம்பந்தப்பட்டவர்களின் உண்மையான பிரச்னைக்குரிய காரணங்கள் ,பெண்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகள் , குழந்தைகள் இருப்பின் அவர்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகள் என்று அலசி ஆராய்ந்த பின்னரே வேறு வழியில்லாத நிலையில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது . தம்பதியரிடையே பிரச்சனை நிகழ்ந்தால் சமாதானம் செய்துவைக்க மற்றவர்களை இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது, இணக்கம் ஏற்பட வேண்டி பொய் சொல்லவும் இச்சமயத்தில் அனுமதி அளிக்கிறது. இத்தகு கட்டங்களைத் தாண்டியே பயனற்ற நிலையில் தலாக் கொடுக்கப்பட , இஸ்லாத்தை புரியாதவர்கள் தலாக் என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுகின்றனர். 

ஹுசைனம்மா (அபுதாபி) - எழுத்தாளர், இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் : 

பொது சிவில் சட்டம் எதிர்க்கப் படவேண்டியதே. அடிமை இந்தியாவில், தம்மை எதிர்ப்பதில் முஸ்லிம்களே முன்னணியில் இருந்தபோதும், ஷரிஆ சட்டத்திற்குத் தடையில்லை. சுதந்திர இந்தியாதான் அந்தச் சுதந்திரத்தை மறுக்கிறது.

சிவில் சட்டம் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் பொங்கிப் பாய்ந்து எழும் இஸ்லாமிய சமூகம், சலசலப்பு அடங்கியதும் மீண்டும் தனது கூண்டுக்குள் பதுங்கி விடுகிறது. சிவில் சட்டத்தைவிட, நம் இஸ்லாமியச் சட்டம் சிறப்பானது என்பதை நிரூபிக்குமளவு நம் சமூகத்தின் நிலை உள்ளதா என்ற பரிசீலனையோ, உரிய நடவடிக்கைகளோ எதுவும் எடுக்காமல் அதே நிலையைத் தொடர்ந்தால், நம் உரிமைப் போராட்டம் வீழ்வதற்கு நாமே காரணமாவதைத் தடுக்க முடியாது.

தலாக்கில் குர் ஆனியச் சட்டத்தை வலியுறுத்தும் நாம், திருமணத்தில் அதைப் பின்பற்றுவதில்லை.ஜீவனாம்சத்தில் ஷரீஆவைக் கடைபிடிக்கும் அதே நாம்தான், மஹர் கொடுப்பதில் கோட்டை விடுகிறோம்.

பலதார மணத்தை நபிவழியெனும் நாம், விவாகரத்தின்போது குழந்தைகளைப் பெண்களின்மீது சுமையாக்கி அவர்களின் மறுமணத்திற்கு தடைக்கல்லாக இருக்கிறோம்.

பர்தா அணிவதில் பெண்களுக்கு நரகத்தைச் சொல்லிப் பயமுறுத்தும் நாமேதான், நரகத்தின் அச்சமின்றி அவர்களின் சொத்துரிமையில் கைவைக்கின்றோம்.

இறைவனே வடிவமைத்துத் தந்த நம் சட்டம் எத்தனை சிறப்பானது? ஆனால், குர் ஆனில் இறைவன் முந்தைய “அஹ்லே கிதாப்” மக்களை எதற்காகச் சபித்தானே, அதே தவற்றை - சாதகமானவற்றைப் பின்பற்றுவதும், பாதகமானதை ஒதுக்குவதும், திரிப்பதும் ஆன அதே பாவத்தை அல்லவா நாம் செய்கிறோம் என்ற உண்மையை என்று உணர்வோம் நாம்?

அந்நாளில்தான் சிவில் சட்டத்தை நம்மீது திணிப்பதற்கு அஞ்சுவார்கள்!!

13:11. எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை;

மலிக்கா (முத்துப்பேட்டை) - கவிதாயினி, இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் :

பொதுசிவில் சட்டம்குறித்து காட்டுத்தீபோல் இஸ்லாமிய நெஞ்சங்களில் பற்றிக்கொண்டுள்ளது. இது ஜனநாயகநாடு/ இதில் பல்வேறு சமயத்தினர் வாழ்கிறார்கள்.  இந்தியச்சட்டத்திலும் அந்தந்த மதங்களுக்கு உண்டான தனிப்பட்ட சட்டங்களிலும் மதநம்பிகைகளிலும் அவரவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கும்போது இஸ்லாமிய சட்டத்தில் மட்டும் அந்த உரிமையை பறிக்க நினைப்பது எவ்விதத்தில் நியாயம்?

அதேசமயம், இஸ்லாத்தை பின்பற்றும் இஸ்லாமிய பெயர்தாங்கிகளாய் இஸ்லாமியவாதியென தன்னை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள்

சரிவர அதன் சட்டங்களை புரியாது அல்லது பின்பற்றத்தெரியாது சிலபல குழப்பங்களை செய்து  அதனால் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொள்வதை நிச்சயமாய் தவிர்க்க வேண்டும். தடுக்க வேண்டும் !  பாதிக்கப்பட்ட எவராக இருந்தாலும் ஆண்-பெண் பேதம் பார்த்து, அவர்களுக்கான நியாயம் கிடைக்க வழிசெய்யத்தவறும் ஒவ்வொருவரும் கண்டிக்கதக்கவரே!. 

ஷாபானு வழக்கைப்போல் மேலும் சிலர் தொடுத்த வழக்குகளுக்கு இஸ்லாம் ஒருபோதும் பொறுப்பேற்காது,  பொறுப்பற்று இதுபோன்ற அநீதிகளை கண்டும் காணாமலும் விட்ட அந்தந்த மாநில மற்றும் ஊர் ஜமாத்தார்கள் , சிலபல பெரிய அறிவாளிகள் பொடுபோக்கு நிலையே இதுபோன்ற பெண்களின் அநீதிகளுக்கு காரணமாக இருக்கும். அதனை உரியமுறையில் களையெடுத்து களையவேண்டுமே தவிர எங்களின் வாழ்வியல் பாடங்களான இஸ்லாமிய சட்டமே தவறானதென்ற குற்றச்சாட்டை எப்படி ஏற்கமுடியும்? ஆனால் அதனை சரிவர நடைமுறைக்குகொண்டுவராது செயல்படுத்தாதன் விளைவே விஷ்வரூபமாய் இன்று!

மேலும் எந்த சமயத்தில்தான் இல்லை இதுபோன்ற உட்பூசல்கள் ? இதைவிட பெண்கள் பலவாறு பாதிக்கப்பட்டு வழக்காடுமன்றங்களில் காலவரையற்று வாழ்க்கைகான தவத்தில் செய்வதறியாது மனம் நொந்துகிடப்போர் ஏராளம். பெண்களுக்கு பலபல கொடுமைகளும் கொடூரங்களும் அந்நியர்களால் அரங்கேறிக்கொண்டிருக்கும் இந்நாட்டில் அதைத்தடுக்கப்பதற்கான சட்டங்களை மிக கடுமையாக்குங்கள், பால்குடி தொடங்கி பருவம் தொட்டு வாலிபம் வயோதிகமென பெண்களின் மானமும் உயிரும் பறிபோவது நாளுக்கு நாளல்ல, நொடிக்குநொடி அரங்கேறிக்கொண்டிருப்பதை தடுக்க வகைசெய்யுங்கள் நாங்கள் உடன்படுகிறோம். மத உணர்வுகளில் தலையிட வேண்டாம் !

பெனாசீர் (தூத்துக்குடி) - இல்லத்தரசி : 

பொது சிவில் சட்டம் பெண்களின் பார்வையில் ஒரு சம உரிமையை தரும் சட்டம் என்று வைத்து கொள்வோம் ,ஆனால் இதனை பகுத்தறிவோடு நாம் சிந்தித்தால் இது இஸ்லாமிய கொள்கையினை பற்றி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட ஒன்று என்பது விளங்கும் . இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்பதாக எடுத்து சொல்ல தலாக் சட்டத்தை ஊக்குவிக்க கூடாது என்பதை மட்டுமே முதலில் கூறியவர்கள், பின்பு இஸ்லாமியர்களிடம் இருந்து பல கேள்விகள் வந்த பின்பு சுதாரித்து கொண்ட அவர்கள் 'இது பெண்களுக்கான சம உரிமை' என்று இப்போது கூறுகிறார்கள். இவர்களின் நோக்கம் இதிலே புரிந்துகொள்ள முடிகிறது. இஸ்லாமியர்களான நாம் இறைவன் நமக்கு திருகுர்ஆன் வழியாக கூறியவற்றையே நாம் பின்பற்றவேண்டும். ஈட்டி முனையில் நிறுத்திட்டபோதும் ஈமான் இழக்கமாட்டோம்.

சபிதா காதர் (அரக்கோணம்) - இல்லத்தரசி, இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் : 

பொது சிவில் சட்டம் பற்றி பல்வேறு அதிர்வலைகள் கிளம்பும் இவ்வேளையில்  அதை வேண்டாம் என்று பதிவு செய்பவளாக இருக்கின்றேன் இது ஒரு வகையில் ஒவ்வொருவரின் தனித்த அடையாளத்தை அழிக்க துடிக்கும் முயற்சியே  பன்முகத்தன்னைக்கு வைக்கப்படும் வேட்டு.

எங்களுக்கு அளிக்கப்பட்ட பிரத்தியேக உரிமையை விட்டு தர விரும்பவில்லை

சித்தி நிஹாரா (மலேசியா) - இல்லத்தரசி , இக்றா கல்வியியல் அமைப்பு நிர்வாகி : 

பெண்களின் கண்ணியம் சுயமரியாதை கட்டிக்காப்பதற்காகவே விவாகரத்துச் சட்டங்களை வரையறுத்து பெண்களுக்கு பல சலுகைகளையும் மறுமணத்திற்கான வழியையும் காட்டியுள்ள ஒரு மார்க்கத்தில் உடன்கட்டை ஏறுதலையும் தலையணையின்றி உறங்க வேண்டுமென்றும், மொட்டையடித்து அவளை நடைப்பிணமாக்கி அலங்கோலப்படுத்துவதையும் கொள்கையாய் வைத்திருந்த கூட்டம் முஸ்லிம் பெண்களை பற்றி பேசுவது வேடிக்கையானது! பொதுசிவில் சட்டம் முஸ்லிம்களின் மீது தொடுக்கும் நேரடிப்போர். ஒருவேளை அவர்கள் கொண்டு வந்தாலும் அது நம்மை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. முஸ்லிம் ஜமாஅத்கள் இதிலுள்ள நடைமுறை சிக்கல்களை களைவதற்கான வாய்ப்பாக இது அமையும் என நினைக்கிறேன்.

யாஸ்மின் (துபாய்) - இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர்

பொது சிவில் சட்டம் என்பது ஒருவரின் அந்தரங்கத்தில் அனுமதியின்றி மூக்கை நுழைப்பது எவ்வளவு அநாகரீகமோ அது போல் அநாகரீமானது. இன்னும் சொல்லப் போனால் அவரவர் மத உணர்வுகளில் கை வைப்பது உயிரை வைத்து உடலை மரத்து போகச் செய்வதற்கு சமம்.

இருக்கும் பொது சட்டங்களையே பாரபட்சமின்றி காட்டாத அரசும், அரசாங்கமும் தான் பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து அனைவரையும் சமமாக நடத்தப் போகிறதா?

ஆதிக்க வர்க்கத்தினருக்கு மட்டுமே இருக்கைகளும், பதவிகளும், நீதி என்றும், இருக்கும் அனைத்து தண்டனைகளும், அடக்குமுறைகளும், சிறைகளும் சிறுபான்மையினருக்கும், தலீத்துகளுக்கும் மட்டும் என்று கபட நாடகம் ஆடும் இந்திய தேசத்தில் பொது சிவில் சட்டத்தை வைத்து அனைவரும் சமம் என்பதை நிறுவப் போகிறோம் என்று சொல்வது இந்திய தேசியம் மூளைச்சாவு அடைந்து விட்டதற்கு சமம், “ஆப்பரேசன் சக்சஸ் ஆனா பேசன்ட் டைட்”

ஜபினத் (சென்னை) - கவிஞர், நாவல் எழுத்தாளர் , ஈவண்ட் ஆர்கனைசர் :

நாம் இஸ்லாமிய இந்தியர்களுக்கு மதமும் நாட்டுப்பற்றும் இரு கண்களைப் போன்றதாக கருதுகிறார்கள்/ ஒவ்வொரு இஸ்லாமியனும் எவ்வளவு தீவிரமாக மார்க்கத்தை நேசிக்கிறார்களோ அதே அளவில் தான் நாட்டையும் நேசிக்கிறார்கள். இறைவனின் வேதத்தை பின் பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல் வாழவும் செய்து, தான் வாழும் நாடு வகுக்கும் சட்டத்தை பேணியும் காத்து நடக்கிறார்கள்.

ஒரு இஸ்லாமியன் இஸ்லாமிய நாட்டில் வாழ்ந்து இறைவனின் சட்ட திட்டங்களை பேணுதல் என்பது அப்படி ஒன்றும் பெரிய காரியமன்று. ஆனால் மாறுபட்ட கொள்கை உடைய ஒரு நாட்டில் மார்க்கத்தையும் பேணி சட்டத்தையும் மதிப்பது என்பது அத்தனைச் சுலபமானதல்ல, அதைச் சால செய்வது என்பதில் தான் இந்திய இஸ்லாமியனின் நாட்டுப் பற்றும் மார்க்கப் பற்றும் தெளிய நீரோடைப் போல் தெரிய வருகிறது.

இஸ்லாமியன் என்ற காரணத்திற்காய் கொலை, கொள்ளை எந்த வழக்கிலிருந்தும் பாகுபாடில்லாமல் தான் இந்திய சட்டம் தன் தீர்ப்பை வழங்குகிறது. ஏன் ஹெல்மெட்டுக்காக தண்டிக்கப்படும் சிறிய அளவு குற்றமாயினும் எந்த பாகுபாடும் இல்லை. அப்படி இருக்கும் போது தன் மார்க்கத்திற்கே உரிய திருமணம், பர்தா போன்ற உளவியல்களுக்குள் இந்தியச் சட்டம் பாய நினைக்கும் பொழுது பொது சிவில் மீது இஸ்லாமியர்களுக்கு அதிருப்தி ஏற்படுவது இன்றியமையாததாகிவிடுகிறது.

நூற்றாண்டுகளாய் இருந்து வந்த மாட்டு இறைச்சி விசயத்தில் புதிதாக சட்டத்தை கொண்டு வந்து தன் இந்துத்துவ ஆதரவை மறைமுகமாக இந்திய அரசு நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் பொதுவான சட்டம் இஸ்லாமியர்களின் மீது மட்டும் உளவியல் ரீதியாக தன் கோரக்கரத்தை நீட்டுவதால் இதுகாலும் அமைதியாக இருந்த சிறுபான்மையினரின் கோபங்களை கிளறிப்பார்த்துள்ளது. உரிமைகள் பிடுங்கப்படும்போது போராட்டங்கள் எழுவது இயல்பே, எனவே இந்திய அரசாங்கம் இஸ்லாமியர்களின் உளவியல்களோடு விளையாடாமல் பொது சிவில் சட்டம் என்ற எண்ணத்தை கைவிடல் வேண்டும்.

ஒரு வீடாகினும், நாடாகினும் மார்க்கமோ, சட்டமோ இயல்பாகவே வகுத்த சட்டங்களில் மனிதர்கள் இடையில் புகுந்து பெண்களுக்குரிய உரிமைகளை தடுக்கும் பட்சத்தில் வெளியிலிருந்து அத்துமீறல்கள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது இஸ்லாமிய பெண்கள் தங்களுக்கு இயல்பாக வகுக்கப்பட்டுள்ள உரிமைகளை முழுவதுமாக உணர்வாகளாயின் அப்போது தான் இந்திய சட்டம் பொதுவாக பெண்கள் மீதாக எத்தகைய எதிர்ப்புகளை புகுத்தி வருகிறது என்பதை உணர்வார்கள்.

அதே சமயத்தில் இஸ்லாம் சொல்லும் சட்டம் வேறு இன்று நடைமுறைப் படுத்தப்படுவது வேறு. இன்றைய மார்க்க அமைப்புகளுள் ஒற்றுமை இல்லாமையும் இரட்டடிப்பு செய்யப்படும் பெண்களின் உரிமைகளும் ஆண்வர்க்கத்தின் சுய இலாபங்களையும், பதவி ஆசைகளையுமே எடுத்துரைக்கிறது. மார்க்கத்திற்கு முட்டுக்கட்டாக இருக்கும் இந்த ஆணாதிக்க அமைப்புகளிடமிருந்து வரலாற்றைக் கற்றுத் தேர்ந்த இஸ்லாமிய பெண்கள் தங்களையும் தங்கள் உரிமைகளையும் ஈமானின் பால் நின்று மீட்டெடுப்பர் என்று நம்புகின்றேன், எனது கரத்தையும் அதில் இணைக்கின்றேன். அத்தகைய ஈமானிய உணர்வுகளுக்கு உங்கள் பொதுச்சிவில் தேவையில்லை ! 

பர்வீன் அனஸ் (சென்னை) - Managing Director at BURAK India , Director (company) at Burak Lanka Private Limited. 

பொது சிவில் சட்டத்தை பற்றி விவாதிக்கும் முன் நாம் இந்தளவுக்கு பரபரப்பை உண்டாக்கிய காலகட்டத்தை பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும் . நடுவண் அரசு ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சரியான இடைவெளிகளுடனும்- பல பிரச்சனைகளை- முக்கியமாக மதம் ஜாதி சார்ந்த பிரச்சனைகளை பொது சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிறுபான்மையினரை குற்றப்படுத்தி 'இந்து சமுதாய மக்களின் பாதுகாவலன் தாங்கள்தான்' என்பதை மிகைப்படுத்திக்காட்டவே ஒரே கொள்கையுடைய பிரச்சனைகளும் பிரிவினைகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

கர் வாப்சி,லவ் ஜிஹாத்,மாட்டிறைச்சி,ராமர் கோவில், கலபுர்கி டபோல்கர் மற்றும் பன்சாரே போன்றோர்களின் கொலை, ரோஹித் வெமுலாவின் தற்கொலை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் என தொடர்ச்சியாக சரியான கால இடைவெளியில் மக்களை சிந்திக்கவிடாமல் உணர்ச்சிகளை தூண்டும் அரசியலே இதுவரை பார்த்து வந்துள்ளது மத்திய அரசு.

மட்டுமல்லாது நலத்திட்டங்கள் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஸ்வச் பாரத் ,பேட்டி பச்சாவோ,டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் மண்ணைக்கவ்வியதாலும் ஜாதி ஓட்டு முறையாலும் பீஹாரில் தோல்வி அடைந்ததால் மத்திய அரசு உத்திரப்பிரதேசம்,உத்ராகண்ட் மற்றும் மணிப்பூர் தேர்தலை தோல்வி இல்லாமல் எதிர்கொள்ள எடுத்த விசயம்தான் பொதுசிவில் சட்டம்.

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொதுசிவில் சட்டம் என்பது இயலாத காரியம். அனைத்து வித மத மக்களுக்கும் அந்த மதம் சார்ந்த திருமணம்,விவாகரத்து,சொத்துரிமை சட்டங்கள் உள்ளன. இவ்வாறிருக்க முஸ்லிம் சமூகத்தினரின் ஷரீஅ சட்டங்களில் கைவைப்பது என்பது மத்திய அரசின் கையாலாகாத கயவாளித்தனத்தை காட்டுகிறது. இஸ்லாமியர்கள் ஷரீஅ சட்டங்களை திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, சொத்துரிமைகளுக்கு பின்பற்றுவது மற்ற சமுதாய மக்களின் பாதுகாப்புக்கோ இறையான்மைக்கோ அச்சுறுத்தலாக இல்லாத போது ஏன் இஸ்லாமியர்களின் தலாக் சட்டங்களை மட்டும் குறி வைக்க வேண்டும்?

நமது சமுதாயத்திலும் முத்தலாக் பற்றிய விழிப்புணர்வு இல்லாததும்,மணக்கொடை பற்றிய தெளிவான அறிவும் பின்பற்றுதலும் இல்லாதது பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. அல்லாஹ் இயற்றிய சட்டங்களை நாம் கடைபிடித்தாலே ஜீவனாம்சம் பற்றிய கேள்வி எழாது. பள்ளிவாயில்களும் ஜமாஅத்தும் சட்டங்களை ஒழுங்காக பின்பற்றாததால் இன்று நமது சட்ட உரிமைகளுக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மத்திய அரசு இதை தேர்தல் கால யுக்தியாகவும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றி மூடி மறைக்க எடுத்த ஆயுதமாக கொண்டாலும் , இந்த நேரத்தை பயன்படுத்தி நமது சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஜமாஅத்களும் சமுதாய தலைவர்களும் முன்வர வேண்டும்.

இந்த பிரச்சனையின் வீரியம் குறைந்ததும் ஓரணியில் நிற்கும் தலைவர்கள் பிரிந்து விடாமல் சமுதாய மக்களின் நலனுக்காக இணைந்து பயனிக்க வேண்டும். பள்ளிவாசல்களில் ஜும்ஆ தினத்தில் முஸ்லிம் பெர்ஸனல் போர்டுக்கு ஆதரவாக கையெழுத்துகளை அளிக்க இயக்கம் கடந்து அனனவரும் கையெழுத்திட்டது பெரிய மாற்றம். அந்த மாற்றம் கண்துடைப்பாக மாறிவிடாமல் முத்தலாக்கின் சட்டங்கள் குறித்த தெளிவை ஜீம்ஆ பயான்கள் மூலம் மக்களை சென்றடைய பள்ளிநிர்வாகமும் இமாம்களும் தலைவர்களும் முயற்சி எடுக்க வேண்டும். துண்டுப்பிரச்சாரங்கள், ஒருநாள் பயிலரங்கங்கள், புத்தகங்கள் ,ஆவணப்படங்கள் மூலமாகவும் இளைஞர்களிடையே எடுத்து செல்லலாம். அதே சமயத்தில் பிறமதத்தவர்களின் முத்தலாக் பற்றிய சந்தேகங்களையும் நாம் அழகிய முறையில் விளக்கம் குறித்து தெளிவாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒருமித்த கருத்துக்களோடு அல்லாஹ்வின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மாற்று சமூகத்தினரிடமும் இணக்கமாக வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன்.

ஆமினா முஹம்மத்
செயலாளர் - இக்றா பயிற்சி மையம்
நிறுவனர் - இக்றா ஆன்லைன் புக்‌ஷாப்

குழந்தைகள் - தொழுகையில் தொந்தரவா??? 1

அதிரைநிருபர் பதிப்பகம் | July 12, 2015 | , , ,

"பள்ளிவாசலுக்கு சென்று தொழுவதை விட பெண்கள் தங்கள் வீட்டில் தொழுவது சிறந்தது" என்பது நபிமொழி. ஆனாலும், பள்ளிவாசலுக்கு சென்று தொழ விரும்பினால் அவர்களை தடுக்க வேண்டாமெனவும் கூறப்பட்டு உள்ளது. பள்ளிவாயில்களுக்கு பெண்கள் தொழ வருவது எளிதான விஷயம் இல்லை என்பது நாம் அறிந்ததே. பல வேலைகளுக்கு (வேலை, குழந்தைகள், சமையல், வீட்டுபராமரிப்பு) இடையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வர வேண்டி இருக்கும். இதில் பல அசௌகரியங்கள் உண்டு.

அதையும் மீறி பெண்கள் வருவது, கூட்டு தொழுகையில் பங்குபெற்று, அதிக ஆர்வத்துடன் தொழுவதற்கே. தனியாகத் தொழுவதை விட பலருக்கு ஜமாத்தாக தொழும்போது நீண்டநேரம் தொய்வு இல்லாமல் தொழ ஏதுவாக இருக்கும். ஒரு பாசிடிவ் வைப்ஸ் இருக்கும்(தனியாக செய்வதை விட கூட்டாக ஒரு வேலையை செய்யும் போது மலைப்பு தெரியாது)

தனியாக விட்டுவர முடியாமலும், கவனிக்க வேறு ஆட்கள் இன்றியும் குழந்தைகளை கூடவே பெண்கள் அழைத்து வர வேண்டி உள்ளது. அப்பொழுது குழந்தைகள் அவ்வளவு பெரிய கூட்டத்தை, மற்றும் பிற குழந்தைகளை பார்க்கவும் தன் சேட்டைகளை துவங்கிவிடுவார்கள். சிறு குழந்தைகளோ சில நேரம் தூக்க கலக்கம், பசி போன்றவற்றால் அழ தொடங்கிவிடுகின்றனர்.

இது போன்ற குழந்தைகளை தொந்தரவாக நினைக்கும் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்களை விட தொழுகையில் ஈடுபாடு இன்றி அரட்டை அடிப்பதற்காகவே ஜமாத்தை நாடுபவர்கள், வீண் வெட்டி பேச்சு, ஊர் கதை, கேலி, கிண்டல்களில் உள்ள ஆர்வத்தில் இமாம் பேசுவதை கேட்க விடாமல் செய்யும் ஆடவர்கள்/பெண்கள் தான் தொழ வராமல் வீட்டிலேயே இருக்க வேண்டியவர்கள். எல்லாம் தெரிந்தும் மற்றவர்களின் தொழுகையை தொந்தரவு செய்யும் அவர்களுக்கு தான் முதலில் கற்று தர வேண்டி உள்ளது.

அதே போல யார் தொழுகைக்கு தொந்தரவாக இருந்தால் நமக்கென்ன என்பது போல குழந்தைகளை கண்காணிக்காமல், எவ்வித பழக்கங்களையும் கற்று தராமல், நானும் தொழ வந்தேன் என்று பெயருக்காக தொழ வருவதில் அர்த்தம் இல்லை. தாய்மார்களுக்கு தன் குழந்தைகளை பற்றி நன்கு தெரியும். சிறு குழந்தைகள் என்றால் முடிந்தவரை நன்றாக பகலில் உறங்க வைத்து, பசியமர்த்தி அழைத்து வருவது அவசியம். ஆனால் ஓயாமல் அழும் குழந்தை அல்லது துளியும் சொல் பேச்சு கேட்காமல் சேட்டை செய்யும் சிறுவர்/சிறுமியர் உள்ள அம்மாக்கள் என்றால் ஜமாத்தாக தொழ மஸ்ஜிதிற்கு அழைத்து வருவதை தவிர்க்க முயற்சிக்கலாம். 

சில மஸ்ஜிதுகளில் கையாளப்படும் வழிகள் :
  • சில நாடுகளில் குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்காகவே தனி அறை ஒதுக்கப்படுகிறது.
  • சில இடங்களில் விபரமறிந்த சற்று பெரிய சிறுமிகள் அல்லது தொழுகை இல்லாத பெண்கள் எல்லா குழந்தைகளை கவனித்து கொள்கின்றனர்.
  • சில இடங்களில் மஸ்ஜிதிற்கு உள்ளே ஒரு தனி அறையில் கட்டணம் ஏதும் இன்றி, நன்மையை நாடி பேபி சிட்டிங் வகுப்புகள் (பிள்ளைகளுக்கு பிடித்த ஏதாவது விளையாட்டுகள், கதை சொல்வது போன்ற விஷயங்கள்) நடத்தப்படுகின்றன.
  • சில நாடுகளில் உள்ள மஸ்ஜிதுகளில் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய பள்ளிகூடங்கள் உண்டு. எனவே அங்கு விளையாட்டுக் கூடங்களும் இருக்கும். ஃபர்ல், வித்ர், ஜும்மா போன்ற சில தொழுகைகளை முடித்தபின் விளையாட அனுப்புகிறேன் என பொற்றோர் ஊக்குவித்து அழைத்து வருவார்கள். பிள்ளைகள் நம் சொல் கேட்டு தொழுதது போலவும் இருக்கும், அவர்கள் ஆசைக்கு விளையாடியது போலவும் இருக்கும்.
  • சிறு குழந்தையுடன் வரும் தாய்மார்கள் குழந்தைகளுக்காக எதாவது திண்பண்டங்களை எடுத்து வந்து, மற்ற சின்ன குழந்தைகளுடன் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை விதைக்கின்றனர் (தொழுகை முடிந்து போகும் போது, பண்டங்கள் எதாவது சிந்தி இருந்தால், அந்த தாய்மார்கள் தாமாக அதனை எடுத்து இடத்தை சுத்தம் செய்துவிடுகின்றனர்). இதனால் அவர்கள் ஓரளவு அமைதியாக இருப்பார்கள்.
  • சில இடங்களில் இப்படி எதுவும் ஒதுக்க இயலாமல், எல்லா பெண்களும் தொழும் இடத்தில் ஒன்றாக தொழ வேண்டி இருக்கும். நம் ஊர் மஸ்ஜிதுகள் பெரும்பாலும் இந்த நிலையில் தான் உள்ளது.

இருந்தாலும் சிரமம் பார்க்காமல் ஜமாத்தாக குழந்தையுடன் தொழ வரும் பெண்களை, மற்ற பெண்கள் இன் முகத்துடன் வரவேற்று உதவி செய்கின்றனர். சிலரோ, குழந்தையின் சத்தம், விளையாட்டு, அழுகை, பேச்சு முதலியன தொழுகைக்கு தொந்தரவாக இருப்பதாக எண்ணி சிடுசிடுப்பார்கள். அதே போல ஆண்கள் தொழும் பகுதியிலும் இதே நிலை தான். அங்கும் குழந்தைகள் வரவை இடைஞ்சலாக தான் சிலர் பார்க்கின்றனர்.

சிலர் நேரடியாகவே சொல்லி விடுவார்கள், "குழந்தையை அழைத்துக் கொண்டு ஏன் தொழ வருகின்றீர்கள்?" என்று. மஸ்ஜிதிற்கு வந்து தொழுவது கட்டாயமில்லை தான், அது குழந்தைகளின் தாய்மார்களுகாக மட்டும் சொல்லப்பவில்லை. அனைத்து பெண்களுக்கும் தான் சொல்லப்பட்டது. குழந்தையை காரணமாக வைத்து அவர்களுக்கு மட்டும் இந்த அறிவுரை கூறுவது முறையல்ல.

தொழுகையின் இடையே சிறு குழந்தைகள் அழ நேர்ந்தால், குழந்தையின் தாய் தொழுகையை பாதியில் விட்டுவிட்டு குழந்தையை சமாதானம செய்வதை காணலாம். பிறருடைய தொழுகைக்கு தன்னாலான வகையில் இடைஞ்சல்கள் தராமல் பார்த்துக் கொள்கின்றனர். அதையும் மீறி நிறுத்தாமல் அழும்போது, சூழ்நிலையை புரிந்து அவர்களே வீட்டுக்கு கிளம்பிவிடுவார்கள்.

எல்லாவற்றை விட குழந்தைகள் தொந்தரவு செய்யும் முன்பே, குழந்தையுடன் வருபவர்களை எரிச்சலாக சிலர் பார்ப்பதை காணமுடிகிறது. வீட்டில் தொழும்போது கூட குழந்தைகளின் அழுகை, சத்தம், பேச்சு, விளையாட்டு இல்லாமல் ஒரு அறையில் பூட்டி வைத்த பின் நாம் தொழுவது இல்லையே.  சித்தி, பெரியம்மா, அத்தை, மாமி, பாட்டி போன்றவர்களுக்கும் அந்த சத்தம் தொந்தரவாக தெரிவது இல்லை.

இஸ்லாம் என்பது சகோதரத்துவத்தை வலியுறுத்தும் மார்க்கம். மஸ்ஜிதிற்கு வரும் குழந்தைகளை தன் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மகன், மகளின் குழந்தைகளாக பார்த்தால் அவர்களின் சத்தம் சங்கடமாகத் தெரியாது. 

நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை தொழவைத்த போது, சிறு குழந்தையாக இருந்த ஹசன்(ரலி) நபி அவர்கள் சஜ்தா செய்யும்போது மேல் அமர்ந்து கொள்ள, அவர் ஆசை தீர கீழ் இறங்கும் வரை நபி(ஸல்) அவர்களும், அவரை பின் பற்றி தொழுத சஹாபாக்களும் சஜ்தாவிலேயே இருந்தார்கள். ( நஸயீ)

சிறு வயது முதல் குழந்தைகளுக்கு நம் மார்க்கத்தையும், தொழுகையின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதையும் பழக்க வேண்டியது அவசியம். தினமும் தொழும் வழக்கம் உள்ள பெற்றோர் எனில், இரண்டு வயது குழந்தைக்கு கூட தொடர்ந்து அழுது தொல்லை தராமல் அமைதியை கையாள வேண்டுமென்பது பழக்கத்தில் தெரிந்து இருக்கும்.

சில தாய்மார்களுக்கு தொழுகையின் போது குழந்தை அழுதால் சமாதானம் செய்ய முடியாமல் குழந்தைகளின் அழுகையையும் மீறி  தொழுவார்கள். அழும் குழந்தையை தூக்கிக்கொண்டு தொழலாம் என்ற விஷயத்தை அறியாததே இதன் காரணம்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் ஸைனப் அவர்களின் குழந்தை 'உமாமா'வைத் (தோளில்) சுமந்த நிலையில் தொழுதிருக்கிறார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இறக்கி விடுவார்கள். நிற்கும்போது தூக்கிக் கொள்வார்கள். (புஹாரி 516)

சில குழந்தைகள் கவனத்தை ஈர்ப்பதற்காக அழும், ஆனால் அம்மா தொழ ஆரம்பித்துவிட்டால்  ஸ்விட்ச் போட்டது போல சமர்த்து பிள்ளையாக அழுகையை நிறுத்திவிடும். வீட்டிலேயே பழக்கப்படுத்தினால் மட்டுமே இது போல சாத்தியம்.

குழந்தைகளை ஒதுக்கிவிட்டு தொழுவது நபி வழி இல்லை. பிற்காலத்தில் கட்டாயப்படுத்தி தொழ வைக்க வேண்டி வராமல் இருக்க வேண்டுமென்றால், பிள்ளைகளுக்கு சிறுவராய் இருக்கும் போதே பழக்கப்படுத்த ஆரம்பிக்க வேண்டும். ஒதுக்கியே வைத்தால், திடீரென ஒரு நாள் ஞானோதயம் பிறந்தது போல தொழுகையில் ஈடுபாடு வந்து விடாது.

உண்மையாக தொழவேண்டும் என்ற ஈடுபாட்டோடு குழந்தைகளுடன் வருபவர்களை எரிச்சலாக பார்ப்பது நபி வழி கிடையாது.

நபி(ஸல்), "நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்'. - புஹாரி 707

நபி(ஸல்) அவர்கள், "தொழுகைக்கு இடையூறு விளைவிக்கிறாய், உன்னால் மற்றவர்களும் தொழுகையில் கவனம் செலுத்த முடியவில்லை" என அந்த தாயை கண்டிக்கவில்லை. மாறாக தொழுகையைத்தான் சுறுக்கமாக முடித்துக் கொண்டார்கள்.நாம் தொழும்போது, பிள்ளைகளை அங்கு விடாமல் தள்ளி வைத்தோமானால், அவர்களும் தொழுகையை தள்ளிவைத்து விடுவார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் தான் சஹாபாக்களோடு முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவார்கள். புதிதாக வரும் வஹி செய்திகளையும் அறிவிப்பார்கள், தொழுகை நடத்துவார்கள். அதை பார்த்து தான் சஹாபாக்களும் தொழுகையை, வஹி செய்தியை, குர்ஆனை கற்றுக்கொண்டார்கள். அவ்வளவு முக்கிய நிகழ்வுகளுக்கு இடையிலும் குழந்தைகளை ஒதுக்கி வைக்கவில்லை. மாறாக கூடவே வைத்திருந்தார்கள். அவர்களின் வரவை ரசித்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் குத்பா உரை நிகழ்த்தும் போது அவர்களது பேரர் ஹஸன்-ஹுஸைன்(ரழி) ஆகிய இருவரும் சிவப்பு நிற ஆடை அணிந்து தத்தித் தத்தி வந்தனர். உடனே நபி(ஸல்) அவர்கள் மிம்பரை விட்டும் இறங்கி இரு சிறுவர்களையும் சுமந்து மிம்பரில் அமரவைத்தார்கள். ... ... ... பின்னர் ‘நான் இந்த எனது பிள்ளைகளைப் பார்த்தேன். அவர்கள் தத்தித் தத்தி வந்தனர். என்னால் அவர்களைச் சுமந்து இங்கே அமர்த்தும் வரை பேச்சைத் துண்டிக்காது பொறுமையாக இருக்க முடியவில்லை’ எனக் கூறினார்கள். (திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்)

குத்பா உரையை கூட நிறுத்திவிட்டு, பேரக் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தந்து,  தூக்கி வந்து பின்னர் உரையை தொடர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நபி(ஸல்) அவர்கள் மிம்பரின் (மேடை) மீது (உரையாற்றியபடி) இருக்க ஹஸன்(ரலி), நபி(ஸல்) அவர்களின் பக்க வாட்டில் அமர்ந்திருந்தார்கள். (புஹாரி - 3746) 

இப்படி தொழுகை, சொற்பொழிவு போன்ற எல்லா முக்கிய நேரங் களிலும் நபி(ஸல்) அவர்கள் குழந்தைகளை ஒதுக்காமல்    நேசிக்கும்போது, நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்??? 

நாம் தொழும்போது, பிள்ளைகளை அங்கு வர விடாமல் தள்ளி வைப்பதால், பின்னாளில் அவர்களும் தொழுகையை தள்ளிவைத்தால், அது யாருடைய குற்றம்?? பெண்களுக்கு கிடைக்கும் ஒரு சில வாய்ப்பையும் குழந்தையை காரணம் சொல்லி தட்டி கழிப்பது அவர்களின் உரிமையை பறிப்பதாகும். அதே போல குழந்தையை கண்டுகொள்ளாமல் விடுவதும் தவறு.

நாம் இதனை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.  அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிக்காட்டுவானாக. ஆமீன்...

உங்கள் சகோதரி,
தாஹிரா பானு
டீக்கடை ஃபேஸ்புக் குழுமம்

ஏன் ஹிஜாப்? - (பொன்முத்து சம்பத் - இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை) 2

அதிரைநிருபர் பதிப்பகம் | July 04, 2015 | ,

இவ்வருடத்தின் ஹிஜாப் தினத்தை முன்னிட்டு. இஸ்லாமியப்பெண்மணி தளமும் டீக்கடை முகநூல் குழுமமும் இணைந்து நடத்திய “ஏன் ஹிஜாப்?” கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடம் பெற்று ரூ 4 ஆயிரம் பரிசுத்தொகை பெற்ற சகோதரர் பொன்முத்து சம்பத் அவர்களின் கட்டுரை:

மரப்பட்டைகளை அணிந்து,  பட்டாடைகளை அணிந்து  பண்பாட்டில்(Culture) வளர்ந்தது மானுடம். நாகரிகம் (Civilization) என்ற பெயரில், பெண்கள் தங்களின் ஆடைகளைக் குறைத்து வெளியிடங்களில் திரிவதால் முகம் சுளிக்கிற நிலையும் தேவையற்ற பிரச்சனைகளும் எழுவதை அன்றாட செய்திகளாய், ஊடகங்களில் காண முடிகிறது. ‘ஆள்பாதி, ஆடைபாதி’ என்பதை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பலப்பல. கல்லூரிகளில், கடைத்தெருக்களில் காணப்படும் பெண்களை கேலி கிண்டல் செய்யும் அநாகரிப் போக்கும் வன்முறையே.  இதனைத் தவிர்க்கும் வகையில் ஆண், பெண்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.     இதுவே முஸ்லிம் பெண்களின் ஹிஜாப். இதைக் கடைப்பிடிக்கும் பெண்கள் கண்ணியத்திற் குரியவராகிறார்கள்.  இக்கலாச்சாரம் மேலைநாடுகளிலும் வேரூன்றி வருகின்றது. இதனால் ஈவ்டீஸிங்கிலிருந்து விடுபடலாம்.

(நபியே!) இறை நம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக்கொள்ளும்படியும், தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும்.  இதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும்.  அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக இறைவன் நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.

மேலும், (நபியே!) இறை நம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும், அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும்.  தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக்கட்டும்.  தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்.  அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர, மேலும் தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும். (24:30-31)


இந்த இறைவசனங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மிக உன்னதமான ஒழுக்க நெறிகளை வகுத்துத் தருகின்றன. ஹிஜாபை அணிவது இன்றைய நவநாகரிக உலகில் அவசியமற்றது என்பவர்களுக்கும் வாகனங்களில் பயணம் செய்கிறபோது தடையாக இருக்கிறது என்பவர்களுக்கும்  தோஹாவில் நடைபெற்ற 15-வது ஆசிய விளையாட்டுப் போட்டியைச் சுட்டலாம்.

Ruqaya Al-Ghasra

2006 டிசம்பர் 11 அன்று  200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 23.19 விநாடிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்மணி ருக்கையா அல்-கஸரா.  இதில் என்ன அதிசயம் எனில்,   இஸ்லாமியப் பாரம்பரிய உடையான ஹிஜாப் அணிந்து, ஓட்டப்ப பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதுதான்.  அவரை மொய்த்த ஊடகங்களுக்கு அவர் அளித்த பதில்:


‘பாரம்பரியமான இஸ்லாமிய உடை என் ஓட்டத்தைத் தடை செய்யவில்லை. ஓட்டத்திற்கு உடை ஒரு தடை என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். இஸ்லாமிய உடை என்னை ஊக்கப்படுத்தியது; உற்சாகப்படுத்தியது. பஹ்ரைனில் என்னை யாரும் இந்த உடைதான் அணிய வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. நானாகத்தான் வெள்ளை நிற ஹிஜாபைத் தேர்வு செய்து ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டேன். ’ 

இஸ்லாமிய உடைகளைச் சுமையாகக் கருதுகிற இஸ்லாமியப் பெண்கள் என்றில்லாமல் அனைத்து மதப் பெண்களுக்கும் இது ஒரு சவுக்கடி. இஸ்லாம் ஒழுங்குபடுத்தியுள்ள உடை பெண்களின் எத்தகைய நியாயமான முன்னேற்றத்திற்கும் தடையாக  இருப்பதில்லை  என்பதற்கு பள்ளப்பட்டி உஸ்வத்துன் ஹஸனா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டே ஆண்டுதோறும் விளையாட்டுப்  போட்டியில் கலந்து கொள்கின்றனர் என்பது சான்று.

முக்காடு போடுவதும், முகத்தை மறைப்பதும், மூளையை மறைப்பதாகக் கருத இயலாது. அந்நிய ஆடவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள, இஸ்லாம் வகுத்த இந்தப் பழக்கம் உண்மையில் பாராட்டுக்குரியது.   இஸ்லாம் மதத்தின் மீது இருக்கிற மதிப்பையும் மரியாதையையும் விட கூடுதலான மதிப்பும் மரியாதையும் ஹிஜாபையும், புர்காவையும் அணிகிற பெண்களின் மீது ஏற்படுகிறது. எனவே, ஹிஜாப் அணிகிற இந்த நடைமுறையை  அனைத்து மதத்தைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் கடைபிடிக்கலாம் என்றும் தோன்றுகிறது

கல்லூரிக்குப் புதுசா? உங்கள் கவனத்திற்கு... 1

அதிரைநிருபர் பதிப்பகம் | June 02, 2015 | , , ,

தன் எதிர்கால லட்சியங்களுக்காக விரும்பிய கல்லூரியில் கல்வியைத் துவங்கும் நாள் இன்னும் விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களே உள்ளன எம் இஸ்லாமியப் பெண்களுக்கு.... விதவிதமாய் உடைகள், புதுப்புது உபகரணங்களும் தயாராகிவிட்டிருக்கும்... ஆனால் அதை விட முக்கியம் உள்ளத்தைத் தூய்மையாய் வைத்திருக்க வேண்டிய பயிற்சியல்லவா... சுயமரியாதையை உறுதியாய்ப் பற்றிப்பிடிக்கும் யுக்தியை கடைபிடிப்பதற்கான முயற்சியல்லவா...

கல்லூரிகளில் அடி எடுத்து வைக்கும் இஸ்லாமிய பெண்மணிகள் ஒரு சில நிமிடங்கள் அதற்காக ஒதுக்குங்கள்....! 

இன்று உள்ள கல்விச்சூழலில் +2 முடித்த உடன் மேற்படிப்பு படிப்பது என்பது அனைவருக்கும் எட்டக்கூடிய ஒன்றாய் உள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. முன்பை விட அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், செவிலியர் பயிற்சி நிறுவனங்கள் என நம் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே அமையப்பெற்றது மகிழ்ச்சியான ஒன்றே. அக்கல்லூரிகளையோ அல்லது நாம் விரும்பும் எந்தக் கல்லூரியையோ தேர்ந்தெடுக்கும் முன்பு நாம் யோசிப்பது மிக சொற்பமான சிலவற்றையே. அவை நம்முடைய மதிப்பெண், நம்முடைய விருப்பமான பாடம், நம்முடைய பொருளாதார சூழல், இவற்றிற்கு அடுத்த படியாக நமது பள்ளி நண்பர்களும் அவர்களின் நட்புறவுத் தொடர்ச்சியின் மீதுள்ள ஆவலும். ஆனால் நமது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் செய்வதற்கு முன் இந்த சில சிந்தனைகள் போதுமானதா? நிச்சயமாக இல்லை.

யோசிக்கவேண்டியவை:

உலகக்கல்வியை தேர்ந்தெடுக்கும் நாம், நம் மார்க்கத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமோ நிர்ப்பந்தமோ ஏதும் இல்லை. அப்படி இருக்க நாம் சிந்திக்கும் மேற்கூறிய சிந்தனைகளில் இஸ்லாம் எங்கே மறைந்தது (மறந்தது)?

பள்ளிப்படிப்பு வரை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சில பல கண்டிப்புகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு நடந்து கொள்கிறோம் அல்லது நடந்து கொள்ள வைக்கப்படுகிறோம். ஆனால் நாம் கல்லூரிப் படிகளில் அடிவைக்கும் போது நமக்கு, நமது பெற்றோர்களாலும் சமூகத்தாலும் சில சுதந்திரங்கள் தரப்படுகின்றன.இந்த சுதந்திரத்தின் தவறான புரிதலே சிறிய பெரிய தவறுகளுக்கு அடித்தளமாக அமைகிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.

சுதந்திரத்தின் வரையறை:

சுதந்திரத்திற்கு வரையறை கொடுக்க இறையச்சத்தினால் மட்டுமே இயலும். ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும் அனேக கல்லூரிகளில் நம் இஸ்லாத்திற்குப் புறம்பான விஷயங்கள் செய்யப்படுகின்றன அல்லது செய்யத் தூண்டப்படுகின்றன. கல்வி கற்க செல்கிற நாம் அதை ஆமோதிக்கும் நபர்களாய் காலப்போக்கில் மாறிவிடுகிறோம் என்பதே வேதனை.

பட்டப்படிப்பு முடித்ததன் பரிசாக இறையச்சம் குறைந்துவிடுகின்றது. இஸ்லாம் என்பது ஒரு மதமாகி போகின்றது. இதற்கு நாம் வைத்துக்கொள்கின்ற பெயர் முற்போக்குச்சிந்தனை. ஆனால் சுய பாதுகாப்பு இங்கே கேள்விக்குறியாகி விடுகிறது.

விளைவுகள்:

இந்த சிந்தனையின் செயல்பாடே வேற்று மதத்தவரை மணந்துகொள்வது, வேற்று மதத்தினரோடு காதல் வயப்படுவது, ஆண் - பெண் விதிமுறைகளற்ற நட்பு, பெண்ணியத்தை மறந்துபோவது, பெற்றோர்களையும், பெரியோர்களையும் முந்தைய சமூகமாய் மட்டும் பார்ப்பது, இவ்வாறு இன்னும் இந்தப் பட்டியல் கூடுதல் தாள் வாங்கும் அளவிற்கு நீளலாம். இவைதான் முற்போக்குச் சிந்தனையா?

மேற்கல்வி கற்பதன் நோக்கம்:

மேற்கல்வி கற்பது நமது அறிவைப் பெருக்கி கொள்ளவே அன்றி நமது சுயமரியாதையை, சுயகட்டுபாட்டை, இஸ்லாத்தை, ஈமானை இழப்பதற்காக அல்ல. இதுவரை இக்கட்டுரையை படித்ததின் புரிதலாக கல்லூரிப் படிப்பே கூடாது என்றோ கல்லூரிகளில் கால் பதிக்கத் தயாராகும் மாணவர்களைத் தவறாக கூறுகிறது என்றோ அல்லது இஸ்லாத்தைத் தவிர மற்ற விஷயங்களை எதிர்க்கிறது என்றோ இக்கட்டுரை கூறுகிறது என எண்ண வேண்டாம். மாறாக உலகக் கல்வியின் அவசியத்தையே தங்கள் முன் வலியுறுத்த முயற்சிக்கிறது.

நபி (ஸல்) அவர்களின் காலக்கட்டத்தில் வாழ்ந்த சஹாபாக்கள் அறிவியல், கலை, மருத்துவம், பொறியியல், மொழி, ஆராய்ச்சி என பல துறைகளில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள். ஆனால் அவர்களின் கல்வி இஸ்லாத்தையோ ஈமானையோ கடுகளவேனும் பாதிக்கவில்லை. மாறாக இஸ்லாத்தின் நெறிமுறைகளால் அவர்களின் ஞானம் மென்மேலும் வலுப்பெற்றது. இவ்வுலகில் வாழ்கின்ற நமக்கு இவ்வுலகில் நாம் வாழ தேவையான வசதியையும், தொழில்நுட்பத்தையும், அறிவையும், செல்வத்தையும் தேடிக்கொள்வது மிக மிக அவசியமாகும். அது இறைக் கோட்பாடுமளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை:

நாம் தேர்ந்தெடுக்கப் போகும் கல்லூரியில்

*பெண்கள் புர்கா அணிந்து வர அனுமதி உள்ளதா, 

*ஐவேளை தொழுவதற்கு இடமுள்ளதா,

* ஒழுக்கமுள்ள அல்லது ஒழுக்கம் பேணப்படுகின்ற கல்லூரியா

போன்ற கேள்விகளை முன்வைத்து கல்லூரிகளைத் தேர்ந்தெடுங்கள். இவற்றில் ஏதேனும் தடை இருந்தால் அதற்கான மாற்று முறைகளுக்கு ஏற்பாடு செய்யும் வாய்ப்பு கிடைக்கிறதா எனப் பாருங்கள். உதாரணத்திற்கு....

*புர்கா அணிய அனுமதி இல்லையெனில் நம் அணியும் உடையையே ஹிஜாப் முறையில் அணிந்து தலையை மறைத்து வர அனுமதி உள்ளதா

*தொழுகைக்கு இடவசதி இல்லை எனில் கல்லூரி வளாகத்திலேயே, வகுப்புகளிலே தொழுவதற்கு அனுமதி உள்ளதா என பார்க்கலாம். 

இவற்றில் எவற்றிற்கேனும் குறைபாடுகள் நேரும் பட்சத்தில் அவற்றை எதிர்த்து கேள்வி கேட்கும் நபராய் உங்களைத் தயார்படுத்திக் கொண்டு கல்லூரிகளுக்குச் செல்லுங்கள். கல்வியைக் காட்டிலும் உங்களின் மானமும், ஒழுக்கமும், மரியாதையும், கௌரவமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் உங்களின் வருகையும், சேர்க்கையும், கட்டணமும், பங்களிப்பும் அக்கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் மறந்து விடாதீர்கள். உங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது கல்லூரியின் கடமையாகும்.

சிந்திக்க வேண்டியவை:

இந்து மதத்தினர் பொட்டு வைத்துக்கொள்ளவோ, காவி, கருப்பு நிற உடை அணியவோ, கிருஸ்துவ மதத்தினர் சிலுவை அணிந்து வரவோ வெண்மை நிற உடை அணியவோ, சீக்கிய மதத்தினர் டர்பன் அணிவதையோ தடை செய்யாத கல்வி நிறுவனம் இஸ்லாமியர்களாகிய நாம் வைத்துக்கொள்ளும் தாடியையும், அணிகின்ற ஹிஜாப்பையும், தொப்பியையும் தடை செய்கின்றது என்றால் பிரச்சினை யாரிடத்தில் ? சிந்தியுங்கள்.

உங்களிடம் தைரியம் குறைவு, ஒற்றுமை குறைவு, மார்க்கப்பற்று குறைவு என்று எண்ணித்தானே அவர்களின் சட்டங்கள் உங்கள் மீது திணிக்கப்படுகின்றன. நீங்களும் அவற்றை உண்மைபடுத்தும் விதத்தில் தானே நடந்துக்கொள்கிறீர்கள்?

இனியாவது இந்நிலை மாறட்டும். உங்களின் ஒற்றுமையை, மார்க்கப்பற்றை இவ்வுலகிற்கு பறைசாற்றுங்கள். உலக கல்விக்காக மார்க்கத்தையும், சுயமரியாதையையும் பலி கொடுத்த காலம் இன்றோடு ஒழியட்டும். உங்களின் முயற்சியினால் பின்வரும் சமூகத்திற்குக் கல்வியை அழகானதாய் , எளிமையானதாய் ஆக்கி வையுங்கள். நம் சகோதர சகோதரிகளான நீங்கள் இம்மையிலும், மறுமையிலும் வெற்றியாளர்களாய்த் திகழ வேண்டும் (ஆமீன்) என்று இறைவனிடம் இறைஞ்சுபவளாய் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

வஸ்ஸலாம்.
ஹபிபா ஜமீல்
பரங்கிப்பேட்டை

சாதனைப் பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா தாவூத் (பாகம்-2) 1

அதிரைநிருபர் பதிப்பகம் | May 10, 2015 | , ,

ஆச்சாரமான , கட்டுக்கோப்பான குடும்பத்தில்  தான் சகோதரி காயத்ரி பிறந்தார். பல சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு ஊடே தான் அவர் பால்ய காலம் நகர்ந்தது. எப்படி பல கடவுள் இருக்க முடியும் என்ற அவரின் கேள்விக்கு வீட்டினர் யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. ”இப்படியெல்லாம் சொல்லகூடாது. சாமி அடிக்கும்” என அம்மாவின் அதட்டல்கள் சிறுமியின் சிந்தனைக்கு பூட்டுப்போடவில்லை. பல கடவுள் இருக்க வாய்ப்பே இல்லை எனும் உறுதியுடனேயே இளமைக்காலம் கழிந்தது. டாக்டரான தந்தை, தன் மகளுக்கு சிறப்பான கல்வியை வழங்கியதன் விளைவாக Msc முடித்து 1988 ஜூலை 29 ல் கீழக்கரை தாசீம் பீவி கல்லூரியில் பேராசிரியையாகப் பணி தொடர வந்தார். அப்போதைய இஸ்லாமிய சூழல் சகோதரிக்குள் இனம்புரியாத ஈர்ப்பைத் தந்தது. ”லா இலாஹ இல்லல்லாஹ்”*- என்ற வாசகம் அவரின் நீண்ட நாள் தேடலுக்கு விடை கொடுத்தது. காலை நேர கல்லூரி வணக்கத்தில் ஒவ்வொரு நாளும் குர்ஆன் வசனங்கள் தமிழ் அர்த்தத்துடன் சொல்லப்படுவது வழக்கம். அவையெல்லாம் அந்த இளம் பெண்ணின் மனதை ஊடுருவிச் சென்றது. தொடர்ந்து நான்கு வருடம் இஸ்லாம் குறித்து ஆராய்ந்தார். 

1991ல் ஒருமுறை அவரின் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போக மிகுந்த இக்கட்டான நிலையில் இருப்பதாக மருத்துவர்களும் கைவிட முதன் முறையாக அல்லாஹ்விடம் மன்றாடினார்.  முதன்முறையாகத் தன்னிச்சையாக அவர் மனம் தொழுகையை நாடியது. அவரின் பிராத்தனையை அல்லாஹ் அங்கீகரித்துக்கொண்டான். அன்னை வெகு விரைவில் பூரண குணமானார். இனியும் தாமதிக்க கூடாது என நினைத்த அந்த பெண்மணி நேராகச் சென்றது அப்போதைய தாசீம் பீவி கல்லூரி முதல்வரான சகோதரி நபிஷா-கலீம் அவர்களிடம். தான் முஸ்லிம் ஆக விரும்புவதை சகோதரி சுமையா தெரிவித்ததும் அந்த முஸ்லிம் பெண்மணி உடனே சந்தோஷப்பட்டுவிடவில்லை. அறிவுரை வழங்கினார். ”நீ இன்னும் திருமணமாகாதவள், உன் இந்த முடிவால் உன் வாழ்க்கையின் பாதை மொத்தமாக மாறக்கூடும், உன்னால் இவையெல்லாம் சமாளிக்க முடியுமா என முதலில் யோசனை செய்துகொள். ஒன்றும் அவசரமில்லை, நிதானமாக முடிவெடு” என சமாதானப்படுத்தினார். தன் முடிவில் உறுதியாய் இருந்த அந்த திடப்பெண்மணி பிடிவாதமாய் நின்றார். நவம்பர் 5, 1991ல் சகோதரி நபிஷா கலீம் அவர்களையும் இன்னும் சிலரையும் சாட்சியாக வைத்து கலிமா ஷஹாதத்தை மொழிந்து இஸ்லாத்தை தழுவினார். அவர் முஸ்லிமாக மாறிய விஷயம், ஏழு மாதங்கள் வரை அவரது வீட்டினருக்குத் தெரியாது. 

வீட்டினருக்குத்  தெரிய வரும்போது  நீங்கள் நினைத்து வைத்திருக்கும் அதே சூறாவளி, பூகம்பமெல்லாம் நிகழவே செய்தது. ஆனால் இஸ்லாமிய ஆணிவேர் ஆழமாய் வேரூன்றிய ஆலமரமாய் நின்ற சகோதரி சுமையாவை அவை சிறிதும் அசைத்துப்பார்க்கவில்லை. தன் கொள்கையில் உறுதியாய் நின்றார். அவர் எண்ணமும் உறுதியும்  போலவே அவருக்கு சிறப்பான வாழ்வை அல்லாஹ் அமைத்துக்கொடுத்தான்.  இன்று அவர் ஓர் ராஜ்ஜியத்தின் ராணி. அவரை அல்லாஹ் கண்ணியபடுத்தினான். சகோதரியைப்  புரிந்துகொள்ளகூடிய முஸ்லிமான சேக்தாவூத் அவர்களை கரம்பிடித்தார். அவர் சீதக்காதி அறக்கட்டளையின் துணைப்பொதுமேலாளராக உள்ளார். ஆரம்பத்தில் வெறுத்த குடும்பத்தினர், தன் மகள் சமூகத்தில் கண்ணியத்துடனும், பேரும் புகழுடனும்  நடத்தப்படுவதைப் பார்த்து,கோபம் மறந்து சமாதானமாயினர்.  சகோதரி சுமையா தன் தாயைப் பற்றி பகிர்ந்த போது , அல்லாஹ் அவருக்கும் நேர்வழி காட்ட வேண்டும் என அடிக்கடி கூறிக்கொண்டிருந்தார். அவரின் ஏக்கம் புரிந்தது. சுவனத்தின் வாசனையைத் தன் தாய்க்கும் கிடைக்க எந்த ஒரு மகளும் விரும்பத்தானே செய்வார். அல்லாஹ் அவருக்கு ஹிதாயத்** வழங்க துஆ செய்வோம். 

பழைய நினைவுகளில் இருந்து மீண்டபோது சகோதரி சொன்ன வார்த்தை வாயடைக்கச்செய்தது. “யாரைப் பார்த்து இஸ்லாமிய சூழலை விரும்பினேனோ அதே மக்கள் ஷிர்க்கில் இருப்பது நினைத்து வேதனையாக உள்ளது.”. அனைவரையும் நேர்வழிபடுத்த அல்லாஹ் போதுமானவன். சுமையா-சேக்தாவூத் தம்பதியினருக்கு இரு குழந்தைச் செல்வங்களை அல்லாஹ் அருளினான். மூத்தவர்  சென்னை ராமசந்திராவில் MBBS படிக்கிறார், இளையவர்  டெல்லியில்  I.I.T ல் படிக்கிறார். 

இஸ்லாம் என்னைக் கட்டுப்படுத்துகிறதா?

இந்துவாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுள்ளீர்கள். ஆக இரண்டு சூழலுக்கும் இடையேயான நிலைமை உங்களால் உணர முடியும். இஸ்லாம் என்ற கட்டுபாடு உங்கள் அறிவுக்கு எல்லை விதிப்பதாக நினைத்ததுண்டா? என்று வினவினோம். ”நிச்சயமாக எந்த எல்லையையும் விதித்ததில்லை. மார்க்கத்தின் வழிமுறைகள் ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்றும் அவன் கடமை என்ன என்றும் சீரான முறையில் கோடிட்டு காட்டியுள்ளது. இஸ்லாம் என்ற வழிமுறை சிறப்பாக வாழ வழி வகுத்துத்தரும் மார்க்கம் என்பதை உணர்ந்து அதன்படி செயல்படும் முஸ்லிம்கள் இஸ்லாம் என்ற கட்டுபாட்டை சுமையாக நினைக்கமாட்டார்கள். முன்பை விட இஸ்லாம் எனக்கு மிகச் சிறப்பான சுதந்திரத்தைத் தந்துள்ளதை என் நடைமுறைகளிலிருந்தே உணர்கிறேன்” என தீர்க்கமாகப் பதிலளித்தார். 

”இஸ்லாம் தான்  என் தனிதன்மை...  ஹிஜாப் தான் என் அடையாளம்... தொழுகை     என் உரிமை, இவற்றை  இழக்க எப்போதும் நான் தயாராக இருப்பதில்லை.  என்னால் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் என் உரிமையை விட்டு கொடுக்க முடியாது,  தொழுகை என் பணிகளை குறிக்கிடுமே தவிர என்றுமே அலுவல் பணிகள் என் தொழுகையில் குறுக்கிட விடமாட்டேன். இதில் எவ்வித விட்டுக்கொடுத்தலும் கிடையாது” எனவும் விளக்கினார்.

தாசிம்பீவி கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா தாவூத்

மேற்கொள்ளும் ஆய்வுகள்:

சகோதரி சுமையாவின்  துறை உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆகும். அதில் படித்து, பட்டம் பெற்று வேலைக்கு சேர்ந்து சம்பளம் வாங்கிகொண்டிருப்பது மட்டுமே தன் படிப்பின் நோக்கம் அல்ல என்ற உறுதியுடன் இருந்தவர், அத்துறையில் ஆய்வுகள் மேற்கொள்ள விரும்பினார். இன்று நடைபாதை கடைகளில் உணவு உண்ணும் கலாச்சாரம் அதிகமாகப் பரவிவிட்டது. யாத்ரீகர்கள், பயணிகள், மக்கள் அதிகம் வரக்கூடிய இடங்களான மதுரை, ராமேஷ்வரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் சுமார் சுமார் 400 உணவு தயாரிப்பாளர்களை சந்தித்து அவர்கள் தயாரித்து அதில் 200 தயாரிப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள்  விற்கும் உணவுகளை ஆராய்ந்து ஆய்வு கட்டுரை சமர்பித்தார். இந்த ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார். ஆய்வுடன் நில்லாமல் மதுரையில் 50 உணவு தயாரிப்பாளர்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி எவ்வாறெல்லாம் சுத்தமான மற்றும் ஆரோக்யமான உணவுகளைத் தர வேண்டும் என்பது குறித்தும்  HACCP வழிமுறைகளை பற்றியும் பயிற்சி அளித்தார்.  அரசு சார்ந்த கூட்டமைப்பாக இதனைக் கொண்டு வந்தால் தான் சுகாதாரத்தைக் கடைபிடிக்க முடியும் என்ற தீர்வையும் முன்வைத்தார்.  

அதுமட்டுமா? கடற்பாசிகளைக் கொண்டு ஆராய்ச்சி நடத்துகிறார். இராமநாதபுர மாவட்ட கடல்களில் எளிதாய் கிடைக்கும் கடற்பாசி குறித்தான விழிப்புணர்வு மக்களிடத்தில் இல்லை. 198 வகையான கடற்பாசி இனங்கள் கல்ப் ஆஃப் மன்னாரில் மட்டும் உள்ளது. சைனா,  ஜப்பான் போன்ற நாடுகளில் பதப்படுத்தி உணவுகளில் அதிகமாகச் சேர்த்துக்கொள்கிறார்கள். சாலையோரக் கடைகளிலும் கூட கடற்பாசி கொண்டு தயாரிக்கப்படும் சாசேஜ் வகைகள் அதிகம் விற்கபடுகின்றன. இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு மைக்ரோ நியூட்ரிஷன் டெபிசியன்சி தான் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. கடற்பாசியில் அதிகபடியான தாதுச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் நிச்சயம் கடற்பாசி அதற்கு தீர்வாக அமையும். இது குறித்து தொடர்ந்து ஆறு வருடங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இன்னும் 4 வருடங்களுக்குள் கடற்பாசிகளைக் கடற்கரைகளில் வளர்க்கவும், பதப்படுத்துவதற்குமான தொழில்நுட்பம் இராமநாதபுர மாவட்டத்தில் கொண்டு வரவேண்டும் என்றும் உந்துதலுடன் முயற்சித்து கொண்டிகிருக்கிறார். அவரின் முயற்சியால் கடற்பாசி கொண்டு சாக்லேட் தயாரித்து PATENTற்கும் பதிவு செய்ய IPRற்கும் அனுப்பப்பட்டுள்ளது. மாஷா அல்லாஹ். வாழ்த்துகள் சகோதரி.

இந்தியாவில் இயற்கையாக விளையக் கூடிய தாவரங்கள், மூலிகைகள் விஷயங்கள்  நமக்குத் தெரியாமலேயே உள்ளது. அவையெல்லாம் ஆராய்ந்து அவற்றை கொண்டு புட் ப்ராடெக்ட் டெவலப்மெண்ட் பண்ண வேண்டும், மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்பது சகோதரியின் ஆவல். அதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார்.   இந்திய நாட்டில் கிடைக்கும் வளங்களை கொண்டு குழந்தைகளுக்கான மைக்ரோ நியூட்ரியன்ட் டெபிசியன்சியை கட்டுபடுத்தவும்,  ஒழிக்கவும் தேவையான சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்துகொண்டிருக்கிறார். 

இப்படி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் நீங்கள் என்றாவது ”சராசரி பெண்ணாய் நாமும் இருந்திருக்கலாமே” என  நினைத்ததுண்டா ? என கேட்டோம், “நான் என்றுமே அப்படிபட்ட எண்ணத்தை கொண்டிருக்கவில்லை. இறைவன் கொடுத்த அல் ஹிக்மாவை நாம் வீணாக்கியும் சரியான முறையில் அதை உபயோகப்படுத்தாமலும்  இருந்தால் இறைவன் நம்மை மறுமையில் நிச்சயமாக கேள்விக்கணக்கு கேட்பான். ஆக எந்த இக்கட்டான சூழ்நிலை வந்த போதும் அனைத்தையும் தூக்கிவிட்டு முடங்கி கிடக்க ஒருபோதும் நான் விரும்பியது கிடையாது” என்ற பதிலில் இஸ்லாமியக் கோட்பாடுகளுடனான சமுதாய சிந்தனையும் கலந்துவந்தது. 

ஆற்றிவரும் சமூகப்பணிகள்:

2000 ஆம் ஆண்டில் சீதக்காதி  தன்னார்வ தொண்டு நிறுவனம் நிறுவப்பட்டு அதனைத் தமிழக அரசின் தமிழ்நாடு விமன் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் கீழ் பதிவு செய்து அதன் மூலம் உதவிகள் செய்து வருகிறார். தற்சமயம் சீதக்காதி தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ப்ராஜெக்ட் ஆபிசராக உள்ளார். இதன் மூலம் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் சுய உதவிக்குழுக்கள் அமைத்து வட்டியில்லா கடன் மூலம் சமூகத்தில் புறக்கணிக்கபட்ட பெண்களின் மறுமலர்ச்சிக்கு உதவி வருகிறார். பலவிதத் திறன் நோக்கு பயிற்சிகளை வழங்கி, பெண்களிடையே தைரியத்தை விதைத்து அவர்களை தொழில்முனைவோராக மாற்றி வருகிறார் .

இவ்வளவு கேட்டுவிட்டு இஸ்லாமியப் பெண்மணி பற்றி கேட்காமல் இருக்க முடியுமா? கேட்டே விட்டோம். ”நீங்கள் தொடர்புகொள்ளும் முன்பே நான் சில முறை தளத்தை பார்த்துள்ளேன்.  பல இஸ்லாமிய பெண்கள் இத்தளத்தில் பங்காற்றி கருத்துக்கள் பகிர்ந்து வருவதை கவனித்தேன். சிறப்பான முறையில் இத்தளம் வளர்வதாக உணர்கிறேன்.  சிறப்பாக இதனை நடத்திகொண்டிருக்கிறீர்கள். இதை மேலும் முன்னெடுத்துச் செல்வது மற்ற இஸ்லாமிய பெண்ளுக்கும் நன்மை பயக்கும் விஷயமாகவும்  வரப்பிரசாதமாக அமையும் என நம்புகிறேன்” என்றார். பல லிட்டர் சாத்துகுடி ஜூஸ் குடித்த  தெம்பு இப்போது. அவரின் முன்னேற்றத்திற்கும், இன்னும் பல சாதனைகள் படைத்து நம் சமூக்கத்திற்கு பயன்தருவதற்கும், இம்மை மறுமை  வெற்றிக்கும் கட்டாயம் துஆ செய்யுங்கள் சகோதர சகோதரிகளே!

*லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரிய இறைவன், அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை

** ஹிதாயத் - நேர்வழி

சாதனைப்பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா தாவூத் (பாகம்-1) 2

அதிரைநிருபர் பதிப்பகம் | May 09, 2015 | ,

இன்றும் அடிமைகளின் நிலையை ஒத்ததாக இஸ்லாமியப் பெண்மணிகளின் நிலை பார்க்கப்படுகிறது. எவ்வளவோ பக்கம் பக்கமாக நாம் பதில் அளித்தாலும் கூட ஹிஜாப் அடிமையின் சின்னமாகவும், முஸ்லிம் பெண்கள் பரிதாபத்திற்குரிய ஜீவன்களாகவும் இந்த சமூகத்தால் பார்க்கப்படுகிறது. ஒன்னரை கிலோ பெறுமானமுள்ள  கேவலம் துணியா ஒரு பெண்ணை சிறைப்படுத்த முடியுமென்பதை அவர்கள் அறிவதில்லை. இவர்களுக்கு விளக்கம் கொடுப்பதை விடவும் வாழும் உதாரணங்களை சொன்னால் பொருத்தமாக இருக்கும் அல்லவா... அமெரிக்காவில் வாழும் ஆமினா அசல்மியையோ பிரிட்டனில் வாழும் யுவான்னையோ அழைக்கப் போவதில்லை. இதோ ! இதே தமிழ்நாட்டில்  பிரபலமாய் இருக்கும் இஸ்லாமிய பெண்மணிகளை “சாதனைப் பெண்மணி” எனும் பகுதியில் அறிமுகப்படுத்தவிருக்கிறோம். அந்த வரிசையில் நாம் இன்று  பார்க்கபோகும் ஆளுமை கீழக்கரை தாசீம் பீவி மகளிர் கல்லூரி முதல்வர் DR. சுமையா.  

முதலமைச்சரிடம் விருது பெற்ற சகோதரி. சுமையா

கீழக்கரையை தாண்டி  இராமநாதபுர மாவட்டத்தில்  பல இஸ்லாமியர்களால் அதிகம் அறியப்படுபவர் சகோதரி சுமையா. சத்தமில்லாத புரட்சி நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிறு சிறு உதவிகளுக்குக் கூட கேமரா, வீடியோ  உட்பட மீடியாவையே துணைக்கு அழைத்துச்செல்லும் இன்றைய அரசியல்வாதிகளின் மத்தியில் 15 வருடங்களாக இவரின் சாதனைகள் யாவும் பொது நலனை மட்டுமே சார்ந்திருக்கிறது. தன்னைப் பிரபலபடுத்திக்கொள்ள அவர் முயற்சிக்கவில்லை, அல்லாஹ்வின் உவப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இடைவிடாது உழைத்தார். விருதுக்கும் புகழுக்கும் முயற்சிக்காமலேயே முதலமைச்சரிடம்  ”பெஸ்ட் சோஷியல் வொர்க்கர்” விருது வாங்கும் நிலைக்கு உயர்ந்தார். விருது வாங்கிய அந்த நிமிடம் பற்றி கேட்ட போது  அவர் சொன்ன பதில் ,  “அன்று சரியாக லைலத்துல் கத்ர் ஒற்றைபடை நாள். நோன்புடனேயே விருது பெற்றேன்.  நான் செய்த காரியங்களை அல்லாஹ் அங்கிகரித்து எனக்கு வழங்கிய பரிசாகவே இதனை நினைத்தேன். என் பொறுப்புகள் இன்னும் ஏராளமிருப்பதையும் எனக்கு உணர்த்தியதாக கருதுகிறேன்”. 

2012ல் மாவட்ட சமூக நலத்துறை வழியாக ராமநாதபுர மாவட்ட கலெக்டர் அவர்களால்  சகோதரி பெயர்  பெஸ்ட் சோசியல் ஒர்க்கர் அவார்ட்க்கு பரிந்துரைக்கப்பட்டது. மொத்தம் 32 மாவட்டங்களில் இருந்தும்  இதே போல் 32 பெயர்கள் பரிந்துரைக்கபட்டு இறுதியில் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அம்மூவரில் சகோதரி சுமையாவும் ஒருவர்.  பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் வரதட்சனை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதற்காகவும், சுனாமி மீட்பு திட்டத்தையும் செயல்படுத்தி வருவதற்காகவும்   இவரின் சேவையை பாராட்டி   2012 ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரதின நிகழ்ச்சியின் போது தமிழக முதலமைச்சர் கையால்   சிறந்த சமூக பெண்மணி விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார்கள். ”கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி-  இந்த இரண்டும் என்னை   இந்த நிலைக்கு வர வழிவகை செய்தது. வாழ்வின் ஒவ்வொரு அடுத்த கட்ட நகர்தலில் இவை இரண்டுடன் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பாதுகாப்பையும்  துணைக்கு அழைத்துகொள்வேன்” என்றார் நிதானமாக.  

அவரைப்பற்றி வந்த தகவல்கள் ஆச்சர்யத்தை விதைக்க உடனே அவரைத் தொடர்புகொண்டோம். நம்முடைய அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக விடையளித்தார்.

தீன் கல்வியில் திளைத்து வளரும் தாசிம்பீவி கல்லூரி மாணவிகள்:

முஸ்லிம்கள் நிரம்பிய கடற்கரை ஊர் கீழக்கரை.  தாசீம் பீவி மகளிர் கல்லூரிக்குள் நுழைந்தால் இஸ்லாமிய மணமும் நாளைய சாதனைப்பெண்களான மாணவிகளும் நிரம்பியிருக்கும்  சூழல் நம்மை வரவேற்கும். ஒரு பக்கம் உலகக் கல்வி, இன்னொரு பக்கம் குர் ஆனை ஓதும் மாணவிகள். இஸ்லாமியப் பெண்களுக்கென்று தனியாக என்னென்ன வகுப்புக்கள் நடத்தி வருகிறீர்கள் என விசாரித்தோம். ”முபல்லிகா என்ற  3 வருட பட்ட படிப்பை கட்டாய கல்வியாக எல்லா இஸ்லாமியப் பெண்களுக்கும் எங்கள் வளாகத்தில் இலவசமாகக் கற்கவைக்கிறோம். குறிப்பாக விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு தீனியாத் வகுப்புப் பாடத்திட்டங்கள் அன்றாடம் விடுதியிலேயே நடத்தபடுகின்றன. தஜ்வீதும் உடன் ஓத பயிற்சி கொடுக்கிறோம். தர்ஜுமாவுடன் குரானைப் புரிந்து ஓத ஊக்கப்படுத்துகிறோம்” என்று தன் செயல்திட்டங்களையெல்லாம் சகோதரி ஒவ்வொன்றாய் எடுத்துச் சொல்ல வியப்பே மிஞ்சியது. சுப்ஹானல்லாஹ். 

ஐவேளையும் தவறாது கேட்கும் பாங்கு சத்தம் அதே கல்லூரி வளாகத்தின் மையப்பகுதியிலிருந்து ஒலித்தது.  மாணவிகள் வேகமாய்ப் புறப்படுகிறார்கள், ஜமாஅத்தாய் தொழுவதற்காக ஏற்பாடு செய்யபட்டிருந்தது. உள்ளே நுழைந்து பார்த்தால் இமாம் தொழுகை நடத்த ஆயத்தமானார். ஆச்சர்யம் மேலிட்டது. தொழுகையின் அவசியத்தையும் கட்டாயத்தையும்  உணர்ந்து கல்லூரி வளாகத்திலேயே தொழுகைக்கென்று  கட்டிடத்தை நிறுவியது மட்டுமல்லாமல்  இமாம் நியமித்து ஜமாஅத் தொழுகை நடத்த ஏற்பாடும் செய்து கொடுத்ததை பார்த்த மாத்திரத்தில் சகோதரி சுமையாவின் ஆளுமை வெளிப்பட்டது. இந்த வருடம் தான் நிறுவனர்  மர்ஹூம் அல் ஹாஜ் அப்துர் ரஹ்மான் அவர்களின் பெயரால் தனியாக பள்ளிவாசல் வளாகத்தில் நிறுவப்பட்டதாக சகோதரி விளக்கினார். அடடா பெண்கள் ஜமாஅத்தாய் தொழும் பாக்கியம் தமிழக முஸ்லிம் பெண்கள் எத்தனை பேருக்கு கிட்டும் ? ஒரு பெண்ணிற்குத் தானே இன்னொரு பெண்ணின் ஏக்கம் புரியும். தன் அதிகாரத்திற்கு உட்பட்ட கல்லூரியில் மாணவிகளின் மீதான தன் அணுகுமுறையை சகோதரி சுமையாவிடம் கேட்ட போது  ”ஒரு பெண் எப்படி வாழ வேண்டும்,  எவ்வாறான கல்வி பயில வேண்டும், எப்படிப்பட்ட அடையாளங்களுடன் சமுதாயத்தில் வலம் வர வேண்டும் என்பதை கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே உலக கல்வியோடு பெண்களின் எதிர்கால சமுதாய வாழ்வுக்கும் சேர்த்து பொறுப்பெடுத்துகொள்வது எங்கள் அணுகுமுறைகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது. கல்வி மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கநெறிகளை போதிப்பதில் மிகுந்த கவனத்தை செலுத்துகிறேன். ” என்றார். 

வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள மாணவிகளைத் தயார்படுத்துதல்:

இஸ்லாமியப் பெண்களிடத்தில் காணப்படும் தற்போதைய கல்வி வளர்ச்சி மற்றும் மார்க்க அறிவு குறித்துத் தனது பார்வையைச் சற்று ஆதங்கத்துடன் சகோதரி பகிர்ந்தார்.  ”பொதுவாக பெண்களின் நிலைகளை விசாரித்தால் வேதனையே மிஞ்சுகிறது. "கணவனுக்கு வேலை இல்லை, விட்டுட்டு இன்னொரு திருமணம் செய்துகொண்டார், 2 குழந்தைகளை விட்டு இறந்துவிட்டார், குடும்பத்தை வழிநடத்த சிரமமாய் உள்ளது" என ஒவ்வொரு பெண்ணிற்கு பின்னும் ஒரு கண்ணீர்க் கதை உள்ளது. முஸ்லிம் பெண்களோ கல்வியறிவு இல்லாததால் வெளிவரவும், பேசவுமே கூச்சபடுகிறார்கள். கல்வியின் அவசியத்தை உணராத பெண்கள் வாழ்வின் துயரங்களின் போது கல்வி இழப்பை எண்ணி வருந்துகிறார்கள். இவர்களில் பலரிடத்திலும் மார்க்க அறிவு என்பதும் குறைவாகவே இருக்கிறது.  இளம் பெண்களை பொருத்தவரை பெரும்பான்மையான  பெற்றோர்கள் தன் மகள் சிறந்த முறையில் பட்டப்படிப்பு பெற வேண்டுமென நினைக்கிறார்களேயொழிய மார்க்க அறிவை வளர்க்க தாய் தந்தை சிரத்தை எடுத்துக்கொள்வதில்லை. ஆகவே இதன் அவசியத்தை உணர்ந்து உலகக் கல்வியையும் மார்க்கக் கல்வியையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட பாடதிட்டங்கள் நடத்துகிறோம். கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல் அவர்களிடையே தன்னம்பிக்கை வளர்க்கவும் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். குறிப்பாக இஸ்லாமியப் பெண்களுக்கு இருவகைக் கல்வியும் எத்தி வைப்பதால் எங்கள் கல்லூரி  மாணவிகளின் பெற்றோர்களும்  திருப்தியடைகிறார்கள். எங்களை மேலும் சீரிய வழிகளில் பயணிக்க அல்லாஹ் பேரருள் புரிவானாக. எங்கள் கல்லூரி விட்டு, வெளி செல்கையில் முழுமையான பெண்ணாகவே இந்த சமுதாயத்திற்கு ஒப்படைக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறேன்” என முடித்தார்.   நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரோல்மாடல் இருக்கலாம். ஆனால் அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு சகோதரி சுமையா தான் ரோல் மாடல் . 

கல்லூரியைச் சாதனைகள் நோக்கிக் கொண்டு செல்லும் திறமைவாய்ந்த முதல்வர்

ஒரு பெண்ணாக , 27 வருடங்களாக கல்வித்துறையில் இருப்பதில் சந்தித்த சவால்களை எப்படி சமாளிக்கிறீர்கள் என வினவிய போது , “இறைவன் தந்த ஞானமும் அறிவும் எனக்கு  இந்த துறையில் மிகச்சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது. தொழுகை என்ற கவசத்தோடு வலம் வருவதால்  எத்தனை சவால்கள் வந்தாலும்  அவை எனக்கு சுமையாக இல்லை. தொழுகையைக் கொண்டும் , பொறுமையைக் கொண்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு கோருவேன்” என்ற அவரின் அமைதியான பதிலில் வெளிபட்ட ஈமான் நிச்சயம் துவண்டு இருக்கும் பெண்களுக்கு பெரிய  எனர்ஜி டானிக் தான். பெண்கள் நிர்வாகத்திறமையில் ஆண்களுக்கு இளைத்தவர்கள் அல்லர் என்பதற்கு உதாரணமாகச் சட்டென சகோதரி.சுமையாவை கை நீட்டலாம். அவரின் கடும் முயற்சியால் NAAC மற்றும் ISO தரச்சான்றிதழ் பெற்றுள்ளது அவரின் உயிர் மூச்சான தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி 2005-ல் பல்கலைக்கழக மான்யக் குழுவால் இக்கல்லூரிக்கு 'தன்னாட்சி' அந்தஸ்து * கிடைத்து அழகப்பா பல்கலைகழகத்திலேயே முதல் 'தன்னாட்சி ' பெற்ற தரம் வாய்ந்த கல்லூரியாக இன்னும் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

நம்மை இன்னும் ஆச்சர்யபடுத்தும் விஷயமும் காத்திருந்தது. கர்நாடகா மாநிலம் மைசூரில் பிறந்தவர் சகோதரி சுமையா. 1988ல் கிழக்கரையில் தாசீம் பீவி அப்துல் காதர் கல்லூரி நிறுவப்பட்டது. அந்த ஆண்டுதான் முதன் முறையாக கீழக்கரைக்கு , ரஜபுத்திர வமிசத்தை சேர்ந்த காயத்ரியாக  காலடி எடுத்து வைத்தார். ஆம்! சகோதரி காயத்ரி  மூன்றாண்டுகள் இஸ்லாத்தை ஆய்வு செய்து, இஸ்லாமியல் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு, சுமையாவாக மாறினார். அல்லாஹ் அவருக்கு ஹிதாயத் அருளியதுபோல் அவர் தாய் தந்தைக்கு இன்னும் வழங்கவில்லை. சகோதரியின் தந்தை மதுரையில் பிரபல ப்ராக்டிஸ் டாக்டராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  சகோதரியின் தாய்  தன் முதியவயதிலும் பிடிவாதமாக -  இன்னும் இந்துவாக - ஆனால் அதே முஸ்லிம் மகளின் வீட்டில் தான் வசிக்கிறார். அத்தனை வைராக்கியம் கொண்ட பெண்மணியின் மகள் எப்படி சுமையாவாக மாறினார்? எப்படிப்பட்ட எதிர்ப்புகளை எதிர்கொண்டார்?  இஸ்லாம், அவரது வாழ்க்கையை எந்த வகையில் மாற்றியது? மேலும் பல வியக்கவைக்கும் தகவல்கள் அடுத்த பதிவில் இன்ஷா அல்லாஹ்......

தீபிகாவின் MY CHOICE - ஆண்களுக்கான CHOICE 8

அதிரைநிருபர் பதிப்பகம் | April 11, 2015 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு..

பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்திய "பெண்ணியம்", "பெண்ணியவாதி" ஆகிய பதத்திற்கு உண்மையான அர்த்தத்தை வெளியுலகிற் கு படம் போட்டு காட்டிய "மை சாய்ஸ்" க்கு கோடான கோடி நன்றிகள்.

வாட் ஏ வீடியோ, இந்த நூற்றாண்டின் சிறந்த பெண்களுக்கான புரட்சி வீடியோ! (மை சாய்ஸ்).

பெண்ணியம் என்றால் என்வென்று யாராவது இனி கேட்டால் , இந்த கலாச்சார, பண்பாட்டு வீடியோவை காட்டினால் போதும். ஒரு நொடியில் புரிந்து கொள்வார்கள், பக்கம் பக்கமா விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.

இதை பார்த்துவிட்டு பெண்ணியம் பற்றி நான் புரிந்துக்கொண்டவிஷயம் என்னவென்றால்? பெண்கள் எல்லாமே அவர்களின்இஷ்டத்திற்கு தான் செய்வார்களாம், செய்யட்டும்...எவரும்கேள்வி கேட்க கூடாதாம். ஆகட்டும்....என்ன செய்தாலும் சரியே....ஆனால், தான் என்னென்னெல்லாம் செய்வேன் என தீபிகா சொன்ன விஷயங்களில் தான் பெண்ணியத்தின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது.

கவர்ச்சிகரமான ஒளி ஒலி கோர்வை, திமிர்த்தனமான பதில்கள் எளிதில் பெண் சமூகத்தை கவர்ந்திழுக்கும் தான். ஆனால் இதன் விளைவுகளையெல்லாம் தீபிகா படுகோன்கள் அறிய முற்படுவதில்லை. ஒரு காலத்தில்ஆண்களுக்கு அடங்கி கிடந்தனர் பெண்கள். கல்வியிலும் முன்னேற்றத்திலும் உரிமை மறுக்கப்பட்டு வந்த நிலையில் போராடி நம் உரிமையை நிலைநாட்டி நின்றோமே அது தான் உண்மையான பெண்ணியமே அன்றி ஆண்களை பார்த்து “எனக்கு அடங்கி கிட” என சொல்வதல்ல...இன்றைய தீபிகாபடுகோன்கள் அறிமுகப்படுத்தும் உலகம் எவ்வளவு ஆபத்தானது, குழப்பமானது ? சிந்திக்ககடமைப்பட்டுள்ளோம்.

இந்த வீடியோவில் வரும் வசனங்கள் சிலவற்றை பார்ப்போம்.

"நான் திருமணம் செய்வேன் அல்லது செய்யாமலும் இருப்பேன்" -என்னோட தேர்வு. (my Choice)

இப்படி சொல்லிவிட்டு அடுத்ததாக,

"திருமணத்திற்கு முன்பு உறவு வைத்து கொள்வேன், திருமணம் முடிந்தபிறகுதிருமண உறவில் இருந்துக்கொண்டே வேறு ஆணுடன் தொடர்பில் இருப்பேன் அல்லது உறவே வைத்துக்கொள்ளாமலும் இருப்பேன்" - என்னோட தேர்வு (my choice).

இதற்கு திருமணம் செய்யாமலே இருந்துவிடலாம், பாவம் அந்த ஆணாவது மானத்தோடு வாழ்வான் இல்லையா? அப்பட்டமான விபச்சாரத்திற்கு உட்படுத்துதல் தான் இவர்கள் சொல்லும் பெண்ணியமா? நிச்சயம் இப்படியான பெண்ணியவாதிகளை திருமணம் செய்ய ஆண்களுக்கு மிகப்பெரும் மனதிடம் வேண்டும் தான். அழகான குருவிக் கூட்டை சிதைக்கும் முயற்சி அல்லவா? 

இதில் விஷத்தனமான ஒரு கருத்தை ஆழமாக பெண்கள் மனதில் பதிய வைக்கிறார்கள் . என்னவெனில், "Living Together" திருமணம் செய்யாமல் அன்னிய ஆண்களோடு வாழ்வது தவறில்லை ; கல்யாணத்திற்கு முன்பு குழந்தை பெற்றுக் கொள்வது தவறில்லை :கல்யாணத்திற்கு முன்பு உறவு வைத்துக் கொள்வது தவறில்லை.

இதுதான் பெண்ணுரிமை, இது தான் இந்த பெண்ணியவாதிகள் வைக்கும் பெண்ணுரிமை புரட்சி.

திருமணம் பற்றி புரட்சிகரமாக சொல்லிவிட்டு அடுத்து சொல்கிறார்,

"நான் தற்காலிகமாகவிரும்புவேன் அல்லது காமத்திற்காக நிரந்தரமாகவும் விரும்புவேன்" - என்னுடைய தேர்வு (மை சாய்ஸ்).

"ஆண்களையோ, பெண்களையோ அல்லது இருவரையுமோ விரும்புவேன்" - என்னோட தேர்வு (மை சாய்ஸ்).

ஒரு ஆணும் இந்த மனநிலை கொண்டுஒரு பெண்ணை எப்போது வேண்டுமென்றாலும் காதலிப்பதற்கோ கை விடுவதற்கோ எனக்கு உரிமை உண்டு என சொன்னால் ஏற்றுக்கொள்வோமா?காமத்திற்காக, இச்சைக்காக நிரந்தரமாய் விரும்புவேன் என இதே வார்த்தையை ஆண்கள் சொன்னாலும் இந்த பெண்ணியவாதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதானே தர்மம் ? பெண்களைபெண்களே இழிவுபடுத்த போதுமானவர்கள். அடிமைப்பட்டு கிடந்த காலத்திலும் கூட , இன்றைய காலம் வரை பெண்கள் மீது இயல்பாகவே பெரும்பான்மையினருக்கு நன்மதிப்பு உண்டு. தயவு செய்துகெடுத்து விடாதீர்கள்.தாம்பத்தியமும் குடும்ப அமைப்பும் ஆத்மார்த்தமானது. இச்சைக்காக என சொல்லி கேவலப்படுத்தாதீர்கள்.

அடுத்ததாகஆண்களை நோக்கி சொல்கிறார், 

“விடியற்காலை 4 மணிக்கு நான் வீட்டிற்கு வந்தால்வருத்தப்படாதே, மாலை 6 மணிக்கு வந்தால் நல்லவள் என்றும் நம்பி முட்டாள் ஆகிவிடாதே. என்னுடைய காதல் உனக்காக அல்ல, என்னுடைய தேர்வு ஒரு புதையல் மாதிரி.நெற்றியிலிருக்கும் குங்குமம், விரலில் போடும் மோதிரம், என் பெயருக்கு பின்னால் உன் பெயர் அனைத்தும் அணிகலன் போலவேதான். எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்வேன் ”

“உன்னுடைய குழந்தையை நான் வைத்து இருப்பது என்னுடைய தேர்வு, 700 கோடி பேரில் உன்னை ஒருவனாய் தேர்வு செய்வதும் என்னுடைய தேர்வு.

“உன்னுடையகுழந்தையை நான் வைத்து இருப்பதும் இருக்காததும் என்னுடையதேர்வு”,

"ஞாபகம் இருக்கட்டும், நான் உன்னை தேர்ந்தெடுத்துள்ளேன், நீ ஒன்றும் எனக்கு சலுகை கொடுக்கவில்லை".

இது குடும்ப அமைப்பை சீரழிக்கும் விசயமல்லவா?இப்போது புரிகிறதா? இவர்கள் அறிமுகபடுத்தும் உலகம்?இதுவரை நீங்கள் படித்தவற்றையெல்லாம் கொஞ்சமாகசிந்தித்து பாருங்கள். இதுதான்பெண்ணியமா? பெண்ணுரிமையா? பெண்கள்,தான் விரும்பியவற்றை செய்யும் முழு உரிமையும் பெறவேண்டும் என்பதில் மாற்று கருத்து ஏதுமில்லை.ஆண்களுக்கு நிகராக சமூகத்தில் உயர்ந்திருப்பதும், வேலை,அரசியல், சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை எக்ஸட்ரா எக்ஸட்ரா முன்னேறுவதும் போற்றத்தக்க விஷயமே. ஆனால் விரும்பியவை எவை? செய்ய போகின்ற செயல் எது? இது தான் இங்கு மில்லியன் டாலர் கேள்வி?ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்திலும் சாதிக்க வேண்டும் என்று பெண்ணியம் பேசிவிட்டு, ஆண்கள் கூட நேரடியாக செய்ய துணியாத, செய்ய நினைக்காத காரியத்தை அல்லவா தான் செய்வேன் என காட்டுகிறார்கள்.

மேலே சொன்ன செயல்களுக்காக தான்பெண்களுக்கு உரிமை வேண்டுமா?

மேலே சொன்ன செயல்களுக்காக தான்பெண்களுக்கு சுதந்திரம் வேண்டுமா ?

எனில் இதில் நஷ்டவாளி இவர்களே தான் ! சிந்தித்து பாருங்கள்... உண்மை விளங்கும்.

இன்று நடு இரவில் கிளப்புக்கு சென்று வருவது ஒரு பெண்ணின் உரிமை என்றால் அவளை கற்பழிப்பது ஒரு ஆணின் உரிமை என்று பேசியமுகேஷ் சிங் போன்ற ஆண்களுக்கு உங்களின் "மை சாய்ஸ்" ஒரு பெஸ்ட் சாய்ஸ்.. ஆம்!!! உங்களுக்கு உங்கள் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பது உங்கள் விருப்பம் என்றால் அதே போல் ஆண்களுக்கும் அவர்கள் விருப்பப்படி நடந்துக்கொள்வது அவர்கள் விருப்பம் தானே!!! அவ்வாறு ஒரு ஆண் விருப்பபட்டு உங்களை அழைக்கும் போது உங்களுக்கு விருப்பமே இல்லையென்றாலும் அவனது விருப்பத்திற்கு கட்டுப்படுவது "ஹிஸ் சாய்ஸ்" அது உங்களின் "மை சாயிஸ்-லிருந்து பிறந்ததே".. உங்கள் புண்ணியத்தில்உருவாகட்டும் முகேஷ்கள் !

பெண்களை காமவெறிகொண்டு பார்க்கும் இழிவான கடைந்தெடுத்த சில இழிபிறவி ஆண்களுக்கு எதிரான மனநிலையை கொண்டிருப்பது தவறல்ல. ஒட்டுமொத்த ஆண்களையும்கை நீட்டுவது கவர்ச்சிக்காக மட்டுமே.இன்றைய தீபிகாக்கள் முன் வைக்கும் பெண்ணியவாதிகளின் உலகில்அநாதையாக விடபட்டது குழந்தைகளின் நிலை தான். பாவம்பெண்ணியத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள்.இரு போட்டியாளர்களுக்கு மத்தியிலுள்ள இந்த குழந்தை வர்க்கத்துக்கு இவர்கள் முன்வைக்கும் தீர்வு என்ன ?

இவர்கள் காட்டும் உலகில் ஆண்களுக்கு மறைமுகமாக லாபம் கொடுப்பதை இவர்கள் அறிவார்களா? உதாரணத்திற்கு தீபிகா ரன்பிரை காதலித்தார், அதன் பின் சித்தார்த் மல்லையாவைகாதலித்தார். இது தீபிகாவின் சாய்ஸ் தான். இதில் யாருக்கு லாபம் ??? ஹாஹாஹா தன் கற்பு உறிஞ்சப்படுவதைகூட சிந்திக்க முடியாத அளவுக்கு கார்ப்பரேட் இயக்கும் பெண்ணியவாதிகளாக இவர்கள் மாறிவருவதை நினைத்து நிச்சயம் பரிதாபமே மிஞ்சுகிறது. எத்தனை ஆண்களுடன் திருமணத்துக்கு முன் வாழ்ந்தாலும், திருமணத்திற்கு பின் வாழ்ந்தாலும் லாபம் என்னவோஆண்களுக்கு தான். நிச்சயம் இத்தகைய ஆண்களுக்கு உங்கள் வாக்குமூலம் உற்சாகத்தை விதைக்கவே செய்யும். உரிமை என்பது உடையில் மட்டுமே என நினைத்தவர்கள் கொஞ்சம் முன்னேறி கற்பு பகிர்தலில் வந்து நிற்கிறார்கள். அந்தோ பரிதாபம்! அனைத்தும் குறுகிய வட்டம். தீர்வில்லாத திட்டம்.

பெண்ணியவாதிகள் எழுப்பும் அவர்களின் சாய்ஸ்கள் எல்லாம்,ஆண்களாலும் சொல்ல முடியும் என்பதே நிதர்சனம். இருவரும் இவ்வாறு முரண்டு பிடிப்பது ஒரு வாகனத்திற்கு இரு ஓட்டுநர்கள் இரு பக்கமும் இயக்கஅடம்பிடிப்பது போன்றது.

பெண்களை போகப் பொருளாகஆண்கள்காட்டுகின்றனர் எனகூப்பாடு போட்டுவிட்டு , இந்த வீடியோவில் பெண்களை மிக கேவலமாக காண்பித்து இருக்கின்றார்களே?? ஓஹ், இதுதான் பெண்ணியமா?பெண் தான் இதை செய்ய வேண்டும், ஆண்கள் செய்ய கூடாது. காரணம், இது என்னுடைய தேர்வு (மை சாய்ஸ்). நான் இதை செய்தால் பெண்ணுரிமை, ஆண் இதை செய்தால் ஆணாதிக்கம் - இவர்களின் இலக்கணம் நகைப்புக்குரியது.பெண்ணியம் பெண்ணுரிமை குறித்து தெளிவான சிந்தனை பெண்களிடத்திலேயே இல்லை என்பது தான் இந்த குறும்படம் காட்டும் உண்மை.ஆடையை அவிழ்த்தலும்இவர்களின் விருப்பமெனில் லாபம் என்னவோ விருந்தாக போகும் ஆணின் கண்களுக்கு தான்.
  • ன்னால் முறைதவறி என்னை பயன்படுத்த முடியாது என்பது பெண்ணுரிமையா ? அல்லது கற்பை பகிர்வது பெண்ணுரிமையா ?
  • ன் அங்கங்களை உன்னால் பார்க்க முடியாது என்பது பெண்ணுரிமையா? அல்லது அரைகுறையாடையுடன் வலம் வருதல் பெண்ணுரிமையா?
  • ன்னை பிடிக்கவில்லை என்றால் எனக்கு பிடிக்கவில்லை என்றால்விவாகரத்து வாங்கி தகுதியான நபருடன் திருமணம் செய்வேன் என்பது பெண்ணுரிமையா? கணவனை தண்டிக்க பல ஆண்களுடன் என்னை பகிர்வேன் என்பது பெண்ணுரிமையா?
  • ன் வயிற்றில் உருவாகிய கருவை பாதுகாப்பேன் என்பது மனிதாபிமானமா? அல்லது எப்படிவேண்டுமென்றாலும் அதை பயன்படுத்துவேன் என்பது பெண்ணுரிமையா?

சமூகம் என்பது ஆணாலும் பெண்ணாலும் சரிசமமாய் கட்டெழுப்பப்படுவது தான். ஒருவரை ஒருவர் புறக்கணித்து செயல்படுவது இயற்கைக்கு எதிரானது. ஆண் இல்லாமல் பெண்ணால் வாழ முடியாது என ஆணின் திமிர்தனமான பேச்சும் உண்மை தான். அதே சமயம் பெண் இல்லாத உலகம் ஆண்களுக்கு நரகமானது என்பதும் உண்மைதான். ஒருவரை விடுத்து இன்னொருவரால் சாதிக்க முடியாது என்பதே உண்மை. பெண்களை இழிவாக நடத்தும் ஆணாதிக்கம் ஒழியட்டும்.ஆபத்தை பரிந்துரைக்கும் பெண்ணியமும் அழியட்டும். சமூகத்தை நன்முறையில் செதுக்கும் மனிதம் மலரட்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லையை அழகாக வகுத்து கொடுத்து படைத்து இருக்கிறான் இறைவன். அவனுக்கு தெரியும் எது யாருக்கு பெஸ்ட் சாய்ஸ், வொர்ஸ்ட் சாய்ஸ்என்று . மை சாய்ஸ் என்றுசொல்லிக்கொண்டுஇதுபோல் தான்தோன்றித்தனமாக,அறிவுக்கு ஒவ்வாத வாழ்வைவாழ்வதை விடுத்து , இறைவன் வகுத்து கொடுத்த பெஸ்ட் சாய்ஸ்-ல் பண்பாட்டோடு பாதுகாப்பாக வாழ முற்படுவோம். இதுதான் பாதுகாப்பான , நாகரிகமான, குழப்பமற்ற கேடயமாக இருக்கும். இதை தவிர பெரியஉரிமையை எவராலும் பெண்களுக்கு வழங்கிவிட முடியாது.புரிந்தவர்கள் புத்திசாலிகள்... புரியாதவர்கள் ஏமாந்தவர்கள்! pity on you Feminist

உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்

ஏன் ஹிஜாப் ? - பரிசுப் போட்டி...! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | February 02, 2015 | , , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறோம்...!

ஏக இறைவனின் அன்பும் அருளும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக ஆமீன்...

பிப்ரவரி 1-   உலக ஹிஜாப் தினத்தை முன்னிட்டு வலையுக அன்பர்களுக்காக இஸ்லாமிய பெண்மணி நடத்தும் இந்த வருடத்தின் முதல் போட்டியை இங்கு அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்... !!

உங்கள் அறிவுக்கும் ஹிஜாப்பிற்கும் சம்மந்தமே இல்லையே என்று நிருபர் கேட்ட கேள்விக்கு நோபல் பரிசு வென்ற இஸ்லாமிய பெண்மணியின் பதிலுக்கும் நம் போட்டிக்கும் தொடர்புண்டு என்றால் மிகையாகாது.

உடலை மறைத்திருக்கும் பெண்கள் அறிவையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்ற பிம்பம்  இன்று பலர் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்டது. ஹிஜாப் பேணும் சகோதரிகள் ஒவ்வொருவரும் ஹிஜாப் குறித்தான கேள்விகளை கட்டாயம் எதிர்கொண்டிருப்பார்கள். அவர்களின் அனுபவங்களை பகிரவும், தங்கள் வீட்டு பெண்கள் எதிர்கொண்ட  கேள்விகளுக்கு ஆண்களின் பதில்களை பகிரவும் ஓர் அறிய வாய்ப்பு.

போட்டிக்கான  கேள்விகள் மற்றும் பரிசுகள் விபரம் கீழ்க்காணும் படத்தில்:-


போட்டியின் விதி முறைகள்:-

உங்கள் பதில்கள் 20 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்..

நீங்கள்  எழுதும் படைப்பு இதற்கு முன் வேறு எந்த தளத்திலும் பிரசுரிக்கப்பட்டு இருக்கக்கூடாது. காப்பி பேஸ்ட்டாகவோ யாரோ வேறொருவரின் பதில்களாகவோ இருக்கக்கூடாது. கட்டாயம் உங்கள் சொந்த பதிலை மட்டுமே எழுதி அனுப்புங்கள்.

உங்கள் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி: admin@islamiyapenmani.com

உங்கள் ஆக்கங்கள் எங்களுக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் : பிப்ரவரி 15-02-2015 இந்திய நேரம் இரவு 11.59க்குள்

ஜனவரி 31-2015 என்ற போட்டியின் இறுதி தேதி வலையுக நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிப்ரவரி 15-2015 வரை போட்டியின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களின் விருப்பமே எங்கள் விருப்பம்.

நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

அனைவரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பரிசினை வெல்லுங்கள்.

கவனிக்க: ஹிஜாப் என்பது நாகரீகமாய், ஒழுக்கமாய், இறுக்கமற்றதாக, முகம், கை மணிகட்டு, கால்பாதம் தவிர்த்து உடல் அங்கங்களை  வெளிகாட்டாத எந்த உடையையும் குறிக்கும்.

நன்றி : http://www.islamiyapenmani.com/2015/01/blog-post_16.html

பரிந்துரை : நட்புடன் ஜமால்