Showing posts with label ஆமினா முஹம்மத். Show all posts
Showing posts with label ஆமினா முஹம்மத். Show all posts

நடிகையாயிருந்து... தலைவியாகி ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | February 11, 2017 | , ,

ம்முவுக்கும் எவிடாவுக்கும் நிறையவே தொடர்பு இருந்தது.... 

ஆரம்ப கால அவமானங்களிலும் சரி, சமகாலத்தின் விமர்சனங்களிலும் சரி, இறந்த பின் கொண்டாடப்பட்டதாகினும் சரி... எல்லாவற்றிலும் பத்தில் ஒன்பது பொருத்தம் இருந்தது. மிச்சம் ஒரு பொருத்தத்தில் தான் இருவரும் வித்தியாசப்பட்டனர்!

அம்முவின் அம்மா எப்படி  இரண்டாம் மனைவியோ அதுபோலவே எவிடாவின் அம்மாவும் 2ம் மனைவி!  வசதியாக இருந்த குடும்பம் தந்தையின் மறைவுக்கு பின் எப்படி திக்கு தெரியாத திசைக்கு பயணப்பட்டுக்கொண்டு சென்றதோ விதி அது போலவே அம்மு எவிடா வாழ்க்கையிலும் விளையாடி தீர்த்தது ! ஆனாலும் அவர்களே எதிர்பார்த்திருக்காத பல திருப்பங்களை தந்தது . இருவரும் நடிப்புத் துறைக்கு வந்ததும் பாதி திட்டமிட்ட நிகழ்வுகள் தான். சந்தர்ப்பங்கள் கை கூடின... அரசியலின் பிரவேசமும் அப்படி தான்! நாடே இவர்களின் பக்கம் பார்வையை செலுத்தியது.

மக்கள் ஓர் நடிகையை தலைவியாக்கி ஆட்சி அதிகாரம் கொடுத்தது "அம்மா" என வாயாற அழைத்து மகிழ்ந்தது இந்தியாவில் மட்டும் நிகழ்ந்த அத்திபூத்த சம்பவமல்ல... அர்ஜென்டினா மக்களாலும் ஓர் நடிகை  'நாட்டின் தாய்' என்னும்  உயர்ந்த அந்தஸ்து கொடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டார். எவிடா என செல்லமாக அழைக்கப்பட்டவரான இவா பெரோன்... அம்மு என செல்லமாக அழைக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கும் தான் எத்தனை விஷயங்களில் ஒத்து போகின்றன ?

இனி, இவா - ஜெயலலிதா என்றே அழைத்துக்கொள்வோம்.

ஜெ பற்றி நமக்கு நன்றாய் தெரியும். இவாவின் வாழ்க்கையும் கிட்டதட்ட அதே போல் அமைந்ததுதான் பெரும் ஆச்சர்யம். இவா வின் அம்மா இரண்டாம் மனைவி ஆனதால் தனக்கான உரிமைகளை இழந்து நின்றார். இரண்டாம் தாரத்தின் மனைவிக்கு பிறந்த குழந்தைகளும் சூழலின் புயலில் வெவ்வேறு திசைக்கு அழைக்கழிக்கப்பட்டனர்.   

அழகு, திறமை என அனைத்தும் ஒருங்கே பெற்ற ஜெயலலிதாவிற்கு அம்மா நடிகை என்ற  அடையாளத்தால் வாய்ப்புகள் தேடி வந்துகொண்டே இருந்தன.  நடிகையாகவேண்டும் என தன் முகத்தை ப்லாஸ்டிக் சர்ஜரி செய்து அழகாக்க முயன்ற ஈவா  ,   ஊசலாடிய உயிருக்கு உதவ தன் பணத்தையெல்லாம் கொடுத்து அடுத்தொன்னும் செய்ய இயலா நிலையில் வாய்ப்பு தேடினார். இருவருக்கும் அதிஷ்ட்டம் வந்தது. வாய்ப்பு கிடைத்து. வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தினார்கள். தனது துறையில் ஜொலித்தார்கள்.

தாய்க்கு பின் அதற்கு ஈடான, அவ்விடத்தை நிரப்பும் எந்த உறவும் ஜெயலலிதா பெற்றிருக்கவில்லை. அதனால் தானோ என்னவோ தனக்கு ஏற்பட்ட தனிமையின் நீட்சியாய் அவரின் அணுகுமுறைகள் அமைந்திருந்தன. ஈவாவோ தந்தைக்கும் தாக்கும் பிறகும் காதலால் ஆசீர்வதிக்கப்பட்டாள்.  தனிபட்ட வாழ்க்கையில் தோல்வி கண்ட நிலையில் ஜெ அரசியல் பிரவேசம் கண்டார்.  ஈவாவோ அரசியல்வாதியான பெரோனின் கரம்பிடித்தாள். பல விமர்சனங்கள் கண்டபோதும் அரசியலில் இரு ஆளுமைகளும் அடைந்தது உச்சமே! இருவரை தவிர்த்த அரசியல் பக்கங்கள் பூர்த்தியிட முடியாதவை. காலம் கடந்த பின்னும் அவர்கள் கொண்டு வந்த சட்டங்களும் பெற்று தந்த உரிமைகளும் அவர்களின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும் ! 

நடிகை என்பதையும் மீறி அவர்களிடமிருந்த ஆளுமைத்திறன் மட்டுமே அவர்களின் பெயரை வரலாற்றில் பொதிக்க காரணமாய் இருந்தது. ஒருவரின் புறத்தோற்றமும் தொழிலும் அவரைப்பற்றிய மதிப்பீடுகளுக்கு  முழுமை தந்துவிடாது. நிகழ்கால விமர்சனங்களும்  கூட எதிர்கால புகழை மட்டுப்படுத்திவிடாது ! 

ஆமினா முஹம்மத்

பொதுசிவில் - பெண்களின் கருத்தென்ன? 5

அதிரைநிருபர் பதிப்பகம் | October 29, 2016 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்...

பொதுச்சிவில் சட்டம் பற்றிய கருத்துக்கள் நாளுக்கு நாள் வலுத்துவந்த நிலையில், இஸ்லாமியப் பெண்கள் இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது எல்லோரின் கேள்வியாக இருந்தது. பொதுச்சிவில் குறித்து ஆண்கள் பேசுவதை விடவும் பெண்கள் சாதகபாதகங்களை அலசுவதே சிறப்பென கருதினோம். பொதுச்சிவில் குறித்த கேள்வியை இஸ்லாமியப்பெண்மணி.காம் சார்பில் மொழிந்து இஸ்லாமியப் பெண்களின் கருத்துக்களை திரட்டினோம். ஒவ்வொருவரின் பதிலிலும் தீர்க்கமான பார்வைகள் இருந்தன. அவை அனைத்துக்கூறுகளையும் அலசிய கருத்துக்களாக அமைந்தன. பொதுச்சிவில் எதிர்க்கும் அதே வேளையில் நடுநிலையுடன் இன்றைய குழப்பங்களின் காரணங்களையும் விவரித்துள்ளனர். அவற்றை கீழே தொகுத்துள்ளோம்.

ஜெ.பானு ஹாரூன் ( வடகரை) - நாவல் எழுத்தாளர் 

இஸ்லாமியர்கள் திட்டவட்டமாக எக்காலமும் ஏற்றுக்கொள்வது ஷரியாவை மட்டுமே ! ஆடு நனைகிறதே என்று அழுது ஊளையிடாமல் கீழ் மட்டத்திலிருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு கல்விக்கும் ,வேலை வாய்ப்பிற்குமான சட்டத்திருத்தங்கள் செய்யுங்கள் ; உணவுத்தேவைக்கான வழிகளை காட்டுங்கள்; தினம் இடைக்காலத்தடை போடுபவர்களுக்கு அடைக்கலமளிக்காதீர்கள்-இதுவே இஸ்லாமியர்களுக்கு அரசு செய்யும் பேருதவி

ஒருவருக்கொருவர் அநியாயம் செய்து இறைவனுக்கும் மாறு செய்து துணையை விட்டுவிட்டு ஓடி ஒளிவதை விட, உடனிருந்துகொண்டே பிடிக்காத இணையை கொடுமை படுத்தி நச்சு உணர்வுடன் நெறுக்கிப்பிடித்து வாழ்ந்துகொண்டிருப்பதை விட இஸ்லாமிய சட்டப்படி செய்து கொள்ளப்படும் ''தலாக் '' -- க்கில் எவ்வித குறையுமில்லை.

மனநோய் , தாம்பத்யத்தில் ஒத்துழையாமை , குடும்பத்தில் நெருக்கமின்மை ,கடமைகளை புறக்கணித்தல் ,துணைக்கு மாறு செய்தல் ,சொத்துக்களை அபகரித்தல் ,குழந்தைகளை பிரித்துவைத்தல் போன்ற பல காரணங்கள் ! சிலவை வெளியே சொல்லாமல் பெண்களின் நலன் கருதி மறைக்கப்பட்டும் விடும் . தலாக்கினால் ஆண்களின் நடைமுறை வாழ்க்கையும் , பொது வாழ்க்கையும் பாதிப்பிற்குள்ளாகிறது . மனைவியை தவிர வேறு எந்த பெண் உறவுகளும் ஒரு ஆண்மகனுக்கு நெருக்கமான பணிவிடைகள் செய்ய இஸ்லாத்தில் அனுமதியில்லை . அதனால் இன்னொரு திருமண வாழ்க்கையின் தேவையும் ஏற்படுகிறது.

வெறுமனே கேட்பவருக்கெல்லாம் ''தலாக் ''-கை அனுமதித்து விடுவதில்லை . சம்பந்தப்பட்டவர்களின் உண்மையான பிரச்னைக்குரிய காரணங்கள் ,பெண்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகள் , குழந்தைகள் இருப்பின் அவர்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகள் என்று அலசி ஆராய்ந்த பின்னரே வேறு வழியில்லாத நிலையில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது . தம்பதியரிடையே பிரச்சனை நிகழ்ந்தால் சமாதானம் செய்துவைக்க மற்றவர்களை இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது, இணக்கம் ஏற்பட வேண்டி பொய் சொல்லவும் இச்சமயத்தில் அனுமதி அளிக்கிறது. இத்தகு கட்டங்களைத் தாண்டியே பயனற்ற நிலையில் தலாக் கொடுக்கப்பட , இஸ்லாத்தை புரியாதவர்கள் தலாக் என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுகின்றனர். 

ஹுசைனம்மா (அபுதாபி) - எழுத்தாளர், இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் : 

பொது சிவில் சட்டம் எதிர்க்கப் படவேண்டியதே. அடிமை இந்தியாவில், தம்மை எதிர்ப்பதில் முஸ்லிம்களே முன்னணியில் இருந்தபோதும், ஷரிஆ சட்டத்திற்குத் தடையில்லை. சுதந்திர இந்தியாதான் அந்தச் சுதந்திரத்தை மறுக்கிறது.

சிவில் சட்டம் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் பொங்கிப் பாய்ந்து எழும் இஸ்லாமிய சமூகம், சலசலப்பு அடங்கியதும் மீண்டும் தனது கூண்டுக்குள் பதுங்கி விடுகிறது. சிவில் சட்டத்தைவிட, நம் இஸ்லாமியச் சட்டம் சிறப்பானது என்பதை நிரூபிக்குமளவு நம் சமூகத்தின் நிலை உள்ளதா என்ற பரிசீலனையோ, உரிய நடவடிக்கைகளோ எதுவும் எடுக்காமல் அதே நிலையைத் தொடர்ந்தால், நம் உரிமைப் போராட்டம் வீழ்வதற்கு நாமே காரணமாவதைத் தடுக்க முடியாது.

தலாக்கில் குர் ஆனியச் சட்டத்தை வலியுறுத்தும் நாம், திருமணத்தில் அதைப் பின்பற்றுவதில்லை.ஜீவனாம்சத்தில் ஷரீஆவைக் கடைபிடிக்கும் அதே நாம்தான், மஹர் கொடுப்பதில் கோட்டை விடுகிறோம்.

பலதார மணத்தை நபிவழியெனும் நாம், விவாகரத்தின்போது குழந்தைகளைப் பெண்களின்மீது சுமையாக்கி அவர்களின் மறுமணத்திற்கு தடைக்கல்லாக இருக்கிறோம்.

பர்தா அணிவதில் பெண்களுக்கு நரகத்தைச் சொல்லிப் பயமுறுத்தும் நாமேதான், நரகத்தின் அச்சமின்றி அவர்களின் சொத்துரிமையில் கைவைக்கின்றோம்.

இறைவனே வடிவமைத்துத் தந்த நம் சட்டம் எத்தனை சிறப்பானது? ஆனால், குர் ஆனில் இறைவன் முந்தைய “அஹ்லே கிதாப்” மக்களை எதற்காகச் சபித்தானே, அதே தவற்றை - சாதகமானவற்றைப் பின்பற்றுவதும், பாதகமானதை ஒதுக்குவதும், திரிப்பதும் ஆன அதே பாவத்தை அல்லவா நாம் செய்கிறோம் என்ற உண்மையை என்று உணர்வோம் நாம்?

அந்நாளில்தான் சிவில் சட்டத்தை நம்மீது திணிப்பதற்கு அஞ்சுவார்கள்!!

13:11. எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை;

மலிக்கா (முத்துப்பேட்டை) - கவிதாயினி, இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் :

பொதுசிவில் சட்டம்குறித்து காட்டுத்தீபோல் இஸ்லாமிய நெஞ்சங்களில் பற்றிக்கொண்டுள்ளது. இது ஜனநாயகநாடு/ இதில் பல்வேறு சமயத்தினர் வாழ்கிறார்கள்.  இந்தியச்சட்டத்திலும் அந்தந்த மதங்களுக்கு உண்டான தனிப்பட்ட சட்டங்களிலும் மதநம்பிகைகளிலும் அவரவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கும்போது இஸ்லாமிய சட்டத்தில் மட்டும் அந்த உரிமையை பறிக்க நினைப்பது எவ்விதத்தில் நியாயம்?

அதேசமயம், இஸ்லாத்தை பின்பற்றும் இஸ்லாமிய பெயர்தாங்கிகளாய் இஸ்லாமியவாதியென தன்னை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள்

சரிவர அதன் சட்டங்களை புரியாது அல்லது பின்பற்றத்தெரியாது சிலபல குழப்பங்களை செய்து  அதனால் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொள்வதை நிச்சயமாய் தவிர்க்க வேண்டும். தடுக்க வேண்டும் !  பாதிக்கப்பட்ட எவராக இருந்தாலும் ஆண்-பெண் பேதம் பார்த்து, அவர்களுக்கான நியாயம் கிடைக்க வழிசெய்யத்தவறும் ஒவ்வொருவரும் கண்டிக்கதக்கவரே!. 

ஷாபானு வழக்கைப்போல் மேலும் சிலர் தொடுத்த வழக்குகளுக்கு இஸ்லாம் ஒருபோதும் பொறுப்பேற்காது,  பொறுப்பற்று இதுபோன்ற அநீதிகளை கண்டும் காணாமலும் விட்ட அந்தந்த மாநில மற்றும் ஊர் ஜமாத்தார்கள் , சிலபல பெரிய அறிவாளிகள் பொடுபோக்கு நிலையே இதுபோன்ற பெண்களின் அநீதிகளுக்கு காரணமாக இருக்கும். அதனை உரியமுறையில் களையெடுத்து களையவேண்டுமே தவிர எங்களின் வாழ்வியல் பாடங்களான இஸ்லாமிய சட்டமே தவறானதென்ற குற்றச்சாட்டை எப்படி ஏற்கமுடியும்? ஆனால் அதனை சரிவர நடைமுறைக்குகொண்டுவராது செயல்படுத்தாதன் விளைவே விஷ்வரூபமாய் இன்று!

மேலும் எந்த சமயத்தில்தான் இல்லை இதுபோன்ற உட்பூசல்கள் ? இதைவிட பெண்கள் பலவாறு பாதிக்கப்பட்டு வழக்காடுமன்றங்களில் காலவரையற்று வாழ்க்கைகான தவத்தில் செய்வதறியாது மனம் நொந்துகிடப்போர் ஏராளம். பெண்களுக்கு பலபல கொடுமைகளும் கொடூரங்களும் அந்நியர்களால் அரங்கேறிக்கொண்டிருக்கும் இந்நாட்டில் அதைத்தடுக்கப்பதற்கான சட்டங்களை மிக கடுமையாக்குங்கள், பால்குடி தொடங்கி பருவம் தொட்டு வாலிபம் வயோதிகமென பெண்களின் மானமும் உயிரும் பறிபோவது நாளுக்கு நாளல்ல, நொடிக்குநொடி அரங்கேறிக்கொண்டிருப்பதை தடுக்க வகைசெய்யுங்கள் நாங்கள் உடன்படுகிறோம். மத உணர்வுகளில் தலையிட வேண்டாம் !

பெனாசீர் (தூத்துக்குடி) - இல்லத்தரசி : 

பொது சிவில் சட்டம் பெண்களின் பார்வையில் ஒரு சம உரிமையை தரும் சட்டம் என்று வைத்து கொள்வோம் ,ஆனால் இதனை பகுத்தறிவோடு நாம் சிந்தித்தால் இது இஸ்லாமிய கொள்கையினை பற்றி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட ஒன்று என்பது விளங்கும் . இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்பதாக எடுத்து சொல்ல தலாக் சட்டத்தை ஊக்குவிக்க கூடாது என்பதை மட்டுமே முதலில் கூறியவர்கள், பின்பு இஸ்லாமியர்களிடம் இருந்து பல கேள்விகள் வந்த பின்பு சுதாரித்து கொண்ட அவர்கள் 'இது பெண்களுக்கான சம உரிமை' என்று இப்போது கூறுகிறார்கள். இவர்களின் நோக்கம் இதிலே புரிந்துகொள்ள முடிகிறது. இஸ்லாமியர்களான நாம் இறைவன் நமக்கு திருகுர்ஆன் வழியாக கூறியவற்றையே நாம் பின்பற்றவேண்டும். ஈட்டி முனையில் நிறுத்திட்டபோதும் ஈமான் இழக்கமாட்டோம்.

சபிதா காதர் (அரக்கோணம்) - இல்லத்தரசி, இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் : 

பொது சிவில் சட்டம் பற்றி பல்வேறு அதிர்வலைகள் கிளம்பும் இவ்வேளையில்  அதை வேண்டாம் என்று பதிவு செய்பவளாக இருக்கின்றேன் இது ஒரு வகையில் ஒவ்வொருவரின் தனித்த அடையாளத்தை அழிக்க துடிக்கும் முயற்சியே  பன்முகத்தன்னைக்கு வைக்கப்படும் வேட்டு.

எங்களுக்கு அளிக்கப்பட்ட பிரத்தியேக உரிமையை விட்டு தர விரும்பவில்லை

சித்தி நிஹாரா (மலேசியா) - இல்லத்தரசி , இக்றா கல்வியியல் அமைப்பு நிர்வாகி : 

பெண்களின் கண்ணியம் சுயமரியாதை கட்டிக்காப்பதற்காகவே விவாகரத்துச் சட்டங்களை வரையறுத்து பெண்களுக்கு பல சலுகைகளையும் மறுமணத்திற்கான வழியையும் காட்டியுள்ள ஒரு மார்க்கத்தில் உடன்கட்டை ஏறுதலையும் தலையணையின்றி உறங்க வேண்டுமென்றும், மொட்டையடித்து அவளை நடைப்பிணமாக்கி அலங்கோலப்படுத்துவதையும் கொள்கையாய் வைத்திருந்த கூட்டம் முஸ்லிம் பெண்களை பற்றி பேசுவது வேடிக்கையானது! பொதுசிவில் சட்டம் முஸ்லிம்களின் மீது தொடுக்கும் நேரடிப்போர். ஒருவேளை அவர்கள் கொண்டு வந்தாலும் அது நம்மை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. முஸ்லிம் ஜமாஅத்கள் இதிலுள்ள நடைமுறை சிக்கல்களை களைவதற்கான வாய்ப்பாக இது அமையும் என நினைக்கிறேன்.

யாஸ்மின் (துபாய்) - இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர்

பொது சிவில் சட்டம் என்பது ஒருவரின் அந்தரங்கத்தில் அனுமதியின்றி மூக்கை நுழைப்பது எவ்வளவு அநாகரீகமோ அது போல் அநாகரீமானது. இன்னும் சொல்லப் போனால் அவரவர் மத உணர்வுகளில் கை வைப்பது உயிரை வைத்து உடலை மரத்து போகச் செய்வதற்கு சமம்.

இருக்கும் பொது சட்டங்களையே பாரபட்சமின்றி காட்டாத அரசும், அரசாங்கமும் தான் பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து அனைவரையும் சமமாக நடத்தப் போகிறதா?

ஆதிக்க வர்க்கத்தினருக்கு மட்டுமே இருக்கைகளும், பதவிகளும், நீதி என்றும், இருக்கும் அனைத்து தண்டனைகளும், அடக்குமுறைகளும், சிறைகளும் சிறுபான்மையினருக்கும், தலீத்துகளுக்கும் மட்டும் என்று கபட நாடகம் ஆடும் இந்திய தேசத்தில் பொது சிவில் சட்டத்தை வைத்து அனைவரும் சமம் என்பதை நிறுவப் போகிறோம் என்று சொல்வது இந்திய தேசியம் மூளைச்சாவு அடைந்து விட்டதற்கு சமம், “ஆப்பரேசன் சக்சஸ் ஆனா பேசன்ட் டைட்”

ஜபினத் (சென்னை) - கவிஞர், நாவல் எழுத்தாளர் , ஈவண்ட் ஆர்கனைசர் :

நாம் இஸ்லாமிய இந்தியர்களுக்கு மதமும் நாட்டுப்பற்றும் இரு கண்களைப் போன்றதாக கருதுகிறார்கள்/ ஒவ்வொரு இஸ்லாமியனும் எவ்வளவு தீவிரமாக மார்க்கத்தை நேசிக்கிறார்களோ அதே அளவில் தான் நாட்டையும் நேசிக்கிறார்கள். இறைவனின் வேதத்தை பின் பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல் வாழவும் செய்து, தான் வாழும் நாடு வகுக்கும் சட்டத்தை பேணியும் காத்து நடக்கிறார்கள்.

ஒரு இஸ்லாமியன் இஸ்லாமிய நாட்டில் வாழ்ந்து இறைவனின் சட்ட திட்டங்களை பேணுதல் என்பது அப்படி ஒன்றும் பெரிய காரியமன்று. ஆனால் மாறுபட்ட கொள்கை உடைய ஒரு நாட்டில் மார்க்கத்தையும் பேணி சட்டத்தையும் மதிப்பது என்பது அத்தனைச் சுலபமானதல்ல, அதைச் சால செய்வது என்பதில் தான் இந்திய இஸ்லாமியனின் நாட்டுப் பற்றும் மார்க்கப் பற்றும் தெளிய நீரோடைப் போல் தெரிய வருகிறது.

இஸ்லாமியன் என்ற காரணத்திற்காய் கொலை, கொள்ளை எந்த வழக்கிலிருந்தும் பாகுபாடில்லாமல் தான் இந்திய சட்டம் தன் தீர்ப்பை வழங்குகிறது. ஏன் ஹெல்மெட்டுக்காக தண்டிக்கப்படும் சிறிய அளவு குற்றமாயினும் எந்த பாகுபாடும் இல்லை. அப்படி இருக்கும் போது தன் மார்க்கத்திற்கே உரிய திருமணம், பர்தா போன்ற உளவியல்களுக்குள் இந்தியச் சட்டம் பாய நினைக்கும் பொழுது பொது சிவில் மீது இஸ்லாமியர்களுக்கு அதிருப்தி ஏற்படுவது இன்றியமையாததாகிவிடுகிறது.

நூற்றாண்டுகளாய் இருந்து வந்த மாட்டு இறைச்சி விசயத்தில் புதிதாக சட்டத்தை கொண்டு வந்து தன் இந்துத்துவ ஆதரவை மறைமுகமாக இந்திய அரசு நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் பொதுவான சட்டம் இஸ்லாமியர்களின் மீது மட்டும் உளவியல் ரீதியாக தன் கோரக்கரத்தை நீட்டுவதால் இதுகாலும் அமைதியாக இருந்த சிறுபான்மையினரின் கோபங்களை கிளறிப்பார்த்துள்ளது. உரிமைகள் பிடுங்கப்படும்போது போராட்டங்கள் எழுவது இயல்பே, எனவே இந்திய அரசாங்கம் இஸ்லாமியர்களின் உளவியல்களோடு விளையாடாமல் பொது சிவில் சட்டம் என்ற எண்ணத்தை கைவிடல் வேண்டும்.

ஒரு வீடாகினும், நாடாகினும் மார்க்கமோ, சட்டமோ இயல்பாகவே வகுத்த சட்டங்களில் மனிதர்கள் இடையில் புகுந்து பெண்களுக்குரிய உரிமைகளை தடுக்கும் பட்சத்தில் வெளியிலிருந்து அத்துமீறல்கள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது இஸ்லாமிய பெண்கள் தங்களுக்கு இயல்பாக வகுக்கப்பட்டுள்ள உரிமைகளை முழுவதுமாக உணர்வாகளாயின் அப்போது தான் இந்திய சட்டம் பொதுவாக பெண்கள் மீதாக எத்தகைய எதிர்ப்புகளை புகுத்தி வருகிறது என்பதை உணர்வார்கள்.

அதே சமயத்தில் இஸ்லாம் சொல்லும் சட்டம் வேறு இன்று நடைமுறைப் படுத்தப்படுவது வேறு. இன்றைய மார்க்க அமைப்புகளுள் ஒற்றுமை இல்லாமையும் இரட்டடிப்பு செய்யப்படும் பெண்களின் உரிமைகளும் ஆண்வர்க்கத்தின் சுய இலாபங்களையும், பதவி ஆசைகளையுமே எடுத்துரைக்கிறது. மார்க்கத்திற்கு முட்டுக்கட்டாக இருக்கும் இந்த ஆணாதிக்க அமைப்புகளிடமிருந்து வரலாற்றைக் கற்றுத் தேர்ந்த இஸ்லாமிய பெண்கள் தங்களையும் தங்கள் உரிமைகளையும் ஈமானின் பால் நின்று மீட்டெடுப்பர் என்று நம்புகின்றேன், எனது கரத்தையும் அதில் இணைக்கின்றேன். அத்தகைய ஈமானிய உணர்வுகளுக்கு உங்கள் பொதுச்சிவில் தேவையில்லை ! 

பர்வீன் அனஸ் (சென்னை) - Managing Director at BURAK India , Director (company) at Burak Lanka Private Limited. 

பொது சிவில் சட்டத்தை பற்றி விவாதிக்கும் முன் நாம் இந்தளவுக்கு பரபரப்பை உண்டாக்கிய காலகட்டத்தை பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும் . நடுவண் அரசு ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சரியான இடைவெளிகளுடனும்- பல பிரச்சனைகளை- முக்கியமாக மதம் ஜாதி சார்ந்த பிரச்சனைகளை பொது சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிறுபான்மையினரை குற்றப்படுத்தி 'இந்து சமுதாய மக்களின் பாதுகாவலன் தாங்கள்தான்' என்பதை மிகைப்படுத்திக்காட்டவே ஒரே கொள்கையுடைய பிரச்சனைகளும் பிரிவினைகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

கர் வாப்சி,லவ் ஜிஹாத்,மாட்டிறைச்சி,ராமர் கோவில், கலபுர்கி டபோல்கர் மற்றும் பன்சாரே போன்றோர்களின் கொலை, ரோஹித் வெமுலாவின் தற்கொலை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் என தொடர்ச்சியாக சரியான கால இடைவெளியில் மக்களை சிந்திக்கவிடாமல் உணர்ச்சிகளை தூண்டும் அரசியலே இதுவரை பார்த்து வந்துள்ளது மத்திய அரசு.

மட்டுமல்லாது நலத்திட்டங்கள் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஸ்வச் பாரத் ,பேட்டி பச்சாவோ,டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் மண்ணைக்கவ்வியதாலும் ஜாதி ஓட்டு முறையாலும் பீஹாரில் தோல்வி அடைந்ததால் மத்திய அரசு உத்திரப்பிரதேசம்,உத்ராகண்ட் மற்றும் மணிப்பூர் தேர்தலை தோல்வி இல்லாமல் எதிர்கொள்ள எடுத்த விசயம்தான் பொதுசிவில் சட்டம்.

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொதுசிவில் சட்டம் என்பது இயலாத காரியம். அனைத்து வித மத மக்களுக்கும் அந்த மதம் சார்ந்த திருமணம்,விவாகரத்து,சொத்துரிமை சட்டங்கள் உள்ளன. இவ்வாறிருக்க முஸ்லிம் சமூகத்தினரின் ஷரீஅ சட்டங்களில் கைவைப்பது என்பது மத்திய அரசின் கையாலாகாத கயவாளித்தனத்தை காட்டுகிறது. இஸ்லாமியர்கள் ஷரீஅ சட்டங்களை திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, சொத்துரிமைகளுக்கு பின்பற்றுவது மற்ற சமுதாய மக்களின் பாதுகாப்புக்கோ இறையான்மைக்கோ அச்சுறுத்தலாக இல்லாத போது ஏன் இஸ்லாமியர்களின் தலாக் சட்டங்களை மட்டும் குறி வைக்க வேண்டும்?

நமது சமுதாயத்திலும் முத்தலாக் பற்றிய விழிப்புணர்வு இல்லாததும்,மணக்கொடை பற்றிய தெளிவான அறிவும் பின்பற்றுதலும் இல்லாதது பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. அல்லாஹ் இயற்றிய சட்டங்களை நாம் கடைபிடித்தாலே ஜீவனாம்சம் பற்றிய கேள்வி எழாது. பள்ளிவாயில்களும் ஜமாஅத்தும் சட்டங்களை ஒழுங்காக பின்பற்றாததால் இன்று நமது சட்ட உரிமைகளுக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மத்திய அரசு இதை தேர்தல் கால யுக்தியாகவும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றி மூடி மறைக்க எடுத்த ஆயுதமாக கொண்டாலும் , இந்த நேரத்தை பயன்படுத்தி நமது சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஜமாஅத்களும் சமுதாய தலைவர்களும் முன்வர வேண்டும்.

இந்த பிரச்சனையின் வீரியம் குறைந்ததும் ஓரணியில் நிற்கும் தலைவர்கள் பிரிந்து விடாமல் சமுதாய மக்களின் நலனுக்காக இணைந்து பயனிக்க வேண்டும். பள்ளிவாசல்களில் ஜும்ஆ தினத்தில் முஸ்லிம் பெர்ஸனல் போர்டுக்கு ஆதரவாக கையெழுத்துகளை அளிக்க இயக்கம் கடந்து அனனவரும் கையெழுத்திட்டது பெரிய மாற்றம். அந்த மாற்றம் கண்துடைப்பாக மாறிவிடாமல் முத்தலாக்கின் சட்டங்கள் குறித்த தெளிவை ஜீம்ஆ பயான்கள் மூலம் மக்களை சென்றடைய பள்ளிநிர்வாகமும் இமாம்களும் தலைவர்களும் முயற்சி எடுக்க வேண்டும். துண்டுப்பிரச்சாரங்கள், ஒருநாள் பயிலரங்கங்கள், புத்தகங்கள் ,ஆவணப்படங்கள் மூலமாகவும் இளைஞர்களிடையே எடுத்து செல்லலாம். அதே சமயத்தில் பிறமதத்தவர்களின் முத்தலாக் பற்றிய சந்தேகங்களையும் நாம் அழகிய முறையில் விளக்கம் குறித்து தெளிவாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒருமித்த கருத்துக்களோடு அல்லாஹ்வின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மாற்று சமூகத்தினரிடமும் இணக்கமாக வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன்.

ஆமினா முஹம்மத்
செயலாளர் - இக்றா பயிற்சி மையம்
நிறுவனர் - இக்றா ஆன்லைன் புக்‌ஷாப்

தர்காக்கள் தகர்ப்பதற்கா? - வரலாறுகள் வாழ்வதற்கா ? 9

அதிரைநிருபர் பதிப்பகம் | September 13, 2016 | , , ,

ஒரு காலத்தில் தர்காக்களை நேரடி வழிபாட்டுத்தளங்கள் ரேன்ச்க்கு ஆக்கிக்கொண்ட தருணங்கள் என் சிறுவயது காலங்களில் ஓரு பகுதியாக இருந்தது. அதிலிருந்து மீண்ட பின், அதன் முட்டாள்தனங்கள் பற்றி சிந்தித்து, அவைகளை கேலிப்பொருளாக பார்க்கும்படியான நிலைக்கும் மனதும் மாறுபட்டது.

இப்போழுதெல்லாம், "இந்த இடத்தில் எப்படி தர்கா வந்திருக்கும் ? இந்த இடத்தில் இருப்பவர் யார்" என வரலாறுகளை தேடச் அதே மனது சொல்கிறது! இப்போதைய நம் அறியாமைக்குப் பின்னால், வேரின் ஏதோ ஒரு நுனியில், நியாயங்கள் ஆழமாய் புதைந்திருக்கும் என சிந்திக்க வைக்கிறது.

இதோ நிகழ்கால உதாரணம் ! இப்போது அப்துல் கலாம் அடுத்த அவுலியாவாக தயாராக்கி விடப்பட்டிருக்கிறார். அப்துல்கலாம் துணை- என விளம்பர பலகைகள் பரவலாகிவருகின்றன.  நம் மூன்றாவது தலைமுறையில் "இவர் விஞ்ஞானி" என அடையாளப்படுத்துதல் குறைந்து "இவர் மகா மகான். ஞானப்பேரொளி, இவரை வழிபட்டால் அறிவு லிட்டர் லிட்டராக பெருகி ஆறாக ஓடும் " எனச் சொல்லும் போக்கு மிகைத்திருந்தாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

துரதிஷ்டமாக, தர்காகொள்கைகளை தூக்கி பிடிப்பவர்கள் பலரிடத்திலும் வரலாறுகளே இல்லை !  பலர் ஒப்பிப்பதெல்லாம்  கட்டுக்கதைகளோடு பின்னிப்பிணைந்த மிதமிஞ்சிய கற்பனைக் காவியங்களாகவே உள்ளது.

இதில் அடங்கியிருப்பவர் யார் என கேட்டால்- ஒருகிலோமீட்டர் நீளத்துக்கு பேரை சொல்வதற்கும், இந்த மரத்தில்  துணிகட்டினா குழந்தை பிறக்கும், இந்த மண்ண தண்ணில கலக்கி சாப்பிட்டா கஷ்ட்டம் நீங்கும்னு கூமுட்டை தனமான பதில்களைச் சொல்வதற்குமான ஆட்கள் தான்  நிர்வாகிகளாகவும் வேலையாட்களாகவும் தர்காக்களில் இருக்கிறார்கள்.

இவ்வாறு இருக்கையில் நமது பார்வைக்கு ஓரு தகவல்  கண்ணில் பட்டது. தென்பாண்டிய நாட்டிற்கு வந்த செய்யிது இபுறாஹீம், மொரோக்கோவில் பிறந்து இஸ்லாத்தை பரப்புவதற்காக இந்தியா வந்தார். பாண்டிய மன்னர் குலசேகரன் சார்பாக மற்றுமொரு பாண்டிய மன்னர் விக்கிரமனுடன் போரில் ஈடுபட்டு இப்போரின் விளைவாக அரசாட்சி சையித் இப்ராஹிம் கையில் வந்தது. ஏர்வாடியில்  அடக்கம் செய்யப்பட்டவரின் வரலாறு இது. தமிழ் நாட்டின் ஒரு பகுதியை அரசாண்ட முதல் முஸ்லிம் மன்னர் இவர்.

இன்னொறு தகவலும் அறிய நேர்ந்தது! 

கடற்பகுதி வழியே கேரளாவில் போர்த்துகீசியர்கள் இந்தியாவுக்குள் நுழைய, கப்பல்படை தளபதியாகிய குஞ்சாலிமரைக்காயர் அவர்கள் துரத்தினார்கள். பின்னர் தென் தமிழகத்துக்கு அந்த அந்நியப்படை வருகிறது. அப்போது நாகூரை ஆட்சி செய்துகொண்டிருந்தவர்  (இன்றைய அவுலியா ) ஷாஹூல் ஹமீது. தன் நண்பர் குஞ்சாலி மரைக்காயரின் உதவியுடன் 51 கப்பல்கள்-8000 வீரர்கள் கொண்டு போர்ச்சுக்கீசியர்களை விரட்டியுள்ளார்கள். 

சமகாலத்தில் வாழ்ந்த குஞ்சாலி மரைக்காயர் இந்திய தபால் துறையில் ஸ்டாம்பாகி விட்டார். போர்க்கப்பல் ஒன்றுக்கு இவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது... கேரளாவில் வரலாற்று திரைப்படம் ஒன்றும் (மம்முட்டியோ / மோகன்லாலோ..) எடுக்கப்பட்டுள்ளது. அவரின் இருப்பிடம் நினைவுச்சின்னமாய் பராமரிக்கப்பட்டு வருகிறது... அவர் பயன்படுத்திய வாள், கேடயம் இன்னும் பலவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பெரும் போர் வீரராக சரித்திரத்தில் மங்காத இடம் பெற்றார். 

நாம்? 

புனைவுக்கதைகளில் கட்டிடத்துக்கு வண்ணமிட்டு உண்மை வரலாறுகளை மண்ணோடு மக்கிடச் செய்துள்ளோம். மண்ணறையை கல்லறையாக்கி, பச்சை போர்வை போர்த்தி, கமகம சாம்பிராணி போட்டு, மனநிலை சரியில்லாதவர்களை உலாவவிட்டு, உண்டியல் வைத்து பூஜித்துக் கொண்டிருக்கிறோம். 

அவர்களின் உடல் மண்ணோடு மட்கி எலும்புகளும் கரைந்துவிட்டதுபோல், உண்மைகளும் ஜீவசமாதிகளாக்கப்பட்டுவிட்டது! மிகைபடுத்தப்பட்ட புனைவுக்கதைகளால் வரலாறுகளை கேலிக்கூத்தாக்கியது மட்டுமே இப்போதைய தர்கா வழிபாடுகளின் மகத்தான சாதனை ! நம் சரித்திரங்கள் நமக்கே தெரிந்திடாத பொழுது, இருட்டடிப்பு செய்கிறார்கள் என வரலாற்றாசிரியர்களை மட்டும் குறை கூறிக்கொண்டிருப்பது வேதனை !

வழிபாட்டை வழக்கொழித்து வரலாற்றை வாழவைக்கும் சமூகம் தலையெடுக்கட்டும்.. 'அரபுநாட்டு அந்நியனே, என்ன செய்தாய்' என கேட்போர் முன் கூனிகுறுகுவதை விடுத்து, வஞ்சிப்போரையே தலைக்குனியச் செய்திடும் தகவல்களை விரல்நுனியில் அடக்குவோம் ! 

ஆமினா முஹம்மத்

எப்படி அவர்களை மன்னிப்பேன் ? 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 23, 2016 | , , ,

பில்கிஸை நீங்கள் மறந்திருக்கக் கூடும்! பலருக்கு இப்பதிவே முதல் அறிமுகமாகவும் இருக்கலாம்...  மறந்தவர்களுக்கு நினைவூட்டலாகவும், புதியவர்களுக்கு சுருக்கமான அறிமுகத்துடனும் கட்டுரையை துவக்கலாம்..

"ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். ஒருவரால் அல்ல.. இருவரால் அல்ல... முன்னதாக பில்கிஸ் கையில் இருந்த மூன்று வயது குழந்தையும் தூக்கி எறிந்து பாறாங்கல்லில் மோத வைத்து சாகடித்தனர்"

கற்பனை செய்து பாருங்கள்! கொடூரமாய் இருக்கிறதல்லவா? நல்லவேளை நமக்கேதும் இப்படியொன்று நிகழவில்லை என்ற   பெருமூச்சு வெளிப்படுகிறதா?  நம்மைப்போல் ஓர் பாதுகாப்பான சூழலில் , அழகான வாழ்க்கையில் , இயற்கையின் வனப்பைபோலவே செழிப்பமாய் இருந்த குடும்பம் தான் பில்கிஸ் உடையது! கோரச் சம்பவம் நடக்கும் வரை அவரை யாருக்கும் தெரியாது... அவர் தனக்கான நியாயத்தை கேட்டு வாதாடி நிற்கவில்லை எனில்  14க்கும் மேற்பட்ட குடும்ப உறவினர்கள் மண்ணோடு புதைக்கப்பட்டது போல் நமக்கும் தடயம் கிடைக்காது போயிருக்கும் !


பில்கிஸ்க்கு நேர்ந்த அவலம் எதனால்? 

அவர் முஸ்லிம் பெண்மணி என்ற ஒரே காரணத்தினால் !!! ஆம்... அவ்வடையாளத்தை தவிர்த்து அவரை பாலியல் வன்முறைக்குள்ளாக எந்த முகாந்திரமும் அந்த நாசக்காரர்களுக்கு தெரிந்திருக்கவில்லை! 

சினிமாக்களில் மட்டுமே பார்த்திருக்க முடிந்த கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை ஒரே நாளில் சந்தித்த , 'வாழும் துயரம்' அவர்.

பிப்ரவரி 27, 2002ல் கோத்ரா ரயிலில் பற்றிய தீ கலவரமாக உருவெடுத்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை காவு வாங்கியது. தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்வதற்கு பலர் உயிரோடு இல்லை, பலர் உயிருக்கு பயந்து சொல்லத்தயாராய் இல்லை! ஆனால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காய் படிப்பறிவற்ற ஓர் இளம்பெண் துணிந்து வந்தார்.  

அதனை அவர் சொல்லக் கேட்போம்... 

"என் கணவர் வேலையில்லாதவராக அப்போது இருந்தாலும் , வசதிக்கொண்ட வீட்டில் திருமண வாழ்க்கை சுகமாக சென்றுக்கொண்டிருந்தது. எங்களுக்கு 3 வயதில் ஓர் மகள் இருந்தாள். பெயர் சாலிஹா. நான் 5 மாத குழந்தையை வயிற்றில் சுமந்தவளாக இருந்தேன்.

பிப்ரவரி 28! சரியாக கோத்ரா சம்பவத்திற்கு அடுத்த நாள் எங்கள் கிராமத்தின் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்துத்துவாவினரால் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது கலவரமாக மாறிப்போக பல முஸ்லிம் வீடுகள் தீக்கிரையாகின. நாங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்ல நாடிய போது ஊர்த்தலைவர் தடுத்து "யாராலும் உங்களுக்கு தீங்கு ஏற்படுத்த முடியாதென்று" உறுதி கூறினார்.

ஆனால் ,

அதன் பின்னர் கலவர கும்பல் எங்கள் இல்லங்களை நோக்கி கற்களை வீசத்தொடங்கினர். அதிலிருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தோம். அப்போது நான் செருப்பு கூட அணிய அவகாசம் பெற்றிருக்கவில்லை. உறுதி கொடுத்த ஊர் தலைவர் வீட்டில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் , குழந்தைகள் ஒன்று கூடினோம். ஆனாலும் பாதுகாப்பற்றவர்களாய் உணர்ந்தோம். நாங்கள் தப்பி வேறிடம் செல்பதற்குரிய எல்லா வழிகளும் கலவரக்காரர்களால் அடைக்கப்பட்டிருந்தன. 28ம் தேதி நள்ளிரவில் எங்கள் வீடுகள் திட்டமிட்டு எரிக்கப்பட தொடங்கின. நாங்கள் உங்களை கொல்வோம், நாங்கள் உங்களை வெட்டியே தீருவோம் எனும் கோஷங்கள் உரக்க ஒலித்தன. 

எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டது. அதற்காக கிராம ஆண்கள் காவல்நிலையத்தில் உதவி கேட்டனர். ஆனால் எங்களுக்கு பாதுகாப்பு மறுக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் பல முஸ்லிம்கள் தங்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள காடுகளுக்கு சென்று சில நாட்கள் மறைந்து வாழ்ந்தனர்.

அன்றைய நாள் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை உண்ண உணவின்றி அருந்த நீருமின்றி உயிருக்கு பயந்து எங்கள் கிராமங்களிலேயே பல்வேறு இடங்களில் ஒளிந்துக்கொண்டே இருந்தோம். ஆனால் அசாதரண சூழல் திணிக்கப்பட்ட நிலையில் அது சாதாரண விஷயமாக இருக்கவில்லை. எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கெல்லாம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அவர்களை வெளியே அனுப்பவில்லை எனில் உன் வீட்டையும் கொளுத்துவோம் என்று ஆவேசமாக அவர்கள் கத்தியதால் பலரும் அடைக்கலம் கொடுக்க அஞ்சினர். 

மிரட்டலுக்கு அஞ்சிய , உறுதி அளித்த எங்கள் ஊர் தலைவரும் அவர் வீட்டிலிருந்து எங்களை வெளியேற்றிவிட்டார். எங்கள் வீடுகளுக்கே செல்லலாமென நினைத்தால் , அது ஏற்கனவே தீக்கு இரையாகியிருந்தது. மீண்டும் காவல்துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பு கோரினோம். அவர்களோ எங்களை அக்கிராமத்தை விட்டு வெளியேறிச்செல்ல அறிவுறுத்தினர்.

இரவாகியிருந்தது. அருகிலிருக்கும் கிராமத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிஜல்பாய் தாமோர் வீட்டுக்கு அடைக்கலம் தேடி சென்றோம். துரதிஷ்டவசமாக அவர் அப்போது ஊரிலில்லை. அவர் மகனும் கூட எங்களை ஆசுவாசப்படுத்த குடிக்க நீரும் சில திண்பண்டங்களையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்லும்படி சொல்லிவிட்டார். 

வேறு வழியில்லை! வேறிடம் செல்ல வேண்டும். இன்னுமொரு கிராமத்திற்கு சென்றால் அங்குள்ள முஸ்லிம்கள் உயிருக்கு பயந்து எங்கோ தப்பியோடியிருந்தனர். அங்கிருந்த பள்ளிவாசல் அன்றைய இரவுக்கு பாதுகாப்பு கொடுத்தது.

ஷாமின்! என் ஒன்றுவிட்ட சகோதரி... நிறைமாத கர்ப்பிணி. திடீரென பிரசவ வலி ஏற்பட மருத்துவ உதவியும் கிடைக்காத அந்த நேரம் செய்வதறியாது திகைத்தோம். அவள் பள்ளிவாசலிலேயே தன் குழந்தையை பிரசவித்தாள்.

பள்ளிவாசல் அமைந்திருந்த நாங்கள் தங்கியிருந்த கிராமம் ஏற்கனவே இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டதால் அங்கிருப்பது பாதுகாப்பற்றது என எண்ணி குத்ரா எனும் கிராமத்திற்கு பழங்குடியினர் உதவியுடன் சென்றோம்.

எங்கள் கிராமத்திலிருந்து 500 முஸ்லிம்கள் தப்பி வந்தோம். 17 உறுப்பினர்கள் மட்டும் குத்ராவில் தங்கிக்கொண்டோம். ஷாமினால் பயணிக்க முடியவில்லை. ஈன்றெடுத்த வேதனை அவளை சோர்வாக்கியிருந்தது. ஆகையால் இக்கிராமத்திலேயே 3 நாள் வரை மறைந்திருக்க எண்ணினோம். எங்கள் அடையாளங்களை மறைக்க பழங்குடியினர் அவர்களின் துணிகளை எங்களுக்கு அணியவைத்தனர். ஷாமின் மீதான இரக்கத்தால் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். இல்லையேல் அதுவும் கிடைத்திருக்காது. 

ஆனால் அதுவும் எளிதானதாக இருக்கவில்லை. முஸ்லிம்களை அவர்கள் தங்களுடன் வைத்துள்ளார்களா என பல விசாரணைகளுக்கு உள்ளாகினர். எனவே அதிகாலை 4 மணிக்கு மாறுவேடத்தில் அங்கிருந்து புறப்பட்டோம்.


உயிருக்காய் பயந்தோடிய நாட்கள் எல்லாம் கண்ணீர் மட்டுமே சுமந்திருந்தோம். அடுத்த நொடி என்ன ஆபத்திருக்கிறது என்பதை அறியாத படபடப்புகள் கொடூரமானவை. எதுவும் சிந்திக்க முடியவில்லை! சிந்தனையெல்லாம் எப்படி உயிரை காப்பாற்றுவதிலேயே இருந்தது.

இரு நாட்களுக்கு பிறகு பழங்குடியினரின் வழிகாட்டல் உதவியுடன் சபர்வாட் கிராமத்திற்கு சென்றோம். இங்கிருந்து ,மானாபாய் எனும் நீண்டநாள் நண்பரை சந்தித்து உதவி பெற நினைத்தோம். அவர் இருக்கும் பகுதி பனிவேலா. அங்கு செல்லும் வழியில் ஒரு குக்கிராமத்தில் ஓய்வெடுத்துக்கொண்டோம். அது இரு மலைகளுக்கு இடைபட்ட இடம் . குருகிய சாலை வழியே செல்லக்கூடிய பகுதி.

நாங்கள் சாலை வழியே சென்ற போது திடீரென ஒரு நபர் என் மாமாவை தாங்கினான். கீழே சரிந்த அவர் ஒரு மணி நேரத்திற்கு பின்பே சுயநினைவு பெற முடிந்தது. விரைவிலேயே சில நபர்கள் சூழ்ந்துக்கொண்டனர். அவர்களை முன்பே எனக்கு தெரியும். ஆம்! அவர்கள் என் சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள். சற்று முன்னர் நாங்கள் தங்கிய சபர்வாட் கிராமத்தினர் தான் நாங்கள் எங்கேசெல்கிறோம் என்ற தகவலை இவர்களுக்கு கொடுத்துள்ளார்கள். இவ்வெறியர்கள் டாட்டா ஸ்மோவில் வந்திருந்தனர்.

"முஸ்லிம்கள் இங்கேயிருக்கிறார்கள்! கொல்லுங்கள்! கொல்லுங்கள்" எனும் ஆவேச குரல்களை எழுப்பினர்.

அவர்கள் சபர்வாட் மற்றும் பனிவேலா கிராமத்திலிருந்த வெறிபிடித்த மக்களை திரட்டி வந்திருந்தனர். தொடர் ஓட்டத்தின் காரணமாக எங்கள் உடல் சோர்ந்திருந்தது, உதவிக்கு ஆள் இல்லாத நிலை உள்ளத்தையும் சோர்வடைய செய்திருந்தது. எங்களால் இனி அவர்களுடன் சண்டையிட முடியாது! அதற்குரிய சக்தியையும் இழந்துவிட்டோம். ஆனாலும் ஆளுக்கொரு திசையாக ஓட்டம் பிடிக்க நினைத்தோம்! பயனில்லை- சுற்றிவளைக்கப்பட்டோம். நாங்கள் 17 நபர்கள் தான்... நான்கு ஆண்கள் மட்டுமே எங்களில் உண்டு! எட்டு பெண்களும் மீதமுள்ளவர்கள் சிறு குழந்தைகளாகவும் இருந்தனர். அவர்களிலோ 25க்கும் மேற்பட்ட வெறியர்கள் இருந்தனர்.

அவர்கள் எம் பெண்களின் ஆடைகளை கிழித்தெறிந்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினர். நிர்வாணமாக்கப்பட்ட பெண்கள் கூட்டத்தினர்க்கு முன் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர்.

அவர்களின் வெறி 2 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தையையும் விட்டுவைக்கவில்லை! ஷாமின் 2 நாள் வயது குழந்தையை கொடூரமாக கொன்றனர். என் தாய்மாமா, என் தந்தையின் தங்கை மற்றும் அவரின் கணவரையும் அடித்துக்கொன்றனர். வன்புணர்வுக்காளான பெண்களையும் கொன்றனர்.

அதன் பின் என்னிடம் வந்தனர். நான் என் 3 வயது மகளை கையில் ஏந்தியிருந்தேன். என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக அவளை பறித்துக்கொண்ட அந்த வெறியர்கள், தன் வெறியின் விசைக்கேற்ப அவளை தூக்கி வீசினர். அவளின் பிஞ்சு தலை பாறையில் மோதிய போது என் இதயமே சுக்குநூறாய் உடைந்தது. அவள் இறந்து போனாள். நான்கு பேர் என் கை மற்றும் கால்களை பிடித்துக்கொள்ள பலபேர் ஒருவர் பின் ஒருவராக என்னை வன்புணர்வுக்குள்ளாக்கினர். அவர்களின் வெறி அடங்கிய பின்பும் கூட கண்மூடித்தனமாக என்னை உதைத்தும் அடித்தும் துன்புறுத்தினர். என் கழுத்துப்பகுதியினை காலால் அழுத்தியிருந்தான் ஒருவன். கற்கள் கொண்டு தாக்கப்பட்டேன். இரும்பு தடியால் என் தலையில் தாக்கிய போது நினைவிழந்து போனேன். நான் இறந்துவிட்டதாக நினைத்த அந்த வெறியர்கள் என்னை புதருக்குள் தூக்கி வீசினர்.

எங்களை தாக்கிய போது அவர்கள் உதிர்த்த முறைகேடான வார்த்தைகளை என்னால் எப்போதும் திருப்பிச்சொல்ல முடியாத அளவுக்கு கேவலமானவை. " கோத்ராவில் எங்கள் மக்கள் கொன்றதற்காக உங்களை கொல்வோம்! எந்த ஒரு முஸ்லிமையும் உயிருடன் விட்டு வைக்க மாட்டோம்" என ஆக்ரோஷமாக கத்தினர்.

என் கண் முன்னே என் அம்மா, என் தங்கை மற்றும் என் 12 உறவினர்களும் கொல்லப்பட்டன்னர். தன் துன்பத்தை கத்தி சொல்ல முடியாத மிருகங்களை துன்புறுத்தி துடிதுடிக்க வைத்து கொல்லப்படுவதை போலவே என் உறவினர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இத்தனைக்கும் 28ம் தேதி காலையில் என் கணவரும் இன்னும் சில உறவினர்களும் பிஜேபி ஊழியர் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமத்தினர்க்கான மீட்டிங்கில் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி கெஞ்சியுள்ளார். இப்போது எங்களை வன்புணர்வுக்கு ஆளாக்கி கொன்றவர்கள் அப்போது அக்கூட்டத்தில் இருந்தவர்கள் தான்!

17 பேரில் 2 குழந்தைகளும் (சதாம் -வயது 7, ஹுசைன் -வயது 5) நானும் மட்டும் பிழைத்துக்கொண்டோம்! அவர்கள் இருவரும் எப்படி தன்னை காத்துக்கொண்டார்கள் என எனக்கு தெரியவில்லை.

நாங்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்களில் எவரும் ஹிந்து பெண்கள் இல்லை. அவர்கள் அனைவரும் நடுத்தர வயது ஆண்கள் மட்டுமே. நாங்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட போது இவர்களெல்லாம் ஆபாச வார்த்தைகளில் கத்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய போது நான் ஐந்து மாத கற்பிணி என கூட என்னால் சொல்ல முடியாத அளவுக்கு அவர்களின் கால்கள் என் கழுத்திலும் , வாயிலும் மிதிப்பட்டிருந்தது.

ஹிந்துக்களில் சாதி பேதமின்றி இந்த கொடூரத்தில் பங்காற்றினர். என் கிராமத்தை சேர்ந்தவர்களும் அதில் ஒரு பகுதியினர் தான்! எப்படி என்னால் அவர்களை அடையாளம் காண முடியாமல் போகும் ? அவர்கள் என் கிராமத்தை சேர்ந்தவர்களே!

இரண்டு மணி நேரத்திற்கு பின் என் கண்களை திறந்த போது என் உலகம் சிதைக்கப்பட்டதை கண்டேன். என்னால் நிற்க கூட முடியவில்லை! ஆனால் அவர்கள் கையில் மீண்டும் சிக்க விரும்பவில்லை. நிர்வாணத்தை மறைத்துக்கொள்ள கந்தல் துணியேனும் கிடைக்குமா என தேடியலைந்தேன். மேலங்கி கிடைத்தது. என்னை சுற்றி என் உறவினர்களின் பிணங்கள் இருந்தது. மண்ணில் சரிந்திருந்த அந்த உடல்களை பார்க்கவும் என்னால் முடியவில்லை.

ஓர் இரவும் கழிந்து, அடுத்த நாள் பகல் பொழுதும் கழிந்தது. தண்ணீர் தாகமும் பசியும் என்னை மேலும் துன்புறுத்தியது. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! தாகத்திலேயே செத்துவிடுவேனோ என எண்ணத்தோன்றியது. அதனால் மலைப்பாங்கான அந்த இடத்தை விட்டு கீழிறங்கி உணவும் உடையும் கிடைக்குமா என தேடியலைய ஆரம்பித்தேன்.

சில தொலைவில் அடிகுழாய் ஒன்றை பார்த்தேன். அது அந்த பகுதியில் வாழும் பழங்குடியினர்க்கு சொந்தமானது. என்னை கண்டதும் நான் ஒரு முஸ்லிம் என அறிந்து என்னை தாக்க வந்தனர். அதிலிருந்து என்னை காத்துக்கொள்ள நான் முஸ்லிம் இல்லை என்றும் உங்களை சேர்ந்தவள் தான் என்றும் பொய் சொன்னேன் அவர்கள் மொழியிலேயே. அவர்கள் நம்பினார்கள். எனக்கு நீரும் உடையும் கொடுத்தனர்.

கொஞ்சம் உறங்கினேன். அப்போது தான் போலிஸ் வேன் அந்த பகுதிக்கு வந்து தேட ஆரம்பித்தது. ரந்திக்புர் கிராமத்திலிருந்து வந்த குடும்பத்தினர் கொல்லப்பட்டதை குறித்து அவர்கள் அங்கே கேட்டார்கள்.

போலிஸ்காரர்கள் எனக்கு பாதுகாப்பு தருவார்கள் என நம்பினேன். அவர்களும் என்னை அவர்கள் கொண்டு வந்த வண்டியின் பின்புறம் ஓய்வெடுத்துக்கொள்ள சொன்னார்கள். உயிர் பிழைத்தது என் அதிஷ்ட்டம் என்றார்கள். அவர்களுடன் அங்கிருந்து புறப்பட்டேன். லிம்கேதா விற்கு அழைத்து சென்றனர். எனக்கு உணவு கொடுத்த பின் என் கதையை கேட்டார்கள். ஆனால் என் புகாரை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக அவர்கள் என்னை பயம் காட்டினர்.

ஒருவேளை இந்த வன்புணர்வு சம்மந்தமான குற்றச்சாட்டை சொன்னால் என்னுடல் இருக்கும் மோசமான நிலையில் என்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள் என்றும் விஷ ஊசி செலுத்தி என்னை மருத்துவர்கள் கொல்வார்கள் என்றும் கூறினர். நான் பயந்தேன் , எனினும் நான் சொன்னவற்றை ஒன்று விடாமல் புகாராக ஏற்றுக்கொள்ளச் சொன்னேன். ஆனால் அவர்களோ நான் சொன்னவற்றுக்கு புறம்பாக 500 பேர் சேர்ந்த மக்கள் குழு என்னையும் உறவினரையும் அடித்துவிட்டதாக கதை கட்டி எழுதினர். சக்தி முழுவதும் இழந்த என்னால் என் புகார் குறித்து போலிஸாருடன் முறையிட முடியவில்லை.. இவர்களிடம் அது பயனளிக்காது என்பதையும் அறிந்துக்கொண்டேன். ஆகையால் என் எண்ணத்தை கைவிட்டு என்னை கோத்ரா முகாமிற்கு அழைத்துச்செல்லும்படி வேண்டுகோள் விடுத்தேன்! நான் என் உறவினர்களை பார்க்க விரும்பினேன்.

நான் படிக்காதவள். நான் சார்ந்த அமைப்பு பெண்களை பள்ளிக்கு செல்வதை அனுமதிக்காத தப்லீக் ஜமாத்தை சேர்ந்தது. ஆனாலும் கற்பழிப்பு நடத்தப்பட்ட ஐந்து நாட்களுக்கு பிறகு, மெடிக்கல் செக்கப் செய்ய முடிவெடுத்தேன். நான் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதை உறுதி செய்யும் சான்றிதழை பெற்றேன். 

என் அம்மா, என் 2 சகோதரர்கள், இரு சகோதரிகள் மற்றும் என் மூன்று வயது மகள் கொல்லப்பட்டனர். ஆனாலும் என்னால் அந்த குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியும். அந்த மிருகங்களை பல வருடங்களுக்கு முன்பிருந்தே எனக்கு நன்கு தெரியும். நாங்கள் ஊரில் பால் விற்று வந்தோம். எங்களிடம் பால் வாங்கிச்செல்லும் வாடிக்கையாளர்கள் அவர்கள். ஒருவேளை அது அவர்களுக்கு அவமானமாக இருந்தால் அதற்காக அவர்கள் இவ்வாறு என்னை செய்திருக்க வேண்டியதில்லை. இந்நிகழ்வுகளுக்கெல்லாம் பிறகு என் தந்தை மனநிலை குன்றியவராகிவிட்டார். எண்ணிப்பார்க்க முடியாத திருப்பங்களுடனும் மோசமான சொற்ப நாட்களுக்குள்ளும் நான் அனாதையாக்கப்பட்டுவிட்டதால் சக்தி முழுவதும் இழந்துவிட்டேன் ! ஆனாலும் இதனை பாதியிலேயே நான் கைவிடுவதாக இல்லை! எப்படி என்னால் அவர்களை மன்னிக்க முடியும் ? "

முடித்தார். பத்திரிக்கையாளர் ஷீலா பட்-இடம் தனக்கு நேர்ந்தவற்றையெல்லாம் விவரித்தார் பில்கிஸ். அதன் பின்னர் தான் பலரின் கவனத்திற்கு இக்கொடூரம் சென்றது. 

எதிர்பார்த்த படியே மோடியின் காவல்துறை 2003ல் இந்த வழக்கை "சம்பவம் உண்மைதான். ஆனால் கண்டுபிடிக்க இயலாதவை" என கூறி முடிவுக்கு கொண்டு வந்தது. இதுபற்றி சகோதரி பில்கிஸ் குறிப்பிடுகையில் " இருமுறை புகார் அளித்தேன். முதலாவதாக லிம்கேதா வில், அடுத்ததாக நான் தங்கியிருந்த கோத்ரா முகாமில் . அவர்கள் என் கைரேகையை பெற்றுக்கொண்டார்கள். ஆனால் படிப்பறிவற்றவளாக இருந்ததால் அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை நான் அறியவில்லை"

அதன் பின் பில்கிஸ் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அணுக அஃது அஹ்மதாபாத் சுப்ரிம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பின்னர் இவ்வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்ட பின் உண்மைகள் வெளிவர ஆரம்பித்தன. மருத்துவர்களும் போலிஸும் இந்நிகழ்வுக்கு துணை புரிந்ததும், தடயங்களை அழித்ததும் அம்பலமானது. 2 மருத்துவர்கள், 6 போலிஸ் உட்பட 20 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. சிபிஐ தன் அறிக்கையில் இந்நிகழ்வு குஜராத் போலிஸ்ஸின் ஒட்டுமொத்த தோல்வியையும் அவர்களின் உடந்தையையும் சுட்டிக்காட்டியது. இந்த வழக்கு போக்கின் காரணமாக பில்கீஸ் அச்சுறுத்தல்களை சந்திக்க நேர்ந்ததன் காரணமாக அவருக்கு CISF பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சம்பவம் நடந்தது முதல் வழக்கு முடியும் வரையில் 20க்கும் அதிகமான இடங்களுக்கு பாதுகாப்பு கருதி மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பில்கிஸ் குஜராத் க்கு வெளியே வழக்கு விசாரணை நடத்தும்படி சுப்ரிம் கோர்டில் மனு கொடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று இவ்வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டது. "நீதியின் மீதான நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்க வைத்தது" என இம்முடிவு குறித்து கூறினார்.

இதற்கிடையில் போலிஸாரால் பில்கீஸ் உறவினர்கள் புதைக்கப்பட்ட பனிவேலா கிராமத்தை ஏய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் தோஹ்ரா குழு ஆய்வு செய்த போது அங்கே 60 கிலோ உப்பு கிடைத்தது. உடலை சீக்கிரமாக மக்கச்செய்வதற்காக திட்டமிட்டு போலிஸார் இவ்வாறு செய்தது நிரூபணமானது. மண்ணின் ஈரப்பதம் காரணமாக அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. பில்கிஸ் சொன்ன அடையாளங்கள் வயதும் மருத்துவகுழு ஆராய்ச்சி முடிவோடு ஒத்துப்போனது. 8 பேரின் உடல்கள் மட்டும் கிடைத்தன. மீதம் ஆறுபேர் காணாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். மருத்துவக்குழுவின் அறிக்கை இவ்வழக்கின் போக்கை மேலும் வலுவாக்கியது.

ஆறுவருட போராட்டத்தின் பயனாக , பில்கிஸ் வைத்திருந்த நம்பிக்கையை காக்கும் வண்ணம் சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தீர்ப்பளித்தது. பிடிபட்ட 20 பேரில் 12 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு 2008, ஜனவரி 18ல் ஆயுள் தண்டனை விதித்தது. ஒருவர் விசாரணையின் போதே இறந்துவிட்டிருந்தார். 7 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டனர்.

நீதி கிடைத்த போதும் விடுவிக்கப்பட்ட ஆறுபேருக்காக தன் ஆதங்கத்தையும் சகோதரி பதிவு செய்தார். அந்நபர்களுக்கும் தண்டனை பெற்றுத்தருவதில் உறுதியாய் உள்ளார். இனிவரும் காலங்களில் அடுத்தடுத்த கேஸ்களுக்கும் சிபிஐக்கு தன் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறினார். இத்தீர்ப்பு பற்றி ப்ரஸ் மீட்டிங்கில் பேசியபோது " இது என் தனிபட்ட போராட்டமல்ல. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பல பெண்களுக்கான போர். பாலியல் வன்முறை திட்டமிடப்பட்டு எங்கள் சமுதாயப் பெண்கள் மீது நடத்தப்பட்டது. என்னுடைய இப்போராட்டம் பாதிப்படைந்த பல பெண்களுக்கு சக்தியை கொடுக்கும். அவர்கள் தண்டிக்கப்படுவதால் மட்டுமே வெறுப்பு ஓய்ந்து விடாது. ஆனால் நீதி இன்னும் சாகவில்லை என்பதற்கான சிறிய அறிகுறிதான் இது..!" என்றார். உண்மை தான் ! எவ்வித பணபலமும் இன்றி, எந்த ஒரு அதிகார வர்க்கத்தின் ஆதரவும் இன்றி தனித்து போராடி தனக்காக நீதியை தனியாளாய் நிலைநாட்டிய பில்கிஸ்ஸின் செயல் ஒவ்வொரு பாதிப்படைந்தவர்களுக்கும் ஒரு முன்மாதிரி தான்.

மோடிக்கு பெரும் தலைவலி என்றே தான் எண்ணத்தோன்றும் சகோதரி பில்கிஸ் அவர்கள் தரும் பதிலடிகளைப்பார்த்தால்! முதலமைச்சர்க்கான தேர்தல் சமயத்தில், "நீங்கள் ஓட்டுப்போடுவீர்களா?" என கேட்கப்பட்ட போது, "நான் ஏன் ஓட்டளிக்க வேண்டும் ?, பல கொடுமைகள் எனக்கு நிகழ்த்தியதோடு என் குடும்பத்தாரை என் கண் முன்னே கொடூரமாய் கொன்றார்கள். இவற்றுக்கு பின்னாவது குஜராத் அரசு என்னை பாதுகாத்திருக்க வேண்டும், எனக்கு நீதி பெற்றுத் தந்திருக்க வேண்டும். இவையெல்லாம் செய்ய வக்கற்ற அரசு இயந்திரத்திற்காகவா நான் ஓட்டளிக்க வேண்டும். முடியாது. நான் விரும்பவுமில்லை" என்றார் காரமாக.

இப்படியான விரக்தியாளர்களை தான் இந்த மதவாத அரசு உருவாக்கியுள்ளது. உங்களுக்கு நீதி கிடைக்க வேண்டி மோடியின் ஆதரவுக்காக அவரை சென்று சந்திப்பீர்களா என கேட்டபோது " தன் சொந்த மாநிலத்தில் எனக்கு நீதியும் பாதுகாப்பும் தர முடியாத நபரை நான் எப்போதும் சந்திக்க விரும்பவில்லை. நான் அவரை நம்பப்போவதுமில்லை " என்ற அவரின் ஒவ்வொரு சொல்லும் மோடியின் ஒவ்வொரு பிம்பத்தையும் உடைத்துக்கொண்டே வந்தன.

இன்று இவரை நாம் மறந்திருக்கலாம், இவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மக்கள் புறக்கணித்திருக்கலாம். நமக்கொரு துன்பம் நிகழாத வரை அத்துன்பத்தின் ரணங்கள் நமக்குப் புரியப்போவதில்லை! ஆனால் அவருக்கான அநீதிகளை ஒதுக்கிவிட்டு கொடூரனை ஆட்சிகட்டிலில் அமர வைக்க துடித்த ஒவ்வொரு சாமானியனும் குற்றவாளிகளே தான். வெட்கபட வேண்டும் நாம்...

மூன்று பெண்குழந்தை ஒரு ஆண் குழந்தையுடன் 20க்கும் மேற்பட்ட முறை வீடும் ஊரும் மாறி மாறி அலைகழிக்கப்பட்டும், அவ்வபோது போலிஸ் நெருக்கடிகளோடும் , இதற்கு சாவே மேலோ என்ற சிந்தனையில் அடிக்கடி வயப்பட்டும் கூட "வாழ்வதற்காய் போராட வேண்டுமெனில் போராடத் தயங்கமாட்டேன்" என திடமாய் வாழ்நாளை கழித்துக்கொண்டிருக்கிறார்...  14 வருடத்தில் ஏதேதோ நடந்துவிட்டது! குற்றவாளிகளெல்லாம் சுதந்திரமாய்... பில்கிஸ் மட்டும் கேள்விக்குறியாய்......... டெல்லி மாணவி நிர்பயா இறந்ததே நலம் தான்! இந்தியாவில் நீதி வேண்டுவோர் தான் குற்றவாளிகள். 

சகோதரி பில்கிஸ்ஸின் நல்வாழ்வுக்காய் பிரார்த்திப்போம்.

ஆமினா முஹம்மத்

reference :
http://www.rediff.com/news/2004/feb/26guj.htm
Tehelka Magazine, Vol 5, Issue 4, Dated Feb 02, 2008
http://articles.economictimes.indiatimes.com/2008-01-22/news/27701050_1_bilkis-bano-shailesh-bhatt-ramesh-chandana
http://archive.indianexpress.com/news/the-meticulous-seven-and-a-sevenday-hunt-for-proof/264049
http://wayback.archive.org/web/20080323094551/http://www.deccanherald.com/archives/aug092004/n14.asp
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/importance-of-being-bilkis/article1436970.ece

ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் ? 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 21, 2016 | , ,

அதிகாலை வேளை. சுற்றுலா சென்ற இடத்தில் திடீரென என் மகனை காணவில்லை. "அவனுக்கு நம் போன் நம்பர் நினைவிருக்குமா?, கூட்டத்தில் யாரிடம் கூச்சம் விட்டு , போன் வாங்கி என்னை தொடர்புகொள்வான்" என்ற புலம்பலில் ஆரம்பிக்கிறது தேடலின் பதற்றம்.. போன வாரம் கூட இதேபோல் என் 3வயது மகள் என் கைப்பிடிக்குள் இருந்து நழுவி எங்கோ செல்ல "எங்கே அவளை தேடுவேன், வாகனங்கள் மிகுந்த பகுதியை கடந்திருப்பாளா? அழுதழுது மூச்சு விட முடியாமல் தவித்தபடி யாரிடத்திலேனும் அடைக்கலமாகியிருப்பாளா" என்றெல்லாம் நினைத்து வெதும்பி அலைந்து தேடிய பின்னர் கிடைத்தாள். இம்முறை என் மகன்!  தேடலின் ஆரம்பப்புள்ளியிலேயே  வலிகள் நெஞ்சை அடைக்க    நீரால் நிரம்பிய கண்களை   வலுகட்டாயமாய்  திறந்துக்கொண்டேன்.. நிம்மதியாய் கட்டிலில் உறங்கும் மகனை பார்த்த பின் ஒரே அலைவரிசையில் மூச்சுக்காற்று உள்ளூம் வெளியேயும் சென்றது.  ஆம்! இரண்டு நிகழ்வுகளும் கனவு தான் ! ஆனால் "ச்ச, கனவா" என வழக்கம் போல் புறம்தள்ள முடியாத ரணம் அது ! எழுத்துக்குள் அகப்படாத பரிதவிப்பு ! 

இந்த கனவு குறித்த சிந்தனைகளில் மூழ்கியபடியே வேறொரு தேவைக்கு கூகுள் தேடலில் தொலைந்தபோது  பர்வீனா பற்றிய தகவல் கிடைத்தது எதார்த்தமான ஆச்சர்ய பொருத்தம்! எனக்குள் சொல்லிக்கொண்டேன் 'என்னே பொருத்தம்' .


உங்கள் குழந்தைகளை நீங்கள் தொலைத்ததுண்டா?  லட்சத்தில் ஒருவருக்கு தொலைத்த அனுபவம் இருக்கலாம்.. அவர்களின் தேடல் ரணங்களின் நீட்சியாய் இருக்கலாம். ஆனாலும் பொதுவாய் இச்சூழல் அரிதிலும் அரிது !. கொடுத்துவைத்தவர்களல்லவா நாம் ? நம் குழந்தைகள் போல் பாதுகாப்பான சூழலில் வாழ்க்கை அமைந்த அதிஷ்ட்டசாலி குழந்தைகள் அல்ல காஷ்மீரிகள். 

புரிந்திருக்கும்..பர்வீனா யாரென்று. அத்துடன் இக்கட்டுரையை நீங்கள் 'பத்தோடு பதினொன்றென'  முடித்துக்கொள்ள அவ்வடையாளம் போதுமானதாய் இருக்கலாம்.  12 வயதில் திருமணம் செய்துகொடுக்கப்பட்டு வீடே கதியென கிடந்த சராசரிப் பெண்ணின் குரல் திடீரென ஓர்நாள் ஆக்ரோசமாய் அலறியதையும், ஓர் தனிமனுஷியின் போராட்டம் மக்களின் அமைப்பாய் உருமாற்றமானதும் மனசாட்சியுடையவர்களால் எளிதில் கடந்துவிடக்கூடிய செய்தியல்ல! இறந்துவிட்டாலும் அது சிலகால இழப்பின் வேதனையுடன் முடிந்துபோகும், ஆனால் தம் பிள்ளை என்னவானான் என்றே தெரியாமல் ஒவ்வோர் நாளும் வலியுடன் முடித்து வலியுடனே ஆரம்பமாகுமே! அத்தகைய கண்ணீரை நீங்கள் நிச்சயம் அறிந்திட வேண்டும்.  உங்கள் குடும்பத்தின் பொருளாதாரத் தேவையை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் குடும்பத்தலைவனோ, எதிர்காலத்தை வளப்படுத்த காத்திருக்கும் உங்கள் மகனோ  சட்டென உங்களில் இருந்து காணாமல் போனால் அந்நொடியே வாழ்க்கைச்சூழல் தலைகீழாய் சுழலுமே, அதன் மரணவலி புரிய வேண்டும். 


"யாரும்  ஒரு தாயின் வலியை புரிந்துகொள்ளவில்லை, நான் பாதிக்கப்பட்டவள், என்னைப்போல் பாதிக்கப்பட்டோர் பலர் காஷ்மீரில் உண்டு, APDP என் வலிகளைச் சுமந்த, என்னைப்போன்று நூற்றுக்கணக்கான தாய்களின் கண்ணீரையும் பிறப்பிடமாய் கொண்ட அமைப்பு" என அப்பெண் புகழ்பெற்ற லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்த போது அரங்கம் கனத்தது! 

" ராணுவ உயர் அதிகாரி என்னை அழைத்து, கேஸ் வாபஸ் வாங்கிக்கொள்ள என்னிடம் பேரம் பேசினார் , 10 லட்சமென்றும் 20 லட்சமென்றும் அரசு வேலையொன்றை வாங்கி தருவதாகவும் , ஆசை காட்டினார்.  என் மகனுக்கான தேடலுக்கு அவர்கள் நிர்ணயித்த விலை இவை அனைத்தும். ஆனால் ஒரு அன்னையால் எப்படி தன் மகனை விற்க முடியும்?" என்று அவரின் குரல் அலிகார் பல்கலைகழக மேடையில் ஒலித்த போது அரங்கம் முழுதும் அதிர்ந்தது!


பிலிப்பைன்ஸ், தாய்லாந்த், இந்தோனேஷியா, ஜெனிவா, கம்போடியா, லண்டன் போன்ற பல்வேறு நாடுகளில் தான் உருவாக்கிய APDP அமைப்புக்காக கலந்துகொண்டு உலக நாடுகளின் கவனத்தை திருப்பி வரும் பர்வீனா அதிகம் படித்தவரல்லர். 1990 வரை சந்தோஷங்களும், கொண்டாட்டங்களும் மிகைத்திருந்த குடும்பத்தின் தலைவி என்பதை தவிர்த்து எந்த பெரிய பின்புலமும் அடையாளமும் அல்லாதவர். வீட்டை விட்டு அதிகம் வெளியே செல்லாதவர் அன்றைய நாளில் ஆரம்பித்த ஓட்டம் இன்றும் நின்றபாடில்லை! தனக்கு மட்டும் அன்று ஓடியவர் இன்று தன்னுடன் சேர்த்து பல குடும்பங்களுக்காகவும் போராடுகிறார். 

என்ன தான் நடந்தது ? அவரே அந்நிகழ்வைச் சொல்லக் கேட்போம், 

18 ஆகஸ்ட் 1990,

அன்றைய அபாயகரமான இரவு, என் அன்றாட நிகழ்வுகளை அடியோடு புரட்டிபோடும் என நான் எதிர்பார்க்கவில்லை. என் மகன் ஜாவீத் படிப்பதற்காக என் சகோதரன் வீட்டில் தங்கச் சென்றிருந்தான்.  அன்றிரவு தேசிய பாதுகாப்புப் படையை ( NSG) சேர்ந்த சில கமேண்டோக்கள் ரெய்ட் எனும் பெயரில் அப் பகுதிக்கு வந்து, என் மகனை இழுத்துக்கொண்டு சென்றார்கள். அப்போது 16 வயது அவனுக்கு. எவ்வித சர்ச்சைக்குரிய அமைப்புகளின்  வாடையும் உணராத மென்மையான குணம் கொண்ட பாலகன் அவன். பள்ளி சென்றது போக மீத நேரம் எனக்கு உதவியாக இருப்பான்.  அந்த வருடம் கூட அவன் தான் பள்ளியின் முதல் மாணவன். 


பக்கத்துவீட்டு பெண் ஓடிவந்து கதவு தட்டி பதட்டமாய் சொன்னாள்.  சற்று நேரம் கருப்பான ஓர் இருட்டுக்குள் அடைபட்டவளைப்போல் செய்வதறியாது ஸ்தம்பித்தேன். அனைத்து காவல்துறை விசாரணை மையங்கள் மற்றும் இராணுவ முகாம்களிலும் தேடினேன். பயனில்லை. அடுத்த நாள் காவல்நிலையம் சென்று புகார் அளித்தேன். என் மகன் பற்றிய தகவல் ஒன்றேனும் அவர்கள் சொல்லக்கூடும் என எடுபிடி வேலை பார்க்கவும் நான் தவறவில்லை. பின்னர் தான் தெரியவந்தது அவர்கள் எப்.ஐ.ஆர் கூட பதியவில்லை. மாறாக என்னை B.B கண்டோன்மெண்ட் இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். அங்கில்லை. 2ம் முறை சென்றேன், வீண். மூன்றாம் முறை சென்றும் வெறுங்கையுடன் திரும்பினேன்! என் மகன் ஜாவீத் அங்கே இல்லை.  



தொடர்ந்து அடுத்தாண்டு வரை இப்படியாக அலைகழிக்கப்பட்டேன். போலிஸின் பொய்கள் ஒரு கட்டத்தில் சளிப்பான போது அருகிலுள்ளோர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டேன். கூட்டத்தை கலைத்தார்கள்.. மீண்டும் போராடினேன்... நீதிமன்றத்தை அணுகும்படி அவர்களின் கையை விரித்தார்கள். வழக்கை கோர்ட்டில் பதிந்தேன், வருடம் முழுக்க விசாரணை ஓடியதே தவிர என் மகன் என்னிடம் வந்து சேரவில்லை. ஒரே ஒரு பலன் எனில் என் மகன் மூன்று ராணுவ அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்பட்டது மட்டும் உறுதியானது அங்கே ! எம்.எல்.ஏ முதல் முதலமைச்சர் வரை சென்று முறையிட்டேன். என் வலிகளும், என் தேடல்களும் யாருக்கும் ஒரு பொருட்டாகவே இல்லை. அடர்ந்த காட்டுக்குள் தனி ஒருத்தியாய் கதறி அழுவது போன்றதான நிலை அது ! அந்த நேரத்தில் தான் என்னைப்போலவே பலரும் தங்கள் கணவனை காணவில்லை என்றும் மகனை தேடியும் காவல்நிலையத்துக்கும், கோர்ட்டுக்குமாய் அலைந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடன் போராட தீர்மானித்தேன். 1994ம் ஆண்டு காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கம் (Association of Parents of Disappeared Persons:APDP) உருவாக்கினேன் " . முடித்தார். 


இப்படியாக உருவாக்கப்பட்ட அமைப்பில் மூவாயிரம் குடும்பங்கள் உறுப்பினர்களாய் உள்ளார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் தேடல் கதை உண்டு! அவையெல்லாம் படித்திட நமக்கு நேரமில்லை, பலருக்கோ தேவையும் இல்லை! APDPஐ சார்ந்தவர்கள் பொது இடங்களில் அடிக்கடி ஒன்றுகூடுவதன் மூலம் நம் வலியும், நம் தேவையும் குறித்து பலரின் கவனத்தை பெற முடியும் என ஓர் பாதிக்கப்பட்டவர் ஆலோசணை முன்வைக்க, அதனை ஏற்று பர்வீனா அன்று முதல் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி ஶ்ரீநகரின் லால்சவுக் பகுதில் ஒன்று கூட்டுகிறார். மௌனமாய் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். ஒவ்வோர் மாதமும் 15,30 ஆகிய இருதேதிகள் மொத்தமாய் ஒன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கிறார்கள். தங்கள் தேவைகளை அதிகாரவர்க்கத்திடம் முறையிடுகிறார்கள்.   

APDPயின் அலுவலகத்தில் அவர்களே தயாரித்த காலண்டர் , அலுவல் பயன்பாட்டிற்கு உண்டு. அதிலும் மாதவாரியாக தொலைந்து போனவர்களின் வரைகோட்டுப் படங்கள்... APDPயின் சார்பில் நடக்கும் பேரணி, கூட்டங்களிலும் காணாமல் போனவர்களின் படங்கள்!  கழுத்தில் மாட்டியிருக்கும் அடையாள அட்டையிலும் ஒவ்வொரு தாயின் தொலைந்து போன குடும்ப ஆண்கள்! இப்படியாக அவர்களின் ஒவ்வொரு போராட்ட முன்னெடுப்பிலும் அவர்களின் நோக்கம் , மௌனங்களின் சத்தங்கள் உலகுக்கு எதிரொலிக்கும் யுக்தியை கையாள்கின்றனர். இத்தனைக்கும் காரண கர்த்தா பர்வீனா என்ற  இரும்புப் பெண்மணி... 


பர்வீனாவை காஷ்மீர் குடும்பங்கள் கொண்டாடுகின்றன. காஷ்மீரின் இரும்பு மனுஷி என புகழாரம் சூட்டுகின்றன. காஷ்மீர் மட்டுமல்லாது தன் அமைப்புக்காய் அவர் வெளிமாநிலம் செல்லுமிடமெல்லாம் இளைய பட்டாளம் அவரை கௌரவிக்கின்றனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆர்வத்துடன் பலர் பர்வீனாவின் அமைப்பில் இணைகிறார்கள். இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க பல்வேறு நாடுகளுக்கும் சென்று காஷ்மீரின் நிலைகளை விவரிக்கிறார். தொலைந்துபோனவர்களைத் தேடுவதற்கான போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுகிறார். " எங்கள் குடும்ப ஆண்கள் உயிரோடு இருக்கிறார்களா , இறந்துவிட்டார்களா என்றாவது இந்த அரசு எங்களுக்கு சொல்லிவிட வேண்டும். ஆம்... 1989 ம் ஆண்டு வரையில் ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியாக கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கேனும் ஆறுதல்பட்டுக்கொள்ள கல்லறைகள் நினைவிடமாய் உண்டு. ஆனால் எங்களின் உறவுகளோ என்னவானார்கள் என்றே தெரியாமல் ஒவ்வோர் நாளும் வலியுடன் கழிக்கிறோம்" என்று வேதனையுடன் ஒவ்வோர் முறையும் முறையிடுகிறார். 

இரும்பு மனுஷி என்ற பட்டத்துக்கு ஏற்ப ரொம்பவே தைரியம் மிக்க பெண்மணி அவர்! 


அவரின் வலிகொண்ட பயணத்துக்கு சிறு ஊக்குவிப்பாய் விருதுகளும் பாராட்டுக்களும் குவிந்தவண்ணமுள்ளன. 2005ம் ஆண்டு நோபல் பரிசுக்காய் பரிந்துரைக்கப்பட்டார். CNN IBN 2011ம் ஆண்டின் சிறந்த இந்தியர்களுக்கான விருதுக்கு பர்வீனாவை பரிந்துரைத்த போது நிராகரித்தார். "இந்திய ஊடகங்கள் காஷ்மீர் விஷயத்தினை சித்தரிக்கும் விதம் , உண்மையிலிருந்து எப்போதும் வித்தியாசப்பட்டதாகவே இருக்கிறது" என்ற காரணத்தையும் முன் வைத்தார்.  இப்படித்தான் ஓர் முறை லால்சௌக்கில் அனைத்து குடும்பங்களும் வழக்கம் போல் 10ம் தேதி ஒன்று கூட, டெல்லியை சேர்ந்த ரிப்போர்ட்டர் பேட்டி எடுத்துள்ளார். எத்தனை குடும்பங்கள் உங்களுடன் சேர்ந்து இந்த போராட்டத்தில் இப்போது கலந்துகொண்டுள்ளன என அவர் கேட்ட கேள்விக்கு பர்வீனா சொன்னார் "300". ஆச்சா? அடுத்தநாள் பத்திரிக்கையில் இப்படியாக செய்தி வருகிறது, மொத்தம் 300 பேர் காணாமல் போயுள்ளார்கள் என்று. 

APDP கணக்கீட்டின்படி 5,000-6,000 காணாமல் போனவர்கள் வழக்குகள் அவர்கள் அமைப்பில் பதிவாகியுள்ளன.  அவர்கள் மதிப்பீட்டின் படி சுமார் 8000-10000 பேர் காணாமல் போயிருக்கலாம். ஆனால் காஷ்மீர் அரசு 2009 ல் வெளியிட்ட அறிக்கையில்  3,429  வழக்குகள் பதிவானதாகவும், இவர்கள் 1990-1999 க்குள் காணாமல் போனவர்கள் என்றும்  கணக்கு வெளியிட்ட போது "மாநில அரசு 'விஷயங்களை மறைப்பதில்" மிகச்சிறப்பாய் செயலாற்றுகிறது" என்று அதிரடியாய் அறிக்கை விட்டார். மாநில மத்திய அரசுகளை தொடர்ந்து சாடி வரும் இவர் அனைத்து காலகட்டத்திலும் சொல்வது இதுதான் " இதை சொல்வதில் எனக்கொன்றும் பயமில்லை ! உண்மைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பேன், அதனை யாரும் தடுக்க முடியாது". 


"உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒரு சிறைச்சாலையை பார்த்ததுண்டா? என் 26 ஆண்டுகால வாழ்க்கையில் பல சிறைச்சாலைகளுக்கு சென்றுவந்துவிட்டேன்! இன்னும் தொடர்வேன்..என் மகன் பத்திரமாய் எங்கோ ஓரிடத்தில் இருக்கிறான் என்ற நம்பிக்கை துளி அளவு இருக்கும் வரையிலும் தேடுவேன். மரணம் ஒன்று மட்டுமே என் தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்" என்ற அவரின் சொற்கள் மீண்டும் என் கெட்ட கனவை மீட்டன. சில நொடிகூட பர்வீனாவாய் கற்பனை செய்துகொள்ள முடியவில்லை. முடிவுறா சோகங்களும் கண்ணீர்களுமான வாழ்க்கைப்பயணங்களில் ஆழ்த்தப்பட்டவர்களுக்கு சிறு ஆறுதலேனும் தருவதற்கான வழிகளை வலிகளுடன் யோசிக்கிறேன்! 

ஆனாலும் பர்வீனாவை இன்னும் ஓரிரு நாளில் மறந்திருப்போம்! எனில் 

அன்னையர் தினம் கொண்டாடும் போது கொஞ்சமேனும் நம் உள்ளங்கள் கூனிகுறுகட்டுமாக!!!! 

ஆமினா முஹம்மத்

சுதந்திர தினம் யாருக்கு ? 0

அதிரைநிருபர் பதிப்பகம் | August 16, 2016 | , , ,


குழந்தைகளே..!

சுதந்திர தினம்  வருடாவருடம் வரும் நாளெல்லாம் நம் பள்ளிகள் திருவிழாக்கோலம் போல் காட்சியளித்தாலும்  நம் வீடுகளில் பண்டிகை பரபரப்பு எதுவுமற்று இருக்கும்.  குறைந்தபட்சம் இனிப்பாவது நம் பெற்றோர்கள் இந்நாளில் செய்து தந்ததுண்டா?   எனில் சுதந்திர தினம் யாருக்கானது ?  

நெஞ்சில் தேசிய கொடி காகிதத்தை கொஞ்சம் நேரம் குத்தி, வானை நோக்கி ஏற்றப்படும் கொடிக்கு சல்யூட் செலுத்தி, காலம்காலமாய் கொடுக்கும் மிட்டாயை வாயில் போட்டு வீடு திரும்புவது தான் சுதந்திர தின கொண்டாட்டமா?  அல்லது வீடு  திரும்பியதும் சேனல்க்கு சேனல் டிவிக்களில் காட்டப்படும்  சிறப்பு நிகழ்ச்சிகள் பார்ப்பது வரை நீள்வது தான்  சுதந்திர தினத்தின் நோக்கமா? 

இல்லை, அதையும் தாண்டி நம் ஒவ்வொருவருக்கும்  கடந்து போன தியாகங்களை நினைவூட்டவும் , எதிர்கொள்ளவிருக்கும் சாதனைகளுக்கும் நம்மை தயார்படுத்தவும்  'சுதந்திர தாகம்'  கொண்டு செயலாற்ற நம்மை நினைவுபடுத்துவதற்குமான நாள் அது. ஆனால் நம்மில் பலருக்கு சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதியா, ஜனவரி 26ம் தேதியா என்பதிலேயே ஏகப்பட்ட குழப்பம் உண்டு. காரணம் என்ன?  வெறும் சம்பிரதாய சடங்காய் நாம் அந்த தினத்தை அனுசரிக்க பழகிவிட்டோம். "ஏதோ ஒரு காலத்தில் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்தோம், அதற்காய் சிலர்  சுதந்திரம் வாங்கி தந்தார்கள்"     என்ற அளவுக்கு நம் நாட்டின்  உன்னதமான தினத்தையே சர்வசாதாரணமாய் கடந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.   

இன்றைய நாளில் பலரிடத்திலும் சுதந்திரம்  உணர்வுகள் அற்று போனதால் தான்     பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் சமூக விரோதிகள் பெருகி வருகின்றனர்.  எப்படி அடிமைப்பட்டு கிடந்தோம், எப்படி மீண்டோம் என தெரியாதன் காரணமாய் தான் நம் நாட்டின் வளர்ச்சி குறித்து எவ்வித கவலை இல்லாமல் இருக்கிறோம்.எத்தனை லிட்டர் குருதிகளை இந்த மண்ணில் கலந்ததென்றும்  தெரியாததன் காரணமாய் தான் சுற்றுச் சூழலை பாழ்படுத்தி அசுத்தப்படுத்தி வருகிறோம்.  தியாகத்திலான  வரலாறுகள் குறித்து நமக்கு அக்கறையில்லாததால் தான்   ஊழலிலும் , லஞ்சத்திலும் ஊறித்திளைத்த  ஆட்சியாளர்களை உருவாக்கியிருக்கிறோம்.  இப்படியான அசாதாரண சூழலை சாதாரணமாக்கி கொள்வதன் விளைவு மீண்டும் நாம் யாருக்கேனும் அடிமைப்படும் சூழல் நிலவுவது நிச்சயம். 

அப்படி நாம் விடலாமா? 

மாற்றத்தின் விதைகளாகிய எம் இளம்பிறை குழந்தைச் செல்வங்கள் மற்ற எல்லோரை விடவும் மிகவும் நற்பண்புகள் கொண்ட தனித்த சிறந்த ஆளுமைகளல்லவா? அவர்களின் சுதந்திர தினங்கள் இப்படியா பத்தோடு பதினொன்றாய் இருக்கும் ? நிச்சயம் இல்லவே இல்லை. அப்படியாயின் நம் சுதந்திர தினத்தில் என்ன செய்வது ? 

எத்தனையோ சுற்றுலாக்கள் சென்றிருப்போம். அவற்றில் வெளிநாட்டு பயணங்களும் இருக்கும். ஆனால் உள்நாட்டிலேயே , அருகிலேயே இருக்கும் சுதந்திர தின நினைவு சின்னங்களை நாம் கண்டுகொள்வதேயில்லை. வரலாறுகளை கல்வெட்டுகளோடு சிதிலமடையச் செய்ய நாமே காரணமாகி விடாதிருக்க, இன்ஷா அல்லாஹ் சுதந்திர போராட்டத்தை நினைவுபடுத்தும் இடங்களுக்கு சென்று வருதலை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். 

உங்கள் ஊர்களிலேயே போராட்ட வீரர்கள் இருக்கக்கூடும். அவர்களை நேரில் சந்தித்து வரலாம்.  வயதின் காரணமாக அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்திருந்தாலும் கூட  அவர்களின் வீடுகளுக்கு சென்று வரலாம். நேரடியாக அவர்கள் மூலமோ அவர்களின் உறவினர்கள் மூலமா வரலாறுகளை கேட்டு அறிந்துக்கொள்ளலாம். இதன் மூலம்  அறியப்படாத போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தியதுடன் கௌரவப்படுத்தலாம். 

நாட்டுக்காக உழைத்ததால் தனக்கென எதுவும் சேர்த்து வைக்காத நிலையில் அரசு தரும் சொற்ப ஓய்வூதியத்தில் வாழ்க்கை அமைத்திருக்கும் தியாகிகளும், வறுமையில் வாடும் அவர்களின் குடும்பங்களும் இருக்கக் கூடும். சுதந்திர தினங்களில் நிதி சேகரித்து அத்தகைய குடும்பங்களுக்கு கொடுப்பதன் மூலம், நாட்டுக்கு நன்மை செய்தால் நாடு நமக்கும் நன்மை செய்யும் என்ற  கொள்கையை குட்டீஸ்கள் உருவாக்கி புரட்சி காணலாம். 

தபால் தலை, நாணயம் போல் ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு கருப்பொருளைக் கொண்டு சேகரிப்பது போல் நினைவில் நின்ற தலைவர்களை பற்றியும் ,  கால ஓட்டத்தில் மறந்த நம் போராட்ட வீரர்களை பற்றியும் தகவல்கள் சேகரித்து வைக்கும் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். சுதந்திர தினங்களில் அதனை பள்ளிகளிலோ வீடுகளிலோ காட்சி படுத்த ஏற்பாடு செய்யலாம். 

சுதந்திர உரைகள் கேட்பது , செங்கோட்டையில் நடக்கும் அணிவகுப்புகள் பார்ப்பது சளிப்பை ஏற்படுத்தினாலும் கூட பெற்றோர்களை துணைக்கு அழைத்து அதன் விவரங்களை கேட்டு அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் அரசியலமைப்பு சட்டம், அரசு இயந்திரம் குறித்த புரிதல்கள் உங்களுக்கு கிடைக்கும். கால போக்கில் நீங்களே உங்க பெற்றோர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க முடியும். 

இது பெரியவர்களுக்கானது : 

பல பள்ளிகளில் சுதந்திரதின நிகழ்ச்சி என்பது சம்பிரதாயமாய்
மாறிவிட்டிருக்கிறது. அன்றைய நாளிலும் கூட சினிமாபாடல்கள் கொண்ட மாணவ மாணவிகளின் நடனம் அரங்கேற்றப்படுவது மிகவும் வேதனை. அப்படியாக அல்லாமல் குழந்தைகளுக்கு நாட்டுப்பற்று மேலோங்கும்வி தமான நிகழ்ச்சிகளை அரங்கேற்றலாம். 

சுதந்திரதின உரைகள் அனைத்தும் உணர்ச்சி பெருக்கில் இருக்கிறதே அன்றி குழந்தைகளுக்கு புரியும் எளிய நடையில் அமையாதிருப்பது மிகப்பெரிய மைனஸ். பேச்சாளர்கள் அதனை கவனத்தில் கொள்ளலாம். 

  சுதந்திர தினங்களில்  அது சம்மந்தமான நினைவு பரிசுகள் வழங்கி அது பற்றிய தகவல்களை குழந்தைகளுக்குச் சொல்லலாம். எத்தனையோ தியாகிகளின் சுயசரிதைகளும், புத்தகங்களும் கேட்பாரற்று விலைபோகாமல் கரையானுக்கு இரையாகின்றன. அப்படியல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு 'சுதந்திரதின பரிசு பெட்டகம்' பொக்கிஷ புத்தகங்களாக வழங்கலாம். 

வழக்கமாய் அன்றைய தினங்கள் 'உனக்கு பிடித்த தேசியதலைவர்' எனும் தலைப்பில் காந்தி, நேருவைப் பற்றி மட்டுமே பேச வைக்கும், எழுத வைக்கும் கலாச்சாரத்திலிருந்து சற்று மாறி அறியாதவர்கள் பற்றி அறியச் செய்திடும் முயற்சிகளை பள்ளி நிர்வாகம் மேற்கொள்ளலாம்.  

ஒவ்வோர் பள்ளியிலும் அன்றைய நாளில் கண்காட்சிகள் வைத்து, பல தலைவர்களை அறிமுகம் செய்யலாம். மாணவ மாணவிகளை கொண்டே தியாகிகளின் புகைப்படங்கள், நினைவு சின்ன மாதிரிகள், அரிதான புகைப்படங்கள் , தலைவர்கள் படம் பொருத்திய அஞ்சல்தலை காட்சிகள், ஓவியங்கள் காட்சிபடுத்தலாம். வகுப்பு வாரியாக போட்டிபோல் நடத்தி சிறு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தலாம். 

கவர்ச்சிகர பேச்சாளர்கள், ஊரின் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் அமரும் நிகழ்ச்சி மேடையில் தியாகிகளையோ அவர்களின் குடும்பத்திலுள்ளோர்களையோ ஏற்றி கௌரவப்படுத்தலாம். அவர்களையும் பேச வைத்து குழந்தைகளிடத்தில் விடுதலைப்போராட்டங்கள் பற்றிய நேரடி அனுபவங்களை அறியச் செய்யலாம். 

எல்லாவற்றிற்கும் மேலாக, ஆகஸ்ட் 15 அன்று விடுமுறையில் இருக்கும் பெற்றோர்களையும் கட்டாயம் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள செய்யலாம். இன்றைய நாளில் பள்ளி பயிலும் குழந்தைகளுக்கு தெரிந்த அளவில் கூட பெற்றோர்களுக்கு சுதந்திரம் பற்றிய அக்கறை இருப்பதில்லை. மாற்றம் அனைத்து தரப்பிலிருந்தும் வந்தால் மட்டுமே புரட்சிகர பாதையில் நாம் பயணம்கொள்ள முடியும். 

நடந்ததெல்லாம் போகட்டும்.. அக்கறையின்றி பல சுதந்திர தினத்தை நாம் அநியாயமாய் இழந்துவிட்டோம். இனியேனும் அப்பொக்கிஷ நாளை சிறப்பாக்கி வைத்து அதன் மூலம் விடுதலையின் நினைவுகளையும், தியாகங்களின் மாண்புகளையும் , அகிம்சையின் சக்திதனையும் உரக்க ஒலித்து மனதில் நிலைநிறுத்த தேவையான முயற்சிகளை முன்னெடுப்போம் இன்ஷா அல்லாஹ்... 

ஆமினா முஹம்மத்

'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு - என் பார்வை 34

அதிரைநிருபர் பதிப்பகம் | February 28, 2016 | , ,

முன்பெல்லாம் பரிசளிக்கும் சூழல் வரும்போதெல்லாம் ஆயிரத் தெட்டு குழப்பங்கள்  நிலவும். கடிகாரம் வாங்கி கொடுப்போமா, பூ ஜாடி வாங்கி கொடுப்போமா என்றெல்லாம் விழி பிதுங்கும்வரை   மனதோடு பட்டிமன்றம் நிகழ்த்தியதுண்டு. புத்தகங்களோடு நட்புறவு பலமான பின், எந்த விசேஷ தருணமென்றாலும் பரிசுக்கு முதலும் இறுதியுமான முடிவு 'புத்தகம் தான் டாட்' என்ற நிலைக்கு மாறியது. 

இதிலும் ஓர் குறை இருந்துவந்தது. இந்திய முஸ்லிம்கள் குறித்து திரிக்கப்பட்ட வரலாறுகளையே படித்து பதிந்து பழக்கப்பட்ட மனம் கொண்டோர்க்கு, அதை தகர்த்தெறியாவிடினும்,  ஓரளவுக்கேனும் உண்மையை புரிந்துகொள்ள ஏதுவான  வரலாற்று புத்தகங்களை பரிசளிக்கவோ பரிந்துரைக்கவோ நிறைவான புத்தகம் + நம்பகமான புத்தகம் பரிசளிப்பதற்காக, தேடுவதில் அதிகமே மெனக்கெட்டதுண்டு. "ஏன் இஸ்லாமியர்கள்  வரலாற்றுப் பகுதியில் கவனம் செலுத்துவதில்லை என்ற நெடுங்கால குறையை செ.திவான் தீர்த்து வைத்ததில் ஓரளவு திருப்தியிருந்தது. இதோ அதே வரிசையில்  அதிரைநிருபர் தளத்தில் தொடராக வெளிவந்து சென்னை சாஜித புக் செண்டர் பதிப்பகத்தாரின் வெளியீடாக என் கைக்கு வந்து சேர்ந்தது அந்த பொக்கிஷம் "மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு"

ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிரைநிரூபர் தளத்தில் வாசித்திருந்ததால் ஓரளவு பரிட்சயமிருந்தது. நூல் வடிவில் கொண்டு வரப்போவதாக ஒருவருடம் முன்பு தகவல் வந்த போதே அத்தளத்தின் நிர்வாகியிடம் ஓர் கோரிக்கை வைத்தேன் "தயவு செய்து கனமான அட்டை போட்டு புத்தகம் வெளியிடுங்கள். ஏனெனில் அவையெல்லாம் அடிக்கடி பார்க்கும் சூழலை உருவாக்கும் புத்தகம்" என்றேன். வெளியீட்டு விழா நிகழ்ச்சி  பற்றி சொன்ன போது நான் கேட்ட முதல் கேள்வியும் அதுவேதான். சின்ன ஏமாற்றம் எனினும் ஹைர்..! 

அழகான வடிவமைப்புடன் கூடிய புத்தகத்தில் இரு பிரதிகள் என் கைக்கு சேர்ந்ததுமே அதில் ஒரு பிரதியை  நான் எடுத்துக்கொண்டு இன்னொரு பிரதியை   தெரிந்த பிறமத நண்பர் ஒருவருக்கு பரிசளித்துவிட்டு தான் வாசிக்கத் தொடங்கினேன். நன்கு தெரியும், என்  எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் புத்தகம் என்றபடியால் வாசிக்காமலேயே, பரிசளித்தேன்! எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்கள் முடிந்த பின்னே  சாவகாசமாய் வாசிக்கத் தொடங்கினேன். அல்ஹம்துலில்லாஹ்,  என் எண்ணம் தவறல்ல என்பதை ஆசிரியரின் உரையே எடுத்துகாட்டியது. 

பெரும்பாலும் புத்தகத்தின் பதிப்புரையோ முன்னுரையோ எந்த உரையாகினும் அவையெல்லாம் எளிதாக கடந்த முதல் அத்தியாயத்துக்குள் நுழையும் என் வாசிப்பு  பழக்கத்தில் சற்று மாறுதலை கொண்டுவந்தது இந்த புத்தகம். ஆசிரியரின் உரையே, இப்புத்தகம் ஏன் காலத்தின் கட்டாயம் என்பதை எடுத்தியம்பியது. பாடபுத்தகங்களில் இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் வந்ததை இஸ்லாமிய படையெடுப்பு என்றும், ஆரியர்கள் வந்ததை ஆரியர் வருகை என்றும் குறிப்பிட்டுள்ளதை சுட்டிகாட்டிய இடத்தில் புத்தகத்தை மூடிவைத்து யோசிக்க ஆரம்பித்தேன். ஆம்! பள்ளிபாடங்களில் இப்படியாக தான் நஞ்சு விதைக்கப்பட்டவர்களாக  வளர்க்கப்பட்டிருக்கிறோம். அதை மெல்லிய உதாரணத்தில் சொல்லி    அதிகம் சிந்திக்க வைத்தார் ஆசிரியர். புத்தகம் முழுதும் இப்படியாக பல விஷயங்களில் நம்மை நாமே கேள்வி கேட்க வைத்திருக்கிறார். 

31 தலைப்புகளின்  கீழ் பலதரப்பட்ட வரலாற்றுக்களின் மறுபக்கத்தை நமக்கு எடுத்துகாட்டியுள்ளார் ஆசிரியர்.  ஒவ்வொரு தலைப்பிலும் நமக்கே நம் சமுதாயம் பற்றி தெரியாத தகவல்களை தந்து, இத்தனை நாளாக இதுபற்றி அறியாமல் என்ன செய்து கொண்டிருந்தோம் என கேள்வி கேட்க வைத்துள்ளார். ஒவ்வொரு தகவலும் கொடுக்கப்பட்ட விதம், இக்கட்டுரைகளை உருவாக்குவதில் அவருக்கு இருந்த ஆர்வமும், தேடலும் , உழைப்பும் பறைசாற்றுவதோடு உண்மை தன்மையை  எடுத்தியம்புகிறது. ஆம்,  தகவல்கள் ஆண்டுவாரியாக மட்டுமல்லாமல்  எந்தந்த நாட்களில் சம்பவம் நடந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். 

சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின்  பங்கு என்ன என நம்மை நோக்கி கேள்வி கேட்போருக்கு பதிலை புத்தகமாக கொடுத்ததோடு அல்லாமல் " சுதந்திர போராட்டத்தின் போது சாவர்க்கரை போல் இந்திய மண்ணுக்கு துரோகம் செய்த ஒரு முஸ்லிமையாவது ஆதாரத்துடன் காட்ட முடியுமா " என எதிர்கேள்வியையும் கேட்க வைத்துள்ளார். 

இன்னும் இன்னும் ஏராளதகவல்கள் கொட்டி கிடக்கின்றன. 

* திப்புவின் வீரம் தெரியும் திப்பு இறந்த பின் அவர் அரண்மனைக்குள் கைப்பற்றப்பட்ட பொக்கிஷங்கள் புத்தகங்களும், ராக்கெட் ஆய்வு கட்டுரைகளும் தான் என்பது தெரியுமா?

* காந்தி நாட்டுக்காக பாடுபட்டது பாடபுத்தகங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆங்கிலயர்களின் ஆட்சிமன்றத்தில் அங்கத்தினராக காங்கிரஸ் தலைவர்கள் இருப்பதற்கான காந்தி கொண்டு வந்த  'டொமினியன் அந்தஸ்து' தீர்மானத்தை முட்டாள்தனமானது என்றும் ஆங்கிலேயர்களை விரட்டி இந்தியாவை நமதாக்க வேண்டும் என்பதை   எடுத்துக்கூறிய மௌலானா ஹஜ்ரத் மொஹானியின் அறிவார்ந்த தீர்மானத்தை காந்தி புறந்தள்ளியதை படித்திருக்கிறோமா? 

* மருதுபாண்டியர் பற்றி தெரியும். அந்த  வம்சமே தூக்கிலிடப்பட்ட போது சின்ன வயது காரணமாக இளையமருதுவின் மகன் துரைச்சாமியை விட்டு வைத்ததும்,  அவருடன் சேர்ந்து நாடுகடத்தப்பட்ட  72 பேரில் துரைச்சாமிக்கும், படைத்தளபதி ஷேக் உசேன்க்கும் மட்டுமே இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தனர் என்ற வரலாறெல்லாம் குறைந்தபட்சம் கேள்விபட்டிருக்கிறோமா?

* அலி சகோதரர்கள் பற்றி ஓரிரு வரியில் படித்திருப்போம்.  அவர்கள் வீட்டுப் பெண்கள் அக்காலத்திலேயே 30 லட்சம்  சுதந்திர போராட்ட நிதியாக கொடுத்தது அறிவோமா? இல்லை " என் மகன்கள் ஆங்கில அரசிடம் மன்னிப்பு கேட்டால் நானே அவர்களின் குரல்வளையை நெறித்துக்கொள்வேன்" என சொன்ன அவர்களின் வீரத்தாய் பீவிமா பற்றியேனும் தெரிந்துவைத்துள்ளோமா?

* ஒத்துழையாமை பற்றியும்,  சத்தியாகிரகம் பத்தியும் சொல்லிகொடுக்கப்பட்ட நமக்கு சப்பாத்தி திட்டம் பற்றி சொல்லப்பட்டுள்ளதா? சப்பாத்திக்குள் துண்டு பிரசூரம் வைத்து   புரட்சிக்காக மக்களை அழைத்ததும், இன்னும் பல வழிகளில் ஆங்கிலேயர்க்கு குடைச்சல் கொடுத்ததன் விளைவாக   ,  உயிருடன் பிடித்துகொண்டு வந்தால் 50 ஆயிரம் பரிசு கொடுக்கப்படும் என ஆங்கிலேயர்களால் அறிவிப்பு செய்யப்பட்ட மௌலவி அஹமது ஷா பற்றி அறிந்திருக்கிறோமா? 

இன்னும் பக்கத்திற்கு பக்கம் பல சுவாரசியங்களும் அதிர்ச்சிகளும் காணக்கிடைக்கின்றன. கண்ணீர் துளிகளும் குறைந்தபட்சம் உடல் சிலிர்க்காமலும் இப்புத்தகத்தை முடிக்க உங்களால் முடியாது.  ஓர் சமுதாயம் கேள்வி கணைகளால் தொடுக்கப்படும் பொழுதும், தனிமைபடுத்தப்பட  விஷம பிரச்சாரங்கள்  கட்டவிழ்க்கப்படும் பொழுதும் அதனை எதிர்க்க  பதிலை தெரிந்து வைத்திருப்பது அவசியம். எதிர்த்து பதில் சொல்வதற்கான சூழலை இப்புத்தகம் வாயிலாக தந்துள்ளார்கள். நிச்சயம் முஸ்லிம்கள் வாசிக்க வேண்டிய நூல். தம் நண்பர்களுக்கும், இஸ்லாமியர்கள் குறித்து தவறான புரிதலில் உள்ளோர்க்கும் பரிசளிக்க ஏதுவான நூல்.  

வரலாறுகளை திரித்து விட்டார்கள் என சொல்லிக் கொண்டே இருப்பதை விடுத்து உண்மைகளை அறிவதும், அறிந்ததை ஆதாரங்களுடன் மற்றவர்களுக்கு  எத்தி வைப்பதும்  மகத்தான பணி.  இப்பணியை சிறப்பாக செய்த  அதிரைநிருபர் தளத்திற்கும் இந்நூல் ஆசிரியருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு' இன்னும் பல பாகங்களாக தொடரவும் பல பதிப்புகளாக வெளிவரவும் மனமார்ந்த வாழ்த்துகள். 

ஆமினா முஹம்மத்

ஆளுக்கொரு சட்டம், தகுதிக்கேற்ப தண்டனை ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | December 03, 2015 | , ,

தேசிய கீதம் பாடப்படும் போது எழுந்து நிற்காததற்காக ஒரு குடும்பம் தியேட்டரில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவம் ஒன்றும் இந்தியாவிற்கு புதிதல்ல... பல முறை நடந்தாலும் இஸ்லாமியர்களின்  பெயர் வந்தால் மட்டும் பரபரப்பாகிவிடுகிறது. 

இந்த சர்ச்சை குறித்து முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே சந்துரு , " தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்காதது குற்றமல்ல" என்று கருத்து தெரிவித்துள்ளார். அதற்கு கேரளாவில் நடந்த Bijoe Emmanuel V. State Of Kerala, வழக்கு எண்: 1987 AIR (SC) 748 -ஐயும் சுட்டிகாட்டினார். 

என்ன வழக்கு அது ? சற்று விரிவாக பார்க்கலாம். 

கேரளாவில் யெகோவாவின் சாட்சிகள் மதப்பிரிவைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் இந்திய தேசிய கீதம் பாட மறுத்ததற்காக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டத்தை ரத்துசெய்து, அவர்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு கேரள அரசுக்கும் பள்ளிக்கும்  உச்சநீதிமன்றமே உத்தரவிட்டது. அமைப்புச் சட்டத்தின் பிரிவு 25-இல் உள்ளக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, குடிமக்கள் தங்கள் விருப்பத்திற் கேற்ற மதத்தினைக் பற்றிக் கொள்ளலாம். எனவே உண்மையாக தம்மதப்பற்றிற்கு தடங்கலாய் விளங்கும் ‌போது அம்மாணவரை தேசிய கீதத்தைப் பாட வற்புறுத்துதல் இந்திய அமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 19(1)(அ) மற்றும் 25(1)-க்கும் மாறானது. எனவே அம்மாணவர்களை கொடியை வணங்கவும் தேசிய கீதத்தை பாடவும் வற்புறுத்துதல், அமைப்பு சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு மாறானதாகும். ஆதலால் அம்மாணவர்களை அப்பள்ளி மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு, உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்மானித்து, கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஒத்தி வைத்தது. உச்சநீதிமன்றம் மேற்கோளிட்ட வரிகள் மிகவும் கவனிக்கத்தக்கது. 

'நமது பாரம்பரியம் சகிப்புத்தன்மையைப் போதிக்கிறது. நமது தத்துவம் சகிப்புத்தன்மையைக் கற்றுத்தருகிறது. நமது அரசியலமைப்புச் சட்டமும் சகிப்புத் தன்மையைக் கற்பிக்கிறது. நாம் அதை நீர்த்துப் போகச் செய்ய வேண்டாம்'

முஸ்லிம்களை பற்றி மட்டும் பேசுவோர் ஏன் இந்த வழக்கு பற்றி பேசுவதில்லை ? 

அது போகட்டும்!  

திரையரங்குக்குள் தேசிய கீதம் ஒலிக்கச் செய்வதே முதலில் சட்டவிரோதமான செயல் தான்.  The prevention of insults to national honour act, 1971 சட்டத்தின் படி தேசிய கீதம் மூடிய அறைக்குள்ளும் கூரையின் கீழும்  பாடப்பட கூடாது என்ற சட்டத்தை எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளனர் ??   

1971-ம் ஆண்டின் சட்டம் Section 3   ‘யாரெல்லாம் தேசிய கீதம் இசைப்பதற்கு இடையூறு செய்கிறார்களோ அவர்களெல்லாம் தண்டனைக்குரியவர்கள்” எனச் சொல்கிறது. எவ்விடத்திலும் எழுந்து நிற்பதை பற்றி குறிப்பிடவில்லை. காலங்காலமாக  எழுந்து நிற்பதை மரியாதை என    நம்பிக்கொண்டதன் விளைவாகவே இவையெல்லாம் தேசத்துரோகமாக பார்க்கப்படுகிறது. ஆனால்  தேசிய கீதம் ஒலித்துக்கொண்டிருந்த போதே அதனை பாதியில் நிறுத்திவிட்டு அமெரிக்கர்களைப் போல் நெஞ்சில் கை கட்டி நிற்க வலியுறுத்தினார் சசிதரூர். அது வழக்காக வந்த போது அதில் உள்நோக்கமில்லை என  விடுவிக்கப்பட்டார் என்பது வேறு விஷயம் 

2001ம் ஆண்டு பீகாரில் பாட்னாவில் நடந்த குடியரசு தின விழாவில் தேசிய கீதம் பாடப்பட்ட போது லாலு-ராப்ரி தம்பதி எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது வழக்காக வந்த போது எழுந்து நிற்காதது குற்றமல்ல என தீர்ப்பு வழங்கி மனுவை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளனர்? 

சென்ற வருடமும் இதே போல் ஓர் சர்ச்சை உருவானது. சல்மான் என்ற 25 வயது இளைஞன் தன் நண்பர்களுடன்  தியேட்டர்க்கு செல்ல, அங்கே தேசிய கீதம் ஒலித்த போது எழவில்லை என்பதற்காக காவிகளால் வாக்குவாதத்திற்குள்ளாகி பின்னர் போலிசாரால் இரவோடு இரவாக பிடிக்கப்பட்டு தீவிரவாதி போல் விசாரிக்கப்பட்டுள்ளார். சல்மான் மனித உரிமை ஆர்வலர், பல மனித உரிமை சார்ந்த மேடைகளிலும் பேசியுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் ஆட்சியின் போக்கை குறித்து விமர்சித்துள்ளார். இது போதாதா? அவரை தேச துரோக வழக்கில் கைது செய்தது கேரள போலீஸ்.   

ஆளுக்கொரு சட்டம், தகுதிக்கேற்ப நீதி , பகுதி வாரியாக குழப்பமான தீர்ப்புகள் என்ற நிலையில் தான்  இந்திய திருநாட்டின் அரசியலமைப்பு உள்ளது. எதை புரிந்துகொள்ள, எதை கடைபிடிக்க?????  எழுந்து நிற்பது தவறில்லை என ஒரு புறம் சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கம் தேச விரோதமாக பார்க்கிறார்கள். அதுவும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே இந்த நிலை! 

ஏன் இஸ்லாமியர்கள் மட்டுமா எழுந்து நிற்காமல் இருக்கிறார்கள். இன்று தேசிய கீதமொலிக்கும் ஒவ்வொரு தியேட்டர்களிலும்  ஆய்வுப்பணி செய்து முடிவுகளை வெளியிடட்டுமே பார்க்கலாம்!   கடந்த செப்டம்பர் மாதம் மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆர்.பாண்டிமகாராஜா என்பவர் பதிந்த வழக்கிற்கு தீர்ப்பு சொல்லப்பட்டது.  திரையரங்குகளில் காட்சி துவங்கும் முன் தேசிய கீதம் ஒலிபரப்பும் போது மக்கள் எழுந்து நிற்பதில்லை என்றும் அதனால் திரையரங்குகளில் தேசிய கீதத்தை தடை செய்ய வேண்டுமென்றும் கூறியிருந்தார். எழுந்து நிற்காதது குற்றமல்ல என்றும், தேசிய கீதம் குறித்த விதிகள் தனியாக உள்ளது, அவை மீறுவதாக இருந்தால் மட்டும் தனிபட்ட நபரின் மீது வழக்கு தொடுக்கலாம் என கூறி  மனுவை தள்ளுபடி செய்தது மதுரை நீதிமன்றம்.

இவ்வளவெல்லாம் சம்பவங்கள் அடுக்கி, விரிவாகச்  சொல்லி என்ன உபயோகம் ? இஸ்லாமியர்களின் செயல்கள் மட்டும் எங்கு நிகழ்ந்தாலும் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கப்படுகிறது !    

ஆமினா முஹம்மத்