Showing posts with label சத்தியமார்க்கம். Show all posts
Showing posts with label சத்தியமார்க்கம். Show all posts

உ.பியில் துவங்கவிருக்கும் போர்! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 15, 2016 | , ,

2020இல் உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கும்?

“போர் நடக்கும்” என்கிறது ‘ஹிந்து ஸ்வபிமான்’!  

இந்தியத் தலைநகரின் புறநகர்ப் பகுதியில், உத்தர்கண்ட் எல்லையை ஒட்டிய சுற்று வட்டாரத்தில்

‘ஹிந்து ஸ்வபிமான்’ எனும் குழு ஒன்று உருவாகி, ‘தர்ம சேனா’ என்ற பெயரில் ஆயுதப் பயிற்சியில் வெளிப்படையாக ஈடுபட்டு வருகிறது. ‘இஸ்லாமிக் ஸ்டேட் இராக் & சிரியா’ என்று சொல்லிக்கொள்ளும் ISIS உடன் போர் தொடுக்க இந்தக் குழு துவக்கப்பட்டுள்ளதாகவும் அது 2020க்குள் உ.பி மாநிலத்தின் மேற்குப் பகுதியைக் கைப்பற்றிவிடும் என்றும் அது நம்புகிறது. “தங்களுடைய மதத்தைப் பாதுகாக்க தங்கள் உயிரையும் தரத் தயாராக உள்ள 15,000 போர் வீரர்கள் ஏற்கெனவே தங்களிடம் உள்ளனர்” என்று இந்தக் குழுவின் தலைவர்கள் தெரிவிக்கின்றார்கள். 

மேற்கு உ.பி. பகுதிகளைச் சுற்றி அமைந்துள்ள அவர்களின் நான்கு முகாம்களை டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஓர் அணி, ஒரு வார காலமாகப் பார்வையிட்டது. வகுப்புவாதக் கலவரங்களுக்கு இலக்காகக்கூடிய பகுதிகள் அவை. சிறுவர்களைக்கூடப் போர் வீரர்களாக ஆள்சேர்த்து வைத்துள்ளது இந்த அமைப்பு. அதில் சிலர் எட்டு வயதே நிரம்பிய பாலகர்கள். துப்பாக்கி, வாள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த அவர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. காஸியாபாத் மாவட்டத்திலுள்ள தஸ்னா எனும் கோயிலை இந்தக் குழுவின் தலைவர்கள் தலைமையகமாகக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் தங்களது படையணி பெருகி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை வெளியே தெரியவந்த 50 பயிற்சி முகாம்களுள் சில மறைமுகமாக இருந்தாலும் பம்ஹெடா, ரோரி போன்ற இடங்களில் உள்ள பலவும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்குமாக எதிரி தாக்கினால் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதற்கு பகிரங்கமாக பயிற்சி அளிக்கின்றன.  மீரட் நகரில் மூன்று முகாம்களும் முஸஃபர்நகர் மாவட்டத்தில் மட்டுமே ஐந்து முகாம்களும் உள்ளன என்று தெரிய வந்துள்ளது. 

ஹிந்து ஸ்வபிமான் தலைவர்களுள் ஒருவரான செட்னா ஷர்மா, விஹெச்பியின் துர்கா வாஹினியின் உறுப்பினரும்கூட. அவர் திங்களன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறியதாவது : “எங்களது குறிக்கோள் எளிமையானது - இள வயதினராக இருக்கும்போதே அவர்களைப் பிடிப்பது. மேற்கு உபி முழுவதும் எங்களுக்கு 50 பயிற்சிப் பாசறைகள் உள்ளன. எங்களுடைய மாணவர்கள் 8 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்கள். சேர்ந்ததுமே துப்பாக்கிகளையும் வாள்களையும் நாங்கள் அவர்களுக்கு அளிப்பதில்லை. முதல் ஆறு மாதங்களுக்கு அவர்களது மனத்தை மாற்றப் பயிற்சி அளிக்கின்றோம். கீதையிலிருந்து வசனங்களை அவர்களுக்குப் போதிக்கின்றோம். ஹிந்துக்கள் மரணத்தை நினைத்து அஞ்சக்கூடாது; ஏனெனில் நாம் மறுபிறவி எடுக்கின்றோம். என்பதைப் பதிய வைக்கின்றோம். இங்குள்ள குழந்தைகள் அச்சமற்றவர்கள்.” 

சீமா குமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), எனும் 8 வயது சிறுமி, “நான் சண்டையிடக் கற்றுக்கொள்கிறேன், ஏனெனில் எங்களுடைய தாயார்களும் சகோதரிகளும் அச்சுறுத்தப்படுகிறார்கள். நான் அவர்களையும் என்னையும் பாதுகாக்க வேண்டும்,” என்கின்றாள்,   ஒன்பது வயது சிறுவன் ஒருவனும் அதே கருத்தை எதிரொலிக்கின்றான். 

இந்தியாவின்மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல்கள், பிஞ்சு உள்ளங்களை மூளைச் சலவை செய்வதற்கு, ஹிந்து ஸ்வபிமானின் கருத்தியல்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. பர்மிந்தர் ஆர்யா என்பவர் முன்னாள் இராணுவ வீரர். மோதிநகருக்கு அண்மையில் உள்ள ரோரி கிராமத்தில் அமைந்துள்ள ஹிந்து ஸ்வபிமானின் முகாமொன்றில் சிறுவர்களுக்கு இவர் பயிற்சி வழங்குகிறார். அவர், “எங்களது பயிற்சி எளிமையானது. நாட்டில் நிகழும் தீவிரவாத நடவடிக்கைகளைப் பற்றி சிறார்களுக்கு விளக்குகின்றோம்” என்கிறார். 

எடுத்துக்காட்டாக பதான்கோட் நிகழ்வு ஒரு பெரும் பிரச்சினையாக இந்தச் சிறுவர்களுடன் விவாதிக்கப்பட்டது என்றார் அவர். “ஹிந்துக்களாகிய நமக்கு அச்சுறுத்தலாகப் பெருகி வரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கோர முகம் இப்படியாகத்தான் அவர்களுக்குப் புரியவைக்கப்படுகிறது. நான் இராணுவத்தில் பணியாற்றும்போது கஷ்மீரில் எனக்குப் பணி அமைந்தது. இந்தியப் படையில் பாதியளவு பள்ளத்தாக்கில் பணியில் இருந்தது. இருப்பினும் கஷ்மீரி பண்டிட்களின் வெளியேற்றத்தை அவர்களால் தடுக்க முடியவில்லை. இது நாமே சுயமாக முடிவெடுத்துச் செய்ய வேண்டிய காரியம்” 

இவை யாவும் அரசு நிர்வாகத்தின் கண் பார்வை எல்லைக்குள்தான் நிகழ்கின்றன. ஆனால் மீரட் மண்டலத்தின் ஐஜி அலோக் ஷர்மாவோ இந்த நடவடிக்கைகளைப்பற்றித் தமக்கு எதுவுமே தெரியாது என்று கூறுகிறார். “இப்படியான நடவடிக்கைகள் நடைபெறுவதாக எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. நிச்சயமாக நான் இவ்விஷயத்தைக் கவனிக்கிறேன்” என்று திங்களன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் அவர் கூறினார். 

கஸியாபாதின் பாம்ஹெடா கிராமத்தில் அக்ஹாரா எனப்படும் விடுதி வசதியுடன் கூடிய பயிற்சிக் கூடம் நடத்தும் அனில் யாதவ் முன்னாள் மல்யுத்த வீரர், கராத்தே கலைஞர். என்ன வந்தாலும் சரி, இந்த “வேலை” இப்பொழுது நிற்காது என்கிறார் அவர். 

“இத்தகைய பயிற்சி முகாம்களை நாங்கள் அக்ஹாராக்களாக நடத்துகிறோம். அக்ஹாராக்கள் நடத்துவது என்பது சட்டவிரோதமன்று. ஆயினும் சில முகாம்களை ரகசியமாக நடத்த விரும்புகிறோம். ஏனெனில் காவல் துறையினர் அவற்றை மூடிவிடுவதை நாங்கள் விரும்பவில்லை. என்னுடைய மாணவர்கள் கண்டிப்பான விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் கராத்தே கலையில் பயிற்சி பெற்றுள்ளார்கள். துப்பாக்கிச் சுடுவதிலும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்குக் குழந்தையொன்று விரும்பினாலும்கூட நாங்கள் பயிற்றுவிப்போம். ஆறே மாதங்களில் ஒரு மாணவன் தானே சுயமாகப் பயிற்சி முகாம் தொடங்கி கிளை பரப்ப முடியும். இரண்டு ஆண்டுகளில் நாங்கள் 15,000 சிறுவர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கின்றோம் எனும்போது ஐந்து ஆண்டுகளில் நாங்கள் எவ்வளவு சாதிக்க முடியும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.” 

ஹிந்து சந்நியாசி சுவாமி நர்சிங்ஹானந்த் சரஸ்வதியின் கருத்தியல் இந்தக் குழுவின் பணிகளுக்கு நெய் ஊற்றுகிறது. அவர் தங்கியிருக்கும் கோயிலில் பலகையொன்று அறிவிக்கிறது, “இந்தக் கோயில் ஹிந்துக்களின் புனித இடம். முஸ்லிம்கள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தலைமைப் பூசாரி பாபா நர்சிங்ஹானந்த் சரஸ்வதியின் ஆணை.” தீபக் தியாகி என்று முன்னர் அறியப்பட்ட இந்த சரஸ்வதி 1995 வரை சமாஜ்வாதிக் கட்சியின் உறுப்பினர். முலாயம் சிங் யாதவின் பரம விசிறியாக இருந்தவர். இருபது ஆண்டுகளுக்கு முன், இவரது சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் பாலியல் பிரச்சினையின் காரணமாகத் தற்கொலை செய்துகொள்ள, இவரது விசவாசம் மாறிப்போய் சந்நியாசி ஆகிவிட்டார். 

1923-இல் ஹிந்துத்வா என்ற வார்த்தையை உருவாக்கிய வீர் சாவர்கர் இன்று இவரது ஆதர்ச நாயகன். மேற்கு வங்கம் மால்டாவில் சர்ச்சைக்குரிய கருத்தால் கலவரத்தைத் தூண்டிய அகில் பாரத் ஹிந்து மகாசபையின் தலைவரான கமலேஷ் திவாரி, சரஸ்வதியின் மாணவர். “உ.பி.யின் தேவ்பந்தில் உள்ள தாருல் உலூம் ISISஇன் கருத்தியில் தலைமையூற்று; போர் தொடங்கிவிட்டது” என்று சரஸ்வதி நம்புகிறார்.  

சரஸ்வதிக்கு ISISஇன் மீது அளவுகடந்த வெறுப்பு உள்ளது. அவர் எவ்விதத் தயக்கமுமின்றி, “ISIS போல் ஹிந்துக்களுக்கும் ஒரு தீவிரவாதக் குழு இருக்க வேண்டும். ISISக்கு ஒரு HS (ஹிந்து ஸ்டேட்) தான் சரியான பதில். அவர்களது தீவிரவாதத்திற்கு இணையான தீவிரவாதத்துடன் நாம் ஈடுகொடுக்க வேண்டும். தீயுடன் தீயைக் கொண்டே மோத வேண்டும். அந்தளவுக்கு பிரம்மாண்டமான அமைப்பை உருவாக்க எனக்கு வசதியில்லை. ஆனால் என்னுடைய நோக்கத்தின்மீது நம்பிக்கை வைக்கும் ஹிந்துக்களின் உதவியைக் கொண்டு நான் அதை விரைவில் அடைவேன். எங்களிடம் கைத் துப்பாக்கிகள் உள்ளன. எங்களது படை, பயிற்சிபெற எங்களுக்கு சிறப்பான ஆயுதங்கள் வேண்டும். அவர்களிடம் ஏவுகணைகள் உள்ளன. அதனால்தான் ISIS இவ்வளவு பெரிதாக வளர்ந்துள்ளது.

உள்நாட்டு வர்த்தகத் தலைவர்கள் அவர்களுக்கு உதவியிருக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்கள் எங்களுக்கும் உதவுவார்கள்,” என்று கூறுகிறார். 

பெருவாரியான மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளைத் தாங்கள் தொடங்கியுள்ளதாக சரஸ்வதி தெரிவிக்கிறார். “சராசரியாக ஒவ்வொரு மாதமும் இரண்டு பஞ்சாயத்துகளிடம் உரை நிகழ்த்துகின்றோம். அந்தப் பஞ்சாயத்துகளில், எனது ஹிந்து சிங்கங்களைத் துணிவுடன் இருக்கும்படியும் தங்களது ஆயுதங்களைத் தங்களுடன் எப்பொழுதும் வைத்திருக்கும்படியும் கேட்டுக் கொள்கின்றேன். முஸஃபர்நகர் கலவரத்தின்போது நாங்கள் களத்திற்குச் சென்று மக்களை ஆயுதம் தரிக்கச் சொன்னோம். ஹிந்துக்களைக் காப்பாற்றியதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் அனைத்து அரசியல்வாதிகளும் பொய் சொல்கின்றனர். 

சுவரில் எழுதப்பட்டுள்ள ஒரு வாசகத்தை அவர் சுட்டிக்காட்டிப் படிக்கிறார், “ஹிந்துச் சிங்கங்களே, நீங்கள் பெருமையுடன் வாழ வேண்டுமென்றால் பெருமையுடன் இறப்பதற்குக் கற்க வேண்டும். நான் என் மக்களை உள் நாட்டுப் போருக்கு ஆயத்தம் செய்கின்றேன். வரப்போகும் உள்நாட்டுப் போரை மாநில அரசாங்கமோ, நரேந்திர மோடியோ நிறுத்த முடியாது. எங்களது அன்பிற்கு உரியவர்களைப் பாதுகாப்பதற்காக சண்டையில் மரணமடைவது எங்களுக்கு சிறப்பே.” 

தேவ்பந்த் பற்றிய ஹிந்து ஸ்வபிமானின் எதிர்வினையைத் தெரிவித்தபோது, தாருல் உலூமின் துணை வேந்தர் மௌலானா அபுல் காஸிம் நுஃமானி, “நாள் முழுக்க எங்களது கதவுகள் திறந்திருக்கின்றன. இங்கு வர விரும்பும் யாரும் வந்து செல்லலாம். ஒவ்வொரு பாடத்திட்டமும் பட்டப்படிப்பும் திறந்த புத்தகம். உளவு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள், உள்ளூர் உளவுப் பிரிவு, காவல் துறை உயரதிகாரி, அரசாங்க அதிகாரிகள் என்று அனைவரும் வந்து எங்களது நிறுவனத்தைப் பார்வையிட்டுச் செல்கின்றார்கள். இந்தப் பல்கலைக் கழகத்தின் 150 ஆண்டுகால வரலாற்றில் இதன் பயிற்சி முறை ஒருமுறைகூட குற்றச்சாட்டுக்கு உள்ளானதில்லை. தனி நபர், அமைப்பு என்று யாராக இருந்தாலும் அவர்கள் எப்படி விரும்புகிறார்களோ அப்படியே விசாரிக்கட்டும். எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. இது அவர்களுக்கு ஒரு திறந்த சவால், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைப் பொருத்தவரை அவர்களைப் பற்றி நாங்கள் அறிந்துள்ள தகவல்களெல்லாம் ஊடகம் வாயிலாக கிடைத்த விபரங்களே அன்றி வேறில்லை” என்று கூறினார்.

[டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஜனவரி 20, 2016 செய்தித் தொகுப்பைத் தழுவிய செய்தித்தொகுப்பு]

மொழியாக்கம்: நூருத்தீன்
 தாருல் இஸ்லாம் குடும்பம்

சார்ந்திருப்பவர்கள்... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | April 28, 2016 | , ,

முன்னொரு காலத்தில் ஆப்பிரிக்க நாடான ஹபஷா(எதியோப்பியா)வை ஆண்டு கொண்டிருந்த கிறிஸ்தவ மன்னரின்மீது அதே நாட்டைச் சேர்ந்த ஒரு சாரார் போர் தொடுத்தனர். அந்த நாட்டில் முஸ்லிம்களும் வசித்து வந்தனர். சிறுபான்மையினர். அதுவும் அந்நிய நாட்டிலிருந்து அங்கு வந்து குடியேறி தஞ்சமடைந்து இருந்தவர்கள். அவர்களுக்கு இந்தப் போர் அளவற்றக் கவலையை அளித்துவிட்டது.

ஏனெனில் அந்தக் கிறிஸ்தவ மன்னர் தம் நாட்டில் அடைக்கலம் புகுந்திருந்த முஸ்லிம்களுக்கு உரிய வசதிகள் அளித்து வெகு பத்திரமாகப் பாதுகாத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு எதிரான இந்தப் போரில் அவர் தோற்றுவிட்டால் வெல்பவன் தங்களை என்ன செய்வானோ, ஏது செய்வானோ என்ற அவர்களுக்கு இயல்பான கவலையும் அச்சமும் ஏற்பட்டுப் போனது.

போர் தொடங்கியது. நதிக்கு மறுபுறம் களத்தில் சண்டை நடக்க, இங்கு நகரில் பதட்டத்துடனும் கவலையுடனும் அமர்ந்திருந்தார்கள் முஸ்லிம்கள். யாராவது களத்திற்குச் சென்று என்ன நடக்கிறது என்று தெரிந்து வந்து சொன்னால் நன்றாயிருக்கும் என்று அவர்களுக்குத் தோன்றியது.

‘நதியைக் கடந்து சென்று அங்கு நடப்பவற்றை அறிந்து வந்து சொல்ல யாராவது தயாரா?’ என்று கேட்டுக் கொண்டார்கள்.

“நான் செல்கிறேன்” என்று ஒருவர் தம் கையை உயர்த்தினார்.

“நீயா?” என்று ஏக ஆச்சரியத்துடன் கேள்வி எழுந்தது. ஏனெனில் கையை உயர்த்தியவர் இளவயதுச் சிறுவர். தொலைவில் உள்ள போர்க் களத்திற்குச் செல்ல வேண்டும்; அதுவும் நதியை நீந்திக் கடக்க வேண்டும். ‘இந்தச் சிறுவர் எப்படி?’ என்று அவர்கள் அஞ்ச,அவரோ உறுதியுடன் தலையசைத்தார்,

தோல்துருத்தியில் காற்றடைத்து, அவரது நெஞ்சுடன் அதைக் கட்டி நதியோடு போய் வா என்று இறக்கி விட்டார்கள். நீந்தி, போர் நடைபெறும் பகுதியை அடைந்தார் அந்த இளைஞர். இங்கு இருந்த முஸ்லிம்களோ அந்த மன்னருக்கு வெற்றி வாய்க்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டிருந்தனர். போரில் அந்த மன்னர் வெற்றி அடைந்தார். இளைஞர் மீண்டும் நீந்தி இப்பால் வந்து, தம் ஆடையின் ஒரு பகுதியைக் கழட்டி உயர்த்திக் கொடிபோல் வீசிக்கொண்டு முஸ்லிம்களிடம் ஓடிவந்தார்.

“மக்களே மகிழுங்கள்! நம் மன்னருக்கு வெற்றி. அந்த எதிரிகளை அல்லாஹ் ஒழித்தான்.”

அதைக் கேட்டு அந்தச் சிறுபான்மை முஸ்லிம்கள் பெரும் உற்சாகமடைந்தார்கள். அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா விவரித்துள்ள இந்த நிகழ்வு வரலாற்றில் குறித்து வைக்கப்பட்டுள்ளது. நபியவர்களின் காலத்தில் அபிஸீனியாவுக்கு முஸ்லிம்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தபோது அங்கிருந்த நஜ்ஜாஷி மன்னர் ஈடுபட்ட போரும் அதில் அவர் அடைந்த வெற்றியும்தாம் மேற்சொன்ன நிகழ்வு. துறுதுறுவென்று தோல்துருத்தியைக் கட்டிக் கொண்டு நீந்திச் சென்றவர் புகழ் பெற்ற தோழர் ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி).

முஸ்லிம்களுக்கு அப்படி என்ன அந்த நஜ்ஜாஷி மன்னரின்மீது பிரியம்? அவர் வெல்ல வேண்டும் என்று முஸ்லிம்கள் இறைவனிடம் இறைஞ்சும் அளவிற்கு நேசமாக இருந்திருக்கிறார்களே, அப்படியானால் அவர்கள் அந்த மன்னர் மீது எந்த அளவிற்கு அன்பும் மதிப்பும் வைத்திருந்தார்கள் என்பதை நாம் அறிய வேண்டியது முக்கியம். சமகாலத்தில் வெகு முக்கியம்.

மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சியுற்ற ஆரம்பக் காலங்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சொற்பம். அவர்களை மக்க நகரத்துக் குரைஷிகள் புரட்டியெடுத்தனர். அடி பின்னி எடுத்தார்கள். பாலை மணலில் வெற்றுடம்புடன் படுக்க வைத்து வறுத்து எடுத்தார்கள்.வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள். அவர்களது கொடுமையும் தீங்கும் உச்சத்தை எட்டிய தருணத்தில் முஸ்லிம்கள் புலம்பெயர அனுமதி அளித்தார்கள் முஹம்மது நபி (ஸல்). நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டில் 12 ஆண்களும் 4 பெண்களும் அடங்கிய முதல் குழுவினரும் அடுத்து 83 ஆண்களும் 18 பெண்களும் கொண்ட இரண்டாவது குழுவினரும் இரகசியமாக மக்காவிலிருந்து அபிஸீனியா நாட்டிற்கு வந்து இறங்கினார்கள்.

அபிஸீனிய நாட்டை நஜ்ஜாஷி என்ற மன்னர் ஆண்டு கொண்டிருந்தார். நேர்மையான அரசர். மீண்டும் ஒருமுறை அழுத்தி வாசிக்கவும். முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் அவர் நேர்மையான அரசர். “வாங்க” என்று வந்தவர்களை வரவேற்று, தங்க இடம்,உண்ண உணவு அனைத்திற்கும் மேலாகப் பாதுகாப்பு அளித்தார் அந்த மன்னர். பாதுகாப்பு என்றால் ஒப்புக்கான பாதுகாப்பன்று. மெய்யான பாதுகாப்பு.

எப்படி?

தங்களிடமிருந்து தப்பித்த முஸ்லிம்கள் அபிஸீனியாவில் பத்திரமாக வாழ்கிறார்கள் என்று தெரிய வந்ததும் மக்காவில் உள்ள குரைஷிகளுக்கு வியர்க்க ஆரம்பித்தது. தப்பித்துப் போனார்கள், விட்டுத் தொலைவோம் என்று இல்லாமல் அம்ரிப்னுல்-ஆஸ், அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆ என்ற இருநபர் குழுவை, ‘ஒன்று அந்த அயல்நாட்டு மண்ணிலேயே அந்த முஸ்லிம்கள் கொன்று புதைக்கப்பட வேண்டும்; அல்லது அங்கிருந்து மக்காவி்ற்கு அவர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும். அதற்கு அபிஸீனியா மன்னர் நஜ்ஜாஷியைச் சந்தித்துக் கச்சிதமாய் பேசி இந்தக் காரியத்தை நிறைவேற்றுங்கள்’ என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

வந்தவர்கள் ராஜ பிரதானிகளுக்கும் மன்னருக்கும் அன்பளிப்புகளை அள்ளி இறைத்து, “ஓ மன்னா! எங்கள் குலத்தைச் சேர்ந்த கீழ்குல மக்களின் கூட்டத்தினர் தங்களது இராச்சியத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர். நாங்களோ அல்லது நீங்களோ அறியாத புதிய மதமொன்றை அவர்கள் புகுத்த ஆரம்பித்துள்ளார்கள். எங்கள் மதத்தை விட்டு நீங்கிவிட்ட அவர்கள், உங்கள் மதத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களின் அப்பன், சிற்றப்பன், பெரியப்பன், மாமன், எங்கள் குலத்தின் உயர்குடித் தலைவர்கள் ஆகியோர் எங்களை இங்கு அனுப்பியுள்ளார்கள். இவர்களை மீட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இந்த இளையவர்கள் அங்கு நிகழ்த்தியுள்ள குழப்பத்தையும் சச்சரவையும் அவர்களே நன்கு அறிந்தவர்கள்” என்றுவேண்டுகோள் வைத்தார்கள்.

“இவர்கள் உண்மையைத்தான் உரைக்கிறார்கள் மன்னா. அந்த மக்களது சொந்த மக்களே அவர்களது செயல்பாட்டைச் சிறப்பாய் உணர்ந்து தீர்ப்பு சொல்லக் கூடியவர்கள். அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுங்கள். மக்காவின் தலைவர்களே இவர்களை என்னசெய்வது என்று தீர்மானித்துக்கொள்ளட்டும்” என்று ஆமோதித்தார்கள் அன்பளிப்புகளில் மயங்கிய ராஜபிரதானிகள்.

முகம் சிவந்தார் நஜ்ஜாஷி! எந்தப் பரிந்துரையை சாதமாக்கிக் கொள்ளலாம் என்று குரைஷிக் குழு நினைத்ததோ அதுவே அவர்களுக்கு நேர்விரோதமாய் வேலை செய்தது.

“இறைவன் மீதாணை! – முடியாது! அவர்கள்மீது கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டை அவர்களை அழைத்து விசாரிக்காதவரை அவர்களை யாரிடமும் ஒப்படைக்க மாட்டேன். இவர்கள் கூறுவது உண்மையாக இருப்பின், இவர்களிடம் அந்த முஸ்லிம்களை ஒப்படைப்பேன். ஆனால் விஷயம் அவ்வாறு இல்லையெனில் நான் அவர்களுக்குப் பாதுகாவல் அளிப்பேன். சிறந்த அண்டை நாட்டினனாய் இருப்பேன். அவர்கள் விரும்பும் காலமெல்லாம் என்னுடைய நாட்டில் வாழலாம்”

சொன்னது போலவே முஸ்லிம்களை தமது அவைக்கு அழைத்துவரச் சொன்னார் நஜ்ஜாஷி. “அழைத்து வாருங்கள் அவர்களை”

நடந்தவை அனைத்தையும் அறிந்த முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் சஞ்சலம் ஏற்பட்டுப்போனது. ‘உங்களுடைய சங்காத்தமே வேண்டாம் என்றுதானேய்யா இங்கு வந்துவிட்டோம். அப்பவும் விடமாட்டீர்களா?’ மல்லுக்கட்ட பின்தொடர்ந்து வந்துவிட்ட குரைஷிக்குழுவின் திட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்று கூடிப்பேசினார்கள்.

“அரசர் நம்மிடம் நம் மார்க்கத்தைப் பற்றி விசாரிக்கப் போகிறார். நமது இறைநம்பிக்கையைப் பற்றித் தெளிவாய் அவரிடம் சொல்லிவிடுவோம். நம் சார்பாய் ஒருவர் மட்டும் பேசட்டும். மற்றவர்கள் அமைதியாய் இருப்போம்” என்று அவர்கள் ஜஅஃபர் பின் அபீதாலிப் ரலியல்லாஹு அன்ஹுவைத் தேர்ந்தெடுத்தார்கள். சிந்தித்துப் பார்த்தால் உண்மையிலேயே அது பிரமிக்கவைக்கும் கட்டுப்பாடு; செயல்பாடு. மிக மிக நெருக்கடியான அந்தச் சூழ்நிலையில் நிதானமாய் ஆலோசனை புரிந்து தெளிவான ஒரு வழிமுறை,அதுவும் சிறந்ததொரு வழிமுறையை அவர்கள் தேர்ந்தெடுத்தது அவர்களது ஈமானின் வலுவையும் நபியவர்களிடம் அவர்கள் அதுவரை கற்றிருந்த வழிமுறையின் சிறப்பையும் நமக்கு எடுத்துச்சொல்லும்.

அனைத்து முஸ்லிம்களும் நஜ்ஜாஷியின் அவையை அடைந்தனர். நஜ்ஜாஷியின் இருபுறமும் பாதிரியார்கள். அனைவரும் வீற்றிருந்தார்கள். எதிரே அவர்களது நூல்கள். அம்ரிப்னுல்-ஆஸும், அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆவும் அவையில் ஆஜராகியிருந்தனர்.

முஸ்லிம்கள் வந்ததும் அவர்களை நோக்கித் திரும்பிய நஜ்ஜாஷி, “நீங்கள் கண்டுபிடித்திருக்கும் உங்களது புதிய மதத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள். இந்தப் புது மதத்தின் நிமித்தமாய் நீங்கள் உங்கள் மக்களின் மதத்திலிருந்து நீங்கி விட்டிருக்கின்றீர்கள்.நீங்கள் எங்கள் மதத்திலும் இணையவில்லை; நாம் அறிந்த வேறு மதத்திலும் இணைந்ததாக நாம் அறியவில்லை” என்றார்.

தங்களுக்கு ஆதரவு அளிக்கும் வேற்றுமத அரசன்முன் மிகவும் பலவீனமான நிலையில் சிறுபான்மை முஸ்லிம்கள். அவர்களைக் கொத்தி தூக்கிப் பறக்க கழுகு போல் தயாராகக் காத்து நிற்கும் எதிரிகள். எத்தகைய அபாயமான இக்கட்டான சூழ்நிலை அது? வாழ்வா சாவா என்ற நிலை அல்லவா அது? எனினும், அவர்கள் அல்லாஹ்வைச் சார்ந்திருந்தவர்கள்.

ஜஅஃபர் இப்னு அபீதாலிப் பேச ஆரம்பித்தார். புகழாரமில்லை. முகஸ்துதி இல்லை. எங்கே மன்னர் தங்களுக்கு அளிக்கும் பாதுகாப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்வாரோ என்ற அச்சம் சிறிதும் இல்லை.

“மன்னரே! நாங்கள் அறியாமையில் இருந்தோம்; சிலைகளை வணங்கினோம்; இறந்த பிராணிகளை உண்டோம்; மானக்கேடான காரியங்களில் ஈடுபட்டோம்; உறவுகளைத் துண்டித்துக்கொண்டு அண்டை வீட்டாருக்குக் கெடுதிகள் விளைவித்து வாழ்ந்து வந்தோம்; எங்களில் எளியோரை வலியோர் அழித்து வந்தோம். இவ்விதமாய் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போதுதான் எங்களில் ஒருவரையே அல்லாஹ் எங்களுக்குத் தூதராக அனுப்பினான். அவர் உண்மையாளர், நம்பகத்தன்மை மிக்கவர், மிக ஒழுக்கசீலர் என்பதையும் அவர் வமிசத்தையும் நாங்கள் நன்கு அறிவோம்”;

“நாங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; நாங்களும் எங்களது மூதாதையர்களும் வணங்கி வந்த கற்சிலைகள், புனித ஸ்தலங்கள் போன்றவற்றிலிருந்து நாங்கள் விலக வேண்டும்; உண்மையையே உரைக்க வேண்டும்; அடைக்கலப் பொறுப்பான அமானிதத்தை நிறைவேற்ற வேண்டும்; உறவினர்களோடு இணைந்து வாழவேண்டும்; அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்; அல்லாஹ் தடைசெய்தவற்றையும் கொலைக் குற்றங்களையும் விட்டு விலகிவிடவேண்டும் என அத்தூதர் எங்களுக்குக் கட்டளையிட்டார்”;

“மேலும் மானக்கேடானவைகள், பொய் பேசுதல், அனாதையின் சொத்தை அபகரித்தல், பத்தினிப் பெண்கள்மீது அவதூறு கூறுவது போன்றவற்றிலிருந்து எங்களைத் தடுத்தார். அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; அவனுக்கு இணைவைக்கக் கூடாது; தொழ வேண்டும்; செல்வந்தர்கள் ஏழைகளுக்கு வளவரி செலுத்த வேண்டும்; நோன்பு நோற்க வேண்டும் என்றும் அத்தூதர் எங்களுக்கு கட்டளையிட்டார்”;

“நாங்கள் அவரை உண்மையாளர் என்று நம்பினோம்; அவரிடம் விசுவாசம் கொண்டோம்; அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்திய அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றினோம்; அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம்; அவனுக்கு இணை வைப்பதை விட்டுவிட்டோம்; அவன் எங்களுக்கு விலக்கியதிலிருந்து விலகிக் கொண்டோம்; அவன் எங்களுக்கு அனுமதித்ததை அப்படியே ஏற்றுக் கொண்டோம். இதனால் எங்களது இனத்தவர் எங்கள் மீது அத்துமீறி நடந்துகொள்ள ஆரம்பித்தனர்; எங்களை வேதனை செய்தனர். அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு சிலைகளை வணங்க வேண்டும்; முன்போலவே தீயவற்றைச் செய்ய வேண்டும் என்று எங்களை கட்டாயப்படுத்தி எங்களது மார்க்கத்திலிருந்து திருப்ப முயன்றனர். எங்களை அடக்கி, அநியாயம் புரிந்து, நெருக்கடியை உண்டாக்கி எங்களது மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கும் மதச் சுதந்திரத்துக்கும் அவர்கள் தடை ஏற்படுத்திய போதுதான் உங்களது நாட்டுக்கு நாங்கள் வந்தோம். உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். உங்களிடம் தங்குவதற்கு விருப்பப்பட்டோம். அரசே! எங்களுக்கு இங்கு அநீதி இழைக்கப்பட மாட்டாதென்று நம்புகிறோம்”.

தெளிவான, சீரான, நேர்மையான பேச்சு அது. இஸ்லாமிய வரலாற்றின் சிறப்பானதொரு பிரசங்கம்.

ஜஅஃபரின் பேச்சை உற்றுக்கேட்ட நஜ்ஜாஷி, “இறைவனைப் பற்றி உங்களுக்கு உங்கள் நபி அளித்தது ஏதாவது தெரிவிக்க முடியுமா?”

‘தெரியும்’ என்ற ஜஅஃபர் ஓத ஆரம்பித்தார். குர்ஆனின் 19ஆவது அத்தியாயம் சூரா மர்யமின் வசனங்களை – “காஃப், ஹா, யா, ஐன், ஸாத். (நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய பேரருளைப் பற்றியதாகும்” ஆரம்பத்திலிருந்து துவக்கி,

"நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?" என்று கேட்டனர். "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். "இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னைப் பெரும்பேறு பெற்றவனாக ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும் ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு அறிவுறுத்தி (கட்டளையிட்டு) இருக்கின்றான். "என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) பேறுகெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. "இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்று (அக்குழந்தை) கூறியது”

என்று 33ஆவது வசனத்தை ஜஅஃபர் ஓதி முடிக்கும்போது நஜ்ஜாஷியின் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் அவரது தாடி நனைந்து கொண்டிருந்தது! அருகிலிருந்த பாதிரிகள் கண்களில் கண்ணீர். அவர்களது வேதநூல்கள் நனைந்து கொண்டிருந்தன. ஏக இறைவன் அருளிய குர்ஆன் வசனங்களின் அழுத்தமும் தெளிவும் வசீகரமும் அவர்களை ஏகத்துக்கும் கலக்கியிருந்தன.

தங்களது கொள்கையில் எவ்வித சமரசமும் இன்றி, உள்ளது உள்ளபடி உண்மையை உரத்து உரைத்த ஜஅஃபரின் பேச்சில் இன்றைய முஸ்லிம் தலைவர்களுக்கும் முஸ்லிம்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட பாடம் ஒளிந்துள்ளது. ஏனெனில்அவர்களது சூழ்நிலைதான் அவர்களை பலவீனர்களாக்கி இருந்ததே தவிர, உள்ளத்தில் குடிகொண்டிருந்த ஈமானில் அவ்வளவு அசாத்திய பலம்! ஏக இறைவன்மீது அசைக்க இயலாத நம்பிக்கை!

“எங்களுக்கு ஈஸா கொண்டுவந்த ஒளி எங்கிருந்து வந்ததோ அங்கிருந்தே உங்கள் நபியும் உங்களுக்கு ஒளி கொண்டுவந்துள்ளார்” என்று கூறிய நஜ்ஜாஷி மக்கத்துக் குழுவினரிடம் திரும்பி, “நீங்கள் வந்த வழியே உங்கள் ஊருக்குப் போகலாம். நான் இவர்களை ஒப்படைப்பதாக இல்லை”

தூது வந்த குழு ஏமாற்றத்துடன் திரும்ப, சிறுபான்மை முஸ்லிம்களுக்குத் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தினார் அந்த மன்னர் நஜ்ஜாஷி. சிறந்த அண்டை நாட்டில் சிறந்த தோழமையில் தங்கியிருக்க ஆரம்பித்தார்கள் முஸ்லிம்கள்.பத்து ஆண்டுகள் நஜ்ஜாஷியின் அபிஸீனிய நாட்டில் அமைதியான பாதுகாப்பான வாழ்க்கை அமைந்திருந்தது முஸ்லிம்களுக்கு.

அவ்விதம் பாதுகாப்பு அளித்த  நீதியரசருக்குத்தான் அவர் போரில் வெற்றியடைய பிரார்த்தனை புரிந்தார்கள் அந்தச் சிறுபான்மை முஸ்லிம்கள்.

மாறாக, இன்று நம் நாட்டின் சிறுபான்மை முஸ்லிம்களின் நிலை என்ன?

அமைச்சர் பதவிக்கு ஆசைப்படும் பிற மதப் பிரபலங்களே C வடிவில் வளைந்து கும்பிடு போடும்போது, அவர்களையும் விஞ்சி, தன்மானத்தை அடகு வைத்துவிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர், கேவலம் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்காக தலைகீழ் L வடிவில் கும்பிடு போட்டுக் கொண்டு ருகூவில் நிற்கும் கேவலம் அரங்கேறி வருகிறது.  பார்க்கும்போதே வயிற்றைக் குமட்டவில்லை?

இவர்களெல்லாம் தம்மை முஹம்மது நபியின் உம்மத்துகள்; காயிதே மில்லத்தின் அரசியல் வாரிசுகள்; சமுதாயத்தின் காவலர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வது அசிங்கத்தின் உச்சமில்லையா?

"இன இழிவு நீங்கிட இஸ்லாமே நன்மருந்து" என்று பெரியார் கூறினார். ஆனால், நம்முடைய இனமே இஸ்லாத்திற்கு இழிவைத் தேடித் தருவதற்கு முனைப்புக் காட்டி நிற்பகும் காலத்தின் கோலத்தை என்னென்பது?

நம்முடைய ஈமானைப் பாதுகாத்துக் கொள்வதே இன்றைய நிலையில் நமது தலையாய தேவையாக இருக்கின்றது.

இறைவா!

உன் பார்வையில் நரகின் எரிகொள்ளிகளான மனிதர்களைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகின்ற, அவர்களின் அநியாயங்களுக்குத் துணை போகின்ற, வக்காலத்து வாங்குகின்ற, சப்பைக்கட்டு கட்டுகின்ற முஸ்லிம் பெயர் தாங்கிகளின் வரம்பு மீறிய செயல்களுக்காக அவர்களோடு சேர்த்து எங்களையும் தண்டித்துவிடாதே!
நாங்கள் உன்னையே சார்ந்திருப்பவர்கள்!


நூருத்தீன்

என்னால் இயன்ற அறம்! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | July 15, 2015 | , ,

வெள்ளிக்கிழமைகளில் குத்பா தொடங்குவதற்கு முன் வாடிக்கையாக பள்ளிவாசலின் முன்பகுதிகளை மிகவும் சிரத்தையுடன் பெருக்கிக் கொண்டிருப்பார் அவர். மக்கள் கூட்டம் பெரிதாகச் சட்டை செய்யாமல் ஸலாம் மட்டும் கூறிவிட்டு அவரைக் கடந்து உள்ளே சென்றுவிடும்.

அவரும் பதில் உரைத்துவிட்டு கடந்து செல்வோருக்கு வழிவிட்டுவிட்டு தம் பணியைத் தொடர்வார். சரி, பள்ளிவாசல் நிர்வாகம் வேலைக்கு அமர்த்திய துப்புரவுத் தொழிலாளி போலும் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தோம். அவரது வயதும் தோற்றமும் பரிவு ஏற்படுத்தும் ரகம். இருந்தாலும் மெனக்கெட்டு யாரும் நெருங்கிச் சென்று அவரிடம் பேசியதில்லை.

இரு வாரங்களுக்குமுன் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு, பள்ளிவாசலுக்கு நிதி திரட்டுவதற்காக, நிர்வாகிகளுள் ஒருவரான இப்ராஹீம், அவரிடம் பேசிய போதுதான் அவ்விஷயம் தெரியவந்தது. எப்பொழுதும்போல் பெருக்கிக் கொண்டிருந்தவரிடம் இப்ராஹீம் கேட்டிருக்கிறார், “சிரமப்படுகிறீர்களோ? ஏதும் உதவட்டுமா?”

“இல்லை சகோதரா... இறைவனின் இல்லத்திற்கு என்னாலான மிகக் குறைந்தபட்ச உதவி இது. மூன்று இதய அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு எனக்கு உடலில் வலு இல்லை. பண வசதியும் இல்லாதவன் நான். என்னால் முடிந்தது இதுதான். இதை மட்டுமாவது நான் செய்துவிட்டுப் போகிறேனே” வார்த்தையில் லேசான குழறலுடன் பதில் சொல்லியிருக்கிறார் பெரியவர்.

பள்ளி நிர்வாகி மூலம் இச்செய்தியை அறிந்த பலரது கண்களும் அவரைத் தேடத் தொடங்கின. சிலர் கண்ணீரால் தளும்பியிருந்தனர்.  அன்று நிதி திரட்டும்போது பலரும் அள்ளி வழங்கியிருந்தாலும் அவை எல்லாவற்றையும்விட துடைப்பமும் கையுமாக இருந்த பெரியவர்தான் என் மனதில் நிறைந்திருந்தார். www.satyamargam.com

அதற்கு முக்கியமான மற்றொரு காரணமும் உண்டு. நபியவர்களின் பள்ளியைத் துடைத்து சுத்தம் செய்பவர் இறந்ததும் அவர் ஒரு சாதாரண துப்புரவுத் தொழிலாளிதானே என்ற நினைப்பில் தோழர்கள் அவரை அடக்கம் செய்து விட்டிருந்தனர்.  அவர் பள்ளிவாசலில் இல்லாதததைக் கவனித்து விசாரித்த முஹம்மது நபி (ஸல்), தமக்கு அந்த மரணச் செய்தியைத் தமக்கு தெரியப்படுத்தாமல் போனதற்கு தோழர்களிடம் ஆட்சேபம் தெரிவித்துவி்ட்டு, அந்த தொழிலாளிக்காக ஜனாஸாத் தொழுகை நடத்தி இறைஞ்சிய வரலாறு நினைவுக்கு வந்தது.

பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த கரு நிறமுடைய ஓர் ஆணோ பெண்ணோ இறந்துவிட்டார். அவர் இறந்துவிட்ட செய்தி நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாமலிருந்தது. ஒருநாள் திடீரென்று அவர் பற்றி நினைவு வந்ததும் நபி(ஸல்) அவர்கள், 'அவர் என்ன ஆனார்?' எனக் கேட்டார்கள். அதற்கு (தோழர்கள்) 'இறைத்தூதர் அவர்களே! அவர் மரணித்துவிட்டார்!" என்றதும் 'எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?' எனக் கேட்டனர். தோழர்கள், அவரைப் பற்றி அந்தஸ்துக் குறைவாகக் கருதி, 'அவர் இன்னின்னவாறெல்லாம் இருந்தார்' எனக் கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் 'அவரின் கப்ரை எனக்குக் காட்டுங்கள்" என்று கூறி, கப்ருக்குக் வந்து (ஜனாஸாத்) தொழுதார்கள்.              அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி - எண் 1337, பாகம் 2, அத்தியாயம் 23)

மாபெரும் தலைவர் ஒரு சாதாரண தொழிலாளி மீது காட்டிய மனிதாபிமானம் ஏற்படுத்திய பிரமிப்பு ஒருபுறமிருக்க, பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தப்படுத்துவது நமக்கு சாதாரணமாகத் தெரிந்தாலும் அதுவும்கூட ஒப்புயர்வற்ற அறச் செயலே என்பதுதான் அந்த ஹதீஸில் ஒளிந்திருக்கும் பாடம் என்ற கருத்து எனக்குள் உண்டு.

பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள ஒரு இந்திய மளிகைக் கடையில் எடுபிடியாக வேலை செய்துதான் அப்பெரியவரின் ஜீவனம் ஓடுகிறது என்பதைப் பிறகு கவனித்தேன். கடந்த வாரம் பள்ளியில் அவரைச் சந்தித்தபோது அணுசரனை சிறிதும் மரியாதை அதிகமுமாக அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். இறுதியில், “உங்களைப் பற்றி இந்தியாவில் உள்ள தமிழ் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  ஃபோட்டோ எடுக்கவா?” என்ற கோரிக்கைக்கு சங்கோஜத்துடன் சம்மதித்தார்.

“உங்களது பெயர்?”

“ஷௌகத் அலி” என்று அதே மெல்லிய குழறலுடன் பதில் வந்தது.

குறைகளைச் சுட்டும் விரலை மடக்கி வைத்துவிட்டு நம்மாலான அறம் என்று அவரவரும் தத்தம் வசதிக்கேற்றவாறு சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டால் சமூகத்தில் குப்பைக்கு ஏது இடம்?

நூருத்தீன்

ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 - பதிலடி ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | January 18, 2015 | , ,

சத்தியமார்க்கம்.காம் தள ஆவணத் தொகுப்பிலிருந்து...

நட்பு வட்டாரத்தில், சமூக வலைத்தளங்களில் பகிரவும், மின் அஞ்சல்களில் அனுப்பவும் கோரிக்கை.

முஸ்லிம் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இந்து பயங்கரவாதி கைது! (ஹிந்துஸ்தான் டைம்ஸ்)


முஸ்லிம் பெண்களுக்கு எதிராக சுவரொட்டி தயாரித்த வழக்கில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கைது! (தினத்தந்தி)


கள்ளக் காதலுக்காக பா.ஜனதா நிர்வாகி சாவு: பழி முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டது. (மாலைமலர்)


கோவையில் மசூதி மீது குண்டு வீசிய இந்து முன்னணி தலைவர் கைது! (மாலை மலர்)


பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி, போலீஸ் பாதுகாப்புக்காக தன்னைத் தானே கத்தியால் குத்தி நாடகமாடிய பா.ஜனதா பிரமுகர்: (தினந்தந்தி)


இந்து முன்னணி அலுவலகம் வெடிக்கும்: விளம்பரத்திற்காக ஒரு வெடிகுண்டு மிரட்டல்! (தினமணி)


''ஃபேமஸ் ஆகறதுக்குதான் குண்டு வீசினேன்!'' - விளம்பர ஆசையில் இந்து முன்னணி பிரமுகர்கள்! (ஜுனியர் விகடன்)


தன் வீட்டில் தானே குண்டு வீசி விளம்பரம் தேடிய பா.ஜ.க நிர்வாகிகள்! (The hindu)


உலகின் மிக பெரிய பயங்கரவாத அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அமெரிக்க ஆய்வு நிறுவனம் அறிவிப்பு


அதிரைபதிப்பகம்

தோழியர்... 15

அதிரைநிருபர் பதிப்பகம் | August 31, 2014 | , , , ,

சத்தியமார்க்கம்.com 'தோழியர்' நூல் வெளியீடு நிகழ்வில் அதிரைநிருபரின் ஆஸ்தான கவிஞர் சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் அவர்களால் எழுதி வாசிக்கப்பட்ட கவிதை.

தோழியர் !

புதினத்தின் சுவையில்
போதனைகள்;
புனைவுகளற்ற
புனிதவதிகளின்
வரலாற்றுப் பக்கங்கள்!

சோதனை காலத்தின்
சுவடுகள்;
வலி நிறைந்த
வழித் தடத்தின்
பயணக் குறிப்புகள்!

உயிர்த் தியாகம்
உடல் வருத்தம்
உளத் தூய்மை என
உன்னதத் தோழியரின்
மொத்த அர்ப்பணிப்பைச் சொல்லும்
புத்தகம்!

போர்முனைக்கும்
புலம்பெயர்ந்து போதிக்கவும்
தோழர்கள்;
பின்புலமாய்
பெரும் துணையாய்
ஊழியராய்
தோழியர்!

ஆண் எழுத்தாளரின்
ஆதிக்கத்தில்
பெண்களுக்கான வக்காலத்து!

சஹாபியப் பெண்களின்
இறையச்சம் மெச்சி
சமகாலப் பெண்டிருக்கு
வகுப்பெடுக்கிறார் ஆசிரியர்!

தோழர்களுக்குச்
சளைத்தவர்கள் அல்லர்
தோழியர் -
நூலிலும் நூருத்தீனிலும்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
நன்றி : சத்தியமார்க்கம்.com

சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி : ஊடகங்களின் திரித்தல் அம்பலம்! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | February 12, 2013 | , ,


கடந்த 25.12.2011 அன்று பலத்த காயங்களுடன் தன் நினைவின்றி சவூதித் தலைநகர் ரியாதின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லமா அல்-காமிதி (Lama Al Ghamidi) எனும் ஐந்து வயதுச் சிறுமி, ஏறத்தாழ பத்துமாத காலம் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்டிருந்து, 22.10.2012 அன்று மரணமடைந்தாள்.

இந்தச் செய்தி முதன்முதலாக பிபிஸீயின் மத்தியக் கிழக்குச் செய்திப் பிரிவில் 31.1.2013இல் சில சேர்க்கைகளுடன் வெளியிடப்பட்டது.

அந்தச் செய்திக்குக் கண்ணும் காதும் மூக்கும் இன்ன பிறவும் சேர்த்து, பல ஆங்கில இதழ்கள் வெளியிட்டன. குறிப்பாக, கல்ஃப் ந்யூஸ் இதழின் 3.2.2013 தேதியிட்ட செய்தியில், "தன் சொந்தப் பிள்ளைகளை ஒரு தகப்பன் கொலை செய்தால் அவனை தண்டிக்க முடியாது என்பது சவூதி அரபியாவில் நடப்பிலுள்ள சட்டமாகும்" எனும் தவறான கருத்தைச் சேர்த்து வெளியிட்டது. 

"சவூதி அரபியாவின் சட்டம்" என்று கல்ஃப் ந்யூஸ் வெளியிட்ட செய்தியை "ஷரிஆ சட்டம்" என்பதாக மாற்றி, இன்னும் கொஞ்சம் பில்ட்-அப் செய்து நமது தமிழ் அறிவுசீவிகள் மாய்ந்து மாய்ந்து எழுதித் தள்ளினர். அவர்களுள் இஸ்லாத்தை எதிர்த்து நிற்பதைக் குலத் தொழிலாகச் செய்துவரும் திண்ணை வார இதழ், தனது 3.2.2013 பதிப்பில் "5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை" எனும் தலைப்பிட்டு வெளியிட்டிருந்தது. இதே செய்தி, தினமலர் நாளிதழின் 4.2.2013 பதிப்பில், "மகளை கற்பழித்து கொன்றவருக்கு தண்டனை குறைப்பு: பெண்கள் எதிர்ப்பு" எனும் தலைப்பில் வெளியாகியிருந்தது.

இவை மட்டுமல்லாது 'கோடங்கி' எனும் ஒரு பாவனைப் பகுத்தறிவாளர், "மகளைக் கொன்ற மதவாதி; பணம் கொடுத்தால் விடுதலை" என்று தலைப்பிட்டு இஸ்லாமியக் காழ்ப்பைக் கக்கியிருந்ததோடு, It was narrated that the Prophet (peace and blessings be upon him) said, “No father should be killed (executed) for killing his son.” (At-Tirmidhi) என்ற ஒரு அரைகுறைத் தகவலை வெளியிட்டிருந்தார்.

பொய்யான தகவலைப் பரப்புகிறோம் என்ற சிந்தனையின்றி அத்தனை பேரும் ஒட்டு மொத்தமாக ரிப்பீட் அடித்தது ஒரே செய்தியைத்தான். அவற்றுள்:
  1. ஃபய்ஹான் அல் காமிதி என்பவன் இஸ்லாமிய மதபோதகன்.
  2. அவன் தொலைக்காட்சிகளில் தோன்றி இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்பவன்.
  3. தன் சொந்த மகளின் உடலின் 'எல்லா பாகங்களிலும்' வல்லுறவு கொண்டான்.
  4. மகளை சித்திரவதை செய்து கொன்றுவிட்டு, அவளின் தாயாரும் தன் முன்னாள் மனைவியுமான பெண்மணிக்கு $50,000 அபராதம் செலுத்தியபின் சுதந்திரமாக உலா வருகிறான்.
  5. சொந்தப் பிள்ளைகளைக் கொன்றால் தந்தையைப் பழிக்குப்பழி எனும் தண்டனை இஸ்லாத்தில் கிடையாது.

ஆகிய ஐந்து தவறான குற்றச்சாட்டுகளை அடுக்கி, தம் மனம்போன போக்கில் எழுதி மாய்ந்து போயினர்.

ஃபய்ஹான் அல் காமிதி என்பவன், இறந்தவர்களைக் குளிப்பாட்டும் தொழிலாளி. மூன்றாம் வகுப்புவரை மட்டுமே கல்வி பயின்ற ஃபய்ஹான், மதபோதகன் அல்லன். சிறுவயதில், தான் சீரழிக்கப்பட்டதையும் போதைக்கு அடிமையாகிக் கிடந்து, இஸ்லாத்தின் போதனைகளால் போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வந்ததையும் தொலைக்காட்சி அமர்வுகள் சிலவற்றில் விவரித்திருக்கிறான்.

அவனுடைய ஐந்து வயது மகள், எவராலும் வல்லுறவு செய்யப்படவில்லை என்பதை மருத்துவ அறிக்கைகள் தெளிவு படுத்துகின்றன. "என் மகள், தன் சொந்தத் தகப்பனால் சித்திரவதை செய்யப்பட்டு இறந்துவிட்டாள்; அவள் வல்லுறவு செய்யப்படவில்லை. இறந்துவிட்ட என் மகளை ஊடகங்கள் மானபங்கப் படுத்தவேண்டாம்" என்று சிறுமி லமாவின் தாய் ஸயீதா முகம்மது அலீ குமுறுகிறார்.

ஊடகங்களின் பொறுப்பற்ற இழிநிலையை சவூதியின் நீதித்துறை அமைச்சகம் வன்மையாகக் கண்டித்திருக்கிறது. நீதித்துறை அமைச்சகத்தின் செய்தியாளர் ஃபஹத் அல் பூக்ரான், "இன்னும் விசாரணையே முற்றுப் பெறாமல் நடந்து கொண்டிருக்கும் வழக்கில், தீர்ப்பு வெளியாகிவிட்டதாக அச்சு/மின் ஊடகங்களும் சமூக வலைத் தளங்களும் திரித்துக் கூறுகின்றன" என்று மறுப்புக் கூறுகிறார்.

Saudi Arabia’s justice ministry has denied reports that a father who allegedly raped and tortured his five-year-old daughter Luma to death had been set free after having to pay diya (blood money).

“The media reports published in newspapers and posted on electronic websites and social networks on the court verdict in the Luma case are not true,” Fahad Bin Abdullah Al Bokran, the ministry spokesperson, said.

“The case is still being heard at the court and no sentence has been issued yet. The father is still in prison and we expect a ruling soon after all aspects related to the case are examined,” he said in remarks published by the Saudi media on Thursday.

Fahad Bin Abdullah Al Bokran

சொந்த மகளை சித்திரவதை செய்து கொன்ற ஃபய்ஹான் அல் காமிதி இன்னும் சிறையில்தான் இருக்கிறான். வருகின்ற 13.2.2013இல் விசாரணை நடைபெறவுள்ளது எனும் செய்தியையும் கல்ஃப் ந்யூஸ் வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சம், தமது முந்தைய செய்தியில் பிழை இருப்பதைக் கண்டு, வெட்கப்படாமல் உண்மை நிலையை வெளியிட்டுள்ளது கல்ஃப் ந்யூஸ்.

ஆனால், தவறான தகவல்களைப் பதிந்த எந்த ஊடகமும் எந்தப் பதிவரும் இதைக் கண்டுகொள்ளாமல் கள்ள மௌனம் சாதிப்பது வேடிக்கையும் வேதனையுமான விஷயம்.

"இந்த வழக்கில், குழந்தையின் தாயான, தன் மனைவிக்கு அவர் ரத்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இதுவரை அவர் சிறையிலிருந்த காலமே போதுமானது என்றும், சவுதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இஸ்லாமிய சட்டங்களின்படி, தன் சொந்த குழந்தைகளை கொன்ற தந்தை மற்றும் மனைவியை கொன்ற கணவனுக்கு தண்டனை ஏதும் விதிக்கப்படாது. அதற்கு பதிலாக, கொலையாளி, கொல்லப்பட்டவரின் நெருங்கிய உறவினருக்கு, இழப்பீட்டுத் தொகையாகப் பணம் வழங்க வேண்டும். இது, 'ரத்த இழப்பீடு' என்று அழைக்கப்படுகிறது" என்று அவிழ்த்துவிட்ட தினமலர் நாளிதழில் இதுவரை சவூதியின் நீதித்துறை அமைச்சகம் கண்டித்த இந்தச் செய்தி வெளிவரவில்லை.

பொதுவாகவே, உலக அளவில் பெரும்பாலான ஊடகங்கள் இஸ்லாத்துக்கு எதிராக எதையாவது அவ்வபோது கக்கிக்கொண்டிருப்பதையே தங்களின் பிரதான தொழிலாகக் கொண்டுள்ளன. அதிலும் தமிழகத்திலுள்ள தினமலர் நாளிதழைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இஸ்லாத்துக்கு அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக எழுதுவதற்கு ஏதாவது கிடைத்தால் அவ்வாய்ப்பை அது தவறவிடுவதே இல்லை. நாளிதழ்கள் படிக்கும் பழக்கமுடைய பெரும்பாலான தமிழர்களுக்கு இந்த உண்மை ஏற்கனவே நன்கு தெரியும். ஆகவே, தினமலரில் வரும் செய்திகள், அதுவும் இஸ்லாம் அல்லது முஸ்லிம்களை மையப்படுத்தி வரும் காழ்ப்புணர்வுச் செய்திகளை இப்போதெல்லாம் எவரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை.

ஆனால், மேற்கண்ட இச்செய்தியினை அவ்வளவு இலகுவாக புறம்தள்ளி சென்றுவிடமுடியாது. ஒற்றைப்பார்வையில், மிகக் கொடூரமாக பச்சிளம் குழந்தையை வன்புணர்ந்து கொலை செய்த இஸ்லாமிய மதப்போதகருக்குத் தண்டனை என்ற பெயரில் வெறும் 4 மாத சிறைவாசமும் ரத்தப்பணமும் மட்டும் விதித்து விடுதலை செய்துள்ளது இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில்தான் என்ற மிகப் பாரதூரமானதொரு அவதூறு இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை வாசிக்கும் சாதாரண பாமரனுக்கும் இஸ்லாத்தின்மீது, "இவ்வளவு கேவலமான மார்க்கமா இஸ்லாம்? ஆணாதிக்கத்தின் உச்சத்தில் உள்ளதே இஸ்லாம்?" என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துவிடும் ஆபத்து உள்ளது.

ஆகவே, இச்செய்தி உண்மைதானா? தினமலர் குறிப்பிடுவது போன்றதொரு சட்டம் இஸ்லாத்தில் உள்ளதா? சவூதியின் ஷரீஆ நீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை வெளியிட்டதா? ஆகிய விஷயங்களைத் தேடிப் பயணித்தபோது, இச்செய்தியில் ஒளிந்திருக்கும் கயமைத்தனம் அப்பட்டமாக வெளிப்பட்டது.

அதனைத் தெளிவாகப் பார்ப்பதே இப்பதிவின் நோக்கம்.

குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஃபய்ஹான் அல் காமிதி குறித்த விவரங்கள் இதோ:

சிறுவயதில் தாயை இழந்து, மோசமான தந்தையிடமிருந்து பிரிந்து உறவினர்களிடம் வளர்ந்த ஃபய்ஹான், மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். சரியான கவனிப்பு இல்லாமல் வளர்ந்த ஃபய்ஹான், சிறு வயதிலேயே போதைப்பொருள், புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் இளம்வயதிலேயே சிறை சென்ற அவர், தன் 24ஆம் வயதில் இஸ்லாமிய அழைப்புப்பணி புரிவோரால் நல்லொழுக்கம் போதிக்கப்பட்டு மனம் திருந்தி, போதைப் பொருளுக்கு அடிமையானோரை அதிலிருந்து விடுவிப்பதற்கான பயிற்சி கொடுப்பவராக மாறியுள்ளார். இவரின் முயற்சியால், சிறையில் போதைப்பொருளுக்கு அடிமையாகிக் கிடந்த பலர் மனம் திருந்தியுள்ளனர். இதில் பிரபலமான அவர், தொலைக்காட்சிகளிலும் அவ்வப்போது போதைப் பொருளின் தீமைகள் குறித்துத் தொடர் பேச்சுகளும் பேட்டிகளும் வழங்குபவராக மாறியுள்ளார்.

இக்காலகட்டத்தில், எகிப்தில் பிறந்து 25 ஆண்டுகாலம் சவூதியில் வசித்துவருபவரும் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவருமான ஸயீதா முஹம்மது அலீ என்பவர் ஃபய்ஹானைப் பற்றி நல்லவிதமாகக் கேள்விப்பட்டு, அவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்தான் கொல்லப்பட்ட சிறுமியான லமாவின் தாயார். இனி அவரின் வாயாலேயே ஃபய்ஹான் குறித்து அறிவோம்:

"மார்க்கத்தில் சிறந்த நல்லதொரு ஒழுக்கச்சீலர் எனவும் மரணமடைந்தவர்களைச் சுத்தம் செய்து அவர்களை அடக்கம் செய்யும் உயரிய சமூகப்பணியினை மேற்கொள்பவர் என்றும் ஃபய்ஹான் குறித்து எனக்கு விவரங்கள் சொல்லப்பட்டன. அதன் அடிப்படையில் அவரைத் திருமணம் செய்துகொண்டேன். ஆனால், திருமணத்துக்குப் பின்னர் அவருடைய குணத்தில் பெருத்த மாறுதல் ஏற்பட்டது. என்னை அடிக்கடி அடித்துத் துன்புறுத்தினார். பிறருக்கு வெளியே நல்லுபதேசம் செய்வதற்கு நேர் எதிரான குணங்களையே என்னிடம் காண்பித்தார். மார்க்கக் கடமைகளை அவர் சரியாக பேணுவதில்லை. கடமையான நோன்புகளைக்கூட ரமளானில் அவர் விட்டுள்ளார். போதைப்பொருட்களை மீண்டும் உபயோகிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நான் கர்ப்பமானேன். அதற்கு மேலும் அவருடன் இருப்பது என் வாழ்வுக்கு நல்லதல்ல என முடிவு செய்து அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றேன். ஃபய்ஹானும் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். எங்களுக்குப் பிறந்த குழந்தை லமாவை, அவளுடைய 7 வயதுவரை நானே பராமரித்துக்கொள்ள நீதிமன்ற உத்தரவைப் பெற்று நானே வளர்த்து வந்தேன். முறைப்படி மாதத்தில் இரு வாரங்கள் மட்டும் லமா ஃபய்ஹானுடன் இருக்கவேண்டும்.

அவ்வாறு கடந்த முறை அவரிடம் லமாவை விட்டபோது, என் மகளைத் திரும்ப என்னிடம் தரமுடியாது என அவர் மறுத்தார். திரும்பத் திரும்ப என் மகளை என்னிடம் ஒப்படைக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். நீதிமன்ற உத்தரவை நினைவூட்டினேன். இந்நிலையிலேயே சுமார் நான்கு மாதங்களுக்குப் பின்னர் ரியாத் காவல்துறையினரிடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது. லமாவுக்கு விபத்து ஒன்று நேர்ந்துள்ளதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். மருத்துவமனையில் 10 மாதம் தொடர் சிகிட்சையில் இருந்த லமா, சிகிட்சை பலனில்லாமல் 2011 டிசம்பரில் மரணமடைந்தாள். தன் தந்தையின் பொறுப்பில் இருந்த வேளையில் குழந்தை பாதிக்கப்பட்டதால், அதன்பேரில் காவல்துறை ஃபய்ஹானையும் அவரின் புது மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்தது. கர்ப்பமாக இருந்ததால், கைது செய்யப்பட்ட இரு வாரங்களுக்குப் பின்னர் ஃபய்ஹானின் புது மனைவி விடுதலை செய்யப்பட்டார்"

மேற்கண்டவாறு லமாவின் தாயார் கூறுகிறார். அவருடைய பேட்டியினை முழுமையாகக் கீழே காணலாம்:

"கொலைக்குக் கொலை" என்று விதித்துள்ள இஸ்லாம், கொலை செய்யப்பட்டவரின் நெருங்கிய உறவினர் மன்னித்தால் மட்டும் கொலையாளி, "இழப்பீட்டு பணம்" கொடுத்து விடுதலை செய்யப்படலாம் என்கிறது. மேலும், இந்தத் தண்டனை விசயத்தில், ஏழை - பணக்காரன், வலியவன் - எளியவன் என்ற எந்தப்பாகுபாடும் இஸ்லாம் காட்டவில்லை. மாறாக, அவ்வாறு காட்டக்கூடாது என்றே கடுமையாக கட்டளையும் இடுகிறது. தன் மகள் ஃபாத்திமாவே திருடினாலும் கையை வெட்டுவதுதான் தீர்ப்பு என்று வலியுறுத்தும் நபிமொழியில்கூட, முந்தைய சமுதாயங்கள் தம்மிடையே கவுரமான நிலையிலுள்ள வலியவர்களுக்கு ஒரு சட்டமும் ஏழைகளுக்கு மற்றொரு சட்டமும் செயல்படுத்திய காரணத்தாலே அல்லாஹ்வால் அழிக்கப்பட்டதாகக் குறிப்பிடுவதோடு, அவ்வாறு சட்டத்தில் பாகுபாடு கூடாது; அனைவருக்கும் சமமான நீதிதான் இஸ்லாம் என்பதை மிகக் கண்டிப்புடன் வலியுறுத்துகிறது.

இறைச்சட்டங்களை நடைமுறைபடுத்தக் கூறும் இறைவசனங்கள்கூட, குற்றவாளி யூதனோ, கிறிஸ்தவனோ, முஸ்லிமோ யாராக இருந்தாலும் சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றும் அனைவருக்கும் சமமான நீதியே காட்டவேண்டுமெனவும் கட்டளையிடுகிறது.

இவ்வாறு இஸ்லாத்தில் மிகத்தெளிவாக தண்டனை சட்டம் இருக்கும்போது, "ஒருவன் தன் மனைவியையோ தன் குழந்தையையோ கொன்றால் அவனுக்கு மரணதண்டனை இல்லை" என இஸ்லாம் கூறுவதாகத் திரிப்பது அப்பட்டமான அவதூறும் கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய அக்கிரமச் செயலுமாகும்.

இச்செய்தியினை மையமாக வைத்து இஸ்லாத்தை விமர்சிக்க வந்தவர்களுள் ஒருவரான கோடங்கி எனும் பதிவர், திரிமிதீயில் பதிவான கீழ்க்கண்டதொரு அரைகுறைச் செய்தியினை மேற்கோள்காட்டி இஸ்லாம் அவ்வாறு கூறுவதாகப் பழி சுமத்துகிறார்.

It was narrated that the Prophet (peace and blessings be upon him) said, “No father should be killed (executed) for killing his son” (At-Tirmidhi).

"எந்த ஒரு தந்தையும் தன் மகனைக் கொன்றதற்காகப் பழிவாங்கப்படக்கூடாது" என நபியவர்கள் கூறியதாகக் குறிப்பிடும் மேற்கண்ட திர்மிதீயின் பதிவு குறித்து, அது ஆதாரப்பூர்வமான செய்தியல்ல எனப் பலர் குறிப்பிட்டுள்ளனர். பலர் என்பதில் இமாம் திர்மிதீயும் அடக்கம். இந்தச் செய்தியைத் தமது 1399ஆவது பதிவில் வைத்திருக்கும் இமாம் திர்மிதீ அவர்கள், "இது பலவகையிலும் குழறுபடியான செய்தி" என்ற முக்கியக் குறிப்புடன்தான் அதை வைத்திருக்கிறார் (இணைப்பு).


مسألة: التحليل الموضوعي
بَاب مَا جَاءَ فِي الرَّجُلِ يَقْتُلُ ابْنَهُ يُقَادُ مِنْهُ أَمْ لَا

1399 حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ عَيَّاشٍ حَدَّثَنَا الْمُثَنَّى بْنُ الصَّبَّاحِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ سُرَاقَةَ بْنِ مَالِكِ بْنِ جُعْشَمٍ قَالَ حَضَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقِيدُ الْأَبَ مِنْ ابْنِهِ وَلَا يُقِيدُ الِابْنَ مِنْ أَبِيهِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ سُرَاقَةَ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ وَلَيْسَ إِسْنَادُهُ بِصَحِيحٍ رَوَاهُ إِسْمَعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ الْمُثَنَّى بْنِ الصَّبَّاحِ وَالْمُثَنَّى بْنُ الصَّبَّاحِ يُضَعَّفُ فِي الْحَدِيثِ وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ مُرْسَلًا وَهَذَا حَدِيثٌ فِيهِ اضْطِرَابٌ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّ الْأَبَ إِذَا قَتَلَ ابْنَهُ لَا يُقْتَلُ بِهِ وَإِذَا قَذَفَ ابْنَهُ لَا يُحَدُّ

சவூதியின் புகழ்பெற்ற மார்க்க அறிஞர்களான முஹம்மது ஸாலிஹ் அல் முனஜ்ஜித் , முஹம்மது பின் ஸாலிஹ் அல் உதைமீன் ஆகியோர் மேற்காணும் செய்தி குறித்து ஆழமாக ஆய்ந்து அதைத் தள்ளுபடி செய்திருக்கின்றனர். கூடுதலாக இமாம் அல் அஸ்கலானீ அவர்கள் "இது தள்ளுபடியாவதற்கு எல்லா வகையிலும் பொருத்தமானது" எனக் குறிப்பிட்டுள்ளார் 

ஒரு மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) என்றால் அதற்கான முதலாவது சான்றாதாரம் இறைமறையாகும். இறைமறை கூறுகிறது:

வேதம் வழங்கப்பட்டோர்க்கு நாம் அதில், "உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;" எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! (5:45).

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்;. இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.(4:93)

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு. (2:178).

"எந்தப் பாவத்திற்காக அச்சிறுமி கொல்லப்பட்டாள்?" (81:9).

ஃபய்ஹானுக்கு என்ன தண்டனை?

ஃபய்ஹான் அல் காமிதி, தன் மகள் லமாவைக் கொல்ல வேண்டும் என்ற வெறியோடு சித்திரவதை செய்திருந்தான் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், விரைவில் ஒரு வெள்ளிக்கிழமை பொதுவெளியில் தலை சீவப்படுவான். குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் அல்லது லமாவின் தாய், தம் முன்னாள் கணவனான ஃபய்ஹானை மன்னித்தால் மட்டுமே தண்டனையிலிருந்து தப்பமுடியும். கூட்டு மனசாட்சிக்காக ஷரீஆவில் எவரும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

இன்னும் தீர்ப்பே வெளிவராத ஒரு வழக்கை, "எந்த ஒரு தந்தையும் தன் மகனைக் கொன்றதற்காகக் கொல்லப்படக்கூடாது" எனும் நபிமொழியின் அடிப்படையில் தீர்ப்பு வெளிவந்துவிட்டதாகக் கதைகட்டிப் புனைந்து எழுதும் பாவனை அறிவுசீவிகளுக்கு, இஸ்லாத்தின் மீதான காழ்ப்பைத் தவிர இரண்டாவது காரணம் ஏதும் இருக்கமுடியாது என்பது திண்ணம்.

நன்றி : சத்தியமார்க்கம்
பரிந்துரை : அதிரைநிருபர் பதிப்பகம்

தோழர்கள் முதலாம் பாகம் நூல் வெளியீடு - நிகழ்ச்சித் தொகுப்பு 9

அதிரைநிருபர் | September 16, 2011 | , , ,

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!

த்தியமார்க்கம்.காம் தளத்தில் சகோ. நூருத்தீன் எழுத, தொடராக வெளிவந்து கொண்டிருக்கும் "தோழர்கள்" தொடரிலிருந்து 20 தோழர்கள் அடங்கிய தொகுப்பு, சத்தியமார்க்கம் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக, "தோழர்கள் - முதலாம் பாகம்" அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 11 செப்டம்பர் 2011 ஞாயிறு காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் நிகழ்ந்தேறியது, அல்ஹம்து லில்லாஹ்!

நாடெங்கும் திருமணங்கள், புதுமனை குடிபுகல்கள், இன்ன பிற குடும்ப வைபவங்கள் - 11 செப்டம்பர் 2011 ஞாயிற்றுக்கிழமை சுப முகூர்த்தமாம். நூலாசிரியரின் 3 வார இந்திய வருகையைக் கருத்தில் கொண்டு, 'நல்ல நாள்' பற்றிய சிந்தனை இல்லாமல், அந்த நாளை நூல் வெளியீட்டுக்காகத் தேர்ந்தெடுத்திருந்தோம். நூல் வெளியீட்டுக்குப் மிகப் பொருத்தமான தேவநேயப் பாவாணர் அரங்கம் பல ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்கனவே பலருக்கும் பதிவாகிவிட்டிருந்தது. மிகுந்த பிரயாசைக்குப் பின்னர் 11.9.2011 காலையில் நமது நிகழ்ச்சியை நடத்திக் கொள்ள பாவாணர் அரங்கத்தினர் இசைவு தெரிவித்தனர், அல்ஹம்து லில்லாஹ்!

சத்தியமார்க்கம் குழுமத்தினரின் ஆலோசனையைத் தொடர்ந்து, தளத்தின் உதவிக் கரங்கள் பகுதியில் இடம்பெற்ற செவிப்புலன் இல்லாத சிறுமி ஆயிஷா சுல்தானாவுக்கு சத்தியமார்க்கம் சார்பாக ரூபாய் 45,000க்கான காசோலையை, சிறுமியின் சிற்றப்பாவிடம் வழங்கி எங்களது கன்னிப் பதிப்பான "தோழர்கள்" நூல் வெளியீட்டை ஒரு நல்லறத்துடன் தொடங்கினோம். இதை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூவரைத் தவிர யாருக்கும் தெரியாமல், விளம்பரமின்றிச் செய்தோம். இந்த அறிவிப்பும் சிறுமி ஆயிஷா சுல்தானாவுக்குப் பிறர் உதவுவதற்கு ஓர் உந்துதலாக இருக்கும் என்பதால் இங்கு அதை வெளிப்படுத்துகிறோம்.

நூலாசிரியர் நூருத்தீனின் இளைய மகள் செல்வி. ஷைமா, இறைமறை வசனங்களைத் தம் இனிய குரலில், மிகத் தெளிவுடன் ஆற்றொழுக்காக ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முன்வந்த கவிஞர் பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்), அமர்வுத் தலைவரில் தொடங்கி ஒவ்வொருவராக அறிமுகம் செய்து மேடைக்கு அழைத்தார்.

மேடையை அலங்கரித்தவர்கள்:
1. "
தோழர்கள்" நூலுக்கு மதிப்புரை வழங்கிய பன்னூலாசிரியர், கவிஞர் அதிரை அஹ்மது (அமர்வுத் தலைவர்)
2.
பேராசிரியர், டாக்டர் அப்துல்லாஹ்
3.
பேராசிரியர், அ. மார்க்ஸ்
4.
ஜமீல் (இணைய இதழாசிரியர், சத்தியமார்க்கம்.காம்)
5.
மறைந்த தொழிலதிபர் கீழக்கரை அஹ்மது யாசீன் அவர்களின் மகனார் நாஸர் (ஹஸ் ஸர்வீஸ், மலேஷியா).
6.
நூருத்தீன் ("தோழர்கள்" நூலாசிரியர்)

சத்தியமார்க்கம்.காம் குழுமத்தினரில் ஒருவரும் கணி வல்லுநரும் பல அறிவியல் கட்டுரைகளின் ஆசிரியருமான சகோ. முஹம்மது ரஃபீக் (அபூ ஷைமா), நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வந்த அனைவரையும் வரவேற்றார்.

பன்னூலாசிரியரும், பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபுக் கல்லூரியின் முன்னாள் தமிழாசிரியருமான கவிஞர் அதிரை அஹ்மது அவர்கள் நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றும்போது, கண்ணியமான "தோழர்கள்" பற்றி மிகச் சுருக்கமாக விளக்கி, நூலாசிரியரின் எழுத்துப் பாரம்பரியத்தின் மீது வெளிச்சம் வீசினார்.

அடுத்ததாக, 'நூல் அறிமுகம்' செய்ய வந்த, சத்தியமார்க்கம்.காம் இணைய இதழாசிரியர் ஜமீல், "தோழர்கள்" நூல் கல்விக்கூடங்களில் வரலாற்றுப் பாடமாக வைக்கப்பட வேண்டிய ஒன்று என அறிமுகப்படுத்திவிட்டு, இன்றுவரை புனிதர்களாகப் பேசப்படும் நபித் தோழர்கள் "லா இலாஹ இல்லல்லாஹ்"வை ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் எப்படி வளர்க்கப்பட்டிருந்தனர்? எப்படிப்பட்ட மோசமான வாழ்க்கையை வாழ்ந்தனர்?; "லா இலாஹ இல்லல்லாஹ்" அவர்களது வாழ்க்கை முறையை எவ்வாறு தலைகீழாகப் புரட்டிப் போட்டது? எனச் சான்றுகளை முன்வைத்துப் பேசினார். எங்கோ உள்ள எத்தியோப்பியாவில் பிறந்த கறுப்பரும் அடிமையுமான பிலால் (ரலி) அவர்களை, "எங்கள் தலைவரே!" என்று குலப்பெருமை தலைக்கேறிக் கிடந்த குரைஷியருள் ஒருவரான உமர் பின் அல்கத்தாப் (ரலி) வாஞ்சையுடன் அழைக்க வைத்தது எது? என்ற கேள்வியுடன் தொடங்கி, லா இலாஹ இல்லல்லாஹ்வின் முதல் அழித்தொழிப்பு இலக்கு, தீண்டாமைதான் என்றார். தங்களது இல்லங்களில் இருக்கும் மதுக் குடங்களின் எண்ணிக்கையைத் தங்களின் பெருமைக்குச் சான்றாகப் பேசித் திரிந்த அரபியருள், மொடாக் குடியராகத் திகழ்ந்த ஹம்ஸா (ரலி) அவர்களை ஒழுக்கத்தின் உறைவிடமாக, அல்லாஹ்வின் சிங்கம் என்ற சிறப்புப் பெற்றவராக மாற்றியமைத்தது லா இலாஹ இல்லல்லாஹ் என்றார்.

அதன்பின், நூல் வெளியீடு தொடங்கியது.

"தோழர்கள் - முதல் பாகம்" நூலின் முதல் பிரதியை, அமர்வுத் தலைவர் அதிரை அஹ்மது அவர்கள் வெளியிட, தொழிலதிபர் A.Y. நாஸர் (மலேஷியா) பெற்றுக் கொண்டார். சகோ. A.Y. நாஸர் அவர்களின் சென்னை நிறுவனத்தில் நூலாசிரியர் நூருத்தீன் அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன்னர் பணியாற்றியவராம்.

இரண்டாவது பிரதியை, நூலாசிரியர் நூருத்தீன் வெளியிட, பழனியப்பா ப்ரதர்ஸ் (பிரிண்டர்ஸ்) உரிமையாளர் செல்லப்பன் பெற்றுக் கொண்டார். இவரும் சகோ. நூருத்தீனின் முன்னாள் முதலாளியாம்.

மூன்றாவது பிரதியை, சத்தியமார்க்கம்.காம் இணைய இதழாசிரியர் ஜமீல் வெளியிட, நூலாசிரியருக்குத் "தோழர்கள்" தொகுப்பில் ஊக்கமும் ஒத்துழைப்பும் நல்கிவரும் அவரின் துணைவியார் சகோதரி ஸைபா பெற்றுக் கொண்டார்.

அடுத்து, சிறப்புரையாற்ற வந்த பேரா.அ.மார்க்ஸின் உரை, ஆழமானதாக, கருத்துச்செறிவுடனும் விவரணங்களுடனும் அமைந்திருந்தது. இயக்கமாகப் பரிணமித்த இஸ்லாம், தன் குறிக்கோள்களில் அடைந்த வெற்றி பற்றிய ஓர் ஆய்வுரையாகவும் எளிமையானவர்களையே முன்னிலைப்படுத்திய இஸ்லாம் குறித்த மதிப்புரையாகவும் உலக இன்பத்தினைப் பொருட்படுத்தாமல், மறு உலக வெற்றி என்னும் குறிக்கோளினை முன்னிறுத்தி மிக எளிமையாக நபித்தோழர்கள் வாழ்ந்திருந்தும், பின்வந்த சமுதாயத்தவர் பொருளாசையில் புதையுண்டு போனது பற்றிய நேர்ப்பார்வையாகவும் பேரா. அ. மார்க்ஸ் அவர்களின் ஆழிய உரை அமைந்திருந்தது.

நூலைப் பற்றியும், நூலாசிரியரின் பாட்டனாரும் தந்தையாரும் அரபுத்தமிழ் கோலோச்சிய அந்தக் காலத்தில் மார்க்கத்தினைப் பரப்புவதற்குத் தனித் தமிழினைக் கையாண்ட பாங்குமுதல் அவர்தம் அரசியல் நிலைப்பாடுகள், அவர்கள் இயங்கிய பல்வேறு தளங்கள் பற்றிய புள்ளி விபரங்கள் ஆகியவற்றை வெகு இயல்பாக எடுத்துரைத்தார் பேரா. மார்க்ஸ். பிறகு, பெரியார் முன்மொழிந்த இஸ்லாம்; அவருடன் இணக்கம் / பிணக்கம் கொண்ட இஸ்லாமியர்கள் என்று தனக்கேயுரிய பாணியில் அடுக்கடுக்காய் அடுக்கிகொண்டே இருக்க, அவர்மேல் பொறாமையும் பிற்பாடு பேரா. அப்துல்லாஹ் குறிப்பிட்டதைப்போல வெட்கமாகவும் இருந்தது.

அதன்பின்னர் சிறப்புரை ஆற்றிய முனைவர். பேரா. அப்துல்லாஹ், நிகழ்வின் சூழல் தமக்குப் பாடசாலை வகுப்பறையைப் போன்று தென்படுவதாகக் கூறினார். இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்துஎன்று கூறிடுவதற்கு முன்பும் பின்பும், பல சந்தர்ப்பங்களில் இஸ்லாம் பற்றித் தந்தை பெரியாரின் சிலாகிப்பைப் பட்டியலிட்ட பேராசிரியர், குலத் தாழ்ச்சி உயர்ச்சி பாராத, மானுடப் படைப்பில், அடுக்குநிலை வேறுபாடு காட்டாத ஏகக்கடவுளை, சரியாக எடுத்துச் சொல்லியிருந்தால் ஏற்பதற்குப் பெரியாரும் இசைவுடன் இருந்தார் என்பதைச் சுட்டினார் பேராசிரியர். நாம் தான் வாய்ப்பைத் தவறவிட்டோம்”. தமக்கு முன்னர் சிறப்புரையாற்றிய பேரா. அ.மார்க்ஸ் அள்ளித் தெளித்த புள்ளி விபரங்களைப் பற்றி வியப்புத் தெரிவித்த பேரா. அப்துல்லாஹ், "இவர் ஏன் இன்னும் இஸ்லாமியர் ஆகாமலிருக்கிறார்?" எனும் வினாவையும் முன்வைத்தார்.

சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பேராசிரியர் அப்துல்லாஹ்வின் பேச்சு, நூலாசிரியர் நூருத்தீனின் பாட்டனார் பெரியவர் தாவூத்ஷா, தகப்பனார் என்.பி.அப்துல்ஜப்பார் ஆகியோரைப் பற்றிய நினைவலைகளையும் கொண்டிருந்தது.

சாதாரண கவுன்ஸிலர் பதவிக்கே மானம் மரியாதையைத் துறந்துவிடத் துணிகின்ற இந்தக் காலத்தில், ஆளுநர் பதவி வீடுதேடி வந்த போதும் அதைக் கண்டு ஓடி ஒதுங்கிய நபித்தோழர்களின் பற்றற்ற நிலை பற்றி எடுத்துரைத்தார் பேரா. அப்துல்லாஹ். அண்ணலின் தோழர் அபூதர்தா (ரலி) அவர்கள் வாழ்ந்த, நம் கற்பனைக்கு எட்டாத எளிய வாழ்க்கையை நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு, வழக்கம்போல் பல உளவியல் நுட்பங்களைத் தன்னகத்தே கொண்டிருந்த பேரா.அப்துல்லாஹ்வின் பேச்சில் ஏகத்துவக் கலிமாவைத் தோழர்கள்உணர்ந்ததைப் போன்றே முழு முஸ்லிம் சமுதாயமும் உணரவேண்டுமென்ற வேட்கை இருந்தது.

நூலாசிரியர் நூருத்தீனின் எழுத்து நடையைப் புகழ்ந்துவிட்டு, அந்தக் காலத்தில் வாழ்ந்த தோழர்களைப் பற்றி எழுதுவதைப் போலவே இஸ்லாத்தினை புரிந்து, அதன் மகத்துவம் உணர்ந்து அதன் மேல் விழும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறி அதற்காகப் பரிந்து பேசிக் கொண்டு நம் சமகாலத்தில் வெளியே ஒரு தோழர்கள் கூட்டமே உள்ளது அவர்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

"
இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து" என்பது மட்டுமே பெரியார் இஸ்லாத்தினைப் பற்றிப் பேசிய ஒரே விஷயம் என்பது போல அனைவரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 1923லேயே கேரளத்தில் தங்கள்மேல் திணிக்கப்பட்ட இழிவு நீங்க ஒரே வழி பெரியாரின் அறிவுரையின்படி இஸ்லாத்திற்கு மதம் மாறுவதே என்று தீர்மானம் நிறைவேற்றி அன்றே 50 பேர் அளவுக்கு இஸ்லாத்திற்கு மாறியதைப் பற்றியும் இன்னும் பலப் பல நிகழ்வுகளில் இஸ்லாத்தைப் பற்றி பெரியார் பேசியதையும் குறிப்பிட்டார்.

அமர்வுத் தலைவர் அதிரை. அஹ்மது அவர்களின் கணீர்க்குரலில் சத்தியமார்க்கம் தளக் கவிஞர் சபீர் எழுதிய தோழர்கள்கவிதை வாசிக்கப்பட்டு வரவேற்புப் பெற்றது:

தோழர்கள்...

சத்தியமார்க்கம் தளம் பதிக்கும்
முத்திரைத் தடம்!
தொடராக வந்த
சுடர்!

போர்க் களங்களைப்
பூக் குளங்களாகக் கண்டு
வாட்களோடு வாழ்ந்த
ஆட்களின் சரிதை!

கொல்லத் துடித்த எதிரிகளை
ஓரிறைக் கொள்கையில்
அடக்கிய நபியை...
ஆயிரம் துண்டுகளாக அறுத்துப்போட்டாலும்
அரணாகக் காத்த
தோழர்கள் சரிதை!

நபித் தோழர்களைப் பற்றி
நம் தோழரின் நூல்!

சாமானிய மனிதர்களின்
ஈமானியத் தியாகங்கள்
இதன்
நாயகர்கள் நடிகர்களல்லர்
எனினும் நட்சத்திரங்கள்!

வரலாற்றுக் குறிப்புகள் வடிவில்
வாழ்க்கை நெறிகள்!

இந்நூல்...
படிப்பதற்கு மட்டுமல்ல
படிப்பினைக்கும்தான்!

அடுத்து,


1.
பேரா. டாக்டர் அப்துல்லாஹ்
2.
பேரா. அ. மார்க்ஸ்
3.
பன்னூலாசிரியர் அதிரை அஹ்மது
4. "
தோழர்கள்" நூலாசிரியர் நூருத்தீன்
5. "
தோழர்கள்" நூலைக் குறுகிய காலத்தில் மிகச் சிறப்புடன் அச்சிட்டுத் தந்த, க்ராஃபிக் பார்க் ஸாதிக் பாட்சா

ஆகிய ஐவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் நால்வருக்கும் நினைவுப் பரிசுகளை, சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகி சகோ. முஹம்மது சர்தார் வழங்கினார். க்ராஃபிக் பார்க் சகோ. ஸாதிக் பாட்சாவுக்கு சத்தியமார்க்கம்.காம் இணைய இதழாசிரியர் ஜமீல் வழங்கினார்.



ஏற்புரை வழங்க வந்த நூலாசிரியர் நூருத்தீன், இஸ்லாம் நிலைபெற, எழுத்தையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டிருந்த அர்ப்பணிப்பாளர்களான தம் பாட்டனாரோடும் தந்தையாரோடும், ஓய்ந்த பொழுதில் 'ஏதோ எழுதுகின்ற' தம்மை ஒப்பிடக்கூடாது எனும் வேண்டுகோளுடன் தொடங்கினார். நபித் தோழர்களின் தியாகங்களை எடுத்துச் சொல்லும்போது இடையிடையே உணர்ச்சிப் பெருக்கெடுத்துக் கண்கலங்கி, நம்மையும் கலங்கவைத்தார். குறிப்பாக, இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டதற்காக நபித் தோழர் கப்பாப் பின் அல்-அரத் (ரலி) ஏற்றுக் கொண்ட கொடுமைகளைச் சொல்ல வரும்போது, பேசமுடியாமல் தொண்டை அடைக்க சற்று நேரம் நின்றுவிட்டார். இறுதியாக, தம் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். சத்தியமார்க்கம் குழுவினரைப் பாராட்டிப் பேசவும் தவறவில்லை. "தோழர்கள்" நூல் வாசிப்பதற்கு மட்டுமல்ல; வாசித்தவற்றை நம் வாழ்க்கையில் செயல்படுத்துவதற்காக என நாம் உறுதி கொள்ளவேண்டும் என்று கூறி முடித்தார்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, வலைஞர் ஜமாலுத்தீன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி, 'அமர்வுப் பிரார்த்தனை'யுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது, அல்ஹம்து லில்லாஹ்.

தோழர்கள் - முதல் பாகம் கிடைக்குமிடங்கள்:

Shajidha Book Center
248 Thambu Chetty Street
Mannady, Chennai - 600 001
Tel : +91 44-25224821, Mobile : +91 9840977758

Aysha Publications
78 Big Street
Triplicane, Chennai - 600 005
Tel : 91 44-43568745

Salamath Pathippagam
95, Linghi Chetty Street
Mannady, Chennai 600 001
Tel : +91-44-25211981; 42167320
Basharath Publishers
83, Angappa Naicken Street
Mannady, Chennai 600 001
Tel : +91-44-25225028; Mobile : +91-944424035

குமரியில் : அன்ஸார், மொபைல் : +91 9786220915
அதிரையில் : அப்துர் ரஹீம், மொபைல் : +91 9944824437
அமெரிக்காவில் : நூருத்தீன், மொபைல் +1 2062726936
தம்மாமில் : நஸ்ருத்தீன், மொபைல் : +966 50-3841699
துபையில் : இம்ரான் கரீம், மொபைல் : +971 55-9739408
குவைத்தில் : அப்துல் கரீம், மொபைல் : +965 97919697
கத்தரில் : முஹம்மத் சர்தார், மொபைல் : +974 55515648