Showing posts with label நூல் வெளியீடு. Show all posts
Showing posts with label நூல் வெளியீடு. Show all posts

நூல் வெளியீட்டுக் களமும் - நூல் இடைவெளி காலமும் - நன்றி ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 11, 2015 | , , ,


எல்லாப் புகழும் இறைவனுகே ! (அல்ஹம்துலில்லாஹ்)

'நபிமணியும் நகைச்சுவையும்

சென்னை - துபாய் - அமெரிக்கா விமானப் பயணம் இடையே சற்று தாமதமானதால் விதைக்கப்பட்ட விதை, நபிகளாரின் நகைச்சுவையுணர்வு எவ்வாறு இருந்தது என்று எடுத்துரைத்த கணமே முடிவானது 'நபிமணியும் நகைச்சுவையும்'.

அதிரைநிருபர் வலைத்தளத்தில் தொடராக வாசித்த அனைவரையும் தன் வசப்படுத்தி வெற்றி முகம் காட்டி வென்றெடுத்தது ஏராளமான உள்ளங்களை! - புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!

இருபத்தி ஏழு வாரங்கள் தொடர்ந்து வெளியாகி நிறைவு பெற்றதும் முடிவெடுத்தோம் நூல் வடிவமெடுக்க அடுத்த முயற்சியில் ஈடுபடுவதென!

நூல் எவ்வாறு இருக்க வேண்டும் எதனை தன்னகத்தே கொண்டிருக்கிறது என்று எவ்வகையில் எடுத்துச் சொல்வது என்ற ஆலோசனைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டது, நிறைவில் அழகான அட்டைப்படம் வடிவமைத்து அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.

இணையத்தில் தொடர் வெற்றி நடை போட்டது உண்மையே! அது நூலாக வெற்றி நடை போட அதன் நடையழகையும், வரிகளும் அதன் வடிவும் சரிபார்க்க எங்கள் மூத்தோர் இருவரின் பார்வை அவசியம் என உணர்ந்ததால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அவர்களின் பார்வையும் கையும் பட்டதும் புத்துணர்வு பெற்றோம்.

நல்லதொரு, மெருகேற்றலுடன் நூலாசிரியர் அவர்கள் மீண்டுமொரு வரைவாக அனுப்பித் தந்த அனைத்து தொடரையும் அச்சுக்கு அனுப்பி வைக்க முடிவானது.

நூலாசிரியரும் நூல் வெளியீட்டுக்கான நாள் என்னவென்றும் அறியத் தந்ததால், நாட்கள் மிகக் குறைவாக இருப்பதை உணர்ந்தோம். அடியெடுத்து வைத்து விட்டோம் அயர்ந்து இருக்கமாட்டோம் என செயல்வடிவம் பெற்றது !

கிடைத்த இருபத்தி மூன்று நாட்களில் (இடைவெளி) டெஸ்க் டாப் பப்ளிஸிங் (Desktop Publishing) என்றிருப்பதை ரிமோட் டெஸ்க்டாப் பப்ளிஸிங் (Remote Desktop Publishing) ஆக மாற்றி அனைத்து பனிகளையும் மின்னஞ்சல், கணினிகளுக்கிடையே ஊடுருவல் என்று தொடர்ந்து ஈடுபட்டு திருத்தங்கள் அனைத்தையும் எவ்வித வருத்தங்களுமின்றி அதன் பொருத்தமான நூல்வடிவம் பெற உழைத்தோம்!

குறித்த நாட்களில், நேரத்தில் அழகிய வடிவத்தில் நூல்கள் அனைத்தும் எமது இருப்பிடம் தேடி வந்தது அல்ஹம்துலில்லாஹ்!

நன்றி மறப்பது நன்றன்று!

குறிப்பாக சகோதரர்கள் அதிரை அறிஞர் (அதிரை) அஹ்மது, கணினியறிஞர் ஜமீல் M ஸாலிஹ், நூல் ஆசிரியர் - இக்பால் M.ஸாலிஹ், 'தோழர்கள்' நூருத்தீன்,  பேராசிரியர் NAS ஷாஹுல் ஹமீது,‘எழுத்தறிஞர் இபுராஹீம் அன்சாரி, அதிரைநிருபர் பதிப்பகத்தின் அனைத்து சகோதரர்கள், கலர்லைன் மற்றும் அச்சகத்தார்கள், ரஹ்மத் & மான் (சென்னை-அதிரை-சென்னை) பேருந்து நிறுவனத்தார்கள், அதிரைநிருபர் பங்களிப்பாளர்கள், இன்னும் எமது பிரியத்திற்குரிய வாசககர்கள் அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியினை என்றும் உரித்தாக்கி ஒத்துழைத்த அனைவருக்காகாவும் வல்லமை நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

இந்நூல் எழுத்துரு பெற்றதிலிருந்து அச்சாகி முழு'நிலவாக' வெளியீட்டு நிகழ்வுவரை அனுபவித்த சுவராஸ்யங்களையும் கலந்தாய்வுகள் பற்றிய விபரங்கள் மற்றுமொரு பதிவாக விரைவில் இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் பதிப்பகம்

இன்று - நூல் வெளியீடு ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | June 06, 2015 | , , ,

الحمد لله رب العألمين ، و الصلاة و السلام على سيد المرسلين و على آله و أصحابه أجمعين  

வாழ்க்கை  என்பது  வாய்கெடச்  சிரிப்பதும்,
சீழ்க்கை  யடித்துச்  சிரிப்பை  மூட்டலும்,
சிறப்பாம்  வாழ்வைச்  சிரிப்பாய்  ஆக்கிப்
பொறுப்பாய்  வாழாப்  பொய்மை  மக்களின்
கானல்  வாழ்வைக்  கடைப்பிடித்  தொழுகல்
ஈனம்  அன்றோ!  இதுதான்  வாழ்வா?

மாறாய் –
உளத்திலும்  சொல்லிலும்  உண்மையைத்  தேக்கி,
அளப்பரும்  அருளால்  ஆண்டவன்  தந்த
நல்ல  வாய்ப்பாம்  நகைச்சுவை  தன்னை
மெல்ல  எடுத்து  மிகையிலா  விதத்தில்
சொல்லிடா  திருப்பதும்،  சோகம்  ததும்ப
மல்லிட்  டிருப்பதும்  வாழ்க்கையா?  சொல்வீர்?


உண்மையில் –
நகைச்சுவை  யென்று  நமக்கெலா  முண்டு!
பகைச்சுவை  யன்றது;  பண்பு  நபியார்
பயனுறு  வாழ்வில்  பளிச்சிடச்  செய்த
நயனுடை  நாயன்  நல்கிய  வரமது!

இதனையே  தம்பி  இக்பால்  தொகுத்துப்
பதவுரை  செய்தனன்  பயனுற  நமக்கே!
மகிழ்ச்சிக்  குரியவிம்  மாபெரும்  மன்றின்
நிகழ்ச்சியில்  மூவர்  நெருங்கியுள்  ளார்கள்.
வழங்கும்  பொறுப்பில்  நானுளேன்  அதனால்
முழங்குவோம்  ‘பிஸ்மி’யை  முகமனின்  முன்னே!

வாழ்த்தி வெளிட்டு வழங்குபவர்,

அதிரை அஹ்மத்

சில புகைப்படங்கள் இதோ.. விபரம் விரைவில்








ஆறாம் மாதம் ஆறாம் நாள் - நூல் வெளியீடு ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | June 05, 2015 | , ,

அல்லாஹ்வின் அருளால்...



ஆறாம் ஆண்டு துவக்கத்தில் [2015]

ஆறாம் மாதம் [ஜூன்]

ஆறாம் நாள் [6ம் தேதி]

மற்றுமொரு வெளியீடாக...

'நபிமணியும் நகைச்சுவையும்'

நூல் வெளியிடுகிறோம் !

இடம் : நூலாசிரியரின் இல்லத் திருமண நிகழ்வு நடக்கும் லாவண்யா திருமண மண்டபம்.

நேரம் : 11:30 மணியளவில்

இன்ஷா அல்லாஹ் !


அதிரைநிருபர் பதிப்பகம்

தோழியர்... 15

அதிரைநிருபர் பதிப்பகம் | August 31, 2014 | , , , ,

சத்தியமார்க்கம்.com 'தோழியர்' நூல் வெளியீடு நிகழ்வில் அதிரைநிருபரின் ஆஸ்தான கவிஞர் சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் அவர்களால் எழுதி வாசிக்கப்பட்ட கவிதை.

தோழியர் !

புதினத்தின் சுவையில்
போதனைகள்;
புனைவுகளற்ற
புனிதவதிகளின்
வரலாற்றுப் பக்கங்கள்!

சோதனை காலத்தின்
சுவடுகள்;
வலி நிறைந்த
வழித் தடத்தின்
பயணக் குறிப்புகள்!

உயிர்த் தியாகம்
உடல் வருத்தம்
உளத் தூய்மை என
உன்னதத் தோழியரின்
மொத்த அர்ப்பணிப்பைச் சொல்லும்
புத்தகம்!

போர்முனைக்கும்
புலம்பெயர்ந்து போதிக்கவும்
தோழர்கள்;
பின்புலமாய்
பெரும் துணையாய்
ஊழியராய்
தோழியர்!

ஆண் எழுத்தாளரின்
ஆதிக்கத்தில்
பெண்களுக்கான வக்காலத்து!

சஹாபியப் பெண்களின்
இறையச்சம் மெச்சி
சமகாலப் பெண்டிருக்கு
வகுப்பெடுக்கிறார் ஆசிரியர்!

தோழர்களுக்குச்
சளைத்தவர்கள் அல்லர்
தோழியர் -
நூலிலும் நூருத்தீனிலும்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
நன்றி : சத்தியமார்க்கம்.com

அதிரை அஹ்மது அவர்கள் எழுதிய நூல் இன்று வெளியிடப்படுகிறது ! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | January 15, 2014 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிரை அறிஞர் பன்னூல் ஆசிரியர் மரியாதைக்குரிய அதிரை அஹ்மது அவர்கள் எழுதிய புத்தகங்கள் தமிழகத்தில் பிரபலமான பதிப்பகங்களால் வெளியிடப்படுகிறது...

சிறார்களுக்கான 10 பாகங்கள் கொண்ட அற்புதமான சுவைகளடங்கிய புத்தகம் ஐ.எஃப்.டி (IFT) பதிப்பகத்தால் இன்று சென்னை புத்தக காட்சியில் வெளியிடப்படுகிறது.

மற்றொரு தலைப்பான 'தலைமைத்துவம்' என்ற நூல் இலக்கியச் சோலை பதிப்பகத்தாரால் வெகு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

அடுத்ததாக 'மொட்டுக்களே மலருங்கள்' என்ற நூல் 'த்ரியம் பப்ளிஷர்' நிறுவனத்தால் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

அதிரைநிருபர் தளத்தில் வெற்றிகரமாக வெளிவந்த "கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை" நூல் வடிவம் பெற்று விரைவில் வெளிவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அதிரைநிருபர் பதிப்பகம்

அதிரைநிருபர் பதிப்பகம் - "மனுநீதி மனித குலத்துக்கு நீதியா " நூல் வெளியிட்டது ! 29

அதிரைநிருபர் பதிப்பகம் | December 09, 2012 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... 

அல்ஹம்துலில்லாஹ் !

இன்று (09-டிசம்பர்-2012) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்புடனும் எளிமையாகவும் நிறைவுற்றது.

எங்கள் அன்பான அழைப்பிற்கு ஆதரவு தந்து வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.

நிகழ்வு சிறப்புடன் துவங்கியது, அதிரை தாரூத் தவ்ஹீத் அமீர் அதிரை அஹ்மது B.A., அவர்கள் தலைமை தாங்கினார்கள் அதனைத் தொடர்ந்து, வரவேற்புரை சகோதரர் M. தாஜுதீன் M.B.A., நூல் அறிமுக உரை சகோதரர் தீன்முகமது B.Sc .B.G.L., நிகழ்த்தினார்கள்.

அதிரை தாருத் தவ்ஹீத் செயலாளர் சகோதரர் ஜமீல் M.ஸாலிஹ் அவர்கள் முதல் பிரதியை வெளியிட அதனை சகோதரர் எஸ். முகமது பாரூக் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்

வாழ்த்துரையை சகோதரர்கள் M.L. அஷ்ரப் அலி M.A.B.L மற்றும் அப்துல் முனாஃப் B.A.B.L., வழங்கினார்கள்

நிகழ்வின் நிறைவாக நூல் ஆசிரியர் சகோதரர் இப்ராஹீம் அன்சாரி M.Com., அவர்கள் தனது ஏற்புரையுடன் நன்றியுரை வழங்கினார்கள், இது ஒரு நெகிழ்வான நிகழ்வாக அமைந்தது.

மேலும் விபரங்கள் விரைவில்....

நூல் வெளியீட்டு நிகழ்வு புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக.









அதிரைநிருபர் பதிப்பகம்

‘விழிப்புணர்வு பக்கங்கள்’ - புத்தகம் வெளியீடு அறிவிப்பு 20

அதிரைநிருபர் பதிப்பகம் | May 31, 2012 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும்! (வரஹ்)...

எல்லாப் புகழும் இறைவனுக்கே !

நமது சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, விழிப்புணர்வைத் தூண்டும் விதமாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டுரைகளை எளிய வடிவில் அமைத்து,  நமதூரைச் சார்ந்த சகோதரர்களின் இணையதளம் மற்றும் வலைப்பூக்கள் போன்றவற்றில் பதிந்துவருகின்றவற்றில் கீழ்க்கண்ட கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, ‘விழிப்புணர்வு பக்கங்கள்’  என்ற பெயரில் என் முதல் நூலாக வெளியிட ஏற்பாடு செய்துள்ளேன். ( இன்ஷா அல்லாஹ் ! )


1. சீட்டுக் கட்டு ராஜா !
2. ரேஷன் கடைகளில் முறைகேடா ?
3. லஞ்சமா ?
4. கலெக்டரிடம் புகார் செய்ய !
5. தகவல் அறியும் உரிமைச் சட்டம்
6. கவனம்: நிலம் வாங்கும் முன் !
7. பேரூராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் ?
8. கொசு(த்) தொல்லையிலிருந்து விடுபட...
9. கலப்படம் – ஓர் எச்சரிக்கை !
10. சிட்டுக் குருவியைக் காணவில்லை !
11. வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு !
12. வேலைவாய்ப்பு ! ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?
13. V.A.O. வின் பணிகள் யாவை ?
14. புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி ?
15. தண்ணீர் சேமிப்பீர் !
16. அதிரைக் கடல் !
17. குடிக்காதே !
18. அதிரையின் விருந்து உபசரிப்புகள் !
19. மந்திரவாதி !
20. TEEN AGE – பருவம் !
21. கள்ளக் காதல் !
22. மரணத்தின் நிரலாக.....!
23. பயண அனுபவங்கள் 

1. எனக்கு ஊக்கம் கொடுத்து, நல்ல பல ஆக்கங்களைப் பெறும் விதமாகப் பின்னூட்டமிட்டும், நேரிலும், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு அன்பைக் காட்டிய உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நண்பர்கள், உறவினர்கள், சகோதர சகோதரிகள் மற்றும் சகப் பதிவர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகளை அன்புடன் அறிவித்தவனாக.!

2. பல வேலைகளுக்கிடயே எனக்காக நேரத்தை ஒதுக்கி, இந்நூலில் உள்ள எழுத்துப் பிழைகளைச் சரிசெய்து தந்ததோடு, நல்ல ஆலோசனைகளை வழங்கிய மூத்த சகோ. அதிரை அஹமது அவர்களுக்கும், எனக்கு ஊக்கம் கொடுத்ததோடு, நல்ல பல ஆலோசனைகளை வழங்கிய மூத்த சகோ. ஜமீல் M.ஸாலிஹ், மற்றும் வலைத் தள நிர்வாகிகள், சக பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளை அன்புடன் அறிவித்தவனாக.!

3. மேலும் எண்ணற்ற வலைத் தள நண்பர்களை உருவாக்கித் தந்து, எழுத்து மற்றும் எழுத்து சார்ந்த நல்ல பல விசயங்களை நான் மேலும் கற்றுக்கொள்ள நல்ல அடித்தளமாக அமைத்துக் கொடுத்த நமது அதிரைச் சகோதரர்களின் வலைத்தளங்கள் மட்டுமே என்றால் மிகையாகாது ! நாம் அதிகமாகப் பேசாவிட்டாலும் நமது எழுத்துகள் கண்டிப்பாக அடுத்தவர்களை விழிப்புணர்வு பெறவைக்கும் (இன்ஷா அல்லாஹ்!) என்ற நம்பிக்கையில்.! 

4. இது ஒரு இலவச வெளியீடாகும். எனது சொந்தச் செலவில் முதல் பதிப்பாக ஆயிரம் பிரதிகள் அச்சிடுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளேன் என்பதையும்.!

5. இந்நூலை நமதூரிலும் வெளிநாடுகளில் உள்ள நமது சமுதாயம் சார்ந்த பொது அமைப்புகளிடமும் வழங்கி, வெளியிட ஏற்பாடு செய்து, அதன் மூலம் கிடைக்கப்பெறுகிற நிதியை அந்தந்தப் பொது அமைப்பின் சமுதாயச் சேவைகளுக்கென்று பயன்படுத்திக் கொள்வதற்கும் கேட்டுக்கொள்ளலாம் என எண்ணியுள்ளேன். இதற்காகத் தங்களின் மேலான கருத்துகள் – ஆலோசனைகளை எதிர்பார்த்தவனாக.!

6. மேலும் நமது இணையதள வாசகர்கள் படிப்பதற்கு இலகுவாக நமது சகோதர வலைத் தளங்களில் “நூல் வடிவில்” (E-BOOK) பதிவேற்றம் செய்யப்படும் (இன்ஷா அல்லாஹ்!) என்பதையும்.!

7. இப்புத்தகம் மூலமாக நீங்கள் பெறப்போகும் பயனை உங்கள் மூலமாகப்  பலரும் இலவசமாகப் பெறுவதற்கு நீங்கள் மறுபதிப்பு செய்து வெளியிட எனக்கு முழு சம்மதம் என்பதையும்.!

8. இப்புத்தகத்தின் பாகங்கள் ஒன்று இரண்டாகி, மூன்று நான்காகி........என சக பதிவர்களின் சமுதாய விழிப்புணர்வு கட்டுரைகள் பங்களிப்புடன் தொடர வேண்டும் என்பதையும்.!

இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். 

அன்புடன்,

-சேக்கனா M. நிஜாம்

தோழர்கள் வரலாறு - நூல் வெளியீடு - சத்தியமார்க்கம்.com அழைக்கிறது ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | September 07, 2011 | , ,


அல்லாஹ்வின் திருப் பெயரால்....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பரவலாக அறியப் படாத நாயகர்கள் வரலாற்றில் நிறையப் பேருண்டு. அவர்களுள் தியாகமும் நேர்மையும் எளிமையும் வாய்மையும் வாய்க்கப் பெற்று அவற்றைத் தம் வாழ்வில் வாழ்ந்து காட்டிய நபித்தோழர்கள் பலரை நம் சமுதாயம் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறதா என்பது ஐயமே!

அந்தக் குறையைப் போக்கும் முகமாக சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மூலம் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான சிறந்த எழுத்தாளரான சகோதரர் நூருத்தீன், "தோழர்கள்" எனும் தலைப்பில் தொடராகப் பல வரலாற்று நாயகர்களை தொடர்ந்து அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார். 

பொதுவாக, வரலாறு என்பது வாசிப்பதற்கு மட்டுமன்று; எடுத்தும் தடுத்தும் வாழ்வதற்கான வழிகாட்டல் நிறையப் பெற்றதே வரலாறு என்பதாகும்.

வாருங்கள் வாசிப்போம்; முற்றாக இயலா விட்டாலும் முடிந்தவரை வாழ்ந்து விடுவோம்!



அன்பிற்கினிய வாசக நேசங்களுக்கு,

நம் அதிரைநிருபர் வலைத்தளமும் ஊரிலிருக்கும் சகோதரர்களிடம் வேண்டுவது, இதனை நேரடி அழைப்பாக ஏற்று அவசியம் சிரமம் பாராமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் சத்தியமார்க்கம்.com வலைத்தளம் பதிப்புலக உலகில் முதல் அடி எடுத்து வைக்கிறது. இவர்கள் (சத்தியமார்க்கம்.com வலைத்தளம்) சாதிக்க இணைந்தவர்கள். இவர்களின் இம்முயற்சி நிச்சயம் யாவருக்கும் நன்மையை நாடியே இருக்கும் இன்ஷா அல்லாஹ்.

இந்த புத்தகம் வெளிவர அயாரது பாடுபடும் அனைத்து சகோதரர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக, அவர்களின் நற்கருமங்களை வல்ல நாயன் அங்கீகரிப்பானாக.

எங்களின் வாழ்த்தும் துஆவும் என்றும் நிலைத்திருக்கும் இன்ஷா அல்லாஹ்...

- அதிரைநிருபர் குழு

தோழர்கள் நூல் வெளியீடு அழைப்பிதழ்!