Showing posts with label சம்சுல் இஸ்லாம் சங்கம். Show all posts
Showing posts with label சம்சுல் இஸ்லாம் சங்கம். Show all posts

துபாயில் சம்சுல் இஸ்லாம் சங்கம் முஹல்லா குடும்பங்களின் சந்திப்பு (08-NOV-2013) 7

அதிரைநிருபர் பதிப்பகம் | November 11, 2013 | , ,

கடந்த வெள்ளிக்கிழமை (08-11-2013) துபாயில் நடந்த SIS குடும்ப சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும்  முற்றிலும் புதிய, உற்சாகமான அனுபவம் ஏற்பட்டதாகவும், இதுபோன்ற சந்திப்புகள் மூலம் குழந்தைகள் மற்றும்  மஹல்லாவாசிகளிடையே பரஸ்பர புரிந்துணர் புதுப்பிக்கப்பட்டதாகவும் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.  குறிப்பாக வெளிநாட்டு வாழ்க்கையில் கணவர்மார்களின் பணி அழுத்தம் காரணமாக குடும்பத்தினரும் இத்தகைய  மகிழ்ச்சியான நிகழ்வுகளில் கலந்துகொள்ள வாய்ப்பு அரிதாகக் கிடைக்கும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும்  இந்நிகழ்வு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்ததைக் காணமுடிந்தது.


நிகழ்ச்சி ஏற்பாடு முதல் பரிசளிப்புக்குப் பிறகு ஏக்கத்துடன் கலைந்து சென்றது வரையிலான நிகழ்வுகளை அதிரை  இணையதள வாசகர்களுக்காக தொகுத்து வழங்குகிறேன்.

1) கடந்த ஹஜ் பெருநாளன்று கோர்ஃபக்கான் கடற்கரையில் ச.இ.ச மஹல்லாவாசிகள் குடும்ப பெருநாள் சந்திப்பு  நடந்தது. போதிய முன்னேற்பாடுகளின்றி நடத்தப்பட்டதால் பெரும்பாலோருக்குக் கலந்துகொள்ளும் வாய்ப்பு  கிடைக்கவில்லை. ஆகவே, அத்தகைய சந்திப்பை மீண்டும் ஏற்படுத்துவதுதென முடிவு செய்யப்பட்டது.

2) இதற்கான திட்டமிடலை சகோ.ஏர்லிங் தமீம் அவர்களின் தலைமையில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி துபாய்  மம்சார் கடற்கரையில் மஹல்லாவாசிகளின் அமர்வில் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

3) நவம்பர் 8,2013 வெள்ளிக்கிழமை முஷ்ரிஃப் பார்க்கில் நடக்கும் குடும்ப சந்திப்பு நிகழ்ச்சிக்கான உணவுக்கான  ஏற்பாடுகளை சகோ.அப்துல் ஹக் (ETA) மற்றும் நூர் முஹம்மது ஆகியோர் பொறுப்பேற்றனர்.


4) குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளுக்கு சகோ.சாகுல் (தலைவர், அபுதாபி-அய்மான்) (பரிசு பேக்கிங்)  மற்றும் N.ஜமாலுதீன் (போட்டிகள் ஒருங்கிணைப்பு) பொறுப்பேற்றுக் கொண்டனர். 

5) சகோ.ஏர்லிங் தமீம் மற்றும் ஷஃபீக் ஆகியோர் அமீரகத்திலுள்ள SIS மஹல்லா குடும்பத்தினரைத் தொடர்பு  கொண்டு முன்பதிவு மற்றும் பிறஏற்பாடுகளைச் செய்வதற்கான பொறுப்பேற்றுக் கொண்டனர்.


6) காலை 9 மணிமுதல் பார்க்கில் வரத்தொடங்கிய ச.இ.ச மஹல்லாவாசிகளை தொழுவதற்கான பள்ளி மற்றும்  ஒளு செய்யுமிடம், கழிப்பறை வசதியுள்ள மரநிழலுடன் பசுமையான புள்வெளியில் ஒதுக்குப்புறமான இடத்தை  தேர்வு செய்து ஓரிடத்தில் குழுமினர்.

7) மதிய உணவாக ஆம்பூர் கறிபிரியாணி, வெங்காய ராய்தா, பாயசம் ஏற்பாடு செய்யப்பட்டு ஜும் ஆ தொழுகை  முடிந்த பிறகு பரிமாறப்பட்டது.


8) குழந்தைகளுக்கான சாக்லெட் பொறுக்குதல் (கேன்டீஸ் கலெக்சன்) போட்டியுடன் விளையாட்டுப் போட்டிகள்  உற்சாகமாகத் தொடங்கின. 3+ வயதுள்ள குழந்தைகள் இப்போட்டியில் கையில் கோப்பையுடன் போட்டிக்குத் தயாராக இருந்தது பார்வையாளர்களை மட்டுமின்றி பார்க்கிற்கு வந்திருந்தவர்களின் கவனத்தையும் கவர்ந்தது.  இப்போட்டியில் குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லெட் மண்ணில் விழுந்து வீணாகாதபடி தரமான பேக்கிங்  செய்யப்பட்ட சாக்லெட் பயன்படுத்தப்பட்டது.மேலும் இதன்மூலம் சுத்தம் குறித்த விழிப்புணர்வும் குழந்தைகளிடம்  ஏற்பட்டதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். 

9) அடுத்ததாக பேக்-பால் ரேஸ் (BACK BALL RACE) என்ற புதுமையான போட்டி நகைச்சுவையாகவும் பார்ப்போர்  வியக்கும்படியாகவும் இருந்தது.இப்போட்டியில் ஒரு பந்தை இருவர் முதுகில் தாங்கிப் பிடித்தபடி முன்னேறி ஓட  வேண்டும். பந்து கீழே விழுந்தால் போட்டியில் தோற்க நேரிடும்.ஒருவர் வேகமாக ஓடினாலும் பந்து கீழே விழும்.  ஆனாலும் பரஸ்பர ஒத்துழைப்புடன்,கூட்டாக பந்தை முதுகில் தாங்கியபடி ஓடியது முற்றிலும் வித்தியாசமான  பந்தயம்!

10) சாக்கு ஓட்டப்பந்தயத்திற்கான சாக்குகளைத் தேடியபோதுதான் வளைகுடாவில் அரிசி சாக்குகள் 20 கிலோ  கொள்ளளவு கொண்டவை என்பது தெரிய வந்தது. எனினும் தேடிப்பிடித்து மைதா சாக்குகளைத் திரட்டி நான்கு  கட்டங்களாகப் போட்டிகளை நடத்தி முடித்தோம்.பார்வையாளர்களாக இருந்த வெளிநாடு மற்றும் அரபியர்களுக்கு  இந்தப்போட்டி முற்றிலும் வித்தியாசமானதாக இருந்ததை அரபுகுழந்தைகளும் இப்போட்டியை கைதட்டி ரசித்தபடி  உற்சாகப் படுத்தியதிலிருந்து அறிய முடிந்தது.


11) ஆண்களுக்கான ஓட்டப்போட்டியில் 40 வயதுக்குட்பட்டவர்கள் & 40 வயதைத் தாண்டியவர்கள் என்று இரு பிரிவாக நடத்தப்பட்டது. பார்வையாளர்களிலும் சிலர் கலந்து கொண்டனர்.

12) வாயில் ஸ்பூஸ்னைப் பிடித்தபடி அதிலுள்ள எலுமிச்சை பழம் கீழேவிழாமல் ஓடும் போட்டியும் பார்க்க குதூகலமாக இருந்தது. எலுமிச்சை பழத்தை வைத்து இப்படியும் ஒரு போட்டியா? என்று பார்வையாளர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர்! ;)

13) அஸர் தொழுகை முடிந்து சிறார் சிறுமிகளுக்கான பிஸ்கட் கவ்வுதல் போட்டி ஆரவாரமாகத் தொடங்கியது.  நூலில் பிஸ்கெட்டைக் கட்டித் தொங்க விட்டு குதித்து குதித்து வாயால் கவ்வும் போட்டி, பெற்றோர்கள் மட்டுமின்றி  பார்வையாளர்களுக்கும்கூட த்ரில்லிங்கை ஏற்படுத்தியது. சாதாரண நாட்களில் பிஸ்கெட் கொடுத்தால் திண்ணாத  குழந்தைகளும், போட்டிக்காக பிஸ்கெட்டைக் கவ்வுவதற்குக் குதித்தது சுவாரஸ்யமான அனுபவம்.


14) குழந்தைகளும்,ஆண்களும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு கலக்கியதால்,தாய்மார்களுக்கும் போட்டி  ஆர்வம் தொற்றியது.இல்லத்தரசிகளும்,இளம் பெண்களும் கலந்து கொள்ளும் வகையில் ஊசியில் நூல் கோர்ப்பது  மற்றும் கைபையிலிருந்து போனை எடுத்து அறிவிக்கப்படும் நம்பருக்கு மிஸ்டு கால் (Missed Call) கொடுப்பது  ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

15) பல்வேறு போட்டிகள் நடந்தாலும் கலந்து கொள்ள விருப்பமின்றி இருந்தவர்களுக்காகவே கூடையில் பந்து  வீசும் போட்டி நடத்தப்பட்டது. மூன்று வயது முதல் 65+வயதுடையோரும் கலந்து கொள்ளலாம் என்பதால் பேரர்களும்,வாப்பாமார்களும் தாத்தாக்களும் குறி தவறாமல் கூடையில் பந்து வீசுவதற்குப் போட்டி போட்டது  முழுக்க முழுக்க உற்சாகமான குடும்ப நிகழ்ச்சி என்பதை பறைசாட்டியது.

16)அனைத்து போட்டிகளுக்கும் ஒன்று-இரண்டு-மூன்று ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன.முதலிரு இடங்களுக்கான  பரிசுகள் பொருட்களாகவும், மூன்றாம் பரிசாக துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலுக்கான குடும்ப அனுமதி (VIP PASS)   சகோ.F.இப்ராஹிம் வழங்கினார். 

17) சகோ.முஹம்மது ஹுசைன் ஆலிம் (உரிமையாளர்:திரியெம் டைப்பிங் சென்டர்) நான்கு அழகிய டின்னர் செட்  சிறப்புப் பரிசாக வழங்கினார். சகோ.ஜாஃபர் மரைக்கான் மற்றும் சிலரும் சிறப்புப் பரிசுகளை வழங்கினர்.

18) நிகழ்வில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்ட குடும்ப  சீட்டில் பெயர் எழுதிபோட்டு குலுக்கி எடுப்பது.முதல் பரிசாக அரை பவுன் 24காரட் தஙகக்காசு, இரண்டாம் பரிசாக  கால் பவுன் தங்கக்காசு+டின்னர்செட் & மூன்றாம் பரிசாக கால்பவுன் தங்கக்காசு ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன.  தங்கக்காசுகள் அனைத்தையும் அதிரை பெஸ்டிவல் நிறுவன உரிமையாளர் சகோ.ஏர்லிங் தமீம் வழங்கினார்.  போட்டிகளை ஒருங்கிணைத்த விளையாட்டுக் குழுவுக்கும் சிறப்பு பரிசுகள் வழஙப்பட்டன. எனக்குக் கிடைத்தது  டின்னர் செட்!

19) பரிசளிப்பு முடிந்தும் மஃரிப் தொழுகைக்குப் பிறகும் குழந்தைகள் போட்டிகளுக்குத் தயாராக இருந்ததோடு,  தாங்களாகவே மைக்கில் (என் கையிலிருக்கும் மெகாஃபோன்!) தெரிந்த குர்ஆன் ஆயத்துகளை ராகமிட்டு ஓதி  குரல்வளத்தைக் காட்டினர். இவர்களுடன் பார்வையாளர்களாக வந்திருந்த அரபுக் குழந்தைகளும் போட்டியிட்டு  கிராஅத் ஓதி சிறுசிறு பரிசுகளை வென்றனர்.

20) வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தும் சில குடும்பத்தினரின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில்  விளையாட்டுப் போட்டிகள் நடந்ததால் ஒருசில குடும்பத்தினர் கலந்து கொள்ள முடியவில்லை. 

மொத்தத்தில் வெளிநாட்டில் வசிக்கும் அதிரையர்களின் குடும்பத்தினரில் ச.இ.ச மஹல்லாவாசிகளின் குடும்ப  சந்திப்பு அமீரகம் மட்டுமின்றி, அரபு வளைகுடா நாடுகளிலேயே புதுமையானதும் உற்சாகமானதும் என்றால் மிகையில்லை. 

அதிரைக்காரன்
N.ஜமாலுதீன்

அவதூறு, பரப்பும் வலைதளத்திற்கு , ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் விளக்கம் ! 42

அதிரைநிருபர் பதிப்பகம் | September 05, 2012 | , , , , ,


அஸ்ஸலாமு அழைக்கும்,

அதிரை நிருபர் வலைத்தளத்தில் ஹைதர் அலி ஆலிம் அவர்களை பற்றியும், ஷம்சுல் இஸ்லாம் சங்கம் பற்றி திரித்து கூறப்பட்ட செய்திகள், ஒருதலைபட்சமாக உள்ளது.  உங்கள் வலைத்தளத்தில் வந்துள்ள பலரது கருத்துகளும் முழுமையாக விளக்கங்கள்  தரப்படாத காரணத்தினால் வெளிநாடு வாழும்  சகோதர்கள் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் மீது வெறுப்பு ஏற்படுமளவுக்கு, தங்களது வலைதளத்தை வளர்த்து உள்ளீர்கள்.  

ஷம்சுல் சங்கத்தின் தன்னிலை விளக்கம் அனுப்பியுள்ளோம்.  எவ்வித திருத்தமும் இல்லாமல் தங்கள் வலைத்தளத்தில்  இன்றே பிரசூரிகிம்படி கேட்டுகொல்கொறோம்.

அவதூறு, பரப்பும் வலைதளத்திற்கு , ஷம்சுல் இஸ்லாம்  சங்கத்தின் விளக்கம்  ! 


அஸ்ஸலாமுஅலைக்கும்.

நமதூர் அதிராம்பட்டினம், மார்க்க ரீதியிலும் இந்தியச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டும் வாழும் மக்களைக் கொண்ட  ஊராக இருந்து வருகிறது. நமதூரில் நடக்கும் நிகழ்வுகளில் தேவையானபோது தலையிட்டு, மார்க்க ரீதியிலும்  நம் நாட்டுச் சட்ட ரீதியிலும் தீர்வுகளை வழங்க நமது முன்னோர்களால் தோற்றுவிக்கப்பட்ட சம்சுல் இஸ்லாம்  சங்கம் கடந்த 92 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.

உள்ளூர் முஸ்லிம் குடும்பங்களிடையே ஏற்படும்  சிவில் விவகாரங்களில், குறிப்பாக திருமணம், விவாகரத்து, சொத்துப் பங்கீடு போன்றவற்றில் மார்க்க அறிஞர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்றுத் தீர்வுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், நமதூருக்கு மார்க்கச் சொற்பொழிவுக்காக சித்தார்கோட்டையிலிருந்து  அழைத்துவரப்பட்ட கண்ணியத்திற்குரிய ஹைதர் அலி ஆலிம் நமது உள்ளூர் நடவடிக்கைகளுக்கு  ஊறு விளைக்கும்படியாக இயக்க சார்பு இளைஞர்களைத் தூண்டிவிட்டதால் எழுந்துள்ள அமைதியின்மைக்குத்  தீர்வு காண வேண்டியும், அவர் வசிக்கும் பகுதி சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவின் எல்லைக்குள் இருக்கும்  காரணத்தாலும், கடந்த தேதி: 28 அன்று சம்சுல் இஸ்லாம் சங்கதிற்கு நேரில் வந்து விளக்கம் தரும்படிக் கோரப்பட்டது.

ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கும் தக்வா பள்ளி செயலாளருக்கும் இடையே வழக்கு நடந்து வருவதாலும், பொதுவில் பேசுவது வழக்கைப் பாதிக்கும் என்பதாலும், தன்னால் கலந்து கொள்ள முடியாதென்றும்  தெரிவித்த நிலையில், 29அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு சம்சுல் இஸ்லாம் சங்க  நிர்வாகிகள் ஹைதர் அலி ஆலிம் அவர்களது வீட்டிலேயே சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றபோது, வீடு தேடி வந்தவர்களை முகமன்கூறிச் சந்திக்கும் இஸ்லாமியப் பண்பாடின்றி, சுமார் 10-20  நிமிடங்கள் வீட்டுக்கு வெளியே காத்திருக்க வைத்துவிட்டு, "சித்தீக் பள்ளியில் போய் இருங்கள், பேசலாம்" என்று  தெரிவித்தார்.

அவ்வாறே, சங்க நிர்வாகிகளும் சித்தீக் பள்ளிக்குச் சென்றபோது, இயக்க சார்பு இளைஞர்களையும் உடன் வைத்துக்கொண்டு "இப்போது பேசலாம்" என்று சொன்னார். அதற்கு சங்க நிர்வாகிகள், “இயக்க சார்பு இளைஞர்களை வரவழைத்துக்கொண்டு  சங்க நிர்வாகிகளுடன் பேச விரும்புவது சரியல்ல. வெளியூரிலிருந்து எத்தனையோ ஆலிம்கள்  கற்கவும்,  கற்றுகொடுக்கவும் வந்துள்ளனர். ஆனால், உங்களைப் போன்று இயக்க சார்பு இளைஞர்களுடன் இணைந்து  முஹல்லா சங்கத்தையும் அதன் நிர்வாகிகளான உள்ளூர் பிரமுகர்களையும் அவமதித்ததில்லை” என்று  சொல்லி, அவருடன் பேசாமல் திரும்பி விட்டனர்.

அதிரையில் பல்வேறு அரசியல் கட்சி சார்பு இயக்கங்களும்,சமுதாய இயக்கங்களும் இயங்கி வந்தாலும், உள்ளூர்  அமைதிக்கு ஊறு விளைக்கும் அசாதாரண நடவடிக்கைகளின்போதும் சட்ட ரீதியான வழிமுறைகளில் தலையிட்டுத்  தீர்வு காணும் அதிரை முஸ்லிம்களின் அங்கீகாரம் பெற்ற முஹல்லா சங்கங்களில் சம்சுல் இஸ்லாம்  சங்கமும் ஒன்று. அவ்வகையில், ஜனாப் ஹைதர் அலி ஆலிம் மற்றும் தக்வா பள்ளி கமிட்டியிடையே ஏற்பட்டுள்ள  வழக்கு காரணமாக சம்சுல் இஸ்லாம் முஹல்லாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைதியின்மை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில், இப்பகுதிக்குட்பட்ட ஆயிஷா மகளிர் மன்றத்தில் நடந்துவந்த  ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயானை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

உள்ளூர் நடவடிக்கைகளில் பொறுப்புள்ள முஹல்லா சங்கத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட நடவடிக்கையே இது. ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களைப் போன்ற தகுதியுடைய உள்ளூர் மார்க்க அறிஞர்களை ஆலோசகர்களாகக் கொண்டுள்ள சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஊர் சார்ந்த நடவடிக்கைகளில் தனி நபர்கள்  தலையிடுவது, முஹல்லாவாசிகளை அவமதிக்கும் செயலாகும். முஹல்லாவுடைய கட்டுப்பாடு மற்றும்  அமைதிக்கு ஊறு விளைக்கும் எத்தகைய நடவடிக்கையையும் சம்சுல் இஸ்லாம் சங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. தேவையெனில், மார்க்கம் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும்  என்பதையும் முஹல்லாவாசிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

***********

கீழ்கண்ட விளக்கங்கள் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களுக்கும், விளக்கம் வேண்டுபவர்களுக்கும் போதுமானதாக இருக்கும் என்றும் நம்புகிறோம்:

1) ஹைதர் அலி ஆலிம் சித்தீக் பள்ளி சொத்து விவகாரத்தில் தலையிட்டதற்காகவா அவர்மீது நடவடிக்கை?

இல்லை. மேலுள்ள விளக்கத்தில் 2,3 & 4 ஆம் பத்திகளில் சொல்லப்பட்ட காரணங்களுக்காகவும், முஹல்லா  சங்க நிர்வாகிகளை அவமதித்து, உள்ளூர் இளைஞர்களைத் தூண்டியதற்காகவுமே ஆயிஷா மகளிர் மன்றத்தில்  அவரது பயான் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேற்கொண்டு தவறான பிரச்சாரங்களைப் பரப்பாமலிருக்க பெரிய  ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

2) ஹைதர் அலி ஆலிம் அவர்களை ஊரைவிட்டு வெளியேறும்படி சங்கம் நிர்ப்பந்தித்ததா?

இல்லை. பிரச்சினை பெரிதாகாமலிருக்க பொதுவில்  பயான் செய்வதற்கு மட்டுமே தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இது பொது அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும், பிரச்சினை  மேலும் வலுக்காமல் இருக்கவும் எடுக்கப்பட்ட சங்கத்தின் அதிகார வரம்புக்குட்பட்ட நடவடிக்கையே அன்றி, தனி நபர்  மீதான வெளியேற்றும் நடவடிக்கை அல்ல.

3) சம்சுல் இஸ்லாம் சங்கம் ஹைதர் அலி ஆலிமை அவமதித்ததா?

இல்லை. மேலே 2 & 3 ஆம் பத்திகளில் சொன்னபடி, அவரது விளக்கம் பெறும் நோக்கத்தில் கண்ணியமாக அழைக்கப்பட்டதை அவர்  ஒவ்வாத காரணங்களைச் சொல்லி மறுத்ததால், பொதுவில் அவருக்கு சங்கடம் ஏற்படாமலிருக்க, அவரது இல்லத்திற்குச்  சென்ற உள்ளூர் முக்கியஸ்தர்களான சங்க நிர்வாகிகளைச் சந்திக்காமல் அவர்தான் அவமதித்தார்.மேலும்,  ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்களை அதிரைக்கு அழைத்து வந்து, அதன் முஹல்லாவுக்குட்பட்ட சித்தீக் பள்ளி, தக்வா பள்ளி  மற்றும் இமாம் ஷாஃபி பள்ளிகளில் பொறுப்பான பதவிகளைக் கொடுத்து கண்ணியப்படுத்தியதும் சம்சுல் இஸ்லாம்  சங்கத்திற்கு உட்பட்டவர்களே.

4) மார்க்க அறிஞரின் பயானைத் தடுப்பது சரியா?

சில அசாதாரண சந்தர்ப்பங்களில் மஷ்வரா அடிப்படையில் எடுக்கப்படும் அவசர நடவடிக்கையின்படி இது சரியே.

5) ஹைதர் அலி ஆலிமின் பயான்களால் நமதூர் மக்களிடம் மார்க்க விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதே?

ஓரளவு உண்மையே. எனினும், அல்லாஹ் - ரசூல் (ஸல்) அவர்களின் போதனைகளை எடுத்துச் சொல்லும் பல அறிஞர்களும் பேச்சாளர்களும் அதிரையில் உளர். அவர்களை முறையாகப் பயன்படுத்தி இருந்தாலும் அத்தகைய  விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்ஷா அல்லாஹ் சம்சுல் இஸ்லாம்  சங்கம் இவ்விசயத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தும்.

6) சித்தீக் பள்ளி சொத்து விவகாரத்திற்காக ஹைதர் அலி ஆலிமை பலி கடாவாக்குவது நியாயமா?

ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கும் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கும் எத்தகைய விரோதமும் இல்லை. சித்திக் பள்ளி சொத்து விவகாரத்தை சம்சுல் இஸ்லாம் சங்கத்திடம் ஒப்படைத்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சியபடி, உலமாக்களின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வோம்.

7) ஹைதர் அலி ஆலிம் அவர்கள்மீது வழக்குத் தொடுத்தவர் மீது சங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இரு தரப்பிற்கும் இடையே நீதிமன்ற வழக்கு நிலுவையிலிருக்கும்போது முஹல்லா சங்கம் சமாதான நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட முடியும். அவ்வகையில்தான் இரு தரப்பையும் சுமூகமாகப் பேச வைத்துப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் முதலில் ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சங்கத்திற்கு அழைக்கப்பட்டதும், வர மறுத்தபோது நிர்வாகிகள் அவரது இல்லத்திற்குச் சென்றதும் நடந்தது. ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் நிர்வாகிகளை அவமதிக்காமல் ஒத்துழைத்திருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சியபடி நியாயமான தீர்வு எடுக்கப்பட்டிருக்கும். 

மேலும், சம்பத்தப்பட்ட நபரிடமும் பேசியுள்ளோம், கேசைத் திரும்பப் பெறும்படி யும் கூறியுள்ளோம், ஆனால் இது இருட்டடிப்புச் செய்யப்பட்டு, மக்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்கும் எவராக இருந்தாலும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

******************

அன்பிற்குரியவர்களே! நமதூர் அதிராம்பட்டினம் உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் பிழைப்பு தேடிவந்த பலரை  ஆதரித்தும், கண்ணியப்படுத்தியுமே வந்துள்ளது. கண்ணியத்துக்குரிய ஆலிம்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும்  வணிகர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரையும் ஆதரித்து வருகிறோம். எனினும், அவர்கள் எல்லோரும்  முஹல்லா ஜமாத்துகளுக்குக் கட்டுப்பட்டவர்களாகவே இருந்து வருகின்றனர்.

ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சில வருடங்களாக நமதூர் உலமாக்களின் எத்தகைய ஆலோசனையையும்  ஏற்காமல், தன்னிச்சையாகச் செயல்படுவதோடு, சித்தீக் பள்ளியின் சொத்து விவகாரத்தில் இன்னொரு முஹல்லா  இளைஞர்களை அழைத்துவந்து அமைதியின்மையை ஏற்படுத்தியதை அனைவரும் அறிவர். அப்பகுதியில் சம்சுல்  இஸ்லாம் சங்கம் செயல்பட்டுவரும் நிலையில் உள்ளூர் நடவடிக்கையில் ஹைதர் அலி ஆலிம் செயல்பட்டது  வரம்புமீறிய நடவடிக்கை என்பதோடு முஹல்லாவாசிகளின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத தன்னிச்சையான  போக்கு என்பதையும் கவனத்தில் கொண்டு, சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஊர் நன்மை நாடிய நடவடிக்கைகளுக்கு  ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை நேரிலோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ வழங்குவதே நன்மை பயக்கும்.

அவ்வகையில், பரபரப்பாகச் செய்தி வெளியிடுகிறோம் என்ற ஆர்வத்தில் வலைத்தளம் மற்றும் இணையதளங்களில்  சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் பதிவுகளும் தனிநபர் தளங்களும்  சட்ட நடவடிக்கைக்குட்பட்டது என்பதை உணர்ந்து பொறுப்பாகச் செயல்படும்படி வேண்டுகிறோம். இவ்விசயம் தொடர்பாக மேலதிக விளக்கம் வேண்டுவோர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

இப்படிக்கு,
சம்சுல் இஸ்லாம் சங்கம்
நிர்வாகம் – அதிரை

சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் விளக்கம் இன்று மின்னஞ்சல் வழியாக எவ்வாறு கிடைக்கப்பெற்றதோ அவ்வாறே பதியப்பட்டுள்ளது எவ்வித மாற்றம் செய்யாமல்.


** உண்மை (ஹக்) எந்தப்பக்கம் நிலைத்திருக்கிறதோ அதனைச் சார்ந்து அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக அல்லாஹ்வின் திருப் பொருத்ததை நாடி அதன் வழியில் இருப்பதே தனித் தன்மையுடன் கூடிய உண்மைநிலை ! மாற்றுக் கருத்துடையவர்கள் நெறியாளரின் தனி மின்னஞ்சலுக்கு அனுப்பித் தரலாம்.

அவரவர் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் ஒருவனே நன்கறிவான்.

பின்னூட்டங்களில் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் சகோதரர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள், தனிமனித, அல்லது அமைப்பு  தாக்குதல் இல்லாமல் நியாய உணர்வுடன் கருத்துகளை பதியுங்கள், வரம்பு மீறல் இருக்குமாயின் உடணடியாக அவ்வகை கருத்துகள் நீக்கப்படும்.

நெறியாளர்
editor@adirainirubar.in

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!? 94

அதிரைநிருபர் பதிப்பகம் | September 01, 2012 | , , ,

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.

அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி வலைத்தளத்தில் பதியப்பட்டதால் வெளிநாடு வாழ் அதிரைவாசிகளை மட்டுமல்ல உள்ளூர் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன? இதன் பின்னணியில் யார் இருந்திருக்கிறார்கள்? என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. அவ்வாறான சந்தேகங்களை நிவர்த்தி செய்யவே இந்த விளக்கம்.

இந்த பதிவு எந்த தனிநபரையோ, ஒரு அமைப்பில் உள்ளவர்களையோ உயர்த்தி / தாழ்த்தி எழுதப்பட்டதல்ல, மாறாக உண்மை நிலை மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே. நம் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் கண்கானித்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் எழுத்தபட்டது.

யார் இந்த ஹைதர் அலி ஆலிம்?

கடந்த பல வருடங்களாக ஊரில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக அதிரையின் மறைந்த ஆலிம் பெருமக்கள் பலர் பகிரங்கமாக குரல் கொடுத்து வந்தார்கள் இதில் மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மரியாதைக்குரிய மர்ஹூம் முஹம்மது அலீய் ஆலிம் (ரஹ்) அவர்கள் ஊரில் நடைபெறும் மிகப்பெறும் பித்அத்களுக்கு எதிராக பகிரங்கமாக குரல் கொடுத்தவர்கள். மர்ஹூம் முஹம்மது அலீய் (ரஹ்) ஆலிம் அவர்கள் இருக்கும் காலத்திலும் அவர்களின் மறைவுக்கு பிறகு மார்க்கம் என்ற பெயரில் புதிதாக தினிக்கப்பட்டுள்ள பித்அத்துக்களை (புதின்ங்கள்) பகிரங்கமாக மார்க்க மேடைகளில் எதிர்த்து குரல் கொடுத்து வரும் மார்க்க அறிஞர்களில் முக்கியமானவர்களில் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களும் ஒருவர். தமிழ்நாட்டில் சித்திரக்கோட்டையிலிருந்து அதிரைக்கு குடிபெயர்ந்து மார்க்க பிரச்சாரம் (பெரிய ஜும்மா பள்ளி பயான், பெண்கள் பயான், தக்வா பள்ளி பயான்) செய்துவருகிறார்கள்.

என்ன பிரச்சினை?

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சித்தீக் பள்ளி சொத்து விவகாரத்தில்  ஏற்பட்டுள்ள முறைகேடுகளை சித்திக்பள்ளி நிர்வாகம் உண்மையை வெளியில்  கொண்டு வந்தது என்பது ஊரில் உள்ள அனைவரும் அறிவார்கள். இதனால் சிலருக்கு ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மேல் தனிப்பட்ட கோபமும் குரோதமும் ஏற்பட்டது. மேலும் ஊரில் நடைபெற்று வரும் பித்அத்களை எதிர்த்து குரல் கொடுத்து வருவதாலும் பல ஆண்டுகளாக அதிரையில் பித்அத்களை ஆதரித்து வரும் சில உலமாக்கள் மற்றும் மவ்லித் லெப்பைமார்களுக்கு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் ஒரு கோபப்பார்வை தொடர்ந்து இருந்து வந்துள்ளது என்பது ஊரில் உள்ள அனைவரும் மிகவும் அறிந்ததே. இதற்கிடையில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவை கேட்க ஆண்கள் மற்றும் பெண்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருவது ஊரில் உள்ள அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.

கடந்த ஓரிரு மாதங்களாக அதிரை தக்வா பள்ளியின் நிர்வாகிகளில் ஒருவரின் முயற்சியால் ஊரில் மிகச் சிலரிடம் மட்டுமே கையொப்பம் பெற்று, தவறான அதாவது பொய்யான தகவலை வைத்து தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது. இந்த தகவல் தவறான தகவல் என்பதால் தக்வா பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் அதே நபர், தக்வா பள்ளி நிர்வாக கூட்டத்தில் எடுக்கப்படாத தீர்மானத்தை அதில் எடுத்தது போல் மினிட் புத்தகத்தில் தானாகவே எழுதி (மினிட் புத்தகம் திட்டமிட்டு இதுவரை மறைக்கப்பட்டுள்ளது) ஷம்சுல் இஸ்லாம் சங்கம், தமிழ்நாடு வக்பு வாரியம், காவல்துறை, ரிசீவர் ஜெயச்சந்திரன் அட்வகெட். இவர்கள் அனைவருக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இதில் தக்வா பள்ளி ட்ரஸ்ட் தலைவர் கையொப்பமின்றியும், அவரின் அனுமதியின்றியும் அவராகவே எழுதுகிறார். இதில் தக்வா பள்ளியில் மார்க்க பிரச்சாரம் செய்யும் ஒட்டுமொத்த தாயிக்கள் அனைவரின் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விசயம் என்னவென்றால், மேற்குறிப்பிட்ட புகாரை அளிக்கும் அந்த சகோதரரே சென்ற வருடம் அதிரை உலமாக்கள் சபையிடம் அதிரை தக்வா பள்ளியில் ஓதப்பட்டுவரும் மவ்லிதை நிறுத்த வேண்டும் என்று கோரிகை மனு அளித்துள்ளார்.

மேலும் அவர் கடந்த 18.08.2012 அன்று பட்டுக்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போடுகிறார். இதில் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தீவிரவாத பிர்ச்சாரம் செய்து, ஊரில் உள்ள இளைஞர்களை வழிகெடுத்து வருதாகவும் மேலும் ஊரில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி பிரிவினை ஏற்பட தூண்டுவதாகவும் இல்லாத பொல்லாதவைகளை எழுதி ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் போலீஸ் நிலையத்திலும் ஹைதர் அலி ஆலிம் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார் என்ற புகாரும் கொடுத்து இந்த வருட ரமளானில் மிகப்பெரிய தொந்தரவை கொடுத்து வந்துள்ளார். ஊரில் உள்ள பல சகோதரர்களின் முயற்சியால் அந்த சகோதரர் காவல் நிலையத்தில் கொடுத்த தவறான புகார் திரும்ப பெறப்பட்டுள்ளது. இருப்பினும் நீதிமன்ற வழக்கு இன்னும் விசாரனையில் உள்ளது.

நிலைமை இப்படி இருக்க, போலீஸ் புகாரை திரும்ப பெற்ற அவர் மீண்டும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தை அனுகி, தான் முன்பு கொடுத்த புகாருக்கு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முறையிட்டுள்ளார். இதன் அடிப்படையில் சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் அவர்கள் ஹைதர் அலி ஆலிம் அவர்களை அழைத்து சங்க தலைவர் வீட்டில் பேச முற்பட்டுள்ளார்கள்.

ஹைதர் அலி ஆலிம் அவர்களை அன்றைய தினம் (29-08-2012) காலை 10:30 மணியளவில் சங்க தலைவர் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்த சங்க பிரதிநிதியாக வந்த சகோதரர் அவர்களிடம் "தக்வா பள்ளி நிர்வாகிகளில் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால் வழக்கமான நிகழ்வுகளை தவிர மற்ற எந்த கூட்டத்திற்கும் செல்ல வேண்டாம் என்று வழக்கறிஞர் அறிவுறுத்தியிருக்கிறார், ஆகையால் வழக்கு முடிந்த பிறகு நானே நேரில் வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி அனுப்பினார். ஆனால் அசர் தொழுகைக்கு பிறகு சங்க பிரதிநிதியாக வந்த சகோதரர் அவர்கள், ஹைதர் அலி ஆலிம் அவர்களிடம் மீண்டும், நீங்கள் வர இயலவில்லை என்றால் நாங்கள் வந்து சந்திக்கிறோம் என்று தலைவர் சொல்லியனுப்பினார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு ஹைதர் அலி ஆலிம், அவர்கள் "சங்க தலைவர் வந்து என்னை சந்திப்பதற்கு நான் பெரிய ஆள் இல்லை, தக்வா பள்ளி பயான் முடித்துவிட்டு போன் பேசிவிட்டு சந்திக்கலாம்" என்று சங்க பிரதிநிதியிடம் சொல்லி அனுப்பிய 10 நிமிடத்திலேயே மீண்டும் சகோதரர்கள் சங்க தலைவர், பேரூராட்சி தலைவர், சங்க துனை தலைவர்,  துணை செயலாளர் மற்றும் இரண்டு  பிரதிநிதிகள் சகிதமாக சென்று ஹைதர் அலி ஆலிம் அவர்களின் வீட்டிற்கு சென்று சந்திக்க முற்பட்டுள்ளார்கள்.

பள்ளியில் வைத்து சந்திக்கலாம் என்று தெரிவித்துவிட்டு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தன் வீட்டிலிருந்து சித்தீக் பள்ளிக்கு வந்தவுடன் சங்க தலைவர் அவர்கள் "வெளியூர்காரர்" என்ற வார்த்தையை பிரயோகித்த காரணத்தால் நடைபெறவிருந்த சந்திப்பு சலசலப்பால் தடைபட்டது. சங்க தலைவர் மற்றும் அவருடன் வந்த சகோதரர்கள் சித்தீக் பள்ளியிலிருந்து சென்று விட்டார்கள், இது தான் நடந்த சம்பவம்.

இதனை தொடர்ந்து ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள் (தலைவர், துணை தலைவர், துணை செயலாளர்) மூன்று நபர்கள் மட்டும் கூடி ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பயான் செய்து வரும் ஆயிஷா மகளிர் அரங்கத்தில் நடைபெறும் மகளிர் வாராந்திர பயான் தற்காலிகமாக நிறுத்தபடுவதாக தங்கள் அறிவிப்பை அதிரை வலைப்பூ ஒன்றுக்கு மட்டும் அறிவிப்பை தெரிவித்து விட்டு. அதிரையில் உள்ள அனைத்து முஹல்லாக்களுக்கு ஹைதர் அலி ஆலிமை மார்க்க சொற்பொழிவு செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலத்தெரு சங்கத்திற்கு அனுப்பட்ட கடித நகல் மற்றும் ஆயிசா மகளிர் அரங்கத்தின் நிர்வாகி அவர்களுக்கு அனுப்பட்ட கடித நகல் இணைக்கப்பட்டுள்ளது.






ஊரில் இருப்பவர்களுக்கும் வெளியூர்களில் இருக்கும் அதிரைவாசிகளுக்கும் எழும் சந்தேகம் இதே..

1.   ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவை தடை செய்யும் அளவுக்கு அவர் என்ன மன்னிக்க முடியாத குற்றம் செய்தார்?

2.   ஒரு பிரச்சினை சங்கத்துக்கு வந்தால் முறையாக பொதுக்குழு அல்லது செயற்குழு அல்லது நிர்வாக குழு கூடி தீர்மானம் போட்டு அல்லது முடிவு எடுத்த பின்னர்தானே நடவடிகை எடுப்பது சம்சுல் இஸ்லாம் சங்கம் மட்டுமல்ல ஊரில் உள்ள எல்லா சங்கத்திலும் வழக்கம் மற்றும் நெறிமுறை. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் விசயத்தில் சங்கம் போர்கால அடிப்படையில் 24 மணி நேரத்துக்குள் பயான் செய்ய தடை விதித்ததின் மர்மம் என்ன?

3.   மற்ற இரண்டு நிர்வாகிகளை கலந்தாலோசிக்காமல் மூன்று நிர்வாகிகளை கொண்டு முடிவு எடுக்கும் அளவுக்கு அப்படி என்ன அவசர நிகழ்வு நடத்துவிட்டது?

4.   ஷம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட்ட ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெரும் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பயான் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை மட்டும் சங்கத்திற்கு என்று இருக்கும் வலைப்பூவில் வெளியிடாமல் பொதுவான வலைப்பூ ஒன்றில் அவசர அவசரமாக வெளிட்ட மர்மம் என்ன?

5.   ஷம்சுல் இஸ்லாம் சங்கம் எப்போது ஊரில் உள்ள சங்கங்களுக்கு (மேலத்தெரு ஜும்மா பள்ளி சங்கம் உட்பட)  கட்டளையிடும் அதிகாரம் பெற்றது?

6.   தீவிரவாதி என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள தக்வா பள்ளி நிர்வாகத்தில் இருக்கும் அந்த சகோதரர் மீது சம்சுல் இஸ்லாம் சங்கம் என்ன நடவடிக்க எடுக்க போகிறது?

இவ்வாறான பல கேள்விகள் பொது மக்கள் மத்தியில் எழத்தான் செய்கிறது. உண்மை நிலையை அறிய இந்த கேள்விகளுக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பதிலை மக்கள் மத்தியில் வைக்க வேண்டும்

நேற்று முன் தினம் 30-08-2012 அன்று இரவு சித்தீக் பள்ளி முஹல்லா சகோதரர்கள் சிலரை ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர், துணை தலைவர், துணை செயலர், பேரூராட்சி தலைவர் ஆகியோர் அழைத்து பேசினார்கள். இதில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சொற்பொழிவில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையில்லை என்று ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர், துனை தலைவர், துனை செயலர், பேரூராட்சி தலைவர் ஆகியோர் ஒருமனதாக வந்தவர்கள் முன்னிலையில் ஒத்துக்கொண்டார்கள். ஆனால். சம்சுல் இஸ்லாம் சங்கம் ஆயிசா மகளிர் அரங்கம் மற்றும் மேலத்தெரு ஜும்மா பள்ளிக்கு அனுப்பிய கடிதத்தில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு தொடர்பான காரணங்களை கூறியே அவரை வைத்து மார்க்க சொற்பொழிவாற்ற வேண்டாம் என்று கூறிப்பிட்டுள்ளார்கள்.

இது அப்பட்டமான இரட்டை நிலைபாடு என்பது நிரூபனமாகியுள்ளது. சித்திக் பள்ளி முஹல்லா சகோதரர்களிடம் ஒரு நிலை, சங்கம் எழுதிய கடிதத்தில் ஒரு நிலை. இதில் நிறைய மர்மங்கள் உள்ளது என்பது மட்டும் உண்மை.

இந்நிலையில் மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளியில் வழக்கம் போல் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ஜும்மா பயான் (31-08-2012) நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் தகவல்கள் விரைவில்… இன்ஷா அல்லாஹ் !

L.M.S. Mohamed Yousuf 

உண்மை (ஹக்) எந்தப்பக்கம் நிலைத்திருக்கிறதோ அதனைச் சார்ந்து அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக அல்லாஹ்வின் திருப் பொருத்ததை நாடி அதன் வழியில் இருப்பதே தனித் தன்மையுடன் கூடிய உண்மைநிலை ! மாற்றுக் கருத்துடையவர்கள் நெறியாளரின் தனி மின்னஞ்சலுக்கு அனுப்பித் தரலாம்.

அவரவர் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் ஒருவனே நன்கறிவான்.

பின்னூட்டங்களில் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் சகோதரர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள், தனிமனித, அல்லது அமைப்பு  தாக்குதல் இல்லாமல் நியாய உணர்வுடன் கருத்துகளை பதியுங்கள், வரம்பு மீறல் இருக்குமாயின் உடணடியாக அவ்வகை கருத்துகள் நீக்கப்படும்.

நெறியாளர்