Showing posts with label நேர்காணல். Show all posts
Showing posts with label நேர்காணல். Show all posts

மதுவை ஒழிக்காதவரை தமிழகம் முன்னேறாது - 'நந்தினி' நேர்காணல் 21

அதிரைநிருபர் பதிப்பகம் | July 22, 2014 | , , , , , , ,

குடிகார மாநிலத்தின் குமட்டலுடனும் ஒழுங்கு மீறல்களுடனும் தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. மதுவினால் நாட்டுக்கு வீட்டுக்குக் கேடு என்பதைச் சொல்லிக் கொண்டே கேடுகெட்ட மாநிலமாகத் தமிழகத்தை பின்தள்ளிக் கொண்டிருக்கின்றனர் ஆட்சியாளர்கள். வீதிக்கு வந்த நாற்றத்தைச் சகித்துக் கொண்டு கடந்து போகும் மக்களிடையே அவ்வப்போது சில அரசியல் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டு, ஒன்றிரண்டு அடையாளப் போராட்டங்களை நடத்தியதோடு சரி, அதைத் தாண்டி கொஞ்சம் நீளமாய் நடையாய் நடந்தும் பார்த்தாயிற்று. குடிகாரர்களின் அழுக்குக் கால்களில் விழுந்து கெஞ்சிப் பார்த்தார் சசி பெருமாள். உண்ணாவிரதம் இருந்தார். பழச்சாறு மட்டுமே மிஞ்சியது.

இதெல்லாம் சரிப்பட்டு வராது. தொடர் போராட்டங்களினால் அரசின் செவிட்டுச் செவியில் சங்கு ஊதிப் பார்ப்பது எனத் தம் தந்தையுடன் நீண்ட நெடிய போராட்டத்திற்காய்க் கிளம்பிவிட்டார் மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. கைதுகளையும் முட்டுக்கட்டைகளையும் கடந்து இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றார். நீறு பூத்த நெருப்பாக இப்போராட்டம் வெடித்து அதன் அக்னிச் சூட்டில் மது அரக்கன் கருகிவிடமாட்டானா? என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் நந்தினியைச் சந்திக்க மதுரைக்கேகினோம். தந்தை ஆனந்தனுடன் சமரசத்திற்கான நேர்காணலை நேர்த்தியுடன் தெளிவுடன் தொடர்கிறார் நந்தினி.

நந்தினிக்கு ஏன் மதுவின் மீது அவ்வளவு கோபம்?

எனக்கு மட்டும் இல்ல சார். தன்மானமுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் இந்தக் கோபம் வரணும். மதுவினால் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் என் சமுதாயம் என் கண்முன்னே நாசமடைவதை எப்படி என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும்? மதுவினால் மானம் இழந்தவர்கள் எத்தனை பேர்? தந்தையை இழந்தவர்கள் எத்தனை பேர்? கணவனை இழந்த என் வயதையொத்த பெண்கள் எத்தனை எத்தனை பேர்? மதுவினால் எத்தனை விபத்துகள். எவ்வளவு பிரச்னைகள்? ஒரே வரியில் சொல்வதானால் எல்லாப் பிரச்னைகளுக்கும் மூல காரணமே மதுதான். இதை ஒழிக்காத வரை நம் தமிழகம் ஒருக்காலமும் முன்னேறாது.

உங்கள் போராட்டத்தின் பின்புலம் என்ன..?

(நந்தினி பதில் சொல்லத் தொடங்குமுன் அவருடைய தந்தை ஆனந்தன் குறுக்கிட்டு “ஸார்.. இந்தக் கேள்விக்கு நானே பதில் சொல்றேனே..என்று தொடர்ந்தார்)

நான்தான் என் மகளுக்கு உந்துசக்தி. தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றினேன். ஓய்வு பெற 15 ஆண்டுகள் மீதமிருக்கும்போதே விருப்ப ஓய்வு பெற்று சமுதாயப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். 18 ஆவது வயதில் அரசுப்பணியில் சேர்ந்தேன். அப்போதிருந்தே அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். தொழிற்சங்க ஈடுபாடு ஏற்பட்டபோது சமுதாயப் புரிதல் எனக்கு அதிகமானது. வேளாண் துறை என்பதால் கிராம மக்களின் வாழ்வை மிக அருகிலிருந்து கவனித்து வருகிறேன். கிராமங்கள் நசிந்து வருகின்றன. இளைஞர்கள் அடித்தளத்தை விட்டு நகரத் தொடங்கிவிட்டார்கள். கலாச்சாரச் சீரழிவு பெருகத் தொடங்கி விட்டது. மக்களை மதுவுக்கு அடிமையாக்கி மக்களின் சிந்தனைகளை மழுங்கடித்து குடிகார மக்களின் மீது ஆதிக்கம் செலுத்த அரசு திட்டம் தீட்டியது. மக்களை மயக்க நிலையில் வைத்திருந்தால்தான் அரசின் அநியாயங்களை யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள். அதனால் அரசே ஊத்திக் கொடுக்க ஆரம்பித்தபோதுதான் போராட்டக் களத்திற்கு என் மகளோடு வந்தேன். என் மகளை முன்னிறுத்தி இப்போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம்.

நந்தினி நீங்கள் உங்கள் தந்தையுடன் முதல்வரைச் சந்திக்கச் சென்றீர்களே..! அந்தப் போராட்டப் பயணம் பற்றிச் சொல்லுங்களேன்...! 

மது அரக்கனை ஒழிக்க வேண்டும். மதுவினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வை முதலில் மேற்கொண்டோம். குடியினால் தந்தையை இழந்த 100 குழந்தைகளை அழைத்துக் கொண்டி முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு விரிவாய் கடிதம் எழுதினோம். எந்தப் பதிலும் இல்லை. டிசம்பர் 24 ஆம் நாள் எம்.ஜி.ஆர் பிறந்தநாள். எனவே முதல்வர் சென்னையில் இருப்பார் என்பதால் 23ஆம் தேதி நான் என் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்னைக்குக் கிளம்பினோம். அன்று மாலையில் நாங்கள் திருச்சியில் கைது செய்யப்பட்டோம். இரவு திருவெரும்பூர் காவல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டோம். 25 ஆம் நாள் காலையில் விடுவிக்கப்பட்டோம்.

முதல்வர் கொடநாடு செல்வதால் நீங்கள் சென்னை வரவேண்டாம் என போயஸ் கார்டனிலிருந்து எங்களுக்குத் தகவல் வந்தது. உண்ணா விரதம் மேற்கொண்ட நிலையிலேயே சென்னைக்கு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். குரோம்பேட்டையில் மீண்டும் கைது செய்யப்பட்டோம். உண்ணாவிரதத்தினாலும் பயணத்தினாலும் நாங்கள் மிகவும் களைப்படைந்து இருப்பதால் அங்குள்ள மருத்துவமனையில் எங்களை வைத்தார்கள்.

அங்கிருந்து விடுதலையாகி கொடநாடு நோக்கிச் சென்றோம். செல்கின்ற வழியில் பெருந்துறையில் எங்களை மீண்டும் கைது செய்தார்கள். எங்கள் உண்ணா விரதத்தையும் நாங்கள் விடவில்லை. பெருந்துறை மருத்துவமனையில் எங்களைச் சேர்த்தார்கள். பின்னர் 26 ஆம் தேதி எங்களை நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று சொல்லி அவர்கள் வாகனத்தில் எங்கள் இருசக்கர வாகனத்தையும் ஏற்றிக்கொண்டு நேராக மதுரைக்குச் சென்று எங்கள் வீட்டில் கொண்டு சேர்த்தார்கள். நாங்கள் வீட்டிற்குள் செல்லவில்லை. மீண்டும் திரும்பி மதுரை வைகை ஆற்றுப்படுகையில் எங்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தோம். என்னுடைய இளைய சகோதரியும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டாள்.

மீண்டும் நாங்கள் கைது செய்யப்படுகிறோம். அப்போதும் உண்ணாவிரதம் 7ஆவது நாளாகத் தொடர்கிறது. எங்கள் மீது தற்கொலை வழக்கு பதிவு செய்து என்னை திருச்சி பெண்கள் சிறையிலும், என் தந்தையை மதுரை மத்திய சிறையிலும் அடைத்தார்கள். அங்கு எங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டாலும் போராட்டத்தைத் தொடர்ந்தோம். எங்களுக்கு ஜாமீன் தர மறுத்தார்கள். இறுதியாக ஜனவரி11 ஆம் நாள் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தோம்.

எங்கள் போராட்டம் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏப்ரல் 22 ஆம் தேதி மண் வாரித் தூற்றும் போராட்டத்தை மேற்கொள்ளச் சென்றபோது சென்னை மெரினாவில் வைத்து நாங்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டோம். மே3 ஆம் தேதி எனக்கு பரீட்சை இருந்ததால் நான் மே 1 ஆம் நாள் விடுவிக்கப்பட்டேன். என் தந்தையை மே 11 ஆம் நாள் விடுவித்தார்கள்.

ஜூன் 23ஆம் நாள் பழ நெடுமாறன் அவர்கள் கலந்து கொண்ட போராட்டத்தை மதுரையில் நடத்தினோம். மதுவை ஒழிக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். ஜூலை 29 ஆம் நாள் சசிகலாவுக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை முன்பு மது அரக்கி உருவபொம்மை எரிப்புப் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

இத்தகைய போராட்டங்களினால் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றனவா..?

9ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு மாணவர்கள் கூடக் குடிக்கத் தொடங்கிவிட்டார்கள். இச் சூழலில் மதுவுக்கெதிரான குரல் எழும்போதுதான் சமுதாயம் விழிப்புஉணர்வு அடையும். எங்கள் போராட்டங்களினால் ஓரளவு மக்களிடம் விழிப்பு உணர்வு வந்துள்ளது. மாற்றங்களை நோக்கித்தான் பயணிக்கின்றோம். நிச்சயம் ஒருநாள் மதுக்கடைகள் இழுத்து மூடப்படும். அந்த மாற்றத்திற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கின்றோம்.

போராட்டங்களினால் மட்டுமே மதுவை ஒழித்துவிடமுடியுமா? மது ஒழிப்பிற்கான வேறு என்னென்ன திட்டங்களை வைத்துள்ளீர்கள்?

மதுவை ஒழிக்க சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டாலே போதும். indian penal code  ஐபிசி பிரிவு 328 இன் படி அரசு மதுவிற்பது சட்டவிரோதச் செயல். போதைப் பொருள்களைத் தவறு எனத் தெரிந்தே விற்பது சட்டப்படி குற்றம். அதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று நன்றாகத் தெரிந்து கொண்டே மதுவை அரசு விற்பது சட்டத்தை மீறிய செயல் இல்லையா...? கள்ளச் சாராயம் காய்ச்சுவது குற்றமென்றால் உரிமம் பெற்று டாஸ்மாக் நடத்துவது சரியானதுதானா? அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 47 இன் படி மதுவிலக்கை மாநில அரசு அமுல்படுத்த வேண்டும். மருத்துவத் தேவைக்காக அல்லாமல் போதைப் பொருளைப் பயன்படுத்துவதை அரசு தடுக்க வேண்டும். பொள்ளாச்சியில் மது அருந்திவிட்டு பாலியல் பலாத்காரம் செய்த செய்தியை அண்மையில் படித்திருப்பீர்கள். பலாத்காரத்திற்குத் தூண்டுதலான மதுவை அரசுதான் கொடுத்திருக்கிறது என்றால் இந்தக் குற்றத்தைத் தூண்டிய வழக்கில் அரசையும் இணைக்க முடியும். தவறுகளைத் தடுக்க வேண்டிய அரசே சாராயம் விற்பதுதான் வேதனை. சட்டத்தை அரசே காலில் போட்டு மிதிக்கும்போது சட்டத்திற்குத்தான் என்ன மரியாதை? எங்களின் கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை. இதுபோன்ற சட்டப்பூர்வ விளக்கத்தைப் போராட்டங்களின் மூலம் முன்னெடுத்து வைக்கின்றோம். எங்கள் போராட்டம் ஒரு நாள் மக்கள் போராட்டத்திற்குத் தூண்டும் என நம்புகிறோம். மக்களின் ஒருமித்த குரல் ஓங்கி எழும்போது இந்த நியாயமான குரலுக்கு அரசு ஒருநாள் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்.

மதுவினால் அரசுக்கு வருமானம் வருகிறது. மதுவைத் தடைசெய்தால் வருமானம் தடைபடுமே என்ற காரணத்தைச் சிலர் முன்வைக்கின்றார்களே....!

மதுவினால் அரசுக்கு வருமானம் என்று தினமலர் பத்திரிகைதான் செய்தியைப் பரப்பிவருகிறது. டாஸ்மாக்கைக் காப்பாற்றுவதில் தினமலரின் பங்கு முக்கியமானது. அரசுக்கு வருமானம் என்பது மூளைச்சலவை. சாராயத்தைக் கொடுத்துக் கணவனிடமிருந்து காசு பறிப்பார்கள். வீட்டுக்கு ஆடு, மாடு கொடுப்பார்களாம். உங்களிடம் இலவசம் கேட்டது யார்? அரசுக்கு வருமானத்திற்கு வேறு வழியே இல்லையா? கிரானைட் கற்களைத் தனியார் சுரண்டி விற்கிறார்களே... அரசு கிரானைட், தாது மணல்களை எடுத்து வருமானம் பார்க்கட்டுமே...! ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி, 60 ஆயிரம் கோடிக்கு குடிக்கிறார்கள் மக்கள். மதுவைத் தடைசெய்தால் அந்த 50ஆயிரம், 60ஆயிரம் கோடியைத் தொழிலில் போடுவார்கள். வீடு கட்டுவார்கள். அவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு என்ன செய்தாலும் அது அரசுக்கு நன்மையைத்தானே தரும். இன்னும் தெளிவாய்ச் சொல்வதானால் அரசுக்குக் கூடுதல் பணம் கிடைக்கும். குடியினால் ஏற்படும் விபத்துகளில் அரசுக்கு ஆகும் செலவு எவ்வளவு? குடியினால் குடல் வெந்து மருத்துவமனைகளில் செத்து மடியும் மக்களுக்கான மருத்துவச் செலவு எவ்வளவு? எல்லாவற்றையும் கூட்டிக் கழித்தால் மதுவினால் அரசுக்கு பெரும் நஷ்டம் என்பதுதான் நிதர்சனம்.

இடதுசாரிகளும் மதுவை ஆதரிக்கின்றார்களே... கவனிக்கின்றீர்களா...?

யார் ஆதரித்தாலும் எதிர்த்தாலும் குற்றம் குற்றமே..! டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று இடதுசாரிகள் கூறுகின்றார்கள். இதில் தொழிலாளியின் நலம் எதுவுமில்லை. டாஸ்மாக் ஊழியர்களுக்கான மாற்றுப் பணிகளை வழங்கக் கோரி இருக்கலாம். டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரப்படுத்தக் கோருவது டாஸ்மாக்கை நிரந்தரப்படுத்து என்பதுதான் அதன் அர்த்தம். எந்தத் தொழிலாளி, பாட்டாளி வர்க்கத்திற்காகப் போராடுகிறோம் என்று சொல்கிறார்களோ.. அவர்களின் அன்றாடக் கூலியை மதுவின் மூலம் அரசு வம்படியாகப் பிடுங்கிக் கொள்கிறது. மட்டுமில்லை உழைக்கும் வர்க்கத்தை நாசப்படுத்துவதும் இந்த மது அரக்கன்தான். மதுவை ஒழிக்க முன்வரவேண்டிய இடதுசாரிகள் அதற்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது வேதனையானது. துயரமானது.

இந்தியா முழுவதிலும் தடை செய்தால்தான் தமிழகத்திலும் மதுஒழிப்பு சாத்தியம் என்பது சரியா..?

மதுவிலக்கு மாநில அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம். இந்தியாவில் தடை செய்தால்தான் மாநிலத்திலும் தடை செய்வோம் என்றால் மாநில சுயாட்சிக்கு என்ன அர்த்தம் இருக்கப்போகிறது? 1971 வரை மது தடை செய்யப்பட்ட மாநிலமாகத்தான் தமிழகம் இருந்தது. இரண்டு திராவிடக் கட்சிகளும் அண்ணாவின் பெயரைச் சொல்லி கட்சி நடத்திக்கொண்டு அவருடைய கொள்கைக்கு எதிராக மது வியாபாரம் செய்கின்றனர். அ.தி.மு.க ஏதாவது திட்டம் கொண்டு வந்தால் அடுத்துவரும் திமுக அந்தத் திட்டத்தைக் கைவிட்டு விடும். திமுக கொண்டு வந்த புதிய சட்டமன்றம், அண்ணா நூலகம், உழவர் சந்தை, சமத்துவபுரம் என்று  எத்திட்டத்தையும் அடுத்து வரும் அதிமுக அத்தனை திட்டங்களையும் கடாசிவிடும். ஆனால் என்ன ஒற்றுமை பாருங்கள். மது விற்பதில் மட்டும் இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவதை..! டாஸ்மாக்கைத் திறந்தது அதிமுக; அதற்காகவாவது திமுக அதை இழுத்து மூடியிருக்கலாம். கலைஞர்தான் மதுவிலக்கை உடைத்து மது ஆறு பெருக்கெடுத்து ஓடச்செய்தவர். கலைஞர் கொண்டு வந்ததை அதிமுக ஆதரிக்கலாமா? அதற்காகவாவது மதுவைத் தடை செய்திருக்கலாம் இல்லையா....!?

உங்கள் போராட்டத்திற்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் எப்படி இருக்கின்றன..?

மக்களிடம் நல்ல ஆதரவு இருக்கின்றது. நான் படிக்கின்ற சட்டக்கல்லூரி மாணவர்களும் உறுதுணையாக இருக்கின்றார்கள். மதுவை எதிர்த்துத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யும் வைகோ, தமிழருவி மணியன், டாக்டர் ராமதாஸ் போன்றோர் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவும் வாழ்த்துகளும் தெரிவிக்கின்றார்களே தவிர இதை மக்கள் போராட்டமாக எடுத்துச் செல்வதில் முனைப்புக் காட்டவில்லை. மதுவுக்கு எதிரான சிந்தனை உள்ளவர்கள் ஓரணியில் திரண்டாலே இந்த மதுவை முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம். ஆனால் அரசியல்வாதிகள் ஆதாயம் இல்லாமல் எதையும் செய்யமாட்டார்கள்தானே....! எங்களுடைய போராட்டங்கள் குறித்து ஊடகங்களில் செய்தி வந்தாலும் கூட போதிய முக்கியத்துவம் தரவில்லை. ஊடகங்களில் இச்செய்திகள் இன்னும் அழுத்தம் பெறுமானால் இது மக்கள் போராட்டமாக மாற வாய்ப்பு இருக்கின்றது. இஸ்லாமிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் எங்கள் போராட்டங்களில் கலந்து கொள்வதுண்டு. கடந்த ஆண்டு முஸ்லிம் கட்சியின் தலைவர் ஒருவர் எங்களைச் சந்தித்து ரமளான் முடியட்டும். உங்கள் போராட்டத்தை நாங்கள் வீரியமாக்குகின்றோம் என்றார்கள். இதோ அடுத்த ரமளானும் வந்துவிட்டது. அவர்கள் வரவில்லை. எல்லாருக்கும் நிறைய வேலைகள் இருக்கும். அதே வேளையில் இது தலையாயப் பணி இல்லையா..? நாங்கள்தான் முன்நின்று நடத்தவேண்டும் என்பதில்லை. தகுதியானவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லட்டும். எப்படியாவது மது ஒழிந்தால் சரி..!

மதுவை முற்றாக ஒழித்துவிட முடியும் என்று நம்புகின்றீர்களா...?

நிச்சயமாக...! மது இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும். மதுவற்ற நாடாக இந்தியா மாறும். அதற்கான போராட்டவிதை என்றோ தூவப்பட்டு விட்டது. நாங்கள் அதில் இணைந்துள்ளோம். சமூக நலனிலும், நாட்டு நலனிலும் அக்கரை கொண்டவர்கள் ஒரணியில் இணையும் போது மதுவை இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் ஒழித்தே தீருவோம்.

சந்திப்பு: வி.எஸ்.முஹம்மது அமீன்  
நன்றி : சமரசம் ஜுலை 2014. 

பரிந்துரை : அதிரை அஹ்மத் 

பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் - ரெங்கராஜன் MLA பேட்டி 13

அதிரைநிருபர் | April 02, 2011 | , , , ,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் சூடுப்பிடித்திருக்கும் இந்த தருணத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் நம் பட்டுக்கோட்டை தொகுதி முக்கிய வேட்பாளர்களை நேர்காணல் எடுத்து வெளியிட்டால் இணையத்தின் ஊடாக பட்டுக்கோட்டை தொகுதி மக்களுக்கு யார் தகுதியானவர் என்பதை அறிவதற்கு ஓர் வாய்ப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் முயற்சி செய்தோம்.

நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும் இன்றைய சட்டமன்ற உறுப்பினருமாகிய ரெங்கராஜன் MLA அவர்களை அவர்களை அதிரைநிருபர் சார்பாக அலைபேசி வாயிலாக கேள்விகள் வைத்து பதிலைப் பெற்றோம் இதோ உங்களின் பார்வைக்கும் ஓட்டு அளிக்கும் உரிமை முடிவுக்கும் !


 
அதிரைநிருபர்: இதுவரை இரண்டு முறை இதே தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்று இதுநாள் வரை இருக்கிறீர்கள் அதிராம்பட்டினத்திற்கு எவ்வகையான நலத்திட்டங்கள் / நன்மைகள் செய்திருக்கிறீர்கள் பட்டியலிடுங்களேன் !?

M.L.A ரெங்கராஜன்: முதலில் மிகவும் சந்தோஷம் உங்களிடையே பேசுவதில், அதிராம்பட்டினத்தில் பொது மருத்துவமனைக்கு ஏற்கனவே நாற்பது இலட்சம் செலவில் புதியக் கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. தற்போது மேலும் ஐம்பது இலட்சம் நிதியுதவி பெற்று அதனை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டங்கள் மூலமாகவும் 17 இடங்களில் சிமிண்ட் சாலைகள், சமுதாயக் கூடங்கள், ரேஷன் கடைகள் அவைகள் அனைத்தையும் அமைத்து முடிக்கப்பட்டிருக்கின்றன, மீனவர்கள் மீன்பிடித்து வருபவர்களின் பகுதிகளில் நீண்ட நாட்களாக விளக்கு வசதியில்லை அங்கே விளக்கு வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.

ஆதி திராவிடர்கள் பகுதியிலே சமுதாயக் கூடம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது, இஸ்லாமிய பெருமக்கள் வசிக்கும் பெரும்பாலான இடங்களில் சிமிண்ட் சாலைகள் போடப்பட்டிருக்கிறது. புதிய பஸ்டாண்டு அமைவதற்கு முழு முயற்சி எடுத்து வருகிறேன். ஏற்கனவே மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அவர்களால் அங்கே அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது, அதேபோன்று முயற்சிகளாக அதிராம்பட்டினம் பேரூராட்சியின் ஒத்துழைப்புடன் நலத்திட்டங்கள் செய்யப்பட்டிருக்கிறது, இனி வருங்காலத்திலும் நல்லத்திட்டங்களை செயல்படுத்துவதில் முழு ஒத்துழைப்பாக இருப்பேன்.

அதிரைநிருபர்: அதிராம்பட்டினத்து பெரும்பாலான மக்களின் அவசிய கோரிக்கைகள் உங்களுக்குத் தெரியுமா அல்லது உங்களின் கவனத்திற்கு வந்திருக்கிறதா ?

M.L.A ரெங்கராஜன்: அதிராம்பட்டினத்தில் எங்கே பார்த்தாலும் வடிகால் (drynage) வசதிகள் செய்துதரும்படி எங்கே பார்த்தாலும் கேட்கிறாங்க மீண்டும் வெற்றிப் பெற்று வந்தால் அதிராம்பட்டினம் பகுதியிலும் முழுமையாக வடிகால் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு எல்லா வகையான என்னால் ஆன நடவடிக்கைகளை எடுக்க கண்டிப்பாக முயற்சிசெய்வேன்.

அதிரைநிருபர்: கடந்த ஐந்து வருடங்களில் எத்தனை முறை அதிராம்பட்டினம் வந்திருக்கிறீர்கள் ? எதற்காக என்றும் சொல்லமுடியுமா ?

M.L.A ரெங்கராஜன்: அதிராம்பட்டினத்தைப் பொறுத்தவரையிலே மக்கள் அழைத்தார்கள் நான் வரத் தவறியது கிடையாது. அதுவே அல்லாமல் ஊரிலிருக்கும் நாட்களில் மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது நான் அதிராம்பட்டினத்திற்கு சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்திருக்கேன். அங்கே நடக்கக் கூடிய சுக துக்கங்களில் கலந்து கொண்டு வந்திருக்கேன்.

அதிரைநிருபர்: எங்களூர் பேருந்து நிலையம் ஏன் இதுவரை புதிதாக்கப்படவில்லை ? யாரும் உங்களிடம் இதைப்பற்றி கேட்கவில்லையா ?

M.L.A ரெங்கராஜன்: பேருந்து நிலையத்திற்கு கிட்டத்தட்ட எழுபது இலட்சம் பணம் தேவைப்படுகிறது அதை நாங்கள் முழு முயற்சி எடுத்து மரியாதைக்குரிய முன்னாள் பேரூராட்சிமன்ற தலைவர் மறைந்த திரு எம்.எம்.எஸ் அவர்களோடு நானும் சென்னைக்கு சென்று பல்வேறு முயற்சிகள் எடுத்து அதன் பின்பு பேரூராட்சி பொது நிதியிலிருந்து கட்டுவது என்று அவர் ஒரு முடிவு எடுத்து அதைத் தொடர்ந்து மக்களும் நல்ல பஸ்டாண்டு தேவை என்றும் கேட்டார்கள் அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது. நிச்சயமாக இந்தப் பணியை முழுவதுமாக நான் முடித்து வைப்பேன், இன்னும் சொல்லப் போனால் மீண்டும் வெற்றி பெற்றால் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் இருபத்தி ஐந்து இலட்சம் வரை அதற்காக ஒதுக்கீடு செய்து கொடுத்து பேருந்து நிலையம் புதுப்பிக்கபடும் என்று இந்தருணத்தில் வாக்குறுதியளிக்கிறேன்.

அதிரைநிருபர்: மத்தியிலிருக்கும் காங்கிரஸ் ஆட்சி அதனைக் கொண்டு எங்களது ஊருக்கு என்ன நனமைகள் செய்திருக்கிறீர்கள் இதுவரை ?

M.L.A ரெங்கராஜன்: மத்திய அரசுடைய திட்டங்கள் என்பது நம்மால் நேரடியாக செய்ய முடியாது மத்திய அரசின் நிதிதான் மாநில அரசு மூலமாக எல்லா இடங்களுக்கும் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அதிராம்பட்டினம் பகுதியிலே பல்வேறு நபர்களுக்கு மத்திய அரசுடைய கல்விக் கடன் பல்வேறு மாணவர்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றேன். அதேபோன்று வாங்கதவர்களுக்கும் தொடரும்.

அதிரைநிருபர்: அதிராம்பட்டினத்து மக்கள் எல்லோருடைய எதிர்பார்ப்பு அகல இரயில் பாதைத் திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டிலும் ஏதும் சொல்லப்படவில்லையே? யாரேனும் உங்களிடம் எங்கள் ஊருக்கு அகல இரயில் பாதை என்ன ஆச்சுன்னு கேட்டிருக்காங்களா ? ஏன் இன்னும் தடைபட்டு இருக்கிறது !?

M.L.A ரெங்கராஜன்: முதல்ல வந்த காரைக்குடியிலேயிருந்து அதிராம்பட்டினம் திருத்திறைப்பூண்டி வழியாக சென்ற மனோரா எக்ஸ்பிரஸ் போனது பார்த்தீங்களா ! முதல்ல அந்தப்பாதையை அகலப் படுத்திகிட்டு இருக்காங்க. அதற்கான நிதியுதவி செய்யப்பட்டிருக்கிறது அதற்கான முயற்சிகள் எடுத்து அங்கிருக்கக் கூடிய பாதையாகி இரயிலை விட்டோம்னு சொன்னாலே நம்முடைய பெரும்பாலான நம்முடைய நெருக்கடி தீர்ந்திடும் அதற்கான முயற்சியை நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம் அதற்காக நம்முடைய பாராளுமன்றத் தொகுதி உறுப்பினரும் மத்திய நிதித்துறை இணை அமைச்சரும் திரு பழனிமாணிக்கம் அவர்களும் அதற்கான முயற்சியை நல்ல முறையில் செய்து கொண்டிருக்கின்றார் வருங்காலங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சர் அவர்களை சந்தித்து இன்னும் ஓர் ஆண்டுக்குள் நிறைவேற முழுமையாக நான் மற்றும் கூட்டனி கட்சிகளுடன் சேர்ந்து பாடுபடுவோம்.

அதிரைநிருபர்: இந்தத் தேர்தலில் பட்டுக்கோட்டைத் தொகுதியில் உங்கள் கூட்டணி கட்சிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் எந்த அளவுக்கு உள்ளது ?

M.L.A ரெங்கராஜன்: நல்ல முறையில் செய்திகிட்டு இருக்காங்க கூட்டணிக் கட்சிகளின் முழு ஒத்துழைப்புடன் வெற்றிக்காக பாடுபடுகிறார்கள்.

அதிரைநிருபர்: எங்களது ஊர் பழம்பெரும் தலைவர் மறைந்த எம்.எம்.எஸ். அப்துல் வஹாப் அவர்களின் இழப்பு காங்கிரஸ் கட்சியினுடைய ஓட்டு குறைவதற்கு வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஒரு கருத்து நிழவுகிறதே ! இச்சூழல் பற்றி என்ன நினைக்கிறீங்க !?

M.L.A ரெங்கராஜன்: மறைந்த எம்.எம்.எஸ் மறைவு என்பது காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய இழப்பு ஆனால் எம்.எம்.எஸ். குடும்பத்திலுள்ளவர்கள் கிட்டத்தட்ட நூறு பேர்கள் ஒவ்வொருவரும் எம்.எம்.எஸ் அவர்களாக உருவாக்கியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

அதிரைநிருபர்: பேருந்து நிலையம் அருகில் ஒரு பள்ளிவாசல் இருக்கிறது அதனைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் அங்கே என்னதான் பிரச்சினைகளைச் சொல்லுங்களேன் ? தீர்வுதான் என்ன ?

M.L.A ரெங்கராஜன்: நான் முன்னபே அறிந்த விஷயம்தாங்க அதுல வந்து சில சட்டச்சிக்கல்கள் கொஞ்சம் இருக்கிறது இரண்டு தரப்பாரும் பேரூராட்சி நிர்வாகமும் அதனை தீர்த்துக் கொள்வதற்கு தயாராக இருக்கிறார்கள். அதை ஒரு அமைப்பு கையில் எடுத்துச் செய்றாங்க அவங்க சற்று இறங்கி வந்து செய்து கொடுத்தாங்கன்னு சொன்னா பேச்சு வார்த்தை முலமாக நிச்சயமாக தீர்க்கமுடியும். அதை வரக்கூடிய காலங்களில் செய்து முடிப்பதற்கு எவ்வித சட்டச் சிக்கல்கள் இல்லாமல் என்னால் ஆன நடவடிக்கைகள் என்னன்ன எடுக்க முடியுமோ அத்தனை நான் எடுக்க தயாராக இருக்கிறேன். (கிளைக் கேள்வி : இதற்கு ஒரு கால அளவு சொல்ல முடியுமா முக்கியமாக தேர்தல் நேரமாக இருப்பதால் ?), அதாவது பெரியவர் எம்.எம்.எஸ் அவர்கள் தலையிட்டுச் செய்து கொண்டிருந்த காரணத்தினால் அவர்களும் நல்ல முறையில் முடித்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தோம் ஆனால் அவர்களின் மறைவு காரணமாக தற்போது அம்முயற்சி தடைபட்டு இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்றதும் நானே நேரில் தலையிட்டு ஆறுமாத காலத்திற்குள் நிச்சயமாக சுமூகமாக தீர்த்து வைப்பேன்.

அதிரைநிருபர்: பட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிடும் இரண்டு பெறும் கட்சிகளுக்கு நன்றாகத் தெரியும் இத்தொகுதி வெற்றிக்கு மிக முக்கியமாக அதிராம்பட்டினத்து முஸ்லீம்களின் வாக்குகளும் ஒரு காரனியக இருக்கும் என்று, கடந்த இரண்டு தேர்தலிலும் வெற்றி பெற்ற உங்களுக்கும் நன்றாகத் தெரியும். சரி உங்களை வெற்றியடைய செய்த அதிரை வாக்காளர்களை தக்க வைத்துக் கொள்ள என்ன செய்திருக்கீங்க இனிமேல் என்ன செய்யலாம் என்று எண்ணியுள்ளீர்கள் ?

M.L.A ரெங்கராஜன்: அதாவது எனக்கு அரசியலில் முகவரி அளித்தது அதிராம்பட்டினம்தான் அதற்காக என்னால் முடிந்தவரை நல்ல முறையில் பணியாற்றி வருகிறேன். அதிராம்பட்டினத்தைப் பொருத்தவரை எந்த திட்டங்களிலும் குறைகள் வைக்கவில்லை வருங்காலத்தில் அவர்களின் மிகப் பெரிய பிரச்சினையான வடிகால் பிரச்சினையை தீர்த்து வைப்பதுதான் ரொம்ப முக்கியம். பெரும்பால சாலை வசதிகள் 90%க்கு முடிக்கப்பட்டு விட்டன, ஆனால் வடிகால் பிரச்சினை என்பது அவர்களுக்கு தீராத பிரச்சினையாக இருக்கிறது நிச்சயமாக அது ஒரு மேஜர் ஸ்கீம்னு சொல்லுவேன் மிகப் பெரிய திட்டமாக அதனை எடுத்து நிச்சயமாக செய்து கொடுப்பதும் அதே போன்று பேருந்துநிலையத்தையும் அங்கே ஆரம்பிக்கப்பட பணிகளை தொய்வின்றி முடித்து வைப்பதும் நான் அவர்களுக்கு செய்யக் கூடிய நன்றியாகும்.

அதேபோல் அகல இரயில் திட்டத்தைப் பொருத்தவரையில் என்னுடைய முயற்சி என்பது முழுமையாக இருந்து கொண்டிருக்கும். அதேபோல் அரசு மருத்துவமனையில் சில குறைபாடுகள் இருப்பதாக சொல்லியிருக்கின்றார்கள் அங்கே 24 மணிநேரமும் மருத்துவர்கள் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்து செய்து கொடுப்பேன். அதாவது 108 அம்புலன்ஸ் கோரிக்கை பற்றியும் கொடுத்திருக்கிரார்கள் அதிராம்பட்டினத்திற்கு தனியாக வேண்டும் என்று கேட்டிருக்கின்றார்கள். அதேபோல் தீ அணைப்பு நிலையம் ஒன்று அதிராம்பட்டினத்திற்கு தனியாக வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றார்கள். நிச்சயமாக 108 ஆம்புலன்ஸ் சேவையை அங்கு கொண்டு வர முடியும், தீ அணைப்பு நிலையம் அமைவதற்கு நிச்சயமாக என்னால் ஆன முயற்சிகளை எடுப்பேன்.

அதிரைநிருபர்: உங்களுடைய வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கிறது ? வெற்றி பெற்றிடுவோம்னு முழு நம்பிக்கை இருக்கிறதா ?

M.L.A ரெங்கராஜன்: நிச்சயமா ஜனநாயக முற்போக்கு கூட்டணி இன்னைக்கு எனக்காக திராவிட முன்னேற்ற கழகம் உட்பட முஸ்லீம் லிக், தவ்ஹீத் ஜமாத் ஆகிய நண்பர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி மற்ற இயக்க நண்பர்கள் அனைவரும் நல்ல முறையிலே வெற்றிக்காக அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் இரண்டு முறை வெற்றி பெற்றது போல் இந்த முறையும் மீண்டும் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சி அமையும்.

அதிரைநிருபர்: உங்களுக்கும் எதிரணியில் இருக்கும் வேட்பாளர் திரு செந்தில் குமாருக்கும் இடையே வித்தியாசங்களை நீங்களே சுருக்கமாக சொல்லுங்களேன்.

M.L.A ரெங்கராஜன்: ஐம்பது வருடங்களாக அரசியலில் எங்களது குடும்பம் பட்டுக்கோட்டை தொகுதி மக்களுக்கு நன்கு தெரிந்த குடும்பம், பத்தாண்டுகள் தொடர்ந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட ஒருவனாக இருந்து பட்டுக்கோட்டைப் பகுதியில் சாதிரீதியான மதரீதியான மோதல்கள் இல்லாமல் நல்ல முறையிலே இந்தத் தொகுதி மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளேன். வருங்காலத்திலும் அது தொடருக்கக் கூடிய வகையிலே என்னுடைய நிலை அப்படியே தொடரும். எதிர்கட்சியில் இருப்பவரைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.

ப்பேட்டியை எழுத்து வடிவில்தான் பதிவோம் என்றும் சொல்லிட்டோம். நம் தொகுதிக்கு நல்ல தகுதியானவரை தேர்தேடுத்தாக வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இதை செய்துள்ளோம்.

அன்பார்ந்த அதிரை மக்களே இதோ உங்கள் பார்வைக்கும் வைத்துவிட்டோம். மற்ற வேட்பாளர்களுடன் இந்த வேட்பாளரை தரம் பார்த்து இனி நீங்கள் முடிவு செய்துக்கொள்ளுங்கள் யாருக்கு ஒட்டளிப்பது என்று.

வேட்பாளருக்கும், ஓட்டுப்போடப்போகும் மக்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

-- அதிரைநிருபர் குழு