Showing posts with label குடி. Show all posts
Showing posts with label குடி. Show all posts

மதுவும் ஒரு மாதுவின் அரசும்! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 10, 2015 | , , , , ,

'மது' நாட்டுக்கும் வீட்டுக்கும் கெடுதல் என்ற விளம்பர உதவியோடு சினிமாத்துறை வசதியாக தவறு செய்வதைபோன்று ஒரு பக்கம் புகை நமக்கு பகை என அறிவித்துக் கொள்ளும் அரசாங்கம் இன்னொரு பக்கம் மதுபானத்தை வெளிப்படையாகவே கடைவிரித்து வியாபரம் செய்கிறது! இன்று மது தொழிலை ஆதரிக்கும் அரசாங்கம் நாளை `மாது` தொழிலையும் நடத்தினால் ஆச்சரியம் எதுவுமில்லை!
வாசகத்தின்

போராட்டம் என்பதும் ஒரு போர்தான்! ஆனால் போராளிகளின் வீர சரணங்கள் அரசாங்கத்தின் காதுகளை தொடுவதில்லை! சில மரணங்கள் மட்டுமே அரசாங்கத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே போகிறது ! தன் சட்டையில் தீப்பற்றும் போதுதான் நெருப்புக்கெதிராக கருப்புக் கொடி தூக்கும் சமுதாயத்தில் நாம் இருக்கிறோம்! 

கந்து வட்டியை தடை செய்ய ஜீ வி அவர்களின் ஆவி தேவைப்பட்டது அரசாங்கத்திற்கு...! அதே வரிசையில் மதுவுக்கெதிரான போராட்டம் தன் பசிக்கு காந்தியவாதி சசிபெருமாள் உயிரையும் ருசித்து விட்டது! நல்ல மனிதன் மட்டுமல்ல நல்ல போராட்டங்கள் கூட மரணத்திற்கு பிறகே மதிப்பை பெறுகின்றன!

இன்று மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அரசியல்வாதிகள் மரணத்திற்கு முன்பு அவரது போராட்டங்களை காது குடைந்தபடியே கவனித்ததை அனைவரும் அவதானித்தே வந்திருக்கிறோம்!

ஒழுங்காக இருக்க ஒழுக்கத்தைப் பற்றி ஒருபுறம் பாடம் எடுக்கும் ஆசிரியர் அந்தபுரத்தில் விபச்சார வியாபாரியாக இருப்பதுபோல் "புகை நமக்கு பகை" "குடி குடியை கெடுக்கும்" என்று பாட்டுப் பாடியபடி நன்றாகவே நடிக்கிறது அரசாங்கம்! தீண்டாமை ஒரு பாவச் செயல் என புத்தகங்களின் முன்பக்கத்தில் முன்னுரைக்கும் அரசாங்கம் உன் ஜாதி என்னவென்று பின்னாளில் விண்ணப்பதிலும் சலுகைகளிலும் பின்னுரைக்கிறது!

புகையிலைகளாலும் மதுவினாலும் உயிர் இத்தனை மில்லிமீட்டர் குறைந்ததாக அறிவியல் அலறி கொண்டிருக்கையில் மனித உயிர்கள் ஒரு பொருட்டே அல்ல என தமிழக அரசு இதன் மூலம்  தன் கஜானா நிறைந்ததா குறைந்ததாவென விரைந்து கணக்கெடுத்துக்   கவலைப் படுகிறது!

இருட்டில் கொளுத்திய தீக்குச்சிப் போல சில போராட்டங்களில் சுய விளம்பரமே பிரமாண்டமாக தெரிகிறது! போராட்டம் என்ற கண்ணாடியில் தங்கள் பிம்பங்களை காணவே பிரியப்படுகிறார்கள் போராட்டக்காரர்கள்! இங்கே நடக்கும் உண்ணாவிரத போராட்டத்திலும் கோஷம் போடும் போராட்டத்திலும் அதிக நஸ்டமடைந்தது காவல் துறையே! லாபம் அடைந்தது பழக்கடை ஜூஸ் வியாபாரிகள் அவ்வளவே!! போராடும் அரசியல் தலைவர்களின் கவனம் அதற்கான தீர்வின்மேல் இல்லாமல் முன் வரிசையில் நின்றபடி தன் பத்திரிகையில் வெளிவரும் புகைப்படம் சரியாக இருக்கிறதா என்பதிலேயே குறியாக இருக்கிறது!!

ஆனால், இப்போது இந்த மதச் சார்பற்ற நாட்டில் நடப்பது என்ன?

நம்மவர்களுக்கு ஒரு கெட்டப் பழக்கம் ! இதை செய்யாதே என்றுரைப்பதையே செய்து முடிக்கத் துடிக்கும் பிடிவாதம்.. 

`யாரையும் காயப்படுத்தாதே` என்ற இயேசுவை (ஈசா நபியை) இவர்கள் ஏசாத வார்த்தைகள் இல்லை! 

விபச்சாரம் அபச்சாரமென்ற சொல்லாணையிட்ட  கண்மணி நாயகத்தின் மேல் கல் எறியாத அந்தக்கால கயவர்கள் இல்லை!! 

ஒவ்வொரு சமுதாயத்திற்கு அவர்களை நேர்வழிப்படுத்த அந்தந்த காலகட்டங்களில் ஒரு நபி போதுமானதாக இருந்தது. இறுதித் தூதர் அவர்களின் வருகையால் அனைத்தும் முழுமை பெற்றுவிட்டது. இனியொரு தூதர் உலக இறுதிநாள் வரை வரப்போவது இல்லை. மனிதகுலத்துக்குரிய சட்டம் அல்குர்ஆனும் நபிவழியும் மட்டுமே நேர்வழி படுத்தும்.

கனவு காணுங்கள் என்று கிளிபிள்ளையாய் சொன்ன கலாம் அவர்களே! மன்னிக்க வேண்டும்! வேலியே பயிரை மேய்கிறது எனும் `கிலி`யில் நாங்களிருக்கையில் உங்கள் கனா வினாதான் என்பதில் எனக்கு வியேப்பேதும் இல்லை!

ஷேக் முகைத்தீன்

மதுவை ஒழிக்காதவரை தமிழகம் முன்னேறாது - 'நந்தினி' நேர்காணல் 21

அதிரைநிருபர் பதிப்பகம் | July 22, 2014 | , , , , , , ,

குடிகார மாநிலத்தின் குமட்டலுடனும் ஒழுங்கு மீறல்களுடனும் தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. மதுவினால் நாட்டுக்கு வீட்டுக்குக் கேடு என்பதைச் சொல்லிக் கொண்டே கேடுகெட்ட மாநிலமாகத் தமிழகத்தை பின்தள்ளிக் கொண்டிருக்கின்றனர் ஆட்சியாளர்கள். வீதிக்கு வந்த நாற்றத்தைச் சகித்துக் கொண்டு கடந்து போகும் மக்களிடையே அவ்வப்போது சில அரசியல் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டு, ஒன்றிரண்டு அடையாளப் போராட்டங்களை நடத்தியதோடு சரி, அதைத் தாண்டி கொஞ்சம் நீளமாய் நடையாய் நடந்தும் பார்த்தாயிற்று. குடிகாரர்களின் அழுக்குக் கால்களில் விழுந்து கெஞ்சிப் பார்த்தார் சசி பெருமாள். உண்ணாவிரதம் இருந்தார். பழச்சாறு மட்டுமே மிஞ்சியது.

இதெல்லாம் சரிப்பட்டு வராது. தொடர் போராட்டங்களினால் அரசின் செவிட்டுச் செவியில் சங்கு ஊதிப் பார்ப்பது எனத் தம் தந்தையுடன் நீண்ட நெடிய போராட்டத்திற்காய்க் கிளம்பிவிட்டார் மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. கைதுகளையும் முட்டுக்கட்டைகளையும் கடந்து இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றார். நீறு பூத்த நெருப்பாக இப்போராட்டம் வெடித்து அதன் அக்னிச் சூட்டில் மது அரக்கன் கருகிவிடமாட்டானா? என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் நந்தினியைச் சந்திக்க மதுரைக்கேகினோம். தந்தை ஆனந்தனுடன் சமரசத்திற்கான நேர்காணலை நேர்த்தியுடன் தெளிவுடன் தொடர்கிறார் நந்தினி.

நந்தினிக்கு ஏன் மதுவின் மீது அவ்வளவு கோபம்?

எனக்கு மட்டும் இல்ல சார். தன்மானமுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் இந்தக் கோபம் வரணும். மதுவினால் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் என் சமுதாயம் என் கண்முன்னே நாசமடைவதை எப்படி என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும்? மதுவினால் மானம் இழந்தவர்கள் எத்தனை பேர்? தந்தையை இழந்தவர்கள் எத்தனை பேர்? கணவனை இழந்த என் வயதையொத்த பெண்கள் எத்தனை எத்தனை பேர்? மதுவினால் எத்தனை விபத்துகள். எவ்வளவு பிரச்னைகள்? ஒரே வரியில் சொல்வதானால் எல்லாப் பிரச்னைகளுக்கும் மூல காரணமே மதுதான். இதை ஒழிக்காத வரை நம் தமிழகம் ஒருக்காலமும் முன்னேறாது.

உங்கள் போராட்டத்தின் பின்புலம் என்ன..?

(நந்தினி பதில் சொல்லத் தொடங்குமுன் அவருடைய தந்தை ஆனந்தன் குறுக்கிட்டு “ஸார்.. இந்தக் கேள்விக்கு நானே பதில் சொல்றேனே..என்று தொடர்ந்தார்)

நான்தான் என் மகளுக்கு உந்துசக்தி. தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றினேன். ஓய்வு பெற 15 ஆண்டுகள் மீதமிருக்கும்போதே விருப்ப ஓய்வு பெற்று சமுதாயப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். 18 ஆவது வயதில் அரசுப்பணியில் சேர்ந்தேன். அப்போதிருந்தே அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். தொழிற்சங்க ஈடுபாடு ஏற்பட்டபோது சமுதாயப் புரிதல் எனக்கு அதிகமானது. வேளாண் துறை என்பதால் கிராம மக்களின் வாழ்வை மிக அருகிலிருந்து கவனித்து வருகிறேன். கிராமங்கள் நசிந்து வருகின்றன. இளைஞர்கள் அடித்தளத்தை விட்டு நகரத் தொடங்கிவிட்டார்கள். கலாச்சாரச் சீரழிவு பெருகத் தொடங்கி விட்டது. மக்களை மதுவுக்கு அடிமையாக்கி மக்களின் சிந்தனைகளை மழுங்கடித்து குடிகார மக்களின் மீது ஆதிக்கம் செலுத்த அரசு திட்டம் தீட்டியது. மக்களை மயக்க நிலையில் வைத்திருந்தால்தான் அரசின் அநியாயங்களை யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள். அதனால் அரசே ஊத்திக் கொடுக்க ஆரம்பித்தபோதுதான் போராட்டக் களத்திற்கு என் மகளோடு வந்தேன். என் மகளை முன்னிறுத்தி இப்போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம்.

நந்தினி நீங்கள் உங்கள் தந்தையுடன் முதல்வரைச் சந்திக்கச் சென்றீர்களே..! அந்தப் போராட்டப் பயணம் பற்றிச் சொல்லுங்களேன்...! 

மது அரக்கனை ஒழிக்க வேண்டும். மதுவினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வை முதலில் மேற்கொண்டோம். குடியினால் தந்தையை இழந்த 100 குழந்தைகளை அழைத்துக் கொண்டி முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு விரிவாய் கடிதம் எழுதினோம். எந்தப் பதிலும் இல்லை. டிசம்பர் 24 ஆம் நாள் எம்.ஜி.ஆர் பிறந்தநாள். எனவே முதல்வர் சென்னையில் இருப்பார் என்பதால் 23ஆம் தேதி நான் என் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்னைக்குக் கிளம்பினோம். அன்று மாலையில் நாங்கள் திருச்சியில் கைது செய்யப்பட்டோம். இரவு திருவெரும்பூர் காவல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டோம். 25 ஆம் நாள் காலையில் விடுவிக்கப்பட்டோம்.

முதல்வர் கொடநாடு செல்வதால் நீங்கள் சென்னை வரவேண்டாம் என போயஸ் கார்டனிலிருந்து எங்களுக்குத் தகவல் வந்தது. உண்ணா விரதம் மேற்கொண்ட நிலையிலேயே சென்னைக்கு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். குரோம்பேட்டையில் மீண்டும் கைது செய்யப்பட்டோம். உண்ணாவிரதத்தினாலும் பயணத்தினாலும் நாங்கள் மிகவும் களைப்படைந்து இருப்பதால் அங்குள்ள மருத்துவமனையில் எங்களை வைத்தார்கள்.

அங்கிருந்து விடுதலையாகி கொடநாடு நோக்கிச் சென்றோம். செல்கின்ற வழியில் பெருந்துறையில் எங்களை மீண்டும் கைது செய்தார்கள். எங்கள் உண்ணா விரதத்தையும் நாங்கள் விடவில்லை. பெருந்துறை மருத்துவமனையில் எங்களைச் சேர்த்தார்கள். பின்னர் 26 ஆம் தேதி எங்களை நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று சொல்லி அவர்கள் வாகனத்தில் எங்கள் இருசக்கர வாகனத்தையும் ஏற்றிக்கொண்டு நேராக மதுரைக்குச் சென்று எங்கள் வீட்டில் கொண்டு சேர்த்தார்கள். நாங்கள் வீட்டிற்குள் செல்லவில்லை. மீண்டும் திரும்பி மதுரை வைகை ஆற்றுப்படுகையில் எங்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தோம். என்னுடைய இளைய சகோதரியும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டாள்.

மீண்டும் நாங்கள் கைது செய்யப்படுகிறோம். அப்போதும் உண்ணாவிரதம் 7ஆவது நாளாகத் தொடர்கிறது. எங்கள் மீது தற்கொலை வழக்கு பதிவு செய்து என்னை திருச்சி பெண்கள் சிறையிலும், என் தந்தையை மதுரை மத்திய சிறையிலும் அடைத்தார்கள். அங்கு எங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டாலும் போராட்டத்தைத் தொடர்ந்தோம். எங்களுக்கு ஜாமீன் தர மறுத்தார்கள். இறுதியாக ஜனவரி11 ஆம் நாள் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தோம்.

எங்கள் போராட்டம் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏப்ரல் 22 ஆம் தேதி மண் வாரித் தூற்றும் போராட்டத்தை மேற்கொள்ளச் சென்றபோது சென்னை மெரினாவில் வைத்து நாங்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டோம். மே3 ஆம் தேதி எனக்கு பரீட்சை இருந்ததால் நான் மே 1 ஆம் நாள் விடுவிக்கப்பட்டேன். என் தந்தையை மே 11 ஆம் நாள் விடுவித்தார்கள்.

ஜூன் 23ஆம் நாள் பழ நெடுமாறன் அவர்கள் கலந்து கொண்ட போராட்டத்தை மதுரையில் நடத்தினோம். மதுவை ஒழிக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். ஜூலை 29 ஆம் நாள் சசிகலாவுக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை முன்பு மது அரக்கி உருவபொம்மை எரிப்புப் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

இத்தகைய போராட்டங்களினால் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றனவா..?

9ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு மாணவர்கள் கூடக் குடிக்கத் தொடங்கிவிட்டார்கள். இச் சூழலில் மதுவுக்கெதிரான குரல் எழும்போதுதான் சமுதாயம் விழிப்புஉணர்வு அடையும். எங்கள் போராட்டங்களினால் ஓரளவு மக்களிடம் விழிப்பு உணர்வு வந்துள்ளது. மாற்றங்களை நோக்கித்தான் பயணிக்கின்றோம். நிச்சயம் ஒருநாள் மதுக்கடைகள் இழுத்து மூடப்படும். அந்த மாற்றத்திற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கின்றோம்.

போராட்டங்களினால் மட்டுமே மதுவை ஒழித்துவிடமுடியுமா? மது ஒழிப்பிற்கான வேறு என்னென்ன திட்டங்களை வைத்துள்ளீர்கள்?

மதுவை ஒழிக்க சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டாலே போதும். indian penal code  ஐபிசி பிரிவு 328 இன் படி அரசு மதுவிற்பது சட்டவிரோதச் செயல். போதைப் பொருள்களைத் தவறு எனத் தெரிந்தே விற்பது சட்டப்படி குற்றம். அதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று நன்றாகத் தெரிந்து கொண்டே மதுவை அரசு விற்பது சட்டத்தை மீறிய செயல் இல்லையா...? கள்ளச் சாராயம் காய்ச்சுவது குற்றமென்றால் உரிமம் பெற்று டாஸ்மாக் நடத்துவது சரியானதுதானா? அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 47 இன் படி மதுவிலக்கை மாநில அரசு அமுல்படுத்த வேண்டும். மருத்துவத் தேவைக்காக அல்லாமல் போதைப் பொருளைப் பயன்படுத்துவதை அரசு தடுக்க வேண்டும். பொள்ளாச்சியில் மது அருந்திவிட்டு பாலியல் பலாத்காரம் செய்த செய்தியை அண்மையில் படித்திருப்பீர்கள். பலாத்காரத்திற்குத் தூண்டுதலான மதுவை அரசுதான் கொடுத்திருக்கிறது என்றால் இந்தக் குற்றத்தைத் தூண்டிய வழக்கில் அரசையும் இணைக்க முடியும். தவறுகளைத் தடுக்க வேண்டிய அரசே சாராயம் விற்பதுதான் வேதனை. சட்டத்தை அரசே காலில் போட்டு மிதிக்கும்போது சட்டத்திற்குத்தான் என்ன மரியாதை? எங்களின் கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை. இதுபோன்ற சட்டப்பூர்வ விளக்கத்தைப் போராட்டங்களின் மூலம் முன்னெடுத்து வைக்கின்றோம். எங்கள் போராட்டம் ஒரு நாள் மக்கள் போராட்டத்திற்குத் தூண்டும் என நம்புகிறோம். மக்களின் ஒருமித்த குரல் ஓங்கி எழும்போது இந்த நியாயமான குரலுக்கு அரசு ஒருநாள் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்.

மதுவினால் அரசுக்கு வருமானம் வருகிறது. மதுவைத் தடைசெய்தால் வருமானம் தடைபடுமே என்ற காரணத்தைச் சிலர் முன்வைக்கின்றார்களே....!

மதுவினால் அரசுக்கு வருமானம் என்று தினமலர் பத்திரிகைதான் செய்தியைப் பரப்பிவருகிறது. டாஸ்மாக்கைக் காப்பாற்றுவதில் தினமலரின் பங்கு முக்கியமானது. அரசுக்கு வருமானம் என்பது மூளைச்சலவை. சாராயத்தைக் கொடுத்துக் கணவனிடமிருந்து காசு பறிப்பார்கள். வீட்டுக்கு ஆடு, மாடு கொடுப்பார்களாம். உங்களிடம் இலவசம் கேட்டது யார்? அரசுக்கு வருமானத்திற்கு வேறு வழியே இல்லையா? கிரானைட் கற்களைத் தனியார் சுரண்டி விற்கிறார்களே... அரசு கிரானைட், தாது மணல்களை எடுத்து வருமானம் பார்க்கட்டுமே...! ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி, 60 ஆயிரம் கோடிக்கு குடிக்கிறார்கள் மக்கள். மதுவைத் தடைசெய்தால் அந்த 50ஆயிரம், 60ஆயிரம் கோடியைத் தொழிலில் போடுவார்கள். வீடு கட்டுவார்கள். அவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு என்ன செய்தாலும் அது அரசுக்கு நன்மையைத்தானே தரும். இன்னும் தெளிவாய்ச் சொல்வதானால் அரசுக்குக் கூடுதல் பணம் கிடைக்கும். குடியினால் ஏற்படும் விபத்துகளில் அரசுக்கு ஆகும் செலவு எவ்வளவு? குடியினால் குடல் வெந்து மருத்துவமனைகளில் செத்து மடியும் மக்களுக்கான மருத்துவச் செலவு எவ்வளவு? எல்லாவற்றையும் கூட்டிக் கழித்தால் மதுவினால் அரசுக்கு பெரும் நஷ்டம் என்பதுதான் நிதர்சனம்.

இடதுசாரிகளும் மதுவை ஆதரிக்கின்றார்களே... கவனிக்கின்றீர்களா...?

யார் ஆதரித்தாலும் எதிர்த்தாலும் குற்றம் குற்றமே..! டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று இடதுசாரிகள் கூறுகின்றார்கள். இதில் தொழிலாளியின் நலம் எதுவுமில்லை. டாஸ்மாக் ஊழியர்களுக்கான மாற்றுப் பணிகளை வழங்கக் கோரி இருக்கலாம். டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரப்படுத்தக் கோருவது டாஸ்மாக்கை நிரந்தரப்படுத்து என்பதுதான் அதன் அர்த்தம். எந்தத் தொழிலாளி, பாட்டாளி வர்க்கத்திற்காகப் போராடுகிறோம் என்று சொல்கிறார்களோ.. அவர்களின் அன்றாடக் கூலியை மதுவின் மூலம் அரசு வம்படியாகப் பிடுங்கிக் கொள்கிறது. மட்டுமில்லை உழைக்கும் வர்க்கத்தை நாசப்படுத்துவதும் இந்த மது அரக்கன்தான். மதுவை ஒழிக்க முன்வரவேண்டிய இடதுசாரிகள் அதற்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது வேதனையானது. துயரமானது.

இந்தியா முழுவதிலும் தடை செய்தால்தான் தமிழகத்திலும் மதுஒழிப்பு சாத்தியம் என்பது சரியா..?

மதுவிலக்கு மாநில அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம். இந்தியாவில் தடை செய்தால்தான் மாநிலத்திலும் தடை செய்வோம் என்றால் மாநில சுயாட்சிக்கு என்ன அர்த்தம் இருக்கப்போகிறது? 1971 வரை மது தடை செய்யப்பட்ட மாநிலமாகத்தான் தமிழகம் இருந்தது. இரண்டு திராவிடக் கட்சிகளும் அண்ணாவின் பெயரைச் சொல்லி கட்சி நடத்திக்கொண்டு அவருடைய கொள்கைக்கு எதிராக மது வியாபாரம் செய்கின்றனர். அ.தி.மு.க ஏதாவது திட்டம் கொண்டு வந்தால் அடுத்துவரும் திமுக அந்தத் திட்டத்தைக் கைவிட்டு விடும். திமுக கொண்டு வந்த புதிய சட்டமன்றம், அண்ணா நூலகம், உழவர் சந்தை, சமத்துவபுரம் என்று  எத்திட்டத்தையும் அடுத்து வரும் அதிமுக அத்தனை திட்டங்களையும் கடாசிவிடும். ஆனால் என்ன ஒற்றுமை பாருங்கள். மது விற்பதில் மட்டும் இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவதை..! டாஸ்மாக்கைத் திறந்தது அதிமுக; அதற்காகவாவது திமுக அதை இழுத்து மூடியிருக்கலாம். கலைஞர்தான் மதுவிலக்கை உடைத்து மது ஆறு பெருக்கெடுத்து ஓடச்செய்தவர். கலைஞர் கொண்டு வந்ததை அதிமுக ஆதரிக்கலாமா? அதற்காகவாவது மதுவைத் தடை செய்திருக்கலாம் இல்லையா....!?

உங்கள் போராட்டத்திற்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் எப்படி இருக்கின்றன..?

மக்களிடம் நல்ல ஆதரவு இருக்கின்றது. நான் படிக்கின்ற சட்டக்கல்லூரி மாணவர்களும் உறுதுணையாக இருக்கின்றார்கள். மதுவை எதிர்த்துத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யும் வைகோ, தமிழருவி மணியன், டாக்டர் ராமதாஸ் போன்றோர் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவும் வாழ்த்துகளும் தெரிவிக்கின்றார்களே தவிர இதை மக்கள் போராட்டமாக எடுத்துச் செல்வதில் முனைப்புக் காட்டவில்லை. மதுவுக்கு எதிரான சிந்தனை உள்ளவர்கள் ஓரணியில் திரண்டாலே இந்த மதுவை முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம். ஆனால் அரசியல்வாதிகள் ஆதாயம் இல்லாமல் எதையும் செய்யமாட்டார்கள்தானே....! எங்களுடைய போராட்டங்கள் குறித்து ஊடகங்களில் செய்தி வந்தாலும் கூட போதிய முக்கியத்துவம் தரவில்லை. ஊடகங்களில் இச்செய்திகள் இன்னும் அழுத்தம் பெறுமானால் இது மக்கள் போராட்டமாக மாற வாய்ப்பு இருக்கின்றது. இஸ்லாமிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் எங்கள் போராட்டங்களில் கலந்து கொள்வதுண்டு. கடந்த ஆண்டு முஸ்லிம் கட்சியின் தலைவர் ஒருவர் எங்களைச் சந்தித்து ரமளான் முடியட்டும். உங்கள் போராட்டத்தை நாங்கள் வீரியமாக்குகின்றோம் என்றார்கள். இதோ அடுத்த ரமளானும் வந்துவிட்டது. அவர்கள் வரவில்லை. எல்லாருக்கும் நிறைய வேலைகள் இருக்கும். அதே வேளையில் இது தலையாயப் பணி இல்லையா..? நாங்கள்தான் முன்நின்று நடத்தவேண்டும் என்பதில்லை. தகுதியானவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லட்டும். எப்படியாவது மது ஒழிந்தால் சரி..!

மதுவை முற்றாக ஒழித்துவிட முடியும் என்று நம்புகின்றீர்களா...?

நிச்சயமாக...! மது இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும். மதுவற்ற நாடாக இந்தியா மாறும். அதற்கான போராட்டவிதை என்றோ தூவப்பட்டு விட்டது. நாங்கள் அதில் இணைந்துள்ளோம். சமூக நலனிலும், நாட்டு நலனிலும் அக்கரை கொண்டவர்கள் ஒரணியில் இணையும் போது மதுவை இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் ஒழித்தே தீருவோம்.

சந்திப்பு: வி.எஸ்.முஹம்மது அமீன்  
நன்றி : சமரசம் ஜுலை 2014. 

பரிந்துரை : அதிரை அஹ்மத் 

இத்தியாதி இத்தியாதி - வெர்ஷன் - 3 26

அதிரைநிருபர் பதிப்பகம் | November 28, 2013 | , , , , , , , , ,

குறுக்கம்:

அவனுக்கு இருபத்தியோரு வயதிருக்கும். பாகிஸ்தானியருக்கே உரித்தான நல்ல உயரமும் நிறமும் வசீகரமான முகமும் கொண்டவனாக என் முன் நின்றான்.  முகத்தில் தாடியாகவும் கிருதாவாகவும் அவன் வரைந்து வைத்திருந்த  நளினம் நவ நாகரிகத்தின் தன்மையதாக இருந்தது.  படிப்பறிவு கிடையாது என்பதை அவன் பார்வையும் தோரணையும் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

"உனக்குச் செய்து காண்பிக்கச் சொல்லும் சோதனையெல்லாம் கிடையாது. உன் அண்ணன் கம்ரான் ஏற்கனவே என்னிடம் பேசிவிட்டான். ஒழுங்காக நாளையிலிருந்து வேலைக்கு வா.  உன் பாஸ்போட் காப்பி மற்றும் ஒரு பாஸ்போட் சைஸ் புகைப்படமும் கொடு. விசா ஏற்பாடு செய்கிறேன்." என்று சொன்னதும்,

"நன்றி சார்ஜி" என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டான். 

அவனை எங்களின் பணிமனையில் ஸ்ப்ரே பெயின்ட்டராக வேலைக்குச் சேர்க்கச் சொல்லி ஏற்கனவே அவன் அண்ணன் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் ஊரில் ஊதாரியாகத் திரிவதாகவும் ஸ்ப்ரே பெயின்ட்டிங் தெரிந்து வைத்திருந்தும் ஓரிடத்தில் கூட தொடர்ந்து வேலை செய்வதில்லை என்றும், ஆகவே உதவுமாறும் ரொம்பக் கெஞ்சினதால், எங்களுக்கும் பெயின்ட்டர் தேவைப்பட்டதால் வரச் சொல்லியிருந்தேன். அப்படி விசிட் விசாவில் ஷார்ஜா வந்தவனிடம்தான் நாளை வருமாறு சொல்லி அனுப்பினேன்.

எங்கள் பணிமனையில் புல்டோஸர், வீல் லோடர், மோட்டர் கிரேடர், ரோட் ரோலர், கிரேன் போன்ற பலதரப்பட்ட கனரக எந்திரங்களையும் பழுது பார்ப்போம், டென்டிங் பெயின்டிங் செய்து புதுப்பிப்போம். அத்தகைய பணிமனையை நிர்வகிக்கும் பொறுப்பில் நான் இருந்ததால் என் கோரிக்கையின்படி அந்த கம்ரானின் தம்பி ரிஸ்வானுக்கு வேலை தர ஹெச் ஆர் ஒப்புக்கொண்டனர்.  விசா ப்ரொஸஸிங்கும் துவங்கியது.

விசா அடிக்கப்படும் வரை அவனை வேலைக்கு வரச் சொல்லி விட்டேன். எனவே, அவனும் தினமும் வேலைக்கு வரலானான். அவன் அண்ணன் கம்ரான் எனக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டான்.  

திடீரென ஹெச் ஆரிலிருந்து வந்த மின்னஞ்சலில் உடனே அவனை வேலையை விட்டு நிறுத்தும்படியும் ஹெச் ஆரை வந்து சந்திக்கும்படியும் சொல்லப்பட்டிருக்கவே என்ன ஏதுவென்று விசாரிக்கலானேன்.

விசா விண்ணப்பிக்க வேண்டிய ஷரத்களில் ஒன்றாகிய  மருத்துவ பரிசோதனையில் அவன் ஃபெயிலாகி விட்டதாகச் சொன்னார்கள்.  சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் விண்ணப்பிக்கலாமே என்ற என் யோசனையை மறுத்த ஹெச் ஆர் வெளியே சொல்ல வேண்டாம் அவனுக்கு ஹெச் ஐ வி பாஸிட்டிவ் என்று குண்டைத் தூக்கிப் போட்டனர்.  அவனிடமும் சொல்ல வேண்டாம். பாகிஸ்தான் போய் பரிசோதித்து விட்டு வரச்சொல்வோம் என்று தீர்மானிக்கப் பட்டது.

அவனிடம் அப்படியே சொல்லி ஊருக்குப் போய் சிகிச்சைச் செய்து குணப்படுத்திக் கொண்டு வா என்று சொல்லிவிட்டு அவனிடம் தனியாகக் கேட்டேன்,

"ரிஸ்வான், உண்மையைச் சொல். உனக்குப் பெண்கள் தொடர்பு உள்ளதா?"

"இல்லை சார் ஜி, எப்பவாவது நண்பர்களோடு ரண்டிகளிடம் செல்வதுண்டு"

"உன் வயதுக்கும் அழகுக்கும் நல்ல மனைவி கிடைக்கும் வரை உனக்குப் பொறுமை இல்லாது போனதே"

"ஏன் சார்ஜி, ஏதும் கெட்ட வியாதியா எனக்கு?"

"சரியாத் தெரியலப்பா. ஊருக்குப் போய் சோதித்துக் கொள்"

அவன் பாகிஸ்தான் போய்  7 வது நாள் அவன் அண்ணன் கம்ரான் அழுது கதறிக்கொண்டே வந்து எமர்ஜென்ஸி லீவ் கேட்டு நின்றான்.  ஏன் என்று வினவ, தன் தம்பி தற்கொலை செய்து கொண்டதாகவும் உம்மா தனியாக ஆறுதலின்றி தவிப்பதாகவும் சொன்னான். நெஞ்சுக்குள் எனக்கு என்னவோ செய்தது.  அவனை உடனே அனுப்ப ஏற்பாடுகள் செய்யச் சொல்லி ஹெச் ஆருக்கு தெரிவித்துவிட்டு ரொம்ப வேதனைப்பட்டேன்.

என்னாச்சு இந்த இளைய சமுதாயத்துக்கு.  எத்தனையோ விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டும் இப்படி மனித வாழ்க்கையை விட்டிலின் வாழ்நாளைப் போல சுறுக்கிக்கொள்கிறார்களே என்கிற ஆதங்கம் எனக்கு ஒரு வாரத்திற்கு சரியாகத் தூங்க விடாமல் வாட்டியது.  அந்தப் பையனின் முகமும் அதில் வரையப்பட்டிருந்த தற்காலிக கிருதா தாடியும் நிழலாடிக்கொண்டே இருந்தது.

ஹெச் ஐ வி பாஸிட்டிவ் மானிட வாழ்க்கைக்கு நெகட்டிவ் என்பதை மனிதன் என்றுதான் உணரப்போகிறானோ.

தப்பாட்டம்

அப்போது நான் துபை தேராவில் என் நண்பன் ஆடிட்டர் கபீரின் அறைத் தோழனாக இருந்து வந்தேன். நாங்கள் இருந்த மூன்றாவது மாடியின் பால்கனியில்தான் சின்னச் சின்னதாக உடற்பயிற்சி செய்வோம். காற்று வாங்குவோம், சபகா வீதியின் போக்குவரத்தை வேடிக்கைப் பார்ப்போம். மேலும், அங்கிருந்து பார்த்தால் சபகா ரோட்டின் அந்தப் பக்கமாக இருக்கும் ஹோட்டல்கள் தெளிவாகத் தெரியும்.


மற்ற நாட்களை விட வார இறுதி நாட்களும் விடுமுறை நாட்களும் மிகவும் புழக்கமாக இருக்கும்.  இரவு முழுதும் தேரா தூங்காது.  அப்படித்தான் ஒரு நாள் பால்கனியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு பெருநாள் தினத்தின் மாலை நேரம். அந்த ஹோட்டலில் புழக்கம் அதிகமாக இருந்தது.  நான் என் நண்பனை அழைத்து அதைக் காட்டி'" அங்கே என்னடா நடக்கிறது? " என்று கேட்டேன். அவன், " உனக்கு விளங்கலையா? ப்ராத்தல்டா. நான் சொல்றதெல்லாம் நடக்கிறதா இல்லையா என்று பார்" என்று வரிசையாகச் சொல்லத் துவங்கினான்.

"இப்ப பாரு அந்த பட்டான் அங்கே மருவிக்கொண்டே வர்ரானா. அந்த பங்காளியைப்பாரு அவனை அனுகுவான்"

அனுகினான்.

"ஒன்னும் பேசிக்க மாட்டானுக ஆனா ஹோட்டலுக்கு இவனை அவன் பின் தொடர்வான் பாரு"

தொடர்ந்தான்.

"கொஞ்ச நேரத்திலே வெளியே வந்து வேற கிராக்கி தேடுவான் பாரு"

வந்தான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு போவோர் வருவோரின் முகம் பார்க்கலானான்.

"இப்படித்தான் பார்ப்பானுக. யாராவது கொஞ்சம் இவனுகளை உற்றுப்பார்த்தால் கிட்ட வந்து கொக்கிப் போட்டுருவானுக. இது இங்கே சகஜம்டா.  ஒழுக்கமா இருக்க நினைப்பவர்கள் மட்டுமே இங்கே ஒழுக்கமா வாழ முடியும். எப்படியும் வாழ விரும்புபவர்களுக்கு துபை தேரா சொர்க்கம்டா" என்றான்.

எனக்கு நம் சமுதாயத்தை நினைத்து ரொம்ப வேதனையாக இருந்தது. அதுவும் ஈத் போன்ற நாட்களில் பீர் குடிப்பதும் விலை மாதர்களை நாடி போவதும் மிகவும் சகஜம் என்று கேள்விப்பட்டு கவலையாக இருந்தது

இப்படித்தான் ஒருமுறை ஒரு பச்சையிடம் (பாகிஸ்தானியரை இப்படித்தான் குறியிட்டு அழைப்போம்) " நீ தண்ணி அடிப்பியா?" என்று கேட்க அவன் சொன்னான், " நயி சார்ஜி, சிர்ஃப் ஈத்கா தின் பீயகா" என்றான்.  "ஏன்டா அது தியாகத் திருநாள்டா அன்னிக்கு ஏன்டா குறிப்பா குடிக்கிறீங்க?' என்ற என்னை விநோதமாகப் பார்த்துவிட்டு,

"தினமும் குடிக்கக்கூடாது சார்ஜி. ஈத் கா தின் குடிச்சே ஆகனும்" என்றான்.

மது மாது இரண்டிலும் மூழ்கி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் நம் சமுதாயத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயக் காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை எல்லோரும் உணர்ந்தாக வேண்டும்.  வெளியே சொல்ல பயந்தோ வெட்கப்பட்டோ  மறைத்தோமேயானால் புறையோடிப் போய் விடும் வியாதி இது.

மைய வாடிக்குச் செல்லும் வழி:

அந்த
வழிகாட்டிப் பலகையில்
அம்புக்குறியிட்டுக் காட்டும்
ஒரு வழிப் பாதையை
வாசிக்கும் நிலையில்
அவர் இருப்பதில்லை

அதற்கு முன்
பூடகமாகச் சொல்லப்பட்ட
மது 
முறையற்ற மாது
பழக்கங்களுக்கு எதிரான
எந்த எச்சரிக்கையையும்
புரிந்து கொள்ளும் நிலையில்
அவரை
வைத்திருக்கவில்லை அந்தப் போதை

சில்லரை இன்பங்களுக்காக
நிரந்தர சந்தோஷத்தை
இழந்துபோதல் அறிவா?

யாவற்றையும்
சடுதியில் முடித்துக்கொண்டு
சட்டென 
அற்ப ஆயுளில்
அடங்கும் அவசரம் ஏன்?

மென்று விழுங்கினாலே செரிக்கும்
மெல்ல அனுபவித்தாலே நிலைக்கும்

சுத்தம்
வயிற்றுக்கு மட்டுமல்ல
செயலில் சுத்தம்
வாழ்நாள் முழுக்க
சோறு போடும்

மது மாது வாயிலாக
மைய வாடியிலிருந்து வரும்
அத்துணை அழைப்பிதல்களையும் 
நல்லமல்களைக் கொண்டுப்
புறக்கணியுங்கள்
நிர்ணயிக்கப் பட்ட
நெடும் பயணக் 
காலம் வரும் வரை!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்