Showing posts with label பாதுகாப்பு. Show all posts
Showing posts with label பாதுகாப்பு. Show all posts

கண்கள் இரண்டும் - தொடர் - 28 20

அதிரைநிருபர் பதிப்பகம் | March 17, 2014 | , ,


கண்தானம் பற்றிய பதிவுகளை 5 தொடர்களாக பார்த்தோம் இனி கண்ணை பாதுகாக்கும் சில டிப்சுகளை அலசுவோம்

கண்ணை பாதுகாக்க உணவு முறைகள்

ஒரு கேரட்டை குறுக்குவாட்டில் வெட்டிப் பார்த்தால் அது ஒரு கண்ணைப் போலவே தோற்றமளிக்கும். கண்பார்வைக்கு எந்த அளவுக்கு இந்த கேரட் உதவி செய்கிறது என்பது வியப்பைத் தரும் செய்தியாகும். பிடாகரோடின்  என்னும் தாவர வேதியியல் பொருளிலிருந்து கேரட் தனது ஆரஞ்சு நிறத்தைப் பெறுகிறது. இந்த பிடாகரோடின் கண்புரை நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. 65 வயதைக் கடந்த நால்வரில் ஒருவரை பாதிக்கும், முதுமையுடன் தொடர்புடைய கண் பார்வைச் சீரழிவு ஏற்படாமல் பாதுகாக்கவும் செய்கிறது.

காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில்  மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிக நிறமுல்ல பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது. பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிக முக்கியம். அதனால் தான் உணவில் அதிக அளவில் பச்சை காய்கறிகளை   சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும்  காய்கறிகளை சாப்பிடவேண்டும். பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன.  இவை கண்களுக்கு மிகவும் நல்லது. 

தினமும் எதாவது ஒரு கீரை வகை சேர்ப்பது உடல் நலத்துக்கு ஏற்றது. குறைந்த பட்சம் வராத்திற்கு இரண்டு தடையாவது கிரை சேர்க்க வேண்டும். அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை,  அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி௧2 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை  அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை கண் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது. வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும்  இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது.  கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. 

பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து  பற்றாக் குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். கறிவேப்பிலை, கேரட் கண்களை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றுகிறது  இவை இரண்டும் கண்களின் காவலனாக விளங்குகிறது. 

தக்காளி,  பசலை, லிவர்,  முட்டை, நிறமயமான காய்கறிகள், , பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது. உடலில் அதிகமாக சுரக்கும்  குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன.

இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன

தொடர்ந்து மீன் சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் வராது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பெண்கள் தொடர்ந்து மீங்களை சாப்பிடுவதால் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பெருமளவு கிடைக்கும். இந்த ஒமேகா அமிலம் நீண்ட கால கண் நோய்களை தைற்க்க உதவும் என ஆராய்ச்சியாளார்கள் கூறுகின்றனர்.

கண்ணில் உள்ள ரெட்டினா விழித்திரையில் ஒரு பகுதியாக மாக்யூளர் பாதிக்கப்படுவதால் பார்வை குறைபாடுகள் ஏற்படும். இந்த குறைபாட்டை தவிற்ப்பதற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ள மீன் வகைகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும் என ஆய்வாளங்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த ஆய்வு கடந்த 10 ஆண்டுகளாக 38 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்டது. 10 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் உணவு பழக்க முறையையும், அந்த உணவு வகைகள் ஆரோக்கியத்திற்கு எந்த அளவு தொடர்புடையதாக உள்ளது என்றும் ஆய்வு செய்தனர்.

ஒமேகா கொழுப்பு அமில உணவு அதிகம் எடுத்துக் கொண்ட பெண்களுக்கு மாக்யூலர் நோய் தாக்கம் 38 சதவீதம் குறைவாக உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வினை பிர்கமிம்மன் வில்லியம் கிறிஸ்டின், யு.எஸ் பாஸ்டன் பெண்கள் மருத்துவமனை மற்றும் ஹார்வர்டு மருத்துவ பள்ளி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்

கண்ணை பாதுகாக்கும் டிப்சுகள் அடுத்த தொடரிலும் பார்க்கலாம்
தொடரும்...
அதிரை மன்சூர்

ஷைத்தானின் ஊசலாட்டம்... 22

அதிரைநிருபர் பதிப்பகம் | September 06, 2013 | , , , , , ,

நிலையாய் இருப்பவன், பிறப்பு, இறப்பு  பசி, தூக்கம், தேவை, மற்றும் சந்ததிக்கு அப்பாற்பட்ட தூய இறைவன் முதன் முதலாக மண்ணிலிருந்து மனிதனை ( ஆதம் நபியை ) படைத்தான். மேலும் சுவனத்து இன்பங்களை அனுபவிக்கச் சொல்லி, ஆறறிவையும் கொடுத்து பலகீனம் என்னும் ஒரு யதார்த்தமான ஒன்றையும் கூடவே கொடுத்து, ஷைத்தான், மலாயிக்கத், என இரண்டு தூண்டுதல்களையும் கொடுத்து சோதனை செய்தான். 

ஆரம்பமே ஷைத்தான் தூண்டுதல் மேலோங்கவே, நெருங்க வேண்டாம் என்று படைத்தவனால் எச்சரித்து தடுக்கப்பட்ட மரத்தினை நெருங்கி, அதன் கனிகளைப் புசிக்க வேண்டாம் என்று விலக்கப்பட்டதை சுவைத்து சுவனத்தை விட்டும் வெளியேற்றப்பட்ட முதல் மனிதரே ஷைத்தானின் தூண்டுதலாலேயே இவ்வுலகிற்கு அறிமுகமாகின்றார்கள். இப்படி முதல் மனிதரையே  ஷைத்தான் வெற்றி கொண்டு இவ்வுலகில் அந்த தூண்டுதல் ஒரு புறமும், இறைவனின் எச்சரிக்கை சைத்தானைப் பற்றி மறுபுறமுமாக அல்லாஹ் இவ்வுலகில் ஆதம் (அலை) , அவரின் துணையாக ஹவ்வா (அலை) இருவரையும், ஷைத்தான்,  மலாயிக்கத் என்னும் இரு தூண்டுதல்களோடு மனதை படைத்து, இச்சோதனையில் இறைவனின் எச்சரிக்கையில் வெற்றி பெறுதல் மூலமே  ஈடேற்றம் அடைய முடியும் என்ற நற்போதனைகளையும் வழங்கி இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்துகின்றான்  

அந்த ஷைத்தானியத்தின் ஊசலாட்டம் மனிதனை எவ்வாறெல்லாம் ஆட்கொள்ளும், அதிலிருந்து மனிதன் கரை சேருவது, அதை எப்படி கையாளுவது, அதனை எப்படி வெற்றி கொண்டு இறை பொருத்தத்தை பெறுவது என்பதின் நோக்கமே இந்த பதிவு. 

ஈமானில் ஊசலாட்டம்

ஒவ்வரு மனிதனும் பலகீனமானவனாகவே படைக்கப் பட்டிருக்கின்றான். ஆசாபாசங்கள், தேவைகள், பசி, தூக்கம், மறதி, இச்சை மற்றும்  உலகாதாய விஷயங்களில் அவன் மிகவும் அவசரக்காரனாகவும், ஆத்திரக்காரனாகவுமே இருக்கின்றான்.  இவைகள் அல்லாஹ்விடத்தில்  மிகப்பெரும் பாவத்தை ஏற்படுத்தி விடப் போவதில்லை. 

ஆனால் அடிப்படை வேரான ஈமானை பாதிக்கக் கூடியவைகளில் எந்த ஒரு விஷயமும் தலைப்பட்டால், அவை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய ஒன்றாகும். இப்பேர்ப்பட்ட விஷயம், ஷைத்தானின் இந்த ஊசலாட்டத்தில் நாம் சலனப்படுகையில் நடைபெற வாய்ப்புண்டு. (அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேணும்).

இப்படி சலனப் படுகையில் மார்க்கம் நம்மை எப்படி வழி நடத்தி செல்கின்றது என்பதை விளக்கவே இந்த பதிவு நம்மை முன்னெடுத்துச் செல்கின்றது. 

இந்த ஊசலாட்டம், நம்மை மட்டுமல்ல  யார் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டார்களோ, யாரை அல்லாஹ் பொருந்திக்கொண்டானோ அந்த சஹாபாப் பெருமக்களுக்கே  இது ஏற்பட்டு இருக்கின்றது. இந்த விஷயத்தைப் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது, 

ஷைத்தான் நம்மை நல்ல எண்ணங்களை நம்  மனதினில் தூவி எண்ணவிட்டு அதன் இறுதியில், நம் ஆழ்நம்பிக்கைகளின் அடிப்படையை தகர்த்தெறியும் செயலில் ஈடுபடுவான். அந்த நிலையில் நாம் நம்மை உஷார் நிலையில் வைத்து ஈமானை  பாதுகாக்க வேண்டும். 

ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கூட்டம் வந்தது. அவர்கள், யாரசூலுல்லாஹ், எங்களுக்கு சில கெட்ட எண்ணங்கள் (ஈமானின் வேரை அசைத்துப் பார்கக்கூடிய அளவுக்கு)   மனதில் தோன்றுகின்றது. ஆனால் அதை வெளியில் சொன்னால் படு பயங்கரமானதாக இருக்கும் என்று தோன்றுகின்றது. அதை வெளியில் சொல்வதற்கு  பதிலாக வானத்திலிருந்து கீழே குதித்து விடுவது மேல் என்றும்  தோன்றுகின்றது என்று சொன்னவுடன். 

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், என்று மூன்று முறை முழங்கிவிட்டு, இதுதான் உண்மையான ஈமான். ஏனனில், மனதில் தோன்றுவது ஷைத்தான், அதை வாயால் மொழிந்தாலோ, பிறரிடம் சொன்னாலோ அல்லது, செயலில் காட்டினாலே ஒழிய அல்லாஹ்விடத்தில் இதற்கு எந்த வித கேள்வியும் இல்லை. ஏனெனில் , நீ இதை சொல்லாமல் இருப்பதே அல்லாஹ்வை பயந்துதான்.  இதுதான் உண்மையான் ஈமான். இங்கே ஷைத்தானின் ஊசலாட்டம் (உள் எண்ணம்) எந்தப்பயனையும் தராததால், உள்ளத்தில் எண்ணினாலும் ஈமானில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்று பொருள் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை புகழ்ந்தார்கள். 

மனதினில் அந்த (வஸ்வாஸ்) ஊசலாட்டம் வரும்போது நாம் அல்லாஹ்வை நினைத்து பயப்படுகின்றோம் அல்லவா ? அங்கேதான் ஈமானில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்று பொருள்.  

மேலும் ஊசலாட்டம் மனதில் தோன்றும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் " அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தான் நிர்ரஜீம் ( யா அல்லாஹ் எடுத்தெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் என்னை பாதுகாப்பாயாக!) என்று வேண்டும்பொழுது நம்  ஈமான் கூடிக் கொண்டே போகின்றது. 

எங்கெல்லாம் நம் எண்ணம் பலகீனப்படுகின்றதோ, அங்கு கண்டிப்பாக ஷைத்தானின் எண்ணங்கள் மேலோங்கும். நம்முடைய பலகீனம் பார்த்து ஷைத்தான் நம்மை நெருங்குவான், எப்படியும் நம்மை அவன் வழிக்கு  சொல் வடிவம், அல்லது செயல் வடிவம் கொடுக்க வைத்து நம்மை தடம் புரள வைக்க தக்க தருணம் பார்த்திருப்பான். அந்த இடத்தில்தான் நாம் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுமுகமாக " இறைவா என்னை ஷைத்தானின் தீங்கிலிருந்து காப்பாற்று" என்று வேண்டுகின்றோம்.

அல்லாஹ்வையன்றி வேறில்லை 

ஒரு முறை இரு சஹாபிகளுக்கு இடையே ஒரு விஷயத்தில் நடந்த விவாதத்தில், இருவரும் ஆக்ரோஷமாக ஒரு முடிவின்றி பேசிக்கொண்டிருந்த சமயத்தில், ரசூல் (ஸல்) மற்றொரு சஹாபியிடம் சொன்னார்கள் :  இவர்கள் இருவரிடத்திலும் இப்பொழுது ஒற்றுமை ஏற்பட ஒரு விஷயம் என்னிடம் இருக்கின்றது. இவர்கள் இருவரும் அதைச் சொன்னால் உடன் அங்கு ஒற்றுமை நிலவும்.  அதுதான் " அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்" (எடுத்தெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் உன்னிடம் பாது காவல் தேடுகின்றேன்) என்று சொல்ல சொன்னார்கள்"  

அல்லாஹ்வின் உதவியின்றி எந்த ஒரு நன்மையான காரியத்தை செய்யவோ அல்லது எந்த ஒரு தீமையிலிருந்து விலகவோ நமக்கு சக்தி இல்லை என்பதையும் புரிந்து கொள்ளனும். 

ஒரு போரில் ஒரு சஹாபி அல்லாஹ்வுக்காக மிகக்கடுமையாக போரிட்டு பல காபிர்களை வெட்டி வீழ்த்தினார். அப்போரில் வெற்றியும் கிட்டியது. மிகப்பெரும் அந்தஸ்தை அடைய வேண்டிய இந்த சஹாபி, அப்போரில் இவருக்கு ஏற்பட்ட பலத்த காயத்தின் காரணமாக தன்னால் அந்த வருத்தத்தை தாங்க இயலாமல் தன்னைத்தானே ஈட்டியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்  அந்த போர்க்களத்திலே.  அண்ணல் நபி (ஸல்) சொன்னார்கள் ,  " இவர் ஒரு நரகவாதி”. அவருக்காக மய்யித்து தொழுகை நிறைவேற்ற ரசூல் (ஸல்) மறுத்து விட்டார்கள்.

நாம் நினைக்கும்போதெல்லாம் ஒரு நன்மையான காரியத்தை செய்து முடிக்கவோ, அல்லது தீமையைக் கண்டு விலகி நிற்கவோ முடியாது. இரண்டிலுமே அல்லாஹ்வின் நாட்டம் அங்கே ஆஜராகியே ஆகவேணும். நன்மையின் பக்கம் விரைந்து செல்வதும் , தீமையைக்கண்டு விலகி நிற்பதும் அவனைக் கொண்டே நடக்கின்றது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை வேணும்.

நம் பலகீனம் ஷைத்தானின் பலம்

எந்த சூழ்நிலையிலும் நம் பலகீனம் நம்மை ஷைத்தானியத்துக்கு கட்டுப்பட வைத்து விடக்கூடாது. நன்மையான காரியங்களில் நம் கவனம் இருக்கும்போது அங்கே ஷைத்தான் ஆஜராகுவான் என்பது நபி (ஸல்) அவர்கள் வாக்கு. அங்குதான் உலக விஷயங்கள் நம் சிந்தனையில் உலவவிடுவான் ஷைத்தான். 

சாதாரணமாக  கடையில் வியாபாரம் பண்ணும்போதோ, அல்லது வேறு உலக விஷயங்களில் ஈடுபடும்போதோ, ஷைத்தானியத்தின் ஊசலாட்டாம் பெரும்பாலும் இருக்காது. ஆனால் இரண்டு  ரக்காத் தொழுகைக்காக நிருக்கும் போதோ அல்லது அல்-குர்ஆனை எடுத்து ஓத ஆரம்பிக்கும் போதோ அங்கே பெரும்பாலும் ஷைத்தான் நம்மை கெடுக்க ஆஜராவான்.

இங்குதான். அல்லாஹ் நம்மை சோதிக்கின்றான் என்று பொருள் கொள்ள வேணும். ஏனனில் அவன் சொன்னதுதான் ஷைத்தானின் ஊசலாட்டம் என்பது. இது இல்லையெனில் ஸ்திரமான ஈமானுக்கு வேலையே இல்லை.  இந்த ஊசலாட்டத்தில் இருந்து மீண்டு வரத்தான் நமக்கு சோதனை ஆரம்ப மனிதர்  ஆதம் (அலை) அவர்களிலிருந்து இன்று வரை தொடர்கின்றது.  இது இறுதி முடிவு நாள் வரை தொடரும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒவ்வொரு  மனிதனிடத்திலும் அல்லாஹ் ஷைத்தானின் ஆதிக்கத்தையும், மலாயிக்கத்துனுடைய ஆதிக்கத்தையும் படைத்திருக்கின்றான். ஷைத்தானின் ஆதிக்கம் மனிதனை உண்மையை பொய்ப்படுத்தவும், தீமையான விஷயங்களில் ஆர்வமூட்டவும் வழிநடத்திச் செல்லும். 

இந்த இடத்தில் "யா அல்லாஹ் விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகின்றேன்"என்று சொல்லி அந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும் வறுமை ஏற்படும்போதும் ஷைத்தான் நம்மை ஆதிக்கம் செலுத்தப் பார்ப்பான். இந்த இடத்தில் மிக கவனமாக செயல்பட்டு அவன் ஊசலாட்டத்திலிருந்து தப்பித்து இதே பாதுகாவல் தேடவேண்டும்.   

மலாயிக்கத்தின் தூண்டுதலோ நம்மை நன்மையின் பக்கம் வழிநடத்தும். இப்படி மலாயிக்கத்தின் தூண்டுதல் நம்மை நெருங்கி நல்ல ஒரு காரியத்தை செய்ய நாடும்போது, முதன் முதலாக நாம் அல்லாஹ்வை புகழ்ந்து , போற்றவேணும். அப்பொழுதுதான், தீமையான காரியத்தின் வழி நடத்தலில் நமக்கு நாட்டம் அற்றுப்போய், நல்லதை செய்ய மனம் நாடுவதோடு, நின்றுவிடாமல், நல்லதை நடத்தியும் காட்டும். ஆதலால்  ஷைத்தான் இந்த இடத்தில் நம்மிடம் தோற்று ஓடும் நிலைமையை அது ஏற்படுத்தும்..

உறங்கும் நேரம்

உறங்கும் நேரம் ஷைத்தான் கனவிலும் கெட்ட விஷயங்களையோ, அல்லது நம்முடைய ஈமானை பாதிக்கக்கூடிய விஷயங்களையோ கனவுகளாக விதைத்தால் அதிலிருந்து விடுபட்டு விழித்து விட்டால், இடது பக்கமாக திரும்பி மூன்று முறை  துப்பிவிட்டு அப்பொழுதும் “இறைவனிடமே  இதே பாதுகாப்பை தேடவேண்டும்”  என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள்.

மேலும் ஷைத்தானே அல்லாஹ்விடத்தில் சொல்லிவிட்டு வரும்போது, யா அல்லாஹ்  நான் மனித இனத்தை என் வழியில் கொண்டு வந்து அனைவரையும் வழிகெடுப்பேன். ஆனால் யார் உன் கவசம் என்னும் ஆயுதத்தை ( அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்) கையில் எடுத்து , உன் உள்ளச்சத்தில் உவப்புடன் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர என்றுதான் உலகத்திற்கே அறிமுகமாகின்றான்

பாதுகாப்பு என்னும் கேடயம் 

அல்லாஹ் நம்மிடத்திலே இரு தூண்டுதல்களை ( ஷைத்தான், மலாயிக்கத்) ஏற்படுத்தி, நம் கையிலே பாதுகாப்பு என்னும் கேடயத்தை தந்து , ஷைத்தானிடத்திலே  ஊசலாட்டம் செய்யும் நம்மை தாக்கும் ஆயுதத்தைக் கொடுத்து நம்மை அவனிடமிருந்து பாதுகாப்பு பெரும் வழியினையும்  நமக்கு சொல்லித்தந்து அல்லாஹ் இப்புவி வாழ்க்கைய உண்மை முமினுக்கு ஒரு சோதனைக் களமாகவே  ஆக்கி இருக்கின்றான்.

இங்கு போட்டி அல்லாஹ்வுக்கும் ஷைத்தனுக்குமல்ல. ஷைத்தானுக்கும், மலாயிக்கத்துக்கும் போட்டி. இதில் மனிதன் இடையில் இருக்கும் ஒரு ஜீவன். ஷைத்தானின் ஆதிக்க மேலோங்க வாய்ப்பு கொடுத்தால் அவன் கட்டுப்பாட்டில் நீ. மலாயிக்கத்தின் வாய்ப்பு மேலோங்கும்போது சுவனவாசி நீ.

இதில் எந்தக் கட்டுப்பாட்டில் இயங்க வேணும் என்று அல்லாஹ் தந்த ஆறறிவு, உன்னிடம். இது தீமை, இது நன்மை என்னும் பகுத்தறியும் தகுதி உன்னிடம் இருக்கையில் ஷைத்தானின் கை மேலோங்க இடம் கொடாமல், மலாயிக்கத்தின் நன்மையில்  மேலோங்க ஒவ்வரு ஷைத்தானியத்தின் ஊசலாட்டத்திலும்  "அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தனிர் ரஜீம் (எடுத்தெறியப்பட்ட ஷைத்தானைவிட்டும் பாது காவல் தேடுகின்றேன் ) என்று முழங்குவோம். 

ஷைத்தானை நம் வாழ்வில் வெகு தூரமாக்குவோம்.

அபு ஆசிப் என்ற அப்துல்  காதர்

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி ? 12

அதிரைநிருபர் பதிப்பகம் | June 14, 2012 | , , , , ,

குழந்தையோடு பேசுகிறீர்களா ?

உங்கள் குழந்தையின் பாதுகாப்புக்கு முதல் தேவை என்ன தெரியுமா ? 

உங்களிடம் உங்கள் குழந்தை பாதுகாப்பை உணர்வது தான். “என்ன பிரச்சினைன்னாலும் உம்மா பாத்துப்பாங்க, வாப்பா பாத்துப்பாங்க” எனும் ஆழமான நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டியது அவசியம்.

அதற்கான முதல் தேவை குழந்தைங்க கூட போதுமான அளவு நேரம் செலவிடறது ! குழந்தைகளோட மனநிலை எப்படி இருக்கு ? அவர்களுடைய நாள் எப்படி கழிந்தது ? அவர்கள் என்ன பண்ணினாங்க ? போன்ற எல்லா விஷயங்களையும் அன்புடன் கேட்டறியுங்கள். அவர்களுக்கு ஒரு நல்லதொரு ஆறுதலாக இருக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள், பதின் வயதுப் பிள்ளைகளிடமெல்லாம் அதிக நேரம் மனம் திறந்த உரையாடலில் செலவிடுங்கள். அவர்களுடைய வழிகளைச் செம்மைப் படுத்தவும், அச்சுறுத்தல்கள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவும் உங்கள் உரையாடல் உதவ வேண்டும். அவர்களுடைய பயங்கள், கவலைகள் எல்லாம் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.

“இதெல்லாம் நான் எப்படி உம்மா கிட்டே சொல்வது” என குழந்தை நினைக்கக் கூடாது. “எதுவா இருந்தாலும் உம்மா கிட்டே சொல்வேன்” என குழந்தை நினைக்குமளவுக்கு இயல்பாகப் பழகுங்கள்.

பள்ளி செல்லும் போது வாகனங்கள் எச்சரிக்கை !

பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகள் நடந்து போகிறதென வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோடு சிறிது நாட்கள் நீங்களும் கூடவே நடந்து செல்லுங்கள். சாலையில் எப்படி நடப்பது, எங்கெங்கே கவனமாக இருப்பது போன்ற விஷயங்களைச் சொல்லிக் கொடுங்கள். எந்த இடம் பாதுகாப்பானது, யாரிடம் உதவி கேட்கலாம் போன்ற விஷயங்களையும் அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

நம்தூர் பள்ளி வாகனங்கள் தெருக்கள் வழியாக வேகமாக செல்வது மிகவும் ஆபத்தானது, எதோ அவர்கள் பைபாஸ் வழியே போவது போன்றொரு உணர்வு அதில் ஏற்படும் புழுதிகாற்று அவ்வழியே செல்லும் அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மையே, இதை அந்தந்த பள்ளிகள்தான் வாகன ஓட்டிகளை கவனம் கொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்று! 

ஒருவேளை பொது வாகனங்களில் பயணிக்கும் குழந்தையெனில் ஸ்கூல் பஸ் ஸ்டாப்பில் போய் குழந்தைக்கு எந்த ஸ்கூல் பஸ், எங்கே ஏறுவது, எங்கே இறங்குவது, எப்படி ஏறி இறங்குவது போன்ற விஷயங்களை பழக்குங்கள். பஸ்பயணத்தில் அச்சுறுத்தலெனில் ஓட்டுநரை அணுக குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள்.

பயணத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், பாதுகாப்பு விஷயங்கள் என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் போன்றவையெல்லாம் குழந்தைகள் அறிந்து வைத்திருப்பது அவசியமானது !

தெரியாத நபர் “லிஃப்ட்” கொடுத்தால் மறுக்கப் பழக்குங்கள். ஒவ்வொரு முறையும் உங்களிடம் அனுமதி வாங்கச் சொல்லுங்கள் !

குழந்தைகள் பயணிக்கையில் எப்போதும் ஒன்றிரண்டு நபர்களாக நடப்பது, பஸ்ஸில் பயணிப்பது பாதுகாப்பானது. தனியே எங்கே செல்வதாக இருந்தாலும் உங்களுக்குத் தகவல் தெரிய வேண்டும் என்பது பாலபாடம்.

வாகனங்கள் குழந்தைகளின் மிகப்பெரிய எதிரிகள். அதுவும் சென்னை போன்ற பெரும் நகர்புறங்களில் வசிப்பவர்கள் பத்து மடங்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இரண்டு விதமான ஆபத்துகள் வாகன விஷயத்தில் உண்டு.

ஒன்று விபத்து. சாலையோரம் அல்லது நடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களின் பின்னாலோ, பக்கவாட்டிலோ குழந்தைகள் போகாமல் இருக்க வேண்டும். குறிப்பாக வாகன டயரின் அருகே நின்று பேசுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். வாகனங்கள் வரும் சாலையில் குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுங்கள்.

இரண்டாவது கடத்தல் ! குழந்தைகள் கடத்துபவர்கள் வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளை வசீகரிக்கும் விதமாக சாக்லேட், பொம்மை போன்ற ஏதாவது பொருளைக் காட்டி அவர்கள் காரின் அருகே வந்ததும் சுருட்டிக் கொண்டு பறந்து விடுவது அவர்களுடைய பாப்புலர் திட்டம்.

தெரியாத நபர் இருக்கும் காரின் அருகே எக்காரணம் கொண்டும் போகவேண்டாம் என குழந்தைகளைப் பழக்குங்கள் !

போன் நம்பர் தெரியுமா ?

உங்க போன் நம்பர் உங்க குழந்தைக்குத் தெரியுமா ? தெரியாவிட்டால் முதலில் அதைச் சொல்லிக் கொடுங்கள். குட்டிப் பிள்ளைகள் கூட ஒரு போன் நம்பரை எளிதில் கற்றுக் கொள்வார்கள். பள்ளி செல்லத் துவங்கிவிட்டால், வீட்டு விலாசத்தையும் கூடவே சொல்லிக் கொடுங்கள்.

வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சில முக்கிய அடையாளங்களையும் குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். அவ்வப்போது வீட்டில் விளையாட்டாக குழந்தையிடம் விளையாடி போன் நம்பர், விலாசம் எல்லாம் கேட்டு பழக்கப்படுத்துங்கள்.

விளையாட்டாய் பழகும் விஷயங்கள் குழந்தையின் மனதில் எளிதில் பதியும் என்பது குழந்தை உளவியல் !

கைவசம் ஃபோன் நம்பர்

குழந்தைகளின் கையிருப்பில் போன் நம்பரை எளிதில் அழியாத பேனாவைக் கொண்டு எழுதி வைக்கலாம். வெளியிடங்களில் ஒருவேளை குழந்தை தவறிப் போனால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் என்பது சிலருடைய கருத்து. குறிப்பாக பேசத் தெரியாத குழந்தைகள் விஷயத்தில் இது ரொம்ப பயன் தரும். ஒரு வேளை குழந்தை பதற்றத்தில் எண்ணை மறந்து விட்டால் கூட இது உதவும் !

வெளியூரில் போய் ஏதாவது ஷாப்பிங், தீம்பார்க் போன்ற இடங்களுக்குப் போனால், எக்காரணம் கொண்டும் அந்த இடங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என சொல்லுங்கள். வெளியே வந்தால் ஆபத்து அதிகமேயன்றி குறைவில்லை ! குழந்தை குட்டிகளுடன் நிற்கும் ஏதேனும் பெற்றோருடன் சென்று உதவி கேட்பது ரொம்ப நல்ல விஷயம் என்பதையும் சொல்லிக் கொடுங்கள் !

உடல் நலம் கவனம்

பொது இடங்களுக்குப் போகும் போது குழந்தைகளின் உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். தண்ணீர் விளையாட்டெனில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா துணி மணிகள் கைவசம் இருக்கட்டும். வெயில் எனில் குடை தொப்பி போன்றவை நிச்சயம் தேவை.

தண்ணீர் எப்போதும் கையில் இருக்கட்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பது சுற்றுலா, ஷாப்பிங், பார்க் போன்ற இடங்களில் ரொம்ப அவசியம். உடலில் தண்ணீர் பற்றாக்குறை நிலை வந்தால் சோர்வும், நோய்களும் வந்து விடும்.

குழந்தைகள் பெரும்பாலும் “தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்பதில்லை. எனவே பெரியவர்கள் தான் அதைக் கவனித்து அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும்.

நல்ல வசதியான செருப்பை அணிவது அவசியம். சிம்பிளாக காலை உறுத்தாத செருப்புகள் சிறப்பானவை. அதே போல நல்ல பொருத்தமான ஆடைகள் அணிவியுங்கள். ஸ்டைலாக இருப்பதை விட உடல்வாகுக்கு பொருத்தமாக இருப்பதே அதிக மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் என்பது மனதில் இருக்கட்டும் !

எங்கே இருக்காங்க குழந்தைகள் ?

உங்க குழந்தைங்க விளையாடப் போவதிலோ, நண்பர்களுடன் வெளியே போவதிலோ தவறில்லை. ஆனால் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் ? யாருடன் இருக்கிறார்கள் போன்ற விஷயங்களையெல்லாம் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்

“வெளியே போறேன்னு சொன்னான், எங்கே போனான், யார் கூட போனான்னு தெரியலையே” என புலம்பும் நிலையை வைத்துக் கொள்ளாதீர்கள். பக்கத்து தெருவுக்குப் போனால் கூட சொல்லி விட்டுப் போகும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.

கொஞ்சம் பெரிய பிள்ளைகளெனில் (ஆணாக இருந்தாலும் சரி) அவர்களுடன்  தொடர்பில் இருங்கள். அவர்கள் பாதுகாப்பற்ற இடத்தில் இருப்பதாய் தோன்றினால் உங்களின் கவனத்தை அதிகப்படுத்துங்கள்.

பள்ளிக்கு சென்றுவரும் இளம் தளிர்களுக்கும் பதின் பருவ மாணவமணிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளும்... துவாவும் இன்ஷா அல்லாஹ் !

-அதிரை தென்றல் (Irfan CMP)

குண்டு துளைக்காத கூண்டிற்குள் சுதந்திர இந்தியா!!! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | April 03, 2012 | , , , , ,

நமது அண்டை / பண்டைய நாடான இலங்கை நமக்கு நட்புறவுள்ள நாடாக இருந்த போதிலும் அல்லது அண்மையில் ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கை உள்நாட்டுப்போர் காலத்தில் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இலங்கைக்கு எதிராக வாக்களித்து அதன் மூலம் இரு நாடுகளுக்கான நட்புறவு வலுவிழந்தது போல் காணப்பட்டாலும் நம் இந்தியா, நாட்டின் தீபகற்ப தென்கோடியான தமிழக கடல் எல்லையில் தினசரி ரோந்து செல்லும் வகையில் நவீன ஆயுதங்கள் தாங்கிய ஒரு அதிவேக போர்க்கப்பலை நிரந்தரமாக நிறுத்தி வைக்க கடமைப்பட்டுள்ளது. 

இது நம் நாட்டின் முக்கிய எல்லையான தென்கோடியை அந்நிய நாட்டின் அத்துமீறல்கள் அல்லது அந்நிய சக்திகள் எதிர்பாராமல் எப்பொழுதேனும் நம் நாட்டின் மீது படை எடுத்து வருதல் போன்ற அச்சங்களிலிருந்து நம் நாட்டையும், மக்களையும் பாதுகாக்கவும், காலங்காலமாக கடல்சார் தொழில் செய்து வரும் மீனவ சமுதாயத்தையும், மீன்பிடி தொழிலையும் பாதுகாத்து அவர்களின் தொழில் எவ்வித அச்சமின்றியும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்களின்றியும் அவர்களின் அன்றாட வாழ்வாதாரம் தடைபடாமால் தொடரவும், மீன் பிடி தொழில் மேம்படவும் தக்க நடவடிக்கைகளை கட்சிகள் தாண்டி நாட்டின் பாதுகாப்பிற்காக எடுக்க வேண்டியுள்ளது.  

எதோ மும்பைக்கு அருகில் உள்ள கடல் எல்லை மற்றும் கஷ்மீர் எல்லை தான் நம் நாட்டிற்கு முக்கியமான எல்லைகள் என்று அதை மட்டும் கவனித்துக்கொண்டு இருந்து விடாமல் நாட்டின் தென்கோடியில் கச்சத்தீவில் இலங்கை உதவியுடன் தன் ராணுவ தளத்தை அமைத்து இந்தியாவிற்கு ஒரு அச்சமான சூழ்நிலையை நாலாப்புறமும் ஏற்படுத்தி அதற்கு எதிரான மும்முனை தாக்குதலுக்கு திட்டமிட்டு தயாராகி வரும் சீனாவின் அச்சத்திலிருந்து நம் நாட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், அக்கறையும் அரசுக்கு இருந்தாக வேண்டும். 

எல்லை தாண்டி மீன் பிடித்தான் என்பதற்காக மீனவர்கள் மீது மனிதாபிமானமற்று இலங்கை கடற்படை எல்லை தாண்டி அராஜகம் புரிவது அவர்களுக்கும் அதை கண்டும் காணாதது போல் இருக்கும் நம் நாட்டின் அரசுக்கும் நல்லதல்ல. பிறகு இந்த நாட்டில் பிறந்தோம் என்பதற்கு எவ்வித பிரயோஜனமும் இல்லாமல் போய் விடும். 

பிறந்த மண்ணில் வணிகம் செய்யவோ அல்லது பணி செய்யவோ யாருக்குத்தான் ஆசை இல்லை? அதற்கு அரசும், சூழ்நிலைகளும் நமக்கு சாதகமாக அமைந்து உதவ வேண்டும். சாதி, மத, இன துவேசங்கள் நமக்கு முன்னே நம் தொழிற்கூடத்திற்குள் ரிப்பன் வெட்டி குடியேறி ஆணவத்துடன் கால் மேல் கால்போட்டுக்கொண்டு இருக்கையில் அமர்ந்து கொள்கின்றன. 

சிறிய, சிறிய நாடுகளெல்லாம் தன் நாட்டுப்பிரஜைகளை உலகில் எங்கேனும் அவர்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் பொழுது அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் அங்கு ஓடோடிச்சென்று ஆபத்தில் சிக்குண்டவர்களை மீட்க எல்லாவித முயற்சிகளையும், முனைப்புகளையும் காட்டி அதற்காக இருநாட்டு ராஜ்ய உறவுகளே சீர்குலைந்து முறிந்து போனாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு தயாராகி விடும் சூழ்நிலையில் நாம் மட்டும் நம் மக்களின் உயிரை ஒரு பொருட்டாகவோ அல்லது பொட்டுக்கடலைக்கு சமமாகவோ கூட எண்ணுவதில்லையே ஏன்? (அண்மையில் நம் நாட்டு அப்பாவி மீனவர்களை குருவி போல் சுட்டுக்கொன்று பின் கேரள அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இரு இத்தாலிய கப்பல் சிப்பந்திகளை மீட்க இத்தாலி அரசு செய்து வரும் முயற்சிகளே நமக்கு ஒரு நல்ல உதாரணம்) 

இதில் தன் பிறந்த தேதி பிரச்சினையை கிழப்பிய மத்திய அரசை பழிவாங்க நம் ராணுவ தலைமை தளபதி கே.பி. சிங்கின் அண்மைக்கால செயல்பாடுகளும், அவர் பிரதமருக்கு எழுதிய ரகசிய கடிதம் ஊடகத்தில் வெளியானதும், அதற்கு சப்பைக்கட்டும் முயற்சிகளும் நம் நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சத்தையும், கேள்விக்குறியை ஏற்படுத்தி என்றோ சொல்லப்பட்ட "வேலியே பயிரை மேய்வது போல்" என்ற பழமொழி இவர்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது. 

அப்பாவி கோழிக்குஞ்சுகளை அது ஓடியாடி விளையாடி வரும் வழித்தடத்தில் உள்ள ஆபத்துக்களிலிருந்து மட்டும் தாய் கோழி அவற்றை பாதுகாத்துக்கொள்ளாமல் தலைக்கு மேலே வானில் தொலை தூரத்தில் வட்டமிட்டு நோட்டமிட்டுக்கொண்டிருக்கும் பருந்துகளிடமிருந்தும் தன் குஞ்சுகளை காத்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளது. நம் நாட்டின் நிலைமையும் கிட்டத்தட்ட இது போல் தான் உள்ளது. உள்நாட்டு தீவிரவாதம், பிரிவினை வாதம், நக்ஸலைட் என்று சொல்லி அதில் அக்கறை செலுத்துவதில் தவறில்லை தான். அதே சமயம் நம்மை தொலை தூரத்திலிருந்து பல வழிகளில் குழிதோண்டி புதைக்க துடித்துக்கொண்டிருக்கும் அந்நிய சக்திகளையும் இனம் கண்டு அதன் சதித்திட்டங்களை தன் வலிமையையும், திறமையையும் கொண்டு பலப்படுத்தி முறியடிக்க வேண்டும். 

உலகில் சிறிய நாடுகளெல்லாம் பொருளாதார முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலும் எங்கோ சென்று கொண்டிருக்கும் பொழுது எல்லா வளங்களையும் பெற்று உலகின் பெரும் ஜனநாயக நாடாக திகழும் நம் நாடு மட்டும் எல்லாவற்றிற்கும் அல்லோலப்பட்டு அவதிப்படுவது ஏன்? (அண்மைச்செய்தி : அமெரிக்கா உதவியுடன் வங்காளதேசம் சொந்தமாக செயற்கை கோள் தயாரித்து வருகிறது.) 

நம் உடல் உழைப்பில் வாங்கும் சொத்து பத்துகளுக்கும், ஆபரண அணிகலன்களுக்கும் அரசு வரி விதிக்கிறதோ? இல்லையோ? கொள்ளையர்கள் அவற்றிற்கு 100% வரி விதித்து வீட்டின் பூட்டை உடைத்து வாசலில் சரக்கு லாரியை நிறுத்தி வீட்டில் உள்ள எல்லா பொருட்களையும் கொள்ளையடித்து அள்ளிச்செல்லும் காலமாகி விட்டது இது. அதில் வீடும் கழட்டி மாட்டும் வசதியை பெற்றிருந்தால் அதையும் கழட்டிக்கொண்டு கையோடு அள்ளிச்சென்று விடுவர் போலும். பணத்தை வங்கியில் போட்டால் அங்கும் கொள்ளை, நிலம் வாங்கிப்போட்டால் அங்கு நிலஅபகரிப்பு/ஆக்கிரமிப்பு, வீட்டில் வைத்தால் கொலை செய்து கொள்ளை, சட்டைப்பாக்கெட்டில் வைத்திருந்தால் வழிப்பறி கொள்ளை......பிறகு எது தான் திருட முடியாத பாதுகாப்பான இடம் என்று நாளடைவில் கொள்ளையர்களிடம் தான் ஆலோசனை கேட்க வேண்டும் போல் தெரிகிறது. 

விஐபியா நீங்கள்? தினமும் காலையில் வாக்கிங் செல்பவரா நீங்கள்? அப்படியானால் கடத்தப்பட்டு போட்டு தள்ளப்பட வேண்டியவர் தான் நீங்கள் என்றாகி விட்டது நம் நாட்டின் தனி நபர் பாதுகாப்பு. (இப்பொழுதெல்லாம் விஐபி என்றால் நல்ல விசயத்திலா? அல்லது தீய விசயத்திலா? என மக்கள்  தெரியாமல் குழம்பி உள்ளனர்) 

அதனால் தான் சொந்த நாட்டில் செத்து சுண்ணாம்பாய் ஆகி கர்ஜிக்க வலுவில்லாத மெலிந்த சிங்கங்களாக வாழ்வதை விட அயல்தேசங்களில் பொதி சுமக்கும் கழுதையாக கொஞ்ச காலம் சந்தோசமாக வாழ்ந்து விட்டு போய் விடலாம் என துணிந்து விமானம் ஏறி வந்து விடுகிறார்கள் போலும் நம் மக்கள்.

-மு.செ.மு. நெய்னா முஹம்மது