Showing posts with label பேரன்பு. Show all posts
Showing posts with label பேரன்பு. Show all posts

புன்சிரிப்பு... உன்சிரிப்பு! 32

அதிரைநிருபர் பதிப்பகம் | May 06, 2014 | , , , , ,

(பேரன்புப் பேரா-II) :) :) :)


உன்னை நான்
தூக்கி எடுத்த கணம்
நீ
இறக்கி வைத்ததோ
என்னை அழுத்திய
கவலைகளின் கனம்

கவலை கஷ்டம்
கழிவிரக்கம்
மன உளைச்சல்
என
எல்லா ரோகங்களுக்கும்
ஒரே மருந்தென
நீ தந்ததோ
பொக்கை வாய்ப்
புன்சிரிப்பு -புது வகை
உன்சிரிப்பு

மன அழுத்தம் முற்றி
வாழ்க்கை வெறுத்தோருக்கோ
நோய்விட்டுப் போகிறது -நீ
வாய்விட்டுச் சிரிக்க

பற்கள் இல்லாத உன் சிரிப்பில்
முட்கள் இல்லாத
ரோஜா நீ

தொடர் சிரிப்பால்
தோரணம் கட்ட -நீ
காரணம் காண்பதில்லை

என்
புதுச் சட்டையில்
சிறுநீர் அடித்துகொண்டே
கண்களைப் பார்த்து நீ சிரிக்க
நான்
கழுவ மறந்து உன்னைத்
தழுவிக் கொள்கிறேன்

முக்கனிச் சுவையை
உன்னை
முத்தமிட்டு ருசித்தேன்
பிள்ளைக்கனி உன்
சப்தங்களை ரசித்தேன்

உன் சொற்களைவிட
சிரிப்புதான்
தெளிவாய்ப் புரிகிறது

எங்கெங்கோ தேடி
ஏமாந்து போன எனக்கு
மடியிலேயே வந்து வாய்த்த
விடியல் நீ

முகம் பார்க்கும்
உன் பார்வை
அகம் வரை பாய்வதை
அறிவாயா நீ
அது
இகம் வாழ்தலின்
உச்சகட்ட மகிழ்வென்பதை
உணர்வாயா நீ

என்
நெஞ்சு உதைத்து
நீ
எம்பிக் குதித்ததும்;
அஞ்சு விரல்களால்
என்
முகத்தைப் பிடித்ததும்
அவதானித்த நான்
விளையாட்டுப் பொருட்களுடனான
உன்
ஈடுபாட்டைக் கண்டு
உன் கையிலொரு
பொம்மையாகிவிடவே
பெரிதும் விழைகிறேன்

உன்னை
விட்டு வர இயலாமற் போனதால்
அங்கு உன்னிடம்
என்னை விட்டு வந்திருக்கிறேன்

இனி
நாட்பட்டக் கவலைகளை
என்னிடம் சொல்பவர்க்கெல்லாம்
பரிகாரமாக
நான் சொல்ல இருப்பது:
"பேரனுக்கு ஏற்பாடு செய்யுங்கள்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்