Showing posts with label மனிதமும். Show all posts
Showing posts with label மனிதமும். Show all posts

மரமும் மனிதனும்... 13

அதிரைநிருபர் பதிப்பகம் | October 14, 2015 | , , ,


வாருங்கள், மரத்தோடு ஒரு பேட்டி எடுக்கப்போகிறேன்!

நான்:
மரமே ! நலமா ?
ஆறறிவு ஜீவன் - உன்
அருகினில் வந்திருக்கிறேன்!
வரவேற்பு பலமாய் இல்லையே! ஏன்?

மரம் :
என்னால் எழுந்து
வாசலுக்கு வந்து
வரவேற்க முடியாதென்பதாலதான்
காற்றிடம் பூச்செண்டு கொடுத்து
உன்னை வரவேற்றேன்!

நான்:
சரி...!
சில கேள்விகள்
பதில் சொல்!
காற்றின் சங்கீதத்திற்கு - எப்போதும்
சந்தோஷத்தில் தலையாட்டுவதால்
நீ காற்றை சார்ந்துதானே இருக்கிறாய்?

மரம் :
இருக்கட்டுமே!
நீ சிரிக்க வேண்டுமெனில்
சிலரோடு சேர்ந்திருக்க வேண்டும்!
உயிர் வாழவோ - நீ
என்னையே சார்ந்திருக்க வேண்டும்!!

நான்:
மீன் செத்தாலும் கருவாடு
மனிதன் செத்தாலும் வெருங்கூடு!
பசு இருந்தாலும் பாலாகும்!
செத்தாலும் தோலாகும்!"
பாடலைக் கேட்டதுண்டா?

மரம் :
நாங்கள்
நின்றாலும் நிழலாவோம் !
வீழ்ந்தாலும் விறகாவோம் !

இருந்தாலும்
மழலைகளின் தொட்டில் ஆவோம்!
இறந்தாலும் இளைப்பாறும் கட்டிலாவோம் !!

பலம் தரும் பழமாவோம் !
பல வழிகளில் இப்படியே பலனாவோம் !!

நான்:
கல்லாதவர்களை
வள்ளுவர் மரம் என்று அழைக்கிறாரே ?

மரம் :
அவரைப் பற்றி என்னிடம் பேசாதே!
கண்ட பாலுக்கெல்லாம்
தனி அதிகாரம் ஒதுக்கியவர்
தாய்பாலுக்கென்று
அதிகாரம் ஒதுக்காதவர் அவர்!

எங்கள் கிளைகளின் ஓலைகளில்
தன் வேலையை முடித்துவிட்டு
நன்றி மறந்த சாதாரண மனிதரே அவர்!!

நான்:
எங்களிடமும் பலசாலி
பலவீனர்கள் என்றுண்டு
அவர்களை நாங்கள்
மரமண்டை என அழைக்கிறோம்!

மரம் :
ஏன் !
எங்களிடமும் அப்படி உண்டு!
பலசாலிகள் தேக்கு புளிய மரங்கள்!
பலவீனன் முருங்கை மரமென்றும்!
அவற்றை நாங்கள்
மனித மண்டை என்றே அழைக்கிறோம்!!

நான்:
இப்போதெல்லாம் - உன்
சகத்தோழர்களான விலங்குகள்
காட்டை விட்டுவிட்டு நாட்டுக்குள் வந்து
தொல்லை செய்கிறதே!

மரம் :
காடுகள் எல்லாம்
வீடுகள் ஆகும் போது
வீடுகளெல்லாம் காடுகளாவதில்
என்ன தவறு?

என்னிடம் வார்த்தை இல்லை!
மெளனம் காத்தேன் - இப்போது
மரம் என்னிடம் கேள்வி கேட்டது..

அதென்ன!
மழைக்காக மறையோனிடம் வேண்டாமல்..
மரங்களின் தாலியை அறுத்துவிட்டு
கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் ??

என்னிடம் பதில் இல்லை.

நீங்கள் ! - ஏன்?
அவசரக்காரர்களாக இருக்குறீர்கள்?
நெடுங்காலத்து நட்பை
குறைந்த வார்த்தையில்
குடும்பக்கட்டுப்பாடு செய்கிறாய்!
சில விலங்குகள்
நன்றி காட்டுவதில்
விலங்கிலிருந்து மனிதனாகி விடுகின்றன !
நீயோ
கோபம் வந்தால்
மனிதனிலிருந்து மாறி
விலங்காகி விடுகிறாய்
ஏன் இந்த மாற்றம் ?

கைகள் இல்லாவிடினும்
காற்றை துவைத்து
ஆக்சிஜன் அனுப்புகிறோம்!

நீங்களோ
காற்றின் முகத்தில்
கரியமில வாய்வுகளால்
காறித் துப்புகிறீர்கள்!

உங்களுக்கு!
பல்லாக்கு தூக்கும் எங்களுக்கு
நீங்களேன் சந்தூக்கு தயாரிக்கிறீர்கள் ??

இதற்கும் என்னிடம் பதில் இல்லை.

என் அமைதியை பார்த்துவிட்டு முடிவாய் மரம் சொன்னது:

ஏ மனிதர்களே!

உங்களின் தேவைக்கு இன்றைக்கு
நாங்கள் விறகுகள் !
நாளை மறுமையில்
நரகத்தின் தேவைக்கு
தீமையானவர்களே விறகுகள்!!

ஷேக் முகைத்தீன்