Showing posts with label ஷேக் முகைத்தீன். Show all posts
Showing posts with label ஷேக் முகைத்தீன். Show all posts

நாங்கள்தான் இலைகள் பேசுகிறோம்.. 3

அதிரைநிருபர் பதிப்பகம் | April 24, 2016 | , , ,


ஏற்றத் தாழ்வு
எங்களுக்கும் உண்டு;
கறிவேப்பிலை, புதினா , துளசி
உயர் சாதிகள்..

மனிதர்களைப் போலன்று நாங்கள்;
தேவையில்லை எனில்
கத்திரி மண்வெட்டி கதிர் அறுவாள்
ஒன்றின்மூலம் எங்களுக்கு
விசாரணையின்றி மரண தன்டனை நிச்சயம்!

காற்று எங்களோடு
கம்பெனி சேர்ந்தால் போதும்
உடனிருக்கும் இலைகளோடு
உரசி உரசி ஊர்புறணி
அளப்பதாய் ஒரே குற்றச்சாட்டு!

சில நேரம்
மழை எனும் பிரம்புகளால்
அடிபட்டு அடிபட்டு
துவண்டு மீண்டும் எழ
மூன்று நாளாகும்!

நாங்கள் சினிமா
நடிகர்களும் இல்லை! ஆனாலும்
எங்களுக்கு எப்போதும்
மூத்திர அபிஷேகம்!

ஏன்.. எங்களால்
எழுந்து வரமுடியாதெனும் தைரியத்தில்
அந்த நாய் கூட
ஒற்றைக்கால் தூக்கி....

வெறும் இலைகள் என
ஏழைகளைப்போல ஏளனமாய்
யாரும் பார்க்க வேண்டாம் !

இலைகளல்ல நாங்கள்!
இலவசமாக மனிதர்களுக்கு
மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் !

எங்கள் கிளைகள்
எங்கள் கைகள்;
வியர்க்கும்போது வசிறிகள் வீசுவோம்!

எங்களிடமும்
ரோஷக்காரி உண்டு
தங்கத்தையே தட்டுல வச்சாலும்
தண்ணீரோடு சேராது தாமரை இலை!

எங்களிலும் மழலைகள் உண்டு;
தொட்டாலே சினுங்கும்
தொட்டாச்சினுங்கிகள்!

மனிதர்களைப் போலவே
தவறுகள் செய்து திருந்தினோம்;
உசிலம்பட்டியில் தொப்புல் கொடிகளை
அரளி இலைகளால் அறுத்ததைதான் சொல்கிறோம் !

எந்த விருந்துக்காகவும் தடால் புடாலென
தட்டுக்கள் தயாரிக்கும் வாண்டையார்
வாழைக் குடும்பம் என..

ஏதோ ஒரு வகையில்
யாருக்காவது உதவிக்கொண்டே இருக்கிறோம்
உதவாக்கரைகள் அல்ல. !!!

இருந்தாலும் இறந்தாலும்
ஆயிரம் பொன்
யானை மட்டுமென
யார் சொன்னது?

நாங்கள் உறை விடத்தை விட்டு
உதிர்ந்து இறந்தாலும்
உரமாகும் வரம் பெற்றவர்கள் !!!

ஷேக் முகைத்தீன்

மரமும் மனிதனும்... 13

அதிரைநிருபர் பதிப்பகம் | October 14, 2015 | , , ,


வாருங்கள், மரத்தோடு ஒரு பேட்டி எடுக்கப்போகிறேன்!

நான்:
மரமே ! நலமா ?
ஆறறிவு ஜீவன் - உன்
அருகினில் வந்திருக்கிறேன்!
வரவேற்பு பலமாய் இல்லையே! ஏன்?

மரம் :
என்னால் எழுந்து
வாசலுக்கு வந்து
வரவேற்க முடியாதென்பதாலதான்
காற்றிடம் பூச்செண்டு கொடுத்து
உன்னை வரவேற்றேன்!

நான்:
சரி...!
சில கேள்விகள்
பதில் சொல்!
காற்றின் சங்கீதத்திற்கு - எப்போதும்
சந்தோஷத்தில் தலையாட்டுவதால்
நீ காற்றை சார்ந்துதானே இருக்கிறாய்?

மரம் :
இருக்கட்டுமே!
நீ சிரிக்க வேண்டுமெனில்
சிலரோடு சேர்ந்திருக்க வேண்டும்!
உயிர் வாழவோ - நீ
என்னையே சார்ந்திருக்க வேண்டும்!!

நான்:
மீன் செத்தாலும் கருவாடு
மனிதன் செத்தாலும் வெருங்கூடு!
பசு இருந்தாலும் பாலாகும்!
செத்தாலும் தோலாகும்!"
பாடலைக் கேட்டதுண்டா?

மரம் :
நாங்கள்
நின்றாலும் நிழலாவோம் !
வீழ்ந்தாலும் விறகாவோம் !

இருந்தாலும்
மழலைகளின் தொட்டில் ஆவோம்!
இறந்தாலும் இளைப்பாறும் கட்டிலாவோம் !!

பலம் தரும் பழமாவோம் !
பல வழிகளில் இப்படியே பலனாவோம் !!

நான்:
கல்லாதவர்களை
வள்ளுவர் மரம் என்று அழைக்கிறாரே ?

மரம் :
அவரைப் பற்றி என்னிடம் பேசாதே!
கண்ட பாலுக்கெல்லாம்
தனி அதிகாரம் ஒதுக்கியவர்
தாய்பாலுக்கென்று
அதிகாரம் ஒதுக்காதவர் அவர்!

எங்கள் கிளைகளின் ஓலைகளில்
தன் வேலையை முடித்துவிட்டு
நன்றி மறந்த சாதாரண மனிதரே அவர்!!

நான்:
எங்களிடமும் பலசாலி
பலவீனர்கள் என்றுண்டு
அவர்களை நாங்கள்
மரமண்டை என அழைக்கிறோம்!

மரம் :
ஏன் !
எங்களிடமும் அப்படி உண்டு!
பலசாலிகள் தேக்கு புளிய மரங்கள்!
பலவீனன் முருங்கை மரமென்றும்!
அவற்றை நாங்கள்
மனித மண்டை என்றே அழைக்கிறோம்!!

நான்:
இப்போதெல்லாம் - உன்
சகத்தோழர்களான விலங்குகள்
காட்டை விட்டுவிட்டு நாட்டுக்குள் வந்து
தொல்லை செய்கிறதே!

மரம் :
காடுகள் எல்லாம்
வீடுகள் ஆகும் போது
வீடுகளெல்லாம் காடுகளாவதில்
என்ன தவறு?

என்னிடம் வார்த்தை இல்லை!
மெளனம் காத்தேன் - இப்போது
மரம் என்னிடம் கேள்வி கேட்டது..

அதென்ன!
மழைக்காக மறையோனிடம் வேண்டாமல்..
மரங்களின் தாலியை அறுத்துவிட்டு
கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் ??

என்னிடம் பதில் இல்லை.

நீங்கள் ! - ஏன்?
அவசரக்காரர்களாக இருக்குறீர்கள்?
நெடுங்காலத்து நட்பை
குறைந்த வார்த்தையில்
குடும்பக்கட்டுப்பாடு செய்கிறாய்!
சில விலங்குகள்
நன்றி காட்டுவதில்
விலங்கிலிருந்து மனிதனாகி விடுகின்றன !
நீயோ
கோபம் வந்தால்
மனிதனிலிருந்து மாறி
விலங்காகி விடுகிறாய்
ஏன் இந்த மாற்றம் ?

கைகள் இல்லாவிடினும்
காற்றை துவைத்து
ஆக்சிஜன் அனுப்புகிறோம்!

நீங்களோ
காற்றின் முகத்தில்
கரியமில வாய்வுகளால்
காறித் துப்புகிறீர்கள்!

உங்களுக்கு!
பல்லாக்கு தூக்கும் எங்களுக்கு
நீங்களேன் சந்தூக்கு தயாரிக்கிறீர்கள் ??

இதற்கும் என்னிடம் பதில் இல்லை.

என் அமைதியை பார்த்துவிட்டு முடிவாய் மரம் சொன்னது:

ஏ மனிதர்களே!

உங்களின் தேவைக்கு இன்றைக்கு
நாங்கள் விறகுகள் !
நாளை மறுமையில்
நரகத்தின் தேவைக்கு
தீமையானவர்களே விறகுகள்!!

ஷேக் முகைத்தீன்

குறை பாடுகள் 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 22, 2015 | , ,


எங்களூர் இரயிலடியிலும்
பறவைகளின் எச்சங்கள்
மச்சமெனக் கொண்டு
ஒரு சிமெண்ட் இருக்கை
அநாதையாக கிடக்கிறது
அமர்வோர் யாருமின்றி...

கல்யாண வீட்டு பந்திகளில்
உப்போ உவர்ப்போ
எப்படி யாயினும்
கூடியோ குறைந்தோவிடுகிறது

விருந்தினர் வருகை
எதிர் பாராமலிருந்தால்
கைகள் பிசையும்
கிராமத்து ஏழை
பின்வாசல் வழியே
அரிசியோ காய்கறியோ
கடன் வாங்கும் நிலை ..

வேண்டப்பட்டவரின்
கல்யாணம் நிராகரிக்கப்பட்டது
என்னால் - என்
மனைவியின் நகைகள்
வங்கியில் இருப்பதால் ...

பெரியவீட்டுக் கல்யாணத்தில்
பாட்டுக் கச்சேரி - அங்கே
கேமரா
தங்களை நோக்கி வரும்போது
பார்த்தும் பார்க்காததுமாய்
பள்ளிக் கால தோழியைப்
பாவம் காட்டி
நடிக்கும் பார்வையாளர்கள்..

விபரமறிந்த நாளிலிருந்தே
செய்து கொண்டிருக்கும் சாதனை
வாய்க்கு வெளியே
நுரைபடாமல்
பல் தேய்த்ததே இல்லை..

மனதைக் கட்டுப்படுத்தும்
வைராக்கியத்தில் தொழுதாலும்..
ஏதோ ஒரு
சிந்தனையில் தடுமாறாமல்
தடம் மாறாமல்
இதுவரை தொழுததில்லை!

ஆண் அழகனோ
அசத்தும் தோரனையோ
இல்லைதான் - ஆனாலும்
கண்ணாடி முன்னால்
தங்களை அலங்கரித்து
உவப்படையும் எல்லோரும்
காக்கைக்கும் தன் குஞ்சு
பொன் குஞ்சுவென
நினைவுப் படுத்துகிறார்கள் ..

பந்தலின் வெளியே
வந்திருக்கும் நபர்களில்
சரிபாதி அதிகமாகவே
காணப்படுகிற செருப்புகளின்
எண்ணிக்கை...

நல்ல கவிதைதான்! - எனினும்
பொறுமையின்மை யிலோ
பொருள் மயக்கத்திலோ
கருத்திடாமல் நகர்ந்திடும்
மனதோடும் குறைதான் !

ஷேக் முஹைதீன்

மதுவும் ஒரு மாதுவின் அரசும்! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 10, 2015 | , , , , ,

'மது' நாட்டுக்கும் வீட்டுக்கும் கெடுதல் என்ற விளம்பர உதவியோடு சினிமாத்துறை வசதியாக தவறு செய்வதைபோன்று ஒரு பக்கம் புகை நமக்கு பகை என அறிவித்துக் கொள்ளும் அரசாங்கம் இன்னொரு பக்கம் மதுபானத்தை வெளிப்படையாகவே கடைவிரித்து வியாபரம் செய்கிறது! இன்று மது தொழிலை ஆதரிக்கும் அரசாங்கம் நாளை `மாது` தொழிலையும் நடத்தினால் ஆச்சரியம் எதுவுமில்லை!
வாசகத்தின்

போராட்டம் என்பதும் ஒரு போர்தான்! ஆனால் போராளிகளின் வீர சரணங்கள் அரசாங்கத்தின் காதுகளை தொடுவதில்லை! சில மரணங்கள் மட்டுமே அரசாங்கத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே போகிறது ! தன் சட்டையில் தீப்பற்றும் போதுதான் நெருப்புக்கெதிராக கருப்புக் கொடி தூக்கும் சமுதாயத்தில் நாம் இருக்கிறோம்! 

கந்து வட்டியை தடை செய்ய ஜீ வி அவர்களின் ஆவி தேவைப்பட்டது அரசாங்கத்திற்கு...! அதே வரிசையில் மதுவுக்கெதிரான போராட்டம் தன் பசிக்கு காந்தியவாதி சசிபெருமாள் உயிரையும் ருசித்து விட்டது! நல்ல மனிதன் மட்டுமல்ல நல்ல போராட்டங்கள் கூட மரணத்திற்கு பிறகே மதிப்பை பெறுகின்றன!

இன்று மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அரசியல்வாதிகள் மரணத்திற்கு முன்பு அவரது போராட்டங்களை காது குடைந்தபடியே கவனித்ததை அனைவரும் அவதானித்தே வந்திருக்கிறோம்!

ஒழுங்காக இருக்க ஒழுக்கத்தைப் பற்றி ஒருபுறம் பாடம் எடுக்கும் ஆசிரியர் அந்தபுரத்தில் விபச்சார வியாபாரியாக இருப்பதுபோல் "புகை நமக்கு பகை" "குடி குடியை கெடுக்கும்" என்று பாட்டுப் பாடியபடி நன்றாகவே நடிக்கிறது அரசாங்கம்! தீண்டாமை ஒரு பாவச் செயல் என புத்தகங்களின் முன்பக்கத்தில் முன்னுரைக்கும் அரசாங்கம் உன் ஜாதி என்னவென்று பின்னாளில் விண்ணப்பதிலும் சலுகைகளிலும் பின்னுரைக்கிறது!

புகையிலைகளாலும் மதுவினாலும் உயிர் இத்தனை மில்லிமீட்டர் குறைந்ததாக அறிவியல் அலறி கொண்டிருக்கையில் மனித உயிர்கள் ஒரு பொருட்டே அல்ல என தமிழக அரசு இதன் மூலம்  தன் கஜானா நிறைந்ததா குறைந்ததாவென விரைந்து கணக்கெடுத்துக்   கவலைப் படுகிறது!

இருட்டில் கொளுத்திய தீக்குச்சிப் போல சில போராட்டங்களில் சுய விளம்பரமே பிரமாண்டமாக தெரிகிறது! போராட்டம் என்ற கண்ணாடியில் தங்கள் பிம்பங்களை காணவே பிரியப்படுகிறார்கள் போராட்டக்காரர்கள்! இங்கே நடக்கும் உண்ணாவிரத போராட்டத்திலும் கோஷம் போடும் போராட்டத்திலும் அதிக நஸ்டமடைந்தது காவல் துறையே! லாபம் அடைந்தது பழக்கடை ஜூஸ் வியாபாரிகள் அவ்வளவே!! போராடும் அரசியல் தலைவர்களின் கவனம் அதற்கான தீர்வின்மேல் இல்லாமல் முன் வரிசையில் நின்றபடி தன் பத்திரிகையில் வெளிவரும் புகைப்படம் சரியாக இருக்கிறதா என்பதிலேயே குறியாக இருக்கிறது!!

ஆனால், இப்போது இந்த மதச் சார்பற்ற நாட்டில் நடப்பது என்ன?

நம்மவர்களுக்கு ஒரு கெட்டப் பழக்கம் ! இதை செய்யாதே என்றுரைப்பதையே செய்து முடிக்கத் துடிக்கும் பிடிவாதம்.. 

`யாரையும் காயப்படுத்தாதே` என்ற இயேசுவை (ஈசா நபியை) இவர்கள் ஏசாத வார்த்தைகள் இல்லை! 

விபச்சாரம் அபச்சாரமென்ற சொல்லாணையிட்ட  கண்மணி நாயகத்தின் மேல் கல் எறியாத அந்தக்கால கயவர்கள் இல்லை!! 

ஒவ்வொரு சமுதாயத்திற்கு அவர்களை நேர்வழிப்படுத்த அந்தந்த காலகட்டங்களில் ஒரு நபி போதுமானதாக இருந்தது. இறுதித் தூதர் அவர்களின் வருகையால் அனைத்தும் முழுமை பெற்றுவிட்டது. இனியொரு தூதர் உலக இறுதிநாள் வரை வரப்போவது இல்லை. மனிதகுலத்துக்குரிய சட்டம் அல்குர்ஆனும் நபிவழியும் மட்டுமே நேர்வழி படுத்தும்.

கனவு காணுங்கள் என்று கிளிபிள்ளையாய் சொன்ன கலாம் அவர்களே! மன்னிக்க வேண்டும்! வேலியே பயிரை மேய்கிறது எனும் `கிலி`யில் நாங்களிருக்கையில் உங்கள் கனா வினாதான் என்பதில் எனக்கு வியேப்பேதும் இல்லை!

ஷேக் முகைத்தீன்