‘நான் இந்நாட்டின் பிரதமரானால்...’ என்ற தலைப்பைக் கொடுத்துப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களைக் கட்டுரை எழுதச் செய்வதுண்டு. அது போன்று அன்று, இக்கட்டுரையின் பின்னணி.
நமதூர் ‘தக்வாப் பள்ளி’க்குப் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாகத் தமிழ்நாடு அரசு வக்பு வாரியம் ‘முயற்சி’ செய்துவந்தது. அதற்காக விண்ணப்பம் செய்தவர்களுள் 29 பேரை வக்பு வாரியம் தெரிவு செய்து, (அப்பட்டியலில் இருந்து ஏழு பேரை மட்டும் நிர்வாகிகளாக அறிவிப்பதற்காக) அப்பெயர்ப் பட்டியலையும் வெளியிட்டிருந்தது.
“நீங்களும் விண்ணப்பம் செய்யவேண்டும்” என்று சிலர் வற்புறுத்தியதால் நானும் விண்ணப்பித்திருந்தேன். அதனால் அந்த 29 பேரில் நானும் ஒருவன். கடந்த 06 / 03 / 2013 அன்று எங்கள் அனைவரையும் நேர்முக விசாரணை க்காகச் சென்னைக்கு அழைத்திருந்தார்கள்; சென்றோம். தனித்தனியாக நேர்முக விசாரணை நடைபெற்றது. யார் யாரிடம் என்ன கேட்டார்கள் என்பது எனக்குத் தெரியாது. அதனால் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளை மட்டும் நான் கூறமுடியும். என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளைப் பொருத்தவரை, இதைக் கேட்கவா இவ்வளவு தூரத்திற்கு வரச் செய்தார்கள் என்று எண்ணத் தோன்றியது. கூடியிருந்த 25 அல்லது 30 அரசு ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களுள் 4 பேர் மட்டும் என்னிடம் நான்கு கேள்விகள் கேட்டார்கள்.
கேள்வி ஒன்று : நீங்கள் அதிராம்பட்டினவாசியா?
கேள்வி இரண்டு : உங்கள் பெயர் என்ன?
கேள்வி மூன்று : நீங்கள் ஏன் விண்ணப்பம் செய்துள்ளீர்கள்?
(இதற்கு நானளித்த பதில்: “வக்புச் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடாது என்பதால்.”)
கேள்வி நான்கு : நீங்கள் எப்போது உம்ரா செய்து திரும்பி வந்தீர்கள்?
(அதற்கு முந்திய உள்ளூர் விசாரணையில் நான் கலந்துகொள்ள முடியாததால், ‘உம்ரா’ பயணம் செல்வது பற்றி அவர்களுக்கு ஒரு கடிதம் கொடுத்திருந்தேன். அதனால் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார்கள் போல் தெரிகிறது.)
நேர்முக விசாரணைக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு, யாரோ என் காதில், “ஆளும் கட்சிக்குத்தான் சான்ஸ்” என்று அப்போது கிசுகிசுத்தது, இப்போது தெரிவு செய்யப்பட்டிருக்கும் பட்டியல் மூலம் ‘உண்மைதான்’ என்று நினைக்க வைக்கிறது. சரி, யார் வந்தால் என்ன? நாம் தேர்ந்தெடுக்கப்பட்டு, செய்ய நினைத்திருந்த சீர்திருத்தங்களை, அவர்களும் செய்யட்டும் என்று அவர்களின் காதிலும் கவனத்திலும் போட்டுவைக்கலாமே என்ற எண்ணத்தில் கீழ்க்காணும் செய்திகளைப் பட்டியல் போடுகின்றேன்:
- தக்வாப் பள்ளியானது, ‘துளுக்கா பள்ளி’ என்று அழைக்கப்பட்டுவந்த காலத்தில், அப்பள்ளிக்குரிய சொத்துக்களாக, கடைத்தெரு முழுதும் சுட்டிக்காட்டப்பட்டது! ஆனால், அன்றைக்கு அதிரையை ஆட்சி செலுத்திவந்த குறிப்பிட்ட ஒரு குடும்பம், தன் இஷ்ட்டப்படி, தன் சொத்துகளாகக் கருதி, கடை வைத்திருப்போருக்கு விற்றதும் விட்டுக் கொடுத்ததும் ஏராளம்! அவற்றில் வியாபாரிகள் கடைகளும் கட்டிடங்களும் கட்டிக்கொண்டு இன்றும் சுகித்து வருவது கண்கூடு. தரை வாடகையாவது கொடுக்கிறார்களா என்பது சந்தேகம்.
- கடைத்தெரு வெளிப்புறத்தில் இத்தகைய கொள்ளை நடப்பதை அறிந்தோ என்னவோ, மார்க்கெட்டின் உள்ளே மீன், காய்கறி, இறைச்சிக் கடைகள் வைத்திருப்போர், பள்ளியின் சார்பில் ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் வசூலுக்குப் போகும் பள்ளி ஊழியரை ஏலனப்படுத்தி விரட்டிவிடும் சந்தர்ப்பங்களும் அடிக்கடி நடப்பது வழக்கமாம்.
- இது போன்ற ஊழல்களைப் புதிய நிர்வாகம் களைந்து, இறையில்லத்தைத் திறம்பட நடத்திச் செல்லவேண்டும். அதற்கான பரிந்துரைகளாகக் கீழ்க்காணும் திட்டங்களைக் கூறி வைக்கிறோம்:
1. தற்போது புதிய கட்டிடங்களாக இருப்பவற்றைப் பட்டியல் போட்டு, அவ்விடங்களில் வியாபாரம் செய்துவருபவர்களுக்கு ‘நோட்டீஸ்’ கொடுத்து, உடனடியாக, ஒரு தொகையை தரை வாடகையாக வசூல் செய்யவேண்டும்.
2. மோசமான நிலையில் உள்ள கடைகளையும் கட்டிடங்களையும் இடித்துவிட்டு, பள்ளிவாசல் செலவில் புதிதாகக் கட்டி வாடகைக்கு விடவேண்டும்.
3. மார்க்கெட்டின் உள்புறம் முழுவதும் காலி செய்து, தற்காலிக இடத்தில் மார்க்கெட்டை அமைத்துக்கொடுத்துவிட்டு, நவீன வசதிகளுடன் தனித்தனிக் கடைகளைக் கட்டிக் கொடுத்து வாடகை வசூல் செய்யவேண்டும்.
4. மேற்காணும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்னால், காவல்துறை மற்றும் வக்பு போர்டு ஆகிய அரசுத் துறைகளின் உதவியைக் கேட்டுப் பெறவேண்டும்.
இவையெல்லாம், நாம் நிர்வாகப் பொறுப்புக்கு வந்தால் செய்ய நினைத்தவை. புதிய நிர்வாகம் இது போன்ற திட்டங்களைச் சவாலாக ஏற்றெடுத்து, தனது ‘சேவை மனப்பான்மை’யை நிரூபிக்குமா?
அதிரை அஹ்மது

