Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

2015- 2016 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்- ஒரு பார்வை 1

அதிரைநிருபர் பதிப்பகம் | March 03, 2015 | , , ,

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள், முதன் முதல் ஒரு முழுமையான நிதி நிலை அறிக்கையை கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி சமர்ப்பித்து இருக்கிறார். காங்கிரஸ் கட்சி கடந்த ஆண்டுகளில் இந்த நாட்டை ஆண்டு, ‘குப்பை கொட்டியதை’ மாற்றி புதிதாக ஒரு கட்சிக்கு வாய்ப்புக் கொடுத்தால் புதிதாக பல வளர்ச்சித் திட்டங்கள் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும், நமது வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுமென்ற பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த அரசின் முதல் முழு நிதிநிலை அறிக்கை என்ற முறையில் இந்த அறிக்கையின் மீது பரவலாக ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நாடெங்கும் பலதரப்பு மக்களிடையும் இருந்தன. அவைகளை இந்த நிதி நிலை அறிக்கை எந்த அளவு வெளிப்படுத்தி இருக்கிறது என்கிற அடிப்படையில்தான் இந்த நிதி நிலை அறிக்கையை நாம் பார்க்க வேண்டும்.

எந்த அரசு நிதி நிலை அறிக்கை சமர்ப்பித்தாலும் , பொருளாதாரம் தெரிந்தவர்கள் முதன் முதலில் பார்க்க விரும்புவது ஒரு குறிப்பிட்ட அடிப்படை அம்சமாகும். அது என்னவென்றால் அரசுக்கு வரும் ஒரு ரூபாய் வருமானத்தை அரசு எப்படிப் பங்கு வைக்கப் போவதாக அரசு நிதி நிலை அறிக்கையில் திட்டமிட்டு இருக்கிறது ( Allocation of Revenue ) என்பதே அந்த அம்சம்.

அந்த வகையில் வரும் ஆண்டில் அரசுக்கு வரும் ஒரு ரூபாய் வருமானத்தில் இருபது பைசா அரசு பட்டிருக்கும் கடனுக்காக, வட்டியாக சென்று விடும். மீதி எண்பது பைசாவில் பதினொரு பைசா மட்டுமே நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். மிச்சமிருக்கும் அறுபத்தொன்பது பைசா அரசின் செலவுகளுக்கும் மானியங்களுக்கும், மாநிலங்களுக்கும் செல்லும். இதை நாம் ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும். இந்த நிலை அவ்வளவு ஆரோக்யமான பொருளாதார நிலையல்ல. 

அதாவது நாட்டின் வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு வட்டியாகப் போய்விடும் நிலையில் வளர்ச்சித் திட்டங்களுக்கு கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்குதான் செலவிடப்படும். நிதியமைச்சர் இந்த நாட்டுக்காக எதையும் நல்லதாக செய்ய வேண்டுமென்றால் அவரால் ஒதுக்க முடிந்த பதினோரு சதவீதத்துக்குள்தான் செய்ய இயலும். அப்படி நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் பதினோரு பைசா வருமானத் தொகையில் ‘கள்ளனுக்குப் பாதியும் கறிக்குப் பாதியும்’ பங்கு வைக்கும் குரங்குகளுக்கும் போனது போக மிச்சம்தான் மக்களுக்கு சென்று சேரும் என்பதை முதலில் மனதில் வைத்துக் கொள்வோம். ஆகவே, ‘முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன் ரெண்டு குழம் பாழ்; ஒண்ணிலே தண்ணியே இல்லே’ என்கிற நிலைதான் தொடர்ந்து நிலவும். 

அருண் ஜெட்லி அளித்துள்ள நிதிநிலை அறிக்கையின் சில முக்கிய அம்சங்களைக் காணலாம். 
  • வருமான வரி வரம்பில் உயர்வு இல்லை. 
  • கறுப்புப் பணத்தைப் பதுக்கினால் பத்து ஆண்டுகள் சிறை.
  • சேவை வரி இரண்டு சதவீதம் உயர்வு.
  • ஒரு லட்சம் மதிப்புள்ள எந்தப் பொருள் வாங்கினாலும் பான் கார்டு கட்டாயம்.
  • வீடு வாங்க முன்பணத்தை ரூ. 20000/= க்கு மேல் ரொக்கமாகத் தரத் தடை.
  • இன்னும் ஏழு ஆண்டுகளில் அனைவருக்கும் வீடு.
  • இளைஞர் மற்றும் முதியோருக்கு புதிய காப்பீட்டுத் திட்டம்.
  • 8, 000 கோடி ரூபாய்க்கு வரிச்சலுகைகள்.
  • 23, 000 கோடி ரூபாய்க்கு வரிச் சலுகைகள்.
  • செல்வ வரி ரத்து.
  • விருப்பப்படும் ஊழியர்களுக்கு மட்டுமே பிராவிடன்ட் பண்ட் திட்டம்.
  • ரூ. 12 கட்டினால் ரூ. 2 இலட்சத்துக்கு விபத்துக் காப்பீடு.
  • கார்பரேட் நிறுவனங்களுக்கான வரி நான்கு ஆண்டுகளுக்கு 30.
  • சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக் குறைப்பு.
  • கறுப்புப் பணத்தை ஒழிக்க புதிய சட்டம்.
  • நேரடி அன்னிய முதலீட்டை ஈர்க்க பலவித சலுகைகள்.

நிதி நிலை அறிக்கையின் பல அம்சங்கள் , பாஜக வின் தேர்தல் அறிக்கை போன்றே தோன்றுவதாக அரசியல் ஆய்வாளர்களும் பொருளியல் அறிஞர்களும் சொல்கிறார்கள். 

ஆர். கே. சண்முகம் செட்டியார், டி.டி.கே, மொரார்ஜிதேசாய், ஆர். வெங்கட்ராமன், சி. சுப்ரமணியம் பிரணாப் முகர்ஜி, யஷ்வந்த் சின்கா, ப.சிதம்பரம் போன்ற பல நிதியமைச்சர்கள் தயாரித்து அளித்த நிதிநிலை அறிக்கைகள் அனைத்திலும் காணப்படும் பொதுவான பல அம்சங்கள் இந்த நிதிநிலை அறிக்கையிலும் காணப்பட்டாலும் தனித்துவமாகத் தோன்றும் சிலவற்றை மட்டுமாவது நாம் விவாதிக்க வேண்டி இருக்கிறது. 

ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையிலும் நடுத்தர மற்றும் மாதச் சம்பளம் வாங்கித்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டியவர்கள் எதிர்பார்ப்பது வருமான வரியின் உச்சவரம்பின் மாற்றம்தான். காரணம், மாதச்சம்பளம் பெறுபவர்கள்தான் வருமான வரியை ஒழுங்காகக் கட்டி வருகிறார்கள். கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனியார்கள் வரி ஏய்ப்புத் தில்லுமுல்லுகளில் ஈடுபடுவார்கள். ஆனால் அரசு ஊழியர்கள் மற்றும் இதர மாதச் சம்பளக் காரர்கள் அவ்வாறு செய்ய இயலாது. காரணம் TDS (Tax Deduction at Source) என்கிற முறையில் அவர்களின் வருமானம், உடனுக்குடன் பிடித்தம் செய்யப்பட்டு அரசுக்கு செலுத்தப்படும். 

இப்படிப் பட்ட இக்கட்டான நிலையில் இருக்கும் அரசு ஊழியர்கள், மற்றும் மாதச்சம்பளம் பெறுவோர்களின் கனவு, இந்த நிதிநிலை அறிக்கையால் தரைமட்டத்துக்குக் தகர்க்கப்பட்டு இருக்கிறது. இன்றுள்ள விலைவாசி ஏற்றம் போன்ற பல துன்பங்களைத் தாங்கும் நடுத்தர வர்க்கத்தினர், வருமான வரியில் ஏதாவது சலுகை வருமா என்று ஆவலுடன் எதிர்பார்த்த வேளையில் அவர்களின் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார் அருண் ஜெட்லி. வருமானவரியை ஒழுங்காகக் கட்டுபவர்களுக்கு அரசு வழங்கி இருக்கும் இந்த தண்டனையை எதிர்த்துக் கிட்டத்தட்ட (பொருளாதார மேதை நடிகர் சரத் குமாரைத் தவிர) எல்லா எதிர்க் கட்சித்தலைவர்களும் கண்டித்து இருக்கிறார்கள்.

அடுத்து, சொந்தமாக வீடு வாங்க வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு ஒரு மரண அடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் நடுத்தர வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள ஒரு தாக்குதல்தான். இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக கொடுக்கத் தடை விதித்து இருப்பது ஒருவகையில் கறுப்புப் பணத்தை கட்டுப் படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையாத் தோன்றினாலும் நடைமுறை சாத்தியமற்ற இந்த முறையால் நடுத்தரவர்க்கம் வீடு வாங்குவதற்கான முயற்சிகளில் இறங்கினால் வரியின் வலையில் விழுந்து விடுவோமோ என்று அச்சம் கொள்ள இடமளிப்பதுடன் அவர்களின் முயற்சிகளை இடறிவிடும் செயலாகவும் இந்த அறிவிப்பு இருக்கிறது. 

அடுத்தபடியாக, சேவை வரியை உயர்த்தி இருப்பதுடன் சேவைகளுக்கு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் முறையும் ஊக்குவிக்கப் பட்டு இருக்கிறது. சேவை வரியின் உயர்வால்விமானபயணம், சுற்றுலா, சரக்குப் போக்குவரத்து போன்ற பல சேவைகளின் விலைகள் உயரும். விலைவாசியைக் குறைப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த அரசு விலைவாசிகளை உயர்த்த வழிவகுத்து இருப்பது வேடிக்கையான விஷயமென்று மக்கள் உணரத்தலைப் பட்டுவிட்டனர்.

கார்பரேட் நிறுவனக்களின் மீது கரிசனம் காட்டும் அரசு என்று இந்த அரசுக்குப் பெயர். காரணம் கார்பரேட் நிறுவனங்களின் தயவின் மூலமே ஆட்சிக்கு வந்த இந்த அரசு, அவர்களுக்கு உதவும் வகையில் அந்த நிறுவனங்களுக்கான வரியை ஐந்து சதவீதம் குறைத்து நன்றிக் கடன் செலுத்தி இருக்கிறது. 

கார்பரேட் துறையின் மீது கவனம் செலுத்தி இருப்பது போலவே காப்பீட்டுத் துறையிளும் இந்த அரசு மிகவும் கவனம் செலுத்தி இருப்பது நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில திட்டங்கள் மூலம் நிரூபணம் ஆகி இருக்கிறது. காப்பீட்டுத்துறையில் அந்நிய நிறுவனங்களின் நேரடி முதலீட்டை ஈர்க்க ஆர்வம் காட்டும் நரேந்திர மோடி அரசு, அமெரிக்கா முதலிய நாடுகளில் தோற்றுப் போய் இற்றுப் போன நிறுவனங்களை இந்தியாவுக்குக் கொண்டுவர ஆரம்பம் முதலே இந்த அரசு ஆர்வம் காட்டி வருவதை நாம் உணர்ந்திருக்கலாம்.

அத்தகைய காப்பீட்டு நிறுவனங்கள் இங்கு காலூன்றும் விதத்தில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் பிராவிடன்ட் பண்ட் திட்டத்தை அந்த ஊழியர்களின் விருப்பத்துக்கே விட்டு இருக்கிறது. அரசின் திட்டத்தில் சேராதவர்கள் தனியார் துறையில் முதலீடு செய்வார்கள் என்கிற எதிர்பார்ப்பும் மியூச்சுவல் பண்ட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்யட்டுமென்ற எதிர்பார்ப்பும்தான் இதற்கும் காரணம். தனியார் துறையை ஊக்குவிக்கும் இந்த அரசின் முயற்சிகளுக்கு இந்த அறிவிக்கள் ஆலவட்டம் சுற்றும். 

மேலும் 18 வயது முதல் 50 வயதுவரை உள்ளவர்களுக்கு புதிய காப்பீட்டுத்திட்டமும் ஆண்டுக்கு 12 ரூபாய் கட்டினால் விபத்துக் காப்பீடாக ஏழைகளுக்கு 2 இலட்சம் கிடைக்குமென்ற திட்டமும் அந்நிய காப்பீட்டு நிறுவனங்கள் காலூன்றி, தங்களின் வணிகத்தை வளர்த்துக் கொள்ள அரசு உதவும் யுக்திகள்தான். இந்தக் காப்பீட்டு நிறுவனங்கள் மக்களைக் காப்பாற்றுமா என்பது காத்திருந்து பதிலளிக்க வேண்டிய விஷயம். 

சொத்துவரியை முழுக்க முழுக்க இரத்து செய்திருக்கிறார் அருண் ஜெட்லி. 110 கோடி மக்கள் வாழும் நாட்டின் 70% சொத்துக்கள் 6 ஆயிரம் குடும்பங்களிடம்தான் இருக்கின்றன. ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ரெம்ப நல்லவர்களான ‘ அவர்களுக்கெல்லாம் எந்த வரியும் இல்லை என்று நிதிநிலை அறிக்கையில் கூறிவிட்டு இது ஏழைகளுடைய அரசு என்று சொல்ல இவர்களுக்கு அருகதையுள்ளதா என்பது ஆய்வுக்குரிய விஷயம்.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு புதிதாக சட்டம் கொண்டு வரப்படுமென்று நிதியமைச்சர் கூறி இருக்கிறார். எல்லாவற்றிலும் இதுவே பெரிய வேடிக்கை. காரணம், ஆட்சிக்கு வந்த நூறு நாட்களில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் மீட்கப்பட்டு, பங்கிடப்பட்டு ஒவ்வொரு இந்தியர்களின் கணக்கிலும் செலுத்தப்படுமென்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு ஒன்பது மாதங்கள் கழித்து இனிமேல்தான் சட்டம் கொண்டுவருவோமென்பது நவரசங்கள் நிறைந்த இந்த நிதி நிலை அறிக்கையின் நகைச்சுவைக் கட்டம். அதே நேரம் கறுப்புப் பணத்தை பதுக்குவோருக்கு ஆறுமாதம் கெடு விதித்து இருப்பதும், பத்து ஆண்டு சிறை என்று எச்சரிக்கை விடுத்து இருப்பதும் 300 சதவீதம் அபராதம் என்ற அச்சுறுத்தல்களும் வரவேற்க வேண்டியவையானாலும் இவற்றில் எந்த அளவு அரசியல் செல்வாக்குள்ளவர்களை கண்டுகொள்ளாமல் சலுகைகள் வழங்கப்படுமென்பதையும் வேண்டாதவர்களைப் பழிவாங்கும் அரசியலுக்கு பயன்படுத்தபடுமென்பதையும் பார்த்தே சொல்ல இயலும். 

வருமானவரி வரம்பில் உயர்வு என்பதை எதிர்பார்த்ததைப் போலவே மக்கள் பெரிதும் எதிர்பார்த்தது, நதி நீர் இணைப்புத் திட்டமாகும். ஆனால் அது பற்றி எந்தப் பேச்சு மூச்சும் இல்லை. ஆனால் கடல்வழி நீர்ச்சாலைகள் என்ற ஒரு கருத்து குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இன்றைய நிலையில் இந்தத் திட்டம் ஒரு கானல் நீர்தான். அதே நேரம் கிடப்பில் கிடக்கும் சேது சமுத்திரத்திட்டம் பற்றியும் நிதிநிலை அறிக்கை குறிப்பிடவில்லை. கடலில் கொட்டப்பட்ட பலகோடி ரூபாய் மக்களின் பணம் என்ன ஆகுமென்று சேது சமுத்திரத் திட்டம் பற்றிய ஒரு நிலைப்பாட்டை எதிர்பார்த்த தென்னகத்து மக்களுக்கு ராமேஸ்வரம் கோயிலிருந்து திருநீறு எடுத்து பட்டை நாமம் சாத்தப்பட்டு இருக்கிறது. 

நாட்டின் மின் தேவையை நிறைவேற்ற ஐந்து புதிய மின் திட்டங்கள் வரும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இன்றைய நிலையில் மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் அரசின் மனதில் இருக்கும்போது இந்த ஐந்து மின் திட்டங்கள் யானைப் பசிக்கு சோளப்பொறி என்றுதான் சொல்ல வேண்டும். 

விவசாயிகளை ஊக்கபடுத்தும் விதத்தில் உருப்படியான எந்த அறிவிப்புமில்லை. 8.5 கோடி ரூபாய் அளவுக்கு விவசாயக் கடன் தொகையின் அளவை உயர்த்தி இருக்கிறார்கள். ஆனால் விலை பொருள்களுக்கு நல்ல விலை, உரமானியம், ஏற்றுமதி வாய்ப்பு, நீர் ஆதார வளர்ச்சி , நிலம் கையகப் படுத்தும் முயற்சிகளைக் கைவிடுவது, விவசாயம் சார்ந்த சிறு தொழில்களை ஊக்குவிப்பது மட்டுமே கிராமியப் பொருளாதாரத்தை உயர்த்த முடியும். அதை விட்டுவிட்டு கடன் தொகையை அதிகரித்து இருப்பது இன்னும் விவசாயிகளைக் கடனில் ஆழ்த்துவதற்கும் தற்கொலை முயற்சிகளைத் தேடிக் கொள்வதற்குமே வழிவகுக்கும்.

ஏழைகளுக்குத் தரும் மானியங்கள் முறைபடுத்தப் படுமென்று அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கும் செய்திதான். இதனால் பொது விநியோகத்திட்டத்தில் இப்போது ஏழைகளுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் பொருள்களின் மேல் அரசு கை வைத்துவிடுமோ என்ற அச்சம் பரவலாக இருக்கிறது. அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் பாஜக அரசு தனக்குத் தானே வெட்டிக் கொள்ளும் அரசியல் மரணக் குழி என்பதை அவர்கள் உணர வேண்டும்.

தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை என்ற அறிவிப்பு சென்ற நிதிநிலை அறிக்கையிலும் வந்தது. ஆகவே இப்போது இதில் மகிழவோ மல்லந்துவிடவோ ஒன்றுமில்லை. அரசியல் காய் நகர்த்தலுக்கு , இது ஒரு காய் என்பது மட்டும் உண்மையாக இருக்கலாம். 

ஏதாவது ஒரு அம்சத்தை பாராட்ட இயலுமா என்று இந்த நிதிநிலை அறிக்கையை ஆழ்ந்து படித்த போது ஒரு அம்சம் தென்பட்டதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். வேலை வாய்ப்பை உயர்த்தும் வகையில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவோருக்கு பல வரிச்சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு பொருள்களுக்கான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளை ஒரு பக்கம் பார்த்தால் கார்பரேட் நிறுவனங்களுக்கான சலுகை என்று எடுத்துக் கொண்டாலும் , அருண் ஜெட்லி அவர்களின் இந்த அறிவிப்பின் மூலம் தொழில் வளர்ச்சி அடைவதுடன் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும் நிலையும் ஏற்படும் என்பதையும் மறுக்க இயலாது.

மொத்தத்தில் இந்த பாச்சா எப்படிப் பலிக்கப்போகிறது என்றும் இந்தப் பருப்பு எப்படி வேகப்போகிறது என்பதையும் பார்க்கலாம்!

இபுராஹிம் அன்சாரி

நேருக்கு நேர் - விளக்கமும் விமர்சனமும் 15

அதிரைநிருபர் பதிப்பகம் | March 19, 2014 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புக்குரியவர்களுக்கு:

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அதிரைநிருபர் தளம் கடந்த நான்கு வருடங்களாக இணையக் கடலில் சிறப்பான பயணம் தொடர்ந்து அதிரை மட்டுமல்லாது ஏனைய தமிழ்கூறும் நன்மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது – அல்ஹம்துலில்லாஹ்!. 

இந்த தளம் எவ்வகையிலும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல என்பது அனைவராலும் நன்கறியப்பட்டதாகும். மார்க்க வரம்புக்கு (முக்கியமாக குர்ஆன் ஹதீஸ்களுக்கு) அப்பாற்பட்ட எவ்வகை தகவல்கள் அல்லது செய்திகளை முழுமையாக தவிற்கும் நெறியுடன், தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுவே எமது அணுகுமுறை. 

இந்த தளத்தில் அறிமுகம் அல்லது மறுஅறிமுகம் இன்னும் இணைய எழுத்துலகில் அங்கீகாரம் செய்யப்பட்ட ஒருசில பங்களிப்பாளர்கள் பிற அதிரை தளங்களில் அவர்களின் சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். மேலும் சிலரோ இந்த இணையத்தில் எழுதுவதால் என்ன பயன் என்று எண்ணியோ அல்லது நேரமின்மை காரணமாகவோ தங்களின் பங்களிப்பை வலுப்படுத்தி தொடர இயலவில்லை. 

இணையத்தின் வாயிலாக நல்ல இதயங்களை ஒன்றிணைக்கும் முயற்சியை அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சியவர்களாக தொடர்ந்து செய்து வருகிறோம், இதற்கான நற்பலன்களை அல்லாஹ் தொடர்ந்து அளித்துக் கொண்டே இருக்கிறான். மீண்டும் அவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகட்டும் (அல்ஹம்துலில்லாஹ்). 

கடந்த 06.02.2014 அன்று அதிரைநிருபர் தளத்தில் வெளியான நேற்று! இன்று ! நாளை! – தொடர் 27 [இட ஒதுக்கீடு!] என்ற தொடரில் இடஒதுக்கீடு என்ற பதிவு வெளியானது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான முஸ்லீம்களின் உள்ளத்தில் உழன்று கொண்டிருந்த எண்ண ஓட்டங்களை தெளிவாகவும் அதே நேரத்தில் நேர்படவும் எடுத்துரைத்தது. எந்தவொரு தனி நபரையோ அல்லது எந்த இயக்கத்தையோ தன்னிச்சையாக சாடாமல் நீதமென்று அறியப்பட்டதை அப்பட்டமாக சொன்னது அந்த பதிவு அதே நேரத்தில் எவரையும் கேவலப்படுத்தி எழுத்தப்படவும் இல்லை, எந்தவிதமான கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகமோ தனிமனித சாடலோ இல்லை. இதற்கு அல்லாஹ்வே சாட்சி!

தமிழகத்தில் இருக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும், இஸ்லாமிய இயக்கங்களுக்கும் கேட்கப்பட்ட கேள்விகளை கொண்ட நியாயமான கண்ணியமான விமர்சனமாகவே அந்த பதிவு உரைகல்லாக நிமிர்ந்து நின்றது, தளத்தில் கருத்தாடல் பகுதியில் (பொதுவில்) கருத்திடாத சகோதரர்கள் மின்னஞ்சலிலும் அலைபேசியிலும் தங்களின் நேர்மையான விமர்சனங்களையும் அவர்களின் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். 

மாறாக வஞ்சப்புகழ்ச்சி தோரணையில் எழுத்தப்பட்டுள்ளது என்று தாங்களாகவே முடிவு செய்து கொண்ட ததஜவின் அதிரை-கிளை சகோதரர்கள் மேற்குறிப்பிட்ட பதிவுக்கு பதில் / விமர்சனம் என்ற போர்வையில் அதிரைநிருபர் தளத்தின் பங்களிப்பாளர்களையும், அந்த தொடரை எழுதி வரும் மரியாதைக்குரிய எங்கள் மூத்த சகோதரர்கள் இபுராஹீம் அன்சாரி, P.பகுருதீன் ஆகிய இருவரையும், மேலும் கருத்துகளை பதிந்த சகோதரர்களையும் ததஜ-அ.கி.வுக்கே உரித்தான மிகக்கேவலமான தரங்கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பதிவு ஒன்றை அவர்களது வலைப்பூவில் வெளியிட்டு, முகநூல் குழுமங்களிலும் பரப்பிவிட்டு நகையாடிக் கொண்டார்கள். பிறரைப் பற்றி அநாகரீகமாக தரங்கெட்டு பக்கம் பக்கமாக எழுதியது அவர்களுடைய நன்மதிப்பை மேலும் தூள் தூளாக்க அவர்களே எடுத்துக் கொண்ட தேடலே என்பது அவர்களுக்கு ஏனோ இன்னும் தெரியவில்லை.

ததஜ(அ.கி)வின் மிகவும் தாழ்ந்த வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்ட அவர்களின் பதிலுரைப் பதிவில், அதிரைநிருபரின் கட்டுரையாளர்களை பற்றியும், கட்டுரை பற்றியும் வந்த விமர்சனத்துக்கு தொடர்ந்த எமது நேற்று! இன்று ! நாளை! – தொடர் 28. (இட ஒதுக்கீடு - 2), என்ற இடஒதுக்கீடு பகுதி இரண்டில் மிக கண்ணியமான முறையில் விளக்கமாக அளிக்கபட்டு அத்தோடு அவர்களின் கேடுகெட்ட தூற்றலுக்கும் முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டது.

ததஜ-அ.கி. மற்றும் முரண்பாடுகள், அவதூறுகள், கேவலமான எழுத்து பிரயோகம்.

இட ஒதுக்கீடு தொடர்பாக வந்த பதிவில் கேட்கப்பட்ட கேள்விகள் ஒரு இயக்கத்திற்கு மட்டும் கேட்கப்பட்ட கேள்விகள் அல்ல, இட ஒதுக்கீட்டை முன்னிலை படுத்தும் அனைத்து இயக்க நிர்வாகிகளின் நேர்மைக்கும் அவர்களின் கொள்கைக்கும் விடுக்கப்பட்ட கேள்விகள். அவ்வாறு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தர திராணியின்றி தனிப்பட்ட நபர்களை தரங்கெட்ட முறையில் கேடுகேட்ட வார்த்தைகளை பிரயோகப்படுத்தி திட்டித் தீர்ப்பதும், ஆதாரமில்லாமல் யூகங்கள் அடிப்படையில் அவர்களால் அவதூறு பரப்புவதும் தொடர் கதையாவது எவ்வகையில் நியாயம்?

பேச்சுக்கும் மூச்சுக்கும் குர்ஆன் ஹதீஸ், நபி-வழி என்று சொல்லுபவர்கள், தரம்கெட்ட விமர்சனங்களை கையாளும் இவர்களின் ஒவ்வொரு எழுத்துக்கும் பேச்சுக்கும் சரியான திருக்குர்ஆன் வசனங்களையோ அல்லது ஷஹீஹான ஹதீஸ்களையோ தங்களின் ஆதாரமாக காட்டி நிருபிக்கத்தான் போகிறார்களா?

இடஒதுக்கீடு தொடர்பான முதல் பகுதிப் பதிவில் இவர்கள் அவதூறு தூற்றல்களுக்கு தகுந்த பதில் இரண்டாம் பகுதிப் பதிவில் நேற்று! இன்று ! நாளை! – தொடர் 28. (இட ஒதுக்கீடு - 2), அளிக்கப்பட்டு விட்டது. இனி இது தொடர்பாக அவர்கள் தொடர் ஒப்பாரி வைப்பதால் எவ்வித பலனும் இல்லை.

கண்கள் இரண்டும் தொடர் தொடர்பாக வெட்டி(யாக) ஒட்டி (காப்பி பேஸ்ட்) என்று மீண்டும் பித்து பிடித்தவர்கள் போல் ஒப்பாரியுடன் பத்தி ப(க்)த்தியாக அவர்கள் வலைப்பூவிலேயே அழ ஆரம்பித்தார்கள். அந்த தொடரில் வரும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அதனை எழுதும் சகோதரர் அதிரை மன்சூர், அதில் வரும் செய்திக்கு அவர்கள் தான் பொறுப்பான விளக்கம் தரக்கூடியவர்கள். ததஜ-அ.கி. கண்கள் இரண்டும் தொடரின் மார்க்க விடயங்களடங்கிய தகவல்கள் ஆன்லைன்-பிஜே தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை அந்த பதிவின் பின்னூட்டத்திலோ அல்லது, அதிரைநிருபர் பதிப்பகத்தின் நெறியாளர் மின்னஞ்சலுக்கோ தெரிவித்திருக்கலாம். ஆனால் இந்த பதிவு வெளிவரும் தளத்திற்கு சம்பந்தமே இல்லாத அவர்களுக்கு சொந்தமான ஒரு வலைப்பூவில் பதிவு என்ற பெயரில் கற்பனை யூகங்களை வைத்து திருடி விட்டார்கள், திருட்டு நிருபர்கள், திருட்டு பதிப்பகம் என்று கதறி அழுவது அறிவுடைய செயலா? அல்லது அந்த தொடர் வெளிவரும் தளத்தின் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்களது கருத்தை அழுத்தமாக எடுத்து வைப்பது நல்ல அனுகுமுறையா? என்பதை ததஜ-அ.கி. வலைக்குப் பின்னால் இருப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.

சகோதரர் அறிஞர் பி.ஜெ. அவர்கள் எவை, என்னவகை, எத்தனை தலைப்புகளடங்கிய புத்தகங்கள் எழுதியுள்ளார்கள் என்று அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று நினைபப்து மடமை அது மிகவும் கடினமும் ஆகும். மாஷா அல்லாஹ் ! இறைவன் அவருக்கு அளித்துள்ள ஞானத்தைக் கொண்டு ஏராளமாக எழுதியிருக்கலாம். அவரின் புத்தகங்களிலிருந்து எடுக்கபப்ட்டவை என்று அறியப் பெற்றவர்கள் அதனை சுட்டிக் காட்டினால் மட்டுமே தெரியவரும். 

இதுவரை editor@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எந்த ஒரு சுட்டிக்காட்டலும் ஆன்லைன்பிஜெ தளத்திடமிருந்தோ, அல்லது ஆன்லைன்பிஜெ தளத்தின் முகவர்களாக தங்களை முன்னிலைப் படுத்திக் கொண்டிருக்கும் ததஜ-அ.கி. வலைக்கு பின்னாலிருப்பவர்களிடமிருந்தோ இதுவரை வரவில்லை என்பதை தெளிவு படுத்திக் கொள்கிறோம். தூற்றல்களின் நாற்றம் கண்ட எங்கள் மீது அன்பு வைத்திருக்கும் சகோதரர்களால் சுட்டிக் காட்டப்பட்ட தகவல்கள் கண்கள் இரண்டும் தொடரில் ஆன்லைன்பிஜெ தளத்தில் பதிக்கபப்ட்டிருந்த ஒருசில தகவல்கள் பதியப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது, அதன் பின்னர் அந்த பதிவில் ஆன்லைன் பிஜெ தளத்தின் சுட்டியையும் இணைக்கப் பட்டுவிட்டது.

ததஜ-அ.கி. போற்றும் இயக்கத் தலைவரின் (அறிஞர் பிஜெ) சிந்தனைகள் மக்களுக்கு பயன்பெறும் விதமாக பிற தளங்களில் வந்துள்ளது என்றால் அவருக்கு மக்கள் மத்தியில் பாராட்டு கிடைக்கிறதோ இல்லையோ அல்லாஹ்விடம் நன்மை கிடைக்கும்  என்ற நல்லெண்ணம் கொள்வது தானே அறிவுடமையான செயலாக இருக்க முடியும். நல்லெண்ணம் கொள்ளாமல், விபரம் கேட்காமல், முறையாக சுட்டிக் காட்டாமல், திருடர்கள், என்று மூன்றாம் தர கூத்தாடிகள் போன்று ததஜ-அ.கி. வரம்புமீறி கயமத்தனமாக கூறித்திரிவது கண்டிக்கத்தக்கது.

அறிஞர் பிஜெ அவர்கள் தான் புத்தகம் போட்டு பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்று எந்த பதிவில் எங்கு குறிப்பிட்டுள்ளோம்? 

நேற்று! இன்று ! நாளை! – தொடர் 28. (இட ஒதுக்கீடு - 2) பதிவில்  புத்தகம் வெளியிடுபவர்கள் பற்றிய பொதுவான விமர்சனத்தை, அறிஞர் பிஜெவை பற்றித் தான் சொல்லப்பட்டுள்ளது என்று ததஜ-அ.கி. ஒரு முடிவு செய்து. அறிஞர் பிஜெ அவர்கள் புத்தகம் போட்டுத்தான் பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்று கூறியிருப்பதாக அப்பட்டமாக அவதூறு பரப்பி வரும் கீழ்தரமான ஈனச் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு அல்லாஹ்விடம் அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

“ஹாஜி, இறையருட்கவிமணி” என்ற வார்த்தைகளை வைத்து, நம்மை வழிகேடார்கள் என்று பிதற்றும் ததஜ-அ.கி. இவைகளுக்கான விளக்கத்தை முறையாக தளத்தின் நிர்வாகத்திடம் கேட்டு விட்டு அதன்படி விமர்சனம் செய்தால் இவர்களுக்கு பதில் அளித்திருப்போம். ஹாஜி என்று சேர்ப்பது சுன்னத் என்றோ அல்லது பர்ளு என்றோ அல்லது மார்க்க செயல் என்றோ எவரும் போற்றவில்லை. பொதுவாக ஊரில் அறியப்பட்ட ஹாஜி தாஹா என்ற பெயருடைய அவர்களை எவ்வாறு அழைக்கப்படுபவர்கள் என்பது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனால் நன்மை என்று எங்கும் நாம் பதிக்கவில்லை.

உள்ளத்தில் உள்ளதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.  மேலும் அது போன்ற வார்த்தைகள் (ஹாஜி, இறையருட்கவிமணி) பயன்படுத்துவது ததஜ-அ.கி. பார்வையில் தவறு என்றால், திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஷஹீஹான ஹதீஸ்களின்-படி தவறு என்று சுட்டிக் காட்டியிருந்திருக்க வேண்டும். சரியான விளக்கம் காட்டியிருந்தால். நிச்சயம் நாங்கள் திருத்திக் கொள்வோம். ஆனால் அதை விட்டுவிட்டு கண்மூடித்தனமாக தவறான ஒரு விளக்கத்தை கொடுத்து நம்மீது அவதூறு பரப்பி அவர்களை உத்தம சீலர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள் அவதூறு பரப்பி புகழ்பெற்ற ததஜ-அ.கி, ஏதோ திட்டித் தீர்க்க வேண்டும் என்பதற்காக உப்பு சப்பில்லாத ஒரு விசயத்தை வைத்துக் கொண்டு உளரிக் கொண்டிருப்பது இயக்க மயக்கத்தின் உச்சகட்ட அறியாமை. 

மார்க்க விசயத்தில் முரண்பாடுகளும் – ததஜவும்

நபித்தோழர்கள் இணைவைத்தார்கள், இதனை நபி(ஸல்) அவர்கள் கண்டு கொள்ளவில்லை, ஒரு யூதன் வந்து நபி(ஸல்) அவர்களுக்கு அந்த இணைவைப்பு பற்றி சுட்டிக்காட்டிய பிறகு நபி(ஸல்) அவர்கள் “ஓஹோ இது நமக்கே தெரியாமல் போய்விட்டது” என்று நபி(ஸல்) சொன்னதாக ஹதீஸில் இல்லாத வார்த்தையை பயன்படுத்தி. யூதனை ஹீரோவாக்கி நபித்தோழர்கள் இணை வைத்திருந்தார்கள், நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டார்கள் என்று நபி(ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் கேவலப்படுத்தியதோடு அல்லாமல், நுட்பமான ஷிர்க் என்ற ஒன்றை 1400 வருடங்களாக எந்த ஒரு மார்க்க அறிஞர்களும் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்கள். நாங்கள் ததஜ மண்ணடியில் இருந்து ஹதீஸ்களை மறு ஆய்வு செய்து நுட்பமான ஷிர்க்கை கண்டு பிடித்துள்ளோம். இதன் காரணமாக ஷஹீஹுல் புகாரியில் உள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை தூக்கிவீச வேண்டும் என்று வாய்க்கூசாமல், அந்த ஹதீஸ்களுக்கு தங்களது பகுத்தறிவு சிந்தனையை புகுத்தி விமர்சனம் செய்து பாமர மக்களை நம்பவைத்து விளக்கம் என்ற பெயரில் புத்தகம் போட்டு, சிடிக்கள் போட்டு அதனையும் பரப்பி வருகிறார்கள்.

ஷஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது என்று 1400 வருடங்களுக்கு மேலாக குர்ஆன் ஹதீஸை ஏற்று வாழ்ந்து வந்துள்ள சங்கைக்குரிய இமாம்கள், உலமாக்களின் விளக்கங்களை புரம் தள்ளி கடந்த சில வருடங்களாக அறிவிப்பாளர் தொடரில் துளி அளவும் சந்தேகமில்லாதா நம்பகமான ஷஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படும் (ஆதாரம் வேண்டுமா?) என்று தங்களுடைய போலி பகுத்தறிவு வாதத்தினால் மக்களை வழிகேட்டின் பக்கம் அறிந்தோ அறியாமலோ திசை திருப்பி விட்டு விளக்கம் என்ற பெயரில் அதற்கும் புத்தகமும் சீடி/டிவி போட்டு இவைகளையும் அமோகமாக செய்து வருகிறார்கள்.

“சூனியம் என்பது நுட்பமான ஷிர்க், அந்த நுட்பமான ஷிர்க்கை நாங்கள் ததஜ மண்ணடியிலிருந்து மறு ஆய்வு செய்து கண்டு பிடித்துள்ளோம்,” ஹஜ்ஜத்துல்விதாவில் நபி(ஸல்) அவர்கள் மார்க்கம் பூரணமாகிவிட்டது என்று சொன்னாலும், ததஜ ஹதீஸ்களை மறு ஆய்வு செய்து “நபி(ஸல்) அவர்கள் கண்டுபிடிக்காத நுட்பமான ஷிர்க் ஒன்றை நாங்கள் இப்போது கண்டு பிடித்துள்ளோம். ஆகவே சூனியம் என்ற நுட்பமான ஷிர்க்  தொடர்பாக ததஜ விளக்கத்தை யாரெல்லாம் மனம் முரண்டாக புறக்கணிக்கிறார்களோ அவர்கள் அனைவரும் முஷ்ரிக், அவர்கள் பின்னால் தொழக்கூடாது, அவர்கள் அறுக்கும் பிராணியை உண்ணக்கூடாது” என்று மார்க்க தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். ததஜவின் இந்த விளக்கத்தை ஏற்காமல் ஷஹீஹுல் புகாரியில் உள்ள அனைத்து ஷதீஸ்களையும் நம்புகிறவர்கள் இணைவைப்பாளர்கள் என்று சொல்லித் திரிந்து, புகாரி, முஸ்லீம் போன்ற ஷஹீஹான ஹதீஸ்கள் அனைத்தையும் உண்மை என்று நம்பி ஏகத்துவத்துவ கொள்கையில் வாழ்ந்து வரும் முஸ்லீம் சமுதாயத்தை முஷ்ரிக் என்று சொல்லும் அளவுக்கு உலகில் எங்குமே இல்லாத ஒரு தனிப்பிரிவாக ததஜ வழிகேட்டில் கொடிகட்டி பறக்கிறது. 

ஷஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படும் என்ற ததஜவின் நிலைபாடு தவறு, ஷஹீஹான ஹதீஸ்கள் என்றுமே குர்ஆனுக்கு முரண்படாது, அப்படி முரண் என்று நம் ஆய்வுகோ அறிவுக்கோ தென்பட்டால், அது ஹதீஸில் உள்ள குறையல்ல, ஆய்வில் உள்ள குறை, ஆய்வு செய்தவரின் அறிவில் உள்ள குறை என்று சொல்லி ஆதாரத்துடன் தகுந்த விளகங்களுடன், முன்னர் வாழ்ந்த இமாம்கள் உலமாக்கள் எப்படி முரண் இல்லாமல் விளங்கியுள்ளார்கள் என்பதை மக்கள் மத்தியில் வைத்து ததஜ போலியான வாதத்திற்கு பதில் அளித்து வருகிறார்கள். இந்தியா மற்றும் இலங்கை தவ்ஹீத் உலமாக்கள். இந்த தவ்ஹீத் உலமாக்களையும் வழக்கம் போல் தகாத வார்த்தைகளைக் கொண்டும், பெண் பித்தர்கள் என்றும், வெளிநாட்டு காசுக்காக மாரடிப்பவர்கள் என்றும், சூனியக்காரர்கள் என்றும் வாய்க்கு வந்தார் போல் அவதூறுகள் பரப்பி திட்டித் தீர்த்து விளக்கம் என்ற பெயரில் சீடி போட்டு பரப்புரை செய்கிறார்கள்.

போனாபோகுது என்று சோறு கொடுத்தோம் என்று அன்சாரிகள் முஹாஜிர்களை பார்த்து சொன்னதாகவும், அன்சாரி நபித்தோழர்களையே பதவி வெறி பிடித்தவர்கள் என்றும், அண்ணன் எப்போ போவான் திண்ணை எப்போ காலியாகும் என்றும், அம்ரு இப்னு ஆஸ்(ரலி) அவர்களை கிரிமினலான வேலை செய்பவர் போன்று என்றும் என்று நபித்தோழர்களுக்கு சொல்லக்கூடாத வார்த்தை பிரயோகம் கொண்ட ஒரு சில ததஜ பயான்கள் கேட்டு ரசித்த ததஜ-அ.கி. வலைப்பூவுக்கு பின்னாலிருபப்வர்கள் நம்மை கேலிசெய்து ரசித்துப் பார்ப்பது ஒன்றும் ஆச்சரியமான விசயமல்ல. நபித்தோழர்களை கேவலப்படுத்தி விளக்கம் என்ற பெயரில் செய்த தவறை மேலும் நியாயப்படுத்தியும் வருகிறார்கள் என்பது தான் வேதனையான விசயம். நபித்தோழர்களை கேவலப்படுத்தும் இந்த ஈனச்செயலில் அறிந்தோ அறியாமலோ சிக்கி இருக்கிறார்கள் இந்த ததஜ-அ.கி. சகோதரர்கள்.

மார்க்க விசயங்களில் தில்லுமுல்லு வேலை செய்யும் இவர்களின் பட்டியலை எடுக்க ஆரம்பித்தால் அடுக்கடுக்காக சொற்களும் முற்களாகும் என்று எழுதிக்கொண்டே போகலாம். அவைகளுக்கு பதில் என்ற பெயரில் தங்களின் மேடைப் பேச்சால், விவாதமென்ற கூவலால் பதிலுக்கு சம்பந்தமே இல்லாத எங்கோ உள்ள குர்ஆன் வசனத்தையும், ஹதீஸ்களையும் சம்மந்தப்படுத்தி இதுதான் எங்கள் பதில் என்று பிதற்றலின் உச்சமாக சமாளிப்பதையும் இவர்கள் செய்துகொண்டு தங்களின் தவறுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டுள்ளார்கள். 

கேவலப்படும் ததஜ-அ.கி.

எத்தனை பேரை ததஜவினர் சக முஸ்லீம் என்று பார்க்காமல் கேவலப்படுத்தி இருப்பார்கள். அவர்களால் ஏராளமானோர் மனதால் நோவினை அடைந்திருப்பார்கள். அவர்களில் எத்தனை பேர் ததஜவினரை பத்வா செய்திருப்பார்கள். அல்லாஹ் ஒரு சிலரை உடனே கேவலப்படுத்துவான், இன்னும் சிலரை தாமதித்து கேவலப்படுத்துவான், மேலும் சிலரை இவ்வுலகில் கேவலப்படுத்தாமல் நிச்சயம் மறுமையில் கேவலப்படுத்துவான்.

இன்றையச் சூழலில் பார்க்கிறோம், இந்திய பாராளுமன்ற தேர்தல் 2014 மற்றும் ஒதுக்கீட்டு கோரிக்கையினால் அல்லாஹ் ததஜவினரை கேவலப்படுத்துகிறான் என்றே எண்ணத் தோன்றுகிறது. முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அரசு கடிதத்தை வைத்துக்கொண்டு “அம்மா ஆணையம் அமைத்துவிட்டது, என்று கூவிக் கூவி சொல்லிக் கொண்டும் தங்கள் முகத்திலே தாங்களே துப்பிக் கொண்டு கேவலப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் இவர்களை கேவலப்படுத்தியுள்ளான். ‘அம்மா’ சிவசேனாவை தங்களின் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டுகோள் வைத்துள்ளார், மும்பையில் முஸ்லீம்களை கருவருத்த சிவசேனாவோடு ததஜ பிரச்சாரம் செய்யும் நிலையை அல்லாஹ் உருவாக்கி அவர்களை கேவலப்படுத்த உள்ளானோ என்ற எண்ணம் தமிழக முஸ்லீம்களிடம் எழுவதை தவிர்க்க இயலவில்லை.

அன்மையில் ததஜ-அ.கி. பள்ளிவாசலில் அதிமுக தஞ்சை வேட்பாளர் பரசுராமனை அம்மா புகழ்பாட வைத்து அழகு பார்த்துள்ளது ததஜ. ஓரிரை கொள்கையை கையில் தூக்கியவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் “காவல் தெய்வம், புரட்சித் தலைவி அம்மா, தமிழகத்தின் நிரந்தர முதல் அமைச்சர், வருங்கால பாரத பிரதமர்” என்று இணைவைப்பு புகழாரம், மறைமுக ஞானம் தங்களிடம் உள்ளது போல் வேட்பாளர் பரசுராமனால் பாடப் பட்டப்போது, வாயடைத்துப் போய் வேடிக்கைப் பார்த்து கேவலப்பட்டுப் போயுள்ளார்கள் ததஜ. அல்லாஹ் இவர்களை கேவலப்படுத்தியுள்ளான்.

அதிரைநிருபர் தளத்தில் வந்த பதிவுகளையும், கருத்துக்களையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அதன் தொடுப்பு (link) ஏதும் போடாமல் வெட்டி(களின்) காப்பி பேஸ்ட் (ஒட்டி) செய்வது அவர்கள்தான் என்பதை நிரூபித்து கேவலப்பட்டுள்ளார்கள். மேலும் அதிரைநிருபர் பதிவில் வரும் பின்னூட்டங்களை காப்பி பேஸ்ட் செய்து ததஜ-அகி. பதிவின் பின்னூட்டங்களில் அதிரைநிருபர் லிங்க் இல்லாமல் பதிந்து, இயக்க மயக்க வழியில் காப்பி பேஸ்டர்கள் என்பதை நிருபித்துக் கொண்டார்கள்.

ஆணையம் அமைத்தது உண்மையா?

அதிரைநிருபரின் சமீபத்திய பதிவில் ‘தவ்ஹீத்’கான் அவர்கள் குறிப்பிட்டதில் மாநிலத்தில் ஆளும் அதிமுக 7 சதவீத இட ஒதுக்கீடு தந்தால் அவர்களுக்கு ஓட்டு இல்லாவிட்டால் அவர்களுக்கு வேட்டு, பின்னர் இட ஒதுக்கீட்டை அதிகரித்து தந்தால் ஒட்டு இல்லாவிட்டால் வேட்டு, பின்னர் இட ஒதுக்கீட்டை அதிகரித்து தர ஒருவார கால அவகாசம், இறுதியில் தமிழக அரசு அதிகாரிகளுக்கு இடையே நடந்த ஒரு கடித பரிமாற்றத்தை வைத்துக் கொண்டு அம்மா இட ஒதுக்கீடு அதிகரிக்க ஆணையம் அமைத்து விட்டார்கள், என்று ததஜ பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி வருவதை விமர்சனம் செய்யப்பட்டிருந்தது, மேலும் லட்சக்கணக்கில் செலவு செய்து இட ஒதுக்கீட்டு போராட்டம் செய்தவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் ஆனையத்தின் பரிந்துரை இன்றி இட ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது என்று ஒரு சாதாரண உண்மைக்கூட தெரியாமல் போனது என்பது ஆச்சரியமான விசயம்.

அம்மா ஒரு அரசாணையிட்டால் போதும் இடஒதுக்கீட்டை அதிகரித்து விடலாம் என்று ஒட்டுமொத்த தமிழக முஸ்லீம்களை ஏமாற்றி விட்டார்களே என்ற அடிப்படையில் எழுத்தப்பட்டது. ததஜ அரசியல் நிலைப்பாடு பற்றிய விமர்சனமே தவிர தவ்ஹீத் கொள்கைப் பற்றி எவ்விதத்திலும் கேலியாக எந்த ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. 

இன்றளவும் ததஜ கோரிக்கையை ஏற்று அம்மா ஆணையம் அமைத்துவிட்டது, என்று கூறுகிறார்களே தவிர, ஏற்கனவே இருக்கும் ஆணையம் தவிர, அரசு அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற கடித பரிமாற்றத்தை தவிர தமிழக அரசு புதிய ஆணையம் அமைத்துவிட்டதாக ததஜ சொல்லுவதற்கு அவர்கள் தான் ஆதாரத்தை மக்கள் மத்தியில் காட்ட வேண்டும். இல்லை என்றால் இது போன்ற கடும் விமர்சனம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

அவனை நிறுத்தச் சொல், பிறகு என்னிடம் சொல்

ததஜவை மட்டும் விமர்சனம் செய்பவர்கள் என்று நம்மை சொல்லி விட்டு, அந்த கட்சி இப்படி செய்தது, அந்த இயக்கம் இப்படி செய்தது, அவர்களை விமர்சனம் செய்யாதது ஏன்? நாம் ஏதோ ஒரு இயக்கத்தின் ஏஜண்ட் என்று அவர்களாகவோ கற்பனை செய்து அவர்களாகவே முடிவு செய்துள்ளார்கள். 

இங்கு ஒன்றை மிகத் தெளிவாக தெளிவுபடுத்த விரும்புகிறோம். தற்போதைய சூழலில் இடஒதுக்கீடு மற்றும் பாராளுமன்ற தேர்தல் பற்றிய விமர்சனமே எங்கள் பதிவுகளில் வந்தவைகள். பிற இயக்கத்தவரின் தவறுகளை (?) நாம் விமர்சிக்க ஆரம்பித்தால், அதற்கு ஒரு தனி களம் காண வேண்டி வரும். சமுதாய பிற இயக்கங்களைப் பற்றி விமர்சனங்கள் செய்யும் வேலையை அளவுக்கு அதிகமாகவே ததஜ செய்து வரும் போது மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதும், நிர்பந்திப்பதும் அவர்களின் அறியாமையே !

ததஜவினர் அவர்களைப் பற்றிய விமர்சனத்துக்கு மட்டும் சரியான பதில் சொல்லுவதை விட்டுவிட்டு, அவன் அப்படி செய்கிறான், அவனைப் போய் கேள், இவன் இப்படி செய்கிறான் இவனைப் போய் கேள் என்று தங்களுடைய தவறை பிறர் தவறோடு ஒப்பிட்டு தப்பித்துக் கொள்வதே இவர்களின் பொதுவான யுக்தி என்பது நாடறிந்த உண்மை. எங்களைப் பொறுத்தவரை ததஜ, தமுமுக, இதஜ, எஸ் டி பி ஐ ,முஸ்லீம் லீக் போன்ற இயக்கங்கள் எல்லாமே ஒன்றுதான். எல்லாம் சமுதாய நலனின் அக்கறை கொண்டு அரசியல் நடத்தும் இயக்கங்கள் அவைகள் அவரவர் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்படுகிறார்கள் அவ்வளவுதான். இவ்வியக்கங்கள் யாவும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவைகள் அல்ல.

எந்த இயக்கத்திற்கும் முகவர்களாக செயல்படவில்லை என்பதை அழுத்தமாக பதிகிறோம். ததஜ விமர்சிக்கும் கட்சிகளை, இயக்கங்களை நாங்களும் விமர்சிக்க வேண்டும் என்று அவர்கள் எங்களை எதிர்பார்ப்பது அறியாமையே அப்படி எவரையும் அவர்கள் நிர்பந்திக்க முடியாது.

ஊடக நடைமுறையில் பேட்டி எடுக்கிறார்கள் என்றால், அவர் அந்த கட்சியின் ஏஜண்டாக செயல்படுகிறார் என்று சொல்லுவது சிறுபிள்ளைத்தனமானது என்று சின்னஞ்சிறு பிள்ளைக்கும் தெரியும். இவ்வாறு அணுக ஆரம்பித்தால் அரசியல் கட்சிகளை பேட்டி எடுக்கும் ஊடகவியலாளர்கள் அனைவரும் அந்தந்த கட்சிகளின் ஏஜண்டுகளா? 

பதிவுகளை எழுதுபவர்களும் நிர்வாகத்திலிருப்பவர்கள் பல்வேறு பணிச் சுமைகளுக்கிடையே நல்லதை பிரித்தாய்ந்து இயன்றவரை சமூக அக்கறையுடன் செய்து வருவது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே தெரியும். இதனை யாருக்கும் விளக்கமாக சொல்லிக்காட்ட வேண்டிய அவசியமில்லை. 

எங்களைப் பொருத்தவரையில் யாரிடமும் தவ்ஹீத்வாதிகள் என்று சான்றிதழ் பெற வேண்டிய அவசியமும் இல்லை. அவரவர் உள்ளத்தில் உள்ளதை அறிந்துக்கொள்ள தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே. 

ததஜ-அகி. வலைப்பூவில் தான்தோன்றித்தனமாக அவர்கள் சாடியதை கண்ட எமது நலன் விரும்பும் அன்புச் சகோதரர்கள் எங்களுக்கு சுட்டிக் காட்டிய காப்பி / பேஸ்ட் கதறல் தொடர்பாக போதுமான விளக்கம் கொடுக்கப்பட்டு விட்டது. அதிரைநிருபர் தளத்தின் மீதும் அதன் அனைத்து பங்களிப்பாளர்கள் மீதும் திருடர்கள் என்று அவதூறு சொல்லி அனைவரையும் கேடுகெட்ட வார்த்தைகள் பயன்படுத்தி திட்டியதற்காகவும் ததஜ-அதிரை கிளை மன்னிப்பு கேட்க வேண்டும். கடும் சொற்களால் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்பதை நினைவூட்டுகிறோம்.

ததஜ-அ.கி. போன்று கண்ணியமற்ற முறையில் ஒவ்வொரு தனி மனிதனைப் பற்றி நாம் விமர்சனம் செய்ய நாம் துருவ ஆரம்பித்தால் (அல்லாஹ் பாதுகாப்பானாக) ததஜ, ததஜ-அ.கி. மற்றும் பிற இயக்கத்தில் உள்ள பலர் அவைகளிலிருந்து தப்ப முடியாது. ஆதாரத்துடன் பொதுவில் வைத்து பொதுவில் ஒவ்வொருத்தராக கேவலப்படுத்த முடியும். அதற்கான ஆதாரங்கள் உண்டு. எச்சரிக்கை செய்கிறோம் !

யூடியூப் தளங்களிலும், முகநூல் தளங்களிலும், அலைபேசி மிரட்டலின் ஒலிப் பதிவுகள் (எண்கள் உட்பட), ததஜ-அ.கி. வலைப்பூ நிர்வாத்திலிருப்பவர்கள், ததஜ-அ.கி. அபிமானிகளின் லீலைகளையும், சினிமா கூத்தாடிகளின் நகைச்சுவைகளை வைத்து முஸ்லீம்களை நய்யாண்டி செய்து மார்க்க விரோத செயல்கள் செய்து வருவதையும் ஆதாங்களுடன் வெளிக்கொணர முடியும். அவர்கள் வழிமுறையில் சொல்லுவதென்றால் அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துவிட்டு கேவலப்படுத்த முடியும். 

இப்படி ஒவ்வொன்றாக எடுத்துவிட ஆரம்பித்தால் நாற்றம் தாங்காது. ஆனால் இதுவல்ல குர்ஆன் சுன்னா வழிமுறை என்பதை நாங்கள் நன்கு உணர்ந்த காரணத்தால் அவ்வாறு செய்ய மாட்டோம். அல்லாஹ் பாதுகப்பானாக. ததஜ-அ.கி. வின் அமிமானிகளாக இருப்பவர்கள் பலர் நம் உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ அல்லது நெருங்கிய நண்பர்களின் உறவினர்களாகவோ உள்ளதால் நாம் அவர்களைப் போன்ற கேவலமான வேலையில் பொதுவில் செய்து அவர்களின் குடும்பத்தவர்களை மனவேதனைக்குள்ளாக்க மாட்டோம். அல்லாஹ் மட்டுமே, இந்த கேடுகேட்ட செயலை செய்யும் ததஜ-அ.கி. சகோதரர்களை நேர்வழிப்படுத்த போதுமானவன்.

சமுதாய துரோகம் செய்யும் எவராக இருந்தாலும், அவர்களை எல்லா சந்தர்ப்பத்திலும் விமர்சனம் செய்வோம். சமுதாய துரோகிகளை, முஸ்லீம்களிடம் குழப்பம் ஏற்படுத்தும் கயவர்களையும், ஸஹபாக்களை கேவலப்படுத்தும் மூடர்களையும் வன்மையாக கண்டிப்போம், எதிர்ப்போம், களையெடுப்போம். இன்ஷா அல்லாஹ். 

இனி இந்த பதிவு பற்றிய என்ன விமர்சனம் செய்தாலும் அதற்கு நாம் பதில் அளித்து எம்முடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த நீண்ட பதிவை பொறுமையாக நேரம் ஒதுக்கி வாசித்த நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி.

அதிரைநிருபர் பதிப்பகம்
editor@adirainirubar.in 
comments@adirainirubar.in 

நாடு போகும் போக்கு! - தேடல் - 2 23

அதிரைநிருபர் பதிப்பகம் | March 11, 2014 | , , , , ,

நாடு போகும் போக்கு - சொல்ல
நடுங்கிப் போகும் நாக்கு
நேக்குப் போக்குப் பார்த்து
நிறைவில் சொல்வேன் வாக்கு

அரசியல்வாதிகளைத் தாக்கிய
அரசியல்வியாதி ஆக்கிய
நுண்கிருமியைக் கட்டுப்படுத்த
பெட்டிபெட்டியாய் மருந்தும்
சட்டி சட்டியாய் விருந்தும்
கொட்டிக் கொடுக்கிறது தேசம்

நாட்டுக்காக
விளையாடப் போகிறவர்கள்
நோட்டுக்காக
விலையாகிப் போகிறார்கள்

வணக்க வழிபாடுகளை
நவீனப் படுத்தி
காசு பார்க்கிறார்கள்
காவிச் சாமிகள்,
மேநாட்டு மோகம் ஊட்டி
மதம் வளர்க்கிறார்கள்
பாதிரி சாமிகள்,
மார்க்கம் பற்றி
தர்க்கம் செய்து
இயக்கம் என்னும்
மயக்கும் ஊட்டி
குளிர்காய்கிறார்கள் ஆசாமிகள்!

மின்வெட்டு
மின்னல் வெட்டென தொடர
கண்கெட்டுப் போகிறது
மின்னழுத்த ஏற்றத்தாழ்வால்
சுநாமி தாக்கிய பூமிவாசிகளாய்
சுருண்டு மடிகின்றன
மின் உபகரணங்கள்

பசு மடியைக்கூட
கொசு கடிக்க
பால் வழியாகவும்
பாக்டீரியா பரவுகிறது

ஊசி போட்டு காசு வாங்கும்
மருத்துவர்கள் அருகி
தொலைகாட்சியில்
பேசி விட்டு காசு வாங்கும்
வைத்தியர்கள் மிகைக்கின்றனர்

லஞ்சம் தவிர யாவற்றிற்கும்
பஞ்சம் - பதறுகிறது
நெஞ்சம்

முந்தைய மனிதர்களின்
சிந்தையை மாற்றிய
எந்தன் கோமான்
நபிவழி நடப்பதே
நாடு நிலைக்கவும்
நடுநிலை தழைக்கவும்
நல்லதோர் தீர்வு!

CROWN எழுதியதல்ல
(அடுத்தத் தாக்குதல்...? சஸ்பென்ஸ்!)

ஊடகங்கள் - எனது பார்வையில்...! 19

அதிரைநிருபர் | January 20, 2013 | , , ,

அஸ்ஸலாமுஅலைக்கும்.

இணையத்தில் அன்றாட நிகழ்வுகளை தட்டிப் பார்ப்பது என்னுடைய தினசரி வழக்கம். தேசிய மற்றும் பன்னாட்டு ஊடகங்களில் ஊர்ந்து வரும்பொழுது சிந்தையில் பட்டதையும் என் மனதைப் பாதித்த ஒரு சில விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இப்பகிர்வு ஒரு விழிப்புணர்வாகவோ, எச்சரிக்கை மணியாகவோ, அல்லது நேரத்தை போக்கிய வெட்டிக் கதையாகவோ கூட தோன்றலாம். அது படிப்பவர்களின் கண்ணோட்டத்தையும் எண்ண ஓட்டத்தையும் சார்ந்தது.


இன்றைய ஊடகங்கள் முழுக்க முழுக்க பொருளீட்ட உதவும் நோக்கத்திலும் சில சமூகம் மற்றும் அமைப்புகளின் கருத்துக்களை திணிக்கும் அல்லது பரப்பும் ஒலி, ஒளி பெருக்கியாகவும் தாங்கள் சார்ந்த அமைப்புகளின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டே செயல்பட்டு வருகின்றது. இவர்கள் தானும் தான் சார்ந்தவர்களும் நன்றாக செல்வ செழிப்புடன் வாழ வேண்டுமெனில் கருப்பு நிறத்தினை வெள்ளை நிறமாகவும், அரசனை ஆண்டியாகவும், பாலினை விஷமாகவும், தாங்கள் விரும்பும் பரிணாமங்களில் மக்களுக்கு காட்டி தங்களின் விருப்பம் மற்றும் இலட்சியங்களை நிறைவேற்றி கொள்வார்கள்.

இதில் பலிகடாவாவது சாமனியர்களாகிய நீங்களும் நானும். அவர்களின் ஆட்காட்டி விரல் நம்மை நோக்கியே உள்ளது. எனவே இவ்வகை ஊடகங்களின் செயல்பாட்டினை கண்டறிந்து கணக்கில் கொள்வதன் மூலம், நீங்கள் அவர்கள் விரிக்கும் மாய வலைக்குள் உங்களை ஆட்படுதிடாமல் பாதுகாத்து கொள்ளலாம்.

இந்த சமூகத்தின் அங்கம் என்ற நிலையில், நம்முடைய குழந்தைகளின் எதிர்காலமும் இவர்கள் அடிக்கும் கூத்து கும்மாலங்களினால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. மேலும் நம்முடைய மனம் நம்மை அறியாமலேயே ஏமாற்றபடுகின்றன.

இன்று வெளியாகும் சினிமாக்களின் கதையினையும், காட்சியமைக்கப்பட்ட விதத்தினையும், பிறகு அதை வியாபாரம் செய்ய அவர்கள் செய்யும் யுக்திகளையும் கவனியுங்கள். அங்கே பாடலின் வரிகளில் காமம், தொடர் சீரியல்கலான நாடகங்களில் பாலுணர்வைத் தூண்டும் வகையில் அங்க அசைவுகள். ஊருக்கு வெளியே அஞ்சி ஒஞ்சி வாழ்ந்து வந்த கூத்தாடிகள் இன்று நம் நடு வீட்டில். இவர்களை நடுவீட்டிற்கு அழையாத விருந்தாளியாக உள்ளே வரவைத்ததில் பெரும் பங்கு இந்த ஊடகங்களுக்கு உண்டு. இந்த  மானங்கெட்டவர்களை பொது மேடையில் பொன்னாடை போர்த்தி அழகு பார்க்கின்றது பெரும்பாலான சமுதாயம். ஊடக விபச்சாரிகளை நம் வீட்டுப் படுக்கை அறைக்கு அழைத்து வருகின்றது.

ஊடகங்கள் நம்மை கைது செய்து அடிமைபடுத்தி வைத்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்கள் மூலம் நமக்கு ஊட்டப்பட்ட போதையை பயன்படுத்தி அதன் உரிமையாளர்களும், ஆட்சியாளர்களும், தலைவர்களும் தங்களின் எண்ணங்களை நிறைவேற்றி கொள்கின்றனர். பாழாக்கும் இந்த கூட்டத்திற்கு அரசும் துணை நிற்பது வேதனையே.

இன்றய சமுதாயத்தின் வாழ்க்கை முறையினை இந்த சினிமாவும், தொலைகாட்சி நிகழ்ச்சிகளுமே முடிவு செய்கின்றன. இதற்கு ஏரளமான உதாரணங்களைக் காட்டலாம். காலை எழுந்ததிலிருந்து  மக்கள் தலைவாரும் முறையில் துவங்கி, அணியும் ஆடை, பயன்படுத்தும் வாகனம், எல்லாவற்றிற்கும் மேலாக, பேச்சு நடை உடை கூட அவர்கள் சொல்லித்தரும் வழியில் தான் அமைந்துள்ளது. அதுமட்டுமா? வரப்போகும் கணவன்/மனைவி எப்படி இருக்க வேண்டும் என்ற அளவுகோலை இச்சைக்கேற்றவாறு நிர்ணயம் செய்வதே இந்த ஊடகங்கள் தான். ஒல்லியா/குண்டா?, வெள்ளையா/கருப்பா?, மீசை வேண்டுமா வேண்டாமா?, தாடி வேண்டுமா வேண்டாமா? இதுபோல அழகு எது என்று இவர்கள் நிர்ணயம் செய்வதை தான் இன்று கண்மூடித்தனமாக உலகின் பெரும்பாலான மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

மக்களின் மனதில் அவர்கள் அறியாமலேயே இந்த ஊடகங்களின் போலித்தனங்களை விதைத்து வளர்க்கப்பட்டு வருகின்றது. அந்த போலித்தனமான வாழ்வியல் முறை மக்களின் பாரம்பர்யத்தை, அவர்களின் கலாச்சாரத்தை மறக்கடிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் எண்ணத் தூய்மையை சிதறடித்து சின்னாபின்னமாக்கி விடுவதில் முன்னெனியில் இருக்கிறது. சிந்திக்கத் துணிய வேண்டிய மக்களை சில்மிஷங்களை காட்டி அவர்களை மடையர்களாக்கிக் கொண்டிருக்கும் வஞ்சகர்களின் சூழ்ச்சியில் சிக்காமல் நம்மை பாதுகாத்துக் கொள்வோமாக!

ஷஃபி அஹமது

"மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?" நூல் விமர்சனம் 17

அதிரைநிருபர் பதிப்பகம் | December 22, 2012 | , ,


'மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?' என்ற வினாவைத் தலைப்பாகக் கொண்ட ஆய்வு நூலைப் படிக்கக் கூடிய அரிய வாய்ப்பைத் தந்துள்ளார்கள் அதிரைநிருபர் பதிப்பகத்தார். அந்நூலில் இடம் பெற்றுள்ள 12 கட்டுரைகளும் நூல் வடிவம் பெறுவதற்கு முன்னரே அதிரைநிருபர் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதை அறிந்திருந்தேன். அவற்றைக் கண்ணுறும் வாய்ப்பு கிட்டாத என்போன்றோருக்கு இந்நூல் பேருதவியாக அமைந்துள்ளது. நூலாசிரியருக்கும் நூல் பதிப்பகத்தாருக்கும் நன்றிகள் பல..

'மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?' நூலைப் படித்து முடித்த நான் அந்நூலைப் பற்றிய சில கருத்தோட்டங்களை அதிரைநிருபர் வலைத்தள வாசக சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு முன் நூலாசிரியர் தம்பி இப்ராஹீம் அன்சாரி பற்றி சில வார்த்தைகள். 40 ஆண்டுகளுக்கு முன் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியில் (அப்போது அதுதான் பெயர்) பட்டதாரி ஆசிரியராகப் பணியேற்ற புதிதில் நான் கண்ட நன்மாணாக்கர்கள் சிலருள் அன்சாரியும் (அப்போது அப்படித்தான் அவர் பெயரை அறிந்திருந்தேன்) ஒருவர். அன்றைய அன்சாரி படிப்பு, நடிப்பு, பேச்சு இவற்றில் சிறந்து விளங்கினார். பள்ளி ஆண்டு விழாவுக்காக நான் இயற்றிய 'ஒட்டக் கூத்தார்' இலக்கிய நாடகத்தில் சோழ மன்னன் வேடமேற்று நடித்தது என் நினைவில் நிற்கிறது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு ஓராண்டுக்கு முன் இப்ராஹீம் அன்சாரி என்ற பெயரில் மீண்டும் எனக்கு அறிமுகமானார். அப்போதுதான் அறிந்தேன் இப்ராஹீம் அன்சாரி என்ற பெயரில் வலைத்தளங்களில் சமூக சிந்தனை மற்றும் பொருளாதாரச் சிந்தனனகள் சார்ந்த சிறந்த கட்டுரைகளைப் பதிவு செய்து வருபவர் நமது முன்னாள் மாணவர் அன்சாரிதான் என்று மகிழ்ந்தேன், வியந்தேன்.

'மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?' போன்ற ஒரு படைப்பைத் தருவதற்கு அறிவும் திறமையும் இருந்தால் மட்டும் போதாது; துணிவும் மிகத்தேவை. அது இப்ராஹீம் அன்சாரியிடம் நிரம்ப இருக்கிறது எனத் தெரிகிறது. "உண்மைகளை வெளிக் கொண்டு வரும்போது விதண்டாவாதிகளுக்கும் பிற்போக்கு வாதிகளுக்கும் கோபம் வரலாம். உண்மையைச் சொல்ல ஓடி ஒளிய வேண்டியதில்லை" என்று நூலின் முன்னுரையில் குறிப்பிடும் போதே தெரிந்து விடுகிறது அவர் தம் கைவசம் நிறைய ஆதாரங்களை வைத்திருக்கிறார் என்று. தேடியெடுத்து தக்க தகவல்களைத் திரட்டிய பின்னர்தான் இத்தகைய தலைப்பைத் துணிவோடு தொட்டிருக்கிறார், பாராட்டுக்கள்.

தாம் மேற்கொண்ட முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில் வால்மீகி, வள்ளுவர், திரூநீலகண்டர், பட்டினத்தார், பாரதியார், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் போன்றோர் பற்றியெல்லாம் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். அதே நேரத்தில் மனுநிதீயால் மறுமலர்ச்சி கண்ட சிலரை நோக்கி 'சண்டாளச் சாமியார்கள்' என்ற தலைப்பின் வாயிலாக சாட்டையைச் சுழற்றியிருக்கிறார். அவர்களில் சிலர் நாம் வாழுகின்ற காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் சந்திராசாமி, ஜெயேர்ந்திர சரஸ்வதி சாமி, நித்யானந்தா சாமி போன்றோர்.

சில வருடங்களுக்கு முன் 'பெண்களின் நிலை - அன்றும் இன்றும்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதில் அன்றைய பெண்களின் நிலைபற்றி குறிப்பிடும்போது பால்ய விவாகம், உடன்கட்டையேறுதல், தேவதாசி அமைப்பு முறைகள் பற்றிச் சாடியிருந்தேன். இந்த மூன்று பாதகங்களை பற்றி 'மனுநீதியால் மாதர் நிலை' என்ற தலைப்பிலானன் கட்டுரையில் விரிவாகவே விளக்கியுள்ளார் இப்ராஹீம் அன்சாரி.

இவற்றுடன் தேவதாசி முறை என்பது வெட்கக் கேடான அமைப்பாகும் எனக் கூறவரும் நூலாசிரியர் 10-11-1987 TIMES OF INDIA வில் வெளிவந்துள்ள ரிப்போர்ட்டை ஆதாரமாகக் கொண்டு "தேவதாசி அமைப்பு முறை என்பது உயர்சாதியினரும், பிராமண குருக்கள் அல்லது சாமியார்களும் சேர்ந்து செய்த சதியின் விளைவாகும்" எனக் கோடிட்டு காட்டுகிறார். ஈ.வெ.ரா பெரியார் போன்ற சில சமூக சீர்திருத்தவாதிகளின் தொடர் போராட்டம் காராணமாக தேவதாசி முறை தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்டது. அவ்வாறு போராடியவர்களில் முக்கியமானவர் டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி ஆவார். பல சிறப்புகளுக்கும் 'முதல்'களுக்கும் சொந்தக்காரரான டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி 1929-ம் ஆண்டிலேயே சென்னை சட்ட மன்ற மேலவையில் தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டு வந்தவர் என இப்ராஹீம் அன்சாரி தெரிவித்துள்ள தகவல் பலர் அறியாதது. டாடக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி சுயமாக எழுதிய My Experience as a Legislature' என்ற நூலைப்பற்றியும் தகவல் தந்துள்ளார்.

பெண்களுக் கெதிரான மற்ற இரு கொடுமைகளாக பால்ய விவாகம், சதி எனப்படும் உடன்கட்டையேறுதலைச் சொல்லலாம். "பால்ய விவாகம் என்ற பெயரில் சிறு வயதுப் பெண் மொட்டுகளை மலரும் முன்பே மண வாழ்வுக்குப் பலியிடுவதை இந்த நீதி நூல்களும், சாஸ்திர தர்மங்களும் தடுக்கவில்லை; திருத்தவில்லை; கண்டிக்க வில்லை; கடிந்துரைக்கவில்லை, மாறாக இறைவனின் பெயரால் இவை தப்பில்லை என்று தம்பட்டம் அடிக்கின்றன" என்று ஆதங்கப்படுகிறார் ஆசிரியர். "பெண்களுக்கு எதிராக மட்டுமல்ல, உலக நாகரிகத்துக்கும் எதிராக, கணவன் இறந்தால் அவன் உடலை எரிப்பதற்கு மூட்டப்படும் தீயில் உயிருடன் இருக்கும் மனைவியும் விழுந்து சாக வேண்டும் என்ற நியதியை வைத்திருந்தது இந்த சாஸ்திரங்கள்" எனச் சாடுகிறார்.

மனுநீதியின் கைங்கரியத்தால்தானே 'தீண்டாமை' எனும் தீமை அரசு சட்டங்களையும் ஆன்றோர்களின் அறவுரைகளையும் மீறித் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. அண்மைக்கால எடுத்துக் காட்டாக தர்மபுரிச் சம்பவத்தைச் சொல்லலாம்.

தர்மபுரியில் மூன்று கிராமங்களில் தலித் மக்களின் வீடுகள் தாக்கித் தகர்க்கப்பட்டன; வாசல்களில் நின்ற வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன; அவ்வீடுகளிலுள்ள பணம், விலை மதிப்புள்ள நகைகள், பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் தீண்டாமைக் கொடுமையின் ஒரு கோரமான வெளிப்பாடேயாகும். இவற்றையெல்லாம் பார்க்கும்போது வன்கொடுமை தடுப்புச் சட்டம் சரியாக அமல்படுத்தப்படுகிறதா ? என்ற ஐயம் நமக்கு எழுகிறது.

தமிழகத்தில் வன்கொடுமைச் சட்டம் சரியாக அமலாகாதது பற்றி நீதியரசர் மோகன் அவர்களின் தலைப்யிலான குழுவின் விசாரணை அறிக்கை கீழ்கண்டவாறு கூறுகிறது:

"குறைவான எண்ணிக்கையில் வழக்குகள் பதிவாகி இருப்பதைக் கணக்கில் கொண்டு முடிவுக்கு வரவேண்டுமென்றால், தமிழகத்தில் தீண்டாமை கொடுமை இல்லை; தலித் மக்கள் மீது எந்த கொடுமையும் இழைக்கப்படவில்லை என்றுதன் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இது உண்மையல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம். என்வே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சரியான முறையில் அமலாக்கிட வேண்டும் என்றே எங்கள் விசாரணைக் குழு கருதுகிறது" இதைத்தானே 'அரச நீதீ அலங்கோலம்' என்ற தலைப்பிலான கட்டுரையில் அன்சாரி சொல்லிக் காட்டுகிறார்.

முதல் 10 கட்டுரைகளின் வழியாக மனுநீதி மனித குலத்துக்கு நீதியல்ல என்பதை நிறுவி விட்டு 'சாக்கடையை விடுத்து சந்தனப் பொய்கைக்கு' என்ற கட்டுரை வாயிலாக அழைப்புப் பணியைச் செய்துத் தன் கடமையை நிறைவேற்றியுள்ளார் நூலாசிரியர். அழைப்புப் பணியைச் செய்திட ஒவ்வொரு முஸ்லீமும் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், தீன் வழி நின்று மற்றவர்களையும் தீனின் பக்கம் அழைக்க வேண்டும் என்றும், ஒன்றுபட்ட சமுதாயமாக இஸ்லாமிய சமுதாயம் திகழ வேண்டும் என்ற கருத்துகளையெல்லாம் 'எமது கடமை' என்ற தனது கடைசிக் கட்டுரையில் பதிவு செய்துள்ளது பாராட்டத்தக்கது. என்ன குறிக்கோளோடு கட்டுரைகளைப் பதிவு செய்தாரோ அந்தக் குறிக்கோள் குறையின்றி நிறைவேறிட எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்.

S.K.M.ஹாஜா முகைதீன் M.A., B.Sc., B.T. 
[முன்னாள் தலைமை ஆசிரியர், கா.மு.மே.பள்ளி]

அதிரை கால்பந்துப் போட்டி 10.06.2011 - கண்ணோட்டம் 5

அதிரைநிருபர் | June 11, 2011 | , , ,

அதிரையில் AFFA நடத்திய கால் பந்தாட்டப் போட்டி நிறைவுற்று ஒரு வாரம் கூட முடியவில்லை. இன்னொரு கால் பந்தாட்டப் போட்டி நேற்று முதல் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் ஆரம்பமானது.


அதிரை இளைஞர் கால்பந்துக்கழகம் 17-ஆம் ஆண்டு நடத்தும் S.S.M. குல் முகம்மது நினைவு 10-ஆம் ஆண்டு எழுவர் கால்பந்துத்தொடர்போட்டி. இடம் ஐடிஐ மைதானம்.


சூடான கோடையானாலும் மாலையில் அதிரை கடற்கரைத் தெருவை ஒட்டிய ஐடிஐ மைதானத்தில் கால்பந்தாட்ட போட்டியை கூட்டத்துடன் பார்ப்பது என்பதே மிக அருமையான மாலை பொழுதுபோக்கு, இது அதிரைக்கு உண்டான ஒர் சிறப்பு என்ற எண்ணத்தில் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் அதிரைநிருபர் குழு சார்பாக நாமும் சென்றோம்.

முதல் அறிவிப்பின்படி ஸ்ரீரங்கம் கால்பந்து கழகம் திருச்சி vs டெம்பிள் சிட்டி மதுரை ஆகிய அணிகள் போதுவதாக இருந்தது

அறிவிப்பு செய்யப்பட்ட மதுரை அணி வராத காரணத்தால் செவன் ஸ்டார் காரைக்குடி அணியினரை மாற்று அணியாக கடைசி நிமிடத்தில் அறிவிக்கப்பட்டனர்.

துவக்க நாள் என்பதால் கூட்டம் அலைமோதியது. பெரியவர்களும் சிறுவர்களும் அவர்களுக்கே உரிய இடங்களை வழக்கம் போல் அமர்ந்து காத்திருந்தார்கள்.

முதல் நாள் ஆட்டத்தை துவக்கி வைப்பதற்காக விருந்தினர்களும் வந்திருந்த வேலையில் ஓர் அறிவிப்பு வெளிவந்தது. ‘ அதிரையை அடுத்துள்ள பிச்சினிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த ஓர் இளைஞர் (பெயர் ஞாபகத்தில் இல்லை) 40 நிமிடம் கால்பந்தை தன் கால் மற்றும் தலையில் தட்டியே உலக சாதனை படைத்துள்ளார், இந்நிகழ்வு ஜெர்மனியில் நடைப்பெற்றது என்றதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு. சில நிமிடங்கள் தன் சாதனையை செய்துகாட்டி எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார். இது நம்மூருக்கு புதுசு என்று சொன்னால் மிகையில்லை.

போட்டியை அதிரை காவல்துறை ஆய்வாளர் v.செங்கமலக்கண்ணன் அவர்கள் துவக்கிவைத்து, ஒரு சிறு உரை நிகழ்த்தி கால்பந்து ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றார்,


ஆட்டம் மந்தமாக ஆரம்பித்தாலும், அதிரையை சேர்ந்த இருவர் காரைகுடி அணியில் விளையாடுகிறார்கள் என்ற செய்தி ஆட்டத்தில் விருவிருப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்ப்பார்ப்பு மிகுதியாகவே இருந்தது. இடைவேளையில் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை. வழக்கம் போல் இரண்டு பிளாஸ்டிக் வாலியில் தண்ணீர் மற்றும் எழுமிச்சை பழங்களும் விளையாட்டு வீரர்களுக்கு வந்தது.

இளைப்பார நமக்கு கிடைத்தது 15 ஆண்டுகளாக கிடைத்துவரும் அதே ருசியான பொடிபோட்ட மாங்காய், காய்ந்த பனை ஓலை ஸ்பூனுடன் பேப்பரில் மடித்து வந்த சுட சுட சுண்டல். அதே ருசி.. ஆங்காங்கே நிறைய வெள்ளை தொப்பி போட்ட மதர்ஸா மாணவர்களும் ஊர் பெருசுகளும் சிறுசுகளும் தென்பட்டார்கள்.

பகுதிநேர இடைவேளைக்கு பிறகு வந்த ஆட்டமே விருவிருப்பாக இருந்தது. ஆட்டமுடிவில் 1-1 என்ற கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது. ‘நடந்து முடிந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு போட்டு சமநிலையில் முடிந்ததால் டைபிரேக்கர் மூலம் முடிவு நிர்ணையிக்கப்படும் என்று அறிவிப்பு வந்ததும். தேனீக்களின் கூடு போல் ரசிகர் பெருமக்கள் வடபுறம் உள்ள கோல் போஸ்டை ஒட்டிய பகுதியில் சூழ்ந்திருந்தனர். டைப்பிரேக்கர் என்றால் எப்போதுமே இன்டிரஸ்டிங்காத்தான் இருக்கும் என்று அருகில் இருந்த ரிடைர்யடான பெருசு சொல்லியவுடனே டைப்பிரேக்கர் ஆரம்பமானது. அறிவிப்பாளர் மெம்பர் இப்றாஹிம் அவர்களின் அழகிய தொகுப்பில் போட்டியின் விருவிருப்பு மிக அதிகமானது. இறுதியில் 5 – 3 என்ற கணக்கில் திருச்சி அணி வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளது.

மொத்தத்தில் இன்றை ஆட்டம் முதலில் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும் இறுதியில் விருவிருப்புடன் நிறைவுற்றது.


AFFA அணி எப்போதும் விளையாடும்? என்ற முனுமுனுப்பு நிறைய கால்பந்து ரசிகர்களிடமிருந்து வந்தது. இருந்தாலும் மஃரிப் தொழுகை ஆரம்பித்த பின்பும் ஆட்டத்தை நீட்டிக்கொண்டு போனதை தவிர்த்துக்கொள்வது நல்லது.

மீண்டும் சந்திக்கலாம், அடுத்தடுத்த போட்டிகளின் கண்ணோட்டத்தில்.

-- அதிரைநிருபர் குழு.