"ஆசைதான் எல்லாத் துன்பங்களூக்கும் காரணம்’’ என்பது புத்தரின் கோட்பாடு. மனிதன் மனதில் ஆசைகள் தோன்றவில்லை எனில் இன்று நாம் காணும் புதிய உலகை காணவோ விந்தை அறிவின் விளைவுகளின் பலனை அனுபவித்திருக்கவோ முடியாது. ஏன் அதிகதூரம் போகணும்? அதிரை நிருபர் தளத்தை பார்க்கவோ அரேபியாவிலிருந்து வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை பொண்டாட்டியின் முகத்தை பாத்து பார்த்து குஷியா–குசியா பேச முடியுமா? கல்லூரி இளசுகள் தாவணிப் பூக்களோடு செல் ஃபோனில் புதுஸா-புதுஸா ஒரு காதல் பாட்டு பாடவும் சீர்கெட்டுப் போக்கவும் தான் முடியுமா? விந்தை செய்ய ஆசைபட்டவனின் அறிவும் முயற்சியும் இதுக்கு காரணமாய் அமைகிறது. மனித மனத்தில் எழும் ஆசைக்குத் தடைபோட அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் முடியாது. என் ஆசையும் அதிரைநிருபர் தளத்தின் வழி நிறைவு பெற்றால் அதுவே என் மகிழ்ச்சி. ஆசைப்படுங்கள்!.ஆசைப்படுங்கள்!ஆசைகள் நிறைவு பெறும் வரை ஆசைப்படுங்கள்!.
மனித இனத்துக்கு புத்தகம் செய்த தொண்டுக்கு கூலி கொடுக்க எந்த மனிதனும் இன்னும் பிறக்கவில்லை; பிறக்கப்போவதும் இல்லை.
காலங்களையும் எல்லைகளையும் கடந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழும் மனித சமுத்திரத்தின் அலைவரிசை திக்கை ஒரு புரட்டுபுரட்டிப் போட்டது புத்தகமே. இன்று நாம் காணும் உலகின் மாபெரும் மாற்றத்தின் கணிசமான பங்கை அது கைப்பற்றிக் கொண்டது என்றால் மிகையாகாது.
"கல்வி கற்பதன் அவசியத்தை” நமது ரசூல் சல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னதை நினைவூட்ட வேண்டியதில்லை. அந்த அறிவுரை நாமெல்லாம் அறிந்து உணர்ந்த ஒன்று. ஒரு நல்ல புத்தகம் ஒரு நல்ல நண்பன் என்பார்கள். இப்போதெல்லாம் சல்லடை போட்டு சலித்தாலும் நல்ல நண்பர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்டது. புத்தகம் நம்மை நேரம் பார்த்து காலை வாரி விடுவதில்லை. ஆனால் சில நண்பர்களோ துரோகம் செய்யத் தயங்குவதில்லை. (இது சொந்த அனுபவம்) புத்தகத்தின் சக்தி ஒரு எல்லைக்கு உட்பட்டது அல்ல. அது அளவிடா ஆற்றலும் வலிமையும் கொண்டது. ஒருநாட்டின் சரித்திர ஓட்டத்தின் திக்கை மாற்றும் வல்லமை அதற்கு உண்டு.
இப்பொழுது நாம் புத்தகம் பிறந்த பிரசவ வார்டுக்கு வருவோமா? ’உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு! இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு!’’ ஞாபகம் உண்டா?. ஒருமனிதனை உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேருதான். ஆனால், நம் கதாநாயகன் புத்தகத்தை உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு அல்ல; உண்டாக்கி விட்டவர்கள் மூனுபேரு, யாருஅந்த மூனு பேரு? மனிதனை அறிஞனாக, கலைஞனாக, ஆட்சியளனாக, சர்வாதிகாரியாக கண்டு பிடிப்பாளனாக ஆக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் புத்தககத்தை தந்த அன்னையும் பிதாவுமான அந்த மூவரும் யார்?அவர்கள் எங்கு பிறந்தனர்? எங்கு வளர்ந்தனர்? என்ற கேள்விகளுக்கு பதில் தேடி புறப்படுவோமா?
ஆற்று படுகை வற்றி வறண்ட போதும் அதை தோண்டும்போது பொங்கி வரும் ஊற்று போல கேள்வி ஒன்று பிறந்தால் அதற்கு பதில் ஒன்றும் பிறக்கும். மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு தூவிய முதல் விதை கேள்வி[?] இந்தக் குறி இல்லையென்றால் நாமும் ஒரு தற்குறியே! நல்ல கேள்வி நல்ல விதை. அது நல்ல நிலத்தில் விழுந்தால் அங்கே ஒரு நல்ல மரம் தழைக்கும். நல்ல மரம் தழைத்தால் கோடைக்கு நிழலும் நாவுக்கு சுவையான கனியும் தரும். ஆதலால் கேளுங்கள் பதில் வரும். விதையுங்கள் முளைக்கும்.
‘’மரத்திலிருந்து ஆப்பிள் பழம் ஏன் கீழே விழுகிறது? அது வானத்தில் போய் விழுந்தால் என்ன?’’ என்ற கேள்வி நியூட்டன் என்பவரின் மூளையில் முளைத்தது. இந்த கேள்விக்கு கிடைத்த பதில் விஞ்ஞான உலகத்துக்கு திசைகாட்டும் ‘ஒளிவிளக்கு’ என போற்றி புகழாரம் சூடப்படுகிறது. நியூட்ட ன்னுக்கு கிடைத்த பதில் ‘பூமிக்கு பிறபொருளை தன்வசம் ஈர்க்கும் சக்தி உண்டு’ [GRAVITY]’. இது விஞ்ஞான வளர்ச்சிக்கு கிடைத்த வைட்டமின் மாத்திரை.
“”தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஏன் கீழே விழுகிறது?” என்று யாரவது நம் ஊரில் கேட்டு பாருங்களேன்! உங்களுக்கு பைத்தியகார பட்டம் கட்டி’ பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்க ஏர்வாடி இப்ராகிம் சாஹிப் ஒலியுல்லா பள்ளி வாசலுக்கு அனுப்பி விட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள். அதோடு உங்க கதை முடுஞ்சுதுனு நினைக்கிறியளா? அதுதான் இல்லே! இனிமே தான் அத்தியாயமே ஆரம்பிக்க போவுது."மாட்டுனாண்டா அதிராம்பட்டனத்து மரைக்கா!” என்று! ஏர்வாடிகாரன் என்ன கேப்பான் தெரியுமா? ‘’யாண்டா ” ‘மரத்துலே தேங்கா வெட்டுனா அது ஆகாயத்து மேலே போகாம பூமியிலே விழுதே ஏன்னு கேட்டியாமே! அது கீலே விழுந்தா தானேடா அதை வித்து வாளேமீனு காளே மீனுன்னு மார்கட்டுலே வாங்கி வாய்க்கு ருசியா சோறு உங்கலாம். இல்லேனா என்னத்தை திம்பே”? ஆமா தெரியாமேத்தான் கேக்குறேன். தென்னை மரத்தை பூமில நட்டுனியா இல்லே ஆகாயத்துலே நட்டுனியா”? அப்புடிண்டு கேட்டுக் கேட்டு அடிப்பான்.
அத்துடன் நாலு பேரு முன்னாடி அவமானப் படுத்துவான் அடிப்பான்-உதைப்பான். நாம அதிராம்பட்டினத்துலே ஆட்டை கழுதை ஆக்குன அந்த பாச்சா எல்லாம் ஏறுவாடீ காரங்கிட்டே பலிக்காது. அதனாலே வெள்ளக்காரன் கேட்ட புத்திசாலித்தனமான கேள்வியெல்லாம் கேக்காமே ஊருக்கு நல்லபிள்ளையா பதுவுசா நடந்துக்கோ சொல்லுறது வெளங்குதா?
தொடரும்
S.முஹம்மது ஃபாரூக்


