கேமராவின் வகைகளையும் ஒவ்வொரு காலகட்டத்தில் அதன் வளர்ச்சியையும் பட்டியலிட்டால் குறுந்தொடர் நெடுந்தொடராக நீண்டு விடும் அதனால் ஃபிலிம் ரோலை சுருக்கிக் கொள்வோம். முன்னொரு காலம் புகைப்படம் (ஃபோட்டோ) எடுத்து விட்டு ஃபிலிம் ரோலை பிரிண்ட் போட்டு புகைப்படமாக பார்ப்பதற்கு சென்னை அல்லது துபாய்க்கு, சிங்கப்பூருக்கு அனுப்பி விட்டு (தோன கானா அவர்கள் நம்ம வீடு தேடிவரும் முன் நாம் தோன கானா வீடு தேடி அலைந்தது பற்றி ஒரு தனி பதிவே போடலாம் ) அது பல நாட்கள் கழித்து துபாயில் இருந்து பிரிண்ட் போட்டு திரும்பி வரும்போது (சில சமயங்களில் வராமலும் போகும்) நாம் எடுத்த ஃபோட்டோக்கள் நமேக்கே மறந்து போய் இருக்கும் வயல் வெளியில் எடுத்த ஃபோட்டோ அது திரும்பி வரும்போது அந்த வயல் மனைகட்டாகி வீடு கட்டப்பட்டிருக்கும்.
கல்யாணத்தில் எடுத்த ஃபோட்டோ திரும்பி வரும்போது கல்யாண மாப்பிள்ளை வாப்பாவாகி இருப்பார் ஆனால் இப்போ நிலைமை தலைகீழ் அதற்கு காரணம் டிஜிட்டல் தொழில் நுட்பம் ஃபோட்டோ எடுத்த அடுத்த வினாடியே ஃபோட்டோவை பார்த்து விடலாம் (ஃபோட்டோ நல்லா இல்லாட்டி கமுக்கமா டெலிட்டும் செய்துவிடலாம் ).
இந்த டிஜிட்டல் டெக்னாலஜில் ஃபிலிம் ரோல் பிரிண்ட் போடுவதற்கான செலவீனங்கள் கால விரயம் எல்லாம் ஒழிந்து போய் விட்டன அது கூட ஃபிலிம் தயாரிப்பு கம்பெனிகளும் சேர்ந்து அழிந்து விட்டன (கோடக் கம்பெனி நஷ்ட்டத்தில் தள்ளாடுவதாக ஃபோட்டோவுடன் செய்திகள் வருகின்றன )
டிஜிட்டல் கேமராவில், அவ்வளவாக செலவுகள் கிடையாது (அதுக்கெல்லாம் சேர்த்துதான் கேமரா விலையில் கடுகு உளுதம் பருப்பெல்லாம் போட்டு தாளிச்சு தள்ளிர்ரானே). ஆயிரக்கணக்கில் படங்களை க்ளிக் செய்து தள்ளலாம். அதில் பிடித்த சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அச்சிடலாம். (பெரும்பாலும் யாரும் பிரிண்ட் போடுவதில்லை) இல்லை என்றா ல் அப்படியே கேமராவில் பார்க்கலாம் , கம்ப்யூட்டரில் பார்க்கலாம், சீரியல் ஓடாத நேரம் பார்த்து டிவியிலும் பார்க்கலாம் தப்பித் தவறி சீரியல் ஓடும் நேரம் டிவியில் பார்த்தால் அது என்னதான் நல்ல போட்டோவா இருந்தாலும் போட்டோ நல்லவே இல்லை என்ற டிஜிட்டல் சவுண்டில் ஒரு ஆடியோ சர்டிஃபிகெட் உடனே கிடைக்கும் இப்படி எல்லாம் தொந்தரவு இருக்கும் என்பதை அறிந்துதான் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு புண்ணியவான் இதற்கு என்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ‘டிஜிட்டல் போட்டோ ஃப்ரேம்’ எல்லாம் வடிவமைத்து கொடுத்துவிட்டார்.
முக்கியமாக, டிஜிட்டல் போட்டோக்களை நாம் யாருக்கு வேண்டும் என்றாலும் உடனே அனுப்பலாம். குறிப்பாக அதிரை நிருபர் எடிட்டருக்கு டிஜிட்டல் கேமராக்களின் தேவை அதிகமாகி விட்டதால், இப்போது மொபைல் ஃபோனிலேயே ஒரு கேமராவையும் தூக்கி சொருகி விட்டார்கள் அதில் போட்டோ எடுத்து உடனுக்குடன் நாம் அனுப்பிக்கொள்ளலாம் (கேமரா மொபைலை வைத்துக்கொண்டு ஒருசிலர் செய்யும் அலப்பரை தாங்க முடியல) இந்த டிஜிடல் தொழில் நுட்பம் பற்றி மற்றுமொரு தனி பதிவாக பிறகு பார்த்துக் கொள்வோம்.
ஜாலிக்காக ஃபோட்டோ எடுக்கிற கூட்டம் ஒரு பக்கம் குருட்டாம் போக்கில் ஃபோட்டோ எடுக்கும் கூட்டம் ஒருபக்கம் இதை ஒரு கலையாக நினைத்து அக்கறையோடு கற்றுக் கொண்டு ஃபோட்டோ எடுக்கும் கூட்டம் ஒருபக்கம். இதில் நீங்கள் எந்தப்பக்கம் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் புகைப்பட தொழில் நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள விதவிதமான புத்தகங்கள், பயிற்சி வகுப்புகள், இன்டர்நெட் தளங்கள், போட்டிகள் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. எது எப்படியோ போட்டோ எடுக்க முதலில் ஒரு நல்ல கேமரா தேவை என்பது ரொம்ப முக்கியம்.
இந்த பதிவு சுருங்கிவிட்டதே என்று கவலை வேண்டாம் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால் இந்தப் பதிவும் சுருங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டல் கவலைகள் பிடறியில் கால் அடித்துக் கொண்டு ஓட்டமெடுக்கும் !
தொடரும்...
S.ஹமீது






