Showing posts with label camera. Show all posts
Showing posts with label camera. Show all posts

கேமரா [புகைப்படக் கருவி] - குறுந்தொடர் - 3 16

அதிரைநிருபர் பதிப்பகம் | August 13, 2013 | , , ,

டிஜிட்டல் கேமரா இன்றைய காலகட்டத்தில் சாதாரணமாக அனைவரது கையிலும் இருக்கிறது முந்தைய காலங்களைப் போல் நிறைய செலவழித்து ஃபிலிம் வாங்கி, அதில் போட்டோ எடுக்கும்பொழுது இது சரியா வரவேண்டுமே என்ற புலம்பல்களெல்லாம் இன்றைய சூழலில் தேவை இல்லை. போட்டோ எடுத்ததும் உடணடியாக LCD / LED Screen-னில் பார்த்துவிட்டு சரி இல்லை என்றால் மறுபடியும் ஃபோட்டோ (இஷ்டத்துக்கு) எடுத்து தள்ளலாம்   பெரும்பாலான செல்போன்களில் கூட இந்த வகை கேமரா வந்துவிட்டது.என்பதை சென்ற பதிவிலும் பார்த்தோம்.


இந்த டிஜிட்டல் கேமரா எந்த அடிப்படையில் இயங்குகிறது என்பதை பற்றி கொஞ்சம் விலா வாரியா பார்ப்போம் (அது என்னங்க விலாவாரியா ) பொதுவாக  கேமராவில் இருக்கும்  லென்ஸை எப்படி பயன்படுத்துவது ஜூம் செய்வது போன்ற விவரங்களை பிறகு  நேரம் கிடைக்கும்போது  தனிப் பதிவாக பார்த்துக்கொள்வோம் (இப்படியே சொல்லிகிட்டே கடத்திடுவோம் ஏன்ன இதுவும் ஒரு ட்ரென்டுதானுங்க) தற்போது டெக்னிக் விஷயத்தை மட்டும் தெளிவாக பார்ப்போம்.

ஒளியானது லென்ஸ் மூலம் காமிராவிற்குள் சென்றதும்  அங்கு  என்ன நடக்கிறது என்பதை முதலில் பார்ப்போம்.

பழைய ஃபிலிம் போடும் கேமராவில் (அண்ணன் NAS அவர்களிடம் முன்பு ஒரு கேமரா இருந்தது அதை நாங்கள் செல்லமா நீராவி இன்ஜின் என்று கிண்டல் அடிப்போம்)  அங்கு ஒளி பிலிமில் பட்டதும் ரசாயன வினை நடக்கும். அதில் நாம் எடுக்கும் உருவம் பதிவாகும் என்ற தகவலை ஏற்கனவே சொல்லியிருந்தோம். இப்போது டிஜிட்டல் காமிராவில் உள்ளே  என்ன உருமாற்றங்கள் நடக்கிறது என்பதை வெளியே இருந்து பார்ப்போம்.

டிஜிட்டல் கேமராவில் ஃபிலிம் இருக்கும் இடத்தில் ஒரு செவ்வக வடிவில் சில்லு அதாங்க  "சிப்பு"(இந்த chip தாங்க  பிலிமுக்கு வச்சது ஆப்பு)  ஒன்று  இருக்கும். அதில் நெருக்கமாக பல வித ஒளியை உணரும் லைட் சென்சிடிவ்  புள்ளிகள் இருக்கும். இவற்றை ஆங்கிலத்தில் பிக்சல் (pixel) என்று சொல்வார்கள் இது கேமராவிற்கு கேமரா மாறுபடும்.

இவற்றில் ஒளி பட்டால் அதை மின்னூட்டமாக (charge) மாற்றும். இந்த புள்ளிகள், சி.சி.டி. என்ற மின்னூட்டமாக மாற்றும் சாதனங்கள் லென்ஸ் வழியே விழும் பிம்பம்  ஃபிலிமில் விழுவது போலவே மேற்சொன்ன சிப்பிலும் விழும். இந்த புள்ளிகள் அருகருகே இருப்பதால், பிம்பம் ஏறக்குறைய பிலிமில் இருப்பது போலவே இருக்கும். 5 மெகா பிக்சல் என்றால் சுமார் 50 லட்சம் புள்ளிகள் என்று அர்த்தம்  இதை மிகச் சிறிய அளவில் வைத்திருப்பதால் படம் நன்றாகவே வரும். 1 மெகா பிக்சல் அல்லது 2 மெகா பிக்சலில் 10 லட்சம் அல்லது 20 லட்சம் புள்ளிகள் இருப்பதால், கொஞ்சம் தெளிவில்லாமல்   வரும். பிக்சல் அளவு அதிகரிப்பதைப் பொருத்தே படத்தின் நுணுக்கமும் தெளிவும் கூடிக்கொண்டே போகும் (கேமரா வாங்கும் போது பிக்சல் கூடுதல்  உள்ள கேமரவா பார்த்து வாங்க வேண்டும் அதே நேரத்தில் அதற்குண்டான விலையையும் கொடுக்கனும் )

இறைவன் நமக்கு அளித்த கண்களில்  மிக மிக நுணுக்கமான 80 லட்சம் புள்ளிகள் இருக்கும் சில்லை விட சிறிய கண் திரையில் ஆட்டோமேடிக் லென்ஸ், ஒளி அதிகமானால் அல்லது குறைந்தால் சமாளிக்கும் திறமை, நிறம் அறிதல் என பல வகை விஷயங்களை செய்கிறது. நம் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளுமே சிறப்பானவை என்றாலும் மூளையும் கண்ணும் மிகவும் சிறப்பான அதேவேலை மிகவும் சிக்கலானவை. அதன் அருமை இம்மாதிரி நாம் செயற்கையாக செய்யும் பொருள்களின் விவரங்களைப் பற்றி யோசிக்கும் பொழுதும் வாசிக்கும் பொழுதும்  புரிய வரும்! 

ஒரு முறை போட்டோ எடுத்ததும் இந்த சில்லில் இருக்கும் மென்பொருள் அதில் இருக்கும் ஒவ்வொரு பிக்சலிலும் இருக்கும் மின்னூட்டத்தை குறித்துக் கொள்ளும் (பதிவு செய்து கொள்ளும் ) இதுதான் நமக்கு கிடைக்கும் படம். இதை மெமரி கார்டு  என்ற பகுதியில் சேமித்துக் கொள்ளும். அடுத்தடுத்த போட்டோ எடுக்கும் முன்பே முதலில் எடுத்த போட்டோவை மெமொரி கார்டுக்கு அனுப்பிவிட்டு  எல்லா பிக்சலிலும் மின்னூட்டத்தை பூஜ்யமாக்கி விடும். இது ஒரு ஃபோட்டோ எடுத்ததும் அடுத்த பிலிம் வருவது போல காலி சிலேட்  என்ற நிலைக்கு வரும். 

வீடியோ modeல், ஒரு விநாடிக்குள்24 இருந்து 25 அல்லது 30 போட்டோக்கள் எடுக்கப்பட்டு அவை அனைத்தும் சேமிக்கப்படும். ஒரு போட்டோ  எடுத்து உடனே சேமித்து எல்லா மின்னூட்டத்தையும் பூஜ்யம் ஆக்கும். உடனே அடுத்த போட்டோ, சேமிப்பு, காலி சிலேட் இப்படி ஒரு வினாடிக்கு  25 முறை இந்த செயல் நடக்கும் (கவனிக்கவும் வினாடிக்கு 25 முறை இந்த வேலை நடக்கும் )

இதுவரைக்கும் டிஜிட்டல் பத்தி கொஞ்சம் விளங்கி கொண்டோம் அப்படியோ கலர் எப்படி வருகின்றது என்பதையும் கொஞ்சம் கலர்ஃபுல்லா பார்த்து விடலாம். 

நம்ம  கண்ணுக்கு தெரியும் நிறங்கள் அனைத்தையும் சிவப்பு, பச்சை, நீலம் என்ற மூன்று வகை நிறங்களை வெவ்வேறு அளவில் கலந்து 'உருவாக்க முடியும். இதை ஆங்கிலத்தில்  Red, Green, Blue என்றும்  இதை சுருக்கமா RGB என்றும் சுருக்கமா சொல்வார்கள். பொதுவாக காமிராவில் ஒரு பொருளை போட்டோ எடுக்கும் பொழுது அதன்  ஒவ்வொரு பிக்சலிலும் இவ்வளவு சிவப்பு இவ்வளவு பச்சை இவ்வளவு நீலம் என்ற விவரம் முழுதும் பதிவாக வேண்டும். அதை எப்படி செய்வது?

இந்த புள்ளிகள் இருக்கும் சில்லில் ஒவ்வொரு புள்ளிக்கும் மேல் சிவப்பு அல்லது பச்சை அல்லது நீல நிறக் கண்ணாடி புள்ளியின் அளவே இருக்கும். ஒரு சிவப்பு கண்ணாடிக்கு ஒரு நீலக் கண்ணாடியும் இரண்டு பச்சை நிறக் கண்ணாடிகளும் இருக்கும்.

இதனால் நாம் ஒரு புள்ளி என்பது அங்கு   நான்கு புள்ளிகளால் உணரப்படும் இவை அனைத்தையும் சேர்த்தால்தான் அந்தந்த  புள்ளியில் இருக்கும் உண்மையான நிறம் வந்துவிடும் (இந்த புள்ளிகளுக்கும் அந்த மலையாள புள்ளிகளுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது )

கலர்  என்றதும்  நினைவுக்கு வருது  நாம்  காணும்  கனவுகள் யாவும் கருப்பு வெள்ளைதானாம் யாருக்கும் கலர் கனவுகள் வராதாம்! அப்படி யாராவது சிவப்பு கலர் புடவை உடுத்திக்கொண்டு என் கனவில் "பிரியாமானவர்களைக்" கண்டேன் என்று சொன்னால் அது மூளையின்  கற்பனை திறனே தவிர வேறெதுவும் கிடையாது அதுபோல்  நாம் பார்க்கும் அனைத்து பொருட்களும் நம் விழித்திரையில் தலை கீழாகவே  விழும் அதை  நேராக  சரி செய்து கொள்வது  நமது  மூளையின்  வேலை கேமாராவில்  நாம் பிடிக்கும் படங்களும்  பிலிம்  அல்லது டிஜிட்டல் சிப்பில்  தலைகிழாகவே  பதிவாகும்.

அடுத்த பதிவிலும் கலர் பார்க்கலாம் ! (1985-95 கலர் அல்ல)…
தொடரும்
Sஹமீது

கேமரா (புகைப்பட கருவி) - குறுந்தொடர் - 2 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 01, 2013 | , , , , ,

கேமராவின் வகைகளையும் ஒவ்வொரு காலகட்டத்தில் அதன் வளர்ச்சியையும் பட்டியலிட்டால் குறுந்தொடர் நெடுந்தொடராக நீண்டு விடும் அதனால் ஃபிலிம் ரோலை சுருக்கிக் கொள்வோம். முன்னொரு காலம் புகைப்படம் (ஃபோட்டோ) எடுத்து விட்டு ஃபிலிம் ரோலை பிரிண்ட் போட்டு புகைப்படமாக பார்ப்பதற்கு சென்னை அல்லது துபாய்க்கு, சிங்கப்பூருக்கு அனுப்பி விட்டு (தோன கானா அவர்கள் நம்ம வீடு தேடிவரும் முன்  நாம் தோன கானா வீடு தேடி அலைந்தது பற்றி ஒரு தனி பதிவே போடலாம் ) அது பல நாட்கள் கழித்து துபாயில் இருந்து  பிரிண்ட் போட்டு திரும்பி வரும்போது (சில சமயங்களில் வராமலும் போகும்) நாம் எடுத்த ஃபோட்டோக்கள் நமேக்கே மறந்து போய் இருக்கும் வயல் வெளியில் எடுத்த ஃபோட்டோ அது திரும்பி வரும்போது அந்த வயல் மனைகட்டாகி வீடு கட்டப்பட்டிருக்கும்.

கல்யாணத்தில் எடுத்த ஃபோட்டோ திரும்பி வரும்போது கல்யாண மாப்பிள்ளை வாப்பாவாகி இருப்பார்  ஆனால் இப்போ நிலைமை தலைகீழ் அதற்கு காரணம் டிஜிட்டல் தொழில் நுட்பம் ஃபோட்டோ எடுத்த அடுத்த வினாடியே ஃபோட்டோவை பார்த்து விடலாம் (ஃபோட்டோ நல்லா இல்லாட்டி கமுக்கமா டெலிட்டும்  செய்துவிடலாம் ).


இந்த டிஜிட்டல் டெக்னாலஜில் ஃபிலிம் ரோல் பிரிண்ட் போடுவதற்கான செலவீனங்கள் கால விரயம்  எல்லாம் ஒழிந்து போய் விட்டன அது கூட ஃபிலிம் தயாரிப்பு கம்பெனிகளும் சேர்ந்து அழிந்து விட்டன (கோடக் கம்பெனி நஷ்ட்டத்தில் தள்ளாடுவதாக ஃபோட்டோவுடன் செய்திகள் வருகின்றன )


டிஜிட்டல் கேமராவில், அவ்வளவாக செலவுகள் கிடையாது (அதுக்கெல்லாம் சேர்த்துதான் கேமரா விலையில் கடுகு உளுதம் பருப்பெல்லாம் போட்டு தாளிச்சு தள்ளிர்ரானே). ஆயிரக்கணக்கில் படங்களை க்ளிக் செய்து தள்ளலாம். அதில் பிடித்த சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அச்சிடலாம். (பெரும்பாலும் யாரும் பிரிண்ட் போடுவதில்லை) இல்லை என்றா ல் அப்படியே கேமராவில்  பார்க்கலாம் , கம்ப்யூட்டரில் பார்க்கலாம், சீரியல் ஓடாத நேரம் பார்த்து டிவியிலும் பார்க்கலாம் தப்பித் தவறி சீரியல் ஓடும் நேரம் டிவியில் பார்த்தால் அது என்னதான் நல்ல போட்டோவா இருந்தாலும் போட்டோ நல்லவே இல்லை என்ற டிஜிட்டல் சவுண்டில் ஒரு ஆடியோ சர்டிஃபிகெட் உடனே கிடைக்கும் இப்படி எல்லாம் தொந்தரவு இருக்கும் என்பதை அறிந்துதான் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு புண்ணியவான் இதற்கு என்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ‘டிஜிட்டல் போட்டோ ஃப்ரேம்’ எல்லாம் வடிவமைத்து கொடுத்துவிட்டார்.


முக்கியமாக, டிஜிட்டல் போட்டோக்களை நாம் யாருக்கு வேண்டும் என்றாலும் உடனே அனுப்பலாம். குறிப்பாக அதிரை நிருபர் எடிட்டருக்கு டிஜிட்டல் கேமராக்களின் தேவை அதிகமாகி விட்டதால், இப்போது மொபைல் ஃபோனிலேயே ஒரு கேமராவையும் தூக்கி சொருகி விட்டார்கள் அதில் போட்டோ எடுத்து உடனுக்குடன் நாம் அனுப்பிக்கொள்ளலாம் (கேமரா மொபைலை வைத்துக்கொண்டு ஒருசிலர் செய்யும் அலப்பரை தாங்க முடியல)  இந்த டிஜிடல் தொழில் நுட்பம் பற்றி மற்றுமொரு தனி பதிவாக பிறகு பார்த்துக் கொள்வோம்.


ஜாலிக்காக ஃபோட்டோ எடுக்கிற கூட்டம் ஒரு பக்கம் குருட்டாம் போக்கில் ஃபோட்டோ எடுக்கும் கூட்டம் ஒருபக்கம் இதை ஒரு கலையாக நினைத்து அக்கறையோடு கற்றுக் கொண்டு ஃபோட்டோ எடுக்கும் கூட்டம் ஒருபக்கம். இதில் நீங்கள் எந்தப்பக்கம் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் புகைப்பட தொழில் நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள விதவிதமான புத்தகங்கள், பயிற்சி வகுப்புகள், இன்டர்நெட் தளங்கள், போட்டிகள் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. எது எப்படியோ போட்டோ எடுக்க முதலில் ஒரு நல்ல கேமரா தேவை  என்பது ரொம்ப முக்கியம்.


இந்த பதிவு சுருங்கிவிட்டதே என்று கவலை வேண்டாம் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால் இந்தப் பதிவும் சுருங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டல் கவலைகள் பிடறியில் கால் அடித்துக் கொண்டு ஓட்டமெடுக்கும் !
தொடரும்...
S.ஹமீது