Showing posts with label இத்தியாதி இத்தியாதி. Show all posts
Showing posts with label இத்தியாதி இத்தியாதி. Show all posts

இத்தியாதி இத்தியாதி - வெர்ஷன் - 6 12

அதிரைநிருபர் பதிப்பகம் | January 22, 2015 | ,

பங்காளி (வங்கதேசக்காரன்) ஒருவன் அரபி ஒருத்தனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தான். இரண்டு மூன்றுபேர் பார்த்துக்கொண்டிருந்தார்களே தவிர யாரும் விலக்கிவிட எத்தனிக்கவில்லை. செம மாத்து மாத்திக் கொண்டிருந்தான். இரண்டு கைமுஷ்டிகளாலும் மாறிமாறி மண்டையில் குத்தினான். கொத்தாக முடியைப் பிடித்து இழுத்தான். பளார் பளார் என்று பிடறியில் அறைந்தான். குனிய வைத்து முதுகில் குத்தினான். அந்த அரபி ஓர் அடிகூட திருப்பி அடிக்கவில்லை. எல்லாவற்றையும் எருமையையும் மிஞ்சும் பொறுமையோடு வாங்கிக்கொண்டிருந்தான். அவன் கண்கள் மூடிக்கிடந்தன; உதடுகளில் ஓர் 'இளிப்பு' நிலவியது.

அவன் தலையை இரண்டு கைகளாலும் பூட்டுப் போடுவதுபோல பிடித்துக் கழுத்தை இடமும் வலமுமாக ஒடித்தான் பங்காளி. சடக் மடக்கென்ற சப்தத்திற்குப் பிறகு அரபி கண்களைத் திறந்தான். தான் வாங்கிய அடிகளுக்கெல்லாம் ஒரு கணக்குப் போட்டு 'ஷுக்ரன்' என்று நன்றி சொல்லி மேற்கொண்டு காசு கொடுத்து அரபி வெளியேறிய உடன் நான் என் முறைக்குத் தயாரானேன்.

அந்த பார்பரிடம்தான் நான் வழக்கமாக முடி வெட்டிக்கொள்வேன். முடி வெட்டி முடித்தப் பிறகு மஸ்ஸாஜ் என்ற பெயரில் நடந்த களேபரம்தான் நான் மேலே விளக்கியது.

எனக்குப் பக்கத்து நாற்காலியில் இருந்த கஸ்டமருக்கு மற்றொரு பங்காளி முகத்தில் படம் வரையும் லாவகத்தோடு மீசை தாடி மற்றும் கிருதாக்களை வடிவமைத்துக் கொண்டிருந்தான். பெரிய மால்களுக்குச் செல்வதற்காக இளைஞர்களால் செய்துகொள்ளப்படும் கட்டாய ஃபேஸ் கோட் (face code)அது. சில இடங்களுக்குச் செல்வதானால் எப்படி ட்ரெஸ் கோட் வைத்திருக்கிறார்களோ அதைப் போல இந்த ஃபேஸ் கோட். ஒருநாள் கூத்துக்கு மீசை என்பார்களே அதைப்போல ஒரு சில மணி நேரத்திற்கான ஏற்பாடு அது.  நாளைக்கே முளைத்துவிடும் உரோமம் பற்றிய கவலை ஏதுமில்லை. அது அவ்வாறு முளைப்பதற்குள் எத்தனை இளம்  யுவதிகளிடம் 'லைக்ஸ்' வாங்கியிருக்கும்  என்பதே கனக்கு.

நான் எப்போதும் முடி மட்டும்தான் வெட்டிக்கொள்வேன். ஷேவிங், மீசை திருத்துதல் போன்றவற்றைச் செய்ய அனுமதிப்பதில்லை. இருப்பினும் அன்றைக்கு சற்று தாமதமாகப் போனதால் வீடு திரும்பி ஷேவிங் செய்ய நேரம் இருக்காது என்கிற கணிப்பில் 'கட்டிங் அன்ட் ஷேவிங்'குக்காக கழுத்தில் வெண்பட்டியும் தோளைப் போர்த்திய துண்டுமென தயாராகிப்போனேன்.

அம்மா சொல்லும் அம்புலிமாமா ஆன்றாஸி பக்ஷி கதைகளுக்குப் பிறகு அதிகம் தூக்கம் கண்ணைச் சொக்குவது பார்பரின் கத்தரிக்கோல் இயங்கும் சப்தம்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதுவும் ஒரு கத்தை உரோமத்தை வெட்டுவதற்குள் சரசரவென்று ஏழு எட்டுத் தடவை கத்தரிக்கோலை வெற்றாக நறுக்குவது அருமையான தாள லயத்தோடு தூக்கம் வரவழைக்கும். இருப்பினும் தூங்கக்கூடாது என்கிற வைராக்கியத்தில் அரைக்கண் மூடியே ஆனந்தம் காணும் தருணம் அது.

முடி வெட்டி முடித்ததும் ஒரு சமதள ஆடியைப் பிடித்து இடம், வலம் மற்றும் பின்புறங்களில் காட்டி வெட்டு சரிதானே  என்று அங்கீகாரம் வாங்கிக்கொண்டு, ஷேவிங்கைத் துவக்கினான். மழித்து முடித்ததும் இன்னொரு முறை ஒரு எலெக்ட்ரிக் ரேஸரால் ஆட்டுத்தலையை வக்குவதுபோல் போட்டுத்தேய் தேயென்று தேய்த்து க்ரீம் பவுடர் ஆஃப்டர் ஷேவ்லாம் போட்டு வேலையை முடித்தபோது எனக்கு முகத்தில் லேசாக எரிச்சல் இருந்தது. என் விருப்பப்படி அமைத்திருந்த மீசையை அவன் இஷ்டப்படி முடித்துவிட்டிருந்தது சற்று கோபத்தை ஏற்படுத்தியது.

இனி மேற்கொண்டு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள நீங்கள் மீண்டும் முதலிலிருந்து வாசிக்க வேண்டும், அரபி என்று வரும் இடத்தில் 'என்னை'  வைத்து வாசித்துக் கொள்ளுங்கள். அப்படியே கீழ்க்கண்ட தலைப்பையும் வைத்துக் கொள்ளுங்கள்:

தலைப்பு: காசு கொடுத்து வாங்கும் அடி, குத்து!

Dubai Miracle Garden!
(ஒரு பார்வை)


அமீரகம்
அழகாகவும்
அழுத்தம் திருத்தமாகவும்
எழுதி வைத்த கவிதை

இந்தப் பூநகை
துபையின் புன்னகை

கான்க்ரீட் காடுகளின் 
நடுவே
நாட்டின் பூக்காடு

விசா இமிக்ரேஷன் இல்லாமல்
சட்டெனப் போய்வரக்கூடிய
ஐரோப்பா

இந்த
மலர் வனத்துள் நுழைந்ததும்
மனம் 
பட்டாம்பூச்சி ஆகிவிடுகிறது

ரயிலாகவும் மயிலாகவும்
ஒயிலாக அமைக்கப்பட்ட
ரகம் ரகமானப் பூக்கள்

பூக்களைப் பறிக்காதீர்கள்
என
அறிவிப்பு அவசியமில்லை
பூக்கள்தான்
முதலில்
கண்களைப் பறிக்கின்றன
கண்டதும் 
உள்ளங்களையும்!

ஒற்றைப்பூவே உவகைத்தான்
ஒரு கொத்துப் பூக்களோ
உற்சாகம்
இந்த
ஓர் ஊர் நிறையப் பூக்கள்
உலகிற்கே
துபை தரும் சந்தோஷம்

இந்தப் பூங்கா
தூங்கா நகரின் செல்லம்

செயற்கையாய் உருவாக்கப்பட்ட
இயற்கை

அமீரகத்திற்கு
துபைதான் முகம் எனில்
இந்தப் பூங்காதான்
ஒப்பணை!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

இத்தியாதி இத்தியாதி - வெர்ஷன் - 5 16

அதிரைநிருபர் பதிப்பகம் | February 16, 2014 | ,


01) கைகளில் நிகழ்ந்தது:

அது ஓர் விடியற்காலம். எம் எஸ் எம் நகர் பள்ளியில் ஃபஜர் தொழுதுவிட்டு வழக்கம்போல் வாக்கிங் போவதற்கான ட்றாக் ட்ரெஸ் அணிந்து கொண்டு கைகால்களை உதறியவாறு வீட்டை விட்டு வெளியேறினேன்.

எம் எஸ் எம் நகர் வளைவை ஒட்டி உள்ள ட்டீக்கடையில் அன்றைய தொழிலுக்கான முஸ்தீபுகள் நடந்து கொண்டிருக்க ஒரு சிலர் காத்திருந்தனர். அவர்களில் அந்த நடுத்தர வயது காக்காவை அடிக்கடி பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் வாயில் பீடியோடு டீ பாய்லரைப்போலவே புகை விட்டுக்கொண்டே இருப்பார்.  மெலிந்த தேகம் எனினும் உடல் உழைப்பில் முறுக்கேறிய தோற்றம். கடை முதலாளியும் பரிச்சயம் என்பதால் பொதுவான ஒரு சலாத்தைச் சொல்லி உபரியாக ஒரு புன்னகையை வீசி ஆளுக்குக் கொஞ்சம் பிரித்துக்கொள்ளட்டும் என்று நடைப் பயிற்சியைத் தொடர்வது வழக்கம்.

நான் ராஜா மடம் சாலையில் போகும் நேரம் பெரும்பாலும் என் அன்பிற்குரிய ஹாஜாமீ ஸார் அலியார் ஸார் வாவண்ணா ஸார் ஹனீஃபா ஸார் ஆகியோரின் ராஜபாட்டை நடைப்பயிற்சியின் நிறைவாக திரும்பி வந்து கொண்டிருக்கும்.  கண்களாலேயே குசல விசாரிப்புகளும் சன்னமாக ஒரு சலாமும் எங்களின் நடைப் பயிற்சியில் தொய்வு ஏற்படுத்தி விடாது. ஹோம் ஒர்க் ஏதும் தந்திருக்கவில்லை என்பதால் என் மரியாதைக்குறிய வாத்தியார்களின்மீது அபரித அன்பைப் பொழிவதில் சங்கோஜமிருக்காது. 

ராஜாமடம் பேருந்து நிறுத்தம் வரை போய் வருவது என் வாடிக்கை. வேகமான நடை, துணைக்கு ஒவ்வொன்றும் 100 தடவை தியாண(திக்ர்) வகைகள் என்று அத்தகைய நடைப்பயிற்சி உடலையும் மனத்தையும் ஆரோக்கியமாகவே வைத்திருக்கும். திரும்பி  ஊரை நோக்கி நடக்கும்போது காலை வெயில் கன்னத்தில் அறைய நடையிலும் தளர்ச்சி சேர்ந்து கொள்ளும். 

வரும் வழியில் ஓடைகளின்மீதான சிறிய பாலங்களில் ஒன்றில் மிதமான உடற்பயிற்சியும் செய்து கொள்வேன்.

அன்றைய பயிற்சியின் நிறைவாக அந்த டீக்கடையை நெறுங்கும்போதுதான் அது நிகழ்ந்தது. 

அந்த பீடி மனிதர் சட்டென்று பெஞ்சிலிருந்து தளர்ந்து தடுமாறி கீழே விழுந்தார். நான் விரைந்து அவரை கைகளில் தாங்கவும் மற்றவர்களும் ஓடி வந்து, "என்னாச்சு?" என்று பதறினர். நான் என் கைகளில் விழுந்தவரின் உடலின் கனம் தாங்க முடியாமல் மடியில் கிடத்தும்போதே ஏதோ விபரீதம் என்று புரிந்து கொண்டேன். ஆட்டோ பிடித்து மிக துரிதமாக அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தாலும் இறந்து விட்டார் என்று உணர முடிந்தது. 

"மாரடைப்பு மாதிரில்ல தெரியுது" "இப்பத்தானேங்க ட்டீ குடிச்சிட்டு வர்ரேண்டு போனீங்க" "எப்பப் பார்த்தாலும் பீடிதான்" "டாக்டர் பீடி குடிக்காதியண்டாரே, கேட்டியலா?" போன்ற ஆற்றாமையான வசனங்களிலிருந்து விடுபட்டு நான் வீடு நோக்கி நடக்கும்போது அந்த பீடி நாற்றமும் என் உடையோடு ஒட்டி வந்தது. 

நினைவிருக்கட்டும். மனித இதயம், தனக்குத் தகாத புகை, போதை வஸ்துகள் மற்றும் மோசமான உணவுகளைக் கொண்டு தீங்கிழைத்தவர்களைப் பழிவாங்குவதில் நேரம் தாழ்த்துவதில்லை.


02) இடப்படாதக் கையொப்பங்கள்

வெட்டப்பட்டக் கிளையிலிருந்து
இன்னும்
உதிரா திருந்தன இலைகள்

வேர்களோடான
தொடர்பு துண்டிக்கப்பட்ட தறியாது
கரியமில வாயுவோடும்
கதிரவக் கதிர்களோடும்
சோலியாயிருந்தது
பச்சையம்.

மொட்டுகளும் மொக்குகளும்
கொழுந்துகளும் காய்களும்
பூக்களும் மகரந்தமமுமாய்
பூத்துக் குழுங்கிய மர மது.

காலங்களைச் சுமக்கும்
முதியோர்களிடம்
இடப்படாதக் கையொப்பங்கள்
மிச்சமில்லாததால்
காப்பகங்களில்
விடப்பட்டவர்களை விட்டும்
விலகி
இச்சைக்கேற்ற நிரமேற்று வாழ்ந்தன
பச்சோந்திகள்

காய்ந்தும் மடிந்தும்
சருகாகியும் மக்கியும்
போகும்வரை
வேர்கள்மேலான
பிடியை
விடுவதில்லை இலைகள்

இடப்படாத கையொப்பங்கள் 
சிலவற்றையாவது
கைவசம் வைத்திருத்தல்
தற்கால வாழ்க்கைக்கான
உத்திரவாதம்!

03) …and then ?

Loneliness is what
will be left with.
it wouldn’t please
but attack
when
the sounds of  footage
of those alive
descending 
slowly away from you!

Likewise,
It would though seem
residing in
apartments of towers,
the entity of
pin drop silence
would prompt cemetery!

The density of
darkness would double
during sudden power cuts,
although 
you wouldn’t be able to presume
a table’s edge before it hits your thy,
scattered dolls before they hurdle you, 
an extemporaneous routine
will guide you to guess the existence of usual things,
but not in where you would be kept
where the darkness would be thickened

The heat would touch
as if
the hell fire neared you
but  the
stitch free uniform
which has no spare dress
wouldn’t turn wet
with sweat

Lavender for self
jasmine with spouse
are what desired personally
when alive - but
odor of sandal  smelling around
would have overcome
by the smell of clay

there would be no concession
that should stay stretched straight
while resting; and
would there be no any need
to
bend the knees
or
scratch for an itch

The pain as punishment
would have no control

Fortunately…
when all that would happen on me
that not to suffer
there would be
no life
in my being! 

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

இத்தியாதி இத்தியாதி - வெர்ஷன் - 4 50

அதிரைநிருபர் பதிப்பகம் | January 02, 2014 | , ,

1)  வலைப்பூ வளர்ப்பு

இதைப்பற்றி எழுத வேண்டும் என்கிற எண்ணம் எனக்கும் என் மலேசிய நண்பனுக்கும் நீண்ட நாட்களாக உண்டு.  “படிக்கட்டுகள்” எழுத ஆரம்பித்ததிலிருந்தே அவன் தனது இயல்பான தீவிர நகைச்சுவையிலிருந்து சற்றே விலகி மிதமான, சற்றே மிதமான நகைச்சுவைக்கு மாறிவிட்டதால், இப்போது இதை எழுதச்சொன்னால் அவனுக்கு எதிராக வழக்குத் தொடுக்குமளவிற்கு சீரியஸாக எழுதிவிடுவானோ என்கிற பயத்தால் நானே கோதாவில் இறங்கி இருக்கிறேன்.  அவன் அளவிற்கு சிரிக்கவைத்தே வயிற்றுவலி வரவைக்க என்னால் இயலாது எனினும் கொஞ்சமாவது கிச்சுகிச்சு மூட்டமுடியும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.


இனி இக்கட்டுரையின் பேசுபொருளுக்குள் நுழைவோம்.  நாட்குறிப்பேடு (diary) எழுதும் பழக்கம் எனக்குக் கொஞ்ச காலம் இருந்தது. எழுதப் படிக்கத் தெரியாத என் உறவுக்கார ‘அங்கிள்’ ஒருவருக்கு இலவசமாகக் கிடைத்த டையரி ஒன்றை ‘படிக்கிற புள்ள’யாகிய எனக்குத் தந்து புது பழக்கத்தை உருவாக்கி விட்டார் (இந்த நோட்டு உன் க்ளாஸுக்கு உள்ளதாப் பாரு).  ஏதோ ஒரு பள்ளி இறுதியாண்டுகளில் தொற்றிய அந்தப் பழக்கம் கல்லூரிக் காலங்களில் தீவிரம் அடைந்து, கல்யாணம் ஆகும்வரை விடாப்பிடியாகத் தொடர்ந்தது. ஒவ்வொரு  வருடத்தின் துவக்கத்திலும் ‘எனக்கு நல்வழி காட்டு இறைவா’ என்ற முதற்பக்க வேண்டுதலோடு சுறுசுறுப்பாகத் தொடங்கப்படும் என் குறிப்பேட்டில் முதல் தேதியிலிருந்து சில காலங்கள்வரை விழித்தது, உண்டது, உடுத்தியது, சென்றது, வந்தது என எல்லா விவரங்களும் எழுதப்பட்டிருக்கும்.  இத்தனை மணிக்கு இன்ன செய்தேன் என்றெல்லாம் மிகவும் பொறுப்பாக எழுதி வைக்கத் துவங்கி, நாட்பட நாட்பட அதுவே ஒரு சுமையாகிப் போய் காலப்போக்கில் ஒன்றுமே எழுதாமல் விடப்பட்டிருக்கும் பக்கங்களைப் பார்த்து நான் இருக்கேனா போய்ச் சேர்ந்துவிட்டேனா என்று கேட்குமளவுக்கு பக்கங்கள் தொடப்படாமலிருக்கும்.  பிந்தையக் காலங்களில் ஆங்காங்கே கவிதைகளாகக் கிறுக்கி வைக்கப்பட்டிருக்கும். எல்லாம் கற்றுக்குட்டி கவிதைகள். சாம்ப்பிலுக்கு ஒன்னு:

அன்பே
நாம் 
லவ் ஸர்க்யூட்டை
சரியாகத்தானே போட்டோம்
பிறகு ஏன்
உன்னைத் தொட்டால்
ஷாக் அடிக்கிறது?

இப்போது, இந்த நாட்குறிப்பேடு டிஜிட்டலில் வந்துவிட்டதுபோலும். ஆளாளுக்கு திறந்து வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நாட்குறிப்பேடு வலைப்பூ (blog) என்றாகிப்போனது.  என்ன ஒரு வித்தியாசம் என்றால் என் டயரியை மூடி மேசையின் இழுவறக்குள் வைத்திருப்பேன்; ப்ளாகையோ திறந்து போட்டு வைத்திருப்பதால் யார் வேண்டுமானாலும் வாசித்துப் போகலாம்.  தத்தம் கருத்துகளையும் சொல்லிவிட்டுச் செல்லலாம் போன்ற உபரி வசதிகளோடு வலைப்பூக்கள் கலை கட்டுகின்றன. நல்ல ஆரோக்கியமான விஷயம்தான்.  ஆனால், என் குறிப்பேடுகளைப் போலவே பல நாட்கள் எந்தவித பதிவுகளும் பதியப்படாமல் பல வலைப்பூக்கள் வெறிச்சோடிப்போய்க் கிடக்கின்றன.  

“ஜாயிரு, இன்னிக்கு அந்த ப்ளாக் பார்க்கப் போகிறேன். துணைக்கு வாயேன், தனியாகப் போக பயமாயிருக்கு” என்று கேட்குமளவிற்கு இருண்டுபோய்க் கிடக்கின்றன. அவனோ “அங்கேயெல்லாம் போகாதடா பூச்சி வட்டை இருந்து கடிச்சிடப் போவுது” என்பான். ஏற்கனவே பதியப்பட்டு நாட்பட்டுப்போன பதிவுகளைச் சொடுக்கினால் தூசு கிளம்பி நெடி ஏறி தும்மல் வருமளவுக்கு பாழடைந்துபோய்க் கிடக்கின்றன.  கோவாலு துணைக்கு இல்லாமல் எந்த மாப்ளேயும் தனியாகப் போக முடியாத அளவுக்கு ஒட்டடையோடும் காலாவதியானப் பதிவுகளின் இடிபாடுகளுடனும் வெளவ்வால் அடைந்துபோய் கிடக்கின்றன பல ப்ளாக் கள்.  பழைய பேப்பர் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டும் என்று வெளியே ப்ரவ்சிங் செய்யும்போதே போர்ட் போட்டுவிடுவது நல்லது. ப்ளாகுக்குச் சொந்தக்காரர்களே வரதட்சணை பாக்கி வைத்துவிட்ட மாமியார் வீட்டைப்போல புறக்கணித்துவிடுவதால் அவர்கள் வலைப்பூ வாழாவெட்டி ரேஞ்சுக்குப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.  சில வலைப்பூக்கள், என்னுடையதையும் சேர்த்து, அன்டர் கன்ஸ்ட்ரக்ஷன் என்று பல வருடங்களாக அப்படி அப்படியே கிடக்கிறது.  சிமென்ட் செங்கல்லாம் இருந்தும் கட்டி முடிக்காமல் ஜல்லியடிக்கின்றன.

வலைப்பூக்களுக்குப் பெயர் வைப்பதில் எல்லோருமே தன் முழுத் திறமையையும் காட்டியிருப்பர்.  பிள்ளைக்குப் பேர் வைப்பதைவிட ப்ளாக்குக்குப் பேர் வைப்பதற்கு அதிக சிரத்தை எடுத்துக்கொண்டதாகத் தோன்றும். தலைப்புக்குக்கீழே ஒரு கோஷம் இருக்கும். அதில் நச்சென்று சிலரும் நசநசவென்று சிலரும் பஞ்ச் டயலாக் ஸ்டைலில் எழுதி வைத்திருப்பர்.  ஆயினும் அந்த கோஷத்திற்கும் பதிவுகளுக்கும் குறைந்த பட்சம் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கும்.  கவிதை வலைப்பூக்களில் பெரும்பாலும் பூ, நிலா, மழை, பெண் இவையில்லாமல் கவிதையே இருக்காது.  இதையும் தாண்டி சிலர் தம் நிலையை உண்மையிலேயே அறியாது வித்தியாசமாக எழுதுகிறோம் என்கிற பேரில் டபுள் ஸ்ட்ராங்காக எழுதி விடுவதால் எனக்கும் என் சுற்றத்திற்கும் நட்புக்கும்கூட புரிவதில்லை.  தமிழ் எழுத்துகளை தெளித்து வைத்தால் அது மொழியாகாது; புரிந்தாலே தமிழ் என்பதை யாராவது இவர்களுக்கு எடுத்துச் சொன்னால் வாசிப்பவருக்கு தலையில் முடி மிஞ்சும். 

திருட்டு விசிடியைப்போல சில ப்ளாக்’கள் பிறர் படைப்பைத் திருடி கீழே தம் பெயரைப் போட்டுப் பதிந்து வைத்துள்ளனர். பல பெண்களின் தளங்கள் பழக்க தோஷத்தால் ஆலங்கரிக்கப்பட்டு படு ஷோக்காக இருக்கும்.  தலைப்பூவைப்போல அழகாக தலைப்பு வைத்தாலும் வலைப்பூ வாசிக்க வருபவர்களுக்கு ஒரு களைப்பு வராமல் சுவாரஸ்யமாக வைத்திருத்தல் அவசியம்.

தத்தம் வலைப்பூக்களைக் கொண்டு வாட்ப்போர் போல சதாவும் பிரச்னைகளை கிளப்புவது தற்கால வலைப்பூக்களின் மற்றும் சமூக வலைதளங்களின் வாடிக்கையாகி விட்டது.  எதற்கெடுத்தாலும் பிற தளங்களைக் குறை சொல்வது, தன்னிச்சையாக இயங்கும் வலைஞர்களை வம்புக்கிழுப்பது, எந்த ஒரு சமூகச் செயல்பாடுகளிலும் தமக்கு என்றொரு நிலைபாடு இல்லாமல் பொத்தாம் பொதுவாக ஏனோதானோவென்று பதிவுகளை வெளியிடுவது போன்றவற்றால் ஊடகவியலைப் பற்றி ஒரு அடிப்படை ஞாயதர்மம்கூட அறியாமல் இருப்பது வேதனைக்குரியது.  தவிர, வெளியிடப்படும் வாழ்வியல், உளவியல் மற்றும் தத்துவப் பதிவுகள் வாழ்க்கையை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டுமேயொழிய ஒப்பாரி வைக்கச் சொல்வதாக இருக்கக் கூடாது. 

O0O0O0O0O0O0O0O0O0O0O0O0O0O0O0O0O

02) விபரீதம் – ஒரு மாதிரி உரையாடல்

-அஸ்ஸலாமு அலைக்கும் 

-வ அலைக்குமுஸ்ஸலாம். செளக்கியமா? பார்த்து நாளாச்சு?

-நல்லாருக்கேன். நீங்க எப்டி இருக்கீங்க? உங்களத்தான் பார்க்க முடியல

-என்ன பண்றது நாம் எல்லோருமே பொழப்புக்காகத்தானே பிரிஞ்சி கிடக்கோம். ம்..அப்புறம்?

-உங்க கிட்ட கொஞ்சம் பேசனும். எப்ப வீட்டுக்கு வர?

-என்ன விஷயம்?

-இல்ல நம்ம தவ்ஹீது பள்ளி கட்டுமான விஷயமாப் பேசனும்.

-அல்லாஹ்வோட பள்ளின்னு சொல்லுங்களேன்.

-அல்லாஹ்வோடதுதான். ஆனா, தவ்ஹீதுக்கென்று தனிப்பள்ளி காண்கிறோம்

-பொதுவாக அல்லாஹ்வோட பள்ளியென்று சொல்வீர்களேயானால் நான் இன்ஷா அல்லாஹ் ஒரு கணிசமானத் தொகைத் தருகிறேன். தவ்ஹீதுக்கென்று தனிப்பள்ளி என்று முழங்கினால், எல்லோரையும் போல ஒரு குறைந்த பட்ச தொகையையே நான் தர விரும்புவேன்.

-நாம் பிரியவில்லையே? அவர்கள்தானே பிரித்து வெளியே அனுப்பி விட்டார்கள். எங்களை உள்ளே அனுமதிக்கமாட்டோம் என்று அறிவிப்புப் பலகையே வைக்கிறார்களே?

-நீங்கள் பழங்கதை பேசுகிறீர்கள். இப்ப அப்படியெல்லாம் இல்லை. வேறு ஊர்களைப்பற்றி அவ்வளவாக என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், நம்ம ஊர்ல இல்லே.  யாரும் எந்தப் பள்ளியிலும் தொழலாம்.

-அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான்….

-நிறுத்துங்கள்.  அல்லாஹ் குர் ஆனில் என்ன சொல்கிறான் என்று எனக்கு விளக்காமாகத் தெரிவதற்கு முன்பிருந்தே பெற்றோர் வளர்ப்பில் நான் ஒழுக்கமான வாழ்க்கையையே வாழ்ந்து வந்துள்ளேன்.  இப்பவும் ஒரு பொது மேடையில் ஏறி தைரியமாக என்னால் அரைகூவ இயலும், “என் மேல் குற்றம் பிடிப்பவர், குறை சொல்பவர் யாரும் உள்ளனரா?” என்று. உங்கள் நிலை என்ன? பள்ளிக்குப் படிக்க அனுப்பினால் மட்டம் போட்டு படம் பார்க்கச் சென்றீர்கள், ஓத அனுப்பினால் ஒளிந்து கொண்டீர்கள், மீசை வருமுன் பீடி சிகரெட், கழிசடைகளோடு சேர்ந்துகொண்டு கள்ளு சாராயம், கல்யாணம் கட்டிக்கொடுத்தபின்பும் கண்டவளோடும் தொடுப்பு, இப்படித்தானே பகிரங்கமாக நீங்கள் என் கண்முன் வாழ்ந்து காட்டினீர்கள். மூத்தவரை மதிப்பதில்லை. ஒரு வக்த் தொழுவதில்லை; நோன்பு நேரத்திலும் குடிபோதை, ஒரு நல்ல செயல்? நல் வார்த்தை? ம்ஹூம்.  இப்படி வாழ்ந்த உங்களுக்கு நினைவிருக்கா நான் எப்படி வாழ்ந்தேன் என்பது? 

-ஒரு காலத்தில் தப்பு செய்தவர் திருந்தக் கூடாதா?

-திருந்தலாம். கண்டிப்பாகத் திருந்த வேண்டும்.  ஆனால், திருந்திய பிறகு, உங்கள் கண்களுக்கு முன்னாலேயே ஓர் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வருபவனுக்கு தவ்ஹீது என்னும் கட்டுக்குள் உபதேசம் செய்ய முயல்வதைவிட உங்களிடம் பண பலமும் உடல் பலமும் இருந்தபோது உங்களைச் சுற்றி கூடவே ஒரு கழிசடைக் கூட்டம் இருந்ததே, அவர்களையும் வழி கேட்டில் அழைத்துச் சென்றீர்களே அவர்களிடம் போங்கள்; உபதேசியுங்கள், நீங்கள் எட்டிய நேர்வழிக்கு அழைத்து வாருங்கள். நாம் யாவரும் சகோதரர்களே. நமக்குள் மார்க்க விஷயத்தில் மாற்றுக் கருத்துகள் ஏற்படும்போது கண்ணியமாக உரையாடுங்கள்.  நக்கலோடும் குத்தலோடும் எல்லாம் தெரியும் என்னும் இருமாப்போடும் ஏனையோரை முட்டாள்கள் என்று தீர்மாணித்து உரையாடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். நல்ல அழகிய முறையில் மனிதர்களை அனுகி புரியும்படி இலகுவாக மார்க்கத்தை எத்தி வையுங்கள்.  எல்லாவற்றிற்கும் மேலாக, நம் சகோதரர்களுக்குள் ஒற்றுமையை வளர்த்தாலே நம்மை எதிர் நோக்கியிருக்கும் ஆபத்திலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.  போய் வாருங்கள்.

~()~~()~~()~~()~~()~~()~~()~~()~~()~~()~~()~

3) குறி சொல்லவா குறி!

எல்லா உறவுகளும்
ஏதாவதொரு சந்தர்ப்பத்தில்
காற்புள்ளியோடு கலங்கியோ
அரைப்புள்ளியோடு தயங்கியோ
கேள்விக்குறியேந்தி
உம் வீட்டு வாசல் 
வந்து நின்றால்

ஆச்சர்யக்குறிகளில் பிணைத்துவைத்து
ஆணியடிக்காமல்
முறைத்து
முற்றுப்புள்ளியிடுமுன்
அவர்கள் கேள்விக்குறிக்கு
திருப்தியான
விடையளித்து விடைபெறவும்

மேற்கோள் குறிகளுக்குள் வைத்து
முகஸ்துதி பாடாமல்
அடைப்புக் குறிகளினுள்
அவமானப் படுத்தாமல்
தட்டை வரிகளால்
தரம்பிரித்தால் போதும்
பத்திபத்தியாய் நீளும் பாசம்

வாழத்தலைப்பட்டு
வழிநெடுக வாய்த்தக்
கூட்டல் குறிகளால்தான்
வாழ்க்கையில் 
பெருக்கல் குறிகள் வாய்த்தன

கழித்தல் குறிகளால்
காயப்படுத்துமுன்
வகுத்தல் குறிகளுக்குளிட்டுப்
பகுத்துப்பாருங்கள் 

இன்பம் 
ஈவு எனப் பொங்க
மீதியாக மிஞ்சும்
நிறைவான நிம்மதி!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

இத்தியாதி இத்தியாதி - வெர்ஷன் - 3 26

அதிரைநிருபர் பதிப்பகம் | November 28, 2013 | , , , , , , , , ,

குறுக்கம்:

அவனுக்கு இருபத்தியோரு வயதிருக்கும். பாகிஸ்தானியருக்கே உரித்தான நல்ல உயரமும் நிறமும் வசீகரமான முகமும் கொண்டவனாக என் முன் நின்றான்.  முகத்தில் தாடியாகவும் கிருதாவாகவும் அவன் வரைந்து வைத்திருந்த  நளினம் நவ நாகரிகத்தின் தன்மையதாக இருந்தது.  படிப்பறிவு கிடையாது என்பதை அவன் பார்வையும் தோரணையும் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

"உனக்குச் செய்து காண்பிக்கச் சொல்லும் சோதனையெல்லாம் கிடையாது. உன் அண்ணன் கம்ரான் ஏற்கனவே என்னிடம் பேசிவிட்டான். ஒழுங்காக நாளையிலிருந்து வேலைக்கு வா.  உன் பாஸ்போட் காப்பி மற்றும் ஒரு பாஸ்போட் சைஸ் புகைப்படமும் கொடு. விசா ஏற்பாடு செய்கிறேன்." என்று சொன்னதும்,

"நன்றி சார்ஜி" என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டான். 

அவனை எங்களின் பணிமனையில் ஸ்ப்ரே பெயின்ட்டராக வேலைக்குச் சேர்க்கச் சொல்லி ஏற்கனவே அவன் அண்ணன் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் ஊரில் ஊதாரியாகத் திரிவதாகவும் ஸ்ப்ரே பெயின்ட்டிங் தெரிந்து வைத்திருந்தும் ஓரிடத்தில் கூட தொடர்ந்து வேலை செய்வதில்லை என்றும், ஆகவே உதவுமாறும் ரொம்பக் கெஞ்சினதால், எங்களுக்கும் பெயின்ட்டர் தேவைப்பட்டதால் வரச் சொல்லியிருந்தேன். அப்படி விசிட் விசாவில் ஷார்ஜா வந்தவனிடம்தான் நாளை வருமாறு சொல்லி அனுப்பினேன்.

எங்கள் பணிமனையில் புல்டோஸர், வீல் லோடர், மோட்டர் கிரேடர், ரோட் ரோலர், கிரேன் போன்ற பலதரப்பட்ட கனரக எந்திரங்களையும் பழுது பார்ப்போம், டென்டிங் பெயின்டிங் செய்து புதுப்பிப்போம். அத்தகைய பணிமனையை நிர்வகிக்கும் பொறுப்பில் நான் இருந்ததால் என் கோரிக்கையின்படி அந்த கம்ரானின் தம்பி ரிஸ்வானுக்கு வேலை தர ஹெச் ஆர் ஒப்புக்கொண்டனர்.  விசா ப்ரொஸஸிங்கும் துவங்கியது.

விசா அடிக்கப்படும் வரை அவனை வேலைக்கு வரச் சொல்லி விட்டேன். எனவே, அவனும் தினமும் வேலைக்கு வரலானான். அவன் அண்ணன் கம்ரான் எனக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டான்.  

திடீரென ஹெச் ஆரிலிருந்து வந்த மின்னஞ்சலில் உடனே அவனை வேலையை விட்டு நிறுத்தும்படியும் ஹெச் ஆரை வந்து சந்திக்கும்படியும் சொல்லப்பட்டிருக்கவே என்ன ஏதுவென்று விசாரிக்கலானேன்.

விசா விண்ணப்பிக்க வேண்டிய ஷரத்களில் ஒன்றாகிய  மருத்துவ பரிசோதனையில் அவன் ஃபெயிலாகி விட்டதாகச் சொன்னார்கள்.  சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் விண்ணப்பிக்கலாமே என்ற என் யோசனையை மறுத்த ஹெச் ஆர் வெளியே சொல்ல வேண்டாம் அவனுக்கு ஹெச் ஐ வி பாஸிட்டிவ் என்று குண்டைத் தூக்கிப் போட்டனர்.  அவனிடமும் சொல்ல வேண்டாம். பாகிஸ்தான் போய் பரிசோதித்து விட்டு வரச்சொல்வோம் என்று தீர்மானிக்கப் பட்டது.

அவனிடம் அப்படியே சொல்லி ஊருக்குப் போய் சிகிச்சைச் செய்து குணப்படுத்திக் கொண்டு வா என்று சொல்லிவிட்டு அவனிடம் தனியாகக் கேட்டேன்,

"ரிஸ்வான், உண்மையைச் சொல். உனக்குப் பெண்கள் தொடர்பு உள்ளதா?"

"இல்லை சார் ஜி, எப்பவாவது நண்பர்களோடு ரண்டிகளிடம் செல்வதுண்டு"

"உன் வயதுக்கும் அழகுக்கும் நல்ல மனைவி கிடைக்கும் வரை உனக்குப் பொறுமை இல்லாது போனதே"

"ஏன் சார்ஜி, ஏதும் கெட்ட வியாதியா எனக்கு?"

"சரியாத் தெரியலப்பா. ஊருக்குப் போய் சோதித்துக் கொள்"

அவன் பாகிஸ்தான் போய்  7 வது நாள் அவன் அண்ணன் கம்ரான் அழுது கதறிக்கொண்டே வந்து எமர்ஜென்ஸி லீவ் கேட்டு நின்றான்.  ஏன் என்று வினவ, தன் தம்பி தற்கொலை செய்து கொண்டதாகவும் உம்மா தனியாக ஆறுதலின்றி தவிப்பதாகவும் சொன்னான். நெஞ்சுக்குள் எனக்கு என்னவோ செய்தது.  அவனை உடனே அனுப்ப ஏற்பாடுகள் செய்யச் சொல்லி ஹெச் ஆருக்கு தெரிவித்துவிட்டு ரொம்ப வேதனைப்பட்டேன்.

என்னாச்சு இந்த இளைய சமுதாயத்துக்கு.  எத்தனையோ விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டும் இப்படி மனித வாழ்க்கையை விட்டிலின் வாழ்நாளைப் போல சுறுக்கிக்கொள்கிறார்களே என்கிற ஆதங்கம் எனக்கு ஒரு வாரத்திற்கு சரியாகத் தூங்க விடாமல் வாட்டியது.  அந்தப் பையனின் முகமும் அதில் வரையப்பட்டிருந்த தற்காலிக கிருதா தாடியும் நிழலாடிக்கொண்டே இருந்தது.

ஹெச் ஐ வி பாஸிட்டிவ் மானிட வாழ்க்கைக்கு நெகட்டிவ் என்பதை மனிதன் என்றுதான் உணரப்போகிறானோ.

தப்பாட்டம்

அப்போது நான் துபை தேராவில் என் நண்பன் ஆடிட்டர் கபீரின் அறைத் தோழனாக இருந்து வந்தேன். நாங்கள் இருந்த மூன்றாவது மாடியின் பால்கனியில்தான் சின்னச் சின்னதாக உடற்பயிற்சி செய்வோம். காற்று வாங்குவோம், சபகா வீதியின் போக்குவரத்தை வேடிக்கைப் பார்ப்போம். மேலும், அங்கிருந்து பார்த்தால் சபகா ரோட்டின் அந்தப் பக்கமாக இருக்கும் ஹோட்டல்கள் தெளிவாகத் தெரியும்.


மற்ற நாட்களை விட வார இறுதி நாட்களும் விடுமுறை நாட்களும் மிகவும் புழக்கமாக இருக்கும்.  இரவு முழுதும் தேரா தூங்காது.  அப்படித்தான் ஒரு நாள் பால்கனியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு பெருநாள் தினத்தின் மாலை நேரம். அந்த ஹோட்டலில் புழக்கம் அதிகமாக இருந்தது.  நான் என் நண்பனை அழைத்து அதைக் காட்டி'" அங்கே என்னடா நடக்கிறது? " என்று கேட்டேன். அவன், " உனக்கு விளங்கலையா? ப்ராத்தல்டா. நான் சொல்றதெல்லாம் நடக்கிறதா இல்லையா என்று பார்" என்று வரிசையாகச் சொல்லத் துவங்கினான்.

"இப்ப பாரு அந்த பட்டான் அங்கே மருவிக்கொண்டே வர்ரானா. அந்த பங்காளியைப்பாரு அவனை அனுகுவான்"

அனுகினான்.

"ஒன்னும் பேசிக்க மாட்டானுக ஆனா ஹோட்டலுக்கு இவனை அவன் பின் தொடர்வான் பாரு"

தொடர்ந்தான்.

"கொஞ்ச நேரத்திலே வெளியே வந்து வேற கிராக்கி தேடுவான் பாரு"

வந்தான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு போவோர் வருவோரின் முகம் பார்க்கலானான்.

"இப்படித்தான் பார்ப்பானுக. யாராவது கொஞ்சம் இவனுகளை உற்றுப்பார்த்தால் கிட்ட வந்து கொக்கிப் போட்டுருவானுக. இது இங்கே சகஜம்டா.  ஒழுக்கமா இருக்க நினைப்பவர்கள் மட்டுமே இங்கே ஒழுக்கமா வாழ முடியும். எப்படியும் வாழ விரும்புபவர்களுக்கு துபை தேரா சொர்க்கம்டா" என்றான்.

எனக்கு நம் சமுதாயத்தை நினைத்து ரொம்ப வேதனையாக இருந்தது. அதுவும் ஈத் போன்ற நாட்களில் பீர் குடிப்பதும் விலை மாதர்களை நாடி போவதும் மிகவும் சகஜம் என்று கேள்விப்பட்டு கவலையாக இருந்தது

இப்படித்தான் ஒருமுறை ஒரு பச்சையிடம் (பாகிஸ்தானியரை இப்படித்தான் குறியிட்டு அழைப்போம்) " நீ தண்ணி அடிப்பியா?" என்று கேட்க அவன் சொன்னான், " நயி சார்ஜி, சிர்ஃப் ஈத்கா தின் பீயகா" என்றான்.  "ஏன்டா அது தியாகத் திருநாள்டா அன்னிக்கு ஏன்டா குறிப்பா குடிக்கிறீங்க?' என்ற என்னை விநோதமாகப் பார்த்துவிட்டு,

"தினமும் குடிக்கக்கூடாது சார்ஜி. ஈத் கா தின் குடிச்சே ஆகனும்" என்றான்.

மது மாது இரண்டிலும் மூழ்கி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் நம் சமுதாயத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயக் காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை எல்லோரும் உணர்ந்தாக வேண்டும்.  வெளியே சொல்ல பயந்தோ வெட்கப்பட்டோ  மறைத்தோமேயானால் புறையோடிப் போய் விடும் வியாதி இது.

மைய வாடிக்குச் செல்லும் வழி:

அந்த
வழிகாட்டிப் பலகையில்
அம்புக்குறியிட்டுக் காட்டும்
ஒரு வழிப் பாதையை
வாசிக்கும் நிலையில்
அவர் இருப்பதில்லை

அதற்கு முன்
பூடகமாகச் சொல்லப்பட்ட
மது 
முறையற்ற மாது
பழக்கங்களுக்கு எதிரான
எந்த எச்சரிக்கையையும்
புரிந்து கொள்ளும் நிலையில்
அவரை
வைத்திருக்கவில்லை அந்தப் போதை

சில்லரை இன்பங்களுக்காக
நிரந்தர சந்தோஷத்தை
இழந்துபோதல் அறிவா?

யாவற்றையும்
சடுதியில் முடித்துக்கொண்டு
சட்டென 
அற்ப ஆயுளில்
அடங்கும் அவசரம் ஏன்?

மென்று விழுங்கினாலே செரிக்கும்
மெல்ல அனுபவித்தாலே நிலைக்கும்

சுத்தம்
வயிற்றுக்கு மட்டுமல்ல
செயலில் சுத்தம்
வாழ்நாள் முழுக்க
சோறு போடும்

மது மாது வாயிலாக
மைய வாடியிலிருந்து வரும்
அத்துணை அழைப்பிதல்களையும் 
நல்லமல்களைக் கொண்டுப்
புறக்கணியுங்கள்
நிர்ணயிக்கப் பட்ட
நெடும் பயணக் 
காலம் வரும் வரை!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

இத்தியாதி இத்தியாதி - Version 2 33

அதிரைநிருபர் பதிப்பகம் | October 10, 2013 | , , , ,

திக்...திக்…!

"ஹெல்ப்..." 

"ஈஸ் எனிபடி அவுட் தேர்...?"

நான்காவது தடவையாகக் கத்திக் கத்திக் கூப்பிட்டும் ஒரு பதிலும் வராததால் லேசாக பயம் தொற்றிக் கொண்டது. கூவிக் கூப்பிட்டாலும் எதிரொலி கேட்குமளவிற்குப் போதுமான இடைவெளி சுவர்களுக்கிடையே இல்லாததால் சுரத்து இல்லாத ஓர் அபயக் குரலாக நமத்துப்போய் ஒலித்தது என் குரல். 

என்னை மெல்ல மெல்ல அச்சம் சூழ்ந்து கொள்ளத் துவங்கியது. செய்வதறியாது தவித்த என்னை உலுக்கியெடுத்தது என்னைச் சுற்றி நிலவியத் தனிமையும் மயான அமைதியும். முகத்தில் பீதி பரவ கவலையுறலானேன். எதிர்மறை எண்ணங்கள் ஆட்கொள்ளத் துவங்க, வாழ்க்கை இத்துடன்  முடிந்தது என்று உள்மனம் ஓயாது ஒலித்துக் கொண்டிருந்தது.  உதவி கிடைக்கும் என்கிற உத்தரவாதம் சற்றும் இல்லாத சூழ்நிலையில் வசமாக மாட்டிக்கொண்டது புரிந்தது.

சம்பவம் நடந்தது இரண்டாயிரத்து ஆறில். அப்போது நான் ஒரு ஸ்டூடியோ ஃப்ளாட் என்றழைக்கப்படும் ஒற்றையறைக் குடியிருப்பில் முதல் தளத்தில் தனியாக வசித்து வந்தேன். ஜீகோ ரவுண்டபவ்ட் என்னும் பரிச்சயமான இடத்தில் ஷார்ஜாவின் தொழில்நகரப் பகுதியில் இருக்கிறது நான் வேலை செய்யும் நிறுவனமும் அதையொட்டி அமைந்துள்ள குடியிருப்பும். போக்குவரத்துக்காக கணிசமான தொகையும் நேரமும் செலவு செய்யும் அமீரக நடைமுறைக்கு மாற்றமாக நான் வேலை முடிந்த மூன்றாவது நிமிடத்தில் வீட்டுக்குப்போய் விடுவேன்.

அப்படித்தான் அன்றைக்கும் வேலை முடிந்தவுடன் மாலை 06:00 மணிக்கு வீட்டுக்குப்போய் வாயிற்கதவைத் திறந்து உள்ளே போனதும் சாவிகொண்டு கதவை பூட்டிவிட்டு, அனிச்சையாகவே தொலைக்காட்சிப் பெட்டிக்கு உயிர் கொடுத்து விட்டு உடை மாற்றிக் கொண்டேன். குளியலறைக்குச் சென்று கைகால் முகம் கழுவி கொஞ்சம் புத்துணர்வு பெறலாம் என்று குளியலறைக் கதவைத் திறந்து…உள்ளே போய்… கதவைச் சாத்த… சாத்தும் போது கதவின் பூட்டுக்குள் இருந்து ஏதோ உதிரிபாகங்கள் கழன்று உள்ளுக்குள்ளேயே விழுவது போல் சப்தம் கேட்க…’நாம்தான் பூட்டவில்லையே, சாத்தித்தானே வைத்திருக்கிறோம்’ என்று அலட்சியமாக விட்டுவிட்டு முகம் கழுவத் தொடங்கினேன்.

திறந்தவெளியில் கனரக எந்திரங்களோடான என் பணியில் சூடும் தூசும் அன்றாட வாழ்க்கையில் நான் அனுபவிக்கும் அம்சங்கள், ஆதலால் தொழுகை நேரங்களில் ஒலூச் செய்வதும் வீட்டுக்கு வந்ததும் குளிர்ந்த நீரில் கைகால் முகம் கழுவுவதும் எனக்கு மிகுந்த ஆறுதலையும் புத்துணர்வையும் கொடுக்கும்.  ஆனால், அன்று அந்தப் புத்துணர்வு சற்று நேரம்கூட நீடிக்கவில்லை.

குளியலறையை விட்டு வெளியே வருவதற்காக நீர் சொட்டச்சொட்டக் கதவின் கைப்பிடியை அலட்சியமாகத் திருக அது எந்த உட்பிடிப்போ எதிர்விசையோ காட்டாமல் இலகுவாகத் திருகியது, ஆனால்… கதவு திறக்கவில்லை.  மீண்டும் மீண்டும் திருகத்திருக ஒன்றுமே நகரும் அல்லது திறக்கும் சப்தம் கேட்காததால் சற்று நிதானித்து மெல்லமெல்ல பல கோணங்களிலும் கைப்பிடியை அமைத்துத் திருகினேன்.  ம்ஹூம்… லேசான குழப்பத்தோடு தொடர்ந்து செய்த முயற்சியின் முடிவில் ஒன்று தெளிவாக விளங்கியது.  அது என்னவென்றால், கதவின் பூட்டில் ஏதோ ஒரு போல்ட்டோ ஸ்க்ரூவோ லூசாகி, உள் உபகரணங்கள் கழன்று, பூட்டு தானாகவே உள்ளே பூட்டிக் கொண்டது.

பூட்டிக்கொண்டது என்பது உரைத்ததும் மாட்டிக்கொண்டேன் என்பதும் புரிந்தது.  எனக்கு அது ஒன்றும் சட்டென்று பெரிய விபரீதமாகப் படவில்லை.  ஏதாவது ஸ்குரூ ட்ரைவரோ ஸ்பானரோ இருக்கிறதா என்று தேடினேன்.  குளியல் சாமான்களையும் ஷேவிங் ரேசரையும் தவிர வேறு எந்த சாமானும் இல்லாமல் மிகச் சுத்தமாக வைத்திருந்தேன் பாத் ரூமை.  கத்தியோ வேறு எந்த இரும்பு உபகரணமோகூட இல்லையென்றதும் எப்படி கதவைத் திறப்பது என்பது கவலையளித்தது.  

அன்று வியாழக்கிழமை என்பதால் நான் உள்ளேயே இருந்தாலும் கம்பெனியில் யாரும் என்னைச் சனிக்கிழமைவரைத் தேடமாட்டார்கள். இந்த எண்ணம் உதித்ததும் மனம் பயத்தில் அதிர்ந்தது. வெற்று அறைக்குள் சன் ட்டிவி செய்தி வாசித்துக்கொண்டிருப்பது சன்னமாகக் கேட்டது.  கைபேசிகூட அறையில் மேசைமேல் வைத்திருந்தேன். வெளியே போகாமல் அதைக்கொண்டு எந்த உதவியும் நாட முடியாது. என்ன செய்வது?

அந்தக் குளியலறை ஒன்றரைக்கு இரண்டு மீட்டர் சதுர அளவில் மட்டுமே இருக்கும், குறுகலானது. ஒரே ஒரு எக்ஸாஸ்ட் ஃபேனைத்தவிர வேறு எந்த ஜன்னலோ திறப்போ இல்லாதது.  சிட்டவுட்டின்மேல் ஏறிநின்று அந்த எக்ஸாஸ்ட் ஃபேனின் வழியாக சப்தம் போட்டேன்.  அங்கிருந்துதான் இந்தக் கட்டுரையும் தொடங்குகிறது. 

நிதானம் இழக்கக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.  இங்கே மாட்டிக்கொண்டு சாவதைவிட வேறு ஏதாவது முயற்சி செய்தே ஆகவேண்டும் என்று தீர்மாணித்தேன்.  பாத்ரூமின் உள்ளே வரும்போது வெளிச்சம் இருந்ததால் வெளியில் உள்ள குளியலறை விளக்கிற்கான ஸ்விட்ச்சைப் போடாமல்தான் வந்திருந்தேன்.  நேரம் ஆக ஆக வெளிச்சம் மங்கி பாத்ரூமிலும் இருள் சூழ்ந்தது. கட்டுரையின் இந்த இடத்தில் “தொடரும்” போடுமளவுக்கு எனக்கு பயமாக இருந்தது.  

கதவை எட்டி உதைக்க அது மிக கடினமாக இருந்து அசைந்து கொடுக்கவில்லை. அடி உதைகளை வாங்கிக்கொண்டு அலுங்காமல் குலுங்காமல் அப்படியே இருந்தது.

முதல் முயற்சியாக, கைப்பிடியை பலம் கொண்டமட்டும் பிடித்து இழுத்துப்பார்த்தேன்.   இழுத்தால் என்னாகும் எதற்காக இழுக்கிறேன் என்றெல்லாம் யோசிக்கவில்லை, இழுத்தேன்…இழுத்தேன்.  ஆட்டி அசைத்து இழுக்க ஒரு பலம்பொருந்திய இழுப்பில் கைப்பிடி கையோடு வந்தது.  நானும் இழுத்த வேகத்திற்கான உந்து விசையோடு பின்னால் இருந்த வாஷ்பேஸனில் இடித்துக்கொண்டு கீழே விழாமல் தப்பித்தேன்.  கைப்பிடி இருந்த இடத்தை உற்றுநோக்கி ஆராய்ந்ததில் ஒன்றுமே புரியவில்லை.  விரலைவிட்டுத் துலாவினேன்.  ஏதேதோ தட்டுப்பட இழுத்துப்பார்த்தேன்.  எதுவும் வரவில்லை, பயத்தைத்தவிர. அறைக்குள் “ஆணியே புடுங்க வேணாம்” என்று ஏதோ ஓடிக்கொண்டிருந்தது.  முகத்தில் ஈயாடவில்லை; சிரிப்பு எங்கிருந்து வரும்?

முதல் முயற்சியில் தோற்று இரண்டாவதாக கதவின் அடிப்பாகத்திலிருந்து வந்த வெளிச்சம் எனக்கு களங்கரை விளக்காகத் தெரிய அதன்கீழ் விரல்களை விட்டு மேல்நோக்கி நெம்பிப்பார்க்கலாம் என்று முயன்றேன்.  அந்த இடுக்கு என் விரல் புகும் அளவுக்கு திறந்தில்லாமல் சிறியதாக இருந்ததால் விரலும் வலிக்க தலையும் மெல்ல வலிக்கத் துவங்கியது.  அப்படியே சிட்டவுட்டின் மூடியில் உட்கார்ந்து தலையைப் பிடித்துக் கொள்ளவும் எங்கோ போடப்பட்ட விளக்கின் வெளிச்சம் எக்ஸாஸ்ட் வழி சற்றே என் பாத்ரூமுக்குள் வரவும் சரியாக இருந்தது.  அந்த வெளிச்சத்தில் அப்பத்தான் பார்ப்பதுபோல் கதவைப்பார்த்தேன். பலகை தண்ணீர்பட்டு வீணாகாமல் இருக்க அலுமினிய தகடு பொறுத்தி கதவின் கீழ்பாதியில் பொடி ஆணி வைத்து அடித்திருந்தார்கள்.  பொடி ஆணி! கழட்டுவது சுலபமாயிற்றே என்று பொறி தட்ட, மூன்றாவது முயற்சிக்கான துவக்கம் கிடைக்க, ஆரம்பித்தேன்.

ஆணி அடிக்கப்படாத விளிம்புகளில் கதவின் மரப்பலகைக்கும் அலுமினியத் தகட்டுக்கும் இடையே இருந்த வெடிப்புப்போன்ற பகுதியை மெல்லமெல்ல நெம்பினேன்.  விட்டுவிட்டு வேகமாக நெம்ப முதல் ஆணி தெரித்து விழுந்தது.  தொடர்ந்து அடுத்தடுத்த ஆணிகளும் தெரித்து விழுமளவுக்கு விட்டுவிட்டு இழுக்க அலுமினியத் தகடு கையோடு வந்துவிட்டது.   சுதாரித்து மேற்கொண்டு என்ன என்று பார்க்க, கதவின் ப்ளைவுட் என்னைப்பார்த்து ‘பெப்பே’ என்பதுபோல் இருந்தது. முழுக்கதவும் மதில்சுவர்போல் என் முல் நின்றது.  மறுபடியும் இனி ஒன்றும் செய்யமுடியாது என்று ஆனவுடன் ஆண்டவன் கொடுத்த பற்கள் மட்டுமே ஆயுதம் எனக் கொண்டு நான்காவது முயற்சியைத் தொடங்கினேன்.

ப்ளைவுட்டை பலம்கொண்ட மட்டும் பற்களும் உதடுகளும் வலிக்க வலிக்க கடித்தேன். தேங்காய் துருவுவதுபோல் பிராண்டினேன்.  20 நிமிட முயற்சியில் ப்ளைவுட்டின் நான்கைந்து இழைகளைக் கடித்துத் துப்பிவிட்டு, அலுமினிய தகட்டை கூறாகச் சுற்றிக்கொண்டு அதை அந்த ப்ளைவுட்டின் ஓட்டை வழியாக உள்ளே விட்டு நெம்பி... நெம்பி... ரெண்டடிக்கு ரெண்டடி அளவிலான பலகையை பெயர்த்து எடுத்துவிட்டேன். அன்றுதான் கதவின் உட்கட்டமைப்பு எனக்கு முழுக்கத் தெரிந்தது.  மரச்சட்டங்களைக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக பொறுத்தி  இப்புறமும் அப்புறமும் ப்ளைவுட் கொண்டு மூடி வடிவமைத்திருந்தார்கள்.  இப்போது கதவு பலகீனப்பட்டுப் போயிருந்ததால் மனதிற்கும் கொஞ்சம் தெம்பு வந்துவிட்டிருந்தது.  கீழே அமர்ந்து இரண்டு கைகளையும் பின்னால் ஊண்றிக் கொண்டு இரண்டு கால்களாலும் சட்டத்தை எட்டி உதைய சட்டமும் அப்புறத்து ப்ளைவுட்டும் தடார் புடார் என்று உடைந்தன.  நான் வெளியேறும் அளவிற்கு ஓட்டைக் கிடைத்ததும் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லிக்கொண்டே வெளியேறி, கம்பெனியின் கார்ப்பென்டருக்கும் ஃபோன் செய்தபோது மணி 10:40 ஆகிவிட்டிருந்தது.

இந்தப் பொறியில் சிக்கிய நாள் என் வாழ்நாளில் மறக்கமுடியாத திக்…திக்…!

******

ட்டானும் ஞ்சாபியும்”

“நாங்கமட்டும் பாகிஸ்தானில் ஆட்சிக்கு வந்தால் எங்கள் நாட்டை சொர்க்க புரியாக்கி விடுவோம்” என்று மார்தட்டிய பாக்கிஸ்தானியப் பட்டானைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.   பக்கத்திலிருந்த பாக்கிஸ்தானிய பஞ்சாபி, “யார் உங்களை வரவேண்டாமென்றார்கள். நீங்கள்தான் படிக்கவே மாட்டேன்கிறீர்களே” என்று கலாய்க்க, பேச்சு வலுத்துக்கொண்டே போனது.  ஒரு நேரத்தில் பட்டானை போகச்சொல்லிவிட்டு பஞ்சாபியிடம் கேட்டேன், “ ஏன் இவர்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்க மறுக்கிறீர்கள்?” என்று.

“நாங்கள் மறுக்கவில்லை சபீர் பாய். இவர்களுக்கு உடல் வலிமை கூடுதல் ஆனால், மூளை குறைவு” என்றான்.

“எதை வைத்து அப்படி சொல்கிறாய்?”

“எங்கள் ஊரில் பஞ்சாபி, பட்டான் ஆகிய இரண்டு வம்சாவழியினரும் வசிக்கிறோம்.  ஒரு முறை…” என்று அவர் சொன்ன சம்பவம் உண்மையா பொய்யா என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் சொல்லிவிடுகிறேன்.

ஒரு முறை நம்ம பட்டான் வீட்டில் ஒரு திருடன் புகுந்து விட்டான்.  நம்ம பட்டான் அவனை சாதுர்யமாகப் பிடித்து கட்டிப் போட்டுவிட்டான்.  கட்டும்போதே, “ நீயும் பட்டான் நானும் பட்டான். தெரியாமல் திருட வந்து விட்டேன். என்னை விட்டு விடு” என்று சொன்ன திருட்டு பட்டானை விட மறுத்து விட்டார் நம்ம பட்டான்.  திருட்டுப் பட்டானின் கைகால்களைக் கட்டிப்போட்ட கையோடு போலீஸில் சொல்ல வெளியே கிளம்பினார் நம்ம பட்டான்.

உடனே திருட்டு பட்டான், “ அதுதான் கால்களைக் கட்டிப் போட்டு விட்டாயே. நான் தப்பித்து ஓடி விடமுடியாதே. பிறகு ஏன் கைகளையும் கட்டிப் போட்டாய். கைக்கட்டையாவது  அவிழ்த்து விடு” என்று கெஞ்சினார். திருட்டுப்பட்டான் சொன்னதில், கால்கள் கட்டப்பட்டால்தான் ஓட முடியாது என்கிற நியதி இருந்ததால், நம்ம பட்டான் கைக்கட்டை அவிழ்த்து விட்டுவிட்டு போலீஸூக்குப் போனார்.

போலீஸில் எல்லா விவரத்தையும் சொன்னவர் கைக்கட்டை அவிழ்த்து விட்டதையும் சொல்ல, பஞ்சாபி போலீஸோ, “அட மடையா, கைக்கட்டை ஏன் அவிழ்த்து விட்டாய். தன் கைகளைக்கொண்டு கால் கட்டையும் அவிழ்த்துக்கொண்டு ஓடிப்போயியிருப்பானே?” என்று அலுத்துக்கொண்டார். ஒரு கணம் தடுமாறிய நம்ம பட்டானோ சுதாரித்துக் கொண்டு, “இல்லை இல்லை, நீங்க வாங்க, அவன் அங்கேதான் இருப்பான். வந்து கைது செய்யுங்கள்” என்று கட்டாயப்படுத்த போலீஸோ மறுத்தார், “வர முடியாது. அவன் போயிருப்பான். போடா முட்டாளே” என்றார். நம்ம பட்டானோ, “ அவன் போயிருக்க மாட்டான். வாருங்கள்” என்று மீண்டும் மீண்டும் சொன்னதால், “ நீ எதை வைத்து அவன் தப்பியிருக்க மாட்டான் என்று சொல்கிறாய்?” என்று கேட்க, “ தன் கட்டப்படாத கைகளால் கால்கட்டை அவிழ்ப்பான் என்று எனக்குத் தோன்றாதது அவனுக்கும் தோன்ற வாய்ப்பில்லை. ஏன்னா, நானும் பட்டான் அவனும் பட்டான்.” என்றார்.

சரி போய்த்தான் பார்ப்போமே என்று கிளம்பி பட்டான் வீட்டுக்குப் போனார் போலீஸ்.  அங்கே….

திருட்டுப் பட்டான் கால்கள் கட்டப்பட்ட நிலையில் முழங்கால்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு பரிதாபமாக அதே இடத்திலேயே உட்கார்ந்திருந்தார். 

*-*-*-*-*-*-* 

னதூர்…ன் க்கள்!

வெயில் தெளித்து
நிழற் கோலமிட்ட
முதிர்க்காலை நேரத்து முற்றம்

மழை ஓய்ந்து
மணல் காய்ந்தும்
உதிராமல் சிதறாமல்
உலர்ந்திருந்த 
சக்கரங்கள் பதித்த
முப்பரிமாணத் தடங்கள்

வானவில் உடைந்து
வாசலிற் சிதறியதுபோல்
வர்ணங்களோடு
தானியம் கொத்தும் கோழிக்குஞ்சுகள்

செங்குத்தாக விழுந்து
உணவு கொத்தும்
மீன்கொத்திகள் பறந்துதிரியும்
குளங்கள்

ஒழுகும் 
கூரை வழியே
மழை நிரப்பியப் பாத்திரங்களைப்போல்
தூய எண்ணங்களால்
மனம் நிரம்பி வழியும் 
என் ஊர்க்காரர்கள்

அன்றாட வாழ்க்கையில்
அடிக்கடி கடக்க நேரும்
மைய வாடிகள்
வாழ்க்கையின் இலக்கை
நினைவுருத்திக் கொண்டிருக்க

குரல்வளம் செழிக்கக்
கூட்டுப் பிரார்த்தனையையொத்த
பாங்குகளினோசையிலும்

எம் 
குலத்தின் சோற்றிலும்
குளத்தின் சேற்றிலும்
களத்தின் காற்றிலும்
நிலத்தின் ஆற்றிலும்
உளத்தை உருக்கும்
உணர்வுகள் ஊறிக்கிடக்க
எனதூர் எனக்குயிர்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

இத்தியாதி இத்தியாதி...! [கட்டற்ற கலக்கல்] 45

அதிரைநிருபர் பதிப்பகம் | October 01, 2013 | , , , , , ,

இன்ன கட்டுக்குள் அடங்கிவிடும் என்று சொல்லவிட இயலாத சில விஷயங்களை இப்படியொரு தலைப்பின்கீழ் பார்த்துவிடலாம் என்று எண்ணி இறங்கியாயிற்று, பார்க்கலாம்.

முதலில் ஒரு பழைய நினைவு:

தலைப்பு: “ஙே !!! “

கைகால் வலிக்குக் ‘கோடாலி’த் தைலம் மற்றும் பச்சைத் தைலம் ஆகியவற்றைப்போல, கொஞ்சம் கூடுதல் உபாதைகளுக்கு நிவாரணமாக நான் என் நண்பர் முகமதலியை உபயோகிப்பதுண்டு. அப்படித்தான் ஒரு முறை பட்டுக்கோட்டையின் பாழாய்ப்போன தூசு மண்டலச் சுற்றுச் சூழலில், ஊரிலேயே சுலபமாகக் கிடைக்குக்கூடிய ஒரு பொருளைத் தேடி அலைந்ததில் ஜலதோஷம் இருமல் என்று தொண்டையையும் தொண்டை சார்ந்த பகுதிகளையும் தொற்றுநோய் தாக்கி கஷ்ட்டப்பட்டேன்.

உள்ளூர் மருத்துவரின் ‘காப்பி பேஸ்ட்’ மருந்துச் சீட்டும் பிருஷ்ட்டத்தில் ஊசியும் சுடுகஞ்சியும் வெப்பத்தைச் சற்றே குறைத்தனவேயன்றி பூரண குணம் தரவில்லை.  உபரியாக ஊசி போட்ட இடத்தில் வலி வேறு. இனிமையாகப் பேசக்கூட முடியாத அளவிற்கு வாய் கசந்தது. ஸ்ட்டீரியோஃபோனிக் இருமல் எந்த ரிதமுமின்றி தாறுமாறான ட்டெம்ப்போவில் ஒலித்ததால் எனக்கே எரிச்சலைத் தந்தது.

நம்ம அலிதான் தஞ்சாவூருக்கு அழைத்துப் போய் அந்தச் சிறப்பு மருத்துவரிடம் காட்ட வைத்தார். அந்த சி.மருத்துவர் மேலோட்டமாகப் பரிசோதித்துவிட்டு, "சிகரெட் பிடிப்பீர்களா?" என்று கேட்டுவிட்டு "ஆம்" என்றதால், "இது வேறொண்ணுமில்லே, 'ஸ்மோக்கர்ஸ் ப்ரொங்க்கைட்டிஸ்தான்' என்று சொன்னார். சொன்னவர் மருந்து எழுதித்தராமல் அவர்தம் பங்காளி லேபுக்குப் போய் சில மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துவரச் சொல்லி எழுதிக் கொடுத்தார். அப்படி எழுதும்போது அவர் கண்களில் பளிச்சிட்ட இலச்சிணையை வரைந்து அனுப்பியிருந்தால் இப்போதுள்ள ரூபாய்க்கான இலச்சிணைக்குப் பதிலாக நம்முடையதுத் தேர்வாகியிருக்கும், அந்த அளவுக்கு கரன்ஸி பளிச்சிட்டது அவர் கண்களில். நாங்களும் எல்லாச் சோதனைகளும் செய்துகொண்டு முடிவுகளோடு வந்தோம்.

இந்த இடத்தில் அந்த மருத்துவரின் பரிசோதனை அறையின் வடிவமைப்பு எப்படி இருந்தது என்று சொல்வது மிகமிக அவசியம். அவர் நோயாளிகளைப் பரிசோதிக்கும் அறையில் ஒரு தடுப்புத்திரை அமைந்திருக்கும். அதற்கு இந்தப் பக்கமாக அடுத்த நோயாளி காத்திருக்க அந்தப் பக்கம் புது நோயாளியைப் பரிசோதிப்பார்.

நாங்களிருவரும் காத்திருக்கும்போது அப்படித்தான் ஒரு புது நோயாளியை டாக்டர் பரிசோதித்துக் கொண்டிருக்க, டாக்டருக்கும் அந்த நோயாளிக்கும் இடையே நடந்த சம்பாஷனை எங்களுக்குத் தெளிவாகக் கேட்டது.

"சொல்லுங்க, என்ன செய்யுது?"

"நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல். ஒரு வாரமா அவதிப்படுறேன் டாக்டர்"

"டெஸ்ட் எழுதித்தாரேன். பார்த்திட்டு வந்துடுங்க, மருந்து சாப்பிட்டாச் சரியாயிடும்"

"ஒன்னும் பயப்படற மாதிரி இல்லையே டாக்டர்?"

"அதெல்லாம் ஒன்னுமில்லே. இது ஸ்மோக்கர்ஸ் ப்ரொங்க்கைட்டிஸ். சிகரெட்டை குறைச்சிடுங்க"

"......”

"என்ன? சொல்றது புரியுதா? சிகரெட்டைக் குறைச்சாத்தான என்னால் குணப்படுத்த முடியும்"

"ஆனா டாக்டர்..."

"என்ன? சொல்லுங்க"

"நான் என் ஆயுளுக்கும் இதுவரை சிகரெட்டோ பீடியோ பிடிச்சதே இல்லையே!!!"

நானும் அலியும் ஒரே ஒரு எழுத்தின் பக்கத்தில் மூன்று ஆச்சரியக் குறிகள் போட்டுப் பார்வையைப் பரிமாறிக்கொண்டு பேந்தப்பேந்த விழித்தோம்.

" ஙே !!! "
*******************************

தலைப்பு: ‘சீ!’

ஓர் இழுப்பு இழுத்துக் கொண்டே லொக்கு லொக்கு என்று இருமி, "இந்தச் சனியனை விடவே முடியலையே" என்று அலுத்துக் கொள்பவர்களைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கும். ஏனெனில், நானும் அப்படியொரு அவஸ்த்தையைப் பலகாலம் அனுபவித்திருக்கிறேன்.

ஒரு நாளைக்கு 20க்கு மேல் மால்பரோ ஒயிட்ஸ் பிடித்து வந்த காலங்களில் அந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று நான் செய்யாத முயற்சிகள் இல்லை, எல்லாம் ஜெயிப்பதுபோல் தோன்றி, வெற்றியைக் கண்ணில் காட்டி படாரென மீண்டும் தலைகுப்புற கவிழ்த்துவிட்டுவிடும் சக்தி வாய்ந்த கெட்ட பழக்கம் ஸ்மோக்கிங்.

இப்போது நினைத்துப் பார்த்தாலும் சிரிப்புத்தான் வருகிறது. புகை பிடிக்கும் பழக்கத்தால் நிறைய அவதிப்பட்டு விட்டதால் அதை விடுவதற்காக என்னென்னவெல்லாமோ செய்து பார்த்துவிட்டேன்.  ஒரேயடியாக விட முடியவில்லை. அந்த ‘அர்ஜ்’ ஏற்பட்டவுடன் நாக்கின் உணர்வு மொட்டுகள் அவற்றின் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு நிக்கோட்டினுக்காக ஏங்கி நிற்கும்.

ஆதலால், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தால் நிக்கோட்டினின் தீவிரம் குறைந்து விட்டுவிட சுலபமாகும் என்று எண்ணி திட்டம்போட்டு கட்டம்போட்டு குறைத்தேன். 7 மணிக்கு ஒன்று 8 மணிக்கு ஒன்று என்று துவங்கி மெல்ல மெல்ல 7க்கு ஒன்று என்றால் 7:30க்கு அடுத்தது என்று இடைவெளியைக் கூட்டிக்கூட்டி வந்தேன். இரண்டு குழந்தைகளுக்கு இடையே நல்ல இடைவெளி விடச்சொல்வார்கள்; நானோ இரண்டு சிகரெட்களுக்கு இடையே நல்ல இடைவெளி விட்டு அடுத்தடுத்த வெண்சுருட்டுகளைத் தாமதித்தேன். இப்படியாக ஒரு சமயத்தில் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 என்று குறைந்ததும், ‘இதோ இப்ப விட்டுவிடப் போகிறோம் என்கிற நேரத்தில்’ வாரக் கடைசி நாளாகிய ஏதாவது ஒரு வியாழக்கிழமை இரவில், ரெட்டுக்கு ஃபாலோ போடமுடியாத கேரம் போர்டோ; ரம்மி செட்டாகாத சீட்டுக்கட்டோ  மீண்டும் ஒரு பாக்கெட்டில் கொண்டுபோய் நிறுத்திவிடும்.  ப்ரோஜக்ட் படுதோல்வி அடைந்து நிக்கோட்டினின் அராஜக ஆக்ரமிப்பு கோலோச்சும்.  நேரம் குறைத்துக் குறைத்து பிடித்துவந்த சிகரெட் கணக்குகளின் குறிப்புச் சீட்டு என் சட்டைப்பையில் எஞ்சியிருக்க, மீண்டும் துவங்கும் திட்ட அமலாக்கம்.

என்னதான் செய்ய? விட முடியவில்லையே என்கிற ஆதங்கம் பாடாய்ப் படுத்தியது.  இந்நிலையில்தான் கதையில் ஒரு ட்விஸ்ட் வந்தது.  என்னவென்றால், தேரா துபையில் ஒரு வருட காலம் பிரம்மச்சாரிய வாழ்க்கை வாழ்ந்து வந்தபோது உடல்நிலை சரியில்லாமல் ஸ்மோக்கர்ஸ் ப்ராங்கைட்டிஸ் வந்து முதல் இத்தியாதியில் பட்ட அவதிகள் எல்லாம் பட்டேன். வேலைக்குச் செல்லாமல் விடுப்பெடுத்து தலை கிளப்ப முடியாமல் கிடந்தபோது கீழே போய் சிகரெட் வாங்கக்கூட முடியாமல் போனது.  சற்றே குணம் கிடைத்து சிகரெட் நினைப்பு வந்தபோது மூன்று நாட்களாகிவிட்டிருந்தது.  ‘அட! மூன்று நாட்களாக நான் ஸ்மோக் பண்ணலையா?’ ஆச்சரியமாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது.  ‘இன்னொரு நாள் இருந்து பார்ப்போமே’ என்று நான்காவது நாளையும் கடந்தபோது வெற்றி என்னைத் தழுவிக்கொண்டது.  சிகரெட்டை விட்டுவிட்டேன். ஹுர்ரே!

சிக்ரெட்டை விட்ட பிறகு எப்போதுமே சுவாசித்துக் கொண்டிருந்த கார்ப்பரேஷன் குப்பைலாரி வாடை மறைந்து போனது, நன்றாகப் பசித்தது, உணவு ருசித்தது, சுறுசுறுப்பு கூடிப்போயிற்று.   காரிலும் அலுவலகத்திலும் காற்றில் நறுமணம் இருந்தது.  வாழ்க்கை சலவைசெய்ததுபோல் தூய்மையாகவும் சுத்தமாகவும் இருந்தது.  உதடு மெல்லமெல்ல கருமை இழந்து ப்பிங்க்கானது.  கையோடு, பல் ஆஸ்பத்திரிக்குப் போய் பற்களை தூர்வாரி தார் நிக்கோட்டின் ஆகியவற்றை சுரண்டியெடுத்து புதைந்துபோயிருந்த பல்லின் ஒரிஜினல் நிறத்தைப் மீட்டெடுத்தேன். அதற்குப் பிறகு சிரிக்கும்போது தன்னம்பிக்கை கூடிப்போய்விட்டிருந்தது. 

புகையே பிடிக்காதவர்களால் அனுமானமாக புத்திதான் சொல்ல முடியும்.  புகைபிடித்து அவதியுற்றுப் பின்னர் விட்டவர்களால்தான்  அதன் சாதக(?) பாதகங்களை அனுபவரீதியாக விளக்கிச் சொல்லி , தற்போது இந்தப் பழக்கத்தில் இருப்பவர்களை மீட்க முடியும்.  சிகரெட்டை விட்டப் பிறகு மேற்சொன்ன சாதகங்கள் மட்டுமல்ல, இன்னும் வெளியே சொல்ல கூச்சப்படுமளவுக்கு நன்மையான  மேட்டர்ஸும் உண்டு.  காதைக் கொடுங்கள் சொல்கிறேன். 

“வாணாம்பா. விட்டுடுங்கப்பா...சீ!"

*******************************

தலைப்பு: “தீ”

சிகரெட்
விரலிடுக்கில் சிக்கிய வாழ்க்கை
நசுக்கப்படுவது உறுதி!

உதடுகளில் வாழும் உயிர்
உமிழப்படுவது உறுதி!

புகைப்பவருக்குள் புழங்கும் பூதம்
புண்ணாக்கப் போவது உறுதி!

ஆக்ஸிஜனை அசிங்கப்படுத்தும் அருவருப்பு
அணுஅணுவாய் அரிக்கப்போவது உறுதி!

சிகரெட்
சில்லரையாகச் செலவு வைத்து
மொத்தமக மூழ்கடிக்கும் கடன்.

சிகரெட்
சுவாச உருப்புகளில் போடப்பட்டத்
தார்ச்சாலை
பூக்களின்மேல் போர்த்தப்பட்டக்
கேன்வாஷ்

சிகரெட்....
தொடர்கதைபோல நீளும்  வாழ்க்கையை
சிறுகதையாக்கும் அவசரம்...
சிலசமயம்
துணுக்காக முடித்துவிடும் அபாயம்!

உணர்க:
வாயில் புகைகிறதெனில்
உள்ளே
உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது
தீ!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்