Showing posts with label கஞ்சி வருதப்பா. Show all posts
Showing posts with label கஞ்சி வருதப்பா. Show all posts

கஞ்சி வருதப்பா... - பகுதி : 2 of 2 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 07, 2013 | , , , , ,

"சஹ்ருக்கு சோத்தை உண்டுட்டு நிய்யத்து சொலலு"ன்னு 'ஆலி'முசா சொன்னாரு! அரகிடா என்னடான்டா 'நிய்யத்தை சொல்லிட்டு கஞ்சியே குடி"ங்ககிறார். இந்த ரெண்டு பேரும் சேர்ந்து நோம்பாளிகளைப் போட்டு ஒரே கொழப்பு கொளப்புறாங்களே!

"அடே! அரகெடா சாபு ! இந்த ஒரு 'மண்' சட்டி கஞ்சிக்கா என்னை 'தீ'மிதிக்க சொல்றீய?''

"கஞ்சி காய்ச்ச உங்க அப்பனா காசு கொடுத்தார்?. ஊரார் ஊட்டு காசிலே கஞ்சி காய்ச்சிட்டு 'தாசில் பண்றியலா?"

நீங்க அரக்கிடா வைத் தான் திண்டீங்க! நான் யார் தெரியுமா? ஒன்னையும் ஒரு கிடை ஆட்டையும் ஆடு ஓட்டுற இடயனையும் சேர்த்து ஒரே முழுங்கா முழுங்கிட்டு மலைப் பாம்பு போல  சும்மாகிடப்பேன் சாபு! 

நான் ஒரு தடவைச் சொன்னா அது ஒரு தடவை சொன்னதுதான்! சும்மா, சும்மா சொல்லிச் சொல்லி கழுத்தை அறுக்க மாட்டேன்! பெருநாள் பொறை பொறக்கட்டும் வக்கிறேன் ஒங்கலுத்துலே கத்தி''

இருந்தாலும் அரக்கடா சாபுவின் கேள்வி நாங்கள் எதிர்பார்த்தது தான். முன்கூட்டியே மனப்பாடம் செய்த நிய்யத்தை அள்ளிவிட்டேன்.

அரக்கிடாவா கொக்கா "பொய் சொல்றேடா!" என்றார். 

எனக்கு பக்கத்தில் இருந்தவன் “நெசந்தான் சாபு  அவன் நோன்புதான்’’ என்று சாட்சி சொன்னான்’. வேலிக்கு ஓணான் சாட்சி-ஓணானுக்கு வேலி சாட்சி’

‘’நான்  நம்பல! சரி  கஞ்சி தர்ரேன்  பாங்கு சொல்லித்தான் குடிக்கனும். அதுக்கு முன்னே  குடிச்சிட்டு ஓடினே நாளைக்கு  கஞ்சி தர மாட்டேன்’’ என்று எந்த எழுத்து கிறுக்கு ஏதுமில்லாமல் எங்களுக்கும், அரகிடாவுக்கும் இடையே உண்டான ’ஜென்டில் மேன்’ உடன்பாட்டின் படி சட்டி வந்தது. 

சட்டி சூடாத்தான் இருந்துச்சு! ‘சட்டி  சுட்டதடா  கை  விட்டதடா’  என்று நான் சட்டியை கை  விடவில்லை என்னை நம்பி  என்னோடு வந்த பின் அதை கை விட்டால் நான் ஒரு மனுசனா ? 

நாலு  பேர்  பார்த்தா என்ன நினைப்பார்கள்?  எந்த முகத்தோடு ஊரில் நடமாட முடியும் என்று நாலையும்  நன்றாக யோசனை  செய்து ‘ சுட்ட சட்டியை’ அப்படியே என் அரவணைப்பில் வைத்துக் கொண்டேன்.  ஒரு கண்டம் நீங்கியது. கஞ்சியை எல்லோருக்கும் கொடுத்து முடித்து விட்டு தர்ஹா  தூண் ஓரம்  நின்று அரக்கிடா   எங்களையே  உளவு பார்த்தார். ‘யாரோ  கொடுத்த காசுலே கஞ்சியை காச்சி எங்களை இந்த பாடு படுத்துறியே!’ என்று மனதுக்குள் அவரை திட்டினோம். சத்தம் போட்டு திட்டி அரக்கெடா காதில் பட்டால் கஞ்சி சட்டிக்கு ஆப்புத்தான்.

அடுத்து  கடிகாரத்தை பார்த்தோம்.  பெரிய முள்  கொடுத்த சாவிக்கு ஆக்டிவா தனது கடமையை உணர்ந்து செய்தது. சின்ன முள்ளோ  ரொம்ப சோம்பேறி. பக்கத்தில்  இருந்த ஒருவர் கொஞ்சம் விஷயம் தெரிஞ்ச ஆள். பினாங்குக்கு வாப்பா மாமா மச்சானுக்கு எழுதும் கடித்ததில் இங்கிலீஸ்லே அட்ரஷ் எழுதும் அளவுக்கு அவரிடம் சங்கதி உண்டு.

இதில் இங்கிலீஷ்  தெரிந்த வேற ஆளுகளும் இருந்தார்கள். அவர்கள் TO எழுதும் இடத்தில் அனுப்புபவரின் பெயரை போட்டு FROM எழுதும் இடத்தில் கடிதம் பெறுபவரின் பெயரை  போட்டும் அட்ரசை எழுதி கொடுத்த கடிதமெல்லாம் நாளே நாளில் வீடு வந்தது. கடிதத்தை பெற்ற தாயோ “நான் போட்ட கடித்ததை தந்தி-போல் பாவிச்சு பதில் போட்டுட்டானே!” என்று தபாலை ஆவலுடன் ஒடச்சு படிச்சு பார்த்தா ‘என்  கண்ணான  வாப்பா  காதர்  மஸ்தானுக்கு உம்மா மம்நாச்சியா எழுதும் கடிதம். யாதெனில்  இப்பவும்  நானும்  வாப்பாவும்  ராத்தாவும் தங்கச்சியும் நல்ல சுகம்.  நீ கடுதாசி  போட்டு  மூனு  மாசம் ஆச்சு! ஒரு சேதியும் தெரியலே’ தாய் மகனுக்கு  போட்ட கடிதம் தாய்க்கே திரும்ப வந்துடுச்சு. காணாமல் போன பசுமாடு ஏழு நாளைக்கு பின் கன்றை தேடி  ‘ம்மா’ ‘ம்மா’ என்று கத்திக் கொண்டு  வருவது போல!  

இந்த இடத்தில்  எனக்கு  ஒரு டவுட். நாமெல்லாம் உம்மா உடைய காக்காவையோ தம்பியையோ "மாமா"ன்னு பிரியமா கூப்பிடுறோம். கன்றுக் குட்டியும் பதிலுக்கு ‘மருமகனே மருமகனே’ன்னு கூப்பிடாமா தன் தாயை ‘மா மா மா மா’ன்னு கூப்பிடுதே! இதுலே கன்றுக் குட்டிக்கு தன்னை பெற்ற பசு மாமாவா? அல்லது  மாட்டுக்கு கன்றுக் குட்டி ‘மாமா’வான்னு தெரியாம ரொம்ப குழப்பமா இருக்கு! இதில் யார் யாருக்கு மாமா?ன்னு தெரியலே! தெரிஞ்சவுக சொல்லலாம்.

இன்னொரு  குழப்பம்!  ஆட்டுக் குட்டியும் ‘மே! மே!’ன்னு  கத்துது. சந்தேகம் வந்து காலண்டரை பார்த்தா அது அக்டோபர் மாதம் 11 தேதி போட்டு இருந்தது. விஷயம் தெரிஞ்ச ஒருவரிடம் கேட்டேன். ‘’ஆட்டுக் குட்டி ஏன் ‘ மே மே’ன்னு கத்துது?’ ‘’அதுவா! அது தொழிளார் தலைவர் வீட்டு ஆட்டுக் குட்டி! தொழிலாளர்களுக்கு ‘மே’ என்றால் ரொம்ப பிடிக்கும். எஜமான் மேலே உள்ள விசுவாசத்தை காட்ட அந்த ஆடு ’மே! மே!’ன்னு  கத்துது’’ என்றார். நல்ல ”லாஜிக்”தான்.  

இப்போ நான் மேலே விட்ட விசயத்துக்கு வருவோம். நல்லா விஷயம் வெளங்குன ஆளுபோல இருந்ததால்  மேலும் ஒரு கேள்வியை கேட்டேன் "பெரிய  முள் ஏன் வேகமா ஓடுது? சின்ன முள் ஏன்  மெதுவா ஓடுது?"ன்னு கேட்டேன். 

என்னை ஒரு மாதிரியா பார்த்த அந்த ஆசாமி சொன்னார் “பெரிய முள் 12 ல் இருந்து ஒரு சுத்து சுத்தி  திரும்பவும் 12க்கு  வந்ததும் தான்  சின்ன  முள்  மணி 3ல் இருந்து  4 மணிக்கு  வரும். 60 நிமிஷம் ஆனபிறகு தான் சின்ன முள்  3ல் இருந்து  நாளுக்கு வரும்’’ என்றார். 

“அறுபது நிமிஷம் ஆகிறதுக்கு முன்னாடி  30 நிமிசத்துலேயே சின்ன முள்  3லிருந்து 4க்கு வந்தால் பெரிய முள் சின்ன முள்ளை அடிக்குமா?’’  என்று கேட்டேன். 

‘’நீ  யாருடா?  யாரு வுட்டு பயடா?  உங்க வாப்பா பேரு என்னடா?’’ என்று என்னோடு  சண்டைக்கு  வந்துட்டார்! 

”என்னாடா? நீ என்னை வெடைக்குறியா? ஒரே குத்திலே மூஞ்சியை  ஓடச்சி புடுவேன்’’  என்று என்னை அடிக்க கிளம்பிட்டார். 

அங்கே இருந்தவங்க எல்லோரும்’’ என்ன? என்ன?  என்று  கூடிட்டாங்க. பக்கத்தில் இருந்த என் நண்பன் சொன்னான் ‘’அவன் தெரியாம கேட்டுட்டான். காக்காவுக்கு கோபம் வந்துருச்சு!  என்றான்.

அங்கே கூடியவர்களில் ஒருவர் எனக்கு வக்காலத்து வாங்கினார்.

’’இவன்  நல்ல  புள்ளைடா!  வம்பு தும்பு கெல்லாம்  போக மாட்டன்டா!” என்று சொல்லி  சமாதனம்  சொன்னவர் என்  வாப்பா பெயரை சொல்லி  அவர்  மகன் என்று  என்னை அடிக்க  வந்தவரிடம் சொன்னார்.  

“அட! இவன்  காக்கா  மகனா?  எனக்கு  தெரியாதே! மொதல்லேயே வாப்பா பெயரை சொல்லி  இருக்கப்படாதா?  சரி!  சரி! போ” என்று சொல்லி  சமாதானம்  ஆகிவிட்டார். 

பாங்கு சொல்லும் சாபு ‘ஆசு வாசமா’ ஒளு செய்துட்டு அப்படியே உட்கந்துட்டார். சட்டியிலே ஊத்துன கஞ்சி ஆறுதுலே! ஆறுன கஞ்சி பழங்கஞ்சி’ங்கிற பழமொழி  தெரியாத ஆளுகளை எல்லாம் பாங்கு சொல்லப் போட்டால் இப்படித்தான்’ கொஞ்ச நேரம் ஆனதும் நகராசத்தம் ‘டும் டும் என்று கேட்டது பாங்கொலியும் பின்னர் கேட்டது.

கஞ்சி’ சட்டியெல்லாம் காலியாக கேட்ப்பாரற்று கிடந்தது. அந்த கால கட்டத்தில் நோன்பு முப்பது நாட்களும் நோன்பு கஞ்சி காய்ச்சுவது  குறைவு. ஒரு சில வசதி படைத்தவர்கள் மட்டுமே கஞ்சி காய்ச்சுவார்கள். பினாங்கில் இருந்து யாரும் வந்தால் அவர்களின் உபயம் கஞ்சி அடுப்பு புகையும்.

கஞ்சி  இல்லாத கஞ்சிகாய்ச்சாத நாட்களில் வழக்கமாக தொழுபவர்கள்  மட்டுமே வந்து போவார்கள். மற்ற நேரங்களில் தெருவே 144 போட்டது போல் இருக்கும். நோன்பு காலங்களில் ஊமையன் ‘டி’கடை வியாபாரம் back- door வழியாக பகல்  நாலு மணி வரைக்கும் நடக்கும். நாலுக்கு மேல் front-door  வியாபாரம் ’வாடா- பட்ஜி-வடை- நோன்புக் கஞ்சி etc.etc., முதலியவை நடக்கும். Public கஞ்சி இல்லாத நாட்களில் வழக்கமாக தொழ வருபவர்களுக்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட பணக்காரர் கேத்தலில் கஞ்சி கொண்டு வருவார். இது வேறுயாருக்கும் கிடைக்காது இந்த கஞ்சி A/c Prayer Only.

காலங்கள்  மாறின மண் வீடுகள் எல்லாம் செங்கல் வீடுகளானது. தென்னைங் கீற்று கூறைகள் ஓட்டு வீடுகள் ஆனது. கீத்து வேலிகள் எல்லாம்  காம்பவுண்ட் சுவர்கள் ஆனது கடிகாரம் இல்லாத வீடுகளில் வால்- கிளாக் அலாரம், ட்ரான்ஸ் சிஸ்டர்’ டிவி’ இப்போ computer வந்தது விட்டது. பண புழக்கம் முக்காடு போடாமல் திரிகிறது . கொழும்பு பினாங்கு சிங்கபூர் என்று சூரியன் உதிக்கும் கிழக்கை நம்பி இருந்த அதிராம்பட்டினம் போன்ற ஊர்கள் மேற்கே ‘கிப்லா’வை பார்த்ததும் சூரியன் அஸ்தமிக்கும் மேலை வானத்தில் புதிய சூரியன் தோன்றினான்.

தமிழகத்தின் முஸ்லிம் மக்களின்  வீடுகளில் மின்சார விளக்குகள் டியுப் லைட்கள் ஒளிவீசியது. ரேடியோ டிவி ஒலி-ஒளி பாரப்பின. ஆடிக்கு ஒரு தடவை – அமாவாசைக்கு ஒரு தடவை - எப்போதாவது ஒரு  அம்பாசடர் கார் அதிரைக்கு வரும். அதை துரத்திக் கொண்டு ஓடியவர்களில் நானும் ஒருவன். காரை தொடவிடாமல் AK-47 கையில் இருப்பதாக நினைத்துக் கொண்டு அதை கண்ணால்  கூட  பார்க்க விடாமல் டிரைவர்  எங்களை விரட்டுவார். ஒரு அம்பாசடர்  கார் வைத்திருப்பது தங்களின் ஏகபோக  உரிமை என்றும் தோப்பு வயல் வைத்து  நிர்வாகம் செய்வதை  தங்களுக்கே அல்லாஹ் Monopoly ஆக்கிவிட்டான்’  என்று எண்ணியவர் களுக்கெல்லாம்  காலம்  என்ற பேராசிரியர்  நல்ல நல்ல பாடங்களை  போதித்து விட்டார். அடுப்பு புகையாமல் கிடந்த குச்சி வீடுகள் எல்லாம் புகை போக்கி குழாய் வைத்து மாடி வீடுகள் கட்டி விட்டார்கள். வீடுகட்ட Blue-print போடும் போதே Car-shedக்கு இடம் போட்டு வீடுகள் கட்டப்படுகிறது. ’’ எங்கள்  வீட்டில் ‘வெல்லாட்டி’ வேலை பார்த்தவர்களுக்கு எங்கள் வீட்டை விற்க மாட்டோம்’’ என்று சொன்னவர்கள் விழி பிதுங்கி  நிற்கிறார்கள்.  

‘’சூரியன்  அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை  ஆள்பவர்கள் நாங்கள்’ என்று மார்தட்டி நின்ற  ‘சாம்ராஜ்யத்தின் ராஜ குடும்பங்களில் ‘\கலப்பு திருமண வாடை’ வீசுகிறது. குலப்பெருமை பேசியவர்கள் குணிந்து நடக்கிறார்கள்.

கஞ்சி வந்து விட்டது. ஆறின கஞ்சி பழங்கஞ்சி’ ஆகிவிடும் ஆதலால் ஆறும் முன்னே சூட்டோடு  குடிப்போம்.   ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் குடிப்போம்! "ஒற்றுமை என்னும் கையிற்றை  பற்றி பிடுத்துக் கொள்ளுங்கள்’’. ஒற்றுமை இன்றில் நம் அனைவருக்கும் தாழ்வே! 

மீண்டும் சந்திக்க  எல்லாம்  வல்ல  அல்லாஹ்  அருள் புரிவானாக! ஆமீன்.

அதிரைநிருபர் வாசகர்கள் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவர்களுக்கும் என் மனங்கனிந்த ஈதுல்பிதர் வாழ்த்துகள்.

S.முஹம்மது பாரூக்
அதிராம்பட்டினம்

கஞ்சி வருதப்பா...! - பகுதி - 1 of 2 52

அதிரைநிருபர் பதிப்பகம் | August 04, 2013 | , , , ,

கிபி 1950 ம் வருடம் தஞ்சாவூர் ஜில்லா பட்டுக்கோட்டை தாலுக்கா அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் இருக்கும் ஹாஜா செய்கு அலாவுதீன் தர்காவிலும் அத்துடன் சேர்ந்து இருக்கும் தொழுகிற பள்ளியிலும் ரமளான் மாதம் பிறை 1-ல் இருந்து 30 வரை நடந்த நோன்பு கஞ்சி பற்றிய குறிப்புகள் முஹம்மது ஃபாருக் என்ற நானும் என் சக தோழர்கள் மூன்று நான்கு பேர்களும் சேர்ந்து நோன்பு கஞ்சி குடிக்க நடத்திய நாடக நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

நானும் என் நண்பர்களும் அப்போது போலீஸ் பள்ளிக்கூடத்தில் முறையே மூன்றாவது வகுப்பும் ஒருவர் நான்காவது வகுப்பும் படித்துக் கொண்டிருந்தோம். ‘போலீஸ் பள்ளிக்கூடம்’ என்றதும் நாங்களெல்லாம் அப்போதே போலீஸ் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்தோம் என்று எண்ணிவிட வேண்டாம். நம் ஊர் மெயின் ரோட்டில் போலீஸ் ஸ்டேஷன் அருகே இருக்கும் Hindu Boys Board School அதாவது H.B.B.S. என்று அன்று சொல்லப்பட்ட ஆரம்ப பாட சாலையில் பையில் சிலேட்டுடனும் சிலேட்டுக் குச்சியுடனும்  இரண்டொரு புஷ்தகங்களுடனும்  படித்த காலம். சிலேட்டுக் குச்சியின் நீட்டம் அதிக பட்சமா போனால் மூனு இஞ்சிதான். சிலேட்டில் எழுதி வாத்தியாரிடம் கொடுத்தால் அவர் ஒரு வட்டம் அல்லது ரவுண்ட் போட்டு  60 / 100, 30 / 100 என்று மார்க் போட்டு கொடுப்பார் 100 / 100 வாங்கியதாக நினைவு இல்லை. ஆனால் 0/100 100 / 0 வாங்கியவர்களில் நானும் ஒருவன்  0/100 வாங்கியதில் எனக்கு ஒரு திருப்தி என்னவென்றால் 100 / ஒருசைபர் மட்டும் போட்டதுதான். 000 / 100 சைபர் போடாமல் விட்டதே ஒரு சந்தோசமான செய்திதானே? !

எங்களின் காலை BREAK-FAST நீர்ச்சக் கஞ்சி அதில் உரிச்சு போட்ட  வெங்காயம். அப்போ சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் என்ற வயசு சைஸ், ஜாதி பாகுபாடு ஏதும் இல்லை. வெங்காயம் என்றால் அது வெங்காயம் தான். அப்போது அதில் சமதர்ம சமத்துவ நிலை நிலவியது. ‘ஒன்றேகுலம்- ஒருவனே தேவன்’ என்பதுபோல ‘ஒரே வெங்காயம் ஒரே கஞ்சி!’ நாங்கள் வெங்காயம் போட்டு கஞ்சி குடிச்சது ஈ.வெ.ரா. பெரியாருக்கு எப்பிடியோ தெரிஞ்போச்சு! அவர் மேடைக்கு மேடை  ‘அடே வெங்காயமே!’ ‘அடே வெங்காயமே!’  என்று எங்களை  கிண்டலடிக்க ஆரம்பிச்சுட்டார். போறவங்க வர்றவங்களெல்லாம் எங்க முகத்தையே பாக்க ஆரம்பிச்சுட்டங்க. எங்களுக்கோ வெட்கம் பிச்சு திங்க ஆரம்பிச்சிடிச்சு.

எங்களுக்கோ வெட்கம் ஒரு பக்கம் கோபம் ஒரு பக்கம். இப்படியே பெரியாரை பேசவிட்டா சரியா வராது. நாங்க நாலஞ்சுபேர் ஒன்னு சேர்ந்து போய் தி.மு.கவை சேர்ந்த N.S.இளங்கோ அவர்களை கண்டு விசயத்தைச் சொன்னோம். “அப்படியா? நீங்க வெங்காயம் போட்டு கஞ்சி குடிச்சாலும். வெங்காயம் போடாமே கஞ்சி குடிச்சாலும் அல்லது வெங்காயத்தை மட்டும் திண்டாலும் அவரு கஞ்சி-வெங்காயம் ரெண்டையும் மேடைக்குமேடை ஒடை ஓடைன்னு போட்டு ஓடைச்சுகிட்டேதான் இருப்பார்’’ என்றார்.

“கஞ்சி  அவருக்கு என்ன பாவம் செஞ்சுச்சு? சாமி’, புராணம்தானே அவருக்கு எதிரிகள்” என்று நான் கேட்டேன்.   ‘’ஆ...  அப்புடி கேளு!  நீங்கள்லாம் சின்னபுள்ளைய!  விபரம் விளங்காது சொல்றேன் கேட்டுக்கோங்கோ! அறிஞர்  அண்ணா, மு.கருணாநிதி, நான்  எல்லாம் பெரியார் கட்சியிலே இருந்தோம். அப்புறம் அவரை விட்டு விலகி தி.மு.க.ன்னு புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சோம். அதனாலே அண்ணா மேலே பெரியாருக்கு கோவம், அண்ணா  பிறந்த ஊர் காஞ்சிபுரம். இதை ‘கஞ்சி’ என்றும் சொல்வார்கள். அதனாலே ’காஞ்சி, கஞ்சி ’வெங்காயம்’ என்றால் பெரியாருக்கு அலர்ஜி.. எங்கே போனாலும் எங்களை தாக்க ஆரம்பிச்சுடுவார்.’’ என்றார் N.S.இளங்கோ.

‘’அண்ணா ஊரு காஞ்சிபுரம் அதனாலே ’கஞ்சி’ன்னாலே அவருக்கு புடிக்காதுன்னு சொல்லுறிங்க. சரி! ஒத்துக்குவோம். ஆனா வெங்காயத்தை ஏன் வம்புக்கு இழுக்கிறார். வெங்காயம் அவரை என்ன செஞ்சுச்சு?” இது என் துணை கேள்வி! ‘’அப்புடி கேளுடா என் கப்புட்டி வாயா! என்னை உடமாட்டிய போலே இருக்கே. என்னையும் போட்டு கஞ்சி காச்சுடு வியலோ?’’ என்று செல்லமா ஒரு போடு போட்டுட்டு சொல்ல ஆரம்பிச்சார். ‘’நாங்கள் அவரை விட்டு பிரியும் போது அவர் மீது எங்களுக்கு இருந்த பாசத்தாலே நாங்கள் எல்லாம் அழுதே விட்டோம். அண்ணா அழுதார். இன்றைய தி.மு.க.வின் முன்னணி தலைவர்களை உருவாக்கியவர் பெரியார்தான். அந்த கட்சியில் நாங்கள் தொண்டர்கள் போல் இல்லை அவருடைய பிள்ளைகள் போல நாங்கள் வளர்ந்தோம், அவருக்கு பிள்ளை இல்லை. தன் பிள்ளைகளிடம் காட்ட வேண்டிய அன்பையும் பாசத்தையும் எங்களிடம் காட்டினார் அதேபோல் நடத்தினார் என்று சொல்வதைவிட எங்களைத் தன் பிள்ளை போல் வளர்த்தார் என்றே சொல்ல வேண்டும். பிரிவு வந்தபோது பாசமும் பந்தமும் உடைந்தது. பாசமும் பந்தமும் உடைந்தபோது அது உருகி கண்ணீராய் ஓடியது. பெரியாரும் அழுதார், நாங்களும் அழுதோம். அவர் கண்ணீரும் எங்கள்கண்ணீரும் ஒன்று கலந்து ஆறுபோல் ஓடியது. கண்ணீர் வழியவழிய நாங்கள் தி.க.வை விட்டு வெளியேறினோம். அதனால் எங்களை ’கண்ணீர் துளிகள்’ என்றார். நாங்கள் கண்ணீர் விட்டதெல்லாம் ‘வெறும் நடிப்பு என்றார்.

வெங்காயத்தை உரிச்சா கண்ணில் நீர்வரும் அல்லவா? அதுபோலவே ‘நாங்களும் வெங்காயத்தை உரிசுட்டு கண்ணீர் விட்டோம்’ என்று சொன்னார். அதனால்தான் பெரியார் போற இடமெல்லாம் ’’அடே வெங்காயமே! அடே வெங்காயமே!’’ என்று சொல்கிறார். அவர் தி.மு.க. காரங்களை தான் கிண்டல் பண்றாரே தவிர உங்களை அல்ல. வீட்டுக்கு போய் நிறைய வெங்காயத்தை நோம்பு கஞ்சியிலே போட்டு நல்லா குடிங்க!” என்றார்.

நாடு சுதந்திரம் அடைந்த புதிது, வறுமை, பஞ்சம், பிணி, அறியாமை இவைகளின் ஆட்சியில் நாடே மாட்டிக் கொண்டு இருந்த நேரம் 95% குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கி  வதை பட்ட காலம். பள்ளி செல்லும் எங்கள் பாதங்களுக்கு செருப்பு கிடையாது. பணக்கார முதலாளிகள் கூட செருப்பு போட மாட்டார்கள். காலில் இரண்டு கட்டைகள்தான்.

தொழுகிற பள்ளி வாசலில் குதி உயர்ந்த  HIGH HEEL மிதிரிக் கட்டைகள் தான் நிறைய கிடக்கும். ‘’செருப்பால் அடிப்பேன்’’ சப்பாத்தால் அடிப்பேன்’’ என்ற பேச்சே அப்போது கிடையாது. ‘மிதிரி கட்டையால் அடிப்பேன்!”” என்றுதான் சொல்வார்கள்.  பொதுவாகவே ‘கட்டை’ என்று சொல்வதே வழக்கம் ‘மிதிரி’ கட்டையா அல்லது ‘மிதிறி’ கட்டையா?’ ‘மிதி ஏறி’ கட்டை’ என்ற சொல் திரிந்து ‘மிதிறி’ கட்டை ஆனதோ!. அந்தக் கட்டைதான் இல்லையே அதைப் பத்தி இப்போ நமக்கு எதுக்கு ஆராய்ச்சி. நம்ம நம்ம கட்டைக்கு நாம தேட வேண்டியதை தேடிக் கிடுவோம். 

குறிப்பு: இப்பொழுது பள்ளிவாசல்களில் செருப்புகள் காணாமல் போவது போல் அப்போது கட்டைகள் காணாமல் போனதில்லை; போட்டது போட்டபடி அப்படியே ஆடாமே அசையாமே ‘கட்டையா’ கிடக்கும். காரணம் அந்த காலத்தில் அவங்க அவங்க கட்டைக்கு அவங்க அவங்களே சொந்தமா தேடிக்கிட்டாங்க [Self-Help].

இப்போது நாம் நோன்பு கஞ்சிக்கு வருவோம். நோன்பு மாதம் வந்ததும் கடல்கரை தெருவில் அரை கிடா-சாபு காய்ச்சும் நோன்பு கஞ்சி நினைவுகள் மனத்திரையில் கமகமவென ஓடும். அதை வாங்கி குடிக்க நாங்கள் போட்ட குட்டிக் கரணங்கள் எல்லாம் எனக்கு அந்த நாள் ஞபாகத்தை ஒரு கலக்கு கலக்கியது’ இளமை நினைவுகள் முதுமையில் இன்பம் அது முதுமைக்கும் கொஞ்சம் இளமையையும் ஊட்டுவதே  இந்த நினைவுகள்தான். 

ஒரு மனோதத்துவ ஆய்வாளர் சொல்கின்றார் முதுமையை பற்றியே நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள்.  ‘இளமையாகவே இருக்கிறோம்’ என்றே எண்ணுங்கள். இளமைக் காலத்தில் அணிந்த ஆடைகளையும் ஆடிய ஆட்டங்களையும் எண்ணி இப்போது கவலைப்படாதீர்கள். அதை நினைத்து அதுபோலவே இப்போதும் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இளவயதினர் அணியும் ஆடைகளையே அணியுங்கள்.  இளமைச் சிந்தனையை முதுமையோடு பேரம் பேசாதீர்கள்..‘’ இனிமே நமக்கு இங்கே என்ன இருக்கு? வயசாச்சு போய் சேரவேண்டிய இடத்துக்கு போய் சேர வேண்டியது தான்’ என்றும் ‘சட்டி சுட்டதடா ’கை’விட்டதடா’ என்ற பட்டினத்தர் போன்றவர்களின் ‘சிந்தனை’யை விட்டுடுங்கள். ‘அனுபவி ராஜா! அனுபவி!’ வழியில் போகலாமே!. ஆனால், நம்முடைய பாரம்பறிய பிற்போக்கு சிந்தனையாளர்கள் நடுவே நாம் அப்படி நடப்பது கொஞ்சம் கஷ்டமே!

WHEN YOU ARE IN ROME DO AS ROMANS DO என்ற பழமொழியை பொருத்தமில்லாத இடத்திலும் நேரத்திலும் சொல்கிறார்கள். ’பழமொழிகளை மெய்பிக்கவோ அல்லது உயிர்ப்பிக்கவோ’ நாம் உலகில் பிறக்கவில்லை’. என்பதில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும்.

இளம் வயதினர்களுக்கு மட்டும் என்று சொல்லப்பட்ட சட்டையை போட்டுக் கொண்டு ஒரு கல்யாணத்திற்கு போனேன்.

"பாருக்! உன் வயசு என்ன?  இந்த வயசில் இந்த இளவயசு காரனுவ போடுற சட்டையை போட்டுருக்கியே? நல்லாவா இருக்கு?” என்று அட்வைஸ் செய்தார் ஒருவர்.  

நான் சொன்னேன் “கடையில் போய் சட்டை கேட்டால் உங்கள் சைஸ் என்ன என்று தான் கேட்கிறார்களே தவிர பிறந்த வருஷம் மாதம் தேதி கேட்க வில்லையே!” என்றேன். இப்படி சொன்னதும் அவர் முகம் மாறிவிட்டது. 

“என்ன நான் சொல்றேன் நீ இப்படி மரியாதை இல்லாமே பதில் சொல்றே?” என்றார். 

“உங்கள் விருப்பத்துக்கு நான் வாழ முடியாது. என் சட்டை உங்களுக்கு ஏதாவது இடைஞ்சல் கொடுக்கிறதா?’’ என்றேன் அந்த இடத்தை விட்டே அவர் போய் விட்டார். 

பக்கத்தில் இருந்தவர் கேட்டார் “நீ என்ன அவரிடம் இப்படி பதில் சொல்லி விட்டாய்?” என்றார். 

“பாஸ்போர்ட் எடுக்கும் போதும் ஜாதகம் பார்க்கும் போதும் தான் பிறந்த தேதி மாதம் கேட்கிறார்கள். சட்டை வாங்கும் போது சைசும் பிடித்த டிஸைன் மட்டுமே” என்று பதில் போட்டேன். மற்றவர்களின் சொந்த விருப்பத்திலும் உரிமையிலும் இன்னொருவர் தலையிடுவது நாகரீகமான செயல் அல்ல.

நோன்பு காலங்களில் பள்ளி கூடம் விட்டதும் புஸ்தக பையை  விட்டு எறிந்து விட்டு பள்ளி வாசலுக்கு போய் நாங்கள் நாலஞ்சு பேர் நோன்பு கஞ்சி வரிசையில் ஒட்டிக் கொள்வோம். அப்போ Q-என்பது போன்ற இங்க்லீஷ் வார்த்தைகளை சாதாரண மக்களும் மாணவர்களும் சொல்வதில்லை.! 1947-ம் வருஷம் ஆகஸ்ட் மாஷம் 15-தேதி வெள்ளைகாரன் சுதந்திரத்தை கொடுத்து விட்டு அன்று காலையே ஃபஜருக்கு பாங்கு சொன்னதும் பெட்டி படுக்கைகளை சுருட்டி ஒரு கையிலும் மறுகையில் பெண்டாட்டி பிள்ளைகளை பிடித்துக் கொண்டு ஓட்டமும்-நடையுமா போய் கப்பல் ஏறி இங்கிலாந்துக்கு புறப்பட்டு இருப்பானோ இல்லையோ!’ என்ற சந்தேகத்தின் பேரில் நம்ம ஊர் போன்ற முஸ்லிம்கள் நிறைந்த ஊர்களில் ஒரு இங்க்லீஸ் வார்த்தை கூட யாரும் பேசவில்லை. இது ‘இங்க்லீஷ் படிக்கவே கூடாது’ என்ற ஒருசபதமே தவிர வேறொன்றும் இல்லை.

அரைகிடா சாபு அங்கிட்டும் இங்கிட்டும் போகும் போது ஓரக்கண்ணால் பார்த்து எங்களை ஒரு நோட்டம் இடுவார். அவர் மன ஓட்டம் எங்களுக்கு தெரியும். அவர் அங்கிட்டும்-இங்கிட்டும் போகும் போது நாங்கள் இங்குட்டும் - அங்குட்டும் எச்சியை துப்பி-துப்பி காட்டுவோம். இது ‘நாங்கள் எல்லோரும் ‘நோன்பு’ பிடித்திருக்கிறோம்’ என்பதை அவருக்கு ஜாடையாக தெரியப்படுத்தும் Body Language.’ ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒரு தடவையாவது பள்ளி வாசல் கடிகாரத்தை நாங்கள் நோக்காமல் இருப்பதில்லை. அரக்கடா நோம்பு கஞ்சியின் ருசியும் வாசமும் எங்கள் நபுசை ஆட்டி படைத்தது.

அந்த காலத்தில் கையில் ‘வாட்ச்’ கட்டிக்கொள்ளும் அளவுக்கு வசதி படைத்தவர்கள் ஊரில் யாரும் இல்லை. யார் வீட்டிலும் சுவர் கடிகாரமும் அவ்வளவு இல்லை. அப்போதெல்லாம் கடற்கரைத் தெருவில் அஞ்சு அல்லது ஆறு வீடுகளில்தான் சுவர்கடிகாரங்கள் இருந்தது.

‘’ கார்த்திகை பிறை காணத் தோனுதே-கானலோடிப் புனலெனப் பாயுதே-வேர்த்து மேனி புழுங்கி ’எரியுதே’’என்று தொடங்கும் நம் ஊர் அண்ணாவியார் புலவர் பாடிய ’மழைப்பாட்டு’ பாடலின் ஒரு வரி. (அந்த பாடலின் முழுதும் நினைவில் இல்லை) அது மழை பொய்த்து போனதில் வந்த பஞ்சத்தில் வறுமை கொடிகட்டிப் பறந்த காலம். 

பள்ளிவாசல் கடிகார பெரிய முள் ஏதோ எங்க மனசு தெரிஞ்சு கொஞ்சம் அசைந்து அசைந்து ஓடும். ஆனால் இந்த சின்ன முள் இருக்கே அதுக்கு ‘ஈரமில்லா நெஞ்சு’ வானமே இடிஞ்சு தலைமேல் விழுந்தாலும் அசையவே அசையாது. நின்ற இடத்திலேயே நின்று கொண்டே இருக்கும். ஒரு வேளை சின்ன முள்ளுக்கு சாவி கொடுக்கலையோ என்னமோ? ஏதோ எங்களுக்கு எதிரா சூது நடக்கிறது போல் தெரிந்தது! 

அரக்கிடா சாபு நோம்பு கஞ்சி சட்டியை திறந்து ஆப்பையை போட்டு ஒரு கடாசு கடாசும் போது வரும் வாசமோ வாசம். ’அந்த வாசம் வந்திடாதோ? என்று பாட்டு எழுத ஒரு கவிஞனாக பிறக்கவில்லையே என்று’ வருத்தப்பட்டேன். அங்கே வரிசை வரிசையா பறத்தி இருந்த மண்சட்டிகளில் ஆப்பையால் கஞ்சியை அள்ளி அள்ளி அரக்கடா சாபு ஊற்றும் ஸ்டைலே ஒரு ஸ்டைல்தான். இந்தகாலத்து ரஜனிகாந்து பார்த்த அசந்து போயி ‘சிலையா’ நின்னுடுவாரு. ஆப்பையே போட்டு கஞ்சி ஒரு கலக்கு கலக்கும்போது கடல்கரைத் தெரு முழுதும் வியாபிக்கும் கஞ்சிவாசம் நாசியை துளைக்கும். எங்கள்  நபுசோ ‘எப்போ வரும் எப்போ வரும்’ என்று தூண்டிலில் மாட்டிய மீனைப்போல துடித்துக் கொண்டிருக்கும்.

அரகிடா சாபு நோன்பு கஞ்சி என்றால் அதிராம்பட்டினமே வந்து ‘’எனக்கு கொஞ்சம் கொடு- எனக்கு கொஞ்சம் கொடு’’ என்று அடிச்சு புடிச்சுக்கிட்டு நிக்கும் படியான பேர் போன கைப்பதம் கொண்ட கஞ்சி. அரக்கடாவின் நோன்பு கஞ்சி ‘நளபாகம்’ நாலா திக்கும் பரவி அவர் புகழ் திக்கெட்டும் கொடிகட்டி பறந்தது.’ கஞ்சியைத்தான் காச்சினாரு அதிலே ருசியே எப்புடி வச்சாரு? !’ என்று குடிச்சவங்கலாம்’ மூக்கின் மேல் விரல் வச்சாங்க’ என்றால் பாத்துக் கொள்ளுங்களேன்!

‘’இவருக்கு அரக்கிடா’ என்று யார் பேர் வச்சது?’’  என்று ஒருவரிடம் கேட்டேன். அவர்ஒரு கதை சொன்னார். அவரு வயறு பெருசு; அதுக்கு மேச் ஆகும்படி உடம்பும் பெரிசு. ஒரு செம்பு சட்டி நோன்பு கஞ்சியை வாளியில் அள்ளி அள்ளி ஊற்றினாலும் ஊற்றிய கஞ்சி எல்லாம் எங்கே போச்சின்னு யாருக்கும் தெரியாது. வயிரோ போட்டது போட்ட படி அப்படியே கிடக்கும். கொஞ்சமாவது உப்பனுமே ஊகும் முடியாது. கழுதையா கத்தினாலும் வயறு நேத்து பாத்த அதே வயருதான்.

‘‘வெண்ணாறு மடை உடைச்சு விடிய விடிய பாஞ்சாலும், விடிஞ்சு பாத்தா வீராணம் ஏரிக்கு விரக்கடை அளவுதான்’ என்ற ஒருசொல் வழக்கு உண்டு. சென்னைக்கு  அருகில் உள்ள வீராணம் ஏரி கடல்  போல் பெரிய ஏரி.  இதன்  உண்மை பெயர் ‘ வீர  நாராயணன் ஏரி’. இது நாளடைவில்  மெல்ல மெல்ல மருவி ‘வீராணம் ஏரி’  என்று மாறிவிட்டது. வீர நாராயணன் என்ற சோழ மன்னன் வெட்டியதாக  கல்கியின் ‘ பொன்னியின் செல்வன்’ கதையில்  காணலாம். இது ஒரு உப்பில்லா கடல் என்று சொல்லும் அளவுக்கு பொருத்தமான பெரிய ஏரி.

வெண் ஆற்றுத் தண்ணீர்  ஒரு இரவு  முழுதும் வீராணம் ஏரியில் பாய்ந்தாலும் அடுத்த  நாள் காலையில்   பார்த்தால் ஒரு விரல் அளவு கூட உயர்ந்து இருக்காதாம். அவ்வளவு பெரிய ஏரி. அதை போல  அரைகிடாவின்  வயிறும் பெரியது. எத்தனை ஆடுகளை அறுத்து போட்டாலும் நேற்று பார்த்த அதே வயறுதான் இன்றும். இன்று பார்த்த அதே வயறுதான் நாளையும்.  என்ன ஆனாலும் அது வளர் பிறையும் அல்ல; தேய் பிறையும் அல்ல.  ஆக ‘என்றும் பவுர்ணமியே!’  

ஒரு பந்தயம்  நடந்ததாம். ‘’அரை (ஆட்டுக்)கிடாவை ஆக்கி  கொடுத்தால் உன்னால் சாப்பிட முடிமா?’’  என்று  ஒருவர் அரகிடா சாபுவிடம் சவால்  விட்டாராம்.  எந்த தயக்கமும் இல்லாமல் ‘’கொண்டுவா  அந்த கடாவை! திண்டு காட்டுகிறேன்!’’  என்றாராம். அடுத்த நாள் வந்தது ஒரு பெரிய கடா. வந்த கடாவை வெட்டி முழுசாகவே செம்பு சட்டியில் போட்டு சமைத்து அப்படியே சகனில் அரகிடா சாபு முன் வைத்தார்களாம். 

தெரு  நாட்டாமைகள்  முன்னிலையில்  சரியாக அரை கிடாவை தின்று முடித்து துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு எழுந்தாராம்.                                                                 
அங்கேநின்றுபார்த்தவர்கள் எல்லாம் ஆச்சரியத்துடன் மூக்கின் மேல் விரல் வைத்தார்களாம். அரகிடா சொன்னாராம் ‘’அடே!  என் கிட்டயா சவால் விடுறிய! மிஞ்சி  இருக்கிற பாக்கி அரை கிடாவையும் நானே சாப்பிட முடியும்டா! பாவம் நான் சாப்பிட்டதை  பார்த்த உங்கள் நபுசும் துடிக்கும். அதனால் தான் அந்த அரகிடாவையும் மிச்சம் வைத்தேன். பிஸ்மில்லாஹ் பாக்கி அரை கிடாவையும் நீங்களே சாப்பிடுங்கள்!’’ என்று பெருந்தன்மையுடன் சொல்லி விட்டு எழுந்தாராம். இவ்வளவுக்கும் ஒரு ஏப்பம் கூடவிடலையாம். அன்று முதல்  அவருக்கு "அறைக்கிடா’ என்று ஊரார் முன்னிலையில் பெயர் விட்டார்களாம். இது வாய் வழி  வந்த செய்தி. 

கஞ்சி  சட்டிகளை  எடுத்து வொவ்வொருவருக்காக அரக்கிடா  கொடுத்து வருவார்.  எங்கள் அருகே  அவர் நெருங்க-நெருங்க எங்கள் நெஞ்சு படக் படக் கென்று  அடிக்கும். கஞ்சி  ‘கிடைக்குமோ’ கிடைக்காதோ?’  என்ற பயம். இந்த கஞ்சி குடிக்க நாங்கள் போட்ட திட்டங்கள் நிறைய. இரண்டு நாள் சாப்பிடாதது போல முகத்தில் ஒரு செயற்கையான வாட்டத்தை பரவ விட்டு,  உதட்டை நன்றாக தேய்த்து  வரண்டு போன உதடு போல் காட்டினோம். ஒரு உண்மையான நோன்பாளி  எப்படி இருப்பாரோ அதை விட இருமடங்கு நாங்கள் எங்களை மாற்றினோம். இது எல்லாம் நாங்கள் கஞ்சிக்காக போட்ட வேஷம்.

அரகடா எனக்கு அருகே வந்தார்  சட்டி காஞ்சியில் கைவைத்தவர் ‘நோம்பாடா?’’  என்றார் நான் பரிதாபமாக ‘’ஆமாம் சாபு!  நெசமா நோன்பு!’’  என்றேன். ‘’பொய்  சொல்றேடா!   எங்கே நிய்யத்து  சொல்லு?’’ 

அடுத்த பகுதியில் மீதியைச் சொல்கிறேன் இன்ஷா அல்லாஹ் !

S.முஹம்மது பாரூக்
அதிராம்பட்டினம்.