Showing posts with label சான்பிரான்சிஸ்கோ. Show all posts
Showing posts with label சான்பிரான்சிஸ்கோ. Show all posts

சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை... - 2 36

அதிரைநிருபர் பதிப்பகம் | October 31, 2012 | , , ,

தொடர் - 2

மகள் சொன்னதை கேட்டு பதறிய எனக்கு ஞாபகத்திற்கு வந்த இந்த குர்ஆன் வசனத்தை என் மகள்களுக்கும், மனைவிக்கும் சொன்னேன்.

بسم الله الرحمن الرحيم

   أَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ مُسَخَّرَاتٍ فِي جَوِّ السَّمَاءِ مَا يُمْسِكُهُنَّ إِلَّا اللَّهُ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ

"வான(மண்டல)த்தின் (காற்று) வெளியில் (இறை கட்டளைக்குக்) கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை; நிச்சயமாக இதில் ஈமான் கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன." - அல்குர்ஆன் - 16:79

ஆகையால், இந்த அலுமினியப் பறவை விழுந்து விடாமல் காப்பவனும் அல்லாஹ்வே என்று ஆறுதல் கூறினேன்.

விமானம் சென்று கொண்டே இருந்தது, விமானத்தின் திரையில் சான்பிரான்சிஸ்கோ புறப்பட்டு, கனடா எல்லை வரை சென்று - ஜப்பானின் டோக்கியோ மேலே (பசிபிக் மேலே) பறந்தது விமானம். நீண்ட பயணத்தின் முதல் கட்டமாக ஹாங்காங் வந்து சேர்ந்ததை காட்டிக் கொண்டே வந்தது (சுமார் 14 மணிநேரப் பயணம்). இடையிடையே நேரத்தைக் கணித்து இருக்கையிலேயே தொழுது கொண்டோம். பிறகு 1 1/2 மணிநேர இடைவெளியில் மீண்டும் பயணம் சிங்கப்பூர் நோக்கி. சிங்கப்பூர் வந்தடைந்தபோது வெள்ளிக்கிழமை காலை 11:20 மணி.


சிங்கப்பூர் நெருங்க, நெருங்க பச்சைப் பசேல் என்ற பசுமையான போர்வைக்குள் அழகான குட்டிக் குழந்தை தூங்குவது போல் கண்களுக்கு தெரிந்தது இந்த சிங்காரச் சிங்கப்பூர்.

அன்று ஜும்மா தினம் இன்ஷா அல்லாஹ் ஜும்ஆ தொழ வேண்டும் என்கிற எண்ணம் அலைமோதியது, அடுத்த சென்னை ஃபிளைட் இரவு 08:30 மணிக்குத்தான். எனவே, டெர்மினல் மாறினோம் வெளியில் செல்ல இமிக்ரேஷன் முடிக்க வேண்டும். அமெரிக்க பாஸ்போர்ட்களுக்கு சிங்கப்பூர் விசா எடுக்க வேண்டிய தேவையில்லை. இமிகிரேஷனில்! நான் ஒரு நாள் மட்டும் விசா போதும் என்றேன், மூன்று மாதங்களுக்கு தந்தார்கள்.

அந்த பிரமாண்டமான சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் ஈத் பெருநாளைக் குறிக்கும் வண்ணம் அழகாக ஜோடித்திருந்தார்கள்.


Money exchange சென்று சிறிது சிங்கப்பூர் டாலர் மாற்றிக் கொண்டு வெளியில் வந்தோம். லேசான தூறல் ஆரம்பித்திருந்தது, ஏர்போர்ட் வாசலில் ரெடியாக இருந்த டாக்ஸியில் ஏறி சிறிது முஸ்தபா செண்டர் வந்தடைந்தோம். சிங்கப்பூர் வெள்ளி 21.40 வந்தது அதைக் கொடுத்து விட்டு அருகில் பள்ளிவாசல் இருக்கிறதா ? என்று விசாரித்தோம்.

''அங்குளியா மஸ்ஜித்" இருக்கிறது என்று சொன்னார்கள். அங்கு சென்றபோது தமிழில் பயான் நடந்து கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் தமிழ் பேசும் முஸ்லிம் பெருமக்கள் நிம்மதியாக 'ஜும்ஆ" தொழுதுவிட்டு, அருகில் உள்ள ஹலால் ரெஸ்டரண்டில் பகல் உணவை முடித்துக் கொண்டு, அங்கேயிருக்கும் கடைகளில் சில பொருட்களை வாங்கினோம். சிங்கப்பூர் விலைவாசி பற்றிய என் கருத்து 'பல பொருட்கள் இந்தியா, அமெரிக்காவை விடவும் அதிகமாகவே இருந்தது. அமெரிக்காவிலிருந்தே தேவையான பொருட்களை வாங்கி வந்து விட்டதால் இங்கு வேறு அதிகமாக வாங்காமல் திரும்பிவிட்டோம்.

இனி ஏர்போர்ட்டுக்கு போகலாம் என வெளியிலே வந்தபோதுதான் கண்ணில் பட்ட அந்த காட்சி அதிர்ச்சியாக இருந்தது.
தொடரும்...
A.R.அப்துல் லத்தீஃப்

சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை... 28

அதிரைநிருபர் பதிப்பகம் | October 23, 2012 | , , , ,

பிஸ்மில்லாஹ்....

நீண்ட பல வருடங்களுக்குப் பிறகு தாயகம் சென்று வர வாய்ப்பு கிட்டியது. அதற்கு முதலில் அல்லாஹ்விற்கு நன்றி செலுவத்தியவனாக (அல்ஹம்துலில்லாஹ்)!

விமானப் பயணச்சீட்டு முன்பதிவு செய்ததிலிருந்து எபோது மீண்டும் இந்தியாவையும், பெற்றோர், உற்றார் உறவினர்களையும், நண்பர்களையும் காண்போம் என்ற அவா நைல் நதியின் துள்ளலோடு எண்ணத்தில் அலை மோதிக் கொண்டு இருந்தன.

புறப்படும் நாளும் நெருங்கியது, ஆயிரமாயிரம் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டு ஆர்ப்பரித்துக் கொண்டும், சந்தோஷ துள்ளல்களாக நேரம் நகரத் துவங்கியது.

கலிஃபோர்னியாவில் உள்ள என் சகோதரியின் வீட்டிலிருந்து குடும்ப சகிதமாக உள்ள அந்த சுகமான பயணம் தொடங்கியது.


சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை அடைந்தபோது இரவு 10:45 மணி.

அங்கிருந்த விளக்கு வெளிச்சங்களும் அந்த விமான நிலையத்தை பகலாக ஆக்கிக் கொண்டிருக்க, என் கடைசி (4வயது) மகள் முல்தஸிமா ஜுவைரியா என்னைப் பார்த்து "நான் ஃபிளைட்டில் வரமாட்டேன், இந்தியாவுக்கு இரயிலில்தான் வருவேன்" என்றாள்.

மகளாருக்கு ஃபிளைட் என்றாலே பிடிக்காது, இரயில் பயணம் என்றால் அலாதி பிரியம், எனவே, நாங்களும் "பறக்கும் இரயிலில்தான் பயணம்" என்று சொல்லி அழைத்து வந்தோம் ஆனால், விமான நிலையத்திலிருந்த விமானங்களை கண்டு விட்டு முரண்டு பிடிக்க ஆரம்பித்து விட்டால்.

ஒருவழியாக லக்கேஜ்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் செக்-இன் செய்து முடித்து விட்டு போர்டிங் பாஸ் பெற்றதும், முரண்டு பிடித்த மகளையும் சமாளித்து வழி அனுப்ப வந்த உறவினர்களுக்கு விடை கொடுத்துவிட்டு, செக்யூரிட்டி செக்கிங் நோக்கி நடந்தோம்.

அமெரிக்காவில் குடிபெயரக சோதனைக்கு (emigration clearance) பதிலாக பாதுகாப்பு சோதனை வைத்து அது TSA என்ற பெயரில் இயங்குகிறது (Transportation Security Administration), இது அமெரிக்காவின் ஹோம் லேண்ட் செக்யூரிட்டியின் கீழ் வருகின்றது.

அங்கு இருந்தவர் ஒரு வொயிட் ஆஃபிசர், ஒவ்வொரு பாஸ்போர்ட்டையும் முகத்தையும் கவனித்து அதை ஸ்கேன் செய்துவிட்டு, தனித் தனியே பயண வாழ்த்து சொல்லி புன்முறுவல் பூத்தார் !

பாஸ்போர்ட்டை பெற்றுக் கொண்டு, சிங்கப்பூர் செல்லும் விமானம் SQ001 இருக்கும் இடம் (Gate) நோக்கி நர்ந்தோம்.

கண்ணாடிக்கு வெளியே தெரியும், விமானங்களைக் கண்டு கொண்டு, மீண்டும் மகளின் நச்சரிப்பு ஆரம்பிக்க, இரவு நேர சான்பிராசிஸ்கோவின் குளிரிலும் வியர்க்க ஆரம்பித்து சிறிதாக செல்லமாக தட்டலாம் என்று எண்ணம் வந்ததை அடக்கிக் கொண்டேன். அதனை போலீஸ் பார்த்தால் பிரச்சினை, ஒவ்வொன்றாக சொல்லி மீண்டும் சமாளிப்புதான் தொடர்ந்தது.

சரியாக 12:50க்கு ஃபிளைட்டில் அமர அழைக்கப்பட்டோம் சிங்கப்பூர் ஏர்லைன்சின் பணிப் பெண்களின் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள, மீண்டும் என் மகளின் அழுகையும் பிடிவாதமும் அரம்பிக்க என் இல்லாள் ஒரு யோசனை செய்தார்! அங்கு வந்த பனிப் பெண்ணிடம் என் மகளின் பிடிவாத குணத்தை சாடையாக காட்டி விட்டு "at what time this tர்ain will fly? என்று கேட்க அந்தப் பணிப் பெண்ணும் புரிந்து கொண்டு புன்முறுவலுடன் "this train will fly at 01:20am" என அழுத்தி சொல்ல என் மகளின் முகத்தில் சந்தோஷக் களைகட்டியது. நாம் பறக்கும் இரயிலில் தான் பயணிக்கப் போகின்றோம் என்று!. என் இல்லாளின் சமயோசித அனுகுமுறையை நினைத்து பெருமைப் பட்டேன் அதே நேரத்திலும் 'பாராட்டவும் தயங்கவில்லை' மாஷா அல்லாஹ் !

சரியாக 1:20 மணி, அதிகாலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்ற அலுமினியப் பறவை - தன் பயணத்தை தொடங்கியது.

எல்லோருமாக, பயண துஆவை ஓதிக் கொண்டோம், அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்தித்துக் கொண்டோம். பயணியின் துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்ற ஹதீஸ் ஞாபகம் வந்தது, துஆ செய்தோம்.

பயணத்தின் ஊடே, என் மகளிடம் கேட்டேன் "ஏன் ஃபிளைட் என்றால் பயப்படுகிறாய்?" என்று..

என் மகள் சொன்னாள் "ஃபிளைட் புறப்படும்போது கீழே விழுந்து விடும்" என்று சொன்னதைக் கேட்டவுடன் எனக்கு 'சொலக்' என்றது.
தொடரும்...
A.R.அப்துல் லத்தீஃப்