Showing posts with label சேக்கனா M.நிஜாம். Show all posts
Showing posts with label சேக்கனா M.நிஜாம். Show all posts

பொறாமை !!! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | July 21, 2012 | , ,


தாம் அடையாத ஒன்றை பிறர் அடையும்போது ஏற்படுகின்ற வெளிப்பாடு “பொறாமை” என்னும் சிந்தனையாக ஒருவரின் மனதில் ஆழமாக உருவாகின்றது. தான் ஏதே பல நூற்றாண்டுகள் இத்துனியாவில் வாழப் போகின்றோம் என்ற எண்ணத்தில் புதுசா புதுசா இதுபோன்ற தீய சிந்தனையை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்கின்றனர். இது அவர்களை அழிவின் பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை போலும்.....

அதிரையில் வசிக்கும் ஒருவர், மலேசியாவில் வசிக்கும் ஒருவரைப் பார்த்து பொறாமைக் கொள்வதில்லை.....மாறாக ஒருவர் மற்றவரோடு தொடர்பில் உள்ளவர், அருகில் வசிப்பவர், உறவினர்கள், தொழில் சார்ந்தவர்கள் போன்றவர்களாகவே இருப்பர்.

1. ஒருவர், பிறரிடம் உள்ள “வளர்ச்சி”யைக் கண்டு பொறாமைக்கொள்பவரும்.

2. பிறர், எளிமையான ஒருவரிடம் உள்ள “நிம்மதி”யான வாழ்வைக் கண்டு பொறாமைக்கொள்பவரும்.

3. நான் தான் “நம்பர்  1” னாக இருக்க வேண்டும், பிறர் நம்பர் 1” னாக வர எனக்கு பிடிக்காது என மனக்கணக்கு போடுபவர்களும்.

4. தன்னால் முடியாத ஒன்றை அவன் சாதித்து விட்டான். அவனை எப்படியாவது “வீழ்த்திக்” காட்டுகிறேன் பார் என சபதம் எடுப்பவர்களும்.

5. எனக்கு “அந்த பொருள்” கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை அண்டை வீட்டுக்காரனுக்கு அறவே கிடைக்க கூடாது என்ற சிந்தனைக் கொண்டோரும்.

6. “ஆ” அவளிடம் பார்.....அழகிய புடவைகள், நகைகள் இருக்கின்றன என பெருமூச்சு இடுபவர்களும்.

7. அவனுக்குப் பார், சொகுசான வேலை, கைநிறைய சம்பளம் எனக்கு ஒன்றும் அமைய வில்லையே ! என்ற வெறுப்பை வெளிப்படுத்துபவர்களும்.

8. அவரின் மிகப்பெரிய வீட்டைப்பார். அழகிய தோற்றம், அதில் விலை உயர்ந்த சாதனங்கள், புதிய மாடல் கார் போன்றவற்றை எண்ணி வேதனைப்படும் “ஜெலஸ்”களும்.

9. என் கண் காணப் பிறந்த அந்தப் பொடியனைப்பார். தன் இளம் வயதில் என்னை வீட பெரிய “ஆளா”யிட்டான் என கர்வங்கொள்ளும் பெரிசுகளும்.

10. நான் தான் அந்த “தலைமை”ப் பதவிக்கு தகுதியானவன். ஆதலால் இப்போட்டிக்கு பிறர் வரக்கூடாது என்ற பேராசையில் "ஜிக் ஜாக்"காக செயல்படுவோரும்.

என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

“பல்லு” இருக்கிறவன் தட்டில் வைக்கும் “பக்கோடா”வை முழுவதும் சாப்பிடுகிறான் என்றால் அவனுக்கு மென்று தின்பதற்கு இலகுவாக “ஈ” என்று இளித்துக்கொண்டு இருக்கும் அழகிய, வலிமையான பற்கள் இருக்கின்றன. அதுக்கு நாம் ஏன் பொறாமைக்கொள்ள வேண்டும் !?

நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருத் தனித் தன்மையை “அல்லாஹ்” நமக்கு வழங்கியுள்ளான். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. 

( நபியே ! ) நாம் அவர்களில் பல்வேறு பிரிவினர்க்கு வழங்கியிருக்கும் உலக வாழ்க்கையின் சுகபோகங்களின் பக்கம் நீர் ஏறிட்டும் பார்க்காதீர். அவர்களைச் சோதிப்பதற்காகவே அவற்றை நாம் வழங்கியிருக்கின்றோம். ( திருக்குர்ஆன் 20:131 ) 

“நெருப்பு விறகை அழித்து விடுவது போல் பொறாமை நற்செயல்களை அழித்து விடுகின்றது ” ( நூல்: அபூதாவூத் ) 

“தான்” என்ற அகந்தை நம்மிடம் அறவே அறுபட்டு, வாழ்வில் மகிழ்ச்சியைப் பெருக்கிக்கொள்ள உங்களிடம் உள்ள “பொறாமை” என்னும் உணர்வு சற்று விலகிக் காணப்படவேண்டும். இதற்கு உங்களை பொறாமைக் கொள்ளத் தூண்டுபவர்களின் நற்சிந்தனைகள், நற்செயல்கள், அவர்களின் வெற்றி, அவர்களின் ஒழுக்கம், அவர்களின் தானம், அவர்களின் தொழில், அவர்களின் ஈமான் போன்றவற்றை மனதார குறிப்பாக போலித்தனம் இல்லாமல் பாராட்டி மகிழுங்கள். நீங்கள் கண்டிப்பாக அவரின் மனதில் நிலையாக இடம் பெறுவதோடு மட்டுமல்லாமல் அவரும் உங்களிடம் வசப்பட்டு விடுவார்.

பொறாமைக்காரர்களின் “பொறாமை” எனும் கொடிய தீங்கிலிருந்து எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக ! என்று “துஆ” செய்தவனாக.!

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

குப்பை தொட்டி ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | July 13, 2012 | , ,

1. பெயர்: குப்பைத்தொட்டி

2. மாற்றுப்பெயர்: சுகாதார “குப்பைத்தொட்டி”

3. வயது: எப்ப வேனும்ண்டாலும் “துரு”ப் பிடித்து தூக்கி வீசப்படலாம்.

4. நிரந்தரமா இருக்குமிடம்: 1. ரோட்டோரம், 2. தெருவோர முச்சந்தி, 3. சாக்கடையோரம்

5. வேதனைப்படுவது: மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்காமல் எல்லாக் கழிவுகளையும் ஒன்றாகச் சேர்த்து எங்கள் மீது கொட்டுபவர்களை நினைத்து.

6. எதிரிகள்: குறிப்பிட்ட நேரத்தில் குப்பைகளை அல்லாமல் காலதாமதம் செய்யும் பஞ்சாயத்போர்டு ஊழியர்கள்

7. வருந்துவது: எங்கள் மீது மலக் கழிவுகளை கொட்டுபவர்களை நினைத்து

8. சாதனை: சுற்றுப்புறத்தைச்  சுத்தப்படுத்தும் தொட்டி

9. வேண்டுகோள்: மக்கள்தொகை பெருகிக்கொண்டு இருக்கும் இவ்வூரில் எங்களுக்கும் கூடுதல் இட ஒதுக்கீடு அளித்து கூடுதல் சேவையை மக்களுக்கு அளிக்க ஆங்காங்கே தெருவின் முக்கிய பகுதிகளில் தொட்டிகளை அதிக எண்ணிக்கையில் வைக்க வேண்டுகிறோம். மேலும் எங்களை கொசு கடியிலிருந்து பாதுகாக்கும் விதமாகவும், எங்கள் மீது வீசும் துர்நாற்றத்தை போக்கும் விதமாக எங்களைச்சுற்றி “பிளிச்சிங்” பவுடரை இட வேண்டுகிறோம்.

10. கருத்து: "குப்பைகளை தொட்டியில் போடுங்கள், வெளியில் போடாதீர்கள்", "உங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுங்கள்’’


இவ்வாக்கம் விழிப்புணர்வு பெறுவதற்காக மட்டும்

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்....

வாகனங்கள் :: பள்ளிக் குழந்தைகளுக்கு வரமா / சாபமா!? 13

அதிரைநிருபர் பதிப்பகம் | July 10, 2012 | , , , ,


தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் அதிகம் நிறைந்த ஊர்களில் அதிரைப்பட்டினமும் ஒன்று நமது சமுதாயம் சார்ந்த காலஞ்சென்ற கொடை வள்ளல்கள் கல்வி நிறுவனங்களை நிறுவி நமதூருக்கு பெருமை தேடித்தந்தவர்கள். இந்நிறுவனங்களில் கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் இன்றும் பல்வேறுத்துறைகளில் உள்நாடு மற்றும் மேலை நாடுகளில் சிறந்து விளங்குகின்றனர். இவ்வளவு சிறப்புமிக்க ஊரில் மேலும் வலுவூட்டும் விதமாக சில தனியார் ஆங்கில வழிக்கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளும் தங்களுடைய சேவையை திறம்பட செய்து ஊருக்கு பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கின்றன என்றால் மிகையாகாது.

சரி விசயத்துக்கு வருவோம், நமது குழந்தைகள் பள்ளிக் கூடங்களுக்கு கல்வி கற்பதற்காக சென்று வர பயன்படுத்துவது வாகனங்களையே குறிப்பாக ஆட்டோ, ஆம்னி வேன், குட்டி யானை போன்றவற்றில் நிற்கும் நிலையிலும், டிரைவர் சீட்டின் மிக அருகிலும், பின்புற சீட்டில் உட்கார்ந்தும் மற்றும் நிற்கும் நிலையிலும், தலை, கைகளை கரம் சிரம் புரம் நீட்டிக்கொண்டு பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்து வருகின்றனர். பெரும்பாலும் எரிவாயு ( GAS ) நிரப்பட்ட வாகனங்களாவே இவை உள்ளன.

இதில் அதிக எடையுடன் கூடிய அவரவர் ஸ்கூல் பேக்குகளையும் அதில் வைத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக மாணவ, மாணவிகள் தங்கள் உடல் எடையில், 5 சதவீத அளவிற்கு தான் எடையை சுமக்க வேண்டும். ஆனால், தற்போதைய பள்ளி மாணவ, மாணவிகள் 15 சதவீதத்திற்கும் அதிகமான எடை கொண்ட புத்தக மூட்டையை சுமக்கின்றனர். 

அதிக எடை கொண்ட புத்தக பைகளை சுமந்து செல்வதனால் கழுத்து வலி, கை, கால் வலி, முதுகு வலி போன்ற உடல் உபாதைகள் மேலும் எலும்பு வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இதனால் முதுகு கூன் விழுவது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

ஒரு ஆட்டோவில் அரசின் விதிப்படி நான்கு பேரும், ஆம்னி வேன்களில் எட்டு பேரும் அமர்ந்து பயணம் செய்யலாம் டிரைவர் உட்பட என்பதை காற்றில் பறக்க விட்டுவிட்ட இவர்கள், ஒரு ட்ரிப்களில் சுமார் பதினைந்து முதல் இருபது குழந்தைகளை ஏற்றிச்சென்று ஒருநாளைக்கு குறைந்த பட்சம் இரண்டு , மூன்று ட்ரிப்கள் அசுர வேகத்தில் பள்ளிகளை நோக்கி பயணிக்கிறார்கள். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதற்கு முன்னுதாரனமாக கடந்த கால தின நாளிதழில் கொடூர விபத்துகளைப் பற்றி வந்த செய்திகளைப் நாம் படித்து அறிந்திருப்போம். இதனால் ஏற்படும் இழப்பீடுகள் குழந்தைகளை மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர்களையும், பள்ளி நிர்வாகத்தையும் சார்ந்துவிடும் சூழல் உருவாகிவிட வாய்ப்புகள் அதிகம்.

பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு !

இதுபோன்ற பாதுகாப்பாற்ற வாகனங்களில் தங்களின் பிள்ளைகளை அனுப்பி வைப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அதி வேகத்தை தவிர்த்து, கூடுதலான குழந்தைகளை ஏற்ற வேண்டாம் என்ற கோரிக்கையுடன் பள்ளிக்கு சொந்தமான வாகனங்களில் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கலாம்.

தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு ஓர் வேண்டுகோள் !

உயர் கல்வியை பயிற்றுவித்து மாணவ, மாணவிகளை உயர்ந்த நிலைக்கு கொண்டுச்செல்லும் தங்கள் பள்ளிகளின் சேவைகள் மேன்மையானது. அதை யாராலும் மறுக்க இயலாது. அதேசமயத்தில் பள்ளிகளில் கல்வி கற்க வரும் மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் நேரம் முடிந்தவுடன் அவர்கள் பாதுகாப்பாக அவரவர் வீடு போய்ச்சேரவும் அந்த அந்த பள்ளிகளே பொறுப்பாகும். ஆகையினால் ஆட்டோ மற்றும் ஆம்னி வேன்களில் கூடுதலான குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் ஏற்றி வருவதை தடைசெய்து அவர்கள் பாதுகாப்பாக அவரவர் வீடு போய்ச்சேர தங்கள் பள்ளிகளின் மீதுள்ள கடமை என்பதை கருத்தில்கொண்டு, தங்கள் பள்ளிகளுக்கு கூடுதலாக வாகனங்களை அனுபவமிக்க டிரைவர்களைக் கொண்டு இயக்குவதன் மூலம் இழப்பீடுகளை தவிர்க்கலாம் மற்றும் பெற்றோர்களின் அச்சங்கள் நீங்கி அவர்களிடம் நற்பெயரை பெற்று பள்ளியின் தரம் மேலும் உயர இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் ( இன்ஷா அல்லாஹ் ! )

விபத்துக்களைத் தடுப்போம் ! குழந்தைகளின் எதிர்காலத்தை வளர்ப்போம் !!

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்....

போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் வாங்கவில்லையா ? 12

அதிரைநிருபர் பதிப்பகம் | July 03, 2012 | , , ,



சமூகத்தில் குற்றவியல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் காவல்துறையின் வசம் உள்ளதையடுத்து, ஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக தங்களின் புகார்களை முதலில் எடுத்துச் செல்வது நமது காவல் நிலையத்திற்கே.........

காவல்துறையில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகளும், அலுவலர்களும் நேரம் – காலம் பார்க்காமல் பணியாற்றுவது என்பது நிதர்சனமான உண்மை. 

இச்சூழலில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் நியாயமான புகார்கள் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்காக காவல் நிலையத்திற்கு வரும் புகாரை விசாரணைக்கு ஏற்காமல் தட்டிக் கழிப்பதற்கான காரணத்தை தேடுவதிலேயே காவல்துறை அதிகாரியின் மூளை முதன்மையாக செயல்படும் என்ற ஒரு கருத்து பெரும்பாலானோர் மத்தியில் காணப்பட்டாலும், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களால் தரப்படும் புகாரையோ, செல்வாக்கு மிக்கவர்களின் பரிந்துரையுடன் வருபவர்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படும் முனைப்பு, சாமானிய மக்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படுவதில்லை என்பதை காவல்துறையினரே ஒப்புக்கொள்வர். இதற்காக சாமானிய மனிதனை, காவல்துறையினர் புறக்கணிப்பதையும் அங்கீகரிக்க முடியாது. 

காவல்துறைக்கு எடுத்துச்செல்லும் நியாமான நமது புகார்களை முறையாக விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வில்லையா ?

தமிழ்நாடு போலீசின் அதிகாரப்பூர்வ இணையதளமாக http://www.tnpolice.gov.in/ இவை உள்ளது. இதில் தமிழ்நாடு போலீசின் விவரங்கள், காவல்துறையின் அன்றாட நிகழ்வுகள், அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைப்பேசி எண்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த இணையதளத்தில், காணாமல் போனவர்களின் பட்டியலும், புகைப்படங்களும் வெளியிடப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

இந்த இணையதளம் மூலமாக பொதுமக்கள் தங்கள் புகார்கள் குறிப்பாக கிரிமினல் குற்றங்கள், நில மோசடி, விபத்துகள் மற்றும் நமது கருத்துகள் போன்றவற்றை பதிவு செய்யலாம். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள், சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்லைனில் நமது புகார்களை பதிவு செய்யும் முறை : (ONLINE  PETITION  FILING)

1. இதற்கு முதலில் http://www.tnpolice.gov.in/ இந்த லிங்கில் செல்லுங்கள். 
2. அதில் கிளிக் செய்து தஞ்சாவூர் மாவட்டத்தை தேர்வு செய்து அதில் நம்முடைய புகார்களை பதிவு செய்துகொள்ளலாம். 
3. மேலும் நமது புகாரின் நிலவரத்தையும் அதில் அறிந்துகொள்ளலாம். 
4. நாம் பதியும் புகார் நமது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ( Superintendent of Police )அவர்களின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
5. சகோதரர்களே, கோரிக்கையில் பதியும் விவரங்கள் அனைத்தும் குறிப்பாக நமது பெயர், தொலைப்பேசி எண்கள், புகாரின் தன்மை போன்றவை உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். 

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்.....

பொய்...! 37

அதிரைநிருபர் பதிப்பகம் | June 27, 2012 | , ,


ஒரு மனிதன் தானும் தன்னைச் சார்ந்தவரும் செய்கின்ற தவற்றை மறைப்பதற்காகவும், தன்னை சமூகத்தில் “நல்லவன்” போல் காட்டிக்கொண்டு அதை மற்றவர் முன் நடித்து வெளிப்படுத்துபவர்களும் பயன்படுத்தும் ஆயுதமே “பொய்” 

சிலருக்கு பொய் கூறுவதென்பது குற்றால அருவியிலிருந்து நீர் கொட்டுவது போல் அவ்வளவு சுலபமாக வரும். எதற்கெடுத்தாலும் நூர் லாட்ஜ் கடை “ஹல்வா” போல பொய்யைத் தயாராக வைத்திருப்பார்கள். இவர்களுக்கு தங்களின் பொய்யினால் காரியத்தை சாதித்து விட்டோம் என்ற “கெத்து” வேறு. ஒருவன் “பொய்” சொல்லும் போது அவனின் கண் புருவங்களையும், உதட்டையும் கவனித்தாலே போதும்......காட்டிக்கொடுத்து விடும்.

1. விளையாட்டுக்காகவும், அடுத்தவர்களை சிரிக்க வைப்பதற்காகவும் பொய் சொல்பவரும் சரி.............

2. இல்லாத ஒன்றை மிகைப்படுத்தி தன்னிடம் இருப்பதாக கூறிக்கொள்பவரும் சரி..............

3. தன்னிடம் இருக்கும் ஒன்றை இல்லாதது போல் காட்டிக்கொள்பவரும் சரி...............

4. வீட்டில் இருந்துகொண்டே இல்லை என அவரிடம் சொல் என சொல்பவரும் சரி.............

5. ஒரு பொய்யைச் சொல்லி அதை மறைப்பதற்கு மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்பவரும் சரி.............

6. சமூகத்தில் தன்னை உயர்த்திக் காட்டுவதற்காக பொய் சொல்பவரும் சரி.............

7. வியாபாரத்திற்காக பொய்யை மூலதனமாக பயன்படுத்துபவர்களும் சரி............

8. பொய்யானக் காரணத்தைக் கூறி கடன் கேட்பவர்களும் சரி.............

9. பிறருக்காக சாட்சி சொல்லும்போது பயன்படுத்துபவர்களும் சரி...............

10. இறைவன் மீது பொய் சத்தியம் செய்பவர்களும் சரி..............

என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

பொய் சொல்பவனுக்கு தான் சொன்ன ஒரு பொய்யை மறைக்க பல மடங்கு பொய்கள் சொல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு, இதனால் யாருக்கு எந்த இடத்தில் என்ன சொன்னோம் என்பதும் மறந்து, வாழ்க்கையில் சிக்கலான நிலை ஏற்படக்கூடிய அபாய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். 

மேலும் பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் ஒரு தீயச்செயலாகும். இப்படி தனி மனித ஒழுக்கத்திற்கும், பிறர் நலனுக்கும் கேடுவிளைவிக்கும் இத்தகைய ஈனச்செயலை விட்டொழிக்க முன்வர வேண்டும்.

இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட சூழல்கள் :

அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் பொய் பேசுவது என்பது அனைத்து விஷயங்களிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட கீழ்கண்ட மூன்று விஷயங்களில் அளவுக்கு மீறாமல் பொய் அனுமதிக்கப்பட்டுள்ளது, அதாவது எந்த மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் நஷ்டமோ அல்லது குழப்பமோ அல்லது தீமையோ ஏற்படாது என்றிருந்தால்

1. போரின் போது.....
2. சண்டையிட்டுக் கொள்ளும் இருதரப்பினரை சமாதானப்படுத்த.....
3. ஒரு கணவன் தன் மனைவியிடமும், மனைவி தன் கணவனிடமும் அன்பையும், பாசத்தையும், பரிமாறிக்கொள்ள.....

போன்றவற்றிற்கு கூறிக்கொள்ளும் பொய் அனுமதிக்கப்பட்டதாகும்.

அல்லாஹ் நம் அனைவரையும் அவன் வகுத்த நேரான வழியில் வாழ துணை புரிவானாக ! ஆமின் !

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்....

இலவசம் - முந்துங்கள் ! 42

அதிரைநிருபர் பதிப்பகம் | June 17, 2012 | , ,


சமூகத்தில் காலம்காலமாக “இலவசம்” என்ற பெயரில் பொதுமக்களிடயே வழங்கப்பட்டு வரும் பொருட்களால் சமுதாயத்தின் நிலைகள் மாறிக்கொண்டே வருகிறது என்றுச் சொன்னால் மிகையாகாது.

ஆம்....! பிறப்பு முதல் இறப்பு வரை எத்துணை இலவசங்கள் ! 

1. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் செய்யும் அறிவிப்பாகிய “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவற்றையெல்லாம் இலவசமாக வழங்குவோம்” என்பதாகட்டும்................

2. தேர்தல் நடக்கும் முந்திய நள்ளிரவில் பொதுமக்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகை, பரிசுப்பொருளாகட்டும்...............

3. இலவசப் பொருட்கள் வழங்க “நமது தலைவர்” வருகிறார் என்ற கட் அவுட் அறிவிப்பாகட்டும்................

4. புதிய கடையின் திறப்பு விழாவின்போது கொடுக்கும் இலவசமாகட்டும்.................

5. ஒரு பொருள் எடுத்தால் மற்றொன்று இலவசம் என்ற அறிவிப்பாகட்டும்.................

6. நூறு சதவீத பொருள் வாங்கினால் கூடுதலாக இருபது சதவீதம் இலவசம் என்ற அறிவிப்பாகட்டும்................

7. பண்டிகைக்கால தள்ளுபடியாகட்டும்...................

8. இன்று ஒரு நாள் மட்டும் எதை எடுத்தாலும் பாதி விலை ( ?! ) என்ற அறிவிப்பாகட்டும்................

9. ஒரு மனை வாங்கினால் இன்னொன்று இலவசம் என்பதாகட்டும்..............

10.  நூறு ரூபாய்க்கு டாப் அப் செய்தால் நூற்றுஐம்பது ரூபாய்க்கு டாக் டைம் என்பதாகட்டும்..................

இப்படி இலவசங்கள் சமூகத்தில் ரொம்ப மலிவாகக் காணப்படுகிறது.

“இலவசம்” என்பதின் பொருள் உங்களிடம் ஒன்றை வழங்கிவிட்டு மற்றொன்றை அதாவது அவர்கள் எதிர்பார்க்கும் ஒன்றை உங்களிடமிருந்து மறைமுகமாகப் பெறுவதே.

அரசால் தேவையானவர்களுக்கு இலவசங்கள் வழங்குவதில் தவறில்லை என்றாலும், உழைத்து பிழைக்கக்கூடிய வாய்ப்புள்ளவனுக்கும், வசதி படைத்தவனுக்கும் இலவசங்களைக் கொடுப்பது, அவனை சோம்பேறியாக்கிவிடுகிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அரசால் வழங்கப்படும் அனைத்து இலவசங்களும் நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வரிகளாகிய Professional Tax, Sales Tax, Central Sales Tax, Custom Duty, Income Tax, Dividend Distribution Tax, Excise Duty , Municipal & Fire Tax, Staff Professional Tax, Cash Handling Tax, Food & Entertainment Tax, Gift Tax, Wealth Tax, Stamp Duty & Registration Fee, Interest & Penalty, Road Tax, Toll Tax , Vat  & etc போன்றவற்றின் மூலமாக கிடைக்கும் பணமே. அதாவது ஒருவர் பயன்பெற மற்றொருவர் தோளில் சுமக்கும் நிலை.

“பசியோடு இருப்பவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது” என்பது பலமொழி ஒரு மீனைக் கொடுத்தால் அவனுக்கு ஒரு வேலை பசியாற்றிவிடலாம். அந்த நிமிடத்திலேயே அவனை அடுத்தவர்களிடம் கையேந்தவும் பழக்கிவிடுகிறோம். இது மட்டுமல்லாமல் மீனை பரிதாபப்பட்டு கொடுப்பவனுக்கும் இதனால் வீணான செலவு. இதைத்தவிர்த்து அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் அதன் மூலம் அவன் பிடிக்கும் மீனை அவன் சாப்பிடும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி. நான் பிடித்த மீன் இது ! என்ற நினைவில் மகிழ்ச்சி பொங்கச் சாப்பிடுவான். இலவசமாகக் கிடைத்த மீனை சாப்பிடுவதைவீட, அவன் உழைத்து பிடித்த மீனைச் சாப்பிடும்போது கிடைக்கும் ருசியே தனி.

இன்று பயன்படுத்தப்பட வேண்டிய உழைப்பை நாளை நாம் பயன்படுத்தலாம் என்பதை தூக்கி தூர வைத்துவிட்டு அன்றைய தினம் பயன்படுத்தாத உழைப்பு என்றைக்கும் வீணானது என்பதைக் கருத்தில் கொண்டு இறுதிவரை போராடிக் கடுமையாக உழைப்பதன் மூலமே வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும். நீங்கள் உழைக்கும்போது சில தோல்விகள் வரத்தான் செய்யும் தோல்விகள் இல்லாமல் வெற்றி இல்லை. எனவே தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். 

கடின உழைப்பே உயர்வான வெற்றிக்கு வழி !

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

புத்தக வெளியீடு மற்றும் கல்வி விருது 40

அதிரைநிருபர் | June 07, 2012 | , ,


இன்று 07-06-2012 மாலை 04:30 மணியளவில் அதிரை பிலால் நகரில் அமைந்துள்ள சகோதரர் சேகன்னா M.நிஜாம் அவர்களின் இல்லத்தில் அதிரை அனைத்து முஹல்லவின் 6வது கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வின் முத்தாய்பாக, அதிரை ஊடகவியளார்களில் விழிப்புணர்வு சார்ந்த பயனுள்ள தகவல்களை முன்னின்று தரும் சகோதரர் சேகன்னா M. நிஜாம் அவர்களின் 'விழிப்புணர்வு பக்கங்கள்' புத்தக வெளியீடு மற்றும் சகோதர இணையதளம் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக 2011-12 கல்வி ஆண்டிற்கான முதல் கல்வி விருது பொது தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.


புத்தக வெளியீட்டு புகைப்பட காட்சிகள்


அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி விருது 2011-12 காட்சிகள்.








மேலும் தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள் சகோதர வலைத்தளம் அதிரை எக்ஸ்பிரஸில் காணலாம்.
விருது பெற்ற மாணவமணிகளுக்கு அதிரைநிருபர் குழு சார்பாக வாழ்த்துகிறோம்.
- அதிரைநிருபர் குழு

கொசு(றுச்) செய்தியானாலும் இது உசுரு மேட்டரு ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | June 05, 2012 | , , , , ,

“விடாமல் துரத்திக்கடிக்கும் கொசுக்களை, ஒரு வாய்ப்பு கிடைத்து போட்டுத்தள்ளும்போது இருக்கும் சுகமே அலாதிதான்“

ஆம்....தண்ணீருக்கு அடுத்தபடியாக நோய்களை பரப்புவது கொசுவே. டெங்கு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற பயங்கர வியாதிகளை கொசுக்கள் பரப்புகின்றன. இது தவிர பலவித வைரஸ்களை பரப்புவதன் முலம் வேறு சில வியாதிகள் தொற்றவும் காரணமாக இருக்கின்றன.

1. கொசு(க்) கடித்தவுடன் அந்த இடத்தில் அரிப்பு ஏற்படுவது ஏன் ? 
2. மேலும் அந்த இடம் வீங்குவது ஏன் ?
3. கொசு ஒரு நேரத்தில் எவ்வளவு ரத்தம் உறிஞ்சும் ?

இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலாக...............

மனிதர்களை கடிப்பதற்கு கொசுவிடம் பற்கள் கிடையாது. உண்மையில் கொசு கடிப்பதில்லை. அதன் தலைப்பகுதியில் ஊசி போன்ற கூர்மையான குழல் பகுதி உள்ளது. அந்த ஊசி மூலம் ரத்தத்தை உறிஞ்சும் போது அது உறைந்துவிடக்கூடாது என்பதற்காக தனது எச்சில் போன்ற திரவத்தை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள ரசாயனம் தோலில் பட்டதும் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்துகிறது.

ரத்தம் உறிஞ்சும் அளவு ஒவ்வொரு கொசுவுக்கு கொசு மாறுபடும். இருப்பினும் ஒரு கொசு தனது உடல் எடையில் ஒன்றரை மடங்கு அளவு ரத்தத்தை உறிஞ்சும். சராசரியாக ஒரு கொசு 2.5 மில்லி கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

இந்த கொசுக்களால் மனித இனம் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்சமல்ல. உலகில் 40 சதவீதம் பேருக்கு டெங்கு காய்ச்சல் கொசுக்கள் முலம் பரவுகிறது. ஆண்டு தோறும் 10 கோடி பேர் பாதிப்புக்குள்ளாவதில் ஏறக்குறைய 22 ஆயிரம் பேர் பாதிப்பு அதிகமாகி இறந்துவிடுகிறார்கள். குறிப்பாக “ஏடிஸ்” இன கொசுக்களே இதற்கு காரணமாகும்.

மனிதர்களின் உயிரையே பறிக்கும் மிகவும் அபாயகரமான நோய்களை வேகமாக உண்டாக்குவதில் கொசுக்களுக்கே முதலிடம். கொசுக்களிடமிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வது நமது நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது. குறிப்பாக குழந்தைகள் இதனால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். 

ஒரு கொசுவின் இனப்பெருக்க காலத்தில் அது ஆயிரக்கணக்கான கொசுக்களை உற்பத்தி செய்து விடுகிறது. எனவே கொசுக்களை முற்றிலும் ஒழிப்பது என்பது சாத்தியமில்லாதது. ஆனால் அவற்றின் உற்பத்தியைக் குறைக்க முடியும். கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாவதற்கு நாமே காரணமாக இருக்கிறோம். 

இயற்கையாக கொசுக்களின் உற்பத்தியை ஓரளவு தடுப்பது எப்படி ?

1. வீட்டின் பின்பகுதியில் தண்ணீரைத் தேங்க விடுவது கூடாது. நீர் தேங்கும் இடங்களில் பிளிச்சிங் பவுடரை இடலாம் மற்றும் பினாயிலையும் ஆங்காங்கே தெளிக்கலாம்
.
2. சுத்தம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாதது சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருத்தல் கூடாது.

3. தெருக்களில், குளம் குட்டைகளில் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவது உள்ளிட்ட சில காரணங்களால் கொசுக்களின் உற்பத்தி பல மடங்காகி விடுகிறது. இதை முதலில் நிறுத்த வேண்டும். 

எனவே இயற்கையாக கொசுக்களின் உற்பத்தியைத் முழுவதுமாக தடுக்க முடியாவிட்டாலும், கொசுவின் உற்பத்தியைத் ஓரளவு தடுக்கும் விதத்தில் நாம் செயல்பட முயற்சி செய்யவேண்டும். 

செயற்கையாக கொசுக்களின் “கடி” யை தடுப்பது எப்படி ?

1. சீன தேசத்தில் உள்ள Ningbo, Foshan, Shunde போன்ற மகாணங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிற Electronic Insect Killer Machine, Insect Killer Bat மற்றும் இன்றைய காலக்கட்டங்களில் வந்துள்ள பல நவீன எலக்ட்ரானிக் சாதனங்கள் போன்றவைகளையும் பயன்படுத்தலாம்.

2. மேலும் Electronic Spray, Insect Killer Liqued, Coil போன்றவைகளையும் பயன்படுத்தலாம். ஆனால் இவைகள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது என்ற ஒரு கருத்தும் மருத்துவத்துறையில் நிலவுகிறது.

மேலும் கொசுத்தொல்லையை ஒழித்திட, நமது பேருராட்சியை அணுகி அவர்களை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் / மாவட்ட மலேரியா ஒழிப்பு அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க அன்புடன் கேட்டுக்கொள்ளலாம்.

-சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்....

‘விழிப்புணர்வு பக்கங்கள்’ - புத்தகம் வெளியீடு அறிவிப்பு 20

அதிரைநிருபர் பதிப்பகம் | May 31, 2012 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும்! (வரஹ்)...

எல்லாப் புகழும் இறைவனுக்கே !

நமது சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, விழிப்புணர்வைத் தூண்டும் விதமாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டுரைகளை எளிய வடிவில் அமைத்து,  நமதூரைச் சார்ந்த சகோதரர்களின் இணையதளம் மற்றும் வலைப்பூக்கள் போன்றவற்றில் பதிந்துவருகின்றவற்றில் கீழ்க்கண்ட கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, ‘விழிப்புணர்வு பக்கங்கள்’  என்ற பெயரில் என் முதல் நூலாக வெளியிட ஏற்பாடு செய்துள்ளேன். ( இன்ஷா அல்லாஹ் ! )


1. சீட்டுக் கட்டு ராஜா !
2. ரேஷன் கடைகளில் முறைகேடா ?
3. லஞ்சமா ?
4. கலெக்டரிடம் புகார் செய்ய !
5. தகவல் அறியும் உரிமைச் சட்டம்
6. கவனம்: நிலம் வாங்கும் முன் !
7. பேரூராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் ?
8. கொசு(த்) தொல்லையிலிருந்து விடுபட...
9. கலப்படம் – ஓர் எச்சரிக்கை !
10. சிட்டுக் குருவியைக் காணவில்லை !
11. வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு !
12. வேலைவாய்ப்பு ! ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?
13. V.A.O. வின் பணிகள் யாவை ?
14. புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி ?
15. தண்ணீர் சேமிப்பீர் !
16. அதிரைக் கடல் !
17. குடிக்காதே !
18. அதிரையின் விருந்து உபசரிப்புகள் !
19. மந்திரவாதி !
20. TEEN AGE – பருவம் !
21. கள்ளக் காதல் !
22. மரணத்தின் நிரலாக.....!
23. பயண அனுபவங்கள் 

1. எனக்கு ஊக்கம் கொடுத்து, நல்ல பல ஆக்கங்களைப் பெறும் விதமாகப் பின்னூட்டமிட்டும், நேரிலும், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு அன்பைக் காட்டிய உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நண்பர்கள், உறவினர்கள், சகோதர சகோதரிகள் மற்றும் சகப் பதிவர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகளை அன்புடன் அறிவித்தவனாக.!

2. பல வேலைகளுக்கிடயே எனக்காக நேரத்தை ஒதுக்கி, இந்நூலில் உள்ள எழுத்துப் பிழைகளைச் சரிசெய்து தந்ததோடு, நல்ல ஆலோசனைகளை வழங்கிய மூத்த சகோ. அதிரை அஹமது அவர்களுக்கும், எனக்கு ஊக்கம் கொடுத்ததோடு, நல்ல பல ஆலோசனைகளை வழங்கிய மூத்த சகோ. ஜமீல் M.ஸாலிஹ், மற்றும் வலைத் தள நிர்வாகிகள், சக பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளை அன்புடன் அறிவித்தவனாக.!

3. மேலும் எண்ணற்ற வலைத் தள நண்பர்களை உருவாக்கித் தந்து, எழுத்து மற்றும் எழுத்து சார்ந்த நல்ல பல விசயங்களை நான் மேலும் கற்றுக்கொள்ள நல்ல அடித்தளமாக அமைத்துக் கொடுத்த நமது அதிரைச் சகோதரர்களின் வலைத்தளங்கள் மட்டுமே என்றால் மிகையாகாது ! நாம் அதிகமாகப் பேசாவிட்டாலும் நமது எழுத்துகள் கண்டிப்பாக அடுத்தவர்களை விழிப்புணர்வு பெறவைக்கும் (இன்ஷா அல்லாஹ்!) என்ற நம்பிக்கையில்.! 

4. இது ஒரு இலவச வெளியீடாகும். எனது சொந்தச் செலவில் முதல் பதிப்பாக ஆயிரம் பிரதிகள் அச்சிடுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளேன் என்பதையும்.!

5. இந்நூலை நமதூரிலும் வெளிநாடுகளில் உள்ள நமது சமுதாயம் சார்ந்த பொது அமைப்புகளிடமும் வழங்கி, வெளியிட ஏற்பாடு செய்து, அதன் மூலம் கிடைக்கப்பெறுகிற நிதியை அந்தந்தப் பொது அமைப்பின் சமுதாயச் சேவைகளுக்கென்று பயன்படுத்திக் கொள்வதற்கும் கேட்டுக்கொள்ளலாம் என எண்ணியுள்ளேன். இதற்காகத் தங்களின் மேலான கருத்துகள் – ஆலோசனைகளை எதிர்பார்த்தவனாக.!

6. மேலும் நமது இணையதள வாசகர்கள் படிப்பதற்கு இலகுவாக நமது சகோதர வலைத் தளங்களில் “நூல் வடிவில்” (E-BOOK) பதிவேற்றம் செய்யப்படும் (இன்ஷா அல்லாஹ்!) என்பதையும்.!

7. இப்புத்தகம் மூலமாக நீங்கள் பெறப்போகும் பயனை உங்கள் மூலமாகப்  பலரும் இலவசமாகப் பெறுவதற்கு நீங்கள் மறுபதிப்பு செய்து வெளியிட எனக்கு முழு சம்மதம் என்பதையும்.!

8. இப்புத்தகத்தின் பாகங்கள் ஒன்று இரண்டாகி, மூன்று நான்காகி........என சக பதிவர்களின் சமுதாய விழிப்புணர்வு கட்டுரைகள் பங்களிப்புடன் தொடர வேண்டும் என்பதையும்.!

இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். 

அன்புடன்,

-சேக்கனா M. நிஜாம்

தலைவர் யார் ? ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | May 22, 2012 | , ,


1. நானே பெரியவன்..... நானே சிறந்தவன்......என்னைவிட உயர்ந்து வர ஒருவன் பிறந்து வரனும் என்று தன்னைத் தானே எப்போதும் உயர்த்தி பேசுவது

2. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாதது

3. எதிர்மறையாகச் சிந்திப்பது

4. பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது.

5. தோல்வியைக் கண்டு முடங்கிவிடுவது

6. அடுத்தவர் வேலைகளில் குறுக்கீடு அல்லது குறைகள் சொல்வது

7. தன்னை அடுத்தவர் புகழக்கேட்டு மனம் மகிழ்வது.

8. சிறியப் பிரச்சனைகளை ஊதிப் பெரிதாக்குவது. அடுத்தவர்கள் மீது பழிபோடுவது

9. மலிவான விளம்பரங்களைத் தேடிக்கொள்வது

10. பதவி...! பதவி...!! பதவி...!!! என்ற நினைவில் வாழ்வது 

போன்ற தீய எண்ணங்களைத் தூக்கி தூர வைத்துவிட்டு

நல்லப் பண்புகளாகிய.............

1. எளிமையாக வாழ்தல்

2. ஒழுக்கம், கட்டுப்பாடு, நல்ல நட்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமை, அன்பு செலுத்துதல், கடமையை நிறைவேற்றுதல் ( இஸ்லாம் )

3. வேகமாகச் செயல்படுதல்

4. எப்பொழுதும் நேர்மையாக செயல்படுதல்

5. தொடர்ந்து கற்றுக்கொண்டே இருத்தல்

6. மூத்தோர்களின் நல்ல அனுபவங்களைப் பெறுதல்

7. ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுதல்

8. தீர்க்கமான முடிவு செய்தல்

9. வீண் விரயத்தைக் குறைத்தல்

10. தரத்தை மேம்படுத்துதல்

11. திட்டமிடுதல்

12. முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை வழங்குதல்

13. எளியோருக்கு உதவுதல்

போன்றவற்றை வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்வில் நிச்சயம் மேன்மை அடைவீர்கள். இதற்கு சிந்தனையைத் தூண்டும் ஒரு எடுத்துக்காட்டை தங்களுக்கு கூற விரும்பிகிறேன்.....

நூறு பேர் கூடியிருந்தக் கூட்டத்தில் ஒரு பேச்சாளார் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டைக் காட்டி “யாருக்கு இது பிடிக்கும் ? ” எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தனக்கு பிடிக்குமென கையைத் தூக்கினர். பேச்சாளாரோ “உங்களில் ஒருவருக்குத்தான் இந்த ஆயிரம் ரூபாயைத் தருவேன் ஆனால் அதற்கு முன்” எனச் சொல்லியவாறு அந்த ஆயிரம் ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா ?” என்றார். “ஆம்“ என்று அனைவரும் கையைத் தூக்கினர். 

மீண்டும் அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா ?” என்றார் “ஆம் “ என்று அனைவரும் மீண்டும் கைகளை தூக்கினர். 

அவர் தொடர்ந்தார்.....கேவலம் ஒரு ஆயிரம் ரூபாய்த்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும் , தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கின்றோம். நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருத் தனித் தன்மையை “அல்லாஹ்” நமக்கு வழங்கியுள்ளான். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. ஆகையால் நாம் ஒவ்வொருவரும் செய்யும் நல்ல செயல்களின் மூலம் சிறந்தவன், ஒழுக்கமானவன், தலைமை வகிக்க தகுதியானவன் போன்ற சிறப்பைப் பெறுகின்றோம்...... 

நீங்கள் ஒருவருக்கோ அல்லது நூறு பேருக்கோ சிறந்தவனாகவோ அல்லது தலைவனாகவோ இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி தன்னம்பிக்கையை இழக்காமல் நல்ல பண்புகளைத் தேர்ந்தெடுத்துக் கடைப்பிடியுங்கள். சமூகத்தில் நல்லவர்கள் எண்ணிக்கை கூடுதலாக வருவதற்கு நீங்கள் ஒரு காரணமாக இருப்பீர்கள் ( இன்ஷா அல்லாஹ் ! )

-சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்....

கள்ளக்காதல் ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | May 15, 2012 | , ,


ஒருவர் இன்னொருவரை ஏமாற்றி போலியான உறவுமுறையை ஏற்படுத்திக்கொண்டு தங்களின் அற்ப உடல் இச்சையை தனித்துக் கொள்வதையே “கள்ளக்காதல்” என சமூகத்தால் குறிப்பிடப்படுகிறது, ஏன் இதுவும் விபச்சாரமே !

1. மனிதாபிமானம், அன்பு, பாசம், குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் என்று எதையுமே பொருட்படுத்தாமல் சுயநலம், சபலம், காமம், துரோகம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் கேடு கெட்ட மனிதர்கள் ஒரு வகையாகவும்.

2. கணவன் கடல் கடந்தோ அல்லது ஊர்விட்டு ஊர் சென்று எங்கெல்லாம் போய் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கையில் இங்கே கள்ளக்காமுகனோடு தொடர்பு ஏற்படுத்தி அவர்களின் போலியான அன்பையும், பாசத்தையும் உண்மை என நம்பி தனது குடும்ப அந்தரங்க ரகசியங்களைச் சொல்லி அவர்களிடம் ஏமாந்து போனவர்கள் மற்றொரு வகையாகவும்.

3. பிள்ளைகள் கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம். கல்லூரி, ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங் கிளாஸ், ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, கிளப், பஃப்பே, இன்பச்(!!?)சுற்றுலா என்று போகும் இடங்களில் அவர்கள் “காதல்” எனும் கர்ம வலையில் சிக்கிக்கொண்டு இந்த இனம்புரியாத வயதில் சின்னா பின்னமாகி போனவர்கள் ஒரு வகையாகவும்.

4. பொழுதைப் போக்குகின்ற விழாவில் ஏற்பட்ட சந்திப்பு, அலைபேச் எண்கள் பறிமாற்றம், இணையத் தொடர்புகள் மூலம் ஏற்பட்ட தொடர்பு போன்றவற்றால் வீட்டை விட்டு ஓடிப் போனவர்கள் இன்னொரு வகையாகவும்.

5. குடும்ப உறுப்பினர்கள், அக்கம்பக்கத்தினர் சிலரால் ஏற்பட்ட முறையற்ற தொடர்பைக் கொண்டுள்ளவர்கள் மற்றொரு வகையாகவும்.

என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இவ்விசயத்தில் சிந்தித்து செயல்பட வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் மிக மிக அவசியம்.

தங்கள் பிள்ளைகளுக்கு மார்க்கத்தை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய உறுதுணையாக இருங்கள். தங்களின் பொறுப்பை மறந்து, தங்களது பிள்ளைகளுக்கு ”செல்லம்” ”பாசம்” “ஃபேஷன்”  என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாக இருக்க வேண்டாம்.

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தொழுகையை நிலை நிறுத்தும்படி அடிக்கடி ஏவுங்கள், அதனை நினைவூட்டிக் கொண்டே இருங்கள் ”தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் பாதுகாக்கும்” இந்த நபி மொழியை அறியாத அதிரையர் யாரும் உண்டா ? அப்புறம் ஏன் இரட்டை வேடம் !??

பெற்றோர்களே !! உங்கள் பிள்ளைகளை நரகத்தின் தீயிற்கு இறையாக வளர்க்காதீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் நிலைக்கு ஆகிவிடாதீர்கள். இவ்வுலகில் - நாகரிகத்தையும், கவுரவத்தையும், அந்தஸ்தையும் விட,

ஈமான் (இறை நம்பிக்கை)
மானம்
மரியாதை 
குடும்ப நலன்

இவைகள் அனைத்தையும் விட தூய்மையான இறையச்சம் அதி முக்கியம். 

அல்லாஹ். நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக! ஆமீன்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

மந்திரவாதி ! 28

அதிரைநிருபர் பதிப்பகம் | May 09, 2012 | ,


ஒருவர் தனக்கோ அல்லது தன்னைச் சார்ந்தவருக்கோ அல்லது அவருக்கு எதிரியாகக் கருதப்படுகிற இன்னொருவருக்கோ..........

1. கை கால்களை முடக்கிக் காண்பிக்கிறேன் பார்......... இல்லை... இல்லை முறித்துக் காண்பிக்கிறேன் பார்............. 

2. என்னை சீண்டி விட்டான்.......அந்த “படுவா”வை சும்மா விட மாட்டேன் அவனுக்கு மர்ம நோயை உண்டாக்கி வாயிலிருந்து இரத்தம் இரத்தமாக கக்க வைக்கிறேன் பார்..........

3. ஐயோ....என்னை சீக்கில் படுத்த படுக்கையாய் படுக்க வைத்துவிட்டார்களே ! நான் குணமாக வேண்டுமே.........

4. அந்த கஷ்டத்தை ஏங்க கேக்கிறிய......என் மாப்பிள்ளை கடந்த அஞ்சு வருசமா என்னிடம் பேசாம இருக்கிறார். அவர் என்னிடம் பாசம் நேசமாக இருக்க வேண்டும். பணங்காசு அள்ளி அள்ளி அனுப்ப வேண்டும் அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்........... 

5. எனது மகன் படித்துவிட்டு வேலை வெட்டியில்லாமல் சும்மா ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறான். அவன் வெளிநாடுச் செல்ல வேண்டும். அவனுக்கு சீக்கிரம் “விசா” கிடைத்து லட்சம் லட்சமாக அங்கே சம்பாதிக்க வேண்டும் அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்.... 

6. எனது பிள்ளைக்கு வயது கடந்து விட்டது. நல்ல “வரன்” கிடைத்து கால நேரத்தோடு அவனுக்கு/அவளுக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும். அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்....

7. எனது குழந்தைக்கு “காய்ச்சலுங்க” ராத்திரியான அழுகையை நிறுத்த மாட்டேன்ங்குதுங்க அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்....

8. விலை மதிப்புள்ள அந்த நிலத்தை அவர்களிடமிருந்து சுலபமாக குறைந்த விலையில் எழுதி வாங்க வேண்டும். அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்....

என இதுபோன்றவற்றைச் சொல்லி, பலர் நாடிச்செல்வது மார்க்கத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகிற மந்திரவாதியையே....

மந்திரவாதியோ............

1. நான் அனைத்தையும் வசப்படுத்தி வைத்துள்ளவன்.

2. அவன் வயிற்றிலிருந்து முட்டை வரவழைத்து அவனைக் குணமாக்கி காண்பிக்கிறேன் பார்......இல்லை...இல்லை அவனுக்கு நோயை ஏற்படுத்தி காண்பிக்கிறேன் பார்......

3. பைத்தியமாக்குவது / பைத்தியத்தை தெளியவைப்பது

4. கணவன் மனைவியைப் பிரிப்பது / சேர்ப்பது

5. திருமணம் நடைபெற / தள்ளிப்போட

6. பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கொடுப்பது / தடுப்பது

7. வியாபாரம் செழிப்பாக வளர / முடக்க 
8. காணாமல்போன பொருளைக் கண்டுபிடித்துத் தருகிறேன் பார் எனச்சொல்லி பொருள் “அங்கே உள்ளது”.... “இங்கே உள்ளது”.....என்ற பொய்யைச் சொல்லி உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் போன்றவர்களிடேயே சண்டையை வளர்த்து விடுவது

9. பிள்ளைகளுக்குப் படிப்பை வரவழைக்கிறேன் பார்..... வேண்டும் என்றால் அவர்களை “பாஸ்” ஆக்கி காட்டுகிறேன் எனச் சொல்வது.

10. உனது மகனுக்கு ஒரே மாதத்தில் வெளிநாடு விசா வரவழைத்துக் காண்பிக்கிறேன் பார்........நல்ல வேலை கிடைக்க வைக்கிறேன் பார்......

11. உனக்கோ, உன் வீட்டிற்கோ பேய், பிசாசுகள் அண்ட விடாமல் தடுக்கிறேன் பார்........

12. பயத்தை போக்கி காட்டுகிறேன் பார்................

என இதுபோன்றவற்றைச் சொல்லி நமது சமுதாய பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் மந்திரவா(வியா)திகள். 

இன்னும் எத்தனை காலத்திற்கு நமது சமுதாயம் இணைவைப்பிலும் மூட நம்பிக்கையிலும் தங்களுடைய மூளையை அடகு வைத்துக் கொண்டிருக்கும். இந்த நம்பிக்கையின் மூலமாக எதை சாதித்துக் கொண்டார்கள் ? மேலும் இந்த தவறான நம்பிக்கையின் மூலமாக இந்த அறியாத மக்கள் பயனடைந்தார்களா ? அல்லது தங்களுடைய பொருளாதாரத்தை இழந்தார்களா ? இந்த அறியாமையைப் பயன்படுத்தி காசு பறிக்கும் கொள்ளைக் கூட்ட கும்பலை நாம் அடையாளம் காண வேண்டும். 

செய்வினை, சூனியம், தாயத்து என்று ஏமாற்றும் போலி மந்திரவாதிகளை சமுதாயத்திலிருந்து விரட்டி அடிக்க வேண்டும் . இவர்களால் பயனடைந்தவர்களை விட தங்கள் பொருளாதாரத்தையும் நேரத்தையும் அறிவையும் இழந்தவர்கள் தான் அதிகம் . எனவே நம் சமுதாய மக்கள் இவைகளின்பால் தங்கள் கவனத்தை செலுத்தாமல் அல்-குர்-ஆனை  ஓதுவதிலும் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை ஆழ்ந்து சிந்திப்பதிலும் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களின் வாழ்க்கை வழிகாட்டுதல்களில் இருந்து பெறப்படும் செய்திகளை அறிந்து அதன்படி நடப்பதிலும் நமது சமூதாயம் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களையும் உண்மையான  முஸ்லிம்களாக வாழ்ந்து மரணிக்க செய்வானாக ! ஆமீன் !

-சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்.......

“உம்மம்மா“ நான் பாஸாயிட்டேன் ! - 15

அதிரைநிருபர் பதிப்பகம் | May 03, 2012 | , , , , ,

ஒரு சகோதரனின் டைரியிலிருந்து.... !

"டேய் எழுந்துருடா.........என் கண்ணான வாப்பா........... "

என மெல்லிய குரலில் சப்தமிட்டவாறே.....

காதில் அலுக்கத், கழுத்தில் அஷரப் காசுமாலை, பொட்டிப்பீஸ் மேத்துணி, ஜெமிலாப்பத்தை வேட்டி...

என அணிந்திருந்த உயரமான திடகாத்திரமான உருவம் ஓன்று நிழலாக நின்றது அந்த சுபுஹு நேரத்தில், பட்டென்று கண்விழித்துப் பார்த்தல் அருகில் என் “உம்மம்மா”

“உம்மம்மா இன்னிக்கி “டீசன்” இல்லம்மா “சனிக்கிழமை” 4 வது “C” சார் வரமாட்டாரும்மா” என்றேன்..........

அது இல்லடா இன்னிக்கு “ரெத்தனம்” தோப்பிலே தேங்காய் வெட்டு சீக்கிரம் குத்பா பள்ளி ஹஜரத்திட்டே “குரான்” ஓதிட்டு வந்துரு மகிழங்கோட்டை போவனும்..... எனச் சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் “அரிக்கன்”லைட்டை எனது கையில் தந்து வழியனுப்புகிறார். 

இங்கே எனது உம்மம்மாவைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் என் மீது அன்பு கலந்த பாசத்தை பொழியக்கூடியவர் மட்டுமல்ல எனது படிப்பின் மீது அதிக அக்கரை எடுத்துக்கொண்டு “குடும்பத்தில் முதல் பட்டதாரி” யாக உருவாக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு எனக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பவர்.

குரான் ஓதிட்டு வந்தவுடன் நானும் எனது உம்மம்மாவும் தோப்பிற்கு சென்றோம்.

அங்கே காத்திருந்த வெட்டுக்காரர்களிடம் “வேலையை சீக்கிரம் ஆரம்பிங்கையா” லேட்டாவுது எனச் சொல்லியவாறு அவர்களை துரிதப்படுத்திவிட்டு தேங்காய் குமித்து போடும் “பற்றறை” க்குச் செல்கிறார் என் உம்மம்மா.

அப்போது என்னருகே வந்து மெல்லிய குரலில் டேய் “வாப்பா”........இந்த தோப்பு உனக்குத்தாண்ட...........அதனாலே கவனமா எல்லாத்தையும் பார்த்துக்க என்றதும்............

ஆமா... ஆமா...வேலைக்காக பெரிசா “ஐஸ்”ல்லாம் தலையில் தூக்கி வைக்காதே..... என பதில்ச் சொல்லிவிட்டு 

தேங்காய் ஏதும் தாளைக்குள் விழுகிறதா ? வெட்டுக்காரர் ஒவ்வொரு மரத்திலும் தேங்காய்ப் பறிக்கிறாரா ? அது “நெத்து” க்காயா உள்ளதா ?

பாலை, பூக்கமலை போன்றவற்றை எடுத்து ஓரிடத்தில் சேர்த்தவாறே கண்காணித்துக் கொண்டுச் செல்கிறேன்.

தேங்காய் வெட்டி முடிக்கப்பட்டு வீட்டிற்கும் வந்துவிட்டோம்.

காலங்கள் பல உருண்டு ஓடின........................

இத்தனை நாள் பத்தாவது வரை யாரையும் பெயிலாக்க கூடாதுன்ற கவர்மெண்ட்டு சட்டம் ஒருபுறம் இருந்தாலும் ஒரு ஒரு வகுப்பாக கவனமாகப் படித்து பாஸாயி வந்து இப்ப பத்தாவது முழுப்பரிச்சையும் எழுதியாச்சு.............இனி ரிசல்ட்டுதான் “யா அல்லாஹ்” நான் பாஸாயிடனும் அதை முதலில் என் உம்மம்மாவிடம் சொல்ல வேண்டும் என மனதில் எண்ணியவாறே “மாலை மலர்” பேப்பர் வாங்க நம்ம MP காக்கா கடைக்கு ஓடுகிறேன்......

பேப்பரை வாங்கிப் பார்த்தவுடன் எனக்கு மகிழ்ச்சி காரணம் “நான் பாஸாயிட்டேன்”.............இரவு பகல் எனப் பாராமல் விடா முயற்சியுடன் கவனமாக படித்த எனக்கு மகிழ்வைத் தந்த அந்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக....... இம்மகிழ்ச்சியைப் எனது உம்மம்மாவிடம் பகிர்ந்துகொள்வதற்காக எனது வீட்டை நோக்கி ஓடுகிறேன்......

வீட்டின் அருகே உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என ஒரேக் கூட்டமாகக் காணப்பட்டார்கள். உள்ளேச் சென்றால் எனது “உம்மம்மா” கட்டிலில் படுக்கையாய் காட்சியளித்தார்....தம்பி உம்மம்மா ”மவுத்தா போச்சுடா” என என் காக்கா சொன்னவுடன் எனது அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் “உம்மம்மா நான் பாஸாயிட்டேன்”..... “உம்மம்மா நான் பாஸாயிட்டேன்”......என கத்தியவாறு அழுகிறேன்.......இதைக்கண்டவுடன் அருகே உள்ள எனது உறவினர்களும் கூடி அழுதனர்.

மாதங்கள் பல ஓடின..................

எனது உம்மம்மாவின் நினைவாக வீட்டில் உள்ள அந்த பொட்டகத்தை திறந்து ஒவ்வொன்றாய் பார்க்கின்றோம் எனது பெயருக்கு “ஹிப்பத்” செய்யப்பட்ட “ரெத்தனம்” தோப்பின் பத்திரம் அதில் இருந்தது.

தொலைந்த பொருளைத் தேடுவது போல் வாழ்க்கையில் “கல்வி”யை தேடிக்கொண்டே இருங்கள்.........அது நிச்சயம் உங்களுக்கு பலனளிக்கும் ( இன்ஷா அல்லாஹ் ! )

-சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

அசரவைக்கும் அதிரை விருந்து வைபவங்கள் ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | April 28, 2012 | , ,

அதிரையின் “விருந்து” உபசரிப்புகள் !

விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற ஊர்களில் நமதூரும் ஓன்று. நமதூரில் எவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகின்றன...............?

1. திருமண வலீமா விருந்து
2. வீடு குடிபுகுதல் விருந்து
3. விருந்தாளிகளுக்கு வைக்கப்படும் விருந்து
4. நண்பர்களுக்காக வைக்கப்படும் விருந்து
5. ஹஜ் செல்லும்போதும் / முடித்துவிட்டு வரும்போதும் வைக்கப்படுகின்ற விருந்து
6. பெருநாள் விருந்து

என விருந்துகள் உபசரிக்கப்படுகின்றது.


லுஹர்" தொழுகை முடித்தவுடன் வைபவங்கள் நடக்கும் வீட்டின் அருகிலேயே பந்தல் அமைக்கப்பட்டு அல்லது திருமண மண்டபங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இம்மதிய விருந்துகள் உபசரிக்கப்படுகின்றன. ஊரிலே “கலரிச் சாப்பாடு” என்றொரு பெயரிலும் இவற்றை அழைப்பதுண்டு. 

இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏழை, பணக்காரான் என்ற பாகுபாடுகள் இல்லாமல் தமிழகத்திலேயே “சஹனில்” (கூட்டாக) ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய ஊர்களில் நமதூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து கறி” என்று விருப்பமாக அழைக்கப்படும் இவ்வுணவை அனைவரும் விரும்பி சாப்பிடுவது கூடுதல் சிறப்பாகும். இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர் ரக அரிசியில் தயாரிக்கப்படுகிற கம கம மணத்துடன் நெய்ச் சோறு, செம்மறி ஆட்டுக்கறியில் கூடுதல் ஆயில் (! ! !) இட்டு தயாரிக்கப்படுகிற கறி ஆணம், நாவிற்கு சுவையைக்கூட்ட நாட்டுக் கத்தரிக்காயில் பச்சடி, உருளையில் குருமா, செரிமானத்திற்கு என்று சொல்லியே (!?) அனைவரும் விரும்பி பருகக்கூடிய புளியானம் ( ரசம் ) போன்றவைகள் ஒரு வகையாகவும்......

மற்றொன்று “பிரியாணி” நமதூருக்கே பெருமை சேர்க்கக்கூடிய உணவாகவும் அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணக்கூடியதாகவும் உள்ளது. இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர் ரக அரிசியில் சமமான அளவு செம்மறி ஆட்டுக்கறிச் சேர்த்து தயாரிக்கப்படுகிற “பிரியாணி” சுவையாகவும், நறுமண மிக்கதாகும் இருக்கும். மேலும் கூடுதலாக துண்டுகளிட்ட பொரிச்ச கோழி, வெங்காயத் தயிர் (சட்டினி) ஊறுகாய், எலுமிச்சை கலரி ஊறுகாய் போன்றவைகள் இவற்றில் இடம்பெற்றிருப்பது வயிறார உண்பதற்கு கூடுதல் சிறப்பாகும். 

“தால்ச்சா”...! இதன் ருசியே தனி, “ஐந்து கறி, “பிரியாணி” போன்ற சாப்பாடுகளுக்கு கூடுதல் இணைப்பாக இவை அதில் இடம்பெற்றிருக்கும்.

இனிப்பு வகைகளாக....................

1. சேமியாவில் தாயாரிக்கப்படுகிற “பிர்னி” 
2. “பீட்ரூட்”டில் தயாரிக்கப்படுகிற இனிப்பு 
3. கோதுமையில் தயாரிக்கப்படுகிற இனிப்பு 
4. ரவாவில் தாயாரிக்கப்படுகிற “கேசரி”
5. பேரிட்சை பழத்தில் தாயாரிக்கப்படுகிற இனிப்பு 

போன்றவற்றில் ஏதாவது ஓன்று “ஐந்து கறி” மற்றும் “பிரியாணி” உணவில் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் ஒவ்வொரு சஹனிலும் மூன்று தண்ணிர்ப் பாக்கெட்கள் அதில் இடம் பெற்றிருக்கும். 

“ஐந்து கறி” , “பிரியாணி” போன்ற உணவுகள் திருமண நிகழ்ச்சிகள், வீடு குடி புகுதல், ஹஜ் செல்லும்போது / முடித்துவிட்டு வரும்போது என இதுபோன்ற தினங்களில் மதிய உணவு ஏற்பாடு செய்து ஒவ்வொரு சஹனிலும் தலா மூவர் வீதம் அமர்த்தப்பட்டு உபசரிக்கப்படுவார்கள்.  

மறு சோறு” போதும்........ போதும்........ என்று சொல்லும் அளவுக்கு அனைவருக்கும் வழங்கி தங்களின் சகோதரத்துவ அன்பைக் காட்டுவார்கள். 

வாங்க காக்கா” !

"பேப்பரு தாங்க...."

"மூணு பேரா உட்காருங்க...(!!!)"

"அங்கே ஒரு சஹன் வைங்க" ! 

"எங்கே தால்ச்சா ?" 

"இங்கே சோறு பத்தலே...."

"எங்கே மறுசோறு ?"

"இன்னொரு சுவீட் எடுத்துத் தாங்க ஹாக்கா !" 

இதுபோன்ற பழக்கப்பட்ட சந்தோஷக் குரல்கள் “கலரிச் சாப்பாட்டில்” அங்காங்கே ஒலித்துக் கொண்டே இருக்கும்....

என்ன சகோதர்களே ! உங்களுக்கும் அப்படி ஒலித்தாதா...?

கவனத்தில் கொள்ளவேண்டியவை :

வைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் சிந்திக்க + வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும். உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்ம்பிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண் விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாகும்.

உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதிலும் விதைப்போம். நாளை அது செழித்து வளர்ந்து சமூக அக்கரை உள்ள குடிமக்களை உருவாக்கும். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்தது என்பதை அனைவரும் உணருவோம் (இன்ஷா அல்லாஹ் ! )

-சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்.......

குடும்ப அட்டை (Family Card) பெறுவது எப்படி !? 13

அதிரைநிருபர் பதிப்பகம் | February 27, 2012 | , , ,

புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?

தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.

குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ?

தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும். மேலும் http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு இணை தளத்திலும் தரைஇறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?

அந்தந்த தாலுக்கா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி ( TSO ) அவர்களிடம் தாக்கல் செய்யவேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் எவை ?

விண்ணப்ப படிவத்தில் அதில் கோரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து கையொப்பம் இட வேண்டும். முழுமையற்ற படிவம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

தேவையான ஆவணங்கள் :

1.  இருப்பிடச் சான்று
2.  தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை
3. வீட்டு வரி செலுத்திய / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டணம் செலுத்திய போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் ( இதில் ஏதாவது ஓன்று மட்டும் போதுமானவை )
4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் ( TSO )  பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.
5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான “ குடும்ப அட்டை இல்லா “ சான்று.
6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.
7. விண்ணப்பதாரரின் தனது விண்ணப்பம் குறித்த தகவல்கள் பெற இலகுவாக தங்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். அல்லது சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா ?

1.       தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
2.       வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு செய்வார்கள்.
3.       விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?

அரசால் ரூ 5 /- கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும்.

அணுக வேண்டிய முகவரி : ( தஞ்சை மாவட்டதாரர்களுக்கு )

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் :-
மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி ( DSO )
Tel :  04362   231336
Mobile : 9445000286
E-mail : dso.tnj@tn.gov.in மற்றும் dso.tntnj@nic.in

பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகம் :-
வட்ட உணவு வழங்கல் அதிகாரி ( TSO )
Tel : 04373  235049
Mobile :  9445000293

குறிப்பு : சகோதரர்களே, புதிய குடும்ப அட்டை பெற வேண்டி தரகர்களிடம் செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள். மேலும் கையூட்டு கொடுப்பது என்பது இந்திய சட்டப்படி குற்றமாகும்.

இறைவன் நாடினால்! தொடரும்...
-சேக்கனா M.நிஜாம்

அரசு வேலைவாய்பு! - இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி? 18

அதிரைநிருபர் பதிப்பகம் | February 10, 2012 | , , ,


தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட 64 லட்சம் பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது. 

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.

இதற்காக வேலைவாய்ப்புத்துறை தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்


இணையதள முகவரி : www.tnvelaivaaippu.gov.in

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு :  TJD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர் 

ஆன்லைனில் பதிவு செய்யும் முறை :

1.  ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?

இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.

2. கூடுதல் பதிவு செய்வது எப்படி ?

ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.

3. ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா ?

ஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.

4. விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா ? என்பதை எப்படி அறிவது ?

தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும் (password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்

5. ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா ?

ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்

6. ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை (priority certificate) பதிய இயலுமா ?  

முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.

7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார் ?

இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.

8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை ?

நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.

தொடரும் இறைவன் நாடினால்....!
-சேக்கனா M.நிஜாம்

திரை கடல் ஓடும் முன் திட்டமிடுங்கள் ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | February 01, 2012 | , , , , , ,


திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்பது பழமொழி ! 

நமது சமுதாயத்தில் கல்வி பயிலுபவர்களும் சரி அல்லது பாதியிலே நிறுத்திவிட்டு எனக்கு கல்வியே வேண்டாம்(?) என கூறுபவர்களும் சரி, இவர்கள் பதினெட்டு வயதை கடந்தவுடன் முதலில் ஆயத்தமாவது "பாஸ்போர்ட்" எடுப்பதற்கே ! 

"பாஸ்போர்ட்" எடுத்தவுடன் முதலில் அவர்கள் நாடிச்செல்வது நமது தரகர்களையே, இவர்கள் வளைகுடா நாடுகள், கிழக்காசிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி அவர்களிடம் கணிசமான தொகையை பேசிவைத்துக் கொண்டு அதில் அட்வான்ஸாக ஒரு குறிப்பிட்ட பணத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். பணத்தைக் கொடுத்தவர்களோ வருட கணக்கில் காத்துக்கிடக்க வேண்டும். 

பணத்தை பெற்றுக்கொள்ளும் இவர்கள், போலியாக ஆவணங்களைத் தயார் செய்து விசாக்களைப் பெறுகிறார்கள். அதுவும் டூரிஸ்ட் விசா, செங்கன் விசா (Schengen)  (இக்கட்டுரையின் கீழே செங்கன் விசாவைப் பற்றி விளக்கியுள்ளேன்.)

இவ்விசாவைக் கொண்டு பயணமாகி அங்கே வசிக்கும் தங்களால்...

1. சுதந்திரமாக பணி செய்ய முடிகிறதா ? 
2. குடும்பத்தை பிரிந்து வருட கணக்கில் நிம்மதியாக இருக்க முடிகிறதா ?
3.ஹலாலான பணிகளைத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு கஷ்டம் என உணர்கிறிர்களா ?
4. விசாவுக்காக பெற்ற கடன்களை அடைத்து விட்டீர்களா ?
5. நன்கு கல்வி கற்கவில்லையே, பாதியிலே படிப்பை நிறுத்திவிட்டேனே என வருந்துகிறீர்களா ?
6. ஒரு முறை சென்றுவிட்ட தங்களால் திரும்ப அதே நாட்டிற்கு செல்ல முடியுமா ?

சகோதரர்களே சிந்தியுங்கள் !

வளைகுடா , கிழக்காசிய போன்ற நாடுகளுக்குச் செல்வோரும் போதிய அனுபவம் இன்மையால் அவர்கள் பணிபுரியும் இடங்களில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. மேலும் தரகர்கள் சொல்லி அனுப்பிய வேலை ஓன்று ஆனால் அங்கே தரக்கூடிய வேலைகளோ வேறொன்று !

இத்தரகர்களின் மோசடி வளையத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமாய் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்னதான் தீர்வு ?

1. இளைய தலைமுறையினர் தங்களின் படிப்புகள் முடித்தவுடன் அரசு வேலை வாய்ப்பு அலுவலங்களில் முறையாக பதிவு செய்வதை தங்களின் கடமைகளாக பின்பற்ற வேண்டும்.

2. மேலும் தாங்கள் பயின்ற படிப்பு சம்பந்தமான துறைகளின் அலுவலகங்கள் மற்றும் தொழிற்கூடங்களில் பயிற்சிகள் மேற்க்கொள்ள வேண்டும்.

3. மேலும் நமது அரசு வழங்குகின்ற “ சிறு தொழில்கள் தொடங்குவதற்க்கான பயிற்சிகள் ” மூலம் பங்குபெற்று புதிய தொழில்களைத் தொடங்க முயற்சிக்கலாம்.

4. மேலும் நமது நாட்டிலேயே ஏராளமான தொழில்கள் உள்ளன. இவற்றின் ஏதாவது ஒன்றினை தேர்ந்தெடுத்து முறையாக தொடங்க முயற்சிக்கலாம்.

5. நமது நாட்டில் அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் போன்ற அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளுக்கு முயற்சி செய்யலாம்.

6. இளைய தலைமுறையினர் வெளிநாடுகளுக்கு செல்லும் முன் தங்களின் ஆங்கில மொழி பேசும் திறமை மற்றும் வேலை அனுபவங்களையும் நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். 

7. விசாக்கள் பெறுவது எப்படி ? என்று அந்தந்த நாட்டின் ஒவ்வொரு வலைத்தளங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதை பின்பற்றலாம். இதனால் செலவுத் தொகைகள் மிச்சமாகும்.

8. மேலும் வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர்களின் நல்ல ஆலோசனைகளையும் கேட்டு தெளிவு பெறலாம்.

9. நாம் பயணம் செய்யும் ஒவ்வொரு விமான நிலையத்தைப் பற்றியும், அந்த நாட்டின் சட்ட திட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. 

10.செலவிற்குத் தேவையான பணம் அமெரிக்க டாலர்களில் (  Traveller Cheque  or  CASH  ) வைத்திருப்பது நல்லது.

11.ஏதாவது பிரச்சனை வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை எழுதி வைத்து, தொடர்பு கொள்ள இலகுவாக ரோமிங் வசதிகளுடன் கூடிய அலைபேசியை வைத்துக்கொள்வது நல்லது.

12.இமிக்ரேஷன் கவுன்டரில் விமான நிலைய அதிகாரிகளின் சோதனையின் போது அவர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு மன தைரியத்துடன் தெளிவாக, சுருக்கமாக, நாகரிகமான முறையில் பதில் அளியுங்கள். பயப்பட வேண்டாம் அவர்களும் நம்மைப்போல மனிதர்களே !

“செங்கன் விசா “ (Schengen)  என்றால் என்ன ?

ஐரோப்பியா யூனியன் நாடுகள் தங்களின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளுக்காக உருவாக்கப்பட்டதே “ செங்கன் விசா “  இச்சுற்றுலா விசாவில் இக்கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளலாம்.  

இவ்விசாக்களை எவ்வாறு பெறுவது ?

இந்தியாவில் மும்பை மற்றும் பெங்களூரில் உள்ள துணை தூதரகங்களில் அதற்குரிய விண்ணப்ப கட்டணத்தினை செலுத்தி கீழ்க்கண்ட “ டாக்குமெண்ட்ஸ் ” களை இணைத்து தாக்கல் செய்யலாம்.

தேவையான “ டாக்குமெண்ட்ஸ் ” கள் :-

1.“செங்கன் விசா" விண்ணப்ப படிவத்தில் நம்மைப்பற்றிய தகவல்களை அதில் பூர்த்தி செய்து இருக்க வேண்டும் 

2. நமது பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்க தெளிவான நகல்கள் (செல்லுபடியாகும் கால அளவு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாக இருக்குமாறு கண்காணிப்பது அவசியம் )

3. இரண்டு நம்முடைய புகைப்படங்கள் (அதில் ஒன்றரை விண்ணப்ப படிவத்தில் ஒட்டவும் மற்றொன்றை அதில் இணைத்து (stapled) கொடுக்கவும் )

4. உறுதி செய்யப்பட்ட விமான டிக்கட்டுகளின் நகல்.

5. நாம் தங்கக் கூடிய இடத்தின் ( HOTEL ) உறுதி செய்யப்பட்ட ரசீதுகள்.

6. ட்ராவல் / மெடிக்கல் இன்சூரன்ஸ் செய்து இருக்க வேண்டும்.

7. நிறுவனங்களின் நிர்வாகியாக இருக்கும் பட்சத்தில், கடந்த மூன்று ஆண்டுகாளாக நாம் செலுத்திய வருமான வரிகள் மற்றும் வங்கி கணக்கின் மூன்று மாத காலம் நாம் செய்து கொண்ட வரவு செலவுகளின் விவரங்கள் ஆகியவைகளை அதில் இணைக்க வேண்டும்.

8. நிறுவனங்களில் பணிபுரிபவர்களாக இருக்கும் பட்சத்தில், தங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட கடிதம் மற்றும் மூன்று மாத நாம் பெற்ற சம்பள ரசீதுகள் ஆகியவைகளை அதில் இணைக்க வேண்டும்.

குறிப்பு : 
1. மற்ற நாடுகளுக்கு ( America, Canada, England, Australia, New Zealand ) பயணம் மேற்கொள்பவர்களும் இம்முறையை பின்பற்றலாம்.

2. “செங்கன் விசா" வில் பயணம் மேற்கொள்வோர். அந்நாடுகளில் நிரந்தரமாக தங்கி பணிபுரிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் சிக்கனமான பயணம் இனிதாக அமைய என் வாழ்த்தும் துவாவும் !

இறைவன் நாடினால்! தொடரும்...
-சேக்கனா M.நிஜாம்