Showing posts with label புதிய மத்திய அரசு. Show all posts
Showing posts with label புதிய மத்திய அரசு. Show all posts

புதிய மத்திய அரசு எதிர் நோக்கியுள்ள சவால்கள்.- 2 11

அதிரைநிருபர் பதிப்பகம் | May 29, 2014 | , ,

இந்தத் தலைப்பில் கடந்த வாரத்தில் நாம் விவாதித்த போது, இப்போது பதவி ஏற்றுள்ள புதிய மத்திய அரசு எதிர் கொள்ள இருக்கும் பல சவால்களைப் பட்டியலிட்டுக் காட்டி இருந்தோம். அவைகளில் பல சவால்கள் பொதுவாக எந்த அரசு பதவிக்கு வந்தாலும் எதிர் கொள்ள வேண்டிய சவால்கள்தான். இப்போது பொறுப்புக்கு வந்துள்ள நரேந்திர மோடியின் அரசுக்கென்று பிரத்தியேகமாக - சில சவால்களை மட்டும் இந்த அத்தியாயத்தில் விவாதித்து நிறைவு செய்யலாம். 

காரணம், மற்ற எந்த அரசையும் விட நரேந்திர மோடியின் அரசு உண்மையிலேயே சில வித்தியாசமான சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பதவி ஏற்றுக் கொண்ட அமைச்சரவைப் பட்டியலைப் பார்த்தாலே இது ஒரு வித்தியாசமான அரசு என்பதையும் வித்தியாசமான சவால்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற அரசு என்பதையும் நாம் உணரலாம். நரேந்திர மோடியின் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவை நாடு முழுதுக்குமான மாநிலங்களுக்கு சரிநிகர் சமமானமான பிரதிநிதித்துவம் இல்லாத அமைச்சரவையாக அமைக்கப் பட்டிருப்பது ஒரு ஆரம்ப வித்தியாசம். அத்துடன் தனித்தனி அமைச்சர்களால் கையாளப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் ஒரே அமைச்சரிடம் இணைத்துக் கொடுக்கப்பட்டிருப்பது இன்னொரு வித்தியாசம். உதாரணமாக, அருண் ஜெட்லி வசம் நிதி மற்றும் இராணுவத்துறைகள் தரப்பட்டு இருப்பதாகும். 

 உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியமான எட்டு துறைகள் ஒதுக்கப்பட்டும் அதற்கு அண்டை மாநிலமான பீகாருக்கு அதே போல ஐந்து அமைச்சர்களை ஒதுக்கி இருக்கும் முடிவைப் பார்க்கும் போதும் மராட்டிய மாநிலத்துக்கும் நான்கு அமைச்சர்களை பதவியில் அமர்த்தி இருக்கும் போதும் தென் இந்தியாவுக்கு வழங்கப் பட்டு இருக்கிற அமைச்சரவைப் பிரதிநிதித்துவம் பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. கேரளத்திலிருந்து ஒரு அமைச்சர் கூட இல்லை; தமிழ் நாட்டுக்கு ஒன்றே ஒன்று; ஆந்திராவுக்கு ஒன்றே ஒன்று; கர்நாடகத்துக்கு இரண்டு மட்டுமே என்று அமைச்சரவையில் வெளிப்படையாக தென்னகம் புறக்கணிக்கப் பட்டிருப்பது “வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது ! “ என்று ஒரு காலத்தில் எழுந்த கோஷம் மீண்டும் எழுப்பப்பட வேண்டிய அவசியத்துக்கு நாட்டைத்தள்ளி இருக்கிறதோ என்று எண்ண வேண்டி இருக்கிறது. 

அதே நேரம் தனது கட்சி, அதிக உறுப்பினர்களை வென்று எடுத்த மாநிலங்களுக்கு அதிகப் பிரதிநிதித்துவம் தரப் பட்டு இருக்கிறது என்கிற பிஜேபியின் வாதமும் ஏற்க முடியாமல் இருக்கிறது. காரணம் மொத்தம் 25 பாராளுமன்றத்தொகுதிகளையும் வென்றெடுத்த இராஜஸ்தானுக்கும் கூட ஒரு அமைச்சரைக் கூட ஒதுக்கவில்லை. ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில், தேர்தலில் தோல்வியுற்ற அருண் ஜெட்லி மற்றும் ராகுல் காந்தியால் தோற்கடிக்கப் பட்ட ஸ்மிருதி இராணி ஆகியோர் கூட அமைச்சர்களாக்கப் பட்டிருக்கும் போது வெற்றி பெறாத மாநிலங்களில் இருந்தும் , பிரதமர் நினைத்து இருந்தால் அமைச்சர்களைக் கொண்டு வந்து நாட்டின் எல்லா மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் அளித்து இருக்க முடியும். ஆனால் இதை மேற்கொள்ளாதது இந்த அரசின் ஆரம்பப் போக்கு களின் மீது ஐயம் கொள்ளவே வைக்கிறது. 

மாநிலவாரியான பிரதிநிதித்துவம் சரியாகப் பின்பற்றப்படாதது மட்டுமல்லாமல் மொழிவாரி, இனவாரி, மதவாரியான பிரதிநிதித்துவங்களும் இந்த அரசின் ஆரம்ப அமைச்சரவையில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. உதாரணமாக நாட்டின் மக்கள் தொகையில் 18% இருக்கும் முஸ்லிம்களின் பிரதிநிதியாக நஜ்மா ஹெப்துல்லா என்கிற ஒரே ஒரு அமைச்சர் மட்டுமே பதவியில் அமர்த்தப் பட்டு இருக்கிறார். இதே பிஜேபியில் நீண்டகாலமாக குழல் ஊதிக் கொண்டிருந்த முகத்ர் அப்பாஸ் நக்வி, ஷா நாவாஸ் ஹுசேன், அண்மையில் ஆசையுடன் இணைந்த எம் ஜே அக்பர் போன்றவர்கள் நரேந்திர மோடியின் கண்ணுக்கும் கருத்துக்கும் தென்படவில்லை. மேலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவத்தையும் அமைச்சரவையில் பூதக்கண்ணாடி வைத்துத் தேட வேண்டி இருக்கிறது. காரணம் தலித்துகளும் பழங்குடியினரும் கூட புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்குரிய போதுமான பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. இந்தப் போக்குகளை அரசின் மீது ஐயம் கொள்ள மட்டுமல்ல அச்சம் கொள்ளவும் வைக்கிறது. “ MINIMUM GOVERNMENT; MAXIMUM GOVERNACE ” குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சரவை அதிக சாதனைகளை செய்யும் என்பது மேடைப் பேச்சுக்கு அழகாக இருக்கும். நிர்வாகத்துக்கு சரியாக வருமா என்பது போகப் போகத்தான் உரியவர்களால் உணரப்படும். முட்டிக் கொண்டபின் குனிவது அரசியலுக்குப் புதிதல்ல. 

அமைச்சரவை பதவி ஏற்ற நாளில் இரண்டு முக்கிய சம்பவங்கள் மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளன. ஒன்று, இதுவரை இல்லாத முன்மாதிரியாக தெற்காசிய கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தது . இரண்டு , சுதேசிப் பொருள்கள் – தொழில் முன்னேற்றம் என்றெல்லாம் பேசி ஆட்சிக்கு வந்த கட்சியின் அமைச்சரவை பதவி ஏற்பு விழா அன்று இதுவரை இந்தியாவில் சாலையெங்கும் ஓடிக் கொண்டு இருக்கும் அம்பாசிடர் கார் நிறுவனம் அதன் உற்பத்தியை நிறுத்தி தொழிற்சாலைக்கு மூடுவிழா நடத்தப் போவதான அறிவிப்பு. 

தெற்காசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கையை – அதன் அதிபர் ராஜபக்சேயை பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்தது தேவையற்ற சர்ச்சைகளைக் கிளப்பி , இதன் காரணமாக தமிழ்நாடு உட்பட பல மாநில முதலமைச்சர்களும் பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியாகிய மதிமுக வும் பதவி ஏற்பு விழாவைப் புறக்கணிக்க வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டது. இந்த அரசின் முக்கிய சவால்களின் ஒன்றாக நாம் கருதுவது எல்லை நாடுகளான உறவில் நிச்சயம் பல முன்னேற்றங்களை இந்த அரசு உருவாக்கிக் காட்ட வேண்டுமென்பதும்தான். காரணம் காங்கிரஸ் ஆளும்போது இவற்றில் முன்னேற்றம் இல்லை என்று காங்கிரஸ் ஆட்சியைக் குறை சொன்னார்கள். 

அதே நேரம் எல்லை நாடுகளின் நமது நல்லுறவுக்கு அச்சுறுத்தலாக இருப்பது சீனா போன்ற வளர்ச்சி அடைந்த நாடு, நமது எல்லையில் இருக்கும் நாடுகளின் மீது செலுத்தும் செல்வாக்கு ஆகும். பூடானை மிக சுலபமாக சீனா தனது வலையில் வீழ்த்தும். இந்தியாவால் உருவாக்கப்பட்ட வங்க தேசம் பல பிரச்னைகளில் இந்தியாவின் நிலைப் பாட்டை எதிர்த்து வருகிறது. யார் கை நீட்டினாலும் ஏற்கும் நிலையில்தான் வங்க தேசத்தின் பொருளாதாரம் இருக்கிறது. பாகிஸ்தானுடன் நமது உறவைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆப்கானிஸ்தானும் நம்மோடு அவ்வளவு திறந்த மனதுடன் இல்லை. இந்த நாடுகளின் உறவில் முன்னேற்றம் காண்பது முக்கியமான சவாலாகும்.

இலங்கையில் தனி ஈழம், இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத்தருவது, மீனவர் பிரச்னை, போர்க்குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்சேயை நிறுத்துவது உட்பட பல்வேறு பிரச்னைகளில் இந்தியா தலையிட வேண்டிய உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தம் இருக்கிறது. இத்தகைய பிரச்சனைகளில் இதற்கு முன் இருந்த அரசு செயல்படவே இல்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து நரேந்திர மோடி இப்பொது பொறுப்பேற்று இருக்கிறார். இந்த அரசு, இலங்கைப் பிரச்சனையை எப்படி கையாளப் போகிறது என்று உலகமே ஆவலுடன் எதிர் பார்க்கிறது. இந்தியாவின் தீவிர தலையீடு அதிகரிக்கும்போது , இலங்கையை ஒரு எதிரி நாடாக சீனாவின் ஆதவுடன் கையாளவேண்டிய நிலையும் ஏற்படும். இந்தியாவை இலங்கை எதிர்க்கும் நிலை ஏற்பட்டால் அதற்கு பாகிஸ்தானும் உதவக்கூடும். இதை உத்தேசித்துத்த்தான் காங்கிரஸ் ஆட்சி இலங்கையுடன் ஒரு மென்மையான போக்கைக் கடைப் பிடித்து வந்தது. நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றால் தமிழக மீனவர் பிரச்சனைகளை ஊதித் தள்ளிவிடுவார் என்றெலாம் மிகப் பெரிய எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்த எல்லை நாடுகள் பற்றிய சவாலை மோடி எப்படி கையாளப் போகிறார் எவ்வாறு பிரச்சனைகளைத் தீர்க்கப் போகிறார் என்பது பொறுத்துப் பார்க்க வேண்டிய விஷயமே. 

மேலே குறிப்பிட்டுள்ள இரண்டாவது விஷயம் தொழில் வளர்ச்சி. கடந்த பத்தாண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி மேற்கொண்ட உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய கொள்கைகளின் காரணமாக இந்தியா, உலகப் பொருள்களின் சந்தையாகிவிட்டது. இதனால் உள்ளூர்த் தொழில்கள் அழிந்துவிட்டன. அழிந்து வருகின்றன. அதற்கு அழகிய உதாரணம்தான் அம்பாசிடர் கார் தயாரிப்பு நிறுத்தப் பட்டிருக்கும் அறிவிப்பு. இது போல இன்னும் பல அறிவிப்புகள் வரலாம். சாதாரண கோலி சோடாவிலிருந்து அன்னியப் பொருள்களுக்கு அடிமைப்பட இந்திய சமுதாயம் பழக்கப்படுத்தப் பட்டு விட்டது. கலாச்சாரம், பண்பாடு ஆகியவை பற்றி வாய் கிழிய எப்போதும் பேசும் பிஜேபி இந்தக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் இந்த மண்ணின் பாரம்பரியத் தொழில்களும் கலைகளும் அழியாமல் பார்த்துக் கொள்வதில் தனது கவனத்தை செலுத்த வேண்டும். தற்சார்புக் கொள்கையை கைவிடாமல் இருந்தாலே இறக்குமதி குறையும். உள்நாட்டுத்தொழில்கள் வளரும்.

உதாரணமாக, உலகமெல்லாம் பட்டாசு வெடி போன்றவைகளுக்கு நமது சிவகாசிக்கு ஆர்டர் கொடுத்துக் கொண்டு இருக்கிற நேரத்தில் நமது நாட்டில் இருந்து சீனா சென்று இவற்றை வாங்கி வரும் போக்கு நமது அந்நிய செலாவணியை அழிக்கிறது என்பதை நிச்சயம் இந்த அரசு உணரும் என்று எதிர்பார்க்கலாம். நம்மால் செய்ய முடிந்த தொழில்களை இன்னும் ஊக்கமாக செய்து உற்பத்தியைப் பெருக்குவதற்கு வேண்டிய உதவிகளை செய்தாலே வேலை வாய்ப்புகள் பெருகி தனி நபர் வருமானம் பெருகிட வாய்ப்பு இருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசிகள் வானுயரத்துக்கு ஏறிவிட்டன என்ற குற்றச்சாட்டு அனைத்துத் தரப்பினராலும் முன்வைக்கப்பட்டது. நரேந்திர மோடி மற்றும் பிஜேபியினர் தங்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் பாராளுமன்றத்திலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறைக்கப்படுமென்று மக்கள் முன்னால் சத்தியம் செய்யாத குறையாக வாக்குறுதிகளை வழங்கினார்கள். மக்களும் இந்த அளவுக்கு பிஜேபிக்கு வாக்குகளை வாரி வழங்கிட புதிய ஆட்சி வந்தால் விலைவாசி குறையும் என்று முழுக்க முழுக்க நம்பியதும் முக்கியமான காரணம். மக்களின் இந்த நம்பிக்கையை பிஜேபி அரசு ஒரு முக்கிய சவாலாக எடுத்துக் கொண்டு விலைவாசிகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒரு முன்னுரிமை தரப்பட வேண்டிய காரியமாகும். 

கடந்த காலத்தில் விலைவாசி ஒரு நிலைத்த தன்மை இல்லாமல் இருந்ததற்கு முக்கியமான காரணம் எண்ணெய் விலையை எண்ணெய் வணிக நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டதுதான் என்று ஒரு மிகப்பெரும் குற்றச்சாட்டு இருந்தது. இப்போது இந்த உரிமை எண்ணெய் நிறுவனங்கள் இடமிருந்து பறிக்கப்படுமா என்று தெரியவில்லை. இத்தகைய விலை நிர்ணய உரிமையை பிஜேபி விமர்சித்து வந்தது. இப்போது இதற்கான மாற்று ஏற்பாடு என்ன என்பது இந்த புதிய அரசின் முன் உள்ள மிகப் பெரிய சவால்களில் ஒன்றாகும். 

பிஜேபி ஆட்சி அமைக்கிறது என்ற செய்திகள் வந்த உடனேயே பங்கு சந்தைகளில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டது. இதனால் வர்த்தகங்கள் பெருகப்போகின்றன என்றும் உற்பத்தி பெருகப் போகிறதென்றும் ஊடகங்கள் அந்த பலூனை ஊதிப் பெரிதாக்கின. சாதாரண பொதுமக்கள் இந்த செய்திகளைப் பார்த்து விலைவாசிகள் உடனே குறையப் போகின்றன என்று நம்பத் தொடங்கினார்கள். இப்படி பங்கு சந்தை ஏற்றம் என்பது பொருளாதார மறுமலர்ச்சியின் தொடக்கம் என்று நம்பக் கூடியவர்களுக்குச் சொல்கிறேன். இந்த நாட்டில் பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மொத்த வணிக சமுதாயத்தில் ஒரே ஒரு சதவீதத்தினர் மட்டுமே. 

இரண்டாவதாக பங்கு சந்தை வணிகம் என்பது ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் நடப்பது ஆகும். புதியதாக ஒரு அரசு பெரும்பான்மையுடன் அமைகிறது அதனால் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் என்கிற கண்களைக் கறுப்புத் துணி கொண்டு இறுகக் கட்டிக் கொண்டு காசைப் போடுகிற ஒரு நம்பிக்கையில் அந்தப் பங்குகளை வாங்குவதும் விற்பதுமாகும். இதை சில முகவர்களும் ஊக்குவிக்கிறார்கள். குதிரைகளின் மீது பணம் கட்டுவதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக நான் கருதவில்லை. ஆகவே ஒரு யூக அடிப்படையில் நடைபெறும் சூதாட்டத்தை வைத்து பொருளாதாரம் உயரப் போகிறது என்று எண்ணுவதும் நம்புவதும் எதிர்பார்ப்பதும் தவறான அணுகுமுறை. 

உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பது உற்பத்திப் பெருக்கத்திலும் , நாட்டின் தன்னிறைவு போக எஞ்சியதை ஏற்றுமதி செய்வதிலும்தான் இருக்க முடியும். வெறுமனே பங்குச் சந்தை ஏறிவிட்டது என்று அதை பொருளாதார வளர்ச்சியோடு முடிச்சுப் போடுபவர்கள் பகல் கனவு காணும் பத்தாம்பசலிகளே. ஆகவே புதிய அரசுக்கு இது புரியாத விஷயம் அல்ல. அந்த வகையில் விலைவாசி குறையவும் பொருளாதாரம் உயரவும் உற்பத்திப் பெருக்கத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்த அரசின் முன் இருக்கும் முக்கியமான சவாலாகும்.

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கறுப்புப் பணத்தை நாட்டுக்குக் கொண்டு வருவது பற்றி பெருமளவில் பாரதீய ஜனதா எதிர்க் கட்சி வரிசையில் இருந்து பேசி இருக்கிறது. இப்போது அதிகாரத்துக்கு வந்திருக்கிற அந்தக் கட்சி இதை எவ்வாறு கொண்டுவரப் போகிறது என்று நாடு எதிர்பார்க்கிறது. இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே கறுப்புப் பணத்தை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கைத் தர ஒரு சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கபட்டிருப்பது நம்பிக்கை தரும் விஷயம் . ஆனாலும் இதன் செயல்பாடுகளை விளைவுகளை வைத்தே கணக்கிட முடியும். 

கடந்த பல ஆண்டுகளாகவே நாட்டின் முதுகெலும்பான விவசாயம் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. விவசாயத் தொழிலாளர்கள் தங்களின் தொழிலை விட்டுவிட்டு நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள். விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுவிட்டன. விவசாயம் என்பது ஒரு இலாபகரமான தொழிலாக இல்லை என்பதை மக்கள் உணர்ந்து அதை புறக்கணித்துவிட்டனர். விவசாயத்தைப் புறக்கணிப்பது இந்தியாவைப் பொறுத்தவரை பொருளாதாரத்துக்கு அதுவும் கிராமப் பொருளாதாரத்துக்கு பெரும் சவாலாக அமையும். இதனால் உற்பத்திக் குறைவு ஏற்பட்டுவிட்டது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாட்டு மக்களுக்குக்காக தொலைக் காட்சியில் உரையாற்றிய நரேந்திர மோடி நாட்டின் ஒவ்வொரு மூல முடுக்கில் இருக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் அவருடைய விவசாயத்தேவைக்குரிய தண்ணீர் வழங்கப்படுமென்று உறுதியளித்தார். இதனால் இந்த அரசு விவசாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று நாட்டின் விவசாயிகள் எதிர் பார்க்கிறார்கள். உண்மையில் விவசாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதும் இந்த அரசின் முன் உள்ள முக்கிய சவாலே.

விவசாயத்தில் மறுமலர்ச்சி அல்ல ஒரு புரட்சியே ஏற்பட வேண்டுமானால் பல ஆண்டுகளாகவே பாரதீய ஜனதா முன்னிறுத்துகிற நதி நீர் இணைப்புத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். “வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் “ என்று பாரதியார் பாடினார். ஒரு புறம் பெருமளவு நீர் வீணாக கடலில் கலக்கிறது; மறுபுறம் நீரின்றி வரட்சியில் பல மாநிலங்களின் நிலங்கள் தங்களின் உயிரைவிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அரசு நதி நீர் இணைப்புத்திட்டங்க்களை புரட்சிகரமான முறையில் மேற்கொண்டால் காலம் காலத்துக்கும் நாட்டில் வளமான பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட அடிகோலிய பெருமை இந்த அரசுக்கு சேரும். தானே முன்னிறுத்திய இந்த சவாலை இந்த அரசு எப்படி நிர்வாகப் படுத்தப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். 

அடுத்து இந்த அரசு எப்படி நடந்து கொள்ளப் போகிறது என்று எதிர்பார்க்க வைக்கும் இன்னொரு உணர்வு பூர்வமான விஷயம், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தினருக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையாகும். மண்டல் கமிசன் அறிக்கை வெளியிடப்பட்டு அதை வி பி சிங் அரசு ஏற்றுக் கொண்டு உத்தரவிட்ட போது அதை எதிர்த்து நாடெங்கும் மாணவர்களைத் தூண்டிவிட்டு கிளர்ச்சி செய்த கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஜாதி ரீதியான வர்ணாசிரமக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சாமியார்களின் முக்கியத்துவம் - இந்த ஆட்சிக்கு முன் வரிசையில் அமர்ந்து ஆசீர்வாதம் வழங்கிக் கொண்டிருக்கும் காட்சிகளை - பதவி ஏற்பு விழாவில் காண முடிந்தது. நாடு இன்றும் இருக்கும் நிலையில் இந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் புதிய அரசு கை வைக்காமல் காப்பாற்றித் தொடர வேண்டுமென்றே அடித்தட்டு மக்கள் ஆசைப்படுகின்றனர். உயர் ஜாதியினரின் கட்சி என்ற முத்திரையை பெற்றுள்ள பிஜேபி ஆட்சி இட ஒதுக்கீடு விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது என்பதற்கு விடை சொல்ல காலம் காத்திருக்கிறது. 

 அதே போல் இந்த அரசு வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்கிற செய்திகள் வெளியான நாட்கள் முதல் சிறுபான்மையினரின் பாதுகாப்பு முதலிய அம்சங்கள் நாடெங்கும் பதட்டத்தையும் பயத்தையும் தோற்றுவித்து இருப்பதை மறுக்க இயலாது. ஒரு வளர்ச்சியை முன்னோக்கியுள்ள நாடு நாட்டின் மண்ணின் மைந்தர்களை பிரித்துப் பார்க்காமல் சமமாக தொடர்ந்து நடத்துவது நாட்டில் அமைதியை நிலை பெறச் செய்யும். அமைதி இழந்த நாடுகளின் பக்கம் வெளிநாட்டின் முதலீடுகளோ உள்நாட்டின் முதலீடுகளோ தொழில் வளர்ச்சியோ ஏற்படாது. ஆகவே மக்களின் ஜாதி இன பேத மோதல்களை உருவாக்காத வகையில் ஆட்சியின் காய்களை நகர்த்திச்செல்வதும் இந்த ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள சவால்தான். இதைபற்றி நமது எந்த விமர்சனத்தையும் இப்போது பதிவு செய்ய விரும்பவில்லை. நன்மைகளே தொடரும் என்ற நம்பிக்கையுடன் புதிய அரசுக்கு வாழ்த்தையும் வரவேற்பையும் சொல்லி 

“இந்திய நாடு என்வீடு
இந்தியன் என்பது என் பேரு 
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு”

என்கிற உணர்வும் உத்வேகமும் நாட்டின் எல்லா மக்களிடமும் வளர்ந்தோங்கவும் கடந்தகால கருப்பு வரலாறுகளை இந்த நாடு மறந்துவிட்டு அனைவரும் அவரவருக்கு அரசியல் சட்டத்தில் வழங்கப் பட்ட உரிமைகளை நிலைநாட்டவும் ஒன்றுபட்டுப் பாடுபட்டு நாட்டை உயர்த்தவும் உறுதி எடுத்துக் கொண்டு உழைக்கும் விதத்தில் எதிர்கால ஆட்சி அமைய வேண்டுமென்ற நல்ல எண்ணத்துடன் அனைவரும் கரம் கோர்ப்போமாக! 

இபுராஹீம் அன்சாரி

புதிய மத்திய அரசு எதிர்நோக்கியுள்ள சவால்கள் 8

அதிரைநிருபர் பதிப்பகம் | May 22, 2014 | , , , ,

அண்மைப் பாராளுமன்றத் தேர்தல்கள் முடிந்து பாரதீய ஜனதாவின் அறுதிப் பெரும்பான்மை ஆட்சி நரேந்திர மோடியின் தலைமையில் ஏற்பட்டதும் இந்த புதிய வித்தியாசமான அரசு எப்படி நடந்து கொள்ளப் போகிறதோ என்கிற கேள்விகளும் உடனே மனதில் எழுந்தபோது கூடவே சிறு வயதில் வகுப்பாசிரியர் சொன்ன ஒரு கதை நினைவுக்கு வந்தது.

ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டுக்கென்று ஒரு வித்தியாசமான சட்டமிருந்தது. அந்த சட்டத்தின்படி , அந்த நாட்டுக்கு யார் வேண்டுமானாலும் மன்னராக வர முடியும். ஆனால் அந்தப் பதவி ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே. அதன்படி மன்னராக ஆசைப்பட்டு முன் வருகிற மன்னர் வெறும் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே அரசராக பதவி வகிக்க முடியும். ஐந்து ஆண்டுகள் ஆண்டு முடித்த பின்னர் அந்த மன்னரை அந்த நாட்டின் குறுக்கே ஓடும் ஒரு ஆழமான ஆற்றின் மறு கரையில் கொண்டு போய் விட்டுவிடுவார்கள் . அந்த ஆற்றின் மறுகரை ஒரு அடர்ந்த காடு . அங்கு மனிதர்களே கிடையாது. கொடிய காட்டு மிருகங்களே வசித்து வந்தன. அந்தக் காட்டில் நுழையும் எந்த மனிதரையும் அந்த மிருகங்கள் கொன்று தின்றுவிடும். இதுவே வித்தியாசமான சட்டம். இந்த சட்டத்தின் நிபந்தனைகளை ஏற்பவர் அந்த நாட்டின் மன்னராக ஐந்தாண்டுகள் பதவி வகிக்க முடியும். இதன்படி மன்னராக ஆசைபப்ட்டு முடி சூட்டிக் கொண்டவன் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மரணத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்து மன்னர் பதவியை ஏற்றுக் கொள்ள பலரும் தயங்கினாலும் , ஐந்தாண்டுகள் மன்னராக இருந்து அனுபவித்துவிட்டு சாகலாமே என்ற அசட்டு தைரியத்தில் சிலர் மன்னராக வர முன்வருவதுண்டு. அவ்விதம் வருபவர்கள் தங்களின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிந்ததும் ஒப்பந்தபப்டி காட்டுக்கு அனுப்பபப்ட்டு உயிர்நீத்தனர்.

இவ்விதம் பதவியேற்ற ஒரு மன்னனுக்கு அன்று ஐந்தாண்டு நிறைவு நாள். அவரைக் காட்டுக்கு அனுப்பும் வைபவத்துக்காக நாடே ஆற்றங்கரையில் திரண்டு இருந்தது. மன்னர் தனது வழக்கமான ஆடை அலங்காரங்களுடன் ஆற்றங்கரைக்கு வந்தார். தனது கரங்களில் தங்க வாளையும் ஏந்தி இருந்ததுடன் மன்னருடைய பதவி காலத்தில் அணிந்து இருந்த அனைத்து வைர வைடூரிய நகைகளையும் அணிந்து இருந்தார். இன்னும் அரை மணி நேரத்தில் சாகப் போகிற அரசருக்கு இவ்வளவு அலங்காரம் ஏன் என்று மக்கள் வியந்தனர். ஆனாலும் மன்னரை அக்கரையில் கொண்டு விடத் தயாரான படகு கொண்டு வரப்பட்டது. அந்தப் படகைப் பார்த்ததும் மன்னருக்குக் கோபம் வந்தது.

''ஒரு நாட்டின் மாமன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக்கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது? எனது சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்! '' என்று அரச கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன. சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகானபடகு ஆற்று நீரைத் கிழித்துக்கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் மகிழ்வுடன் கையசைக்க படகுப் பயணம் தொடர்ந்தது. மிகவும் அதிசயபப்ட்டு அதிர்ச்சி அடைந்தவன் படகை ஓட்டிச் சென்ற படகோட்டியே. காரணம், இதுவரை அந்தப்படகோட்டி மறுகரைக்கு அழைத்துச் சென்ற மன்னர்கள் அனைவரையும் சவக்களை முகத்தில் தாண்டவமாடக்கண்டவன் இப்போதுதான் முதன்முதலாக மகிழ்ச்சிறேகைகள் படர்ந்த முகத்தோடு ஒரு மன்னனைப் பார்க்கிறான். ஆகவே பொறுமை இழந்தவனாக் மன்னனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பினான்.

“மன்னா! மாமா மன்னா! நீங்கள் எங்கே போகிறீர்கள் தெரியுமா? ”

“ தெரியுமே! ஆற்றின் மறுகரைக்குப் போகிறேன். “

“ அங்கே போனவர்கள் போன இடமும் தெரியுமா? அது வெறும் காடு மட்டுமல்ல சுடுகாடு என்றும் தெரியுமா? அங்கே சென்றவர்கள் இங்கே திரும்பியதில்லை என்றும் தெரியுமா? “

“ தெரியுமே ! அதுதான் மகிழ்ச்சியோடு போகிறேன் “

“ இவ்வளவும் தெரிந்தும் எப்படி இவ்வளவு மகிழ்ச்சியோடு சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லையே! “

“ ஓ அதுவா? நீ கேட்டதனால் சொல்கிறேன். கேள்! நான் ஆட்சி ஏற்ற முதலாண்டில் ஆயிரம் வேட்டைக்காரர்களை மறு கரையில் இருந்த காட்டுக்கு அனுப்பி அங்கிருந்த கொடிய மிருகங்களை வேட்டையாடிக் கொன்று அழிக்கச் செய்தேன். இப்போது அங்கே ஒரு கொடிய மிருகம் கூட இல்லை. இரண்டாவது ஆண்டில் சில ஆயிரம் நல்ல விவசாயிகளை அங்கு அனுப்பினேன். அவர்கள் சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி சோம்பல் இல்லாமல் ஏர் நடத்தி காட்டைத்திருத்தி உழுது பயிரிட்டு விவசாயம் செய்தார்கள் . இப்போது அது பொன் விளையும் பூமியாகிவிட்டது. மூன்றாம் ஆண்டில் பல கட்டிடக்கலை வல்லுனர்களையும் தொழிலாளர்களையும் அனுப்பி அங்கு வீடு வாசல்களைக் கட்டச் சொன்னேன். இப்போது அந்தக் காடு நல்ல ஒரு நாடாக ஆகி இருக்கிறது. அரண்மனை, அந்தப்புரம் உட்பட அனைத்து வசதிகளும் அயல்நாட்டு தூதர்கள் வந்து தங்கும் வசதிகளும் கூடவே அங்கு அமைந்துவிட்டன. நான்காம் ஆண்டுக்குள் பல அரசு ஊழியர்களை அங்கு குடும்பத்துடன் குடியேறச் செய்தேன். இப்போது அங்கு நல்ல நிர்வாகமும் நடைபெற்று வருகிறது. இப்போது ஐந்தாம் ஆண்டில் மன்னனாக நானும் போகிறேன். எல்லோரும் நினைக்கிறார்கள் நான் சாகப் போகிறேன் என்று. ஆனால் உண்மையிலேயே நான் நிர்மாணித்த அந்த நாட்டை நான் ஆளப் போகிறேன் . அதுவே எனக்கு மகிழ்ச்சிக்குக் காரணம். “

படகோட்டி அசந்து போனான். தனக்கும் அந்த புதுநாட்டிலேயே ஒரு வேலை போட்டுத்தர மன்னனிடம் வேண்டி நின்றான் என்று கதை முடியும்.

இந்தக்கதையில் பல படிப்பினைகள் உண்டு. காடாக இருந்தாலும் திட்டமிட்டு செயல்பட்டால் அதையும் நாடாக்கி ஆள முடியும் என்று இந்தக்கதை நிருபிக்கிறது. அரசுக்கு மட்டுமல்ல தனி மனித வாழ்வுக்கும் இது பொருந்தும். புத்திசாலித்தனமான திட்டமிடல் - அந்தத் திட்டத்தை நிறைவேற்றுதல் ஒரு தனி மனிதனுக்கும் ஒரு அரசுக்கும் அவசியமான தேவைகளாகும்.

கடந்த பத்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் எந்த நன்மையையும் ஏற்படவில்லை. இந்த நாடு பல வீழ்ச்சிகளை சந்தித்தது . பல சரிவுகளையும் சீர் குலைவுகளையும் சந்தித்தது என்றெல்லாம் குற்றம் சாட்டி, அவை மக்கள் மன்றத்திலும் எடுபட்டு இன்று புதிய அரசு நரேந்திர மோடி தலைமையில் பதவி ஏற்றுக் கொண்டுள்ளது. பழைய அரசு செய்த தவறுகளை – எவை எல்லாம் தவறுகள் என்று புதிய அரசமைத்தோர் சொன்னார்களோ அவை சார்ந்த துறைகளை இப்போது வந்துள்ள இந்த அரசு எப்படிக் கையாண்டு அவர்களின் வாதப்படி காடாகிப் போன இந்த நாட்டை செம்மைப் படுத்தி நாடாக்கப் போகிறார்கள் என்று கவனிக்க வேண்டியதும் எதிர்பார்ப்பதும் நமது கடமை.

இப்போது பிஜேபி பெற்றுள்ள வெற்றியின் மூலம் அந்தக் கட்சிக்கு இருந்த அரசியல் நெருக்கடிகள் அருகிவிட்டன; ஆனால் நிர்வாக நெருக்கடிகளை இந்தப் புதிய அரசு கண்டிப்பாக சந்தித்தே ஆக வேண்டும். ஒரு மாற்றம் வேண்டுமென்று நினைத்த மக்களின் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வந்த கட்சிக்கு இத்தகைய பொறுப்புக்கள் அதிகம்.

இப்போது புதியஅரசு எதிர் நோக்கியுள்ள தலையாய சவால்களாக நாம் பார்ப்பது.
  • விலைவாசி உயர்வு
  • டாலருக்கெதிரான ரூபாயின் மதிப்பில் நிலையற்ற நிலை
  • தொழில் வளர்ச்சிக் குறைபாடுகள்
  • பல்வேறு துறைகளிலும் ஊழலில் வெறியாட்டம்
  • எண்ணெய் விலை ஏற்றதாழ்வுகள்
  • வங்கி வட்டி விகிதத்தின் நிலையற்ற தன்மை
  • வெளிநாடுகளில் கறுப்புப் பணம் – அவற்றை வெளிக் கொணரும் நடவடிக்கைகள்
  • உற்பத்திப் பெருக்கம்
  • சேது சமுத்திரத் திட்டம் மாற்றுப்பாதையிலாவது சாத்தியமா?
  • விவசாய வளர்ச்சி- கிராமப் பொருளாதார வளர்ச்சி
  • நேரடி அன்னிய முதலீடு தொடர்பான நிலைப்பாடு
  • ஏற்றுமதி இறக்குமதிப் பிரச்னைகள்
  • மத்திய மாநில உறவு மேம்பாடுகள்
  • மாநிலங்களுக்கிடையான நதி நீர்ப் பங்கீடு
  • நாடு தழுவிய நதி நீர் இணைப்புத் திட்டங்கள்
  • நடப்புக் கணக்குப் பற்றாக்குறை
  • இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள்
  • உலக மயமாக்கலின் பிரச்சனைகள்
  • முந்தைய அரசின் திட்டங்களை தொடர்வதா? விடுவதா?
  • ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள்
  • இலங்கைத் தமிழர் பிரச்னை
  • தமிழக மீனவர் பிரச்சனைகள்
  • அஸ்ஸாமில் அன்னிய நாட்டினர்
  • சிறுபான்மையினரின் பதட்டம் , சந்தேகம், பயம்
  • பொதுத்துறை நிறுவனங்களை ஊக்குவிப்பதா? தனியார்மயத்தை தாராளமாக்குவதா? 
  • அணுசக்தி உலை மற்றும் மின்திட்டங்களின் எதிர்காலம் 
  • அரசியல்வாதிகளின் மீதான நடப்பில் உள்ள வழக்குகளைத் தொடர்வது
  • கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்களின் மீதான விசாரணையை ஏவுதல் / வழக்குத்தொடரல்
  • ஆர் எஸ் எஸ் , சங்க பரிவார் அமைப்புகளின் செயல் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு / நிராகரிப்பு
  •  வராக் கடன் வசூல்
  • எல்லை நாடுகளுடன் நட்புறவு

மேற்கண்ட பட்டியலில் உள்ளவைகளுக்கு அதிகமாகவும் மேலும் பல பிரச்சனைகளும் சவால்களும் கேள்விகளும் புதிய அரசின் முன் இருக்கலாம்.

தேர்தலுக்கு முந்திய தேர்தல் அறிக்கையில் சில உணர்வு பூர்வமான – நாட்டின் மக்களுக்கிடையே பிளவு ஏற்படுத்தும் சில ஆபத்தான திட்டங்களை பாரதீய ஜனதா கட்சி முன் வைத்தது. அத்தகைய திட்டங்கள் வெறுமனே மக்களின் உணர்வுகளைத் தூண்டி அதிகாரத்தை வென்றெடுக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டால் இந்த நாடு அமைதியான நாடாக இன்னும் சொல்லப்போனால் ஒரு வல்லரசாக உருவெடுக்கும் வகையிலும் தனது அடிகளை எடுத்துவைக்க இயலும். அதற்கு மாறாக, அமைதிக்கு ஆபத்தான அந்தத் திட்டங்கள் செயல்வடிவம் பெறுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டால் வளர்ச்சியின் நாயகன் என்று நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டதற்குப் பொருள் இல்லாமல் போய்விடும். காரணம், அமைதி நிலவாத நாடுகளின் பொருளாதாரம் வளர்ந்ததாகவோ வளர்ச்சி அடைந்ததாகவோ, ஒரு வரலாற்றை வங்காளக் கடலில் வலைவீசித்தேடினாலும் காணமுடியாது. ஆகவே நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல நினைக்கும் எந்த ஒரு அரசும் மக்களிடையே அமைதியைக் குலைக்கும் அழிவுப் பாதையை தேர்வு செய்யாது. அப்படிச் செய்வது அறிவுபூர்வமான செயலாக இருக்காது.

நம்மைப் பொறுத்தவரை, நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் நலிந்து போய்க்கிடக்கும் பல தொழில்கள் பேணி வளர்க்கப் பட வேண்டும். தங்களுக்கு ஆளும் பொறுப்பு அளிக்கப்பட்டால், ரூபாயின் மதிப்பு உலக நாணய செலவாணிச் சந்தையில் உயரும் விதத்தில் திட்டங்கள் தீட்டப்படுமென்று பிஜேபி கூறியது. இப்போது மக்கள் அதற்கு ஆளும் பொறுப்பை அளித்து இருக்கிறார்கள். தாங்கள் வாக்களித்தபடி நாட்டின் பொருளாதாரத்தை உயரச் செய்வதற்குரிய நல்ல நடவடிக்கைகளை இந்த புதிய அரசு எடுக்க வேண்டும்.

ஏற்றுமதி அதிக்க வேண்டுமானால் உற்பத்தித்துறையை முதலில் உயர்த்திப் பிடிக்க வேண்டும். கிராமப்புறப் பொருளாதாரத்தை வளர்க்கும் விதத்தில் விவசாயத்துக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வேண்டிய அளவுக்கு நிதி ஆதாரங்களை ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டும். பல பெரிய தொழில்களுக்கும் டாடா போன்ற பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கும் 0.1% சதவீத ரேட்டில் வங்கி நிதி உதவிகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் விவசாயிகளுக்கு 4 % முதல் 7% வரை நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் இன்றைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் நிதி ஆதாரங்களை இலகுவாக்க புதிய வளர்ச்சியின் நாயகன் முயல வேண்டும்.

இறக்குமதி வரியாக இன்று 30% வரை வசூலிக்கப்பட்டாலும் இறக்குமதியாகும் பொருள்கள், உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களின் விலையை விட விலை குறைவாகக் கிடைக்கின்றன. ஆகவே இந்தியா ஒரு பன்னாட்டு சந்தையாக மாறுவதால் உள்நாட்டுத் தொழில்கள் நசிந்து வருகின்றன. இந்த அம்சத்தை புதிய அரசு தனது கவனத்தில் எடுத்துக் கொண்டு உள் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளைக் குறைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

விவசாயத்துக்கு சரியான ஊக்குவிப்பு இல்லாததால் விவசாயம் நசிந்து போய் உற்பத்திக் குறைவு ஏற்பட்டு உணவுப் பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் அவல நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை புதிய அரசு உணர வேண்டும். இதனால் அந்நிய செலாவணி நாட்டில் இருந்து வெளியாகிக் கொண்டிருப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். பன்னாட்டு நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு இந்தியா ஒரு சந்தையாக மாறியது பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை பிஜேபி ஏற்கனவே சொல்லி வந்திருக்கிறது. இத்தகைய குற்றச்சாட்டுகள் வெறுமனே மன்மோகன் அரசின் மேல குற்றம் சாட்ட மட்டுமதானா அல்லது இதற்கு மாற்றுத் திட்டம் வைத்திருக்கிறதா என்பதை புதிய அரசு நிருபித்துத் தனது தனித்தன்மையை செயல்வடிவில் காட்ட வேண்டும்.

பிஜேபி தேர்தலில் வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறது என்கிற செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிற போதே பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலைகள் உச்சத்தைத் தொட்டன. பங்குச் சந்தை என்பதே ஒரு வகையில் ஊக வணிகத்தின் ஒரு வடிவமே. ஊக வணிகம் என்பது விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என்பது பொருளாதாரத்தின் பாலபாடம். விலைவாசி உயர்வைக் காரணம் காட்டி ஆட்சியை மாற்றிவிட்டு ஆட்சிக்கு வந்து அரியணை ஏறிய ஒரு ஆட்சி , தனது ஆட்சியிலும் விலைவாசியைக் கட்டுப்படுத்தத்தவறினால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மீண்டும் மக்கள் மன்றத்தின் முன் நிற்கவேண்டிய நிலையில் தங்களுக்கும் தோல்வி ஏற்படும் என்பது உணர வேண்டும். காட்டில் விளையும் கத்தரிக்காய்க்கு கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொண்டு விலையை நிர்ணயிக்கும் ஆன் லைன் வர்த்தகத்தை இந்த அரசு கட்டுப் படுத்தக் கூடாது ; ஒழித்துக் கட்ட வேண்டும்.

பெரிய கார்பரேட் கம்பெனிகளின் ஆதரவில் ஆட்சிக்கு வந்துள்ள கட்சி என்று பிஜேபி மீது ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்தக் குறையை பிஜேபி அரசு நீக்கிக் கொண்டு தன்னை ஒரு பொதுநல அரசு என்று நிரூபிக்க வேண்டுமானால் , Non- Corporate Sectors என்று சொல்லப்படுகிற பல்வேறு வகையான சிறு குறுந்தொழில்களை வளர்ப்பதில் இந்த புதிய அரசு ஆர்வம் காட்ட வேண்டும். வெறும் டெக்னாலஜியை மட்டும் பரவலாக அரசு இறக்கி விடுமானால் சிறு குறுந்தொழில்கள் அழிந்துவிடும். மேலும் சிறு குறுந்தொழில்களின் வளர்ச்சி, வேலை வாய்ப்புகளை குறிப்பாக சுய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும். சீனா போன்ற மக்கள் தொகை பெருகிய நாடுகள் தங்களின் மக்கள் வளத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தி பொருளாதாரத்தில் மேலை நாடுகளுக்கு சவால்விடும் நிலைக்கு உயர்ந்திருப்பதற்கு குடிசைத்தொழில்கள் முதல் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்கான அரசின் ஆக்கமும் ஊக்கமுமே காரணம் என்கிற உலகறிந்த உண்மையை இந்த அரசு அலட்சியப்படுத்திவிட இயலாது.

இந்தத் தலைப்பில் இன்னொரு வாரமும் பேசவேண்டும். இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம். 

இபுராஹீம் அன்சாரி