Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 24 18

அதிரைநிருபர் பதிப்பகம் | July 23, 2012 | , ,

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவி பாடியுள்ளார்களா?!’ 

இந்த வினாவும் வியப்பும் பலருக்கும் தோன்றியிருக்கக் கூடும்.  குறிப்பாக, நம் சமகாலக் கவிஞர்கள் இதில் தம் கண்களையும் கருத்தையும் பதித்து, இதற்கான விடையை எதிர்பார்த்துக் காத்திருப்பதை அறிய முடிகின்றது.

மனிதர்கள் எவரிடத்தும் மண்டியிட்டுப் பாடம் படிக்காத மாமனிதரும் மனிதப் புனிதரும் ஆவார்கள் நபியவர்கள்.  இவ்வுண்மையை,

الذين يتبعو ن الرسول النبي الامي

(அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத நபியாகிய (நம்) தூதரைப் பின்பற்றுகின்றார்கள்.)

எனும் (7:157) இறைவசனத்தால் வல்ல இறைவன் அல்லாஹ் உறுதிப் படுத்துகின்றான்.  எழுதப் படிக்கத் தெரியாத நபியால் இத்துணைப் பெரிய சமூக மாற்றத்தையும் விழிப்புணர்வையும் எவ்வாறு ஏற்படுத்த முடிந்தது என்பதுதான் அன்றைய மற்றும் இன்றைய அறிவு ஜீவிகளால் வியந்து பாராட்ட வைத்த பண்பாகும்.

இலக்கிய விற்பன்னர்களும் கவிஞர்களும் சொற்போர் வீரர்களும் நிறைந்திருந்த அன்றைய அரபுச் சூழலில், அறிவார்ந்த சொற்களால் மறுப்புரை செய்து மாற்றத்தை ஏற்படுத்த இந்த இறை இறுதித் தூதரால் முடிந்தது என்றால், அது இறைவன் அவர்களுக்கு அளித்த சிறப்புத் தகுதியே அன்றி வேறில்லை. 

ஆதிக்க வலிமையால் அடக்கி ஒடுக்கப் பார்த்தார்கள் குறைஷியர்;  முடியவில்லை!  கேலி கிண்டல்கள் செய்து பார்த்தார்கள்;  தோல்வியைத் தழுவினார்கள்!  இறுதியாக அவர்கள் கைகளில் எடுத்த போர்க்கருவிதான் கவிதை!  அவர்களுள் இருந்த கவிஞர்கள் தம் திறமை முழுவதையும் கொண்டு கவிதை பாடினார்கள்; இறைப் பேரொளியைத் தம் நாவுகளால் ஊதி அணைக்கப் பார்த்தார்கள்!  அப்போது,

والشعرآء يتبعهم الغاون،  الم تر انهم في كل واد يهيمون، وانهم يقولون ما لا يفعلون

(இன்னும் கவிஞர்கள் எத்தகையோரென்றால், அவர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுகின்றார்கள்.  திண்ணமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிவதை (நபியே) நீர் பார்க்கவில்லையா?  இன்னும் திண்ணமாகத் தாம் செய்யாததைச் செய்ததாகச் சொல்கின்றார்கள்.)

எனும் (26:2 இறை வசனங்களைக் கொண்டு நபியவர்களை ஆற்றுப் படுத்தினான்; தேற்றினான் அல்லாஹ்.  ஆனாலும், அத்தகைய கவிஞர்களுக்கும் வாயாப்புக் கொடுக்கும் வாய்ப்பினை, நபியவர்களின் ‘ஹிஜ்ரத்’ எனும் புலம்பெயர்தலுக்குப் பின்னால் அமைத்துக் கொடுக்கின்றான்.    இதற்கான பல சான்றுகளை இத்தொடரின் இடையிடையே கண்டுவந்துள்ளோம்.

புலம் பெயர்ந்த நபியவர்களும் முஸ்லிம்களும் மதீனாவில் தம் வாழ்க்கையைத் தொடங்கிய காலகட்டத்தில் முதலாவதாகச் செய்த பணிகளுள் ஒன்று, தொழுகைப் பள்ளி கட்டியதாகும்.  தோழர்களுக்குத் தோள் கொடுக்கும் விதமாக, நபியவர்களும் கற்களைச் சுமந்துவந்து இறைவணக்கத்திற்கான இல்லம் கட்டும் பணியில் உதவினார்கள்.  அந்த ஆர்வம் மிக்க நேரத்தில் இறைத் தூதரின் இதயத்திலிருந்து கீழ்க்காணும் கவிதையடிகள் வெளிவந்தன:

هذا الحمال لا حمال خيبر ، هذا ابر ربنا و اطهر
اللهم إن الأجرأجرالآخرة ، فارحم الأنصار والمهاجرة

இதன் தமிழ்க் கவியாக்கம்:

                                   கற்கள் சுமக்கும் இச்சுமையோ
                                               கைபர்ச் சந்தைச் சுமையன்று
                                   பொற்புள தூய நன்மையினைப்  
                                                பொழியும் இறையின் சுமையாகும். 

                                    இறைவா!  எமது கூலியதோ 
                                                இறவா மறுமைக் கூலியதே 
                                    நிறைவாய் மக்கா மதீனாவின்
                                                நேசர்க் குதவி புரிந்திடுவாய்!
(சஹீஹுல் புகாரீ – 3906)
                  
அண்ணலெம் பெருமான் (ஸல்) அவர்கள் தமது நபித்துவத்தின் தொடக்கத்தில் எதிர்கொண்ட போரின்போது ஒரு மலை மீது ஏறிச்  சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது கற்பாறையொன்றில் தடுக்கி விழப் போனார்கள்!  கல் தடுக்கிய காலை நோக்கினார்கள்;  முன் விரலிலிருந்து குருதி வடிந்துகொண்டிருந்தது!  அந்த வேதனை அவர்களை வருத்தியபோதும், தமது கால் விரலைப் பார்த்துக் கீழ்க்கண்டவாறு கவியடியொன்றைக் கூறி, வேதனையை மாற்றிக்கொண்டார்கள்:

إصبع دميت هل أنت إلا 
و في سبيل الله ما لقيت

இதன் தமிழ்க் கவியாக்கம்:

                                      செங்குருதி சிந்துகின்ற விரலே உன்கால்
                                                     செல்லுகின்ற பாதையிறைப் பாதை யன்றோ?
(சஹீஹுல் புகாரி – 2802 / 6146, சஹீஹ் முஸ்லிம் - 3675)
         
ஹிஜ்ரி ஐந்தாமாண்டில் நடைபெற்ற அகழ்ப் போரின் முன்னேற்பாடாக மதீனாவைச் சுற்றி அகழ் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த அருமைத் தோழர்களைக் கண்டு கவலையுற்றும், அவர்களுக்கு ஆர்வமூட்டியும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்,

اللهم  لا عيش إلا عيش الآخرة
فاغفر للأنصار و المهاجرة     

என்ற ஈரடிக் கவிதையினைப் பாடினார்கள்.
(சஹீஹுல் புகாரீ – 2834,4099)

அக்கவியடிகளின் தமிழ்க் கவியாக்கம் இதோ:

                                      இறைவா!  உண்மை வாழ்வதுவோ 
                                                    என்றும் நிலைத்த மறுமையதே
                                       நிறைவாய் மதினா மக்காவின் 
                                                     நேசர் களைநீ மன்னிப்பாய்!   

கருணை நபியவர்கள் கவிகளும் பாடியுள்ளார்கள் என்பதற்கான சில சான்றுகளே இவை.  அவர்கள் காரணமின்றிக் கவிதைகளை வெறுக்கவுமில்லை;  அவர்களுக்கு இறைவன் கொடுத்திருந்த ‘வஹி’ என்ற உயர் இலக்கியத் திறன் கொண்டு, கவிதைகளைக் கேட்டு மகிழ்ந்தும் உள்ளார்கள்;  பாடுவோரை ஊக்கப்படுத்தியும் உள்ளார்கள் என்பதுவே உண்மையிலும் உண்மையாகும்.  
                                                                                                                     (போதுமா...?)
அதிரை அஹ்மது
adiraiahmad@gmail.com

18 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆக நபியவர்கள், தாங்களும் கவி பாடியும் மற்றவர்கள் பாடுவதை கேட்டும்,அவர்களை தட்டிக் கொடுக்கவும் செய்துள்ளார்கள் என்பது இந்த ஆதாரங்கள் உறுதிபடுத்துகின்றன.

இது போதும்.
ஜஸாக்கல்லாஹ் ஹ்ஹைர். காக்கா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிகளெல்லாம் எங்கே !?

இதுபோதும் தொடர் இன்னும் வேனும்னு'தானே சொல்ல வருவீங்க... வாங்க வாங்க சீக்கிரம் ! :)

Ebrahim Ansari said...

//போதுமா?//

ஒரு சொல் - ஒரு கேள்வி பல அல்லது பலரின் எழப்போகும் கேள்விகளுக்கு தன்னம்பிக்கை மிளிரும் பதில் என நினைக்கிறேன்.

மன நிறைவான தொடர்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//போதுமா?//

மன நிறைவான தொடர்

KALAM SHAICK ABDUL KADER said...

போதும். மனநிறைவாக அமைந்து விட்ட இக்கட்டுரை நூலுருவில் வந்தால் பாதுகாத்து வைக்கவும்; அவ்வப்போது குறிப்புகள் எடுக்கவும் என்னைப் போன்ற “கவியன்பர்கட்கு” மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆசிரியர் அஹ்மத் காக்கா அவர்களை ஊரில் சந்தித்து உரையாடிய போதே என் மனம் நிறைவடைந்து விட்டதை உணர்ந்தேன்; அவர்கள் அன்பளிப்பாக வழங்கிய - அவர்கள் எழுதிய நூற்களை வானூர்தியில் அமர்ந்து வாசித்துக் கொண்டே பயணித்ததும் என் சிந்தையில் சேமித்து வைத்துக் கொண்டதும் ஓர் அனுபவம்!

அவர்கள் “பிறை” இதழில் எழுதி வந்த “இஸ்லாமிய இலக்கியச் சிந்தனை” எனும் தொடரை முழுவதுமாகப் படிக்க இயலாமற் போன குறையினை அத்தொடரை அவர்கள் நூலுருவில் அச்சிட்டதை எனக்கு அன்பளிப்பாகத் தந்ததால் முழுவதும் படித்தேன்;இப்படிப்பட்ட ஆய்வாளராக இளம் வயதில் இருந்ததும் எண்ணி வியந்தேன்; அல்ஹம்துலில்லாஹ்! அன்னார்க்கு அடியேன் மாணவனாய் அமையப் பெற்றதும் பெரும் பேறாகும்!

“சதாவதானி”ஷைகு தம்பி பாவலர் அவர்களை மாற்று மத புலவர்கள் எல்லாம் சேர்ந்து குறைத்து மதிப்பிட எண்ணிய வேளையில் அல்லாஹ்வின் அருளால் “சதாவதானி” தேர்வில் வென்றதை அந்நூலில் அஹ்மத் காக்கா அவர்கள் விவரித்த விதம் சதாவும் என் நினைவில் நின்று, இன்ஷா அல்லாஹ் இது போன்று மாற்று மத புலவர்கள் சபையில் அடியேனும் “இஸ்லாத்தில் இலக்கிய ஆற்றல் உள்ளவன்” என்பதை நிரூபிக்க வேண்டும்; அதற்கு அல்லாஹ்வின் அருளும், ஆசிரியர் அஹ்மத் காக்காவின் வழிகாட்டுதலும் வேண்டும்.

என்றும் அவர்களிடம் மண்டியிட்டுப் பாடம் படிக்கத் துடிக்கும் மாணவனாய் இருப்பேன்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

காக்கா,

போதுமா என்றா கேட்கிறீர்கள்?

இந்த ஆய்வின் தீர்வு எப்போதோ எட்டப்பட்டுவிட்டது. தங்களின் ஆணித்தரமான ஆதாரங்களால் இத்தொடரின் நோக்கம் நிறைவேறி நாட்களாகிவிட்டன. (ஆதாரம்: தம்பி அர அலவின் ஒப்புதல்)

ஆயினும் இத்தொடர் தொய்வின்றி சென்று கொண்டிர்ருப்பதற்குக் காரணம் அரபி மூலத்திலிருந்து தாங்கள் தந்து கொண்டிருந்த கவிதைகளும் அவற்றை தமிழில் தங்களின் புலமை மிளிர தந்த விதமும்தான்.

எனவே, அதிரை நிருபர் வேண்டுமானால் இந்தத் தலைப்பிற்கு முற்றும் போட்டுக்கொள்ளட்டும்.

தாங்கள் தொடர்ந்து "இஸ்லாத்தில் கவிதைகள்" என்னும் தலைப்பில் இவ்விழையைத் தொடர்ந்தால்,

-மேலும் அரபி மூலம் மற்றும் தங்களின் புலமை கலந்து எங்களுக்கு கவிதைகள் வாசிக்கக் கிடைக்கும்

-வாராவாராம் தங்களின் பரிச்சயம்...இதை இழக்க விருப்பமில்லை.

வேண்டுகோள் ஏற்கப்படுமா?

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

Noor Mohamed said...

//அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) சொன்னது…

அவர்கள் “பிறை” இதழில் எழுதி வந்த “இஸ்லாமிய இலக்கியச் சிந்தனை” எனும் தொடரை முழுவதுமாகப் படிக்க இயலாமற் போன குறையினை அத்தொடரை அவர்கள் நூலுருவில் அச்சிட்டதை எனக்கு அன்பளிப்பாகத் தந்ததால் முழுவதும் படித்தேன்//

“இஸ்லாமிய இலக்கியச் சிந்தனை” என்ற நூல் 1975 ல் எனக்கு பரிசாக கிடைத்து, அப்போதே அதை நான் படித்து, என் சிந்தனையில் நின்ற கருத்துக்களை ஆசிரியர் அஹமத் காக்கா அவர்கள் 2002 ல் தமாமில் இருந்த போது அவர்களிடம் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டேன்.

//“சதாவதானி”ஷைகு தம்பி பாவலர் அவர்களை மாற்று மத புலவர்கள் எல்லாம் சேர்ந்து குறைத்து மதிப்பிட எண்ணிய வேளையில் அல்லாஹ்வின் அருளால் “சதாவதானி” தேர்வில் வென்றதை அந்நூலில் அஹ்மத் காக்கா அவர்கள் விவரித்த விதம்//

இதை விளக்கமாக, சென்னை விக்டோரியா மண்டபத்தில் நடந்த நிகழ்வை நெறியாளர் அபுஇபுராஹீம் அவர்களிடம் சில மாதங்களுக்கு முன் விவரமாக வாயாடியில் விளக்கியுள்ளேன். இருப்பினும் இப்போது அந்த நூல் என்னிடமில்லை.

அதிரை சித்திக் said...

நல்ல தொடர்...!
நெஞ்சில் தைத்த சந்தேகம் என்னும் ..
முள்ளினை நளினமாக கையாண்டு
எடுத்தது வரவேற்க தக்கது ..
வாழ்த்தவோ வயதில்லை ..
பாராட்டவோ தகுதி இல்லை ..
தங்களின் திறமையை வியக்கிறேன் ...
தற்காலத்தில் கவிதையில் ..
புரையோடி கிடக்கும் ..
வார்த்தை ஜாலங்கள் ...மனதை பாழ்படுத்தும்
கவிதைகளையே அர அலபோன்றோகள்
எதிர்த்தார்கள் ..நல்ல கவி என்றும் பாடலாம்
கவிதையை அழகுற செய்யும் நோக்கில்
கருத்தை கை விட்டு விட கூடாது ...
தங்களின் இந்த தொடர் நூலாக வெளி வர
வேண்டும் ...

KALAM SHAICK ABDUL KADER said...

நாவலர் நூர்முஹம்மத் அவர்களின் நினைவாற்றலை எண்ணி வியக்கிறேன்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். சாச்சாவின் ஆய்வு கட்டுரை இறுதி பகுதியா இது? மேலும் போதுமா? என அந்த மா அறிஞர் கேட்பதும்,சபிர்காக்கா சொன்னதுபோல் இந்த தலைப்பில் வேண்டுமென்றால் போதும். ஆனால் பல அரபிக்கவிதைகளை சாச்சாவின் கவிப்புலனால் தொடராக எழுதினால் எங்களையும் பட்டை தீட்டிக்கொள்ள உதவுமே? சாச்சா காதில் விழுகிறதா?

Yasir said...

சகோ.அஹமது காக்காவிற்க்கு எங்களின் மனமார்ந்த துவாக்களும் / வாழ்த்துக்களும்.....உங்களின் கல்வி அறியும், கவியறிவும் மற்ற அறிவுரைகளும் எங்களுக்கெல்லாம் தொடர்ந்து கிடைக்க நீங்கள் அதிரை நிருபரில் தொடர்ந்து எழுத வேண்டும்...உங்களுடன் வாரம் ஒருமுறையாவது நாங்கள் பழக வேண்டும்....

Unknown said...

அன்பினிய ஆய்வாளர் மூத்தசகோ அகமது அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்!

நான் எந்தத் தொடர் மூலம் அதிரை நிருபரைத் தொடரத் தொடங்கினேனோ அந்தத் தொடர் தொடராமல் முற்றுவதா?

கவிதைகளை இஸ்லாம் தடுக்கவில்லை என்ற உண்மையே நான் முன்பே அறிவேன். பல ஆங்கில இணைய தளங்களும் பல சான்றுகளை எடுத்து எனக்கு முன்வைத்திருந்தன. ஆனால் நான் இந்தத் தலைப்பில் வாசித்த அற்புதமான ஆய்வரிக்கை உங்களுடையதுதான் என்பதை அன்போடும் பாராட்டுகளோடும் கூறிக்கொள்கிறேன்.

நீங்கள் இட்ட அரபுக் கவிதைகளை வாசித்து நேசித்து, புறநாநூறு போல இஸ்லாமியக் கவிதைகள்தாம் எத்தனை எத்தனை என்று வியந்து உங்கள் தொடர் ஒன்றில் முன்பே கூறி இருந்தேன்.

இஸ்லாமியக் கவிதைகளை முறையாகத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளீர்களா?

இதுவரை அப்படி செய்யாதிருப்பின், என் அன்பு வேண்டுகோள் அதுதான். தமிழ்-அராபிக்-கவிதை இவை மூன்றும் நன்கு அறிந்தவரால்தான் அதைச் செழுமையாகச் செய்யமுடியும். அதற்கு மிகச் சரியானவர் தாங்கள்தான்.

சில கவிதைகளை மொழிமாற்றி எடுக்கும்போது புதுக்கவிதை நடையையும் தாங்கள் கையாள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். புதுக்கவிதைகள் சங்க இலக்கியக் காலங்களிலேயே தமிழில் உண்டு என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சன்றுகளோடு நிறுவியதை நான் வாசித்திருக்கிறேன். நான் கவிக்கோவின் ரசிகன். அவரின் கட்டுரைகளும் கவிதைகளும் என்னை வெகுவாக ஈர்க்கும்.

(போதுமா....?)

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பினிய மூத்தசகோ அகமது அவர்களுக்கு,

>>>>ஆதிக்க வலிமையால் அடக்கி ஒடுக்கப் பார்த்தார்கள் குறைஷியர்; முடியவில்லை! கேலி கிண்டல்கள் செய்து பார்த்தார்கள்; தோல்வியைத் தழுவினார்கள்! இறுதியாக அவர்கள் கைகளில் எடுத்த போர்க்கருவிதான் கவிதை!<<<<<

ஆமாம், குறைசிகளின் இனத்தில் பிறந்த அண்ணல் நபிக்கு 90 விழுக்காட்டிற்கும்மேல் எதிர்ப்பினைக் கொடுத்தவர்கள் குறைசிகள்தாம். குறைசிகளின் எதிர்ப்பு தீராத ஒன்றாகவே இறுதிவரை இருந்தது.

நாயகம் 40 வயதில் நபித்துவம் அடைகிறார். இஸ்லாம் பல வெற்றிகளை எட்டியபின்னரும்கூட தன் 52வது வயதில் அதாவது 12 வருடங்கள் ஆகியும் தீராத பகையை குறைசியர் கொடுக்க மதினாவுக்கு அடைக்கலம் தேடிச் செல்கிறார். அத்தனை கொடுமைக்காரர்கள் குறைசியர்.

அவர்கள் கைகளிலும் கவிதைகளா எனும்போது எனக்கு மட்டுமல்ல அந்தக் கவிதைகளுக்கும் நிச்சயம் உயிர்போக வலித்திருக்கும்.

நெருப்பு எவர் கைக்கும் வரும்தான். ஆனால் கொள்ளிக்கட்டைகளை எப்படி சுடர் விளக்குகளால் விரட்டி வாழ்வை ஒளிமிகுந்ததாய் ஆக்கமுடியும் என்பதற்கு இஸ்லாமியக் கவிதைகள் சிறந்த நல் உதாரணங்களாய் அமைந்துள்ளன.

அக்கவிதைகளுள் சிலவற்றைத் தொகுத்து மொழிமாற்றி இத் தொடர் முழுவதும் தோரணங்களாய்க் கட்டி கம்பீரமாய் தொங்கவிட்ட உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.

குறைசியர் கவிதைகளுக்கும் இஸ்லாமியர் கவிதைகளுக்கும் இடையே நிகழ்ந்த யுத்தம் முழுவதையும் பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். புல்லரிக்கிறது.

இது என் இரண்டாவது அன்பு வேண்டுகோள் உங்களிடம்!

(போதுமா.....?)

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பிற்கினிய மூத்தசகோ அகமது அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

இறைத்தூதரின் கவிதைகளை மொழிமாற்றி இட்டிருக்கிறீர்கள். அழகாக வந்திருக்கிறது. அருமையாக இருக்கிறது.

>>>>>>
கற்கள் சுமக்கும் இச்சுமையோ
கைபர்ச் சந்தைச் சுமையன்று
பொற்புள தூய நன்மையினைப்
பொழியும் இறையின் சுமையாகும்.
>>>>>>

கற்களையா உன் தோள்கள் சுமக்கின்றன; இறையின் அளவற்ற அருளையல்லவா சுகமாய்ச் சுமக்கின்றன!

அடடா எத்தனை அழகு. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பார்கள். அங்கே மருந்தும் தேனும் சம அளவில் இருக்கும் அல்லது தேன் சற்று கூடுதால் இருக்கும்.

ஆனால் இக்கவிதையிலோ குடம் குடமாய்த் தேன் கவிழ்ந்து அப்படியே கொட்டிக்கொண்டே இருக்கிறது வெறும் சுண்டைக்காய் அளவு சுமைக்காக. இக்கவிதையைக் கேட்டபின் அந்தச் சுமையைச் சுமக்கத்தான் எத்தனை புத்துணர்ச்சி உற்சாகப் பெறுக்கெடுக்கும்.

கவிதைக்குப் பொய்யழகு என்பார்கள். பொய் என்பது உண்மையில் பொய்யல்ல அலங்காரம். கண் என்ற உண்மைக்கு மை என்பது அலங்காரம். கவிதை என்ற உண்மைக்கு கற்பனை என்பது அலங்காரம்.

உண்மைக்கு அலங்காரம் செய்ய வந்த ஒரு கற்பனை நயமே இன்னொரு பெரும் உண்மையாகிறது இக்கவிதையில் மட்டும்தான். ஆகவே இது உண்மையிலேயே தனித்துவமான கவிதை. கவிதைகளையெல்லாம் வென்றெடுத்த கவிதை என்பேன்.

எப்படி எனில்....

ஒரு சாதாரண கவிஞன் ”நீ சுமப்பது கல்லல்ல இறைவனின் அருள்” என்று கூறியிருந்தால், அட எத்தனை அழகாகச் சொல்லி இருக்கிறான் கவிஞன் என்று பாராட்டுவோம். இறைவனின் அருளைச் சுமப்பதாய் நினைத்து நாம் கற்களைச் சுமப்போம் வாருங்கள் என்று அனைவரையும் அழைப்போம்.

ஆனால் அதையே இறைத்தூதர் சொன்னால் என்னவென்று பொருளாகும்?

கல் என்பது அருளுக்குச் சமம் என்ற நிலை மாறி அது இறைவனின் அருளேதான் என்று ஆகிவிடுமல்லவா? ஏனெனில் சொல்லுவது ரசூல் அல்லவா?

கவிதைக்கு அலங்காரமாய் வந்த கற்பனையே அது வெறும் கற்பனை அல்ல, உண்மை என்று ஆன ஒரே கவிதை இது மட்டும்தான் என்பேன்.

(போதுமா....?)

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பினிய ஆய்வாளர் அகமது அவர்களுக்கு,
அன்பும் அமைதியும் அருளாகட்டும்!

>>>>>>
செங்குருதி சிந்துகின்ற விரலே உன்கால்
செல்லுகின்ற பாதையிறைப் பாதை யன்றோ?
>>>>>>

இது நாயகத்தின் கவிதை என்று எனக்கு முதன் முதலில் சில ஆண்களுக்கு முன் அறிமுகம் செய்து வைத்தவர் நாகூர் ரூமி என்னும் முகமது ரஃபி. நான் படித்த ஜமால் முகமது கல்லூரியில் எனக்கு மூத்தவர். இன்று ஆங்கிலப் பேராசிரியர், எழுத்தாளர், மற்றும் கவிஞர். அவரின் மொழியாக்கம் இப்படி இருந்தது.

ரத்தம் வரும் நீயோ ஒரு விரல்தான்
ஆனால் இது அல்லாஹ்வுக்காக நீ கொடுத்த குரல்தான்

எந்த ஓர் இன்னல் வந்த போதும் சட்டென்று இறைவனை நினைத்து எளிதாக ஆக்கிக்கொள்ளும் ஈமான் நிறைந்த உள்ளம்தான் இறைதூதரின் கவிதைகளில் அப்பட்டமாய் வெளிப்படுகின்றது.

அந்தப் பொதுத்தன்மையே இறைதூதரின் கவிதைகளில் முதன்மை என்று நான் காண்கிறேன்.

குறைசிகளின் பெருங் கொடிய இன்னல்களுக்கு மட்டுமல்ல, கல் சுமப்பது, விரலில் வழியும் ரத்தம் போன்ற சின்னச் சின்ன இன்னல்களுக்கும்கூட இறைதூதர் இறைவனின் அருளையே பற்றிப் பிடித்து வெற்றி கொள்கிறார்.

இது அனைத்து முஸ்லிம்களுக்கும் மிக நல்ல பாடம்.

நான் இறைதூதரின் கவிதைகளுக்கும் விமரிசனம் எழுதுவேன் என்று கனவு கூட கண்டது கிடையாது. இன்று எனக்கு அந்த வாய்ப்பினைத் தந்த அன்பு ஆய்வாளர் உங்களுக்கு எத்தனை நன்றிகளை எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை!

(போதுமா....?)

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பின் மூத்தசகோ அகமது அவர்களுக்கு,

>>>>>>
கருணை நபியவர்கள் கவிகளும் பாடியுள்ளார்கள் என்பதற்கான சில சான்றுகளே இவை. அவர்கள் காரணமின்றிக் கவிதைகளை வெறுக்கவுமில்லை; அவர்களுக்கு இறைவன் கொடுத்திருந்த ‘வஹி’ என்ற உயர் இலக்கியத் திறன் கொண்டு, கவிதைகளைக் கேட்டு மகிழ்ந்தும் உள்ளார்கள்; பாடுவோரை ஊக்கப்படுத்தியும் உள்ளார்கள் என்பதுவே உண்மையிலும் உண்மையாகும்.
>>>>>>>

இந்த அருமைத் தொடருக்கு இந்த முத்தாய்ப்பு வரிகள் மிகவும் சிறப்பாகவே அமைந்துள்ளன. நான் முன்பே உங்கள் தொடரின் பகுதிகளில் சொன்னதுபோல், நீண்டகாலம் ஓர் நல்ல ஆய்வுக்காகக் காத்திருந்தேன்.

நான் முதன் முதலில் இது தொடர்பாக தமிழில் வாசித்த கட்டுரை பேராசிரியர் நாகூர் ரூமியினுடையது. அதுவும் அருமையானதுதான். ஆனால் அது என்னைப் போன்றவர்களுக்குத்தான் ஏற்றதாக இருந்தது. அர அல போன்றவர்களுக்கு அல்ல.

நாகூர் ரூமியின் கட்டுரையை கீழுள்ள சுட்டியில் காண்க:
http://anbudanislam2012.blogspot.ca/2012/07/blog-post_9653.html

’வஹீ என்ற உயர் இலக்கியத் திறன்’ என்ற சொற்றொடரை அழகாகப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். ஆம் அது ஓர் உயர் இலக்கியத் திறனேதான். அதை நல்ல கவிஞர்களால்தான் எளிதாகவும் சரியாகவும் அணுகமுடியும் என்பது என் அழுத்தமான கருத்து.

மிகப் பெரும் கவிஞர்களாலேயே சூழப்பெற்ற அரபு மண்ணில் அவர்களையெல்லாம் அதிசயிக்கவும் ஆச்சரியப்படவும் வைக்கும் உயர் கவிதை நடையில் குர்-ஆன் இறங்குவதுதானே மிகவும் பொருத்தமானது. இறைவன் என்ன அறியாதவனா? இது போல் ஓர் வரியையாவது இவர்கள் எழுதுவார்களா என்ற சவால்கூட திருமறையில் உள்ளதல்லவா?

இஸ்லாம் வாளால் தோன்றிய மதம் என்பார்கள்
அது உண்மை அல்ல
இஸ்லாம் கவிதையால் யாக்கப்பட்ட மார்க்கம் என்றால்
அதை நாம் தாராளமாக நம்பலாம்

அன்புடன் புகாரி

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

//போதுமா?//

போதும்...
ஆனால் போதாது...
:-)

(حديث مرفوع) وَرُوِيَ عَنِ ابْنِ وَهْبٍ ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ ، عَنْ دَرَّاجِ أَبِي السَّمْحِ ، عَنْ أَبِي الْهَيْثَمِ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَنْ يَشْبَعَ الْمُؤْمِنُ مِنْ خَيْرٍ يَسْمَعُهُ حَتَّى يَكُونَ مُنْتَهَاهُ الْجَنَّةَ " .
ஒரு முஃமின் தான் கேட்கும் எந்த ஒரு நல்ல விஷயத்தின் மூலமும் அவன் இறுதியில் சென்று அடையும் இடம் சுவனமாக இருக்கும் வரை திருப்தியுற மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பர் அபூஸஈதுல் ஃகுத்ரீ (ரலி) திர்மிதீ எண் 2630

அஹ்மது சாச்சா, இதுவரை தாங்கள் எழுதிய கட்டுரைகளுக்கு முடிவுரையாக 25 ஆவது கட்டுரை ஒன்று எழுதி விட்டால் சிறப்பாக இருக்கும்.

கட்டுரைகளின் எண்ணிக்கையும் கால் செஞ்சுரி ஆகி விடும்!

Unknown said...

தொடர் 25ஐ விரைவில் எதிர்பாருங்கள்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு