கல்வி கேள்விகளில் முஸ்லிம் ஈடுபட்டிருப்பது, அவனைத் தரத்தில் உயர்த்தும் ஒன்றாக்கி, இறைப் படைப்புகளை ஆழ்ந்து நுகர்ந்து, அவற்றின் அழகில் திளைக்க வைக்கிறது. கவிதை இந்நிலைக்கு மனிதனை முழுமையாக ஆளாக்கி வைக்கின்றது என்பது மிகைக் கூற்றாகாது. கவிஞனின் சிந்தனையானது, அவனையும் அவன் கவிதையைப் படிப்போரையும், உயர்ந்த - நேரிய சிந்தனைக்குத் தூண்டுகோலாக மாற்றிவிடுகிறது. மனிதனைச் சிந்திக்கத் தூண்டும் இஸ்லாம், மனித வாழ்க்கையையே கவிதையாக மாற்றிவிடுகின்றது. இஸ்லாத்தின் இறுதித் தூதர் (ஸல்) அவர்களே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்கள்.
நபியவர்களே கவிதையால் காட்டுண்டார்கள் – துன்பத்திலும் இன்பத்திலும். அவர்களைத் தொடக்க காலம் முதல் ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் கவிதையைக் கற்று, மக்கத்துக் காபிர்களுக்குக் கவிதையிலேயே வாயாப்புக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயமும் ஏற்பட்டது. இருளிலும் இறைமறுப்பிலும் இருந்த மக்கத்துக் குறைஷியரைக் கவிதைகளைக் கொண்டும் மடக்கினார்கள் அந்த நபித்தோழர்கள்.
மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து வந்த பின்னும் குறைஷியரின் கொடுமைகள் தொடர்ந்தபோதுதான்,
يا حسان اهجهم وروح القدس يؤيدك
(ஹஸ்ஸான்! இந்த இணைவைப்பாளர்களை எதிர்த்துப் பாடுவீராக! ‘ரூஹுல் குத்ஸ்’ எனும் ஜிப்ரீல் உமக்குத் துணை புரிவார்.) என்று தம் அருமைத் தோழரும் கவிஞருமான ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) அவர்களை ஆர்வமூட்டினார்கள். (சஹீஹுல் புகாரீ)
இஸ்லாத்தின் மீள் எழுச்சியின் தொடக்க கால முஸ்லிம்களுள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) எனும் நபித்தோழரும் ஒருவர். இவர் இயல்பாகவே கவி பாடும் திறமை பெற்றவர் என்பதை முந்தையப் பதிவுகளில் பார்த்துள்ளோம். இவரின் இந்தத் திறமை, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வியக்க வைத்தது. அந்த வியப்பினூடே ஒரு நாள், “ரவாஹாவின் மைந்தரே! நீர் எப்படிக் கவிதை பாடுகின்றீர்?” எனக் கேட்டார்கள்.
அதற்கு, “செய்திகளை நான் செவி மடுத்து, உள்ளத்தில் பதிய வைத்துப் பின்னர் கவிதையாக மொழிகின்றேன்; அவ்வளவுதான்” என்று அமைதியாகக் கூறினார் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி). “அவ்வாறாயின், மக்கத்துக் குறைஷியருக்கு எதிராகப் பாடலொன்றைப் பாடும்” என்று அண்ணலவர்கள் ஆணையிட்டபோது, கவிமழை பொழிந்ததங்கே:
يا هاشم الخير إن الله فضلكم، على البرية فضلا ماله غير
إِنِّي تَفَرَّسْتُ فِيكَ الخَيْــــرَ أَعْرِفُـــهُ، فراسة خالفتهم في الذي نصر
ولو سالت أو إستنصرت بعضهم، في جل أمرك ما آوو ولا نصر
فَثَّبَتَ اللهُ مَا آتَـــاكَ مـِنْ حـُسْـــنٍ، تَثَبِيتَ مَــــوسَى وَنَصْرًا كَالذي نَصَروا
وَاللهُ يَعْرِفُ أنْ ما خَانَنِي الخَبَــــــرُ، أَنْتَ النبي وَمَنْ يُحْــرَمْ شَفَاعَتُـــــهُ
يَوْمَ الحِسَابِ لَقَدْ أَزْرَى بِـهِ القَــــدَرُ
இதன் தமிழ்க் கவியாக்கம்:
ஹாஷிம்குலச் செல்வர்களே உம்மை அல்லாஹ்
அரிதாகப் பதவியினை உயர்த்தி வைத்தான்
காசினியில் அதற்குநிகர் இல்லை என்பேன்
காண்கின்றேன் உங்களிடம் நற்பண் பெல்லாம்
ஆசுடைய இறைமறுப்போர் உங்க ளுக்கோ
அணுவளவும் உதவமாட்டார்; புறக்க ணிப்பார்
பேசிவந்த தன்தூதர் மூஸா வைத்தான்
பேரருளால் காத்ததுபோல் காப்பான் உம்மை.
என்பார்வை எனக்குமாறு செய்ய வில்லை
இறைத்தூதர் உமையன்றி யாரு மில்லை.
தன்பாவம் போக்கிடவே பரித வித்துத்
தாங்கொண்ணா வேட்கையுடன் பரிந்து ரைக்கு
முன்போகும் பேரருளை இழந்தோ ருக்கு
முடிவில்லா வேதனையே; ‘சோத னைக்குள்
என்பார்வை இல்லை’யென விதியும் போகும்
எதிர்வினையைக் கண்டுகொள்வார் கதியற் றோரே!
அருட்கவிஞர் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் தம் கவிதயடிகளுள்,
فَثَّبَتَ اللهُ مَا آتَـــاكَ مـِنْ حـُسْـــنٍ، تثبيت موسى ونصرا كالذي نصروا
எனும் அடியைப் பாடியவுடன், நபியவர்கள்,
وأنت فثبتك الله يا ابن رواحه
“ரவாஹாவின் மைந்தரே! அல்லாஹ் உங்களையும் உறுதிப் படுத்தி வைப்பானாக!” என்று வாழ்த்தினார்கள்.
மற்றவர்களின் சில கவிதையடிகளை நபியவர்கள் மனப்பாடமும் செய்துள்ளார்கள். ஒரு முறை அவர்களும் அருமைத் தோழர் அபூபக்ர் (ரலி) அவர்களும் வெளியில் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். யாரோ ஒருவர் கவிஞன் ஒருவனின் கவியடியை இவ்வாறு பாடிக்கொண்டு சென்றார்:
ياأيها الرجل المحول رحله ** هلا نزلت بآل عبد الدار
இதனைச் செவியுற்ற நபியவர்கள், “அது இப்படியல்லவே. இப்படித்தான்:
ياأيها الرجل المحول رحله ** هلا نزلت بآل عبد مناف
என்று கூறி, அபூபக்ரைப் பார்த்தார்கள். அன்னாரும் நபியின் நினைவாற்றலை எண்ணி மகிழ்ந்து ஏற்றுக்கொண்டார்கள். (சான்று: ‘சீரத்துன் நபி’ – இப்னு ஹிஷாம்)
இவ்வாறு, நபியவர்கள் கவி பாட ஆர்வமூட்டினார்கள்; கவி பாடக் கேட்டு மகிழ்ந்தார்கள்; கவிதையடிகளை மனப்பாடம் செய்தும் இருந்தார்கள்!
14 Responses So Far:
அதிகாரப்பூர்வ அனுமதிச் சான்று!
// நபியவர்கள் கவி பாட ஆர்வமூட்டினார்கள்; கவி பாடக் கேட்டு மகிழ்ந்தார்கள்; கவிதையடிகளை மனப்பாடம் செய்தும் இருந்தார்கள்!//
ஆக நபி அவர்களை பின் பற்றுவதன் மூலம் ஒரு சுன்னதை ஹயாத்தாக்குகிறோம். பலனுள்ள ஆய்வு.
ஆய்வு மேன்மேலும் மெருகூட்டிச் செல்லுவதற்கு ஆசிரியர் அவர்களின் படிப்பாற்றல் தான் என்பதை அவர்களை நேற்று அவர்களின் இல்லத்தில் சந்தித்த பொழுது உணர்ந்தேன்; அவர்கள் இருப்பிட அறையைச் சுற்றிலும் “நூலகம்” போன்ற அமைப்பில் நூற்களாகவே இருக்கக் கண்டேன்!
படிப்பாளிதான் படைப்பாளியாக முடியும் என்பதற்கு ஆசிரியர் அவர்கள் ஓர் அழகிய முன்மாதிரி. இப்படிப்பட்ட நல்லாசிரியரை எமக்குத் தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!
தொடர்ந்து ஆழ்ந்து வாசித்து வருகிறேன்...
ஆய்வுகள் தொடர தங்களின் ஆரோக்கியமும் அதற்கான சூழலும் செழுமையாக அமைந்திட எங்களின் துஆ தொடரும் இன்ஷா அல்லாஹ் !
கவிதை பற்றிய ஆய்வில் நல்ல பல அரிய ஹதீஸ்களும் அறியக் கிடைக்குமாறு எழுதிவருவது அறிஞர்களுக்கே உரிய எழுத்து யுக்தி.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!
ஞான கடலாம் நம் நபி நாயகம் (ஸல்)அவர்கள்
நல்ல விசயங்களை மக்களின் மனதில் பதிய
கவிதையை கையாண்ட விதம் ..கவிதையை
கேட்கும் ஆர்வம் ..அபூபக்கர் (ரலி ) சொன்ன கவி
வரிகளுக்கு திருத்தம் ..அற்புதமான தகவல்கள் ..
ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா ..
நபி நாயாகம் அல்லவா ...என்ற பாடல் வரி
நினைவுக்கு வருகிறது..வருங்கால சந்ததிக்கு
நல்ல நூல் உருவாகிறது ..ஆசிரியர் நலமுடன்
வாழ வாழ்த்துக்கள் ..
கவிதை பற்றிய ஆய்வில் நல்ல பல அரிய ஹதீஸ்களும் அறியக் கிடைக்குமாறு எழுதிவருவது அறிஞர்களுக்கே உரிய எழுத்து யுக்தி.வெல்டன் சாச்சா
அரிய ஆய்வு,பாதுகாக்கபடக்வேண்டிய பொக்கிஷம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அற்புத வரிகளோடு தொடர் பெற்றுவரும். அஹமத் அப்பாவின் கவி ஆய்வு .கல் நெஞ்சகாரர்களையும் கரைத்துவிடும் என்பதில் எவ்வித சந்தேகமே இல்லை.
உங்கள் கட்டுரை முன்பே நான் சொன்னதுபோல் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கக் கூடிய அளவுக்கு மிகவும் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது.
//உங்கள் கட்டுரை முன்பே நான் சொன்னதுபோல் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கக் கூடிய அளவுக்கு மிகவும் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது.//
உளவியல் அறிஞராய் உலா வரும் அன்புச் சகோதரர் ஜாஹிர் அவர்களே!மற்றவர்களின் எழுத்தை, பேச்சை, நடையை வைத்தும் உள்ளங்களில் ஊடுருவியும் சரியாகக் கணிக்கும் திறனை அல்லாஹ் உங்களின் அற்புதமானத் திறமைக்கு இப்பின்னூட்டக் கருத்துரையும் ஒரு சான்று!கவிவேந்தர்க்குக் கிட்டிய “நெருக்கமான” உங்களிடம் நட்பின் பேறு என்க்கும் கிட்டுமா? என்னுடைய “நெருக்கமான” நண்பனை(தமீமை) கவிவேந்தரும் நெருக்கம் வேண்டுதல் போலவே: A=B;B=C; therefore A=C
//அல்லாஹ் வழங்கிய உங்களின் அற்புதமானத் திறமைக்கு...// என்று வாசிக்கவும்; தட்டச்சுப்பிழைக்கு மன்னிக்கவும்
இந்த தொடர் அதிரை நிருபரின் அளவிட முடியாத பொக்கிஷம்.
அஹமது காக்கா அவர்களின் ஆழ்ந்த அறிவு நமது அழியாத அசையாச் சொத்து. மாஷா அல்லாஹ்.
>>>>>>>>>>>>>>>>>>>>
கல்வி கேள்விகளில் முஸ்லிம் ஈடுபட்டிருப்பது, அவனைத் தரத்தில் உயர்த்தும் ஒன்றாக்கி, இறைப் படைப்புகளை ஆழ்ந்து நுகர்ந்து, அவற்றின் அழகில் திளைக்க வைக்கிறது.
கவிதை இந்நிலைக்கு மனிதனை முழுமையாக ஆளாக்கி வைக்கின்றது என்பது மிகைக் கூற்றாகாது.
கவிஞனின் சிந்தனையானது, அவனையும் அவன் கவிதையைப் படிப்போரையும், உயர்ந்த - நேரிய சிந்தனைக்குத் தூண்டுகோலாக மாற்றிவிடுகிறது.
மனிதனைச் சிந்திக்கத் தூண்டும் இஸ்லாம், மனித வாழ்க்கையையே கவிதையாக மாற்றிவிடுகின்றது.
<<<<<<<<<<<
ஐயா இவை பொன்னெழுத்துக்கள்! இதற்குமேல் கவிதைக்கும் கவிஞனுக்கும் அங்கீகாரம் எவரால் இச்சபையில் கொடுக்க இயலும் என்று கூறத் தோன்றுகிறது.
பாராட்டுகளைத் தாண்டிய ஒரு பாராட்டையும்
வாழ்த்துகளைத் தாண்டிய ஒரு வாழ்த்தையும்
வயதைத் தாண்டி உங்கள் முன் பொழிகிறேன்
அன்புடன் புகாரி
Post a Comment