இந்த எதிர்க் கேள்வியின் மூலமாக எனது நிலைபாட்டை 50% (ஐம்பது விழுக்காடு) விளங்கியிருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
இந்திய முஸ்லிம்கள் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப் படுகின்றார்கள். உண்மை!
நமக்குக் கிடைக்கவேண்டிய பங்கு, யாருக்கோ போய்ச் சேருகின்றது. இதுவும் உண்மை!
இந்திய அரசின் மறைமுக உதவியுடன் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் இதைத்தான் செய்கின்றன. இது உண்மையிலும் உண்மை!
இதனால் எல்லாம் நாம் கொண்டாடக் கூடாது என்று ‘ஃபத்வா’ கொடுக்க முடியுமா? முடியாது!
இதற்குச் சரியான, யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் முடிவுக்கு வருவது எப்படி?
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக இம்மண்ணின் மைந்தர்களாக முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளனர். எத்தனை அரசியல் மற்றும் இன மாற்றங்கள் இம்மண்ணில் ஏற்பட்டிருந்தாலும், முஸ்லிம்கள் தமது தனித் தன்மையை (identity) இழக்காமல் இதில் வாழ்ந்து மறைந்துள்ளனர் என்பது உலகறிந்த உண்மை.
இந்த நாட்டிற்காக, இதன் சுதந்திர எழுச்சிக்காக, அச்சமற்ற வாழ்க்கைக்காக, தம் உயிரைப் பணயம் வைத்தவர்கள், போரிட்டு மாண்டவர்களின் பெயர்கள் எண்ணிக்கையில் அடங்கா.
ஏன், நாடு பிடிக்கும் நரித் தந்திரத்தால் வணிகப் போர்வையில் தமது ஆளுகைக்கு அடித்தளமிட்ட ஆங்கிலேயர்களை எதிர்த்துச் சுதந்திரத்துக்கான போரின் முன்னோடிகளாக விளங்கியவர்கள் நம் மார்க்க அறிஞர்களும் சமுதாயத் தலைவர்களும் பொது மக்களுமாவர்.
அந்நியர்களின் மொழி, மதம், பண்பாடு இவற்றுக்கெல்லாம் எதிர்ப்புக் காட்டி, மூடு விழா நடத்தியவர்கள் நமது மார்க்க அறிஞர்கள் என்பது உலகறிந்த உண்மை. இதனால் நாம் - இன்றைய இஸ்லாமியச் சமுதாயம் வாய்ப்பிழந்து நிற்கும் அவலம் யாருக்குத் தெரியாது? இந்நிலையில்தான், “சுதந்திர தினத்தையும் குடியரசு தினத்தையும் முஸ்லிம்களாகிய நாம் கொண்டாடுவது கூடுமா?” என்ற கேள்வி கேட்கப்படுகின்றது!
‘கொண்டாட்டம்’ எனும்போது, அவர்களின் மனக் கண் முன் நிழலாடுபவை, ஆடல், பாடல், கேளிக்கை, கூத்து போன்றவைதாம். இவையின்றி, அமைதியாக, உரிமையுடன், முஸ்லிம்கள் தமது நாட்டுச் சுதந்திரப் பங்களிப்பை நினைவு கூர்ந்து, பசுமை நினைவுகளைப் பதிவு செய்து, மகிழ்ச்சியுடன் நாம் ஏன் கொண்டாடக் கூடாது? ‘முஸ்லிம் எதிர்ப்பு’ என்ற ‘அஜென்டா’வை வைத்துக்கொண்டு ஆட்சி புரியும் வக்கிரப் புத்திக்காரர்களுக்கு எழுத்தால், பேச்சால் ஏன் நாம் எடுத்துக் கூறக் கூடாது?
“இந்த நிகழ்வுகளில் முஸ்லிம்கள் பங்கெடுப்பது ஹராம்” என்று ‘ஹராம் ஃபத்வா’ கொடுப்பதற்கும் சிலர், சில முஸ்லிம் அமைப்புகள் வரிந்து கட்டிக்கொண்டு பொதுமக்களை மூளைச் சலவை செய்துவரும் அரை வேக்காட்டுத் தன்மை கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவுகின்றது!
“ஆகுமானதும் விலக்கப்பட்டதும் தெளிவானவை. இவற்றுக்கிடையில் இருக்கும் ஐயத்துக்கிடமான – தெளிவில்லாதவையும் உள. அவற்றைப் பெரிதாக்கி ஐயத்தில் வீழ்ந்துவிடாதீர்” என்பது நபிமொழியாகும். இந்த இடைப் பகுதியில் பட்டவைதான், அவர்களால் ‘ஹராம் ஃபத்வா’ கொடுக்கப்பட்ட நாட்டு நிகழ்வுகள்!
முஸ்லிம் கல்வி நிலையங்கள், சேவையகங்கள், கட்சிகள், அமைப்புகள், அறக்கட்டளைகள் அனைத்தும் இந்நிகழ்வுகளை – விழாக்களை நடத்துவதன் மூலம், பிறருக்கில்லாவிட்டாலும், தம்முடைய நினைவைப் பசுமையாக்க, இது போன்ற நிகழ்வுகளில் இந்திய முஸ்லிம்கள் முனைப்புடன் ஈடுபட வேண்டும்.
இந்திய முஸ்லிம்களின் உள்ளத்தில் ஐயத்தைப் புகுத்துபவர்கள், இந்தியப் பெருங்கண்டத்தில் நாம் – முஸ்லிம்கள் பெருவாரியாக இருந்தபோது, முஸ்லிம்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்று கூக்குரலிட்டுப் பிரிந்து போனவர்கள், பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாட்டவர்கள் ஆவர். அவர்கள் நம் காதுகளில் ஓதிய ‘சாத்தானிய வசனங்கள்’தாம் இவை.
சுதந்திரத்துக்கு முன்னால் நாம் பெருவாரியாக இருந்தபோது, கவிஞர் இக்பால் பாடிய –
“சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா” (உலக நாடுகள் அனைத்தையும்விட எங்கள் இந்தியத் திரு நாடுதான் சிறந்தது) என்ற சுதந்திர கீதம், நம்மை விரட்ட நினைக்கும் எதிரிகளின் காதுகளில் வீழட்டும்! நம்மைப் பார்த்து, “முஸ்லிம்கள் அனைவரும் பாக்கிஸ்தானுக்குப் போகட்டும்” என்று கொக்கரிக்கும் ‘கோட்சே’ கூட்டத்தினர் அடங்கி ஒடுங்கிப் போகட்டும்! அல்லது, உண்மை நிலையை உணரட்டும்!
எனவே, ‘உமூரும் மினல் முஷ்தபிஹாத்’ எனும் பிரிவில் அடங்கும் இது போன்ற நிகழ்வுகளுக்கு, இந்திய நாட்டுக்காக இரத்தம் சிந்திய நமது தியாகச் செம்மல்களை நினைவுகூர்ந்து, ‘கூடும்’ என்ற நிலைபாட்டில் நிற்போம்.
அதிரை அஹ்மது


