‘அஞ்சும் சென்று அசரும் சென்று புள்ள வந்திருக்கான்’ என்று அதிரையின் பாஷையில் சொல்வார்கள். தாமதமாக, நேரம் தவறி வருவதைத்தான் நாம் இப்படிக் குறிப்பிடுவோம். இதே போல் குறிப்பிடத் தகுதி படைத்ததாகவே பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு இருக்கிறது. நாடு முழுமைக்கான பாராளுமன்றத் தேர்தல், அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று மார்தட்டிக் கொண்டு ஊடகங்களை எல்லாம் வளைத்துப் போட்டு வைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி, புதிய நீதிக் கட்சி என்ற பொட்டிக்கடை கட்சியெல்லாம் கூட தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகும் கூட தனது தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் ஒரு மாநிலத்தில் வாக்குப் பதிவே தொடங்கிய பிறகு ஐம்பத்தி இரண்டு பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறது என்றால் – அதுவும் தேர்தல் கமிஷன் தனது கண்டனத்தை வெளியிட்ட பிறகும் அதை மதித்து பதில் கூட அளிக்காமல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது என்றால் தேர்தல் அறிக்கைக்கு ஒரு தேசியக் கட்சி தரும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம். ஒன் மேன் ஷோ நடத்தினால் உலகையே வெல்லலாம் என்ற மமதையின் வெளிப்பாடே இந்த தாமதம்.
தேர்தல் அறிக்கை என்பது தேர்தலை சந்திக்கும் கட்சிகள் தாங்கள் மக்களால் ஆதரிக்கப் பட்டு வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தால் செய்ய நினைக்கும் திட்டங்கள் மற்றும் செயல்படுத்த தீர்மானித்து இருக்கும் கொள்கைகள் மற்றும் கையாளப்போகும் சீர்திருத்தங்களின் பட்டியலே ஆகும். இந்த அடிப்படையில் மாநில மற்றும் தேசியக் கட்சிகள் யாவும் தங்களின் தேர்தல் அறிக்கைகளை பல வாரங்களுக்கு முன்பே வெளியிட்டுவிட்டன. இப்படி தேர்தல் அறிக்கைகளை கட்சிகள் தேர்தலுக்கு முன் கூட்டியே வெளியிடுவதற்குக் காரணம், அந்த தேர்தல் அறிக்கையின் அம்சங்கள், கொள்கைகள் , திட்டங்கள் ஆகியவை நாடெங்கும் பல்வேறு தலைவர்களால் விவாதிக்கப் படும்; விமர்சிக்கபப்டும்; பாராட்டப்படும்; நம்பிக்கை வைக்கப்படும். ஆனால் பாரதீய ஜனதாவின் தேர்தல் அறிக்கை இவற்றுக்கெல்லாம் நாட்டு மக்கள் யாருக்குமே எந்த வாய்ப்புமே வழங்காமல் ‘கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை’ என்று ஒரு சடங்காக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இந்த தாமதத்துக்கு காரணம் இருக்கிறது.
அந்தக் காரணம் வேறு ஒன்றுமல்ல பாரதீய ஜனதாவின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் என்னவாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே என்ற மமதை மட்டுமல்ல நரபலி நாயகனை வளர்ச்சியின் நாயகன் என்று பூவும் பொட்டும் வைத்து சித்தரித்து ஊடகங்களில் உலவவிட்டு கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பையும் நிகழ்த்திய பிறகு தேர்தல் அறிக்கை என்பது ஒரு தேவை இல்லாத ஒன்று என்று நினைத்து இருக்கலாம்.
மற்ற கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கும் முன்பே – அதாவது 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே பதினாறாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியை முரளி மனோகர் ஜோஷி தலைமையில் குழு அமைத்து தனி வெப்சைட் தொடங்கி ஆரம்பித்தது பிஜேபி ஆகும். அப்போது இந்த வெப்சைட்டில் வெளியிடப்பட்டிருந்த ஒரு அறிக்கை காரணமாக நாட்டில் பிஜேபி மீது பல எதிர்ப்புக் கணைகள் பாயத்தொடங்கின. தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய திட்டங்கள், கொள்கைகள் யாவை என்று மக்கள் நினைக்கிறார்களோ அவற்றை பிஜேபி தொடங்கிய தனி வெப்சைட்டுக்கு அனுப்பும்படி நாட்டு மக்களை கேட்டிருந்தது பிஜேபி. ஆனாலும் பிஜேபியின் அடிப்படைக் கொள்கைகளான ராமர் கோயில் , பசுவதை, பொது சிவில் சட்டம், காஷ்மீருக்குரிய தனி அந்தஸ்து நீக்கம், சேது சமுத்திரத் திட்டம் ஆகியவற்றில் எவ்வித கருத்து மாறு பாட்டையும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஏற்காது என்று அந்த அறிவிக்கை கூறியது. ஆனால் இவ்வளவு பில்டப்புடன் தொடங்கி. இறுதியில் கேட்க நாதியில்லாத தேர்தல் அறிக்கையாக – விவாதிக்க நேரம் தராத தேர்தல் அறிக்கையாக திருவிழாவில் காணாமல் போய் திரு திருவென்று முழித்துக் கொண்டிருக்கும் குழந்தையைப் போல் இந்த தேர்தல் அறிக்கை வெளிவந்து இருக்கிறது.
எப்படியானாலும் நாம் நமது விமர்சனத்தை ஒரு அலசலுடன் பதிவு செய்கிறோம்.
முதலாவதாக பிஜேபியின் தேர்தல் அறிக்கையின் ஆணிவேர் இந்துத்வா என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை பிஜேபியின் எந்த தேர்தல் அறிக்கையிலும் இடம் பெறாத ஆர் எஸ் எஸ் தலைவரின் படம் இடம் பெற்று இருக்கிறது. இது அவர்கள் பார்வையில் திருஷ்டிக்காக கூட இருக்கலாம்.
அறிக்கையை இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம் ஒன்று அரசு நிர்வாகம் பொருளாதாரம் வெளியுறவுக் கொள்கை ஆகியவை தொடர்பானது. மற்றது கலாச்சாரம் பண்பாடு ஆகியவை தொடர்பானது.
அரசு நிர்வாகம், பொருளாதாரம் போன்றவற்றில் காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கும் பாரதீய ஜனதாகட்சியின் தேர்தல் அறிக்கைக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் முகநூலில் பதிவு செய்தது போல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் முப்பது பைசா கொடுத்து எடுத்த ஜெராக்ஸ் காபிதான் அந்தக் கொள்கைகள். ஆட்சியை மாற்ற வேண்டும் என்று போராடும் ஒரு கட்சி ஒரு புதிய பொருளாதாரக் கொள்கை என்று ஒன்றைக் கூட எடுத்து வைக்கவில்லை. அப்புறமென்ன புடலங்காய் அறிக்கை?
அதேபோல் வெளியுறவுக் கொள்கைகளிலும் காங்கிரஸ் உடைய கொள்கைகளில் இருந்து எவ்வித மாற்றத்தையும் பிஜேபி அறிவிக்கவில்லை. வழக்கம் போல் அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேணுவோம் என்றே கூறி இருக்கிறது. தமிழ்நாட்டில் பிஜேபியுடன் தேர்தல் கூட்டு வைத்துள்ள வைகோ தலைமையிலான மதிமுக கூறும் தனி ஈழம் என்பது போன்ற பெரிய முதலைகளை அல்ல கச்ச தீவு போன்ற சல்லிக் கெண்டைகளைக் கூட பிஜேபியின் தேர்தல் அறிக்கை குறிப்பிடவில்லை. இதற்காக வங்கக் கடலில் விழ வேண்டியவர் வைகோதான்.
அடுத்து மோடி ஆட்சிக்கு வந்தால் நாடு முழுதும் மதுவிலக்கு என்று மொடாக்குடியர்களின் மத்தியில் பேசி கைதட்டல் வாங்கும் பாட்டாளி மக்கள் கட்சி இந்த தேர்தல் அறிக்கையை ரத்தம் சிவப்பேறிய கண்களுடன் பார்க்கிறது; இன்னும் மோடி ஆட்சிக்கு வந்தால் முல்லைப் பெரியாறு நீர் வரும், காவிரி நீர் வரும், தடை இல்லா மின்சாரம் வரும் என்றெல்லாம் சம்சாரம் சகிதமாக கதை அளந்துகொண்டு இருக்கிற விஷ(ய)காந்தனுக்கும் இந்த அறிக்கையில் ஒன்றும் இல்லை. முக்கியமாக காவிரிப் பிரச்னை மற்றும் நதி நீர் இணைப்பு ஆகிய பிரச்சனைகள் பற்றி இதில் மூச்சு விடவில்லை. அப்படி மூச்சுவிட்டால் கர்நாடகா ஆப்பு வைக்குமே என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.
அடுத்து, கலாச்சாரம் பண்பாடு ஆகிய பிரிவில் விவாதிக்கப் போனால் நாட்டை இன மத சாதி அடிப்படையில் உளி கொண்டு பிளக்கும் அம்சங்கள் நிறைந்த தேர்தல் அறிக்கையாக இந்த தேசியக் கட்சியின் தேர்தல் அறிக்கை இருக்கிறது. இந்தப் பகுதியே நாம் அதிகமாக விவாதிக்க வேண்டியதும் நம்மை மட்டுமல்ல நாட்டையே அச்சுறுத்தும் பகுதியாகவும் இருப்பதாகும். முதலாவதாக சங்க பரிவாரின் கோட்பாடாகிய
- “இந்திய நாட்டுக்கும் சமூகத்துக்கும் இந்து மதம்தான் அடையாளம், இந்துத்துவம்தான் கலாச்சாரம்.” என்பதை இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.
- அத்துடன், “சனாதன தர்மம்தான் இந்திய தேசியத்துவம்” என்கிறது.
- மேலும் “ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே தேசம்” என்ற லட்சியத்தை முழங்குகிறது.
- இன்னும், “அரசியலில் இந்துத்துவம் உருவாவது, சமுதாயத்தின் சிலருக்கு சலுகைகள் காட்டி திருப்திப்படுத்துவதற்கும், சிலரை வாக்கு வங்கிகளாக நடத்துவதற்கும் நல்ல முறிவு மருந்தாக இருக்கும்” என்கிறது
- இதையும் தாண்டி, “இந்தியாவின் மனசாட்சியாக பகவான் ராமர் இருக்கிறார்” என்கிறது.
மேலே குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள அனைத்துமே நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோரின் கனவுகளைத் தகர்க்கும் விஷவித்துக்கள் அடங்கிய கருத்துக்களாகும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை. இந்த நாடு மங்கோலிய, ஆரிய, திராவிட, அந்தமான் போன்ற தீவுகளின் நீக்ரோ மற்றும் பழங்குடியினர் ஆகிய ஐந்து வகை இனங்களைக் கொண்டது. ஒரே கலாச்சாரம் என்பது இங்கு திணிக்கப்பட்டால் நாடு என்ன ஆகுமென்று நாம் சொல்லத் தேவை இல்லை.
இத்தனையும் சொல்லும் அறிக்கை பிஜேபி பிறப்பெடுத்த காரணங்களுக்கான கரடுமுரடான காரியங்களை சொல்லாமல் விடுமா? இதோ அவை:-
1. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு கோயில் கட்டப்படும் என்று கூறுகிறது. கோயில் கட்டுவது ஒரு குறிப்பிட்ட கடவுள் மீது நம்பிக்கையுள்ள எவரும் எங்கும் கட்டலாம் . அரசியல் சட்டப்படி என்றால் கோயில் என்ன மகளிர் இட ஒதுக்கீடா? இருநூறு நாள் வேலைத்திட்டமா? உணவுப் பாதுகாப்புத்திட்டமா? அந்நிய முதலீட்டுக்கு அனுமதியா? இதில் அரசியல் சட்டத்துக்கு என்ன வேலை? வேப்பமரத்தில் ஒரு செங்கல்லை சாத்தி கோயில் என்று கும்பிட்டு வருகிற பக்திமான்கள் நிறைந்த நாட்டில் கோயில் கட்டுவதற்கு அரசியல் சட்டம் ஏன் என்று இதை தயாரித்த முரளி மனோகர் ஜோஷியின் மூளைதான் விளக்கவேண்டும்.
2. நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் வகுக்கப்படும் வகையில் அனைத்து மரபுகளிலும் உள்ள முற்போக்கான அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்ற பொறுப்பு சட்ட ஆணையத்துக்கு அளிக்கப்படும் என்கிறது. இது நடைமுறைக்கு வந்தால் அந்தந்த மக்களது தனி உரிமைகள் பறிக்கப்படும். இதனால் நாட்டுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாது. ஆனால் அரசால் அடக்கவே முடியாத உள்நாட்டுக் குழப்பங்கள் ஏற்பட வழி வகுக்கும் என்பது அரசியல் அறிஞர்களின் கருத்து. அரசியல் சட்டத்தை வரைந்த முன்னோர்கள் ஒன்றும் கேப்பையில் நெய் வடிகிறது என்று சொன்ன கேணையர்கள் அல்ல என்பதை இன்னும் பிஜேபி உணரவில்லை என்பதையே இது காட்டுகிறது.
3. அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்ய வேண்டும் என்ற திட்டத்தின் மூலம் காஷ்மீருக்கு வழங்கப்படும் தனி அந்தஸ்தை ரத்து செய்வோம் என்று கூறுகிறது. காஷ்மீரை எவ்வளவு கஷ்டங்களுக்கிடைடையில் இந்தியாவோடு இணைத்தார்கள் என்பதை வரலாற்று ரீதியாக அறியாத வக்கில்லாதவர்கள்தான் இப்படி சொல்ல முடியும். எந்த நேரமும் அடுத்த பகைமை நாட்டுடன் இணையத் துடிக்கும் ஒரு மாநிலத்துக்கு இதுவரை வழங்கப் பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை பறிப்பது என்பது வானத்தில் போகிற ஓணானை ஏணி வைத்து இறக்குவதுஎன்பதுதான் என்பதை பிஜேபி உணர வேண்டும். எல்லையில் தொல்லை தரவே இந்த பாம்புக்கு மகுடி ஊதுகிறது பிஜேபி.
மேலும் பசுவதை தடுப்பு, சேதுசமுத்திரத்திட்டத் தடுப்பு ஆகிய பழைய பல்லவிகள் மீண்டும் புதிய தம்பூரா கொண்டு மீட்டப்பட்டு இருக்கின்றன. இவை அனைத்துமே பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு அவர்களை சிறுபான்மையினருக்கு எதிராக அணிதிரட்டி அதன் மூலம் அதிகாரத்தில் அமர்ந்து ஆட்டிப் படைப்பதற்கான அரிச்சுவடியே தவிர வேறு ஒன்றுமில்லை. ஆனால் இதை அப்படியே அலட்சியப் படுத்திவிட முடியாது; கூடாது.
வஞ்சகமான வார்த்தை ஜாலங்களுடன் கூடிய அறிக்கையில் குறிப்பிடத்தகுந்த ஒரு அம்சமாக நாம் பார்ப்பது இந்த முறை இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மையினரான முஸ்லிம்களை கவர முயற்சிக்கும் விதமாகவும் சில வரிகள் அமைந்துள்ளது தான். இது இதுவரை இல்லாத விசித்திரமானது. இரண்டு மூன்று தொப்பி போட்ட முஸ்லிம்கள் பிஜேபியில் இணைந்த காரணத்தால் இவை சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பது நமது கேள்வி. இந்த விசித்திரத்தின் காரணம் சிறுபான்மையினராகிய முஸ்லிம்கள், விட்டில் பூச்சிகளாக வீழ்வர் என்கிற நப்பாசைதான். ஒன்றுக்கும் இல்லாவிட்டாலும் இதோ பாருங்கள் நாங்கள் இப்படி சொல்லி இருக்கிறோமே என்று மேடையில் பேசவே இவை உதவலாம்.
குஜராத்தில் 2002ல், முஸ்லிம்கள் இனப்படுக் கொலைச் செய்யப்பட்டதற்கு அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்த மோடியின் மீது முஸ்லிம்கள் நேரிடையான பிரதான குற்றவாளி என்றும், மறைமுகமாய் சம்பந்தப்பட்ட குற்றவாளி என்றும் குற்றச்சாட்டுகள் சுமத்திக் கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு ‘தாராளமயமாய்’ பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்து அசத்தி இருக்கிறது பிஜேபி.
அறிக்கையில் முஸ்லிம்களுக்கு குல்பி வைத்த குஜராத் ஐஸ் கொடுக்கும் வாசகங்கள்:
வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் மாபெரும் பலமாகும். இதை பிஜேபி உறுதியாக நம்புகிறது.
இந்தியாவை ஒன்றுபபடுத்தி துடிப்புடனும், பாதுகாப்புடனும் வைத்திருக்கின்ற பன்முகத்தன்மையை நாங்கள் பெரிதும் போற்றுகிறோம்.
முஸ்லிம்களின் தொன்மைவாய்ந்த கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை போலவே அவர்களின் சமூக, பொருளாதார பங்களிப்பையும் பிஜேபி போற்றிப் பாதுகாக்கிறது.
60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் பரிதாப நிலையைக் கண்டு கவலை கொள்ளும் அதேநேரத்தில், அது முஸ்லிம்களுக்கு சம வாய்ப்பளிப்பதற்கு உறுதியளிக்கிறது.
சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் இந்திய சிறுபான்மையினத்தார், அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினர் பின்தங்கிய நிலையிலும், வறுமையிலும் உழல்வது துரதிஷ்டவசமானது. நவீன இந்தியா அனைவருக்கும் சமவாய்ப்பளிப்பதாக நிச்சயம் இருக்கும்.
இந்தியாவின் முன்னேற்றத்தில் அனைத்து சமூகத்தினரும் சமமான பங்குதாரர்கள்தான் என்று பிஜேபி உறுதியளிக்கிறது.
எந்தவொரு பிரிவினர் பங்களிக்காத இந்தியா முன்னேறவே முடியாது என்று நாங்கள் நம்புகின்றோம்.
மேலும், தனது தேர்தல் அறிக்கையில் பிஜேபி முஸ்லிம்களுக்கு இவ்வாறு உறுதிகளும் அளிக்கிறது:
சிறுபான்மை இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு களில் எவ்வித பாகுபாடும் இருக்காது.
சிறுபான்மையினரின் கல்வி நிலையங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் நவீனமயமாக வலுப்படுத்தப்படும்.
மதரஸாக்கள் நவீனமயமாக்கப்படும்.
பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில் முனைவோர்க்கான வாய்ப்புகள் அளிக்கப்படும்.
சமயத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வக்ஃப் வாரியத்துக்கு அதிகாரமளிக்கப்படும்.
வக்ஃப் சொத்துக்கள் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும்.
முஸ்லிம்களின் வளமான பாரம்பர்யம் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்படும்.
உருது மொழியின் பாதுகாப்பு மற்றும் அதனை முன்னெடுத்து செல்லும் திட்டங்கள் தீட்டப்படும்.
அமைதியான, பயமற்ற சூழல்; அடக்குமுறை, சுரண்டல் போன்ற பயமின்மை உத்திரவாதம் அளிக்கப்படும்.
பல சமய தலைவர்களின் மேற்பார்வையில் நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையை உருவாக்கும் ஒரு நிரந்தர அமைப்பு உருவாக்கப்படும்.
இவ்வளவு வாக்குறுதிகளையும் அளித்து விட்டு பிஜேபி தனது காவிமயமாக்கும் திட்டங்களை, பாபர் மசூதி, பொதுச்சட்டம், போன்ற நேரிடையாக முஸ்லிம்களை பாதிப்பதாக இருக்கும் பழைய பிரச்னைகளை முன் வைப்பதும் இந்த தேர்தல் அறிக்கையில் உள்ளது. ஆகவே இந்த தேர்தல் அறிக்கை ஒரு பசுத்தோல் போர்த்தி வந்துள்ள புலி.
அதிகாரம் கையில் வந்தால் இந்தியா இன்னும் சிதறுண்டு போவதற்கான ஆபத்தான அமசங்களை உள்ளடக்கிய இந்த தேர்தல் அறிக்கையும் அதனைத் தயாரித்த தலைவர்களும் அதைத் தாங்கிப் பிடிக்கும் கட்சியும் அதற்கு துணை போக சதி ஆலோசனையில் மவுனம் காக்கும் மாநில கட்சிகளும் அந்த மாதிரியான மாநிலக் கட்சிகளை ஆதரியுங்கள் என்று கூவி அழைக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் யாவருமே குப்பையில் தள்ளப் பட வேண்டியவர்களே! அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் – இதற்கு முன் எவ்வளவு சீர்திருத்தங்கள சொன்னவர்களாக இருந்தாலும் இந்த வாழ்வா சாவா தேர்தலில் மதச் சார்ப்பின்மைக்கு ஆதரவான கட்சிகளுக்கே வாக்களித்து மத உணர்வைத் தூண்டும் பிஜேபியின் கனவுகளைத் தவிடு பொடியாக்கும் முயற்சிகளுக்கு சபதம் ஏற்பதே நாம் செய்ய வேண்டியது. இதுவே இந்தியாவைக் காக்கும்; வாழவைக்கும்; வளர்க்கும்.
- இப்ராஹீம் அன்சாரி -

