அன்பான நண்பர்களே!
அதிரைநிருபர் இணைய தளத்தின் பொன்போன்ற வாசகர்களால் ஆர்வமுடன் படிக்கப் பட்டு வந்த இந்தத் தொடர் இடையில் ரமழான் மாதத்துக்கான அமல்களின் பொருட்டு தொடர்ந்து எழுத இயலா சூழலால் இடையில் சில வாரங்கள் இடை நிறுத்தம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டதற்கு வருந்துகிறேன். இனித் தொடர்ந்து வெளிவர இறைவன் துணை இருப்பானாகவும்.
நேரமின்மை என்பது ஒரு காரணமாக இருந்தாலும் அரசியல் ஒரு சாக்கடை என்று வர்ணிக்கப் படும் வரலாற்றுத் தகுதி படைத்தது என்பதால் புனித மாதத்தில் சாக்கடை பற்றியும் அதில் உழலும் புழுக்களைப் பற்றியும் எழுதி –அதை வெளியிட்டு பாவங்களை சுமந்து கொள்ள வேண்டாம் என்பதும் ஒரு காரணம்.
இதற்கு முன் அத்தியாயத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களைப் பற்றி அவருடன் இளம் வயதில் நெருங்கிப் பழகிய கவிஞர் கண்ணதாசன் கூறி இருந்த சில செய்திகளை சொல்லி முடித்து இருந்தேன். இளவயதில் நெருங்கிப் பழகிய என்கிற வார்த்தைகளை இன்னும் இரண்டு முறை படித்துக் கொள்ளுங்கள். காரணம் இளமையில் ஒருவருடன் நெருங்கிப் பழகும் போதுதான் ஒருவரின் உண்மையான சொருபத்தை உணர முடியும். இதோ கண்ணதாசன் மீண்டும் ஒன்று கூறுகிறார் அதையும் கேட்டுவிட்டு இதைத்தொடரலாம்.
“அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார். “
ஆகவே நாம் அறிவது என்ன வென்றால் ஒரு இனத்தின் தலைவர் என்று போற்றப் படுபவர் – ஒரு மொழியின் காவலன் என்று போற்றப் படுபவர் ஒரு எச்சில் கையால் காக்காய் விரட்டாத புண்ணியவான் என்பதே. ஈகை முதலிய நல்ல தன்மைகளை தன் இயல்பிலேயே கொண்டிராதவர் ஒரு மாபெரும் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்ததன் பின்னணியில் அவரது அறிவும் சூடசமும் ஆழமாக வேர்விட்டு இருந்தன என்பதை நாம் புரிந்து கொண்டால் போதும்.
எம்ஜியார் திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டுப் பிரிந்த நேரத்தில் நேற்று! இன்று! நாளை! என்று ஒரு திரைப்படம் வந்தது அதில் ,
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம்
மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார்,
என்று சில பாடல் வரிகள் வாலியால் எழுதப் பட்டு வரும். (பார்த்தீர்களா இதனால்தான் நான் ரமழானில் இதை எழுதவில்லை)
அண்மையில் ஒரு விழாவில் கலைஞரின் செல்வப் புதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசியதாக கலைஞர் டி வி யில் காட்டினார்கள். அதில் அவர் பேசினார் “பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரே தலைவர் கலைஞர்தான்” என்று அவர் பேசினார். தன் வாப்பாவைப் பற்றி மகனுக்கு மற்றவர்களை விட நன்றாகத்தெரியும். ஸ்டாலின் பேசியது நூற்றுக்கு நூற்று உண்மை. பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன் மனைவி மூலமும் துணைவி மூலமும் பெற்றெடுத்த மக்களைப் பற்றியும், அவரகளது கிளைவேர்களான மக்களைப் பற்றியும் ஆழம் விழுதுகள் போல் தொங்கிக் கொண்டிருக்கும் உறவுகளைப் பற்றி மட்டுமே எண்ணிக் கவலைப் பட்டு காய் நகர்த்தக் கூடியவர்தான் கலைஞர் என்பதை உளமார ஒப்புக் கொள்வோம்.
- தி முகவில் முதல் பிளவு சம்பத் திமுகவை விட்டு விலகிய போது நிகழ்ந்தது
- அடுத்த பிளவு எம்ஜியார் நீக்கப் பட்டபோது நிகழ்ந்தது
- அதன் பின் வைகோ அவர்கள் விலக்கப் பட்டபோது நிகழந்தது.
இம்மூன்று பிளவுகளுக்கும் பின்னணியில் கலைஞரின் காய் நகர்த்தும் கைவண்ணமும், கட்டு கதைகளும், அனுதாபம் தேடும் அரிய முயற்சிகளும், தேவைப்பட்டால் அடிதடியில் இறங்க வைக்கும் சாதுரியமும் ஆட்சியில் இருத்தால் அரசு எந்திரத்தை தனது குடும்ப நலத்துக்காக பிரயோகிக்கும் குணமும் இருந்தன என்பதை மனசாட்சி உள்ளோர் மறுக்க இயலாது.
அண்ணாவின் காலத்தில் தன்னை தட்டிக்கேட்ட காரணத்தால் ஈ வெ கி சம்பத்தை வேலூர் பொதுக்குழுவில் அடித்து சட்டையை கிழித்து கட்சியை விட்டு விரட்டியவர், கட்சிக்காக காலமெல்லாம் உழைத்து தனது உழைப்பால் வந்த செல்வத்தை வாரி வழங்கிய வள்ளல் எம் ஜி யாரை கட்சியை விட்டு நீக்கியவர், கொலை செய்ய சதி என்ற குற்றச்சாட்டில் தனக்கு நிகராக வளர்ந்து வந்த வைகோவை கட்சியை விட்டுப் புறந்தள்ளியவர் தன்னை எதிர்த்த காரணத்தால் நாவலர் முதல் மதியழகன் வரை கட்சியை விட்டு ஓட வைத்தவர், கலைஞரை அரசியல் சாணக்கியன் என்று எதிரிகளும் புகழ்வார்கள். அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியன் குறிப்பிடுகிறான் புல் தடுக்கி விழுந்த ஒரு மாமன்னன் அந்தப் புல்லை அகற்ற, கோடாரி மண்வெட்டி வரை கொண்டு வர செய்து அந்தப் புல்லின் ஆணிவேரின் கடைசி நுனி வரை தோண்டி சிதைத்து அழித்தானாம்.
இந்தப் புல்லைத் தோண்ட இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டமா என்று கேட்டவருக்கு மன்னன் சொன்னான் “ஆம்! அரசியலிலும் எதிரி என்றும் எதிர்ப்பு என்றும் தலை எடுப்பவர்களை இப்படித்தான் வேரோடும் வேராடி மண்ணோடும் அழிக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் புல்லின் ஏதாவது ஒரு நுனி கூட நாளை தலையெடுக்குமென்ற வாய்ப்பைத் தானாகவே தரக்கூடாது. “இதை அரசியலின் ஆரம்பப் பாடத்திலே கருணாநிதி கற்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால்தான் தனக்கு சாதகமில்லாதவர்களை- ஒத்துவராதவர்களை ஒதுக்கி ஓரங்கட்டி ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கிய சரித்திரங்களை பதிவெடுத்துப் பல சாக்கு மூட்டைகளில் கட்டலாம்.
அண்மையில் நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலுக்கு ஒரே ஒரு திமுக உறுப்பினரைத் தேர்ந்தேடுக்க ஒரு வாய்ப்பு வந்தபோது தனது மகள் கனிமொழியை அந்த இடத்துக்கு அறிவித்தார். கனிமொழியை விட நீண்டகாலம் அனுபவமும் ஆற்றலும் பெற்றிருந்த திருச்சி சிவாவைப் போன்றவர்களை ஏன் அறிவித்து இருக்கக் கூடாது பலர் ஐயம் எழுப்பினார்கள். காரணம் மிக எளிதானது. கருணாநிதிக்கு டில்லிப் பட்டினத்தில் தனக்கு நம்பிக்கையான ஆள்தேவை. அது தனது மகளாக இருப்பது இன்னும் சிறந்தது என்று எண்ணினார். அத்துடன் வரலாறு அவருக்கு கற்றுத் தந்த பாடங்கள் அடுத்தவரை அளவுக்கு மேலே நம்பாதே என்பதும்தான்.
டில்லிக்கு சென்ற சம்பத் மனம் மாறி காங்கிரசில் இணையும் அளவுக்குத் துணிந்தார். திமுக நாடாளுமன்றக் குழுவின் தலைவராக்கப் பட்ட நாஞ்சில் மனோகரன் கலைஞரை எதிர்த்து ஆள்காட்டி விரலை அழுத்தமாக நீட்டினார். க. இராசாராம் கலைஞரை எதிர்த்து குரல் கொடுத்தார். இரா செழியன் கருத்து மாறுபட்டார். வைகோவும் நீடிக்க இயலவில்லை. பேராசிரியர் அன்பழகனைத் தவிர டில்லி சென்ற அனைவரும் கலைஞருக்கு எதிரியான காட்சிகளை அரசியல் வரலாறு கண்டது. அதனால்தான் முன்பு ஒரு முரசொலி மாறனையும் பின்னர் தயாநிதி மாறனையும் அதைத்தொடர்ந்து மு. க. அழகிரியையும் டில்லி அனுப்பினார். அதே காரணம்தான் கனிமொழியின் தேர்வும். ஒருவேளை கனிமொழி ஏற்கனவே ராஜ்யசபா உறுப்பினராக இருந்து இருந்தால் அந்த இடம் இராசாத்தி அம்மையாருக்கோ தயாளு அம்மையாருக்கோதான் கிடைத்து இருக்கும். இந்தப் பதவியை ஏற்க தயாளு அம்மையாரால் விமானப் பயணம் செய்ய இயலும் .
தனது தனித்திறமைகளால் விஞ்ஞானரீதியாக ஊழல் செய்வதில் மன்னர் என்று சர்க்காரியா கமிஷனால் சுட்டிக் காட்டப் பட்டவர் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதாக் கட்சியே ஆட்சிக்கு வரும் என்று கணிக்கத்தெரிந்த திறமையால் அவருக்கு உறவுக்குக் கை நீட்டி காரியம் சாதித்துக் கொண்டவர். இதனால் மருமகன் மாறனை மந்திரியாக்கி மகிழ்ச்சிகண்டவர் இந்திராகாந்தி பதவிக்கு வருவார் என்று அரசியல் ஆரூடம் கணிக்கத் தெரிந்த காரணத்தாலும் அரசியல் ஆற்றலாலும் நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சியைத் தருக! என்று கூறி தஞ்சமடைந்தவர். இதனால் எம்ஜியார் ஆட்சியை கலைத்து பழிவாங்கும் படலத்தின் பரிசைத் தட்டிச்சென்றவர் தன்னை வழக்குகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியிடம் தஞ்சம் அடைந்தவர் அதே காரணத்துக்காக பி ஜே பி யிடமும் உறவாடி பதவிச் சுகம் கண்டவர் இன்றும் இதே காரணத்துக்காக முதலிரவோடு முடிந்து போன மன்மோகன் சிங்குடன் ஆன வாழ்க்கையை தாலி அறுக்காமல் தடுமாறும் வாழ்க்கையை வாழ்ந்து வருபவர் .
இவை போன்ற அனைத்து அரசியல் பின்னணியின் அடிமரங்களில் ஆணிவேர் விட்டு இருப்பது கலைஞரின் சுய நலம் - குடும்ப நலம் மட்டுமே. இவ்வளவும் செய்தும் இந்திய அரசியலில் ஞானி என்று அழைக்கப் படுகிறார். பிரணாப் முகர்ஜி சென்னை வந்தால் கருனாநிதிக்கு கோபாலபுரம் சென்று மாலை போடுகிறார்.
கண்ணதாசனை மீண்டும் அழைக்கிறேன்.
“கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.”
தனது தமிழ் அறிவாலும் ஆற்றலாலும் திறமையாலும் ‘சொல்வல்லான் சோர்விலான் இவனை இகல வெல்லல் யார்க்கும் அரிது’ என்று திருவள்ளுவர் கூறியதற்கொப்ப தனது திறமைகளை எல்லாம் அரசியலில் காசாக்கி உலகக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் 216- ஆவது இடமும் இந்தியக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் 16- ஆவது இடமும் தனது குடும்பத்துக்குப் பெற்றுத்தந்தவர் .
கடந்த ஆண்டு விகடன் குழுமத்தின் பத்திகையில் ஒரு பட்டியல் வந்தது அதை அப்படியே இங்கு தந்து இதை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
அந்தக் கட்டுரையின் துவக்கத்தில், 'கருணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் இருக்கக்கூடிய முக்கியமான சொத்துகளின் பட்டியல் விவரம். இது முழுமையான பட்டியல் இல்லை. கருணாநிதியின் குடும்பத்தாரால் வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்டு இருக்கும் சொத்து பற்றிய விவரங்கள் இந்தப் பட்டியலில் இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே உழன்ற கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் (தங்களது அயராத உழைப்பால்!) கடந்த 60 ஆண்டுகளில் ஈட்டியவை இவை. தமிழகத்தில் வாழும் ஏழை எளியவர்களுக்காகக் காலம் எல்லாம் பாடுபட்ட மஞ்சள் சால்வைக்காரர், இன்று தேர்தல் முடிவுகள் தந்த கட்டாய ஓய்வில் நிலை குத்தி நிற்கிறார்!’ என்று எழுதி இருக்கிறது.
அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ள பட்டியலை அப்படியே தருகிறோம்!
1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.
4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.
5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.
6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.
7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.
8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.
9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.
10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.
12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.
13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.
14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.
15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.
18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.
21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.
22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.
27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.
28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை
31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.
32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.
34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.
35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்
36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.
37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.
38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.
39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.
40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.
42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.
44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.
45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.
46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.
49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.
51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -3 கோடி.
52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.
53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.
54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.
57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.
59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.
60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.
61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.
63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை
64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.
65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.
67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.
68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.
69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.
- இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது.
இந்த சொத்து போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா? வேண்டும்! ஹைதராபாத் கிரிக்கெட் அணி அண்மையில் வாங்கப் பட்ட புது வசந்தம்.
தமிழகம் அரசியல்வாதிகளின் கரங்களில் அகப்பட்ட பூமாலை . தமிழ் வாழ்க! இன்னும் தமிழகத்தை சூறையாடிய சூறையாடும் மண்ணின் மைந்தர்களின் செயல்பாடுகள் சூட்டோடும் சுவையோடும் தொடரும்.
அடுத்து திமுகவின் பெரும் பிளவு எம்ஜியார் கண்ட புதுக் கட்சி பற்றிய விபரங்கள் மற்றும் விமர்சனங்கள்.
இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்.
ஆக்கம் : முத்துப் பேட்டை P. பகுருதீன். B.Sc.,
உருவாக்கம் : இப்ராகிம் அன்சாரி






