அந்த சமதளமில்லாத சந்நியாசி மடத்தில் கவலை தோய்ந்த முகத்துடன், கிராம நகர பஞ்சாயத்துத் தலைவர்கள் , ஒன்றியம், மாவட்ட, நகராட்சி, மாநகராட்சி, வட்டம், குறுகிய வட்டம், பெருகிய வட்டம் ( உடம்பாலும் ) , சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என சுதந்திர இந்தியாவை வாழ்விக்க வந்த மகான்கள் அத்தனை பேரும் கூடி இருந்தனர். எல்லோருடைய முகத்திலும் ஏதோ ஒன்றைப் பறிகொடுத்துவிட்டது போன்ற ரேகைகள் முகங்களில் ஓடின. ஒரு நிற்க முடியாத வயதான எம்.பி. எம்பி எம்பிப் பேசினார். அவர்தான் தலைமை வகித்ததுபோல் இருந்தது அந்தக் கூட்டத்துக்கு.

“அன்பான அரசியல் சட்டக் காவலர்களே ! ஜனநாயகம் என்கிற பெயரில் நாம் நடத்திக் கொண்டிருக்கிற சர்க்கஸ் சர்வாதிகாரத்துக்கு இன்றைக்கு சாவுமணி அடிப்பதற்கு சமயம் வந்துவிட்டது போல் எனது வழுக்கை மண்டைக்குத் தோன்றுகிறது. காரணம் லஞ்சமும் லாவண்யமும் ஊழலும் அரசியல் தளபதிகளாகிய நமது பிறப்புரிமை. அதைப் பறிக்கும் வண்ணம் இன்றைக்கு ராகுல் காந்தி என்கிற திருமணம் கூட ஆகாத ஒரு சிறுவர் ஊழல் ஒழிப்பு அம்பினை நம் மீது ஏவி விட்டார் . நீங்களும் நாங்களும் எவ்வளவுதான் ஊழலை ஒழிப்போம் என்று பேசினாலும் கட்சிப் பாகுபாடு இல்லாமல் ஊழலில் வரும் லஞ்சத்தை ஒருவருக்கும் தெரியாமல் பங்கு போட்டு, பொதுமக்கள் முன்னால் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசி நம்மை ஊழலுக்கு எதிரிகள் என்று காட்டிக் கொண்டிருந்த வித்தை இனி பலிக்காது போலத் தெரிகிறது. இனியும் இதைப் பொறுத்துக் கொண்டு வாய்மூடி நாம் மவுனம் காக்க வேண்டுமா? “ என்று கேட்டார்.
உடனே காவித்துண்டு முதல் காக்கித்துண்டு வரை போர்த்தி இருந்த போர்வைகளை விலக்கிக் கொண்ட கூட்டத்தினர், “ பொறுக்க மாட்டோம்! பொறுக்க மாட்டோம்!. இதனை நாள் நாம் பொறுக்கித் தின்றதை தடுக்க நினைத்து சட்டம் போடுவதைப் பொறுக்க மாட்டோம் “ என்று ஏகக் குரலில் முழங்கினர். அந்த மடமே அதிர்ந்தது. தலைவரின் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள். பாராளுமன்றத்தில் அடிக்க வரும் அம்பிகள் நகராட்சி கூட்டங்களில் நாற்காலியை எடுத்து வீசும் வீராப்புப் பிடித்த வேங்கைகள் தங்களின் தலைக்கு ஒரு கத்தி வருகிறது என்ற உடன் எப்படி ஒற்றுமையைக் காட்டுகிறார்கள் என்று புளகாங்கிதம் அடைந்தார். அந்த மகிழ்ச்சி அடங்குமுன்னே மீண்டும் தலைவர்” நம்மில் ஐம்பதுபேர் உடனே தலைநகர் டில்லி சென்று நமது எதிர்ப்பை பிரதமரிடம் சொல்லி, நமக்கு வர இருக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்த முயலவேண்டும் அத்துடன் ஒவ்வொரு அரசாங்க வேலைக்கும் இவ்வளவு லஞ்சம் என்று வரையறுத்து அதற்கு ஏற்றாற்போல் ஒரு சட்டம் அதுவும் அவசரமாக இயற்ற வேண்டும் என்று கேட்கவேண்டும் என்ன சொல்கிறீர்கள்?” என்று ஆவேசம் முழங்கக் கேட்டார். உடனே பாரத மாதாக்கு ஜே! என்கிற கோஷம் விண்ணில் உள்ள மேகத்துடன் மோதி ஒரு மின்னலும் வெட்டியது. இடியும் இடித்தது.
டில்லி புறப்பட குழுவினர் ரயில் நிலையம் வந்தனர். ஆனால் படுக்கை மற்றும் இருக்கை வசதி கிடைக்கவில்லை. உடனே டிக்கெட் பரிசோதகரைக் கண்டனர். அவரோ ஒரு இடத்துக்கு நூறு ரூபாய் தந்தால் ஒதுக்கித்தருகிறேன் என்று இவர்களை ஓரமாக ஒதுக்கிக் கொண்டுபோய் காதில் பவ்யமாய் சொன்னார். காசு கைமாறியது. இருக்க இடம் கிடைத்தது. உடனே ஓர் நகராட்சி உறுப்பினர், “வெற்றி! வெற்றி! ஆரம்பமே வெற்றி! கொடுக்க வேண்டியதைக் கொடுத்துப் பெற வேண்டியதைப் பெற்றோம் “ என்று முழங்கினார். மற்றவர்களும் ஆஹா! இது நல்ல சகுனம் லஞ்சத்துக்கான குறிக்கோள் நோக்கிய நமது பயணம் லஞ்சம் கொடுத்து ஆரம்பமாகிறது என்று மகிழ்ந்தனர். ரயில் டில்லி நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.
அனைவரும் டில்லி சென்று அடைந்தனர். பிரதமரின் இல்லம் தேடி ஜப்பானில் கல்யாணராமன்கள் அலைவது போல் அலைந்து பிரதமரின் இல்லம் சென்றடைந்தார். ஆனால் கொடுமை! கொடுமை! என்று கோயிலுக்குப் போனால் அங்கு ரெண்டு கொடுமை ஆட்டம் போட்டு வந்தது என்பது போலவும் , ராவுத்தரே கொக்காகப் பறக்கிறார் குதிரை கோதுமை ரொட்டி கேட்டதாம் என்பது போலவும் , சாமியே சைக்கிளில் போகும்போது பூசாரி புல்லட் கேட்டது போலவும் பிரதமர் கன்னத்தில் கைவைத்துக் கண்கலங்கி அமர்ந்திருக்க, அவர் அருகே அத்வானிஜி நான்கு பேர் கட்டுகிற வேட்டியை தான் ஒருவர் மட்டும் சுற்றி சுற்றி கோவணம் போல் கட்டிக் கொண்டு தனது கையையும் கட்டிக் கொண்டு உட்கார்ந்து இருந்தார். அவருக்கு அடுத்து ராஜ்நாத் சிங் சிகப்புக் குடைமிளகாய் அளவுக்கு நெற்றியில் ஒரு கோட்டுடனும் அமர்ந்து இருந்தார். அவரது நீண்ட மூக்கு சிவந்து இருந்தது. இரவு முழுதும் அழுது இருப்பார் போல. அவரது காலுக்கடியில் யார் அட நம்ம இல. கணேசன். ! திரும்பிப்பார்த்தால் தம்பித் துரை , டி ஆர் பாலு , கனிமொழி, சரத் யாதவ், ராம்விலாஸ் பஸ்வான், பாரூக் அப்துல்லாஹ், ராசா, சுரேஷ் கல்மாடி, மஹாரஸ்டிரா முதல்வர், சிபு சோரன், பங்காரு லட்சுமணன், மது கோடா என்று அத்தனை உலக உத்தமர்களும் மனிதப் புனிதர்களும் ஒன்றாக உட்கார்ந்து இருந்தார்கள். ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டமே அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. சபாநாயகர் மீரா குமார் மட்டும் மிஸ்ஸிங். அதனால் “பைட் ஜாயியே ! பைட் ஜாயியே!” என்கிற குரல் கேட்கவில்லை.
பிரதமர் எழுந்து பேச ஆரம்பித்தார். அப்போது பழக்க தோசத்தில் ஒரு பிஜேபி உறுப்பினர் எழுந்து மேஜையைத் தட்டினார். உடனே அத்வானி அவரது கையைப் பிடித்து இழுத்து “சும்மா இரு! இது பாராளுமன்றக் கூட்டமல்ல! நமது அனைவரின் வயிற்றுப் பிழைப்புக்கான வழிகாண நடத்தப்படும் அனைத்துக் கட்சிக்கூட்டம்! நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கூட்டம்” என்று எச்சரித்தார். பிரதமர் பேசாமல் உட்கார்ந்துவிட்டார். உடனே சுஷ்மா சுவராஜ் பேச ஆரம்பித்தார். “ நாம் எல்லோரும் ஒருங்கிணைந்துதான் லஞ்ச லாவண்யங்களுக்காக தண்டிக்கப் பட்ட எம்பி எம் எல் ஏ க்களின் பதவியைப் பறிக்கக்கூடாது என்று சட்டம் போட முடிவு செய்தோம். அதை நாங்கள் தாமதிக்க நினைத்தாலும் அரசு அவசர சட்டம் போட்டது. தனிப்பட்ட முறையில் நாங்களும் மனதளவில் அதை வரவேற்கிறோம். ஆனால் மேடைகளில் இதை எதிர்த்து முழங்குவோம். ஆனால் நம் எல்லோர் வாயிலும் மேல் மண்ணை தடவிவிட்டு கீழ்மண்ணை அள்ளிப் போட்டு விட்டாரே ராகுல் காந்தி? இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள் ?” என்று ஆக்ரோஷமாகக் கேட்டார். இதனால் அவரது ஒருகை கம்பளி ஜாக்கெட் கூட அழுதது போல இருந்தது.
அடுத்து கவிஞர் கனிமொழி பேசத்தொடங்கும்போது தான் இதுபற்றி ஒரு கவிதை வாசிக்க விரும்புவதாகக் கூறினார். கவிதை தமிழில் இருந்தாலும் கூடியவர்களின் ஒரே பொது மொழி ஊழல் என்பதால் அனைவரும் “அச்சா! பஹூத் அச்சா!” என்று வரவேற்றனர். கனிமொழி கவிதை வாசித்தார் “ நாளை நமதே! இந்த நாடும் நமதே! லஞ்சம் என்ற கொள்கையில் பூத்த அன்பு மலர்களே! கமிஷன் என்கிற வாழ்வாதாரத்தில் தழைத்த இனிய உறவுகளே! நாளை நமதே! இந்த லஞ்ச லாவண்யமும் நமதே! என்று பாடினார். அனைவரும் கைதட்டினர். ஆனாலும் எல்லோரும் கைதட்டி ஓய்ந்த பின்னரும் ஒருவரின் கை மட்டும் தட்டும் ஓசையை நிறுத்தவில்லை. சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.எல்லோரும் திரும்பிப்பார்த்தால் அப்படித் தட்டும் கைகள் டி ஆர் பாலுவின் கைகள். உடனே தயாநிதி மாறன் அவரைக் கிள்ளி கை தட்டுவதை நிறுத்தச் சொன்னார். நான் கனிமொழியின் கவிதைக்கு கை தட்டுவது தலைவர் வரை எட்டிவிட்டதா என்று பார்வையாலேயே கேட்ட டி ஆர் பாலுக்கு” ஆம் “ என்று தலை அசைத்தார் இளங்கோவன். எம் எம் எஸ் அனுப்பி இருப்பாராக்கும்.
கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த பங்காரு லட்சுமணன் தான் ஏற்கனவே சில நாட்கள் சிறையில் வசித்துவிட்டதாகவும் அதற்காக தனக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் வாழ்வாதார நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென்றும் ஒரு கோரிக்கையை வைத்தார். அதே கோரிக்கையை ஆ.ராசா வழி மொழிந்தார்.
அடுத்து, எல்லா நாடாளுமன்றக் கட்சித்தலைவர்களும் பேச ஆரம்பித்தனர். டி ஆர் பாலு பேசும்போது கனிமொழி அம்மா என்று குறிப்பிட்டார். உடனே தம்பித்துரை காட்டமாக எழுந்தார். “ அம்மா என்பது தமிழ்வார்த்தை! அதுதான் உலகின் முதல் வார்த்தை! தமிழில் அப்படி ஒரு வார்த்தை என்றால் அது எங்கள் அம்மாதான். இப்போது புதிதாக ஒரு அம்மாவைத் திணிப்பது எங்களின் அடிப்படை உரிமையில் கைவைப்பதாகும்” என்றார். உடனே அருகில் அமர்ந்து இருந்த கம்யூனிஸ்ட் ராஜா , “எவ்வளவு நாள் நீங்கள் அம்மா! அம்மா! என்றே சொல்லிக் கொண்டு இருப்பீர்கள்.? கனிமொழியை அம்மா என்றால் நீங்கள் உங்கள் அம்மாவை உம்மம்மா என்று கூப்பிடுங்கள் அல்லது பெரியம்மா என்று கூப்பிடுங்கள் . ஒரு காலத்தில் சின்ன அண்ணி பெரிய அண்ணி என்று கூப்பிடவில்லையா அது போல நினைத்துக் கொள்ளுங்கள் ” என்றார். இதைக் கேட்ட தம்பித்துரைக்கு தலை சுற்றி முதுகுப்பக்கம் வந்தது. ஆனாலும் ஒரு தைரியம், தமிழ்நாட்டுக்குத் திரும்பும்போது அமைச்சர் பதவியைப் பறிப்பதுபோல் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஓரிரவில் பறிக்க முடியாது என்கிற தைரியம்தான் அது. இருந்தாலும் அம்மாவுக்கு சென்னைக்கு ஒரு போன் அடித்து நடப்பை சொல்லிவிடுவோமென்று நைசாக வெளிவந்து போயஸ் தோட்ட அம்மாவுக்கு பவ்யமாக ஒரு அழைப்புவிடுத்தார். போனை எடுத்த அம்மா, “ யோவ் போனை வை ! நானே பெங்களூர் பீவர் பிடித்துப் போய் இருக்கிறேன். நீ வேறு. ஊருக்குவா பேசிக்கொள்ளலாம்” என்று போனை கட் செய்துவிட்டார்.
கூட்டத்தில் திடீரன்று ஒரு சலசலப்பு ஏற்பட்டது. என்னவென்று பார்த்தால் ராகுல் காந்தி அரங்கினுள் நுழைந்து கொண்டு இருந்தார். இதைப் பார்த்த அத்வானி தனது லங்க்கோட்டை சரிசெய்துகொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். எல்லோரும் ராகுல்! ராகுல்! என்று குசுகுசுவென்று பேச ஆரம்பித்தனர். பிரதமருக்கு நிலக்கரியின் நிறத்தில் வியர்க்க ஆரம்பித்தது. சுரேஷ் கல்மாடிக்கு விளையாட்டு அரங்கங்கள் சிறு சிறையின் தனிநபர் செல்லாகத் தென்படத் துவங்கியது. கனிமொழிக்கு சோற்றுக்கு பதில் களி உருண்டை தென்பட்டது. ரசீத் மசூதுக்கு சிறைக் கம்பிகளின் எண்ணிக்கை தென்பட்டது. மற்றவர்களும் கூட்டிக் கழித்து ஒரு கணக்குப் போட்டு எத்தனை வருடம் என்று பார்க்கத் தொடங்கினர். குறிப்பாக பங்காரு லட்சுமணன் 7 X 365 – 155 என்று கணக்குப் போட்டார்.
அப்போது என் மேல் யாரோ வருடுவதுபோல் உணர்ந்தேன். திடீரென்று விழித்தேன். வேறு யாருமல்ல என் பேத்திதான். அப்பா சுபுஹுக்கு பாங்கு சொல்லிவிட்டார்கள் எழுந்திருக்கலையா என்று கேட்டாள். அப்போதுதான் தெரிந்தது. நான் கண்டது யாவும் கனவு என்று. ஆனால் ஒரு நிம்மதி, இவை கனவல்ல நாட்டில் நிகழும் நிகழ்வுகளின் ஒரு சாயல்தான்; சாம்பிள்தான் என்று ஆறுதல்படுத்திக் கொண்டு பள்ளியை நோக்கி விரைந்தேன்.
தொழுதுவிட்டு வந்ததும் சில சிந்தனைகள் ஏற்பட்டன. முதலில் ராகுல் காந்தியைப் பாராட்ட வேண்டும். ஒரு நியாயமான காரணத்துக்காக, ஒரு அரசின் அமைச்சரவையும் எதிர்க் கட்சிகளும் கூடி முடிவெடுத்து குடியரசுத்தலைவரின் மாளிகை வரை சென்ற அவசர சட்டத்தை தனது சமுதாய அக்கறை என்கிற ஆயுதம் மூலம் அதை சாம்பலாக்கி ஊதித்தள்ளிய காரணத்துக்காக ராகுலைப் பாராட்ட வேண்டும் என நினைக்கிறேன். அதுமட்டுமல்ல கடந்த காலத்தில் லக்னோவில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் அவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டு நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று சொல்லிய வரலாற்றுக்கும் இவர் சொந்தக்காரர். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த திரு. மன்மோகன் சிங்கை அவமதித்துவிட்டதாக அவதூறு கிளப்பப் பட்ட காரணத்தால் பஞ்சாப் சென்று அந்த மக்களை தற்போது சந்தித்து அவர்களின் மனப் புண்ணை ஆற்றி இருக்கிறார் ராகுல் காந்தி. எதிர்காலத்தில் இவர் எப்படி உருவெடுப்பாரோ தெரியாது . ஆனால் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் சில செயல்கள் நம்பிக்கையை ஊட்டுகின்றன என்று மட்டும் சொல்வேன்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும், நாம் மீண்டும் நமது மக்கள் பிரதிநிதிகளின் பக்கம் கவனத்தைத் திருப்புவோம். ஒவ்வொரு பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களின் காசில் கொழிக்கிறார்கள் ; குளிக்கிறார்கள்; செழிக்கிரார்கள். பல கோடி ரூபாய்கள் இவர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளுக்காகவும் வசதிகளுக்காகவும் செலவழிக்கப் படுகின்றன. பொதுமக்களுக்கு இலவசமாக அரிசியும் மின்சாரமும் கொடுப்பதைப் பற்றி கண்டித்துப் பேசுகிறோம். ஆனால் இந்த எம்பி மற்றும் எம் எல் ஏக்கள் அனுபவிக்கும் இலவசங்களை நினைத்தாலே தலை சுற்றுகிறது. ஐந்து நட்சத்திர விடுதியில் தங்குவதில் இருந்து, இலவச இரயில் மற்றும் விமானப் பயணம் வரை தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பெற்று சுகிக்கிரார்கள். உயர்ந்த ஊதியம், ஒய்வுகால ஊதியம் தவிர எங்கு போனாலும் ஓசியில் சாப்பாடுவரை இவர்களுக்குக் கிடைக்கிறது. மக்கள் தொண்டர்கள் என்று பட்டத்தைப் போர்த்திக் கொண்டு மக்களின் பணத்தை கொள்ளையடிப்பது ஒன்றே இவர்களின் நோக்கமும் கொள்கையுமாக இருக்கிறது. எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல என்பதுதான் பொதுவான ஆனால் வேதனையான உண்மை.
ஒரு புறம் ஏழைகள் கொளுத்தும் வெயிலில் நாள் முழுதும் மேனியில் ஆடை கூட இன்றி வெப்பத்தையே ஆடையாக்கிகொண்டு கோவணத்தைக் கட்டிக் கொண்டு உழைக்கிறார்கள். ஆனால் அவர்களின் பிரதிநிதிகள் குளிர்சாதன வசதியை வீணடிக்காமல் வாழ்கிறார்கள். இந்த மக்களின் பிரதிநிதிகள் சுல்தான்கள் போல சுகபோகத்தை கலப்படமில்லாமல் அனுபவிக்கிறார்கள். இவர்களுக்கு இந்த அலாவுதீனின் விளக்கு ஜனநாயகம் என்கிற பெயரில் கிடைத்தது.
அதுதான் போகட்டும் எங்கே எதற்கு எந்த வேலையை செய்ய அனுப்பப்பட்டார்களோ அங்கு போய் பேண்டை அவிழ்த்துக் காட்டுகிறார்கள் ; பேயாட்டம் ஆடுகிறார்கள்; ஒரு குண்டூசி பிரச்னைக்காக நாடாளுமன்றத்தை முடக்கிப் போடுகிறார்கள். பாராளுமன்றம் நாளை முதல் தொடங்குகிறது என்று அறிவிப்பு வந்தால் நாளை முதல் சந்தை ஆரம்பிக்கிறது என்று விளங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஆகிவிட்டது. அது கூட நீ அடிப்பது போல் அடி நான் அழுவது போல அழுகிறேன் என்று அனைவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டியே அதிகம். பல அரசின் திட்டங்களில் கூட்டுக் கொள்ளைதான் அதிகம். பங்குகள் சரியாகப் பகிரப் பட்டால் பாராளுமன்றம் பதமாகப் போகும் இல்லாவிட்டால் பாதகமாகப் போகும்.
எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது . ஒருத்தியைப் பார்த்து இன்னொருத்தி , “ நீ விபச்சாரி “ என்று திட்டினாளாம். உடனே மற்றவள் , “ நீ மட்டும் என்ன ஒழுங்கா? “ என்று கேட்டாளாம். பிறகு இருவரும் சரி! சரி! வா போகலாம் ஆள் காத்திருக்கிறது என்று சொல்லிக் கொண்டார்களாம். இது போல்தான் இன்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சிகளின் அணிகள் இருக்கின்றன.
கோடி கோடியாய் கொள்ளை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட சில அரசியல்வாதிகள் கைது செய்யப் பட்டால் சில நாட்களில் ஜாமீனில் வெளியே வந்து விடுகிறார்கள். இப்படி ஜாமீனில் வெளியே வருபவர்கள் ஏதோ செவ்வாய் கிரகத்தில் ஒரு வீடுகட்டிவிட்டு வந்தவர்கள் போலவும், நெல்சன் மண்டேலா போல் காந்தியடிகள் போல் சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்று மீண்டவர்கள் போலவும் அவர்களுக்கு மேளதாளங்கள், தாரை தப்பட்டைகள் வானவேடிக்கைகள் முழங்க விமான நிலையத்தில் தரப்படும் வரவேற்பும் வரிசையாக நின்று மாலை அணிவித்தலும் கண்டு நாகரிக உலகம் நாணித் தலை குனிகிறது. போதாக்குறைக்கு அவர்களை வாழ்த்தி ஓட்டப் படும் சுவரொட்டிகள், பிளாக்ஸ் போர்டுகள் அவற்றில் உள்ள வாசகங்களைப் படிக்கும்போது காறித் தான் துப்பவேண்டும்போல் இருக்கிறது. இன்னும் வழக்கே முடியவில்லை ஜாமீனுக்கே இந்த ஆர்ப்பாட்டம் என்றால் வழக்கு முடிந்து நிரபராதி என்று தீர்ப்பு வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம்.
லஞ்சம் ஒழியப் போவதுமில்லை கருவைக் காடு அழியப் போவதுமில்லை.
ஆக்கம்: P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி