Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

புத்தகம் - புதியதோர் உலகைச் செய்யும் ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | May 05, 2016 | , ,

புத்தகைத்தைப் புரட்டிப்பார்
புலப்படும் அதில்
புதியதோர் உலகம்

எத்திவைக்கும் புத்தகச் செய்தி
எதுவாயினும் - அது
எத்தனையோ
புதுமையைச் சொல்லும்

இன்றைய கண்டுபிடிப்புக்கள்
நேற்றைய வாசிப்புக்களே
நாளைய உலகை
நகர்த்திச் செல்வதும்
நாம் படிக்கும் பக்கங்களே

வாழ்க்கையெனும் புத்தகத்தில்
வறுமையெனும் பாடமும்
உண்டு

வனப்பான வாழ்வுக்கு
பொறுப்பாய்ப் படித்த
பக்கங்களும் உண்டு

அரசியல் ஆன்மீகம்
மருத்துவம் விஞ்ஞானம்
இப்படி வாழ்வியலில்
வகைபடுத்த முடியாதவை
ஆயிரமாயிரம்

இத்தனைக்கும் மூலதனமாம்
எத்திவைப்பது புத்தகமாம்

அத்தனையிலும்
ஆதிக்கம் செலுத்தும்
புத்தகத்தால் மட்டுமே
நாளைய உலகை
நலமாக்க முடியும்

புத்தியில் மிகைத்தவர்
புத்தகம் படைத்தனர்
புத்தகம் படித்தவர்
புத்தியில் மிகைத்திடுவர்

புத்தகத்தைப் புரட்டிப்பார்
புதையலாய்க் கிட்டும்
புத்திமதி

புத்தகம் படி
புதுமையை படை
நாளை
புதியதோர் உலகை
நீ செய்வாய்

அதிரை மெய்சா

இலவசம் விலை போனதே ! [அனுபவங்களின் விலாசம்] - குறுந்தொடர் - நிறைவுப் பகுதி 24

அதிரைநிருபர் பதிப்பகம் | July 03, 2014 | , , , , ,

கு.தொ.: 4

“நம் ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள். எனக்கு வேண்டியவர். குர் ஆன் தமிழ் தர்ஜமா கொண்டு வந்திருக்கிறார்கள். உங்களிடம் கூட்டி வந்திருக்கிறேன்” என்றேன்.  

“உட்காருங்கள். அந்த மாதிரி காப்பியைக் காட்டுங்கள்” என்றேன். கையோடு கொண்டு வந்திருந்த மாதிரியைக் கொடுத்தோம். 

“தலைப்பைப் பார்த்து தர்ஜமா என்று இருக்கிறதே, தர்ஜூமா என்கிறார்களே?!” என்றார்.

“இதுதான் சரியான உச்சரிப்பு” என்று நம் ஊர் ஆள் சொன்னார். பிரித்து ஒரு பார்வை பார்த்து விட்டு,

“அமல்களின் சிறப்பு என்ற புத்தகம் வாங்கி ஹதியா கொடுக்கலாம் என்று இருந்தோம். ஃபாரூக் அண்ணன் ஊர்க்காரர் கொண்டு வந்த்தால் இதையே வாங்கிக் கொள்கிறோம். எத்தனை பிரதிகள் கொண்டு வந்திருக்கிறீர்கள்?” என்றார்.

“முன்னூறு பிரதிகள் கொண்டு வந்திருக்கிறேன். எல்லாம் பினாங்கில் இருக்கிறது” என்றார். அந்த மேனேஜர், 

“என்ன விலை போட்டிருக்கிறது” என்று கேட்டுக் கொண்டே குர்ஆனைத் திறந்து, 

“ரூ 120/- போட்டிருக்கிறது” என்றார். குர்ஆன் கொண்டு வந்த ஆசாமி உடனடியாக,

“அடுத்தப் பதிப்பு ரூ 150/-“ என்றார். உடனே அந்த மேனேஜர்,

“இப்பொழுது பிறந்திருக்கும் பிள்ளைக்கு மட்டும் பேர் வைப்போம். பிறக்கப்போற பிள்ளைக்கு பிறந்ததும் பேர் வைக்கலாம்” என்று திருப்பியடித்தார்.

குர் ஆன் கொண்டு வந்தவர் அடுத்த பதிப்பின் விலை சொன்னதும் இவர் ஒரு ‘தில்லு முல்லு’ ஆசாமி என்பதைப் புரிந்து கொண்டேன். இது பிரச்னையில் முடியும் என்ற எண்ணம் என் உள் மனதில் உதித்தது. மேனேஜரிடம், ‘வேண்டாமென்று சொல்லுங்கள்’ என்று கண்ணைக் காட்டினேன். அவர் கவனிக்கவில்லை.  குர் ஆனைப் புரட்டிப் பார்ப்பதிலேயே குறியாக இருந்தார். 

“முன்னூறு பிரதிகளையும் எடுத்துக் கொள்கிறோம். என்ன ரேட்டுக்குத் தருகிறீர்கள்” என்று கேட்டார்.

“சிங்கப்பூரில்…..” என்று ஒரு பணக்காரர் பெயரைச் சொல்லி, “அவர் இரண்டு பிரதிகள் வாங்கிக்கொண்டு சிங்கப்பூர் டாலர் 1,500/- கொடுத்தார். கோலாலம்பூரில் (ஒரு தமிழ் முஸ்லீம் பெயரைச் சொல்லி) ஒரு பிரதி எடுத்துக் கொண்டு 2,000/- மலேசிய டாலர் கொடுத்தார்.” என்றார். இதைக் கேட்ட மேனேஜர், 

“அது தர்மம்” என்றார். பாம்புக்குப் பால் வார்த்து விட்டோமோ! நம் மரியாதையும் கப்பல் ஏறப் போகுது! ஊர் மரியாதையும் கப்பல் ஏறப்போகுதென்று எண்ணி எழுந்து கொஞ்சம் தள்ளிப்போய் மேனேஜருக்கு ‘வேண்டாம், திருப்பி அனுப்புங்கள்’ என்று சைகை செய்தேன்.  அவர் என்னை கவனிக்கவில்லை.

“நாங்கள் டெல்லியிலிருந்து பல லட்ச ரூபாய்க்கு புத்தகங்கள் இறக்குமதி செய்கிறோம். பேங்க் ரேட்படி போட்டு எங்களுக்கு 30-35% கழிவு கொடுக்கிறார்கள். அது அல்லாமல் நாங்கள் டெல்லிக்கு புத்தக கண்காட்சிக்குப் போகும் போது பல செல்வுகளையும் செய்கிறார்கள். அதெல்லாம் பெரிய வியாபாரம். பரவாயில்லை. குர்ஆன் என்பதால் கழிவு எங்களுக்கு வேண்டாம். நாங்கள் வாங்கியும் அல்லாஹ் பேராலே ஹதியாதான் கொடுக்கப் போகிறோம். வித்து ஆதாயம் சம்பாதிக்கவில்லை. ரூபாய்க்கு மலேசியா 9 காசு வீதம் ஒரு புத்தகத்துக்கு வருது.  மலேசியா காசு 9.60 போட்டுத் தருகிறேன். விருப்பமிருந்தால் கொடுங்கள். இல்லையென்றால் வேறு தோது பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.

வந்தவரோ 300 குர்ஆனை மலேசியா ரிங்கிட் 1,500/2,000 த்துக்கு விற்று நடுவிக்காடு, மங்கனங்காடு, மழவேனிற்காடு, முடுக்குக்காடு, மரவக்காடு தொக்காளிக்காடு போன்ற காடுகளையெல்லாம் ஒரே வளையா வளைச்சுப்போடலாம் என்று திட்டம் போட்டு விட்டார். முன்னூறு பிரதிகளை வாங்கி ஹதியாக் கொடுக்க்கூடிய ஆளாக இருந்தால் அவன் ஒரு ஏமாளியாக இருப்பான் என்றே நினைத்து விட்டார். ‘பொன் முட்டை இடும் வாத்தின் கழுத்தை அறுத்தால் எல்லா முட்டையையும் ஒரே தடவை எடுத்த் விட்டால் ஒரே நாளில் பணக்க்காரனாகலாம்’ என்ற ஐடியா அவருக்கு வந்து விட்டது. அந்த அளவுக்கு உள்ள பைத்தியகாரன் அங்கே இல்லை என்பதை இந்த அசாமி உணரவில்லை. 

பார்த்தார், யோசித்தார்.  ‘ஏண்டா இவரை இங்கே கொண்டு வந்தோம்’ என்றாகிவிட்டது.  இதில் வேறு பிரச்னை எழும் என்று என் உள் மனம் என்னை உறுத்தியது.  ஒரேயடியாக தட்டிக் கழித்து விட்டால் நல்லதென்றே பட்டது! மேனேஜரிடம் மீண்டும் கண் ஜாடை செய்தேன், அவர் புரிந்து கொள்ளவில்லை. குர்ஆன் கொண்டு வந்த ஆசாமி,

“சரி, கணக்குப் பார்த்து பணம் தாருங்கள். பினாங்கிலிருந்து பிரதிகளை அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

“பிரதிகள் வந்ததும் கணக்குப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார் மேனேஜர்.

“அட்வான்ஸாவது கொடுங்கள்” என்றார்.

“அதெல்லாம் எங்கள் ஸிஸ்டத்தில் இல்லை. நாங்கள் இந்தியாவிலிருந்து வாங்கும் புத்தகங்களுக்கு புத்தக்கங்கள் பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து 90 நாட்கள் சென்றுதான் பணம் கொடுப்போம்” என்று ஒரே பேச்சாகச் சொன்ன மேனேஜர், “ பினாங்கிலிருந்து அனுப்பும் லாரி சார்ஜைக் கழித்து பாக்கியை ரொக்கமாக வாங்கிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் பேச்சு இல்லை.  உங்கள் விருப்பம் எதுவோ அதுபடி செய்து கொள்ளுங்கள்” என்றார்.

குர்ஆன் கொண்டு வந்த ஆசாமியின் தந்திரங்கள் ஏதும் பலிக்கவில்லை. ஹதியா கொடுக்கும் குர்ஆனைக்கூட அங்குள்ளவர்களுக்கு படிக்க நேரமில்லை. ‘காசு காசு’ என்பதே ஒவ்வொருவரின் வேதமாக இருக்கிறது. தமிழ் முஸ்லீம்கள் குர்ஆன் வாங்கி ஓதுவதும் படிப்பதும் யார்? அதெல்லாம் இமாம்களின் வேலை என்று ஒதுங்கி விடுகிறார்கள்.  குர்ஆன் கொண்டு வந்த முதலைக்கு ஆசையைத் தூண்டியது எது என்றால் அந்தக் கடை மேனேஜர் தவறுதலாக ஒரு டிப்ஸ் கொடுத்து விட்டார். அது “நாங்கள் ‘அமல்களின் சிறப்பு’ என்ற புத்த்கத்தை வாங்கி ஹதியா கொடுக்கலாம் என்றிருந்தோம் என்பதே.  முன்னூறு நானூறு பிரதிகளை வாங்கி ஹதியா கொடுப்பவர்களாக இருந்தால் பெரிய கையாகவும் அதே சமயம் இஸ்லாம் மார்க்கம் என்றால் அள்ளிக் கொடுக்கும் ஏமாளி பண முதலையாகவும் இருப்பார்கள் இதை பயன் படுத்தி ஊரில் தோட்டந்துரவுகளை வாங்கி போட்டு கால் மேல் கால் போட்டு உண்ணலாம்,. காரில் ஊர் சுற்றலாம் என்ற எண்ணம் தோன்றி இருக்க வேண்டும்.  அதனால் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். 

இஸ்லாம் இப்படிச் சொல்லவில்லை. மனித இனத்துக்கு நல்வழி காட்டவே அல்லாஹ் குர் ஆன் என்ற வேதத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளினான்.  இது மனித இனத்திற்கு நேர் வழி காட்டும் திருமறை என்று சொன்னானே தவிர இதை விற்று பெரும் பணத்தைத் தேடிக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. பணக்காரர் ஆவதற்கு வேறு நல்ல நல்ல புத்தகங்கள் மனிதன் எழுதி இருக்கிறான். அதில் ஒன்று ‘Think and Grow Rich’ by Nepoleon Hill என்பதும் சிறந்த ஒன்று. அதிலும் சிந்தித்து செயல்பட்டு நேர்வழியில் பொருளீட்டி பணக்காரன் ஆகு என்றும் தேடிய பணத்தை ஏழை எளியோருக்கு உதவி செய் என்றும் அதை முதலீடாகக் கொண்டு பெரும் பெரும் தொழிற்சாலைகளை நிறுவி பலருக்கு வேலை கொடு என்றும்தான் சொல்லப் படுகிறது.   அது மனிதனால் எழுதப்பட்ட புத்தகம். அதன் விலையோ எழுதியவருக்கு சிறு ராயல்டி, பதிப்பாளருக்கு காகித விலை, அச்சுக்கூலி சில்லறை விற்பனையாளருக்குக் கமிஷன் என்ற கணக்கிலேயே ஒரு சாதாரண தொழிலாளியும் ஒரு வேலை சாப்பட்டுச் செலவுக்கு செய்யும் செலவைவிட மிகக்குறைவாகவே இருக்கும்.  அந்தப் புத்தகம் படித்து அதன் வழி எத்தனையோ பேர் அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார்கள்.  அந்தப் புத்தகத்தில் விற்கும் விலையை அச்சிட்டு வெளியிடுகிறார்கள். திருமறையோ how to become rich  பாலிஸையையோ ‘A short cut way to become rich’, ‘A way to become rich quickly’ என்னும் வழிமுறைகளைச் சொல்ல அருளப்படவில்லை.

மனித இனம் ஒழுக்க நெறியுடன் வாழ, மனித இனத்திற்கு நேர்வழி காட்ட அல்லாஹ்வால் அருளப்பட்ட புனித வேதம்.  புனித வேதம்-பணம் சம்பாதிக்க அருளப்பட்ட வேதமல்ல.  அல்லாஹ்வின் பேரருளை பெற மனித இனத்திற்கு தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வழியாக அருளப்பட்டது என்பதை முஸ்லீம்கள் எல்லோரும் உணர வேண்டும்.

ஆக, ஒரு வழியாக ஒரு புக் 9-60 மலேசிய ரிங்கிட் விலை பேசி முடித்தாகி விட்டது. பினாங்கில் இருக்கும் குர் ஆன் பிரதிகள் வந்ததும் ட்ரான்ஸ்போர்ட் சார்ஜ் போக மீதி தொகையை உடனடியாக கொடுப்பதென்ற Gentleman Agreement செய்தாகி விட்டது.  இரவு 7-30 மணியளவில அங்கிருந்த உணவு கடை ஒன்றில் இருவரும் சாப்பிட்டு விட்டு நேராக பார்க்கிங்கில் போட்ட வேனை எடுத்து கொண்டு அவரை அவர் தங்கும் இடத்தில் விட்டு விட்டு என் இடத்திற்கு வந்து விட்டேன். 

இரண்டுமூன்று நாட்கள் ஆனது. குர்ஆன் வரவில்லை. ஒருநாள் என் கடைக்கு குர்ஆன் பேர்வழி வந்தார்.,

“குர் ஆனை கஸ்டம்ஸில் வெளியுறவு அமைச்சைச் சார்ந்த புத்தக தணிக்கை இலாக்காவின் மத சம்பந்தப்பட்ட பிரிவு தடுத்து விட்டது.”  என்றார்.

அதை அவர்கள் வெளியிட மறுக்கிறார்கள் என்று சொன்னார். “என்ன காரணம்?” என்றேன். அவருக்கு விளக்கமாகச் சொல்லத் தெரியவில்லை.  நானும் அவரும் புத்தகக் கடை மேனேஜரிடம் சென்றோம். விபரத்தைச் சொன்னோம். அவர்கள் வெளி நாட்டிலிருந்து புத்தகம் இறக்குமதி செய்வதில் அங்குள்ள அதிகாரிகள் நல்ல பழக்கம்.  அந்த புத்தக கம்பெனிக்காரர்கள் மீதும் அந்த இலாகாவில் நல்ல பெயர்.  அரசுக்கு எதிரான புத்தகங்கள் இறக்குமதி செய்து எந்த கெட்ட பெயரும் அந்தக் கம்பெனிக்கு இல்லை. அந்த இலாக்காக்காரர்க்ளும் அடிக்கடி அங்கே வந்த தடை செய்யப்பட்ட புத்தகங்களின் பெயரையும் சில சமயம் பட்டியலையும் கொடுப்பார்கள்.  சில நேரங்களில் தடை செய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியல்கள் பத்திரிகைகளில் வரும். ஆரசியல் கோட்பாடு குறிப்பாக கம்யூனிசம், அடுத்து இஸ்லாம் சம்பந்தமான எதிர்மறையான கருத்து போதிக்கும் புத்தகங்கள், அடுத்து ஆபாச புத்தகம். இவை தடை செய்யப்பட்டவை.

புத்தகக் கம்பெனி மேனேஜர் அந்த இலாக்காவுக்கு டெலிபோன் போட்டு விஷயத்தைச் சொன்னார். “நாளை அவரை ஆஃபீசுக்கு வரும்படி சொன்னார். மறுநாள் மேனேஜர் அங்கே சென்று விபரம் கேட்டார். அவர்கள் சொன்னது அரபு மொழி எழுத்தில் இரண்டு மூன்று வகை உண்டாம். 1) இந்தக் குர்ஆனில் மலேசியாவில் அங்கீகரிக்கப்பட்ட எழுத்து இல்லையாம். 2) இந்த குர்ஆன் பலதடவைக்கு மேல் அச்சிட்டதால் சில அரபு எழுத்துகளும் சேர், ஸபர் போன்ற குறியீடுகளும் தேய்ந்து போய் இருப்பதால் அர்த்தம் மாறுபடுகிறது என்றும் அதனால் அதை வெளியிட தடை போடும் நிலை இருக்கிறது.” என்றார்கள்.  எங்களுக்கும் இதை தடை செய்ய வருத்தமாக இருக்கிறது. வேண்டுமென்றே செய்த தவறு அல்ல. இயற்கையாக உண்டானது.  இதற்கு ஏதாவது ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணங்களை இன்னும் இரண்டு வாரத்தில் எழுத்து மூலம் கொடுத்தால் வெளியாக்கும் உத்தரவை தருகிறோம் இல்லை என்றால் எல்லாமே கடலில் கொண்டு போய் கொட்டி விடுவோம்” என்றார்களாம்.  மறுநாள் போனபோது சொன்னார்.

குர்ஆன் வெளியாக என்ன வழி? ஒரு குர்ஆனுக்கு மலேசியா டாலர் 2,000 கேட்ட quick rich அல்லது குறுக்கு வழி பணக்காரனாக விரும்பிய பேராசை பேர்வழிக்கு அல்லாஹ்வின் சோதனை!

குறுக்கு வழிக்காரரின் முகம் வெளிறிவிட்டது.  ஆனால், இது குறுக்கு வழிக்காரருக்கு முன்னமேயே தெரியும்.  அதைக் காட்டிக் கொள்ளாமல் குர்ஆனுக்கு உள்ள பணத்தை முன் கூட்டியே வாங்கி விட்டால்...! என்ற எண்ணம்.

என்னிடம் அவர் சொன்னது குர்ஆன் பினாங்கில் ஒரு பிரபல்யமான தமிழ் முஸ்லீம் கம்பெனியின் குடோவ்னில் இருப்பதாகவே பேசினார். தில்லு முல்லுத் தனம். அதுவும் குர்ஆனில். 

இரண்டு நாள் கழித்து குர்ஆனை வெளியாக்கும் வழி கண்டாச்சு.  “இந்திய தமிழ் முஸ்லீம்கள் இந்த அரபு எழுத்திலேயே படித்துப் பழக்கம். தமிழ் முஸ்லீம்களுக்கு மட்டும் விலையில்லாமல் ஹதியாகாவாகக் கொடுப்பது. தமிழ் முஸ்லீம்கள் ஏற்கனவே அரபு வாசகத்தை ஏற்கனவே ஓத தெரிந்தவர்கள். ஆனால், தமிழில் அதற்கு தெளிவான விளக்கம் தெரியாதவர்கள். இன்னும் பலர் அரபு மொழியில் ஓத தெரியாதவர்கள். ஒரு சில சூராக்கள் மட்டும் வாய்வழி மனப்பாடம் செய்து ஓதுபவர்கள். எனவே அரபு மொழி முக்கியமில்லை. குர்ஆனின் வாசகத்தைத் தமிழில் கொடுப்பதே இதன் முக்கிய நோக்கம். அதுவும் தமிழ் முஸ்லீம்களுக்கு மட்டும் இனாமாகக் கொடுப்பதால் சிறிய எண்ணிக்கையிலான பிரதிகளே வெளியாகும்” என்ற காரணத்தை அந்த இலாக்காவின் தமிழ் பகுதியைச் சேர்ந்த ஓர் இஸ்லாமியர், “இந்தக் காரணத்தை எழுதிக் கொடுங்கள். பிரதிகளை வெளியாக்க என்னையும் கலந்து கொள்வார்கள்.  நான் ஒப்புதல் கொடுக்கிறேன்” என்றாராம். 

அதன்படியே அந்த கம்பெனிக்காரர்கள் கடிதம் எழுதிக் கொடுத்தார்கள்.  இதில் நாலைந்து நாட்கள் ஆகிவிட்டது.  கோலாலம்பூரிலிருந்து வெளியாக்கும் உத்தரவு பின்ங்கு போய் சேர வேண்டும்.  அதன் பின்பே குர் ஆன் வெளியாகும். ஒரு கண்டிஷன். இந்தக் குர்ஆன் தமிழ் முஸ்லிம்களுக்கும் மட்டுமே இனாமாகக் கொடுக்க வேண்டும் “இந்த குர்ஆன் இனாமாக கொடுக்கப்படுகிறது” என்ற ரப்பர்  ஸ்டாம்ப் அடித்தே வழங்க வேண்டும் என்ற உத்தரவின் பேரில் குர்ஆன் வெளியாக்க அனுமதி கிடைத்தது.  

ஏறத்தாழ மூன்று நான்கு தடவை என் வேலையைப் போட்டுவிட்டு கூட்டிப்போய் பெட்ரோல் செலவு, பார்க்கிங்க் செலவு எல்லாம் செய்தும் ஏதும் நான் கமிஷனோ வேறு எதுவுமோ எதிர் பார்க்கவில்லை.  அல்லாஹ்வுக்காக நான் அதையெல்லாம் எண்ணவில்லை. யாருக்கு எந்த உதவி செய்தாலும் எதையும் எதிர்பார்க்கும் எண்ணம் எனக்கு இல்லை.

ஒரு நாள் அவர் என் கடைக்கு வந்தபோது புத்தக வெளியீடு சம்பந்தமாகப் பேசினோம்.  அப்பொழுது நான் சொன்னேன்,“நான் சிறுவர்கள் கதை புத்தகம் 4 கலரில் வெளியிடுகிறேன்.  தமிழ் நாட்டில் நல்ல ஓவியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாரையாவது என்னிடம் அரிமுகப்படுத்தி விடுங்கள். அவர்களிடம் பேசி கதையைக் கம்ப்யூட்டரில் அனுப்பி அதற்கு ஏற்ற ஓவியங்கள் தீட்டிக் கொடுத்தால் அதற்குரிய சார்ஜைப் பேசி கொடுத்து விடலாம்.  என்னுடைய அட்ரசைத் தருகிறேன்.  என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்ல முடியுமா?” என்றேன்.

“செய்யலாம். அதற்கு எனக்கு ஒரு கமிஷனை நீங்கள் பேசி கொடுக்கனுமே!” என்றார்.

அதைக் கேட்ட நான் திடுக்கிட்டேன்.  உண்ட தட்டையிலேயே…. ஆள்! என்று தீர்மாணித்தேன். மீண்டும் தொடர்ந்தார்,

“அந்தக் கதையை என்னிடம் கொடுங்கள். நான் ப்ரிண்ட் செய்து அனுப்புகிறேன்” என்றார்.

“இது நாலு கலர் படம் போட்ட புக்குகள். அந்தக் குவாலிட்டியில் இந்தியாவில் செய்ய மிஷின் கிடையாது. வெறும் சினிமா நோட்டீஸ் மட்டும் அடிக்கும் மிஷின் மட்டுமே மண்ணடியில் ‘போட்டு சக்குசக்குன்னு’ அடிச்சுத் தள்ளிட்டு காசைக் கொடு என்பீர்கள்.  பத்தாம் பக்கம் இருக்கும் அடுத்தது 16 பக்கம் வரும். வேண்டாம் என்று கழட்டி விட்டேன், ‘ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே’ பாட்டு ஞாபகம் வந்தது.  அடுத்த நாள் வந்தார்.

“நான் சிங்கப்பூர் போகிறேன். மூன்று நான்கு நாள் கழித்து வருவேன்.  புக் வந்து விட்டால் பணம் வாங்கி வையுங்கள்” என்றார்.  

“உங்களுக்கு எந்த விசா தந்தார்கள்?” என்றேன். 

“விசிட்டிங் விசா தந்தார்கள்” என்றார்.  

“நீங்கள் சிங்கப்பூர் போனால் திரும்பி மலேசியா வர முடியாது. ஒரு முறை வந்து விட்டு வெளியானால் அந்த விசா ஆட்டோமாட்டிக்கா கேன்ஸல் ஆகிவிடும். புத்தகம் வந்ததும் பணத்தை வாங்கிக் கொண்டு போங்கள்” என்றேன்.  அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?

“அது உன்னைப் போல கேனப்பயலுகளிடம்தான் அப்படிச் சொல்வார்கள். நாங்கள் எல்லாம் மண்ணடியில் பேர் போட்டவர்கள். மண்ணடி மண்ணை பொன் என்று சொல்லி விற்று காசு பண்ற ஆசாமிகள் நாங்கள்” என்றார்.  

எனக்கு அவர் 10 வயது இளையவர். சரியான நல்ல பாம்புக்கு பால் வார்த்தோம் என்று என்னையே நான் நொந்து கொண்டேன். எனக்கு பத்து வயது இளையவன் என்னை நீ நான் என்று மரியாதை இல்லாமல் பேசுகிறானே என்று எனக்குக் கோபம் வந்தது.  இந்த மாதிரியான ஆசாமிகளிடம் என் குணமே வேறு. வேறு மாதிரியாக நடந்து விடும்.  நான் முதன் முதலில் மலேயா புறப்படும்போது சொல்லிய வாசகம் நினைவு வந்தது. “உனக்குக் கோபம் வந்தால் திடுதிப்பென்று அரிவாள், கத்தி, கம்பு என்று எடுக்கிற ஆளு நீ. வீட்டில் எத்தனை பீங்கான் தட்டையெல்லாம் உடைத்திருக்கிறாய். அங்கே போய் அப்படியெல்லாம் நடந்து கொள்ளாதே” என்று அழுதுகொண்டு சொன்ன சொல் ஞாபகம் வந்தது!  என்னையே நான் சமாளித்துக் கொண்டேன்.

“அப்படியா! Thank you brother! சென்று வாருங்கள். உங்களுக்கு மாலை போட்டு வரவேற்கிறேன்” என்றேன்.  

போய் விட்டார். இதற்கிடையில் நான் கம்பெனி மேனேஜரிடம் விஷயத்தைச் சொல்லி, 

“குர்ஆனுக்கு வெளியுறவுத் துறைக்குக் கொடுத்த கடிதத்தை வாபஸ் வாங்குங்கள். குர்ஆனை வெளியிடுவது அவர்கள் சொந்த முடிவாக இருக்கட்டும்” என்றேன். அவர், 

“வேண்டாம் ஃபாரூக். குர்ஆன் விஷயம். அந்த நாய் அப்படிச் செய்தது என்று நாமும் அப்படி நடக்க வேண்டாம்” என்றார். 

நாலைந்து நாள் வரை குர்ஆன் வரவில்லை. இதற்கிடையில் அவர் போன நாளாம் நாள் அந்தக் கம்பெனி மேனேஜர் ஜெர்மனியில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு புறப்பட்டுப் போய் விட்டார். திரும்பி வர 10-12 நாட்கள் ஆகும் ஒரு நாள் காலை 8:45 மணியளவில் என் டெலிபோன் மணியடித்தது. எடுத்தேன். ஒரே சப்தம்… இரைச்சல்,”

“ஹலோ” என்றேன்

“நான் தான்….. (குர் ஆன் பேர்வழி) காக்கா, மலேசியா ஏர்ப்போர்ட்டிலிருந்து பேசுகிறேன்” என்றார்.

“பேசுங்கள்” என்று கிண்டலடித்தேன்.

“என்னை வெளியே விட மாட்டார்களாம். ஒரு முறை போனால் விசா காலாவதியாச்சு” என்று சொல்கிறார்கள் காக்கா” என்றார்

“அப்படியெல்லாம் என்னைப் போல இளிச்ச வாயனிடம்தானே சொல்வார்கள்! நீதான் மண்ணடி மண்ணை பொன் என்று விற்கிறா ஆளாச்சே! அதை இமிகிரேஷின்காரனிடம் சொல்லுடா!” என்று டெலிபோனை வைத்து விட்டேன்.  

திரும்பவும் மணியடித்த்து. எடுத்தேன். 

“காக்கா, ரொம்ப கோபப்படுறியளே? குர் ஆன் வந்து விட்டதா?” என்றார்.

“வரவில்லை. மேனேஜர் வெளிநாடு போய்விட்டார். வர 15 நாட்கள் ஆகும். குர்ஆன் கையில் கிடைத்தால்தான் பணம் கிடைக்கும்” என்றேன்.

“ஏன் குர்ஆன் இன்னும் வரவில்லை?” என்றார்.

“அதை பினாங்கில் உன் ஆளிடம் கேள்” என்றேன். 

“நான் இங்கிருந்தே ஊர் போறேன். ஊர் போய் டெலிபோன் போடுகிறேன்” என்று வைத்து விட்டார்.

ஊர் போய் மூன்று நான்கு நாள் கழித்து போன் செய்தார். 

“குர்ஆன் வந்து விட்டதா?” என்றார். 

“குர்ஆன் வந்து விட்டது. அதற்குரிய பணம் வவுச்சரும் கொடுத்து விட்டார்கள். லாரி கூலி போக பாக்கி வெள்ளி இவ்வளவு தந்தார்கள்”என்றேன்.

“”அதில் இவருக்கு இத்தனை வெள்ளி, அவருக்கு இத்தனை வெள்ளி கொடுங்கள். பினாங்கில் (ஒரு நபருடைய பெயரைச் சொல்லி) அவருக்கு இவ்வளவு கொடுங்கள். பாக்கி தொகைக்கு பேங்க் போய் ட்ராஃப்ட் எடுத்து அதை கவரில் வைத்து அத்துடன் வவுச்சரையும் வைத்து என் அட்ரஸ் தருகிறேன். எழுதி தபால் ஆபீஸ் போய் என் பெயரில் ரிஜிஸடர் செய்து விடுங்கள்” என்றார்.

எனக்குக் கடுப்பு ஏறியது,

“நீ கொடுக்க வேண்டிய நபர்களுக்கு அவர்கள் இடத்துக்குப் போய் உன் கடனைக் கொடுக்க வேண்டும். பேங்குக்குப் போய் டிரஃப்ட் எடுக்க வேண்டும். தபால் ஆபீஸ் போய் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்ய எவனாவது இளிச்ச வாயன் இருந்தால் அவனைப் பார். உன் வீட்டு எடுபிடி என்று நினைத்தாயா? கொஞ்சம் இரக்கப்பட்டு இடம் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவாய். இந்த வேலைகளுக்கு எல்லாம் எவனாவது கேனையன் இருப்பான் அவனைப் பார். பணம் வேனும் என்றால் எவனாவது ஒருத்தனை அனுப்பி முழுப் பணத்தையும் வாங்கிப் போகச் சொல். இந்த ‘மண்ணடித் தந்திரங்கள்’ எல்லாம் இங்கே விலை போகாது.  போனால் போகிறது என்று மனிதாபமான முறையில் உதவி செய்தால் மண்டையில் ஏறி மொட்டையடிக்கும் ஆள் என்பதைப் புரிந்து கொண்டேன்.” என்று சொல்லி போனை கட் செய்தேன்.

அடுத்த நாள் டெலிபோன் வந்தது. ஒரு நபரின் பெயரைச் சொல்லி, 

“அவரிடம் பணத்தைக் கொடுத்து விடுங்கள். ரொம்ப கோபப் படுகிறீர்களே, காக்கா!” என்றார்

“ஆமாம். கோபப்படாமல் இருந்தால் ஒண்ட வந்த பிசாசு ஊர் பிசாசை விரட்டும் என்பார்களே, தெரியுமா? உனக்கு இவ்வளவு உதவி செய்த என்னிடம் கமிஷன் கேட்டாய் அல்லவா? உன் போன்ற நன்றி கெட்டவர்கள் எல்லாம் அல்லாஹ் குர் ஆனை தொடவே கூடாது.  நீ எல்லாம் அதைப் பணம் சம்பாதிக்கும் கருவியாகப் பயன் படுத்துவதனால்தான் இஸ்லாமியர்களுக்கு உலக அளவில் சோதனைகள் ஏற்படுகிறது.” என்று சொல்லி போனை வைத்து விட்டேன்.  

பணம் வாங்க வந்தவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டேன்.  அதோடு காலை சுற்றிய நாகப் பாம்பு போய் விட்டது என்று எண்ணி இருந்தேன்.

அடுத்து ஒரு வாரம் கழித்து மீண்டும் போன் மணி அடித்தது. எடுத்த்தும், 

“காக்கா, நான் தான் பேசுகிறேன். குர் ஆன் கொண்டு வந்ததில் கணக்குப் பார்த்தால் எனக்கு நட்டம் எற்பட்டு விட்டது. அந்தக் கடைக்காரரிடம் சொல்லி இன்னும் கொஞ்சம் பணம் வாங்கிக் கொடுங்கள்” என்றார்.

“பேசியபடிதான் பணம் கொடுத்து விட்டார்களே? அதற்குமேல் எப்படி பணம் கேட்பது?” என்றேன்.

“நான் அங்கே ரொம்ப நாள் தங்கியதில் செலவு அதிகமாகிவிட்டது. அவர்களிடம் நீங்கள் சொல்லுங்கள்” என்றார்.

“நான் சொல்ல முடியாது. பேசியபடி பணம் கொடுத்து விட்டார்கள்” என்றேன்.

“அவர்கள் பணம் கொடுக்க சுனங்கி விட்டதால் நான் தங்கியதில் செலவு அதிகமாச்சே.?” என்றார்

“குர்ஆன் வந்து சேரவிவில்லை. சாமான் வராமல் விலை பேசியதும் பணத்தை இந்தா வாங்கிக்கொண்டு ஊர் போ என்று சொல்லும் முட்டாள்கள் இங்கு இல்லை. அவர்கள் முயற்சிக்கா விட்டால் அவ்வளவு குர்ஆனையும் அரசாங்கம் கடலில் கொட்டி விடும்.  குர்ஆனை காசுக்கு விற்று பணம் சம்பாதித்து தோட்டம் தொறவு வாங்க அவர்கள் உன்னிடம் குர்ஆன் வாங்கவில்லை. அதையெல்லாம் அல்லாஹ்வின் பேரால் இனாம் கொடுக்கவே அதை வாங்கினார்கள். காசு ஆசையால் ஷெய்த்தான் வேலையெல்லாம் செய்யாதே” என்றேன்

“அப்படியென்றால் நான் நேரடியாக அவரிடம் பேசுகிறேன்” என்றார்.

நான் அந்தக் கம்பெனி மேனேஜருக்கு டெலிபோன் போட்டு விஷயத்தைச் சொன்னேன். 

“அப்படியா? அவன் முகத்தில் வைத்திருந்த தாடியையும் உங்களூர் ஆள் என்று நீங்கள் கூட்டி வந்ததாலும்தான் நான் குர்ஆனை வாங்கினேன். ஷைத்தான் வேதம் ஓதுகிறது” என்று சொல்லிவிட்டு,

“உங்கள் ஊரில் ஷெய்த்தான்கள் அதிகம் இருக்கும்போல் தெரிகிறது!” என்றார்.

கொஞ்ச நேரம் கழித்து அந்த்க் கடை மேனேஜர் எனக்கு மீண்டும் போன் போட்டார்.

“பணம் கேட்டார். பணம் இல்லை. கொடுத்த பணத்தை திரும்ப கொடுத்து விட்டு குர்ஆனை எடுத்துக் கொள் என்றேன். விலை பேசி முடித்து ஒப்பந்தம் செய்துவிட்டு பிறகு கூட கொடு குறையக் கொடு என்று கேட்கிறாயே அப்படியெல்லாம் நீ கொண்டு வந்த குர்ஆனில் இருக்கிறதா?. உனக்கெல்லாம் ஒரு தாடி! ஒரு தொப்பி! மகா மட்டரகமான பேர்வழியாக இருக்கிறாயே” என்று திட்டி டெலிபோனை வைத்து விட்டேன்” என்று சொன்னார்.

“மீண்டும் டெலிபோன் போட்டு அதே பல்லவியைப் பாடினார். ஒரு வாரம் டயம் தர்றேன். நான் கொடுத்த பணத்தை கொடுத்து விட்டு குர்ஆனை எடுத்துக் கொள். இல்லை என்றால் நீ இங்கே வா. குர்ஆனை தருகிறேன். நான் கொடுத்த பணம் அல்லாஹ் பேராலே உனக்கு கொடுத்த தர்மமாக இருக்கட்டும் என்று சொன்னேன் என்றும், உழைத்துப் பணம் சம்பாதிக்க வழியைப் பார். தில்லுமுல்லுத்தனம் செய்யாதே” என்று சொன்னதாகச் சொன்னார்.

‘இனிமேல் டெலிபோன் போடாதே. போட்டால் நான் வேறு விதமாகப் போக வேண்டி வரும்” என்று எச்சரித்ததாகச் சொன்னர். அதோடு டெலிபோன் வருவது நின்று விட்டது.  

நான் படித்த புத்தி, பாம்பென்று நினைத்து அடிப்பதா? பழுதை என்று நினைத்து மிதிப்பதா? என்று ஒரு தமிழ் சொல்லடை உண்டு. (இதன் பொருள்: பழுதை என்பது வைக்கோல் பிரி). இரவு வேளைகளில் வயல்களின் வழி பாதையில் போகும்போது அங்கே பாம்பும் சுருண்டு கிடக்கும். வைக்கோல் பிரியும் சுருண்டு கிடக்கும். மங்கிய நிலவொளியில் பார்க்கும்போது அது பாம்பாகவும் தெரியும் வைக்கோல் பிரியாகவும் தெரியும். வைக்கோல் பிரியா பாம்பா? வைக்கோல் பிரி என்று எண்ணி பாம்பின் மீதுகால் வைத்தால் என்ன ஆகுமென்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆட்டுத்தோல் போத்திய நரி மந்தையில் புகுந்து ஆடுகளைத் தின்று ரத்தம் குடித்ததைப்போல் இஸ்லாத்தின் தோல் போத்திய நரிகள் நிறையவே குர் ஆனின் போதனை கூறியும் நபிகள நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய பொன் மொழிகளை (ஹதீஸ்களை) கூறியும் தங்கள் பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொள்கின்றன.  அல்லாஹ் குர்ஆனை அருளியது அதை ஒன்றுக்கு நூறாக விற்று மனிதன் காசு பார்க்க அல்ல. ரசூலுல்லாஹ்(ஸல்) நல்லுபதேசம் செய்த ஹதீஸ்களைச் சொன்னது புத்தகமாக்கி ஒன்றுக்கு நூறாக விற்று காசு பார்க்க் அல்ல. அவை இரண்டும் நமக்கு வந்தது மனிதன் நல் வழியில் சென்று நல்வாழ்வை பெற்று நல்லதைச் செய்து மனித இனம் திருந்தி அல்லாஹ்வின் நல் அடியாராகவே.  குர் ஆனில் think and grow தத்துவங்கள் சொல்லப்பட் வில்லை. Think and grow rich புத்தகத்திலும் குறுக்கு வழியில் சீக்கிரமே பணக்காரனாகும் தத்துவமும் சொல்லப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குர்ஆனில் சொல்லப்பட்டதெல்லாம் நேரிய வழியில் நட; அல்லாஹ் ஒருவன் என்று நம்பு அவனையே வணங்கு; நேரிய வழியில் பொருளீட்டி வாழ்க்கை நடத்து தான தர்மங்களைச் செய் போன்றவையே.

அல்லாஹ்வும் இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் குர்ஆனும் ஹதீஸூம் மனிதனுக்கு நேர் வழி காட்ட அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவையே. அவை மனிதனுக்கு quick rich method டை கூற அல்லாஹ்வால் அனுப்பப்ப்படவில்லை என்பதை மீண்டும் நினைவு படுத்தி நிறைவு செய்கிறேன், அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!

S.முஹம்மது ஃபாரூக்

இலவசம் விலை போனதே ! [அனுபவங்களின் விலாசம்] - குறுந்தொடர் - 3 24

அதிரைநிருபர் பதிப்பகம் | June 26, 2014 | , , , ,

அடுத்து என் நேர்த்திக்கடன் பயணம் மேற்கு நோக்கி! மேற்கு நோக்கிய பயணத்தில் கோட்டைப்பட்டினம். கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா தர்ஹா! அது 30 ஆண்டுகளுக்கு முன்பு அழகான கடற்கரை. பறந்த வெளியில் அந்த தர்ஹா தனியே நின்றது. வெண் நுரை கக்கும் கடல் அலைகள் கரை நோக்கி வந்து வந்து அதை முத்தமிடும் காட்சி கவிரசனை கொண்ட கண்ணிலும் மனதிலும் கற்பனை ஊற்றுக்களைத் தோண்டும். கரை ஓரம் டீ கடை, அடுத்து சர்க்கரை பத்தி, சாம்புராணி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்கும் கடை. நாகூரைப் போல ரெடிமேட் சர்க்கரை அங்கே இல்லை. வாடிக்கையாளர் கேட்கும் அளவு தராசில் ஒரு தட்டில் படிக்கல்லும் மறு தட்டில் சர்க்கரையும் போட்டு நிறுத்துத் தருவார்கள். எப்பொழுதும் நிறுவையில் தராசின் சர்க்கரைத் தட்டு சற்றுத் தாழ்ந்தே இருக்கும். அதாவது கேட்ட அளவை விட சர்க்கரை கூடுதலாக இருக்கும். நாகூர் சிஸ்டம் அங்கே இல்லை. நாணயமான கடைக்காரர். நேர்வழியில் பொருள் தேடும் நெஞ்சு. என்றைக்கும் ஏழயாய்தான் இருப்பாரோ!?  

நான் 10-12 வயது பையனாக இருக்கும்போது அங்கொரு கல்யாணத்திற்கு என் மாமாவுடன் போயிருந்தேன். (அவர் மூத்த மகளை நிக்காஹ் செய்து தந்தவரும் அவரே).  இரவு கல்யாணம்.  இரவு எட்டு மணிக்கு சகன் விருந்து. இரவு 11 மணிக்கு நிக்காஹ் முடிந்தது. வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கெல்லாம் படுக்கை பள்ளியில்தான்.  அப்போதெல்லாம் பஸ் கிடையாது. போனால் கூண்டு வண்டி, பெட்டி வண்டி கட்டித்தான் போக வேண்டும்.  ராஜாமடம் பாலம் அப்போ கிடையாது.  தண்ணீர் முழங்கால் அளவு ஓடும்போது வேட்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டுபோக வேண்டும். நுங்கும் நுரையுமாக பெருக்கெடுத்து ஓடினால் படகு வரும்.  அதில் ஏறிக் கடக்கலாம். அதற்கு ஒரு நபருக்கு கால் ரூபாயோ அரை ருபாயோ கட்டணம் செலுத்த வேண்டும். 

காலை பசியாற மாப்பிள்ளை வீட்டிலேயே.  நாங்கள் எல்லாம் மாப்பிள்ளை வீட்டார் கெஸ்ட்ஸ்.  காலை பசியாறல் சகனில் வந்தது. மொத்தம் அஞ்சாறு சகன்.  சகனில் இடியப்பம், எறச்சாணம், வட்டிலப்பம், கடப்பாசி, சவ்வரிசி, ரவ்வா போன்ர அதிராம்பட்டிண அய்ட்டங்கள் இல்லை. சகனில் இருந்தது தேங்காய்ப்பால் கஞ்சி! சகனில் கூடி இருந்த எல்லோரும் ‘திருதிரு’வென்று விழித்தார்கள்.  விழித்தவர்கள் விழிகளை விழிகளால் கண்ட ஒருவர் வாய் திறந்து சொன்னார், 


“இது இந்த ஊர் பழக்கம். குடியுங்கள்” என்றார். ‘பாம்பு திண்கிற ஊருக்குப் போனால் நடுத்துண்டம் நமக்கே!’ என்னும் முதுமொழி when you are in Rome do as Romans’s do  என்பதுபோல.

கஞ்சியின் கூடவே தொட்டுக்கிட ஒரு பெரிய உருண்டை தேங்காய்த் தொட்டுக்கறியும் ஒரு தட்டையில் வந்தது. எங்கள் சகனில் எதைக் கொடுத்தாலும் சேடை சொல்லுமொரு நபரும் இருந்தார்.  அவர் சகன் பரத்தியவரைக் கூப்பிட்டு, 

“ஒரு கிண்ணியில் நல்லெண்ணெய் தருகிறீர்களா?” என்று கேட்டார்.  இதைக் கேட்ட அவர் கொஞ்ச நேரம் விழித்தார். பின்பு, 

“ஏன் நல்லெண்ணெய் கேட்கிறீர்கள்?” என்று கேட்டார். சகனில் இருந்த விகடர் தேங்காய்த் தொட்டுக்கறியைக் காட்டி,

“அரப்பு உருண்டை கொடுத்திருக்கிறீர்கள். நல்லெண்ணெய் கொடுத்தால் தேய்த்து குளிக்கத்தான்!” என்றார். 

இதைக் கேட்ட பலர் சிரித்து விட்டார்கள். ஆனால், அந்த வீட்டுக்காரரின் முகம் அவமானத்தால் சுருங்கி விட்டது. இது ஒரு அநாகரீகமான கிண்டல். பிறர் நிலை, பழக்க வழக்கம் அறியாமல் கிண்டல் செய்து பிறர் மனதை நோகடிப்பதை நம் மார்க்கம் ஏற்றுக் கொள்வதில்லை. உலகில் தோன்றிய மக்கள் எல்லாம் ஒரே பொருளாதார நிலையிலும் பழக்க வழக்கங்களிலும் இல்லை. நாகரீகமற்ற அந்த மனிதரின் கிண்டலை இன்று நினைத்தால்கூட அவர் மீது எனக்கு வெறுப்பு ஏற்படுகிறது. அவர்கள் எப்பொழுதும் பிறரை மட்டம் தட்டியும் தாழ்த்தியும் பேசிக் கொண்டிருப்பதையே பொழுது போக்காக்க் கொண்டிருப்பாரகள்.  அவர்கள் வீட்டுக் குப்பையைக் கிண்டினால் கப்பல் கப்பலா ஏற்ற நிறைய சரக்கு உண்டு. 

நாம் நம்ம பேசுபொருளுக்குள் வருவோம்.

சர்க்கரை பத்தி தட்டோடு தர்ஹா வாசலில் உட்கார்ந்திருக்கும் லபையிடம் கொடுத்து ஃபாத்திஹா அல்லது மவுலுது என்று சொன்னால் முறையாக ஓதுவார். அங்கு ஒரு ஆண்டுக்கு ஒரு லபைதான். வருஷா வருஷம் லபை மாறிமாறி வருவார்கள்.  10 ½ ரூபாய் கொடுத்தாலும் 101 ரூபாய் கொடுத்தாலும் முகம் மலர வாங்கிக் கொண்டு வாழ்த்தி அனுப்புவார்கள். முத்துப்பேட்டை தர்ஹா பிரச்னை, நாகூர் தர்ஹா பிரச்னை அங்கு கிடையாது.  ஆங்காங்கே நேர்த்திக் கடனுக்கு இருப்பவர்கள் தூங்கிக்கொண்டும் விழித்திருப்போர் காசு கொடுப்பவர்களைப் பார்த்துக் கொண்டும் இருப்பாரகள். 

“உங்கள் ஹக்கில் ஏதாவது அவர்களுக்கு பிரியமிருந்தால் கொடுங்கள்!” என்று அந்த லபை மென்மையாகச் சொல்வார். அவரவர்கள் முகம பார்த்து பிரியமிருந்தால் கொடுத்துவிட்டு வரலாம். இது சுமார் 15 வருடங்களுக்கு முந்திய நிலைமையைச் சொல்கிறேன்.  இன்றைய நிலைமை என்ன என்று எனக்குத் தெரியாது. ஷிர்க்கை அடயாளம் கண்டுகொண்ட பின்பு அங்கு செல்வதில் விருப்பம் இல்லை.

அடுத்தப் பயணம், ஏர்வாடி! பஸ்ஸை விட்டு இறங்கி நடந்தால் இருபக்கமும் கடைகள். பனை ஓலைப் பெட்டியில் கருப்பட்டி மற்றும் சில பொருள்கள்.  என்கூட வந்த என் நண்பர் ஊரை விட்டு கிளம்பியதும் “தன் பிள்ளை எங்கேயோ கல் தடுக்கிக் கீழே விழுந்து விட்டானோ? தொட்டியில்  தூங்கிய பிள்ளை தொட்டில் கயிறு அருந்து கீழே விழுந்து காயப்பட்டு விட்டானோ? என்ற வீட்டுக் கவலையுடனேயே இருப்பார்.  பிள்ளையின் வய்து என்ன தெரியுமா? ஒன்றும் அவ்வளவு அதிகமில்லை.  பசித்தப்பின் கைசூப்பும் பழக்கம் உள்ள குழந்தை! குழந்தை பிறந்து பிறக்கிற எடையெட்டு பிறையோட பதினெட்டு வருஷமாகிரது. பதினெட்டு மாதமல்ல, பதினெட்டு வயது! ஒரு வருஷத்திற்குப் பணிரெண்டு மாதம்.  மலேசியாவில் அவர் இருக்கும்போது பிள்ளையை கவனிக்க வேண்டுமென்று அந்தப் பிழைப்பை விட்டுவிட்டு பிள்ளையைக் காப்பாற்ற ஊரிலேயே தங்கி பிள்ளையை நல்லாத்தான் வளர்த்தார். 

ஏர்வாடி பள்ளிவாசல் கேட்டிலேயே ஒரு ‘ட்டோல் கேட்!’. செருப்பையெல்லாம் கழட்டி அங்கே போட்டுவிட்டு டோக்கன் வாங்கிக் கொண்டு உள்ளே போக வேண்டும். பள்ளிவாசல் தூரம். ஒரே மணல், கால் வைக்க முடியவில்லை.  சூடு தாங்காத பாதம் ஓடு ஓடு என்றது. ஓடிப்போய் தர்ஹாவில் ஏறினோம். பலமுறை அந்த தர்ஹா போயிருக்கிறேன். இந்த முறை ஒரு புதிய் சிஸ்டம் அங்கே உண்டாக்கி இருந்தார்கள்.  ஒரு லபை முன் உட்கார்ந்து, 

“மவுலுது ஓதுங்கள்< என்றேன். பத்தியைக் கொளுத்தினார். ஒரு இளைஞர் வந்தார். 

“உங்களுக்கு ஏற்பட்ட தங்கடம், சீக்கு, பிணி, சூனியம் நீங்க இந்த ஃபார்மில் எல்லா விபரங்களையும் எழுதி ரூ101/- சேர்த்து உண்டியலில் போடுங்கள். உங்கள் பெயர், ஊர், வாப்பா பெயர், அட்ரஸ், டெலிபோன் நம்பர் எல்லாம் சரியாக எழுதி அந்த உண்டியலில் போடுங்கள்” என்றார்.

“இது என்ன புதிய சிஸ்டமாக இருக்கிறதே?” என்றேன்.

“உங்கள் மனுவை, வேண்டுதல் உள்ளவர்களின் மனுவை அவுலியாக்களே ஒவ்வொன்றாக பரிசீலித்து உங்கள் முசீபத்தை போக்குவார்கள்” என்றார்.

“எவ்வளவு நாளில் பதில் வரும்?” என்றேன்.

“உங்கள் கேஸினுடையத் தன்மையைப் பொருத்து பதில் வரும். சிக்கலான கேஸா இருந்தால் இரண்டு வருஷம்கூட ஆகும். நீங்கள் அடிக்கடி வந்து மீண்டும் ஒரு மனு (ரிமைண்டர்) போட வேண்டும்” என்றார்.

‘விஞ்ஞான முறையில் ஊழல்’ என்ற வார்த்தை தெரியும்.  இதுவும் ‘விஞ்ஞான முறையில் ஏமாற்றுதல்’ என்று புரிந்து கொண்டேன். ஒரு ஃபார்ம் வாங்கி அதில் என்னைப் பற்றிய தகவல், பெயரைத்தவிர எல்லாம் தவறாகக் கொடுத்தேன். ஊர் என்று எதையோ போட்டு ரூ 30/- கொடுத்தேன்.  

“என்ன முப்பது ரூபாய் கொடுக்கிறீர்கள்? ரூ 101/-“ என்றார். 

“திரும்பிப் போகவும் சாப்பிடவும் காசு இல்லை. வேண்டாமென்றால் திரும்பக் கொடுங்கள். யாராவது வந்தால் அவரிடம் கொடுத்து அனுப்புகிறேன்.” என்றேன்.

“சரி சரி” என்று அந்த ரூபாய் முப்பதையும் வாங்கிக்கொண்டார்..  ஃபார்மையும் முப்பது ரூபாயையும் கொண்டு சென்றவர், ஒரு தூணில் மறைந்துகொண்டு ரூ முப்பதை தன் பாக்கெட்டில் வைத்துவிட்டு அப்ளிகேஷன் ஃபார்மை மட்டும் உண்டியலில் போட்டார்.  இதை அறியாமல் என் கூட வந்த நண்பர்,

“எனக்கும் ஒரு ஃபார்ம் கொடுங்கள்” என்றார். கண்ஜாடை செய்து வேண்டாம் என்றேன். அது அவருக்குப் புரியவில்லை.  நாகூர் லபை சொல்லிய காணிக்கை என்ற சொல்லைக் கேட்டு மாட்டிக் கொண்ட புத்திசாலிதான் அந்த நண்பர். அவருடைய மனவியலை எந்த மனோதத்துவ நிபுனராலும் நிர்ணயிக்க முடியாது. குரங்குப்பிடி! குரங்கை பிடித்து அதை முதலை என்று தவறாகச் சொல்லிவிட்டாலும் மாற்றவே மாட்டார். முதலை முதலையே. தனக்கே எல்லாம் தெரியும் என்பார். மற்றவர்களை ஸீரோ என்பர். அந்த ஃபாரத்தில் அவருடைய உண்மை பெயர், அட்ரஸ், டெலிபோன் நம்பர் எல்லாம் சரியாக எழுதி ரூ 101/- கட்டினார்.  அந்த ரூ 101/- அந்த லபையின் பாக்கெட் உண்டியலில் சரணடைந்தது. ஃபார்ம் மட்டும் அவுலியாக்களின் உண்டியலில் போனது.  

ஒரு வருஷமானது. அவருக்குக் கடிதம் வந்தது.  உள்ளே சந்தனம், நார்சா வந்தது. அவுலியா, “ மீண்டும் அவனை என் தளத்திற்கு வரச்சொல், அவன் கேஸ் ரொம்ப சிக்கலானது. கவனித்துக் கொண்டிருக்கிறேன்” என்று லபையின் கனவில் அவுலியா வந்து சொன்னதாகவும் வியாழன் பிற்பகல் வந்து வெள்ளி இரவு என் தளத்தில் ‘தலைபோட்டு’ படுக்கச் சொன்னதாகவும் லபை கடிதம் எழுதி இருப்பதாக என்னிடம் சொன்னார். 

“உங்களுக்குக் கடிதம் வ்ந்ததா?” என்று கேட்டார்.  

“வரவில்லையே!” என்றேன். 

இப்படியெல்லாம் தொல்லைகள் தொடரும் என்று எனக்குத் தெரியும். அதனால் உண்மையான என் அட்ரஸை ஃபார்மில் எழுத வில்லை.  சமயங்களில் வலுத்த கை என்று தெரிந்தால் கலெக்ஷனுக்கு நேரிலேயே வந்து விடுவார்களாம்.

மலேசியாவிலிருந்து அஜ்மீர் சென்ற அரு நபரிடம் அங்குள்ள ஒரு லபை நன்றாக பைண்ட் செய்யப்பட்ட ஒரு பெரிய் லெட்ஜரை எடுத்து கொடுத்து உங்கள் காணிக்கையை எழுதுங்கள் என்றாராம். திறந்து பார்த்தால், பெரும் பெரும் பாம்பே புள்ளிகளின் பெயர்கள், அரசியல்வாதிகள், மந்திரிகள் என்று பெரும்புள்ளிகளின் பெயர்கள். ஒவ்வொருவரும் லட்சக்கணக்கான ரூபாய் காணிக்கை செலுத்தியதாய் இருக்க ஆக குறைந்த காணிக்கை அப்பவே 10 லட்சம்.  இது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நிலைமை.  உழல்கள் 98 லட்சம் கோடியை ரொம்ப சுலபமாகத் தாண்டும் இந்த காலகட்ட்த்தில் எவ்வளவு எழுதுவார்கள் என்று நமக்குத் தெரியாது..  98 ஆயிரம் லட்சம் கோடிக்கு எத்தனை சைபர் என்று  படித்தவர்களுக்கே இன்னும் தெரியாத இந்த கல கட்ட்த்தில் எவ்வளவு எழுதுவார்களோ?  அவுலியாக்கள்தான் அந்த ஹராமானப் பணத்தை ஒப்புக் கொள்வார்களா?

இவ்வளவு காணிக்கை நம்மால் முடியாது என்றதும் வேறு லெட்ஜர். இப்படி ஆளுக்கு ஏற்ற லெட்ஜர்.  ஒரு லெட்ஜரின் மொத்தத் தொகையையும் கூட்டினால் வரி போடாமல் அந்தத் தொகையைப் பயன்படுத்தி இந்தியாவின் பட்ஜெட்டை போட்டுவிடலாம்.  ஐந்து ஆண்டுகாலம் வரி இல்லாமல் இந்தியாவை ஓட்டலாம் என்றார்.   ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைய வைத்து சவாரி செய்யும் ஆசாமிகள் அவர்கள்  

ஒருநாள் ஒருவர் மலேசியாவில் என்னுடைய கடைக்கு வந்தார்.  முகத்தில் வறுமையின் கோடுகள் இல்லை. நல்ல உடை, தொப்பி, தோளில் வெண்ணிர ஹஜ் சால்வை சமூசா வடிவில் அல்லது பிரமிட் மாதிரி மடித்து முதுகிலிருந்து நெஞ்சு வரை போட்டிருந்தார். சால்வையில் ஓரங்களில் குஞ்சமும் நல்ல வேலைப்பாடும் கலைநயமும் கொண்டிருந்தது.  மற்றவர்களைப் போல் முகத்தில் ஏழ்மை தாண்டவமாடவில்லை.  கூடுதலான வருவாய் உள்ளவர் போல் தெரிந்த்து. அதனால அவரை யார் என்று என்னால் கணிக்க முடியவில்லை. மலேசியாவை சுற்றிப்பார்க்க வந்தவர் போலும் தெரிந்தது.  யாரோ எனக்கு தெரிந்தவர்கள் என் அட்ரசை கொடுத்து முக்கிய்மாகப் பார்க்க வேண்டிய இடங்களைச் சுற்றிக் காட்டச் சொல்லி இருக்கிறார்கள் போல் என்று நான் நினைத்தேன்.

“அஸ்ஸ்லாமு அலைக்கும், ஃபாரூக் ஹாஜியாரே” என்றார்.

“வ அலைக்குமுஸ்ஸலாம். நான் ஹாஜியார் அல்ல; நான் இன்னும் ஹஜ் செய்யவில்லை. ஆனால் நான் ஃபாரூக் தான்” என்றேன்.”. “நீங்கள் தேடி வந்த ஃபாரூக் ஹஜியார் இந்த வரிசையில் ஏழாவது கடை அவருடைய்து” என்றேன். நான் ஏதும் கிண்டலாகக் கதை சொல்லவில்லை. தவறான அட்ரசுக்கு வந்திருக்கலாம் என்றே இதைச் சொன்னேன். 

“நான் அங்கே போய் அவரைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். அவர்தான் உங்களின் இடத்தைச் சொல்லி உங்களின் பெயரையும் சொல்லி என்னை இங்கு அனுப்பினார்” என்றார்.

“அப்படியா?” டீ குடிக்கிறீர்களா? வந்த விஷயம் என்ன?” என்று கேட்டேன்.

“டீ இப்போதான் அங்கே குடித்தேன். “ என்றார். 

ஒரு கவரை எடுத்து என்னிடம் தந்தார். திறந்து பார்த்தேன். அதில் ஒரு கலர் ஃபோட்டோ இருந்தது. ஃபோட்டோ வேறு ஒன்றுமில்லை ஒரு கச்சிதமான் வீடு. வீடு மாடி வீடு. ஆனால் மாடி இல்லை. அதற்கான பில்லர்கள் எழுப்பப் பட்டிருந்தது. தள வீடு வெளிப்பூச்சு இல்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் முகத்தைப் பார்த்தேன். திருநெல்வேலிப் பகுதியில் ஒரு ஊரில் மதர்ஸாவில் ஓதிக் கொடுப்பதாகச் சொன்னார். இரண்டு குமர்களாம். ஆண் பிள்ளை இல்லையாம். கீழ் வீடு மூத்த பிள்ளைக்காம். மேல் வீடு இளைய பெண்ணுக்காம். இரண்டுக்கும் மாப்பிள்ளை பார்த்தாச்சு. விரைவில் கல்யாணம். மாப்பிள்ளை இருவரும் வேறு வேறு ஊர் மதறஸாக்களில் ஓதிக் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். குறைந்த சம்பளம்.” என்றார். ஊரில் உள்ளவர்கள் உதவியால் கீழ் வீட்டைக் கட்டி விட்டேன். தளம் போட்டாச்சு. மேல் வீடு எழுப்பனும், இன்னும் ஜன்னல்,கதவு, பூச்சு எல்லாமே பாக்கி இருக்கு. ரூ 7க்குமேல் (லட்சம்) எஸ்டிமேட் என்றார். 

“எனக்கு உங்களால் ஆனதைச் செய்யுங்கள்” என்றார்.

மறைவாகச் சென்று மலேசிய நாணயம் 50 டாலர் கரன்ஸியில் இரண்டை வைத்து ஆக வெள்ளி 100 கொண்ட என்வலோப்பை அவரிடம் கொடுத்தேன். மறைவாகச் சென்று பணத்தை என்வலோப்பில் வைப்பதை எட்டிப் பார்த்தார். என்வலோப்பை அவர் கையில் கொடுத்தேன்.  அதை வாங்கிய அவர் உடனே திறந்து பார்த்தார்.  அவர் முகம் மாறியது.

“என்ன இது? நூறு வெள்ளி வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கே நல்லா இருக்கிறதா? என்று கோபமும் அதட்டலுமாக்க் கேட்டார். அதட்டலைக் கேட்ட எனக்குக் கோபம் வந்தது. ஆனால், அடக்கிக் கொண்டேன்.

“நம்மால் முடிந்தது அதுதான். எடுத்துக் கொள்ளுங்கள்” என்று மென்மையாகச் சொன்னேன். 

“நான் இவ்வளவு சொல்லியும் நீங்கள் நூறு வெள்ளியைத் தருகிறீர்கள். இதை வைத்து ஒரு லோடு செங்கல் வாங்க முடியுமா?” என்று கேட்டவர், 

“இந்தா பாருங்கள். உங்கள் பேருடைய ஃபாரூக் ஆயிரம் வெள்ளி தந்திருக்கிறார்” என்று வசூல் நோட்டைக் காட்டினார். 

அங்கே பெரும்புள்ளிகள் பெயர்கள், பெரிய பெரிய நோட்டு. அவர்களோடு என்னால் போட்டி போட முடியாது. என் வியாபாரம் ஆரம்பித்தே இரண்டரை வருடங்கள்தான் ஆகிறது. உழைப்பையும் உதிரத்தையும் காலத்தையும் வேறு ஒருவருக்கு அற்பணித்து விட்டு உடுத்திய கைலியோடும் உலர்ந்த வயிற்றோடும் அல்லாஹ்வின் நம்பிக்கையோடும் வெளியேறியவன் நான். அந்த முயல்களோடு போட்டிப் போட்டு ஓட இந்த ஆமையால் முடியாது. கதையில்தான் ஆமை வெல்லும். நிஜ வாழ்வில் முடியாது. 

“என்னால் முடிந்தது இதுதான். செங்கல் விலையெல்லாம் எனக்குத் தெரியாது. இந்தியாவில் பால் விலை அரிசி விலையெல்லாம் எனக்குத் தெரியாது.” என்றேன்.

“இந்தாங்கள் இதை நீங்களே வைத்துக் கொண்டு நல்லா இருங்கள்” என்று என்வலோப்பை மேசைமேல் போட்டார். பிள்ளைகளுக்கு ஓதிக் கொடுக்கிறேன் என்று சொன்னார். இவர் ஓதிக்கொடுக்கும் லட்சணம் தெரிந்து விட்டது. கதவைத் திறந்து படார் என்று அடித்து விட்டுக் கடையை விட்டுக் கோபமாக வெளியேறினார்.  ஒரு மதர்சாவின் பிரின்சிபால் இப்படி நடந்தார். இயல்பில் சிறு விஷயத்திற்குக் கோபப்படும் எனக்கு பல ஆண்டுகள் ஒருவரிடம் பட்ட அடியால் என் மனது உணர்ச்சியை மறந்து மரத்துப்போய் விட்டது. இதுவே பத்து வருஷத்துக்கு முந்திய ஃபாரூக்கா நான் இருந்திருந்தால் நடப்பது வேறாக இருக்கும். காலம் எனக்கு பாடம் போதித்து மாங்காயாக இருந்த என்னை ஊறுகாயாகப் பாடம் பண்ணிவிட்டிருந்தது. அமைதியாக அந்த நூறு வெள்ளியைத் தனியே எடுத்து வைத்திருந்தேன். அதிலிருந்து பிறகு வந்தவர்களுக்கு 20-10-30தாகக் கொடுத்து எம்ப்டி என்வலோப்பை கிழித்துப் போட ஆறுமாதம் ஆனது.

ஏனோ எனக்குத் தெரியவில்லை. யார்யாருக்கு நல்லெண்ணத்துடன் உதவி செய்ய வேண்டுமென்று உதவி செய்தேனோ அவர்கள் எல்லாம் எனக்கு புரூட்டஸாக மாறி என் முதுகில் குத்தினார்கள்.  பலரால் பல் முறை குத்தப்பட்டுச் செத்தவன் நான்.  புரூட்டஸ் ஒரு தடவை குத்தினான். ஜூலியஸ் சீஸர் ஒரு தடவை செத்தான். நானோ பல தடவை பலரால் குத்தப்பட்டு பல தடவை செத்தேன்.  மறக்க முடியாத இரண்டு நெருங்கிய நண்பர்கள் குத்திய கடைசி குத்துகள் என் கண்ணிரெண்டைத் திறந்து வாழ்க்கையில் ஒளி பிறந்தது.  இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் இரண்டு நண்பர்களின் பெயரும் என் பெயரும் ஒன்றே.  கடைசி இரு நண்பர்களின் குத்துகள் என் வாழ்வின் உதய சூரியன். எனக்கு விடிந்தது.  மறக்கவே முடியாத ‘மா பெரும் நண்பர்கள்” அவர்கள்.  ஒருவர் போய் விட்டார். ஒருவர் பள்ளியில் பயான் செய்கிறார். ஷெய்த்தான் வேதம் ஓதுகிறது.

இறுதியாக, “இலவசம் விலையானது” என்ற இந்தக் கட்டுரையில் தலைப்பை பிரதிபலிக்கப்போவது இனி வரும் நிகழ்வுகளேயாகும்.  முன் சொன்னதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடும் இனி சொல்ல இருப்பவை.

take break ! :)

ஒரு நாள் காலை 10:30 மனி அளவுக்கு ஒருவர் என் கடைக்குள் நுழைந்தார். நுழைந்தவர் 

“அஸ்ஸலாமு அலைக்கும்” என்றார். 

“அலைக்கு முஸ்ஸலாம்” என்று அவரை நோட்டமிட்டேன். இதுவரை நான் அவரைப் பார்த்ததில்லை.  நல்ல நீட்டான உடை, கவர்ச்சியான நல்ல அகன்ற கருத்த முகம். முகத்துக்குத் தாடையில் கொஞ்சம்போல் தாடி.  நம் ஊர் ஜாடை. ஆனால், அவரை நம் ஊரில் பார்த்ததில்லை. 

“நீங்கள்தானே ஃபாரூக்?” என்றார். 

“ஆமாம்” என்றேன். 

“இந்த வரிசையில் இன்னொரு ஃபாரூக் இருக்கிறார். அவரை ‘கீலா கீலா’ என்பார்கள்.” என்றேன். 

பெரும்பாலும் என்னைத் தேடி ஊரிலிருந்து யாரும் வர மாட்டார்கள். காரணம் பசை இல்லை. ஊரில் மண்டபம், வணிக வளாகங்கள், தோப்பு, வயல்கள்,  வாடகை வீடுகள் என்று விளம்பர அய்ட்டங்கள் ஏதும் எனக்கு இல்லை. நான் ஆமைபோல் அமைதியாக வந்து விட்டு அமைதியாக போகிற ஆள்.  எனக்கு இங்கே விளம்பரம் இல்லை. நான் ஊர் வந்திருக்கும்போதுகூட என்னை பார்ப்பவரகளில் பெரும்பாலோர் என் பள்ளித் தோழர்கள் “ எப்போ வந்தா” என்று கேட்பதில்லை. புகழ்பெற்ற பார்ட்டி பேரைச் சொல்லி அவன் சுகமாக இருக்கிறானா? என்று மிகுந்த ஆதங்கத்தோடும் அக்கரையோடும் கேட்பார்கள். “ நீ சுகமாய் இருக்கிறாயா?” என்று கேட்பதில்லை. 

என் மூடு நல்லா இருந்தால், “ நல்லா இருக்கிறான்!” என்பேன். அதோடு விடுவதில்லை.
.  
“எப்போ ஊருக்கு வருரான்?’ என்பார்கள்.  

“நான் ஜோசியன் அல்ல! அது எனக்குத் தெரியாது. யாராவது குடுகுடுப்பைக் காரனிடம் போய் கேள்” என்பேன். 

“என்னப்பா இப்படி பதில் சொல்றா? அவனே உன்னைப்ப்த்தி இப்படித்தான் சொன்னான். ‘சிடுசிடு’ என்று பேசிவிடுவாயாம்.” என்பார்கள்.

“நான் சொலவதைக் கேள். நானும் நீயும் பள்ளிக்காலம் தொட்டு நண்பர்கள். என்னைப் பார்த்து நீ, ‘ நீ சுகமாக இருக்கிராயா?’ என்று கேட்கவில்லை. முதலில் மனித உறவுகளையும் நட்புகளையும் எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உளவியலை நன்கு தெரிந்துந்துகொள்” என்பேன்.

ஒருமுறை நான் KLல் என் பெயருடைய நண்பர் கடையில் பங்காளியாக இருக்கும்போடு இரவு 7:30 மணிக்கு டெலிபோன் மணி அடித்த்து.  7:30 க்கு பிசினஸ் சம்பந்தமான டெலிபோன் வருவது அரிது.  எல்லாம் வெட்டிப்பேச்சு ஊர் வமு போந்தான் வரும்.  டெலிபோனை எடுத்து,

“ஹலோ” என்றேன். 

“யார் பேசுறது?” எதிர்முனைக் குரல். இந்தக் குரலுக்குரியவர் ‘எல்லாமே தனக்குத்தான் தெரியும் மற்றவர் யாருக்கும் ஏதும் தெரியாது,. தன் சட்டைத்தான் விலை உயர்ந்த சட்டை, தன் கடிகாரம்தான் விலை உயர்ந்த கடிகாரம், மற்றவரக்ளுடைய எல்லாமே மட்டம் என்று தம்பட்டம் அடிக்கும் பேர்வழி! இவருக்கு ஒரு நாளைக்கு சரியா கொடுக்கனும் என்று ரொம்ப நாள் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன்.  என் மாமா, அதிரை நிருபரின் இபுறாகீம் அன்சாரியுடைய வாப்பாவுக்கு நெருங்கிய நண்பரும்கூட.

“நான் சுருட்டு ஃபாரூக் பேசுறேன்” என்று அடக்க ஒடுக்கமாய்ச் சொன்னேன்.

“ஏன்…….அவர் இல்லையா?” என்று ரொம்ப அதட்டலான குரலில் கேட்டார்.

“நீங்கள் யார்?” என்றேன் மிகப் பணிவுடன்.

“ஏன் என்னைத் தெரியலையா? நான் தான் …… பேசுறேன்” என்றார். இதுவும் அதட்டலே.

“எங்கள் டெலிபோனில் எதிர்முனையில் பேசுபவரின் முகம் தெரியாது. அதனால் கேட்டேன்.” என்றேன். கிண்டல்தான்.” இப்போ நீங்கள் ….நபருடன் பேச வேண்டும். உங்கள் காலை அவர்தான் அட்டெண்ட் செய்ய வேண்டும் என்பது உங்கள் விருப்பம். நான் போனைக் கட் செய்கிறேன். இன்னொரு கால் போடுங்கள் அவர் எடுப்பார்” என்று டெலிபோனைக் கட் செய்தேன்.

மறு கால் வந்த்து.  அவர் எடுத்தார். நான் வெளியே போய் விட்டேன். ஒவ்வொன்றும் ஒரு விதம். எல்லாவற்றிற்கும் அடீப்ப்படை காரணம் பணம். மனிதாபிமானம் பணத்திற்கு பலியாகிக் கொண்டே இருக்கிறது.  இப்போழுது நாம் முன்பு விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்.

“நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்” என்றார்.

“உட்காருங்கள்” என்று நாற்காலியைக் காட்டினேன். எதற்காக அவர் என்னைப் பார்க்க் வந்தார் என்று தெரியாமல் அவரையே பார்த்தேன்.

“நானும் அதிராம்பட்டிணம்தான். நாங்கள் முன்பு கடல்கரைத் தெருவில்தான் இருந்தோம் எங்கள் குடும்ப்ப் பட்டப்பேர் இத்” என்று ஒரு பட்டப்ப்யெரைச் சொன்னார். எனக்குப் புரிந்த்து.  நான் சிறு பிள்ளையா இருந்தபோது என் தாயார் அவர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். அந்த வீட்டு திறந்த வெளி வேலியடைத்த முற்றத்தில் நான் பலமுறை விளையாடி இருக்கிறேன்.  அந்த வீட்டுப் பெண்கள் என் மீது பிரியமாக இருப்பார்கள்  அவர்கள் போன பின் அத இடம் காலியாக இருந்த்து.   இப்போது எப்படி இருக்கிரதுஎன்று தெரியவில்லை. கை மாறி கல்வீடாக மாற் இருக்கலாம்.  தனக்கு நம்ம ஊர் ஆள் என் இட்த்தை அடையாளம் சொல்லி அனுப்பியதாகச் சொன்னார்.

“இரண்டு டீ வரவழைத்துக் குடித்தோம்.

“என்ன விஷயம்?” என்றேன்.

“குர்ஆன் 300 பிரதிகள் தர்ஜமா கொண்டு வந்தேன். உங்களுக்குத் தெரிந்த பெரிய புத்தக வியாபாரி இருப்பதாகவும் நீங்கள் சொன்னால் எல்லாவற்றையும் அவரிடமே கொடுத்த் விடலாம் என்று கேள்விப்பட்டேன். அதனால் உங்களைத்தேடி வந்தேன்:” என்று சொன்னார்.

“குர் ஆன் எங்கே இருக்கிறது?” என்று கேட்டேன்.

“எல்லாமே கப்பலில் வந்து பினாங்கில் இருக்கிரது. மாதிரிக்கு மூனு கொண்டு வந்தேன்” என்று கையில் கொண்டுவந்திருந்த ஒரு பிரதியைக் காட்டினார். ஏற்கனவே வந்த்துதான். வெளியாகி ஐந்து ஆண்டுகளுக்குமேல் இருக்கும். பலமுறை reprint  செய்யப்பட்ட்து.

“இப்போது காலை நேரம். அவர் பிசியாக இருப்பார்கள். குர் ஆன் மாதிரியோடு மாலை 41/2 அல்லது 5 மணிக்கு வாருங்கள் போகலாம்” என்று சொல்லி அனுப்பினேன். 

சொன்னதுபோல் 4 1/2 மணிக்கு வந்தார்..  டீ குடித்துவிட்டு வேனில் அங்கே 5 மணிக்குப் போய்ச் சேர்ந்தோம்.  அந்த இடம் எந்த நேரமும் ட்ராஃபிக் நெருக்கடி மிகுந்த இடம்.  பார்க்கிங் கிடைப்பது அரிது. “லிட்டில் இந்தியா” என்று சொல்லப்படும் தமிழ் முஸ்லீம்களின் தேன்கூடு! மொச்சுமொச்சு என்று தஞ்சை மற்றும் ராம்நாடு முச்லீம்கள் நிறைந்த பகுதி. தமிழ் முச்லீம்கள் பள்ளியும் உண்டு.  ஜாலன் மஸ்ஜித் இந்தியா – இந்திய பள்ளிவசல் வீதி – அல்லது தெரு என்பதே இதன் பொருள்.  “பத்து ரோடு (கல் சாலை) கோலாலம்பூரின் (அண்ணாசாலைக்கு சம்ம்) முக்கிய வீதி.  

அருகில் பார்க்கிங் கிடைக்கவில்லை.  சற்று தூரமுள்ள ஐந்து மாடிக்கட்டிடத்தில் மேலே நாலாவது மாடிக்குப் போய் பார்க்கிங் செய்து விட்டு நாங்கள் போக வேண்டிய புத்தகக் கடைக்கு முதல் மாடிக்கு இருவரும் போனோம். 
தொடரும்..
S.முஹம்மது ஃபாருக்

அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் - புத்தகம் ஒரு பார்வை ! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | June 17, 2014 | , , , ,

இணையம் கொடுக்கும் சுகம் இன்றைய இளைய தலைமுறைய மட்டுமல்ல ஏனையோரையும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்திலிருந்து பின்னுக்கு இழுத்து விட்டது என்று ஒருசாரார் சாடினாலும். இன்னும் புத்தகப் பிரியர்களும் அதன் பலன்களை உணர்ந்தவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டுதான் செல்கிறது என்பதை கடந்த சென்னை புத்தக காட்சியில் நிருபிக்கப்பட்டிருக்கிறது.

வாசிக்கும் பழக்கம் இயல்பிலே வளர்த்து கொண்டவர்கள் புத்தகங்களை தேடிச் செல்வார்கள். கடந்த மே மாதம் ஊரில் இருக்கும்போது அறிஞர் அதிரை அஹ்மது அவர்கள் எனக்கு இரண்டு புத்தம் புதிய புத்தகங்களை தந்தார்கள். அந்த இரண்டு புத்தகங்களில் ஒன்றை கையில் வைத்திருக்கும்போதே கம்பிரமாக இருப்பது போன்ற புத்துணர்வு கொடுத்தது, உடணடியாக வாசிக்க வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது. மற்றொரு புத்தகம் நம் குழந்தைகளோடு உறவாடும் உணர்வு தந்தது.

அவ்வாறான உணர்வுகளை தூண்டிய புத்தகங்களில் ஒன்று "அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம்" மற்றொன்று "நபி(ஸல்) வரலாறு நம் குழந்தைகளுக்கு".

அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் - இது ஒரு பாடப் புத்தகமென்றே சொல்லலாம், இதன் ஆசிரியர் 'மிர்ஸா யாவர் பெய்க்'.

(தமிழாக்க பதிப்பில் 256 பக்கங்கள் கொண்ட பாடத்தில்) ஒவ்வொரு அத்தியாயமும் ரத்திணச் சுருக்கமாக தலைப்பின் கருவை சுமந்து செல்கிறது.

அடையாளம் தெரியாமலும் பலஹீனமாகவும் ஒடுக்கப்பட்டும் இருந்த மக்களை உலகம் வியக்கக் கூடியவர்களாகவும், பலமானவர்களாகவும் நபி(ஸல்) அவர்கள் ஒரே தலைமுறையில் மாற்றிக் காட்டினார்கள். இதனை எவ்வாறு சாதித்தார்கள் என்பதை தெரிந்து கொண்டால் இவ்வுலகில் சாதிக்கலாம்.

அறிஞர் அதிரை அஹ்மது அவர்கள் ஆங்கில மூலத்திலிருந்து அழகிய தமிழ் நடையில் மொழியாக்கம் செய்து தந்துள்ளார்கள்.  தனது அறிமுகவுரையில் "வாசகர்களின் புரிதலையும் தேவையையும் கருத்துள் கொண்டு, வழக்கமான மொழி நடையைச் சற்றே தளர்த்தி இந்த நூலை மொழியாக்கம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள், மேலும் இந்நூலின் பேசுபொருளின் மீது ஆழ்ந்த கவனம் செலுத்தி, இதனை ஒரு பாடநூலாக கருதி படிக்கத் தொடங்குவோர், எதிர்காலத்தில் தம்மைத் தலைமைத்துவத்திற்கு ஆயத்தம் செய்வர்" என்ற நம்பிக்கையையும் பதிந்துள்ளார்கள்.

இந்நூலில்...
  • தலைவரின் தகுதிகள்
  • தலைமைத்துவத்தை நோக்கி
  • 'தவ்பா' மனம் வருந்திப் பிரார்த்தித்தல்
  • பொறுமையும் நன்றியுடைமையும்
  • அல்லாஹ்வின் மீது அன்பு
  • அசாதாரண குறிகோள்
  • தன்னிகரற்ற தற்பொறுப்பு
  • தலைசிறந்த சமுதாயம்
  • தலைமை உருவாக்கம்
  • 'இறுதியில் வெற்றி'யில் இணைந்திருப்பது
  • தனித் தன்மை
  • தூதுச் செய்தியின் மீது உறுதியான நம்பிக்கை
  • நபிமார்களின் அழைப்பு பணி
  • முன்னணி தலைவர்
  • விட்டுக் கொடுக்க வேண்டுமா ?
  • 'ஹிஜ்ரா'வின்போது தலைமைத்துவப் பண்புகள்
  • 'ஹிஜாஸ்' பகுதியும் அதன் மக்களும்
  • குறிக்கோளுக்கு முதலிடம்
  • மக்கா வெற்றி
  • சொன்னதைச் செயலில் காட்டுதல்
  • 'பத்ரு'க் களத்தில் படிப்பினைகள்
  • 'ஹுதைபிய்யா' உடன்படிக்கை
  • பெருந்தன்மையும் மன்னிப்பும்
  • மாற்றமும் ஏற்றமும்
  • சகோதரத்துவப் புத்தமைப்பு
  • தலைமைக்கு முன்னுரிமை
  • அனைவருக்கும் பொதுவான அதிகாரம்
  • மதீன ஒப்பந்தம்
  • ஆவணத்தின் அடிப்படையில்
  • தோல்வியின் காரணமென்ன
  • தலைமைத் தேர்வு
  • தலைவர் எதிர்கொள்ளும் சவால்கள்

என்ற தலைப்புகளில் அருமையான எழுத்து நடையில் நம்மை அழைத்துச் செல்கிறது இந்த பயனுள்ள நூல் !

மேலான்மைத் துறையில் இருக்கும், மேலும் சாதிக்கத் துடிக்கும் சகோதரர்களுக்கு இதில் படிப்பினைகளும் ஆலோசனைகள் நிரம்பி இருக்கிறது.

விலை : ரூ 130/-

இலக்கியச் சோலை - பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள்.

அபூஇப்ராஹீம்

சென்னை புத்தக கண்காட்சியில் "மனம் மகிழுங்கள்" 1

அதிரைநிருபர் பதிப்பகம் | January 15, 2014 | , , , ,

"ஆசையே எல்லா துன்பங்களுக்கும் காரணம்" என்றார் புத்தர். துன்பங்கள் மட்டடுமின்றி இன்பங்களுக்கும் காரணம் "மனமே" என்கிறார் எழுத்தாளர் நூருத்தீன்!

பிரபல தமிழ் இணைய தளம் www.inneram.com இல் 46 வாரங்கள் தொடராக வந்த "மனம் மகிழுங்கள்" தற்போது நூல் வடிவில் சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் 'பழனியப்பா பிரதர்ஸ், ஸ்டால் எண்கள் 418, 419 இல் கிடைக்கிறது.

இதுமட்டுமின்றி NEWSHUNT செல்பேசி தளத்தில் மின்நூலாகவும் தரவிறக்கம் செய்து ஆன்ராய்ட் மொபைல்/டேப்லெட்  சாதனங்களிலும் வாசிக்கலாம்.

பரபரப்பான் இயந்திர வாழ்க்கையில் இழந்துவிட்ட மகிழ்ச்சியைத் தேடிக்கொண்டு இருப்பவர்கள் மட்டுமின்றி, நண்பர்களுக்கும், திருமணம், புதுவீடு குடிபுகழ் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளின்போது பரிசளிக்க உகந்த நூல் என்று உறுதியாகச் சொல்லலாம்.

சென்னை புத்தக கண்காட்சியில் அவசியம் வாங்க வேண்டிய நூல்கள் பட்டியலில் மறக்காமல் இதையும் குறித்துக் கொள்ளுங்கள். மனம் மகிழுங்கள்.

பரிந்துரை : அதிரைக்காரன்

நபிமணியும் நகைச்சுவையும் - முக்கிய அறிவிப்பு ! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | March 25, 2013 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அளவிலா அருளும் நிகரிலா அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் இறுதித் தூதர் ஈருலக வெற்றிக்கு இனிப்பான மார்க்கம் காட்டிய நம் உரியிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த, நெகிழ்ந்த, மகிழ்ந்த, உணர்த்திய அற்புதமான நிகழ்வுகளை இலகு தமிழில் இறையச்சம் நிரம்பிய சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அவர்களால் எழுதப்படும் தொடர் பற்றிய ஒரு முக்கிய அறிவிப்பு !

சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அர்களின் வழக்கமான தொடர் பயணத்தினூடே ஒரு முறை துபாய் வழிச் செல்லுகையில் நட்புகளை சந்திக்க வாய்த்தது. 

அவ்வாறான சந்தர்ப்பத்தில் கண்மணி நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையை அமெரிக்க மூடன் ஒருவனால் திரைப்படமாக எடுத்து வெளியாகி உலகமே கொந்தளித்துக் கொண்டிருந்த தருணத்தில் அதற்கான எதிர்ப்பலைகளை எவ்வாறு நம்மக்கள் காட்டிவருகிறார்கள், ரஸுல் (ஸல்) அவர்களின் நற்பண்புகளோடு அவர்களின் நகச்சுவையுணர்வை (sense of humor) தனியாக யாரும் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை அதைப் பற்றி ஏன் யாரும் எழுத மாட்டேன் என்கிறார்கள் என்று சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அவர்கள் கேட்டதுதான் தாமதம். அதனை நீங்களே ஏன் செய்யக் கூடாது என்று அவர்களின் பால்யகால நண்பரான அதிரைநிருபரின் ஆஸ்தான கவிஞர் சகோதரர் சபீர் அஹ்மத் அபூஷாரூக் அவர்கள் கேட்க அவர்களோடு அந்த சந்திப்பில் உடனிருந்த அதிரைநிருபரின் நெறியாளர் சகோதரர் அபூஇப்ராஹீம் அவர்களும் அதனையே வழிமொழிய, அங்கே ஆரம்பித்தது அழகு தமிழில் அற்புதங்கள் நிறைந்த அல்லாஹ்வின் தூதர் அவர்களின் நகைச்சுவையுணர்வு தொடருக்கான ஆரம்பம்.

அதனைத் தொடர்ந்து மூன்று வாரங்கள் மின்னஞ்சல் கலந்துரையாடலுக்குப் பின்னர் 2012 செப்டம்பர் மாதம் 13ம் தேதி முதல் அத்தியாயம் தழிழால் தரம் உயர்த்தி தரணியிலிருக்கும் தமிழ்கூறும் மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் அதிரைநிருபரில் வெளியானது. அதுதான் "யா அத்தஹாக்!(சிரிப்பழகரே!)" http://adirainirubar.blogspot.ae/2012/09/blog-post_13.html என்ற முதல் பதிவு !

மாஷா அல்லாஹ் ! பால் பேதமின்றி அனைத்து தரப்பு மக்களின் மனதை கொள்ளை கொண்ட எளிய தமிழ் நடையில் எட்டுதிசைக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது. சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அவர்களின் தமிழ் மொழியாடல் மிகச்சிறப்பாக இருக்க அவர்கள் எடுத்துக் கொண்ட கருவின் கருணை அவர்களை மிகச் சிறந்த இலக்கியத் தரம் வாய்ந்த எழுத்தாளராக அடையாளம் காட்ட வைத்திருக்கிறது இந்த தொடர் அல்ஹம்துலில்லாஹ் !

கடந்த வியாழன் வெளியான தொடரின் முதல் பத்தியே பறைசாற்றும் ! நேர்வழி பெற்ற மக்களின் மார்க்கம் நீதியுடன் ஆட்சி செய்யும் என்பதை.

துவக்கம் என்று எதுவானாலும் அதற்கு நிறைவு என்று இருக்கத்தான் செய்யும் அதுதான் மரபு, அவ்வகையில் இந்த தொடருக்கும் நிறைவு ஒன்று இருக்கிறது. அடுத்த பதிவுடன் நிறைவுக்கு வருகிறது இன்ஷா அல்லாஹ் !

அதிரையைச் சார்ந்த சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக மிளிரும் சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அவர்கள் தொடர்ந்து மற்றுமொரு தலைப்பின் கீழ் அதிரைநிருபரில் அடுத்த பதிவுக்கு தயாராகுவார்கள் இன்ஷா அல்லாஹ்!

மக்கள் மனதை வெற்றி கண்ட இந்த தொடரின் நிறைவுக்கு பின்னர் விரைவில் புத்தகமாக வெளிவரும் இன்ஷா அல்லாஹ் !

ஏற்கனவே அதிரைநிருபர் பதிப்பகம் வெளியிட்ட முதல் நூல் என்ற பெருமையை சகோதரர் இபுராஹீம் அன்சாரி அவர்களால் எழுதிய "மனுநீதி மனிதகுலத்துக்கு நீதியா?" என்ற வெற்றித் தொடர் பெற்றிருக்கிறது (சுட்டியை தட்டிப் பார்க்க : இங்கே தட்டவும்). நூல் வெறிகரமாக கடந்த டிசம்பர் 9ம் தேதி 2012 அன்று வெளியிட்டு விற்பனையில் இருக்கிறது.

அதிரைநிருபரில் வெற்றிகரமாக வெளிவந்து வாசகர்களின் பேராதரவைப் பெற்ற தொடர்களான...

சகோதரர் அதிரை அஹமது அவர்கள் எழுதிய- "கவிதை ஓர் இஸ்லாமியப் பாரவை"

சகோதரர் S.அலாவுதீன் அவர்கள் எழுதிய - "கடன் வாங்கலாம் வாங்க"

சகோதரர் ஜாஹிர் ஹுசைன் அவர்கள் எழுதிய - "படிக்கட்டுகள்"

வெற்றிகரமாக நிறைவுக்கு வர இருக்கும் சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் எழுதிய "நபிமணியும் நகைச்சுவையும்"

விரைவில் புத்தக வடிவம் பெற இருக்கிறது இன்ஷா அல்லாஹ்...

இன்னும் சொல்லத்தான் விருப்பம் இருந்தாலும் அடுத்தடுத்த புதுமையான மாற்றங்களால் இன்னும் உங்கள் மனதை வெல்வோம் என்று மட்டும் சொல்வோம் இப்போதைக்கு !

அதிரைநிருபர் பதிப்பகம்