Showing posts with label அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். Show all posts
Showing posts with label அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். Show all posts

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் நிறைவுகிறது ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | July 03, 2013 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

கடந்த பதிவில் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கர்(ரலி), உமர்(ரலி) ஃபாத்திமா(ரலி) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) போன்ற சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களின் பிரிவை எண்ணி அழுத சம்பவங்களையும் பார்த்தோம் படிப்பினைகளை அறிந்து கொண்டோம்.

இதுவரை நாம் வாசித்த பதிவுகளின் சாரம்.

திருக்குர் ஆன் 17:107, 108, 109 வசனங்களில் அல்லாஹ் கூறியது அல்லாஹ்வின் வேதம் ஓதப்பட்டால் இறை விசுவாசிகள், உடனே சூஜூதில் விழுந்து அழுது அல்லாஹ்வைப் புகழ்வார்கள். http://adirainirubar.blogspot.com/2013/04/blog-post_4.html

சூரத்துன்னிஸாவின் 41வது வசனத்தை இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் ஓதியவுடன் நபி(ஸல்) அவர்கள் தன் சமுதாயத்திற்காக நாளை மறுமையில் தம்மை சாட்சியாக நிறுத்தி அல்லாஹ் அழைப்பான் என்று எண்ணி அழுதுள்ளார்கள்.

“உள்ளத்தில் உள்ளதை வெளிபடுத்தினாலும் மறைத்தாலும் அல்லாஹ் அதனை விசாரிப்பான் என்ற திருக்குர்ஆன் 2:228 வது வசனம் இறங்கியவுடன் இப்னு உமர் (ரலி) அவர்கள் அழுதுள்ளாகள். http://adirainirubar.blogspot.com/2013/04/2.html

வஹி நின்று விட்டதே என்று எண்ணி அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு தாய் உம்மு அய்மன்(ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள்.

அல்லாஹ் இஸ்லாத்தை பரிபூரணமாக்கிவிட்டான் என்ற திருக்குர்ஆன் வசனம் 5:3 அருளப்பெற்றவுடன் இனி வஹி வருவது நின்றுவிடுமே என்று அமீருள் முஃமினீன் உமர்(ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள். http://adirainirubar.blogspot.com/2013/04/3_18.html

தன்னை வளர்த்து ஆளாக்கிய தன்னுடைய பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் கலிமா சொல்லாமல் மரணிக்க போகிறாரே என்று அண்ணல் நபி(ஸல்) அழுதுள்ளார்கள்.

தன்னுடைய தந்தை இஸ்லாத்தில் இணைவதை காட்டிலும் நபி(ஸல்) அவர்களுடைய பெரிய தந்தை இஸ்லாத்தில் இணைவதையே விரும்புகிறேன் என்று சொல்லி அண்ணல் நபி(ஸல்) அவர்களின் ஆருயிர் தோழர் அபூபக்கர்(ரலி) அழுதுள்ளார்கள். http://adirainirubar.blogspot.com/2013/04/4.html

வல் முர்ஸலாத்தி என்ற அத்தியாத்தை தன் மகன் ஓதும் போது ஓதுவதை நிறுத்து மகனே, இது தான் நபி(ஸல்) அவர்கள் கடைசியாக ஓதிய அத்தியாயம் என்று உம்முல் பழ்லு(ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள்.

லம் யகுனில்லதீன என்ற திருக்குர்ஆனின் 98வது அத்தியாத்தை அல்லாஹ் தன்னுடைய பெயரைச் சொல்லி ஓதச்சொன்னான் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னவுடன் உபை இப்னு கஃப் (ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள்.

திருக்குர்ஆன் வசனம் ஓதினால் என்னுடைய தந்தை அழுது விடுவார்கள் யா ரசூலுல்லாஹ் என்று தன் தந்தையின் ஈமானின் உறுதியை நபி(ஸல்) அவர்களிடம் முஃமீன்களின் அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் சொன்னார்கள். http://adirainirubar.blogspot.com/2013/05/5.html

தன்னுடைய மகன் இபுராஹீம்(ரலி) அவர்களும், தன்னுடைய ஒரு மகள் ஒருவரின் குழந்தை ஒன்று இறந்த போதும், மன கஷ்டங்கள் ஏற்படும்போதும் நபி(ஸல்) அவர்கள் அழுதுள்ளார்கள்.

ஸஃத் (ரலி) அவர்கள் நோயிற்று வேதனையில் இருந்தபோது தனக்கு பிடித்தமான அந்த தோழரைப் பார்த்து நபி(ஸல்) அவர்கள் அழுதுள்ளார்கள்.

இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஒப்பாரி வைத்து அழுபவர்களை உமர்(ரலி) அவர்கள் கம்பினால் அடிப்பார்கள். http://adirainirubar.blogspot.com/2013/05/6.html

நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னோடு பால்குடித்த பால்குடி சகோதரியை சந்தித்த சந்தோசத்தில் நன்றி மறவாத கருணையில் சிகரம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அழுதுள்ளார்கள்.

இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்திற்காக, தன்னுடைய அனைத்து செல்வ செழிப்பையும் இழந்த முஸ்ஹப் இப்னு உமைர் (ரலி) அவர்களின் ஏழ்மை நிலையைப் பார்த்து அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அழுதுள்ளார்கள்.

அதே முஸ்ஹப்(ரலி) அவர்கள் உஹதுப்போரில் ஷஹீதான பிறகு நபி(ஸல்) தன் தோழர்களிடம் முஸ்ஹப்(ரலி) அவர்களின் தியாகத்தைச் சொல்லிக்காட்டி அழுதுள்ளார்கள். http://adirainirubar.blogspot.com/2013/05/7.html

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் உணவின்றி பசியோடு வயிற்றில் தன்னுடைய வாழ்வை கழித்தார்கள். இதனைக் கண்ட அனஸ்(ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள். பின்னர் தன்னுடைய தாயின் மூலம் நபி(ஸல்) அவர்களுக்கும் பிற சஹாபாக்களுக்கும் உணவளித்தார்கள்.

தானும், தன் குடும்பமும், தன் தோழர்களும் பசியோடு இருந்த அந்த சந்தர்பத்தில் அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்கள் வீட்டில் விருந்து உணவருந்திவிட்டு, சாபிட்ட அந்த உணவுக்காக நாளை அல்லாஹ்விடம் இதற்கும் பதில் சொல்லியாக வேண்டும் என்று தக்வாவுடையவர்களின் தலைவர் நபி(ஸல்) அவர்கள் அழுதுள்ளார்கள். http://adirainirubar.blogspot.com/2013/05/8.html

“யா அல்லாஹ் நீ வேதனை செய்தால் அவர்கள் உன் அடிமைகள், நீ மன்னித்தால் நீ மிகப்பெரும் கிருபையாளன்” 5:118 என்ற திருக்குர்ஆன் வசனத்தை சூஜூதில் இருந்து ஓதிக்கொண்டே நாளை மறுமையில் என்னுடைய சமுதாயத்திற்கு என்ன நிலை என்பதை நிலை என்பதை எண்ணி நபி(ஸல்) அழுதுள்ளார்கள்.

பத்ரு போர்களத்தில் அல்லாஹ்வின் கையேந்தி இந்த போரில் நாங்கள் தோற்றால் உன்னை வணங்க இந்த பூமியில் ஆளில்லாமல் போய்விடுமே” என்று அல்லாஹ்விடம் துஆ செய்தவர்களாக நபி(ஸல்) அவர்கள் அழுதுள்ளார்கள். http://adirainirubar.blogspot.com/2013/05/9.html

தன் உயிர் போனாலும் பரவாயில்லை நபி(ஸல்) அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது என்று சுராக்கா துரத்தி வரும்போது அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் தான் “அல்லாஹ்விடம் உள்ளதை தேர்ந்தெடுத்து விட்டேன்” என்று சொன்னவுடன், தன்னுடையை தாய் தந்தை அனைத்து செல்வத்தையும் தந்துவிடுகிறேன், எங்களை விட்டும் பிரிந்து விடாதீர்கள் யா ரசூல்லுல்லாஹ் என்று சொல்லி தான் வயதில் மூத்தவராக இருந்தாலும் நபி(ஸல்) அவர்கள் மேல் வைத்திருந்த பாசத்தால் அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள். http://adirainirubar.blogspot.com/2013/06/10.html

யமன் நாட்டிற்கு மார்க்க பிரச்சாரம் செய்ய தன்னை வழியனுப்ப வந்த நபி(ஸல்) அவர்கள். நீங்கள் திரும்பி மதீனா வரும் போது நான் இருக்க மாட்டேன் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னவுடன் தேம்பி தேம்பி முஆத் பின் ஜபல்(ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள்.

தம்மோடு வாழ்ந்துவரும் நபி(ஸல்) அவர்களோடு சொற்கத்தில் இருக்க வேண்டுமே என்று எண்ணி ஷஃபான் (ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள். திருக்குர்ஆன் வசனம் 4:69 நபி(ஸல்) அவர்களுக்கு இறங்கிய பிறகே ஷஃபான் ஆறுதல் அடைந்தார். http://adirainirubar.blogspot.com/2013/06/11.html

நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த நெகிழ்வூட்டும் சம்பவங்கள், நமக்கு கண்ணீர் வரவழைத்தது.

நபி(ஸல்) அவர்கள் தன்னிடம் பழி தீர்க்க சொன்ன போது, ஒரு சஹாபி “ நான் பழிதீர்க்க வேண்டும்” என்று சொல்லி நபி(ஸல்) அவர்கள் மேனியை முத்தமிட்டு அழுத கண்கலங்கும் சம்பவம்.

தன் தந்தையின் மரண வேதனையைப் பார்த்து தாங்க முடியாமல் சொர்க்கத்து பெண்களின் தலைவி என்று நபி(ஸல்) அவர்கள் நன்மாராயம் கூறப்பட்ட அவர்களின் பாசம் நிறைந்த அருமை மகளார் ஃபாத்திமா(ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள். http://adirainirubar.blogspot.com/2013/06/12.html

தன்னுடைய உற்ற தோழர், உடன் பிறவா சகோதரர், மருமகன் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் ஜனாசாவை பார்த்து இஸ்லாத்தின் முதல் கலீபா அபூபக்கர்(ரலி) அவர்கள் “ யா ரசூலுல்லாஹ் நீங்கள் உயிரோடு இருக்கும் போது மனம் கமழ்ந்தீர்கள், இறந்த பின்பும் மனம் கமழ்கிறீர்கள்” என்று சொல்லி அழுதுள்ளார்கள்.

“அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக்கொண்ட என்னுடைய அருமை தந்தையே” என்று சொல்லி நபி(ஸல்) அவர்கள் அருமை மகளார் ஃபாத்திமா அழுதுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்பு முதல் ஜும்மா உரை நிகழ்த்திய போது நபி(ஸல்) அவர்களை நினைத்து ஜும்மா மேடையில் கலீபா அபூபக்கர்(ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள்.

நான் எல்லாம் உயிரோடு இருக்கும் போதே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்களே என்று சொல்லி உமர்(ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மரணத்திற்குப் பிறகு நபி அவர்களின் பெயரை அழைக்க தெம்பு இன்றி பாங்கு சொல்லாமல் இருந்த பிலால் பைத்துல் முகத்திஸில் பாங்கு சொன்னவுடன் கூடியிருந்த அனைத்து சஹாப்பாக்களும் அழுதுள்ளார்கள். http://adirainirubar.blogspot.com/2013/06/13.html

மேலே குறிப்பிட்ட அனைத்து நிகழ்வுகளையும், கடந்த 13 தொடர்களில் வாசித்ததோடு அல்லாமல். நம்மை நாம் சுய பரிசோதனை செய்யும் விதமாக நாம் எதற்கெல்லாம் அழுகிறோம் என்ற ஒப்பீட்டு கேள்விகளும் வைக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு தொடரின் நிறைவிலும் நாம் உறுதிமொழியை வைத்தோம் என்பதையும் இங்கு நினைவூட்டுகிறேன். மேற்சொன்ன ஒவ்வொரு சம்பவங்களில் இருந்து நாம் நிறைய படிப்பினைகள் பெற வேண்டும். இன்ஷா அல்லாஹ்.

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் “ நான் அறிந்ததை நீங்கள் அறிந்தால் குறைவாக சிரிப்பீர்கள், அதிகமாக அழுவீர்கள்”

“தனிமையில் ஒரு மனிதன் அல்லாஹ்வுக்காக அழுதால், கரந்த பால் எப்படி திரும்ப மடி புகாதோ அது போல் அவர் நரகம் செல்ல மாட்டார்”

"யார் ஒருவர் தனிமையில் அல்லாஹ்வை நினைத்து அழுகிறாரோ, அவர்கள் மறுமையில் அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலில் நிற்க தகுதிபெற்றவர்கள்"

“அல்லாஹ்வுக்கு பிடித்த துளிகள் இரண்டு, ஒன்று அல்லாஹ்வுக்காக பேரிடும் போது நம் உடம்பிலிருந்து பீரிட்டு பாயும் இரத்த துளி, இரண்டாவது அல்லாஹ்வுக்காக தனிமையில் அழும்போது வரும் கண்ணீர் துளி”

என்று அல்லாஹ்வுக்காக அழும்போது வரும் கண்ணீருக்கு எவ்வளவு முக்கியத்துவம் நபி(ஸல்) அவர்கள் கொடுத்துள்ளார்கள் என்பதை நாம் ஹதீஸ் தொகுப்புகளில் பார்க்கும் போது. இந்த உலக ஆதாயத்திற்காகவும், பொய் கற்பனை கதாபாத்திரங்களின் காட்சி நிகழ்வுக்காகவும் நாம் எவ்வளவு கண்ணீரை வீண் விரையம் செய்திருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எதற்கெல்லாம் நம் தலைவர் நபி(ஸல்) அவர்களும் அந்த சத்திய சஹாபாக்களும் அழுதுள்ளார்கள் என்பதை நம்முடைய வாழ்வின் பல சந்தர்பங்களில் சிந்திக்க வேண்டும்.

நாம் எத்தனயோ ரமளான் மற்றும் பிற நாட்களில் ஏராளமான அமல்கள் செய்திருப்போம், இன்னும் செய்கிறோம். நாம்முடைய அமல்களை வைத்து நாளை நாம் சொர்க்கம் செல்ல முடியுமா? என்று எண்ணி என்றைக்காவது நம் கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்திருக்குமா? நம்முடைய அமல்களை நினைத்து, மறுமையை நினைத்து என்றைக்காவது இரவில் தனிமையில் இருக்கும்போது அழுதிருப்போமா? 

ஒவ்வொரு நாளும் நாம் அன்று அறிந்தோ அறியாமலோ செய்த நம்முடைய பாவத்தை நினைத்து அல்லாஹ்விடம் தவ்பா செய்து என்றாவது ஒரு நாள் அழுதிருக்கிறோமா?

இன்றைக்கு ஒரு வேலை தொழுகை தொழவில்லை, ஜமாத்தோடு தொழவில்லை, முன் பின் சுன்னத் தொழவில்லை, தொழுது முடித்தவுடன் தஸ்பீஹ் செய்யவில்லை, குர்ஆன் ஓதவில்லை என்று நினைத்து என்றைக்காவது அல்லாஹ்வுக்காக அழுதிருக்கிறோமா?

நம்மைவிட்டு சைத்தானை தூரமாக்கி அல்லாஹ்வின் பக்கம் நம்மை நெருக்கிக் கொண்டு இறையச்சமுடைய நல்லடியார்களாக மறுமையில் வெற்றியடைய வேண்டுமானால், நாம் அல்லாஹ்வுக்காக நம் பாவங்களை நினைத்து தனிமையில் அழவேண்டும்.

ஆம்! நாம் அழவேண்டும், அல்லாஹ்வுக்காக, இஸ்லாத்திற்காக அர்த்தத்தோடு அழவேண்டும், நாளை மறுமையில் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்து அழவேண்டும் என்பதற்காகத்தான் இந்த தலைப்பில் உருக்கமான  இஸ்லாமிய வரலாற்று சம்வங்களில் நபி(ஸல்) அவர்களும், சத்திய சஹாபாக்களும் எதற்காக கண்ணீர் சிந்தினார்கள் என்று தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

நிறைவாக:
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பல சிரமங்களுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி இந்த தொடர் எழுத உதவிய வல்ல அல்லாஹ்வுக்கே முதலில் எல்லா புகழும். இந்த பதிவுகளை எழுத பேருதவியாக இருந்த இரண்டு மார்க்க சொற்பொழிவாளர்களின் (சகோ. கோவை அய்யூப், சகோ. ஜமால் மதனி) பயான்கள். அவர்கள் இருவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக. இந்த இரண்டு மார்க்க சொற்ப்பொழிவுகளின் மூலம் என்னால் முடிந்தவைகளை தொகுத்து தந்துள்ளோன். நீங்கள் அனைவரும் கேட்க வேண்டிய மார்க்க சொற்பொழிவுகள் அவைகள்.

http://www.youtube.com/watch?v=tOopR9xSYgA

http://www.youtube.com/watch?v=T9ftHK6A4L8

வாரந்தோறும் தொடர்ந்து வாசித்து கருத்திட்டு ஊக்கமளித்த அனைத்து சகோதரர்களுக்கும், மேலும் வாசித்துவிட்டு கருத்திடாத இயலாத அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வல்ல ரஹ்மான் நல்லருள் புரிவானாக. ஆமீன்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் முதல் “அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும்” தொடரில் சந்திக்கலாம்.

M தாஜுதீன்

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 13 13

அதிரைநிருபர் பதிப்பகம் | June 26, 2013 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

கடந்த பதிவில் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் மரண நேர சம்பவங்களைக் கண்ணீர் மல்க கண்டோம். இந்த வாரம் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்பு நடந்த நெகிழ்வூட்டும் ஒரு சில வரலாற்று சம்பவங்களைக் காண்போம்.

நபி(ஸல்) கொஞ்சம் குணமடைந்து விட்டார்கள் என்பதால், அருகாமையில் தன்னுடைய வீட்டிற்குச் சென்ற அபூபக்கர் (ரலி) அவர்கள் தம்முடைய ஆருயிர் தோழர், மருமகன், உடன் பிறவா சகோதரர், இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் மரணித்த செய்தி அறிந்து குதிரையில் வந்திறங்கினார்கள். "நபி(ஸல்) அவர்கள் மரணிவிட்டார்கள் என்று யாராவது சொன்னால் அவர்களின் தலையைச் சீவிவிடுவேன்" என்று கோபத்தின் உச்ச நிலையில் உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார்கள். 

இந்த சமையத்தில் யாரிடமும் எதுவும் பேசாமால், ரசூலுல்லாஹ்வை முதன் முதலில் மெய்ப்பித்த உத்தம தோழர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் தன்னுடைய மகளும் நபி(ஸல்) அவர்களின் அருமை மனைவியுமான ஆயிசா(ரலி) அவர்களிடத்தில் உள்ளே வர அனுமதி கேட்கிறார்கள். “அனுமதி தர வேண்டியவர் இறந்து போய்விட்டார்கள்” என்று முஃமீன்களின் அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். பின்னார் அபூபக்கர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் ஜனாஸா அருகில் சென்றார்கள். நபி(ஸல்) அவர்களின் நெற்றியில் முத்தமிட்டு “யா ரசூலுல்லாஹ் என்னுடைய தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், நீங்கள் உயிரோடு இருக்கும் போது நறுமணம் கமழ்ந்தீர்கள், இறந்த பின்பும் நறுமணம் கமழ்கிறீர்கள் யா ரசூலுல்லாஹ்” என்று கூறியவாறு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார்கள்.

உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லீம்களுடைய ஈமானை ஒரு தட்டிலும் இந்த சித்தீக்குடைய ஈமானை ஒரு தட்டிலும் வைத்தால் இந்த சித்தீக்குடைய தட்டில் உள்ளதே அதிகமிருக்கும் என்று நபி(ஸல்) அவர்களால் பாராட்டி நன்மாராயம் கூறப்பட்ட அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் வெளியில் வந்து கோபத்துடன் இருக்கும் உமர் (ரலி) அவர்களை அமைதியாக அமருமாறு மூன்று முறை கூறினார்கள். பின்னர் அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு பின்வருமாறு மக்களை பார்த்து கூறினார்கள்.

"நிற்க, உங்களில் யார் முஹம்மத்(ஸல்) அவர்களை (இறைவன் என நம்பி) வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள், முஹம்மத்(ஸல்) நிச்சயம் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்துகொள்ளட்டும் உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கிக்கொண்டிருந்தார்களோ அவர்கள் 'அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்; மரணிக்கவேமாட்டான்' என்பதை அறிந்துகொள்ளட்டும்.  "அல்லாஹ் கூறுகிறான்; முஹம்மது ஒரு (இறைத்) தூதரேயன்றி வேறல்லர்; அவருக்கு முன்னரும் (என்) தூதர்கள் பலர் (வந்து) சென்றிருக்கிறார்கள்; எனவே, அவர் இறந்துவிட்டால், அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் தம் கால் சுவட்டில் திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு விரைவில் பிரதிபலன் வழங்குவான்' (திருக்குர்ஆன் 3:144) என்றார்கள். 

அபூபக்கர் (ரலி) மூலமாகத்தான் இதை அவர்கள் அறிந்தது போன்றும் இதனை ஓதக் கேட்ட மக்கள் யாவரும் இதனைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டேயிருந்தார்கள்.  அப்போது உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்:  “அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்கர் (ரலி) அவர்கள் இந்த வசனத்தை ஓத நான் கேட்டபோதுதான் அது என் நினைவுக்கே வந்தது. எனவே, அதிர்ச்சியடைந்தேன். அப்போது என் கால்களால் என் (உடல்) சுமையை தாங்க முடியவில்லை. அபூ பக்ர்(ரலி) ஓதிக்காட்டிய இவ்வசனத்தைக் கேட்டு நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து நான் தரையில் விழுந்துவிட்டேன்” என்று கூறிய உமர் (ரலி) அவர்கள் சமாதானம் அடைந்தார்கள் என்று புகாரி போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் வாசிக்கும் போது மெய் சிலிர்க்கிறது.

இந்நிலையில் நபி(ஸல்) அவர்களின் வீட்டிலிருந்த அண்ணல் நபியின் அருமை மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்கள் “ அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக்கொண்ட என் தந்தையே!, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த அந்தஸ்தத்தை அல்லாஹ்விடமிருந்து பெற்றுக்கொண்ட என்னுடைய தந்தையே!, எப்போதும் உங்களிடம் தொடர்பில் உள்ள ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இந்த மரண செய்தியை சொல்லுகிறோம்” என்று கூறி தன்னுடைய தந்தை, எண்ணிலடங்கா மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மரணத்தைச் சொல்லி சொர்க்கத்து பெண்களின் தலைவி ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள், பின்னர் நபி(ஸல்) அவர்களை அடக்கம் செய்த பிறகு ஃபாத்திமா (ரலி) அவர்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு 10 ஆண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) அவர்களிடம் “ அனஸே இறைத்தூதர் மீது மண்ணை அள்ளிப் போட எப்படி உங்களுக்கு மனம் வந்தது” என்று கேட்டார்கள்  என்பதை புகாரி போன்ற ஹதீஸ் தொகுப்புகளிலிருந்து வாசிக்கும் அனைவருக்கும் கண்ணீர் வந்தே தீரும்.

நபி(ஸல்) அவர்கள் மரணித்த பிறகு முதன் முதலில் அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்கள் ஒரு ஜும்மா உரை நிகழ்த்தினார்கள். அந்த ஜும்மா உரையில் நபி(ஸல்) அவர்கள் எப்படி ஜும்மா உரையை ஆரம்பிப்பார்களோ அது போல் ஹம்து ஸலவாத்து சொல்லி அழ ஆரம்பித்தார்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள், “இது யார் நின்ற இடம் தெரியுமா? இந்த இடத்தில் நின்று யார் உரை நிகழ்த்தினார்கள் தெரியுமா? அப்படிப்பட்ட இடத்தில் நான் நின்று உரை நிகழ்த்துகிறேன் “ என்று சொல்லி அழுது உரை நிகழ்த்தினார்கள் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் என்று ஹதீஸ் தொகுப்புகளில் காணும் போது கண்கள் குளமாகிறது.

நபி(ஸல்) அவர்களை அடக்கம் செய்த பின்பு சில நாட்கள் கழித்து உமர்(ரலி) அவர்கள் சொன்னார்கள் “ நான் நினைத்தேன், நான் மரணித்து, அபூபக்கர்(ரலி) அவர்கள் மரணித்து, உஸ்மான்(ரலி) மரணித்து, அலி(ரலி) மரணித்து, அப்துர்ரஹ்மான் இப்னு அஃவ்ப்(ரலி) மரணித்து நாங்கள் அனைவரும் மரணித்த பிறகு தான் ரசூலுல்லாஹ் மரணிப்பார்கள் என்று நினைத்தேன், ஆனால் நாங்கள் இருக்கும் போதே எங்கள் ஆருயிர் தோழர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்களே”  என்று சொல்லி அழுத்துள்ளார்கள் என்று ஹதீஸ் தொகுப்புகளின் காணலாம்.

நபி(ஸல்) அவர்களுடைய மரணத்திற்கு பிறகு மிகப்பெரிய செல்வந்தராக வாழ்ந்து வந்த நபி தோழர், அல்லாஹ்வின் தூதரால் சொர்க்கவாசி என்று நன்மாராயம் கூறப்பட்ட  அப்துர்ரஹ்மான் இப்னு ஆவ்ப்(ரலி) அவர்கள், ஒரு நாள் அவர்கள் முன்னால் உயர் ரகமான பேரீத்தம் பழங்கள் கொடுக்கப்பட்டது., அந்த பேரீச்சம் பழங்களை சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை கையில் எடுத்து தோழர்களை எல்லாம் பார்த்து அழ ஆரம்பித்துவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதரர் (ஸல்) அவர்களை நினைவு கூர்ந்து “நபி(ஸல்) வாழ்ந்த காலத்தில் இது போன்ற உயர்தரமான பேரீச்சம் கணிகளை கண்ணால் கூட பார்க்காமலே மரணித்துவிட்டார்களே” என்று சொல்லி அழுதுள்ளார்கள் என்பதை ஹதீஸ் தொகுப்புகளில் காணும் போது நம்முடைய கண்களும் கலங்குகிறது.  

நபி(ஸல்) அவர்களோடு மக்காவிலிருந்தும் மற்றும் மதினாவில் இறுதி மூச்சு வரை ஒன்றாக இருந்த உத்தம நபியின் உன்னத தோழர் பிலால் (ரலி) அவர்கள், அடிமைகளுக்கு விடிவு பிறக்க செய்த உத்தம மனிதர், அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மரணித்த பிறகு, மதினாவில் இருக்க மனம் இன்றி சிரியா நாட்டிற்கு சென்றுவிட்டார்கள், நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்த காலத்தில் முதன் முதலில் நீங்கள் தான் பாங்கு சொல்ல வேண்டும் நபி(ஸல்) அவர்களால் நியமிக்கபட்ட பிலால்(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை பாங்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். 

நபி(ஸல்) அவர்களை பிரிந்த அதிர்ச்சியில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற வார்த்தையை சொல்லும் தைரியத்தையே இழந்துவிட்ட பிலால்(ரலி) பாங்கு சொல்லுவதையே நிறுத்திவிட்டார்கள். சில வருடங்களுக்கு பிறகு பைத்துல் முகத்திஸ் அமீருல் முஃமினீன் உமர்(ரலி) அவர்கள் காலத்தில் வெற்றிகொள்ளப்பட்ட போது, பிலால்(ரலி) அவர்களை அழைத்து உமர்(ரலி) அவர்கள் நீங்கள் தான் இங்கு பாங்கு சொல்ல வேண்டும் என்று சொன்னார்கள். நபி(ஸல்) மரணித்த பிறகு பைத்துல் முகத்திஸில் பாங்கு சொன்னார்கள் பிலால்(ரலி) அவர்கள். முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று சொன்னவுடன், பிலால்(ரழி) அவர்களும் அங்கு கூடியிருந்த அனைத்து ஸஹாபாக்களும், பிற முஸ்லீம்களும் அழுதார்கள் என்று பொன் எழுத்துக்களால் பதியப்பட வேண்டிய வரலாற்று சம்பவங்களை ஹதீஸ் தொகுப்புகளில் நாம் காணலாம்.

மனித இனத்தின் முன்மாதிரி, அகிலத்தின் அருட்கொடை, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஜனாதிபதி, இஸ்லாமிய போர்படைத் தலைவர், பொருளாதார மாமேதை, கண்ணியமான குடும்பத் தலைவர்,  இறைத்தூதரர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறந்த பின்பு அவர்களிடம் இருந்தது “பைலா என்ற வெள்ளை நிற கோவேறி கழுதை மற்றும் அங்குமிங்குமாக ஒட்டப்பட்டிருந்த போர்வை இவை மட்டுமே ரசூலுல்லாஹ்வுடைய கடைசி சொத்து." உலக வரலாற்றில் எந்த ஒரு தலைவரும் இவ்வாறு வாழ்ந்து மரணித்ததாக எந்த ஒரு சரித்திர ஏடுகளிலும் காணமுடியாது. நபி(ஸல்) அவர்கள் போல் இனி ஒரு மனிதர் யாரும் வரப்போவதும் இல்லை.

வயிராற உண்ண நமக்கு பல உணவு வகைகள் சமைக்கப்பட்டு நம் முன்னே இருக்கும் போது, நம்முடைய உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்கள் இது போன்ற உயர்தரமான உணவு வகைகளைச் சாப்பிடாமலே மரணித்துவிட்டார்கள் என்று அப்துர்ரஹ்மான் இப்னு ஆவ்ப் (ரலி) அவர்கள் அழுதது போல் நாம் என்றைக்காவது அழுதிருப்போமா?

அன்று திண்ணை தோழர்கள் (ஸஹாபாக்கள்) பசியும் பட்டினியுமாக வாழ்க்கையைக் கழித்தார்களே, இன்று வகை வகையாக நமக்கு உணவு கிடைக்கிறது, அதை நினைத்து என்றைக்காவது அல்லாஹ்விடம் கண்ணீர் மழ்க நன்றி செலுத்தியிருப்போமா?

அண்ணல் நபி(ஸல்) அடிக்கடி சொன்ன வார்த்தைகளில் “நானும் பிலாலும் சென்றோம், நானும் பிலாலும் நடந்தோம், நானும் பிலாலும் இருந்தோம், நானும் பிலாலும் சாப்பிட்டோம், நான் பிலாலும் உறங்கினோம்,” என்று நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்த அந்த தியாகச் செம்மல், முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர்களின் பட்டியலில் உள்ள உன்னத மனிதர், முதன் முதலில் பாங்கு சொன்ன உத்தம நபியின் உன்னத தோழர், இஸ்லாத்திற்காக அடிவாங்கியவர்களின் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் நம்முடைய பிலால் (ரலி) அவர்கள் செய்த தியாகங்களை என்றைக்காவது நினைவு கூர்ந்து அழுதிருப்போமா?

நமக்கு நோய் நொடி வரும்போது நம்முடைய இறைத்தூதர் (ஸல்) அவர்களும் நோய்வாய்ப்பட்டார்கள், அவர்களும் நோயின் வேதனையில் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்று என்றைக்காவது எண்ணி அழுதிருப்போமா?

நபி(ஸல்) அவர்களின் மேல் கொண்ட அன்பால் அவர்களின் மரண நேரத்தின் நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்களை ஒரு தடவை அல்ல பல முறை வாசித்து, பிறருக்கு எடுத்துச் சொல்லி நாம் நம்முடைய ஈமானை பலப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.  இன்ஷா அல்லாஹ்.

நாம் அழ வேண்டும்,
அர்த்தத்தோடு அழ வேண்டும்.

இந்த வார உறுதி மொழி:

நமக்கு மரணம் எந்த வினாடியும் ஏற்படும் என்று வாயளவில் மட்டும் சொல்லாமல், உள்ளத்தளவில் நமக்கு மரணம் எந்த வினாடியும் வரும் என்பதை சொல்லி, உணர்ந்து நமக்கு இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் நேரத்தை கடமையாக்கப்பட்ட வணக்க வழிபாடுகள் மூலம் அல்லாஹ்வை வணங்கி, அவனுடைய சிந்தனையில் நம்முடையை ஒவ்வொரு பொழுதையும் செலவழிப்போமாக.

இந்த தொடர் அடுத்த வாரத்துடன் நிறைவுக்கு வருகிறது இன்ஷா அல்லாஹ்.

M தாஜுதீன்

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 12 12

அதிரைநிருபர் பதிப்பகம் | June 19, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

உத்தம நபியின் உன்னத தோழர்கள், நம்முடைய ஆருயிர் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மேல் கொண்ட பாசத்தால் அவர்கள் தம்மைவிட்டு பிரியப்போகிறார்களே என்று நினைத்து அழுத சம்பவத்தையும், நாளை மறுமையில் அவர்களோடு ஒன்றாக இருக்க முடியுமா என்று கண்ணீர் வடித்த சம்பவத்தையும் நாம் சென்ற பதிவில் பார்த்தோம். இந்த வார பதிவில் இன்ஷா அல்லாஹ். நபி (ஸல்) அவர்களுடைய மரண நேரத்தில் நடைபெற்ற ஒருசில நெகிழ்ச்சியான சம்பவங்களை இங்கு தொகுத்தளிக்கிறேன்.

கடந்த பதிவுகளில் நபி(ஸல்) அவர்கள் தம்மை விட்டு பிரியப் போகிறார்கள் என்பதை நினைத்து அபூபக்கர்(ரலி) முஆத் இப்னு ஜபல்(ரலி) அழுதார்கள் என்பதை பார்த்தோம். முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களுக்கு நிகழ்த்திய உபதேசத்தில்தான் நபி(ஸல்) அவர்களுடைய மரண முன்னறிவிப்பு செய்தியை தெளிவாக சொன்னார்கள் என்பதை நாம் அறிந்தோம்.

பின்வரும் வசனம் நபி(ஸல்) அவர்களுக்கு இறுதியாக அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்டது, இதன் பிறகு வேறு எந்த வசனமும் இறக்கப்படவில்லை என்று ஹதீஸ் தொகுப்புகளில் நாம் பார்க்கிறோம் என்பதை தகவலுக்காக பதிவு செய்கிறேன்.

தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டெடுக்கப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா. திருக்குர்ஆன்(2:281)

நபி(ஸல்) அவர்களுக்கு கடுமையான நோய் ஏற்பட்டு கடும் தலைவலியுடன் காய்ச்சல் ஏற்பட்டது, அப்போது தம்முடைய மனைவி மைமூனா(ரலி) அவர்கள் இல்லத்தில் இருந்தார்கள். அங்கிருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் “நாளை நான் எங்கே இருப்பேன், நாளை நான் எங்கே இருப்பேன்” என்று வினவினார்கள். தம்முடைய நோயின் கடுமையின் காரணமாக நான் ஆயிசா(ரலி) அவர்கள் இல்லத்தில் இருக்க விரும்பிய உலக மாந்தருக்கெல்லாம் முன்மாதிரியான கண்மணி நபி(ஸல்) அவர்கள் “நீங்கள் அனைவரும் அனுமதி தாருங்கள்” என்று தம்முடைய அருமை மனைவிமார்களிடம் அனுமதி பெற்று அன்னை ஆயிசா(ரலி) அவர்களின் இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள் பொறுமையாளர்களின் தலைவர் நபி(ஸல்) அவர்கள்.

நபி(ஸல்) அவர்களை தம்முடைய அருமை மனைவி ஆயிசா (ரலி) அவர்கள் வீட்டிற்கு அலி(ரலி) அவர்களும் பழ்ளு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் தூக்கிக்கொண்டு சென்றார்கள், நபி(ஸல்) அவர்களுடைய பாதம் கீழே சீய்த்து சென்ற பாதையில் கோடு விழும் அளவிற்கு நடக்க முடியாமல் சென்றார்கள். இதனை அப்போது கண்ட ஸஹாபாக்கள் “என்ன ஆயிற்று நம்முடைய இறைத்தூதருக்கு” என்று அழும் அளவிற்கு கவலையுற்றார்கள். காரணம் மனித இனத்தின் முன்மாதிரி, அகிலத்தின் அருட்கொடை, ஒரு சாம்ராஜ்யத்தின் ஜனாதிபதி, இஸ்லாமிய போர்படைத் தலைவர், பொருளாதார மாமேதை, கண்ணியமான குடும்பத் தலைவர், அவர்களுடைய பிள்ளைகளுக்கு தலைசிறந்த தந்தை, அவர்களுடைய பேரக்குழந்தைகளுக்கு பாசம் நிறைந்த அப்பா, அவரோடு வாழ்ந்த அனைவருக்கும் நேசம்நிறைந்த தோழர், குழந்தகள் மேல் பாசம் கொண்ட மணிதருள் மாணிக்கம், முஸ்லீமல்லாதோராலும் உண்மையாளர் என்று போற்றப்பட்டவர், மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத்து செய்த மாபெரும் தியாகி, அல்லாஹ்வுடையை வஹிக்காக ஹிரா குகைக்கு ஏறிவந்த திடகாத்திர உள்ளம் கொண்டவர், இறக்க குணம் கொண்டவர், எழைகளுக்கு உதவுபவர், அடிமைத்தனத்தை வேரோடு வெட்டி சாய்த்த மாபெறும் புரட்சியாளர், அல்லாஹ்வின் தூதர், நம்முடைய நபி அவர்கள் நடக்க முடியாமல் கால் சீய்க்க தன் தோழர்களால் தூக்கி செல்லப்பட்ட நிலையை நேரில்காணாத நமக்கே இதை வாசிக்கும் போது தொண்டை அடைக்கிறதே, இதனை நேரில் பார்த்த அந்த மக்கள் எப்படி எல்லாம் கவலையுற்றிருப்பார்கள் என்று எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.

ஆயிசா (ரலி) அவர்கள் வீட்டில் தான் மரணிக்கும் கடைசி நிமிடங்கள் வரை வாய்ப்பு கிடைக்கும் போது மக்களுக்கு உபதேசம் செய்துக்கொண்டே இருந்தார்கள். அதே நிலையில் தன்னுடைய நோயினால் ஏற்பட்ட வேதனையில் மிகவும் சிரமப்பட்டார்கள் என்பதையும் ஹதீஸ் தொகுப்புகளில் காணமுடிகிறது.

இப்படி நோயினால் எண்ணிலடங்கா சிரமப்பட்டு மக்களுக்கு இறுதி உபதேசம் செய்துக்கொண்டிருந்த வேலையில் ஒரு அறிவிப்பு செய்தார்கள் கருணையின் சிகரம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் “என்னிடம் பழிதீர்க்க யாராவது உள்ளனரா? நான் உங்கள் யாருக்காவது தீங்கிழைத்திருந்தால் அதற்கு பகரமாக என்னை நீங்கள் பழி தீர்த்துக் கொள்ளலாம்.” என்று சொன்னவுடன் ஒரு நபி தோழர் எழுந்து “யா ரசூலுல்லாஹ் ஒரு போரின் அணிவகுப்பில் இருக்கும் போது நீங்கள் என்னை இப்படி முதுகில் கம்பால் தட்டினீர்கள் எனக்கு காயம் ஏற்பட்டது, நான் உங்களை பழி தீர்க்க வேண்டும்” என்று சொன்னார். இதனை செவியுற்ற கூடியிருந்த ஸஹாபாக்கள் அனைவருக்கு கோபம் ஏற்பட்டது, ஆனால் மனிதர்களின் புனிதர், பண்பாளர்களுக்கெல்லாம் பண்பாளர், அருமை நாயகம்(ஸல்) அவர்கள் தன்னுடைய ஆடையை விளக்கி “நீங்கள் பழிதீர்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்” உடனே அந்த தோழர் நபி(ஸல்) அவர்களின் மேனியில் முத்தமிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்கள். அப்போது அந்த நபி தோழர் சொன்னார் “நபி(ஸல்) அவர்களை பழிதீர்க்கும் எண்ணம் எனக்கில்லை, கடைசியாக நபி(ஸல்) அவர்களை கட்டியணைக்க எனக்கு ஓரு வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக நான் இப்படி செய்தேன்” என்று சொல்லி அழுதார் அந்த ஸஹாபி என்று நாம் ஹதீஸ் தொகுப்புகளில் பார்க்கிறோம்.

இவைகளை வாசிக்கும் போது நம்முடைய கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்த அந்த மக்கள் எப்படி எல்லாம் துடியாய் துடித்திருப்பார்கள் என்பதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.

கடைசியாக வியாழக்கிழமை இரவு இஷா தொழுகையில் நபி(ஸல்) அவர்களை இறுதியாக சஹாபாக்கள் மஸ்ஜுந் நபவியில் பார்த்தார்கள், அதன் பிறகு வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நபி(ஸல்) அவர்கள் வெளியில் வரவில்லை, தம்முடைய ஆருயிர் தோழர் நபி(ஸல்) என்ன ஆயிற்று என்று அன்சாரி தோழர்களும், முஹாஜிர் தோழர்களும், திண்ணைத் தோழர்களும் அழுதுகொண்டே மஸ்ஜுது நபவியில் நல்ல செய்தி கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஞாயிற்றுக்கிழமை அலி(ரலி) அவர்களும் அப்பாஸ்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களை பார்த்துவிட்டு வந்தார்கள். அவர்கள் இருவரிடமும் வெளியில் ஆவலுடன் காத்திருந்த தோழர்கள் நபி(ஸல்) அவர்களுடைய உடல் நலன் குறித்து விசாரித்து கொஞ்சம் ஆறுதல் அடைந்தார்கள். 

அப்போது தன்னுடைய பாசம் நிறைந்த தந்தை நபி(ஸல்) அவர்களைப் பார்க்க அருமை மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்தார்கள், நபி(ஸல்) அவர்களைக் கண்டவுடன் “என் தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே” என்று அழுதவர்களாக கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “இந்த நாளுக்கு பிறகு உன் தந்தைக்கு இனி வேதனை கிடையாது மகளே” என்று மரண படுக்கையில் இருக்கும்போதே தன்னுடைய மகளுக்கு ஆறுதல் கூறினார்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்கள். 

மீண்டும் ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து, தனக்கு மரணம் ஏற்படப்போகிறது என்று சொன்னார்கள் ரஹ்மதுல் ஆலமீன், அப்போது ஃபாத்திமா(ரலி) அழ ஆரம்பித்தார்கள், மீண்டும் ஃபாத்திமா(ரலி) அவர்களை அழைத்து “ மகளே மரணத்திற்குப் பிறகு நீதான் என்னை முதலில் சந்திப்பாய், நீ தான் சொர்க்கத்தில் பெண்களுக்கு தலைவி” என்றார்கள் உடனே ஃபாத்திமா அவர்கள் சிரித்தார்கள் என்று புகாரி போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் பார்க்கிறோம்.

அதே சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் தன்னிடம் இருந்த தினார்களை தர்மம் செய்தார்கள், மறுநாள் மரணிக்கப் போகிறார்கள், அன்றிரவு வீட்டில் விளக்கு அணைந்துவிட்டது, அருகில் உள்ள வீட்டில் எண்ணெய் வாங்கி விளக்கை ஏற்றினார்கள் ஆயிசா(ரலி) என்று ஹதீஸ் தொகுப்புகளில் பார்க்கிறோம். ஒரு தலைவர் எப்படி எல்லாம் எளிமையாக வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்பதற்கு உலகில் நபி(ஸல்) அவர்களுக்கு நிகராக முன்னுதாரணமாக வேறு எவரையும் காட்ட முடியாது.

திங்கள்கிழமை ஃபஜர் தொழுகைக்கு பிறகு நபி(ஸல்) மிகவும் சிரமப்பட்டு தான் இருக்கும் மஸ்ஜித் நபவியில் இருக்கும் தன்னுடைய வீட்டில் திரையை அகற்றி, தன்னுடைய அருமை தோழர்களைப் பார்த்து இறுதியாக புன்னகைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் புன்னகையைப் பார்த்த ஸஹாபாக்கள் அனைவருக்கும் ஆறுதலாக இருந்தது.

திங்கள் கிழமை லுஹருக்கு முன்பு நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயிசா அவர்கள் மேல் சாய்ந்த நிலையில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி துஆ செய்து, திருக்குர்ஆன் வசனம் ஒன்றை ஓதி, “அல்லாஹ்வே என்னை மன்னிப்பாயாக, என் மீது கருணை காட்டுவாயாக, உயர்ந்த நண்பனுடன் என்னை சேர்த்து வைப்பாயாக, அல்லாஹ்வே உயர்ந்த நண்பனே” என்று கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை கூறி தன்னுடைய 63-வது வயதில், ஹிஜ்ரி 11 வருடம் ரபியுல் அவ்வல் மாதம் இவ்வுலகை விட்டு பிரிந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு நபிதோழர்களின் நிலை பற்றி சுறுக்கமாக அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நபி(ஸல்) அவர்களுடையை இறுதி நாட்களில் நிகழ்ந்த சம்பவங்களிலிருந்து நமக்கு நிறைய படிப்பினைகள் உள்ளது.

நபி(ஸல்) அவர்களுக்கு நோய் ஏற்பட்டதால் அவர்களை காண முடியவில்லையே, அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று எண்ணி அழுதார்கள் அந்த தோழர்கள், நம்மை விட்டு அல்லாஹ்வின் தூதர் பிரியப்போகிறார்களே என்று நினைத்து அழுதுள்ளார்கள் அந்த தோழர்கள். வஹி வருவது நின்று விடுமே என்று நினைத்து அழுதுள்ளார்கள். தூதர் அழுதால் அந்த மக்கள் அழுதார்கள், தூதருக்கு ஒரு கஷ்டம் என்றால் அந்த மக்கள் அழுதுள்ளார்கள்.

நாம் இது போன்ற நெகிழ்வூட்டும் சம்வங்களை அடிக்கடி வாசித்து அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களும் நோயினால் அவதியுற்றார்கள், அல்லாஹ் நம்மை எந்த சிரமும் இல்லாமல் வைத்திருக்கிறானே என்று நினைத்து அழ வேண்டும். நபி(ஸல்) அவர்கள் தம்முடைய உம்மத்தான நமக்காக செய்த தியாகங்களை நினைத்து அழ வேண்டும்.

நமக்கு காய்ச்சலோ தலைவலியோ வந்து சிரமம் ஏற்பட்டால், இது போன்ற சூழல்களை தன்னுடைய இறுதி நாட்களில் சந்தித்த நம்முடைய நபி(ஸல்) எப்படி கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று நினைத்து அழுது நம்மை சமாதானப்படுத்த வேண்டும்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்தவர்களுக்காகவும், நபிதோழர்கள் அனைவருக்காகவும் அல்லாஹ்விடம் அழுது ஒரு நாளாவது துஆ செய்திருபோமா?, ஒவ்வொரு நாளும் நாம் துஆ செய்ய வேண்டும். அவர்கள் அனைவரும் இஸ்லாத்திற்காக செய்த தியாயங்களை நினைத்து அழுது அவர்களுக்காக துஆ செய்ய வேண்டும், அவர்கள் அனைவரோடும் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சொர்க்கத்தில் நாம் அனைவரும் இருக்க துஆ செய்வோமாக.

இந்த வார உறுதி மொழி:

மரணத்தருவாயில் இருக்கும் போது அண்ணல் நபி(ஸல்) அவர்கள் “நான் யாருக்காவது தீங்கிழைத்திருந்தால் என்னை பழி தீர்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்களே அது போல், நாம் யாருக்காவது தீங்கிழைத்திருந்தால் அவரிடம் சென்று பழிதீர்த்துக்கொள்ள வேண்டுகோள் வைப்போமாக, அல்லது குறைந்தபட்சம் மன்னிப்பாவது கோருவோமாக. நம்மிடம் யாரும் மன்னிப்பு கேட்டால் வரட்டு பிடிவாதம் பிடிக்காமல் பெருமனதுடன் மன்னிப்போமாக.

இன்ஷா அல்லாஹ் இன்னும் இரண்டு வாரத்தில் இந்த தொடர் பதிவு நிறைவுபெறும்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
தாஜுதீன்

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 11 16

அதிரைநிருபர் பதிப்பகம் | June 12, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்

கடந்த வாரம் ரஹ்மத்துல் ஆலமீன் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மேல் எந்த அளவுக்கு சத்திய சஹாபாக்கள் பாசம் வைத்திருந்தார்கள் என்பதை முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம், ஏராளமானவர்களைச் சென்றடைந்த அந்த அத்தியாயத்தின் தொடர்ச்சியை மேலும் சில முத்தாய்ப்பான வரலாற்று சம்பவங்கள் இந்த பதிவில் நாம் காணலாம்.

அல்லாஹ்வின் தூதர் எம்பெருமானார் நபி(ஸல்) அவர்களிடம் ஓரு வழக்கம் இருந்து வந்தது, அறியாமைக் காலத்தில் இருக்கும் மக்களிடையே ஏகத்துவத்தை எத்தி ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தம்முடை நம்பிக்கைக்குரிய அருமை தோழர்களைத் தாயிக்களாக மார்க்க பிரச்சாரம் செய்ய அனுப்பி வைப்பார்கள் அகிலத்தின் அருட்கொடை நபி(ஸல்) அவர்கள். ஒரு தடவை எமன் நாட்டுக்குத் தூதுவராக அண்ணல் நபி(ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல்(ரலி) அவர்களை நியமித்தார்கள்.

எமன் நாட்டு தூதுவராக நியமிக்கப்பட்ட முஆத் பின் ஜபல் அவர்களை ஒட்டகத்தில் அமர வைத்து போர்ப்படை தளபதிகளுக்கு முன்மாதிரி தளபதி, தாயிக்களுக்கு எல்லாம் முன்மாதிரி தாயி, அகிலத்தின் அருட்கொடை, ஒட்டுமொத்த மனித சமூதயாத்திற்கும் எடுத்துக்காட்டான மாமனிதர் நம்முடைய நபி(ஸல்) அவர்கள் மதீனாவின் எல்லை துல்ஹுலைபா வரை நடந்து தம்முடைய தூதுவரை வழியனுப்ப வந்தார்கள். ஒட்டகத்தில் அமர்ந்து வந்த முஆத் பின் ஜபல்(ரலி) அவர்களால் நபி(ஸல்) அவர்கள் நடந்து வருவதைக் கண்டு தாங்க முடியவில்லை.

“யா ரசூலுல்லாஹ் நான் நடந்து வருகிறேன், நீங்கள் அமருங்கள்” என்று கேட்டார்கள்.

அதற்கு கருணையின் சிகரம் உச்சநிலை இரக்கத்தின் தலைவர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் “வேண்டாம் முஆதே நீங்கள் அமர்ந்து வாருங்கள்” என்று பாசத்தோடு கூறினார்கள்.

மேலும் நபி(ஸல்) முஆத் பின் ஜபல்(ரலி) அவர்களுக்கு உபதேசம் செய்துகொண்டே வந்தார்கள். முஆதே “நான் உங்களை எமன் நாட்டுக்கு தூதுவராக அனுப்புகிறேன், அந்த மக்களுக்கு மார்க்கத்தை நலினமாக எடுத்துச் சொல்லுங்கள், ஏகத்துவத்தின் பக்கம் அந்த மக்களை அழையுங்கள், அநியாயம் செய்வதிலிருந்து அந்த மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்” என்று மார்க்க நெறிமுறைகளை எடுத்துச் சொல்லிவிட்டு மதீனாவின் எல்லை வந்தவுடன், இறுதி இறைதூதர் நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) அவர்களைப் பார்த்துச் சொன்னார்கள் “எமனிலிருந்து நீங்கள் திரும்பி வரும் போது நான் இருக்க மாட்டேன்,” இதை கேட்ட முஆத்(ரலி) அவர்களுக்கு தாங்க முடியவில்லை “நீங்கள் என்னுடைய மண்ணறையையோ அல்லது என்னுடை பள்ளியையோதான் காண்பீர்கள், ஒன்றைத் தெரிந்துக்கொள்ளுங்கள் முஆதே, என்னுடைய குடும்பத்தார்கள் நினைக்கிறார்கள், என்னிடத்தில் அவர்களுக்கு அதிக உரிமை உண்டு என்று. ஆனால் என்னிடம் அதிகம் உரிமை உள்ளவர்கள் யார் தெரியுமா? இறையச்சமுடைய மக்கள், அவர்கள் யாராக இருந்தாலும் எங்கிருந்தாலும்” என்று கூறி மதினாவை நோக்கி திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தன்னுடையை கண்பார்வையிலிருந்து மறையும் வரை

முஆத் பின் ஜபல்(ரலி) அவர்கள் தேம்பிதேம்பி அழுதார்கள். இந்த சம்பவங்களின் வரலாற்றுச் சான்றுகள் புகாரி போன்ற இதர ஹதீஸ் தொகுப்புகளில் நாம் காண முடிகிறது.

முத்தாய்ப்பான இறுதி உபதேசம் செய்த நம்முடைய பாசமிகு தலைவர், நம்முடைய ஆருயிர் தோழர், மார்க்க கல்வி கற்றுத் தந்த நேசம் நிறைந்த ஆசான், இறையச்சமுடைய மக்களுக்கு மட்டும் அதிக உரிமை கொடுக்கும் நம்முடைய இறைத்தூதர் நம்மைவிட்டு பிரியப்போகிறார்களே என்று நினைத்து அழுதுள்ளார்கள் முஆத் பின் ஜபல்(ரலி) அவர்கள் என்பதை மேல் சொன்ன வரலாற்று சம்பவத்தின் மூலம் நாம் அறியலாம்.

ஒரு நாள் ஷஃபான்(ரலி) அவர்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்களுடைய சபைக்கு அழுதுக்கொண்டே வந்தார்கள். பாசத்தின் தந்தை அருமை நபி(ஸல்) அவர்கள் “என்ன ஆனது ஷஃபானே, முகமெல்லாம் வாடியுள்ளதே?” என்று வினவினார்கள்.

அதற்கு ஷஃபான்(ரலி) அவர்கள் “யா ரசூலுல்லாஹ், நான் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிந்தேன், அப்போது எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது”

நபி(ஸல்) அவர்கள் “என்ன சந்தேகம் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள்.

அதற்கு ஷஃபான்(ரலி) அவர்கள் “மக்காவில் உங்களை  வந்து சந்தித்து பேச வேண்டுமானால், உங்களோடு சேர்ந்து சிரிக்க வேண்டுமானால், தோளோடு தோள் சேர்ந்து உரையாடவேண்டுமானல் உடனே வந்து சந்தித்துவிடுகிறோம், ஆனால் மறுமையில் இது போன்று ஒன்றாக இருக்க முடியுமா என்று நினைத்து அழுகிறேன் யா ரசூல்லுல்லாஹ், எனக்கு முன்னால் நீங்களும், உங்களுக்கு முன்னால் நானோ மரணித்தால் மறுமையில் சொர்கத்தில் உங்களை எங்கு வந்து தேடுவது யா ரசூலுல்லாஹ், அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னித்து எங்களை சொர்கத்தில் போட்டால், நீங்கள் எல்லாம் நபிமார்கள் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பீர்கள், நாங்கள் எல்லாம் சாதாரண அடியார்கள், சொர்கத்தில் உங்களைப் பார்க்க முடியாதே, அதை நினைத்து கவலையுற்றேன் யா ரசூலுல்லாஹ்”  என்று ஷஃபான்(ரலி) அவர்கள் அழுதுகொண்டே கூறினார்கள். உடன் அல்லாஹ்விடம் இருந்து பின் வரும் ஆயத்து வந்தது.

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். குர் ஆன் 4:69.

இந்த வசனத்தை நபி(ஸல்) ஓதிக்காட்டிய பிறகு தான் ஷஃபான்(ரலி) அவர்கள் தன்னுடைய அழுகையை நிறுத்தினார்கள் என்று ஹதீஸ் தொகுப்புகளில் பார்க்கிறோம்.

உத்தம நபி(ஸல்) அவர்கள் தன்னோடு வாழ்ந்த மக்களோடு நேசம் வைத்திருந்தார்கள், அதுபோல் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மேல் வைத்த பாசத்தால், மறுமையில் அவர்களோடு இருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டுமே என்று ஏக்கத்தில் சத்திய சஹாபாக்கள் அழுதுள்ளார்கள் என்பதை மேல் சொன்ன சம்பவத்தின் மூலம் நாம் அறிய முடிகிறது.

இப்போது நம் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் மறுமையில் அகிலத்தின் அருட்கொடை, மனித இனத்தின் முன் மாதிரி, நம்முடைய இஸ்லாத்தின் படைத்தளபதி முஹம்மது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் சுவர்கத்தில் ஒன்றாக இருக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்குமா என்று நினைத்து ஒரு நாளாவது அழுதிருக்கிறோமா?

இஸ்லாத்தில் இல்லாத நபி பிறந்த நாள் கொண்டாட்டம் கொண்டாடுகிறோமே, நபி(ஸல்) சுஹதாக்கள், சாலிஹீன்களோடு நாளை சுவர்கத்தில் இருக்க அல்லாஹ்விடன் அழுது பிரார்த்தனை செய்திருப்போமா?

போலியான கற்பனை கதாப்பாத்திரங்களின் காட்சிகளை பார்த்து அழும் இனிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே..!

நாம் அழ வேண்டும்
அர்த்தத்தோடு அழவேண்டும்….

இந்த வார உறுதி மொழி:

ஒவ்வொரு வினாடியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு, கீழ்படிந்து, நாளை மறுமையில் சுவர்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் நபிமார்கள், சுஹதாக்கள், சாலீஹீன்கள், நல்லடியார்களோடு இருக்க முயற்சிப்போம், அதற்காக து செய்வோம்

அல்லாஹ், நாளை மறுமையில் நம் அனைவரையும் சொர்கத்தில் நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருக்கும் அந்த பாக்கியத்தை அவனுடைய மாபெரும் கிருபையால் தந்தருள்வானாக.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
M தாஜுதீன்

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 10 18

அதிரைநிருபர் பதிப்பகம் | June 05, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

சென்ற வாரம் நபி(ஸல்) அவர்கள் இந்த உம்மத்தின் மேல் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தார்கள். நமக்காக பலமுறை கண்ணீர் சிந்தியுள்ளார்கள் என்பதைப் பார்த்தோம். இதைப்போல் அண்ணல் நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்த மக்கள் அவர்கள் மேல் எவ்வளவு பாசத்துடன், பிரியமாக இருந்துள்ளார்கள் என்பதை இந்த வாரப் பதிவிலும் தொடர்ந்து அடுத்த பதிவிலும் பார்க்கலாம்.

மக்காவிலிருந்து மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்யும் போது நடந்த சம்பவம். நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்தாலோ, அவர்களின் தலையைக் கொண்டு வந்தாலோ தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று கொடூர குரைஷிக் கூட்டம் திட்டம் தீட்டியிருந்தது. மக்காவின் ஒரு பகுதியில் குகையில் மூன்று நாட்கள் தங்கி, பின்னர் பயணத்திற்குரிய ஏற்பாடுகள் எல்லாம் செய்து, முன்னால் செல்லும் ஒட்டகத்தில் நபி(ஸல்) அவர்களும் பின்னால் செல்லும் ஒட்டகத்தில் அபூபக்கர் (ரலி) அவர்களும் பயணம் செய்தார்கள். அபூபக்கர்(ரலி) அவர்களுக்கு ஒரே பதற்றம், முன்னும் பின்னும் கவனமாகப் பார்த்த வண்ணம் நபி(ஸல்) அவர்களைப் பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள்.

அப்போது வழியில் அம்பெய்வதிலும், வேகமாகக் குதிரை ஓட்டுவதிலும் திறன் படைத்த சுராக்கா என்ற ஒருவர் நபி(ஸல்) அவர்களையும், அபூபக்கர்(ரலி) அவர்களையும் பார்த்து விட்டார், சுராக்காவை கண்ட அபூபக்கருக்கு(ரலி) மேலும் பதற்றம் அதிகரித்தது. அவர்களால் தாங்க முடியவில்லை. உடனே “யா ரசூலுல்லாஹ் நம் பின்னால் சுராக்கா வருகிறார், நம்மை அடையாளம் கண்டு கொண்டார், அவர் நம்மை எதிரிகளிடத்தில் காட்டிக் கொடுத்துவிடக் கூடும், அவனால் நம் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் யா ரசூலுல்லாஹ்,” அபூபக்கரின்(ரலி) பேச்சைக் காதில் வாங்கிக் கொண்டே இறைவசனங்களை ஓதிக்கொண்டே சென்றார்கள் நபியவர்கள். சுராக்கா மிக அருகில் நெருங்கியவுடன் மீண்டும் அபூபக்கர்(ரலி) அவர்கள் அழுதவர்களாக, “யா ரசூலுல்லாஹ்… சுராக்கா நெருங்கிவிட்டார் யா ரசூலுல்லாஹ்… நபி(ஸல்) அவர்கள் “என்ன அபூபக்கரே ஏன் பதற்றப்படுகிறீர்கள்?” என்று வினவினார்கள், அதற்கு அபூபக்கர்(ரலி) அவர்கள் “இந்த அபூபக்கராகிய நான் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சொல்லுகிறேன், நான் என்னை நினைத்துக் கவலைப் படவில்லை, அவனால் உங்களுக்கு ஏதவது நடந்து விடுமோ என்று அழுகிறேன் யா ரசூலுல்லாஹ்” என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறிய வாசகம் “ அபூபக்கரே நாம் இருவர் மட்டும் இருக்கிறோம் என்று எண்ண வேண்டாம் நம்மோடு அல்லாஹ்வும் இருக்கிறான் என்பது உமக்கு தெரியாதா?” என்று அபூபக்கரிடம்(ரலி) வினவி பின்பு, கையை உயர்த்தி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். உடனே சுராக்காவின் குதிரை கீழே சாய்ந்தது, அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சுராக்காவின் சூழ்ச்சியிலிருந்து நபி(ஸல்) அவர்களும், அபூபக்கர் (ரலி) அவர்களும் தப்பித்தார்கள் என்று புகாரி போன்ற பல ஹதீஸ் தொகுப்புகளில் நாம் காணலாம்.

மேல் சொன்ன சம்பவத்தில் நாம் கவனிக்கப்பட வேண்டியவை என்னவென்றால், தனக்கு ஆபத்து என்பதை நினைத்து கவலைப்படவில்லை, ஆனால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று நினைத்து அழுதுள்ளார்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள் என்பதை அறியலாம்.

நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்தாலோ, அவர்களின் தலையைக் கொண்டு வந்தாலோ தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று கொடூர குரைஷி கூட்டம் திட்டம் தீட்டியிருந்தது.

இந்த உலகத்தில் மக்களுக்கு உபதேசம் செய்ய அல்லாஹ்வுக்கு பிறகு தகுதியானவர்கள் நபிமார்கள், நல்லுபதேசத்தின் சிகரம் நம்முடைய நபி(ஸல்) அவர்கள் ஒருநாள தம் தோழர்களுக்கு மார்க்க சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்கள், அப்போது நபி(ஸல்) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.

“அல்லாஹுத்தாலா, ஒரு அடியானிடத்தில் இரண்டைக் கொடுத்து அதில் எது வேண்டும் என்று கேட்டான், அந்த அடியார் அதில் ஒன்றைத் தேர்வு செய்து கொண்டார்”. 

அல்லாஹ் கேட்ட அந்த இரண்டு என்ன என்பதையும் நபி(ஸல்) பிறகு கூறினார்கள். “ அந்த அடியாரிடத்தில். இந்த உலகத்தில் உள்ள ஆட்சி அதிகாரம் வேண்டுமா? அல்லது அல்லாஹ்விடத்தில் உள்ள விலை மதிக்க முடியாத பொக்கிஷம் வேண்டுமா? என்று அல்லாஹ் கேட்டான், அதற்கு அந்த அடியார் அல்லாஹ்விடத்தில் உள்ள அந்த பொக்கிஷத்தை தேர்வு செய்து கொண்டார்.”

இதுதான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை கேட்ட அபூபக்கர் (ரலி) அவர்கள் சத்தம் போட்டு அந்த சபையில் அழ ஆரம்பித்தார்கள். உடனே சபையில் எழுந்து நின்று நபி(ஸல்) அவர்களைப் பார்த்து “ யா ரசூலுல்லாஹ் என்னுடைய தாயும், தந்தையும், என்னுடை மக்கள், என்னுடைய சொத்துகள் அனைத்தையும் தருகிறேன், எங்களை விட்டு நீங்கள் பிரிந்துவிடாதீர்கள் யா ரசூலுல்லாஹ்” என்று அழுது கொண்டே சொன்னார்கள். அந்த சபையில் இருந்த சஹாபாக்கள் எல்லோரும் இந்த மூத்த சஹாபிக்கு என்ன ஆனது. அப்படி என்ன அழும்படி நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று சபையில் உள்ள எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

அபூபக்கர்(ரலி) அவர்கள் ஏன் அழுதார்கள் என்று நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். தாம் இவ்வுலகை விட்டுப் பிரியப்போகும் சூசகமான செய்தியை நம்முடைய மூத்த தோழர் புரிந்துவிட்டு அழுகிறார் என்பது நபி(ஸல்) அவர்களுக்கு புரிந்துவிட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். "அபூ பக்கரே! அழ வேண்டாம்! நட்பின் மூலமும் செல்வத்தின் மூலமும் மனிதர்களிலேயே எனக்குப் பேருதவியாக இருந்தவர் அபூபக்ரு தான். என் உம்மத்தில் யாரையேனும் நான் உற்ற நண்பராக ஏற்றுக் கொள்வதென்றால் அபூபக்ரையே ஏற்றிருப்பேன். என்றாலும் இஸ்லாம் என்ற அடிப்படையிலான சகோதரத்துவமும் நேசமும்தான் (இஸ்லாத்தில்) உண்டு. பள்ளியில் (என் இல்லத்திற்கு வருவதற்காக) உள்ள அபூபக்கரின் வாசல் தவிர ஏனைய வாசல்கள் அடைக்கப்பட வேண்டும்." என்று அபூபக்கருக்கு ஆறுதல் கூறினார்கள் என்பதை புகாரி போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் காணலாம்.

மேற்சொன்ன இரண்டு சம்பவங்களின் மூலம் ஏன் அபூபக்கர்(ரலி) அழுதார்கள் என்பதை இங்கு நாம் சிந்திக்க வேண்டும்.

சிறுவயதிலிருந்தே நம்முடைய தோழராக இருந்தவர்கள், நம்முடைய ஆருயிர் தோழர், நம்முடைய மருமகன், உலகில் எல்லா அந்தஸ்துகளையும் பெற்ற ஓர் உத்தமராக வாழ்ந்து வரும் நம்முடைய உடன் பிறவா சகோதரர், நம்முடைய மருமகன், நம் மேல் பாசம், நேசம், பிரியம் கொண்ட அல்லாஹ்வின் தூதரர் நம்மை விட்டு பிரியப் போகிறார்களே என்று நினைத்து அபூபக்கர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் சொன்ன அந்த வாசகத்தைக் கேட்டு அழுதார்கள் என்றால், நபி(ஸல்) அவர்கள் மேல் எந்த அளவுக்கு அபூபக்கர்(ரலி) அவர்கள் பாசம் வைத்துள்ளார்கள் என்பதை நாம் உணரலாம்.

இது போன்ற சம்பவங்களைப் படித்து அந்த சத்திய சஹாப்பாக்கள் நம்முடைய உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்களின் மேல் பாசம் வைத்ததைப் போல் நாமும் பாசம் வைக்க தவறிவிட்டோமே என்று என்றைக்காவது அழுதிருக்கிறோமா?

அபூபக்கர்(ரலி) உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), ஆயிசா(ரலி), ஹதீஜா(ரலி), பிலால்(ரலி) போன்ற சஹாபாக்களுக்கு நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருந்து வாழ்ந்தார்களே, அந்த பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லையே என்று என்றைக்காவது நினைத்து அழுதிருக்கிறோமா?

ஹிஜ்ரத் சம்பவங்களை ஏதோ சாதாரண சம்பவங்களைப் போன்று பயான்களில் கேட்கிறோம், ஹதீஸ் தொகுப்புகளில் வாசிக்கிறோம், 3 கிலோமீட்டர் தூரமுள்ள ஒர் இடத்துக்கு அவசரமாகச் சென்று வரவேண்டும், வாகனப் போக்குவரத்து இல்லை, கால் நடையாக நடந்து சென்றடைய வேண்டிய இடத்தை அடைகிறோம். கொஞ்சம் நமக்கு கலைப்பு ஏற்பட்டு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும், நம்முடைய தூதரர், அருமை சத்திய சஹாபாக்கள் பல நூறு கிலோமிட்டர் தூரங்களை கால் நடையாகக் கடந்து ஹிஜ்ரத்து செய்து இந்த இஸ்லாத்தை நமக்கு எடுத்துரைத்துள்ளார்களே என்று என்றைக்காவது நினைத்து அந்த கண்ணியமிக்கவர்களுக்காக கண்ணீர் சிந்தி துஆ செய்திருப்போமா?

கண்ணீர் சிந்தவேண்டும்...
அர்த்தத்தோடு  சிந்தவேண்டும்...

இந்த வார உறுதி மொழி:

இந்த இஸ்லாத்தை நம் அனைவருக்கும் எத்திவைத்த அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்காகவும், அனைத்து சத்திய சஹாபாக்களுக்கும், அவர்களைத் தொடர்ந்து இஸ்லாத்தை நம்மிடம் கொண்டுவந்த அத்தனை நல்லவர்களுகாகவும் நாம் ஒவ்வொரு நாளும் நம்முடைய ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பு அல்லாஹ்விடம் கையேந்தி து ஆ செய்வோமாக.

தொடரும் இன்ஷா அல்லாஹ்.
M தாஜுதீன்

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும்...! - தொடர் - 9 12

அதிரைநிருபர் பதிப்பகம் | May 29, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..


அறிவிப்பு : வியாழன் தோறும் வெளியாகி வந்த இந்த தொடர், இனி புதன் கிழமை தோறும் வெளிவரும் இன்ஷா அல்லாஹ் !

சென்ற வாரம் நபி(ஸல்) அவர்கள் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், குறிப்பாக பசியின் வேதனையிலும் கூட அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அழுதார்கள் என்பதையும், அவர்களும் அவர்களோடு வாழ்ந்த தோழர்களும் எவ்வளவு எளிமையான வாழ்வு வாழ்ந்துள்ளார்கள் என்பதையும் இரண்டு சம்பவங்களின் மூலம் அறிந்தோம். இந்த வாரம் நபி(ஸல்) அவர்கள் தம்முடைய உம்மத்தாகிய நம்மேல் எவ்வளவு அக்கறை வைத்து அழுதுள்ளார்கள் என்பதைப் பார்க்கலாம்.

அகிலத்தின் அருட்கொடையாம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை என்னுடைய சமுதாயம் என்னுடைய சமுதாயம் என்று சுஜூதில் விழுந்து அழுதுகொண்டே இருந்தார்கள்.

(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீதான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்). குர்ஆன் (5:118)

மேலே குறிப்பிட்ட இறைவசனம், ஈசா(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்ட சம்பவம். ஈசாவே நீதான் உன் தாயையும் வணங்க கட்டளை பிறப்பித்தாயா? என்று அல்லாஹ் கேட்பான், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து (பார்க்க: திருக்குர்ஆன் 5:116 மற்றும் 5:117) மேல் சொன்ன பிரார்த்தனையை (5:118) செய்தார்கள். இந்த இறைவசனத்தை ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் இஷா தொழுகைக்குப் பிறகு ஆரம்பித்து தஹஜ்ஜத்து தொழுகை வரை சுஜூதில் விழுந்து அழது கொண்டே இருந்தார்கள். அப்போது அல்லாஹு தன்னுடைய வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அழைத்து அந்த முஹம்மதுக்கு என்ன ஆயிற்று ஏன் இவர் இப்படி அழுகிறார்கள் என்று கேட்டு வரும்படி கட்டளையிடுகிறான்.

ஜிப்ரீல் நபி(ஸல்) அவர்களிடம் வந்து கேட்கிறார்கள், “என்ன உங்கள் பிரச்சினை?” நபி(ஸல்) அவர்கள் அழுதுகொண்டே “எனது உம்மத், எனது உம்மத், மறுமையில் எனது சமுதாயத்தின் நிலை என்ன என்பது எனக்கு தெரிந்தாக வேண்டும்” என்று ஜிப்ரிலிடம் கேட்டார்கள். உடனே ஜிப்ரீல் அல்லாஹ்விடம் இந்த செய்தியைச் சொல்ல, அல்லாஹ்  'ஓ ஜிப்ரீல்...! முஹம்மதிடம் சென்று இவ்வாறு கூறுங்கள். உமது உம்மத்தின் விஷயத்தில் நீர் திருப்தியுறும் வண்ணம் அல்லாஹ் நடந்து கொள்வான். நீர் கவலையடையும் வண்ணம் ஒருபோதும் நடக்க மாட்டான்' என்று ஜிப்ரீல் (அலை)கூறிய பிறகே நபி(ஸல்) அவர்கள் தம்முடைய அழுகையை நிறுத்தினார்கள் என்று நாம் ஹதீஸ்களில் (முஸ்லீம்) பார்க்கிறோம்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய சமுதாயமான இந்த உம்மத் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கின்றார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்த சமுதாயத்திற்கு அல்லாஹ் வேதனைகளைத் தந்து விடுவானோ என்ற அச்சம், மற்ற சமுதாயங்களை அழித்தது போன்று இந்த சமுதாயத்தையும் அழித்து விடுவானோ என்ற பயம், என் இறைவா....! எனது சமூகத்திற்கு நீ கருணை புரிவாயாக என்ற பரிவு ஆகிய அனைத்தும், 'என் உம்மத்....! என் உம்மத்....! என்ற பெருமானாரின் அழுகை நமக்கு உணர்த்துகின்றது.

அந்த ஆருயிர் நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக நம்மீது அளப்பரிய அன்பு கொண்டவர்களாகவே இருந்தார்கள். ஆகவேதான் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். '(பாருங்கள்!) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்களுடைய வெற்றியில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப்பரிவும், கருணையும் உடையவராகவும் இருக்கின்றார்'. (9:128).

மற்றொரு நாள் உஹத்தில் மரணமடைந்த ஷஹீத்களுக்கு பிரார்த்தனை செய்ய சென்ற போது கட்டுப்படுத்த முடியாமல் அழுகின்றார்கள் பெருமானார் (ஸல்). 'இறைத்தூதரே! ஏன் அழுகின்றீர்கள்?' என்று தோழர்கள் கேட்க, 'எனது சகோதரர்களை நினைத்து அழுகிறேன்' என்று கூறினார்கள். 'நாங்கள் தங்களது சகோதரர்கள் இல்லையா...?' என்று தோழர்கள் கேட்கவும், 'இல்லை, நீங்கள் எனது தோழர்கள். எனது சகோதரர்கள் எனக்குப் பின்னால் வருபவர்கள். என்னைப் பார்க்காமலேயே என் மீது ஈமான் கொண்டவர்கள்' என்று கூறி அழுதுள்ளார்கள் என்பதை அஹமது என்ற ஹதீஸ் தொகுப்பில் பார்க்கலாம். அந்த இரக்கத்தின் சிகரம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தன்னோடு வாழ்ந்த மக்களை தோழர்கள் என்றும், தன்னை காணாத நம்மை சகோதரர்கள் என்றும் சொல்லி நமக்காக அழுதுள்ளார்கள். 

பத்ரு யுத்தம் பற்றி நாம் அனைவரும் தெரிந்திருந்தாலும் ஒவ்வொரு முஸ்லீமும் பத்ரு போரின் நிகழ்வுகள் அனைத்தையும் ஞாபகப்படுத்துவதன் மூலம் நம்முடைய தக்வாவை நிச்சயம் அதிகரிக்கும். எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் காலத்தில் தாமே சென்று செய்த யுத்தங்களில் மிக முக்கியமானது பத்ரு யுத்தமாகும். இதுவே இஸ்லாத்தின் வெற்றிக்கும் ,இஸ்லாம் அழிக்கப்படாமல் பரவுவதற்கும், முன்னேற்றத்திற்கும் மக்களின் ஊக்கத்திற்கும் வீரத்திற்கும் வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பத்ருப் போர் நடைபெறப்போகும் அந்த இரவு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் அழுது துஆ செய்தார்கள். யா அல்லாஹ் இந்த போரில் நாங்கள் தோற்றால் உன்னை இந்த பூமியில் வணங்க ஆள் இருக்காது, ஆகவே எங்களுக்கு வெற்றியைத் தருவாயாக என்று தன்னுடைய மேல் ஆடை கீழே விழுவது கூட தெரியாமல் அழுது அழுது துஆ செய்தார்கள். பின்னர் அபூபக்கர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் “அல்லாஹ் நம்மை கைவிட மாட்டான் யா ரசூலுல்லாஹ் உங்கள் அழுகையை நிறுத்துங்கள்” என்று ஆறுதல் கூறினார்கள் அல்லாஹ் நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனையை ஏற்று வாக்குறுதி கொடுத்து மிகப்பெரிய வெற்றியையும் பத்ரில் தந்தான் என்ற வரலாற்று செய்தியை புகாரியில் நாம் காணலாம்.

அந்த பத்ருக்களத்தில் நபி(ஸல்) அவர்கள் அழுது அழுது செய்த பிரார்த்தனையால் இன்று இறைவனை மட்டுமே வணங்கும் கண்ணியமான மக்களாக வாழ்ந்துவருகிறோம் என்பதை நாம் உணரலாம்.

தம்மோடு வாழ்ந்த மக்களை நேசித்துள்ளார்கள், அவர்களின்  இறந்த பின்பு அவர்களின் மைய்யவாடிக்கெல்லாம் சென்று பிரார்த்தனை செய்தார்கள், தன்னை பார்க்காத மக்களை இறக்கத்துடன் சகோதர பாசத்துடன் நேசித்துள்ளார்கள், தம்முடைய அனைத்து உம்மத்துகளையும் நேசித்து மறுமையின் வேதனையிலிருந்து அனைவரையும் காக்க, அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்து அழுதிருக்கிறார்கள் என்பதை இது போல் பல ஹதீஸ்களின் மூலம் அறியலாம்.

இது போன்று ஓராயிரம் நிகழ்வுகளைக் கூறிக்கொண்டே செல்லலாம். அத்தனையும் அந்த உத்தம நபி முஹம்மது (ஸல்) அவர்கள் நம் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடுகளே....! அந்த அன்பின் உச்சநிலை தான் மேலே கூறப்பட்ட அண்ணலாரின் அழுகையும், என் உம்மத்...என் உம்மத்...என்ற இறைஞ்சுதலும்.

நம்மீது அளவிலா பாசம் வைத்த அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்காக நாம் என்ன கைமாறு செய்யப் போகிறோம்?

24 மணிநேரம் இருக்கும் ஒரு நாளில் 1 நிமிடமாவது அண்ணல் நபி(ஸல்) அவர்கள், அவர்களின் உம்மத்தான நம்மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதை நினைத்து அழுதிருக்கிறோமா அவர்களுக்காக தொழுகையில் கேட்கும் துஆ தவிர்த்து, பிற நேரங்களில் பிரார்த்தனை செய்திருக்கிறோமா?

அண்ணல் எங்கள் ஆருயிர் நபி(ஸல்) அவர்கள், அனைத்துத் துறைகளிலும் அவர்களே எங்களுக்கு முன்மாதிரி என்று வாய் வார்த்தைகளால் மட்டும் கூறி, அரசியல் வியாபாரம், கொடுக்கல் வாங்கல் என இன்னபிற துறைகளில் வேறு யாரையோ பின்பற்றுகிறோமே... அவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இதுதானா...?

உறுதி மொழி:

நம்மீது இரக்கம் கொண்ட அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களை வெறும் வாயளலவில் நேசிக்காமல், மனதார நேசிப்போம். அவர்கள் இஸ்லாத்திற்காக செய்த தியாகங்களை நினைத்து கண்ணீர் சிந்துவோம். அவர்கள் காட்டித் தந்த வழியை மட்டுமே பின்பற்றுவோம். அவர்களுக்காக ஐவேளையை தொழுகைக்கான பாங்குக்கு பிறகு வசீலா என்ற உயர்ந்த அந்தஸ்தை எங்கள் தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கு என்ற பாங்கு துஆவை ஓதுவோம்.
தொடரும் இன்ஷா அல்லாஹ் !
M.தாஜுதீன்

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும்..! - தொடர் - 8 18

அதிரைநிருபர் பதிப்பகம் | May 23, 2013 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..


நம் அருமை நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தமக்காகவும், இஸ்லாத்திற்காகவும் பல வகையில் உதவிகள் தியாகங்கள் செய்தவர்களின் செயலை எண்ணி அழுதார்கள்  என்ற படிப்பினை தரும் தகவல்களைச் சென்ற பதிவில் பார்த்தோம்.

இந்த வாரம், மிகவும் உருக்கமானது. இந்தப் பதிவைத் தட்டச்சு செய்ய இரண்டு நாட்கள் எடுத்தது, காரணம் இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள உணர்ச்சிபூர்வமான சம்பவங்களின் தாக்கத்தால் என்னால் தட்டச்சு செய்ய முடியவில்லை, இருப்பினும் கண்ணீர் மல்க இதை தட்டச்சு செய்தேன்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீனால் நமக்கு இவ்வுலகிற்கு கொடுக்கப்பட்ட அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்கள், சிறு வயதில் தாயையும் தந்தையையும் இழந்து, அனாதையாகி, உணவுக்காக ஆடு மேய்த்து, தன்னுடைய பெரிய தந்தையின் அன்பான வளர்ப்பில் வளர்ந்து, தன்னுடைய நல்லொழுக்கத்தாலும் நற்குணத்தாலும் கவரப்பட்டு செல்வ சீமாட்டி அன்னை ஹதீஜா(ரலி) அவர்களை மணமுடித்து, 40 வது வயதில் நபித்துவம் பெற்ற பின் தன்னுடைய மற்றும் தன் மனைவியினுடைய அனைத்து சொத்துக்களையும் இஸ்லாத்திற்காக தியாகம் செய்து, மக்காவில் தன்னுடைய ஊர் மக்களால் கொடுமைபடுத்தப்பட்டு பிறகு மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்று, மதீனாவில் எண்ணிலடங்காக் கஷ்டங்களை அனுபவித்து, பிறகு அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் மக்காவை வெற்றி கொண்டு உலக மக்களுக்கு ஜனாதிபதியாக இருந்து, தான் இறக்கும் போது தனக்கோ தன் குடும்பத்திற்கோ எந்த பொருட்களையும் விட்டுச் செல்லாமல் மரணித்தார்கள் என்று நாம் வரலாறுகளில் படித்திருப்போம். ஆனால் நபி(ஸல்) அவர்கள் என்னதான் அல்லாஹ்வுடைய தூதராக இருந்தாலும் ஒரு சாதாரண மனிதன் எப்படி உணவின்றி பசியில் வாடிடுவானோ அது போல் தன்னுடைய வாழ்நாளில் பல சந்தர்ப்பத்தில் இருந்துள்ளார்கள், இதனை அவர்களோடு அனுபவித்த உத்தம நபியின் உண்ணத தோழர்களும் அடங்குவர். இதோ ஒரு சில சம்பவங்கள்..

ஒரு காலகட்டத்தில் மிகப்பெரும் வரட்சியான சூழல், அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அன்றாட உணவுக்கு வழியின்றி பசியோடு வாழ்ந்து வந்தார்கள். அதே பசியோடு இருந்த சஹாபாக்களும் யாரிடமும் யாசகம் கேட்காமல் நபி(ஸல்) அவர்களுடைய சபையிலே வந்தமர்ந்து நல்லுபதேசங்களைக் கேட்டு தங்களின் பசியை மறந்தவர்களக்ச் செல்வார்கள்.

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் மதினாவில் சஹாபாக்களுடன் தொழுதுவிட்டு அமர்ந்திருக்கிறார்கள், அந்த நேரத்தில் சிறுவயதுடைய அனஸ் பின் மாலிக்(ரலி) (7 வயது சிறுவர்) அவர்கள் அந்த இடத்துக்கு வருகிறார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிறிய கற்களை எடுத்து ஒரு துணியில் போட்டு கட்டி தன்னுடைய வயிற்றில் கட்டிக்கொண்டு தன்னுடைய மேனியில் ஒரு துணியைப் போட்டு மூடுகிறார்கள். இதனை அனஸ்(ரலி) அவர்கள் காண்கிறார்கள்.

உடனே அனஸ்(ரலி) அவர்கள் பிற சஹாபாக்களிடம் “ ரஸூல்லுல்லாஹ் வயிற்றில் ஏதோ கட்டி வைத்துள்ளார்களே அது என்ன?” என்று கேட்கிறார்கள். அதற்கு அங்கிருந்த சஹாபாக்கள் சொன்னார்கள், நம்முடைய உத்தம நபி(ஸல்) அவர்கள் ரொம்ப நாட்களாக உணவின்றி சாப்பிடாமல் பசியில் இருக்கிறார்கள், தன்னுடைய பசியின் துயரத்தைத் தாங்கிக்கொள்ள துணியில் கல்லை கட்டி தன் வயிற்றில் கட்டி வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். இதனை கேட்ட அனஸ்(ரலி) சத்தம் போட்டு அந்த கஷ்டத்திற்கு நாசமுண்டாகட்டும், நாசமுண்டாகட்டும் என்று அழுதவர்களாக தன்னுடைய தாய் உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் வந்து நபி(ஸல்) அவர்கள் பசியினால் தன் வயிற்றில் கல்லைக் கட்டி வைத்திருப்பதைச் சொன்னார்கள். அந்த தீன்குலப்பெண்மனி உம்மு சுலை அவர்கள் உடனே நபி(ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்தனுப்புகிறார்கள். நபி(ஸல்) அந்த உணவை உம்மு சுலைம்(ரலி) அவர்கள் வீட்டிற்கே கொண்டு செல்லுமாறு அனஸ்(ரலி) அவர்களிடம் சொல்லிவிட்டு, அல்லாஹ்வின் கட்டளைபடி நபி(ஸல்) மற்றும் சஹபாக்களும் உம்மு சுலைம்(ரலி) அவர்கள் வீட்டிற்கு சென்று உணவருந்தினார்கள். அன்றைய தினம் அல்லாஹ்வால் நபி(ஸல்) அவர்கள் மூலம் ஓர் அற்புதம் நிகழ்த்தி காட்டப்பட்டு அத்தனை சஹபாக்களும் வயிறார உணவருந்தினார்கள் என்பதை புகாரி முஸ்லீம் போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் நாம் பார்க்கிறோம்.

மற்றுமொரு சம்பவம், இஸ்லாமிய வரலாற்றில் வீரத்திற்கு எடுத்துகாட்டான நபித்தோழர் உமர்(ரலி) அவர்கள் ஒரு  பகல் நேரத்தில் வெளியில் வேகமாக நடந்து வருகிறார்கள். இஸ்லாமிய வரலாற்றில் நபி(ஸல்) அவர்களை முதன் முதலில் உண்மைபடுத்திய (சித்தீக்) உண்மையாளர் என்று ஒட்டுமொத்த முஸ்லீம்களால் அழைக்கப்படும் அபூபக்கர்(ரலி) அவர்களும் அதே பட்டப் பகலில் வெளியே வருகிறார்கள். அந்த வீரத்தோழரும், உண்மை தோழரும் தெருவில் சந்திக்கிறார்கள்.

“என்ன உமரே இந்த பகல் நேரத்தில் எங்கே செல்கிறீர்கள்” என்று அபூபக்கர்(ரலி) கேட்க, அதற்கு உமர்(ரலி) அவர்கள் “எனதருமை தோழர் அபூபக்கரே பசி தாங்க முடியவில்லை, அதுதான் நபி(ஸல்) சபைக்குச் செல்கிறேன்” என்று சொன்னார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களின் கையைப் பிடித்து “அதே நிலைதான் எனக்கும் உமரே, வாருங்கள் நபி(ஸல்) அவர்களின் சபைக்கு நாம் செல்வோம்” என்று கூறி இருவரும் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்.

நபி(ஸல்) அவர்களும் அந்த வெயில் நேரத்தில் வெளியில் வருகிறார்கள், தன்னுடைய அருமைத் தோழர்கள் இருவரும் நடுப்பகலில் தெருவீதியில் வேகமாக வருவதைக் கண்டார்கள். “என்ன தோழர்களே எங்கே இந்த வெயில் நேரத்தில் கிளம்பிவிட்டீர்கள்” என்று கேட்டார்கள்.

அந்த தோழர்களில் ஒருவர் சொன்னார்கள் “யா ரசூலுல்லாஹ் பசி தாங்முடியவில்லை அதான் உங்களைச் சந்திக்க வந்தோம்” என்றார்கள். உடனே நபி(ஸல்) “எனது உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நானும் அதற்காகத்தான் வெளியில் வந்தேன்” என்று கூறி அந்த உத்தம தோழர்கள் இருவரைக் கட்டி அனைத்து, “வாருங்கள் நம் அருமை தோழர் அபூ அய்யூப் அல் அன்சார்(ரலி) அவர்கள் வீட்டிற்குச் செல்வோம்” என்று அவ்விருவரையும் அழைத்துச் சென்றார்கள்.

உத்தம நபியின் மதீனத்து உண்ணத தோழர் அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களும், உமர்(ரலி) அபூபக்கர்(ரலி) ஆகியோரின் வருகையை அறிந்து உடன் தன் இல்லத்திற்கு வந்தார்கள். உணவு சமைத்து வருவதற்கு முன்பு வந்த விருந்தாளிகள் மூவருக்கும் பேரீத்தம்பழங்களைக் கொடுக்கிறார்கள் கொஞ்சம் பசியார வைக்கிறார்கள்.

பிறகு உணவு சமைத்து தட்டில் வைத்து, அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கும், அருமை தோழர்களுக்கும் பரிமார மிக ஆவலோடு வருகிறார்கள். அப்போது நபி(ஸல்) திடீரென எழுகிறார்கள், சஹபாக்கள் இருவரும் என்ன ரஸூலுல்லாஹ் எழுந்துவிட்டார்களே என்று வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதுவரை தன் தோழர்களுடைய பசி, தன்னுடைய பசியைப் பற்றியே பேசிய நபி(ஸல்) அவர்கள் அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்களைப் பார்த்து “ நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்கிறோம் அபூ அய்யூப் அல் அன்சாரி அவர்களே, இந்தத் தட்டில் உள்ள உணவை என்னுடை அருமை மகள் ஃபாத்திமா அவர்களிடம் சென்று கொடுத்துவிட்டு வாருங்களேன். வீட்டில் என்னுடைய மகள் ஃபாத்திமாவும்(ரலி), மருமகன் அலி(ரலி), பேரக்குழந்தைகள் ஹசன்(ரலி) ஹுசைன்(ரலி) ஆகியோரும் பசியோடு இருக்கிறார்கள், சாப்பிட்டு பல நாட்களாகிவிட்டது.” என்று கேட்டுக்கொண்டார்கள். அதுவரை நபி(ஸல்) அவர்களும் இரு தோழர்கள் மட்டும் தான் பசியாக இருக்கிறார்கள் என்று எண்ணிய அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்களுக்கு அப்போது தான் தெரிந்தது நபி(ஸல்) அவர்களின் குடும்பமே பசியில் உள்ளது என்று. சுப்ஹானல்லாஹ்….

அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்கள் அந்த உணவை ஃபாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்குச் சென்று கொடுத்துவிட்டு, நபி(ஸல்) அவர்களை உபசரிப்பதற்காக தன் வீட்டிற்கு வந்தார்கள், பிறகு நபி(ஸல்) அவர்களுடனும், மற்ற இரு தோழர்களுடம் உணவருந்தினார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் நபி(ஸல்) அவர்கள் அழ ஆரம்பித்துவிட்டார்கள், தாடி நனையும் வரை அழுதார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களைப் பார்த்து அழுதவர்களாக சொன்னார்கள் “ இதோ ரொட்டி, இதோ இரைச்சி, இதோ பேரீச்சம்பழம் என்று விதவிதமாக சாப்பிடுகிறோமே, இதற்கெல்லாம் நாளை மறுமையில் அல்லாஹ் கேள்வி கணக்கு கேட்பான் தோழர்களே, அதை நினைத்து அழுகிறேன் என்றார்கள் என்பதை ஹதீஸ் தொகுப்புகளில் காணமுடிகிறது. சுப்ஹானல்லாஹ்.

அகிலத்தின் அருட்கொடை, இந்த உலகில் பிறந்த எவராலும் தோற்கடிக்க முடியாத படையின் தளபதி, ஏழைகளுக்கு வாழ்வளிக்கும் உலக பொருளாதார மாமேதை, தந்தைகளுக்கெல்லாம் முன்மாதிரி, கணவர்களுக்கெல்லாம் முன்மாதிரி, தோழர்களுக்குக்கெல்லாம் முன்மாதிரி, ஆசிரியர்களுக்கெல்லாம் முன்மாதிரி, வியாபரிகளுக்கெல்லாம் முன்மாதிரி, என்று ஒட்டுமொத்த மனித குலத்திற்கே முன்மாதிரி நம் உயிரினும் மேலான அண்ணல் நபி(ஸல்) அவர்களும் அவர்களின் ஆருயிர் தோழர்கள் அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) அவர்களோடு பல நாட்கள் பசியோடு இருந்த நிலையில், அல்லாஹ் நமக்கு வித விதமான உணவைத் தந்துள்ளானே, அவனின் அருளை நினைத்தும், உண்ட அந்த உணவுகளுக்கு நாளை மறுமை நாளில் அல்லாஹ்விடம்கேள்வி கணக்கு உள்ளதே என்று எண்ணி அழுதுள்ளார்கள் என்றால், நம்முடைய நிலை என்ன என்பதை சிந்திக்க வேண்டாமா…

அன்பான சகோதரர்களே, நபி(ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், அவர்களோடு வாழ்ந்த உத்தம தோழர்களும் பல நாட்கள் உண்ண உணவின்றி கஷடப்பட்ட நிலையிலும் அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த அருளை எண்ணி அல்லாஹ்வுக்காக கண்ணீர் சிந்தினார்கள்.

விதவிதமாக இன்று நாம் பல்சுவை உணவு, நாவுக்கு ருசியாக சாப்பிடுகிறோமே, என்றைகாவது நபி(ஸல்) அவர்களும் தோழர்களும் பசியோடு கஷ்டப்பட்டார்களே, என்று எண்ணி  அழுதிருக்கிறோமா?

பொருளாதாரத்தில் அபிவிருத்தியை தந்து, எந்தவித கஷ்டமும் இன்றி நம்முடைய வாழ்நாட்களைக் கழிக்கிறோமே, இந்தப் பொருளாதாரத்திற்கு நாளை அல்லாஹ்விடம் கேள்வி கணக்கு உண்டே என்று என்றைக்காவது மறுமையை நினைத்து அழுதிருக்கிறோமா?

உண்ண உணவின்றி கோடானு கோடி மக்கள் இன்றும் வாழ்கிறார்களே அவர்களின் நிலையை நினைத்து அல்லாஹ் நம்மை நல்ல நிலையில் வைத்துள்ளானே என்று அவனின் அருளை எண்ணி என்றைக்காவது அழுதிருக்கிறோமா?

அழ வேண்டும்
அர்த்தத்தோடு
அழ வேண்டும்.

இந்த வார உறுதி மொழி: 

நமக்கு ஏற்படும் கஷ்டமான சூழ்நிலையில், நபி(ஸல்) அவர்கள் பட்ட கஷ்டங்களை எண்ணிப்பார்ப்போம். என்னதான் நமக்கு செல்வம் வந்தாலும் அல்லது கஷ்டம் வந்தாலும், வறுமை, பசி வந்தாலும் நம்மை படைத்த அல்லாஹ்வைப் புகழ்வோம், அவனுடைய அருளை எண்ணி அவனுக்கு நன்றி சொலுத்துவோம்.

அல்லாஹு அக்பர்.
தொடரும் இன்ஷா அல்லாஹ் !
M. தாஜுதீன்

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும்..! - தொடர் - 7 14

அதிரைநிருபர் பதிப்பகம் | May 16, 2013 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

சென்ற வாரம் பதிக்கப்பட்ட அத்தியாயத்தில்  நபி (ஸல்) அவர்களும், தனக்கு சோதனைகள் மற்றும் மனநெருக்கடி ஏற்படும் போது அழுதுள்ளார்கள் என்பதை நாம் சில ஹதீஸ் தொகுப்புகப் பார்த்தோம். நபி (ஸல்) அவர்களைவிட நமக்கு முன்மாதிரி மனிதர் உலகில் வேறு யாரும் கிடையாது.

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்காகவும், தனக்காகவும் அளப்பரிய தியாகங்கள் செய்தவர்களை நினைத்து  பல சந்தர்பங்களில் ஆனந்தக் கண்ணீருடன் அழுதுள்ளார்கள். அதனை விளக்கும் ஒரு சில சம்பவங்கள் இதோ.

ஒரு தாய் தன்னுடைய மகனைப் பிரிந்து பல நாட்கள் கழித்து சந்தித்தாலோ, அல்லது ஒரு சகோதரி நீண்ட நாட்கள் பிரிந்த தன்னுடைய சகோதரனை மீண்டும் சந்தித்தாலோ, அல்லது ஓர் உற்ற நண்பன் தன்னுடை இளமை காலத்து நண்பனை நீண்டதொரு இடைவேளைக்கு பிறகு சந்தித்தாலோ ஆனந்த கண்ணீர் வருவது இயல்பானது. இது நம்மில் எல்லோருக்கும் பல சந்தர்பத்தில் ஏற்பட்டிருக்கும். இது போலவே அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது அது அந்த நபர்களின் தியாகத்தை நினைத்து கண்ணீர் சிந்தியுள்ளார்கள்.

ஒரு முறை நபி(ஸல்) அவர்களின் சபைக்கு ஒரு பெண் வந்தார்கள், அவர்கள் யார் என்றால், நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய பால்யகாலத்தில் தாயை இழந்து, பிறகு ஹலீமா ஸஃதிய்யா என்ற பெண்மணி அவர்களிடம் பால்குடித்து வளர்ந்தார்கள் என்பது நாம் வரலாற்றில் அறிந்த தகவல். அந்த பால்குடித் தாய் அவர்களின் மகளார் பல வருடங்களுக்குப் பிறகு தீன்குலத் தலைவர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் சபைக்கு வந்தார்கள். தன்னுடைய பால்குடி சகோதரிக்கு தன்னிடம் இருந்த விரிப்பை விரித்துவிட்டு, அவர்கள் தன்னருகில் அமர வைத்து, நீண்ட நாட்களுக்கு பிறகு கண்ட தன் சகோதரியைப் பார்த்து  மாண்புமிகு இறைத் தூதர் நபி(ஸல்) அவர்கள் சந்தோசத்தில் அழ ஆரம்பித்தார்கள், தன்னுடைய தாடி நனைகின்ற வரை அழுதுள்ளார்கள் என்று ஹதீஸ் தொகுப்புகளில் காணமுடிகிறது.

அப்போது நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களிடம் சொன்னார்கள், “எனக்கு இந்த சகோதரியின் தாய் பாலுட்டினார், அந்த பாலூட்டிய தாயுடைய மகளுக்கு நான் எவ்வளவு கொடுத்தாலும், அவைகள் அந்த பாலூட்டிய தாயின் தியாகத்துக்கு ஈடாகாது” என்று சொல்லி பெருமிதம் கொண்டதோடு அல்லாமல், தன்னுடைய பால்குடி சகோதரிக்கு சில சொத்துக்களைக் கொடுத்தார்கள் என்று வரலாற்று தொகுப்புகளில் (முஸ்னத் அப்துற்றஜ்ஜாக்) காண முடிகிறது.

குழந்தை பருவத்தில் தன்னோடு ஒன்றாக ஒரே தாயிடன் பால்குடித்து வளர்ந்த அந்த சகோதரியைப் பல வருடங்கள் கழித்து பார்த்த சந்தோசத்தாலும், அந்த பாலூட்டிய தாய் தனக்காக செய்த தியாகத்தை நினைத்தும்  ஆனத்தக் கண்ணீர் விட்டு நம்முடை தலைவர் நபி(ஸல்) அழுதுள்ளார்கள் என்பதை இந்தச் சம்வங்களில் இருந்து நாம் காணமுடிகிறது.

இது போல் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்கள் நம்முடைய தூய மார்க்கம் இஸ்லாத்திற்காக செய்த தியாகங்களை நினைத்து அழுது, மற்ற தோழர்களிடம் அந்தத் தியாக செம்மல்களின் செயலைப் பெருமிதத்துடன் சொல்லி சந்தோசத்தில் அழுத்துள்ளார்கள் என்பதை பல வரலாற்று சம்வங்களில் நாம் காணலாம். 

இதோ நம் எல்லோருக்கும்  படிப்பினை தரும் சம்பவம், வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுத்தப்பட வேண்டியவை.

முஸ்ஹப் இப்னு உமைர்(ரலி) அவர்கள். இவர் மக்கத்து மாநகரின் மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்தவர். குரைசி வம்சத்தின் முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்ளும் தகுதியுடையவராக இருந்தவர். அவர்கள் ஒரு திசையில் வருவதற்கு முன்பும் வந்த பின்பும் அவர் பிரயோகித்த வாசனை திரவியம் மனத்துக் கொண்டே இருக்கும், ஒரு நாளை ஓர் ஆடை என்று புத்தம் புதிய ஆடையுடனே மக்கத்து பெருவீதிதியில் வலம் வந்தவர். ஆனால் இஸ்லாத்தில் இணைந்த ஒரே ஒரு காரணத்திற்காக, தன்னுடைய வீட்டில் தன் தாயால் அடைத்து வைக்கப்பட்டு கொடுமை படுத்தப்பட்டார்கள், பின்னர் அந்த கொடுமையிலிருந்து தப்பித்து, நபி(ஸல்) அவர்களிடம் வந்தடைந்தார்கள்.

முஸ்ஹப் இப்னு உமைர்(ரலி) அவர்களையும் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) என்ற கண் பார்வை தெரியாத தோழரையும் நபி(ஸல்) மதினாவிற்கு ஏகத்துவத்தை எடுத்து சொல்லும் முதல் தூதுவர்களாக கண்ணியப்படுத்தி அனுப்பி வைத்தார்கள் என்பதையும் நாம் பல சந்தர்ப்பங்களில் ஹதீஸ்களில் படித்திருப்போம்.

அதே முஸ்ஹப் இப்னு உமைர்(ரலி) அவர்கள் ஒரு நாள், கடினத் தன்மையுடைய ஆடையுடன் ஒரு கஷ்டமான கோலத்துடன் நபி(ஸல்) அவர்களுடைய சபைக்கு வருகிறார்கள், நபி(ஸல்) முஸ்ஹப்(ரலி) அவர்களுடைய ஆடையையும், அவர்களுடைய நிலையை பார்த்து அழ ஆரம்பித்தார்கள். பிறகு நபி(ஸல்) தன்னுடைய தோழர்களிடம் சொன்னார்கள் “இந்த முஸ்ஹப்(ரலி) இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால் அல்லாஹ் அவருக்கு கொடுத்த அருட்கொடையை நான் நினைத்து பார்க்கிறேன், அவருடைய தாயார் முஸ்ஹப்பை (ரலி) அவர்களை எப்படி செல்வ செழிப்பாக வைத்திருந்தார் என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன்”. இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்திற்காக எல்லா வசதிகளையும் துறந்துவிட்டு கடுமையான ஆடையோடு இருக்கும் என்னுடைய முஸ்ஹப்பின் (ரலி) தியாகத்தை நினைத்து ஆனத்தத்தில் அழுகிறேன் என்று இரக்க குணமுடைய நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள். (இந்த சம்பவம் இப்னு மந்தா என்ற அறிஞருடைய அத்தர்கீப் வத்தர்கீப் என்ற ஹதீஸ் தொகுப்பில் பதிவு செய்யப்படுள்ளது.)

இதே முஸ்ஹப் இப்னு உமைர்(ரலி) அவர்கள் உஹத் யுத்தத்தில் ஷஹீதானார்கள். நபி(ஸல்) அவர்கள் முஸ்ஹப் அவர்கனின் ஜனாஸாவுக்கு கஃபனிடுவதற்காக ஆடையை போர்த்துகிறார்கள், தலையை மூடினால் கால் தெரிந்தது, காலை மூடினால் தலை தெரிந்தது. பிறகு இத்ஹிர் என்ற புல்லை எடுத்து கால் பகுதியை மறைத்து அந்த தியாகச் செம்மல் முஸ்ஹப் இப்னு உமைர் (ரலி) அவர்களை அடக்கம் செய்தார்கள் என்று வரலாறுகளில் நாம் காண்கிறோம்.

இதை போன்று கதாதா(ரலி) அவர்களை பற்றி மிகவும் சிலாகித்து தன் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் சொல்லி கண்ணீர் விட்டார்கள் என்பதை வரலாறுகளில் பதியப்பட்டுள்ளது.

உஹதுப் போரில் நம்முடைய ஈருலகத்தின் வெற்றிக்குச் சான்று அளிக்கும் படைத் தலைவர் நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காக நான்கு திசைகளிலும் அம்புகளை எதிரிகள் ஏவிக்கொண்டிருந்தார்கள். தன்னுடைய தலைவருக்கு ஆபத்து ஏற்பட போகிறது என்று உணர்ந்த கதாதா(ரலி) நபி(ஸல்) அவர்களை நோக்கி வரும் அம்புகளை தன்னுடைய உடம்பை நபி(ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக ஆக்கி அந்தப் போரில் ஷஹீதானார்கள். தன்னுடைய அருமை தோழர் கதாதா(ரலி) அவர்களின் தியாகத்தை பெருமிதமாக தன் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் சொல்லி ஆனத்தத்தில் கண்ணீர் சிந்தினார்கள் என்பதை தபரானி போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் நாம் காண முடிகிறது.

இப்படி நபி(ஸல்) அவர்கள், தன்னோடு வாழ்ந்த தோழர்கள், சொந்தங்கள் இஸ்லாத்திற்காகவும், தனக்காகவும் எல்லா வகையிலும் தியாகம் செய்தவர்களை நினைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டுள்ளார்கள் என்பதை நாம் அறிகிறோம்.

ஆனால் நாம் எதற்கெல்லாம் கண்ணீர் சிந்துகிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு நாளாவது, நபி(ஸல்) மற்றும் ஸஹாபாக்கள் இஸ்லாத்திற்காக செய்த தியாகத்தை நினைத்து ஆனத்தத்தில் அழுது பெருமிதம் அடைந்திருக்கிறோமா?

தொலைக் காட்சித் தொடர் நாடகத்தில் வரும் பொய் கதாப்பாத்திரங்களுக்காக கண்ணீர் சிந்தும் நாம் என்றைக்காவது, இஸ்லாத்திற்காக வாழ்ந்து மரணித்த எண்ணற்ற தியாகிகளின் வரலாறுகளை படித்து அவர்களின் தியாகங்களை நினைத்து கண்ணீர் அல்லாஹ்வுக்காக வடித்திருக்கிறோமா?

இன்று முஸ்லீம் என்று பெருமிதப்படுகிறோமே! இதற்கெல்லாம் காரணமாக யார் யாரெல்லாம் இருந்துள்ளார்கள் என்பதை என்றைக்காவது யோசித்து பார்த்து, நமக்கு அல்லாஹ் கொடுத்துள்ள இந்த நிஃமத்தை நினைத்து அழுதிருக்கிறோமா?

நாம் அழ வேண்டும். இஸ்லாத்திற்காக அழ வேண்டும். நபி(ஸல்) அவர்களின் தியாகத்தை நினைத்து அழ வேண்டும். ஸஹாபாக்களின் தியாகங்களை நினைத்து அழ வேண்டும் அனைத்தும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை முன்னிருத்தியே அழவேண்டும்.

இந்த வார உறுதி மொழி:

கற்பனை பொய் கதைகளான சினிமாக்கள், தொலைக்காட்சி தொடர் நாடகங்களைப் பார்த்து கண்ணீர் வடிப்பதை இன்றோடு நிறுத்திவிட்டு.  தன் உடலாலும், உழைப்பாலும், செல்வத்தாலும் தியாகம் செய்து வாழ்ந்து மரணித்த தியாகச் செம்மல்களில் வரலாறுகளைப் படிப்போம், இஸ்லாத்திற்காக அவர்களின் தியாகங்களை நினைத்து ஆனந்த கண்ணீர் சிந்துவோம், படிப்பினை பெறுவோம், பிறருக்கும் எடுத்துரைப்போம், நன்மையானவைகளை நம்முடைய வாழ்வில் கடைப்பிடிபோம். இன்ஷா அல்லாஹ்.

M தாஜுதீன்

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 6 8

அதிரைநிருபர் பதிப்பகம் | May 09, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

திருக்குர்ஆனோடு சத்திய சஹாபாக்களில் சிலர் எப்படி தங்களை மிக நெருக்கமாக்கி கொண்டார்கள் என்று இதற்கு முந்தைய பதிவில் பார்த்தோம். இந்த தொடரில் நபி(ஸல்) அவர்கள் தங்களுக்கு கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கும் போது அழுதுள்ளார்கள், இதோ ஒரு சில சந்தர்பங்கள் நாம் படிப்பினை பெறுவதற்காக.

சோதனைகள் மற்றும் மனநெருக்கடி ஏற்படும் சந்தர்ப்பத்தில் ஒருவர் அழுதார் என்றால் அவருடைய மனப்பாரம் குறைகிறது என்பது நம் எல்லோராலும், ஏற்றுக் கொள்ளப்பட்ட நிதர்சனம். போர்முனையின் பேரணியில் புன்னகை மன்னர்! வீரத்தின் விளைநிலம் வேந்தர்! நபி (ஸல்) அவர்களும் தனக்கு சோதனைகள் மற்றும் மனநெருக்கடி ஏற்படும் போது அழுதுள்ளார்கள் என்பதை நாம் பல ஹதீஸ் தொகுப்புகளில் காண முடிகிறது.

நபி(ஸல்) அவர்களுக்கு ஆண் வாரிசே இல்லை என்று எல்லோரும் ஏளனமாக பேசிய ஓர் காலகட்டத்தில் அல்லாஹ் அவர்களுக்கு ஒரு மகனை கொடுத்தான், அவர்களின் அருமை மகனுக்கு இபுறாஹீம்(ரலி) என்று  ஏகத்துவ கொள்கையின் தந்தை அவர்களின் அழகிய பெயரை சூட்டியிருந்தார்கள். 

அனஸ்(ரலி) அறிவித்தார்கள். 

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூ ஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவராவார். நபி(ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது கருணையாகும்" என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து அழுதார்கள். பிறகு, 'கண்கள் நீரைச் சொரிகின்றன் உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது; எனினும், இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகக் கவலைப்படுகிறோம்" என்றார்கள். புகாரி 1303.  Volume :2 Book :23

உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்கள். 

நபி(ஸல்) அவர்களின் ஒரு புதல்வியாரின் மகன், இறக்கும் தருவாயில் இருந்தார். எனவே, நபி(ஸல்) அவர்கள் தம்மிடம் வந்து சேரும்படி அந்தப் புதல்வியார் சொல்லி அனுப்பினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியதாகும். ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையைக் கைக்கொள்வீராக நன்மையை எதிர்பார்ப்பீராக' என்று சொல்லியனுப்பினார்கள். (மீண்டும்) அவர் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் (கட்டாயம் தம்மிடம் வர வேண்டுமெனக்) கூறியனுப்பினார். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் புதல்வியின் வீட்டுக்குச் செல்ல) எழுந்தார்கள். நானும், முஆத் இப்னு ஜபர்(ரலி), உபை இப்னு கஅப்(ரலி), உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) ஆகியோரும் அவர்களுடன் எழுந்தோம். நாங்கள் (வீட்டுக்குள்) நுழைந்தவுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அந்தச் சிறுவரைக் கொடுத்தார்கள். அந்தச் சிறுவரின் மூச்சு (சுவாசிக்க முடியாமல்) நெஞ்சுக்குள் திணறிக் கொண்டிருந்தது. 

அது தோல் துருத்தியைப் போன்று (ஏறி இறங்கிக் கொண்டு) இருந்தது என்று அறிவிப்பாளர் கூறினார்கள் என நான் (அபூ உஸ்மான் அந்நஹ்தீ) எண்ணுகிறேன். 

(இதைக் கண்ணுற்ற) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழுதார்கள். அப்போது (அங்கிருந்த) ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்கள், '(இறைத்தூதர் அவர்களே!) நீங்கள் அழுகின்றீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்' என்றார்கள். புகாரி: 7448. Volume :7 Book :97

ஆண் பிள்ளையானாலும் பெண் பிள்ளைகளானாலும் சிறுபிள்ளைகள் என்றாலே ஏந்தல் நபி(ஸல்) அவர்களுக்கு அவ்வளவு பிரியம் என்பதை பல ஹதீஸ்களில் படித்திருக்கிறோம். (நபிமணியும் நகைச்சுவையும் என்ற தொடரில் சகோதரர் இக்பால் M ஸாலிஹ் அவர்கள் எழுதிய இந்த பதிவை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள் http://adirainirubar.blogspot.in/2013/03/blog-post_14.html நபி(ஸல்) அவர்கள் சிறு பிள்ளைகள் மேல் எவ்வளவு பாசம் வைத்துள்ளார்கள் என்று). 

மேற் சொன்ன இரண்டு சம்பவங்களில் பாசத்திற்குறிய அருமை மகனார் இபுறாஹீம்(ரலி) அவர்களின் மரணத் தருவாயில், நபி(ஸல்) அவர்களுக்கு கடுமையான கவலை ஏற்படுகிறது. தன்னுடைய பாசத்திற்குரிய மகன், ஒரே ஒரு ஆண் குழந்தை, அன்போடு நேசம் காட்டி வளர்த்து வந்த தன்னுடைய அருமை மகனார் இறந்த போதும், தம்முடைய புதல்வியின் மகன் ஒருவர் இறந்தபோதும் நபி(ஸல்) அவர்களின் மனதிற்கு மிகப்பெரும் பாரம் ஏற்பட்டு அல்லாஹ்வுடைய இந்த நாட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தும்கூட நபி(ஸல்) அவர்கள் அழுதுள்ளார்கள் என்று அறிய முடிகிறது. அழுத நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய “குழந்தை மீது தான் வைத்திருந்த பாசம் என்னை அழ வைக்கிறது” என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் என்னதான் கஷ்டங்கள் ஏற்பட்டாலும் “நாங்கள் அல்லாஹ்வுக்கு விரும்பாத வார்த்தைகள் பேசமட்டோம்”, மேலும் 'அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்'  என்றும் கூறினார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

அழுவதை அனுமதித்துள்ள நபி(ஸல்) அவர்கள், இன்னும் பிற ஹதீஸ் தொகுப்புகளில் வாய்விட்டு அழுவதையும், ஓலமிடுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்பதை காணலாம்.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள். 

ஸஅத் இப்னு உபாதா(ரலி) நோயுற்றபோது நபி(ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஆகியோரோடு நோய் விசாரிக்கச் சென்றார்கள். வீட்டில் நுழைந்தபோது (ஸஅத் இப்னு உபாதாவின்) குடும்பத்தினர் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டதும், 'என்ன? இறந்துவிட்டாரா?' எனக் கேட்டார்கள். 'இல்லை; இறைத்தூதர் அவர்களே!' என்றனர். நபி(ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத் தொடங்கினர். பின் நபி(ஸல்) அவர்கள், '(மக்களே!) நீங்கள் (செவி சாய்த்துக்) கேட்க மாட்டீர்களா? நிச்சயமாகக் கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அல்லாஹ் தண்டிப்பதில்லை - பின்பு, தம் நாவின் பால் சைகை செய்து எனினும் இதன் காரணமாகத்தான் தண்டனையோ அருளோ வழங்குகிறான். நிச்சயமாகக் குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மய்யித் வேதனை செய்யப்படுகிறது" என்று கூறினார்கள். 

ஒப்பாரி வைப்பவர்களை உமர்(ரலி) கண்டால் கம்பினால் அடிப்பார்; கல்லெறிவார். இன்னும் மண்வாரி வீசவும் செய்வார்.  புகாரி: 1304 Volume :2 Book :23

ஓப்பாரி வைப்பதை நபி(ஸல்) வன்மையாக கண்டித்துள்ளார்கள், நபித்தோழர் உமர்(ரலி) அவர்களும் ஒப்பாரி வைப்பவர்களிடம் கடினமாக நடந்துள்ளர்கள். மேலும் ஒருவர் இறந்துவிட்டால் ஒப்பாரி வைத்து ஓலமிடுவது இறந்த மய்யித்துக்கு நாம் செய்யும் துரோகம் என்பதை மேலே குறிப்பிட்ட ஹதீஸீன் மூலம் அறியலாம்.

நம்முடைய அழுகைகள் எப்படி உள்ளன என்பதை மேற்சொன்ன வரலாற்று சம்பவங்களின் மூலம் சீர்த்துக்கி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நம் வீடுகளில் எத்தனையோ இறப்புகளை சந்தித்திருப்போம், நாம் நபி(ஸல்) அவர்கள் அழுதது போல் அழுதிருக்கிறோமா? 

அழுவதாக இருந்தாலும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் அழுவோம்.

இந்த வார உறுதி மொழி:

என்ன கஷ்டமோ, சோதனையோ, இது அல்லாஹ்வுடைய நாட்டம் என்று எண்ணி, எங்கள் தூதர் காட்டித் தந்த வழியில் மட்டுமே அழுது கண்ணீர் சிந்துவோம்,

'யா அல்லாஹ் எங்கள் மீது நீ இரக்கம் காட்டுவாயாக. உனக்காக மட்டுமே அஞ்சி அழும் நன்மக்களாக எங்களை ஆக்குவாயாக.

M தாஜுதீன்