Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 10 18

அதிரைநிருபர் பதிப்பகம் | June 05, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

சென்ற வாரம் நபி(ஸல்) அவர்கள் இந்த உம்மத்தின் மேல் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தார்கள். நமக்காக பலமுறை கண்ணீர் சிந்தியுள்ளார்கள் என்பதைப் பார்த்தோம். இதைப்போல் அண்ணல் நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்த மக்கள் அவர்கள் மேல் எவ்வளவு பாசத்துடன், பிரியமாக இருந்துள்ளார்கள் என்பதை இந்த வாரப் பதிவிலும் தொடர்ந்து அடுத்த பதிவிலும் பார்க்கலாம்.

மக்காவிலிருந்து மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்யும் போது நடந்த சம்பவம். நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்தாலோ, அவர்களின் தலையைக் கொண்டு வந்தாலோ தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று கொடூர குரைஷிக் கூட்டம் திட்டம் தீட்டியிருந்தது. மக்காவின் ஒரு பகுதியில் குகையில் மூன்று நாட்கள் தங்கி, பின்னர் பயணத்திற்குரிய ஏற்பாடுகள் எல்லாம் செய்து, முன்னால் செல்லும் ஒட்டகத்தில் நபி(ஸல்) அவர்களும் பின்னால் செல்லும் ஒட்டகத்தில் அபூபக்கர் (ரலி) அவர்களும் பயணம் செய்தார்கள். அபூபக்கர்(ரலி) அவர்களுக்கு ஒரே பதற்றம், முன்னும் பின்னும் கவனமாகப் பார்த்த வண்ணம் நபி(ஸல்) அவர்களைப் பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள்.

அப்போது வழியில் அம்பெய்வதிலும், வேகமாகக் குதிரை ஓட்டுவதிலும் திறன் படைத்த சுராக்கா என்ற ஒருவர் நபி(ஸல்) அவர்களையும், அபூபக்கர்(ரலி) அவர்களையும் பார்த்து விட்டார், சுராக்காவை கண்ட அபூபக்கருக்கு(ரலி) மேலும் பதற்றம் அதிகரித்தது. அவர்களால் தாங்க முடியவில்லை. உடனே “யா ரசூலுல்லாஹ் நம் பின்னால் சுராக்கா வருகிறார், நம்மை அடையாளம் கண்டு கொண்டார், அவர் நம்மை எதிரிகளிடத்தில் காட்டிக் கொடுத்துவிடக் கூடும், அவனால் நம் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் யா ரசூலுல்லாஹ்,” அபூபக்கரின்(ரலி) பேச்சைக் காதில் வாங்கிக் கொண்டே இறைவசனங்களை ஓதிக்கொண்டே சென்றார்கள் நபியவர்கள். சுராக்கா மிக அருகில் நெருங்கியவுடன் மீண்டும் அபூபக்கர்(ரலி) அவர்கள் அழுதவர்களாக, “யா ரசூலுல்லாஹ்… சுராக்கா நெருங்கிவிட்டார் யா ரசூலுல்லாஹ்… நபி(ஸல்) அவர்கள் “என்ன அபூபக்கரே ஏன் பதற்றப்படுகிறீர்கள்?” என்று வினவினார்கள், அதற்கு அபூபக்கர்(ரலி) அவர்கள் “இந்த அபூபக்கராகிய நான் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சொல்லுகிறேன், நான் என்னை நினைத்துக் கவலைப் படவில்லை, அவனால் உங்களுக்கு ஏதவது நடந்து விடுமோ என்று அழுகிறேன் யா ரசூலுல்லாஹ்” என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறிய வாசகம் “ அபூபக்கரே நாம் இருவர் மட்டும் இருக்கிறோம் என்று எண்ண வேண்டாம் நம்மோடு அல்லாஹ்வும் இருக்கிறான் என்பது உமக்கு தெரியாதா?” என்று அபூபக்கரிடம்(ரலி) வினவி பின்பு, கையை உயர்த்தி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். உடனே சுராக்காவின் குதிரை கீழே சாய்ந்தது, அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சுராக்காவின் சூழ்ச்சியிலிருந்து நபி(ஸல்) அவர்களும், அபூபக்கர் (ரலி) அவர்களும் தப்பித்தார்கள் என்று புகாரி போன்ற பல ஹதீஸ் தொகுப்புகளில் நாம் காணலாம்.

மேல் சொன்ன சம்பவத்தில் நாம் கவனிக்கப்பட வேண்டியவை என்னவென்றால், தனக்கு ஆபத்து என்பதை நினைத்து கவலைப்படவில்லை, ஆனால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று நினைத்து அழுதுள்ளார்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள் என்பதை அறியலாம்.

நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்தாலோ, அவர்களின் தலையைக் கொண்டு வந்தாலோ தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று கொடூர குரைஷி கூட்டம் திட்டம் தீட்டியிருந்தது.

இந்த உலகத்தில் மக்களுக்கு உபதேசம் செய்ய அல்லாஹ்வுக்கு பிறகு தகுதியானவர்கள் நபிமார்கள், நல்லுபதேசத்தின் சிகரம் நம்முடைய நபி(ஸல்) அவர்கள் ஒருநாள தம் தோழர்களுக்கு மார்க்க சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்கள், அப்போது நபி(ஸல்) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.

“அல்லாஹுத்தாலா, ஒரு அடியானிடத்தில் இரண்டைக் கொடுத்து அதில் எது வேண்டும் என்று கேட்டான், அந்த அடியார் அதில் ஒன்றைத் தேர்வு செய்து கொண்டார்”. 

அல்லாஹ் கேட்ட அந்த இரண்டு என்ன என்பதையும் நபி(ஸல்) பிறகு கூறினார்கள். “ அந்த அடியாரிடத்தில். இந்த உலகத்தில் உள்ள ஆட்சி அதிகாரம் வேண்டுமா? அல்லது அல்லாஹ்விடத்தில் உள்ள விலை மதிக்க முடியாத பொக்கிஷம் வேண்டுமா? என்று அல்லாஹ் கேட்டான், அதற்கு அந்த அடியார் அல்லாஹ்விடத்தில் உள்ள அந்த பொக்கிஷத்தை தேர்வு செய்து கொண்டார்.”

இதுதான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை கேட்ட அபூபக்கர் (ரலி) அவர்கள் சத்தம் போட்டு அந்த சபையில் அழ ஆரம்பித்தார்கள். உடனே சபையில் எழுந்து நின்று நபி(ஸல்) அவர்களைப் பார்த்து “ யா ரசூலுல்லாஹ் என்னுடைய தாயும், தந்தையும், என்னுடை மக்கள், என்னுடைய சொத்துகள் அனைத்தையும் தருகிறேன், எங்களை விட்டு நீங்கள் பிரிந்துவிடாதீர்கள் யா ரசூலுல்லாஹ்” என்று அழுது கொண்டே சொன்னார்கள். அந்த சபையில் இருந்த சஹாபாக்கள் எல்லோரும் இந்த மூத்த சஹாபிக்கு என்ன ஆனது. அப்படி என்ன அழும்படி நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று சபையில் உள்ள எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

அபூபக்கர்(ரலி) அவர்கள் ஏன் அழுதார்கள் என்று நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். தாம் இவ்வுலகை விட்டுப் பிரியப்போகும் சூசகமான செய்தியை நம்முடைய மூத்த தோழர் புரிந்துவிட்டு அழுகிறார் என்பது நபி(ஸல்) அவர்களுக்கு புரிந்துவிட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். "அபூ பக்கரே! அழ வேண்டாம்! நட்பின் மூலமும் செல்வத்தின் மூலமும் மனிதர்களிலேயே எனக்குப் பேருதவியாக இருந்தவர் அபூபக்ரு தான். என் உம்மத்தில் யாரையேனும் நான் உற்ற நண்பராக ஏற்றுக் கொள்வதென்றால் அபூபக்ரையே ஏற்றிருப்பேன். என்றாலும் இஸ்லாம் என்ற அடிப்படையிலான சகோதரத்துவமும் நேசமும்தான் (இஸ்லாத்தில்) உண்டு. பள்ளியில் (என் இல்லத்திற்கு வருவதற்காக) உள்ள அபூபக்கரின் வாசல் தவிர ஏனைய வாசல்கள் அடைக்கப்பட வேண்டும்." என்று அபூபக்கருக்கு ஆறுதல் கூறினார்கள் என்பதை புகாரி போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் காணலாம்.

மேற்சொன்ன இரண்டு சம்பவங்களின் மூலம் ஏன் அபூபக்கர்(ரலி) அழுதார்கள் என்பதை இங்கு நாம் சிந்திக்க வேண்டும்.

சிறுவயதிலிருந்தே நம்முடைய தோழராக இருந்தவர்கள், நம்முடைய ஆருயிர் தோழர், நம்முடைய மருமகன், உலகில் எல்லா அந்தஸ்துகளையும் பெற்ற ஓர் உத்தமராக வாழ்ந்து வரும் நம்முடைய உடன் பிறவா சகோதரர், நம்முடைய மருமகன், நம் மேல் பாசம், நேசம், பிரியம் கொண்ட அல்லாஹ்வின் தூதரர் நம்மை விட்டு பிரியப் போகிறார்களே என்று நினைத்து அபூபக்கர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் சொன்ன அந்த வாசகத்தைக் கேட்டு அழுதார்கள் என்றால், நபி(ஸல்) அவர்கள் மேல் எந்த அளவுக்கு அபூபக்கர்(ரலி) அவர்கள் பாசம் வைத்துள்ளார்கள் என்பதை நாம் உணரலாம்.

இது போன்ற சம்பவங்களைப் படித்து அந்த சத்திய சஹாப்பாக்கள் நம்முடைய உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்களின் மேல் பாசம் வைத்ததைப் போல் நாமும் பாசம் வைக்க தவறிவிட்டோமே என்று என்றைக்காவது அழுதிருக்கிறோமா?

அபூபக்கர்(ரலி) உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), ஆயிசா(ரலி), ஹதீஜா(ரலி), பிலால்(ரலி) போன்ற சஹாபாக்களுக்கு நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருந்து வாழ்ந்தார்களே, அந்த பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லையே என்று என்றைக்காவது நினைத்து அழுதிருக்கிறோமா?

ஹிஜ்ரத் சம்பவங்களை ஏதோ சாதாரண சம்பவங்களைப் போன்று பயான்களில் கேட்கிறோம், ஹதீஸ் தொகுப்புகளில் வாசிக்கிறோம், 3 கிலோமீட்டர் தூரமுள்ள ஒர் இடத்துக்கு அவசரமாகச் சென்று வரவேண்டும், வாகனப் போக்குவரத்து இல்லை, கால் நடையாக நடந்து சென்றடைய வேண்டிய இடத்தை அடைகிறோம். கொஞ்சம் நமக்கு கலைப்பு ஏற்பட்டு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும், நம்முடைய தூதரர், அருமை சத்திய சஹாபாக்கள் பல நூறு கிலோமிட்டர் தூரங்களை கால் நடையாகக் கடந்து ஹிஜ்ரத்து செய்து இந்த இஸ்லாத்தை நமக்கு எடுத்துரைத்துள்ளார்களே என்று என்றைக்காவது நினைத்து அந்த கண்ணியமிக்கவர்களுக்காக கண்ணீர் சிந்தி துஆ செய்திருப்போமா?

கண்ணீர் சிந்தவேண்டும்...
அர்த்தத்தோடு  சிந்தவேண்டும்...

இந்த வார உறுதி மொழி:

இந்த இஸ்லாத்தை நம் அனைவருக்கும் எத்திவைத்த அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்காகவும், அனைத்து சத்திய சஹாபாக்களுக்கும், அவர்களைத் தொடர்ந்து இஸ்லாத்தை நம்மிடம் கொண்டுவந்த அத்தனை நல்லவர்களுகாகவும் நாம் ஒவ்வொரு நாளும் நம்முடைய ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பு அல்லாஹ்விடம் கையேந்தி து ஆ செய்வோமாக.

தொடரும் இன்ஷா அல்லாஹ்.
M தாஜுதீன்

18 Responses So Far:

Abdul Razik said...

கண்ணீர் சிந்தவேண்டும்...
அர்த்தத்தோடு சிந்தவேண்டும்...

இந்த இஸ்லாத்தை நம் அனைவருக்கும் எத்திவைத்த அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்காகவும், அனைத்து சத்திய சஹாபாக்களுக்கும், அவர்களைத் தொடர்ந்து இஸ்லாத்தை நம்மிடம் கொண்டுவந்த அத்தனை நல்லவர்களுகாகவும் நாம் ஒவ்வொரு நாளும் நம்முடைய ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பு அல்லாஹ்விடம் கையேந்தி து ஆ செய்வோமாக. ஆமீன்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...


தொகுத்தளித்தமைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
இன்னும் தொடர்ந்து இப்பணியை செய்ய அளவிலாக் கருணை கொண்ட அல்லாஹ், அளவிலா அறிவை உங்களுக்கும் தந்தருள்வானாக ஆமீன்.

இஸ்லாத்தை நம் அனைவருக்கும் எத்திவைத்த அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்காகவும், அனைத்து சத்திய சஹாபாக்களுக்கும், அவர்களைத் தொடர்ந்து இஸ்லாத்தை நம்மிடம் கொண்டுவந்த அத்தனை நல்லவர்களுகாகவும் நாம் ஒவ்வொரு நாளும் நம்முடைய ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் அல்லாஹ்விடம் கையேந்தி துஆ செய்வோமாக. ஆமீன்.
---------------
ரஜப் பிறை 25



Yasir said...

மாஷா அல்லாஹ்..தெளிந்த நீரோடைப்போல ஆக்கம் சென்று கொண்டிருக்கின்றது....மனதில் பயத்தையும்,ஒரு விதமான குற்ற உணர்வவையும் மேலோங்க செய்கின்றது உங்கள் ஆக்கம்...இதற்க்கான கூலியை அல்லாஹ் நிச்சய்ம் உங்களுக்குத் தருவான் சகோ.தாஜூதீன்

இந்த இஸ்லாத்தை நம் அனைவருக்கும் எத்திவைத்த அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்காகவும், அனைத்து சத்திய சஹாபாக்களுக்கும், அவர்களைத் தொடர்ந்து இஸ்லாத்தை நம்மிடம் கொண்டுவந்த அத்தனை நல்லவர்களுகாகவும் நாம் ஒவ்வொரு நாளும் நம்முடைய ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பு அல்லாஹ்விடம் கையேந்தி து ஆ செய்வோமாக. ஆமீன் ஆமீன் ஆமீன்

aa said...

// நாம் ஒவ்வொரு நாளும் நம்முடைய ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பு அல்லாஹ்விடம் கையேந்தி து ஆ செய்வோமாக.// ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் வளமையாக கையேந்தி துஆ செய்வது (கூட்டாக செய்தாலும், தனியாக செய்தாலும்) பித்அத் என்பதை அறிக.

ஃபத்வா மூலம்: Council of Senior Scholars, Salafi Kingdom of Saudi Arabia.

Source: http://alifta.com/Fatawa/FatawaChapters.aspx?View=Page&PageID=2256&PageNo=1&BookID=7

http://www.islamqa.com/en/ref/21976/raising%20the%20hand%20for%20dua

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன்! அஸ்ஸலாமு அலைக்கும்.

அர்த்தமுள்ள அழுகைக் காட்சிகள்! அழகிய நடை! ஒரு சிற்றோடை சப்தமின்றி ஓடுவதுபோல் சம்பவங்கள்! பாராட்டுக்கள்.

======================================================================
சகோதரர் அஹமது பிர்தவுஸ் அவர்களுக்கு ஒரு கோரிக்கை. மாமனார் வீட்டில் வீடு வாங்கிக் கொண்டு குடியேறும் மருமகன்களைப் பற்றி FATHWA இருந்தால் அன்புடன் அறியத்தாருங்கள்.

Yasir said...

முக நூலில் படித்தது....

பால் சுரக்கும் மடியிலும் இரத்தம் கேட்கும் கொசு!

மதீனாவில் ஒரு காட்சி. கடைத் தெருவில் மக்கள் ஆங்காங்கே கூடி நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனா வந்தடைந்து சில காலம்தான் ஆகியிருந்தது. ஆதலால் மக்களின் பேச்சு முழுவதும் அவர்களின் வருகையைச் சுற்றியே அமைந்திருந்தது.

கைஸ் இப்னு மதாதியா என்பவர் அந்த மக்களிடம் இவ்வாறு உரக்கக் கூறினார்: “அவ்ஸ் கோத்திரமும், கஸ்ரஜ் கோத்திரமும் இந்த மனிதருக்கு உதவி செய்வதற்குத் தீர்மானித்திருப்பது சரிதான். நாம் அதனைப் பின்பற்றவும் செய்வோம். மக்காவிலிருந்து அவர் கூட வந்தவர்களையும் நாம் ஆதரிப்போம். ஆனால் பாரசீகத்திலிருந்து வந்துள்ள ஸல்மானுக்கும், ரோமிலிருந்து வந்துள்ள ஸுஹைபுக்கும், அபிசீனியாவிலிருந்து வந்துள்ள பிலாலுக்கும் இங்கே என்ன வேலை?”

மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களுக்கும், மதீனாவிலுள்ள அன்சாரிகளுக்கும் சகோதரத்துவம் வேர் பிடித்து வளர்ந்து வந்த காலகட்டம் அது. இரத்த பந்தத்தை வெல்லும் விதமாக இந்த இலட்சிய பந்தம் இறுகிப் படர்ந்து விரிந்து கொண்டிருந்தது.

மக்காவிலிருந்து வந்தவர்களை மதீனாவாசிகள் ஆரத் தழுவி வரவேற்றார்கள். தங்கள் குடும்பங்களில் ஓரங்கமாக ஆக்கினார்கள். வீடுகளையும், விவசாய நிலங்களையம், வியாபாரங்களையும் விருந்தினர்களுக்குப் பங்கு வைத்தார்கள்.தங்கள் சொத்துகளை வாகாய்ப் பிரித்துக் கொடுத்து வரலாற்றில் இடம் பெற்றார்கள்.

இதனால் அந்தப் பிரதேசத்தின் முகச் சாயலே மாறி பிரகாசித்தது. யத்ரிப் நகரம் மறைத்தூதரின் மதீனாவானது.இதற்கிடையில்தான் இந்தப் பிரதேச வெறியின் விஷ வித்து தூவப்பட்டது. மக்காக்காரர்கள், மதீனாக்காரர்கள் என்ற வேறுபாடு மறைந்து விசுவாசிகளுக்கிடையில் உருவான புதிய பந்தத்தை தன்னுடைய குறுகிய கண் கொண்டு கைஸ் பார்த்தார்.

அரபுகளுக்கிடையில் உண்டான ஐக்கியமாக கைஸ் இதனைக் கண்டார். ஆனால் அரபியரல்லாத ஸல்மான் ஃபார்சியும்,ஸுஹைப் ரூமியும், பிலாலும் அவருடைய பார்வையில் இந்த ஐக்கிய வட்டத்திற்கு வெளியே நிற்க வேண்டியவர்கள்.அதாவது பால் சுரக்கும் பசுவின் மடியிலும் கொசுவிற்கு விருப்பம் இரத்தம்தான் என்ற உதாரணத்திற்கு அவர் இலக்கானார்.

கோத்திர வெறியும், பிரதேசப் பித்தும் பொடிப் பொடியாய் நொறுங்கி விசாலமான சகோதரத்துவம் விந்தையாக வளர்ந்து வந்த பொழுது, அங்கே புதியதொரு பிரிவினைவாதத்தைக் கண்டுபிடித்து உயர்த்திப் பிடிக்கத் தொடங்கினார் கைஸ்.

மதீனாவாசியான முஆத் இப்னு ஜபலுக்கு (ரலி) இதனைக் கண்டு பொறுக்கவில்லை. கைஸைப் பிடித்திழுத்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முன் கொண்டு வந்து நிறுத்தினார். கைஸின் கூற்றைக் கேட்டறிந்த அண்ணலாருக்கு விடயத்தின் விபரீதம் புரிந்தது. தொழுகைக்கு அழைப்பது போல் மக்களை மஸ்ஜிதுக்கு அழைக்குமாறு அண்ணலார் ஆணையிட்டார்கள். மக்கள் கூட்டம் மஸ்ஜிதை நோக்கி அலை மோதியது.

அல்லாஹ்வின் அறுதித் தூதர் அஹமத் (ஸல்) அவர்கள் மக்களிடம் இவ்வாறு உரையாற்றினார்கள்:

“மக்களே, உங்களின் இறைவன் ஏகன். உங்களின் தந்தை ஒருவர். உங்களின் மார்க்கம் ஒன்று. நீங்கள் ஒன்றை நினைவு கூர வேண்டும். இந்த அரபி மொழி உங்களின் தந்தையோ, தாயோ அல்ல. அது ஒரு மொழி மட்டுமே. அரபி மொழி பேசுபவர்களை அரபிகள் என்றழைக்கின்றனர். அவ்வளவுதான்.”

“இறைவனின் பெயரால் பிளவு படுவது என்றால் நீங்களெல்லாம் ஒரே இறைவனின் அடிமைகள். பிள்ளைகளின் பெயரால் பிளவு படுவது என்றால் நீங்களெல்லாம் ஆதமின் பிள்ளைகள். மதத்தின் பெயரால் பிளவு படுவது என்றால் நீங்களெல்லாம் அல்லாஹ்வின் ஒரே மார்க்கத்தின் அணியினர்.”

முஆத் இப்னு ஜபல் (ரலி) கேட்டார்: “இறைத்தூதரே, இந்த நயவஞ்சகனுடைய விடயத்தில் தாங்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள்?”

அண்ணலார் கூறினார்கள்:

“நரகத்தின் பக்கம் செல்வதற்கு நீ அவரை விட்டு விடு.”

ஒரு பக்கம் இனிப்பு. மறு பக்கம் காரம். பிளவுபடுதலின் சுவையில் வித்தியாசம் உண்டு. குலம், தேசம், மொழி, குடும்பம்,கலாச்சாரம், நிறம் போன்று வேறுபாடுகளின் ஆயுதங்களை உயர்த்துபவர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றில் பற்றையும்,மற்றவற்றில் வெறுப்பையும் காட்டுவார்கள். சகோதரத்துவத்தின் விசாலத்தை உட்கொள்ள அவர்களால் முடியாது.ஒற்றுமையின் மேடையில் சந்தேகங்களை அரங்கேற்ற இவர்கள் என்றும் தயாராக இருப்பார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் கபடத்தன்மை வெளியில் வரும்.

வேறுபாடுகளை உயர்த்திப் பிடிப்பவர்கள் எக்காலமும் சமுதாயத்தைச் சக்திப்படுத்துவதற்கு எதிராகவே இருப்பார்கள்.

sabeer.abushahruk said...

அர்த்தமுள்ள அழுகைக் காட்சிகள்! அழகிய நடை! ஒரு சிற்றோடை சப்தமின்றி ஓடுவதுபோல் சம்பவங்கள்! பாராட்டுக்கள்.

ஒரு பிரசங்கம்போல அமைக்காமல் சம்பவங்களைக் கொண்டு விளக்கிச் சொல்வது படிக்க ஆர்வமேற்படுத்துகின்றது. இந்த யுக்தி வாய்க்கப்பெற்றவர்களே பிற்காலத்தில் தலைசிறந்த எழுத்தாளர்களாக உருவெடுக்கிறார்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

//Ahamed Firdhous சொன்னது… ஃபத்வா மூலம்: Council of Senior Scholars, Salafi Kingdom of Saudi Arabia.

Source: http://alifta.com/Fatawa/FatawaChapters.aspx?View=Page&PageID=2256&PageNo=1&BookID=7

http://www.islamqa.com/en/ref/21976/raising%20the%20hand%20for%20dua//

தம்பி ஃபிர்தவ்ஸ், தாங்கள் சுட்டிக்காட்டிய சுட்டியில், ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் கண்டிப்பாக கையேந்தி துஆ செய்வது பித் அத் என்று குர்ஆன் சுன்னா மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடு என்பதை தெரிவிக்கிறது. துஆ எப்போது செய்யவேண்டும், எப்படி கேட்க வேண்டும் என்பதனையும் குர்ஆன் சுன்னாவின் மூலம் விளக்கிக்கூறினால் எல்லோருக்கும் பயனுல்லதாக இருக்கும்.

தயவு செய்து ஆங்கில சுட்டியை மட்டும் இட வேண்டாம்,இங்கு வாசிக்கும் அனைவருக்கும் புரியும்படி தமிழில் தரவும்.

இன்ஷா அல்லாஹ் மேலும் தகவல்களுடன் விரைவில்.

Ebrahim Ansari said...

முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் எதிர்பார்க்கிறேன்.

படைத்த இறைவனிடம் மனம் உருகி கண்ணீர் விட்டு தனது தேவைகளை ஒரு உம்மத் கேட்பது குற்றமா?

இது குற்றமானால் மாமனாரை கசக்கிப் பிழிந்து பாதி வீடாவது எழுதி வாங்கி அந்த வீட்டில் இருந்து கொண்டே இப்படி மற்றவர்களுக்கு மார்க்கம் கற்பிப்பது எவ்வளவு பெரிய குற்றம்?

இந்த மாதிரி பித் அத் அப்படி இப்படி என்றெல்லாம் எழுத்தும் பழக்கம் கொண்டோர் இறைவனிடம் து ஆக் கேட்பதைவிட மோசமான பழக்க வழக்கங்களை தங்களிடமும் தங்களின் குடும்பத்தாரிடமும் வேரூன்றி இருப்பதைக் களைந்துவிட்டு உபதேசம் செய்ய வரட்டும் என்பதே ஏன் தாழ்மையான கருத்து.

தம்பி தாஜுதீன் அவர்கள் குறிப்பிட்டபடி அல்லாஹ்விடம் து ஆச செய்து கேட்பதை தவறு என்று சொல்வதை என் போன்றோரின் சிற்றறிவு ஏற்கவில்லை. பேரறிவு படைத்தவர்கள் இன்னும் விளக்கினால் ஒருவேளை ஏற்கலாம்.

aa said...

சகோ இப்ராஹிம் அன்சாரி அவர்களுக்கு: அல்லாஹ்விடம் கையேந்தி துஆ செய்வது குற்றமல்ல.மாறாக, துஆ என்பது ஒரு இபாதத். இன்னும் ஒரு படி மேலே போய் அது அனைத்து இபாதத்களின் சாரம் (அத்துஆ ஹுவல் இபாதா).

அதேவேளை,பொதுவாக எல்லா நேரத்திலும் செய்ய வேண்டிய இபாதத்களை குறிப்பிட்ட ஒரு நேரத்தில் செய்வது பித்அத் ஆகும். (உதாரணம்:நமதூரில் பாங்குக்கு முன்னர் ஓதப்படும் சலவாத்; பொதுவாக சலவாத் ஓதுவது நல்ல அமல். ஆனால் அதை நேரம் குறிப்பிட்டு செய்வது பித்அத்.) சுருக்கமாக, அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் கையேந்தி துஆ செய்ததில்லை. ஆகவே, அல்லாஹ்வின் தூதர் செய்யாததை, காட்டிதராததை இபாதத் என செய்வது பித்அத் என்பதை அறிக.

aa said...

சகோ இப்ராஹிம் அன்சாரி அவர்களுக்கு: ஒரு தவறோ, பிழையோ சுட்டிக்காட்டப்படும் பொழுது அதற்கு சாட்டாக இன்னுமொரு தவறை மேற்கோளிடுவதும், “அந்த தவறும் தான் நடக்கிறது; அதை போய் தடுங்கள்” என பரிந்துதைப்பதும் நல்ல அணுகுமுறையாகாது என்பது எனது கருத்து.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

தம்பி ஃபிர்தவ்ஸ்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

நபி(ஸல்) காட்டித்தராத வகையில் நேரம் குறிப்பிட்டு இபாதத் செய்வது பித் அத் என்பதை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

தகவலுக்காக..

தூங்கும் போது, தூங்கும், முன் ஓத வேண்டிய துஆ,, தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ, காலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ, தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்ததும் ஓத வேண்டிய துஆ, இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியவை, தினமும் ஓத வேண்டிய துஆ, கழிவறையில் நுழையும் போது, கழிவறையிலிருந்து வெளியேறும் போது,, வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது,, சபையை முடிக்கும் போது, பள்ளிவாசலுக்குள் நுழையும் போது, பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது, சாப்பிடும் போது,ம், பருகும் போதும், பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும், உணவளித்தவருக்காக தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன் எல்லா நிலையிலும் கூற வேண்டியவை கோபம் ஏற்படும் போது, தீய எண்ணங்கள் ஏற்படும் போதும், மனக் குழப்பத்தின் போதும், கழுதை கணைக்கும் போது, கெட்ட கனவு கண்டால் நோயாளியை விசாரிக்கச் சென்றால், மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது, இழப்புகள் ஏற்படும் போது, கணவனை இழந்தவர்கள் கூற வேண்டியது, மழை வேண்டும் போது, அளவுக்கு மேல் மழை பெய்தால் மழை பொழியும் போது, போர்கள் மற்றும் கலவரத்தின் போது, புயல் வீசும் போது, பயணத்தின் போது, பயணத்திலிருந்து திரும்பும் போது, வெளியூரில் தங்கும் போது, பிராணிகளை அறுக்கும் போது, மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும், மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும், மேட்டில் ஏறும் போது, கீழே இறங்கும் போது, ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய. தும்மல் வந்தால் இறந்தவருக்காகச் செய்யும் துஆ, ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ, கப்ருகளை ஸியாரத் செய்யும் போது, இஸ்லாத்தை ஏற்றவுடன் கூற வேண்டியது மணமக்களை வாழ்த்த, நோன்பு துறந்தவுடன், உளூச் செய்யத் துவங்கும் போது, உளூச் செய்து முடித்த பின், பாங்கு சப்தம் கேட்டால், பாங்கு முடிந்தவுடன், தொழுகையைத் துவக்கிய உடன், ருகூவில் ஓத வேண்டியது, ருகூவில் மற்றொரு துஆ, ருகூவிலிருந்து எழுந்த பின், ஸஜ்தாவில் ஓத வேண்டியது, இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் ஓத வேண்டிய துஆ, தொழுகை இருப்பில் ஓத வேண்டியது இருப்பில் ஓதும் மற்றொரு துஆ, தொழுகையில் ஓதும் ஸலவாத், இருப்பில் ஓதும் கடைசி துஆ, கடமையான தொழுகை முடிந்த பின் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) செய்த துஆக்கள்

இப்படி பல சந்தர்பங்களில் ஓதவேண்டிய துஆக்கள் இருக்கிறது.

நபி(ஸல்) ஒவ்வொரு தொழுகைக்கு பின்பும் கையேந்தி பிரார்த்தனை செய்தார்கள் என்பதற்கு ஆதாரமில்லை என்று நீங்கள் குறிப்பிட்ட பத்வா குறிப்பிடுகிறது.

கையேந்தி து ஆ செய்வது தவறல்ல என்பதனை ஒத்துக்கொள்ளுகிறீர்கள் (இதற்கு ஆதாரத்தை தந்தால் பயனுல்லதாக இருக்கும்). நபி(ஸல்) தடுக்காத ஒரு பிரார்த்தனை செயலை பல சந்தர்பங்களில் பிரார்த்தனை செய்ய கற்றுத்ததிருக்கும்போது, கடமையான தொழுகை தொழுத பிறகு இடைத்தரகரில்லாமல் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யும் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய தவறேதும் இருப்பதாக தெரியவில்லை.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

வாசித்து கருத்திட்டவர்களுக்கும், வாசித்த சகோதர சகோதரிகளுக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைர்.

உங்கள் அனைவரின் ஊக்கம் இன்னும் மேலும் நிறைய தொகுத்தளிக்க தூண்டுகிறது.

இந்த இஸ்லாத்தை நம் அனைவருக்கும் எத்திவைத்த அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்காகவும், அனைத்து சத்திய சஹாபாக்களுக்கும், அவர்களைத் தொடர்ந்து இஸ்லாத்தை நம்மிடம் கொண்டுவந்த அத்தனை நல்லவர்களுகாகவும் நாம் ஒவ்வொரு நாளும் நம்முடைய ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பு அல்லாஹ்விடம் கையேந்தி து ஆ செய்வோமாக.

aa said...

@தாஜுத்தீன் காக்கா:வ அலைக்குமுஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்; மீண்டும் சொல்கிறேன், “ஒவ்வொரு ஃபர்ளு தொழுகைக்குப்பிறகும் வழமையாக கையேந்தி துஆ செய்வது பித்அத். எல்லா பித்அத்களும் வழிகேடு. எல்லா வழிகேடுகளும் நரகிற்கு இட்டுச்செல்பவை.” ஏனெனில் நபி அவர்கள் அவ்வாறு செய்ததில்லை. நேரம் குறிக்கப்படாத இபாதத்களை நேரம் குறித்து செய்வதும் பிதத்; நேரம் குறிப்பிடப்பட்டவைகளை எல்லா நேரத்திலும் செய்வதும் பித் அத்; தனியாக செய்யவேண்டியதை கூட்டாகச் செய்வதும் பித் அத்; கூட்டாக செய்ய வேண்டியதை தனியாகச் செய்வதும் பித் அத் என்று அறிக.

பெருநாள் தொழுகை திடலில் வந்து இரண்டு ரக் ஆத்துகள் தொழுத நபரையும், அதை அமீருல் முஃமினீன் தடுத்ததையும் அறிவீர்கள் என நம்புகிறேன். அந்த நபர் செய்ய முயன்றது ஒன்றும் பாவமான காரியமல்ல. இரண்டு ரக் ஆத் தொழுகை தான். என்றாலும் அது பித் அத் என்ற காரணத்தால் அவர் தடுக்கப்பட்டார்.

இபாதத்கள் விஷயத்தில் நம் மனோ இச்சைகளை பின்பற்றாமல், ஸஹீஹ் ஸுன்னாவை பின்பற்றும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக.

Ebrahim Ansari said...

சகோதரர் அஹமது பிர்தவுஸ் தந்துள்ள அன்பான விளக்கத்துக்கு ஜசக்கல்லாஹ் ஹைரன் .

நான் திசை திருப்புவதற்காக கேள்வி எழுப்பவில்லை. என் நோக்கமும் அல்ல.
நான் குறிப்பிட்டிருந்ததும்( மனைவி இடம் வீடு) தவறுகளில் ஒன்றுதான் என்று ஒப்புக் கொண்டதற்கு மகிழ்ச்சி. ஆனால் மற்றத் தவறுகளை மட்டும் பேசக் கூடியவர்கள் இந்த இமாலயத்தவறைப் பற்றி வசதியாக மறந்துவிடுகிறார்கள் என்பதே என் ஆதங்கம்.

மேலும் பத்வா எனபது கேட்கின்ற சூழ்நிலைகளுக்கு தரப்படும் விளக்கம் அல்லது முடிவு. இதைத் தருபவர்களும் தனி மனிதர்களே. கடற்கரைத் தெருவில் ஜுமா தொழக்கூடாது என்றும் தொழலாம் என்றும் வெவ்வேறுவிதமான பத்வாக்கள் வந்தன என்பதை நான் நினைவு கூறுகிறேன்.

தொழுதுவிட்டு தாங்கள் மனக் குறைகளை அல்லாஹ்விடம் முறையிட நினைக்கும் சிலர் துஆக் கேட்பது தடுக்கப் பட்டது என்று அறிந்தால் தொழும் பள்ளிகளில் கூட்டம் குறைந்து போய்விடுமோ என்றும் அஞ்சுகிறேன். அல்லாஹ் போதுமானவன்.

தங்களைப் போல் அதிகம் மார்ர்ககம் கற்றவனல்ல. நீங்கள் சொல்வது சரியாகவே இருக்கும். நான் பொதுவாக மனதால் உணர்ந்தவற்றைப் பகிர்ந்து கொண்டேனே அன்றி வாதிடுவதற்காக அல்ல.

மீண்டும் நன்றி. வஸ்ஸலாம்.

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Shameed said...

சிற்றோடை அல்ல அந்தக்காலத்து காவேரிஆறு கரை புரண்டு ஓடுவது போல் உள்ளது எழுத்து நடை மாஷா அல்லாஹ்

Anonymous said...

அன்பு தம்பி தாஜுதீன்! அஸ்ஸலாமு அலைக்கு[வரஹ்]

முதலில் நான் ஒரு உண்மை சொல்லி விடுகிறேன். ''கடந்த ஒன்பது தொடர்களையும் இழந்து விட்ட மன சாட்சி என் மனதை குடைகிறது. என்ன காரணமோ சொல்லத் தெரியவில்லை அந்த ஒன்பதையும் ஏன் இழந்தேன்?

பத்தாம் தொடரை படிக்க தொடங்கும் போது தவறு நெஞ்சுக்கு தட்டு பட்டது. வருந்துகிறேன்.

'உலகின் மாமனிதர், சாதனைச் சிகரம்' என்று வேற்றுமத விற்பன்னர்களும் போற்றி பூவாரம் சூடும் அண்ணல் நபி[ஸல்] அவரகளின் மாண்புமிகு வாழ்கை வரலாற்றை நீங்கள் எழுதும்இனிய எளிய தமிழ் நடை10-ம் தொடரை படித்ததும் என் நெஞ்சை கவ்வியது. தொடர்ந்து பயணிக்க என் மனங்கனிந்த நல்வாழ்த்துகள்.

S.முஹமது பாரூக். அதிராம்பட்டினம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு