Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 12 12

அதிரைநிருபர் பதிப்பகம் | June 19, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

உத்தம நபியின் உன்னத தோழர்கள், நம்முடைய ஆருயிர் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மேல் கொண்ட பாசத்தால் அவர்கள் தம்மைவிட்டு பிரியப்போகிறார்களே என்று நினைத்து அழுத சம்பவத்தையும், நாளை மறுமையில் அவர்களோடு ஒன்றாக இருக்க முடியுமா என்று கண்ணீர் வடித்த சம்பவத்தையும் நாம் சென்ற பதிவில் பார்த்தோம். இந்த வார பதிவில் இன்ஷா அல்லாஹ். நபி (ஸல்) அவர்களுடைய மரண நேரத்தில் நடைபெற்ற ஒருசில நெகிழ்ச்சியான சம்பவங்களை இங்கு தொகுத்தளிக்கிறேன்.

கடந்த பதிவுகளில் நபி(ஸல்) அவர்கள் தம்மை விட்டு பிரியப் போகிறார்கள் என்பதை நினைத்து அபூபக்கர்(ரலி) முஆத் இப்னு ஜபல்(ரலி) அழுதார்கள் என்பதை பார்த்தோம். முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களுக்கு நிகழ்த்திய உபதேசத்தில்தான் நபி(ஸல்) அவர்களுடைய மரண முன்னறிவிப்பு செய்தியை தெளிவாக சொன்னார்கள் என்பதை நாம் அறிந்தோம்.

பின்வரும் வசனம் நபி(ஸல்) அவர்களுக்கு இறுதியாக அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்டது, இதன் பிறகு வேறு எந்த வசனமும் இறக்கப்படவில்லை என்று ஹதீஸ் தொகுப்புகளில் நாம் பார்க்கிறோம் என்பதை தகவலுக்காக பதிவு செய்கிறேன்.

தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டெடுக்கப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா. திருக்குர்ஆன்(2:281)

நபி(ஸல்) அவர்களுக்கு கடுமையான நோய் ஏற்பட்டு கடும் தலைவலியுடன் காய்ச்சல் ஏற்பட்டது, அப்போது தம்முடைய மனைவி மைமூனா(ரலி) அவர்கள் இல்லத்தில் இருந்தார்கள். அங்கிருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் “நாளை நான் எங்கே இருப்பேன், நாளை நான் எங்கே இருப்பேன்” என்று வினவினார்கள். தம்முடைய நோயின் கடுமையின் காரணமாக நான் ஆயிசா(ரலி) அவர்கள் இல்லத்தில் இருக்க விரும்பிய உலக மாந்தருக்கெல்லாம் முன்மாதிரியான கண்மணி நபி(ஸல்) அவர்கள் “நீங்கள் அனைவரும் அனுமதி தாருங்கள்” என்று தம்முடைய அருமை மனைவிமார்களிடம் அனுமதி பெற்று அன்னை ஆயிசா(ரலி) அவர்களின் இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள் பொறுமையாளர்களின் தலைவர் நபி(ஸல்) அவர்கள்.

நபி(ஸல்) அவர்களை தம்முடைய அருமை மனைவி ஆயிசா (ரலி) அவர்கள் வீட்டிற்கு அலி(ரலி) அவர்களும் பழ்ளு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் தூக்கிக்கொண்டு சென்றார்கள், நபி(ஸல்) அவர்களுடைய பாதம் கீழே சீய்த்து சென்ற பாதையில் கோடு விழும் அளவிற்கு நடக்க முடியாமல் சென்றார்கள். இதனை அப்போது கண்ட ஸஹாபாக்கள் “என்ன ஆயிற்று நம்முடைய இறைத்தூதருக்கு” என்று அழும் அளவிற்கு கவலையுற்றார்கள். காரணம் மனித இனத்தின் முன்மாதிரி, அகிலத்தின் அருட்கொடை, ஒரு சாம்ராஜ்யத்தின் ஜனாதிபதி, இஸ்லாமிய போர்படைத் தலைவர், பொருளாதார மாமேதை, கண்ணியமான குடும்பத் தலைவர், அவர்களுடைய பிள்ளைகளுக்கு தலைசிறந்த தந்தை, அவர்களுடைய பேரக்குழந்தைகளுக்கு பாசம் நிறைந்த அப்பா, அவரோடு வாழ்ந்த அனைவருக்கும் நேசம்நிறைந்த தோழர், குழந்தகள் மேல் பாசம் கொண்ட மணிதருள் மாணிக்கம், முஸ்லீமல்லாதோராலும் உண்மையாளர் என்று போற்றப்பட்டவர், மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத்து செய்த மாபெரும் தியாகி, அல்லாஹ்வுடையை வஹிக்காக ஹிரா குகைக்கு ஏறிவந்த திடகாத்திர உள்ளம் கொண்டவர், இறக்க குணம் கொண்டவர், எழைகளுக்கு உதவுபவர், அடிமைத்தனத்தை வேரோடு வெட்டி சாய்த்த மாபெறும் புரட்சியாளர், அல்லாஹ்வின் தூதர், நம்முடைய நபி அவர்கள் நடக்க முடியாமல் கால் சீய்க்க தன் தோழர்களால் தூக்கி செல்லப்பட்ட நிலையை நேரில்காணாத நமக்கே இதை வாசிக்கும் போது தொண்டை அடைக்கிறதே, இதனை நேரில் பார்த்த அந்த மக்கள் எப்படி எல்லாம் கவலையுற்றிருப்பார்கள் என்று எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.

ஆயிசா (ரலி) அவர்கள் வீட்டில் தான் மரணிக்கும் கடைசி நிமிடங்கள் வரை வாய்ப்பு கிடைக்கும் போது மக்களுக்கு உபதேசம் செய்துக்கொண்டே இருந்தார்கள். அதே நிலையில் தன்னுடைய நோயினால் ஏற்பட்ட வேதனையில் மிகவும் சிரமப்பட்டார்கள் என்பதையும் ஹதீஸ் தொகுப்புகளில் காணமுடிகிறது.

இப்படி நோயினால் எண்ணிலடங்கா சிரமப்பட்டு மக்களுக்கு இறுதி உபதேசம் செய்துக்கொண்டிருந்த வேலையில் ஒரு அறிவிப்பு செய்தார்கள் கருணையின் சிகரம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் “என்னிடம் பழிதீர்க்க யாராவது உள்ளனரா? நான் உங்கள் யாருக்காவது தீங்கிழைத்திருந்தால் அதற்கு பகரமாக என்னை நீங்கள் பழி தீர்த்துக் கொள்ளலாம்.” என்று சொன்னவுடன் ஒரு நபி தோழர் எழுந்து “யா ரசூலுல்லாஹ் ஒரு போரின் அணிவகுப்பில் இருக்கும் போது நீங்கள் என்னை இப்படி முதுகில் கம்பால் தட்டினீர்கள் எனக்கு காயம் ஏற்பட்டது, நான் உங்களை பழி தீர்க்க வேண்டும்” என்று சொன்னார். இதனை செவியுற்ற கூடியிருந்த ஸஹாபாக்கள் அனைவருக்கு கோபம் ஏற்பட்டது, ஆனால் மனிதர்களின் புனிதர், பண்பாளர்களுக்கெல்லாம் பண்பாளர், அருமை நாயகம்(ஸல்) அவர்கள் தன்னுடைய ஆடையை விளக்கி “நீங்கள் பழிதீர்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்” உடனே அந்த தோழர் நபி(ஸல்) அவர்களின் மேனியில் முத்தமிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்கள். அப்போது அந்த நபி தோழர் சொன்னார் “நபி(ஸல்) அவர்களை பழிதீர்க்கும் எண்ணம் எனக்கில்லை, கடைசியாக நபி(ஸல்) அவர்களை கட்டியணைக்க எனக்கு ஓரு வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக நான் இப்படி செய்தேன்” என்று சொல்லி அழுதார் அந்த ஸஹாபி என்று நாம் ஹதீஸ் தொகுப்புகளில் பார்க்கிறோம்.

இவைகளை வாசிக்கும் போது நம்முடைய கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்த அந்த மக்கள் எப்படி எல்லாம் துடியாய் துடித்திருப்பார்கள் என்பதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.

கடைசியாக வியாழக்கிழமை இரவு இஷா தொழுகையில் நபி(ஸல்) அவர்களை இறுதியாக சஹாபாக்கள் மஸ்ஜுந் நபவியில் பார்த்தார்கள், அதன் பிறகு வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நபி(ஸல்) அவர்கள் வெளியில் வரவில்லை, தம்முடைய ஆருயிர் தோழர் நபி(ஸல்) என்ன ஆயிற்று என்று அன்சாரி தோழர்களும், முஹாஜிர் தோழர்களும், திண்ணைத் தோழர்களும் அழுதுகொண்டே மஸ்ஜுது நபவியில் நல்ல செய்தி கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஞாயிற்றுக்கிழமை அலி(ரலி) அவர்களும் அப்பாஸ்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களை பார்த்துவிட்டு வந்தார்கள். அவர்கள் இருவரிடமும் வெளியில் ஆவலுடன் காத்திருந்த தோழர்கள் நபி(ஸல்) அவர்களுடைய உடல் நலன் குறித்து விசாரித்து கொஞ்சம் ஆறுதல் அடைந்தார்கள். 

அப்போது தன்னுடைய பாசம் நிறைந்த தந்தை நபி(ஸல்) அவர்களைப் பார்க்க அருமை மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்தார்கள், நபி(ஸல்) அவர்களைக் கண்டவுடன் “என் தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே” என்று அழுதவர்களாக கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “இந்த நாளுக்கு பிறகு உன் தந்தைக்கு இனி வேதனை கிடையாது மகளே” என்று மரண படுக்கையில் இருக்கும்போதே தன்னுடைய மகளுக்கு ஆறுதல் கூறினார்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்கள். 

மீண்டும் ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து, தனக்கு மரணம் ஏற்படப்போகிறது என்று சொன்னார்கள் ரஹ்மதுல் ஆலமீன், அப்போது ஃபாத்திமா(ரலி) அழ ஆரம்பித்தார்கள், மீண்டும் ஃபாத்திமா(ரலி) அவர்களை அழைத்து “ மகளே மரணத்திற்குப் பிறகு நீதான் என்னை முதலில் சந்திப்பாய், நீ தான் சொர்க்கத்தில் பெண்களுக்கு தலைவி” என்றார்கள் உடனே ஃபாத்திமா அவர்கள் சிரித்தார்கள் என்று புகாரி போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் பார்க்கிறோம்.

அதே சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் தன்னிடம் இருந்த தினார்களை தர்மம் செய்தார்கள், மறுநாள் மரணிக்கப் போகிறார்கள், அன்றிரவு வீட்டில் விளக்கு அணைந்துவிட்டது, அருகில் உள்ள வீட்டில் எண்ணெய் வாங்கி விளக்கை ஏற்றினார்கள் ஆயிசா(ரலி) என்று ஹதீஸ் தொகுப்புகளில் பார்க்கிறோம். ஒரு தலைவர் எப்படி எல்லாம் எளிமையாக வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்பதற்கு உலகில் நபி(ஸல்) அவர்களுக்கு நிகராக முன்னுதாரணமாக வேறு எவரையும் காட்ட முடியாது.

திங்கள்கிழமை ஃபஜர் தொழுகைக்கு பிறகு நபி(ஸல்) மிகவும் சிரமப்பட்டு தான் இருக்கும் மஸ்ஜித் நபவியில் இருக்கும் தன்னுடைய வீட்டில் திரையை அகற்றி, தன்னுடைய அருமை தோழர்களைப் பார்த்து இறுதியாக புன்னகைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் புன்னகையைப் பார்த்த ஸஹாபாக்கள் அனைவருக்கும் ஆறுதலாக இருந்தது.

திங்கள் கிழமை லுஹருக்கு முன்பு நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயிசா அவர்கள் மேல் சாய்ந்த நிலையில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி துஆ செய்து, திருக்குர்ஆன் வசனம் ஒன்றை ஓதி, “அல்லாஹ்வே என்னை மன்னிப்பாயாக, என் மீது கருணை காட்டுவாயாக, உயர்ந்த நண்பனுடன் என்னை சேர்த்து வைப்பாயாக, அல்லாஹ்வே உயர்ந்த நண்பனே” என்று கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை கூறி தன்னுடைய 63-வது வயதில், ஹிஜ்ரி 11 வருடம் ரபியுல் அவ்வல் மாதம் இவ்வுலகை விட்டு பிரிந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு நபிதோழர்களின் நிலை பற்றி சுறுக்கமாக அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நபி(ஸல்) அவர்களுடையை இறுதி நாட்களில் நிகழ்ந்த சம்பவங்களிலிருந்து நமக்கு நிறைய படிப்பினைகள் உள்ளது.

நபி(ஸல்) அவர்களுக்கு நோய் ஏற்பட்டதால் அவர்களை காண முடியவில்லையே, அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று எண்ணி அழுதார்கள் அந்த தோழர்கள், நம்மை விட்டு அல்லாஹ்வின் தூதர் பிரியப்போகிறார்களே என்று நினைத்து அழுதுள்ளார்கள் அந்த தோழர்கள். வஹி வருவது நின்று விடுமே என்று நினைத்து அழுதுள்ளார்கள். தூதர் அழுதால் அந்த மக்கள் அழுதார்கள், தூதருக்கு ஒரு கஷ்டம் என்றால் அந்த மக்கள் அழுதுள்ளார்கள்.

நாம் இது போன்ற நெகிழ்வூட்டும் சம்வங்களை அடிக்கடி வாசித்து அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களும் நோயினால் அவதியுற்றார்கள், அல்லாஹ் நம்மை எந்த சிரமும் இல்லாமல் வைத்திருக்கிறானே என்று நினைத்து அழ வேண்டும். நபி(ஸல்) அவர்கள் தம்முடைய உம்மத்தான நமக்காக செய்த தியாகங்களை நினைத்து அழ வேண்டும்.

நமக்கு காய்ச்சலோ தலைவலியோ வந்து சிரமம் ஏற்பட்டால், இது போன்ற சூழல்களை தன்னுடைய இறுதி நாட்களில் சந்தித்த நம்முடைய நபி(ஸல்) எப்படி கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று நினைத்து அழுது நம்மை சமாதானப்படுத்த வேண்டும்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்தவர்களுக்காகவும், நபிதோழர்கள் அனைவருக்காகவும் அல்லாஹ்விடம் அழுது ஒரு நாளாவது துஆ செய்திருபோமா?, ஒவ்வொரு நாளும் நாம் துஆ செய்ய வேண்டும். அவர்கள் அனைவரும் இஸ்லாத்திற்காக செய்த தியாயங்களை நினைத்து அழுது அவர்களுக்காக துஆ செய்ய வேண்டும், அவர்கள் அனைவரோடும் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சொர்க்கத்தில் நாம் அனைவரும் இருக்க துஆ செய்வோமாக.

இந்த வார உறுதி மொழி:

மரணத்தருவாயில் இருக்கும் போது அண்ணல் நபி(ஸல்) அவர்கள் “நான் யாருக்காவது தீங்கிழைத்திருந்தால் என்னை பழி தீர்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்களே அது போல், நாம் யாருக்காவது தீங்கிழைத்திருந்தால் அவரிடம் சென்று பழிதீர்த்துக்கொள்ள வேண்டுகோள் வைப்போமாக, அல்லது குறைந்தபட்சம் மன்னிப்பாவது கோருவோமாக. நம்மிடம் யாரும் மன்னிப்பு கேட்டால் வரட்டு பிடிவாதம் பிடிக்காமல் பெருமனதுடன் மன்னிப்போமாக.

இன்ஷா அல்லாஹ் இன்னும் இரண்டு வாரத்தில் இந்த தொடர் பதிவு நிறைவுபெறும்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
தாஜுதீன்

12 Responses So Far:

Abdul Razik said...

//நமக்கு காய்ச்சலோ தலைவலியோ வந்து சிரமம் ஏற்பட்டால், இது போன்ற சூழல்களை தன்னுடைய இறுதி நாட்களில் சந்தித்த நம்முடைய நபி(ஸல்) எப்படி கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று நினைத்து அழுது நம்மை சமாதானப்படுத்த வேண்டும்.// இன்ஷா அல்லாஹ்
அவர்கள் மீது அதிகம் சலவாத்து சொல்வதே அவர்களுக்கு நாம் செய்யும் உதவியாக இருக்கும்

M.B.A.அஹமது said...
This comment has been removed by a blog administrator.
sabeer.abushahruk said...

நெகிழ்வூட்டும் சம்பவங்களைத் தொகுத்து நினைவூட்டும் பதிவு.

ஜஸாகல்லாஹ் க்ஹைர்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]

''என்னிடம் பழிதீர்க்க யாரவது உள்ளனரா?

உங்களில் யாருக்காவது நான் தீங்கு செய்து இருந்தால் என்னை பழிதீர்த்துக் கொள்ளலாம்” என்று சொல்லி பழி தீர்க்க வந்தவருக்கு தன் முதுகை காட்டி ''பழிதீர்துக் கொள்ளுங்கள்” என்று சொன்ன உலகின் முதல் மனிதர் இறுதி தூதர் ரசூலுல்லாஹ்வை தவிர வேறு எவரும் பிறக்க வில்லை, யாராலும் சொல்லவும், செய்யவும் முடியாது.

இதைப் படிக்கும் போது கண்ணில் நீர் பொங்குகிறது. இது இதயத்தின் கண்ணீரா? கண்களின் கண்ணீரா? தெரியவில்லை!.

நபிகள் பெருமானின் வாழ்க்கை மனித இனத்துக்கு நல் வழிகாட்டும் ஒரு ஒளிவிளக்கு. இந்த ஒளி உலகம் முழுதும் பரவ அல்லாஹ் துணை செய்வானாக!. ஆமீன் !

அன்புத் தம்பி தாஜுதீன்! நல்ல எழுத்து! கனிவான குணம், பேச்சு, எல்லா சிறப்புகளும் பெற்று நீடுவாழ அல்லாவிடம் துஆ செய்கிறேன் ஆமீன் !

S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அல்லது குறைந்தபட்சம் மன்னிப்பாவது கோருவோமாக. நம்மிடம் யாரும் மன்னிப்பு கேட்டால் வரட்டு பிடிவாதம் பிடிக்காமல் பெருமனதுடன் மன்னிப்போமாக.//

Insha Allah !

Yasir said...

மன மாற்றங்களை ஏற்படுத்தும் சம்பவங்கள்...அதனை எழுதும் விதம்....சகோ.தாஜுதீன் அல்லாஹ் உங்களுக்கு இதற்க்கான நன்மைகளை தருவானாக ஆமீன்

//நபி(ஸல்) அவர்களும் நபி(ஸல்) அவர்களை பார்த்துவிட்டு வந்தார்கள்/// கொஞ்சம் டைப்பிங் தவறை சரி செய்தால் நலம்

Shameed said...

ஒரு அறிவிப்பு செய்தார்கள் கருணையின் சிகரம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் “என்னிடம் பழிதீர்க்க யாராவது உள்ளனரா? நான் உங்கள் யாருக்காவது தீங்கிழைத்திருந்தால் அதற்கு பகரமாக என்னை நீங்கள் பழி தீர்த்துக் கொள்ளலாம்.” என்று சொன்னவுடன் ஒரு நபி தோழர் எழுந்து “யா ரசூலுல்லாஹ் ஒரு போரின் அணிவகுப்பில் இருக்கும் போது நீங்கள் என்னை இப்படி முதுகில் கம்பால் தட்டினீர்கள் எனக்கு காயம் ஏற்பட்டது, நான் உங்களை பழி தீர்க்க வேண்டும்” என்று சொன்னார். இதனை செவியுற்ற கூடியிருந்த ஸஹாபாக்கள் அனைவருக்கு கோபம் ஏற்பட்டது, ஆனால் மனிதர்களின் புனிதர், பண்பாளர்களுக்கெல்லாம் பண்பாளர், அருமை நாயகம்(ஸல்) அவர்கள் தன்னுடைய ஆடையை விளக்கி “நீங்கள் பழிதீர்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்” உடனே அந்த தோழர் நபி(ஸல்) அவர்களின் மேனியில் முத்தமிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்கள்.//

கண்ணீர் கண்ணீர் கண்ணீர்

Unknown said...

"நமக்கு விதிக்கப்பட்ட ரிஜ்க் (உணவு) நம்மை வந்தடையும் வரை நமக்கு மரணம் என்று ஒன்று இல்லை என்பதில் எவன் உறுதியான நம்பிக்கையோடு வாழ்கின்றானோ அவனிடத்தில், பொறாமை, தீய எண்ணம், மற்றும் கெடுதல் குணம் தென்பட வாய்ப்பே இல்லை.

ஏனனில் ஒவ்வொரு விஷயத்திலும் அவன் அல்லாஹ்வை முழுமையாக நம்புகின்றான் என்று அர்த்தம்.

அல்லாஹ்வின் தூதரும் கடைசி வரை இதில் முழுமையான, பரிபூரண நம்பிக்கை வைத்திருந்ததால்தான், தனக்கு ஏற்பட்ட தீராத காய்ச்சல், தலைவலி, மரண வேதனை, உற்றார் உறவினரை பிரியப்போகும் அந்த நேரம் அனைத்திலும் பொருமையைக்கையாண்டார்கள்.

ஆதலால் மரணம் வரப்போவதை நினைத்து ஏங்கி அழுவதைவிட , அதற்குப்பிறகு உள்ள வாழ்க்கைக்கு என்ன சேமித்து வைத்து இருக்கின்றோம் என்று அழுவோமாக !

அதை நினைத்து நன்மையின் பக்கம் விரைவோமாக !

அபு ஆசிப்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

வாசித்து கருத்திட்ட சகோதரர்களுக்கும், வாசித்த சகோதர சகோதரிகளுக்கும் மிக்க நன்றி,

ஜஸக்கல்லாஹ் ஹைர்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அன்புத் தம்பி தாஜுதீன்! நல்ல எழுத்து! கனிவான குணம், பேச்சு, எல்லா சிறப்புகளும் பெற்று நீடுவாழ அல்லாவிடம் துஆ செய்கிறேன் ஆமீன் !

S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்.//

வ அலைக்குமுஸ்ஸலாம் காக்கா,

இந்த வார பதிவு எழுதும் போதும் நிறைய முறை கண்ணீர் வந்தது, தங்களின் பின்னூட்டத்தில் முதலில் கண்டதும் கண்ணீர் வந்தது.

என் மேல் பாசம் வைத்திருக்கும் தங்களைப் போன்ற மூத்தவர்களின் துஆ கிடைப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எல்லாம் அல்லாஹ்வின் கிருபை.

உங்கள் உடல் நலனை பேணிக்கொள்ளுங்கள். உங்களுக்காகவும் நான் துஆ செய்கிறேன்.

இந்த வயதிலும் தமிழில் தட்டச்சு செய்து பதிவுகளுக்கு கருத்திடும் தங்களின் முயற்சி உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது காக்கா. அல்லாஹ் தங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்தருள்வானாக.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கண்ணீர் நிகழ்வுகள்!

அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்தவர்களுக்காகவும், நபிதோழர்கள் அனைவருக்காகவும் அல்லாஹ்விடம் அழுது துஆ செய்வோம்.

அவர்கள் அனைவரோடும் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சொர்க்கத்தில் நாம் அனைவரும் இருக்க துஆ செய்வோம்

அவர்கள் வழியில் நாமும் யாருக்காவது தீங்கிழைத்திருந்தால் அவரிடம் சென்று பழிதீர்த்துக்கொள்ள வேண்டுகோள் வைப்போம்

யாரும் மன்னிப்பு கேட்டால் வரட்டு பிடிவாதம் பிடிக்காமல் பெருமனதுடன் மன்னிப்போம்.

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி தாஜுதீன்!

காலதாமதமாக் படிக்க நேர்ந்தது. இன்று பஜ்ருக்குப் பிறகே படித்தேன். படித்த பின்பு ஏற்பட்ட விளைவை , உணர்வை சொல்ல வேண்டிய தேவை இல்லை.

இன்னும் இரண்டு வாரத்தில் இந்த தொடர் நிறைவுறும் என்பது கூடுதல் கண்ணீரை வரவழைக்கும்.

ஆயினும் இப்படிப்பட்ட ஒப்பீட்டுக் கட்டுரைகள் தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் வரவேண்டுமென்ற எனது கருத்தைப் பதிய விரும்புகிறேன்.

உதாரணமாக, அவர்களின் வீரமும் நமது வீரமும், அவர்களது தியாகங்களும் நமது தியாகங்களும் என்பன போன்ற தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொடர வேண்டும். பல தியாக வரலாறுகள் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு எடுத்து சொல்லப் படவேண்டும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு