Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும்...! - தொடர் - 9 12

அதிரைநிருபர் பதிப்பகம் | May 29, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..


அறிவிப்பு : வியாழன் தோறும் வெளியாகி வந்த இந்த தொடர், இனி புதன் கிழமை தோறும் வெளிவரும் இன்ஷா அல்லாஹ் !

சென்ற வாரம் நபி(ஸல்) அவர்கள் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், குறிப்பாக பசியின் வேதனையிலும் கூட அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அழுதார்கள் என்பதையும், அவர்களும் அவர்களோடு வாழ்ந்த தோழர்களும் எவ்வளவு எளிமையான வாழ்வு வாழ்ந்துள்ளார்கள் என்பதையும் இரண்டு சம்பவங்களின் மூலம் அறிந்தோம். இந்த வாரம் நபி(ஸல்) அவர்கள் தம்முடைய உம்மத்தாகிய நம்மேல் எவ்வளவு அக்கறை வைத்து அழுதுள்ளார்கள் என்பதைப் பார்க்கலாம்.

அகிலத்தின் அருட்கொடையாம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை என்னுடைய சமுதாயம் என்னுடைய சமுதாயம் என்று சுஜூதில் விழுந்து அழுதுகொண்டே இருந்தார்கள்.

(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீதான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்). குர்ஆன் (5:118)

மேலே குறிப்பிட்ட இறைவசனம், ஈசா(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்ட சம்பவம். ஈசாவே நீதான் உன் தாயையும் வணங்க கட்டளை பிறப்பித்தாயா? என்று அல்லாஹ் கேட்பான், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து (பார்க்க: திருக்குர்ஆன் 5:116 மற்றும் 5:117) மேல் சொன்ன பிரார்த்தனையை (5:118) செய்தார்கள். இந்த இறைவசனத்தை ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் இஷா தொழுகைக்குப் பிறகு ஆரம்பித்து தஹஜ்ஜத்து தொழுகை வரை சுஜூதில் விழுந்து அழது கொண்டே இருந்தார்கள். அப்போது அல்லாஹு தன்னுடைய வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அழைத்து அந்த முஹம்மதுக்கு என்ன ஆயிற்று ஏன் இவர் இப்படி அழுகிறார்கள் என்று கேட்டு வரும்படி கட்டளையிடுகிறான்.

ஜிப்ரீல் நபி(ஸல்) அவர்களிடம் வந்து கேட்கிறார்கள், “என்ன உங்கள் பிரச்சினை?” நபி(ஸல்) அவர்கள் அழுதுகொண்டே “எனது உம்மத், எனது உம்மத், மறுமையில் எனது சமுதாயத்தின் நிலை என்ன என்பது எனக்கு தெரிந்தாக வேண்டும்” என்று ஜிப்ரிலிடம் கேட்டார்கள். உடனே ஜிப்ரீல் அல்லாஹ்விடம் இந்த செய்தியைச் சொல்ல, அல்லாஹ்  'ஓ ஜிப்ரீல்...! முஹம்மதிடம் சென்று இவ்வாறு கூறுங்கள். உமது உம்மத்தின் விஷயத்தில் நீர் திருப்தியுறும் வண்ணம் அல்லாஹ் நடந்து கொள்வான். நீர் கவலையடையும் வண்ணம் ஒருபோதும் நடக்க மாட்டான்' என்று ஜிப்ரீல் (அலை)கூறிய பிறகே நபி(ஸல்) அவர்கள் தம்முடைய அழுகையை நிறுத்தினார்கள் என்று நாம் ஹதீஸ்களில் (முஸ்லீம்) பார்க்கிறோம்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய சமுதாயமான இந்த உம்மத் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கின்றார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்த சமுதாயத்திற்கு அல்லாஹ் வேதனைகளைத் தந்து விடுவானோ என்ற அச்சம், மற்ற சமுதாயங்களை அழித்தது போன்று இந்த சமுதாயத்தையும் அழித்து விடுவானோ என்ற பயம், என் இறைவா....! எனது சமூகத்திற்கு நீ கருணை புரிவாயாக என்ற பரிவு ஆகிய அனைத்தும், 'என் உம்மத்....! என் உம்மத்....! என்ற பெருமானாரின் அழுகை நமக்கு உணர்த்துகின்றது.

அந்த ஆருயிர் நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக நம்மீது அளப்பரிய அன்பு கொண்டவர்களாகவே இருந்தார்கள். ஆகவேதான் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். '(பாருங்கள்!) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்களுடைய வெற்றியில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப்பரிவும், கருணையும் உடையவராகவும் இருக்கின்றார்'. (9:128).

மற்றொரு நாள் உஹத்தில் மரணமடைந்த ஷஹீத்களுக்கு பிரார்த்தனை செய்ய சென்ற போது கட்டுப்படுத்த முடியாமல் அழுகின்றார்கள் பெருமானார் (ஸல்). 'இறைத்தூதரே! ஏன் அழுகின்றீர்கள்?' என்று தோழர்கள் கேட்க, 'எனது சகோதரர்களை நினைத்து அழுகிறேன்' என்று கூறினார்கள். 'நாங்கள் தங்களது சகோதரர்கள் இல்லையா...?' என்று தோழர்கள் கேட்கவும், 'இல்லை, நீங்கள் எனது தோழர்கள். எனது சகோதரர்கள் எனக்குப் பின்னால் வருபவர்கள். என்னைப் பார்க்காமலேயே என் மீது ஈமான் கொண்டவர்கள்' என்று கூறி அழுதுள்ளார்கள் என்பதை அஹமது என்ற ஹதீஸ் தொகுப்பில் பார்க்கலாம். அந்த இரக்கத்தின் சிகரம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தன்னோடு வாழ்ந்த மக்களை தோழர்கள் என்றும், தன்னை காணாத நம்மை சகோதரர்கள் என்றும் சொல்லி நமக்காக அழுதுள்ளார்கள். 

பத்ரு யுத்தம் பற்றி நாம் அனைவரும் தெரிந்திருந்தாலும் ஒவ்வொரு முஸ்லீமும் பத்ரு போரின் நிகழ்வுகள் அனைத்தையும் ஞாபகப்படுத்துவதன் மூலம் நம்முடைய தக்வாவை நிச்சயம் அதிகரிக்கும். எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் காலத்தில் தாமே சென்று செய்த யுத்தங்களில் மிக முக்கியமானது பத்ரு யுத்தமாகும். இதுவே இஸ்லாத்தின் வெற்றிக்கும் ,இஸ்லாம் அழிக்கப்படாமல் பரவுவதற்கும், முன்னேற்றத்திற்கும் மக்களின் ஊக்கத்திற்கும் வீரத்திற்கும் வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பத்ருப் போர் நடைபெறப்போகும் அந்த இரவு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் அழுது துஆ செய்தார்கள். யா அல்லாஹ் இந்த போரில் நாங்கள் தோற்றால் உன்னை இந்த பூமியில் வணங்க ஆள் இருக்காது, ஆகவே எங்களுக்கு வெற்றியைத் தருவாயாக என்று தன்னுடைய மேல் ஆடை கீழே விழுவது கூட தெரியாமல் அழுது அழுது துஆ செய்தார்கள். பின்னர் அபூபக்கர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் “அல்லாஹ் நம்மை கைவிட மாட்டான் யா ரசூலுல்லாஹ் உங்கள் அழுகையை நிறுத்துங்கள்” என்று ஆறுதல் கூறினார்கள் அல்லாஹ் நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனையை ஏற்று வாக்குறுதி கொடுத்து மிகப்பெரிய வெற்றியையும் பத்ரில் தந்தான் என்ற வரலாற்று செய்தியை புகாரியில் நாம் காணலாம்.

அந்த பத்ருக்களத்தில் நபி(ஸல்) அவர்கள் அழுது அழுது செய்த பிரார்த்தனையால் இன்று இறைவனை மட்டுமே வணங்கும் கண்ணியமான மக்களாக வாழ்ந்துவருகிறோம் என்பதை நாம் உணரலாம்.

தம்மோடு வாழ்ந்த மக்களை நேசித்துள்ளார்கள், அவர்களின்  இறந்த பின்பு அவர்களின் மைய்யவாடிக்கெல்லாம் சென்று பிரார்த்தனை செய்தார்கள், தன்னை பார்க்காத மக்களை இறக்கத்துடன் சகோதர பாசத்துடன் நேசித்துள்ளார்கள், தம்முடைய அனைத்து உம்மத்துகளையும் நேசித்து மறுமையின் வேதனையிலிருந்து அனைவரையும் காக்க, அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்து அழுதிருக்கிறார்கள் என்பதை இது போல் பல ஹதீஸ்களின் மூலம் அறியலாம்.

இது போன்று ஓராயிரம் நிகழ்வுகளைக் கூறிக்கொண்டே செல்லலாம். அத்தனையும் அந்த உத்தம நபி முஹம்மது (ஸல்) அவர்கள் நம் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடுகளே....! அந்த அன்பின் உச்சநிலை தான் மேலே கூறப்பட்ட அண்ணலாரின் அழுகையும், என் உம்மத்...என் உம்மத்...என்ற இறைஞ்சுதலும்.

நம்மீது அளவிலா பாசம் வைத்த அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்காக நாம் என்ன கைமாறு செய்யப் போகிறோம்?

24 மணிநேரம் இருக்கும் ஒரு நாளில் 1 நிமிடமாவது அண்ணல் நபி(ஸல்) அவர்கள், அவர்களின் உம்மத்தான நம்மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதை நினைத்து அழுதிருக்கிறோமா அவர்களுக்காக தொழுகையில் கேட்கும் துஆ தவிர்த்து, பிற நேரங்களில் பிரார்த்தனை செய்திருக்கிறோமா?

அண்ணல் எங்கள் ஆருயிர் நபி(ஸல்) அவர்கள், அனைத்துத் துறைகளிலும் அவர்களே எங்களுக்கு முன்மாதிரி என்று வாய் வார்த்தைகளால் மட்டும் கூறி, அரசியல் வியாபாரம், கொடுக்கல் வாங்கல் என இன்னபிற துறைகளில் வேறு யாரையோ பின்பற்றுகிறோமே... அவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இதுதானா...?

உறுதி மொழி:

நம்மீது இரக்கம் கொண்ட அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களை வெறும் வாயளலவில் நேசிக்காமல், மனதார நேசிப்போம். அவர்கள் இஸ்லாத்திற்காக செய்த தியாகங்களை நினைத்து கண்ணீர் சிந்துவோம். அவர்கள் காட்டித் தந்த வழியை மட்டுமே பின்பற்றுவோம். அவர்களுக்காக ஐவேளையை தொழுகைக்கான பாங்குக்கு பிறகு வசீலா என்ற உயர்ந்த அந்தஸ்தை எங்கள் தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கு என்ற பாங்கு துஆவை ஓதுவோம்.
தொடரும் இன்ஷா அல்லாஹ் !
M.தாஜுதீன்

12 Responses So Far:

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஒருநாள் முன்பாகவே இனி இந்தத் தொடர் வருவது வரவேற்கத்தக்கது.

தொழுகையில் கேட்கும் து ஆ என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ஸலாம் கொடுத்ததும் சபை நாகரீகம் கூட இல்லாமல் ஒவ்வொருவரைத் தாண்டிக்கொண்டும் மிதித்துக் கொண்டும் எழுந்து செல்வோரைப் பற்றி நாம் கண்ணீர் வடிப்பவர்களாகவே இருக்கிறோம்.

Unknown said...

பல சந்தர்ப்பங்களில் நமக்காக அருமை நபி (ஸல்) அழுததை அழகிய முறையில் எடுத்துக்காட்டி இருக்கின்றீர்கள்.

எந்த நபியும் தன் உம்மத் (உம்மத்து வாழும்போதும், வாழ்க்கைக்கு பிறகும்) எந்தக்கஷ்டங்களுக்கும் ஆளாகி விடக்கூடாது என்று இறைவனிடத்தில் இறைஞ்சியது கிடையாது. நம் மீது இவ்வளவு இரக்கமும் பாசமும் கொண்ட இறைத்தூதரின் உம்மத்துக்கள் நாம் என்பதில் நாம் பெருமை கொள்வதோடு நின்றுவிடாமல், அந்தப்பெருமைக்கு உண்மையில் நாம் சொந்தக்காரர்களாக இருந்தால், நம் கண்மணி நபி (ஸல்) அவர்கள் மீது சலவாத்து சொல்லிக்கொண்டே இருக்க வேணும்.

நாளை மறுமையில் சபா அத் (பரிந்துரை செய்யும் ) உரிமையை யா அல்லா எங்கள் அருமை நபி (ஸல்) அவர்களுக்கு கொடுப்பாயாக ! ( கொடுப்பதாக அல்லாஹ் ஏற்க்கனவே வாக்குறுதி கொடுத்துவிட்டான்) என்று ஒவ்வரு பாங்குக்கு பின்னரும் இறைவனிடம் கையேந்தவேனும்.

அவர்கள் அழுத ஒவ்வரு சொட்டு கண்ணீரையும் அல்லாஹ் வீணாக்கி விட மாட்டான். அனைத்திற்கும் நாளை மஹ்ஷரில் பலன் கண்டிப்பாக உண்டு.
அந்தப்பலனை அனுபவிப்பவர்களில் இன்ஷா அல்லாஹ் நாமும் ஒருவராக
இருந்து அந்த அருமை நபியின் தோழர்களோடு ( ரசூல் ஸல் அவர்கள் சொன்னது போல சகோதரர்களாக) சுவனத்தில் நுழைய அல்லாஹ் நம் அனைவருக்கும் தௌபீக் செய்வானாக !

அமீன்.

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

//அவர்கள் அழுத ஒவ்வரு சொட்டு கண்ணீரையும் அல்லாஹ் வீணாக்கி விட மாட்டான். அனைத்திற்கும் நாளை மஹ்ஷரில் பலன் கண்டிப்பாக உண்டு.
அந்தப்பலனை அனுபவிப்பவர்களில் இன்ஷா அல்லாஹ் நாமும் ஒருவராக
இருந்து அந்த அருமை நபியின் தோழர்களோடு ( ரசூல் ஸல் அவர்கள் சொன்னது போல சகோதரர்களாக) சுவனத்தில் நுழைய அல்லாஹ் நம் அனைவருக்கும் தௌபீக் செய்வானாக !//

ஆமீன்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Ebrahim Ansari சொன்னது…

தம்பி தாஜுதீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா.,

ஒருநாள் முன்பாகவே இனி இந்தத் தொடர் வருவது வரவேற்கத்தக்கது.

தொழுகையில் கேட்கும் து ஆ என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ஸலாம் கொடுத்ததும் சபை நாகரீகம் கூட இல்லாமல் ஒவ்வொருவரைத் தாண்டிக்கொண்டும் மிதித்துக் கொண்டும் எழுந்து செல்வோரைப் பற்றி நாம் கண்ணீர் வடிப்பவர்களாகவே இருக்கிறோம். //

வ அலைக்குமுஸ்ஸலாம்,

கூட்டு துஆ என்ற பித் அத்தை தவிற்கிறோம் என்ற எண்ணத்தில் தொழுகைப் பிறகு நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த அழகிய திக்ருகளை புறக்கணிக்கு செயலை நினைத்து கண்ணீர் வடிக்க வேண்டிய நிலை உண்மை தான் காக்கா.

பித்அத்தை எதிர்க்கிறோம் என்று சொல்லி நல்ல அமல்களை விட்டவர்கள் பற்றி நிறைய எழுத வேண்டியுள்ளது. இது தொடர்பாக தனி பதிவாக எழுத நீண்ட நாட்கள் ஆசை.. இன்ஷா அல்லாஹ் விரைவில்..

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நம்மீது இரக்கம் கொண்ட அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களை மனதார நேசிப்போம். அவர்கள் இஸ்லாத்திற்காக செய்த தியாகங்களை நினைத்து கண்ணீர் சிந்துவோம். அவர்கள் காட்டித் தந்த வழியை மட்டுமே பின்பற்றுவோம். அவர்களுக்காக ஐவேளையை தொழுகைக்கான பாங்குக்கு பிறகு வசீலா என்ற உயர்ந்த அந்தஸ்தை எங்கள் தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கு என்ற பாங்கு துஆவை ஓதுவோம்.
இன்சா அல்லாஹ்!

Abdul Razik said...

நாம் சிந்தும் கண்ணீர் எந்த சூழ்நிலையிலும் அவர்கள் சிந்திய கண்ணீருக்கு ஒப்பாகாது. உம்மத்தை (நம்மை)நினைத்து, இறைவனிடத்தில் அழுது அழுது துஆக்கள் கேட்டுள்ளார்கள், அதற்கு பதிலாக அவர்கள் மீது நிறைய சலவாத் ஓதுவது நாம் அவர்களுக்கு செய்யும் உதவியாக இருக்கும்.

Abdul Razik
Dubai

Anonymous said...

ஒருநாள் முன்பாகவே இனி இந்தத் தொடர் வருவது வரவேற்கத்தக்கது.


இப்ராகிம் அன்சாரி காக்கா அவர்கள் சொன்னது.

// தொழுகையில் கேட்கும் து ஆ என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ஸலாம் கொடுத்ததும் சபை நாகரீகம் கூட இல்லாமல் ஒவ்வொருவரைத் தாண்டிக்கொண்டும் மிதித்துக் கொண்டும் எழுந்து செல்வோரைப் பற்றி நாம் கண்ணீர் வடிப்பவர்களாகவே இருக்கிறோம். //

நாம் எத்தனை பேர் தொழுகை முடித்த உடன் ரசூல் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் சொல்கிறோம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். கூட்டு துஆ மட்டும் கூடாதென்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோமே தவிர அதில் எத்தனை பேர் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி இந்த நபி அவர்களுக்கு நன்றி செலுத்தியிருக்கிறோம். இந்த உம்மத்திற்க்காக அல்லாஹ்விடம் கண்ணீர் விட்ட நபி (ஸல்) அவர்களுக்கு நாம் எப்பொழுதாவது சலாம் சொல்லியிருக்கிறோமா? ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் அஸ்த்தபிர்லாஹ் அலிய்யுல்லலிம் என்று கூறி பாவ மன்னிப்பு கேட்க வேண்டும். அதன் பிறகு நபி (ஸல்) அவர்களின் மீது சலவாத் கூற வேண்டும். தொழுகை முடித்த உடனை ஓடத்தான் பார்க்கிறோமே தவிர எத்தனை பேர் கண்ணீர் விட்டு அல்லாஹ்விடம் துஆ கேட்கிறோம். தொழுகையில் குறுக்கை செல்வது எவ்வளவு பெரிய பாவம் என்பது இன்னும் மக்கள் விளங்காமல் இருக்கிறார்கள்.

சர்வ சாதாரணமாக தொழுகையின் போது குறுக்கை செல்கிறார்கள். சகோதரர் தாஜுதீன் சொல்வது போல் பித்அத்து என்று கூறி நல்ல அமல்களை விட்டு விடுகிறோம். இதற்கு எல்லாம் யார் காரணம் நாமே காரணமாகி விடுகிறோம் நாம் இறைவனிடம் கண்ணீர் விட்டு கேட்கவேண்டியது நிறைய உள்ளது. தொழுது முடித்த உடனே செல்பவர்களுக்காக எத்தனை பேர் கண்ணீர் விட்டுயிருக்கிறோம். இவர்கல் எல்லாம் நபி (ஸல்) அவர்கள் மீது திக்ரு செய்யாதவர்கள் என்று. இந்த ஹதீஸை படித்தாவது மக்கள் திருந்தட்டும்.

தாஜுதீன் நல்ல பதிவை தந்துள்ளார் உங்களுடைய வார பதிவு தொடரட்டும்.

Unknown said...

//24 மணிநேரம் இருக்கும் ஒரு நாளில் 1 நிமிடமாவது அண்ணல் நபி(ஸல்) அவர்கள், அவர்களின் உம்மத்தான நம்மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதை நினைத்து அழுதிருக்கிறோமா அவர்களுக்காக தொழுகையில் கேட்கும் துஆ தவிர்த்து, பிற நேரங்களில் பிரார்த்தனை செய்திருக்கிறோமா?//

24 மணி நேரத்தில் 1 நிமிடமாவது என்று நீங்கள் நினைவு படுத்துகிரபோது, உண்மையில் அவ்வளவு நன்றி கெட்டுப்போய் நாம் நடந்து கொள்கின்றோமோ
என என்னும்போது, உணமையிலே மனம் கனத்துத்தான் போகின்றது. ஐந்து வேலை தொழுகை அல்லாஹ் நமக்கு செய்த அருட்கொடைகளுக்கும், பின் தரப்போகின்ற சுவன வாழ்வுக்கும் பகரமாக , ஆனால் அல்லாஹ்வுடைய தூதர் நமக்காக ஆற்றிய ஈருலக வாழ்க்கை சேவைக்கு , அவர்களுக்கு நாம் என்ன கைம்மாறு செய்திருக்கின்றோம். அந்தக்கைமாரிலேயே, அவர்களுக்கு நன்றிக்கடனாக நாம் சலவாத்து செய்தாலே, நமக்கு நன்மை வந்து சேருவதுடன், அல்லாஹ்வும் அவனது ஹபீபின் பேரில் சொன்ன சலவாத்துக்காக ஒன்றுக்கு பத்தாக சலவாத் என்னும் அருளை திருப்பித்தருகின்றான்.

என்னே ஒரு அற்புதமான் வாழ்க்கை வாழ்ந்து ,அதிலும் நமக்கு நன்மைகளை அள்ளித்தரும் ஒரு நன்மைச்சுரங்கமாகவே வாழ்ந்து சென்றிருக்கின்றார்கள்.

அந்தச்சுரங்கத்திளிருந்து, நன்மைகளை பெயர்த்தெடுக்க, தயங்கிக்கொண்டிருக்கும் நாம், உண்மையில், நன்றிகெட்டத்தனத்துடன் இருப்பதோடு மட்டுமல்லாமல் , நம் நன்மையிலும் குறைவை ஏற்ப்படுத்திக்
கொண்டிருக்கின்றோம்.

ஆதலால் சலவாத் என்னும் அழகிய சொல் மூலம் இறைவனையும் அவன் தூதரையும் திருப்தி படுத்தி , நாம் நம் நன்மையின் பங்கை ஒவ்வரு நாளும் அதிகரிக்கச்செய்வோம்.

அதன் மூலம் ஈருலகப்பேற்றை அடையப்பெருவோம்.

ஆமீன் .

Shameed said...

ஒவ்வொரு வார உறுதி மொழியும் நாம் மிக உறுதியாக நாம் ஏற்க வேண்டிய உறுதி மொழி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பதிவை வாசித்து கருத்திட்ட சகோதரர்களுக்கும், வாசித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரன்.

வாரத்தில் ஒருநாள் ஓய்வு நேரம், அதில் தொடர் பதிவுகள் தொகுத்து தட்டச்சுவது மிகவும் சிரமம் என்பதை உணர முடிகிறது. சகோதரர்கள் இபுறாஹீம் அன்சாரி காக்கா, இக்பால் காக்கா, ஜாஹிர் காக்கா, போன்றோர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்பதையும் என்னால் உணர முடிகிறது.

இந்த தொடர் பதிவு நல்ல வரவேற்பை பெற்றுவருவதால், சிரமம் பார்க்காமல் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து தொகுத்துத்தர முயற்சிக்கிறேன். இன்ஷா அல்லாஹ்..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு