Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 6 8

அதிரைநிருபர் பதிப்பகம் | May 09, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

திருக்குர்ஆனோடு சத்திய சஹாபாக்களில் சிலர் எப்படி தங்களை மிக நெருக்கமாக்கி கொண்டார்கள் என்று இதற்கு முந்தைய பதிவில் பார்த்தோம். இந்த தொடரில் நபி(ஸல்) அவர்கள் தங்களுக்கு கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கும் போது அழுதுள்ளார்கள், இதோ ஒரு சில சந்தர்பங்கள் நாம் படிப்பினை பெறுவதற்காக.

சோதனைகள் மற்றும் மனநெருக்கடி ஏற்படும் சந்தர்ப்பத்தில் ஒருவர் அழுதார் என்றால் அவருடைய மனப்பாரம் குறைகிறது என்பது நம் எல்லோராலும், ஏற்றுக் கொள்ளப்பட்ட நிதர்சனம். போர்முனையின் பேரணியில் புன்னகை மன்னர்! வீரத்தின் விளைநிலம் வேந்தர்! நபி (ஸல்) அவர்களும் தனக்கு சோதனைகள் மற்றும் மனநெருக்கடி ஏற்படும் போது அழுதுள்ளார்கள் என்பதை நாம் பல ஹதீஸ் தொகுப்புகளில் காண முடிகிறது.

நபி(ஸல்) அவர்களுக்கு ஆண் வாரிசே இல்லை என்று எல்லோரும் ஏளனமாக பேசிய ஓர் காலகட்டத்தில் அல்லாஹ் அவர்களுக்கு ஒரு மகனை கொடுத்தான், அவர்களின் அருமை மகனுக்கு இபுறாஹீம்(ரலி) என்று  ஏகத்துவ கொள்கையின் தந்தை அவர்களின் அழகிய பெயரை சூட்டியிருந்தார்கள். 

அனஸ்(ரலி) அறிவித்தார்கள். 

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூ ஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவராவார். நபி(ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது கருணையாகும்" என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து அழுதார்கள். பிறகு, 'கண்கள் நீரைச் சொரிகின்றன் உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது; எனினும், இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகக் கவலைப்படுகிறோம்" என்றார்கள். புகாரி 1303.  Volume :2 Book :23

உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்கள். 

நபி(ஸல்) அவர்களின் ஒரு புதல்வியாரின் மகன், இறக்கும் தருவாயில் இருந்தார். எனவே, நபி(ஸல்) அவர்கள் தம்மிடம் வந்து சேரும்படி அந்தப் புதல்வியார் சொல்லி அனுப்பினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியதாகும். ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையைக் கைக்கொள்வீராக நன்மையை எதிர்பார்ப்பீராக' என்று சொல்லியனுப்பினார்கள். (மீண்டும்) அவர் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் (கட்டாயம் தம்மிடம் வர வேண்டுமெனக்) கூறியனுப்பினார். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் புதல்வியின் வீட்டுக்குச் செல்ல) எழுந்தார்கள். நானும், முஆத் இப்னு ஜபர்(ரலி), உபை இப்னு கஅப்(ரலி), உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) ஆகியோரும் அவர்களுடன் எழுந்தோம். நாங்கள் (வீட்டுக்குள்) நுழைந்தவுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அந்தச் சிறுவரைக் கொடுத்தார்கள். அந்தச் சிறுவரின் மூச்சு (சுவாசிக்க முடியாமல்) நெஞ்சுக்குள் திணறிக் கொண்டிருந்தது. 

அது தோல் துருத்தியைப் போன்று (ஏறி இறங்கிக் கொண்டு) இருந்தது என்று அறிவிப்பாளர் கூறினார்கள் என நான் (அபூ உஸ்மான் அந்நஹ்தீ) எண்ணுகிறேன். 

(இதைக் கண்ணுற்ற) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழுதார்கள். அப்போது (அங்கிருந்த) ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்கள், '(இறைத்தூதர் அவர்களே!) நீங்கள் அழுகின்றீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்' என்றார்கள். புகாரி: 7448. Volume :7 Book :97

ஆண் பிள்ளையானாலும் பெண் பிள்ளைகளானாலும் சிறுபிள்ளைகள் என்றாலே ஏந்தல் நபி(ஸல்) அவர்களுக்கு அவ்வளவு பிரியம் என்பதை பல ஹதீஸ்களில் படித்திருக்கிறோம். (நபிமணியும் நகைச்சுவையும் என்ற தொடரில் சகோதரர் இக்பால் M ஸாலிஹ் அவர்கள் எழுதிய இந்த பதிவை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள் http://adirainirubar.blogspot.in/2013/03/blog-post_14.html நபி(ஸல்) அவர்கள் சிறு பிள்ளைகள் மேல் எவ்வளவு பாசம் வைத்துள்ளார்கள் என்று). 

மேற் சொன்ன இரண்டு சம்பவங்களில் பாசத்திற்குறிய அருமை மகனார் இபுறாஹீம்(ரலி) அவர்களின் மரணத் தருவாயில், நபி(ஸல்) அவர்களுக்கு கடுமையான கவலை ஏற்படுகிறது. தன்னுடைய பாசத்திற்குரிய மகன், ஒரே ஒரு ஆண் குழந்தை, அன்போடு நேசம் காட்டி வளர்த்து வந்த தன்னுடைய அருமை மகனார் இறந்த போதும், தம்முடைய புதல்வியின் மகன் ஒருவர் இறந்தபோதும் நபி(ஸல்) அவர்களின் மனதிற்கு மிகப்பெரும் பாரம் ஏற்பட்டு அல்லாஹ்வுடைய இந்த நாட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தும்கூட நபி(ஸல்) அவர்கள் அழுதுள்ளார்கள் என்று அறிய முடிகிறது. அழுத நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய “குழந்தை மீது தான் வைத்திருந்த பாசம் என்னை அழ வைக்கிறது” என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் என்னதான் கஷ்டங்கள் ஏற்பட்டாலும் “நாங்கள் அல்லாஹ்வுக்கு விரும்பாத வார்த்தைகள் பேசமட்டோம்”, மேலும் 'அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்'  என்றும் கூறினார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

அழுவதை அனுமதித்துள்ள நபி(ஸல்) அவர்கள், இன்னும் பிற ஹதீஸ் தொகுப்புகளில் வாய்விட்டு அழுவதையும், ஓலமிடுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்பதை காணலாம்.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள். 

ஸஅத் இப்னு உபாதா(ரலி) நோயுற்றபோது நபி(ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஆகியோரோடு நோய் விசாரிக்கச் சென்றார்கள். வீட்டில் நுழைந்தபோது (ஸஅத் இப்னு உபாதாவின்) குடும்பத்தினர் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டதும், 'என்ன? இறந்துவிட்டாரா?' எனக் கேட்டார்கள். 'இல்லை; இறைத்தூதர் அவர்களே!' என்றனர். நபி(ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத் தொடங்கினர். பின் நபி(ஸல்) அவர்கள், '(மக்களே!) நீங்கள் (செவி சாய்த்துக்) கேட்க மாட்டீர்களா? நிச்சயமாகக் கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அல்லாஹ் தண்டிப்பதில்லை - பின்பு, தம் நாவின் பால் சைகை செய்து எனினும் இதன் காரணமாகத்தான் தண்டனையோ அருளோ வழங்குகிறான். நிச்சயமாகக் குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மய்யித் வேதனை செய்யப்படுகிறது" என்று கூறினார்கள். 

ஒப்பாரி வைப்பவர்களை உமர்(ரலி) கண்டால் கம்பினால் அடிப்பார்; கல்லெறிவார். இன்னும் மண்வாரி வீசவும் செய்வார்.  புகாரி: 1304 Volume :2 Book :23

ஓப்பாரி வைப்பதை நபி(ஸல்) வன்மையாக கண்டித்துள்ளார்கள், நபித்தோழர் உமர்(ரலி) அவர்களும் ஒப்பாரி வைப்பவர்களிடம் கடினமாக நடந்துள்ளர்கள். மேலும் ஒருவர் இறந்துவிட்டால் ஒப்பாரி வைத்து ஓலமிடுவது இறந்த மய்யித்துக்கு நாம் செய்யும் துரோகம் என்பதை மேலே குறிப்பிட்ட ஹதீஸீன் மூலம் அறியலாம்.

நம்முடைய அழுகைகள் எப்படி உள்ளன என்பதை மேற்சொன்ன வரலாற்று சம்பவங்களின் மூலம் சீர்த்துக்கி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நம் வீடுகளில் எத்தனையோ இறப்புகளை சந்தித்திருப்போம், நாம் நபி(ஸல்) அவர்கள் அழுதது போல் அழுதிருக்கிறோமா? 

அழுவதாக இருந்தாலும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் அழுவோம்.

இந்த வார உறுதி மொழி:

என்ன கஷ்டமோ, சோதனையோ, இது அல்லாஹ்வுடைய நாட்டம் என்று எண்ணி, எங்கள் தூதர் காட்டித் தந்த வழியில் மட்டுமே அழுது கண்ணீர் சிந்துவோம்,

'யா அல்லாஹ் எங்கள் மீது நீ இரக்கம் காட்டுவாயாக. உனக்காக மட்டுமே அஞ்சி அழும் நன்மக்களாக எங்களை ஆக்குவாயாக.

M தாஜுதீன்

8 Responses So Far:

Unknown said...

'யா அல்லாஹ் எங்கள் மீது நீ இரக்கம் காட்டுவாயாக. உனக்காக மட்டுமே அஞ்சி அழும் நன்மக்களாக எங்களை ஆக்குவாயாக.

ஆமீன் !

அபு ஆசிப்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...


அழுகை சம்மந்தமான நல்ல தெளிவான ஹதீஸ் விளக்கங்களுடன் கூடிய ஒரு நினைவூட்டலே இவ்வாக்கம். தொடரட்டும் வாரந்தோறும்....

அல்ஹம்துலில்லாஹ், சென்ற வாரம் புனித உம்ராவை நிறைவேற்ற மக்கமாநகரம் சென்றிக்கும் பொழுது கவ்பத்துல்லாஹ்வை தவாப் சுற்றும் வழிப்பாதையில் ஒருவர் (பாக்கிஸ்தானியர் என நினைக்கிறேன்) சஜ்தாவில் அவர் மொழியில் ஏதேதோ சொல்லி கதறி அழுது கொண்டிருந்தார். சிலர் கவ்பத்துல்லாஹ்வின் அந்த கருப்பு அங்கியை பிடித்துக்கொண்டு அவரவர் பிரச்சினைகளையும், தேவைகளையும் சொல்லி வாய்விட்டு அழுது கொண்டிருந்தனர். இதெல்லாம் நம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையா? என சரிவர தெரியவில்லை. அவர்கள் கதறுவதைப்பார்க்கும் நமக்கும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவிடுகிறது. அல்லாஹ் தான் நம் எல்லோரின் எல்லாக்கஷ்டங்களையும், நஷ்டங்களையும் போக்கி எஞ்சி இருக்கும் இவ்வுலக வாழ்விலும் இனி வர இருக்கும் மறுமை வாழ்விலும் சந்தோசத்தையும், சகல பாக்கியங்களையும், உடல் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும், உறுதியான, பலமான ஈமானையும், இஹ்லாசையும், இஸ்திராமையும், இல்மையும் த‌ந்த‌ருள‌ போதுமான‌வ‌ன்....ஆமீன் யார‌ப்ப‌ல் ஆல‌மீன்....

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இஸ்திராமல்ல...இஹ்திராம் என படிக்கவும்...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கஷ்டமோ, சோதனையோ, அல்லாஹ்வுடைய நாட்டம் என்று எண்ணி, எங்கள் தூதர் காட்டித் தந்த வழியில் மட்டுமே அழுது கண்ணீர் சிந்துவோம்,

'யா அல்லாஹ் எங்கள் மீது நீ இரக்கம் காட்டுவாயாக. உனக்காக மட்டுமே அஞ்சி அழும் நன்மக்களாக எங்களை ஆக்குவாயாக.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்த தொடரில் ஓவ்வொரு அத்தியாயத்திலும் படிப்பினை நிறைந்திருக்கிறது !

மரணம் நிகழ்ந்த வீட்டில் எவ்வாறு பொறுமையை கையாள வேண்டும் என்பதை சொல்லும் பாடம் இந்த அத்தியாயம் !

'யா அல்லாஹ் எங்கள் மீது நீ இரக்கம் காட்டுவாயாக. உனக்காக மட்டுமே அஞ்சி அழும் நன்மக்களாக எங்களை ஆக்குவாயாக.

Ebrahim Ansari said...

நெஞ்சை நெருடுகிறது தம்பி தாஜுதீன்.

மவுனமாக நாம் விடும் ஒரு சொட்டுக் கண்ணீர் எவ்வளவு எண்ணக குமுறல்களையோ பேசாமல் எடுத்துரைக்கும்.

தொடக்கம் முதல் மன இருக்கத்துடன் படிக்க வைத்து இருக்கிறீர்கள். படித்து முடித்ததும் ஒரு பெருமூச்சு.

sabeer.abushahruk said...

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர், தாஜுதீன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கருத்திட்ட சகோதரர்களுக்கு ஜஸக்கல்லாஹ் ஹைர்.

இன்னும் நிறைய சம்வங்கள் உள்ளன, இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து தர முயற்சி செய்கிறேன்.

என்ன கஷ்டமோ, சோதனையோ, இது அல்லாஹ்வுடைய நாட்டம் என்று எண்ணி, எங்கள் தூதர் காட்டித் தந்த வழியில் மட்டுமே அழுது கண்ணீர் சிந்துவோம்,

'யா அல்லாஹ் எங்கள் மீது நீ இரக்கம் காட்டுவாயாக. உனக்காக மட்டுமே அஞ்சி அழும் நன்மக்களாக எங்களை ஆக்குவாயாக.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு