Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 13 13

அதிரைநிருபர் பதிப்பகம் | June 26, 2013 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

கடந்த பதிவில் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் மரண நேர சம்பவங்களைக் கண்ணீர் மல்க கண்டோம். இந்த வாரம் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்பு நடந்த நெகிழ்வூட்டும் ஒரு சில வரலாற்று சம்பவங்களைக் காண்போம்.

நபி(ஸல்) கொஞ்சம் குணமடைந்து விட்டார்கள் என்பதால், அருகாமையில் தன்னுடைய வீட்டிற்குச் சென்ற அபூபக்கர் (ரலி) அவர்கள் தம்முடைய ஆருயிர் தோழர், மருமகன், உடன் பிறவா சகோதரர், இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் மரணித்த செய்தி அறிந்து குதிரையில் வந்திறங்கினார்கள். "நபி(ஸல்) அவர்கள் மரணிவிட்டார்கள் என்று யாராவது சொன்னால் அவர்களின் தலையைச் சீவிவிடுவேன்" என்று கோபத்தின் உச்ச நிலையில் உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார்கள். 

இந்த சமையத்தில் யாரிடமும் எதுவும் பேசாமால், ரசூலுல்லாஹ்வை முதன் முதலில் மெய்ப்பித்த உத்தம தோழர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் தன்னுடைய மகளும் நபி(ஸல்) அவர்களின் அருமை மனைவியுமான ஆயிசா(ரலி) அவர்களிடத்தில் உள்ளே வர அனுமதி கேட்கிறார்கள். “அனுமதி தர வேண்டியவர் இறந்து போய்விட்டார்கள்” என்று முஃமீன்களின் அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். பின்னார் அபூபக்கர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் ஜனாஸா அருகில் சென்றார்கள். நபி(ஸல்) அவர்களின் நெற்றியில் முத்தமிட்டு “யா ரசூலுல்லாஹ் என்னுடைய தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், நீங்கள் உயிரோடு இருக்கும் போது நறுமணம் கமழ்ந்தீர்கள், இறந்த பின்பும் நறுமணம் கமழ்கிறீர்கள் யா ரசூலுல்லாஹ்” என்று கூறியவாறு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார்கள்.

உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லீம்களுடைய ஈமானை ஒரு தட்டிலும் இந்த சித்தீக்குடைய ஈமானை ஒரு தட்டிலும் வைத்தால் இந்த சித்தீக்குடைய தட்டில் உள்ளதே அதிகமிருக்கும் என்று நபி(ஸல்) அவர்களால் பாராட்டி நன்மாராயம் கூறப்பட்ட அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் வெளியில் வந்து கோபத்துடன் இருக்கும் உமர் (ரலி) அவர்களை அமைதியாக அமருமாறு மூன்று முறை கூறினார்கள். பின்னர் அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு பின்வருமாறு மக்களை பார்த்து கூறினார்கள்.

"நிற்க, உங்களில் யார் முஹம்மத்(ஸல்) அவர்களை (இறைவன் என நம்பி) வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள், முஹம்மத்(ஸல்) நிச்சயம் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்துகொள்ளட்டும் உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கிக்கொண்டிருந்தார்களோ அவர்கள் 'அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்; மரணிக்கவேமாட்டான்' என்பதை அறிந்துகொள்ளட்டும்.  "அல்லாஹ் கூறுகிறான்; முஹம்மது ஒரு (இறைத்) தூதரேயன்றி வேறல்லர்; அவருக்கு முன்னரும் (என்) தூதர்கள் பலர் (வந்து) சென்றிருக்கிறார்கள்; எனவே, அவர் இறந்துவிட்டால், அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் தம் கால் சுவட்டில் திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு விரைவில் பிரதிபலன் வழங்குவான்' (திருக்குர்ஆன் 3:144) என்றார்கள். 

அபூபக்கர் (ரலி) மூலமாகத்தான் இதை அவர்கள் அறிந்தது போன்றும் இதனை ஓதக் கேட்ட மக்கள் யாவரும் இதனைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டேயிருந்தார்கள்.  அப்போது உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்:  “அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்கர் (ரலி) அவர்கள் இந்த வசனத்தை ஓத நான் கேட்டபோதுதான் அது என் நினைவுக்கே வந்தது. எனவே, அதிர்ச்சியடைந்தேன். அப்போது என் கால்களால் என் (உடல்) சுமையை தாங்க முடியவில்லை. அபூ பக்ர்(ரலி) ஓதிக்காட்டிய இவ்வசனத்தைக் கேட்டு நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து நான் தரையில் விழுந்துவிட்டேன்” என்று கூறிய உமர் (ரலி) அவர்கள் சமாதானம் அடைந்தார்கள் என்று புகாரி போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் வாசிக்கும் போது மெய் சிலிர்க்கிறது.

இந்நிலையில் நபி(ஸல்) அவர்களின் வீட்டிலிருந்த அண்ணல் நபியின் அருமை மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்கள் “ அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக்கொண்ட என் தந்தையே!, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த அந்தஸ்தத்தை அல்லாஹ்விடமிருந்து பெற்றுக்கொண்ட என்னுடைய தந்தையே!, எப்போதும் உங்களிடம் தொடர்பில் உள்ள ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இந்த மரண செய்தியை சொல்லுகிறோம்” என்று கூறி தன்னுடைய தந்தை, எண்ணிலடங்கா மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மரணத்தைச் சொல்லி சொர்க்கத்து பெண்களின் தலைவி ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள், பின்னர் நபி(ஸல்) அவர்களை அடக்கம் செய்த பிறகு ஃபாத்திமா (ரலி) அவர்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு 10 ஆண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) அவர்களிடம் “ அனஸே இறைத்தூதர் மீது மண்ணை அள்ளிப் போட எப்படி உங்களுக்கு மனம் வந்தது” என்று கேட்டார்கள்  என்பதை புகாரி போன்ற ஹதீஸ் தொகுப்புகளிலிருந்து வாசிக்கும் அனைவருக்கும் கண்ணீர் வந்தே தீரும்.

நபி(ஸல்) அவர்கள் மரணித்த பிறகு முதன் முதலில் அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்கள் ஒரு ஜும்மா உரை நிகழ்த்தினார்கள். அந்த ஜும்மா உரையில் நபி(ஸல்) அவர்கள் எப்படி ஜும்மா உரையை ஆரம்பிப்பார்களோ அது போல் ஹம்து ஸலவாத்து சொல்லி அழ ஆரம்பித்தார்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள், “இது யார் நின்ற இடம் தெரியுமா? இந்த இடத்தில் நின்று யார் உரை நிகழ்த்தினார்கள் தெரியுமா? அப்படிப்பட்ட இடத்தில் நான் நின்று உரை நிகழ்த்துகிறேன் “ என்று சொல்லி அழுது உரை நிகழ்த்தினார்கள் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் என்று ஹதீஸ் தொகுப்புகளில் காணும் போது கண்கள் குளமாகிறது.

நபி(ஸல்) அவர்களை அடக்கம் செய்த பின்பு சில நாட்கள் கழித்து உமர்(ரலி) அவர்கள் சொன்னார்கள் “ நான் நினைத்தேன், நான் மரணித்து, அபூபக்கர்(ரலி) அவர்கள் மரணித்து, உஸ்மான்(ரலி) மரணித்து, அலி(ரலி) மரணித்து, அப்துர்ரஹ்மான் இப்னு அஃவ்ப்(ரலி) மரணித்து நாங்கள் அனைவரும் மரணித்த பிறகு தான் ரசூலுல்லாஹ் மரணிப்பார்கள் என்று நினைத்தேன், ஆனால் நாங்கள் இருக்கும் போதே எங்கள் ஆருயிர் தோழர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்களே”  என்று சொல்லி அழுத்துள்ளார்கள் என்று ஹதீஸ் தொகுப்புகளின் காணலாம்.

நபி(ஸல்) அவர்களுடைய மரணத்திற்கு பிறகு மிகப்பெரிய செல்வந்தராக வாழ்ந்து வந்த நபி தோழர், அல்லாஹ்வின் தூதரால் சொர்க்கவாசி என்று நன்மாராயம் கூறப்பட்ட  அப்துர்ரஹ்மான் இப்னு ஆவ்ப்(ரலி) அவர்கள், ஒரு நாள் அவர்கள் முன்னால் உயர் ரகமான பேரீத்தம் பழங்கள் கொடுக்கப்பட்டது., அந்த பேரீச்சம் பழங்களை சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை கையில் எடுத்து தோழர்களை எல்லாம் பார்த்து அழ ஆரம்பித்துவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதரர் (ஸல்) அவர்களை நினைவு கூர்ந்து “நபி(ஸல்) வாழ்ந்த காலத்தில் இது போன்ற உயர்தரமான பேரீச்சம் கணிகளை கண்ணால் கூட பார்க்காமலே மரணித்துவிட்டார்களே” என்று சொல்லி அழுதுள்ளார்கள் என்பதை ஹதீஸ் தொகுப்புகளில் காணும் போது நம்முடைய கண்களும் கலங்குகிறது.  

நபி(ஸல்) அவர்களோடு மக்காவிலிருந்தும் மற்றும் மதினாவில் இறுதி மூச்சு வரை ஒன்றாக இருந்த உத்தம நபியின் உன்னத தோழர் பிலால் (ரலி) அவர்கள், அடிமைகளுக்கு விடிவு பிறக்க செய்த உத்தம மனிதர், அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மரணித்த பிறகு, மதினாவில் இருக்க மனம் இன்றி சிரியா நாட்டிற்கு சென்றுவிட்டார்கள், நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்த காலத்தில் முதன் முதலில் நீங்கள் தான் பாங்கு சொல்ல வேண்டும் நபி(ஸல்) அவர்களால் நியமிக்கபட்ட பிலால்(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை பாங்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். 

நபி(ஸல்) அவர்களை பிரிந்த அதிர்ச்சியில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற வார்த்தையை சொல்லும் தைரியத்தையே இழந்துவிட்ட பிலால்(ரலி) பாங்கு சொல்லுவதையே நிறுத்திவிட்டார்கள். சில வருடங்களுக்கு பிறகு பைத்துல் முகத்திஸ் அமீருல் முஃமினீன் உமர்(ரலி) அவர்கள் காலத்தில் வெற்றிகொள்ளப்பட்ட போது, பிலால்(ரலி) அவர்களை அழைத்து உமர்(ரலி) அவர்கள் நீங்கள் தான் இங்கு பாங்கு சொல்ல வேண்டும் என்று சொன்னார்கள். நபி(ஸல்) மரணித்த பிறகு பைத்துல் முகத்திஸில் பாங்கு சொன்னார்கள் பிலால்(ரலி) அவர்கள். முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று சொன்னவுடன், பிலால்(ரழி) அவர்களும் அங்கு கூடியிருந்த அனைத்து ஸஹாபாக்களும், பிற முஸ்லீம்களும் அழுதார்கள் என்று பொன் எழுத்துக்களால் பதியப்பட வேண்டிய வரலாற்று சம்பவங்களை ஹதீஸ் தொகுப்புகளில் நாம் காணலாம்.

மனித இனத்தின் முன்மாதிரி, அகிலத்தின் அருட்கொடை, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஜனாதிபதி, இஸ்லாமிய போர்படைத் தலைவர், பொருளாதார மாமேதை, கண்ணியமான குடும்பத் தலைவர்,  இறைத்தூதரர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறந்த பின்பு அவர்களிடம் இருந்தது “பைலா என்ற வெள்ளை நிற கோவேறி கழுதை மற்றும் அங்குமிங்குமாக ஒட்டப்பட்டிருந்த போர்வை இவை மட்டுமே ரசூலுல்லாஹ்வுடைய கடைசி சொத்து." உலக வரலாற்றில் எந்த ஒரு தலைவரும் இவ்வாறு வாழ்ந்து மரணித்ததாக எந்த ஒரு சரித்திர ஏடுகளிலும் காணமுடியாது. நபி(ஸல்) அவர்கள் போல் இனி ஒரு மனிதர் யாரும் வரப்போவதும் இல்லை.

வயிராற உண்ண நமக்கு பல உணவு வகைகள் சமைக்கப்பட்டு நம் முன்னே இருக்கும் போது, நம்முடைய உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்கள் இது போன்ற உயர்தரமான உணவு வகைகளைச் சாப்பிடாமலே மரணித்துவிட்டார்கள் என்று அப்துர்ரஹ்மான் இப்னு ஆவ்ப் (ரலி) அவர்கள் அழுதது போல் நாம் என்றைக்காவது அழுதிருப்போமா?

அன்று திண்ணை தோழர்கள் (ஸஹாபாக்கள்) பசியும் பட்டினியுமாக வாழ்க்கையைக் கழித்தார்களே, இன்று வகை வகையாக நமக்கு உணவு கிடைக்கிறது, அதை நினைத்து என்றைக்காவது அல்லாஹ்விடம் கண்ணீர் மழ்க நன்றி செலுத்தியிருப்போமா?

அண்ணல் நபி(ஸல்) அடிக்கடி சொன்ன வார்த்தைகளில் “நானும் பிலாலும் சென்றோம், நானும் பிலாலும் நடந்தோம், நானும் பிலாலும் இருந்தோம், நானும் பிலாலும் சாப்பிட்டோம், நான் பிலாலும் உறங்கினோம்,” என்று நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்த அந்த தியாகச் செம்மல், முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர்களின் பட்டியலில் உள்ள உன்னத மனிதர், முதன் முதலில் பாங்கு சொன்ன உத்தம நபியின் உன்னத தோழர், இஸ்லாத்திற்காக அடிவாங்கியவர்களின் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் நம்முடைய பிலால் (ரலி) அவர்கள் செய்த தியாகங்களை என்றைக்காவது நினைவு கூர்ந்து அழுதிருப்போமா?

நமக்கு நோய் நொடி வரும்போது நம்முடைய இறைத்தூதர் (ஸல்) அவர்களும் நோய்வாய்ப்பட்டார்கள், அவர்களும் நோயின் வேதனையில் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்று என்றைக்காவது எண்ணி அழுதிருப்போமா?

நபி(ஸல்) அவர்களின் மேல் கொண்ட அன்பால் அவர்களின் மரண நேரத்தின் நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்களை ஒரு தடவை அல்ல பல முறை வாசித்து, பிறருக்கு எடுத்துச் சொல்லி நாம் நம்முடைய ஈமானை பலப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.  இன்ஷா அல்லாஹ்.

நாம் அழ வேண்டும்,
அர்த்தத்தோடு அழ வேண்டும்.

இந்த வார உறுதி மொழி:

நமக்கு மரணம் எந்த வினாடியும் ஏற்படும் என்று வாயளவில் மட்டும் சொல்லாமல், உள்ளத்தளவில் நமக்கு மரணம் எந்த வினாடியும் வரும் என்பதை சொல்லி, உணர்ந்து நமக்கு இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் நேரத்தை கடமையாக்கப்பட்ட வணக்க வழிபாடுகள் மூலம் அல்லாஹ்வை வணங்கி, அவனுடைய சிந்தனையில் நம்முடையை ஒவ்வொரு பொழுதையும் செலவழிப்போமாக.

இந்த தொடர் அடுத்த வாரத்துடன் நிறைவுக்கு வருகிறது இன்ஷா அல்லாஹ்.

M தாஜுதீன்

13 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நமக்கு மரணம் எந்த வினாடியும் வரும் என்பதை மனப்பூர்வமாக உணர்ந்து நமக்கு இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் நேரத்தை கடமையாக்கப்பட்ட வணக்க வழிபாடுகள் மூலம் அல்லாஹ்வை வணங்கி, அவனுடைய சிந்தனையில் நம்முடையை ஒவ்வொரு பொழுதையும் செலவழிப்போமாக.

sabeer.abushahruk said...

நெகிழ்வூட்டும் சம்பவங்களைப் பற்றி அறியும்போது மனம் கனத்துத்தான் போகிறது.

இறையச்சம் போதிக்கும் இத்தொடர் இவ்வளவு குறைந்த அத்தியாயங்களோடு நிறைவுறத்தான் வேண்டுமா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நெகிழ்வூட்டும் நல்ல தொடர் அதே நேரத்தில் இவ்வாறான நினைவூட்டும் ஒப்பீடுகள் தொடரும் எதிர்பார்போம் !

இன்ஷா அல்லாஹ் !

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]

இறை தூதர்களுக்கும் மரணம் உண்டு என்றஅல்லாஹ்வின் வசனம் [3-144] மனிதர்களுக்கும் ஒரு எச்சரிக்கையே. இருந்தும் மனிதனோ மரணத்தை மறந்தே அகம்பாவத்தோடு திறிகிறான்.

அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்த செல்வங்கள் அனைத்திற்கும் அல்லாஹ்வுக்கு நன்றி கூற மறந்து அவன் தனக்கு தானே பெருமையும் பேசிப் பேசி காலத்தை ஒட்டுகிறான்.

ஒருநாள் "அந்த நாள்" வேதனையோடு வரும்போது அவனுக்கு அல்லாஹ்வின் நினைவு வரும். ஆனால், காலம் கடந்த இந்த உணர்வு கடலில் கரைத்த பெருங்காயம் போலவே.

இந்த தொடரை படித்த எல்லோருக்கும் நபிபெருமானாரின் நெறி தவறாத வாழ்க்கை முறை ஒரு வழிகாட்டியாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கையேந்தி துஆ செய்கிறேன்... ஆமீன்.

S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்.

Ebrahim Ansari said...

//அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு 10 ஆண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) அவர்களிடம் “ அனஸே இறைத்தூதர் மீது மண்ணை அள்ளிப் போட எப்படி உங்களுக்கு மனம் வந்தது” என்று கேட்டார்கள் என்பதை புகாரி போன்ற ஹதீஸ் தொகுப்புகளிலிருந்து வாசிக்கும் அனைவருக்கும் கண்ணீர் வந்தே தீரும்.//

கண்ணீர் அருவியாக வந்தது தம்பி.

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன்! அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்தத் தொடர் நிறைவுறுகிறது என்றாலும் இதே போல இதர குணங்களின் ஒப்பீட்டு தொடர் தொடரவேண்டுமேன்று கேட்டுக் கொள்கிறேன்.

இதற்கு இப்போதே ஒப்புதல் தந்தால் மகிழ்வோம்.

Unknown said...

நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டபிறகு , அதை நம்பாமல், அவர்களின் இறப்பை ஜீரணிக்க முடியாத சஹாபாக்கள் , ரசூல் (ஸல்) அவர்களுக்கு மௌத்து வர்றதாவது,? என்று அவர்களின் மரணத்தை சந்தேகித்த சஹாபாக்கள் , எவ்வளவு தூரம் அவர்கள் மேல் அன்பு வைத்திருந்தால் இப்படி அவர்களைப்பிரிய மனமின்றி நினைத்திருப்பார்கள் என்று எண்ணிப்பார்க்க வேணும்.

அந்த அருமை நபி (ஸல்) அவர்களின் மையித்தின் மீது அபூபக்கர் (ரலி) அவர்கள் நெற்றியில் முத்தமிட்டுச்சொன்னார்கள், " நீங்கள் உயிரோடு இருந்தபோதும் நறுமணம் கமழ்ந்தீர்கள் , மைய்யித்தாக இருக்கும் போதும் நறுமணம் கமழ்கின்றீர்கள் " என்று நாசூக்காக ரசூலுல்லாஹ்வின் இறப்பை அங்கே பிரகடனப்படுத்துகின்றார்கள் . அதன் பிறகுதான் உமருடைய கையில் இருந்த வாள் கீழே விழுகின்றது.

அந்த இடத்தில் அபூபக்கர் (ரலி ) அவர்கள் வந்திருக்காவிடில், இஸ்லாத்தின் போக்கே மாறி இருக்கும். (அல்லாஹ் காப்பற்றிக்கொண்டான் ) குரானின் ஆயத்தை காட்டி ரசூலுக்கும் மரணம் உண்டு என்று அல்லாஹ்வின் வாக்கை அந்த இடத்தில் சித்தீக்குள் அக்பர் அவர்கள் நினைவு படுத்தியதால்தான் அந்த நிமிடமே ரசூலுல்லாஹ்வின் மரணத்தை சஹாபாக்கள் ஜீரணித்தனர்.

அந்த ஆயத்து உஹதுப்போரில், ரசூலுள்ளஹ்வின் ஒரு பல் ஷஹீதானபோது, அவர்கள் மயக்கமுற்று இருந்த நிலையில் காபிர்கள், ரசூல் (ஸல்) இறந்து விட்டார்கள் என்று வதந்தியை கிளப்பியபோது, ரசூல் மார்களுக்கும் மரணம் வரும் அதற்காக நீங்கள் போரிலிருந்து பின் வாங்கி விடாதீர்கள் என்று தெம்பை ஏற்ப்படுத்துவதர்க்காக அல்லா இறக்கிய வசனமாகும்.

மேலும் ரசூல் (ஸல்) அவர்கள் இறந்தது ரபிஉல் அவ்வல் பிறை 12, திங்கக்கிழமை . ஆனால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டது புதன்கிழமை. (அடக்கம் செய்யப்படும் வரை நறுமணம் கமழ்ந்த மைய்யித் .- இன்னா லில்லாஹி வின்னா இலைஹி ராஜிஊன் )

1400 வருடங்களுக்கு முன்னாள் நடந்த இந்த சம்பவத்தை இப்பொழுது நினைக்கும் பொழுது, கண்களில் கண்ணீர் முட்டுகின்றதே, சமகாலத்தில் வாழ்ந்த சபாக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். இனி ஒரு நபி வரப்போவதில்லை என்று இஸ்லாம் அநாதை ஆகிவிட்டதோ என்று எத்தனை எத்தனை எண்ணங்கள் மனதில் எழுந்து அடங்கி இருக்கும், இதை நாமும் நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எண்ணிப்பார்த்து அதற்காக சொட்டு கண்ணீர் விடத்தான் வேணும்.

அல்லாஹ் நம் அனைவரையும்,, அவனுடைய தூதரையும், அவர்தம் சத்திய சஹாபக்களையும் பொருந்தியது போல் பொருந்திக்கொள்வானாக ஆமீன்
யாரப்பல் ஆலமீன் !

அபு ஆசிப்.




Unknown said...

மூன்று குணங்களை விட்டு தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள்:

1) முகஸ்துதி,

2) அதிகம் பேசுவது,

3) தேவையற்றவற்றில் ஈடுபடுவது.

மக்களைப் பற்றி மூன்று காரியங்களைத் தவிர்த்துக் கொண்டார்கள்:

1) பிறரைப் பழிக்க மாட்டார்கள்,

2) பிறரைக் குறைகூற மாட்டார்கள்,

3) பிறரின் குறையைத் தேடமாட்டார்கள்.

நன்மையானவற்றைத் தவிர வேறெதுவும் பேசமாட்டார்கள் அவர்கள் பேசினால் சபையோர்கள் அமைதி காப்பர்கள் தங்களின் தலைமீது பறவை அமர்ந்திருப்பது போல் அசையாமல் இருப்பார்கள் நபி (ஸல்) அமைதியானால் தோழர்கள் பேசுவார்கள் நபியின் முன் பேசும்போது தோழர்கள் போட்டியிட்டுக் கொள்ள மாட்டார்கள். யாராவது பேசத் தொடங்கினால் அவர் முடிக்கும் வரை அவருக்காக அமைதி காப்பார்கள் முதலில் பேசியவன் பேச்சை ஏற்பார்கள் மக்கள் சிரிப்பதைக் கண்டு தானும் சிரிப்பார்கள் மக்கள் ஆச்சரியப்படுபவற்றைக் கண்டு தானும் ஆச்சரியப்படுவார்கள் புதியவன் முரட்டுப் பேச்சை சகித்துக் கொள்வார்கள் தேவையுடையோரை நீங்கள் பார்த்தால் அவர்களின் தேவையை நிறைவேற்றுங்கள் என்பார்கள் உதவி உபகாரம் பெற்றவர் நன்றி கூறினால் மட்டும் ஏற்றுக் கொள்வார்கள். (ஷமாயிலுத் திர்மிதி, அஷ்ஷிஃபா)

காஜா இப்னு ஜைத் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) சபையினில் கண்ணியத்திற்குரிய வர்களாக தோற்றம் அளிப்பார்கள் தங்களது உடல் உறுப்புகளில் எதையும் வெளிக்காட்ட மாட்டார்கள் அதிகம் மௌனம் காப்பார்கள். தேவையற்றதைப் பேசமாட்டார்கள் அழகிய முறையில் உரையாடாத வரை புறக்கணித்து விடுவார்கள் அவர்கள் புன்முறுவலாகவே சிரிப்பார்கள் அவர்களின் பேச்சு தெளிவாக இருக்கும் தேவையை விட அதிகமாகவோ குறைவாகவோ இருக்காது நபியவர்களின் கண்ணியத்தை முன்னிட்டும் அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவும் அவர்களுக்கு முன் தோழர்கள் புன்முறுவலாகவே சிரிப்பார்கள். (அஷ்ஷிஃபா)

சுருங்கக் கூறின் நபி (ஸல்) முழுமை பெற்ற தன்மைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்கள். நற்பண்புகளில் அவர்களுக்கு நிகர் கிடையாது. அல்லாஹ் நபியவர்களுக்கு மிக அழகிய முறையில் ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுத்தான்.

“நிச்சயமாக நீங்கள் நற்குணமுடையவராகவே இருக்கின்றீர்கள்.” (அல்குர்ஆன் 68:4)

என்று அவர்களைப் புகழ்ந்து கூறியிருக்கிறான்.

இந்த நற்பண்புகள் நபியவர்கள் மீது மக்களுக்கு விருப்பத்தையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தியது. இப்பண்புகள் அவர்களை உள்ளங்கவர் தலைவராகத் திகழச் செய்தது. முரண்டு பிடித்த அவரது சமுதாய உள்ளங்களைப் பணிய வைத்தது. மக்களைக் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் சேர்த்தது.

இதுவரை நாம் நபி (ஸல்) அவர்களைப் பற்றிக் கூறிய நற்பண்புகள் அவர்களது மகத்தான தன்மைகளின் சிறு கோடுகளே. அவர்களிடமிருந்த உயர்ந்த பண்புகளின் உண்மை நிலைமையையும் அதன் ஆழத்தையும் எவராலும் அறிந்து கொள்ள முடியாது. தனது இறைவனின் பிரகாசத்தால் ஒளிபெற்று, குர்ஆனை தனது பண்புகளாகக் கொண்டு, மேன்மையின் உச்சக்கட்டத்தை அடைந்த, மனித சமுதாயத்திலேயே மிக மகத்தானவன் உண்மையை அறிந்து கொள்ள யாரால்தான் முடியும்?

அல்லாஹ்வே! முஹம்மதின் மீதும், முஹம்மதின் கிளையார்கள் மீதும் உனது தனிப்பட்ட கருணையை அருள்வாயாக! இப்றாஹீமின் மீதும் இப்றாஹீமின் கிளையார்கள் மீதும் உனது தனிப்பட்ட கருணையை அருளியது போன்று நிச்சயமாக நீயே புகழுக்குரியவன் கண்ணித்திற்குரியவன். அல்லாஹ்வே! முஹம்மதின் மீதும் முஹம்மதின் கிளையார்கள் மீதும் அருள் வளங்களை அருள்வாயாக! இப்றாஹீமின் மீதும் இப்றாஹீமின் கிளையார்கள் மீதும் அருள் வளங்களை நீ அருள் செய்தது போன்று நிச்சயமாக நீயே புகழுக்குரியவன் கண்ணியத்திற்குரியவன்.

abu asif.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

வாசித்து கருத்திட்ட சகோதரர்களுக்கும், வாசித்த சகோதர சகோதரிகளுக்கு மிக்க நன்றி. ஜஸக்கல்லாஹ் ஹைரன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இன்ஷா அல்லாஹ், இபுறாஹீம் அன்சாரி காக்கா அவர்களின் வேண்டுகோளின்படி, அடுத்த நீண்ட தொடராக அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (தலைப்பின் பெயரில் மாற்றம் இருக்கலாம்) என்ற ஒப்பீடி ஹதீஸ்களிலிருந்து தொகுத்தளிக்க என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். வல்ல ரஹ்மான் நேரத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் தர எல்லோரும் துஆ செய்யுங்கள்..

ஊக்கம் உற்சாகமும் தரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கு ஜஸக்கல்லாஹ் ஹைரன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

"அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும்"

தொடர் பற்றிய நிய்யத் நிறைவேற துஆ.

Unknown said...

//இன்ஷா அல்லாஹ், இபுறாஹீம் அன்சாரி காக்கா அவர்களின் வேண்டுகோளின்படி, அடுத்த நீண்ட தொடராக அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (தலைப்பின் பெயரில் மாற்றம் இருக்கலாம்) என்ற ஒப்பீடி ஹதீஸ்களிலிருந்து தொகுத்தளிக்க என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். வல்ல ரஹ்மான் நேரத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் தர எல்லோரும் துஆ செய்யுங்கள்..//

கண்டிப்பாக என் உளமார்ந்த " துஆ " உண்டு

அபு ஆசிப் .

Shameed said...

உங்களின் இந்த தொடரின் கண்ணீர் காய்வதற்குள் உங்களின் அடுத்த தொடரை எதிர் பார்க்கின்றோம் அதற்காக எங்களின் துவா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு