Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஹிஜாப் 26

அதிரைநிருபர் பதிப்பகம் | June 30, 2011 |

அல்லாஹ்வின் திருப்பெயரால். . .


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

ஹிஜாபிற்கு இந்தியா முதல், பல நாடுகளில் எதிர்ப்பும், விவாதங்களும் நடந்து கொண்டு இருக்கிறது. மார்க்கம் நமக்கு ஹிஜாபை எப்படி பேணச்சொல்கிறது என்பதை இந்த ஆக்கத்தில் பார்ப்போம்.

ஹிஜாப் என்ற வார்த்தை திரை, பிரித்தல், பாதுகாப்பு என்ற கருத்துக்களை உள்ளடக்கியதாகும். ஹிஜாப் ஆடையோடு நின்று விடுவதில்லை, நடை, உடை, பேச்சுக்கள், பழக்கவழக்கங்கள் அனைத்தையும் சேர்ந்ததுதான் ஹிஜாப்.

ஹிஜாப் ஊருக்கு ஒன்று, வெளியூருக்கு ஒன்று, வெளிநாட்டுக்கு ஒன்று என்ற வகையில் நமது சமுதாயத்து பெண்கள் கடைபிடித்து வருகிறார்கள். (இங்கு விதிவிலக்கைப்பற்றி மட்டும்தான் கூறுகிறேன் அனைவரையும் கூறவில்லை).

சொந்த ஊரில் ஒழுங்காக ஹிஜாபை கடைபிடிக்கும் பெண்கள் வெளி ஊர்களிலும், வெளிநாடுகளிலும் வித்தியாசமாக கடைபிடிக்கிறார்கள். தலையில் உள்ள துணி தலையில் இருப்பதில்லை கழுத்தில் மாலைபோல் வந்து விடும். தலை முடியை மறைத்து ஹிஜாபை சரியாக போடுவது சிலருக்கு மிக பாரமாக இருப்பதை காண முடிகிறது.

தற்சமயம் புர்க்காவிற்கான தலைதுணிகள் மெல்லிய துணிகளாக வருகிறது. தலைமுடியும், தலையில் உள்ள பூக்களும் வெளியில் தெரியாவண்ணம் தலைதுணி இருப்பதே மிகச் சிறந்தது. ஆடம்பரமாகவும், நல்ல பேஷனாகவும் அணிய வேண்டும் என்பதற்காக தலையில் மெல்லிய துணிகளை தவிர்த்து நாம் அணியும் புர்க்காவும், தலைதுணியும் மறுமையில் நமக்கு வெற்றியைத்தருமா? என்பதை கவனத்தில் கொண்டு ஹிஜாப் அணிவதே சிறப்பானது. அடுத்தவர்கள் நன்றாக இருக்கிறது என்று பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அணிவது நமக்கு நன்மையை பெற்றுத்தராது.

இஸ்லாம் மனிதர்கள் எப்படி வாழ்ந்தால் கண்ணியமாக வாழ முடியும் என்பதை தெளிவாக நமக்கு கற்றுத்தந்துள்ளது. வெட்கம் என்பது மனிதர்களுக்கே உரிய உயர்ந்த பண்பாகும். நடை, உடை, பழக்கவழக்கங்களில் வெட்கமின்றி செயல்படுவதை தடை செய்துள்ளது.

ஒரு சதோரர் நல்ல வேலையில் இருக்கிறார். தொழுகையாளியாகவும் இருக்கிறார். நான் சில வருடங்களுக்கு முன் பார்க்கும்பொழுது புர்க்காவுடன் சென்ற இவரின் துணைவியார்; ஒரு நாள் புர்க்கா, தலைதுணி இல்லாமல் கணவரோடு வெளியில் செல்கிறார் திடீரென்று புர்க்காவுடன் செல்கிறார்.(ஒரு நாள் புர்க்கா, ஒரு நாள் புர்க்கா இல்லாமல் செல்வது இப்படித்தான் தொடர்கிறார்) என்ன கொள்கையில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இஸ்லாம் விளையாட்டாக இவர்களால் பின்பற்றப்படுகிறது. இங்கு தன் மனைவியை கண்டிக்காதது யார் குற்றம், கணவர் குற்றம்தானே. ஐந்து வேளை தொழுதால் மட்டும் போதுமா?

பிற மதத்தில் இருந்து காலேஜில் படிக்கும் காலத்திலேயே இஸ்லாத்தை நன்றாக புரிந்து ஏற்றுக்கொண்ட சகோதரியை எனக்கு தெரிந்த சகோதரர் மணமுடித்து வளைகுடாவில் வாழ்ந்து வருகிறார். இந்த சகோதரி அணியும் ஹிஜாப் நமது பெண்களையே அசர வைக்கும் அளவுக்கு மிக பேணுதலாக அணிந்து செல்கிறார். இஸ்லாத்தை பல தியாகங்கள் புரிந்து ஏற்றுக்கொண்டவர்களுக்குத்தான் இஸ்லாத்தின் மதிப்பு தெரியும். பரம்பரை இஸ்லாமியர்களுக்கு உண்மையான இஸ்லாத்தை பின்பற்றுவதில் தயக்கம், அலட்சியம் இவைகளை காணமுடிகிறது. ஹிஜாபையே தயக்கத்தோடும், விளையாட்டகவும் அணியும் இவர்கள் மார்க்கத்தின் மற்ற அமல்களை சரியாக பின்பற்றுவார்களா?

வெளியூர்களிலும் சரி, வளைகுடா நாடுகளிலும் சரி, விமான நிலையத்திலும் சரி நமது இஸ்லாமிய பெண்கள் கடைபிடிக்கும் ஹிஜாப் பெயருக்காகவே இருப்பதை நான் கண்டு வேதனை அடைந்திருக்கிறேன். கணவர் கூடத்தான் வருகிறார்கள். புர்க்கா அணிந்திருப்பார்கள் தலைதுணி மட்டும் பெயருக்குத்தான் ஆனால் தலையில் இருக்காது. தலைமுடி, பூ முதல் அனைத்தும் வெளியில் தெரியும். இஸ்லாமிய ஆண்களுக்கு ஹிஜாபின் உண்மை காரணம் புரிந்திருக்க வேண்டும். கணவனுக்கு தெரிந்தால் அல்லவா? மனைவியை கண்டித்து ஒழுங்காக தலைதுணியை போடச்சொல்ல முடியும்.

அரபு நாட்டு பெண்கள் வேலை செய்யும் இடங்களில் மற்ற ஆண்களுக்கு நடுவில் அடிக்கடி தலைதுணியை பிரித்து சரிசெய்து கொள்கிறார்கள். அப்பொழுது அவர்களின் தலை திறந்திருப்பதை காண முடிகிறது. (நான் தொலைபேசி அலுவலகத்தில் கண்ட காட்சி) தனி இடத்திற்கு சென்று அவர்கள் சரி செய்து கொள்ளலாம் அல்லது ஹிஜாபிற்கு பின் போட்டு விட்டால் இப்படி சரி செய்ய வேண்டியதில்லை. யாரை குறை சொல்வது?

ஒரு பெண் எப்பொழுதும் தன்மானத்தோடும், கௌரவத்தோடும், சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதற்காகவே இஸ்லாம் பெண்களுக்கு ஹிஜாப்பை பேணச் சொல்லி வலியுறுத்துகிறது.

ஹிஜாப் குறிப்பிட்ட நிறத்தில்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை, எந்த நிறத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை மறைக்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.

வல்ல அல்லாஹ் என்ன கூறுகிறான்:

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் : 24:31)

இந்த வசனத்தில் இருந்து பெண்கள் புர்க்கா அணியும்பொழுது முகம், கை தவிர அவர்களின் தலைதுணி தலை மார்பு பகுதி வரை மூடியிருக்க வேண்டும் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

இப்பொழுது வரும் தலை துணிகள் தலையை மறைக்கவே போதாத அளவுக்கு மிக மெல்லியதாக வருகிறது. அதனால் புர்க்கா அணிந்திருந்தாலும் தலை, மார்பு பகுதியை மறைக்கும் அளவுக்கு கனமான துணிகளை பெண்கள் வாங்கி அணிந்து கொள்வது மிகச் சிறந்த நன்மையை பெற்றுத்தரும். புர்க்கா போட்டுள்ளோம் மார்பு பகுதியை மறைக்க வேண்டியதில்லை என்பது சிறந்த பண்பாக இருக்காது.

ஹிஜாபின் வரையறைகள்:

1) பெண்களின் முகம், மணிக்கட்டு தவிர முழு உடம்பையும் மறைக்க வேண்டும்.

2) புர்க்கா, தலைதுணி கனமானதாக இருக்க வேண்டும்.

3) பெண்களின் உடம்பை இறுக்கி பிடிப்பது போல் இருக்க கூடாது.

4) புர்க்கா தளர்வாக இருக்க வேண்டும் (இறுக்கமாக இருக்கக்கூடாது).

நிகாப் - முகத்திரை

நிகாப் என்பது கண்கள் இரண்டும் தெரியுமாறு முகத்தில் தொங்க விடும் துணிக்கு பெயர். நிகாப் கண்டிப்பாக போட வேண்டும், பேடாமல் இருக்கலாம் என்ற விவாதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதோடு கையுறை, காலுறையும் அணிந்து செல்கிறார்கள். (இந்த நிகாப்தான் பிரான்ஸில் தற்பொழுது பிரச்சனையானது. நிகாப் போடக்கூடாது என்ற சட்டத்தை கொண்டு வந்தார்கள். முஸ்லிம்களுக்கே பிரச்சனை வந்தது போல் சிலர் மெயில் குழுமங்களில் மெயிலை அனுப்பி கொண்டு இருந்தார்கள்).

ஆணாயினும், பெண்ணாயினும் சொந்த ஊரில் தவறு செய்ய தயங்க காரணம் சுற்றியுள்ள தெரிந்தவர்கள் முன்னால் தன் கண்ணியம் பறிபோய் விடும் என்ற அச்சத்தால்தான் (அல்லாஹ்வின் அச்சத்தில் அல்ல). தான் யார் என்று தெரியாத இடங்களில்தான் தவறிழைக்கும் வாய்ப்புகள் அதிகம் (விதிவிலக்கை மட்டுமே கூறுகிறேன்).

வெளியூர்களில் எந்த ஆணுடனும் நிகாப்புடன் (முகத்திரையுடன்) ஒரு பெண் சென்றால் அவனின் மனைவி என்று அறியப்படுவாள். முகத்தை மறைத்துக் கொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்தினால் விபரீதங்களுக்கு வழி வகுத்து விட காரணமாக அமைந்து விடும்.

முகத்தை மறைக்க கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்கள் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படுகிறது. தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட முகம் மறைத்து தவறுகளைச் செய்யக் கூடிய நிலைமையும் ஏற்படலாம்.

சின்னத்திரை முதல் தவறு செய்யும் பெண்கள் வரை தவறிழைத்து விட்டு கைது செய்யப்படும்பொழுது - புர்க்கா அணிந்து (நிகாப்) முகத்திரையோடு வருவதை தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாம்.

முகத்திரை அணிந்த பெண்கள் கடைத்தெருவில் நடமாடும்பொழுது மட்டும் பின்பற்றுகிறார்கள். கடைகளுக்கு உள்ளே சென்று விட்டால் முகத்திரையை அகற்றி விடுகிறார்கள். நானே நேரில் கண்ட காட்சி இது. கடைகளுக்கு உள்ளேயும் ஆண்கள்தான் இருக்கிறார்கள். பின் இந்த முகத்திரை யாருக்காக போடுகிறார்கள். கணவருக்காகவா? அல்லது இஸ்லாத்திற்காகவா? இல்லாத ஒன்றை கடைபிடித்தால் இந்த நிலைதான் ஏற்படும்.

பெண்கள் கடைவீதிகளுக்குச் செல்லும்பொழுதும் மற்ற நேரங்களிலும் கொடுக்கல், வாங்கல் மற்ற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட முடியாது. அதனால் முகம், கை தவிர்த்து மணிக்கட்டு வரை மறைத்திருப்பது போதுமானது.

ஆண்களின் ஹிஜாப்:

பெண்களுக்கு மட்டும்தான் ஹிஜாப் ஆண்களுக்கு ஹிஜாப் இல்லை எப்படியும் இருக்கலாம் என்று நினைத்து வாழும் ஆண்களுக்கு வல்ல அல்லாஹ் குர்ஆனில் கூறுவதை கவனமாக படித்து மனதில் வைத்துக்கொள்வது நன்மையளிக்கும்.

(முஹம்மதே) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 24:30)

ஒரு ஆண் ஒரு பெண்னை பார்த்தவுடன் அவனது மனதில் வெட்கமற்ற தவறான எண்ணம் தோன்றாமல் இருக்கவே பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுமாறு வல்ல அல்லாஹ் கூறுகிறான். (இதுவே ஆண்களுக்கான ஹிஜாப்)

முதல் பார்வை சாதாரண பார்வை, இரண்டாவது பார்வை ஷைத்தானின் பார்வை ஆகவே மீண்டும் பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என்பது நபிமொழி.

ஆகவே அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! தங்களின் ஹிஜாபை முழுமையாக அழகான முறையில் பேணி வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்று இம்மையிலும், மறுமையிலும் வெற்றி அடையுங்கள்.


- S.அலாவுதீன்

ஒன்றுபட்டால்… உண்டு! 52

அதிரைநிருபர் பதிப்பகம் | June 28, 2011 | , ,

ஒற்றுமை யென்றொரு கயிறு
ஒற்றையாய்ப் பிடிப்பது தவறு
கற்றவர் கல்லாதோர் முயன்று
மற்றவர் இணைந்தால் உயர்வு

பள்ளியில் படித்தது பிஞ்சில்
பசுமையாய்ப் பதிந்தது நெஞ்சில்
ஒண்ணா யிருக்கக் கற்க வேண்டும்
உண்மையைச் சொன்னால் ஏற்க வேண்டும்

பசுக்களின் சாந்தத் தன்மைகூட
மந்தையில் கலந்தால் புலியையே விரட்டும்
தனிப்பட்டுப் போன பசுவை மட்டும்
துணிந்து தாக்கும் குட்டிப் புலியும்

இலகுவாய் உடைபடும் குச்சிகூட
இறுக்கிய கட்டுக்குள் கடினம் கூடும்
ஒடிக்க முயலும் கைகள் தோற்கும்
ஒற்றுமைப் பாடம் வியந்து கற்கும்

ஒரு இறை வணங்கும் ஒரே கொள்கை
பலமுறை சிதைந்து பரிகசிக்குது
இயக்க போதையின் மயக்க நிலையில்
இறந்து போகுமோ சகோதரத்துவம்

தந்தையும் தனையனும் தமக்குள் பகை
தமையனுக்கு தமக்கை திடீர் எதிரி
நண்பனை வெறுத்தல் நவீன நியாயம்
என மாற்றிய போதனை ஒழிக

வாழ்க்கையில் ஒற்றுமை வணக்கத்தில் ஒற்றுமை
வயிற்றுப் பசிக்கும் சேர்ந்துண்ணும் ஒற்றுமை
வாய்த்த செல்வத்தை பகிரும் ஒற்றுமை
வழிகேட்டில் சிக்கி வதைபடுது ஒற்றுமை

வேலியே பயிரை மேய்கிறதிங்கு
வேல்கம்பு வெளி நின்று ரசிக்குதின்று
மதிகெட்ட மாந்தரின் மடைமை கண்டு
விதிகூட கைகொட்டிச் சிரிக்குதந்தோ

ஓரணியில் ஒருகுரலில் ஓங்கியபோதெல்லாம்
ஒன்றுமே உலகம் அறியத் தரவில்லை
சின்னச் சண்டையும் சிற்சில வேற்றுமையும்
சின்னத் திரைகளில் சிரிப்பாய் சிரிக்குதின்று

தலைவர்கள் நம்மை நினைக்க வேண்டும்
தலைக்கணம் தனை துறக்க வேண்டும்
தற்பெருமை என்பதொரு வியாதி யென
தன்னலம் மறந்து சிறக்க வேண்டும்

இம்மையில் மட்டுமல்ல இழிவு
மருமையிலும் தொடரும் துன்பம்
தொன்று தொட்டு கண்ட கனவை
ஒன்று பட்டு வெல்வோம் வாழ்வில்

- சபீர்

PLEASE VISIT OUR NEW WEBSITE https://adirainirubar.in/ 

அதிரை செய்தி ஊடகம் அறிமுகம் ADIRAI BBC 40

அதிரைநிருபர் | June 27, 2011 | ,

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களே..

அதிரைக்கு என்று பல வலைப்பூக்கள் இருந்தாலும் அதிரையின் நிகழும் அன்றாட செய்திகளை மட்டும் உலகில் உள்ள அதிரை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக அதிரையில் வசிக்கும் ஒரு சில இளம் பதிவாளர்கள் இணைந்து புதிதாக அதிரைபிபிசி (Adirai BBC ) http://adiraibbc.blogspot.com  என்ற வலைப்பூவை இன்று முதல் அறிமுகம் செய்துள்ளார்கள் என்ற தகவல் நம் அதிரைநிருபருக்கு வந்தது.


பல்வேறு தளங்களில் செய்தி பங்களிப்பாளர்களாக பங்காற்றிய அனுபவத்துடனும், பல்வேறு நாடுகளில் வசிக்கும் நண்பர்கள், அபிமானிகள், உள்ளூர் பிரமுகர்கள், உள்ளூர் தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் ஆகியோரின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலின் பேரில் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்த வலைத்தளத்தின் அறிமுக பதிவில் சொல்லப்பட்டுள்ளது. பொதுவாக அதிரை வலைத்தளங்கள் வைத்திருப்பவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இவர்களால் உள்ளூர் நிகழ்வுகளை தங்களின் வலைத்தளங்களில் வெளியிடுவதில் காலதாமாகிறது என்பது அதிரை பிபிசி நண்பர்களின் வாதம். அதிரையில் உள்ள செய்திகளை அதிரையிலிருந்தே வெளிநாட்டுவாழ் மக்களுக்கு கொண்டு செல்வதில் முழுமுனைப்புடன் செயல்படுவோம் என்று உறுதியுடன் இந்த வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இதன் பங்களிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அதிரையில் உள்ள செய்திகளை உலகத்தில் உள்ள அதிரைவாசிகளுக்கு அறியத்தரும் விதமாக காணொளியாகவும், புகைப்படச் செய்திகளாகவும், நேரலையாகவும், விளம்பர செய்திகளாகவும் மற்றும் அதிரை சார்ந்த விழிப்புணர்வு பிரச்சார செய்திகளையும் முழுக்க முழுக்க அதிரையிலிருந்து அதிரைபிபிசி வலைத்தள நண்பர்கள் வெளியிட உள்ளார்கள். வலைப்பதிவுலகில் பிரகாசிக்க துடிக்கும் இந்த இளம் அதிரை பதிவாளர்களை வாழ்த்தி அறிமுக செய்துவைப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.

அதிரை சார்ந்த வலைப்பூக்கள் வைத்திருக்கும் சகோதரர்கள் நம் சகோதரர்கள் என்ற எண்ணத்தில் ஒவ்வொருவரின் செயல்பாடுகள் நகரீகமாகவும், தனிமனித தாக்குதல்கள் இல்லாமலும் இருக்க வேண்டும் என்பது நம் எல்லோருடைய விருப்பம். இவற்றை புதிதாக உதயமாகியுள்ள அதிரை பிபிசி வலைத்தளம் இவைகள் அனைத்தையும் பின்பற்றும் என்று எல்லோரும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.

வாழ்த்துக்கள் அதிரைபிபிசி நண்பர்களுக்கு.

-- அதிரைநிருபர் குழு

இ மெயிலில் இளித்தது! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | June 27, 2011 | ,

படித்ததில் ரசித்தது!

Latest from Nursery Schools:

A: APPLE
B: BLUETOOTH
C: CHAT
D: DOWNLOAD
E: E-MAIL
F: FACEBOOK
G: GOOGLE
H: HEWLETT PACKARD
I: iPHONE
J: JAVA
K: KINGSTON
L: LAPTOP
M: MESSENGER
N: NERO
O: ORKUT
P: PICASSA
Q: QUICK HEAL
R: RAM
S: SERVER
T: TWITTER
U: USB
V: VISTA
W: WiFi
X: Xp
Y: YOU TUBE
Z: Zorpia

நல்ல வேலே
A is still APPLE இன்னும் அப்படியே !

உங்களுக்கு தெரிந்த A to Z சொல்லுங்களேன்.

ரஃபியா

ஏன் இந்தத் தொழிலாளர் பஞ்சம்? 4

அதிரைநிருபர் | June 27, 2011 | , ,

இன்று உழைப்புக்கும் உழைப்பாளிகளுக்கும் கடும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. அன்றாட வேலைகளை முடிக்க ஆட்கள் கிடைப்பதில்லை. அது எந்த வேலையாக இருந்தாலும் சரி. அதற்கான காரணங்களை ஆராய்வோம்.

இன்று இந்தியாவில் கல்வி கட்டாயக் கடமை ஆகிவிட்டது. கல்வியின் அவசியம் பல ஆண்டுகளுக்கு முன்பே உணரப்பட்டுவிட்டது. அரசு, குறிப்பாகத் தமிழ்நாடு அரசு கல்வியில்தான் அக்கறை செலுத்தியது. கர்ம வீரர் காமராஜ் காலத்தில் இலவசக் கல்வி கொண்டு வரப்பட்டது. இலவசப் பகல் உணவும் வழங்கப்பட்டது.

எல்லா இனத்தவரும் கல்வி கற்கத் துவங்கினார்கள். கட்டிடத் தொழிலாளர் முதலாக எல்லாத் தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகளும் கல்வி கற்க முன் வந்தனர். இந்த வேகத்தால் சாணக்கியர் ராஜாஜியின் குலக் கல்வித் திட்டமும் தோல்வியைத் தழுவியது.

கல்வி கற்பதற்கே நேரம் போதாததால், தொழிலாளி வீட்டுப் பிள்ளைகளில் சிலர் தங்கள் தொழிலைக் கற்றுக் கொள்ள வில்லை. அவர்கள் தங்கள் மேற் படிப்பை முடித்துக் கொண்டு, வேறு வேலைகளைத் தேர்ந் தெடுத்தனர். எல்லா சமூகத்தினருக்கும் அயல்நாட்டு மோகம் எழுந்தது. தொழில் வர்க்கம் சும்மா இருக்குமா? அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பும் இருந்தது. அங்கு தன் பெற்றோரைவிட பல மடங்கு ஈட்டுவதற்குரிய வாய்ப்பை உணர்ந்தனர். எனவே வெளிநாடு சென்றனர்.

பிள்ளைகள் அல்லது சகோதரர்கள் வெளிநாட்டில் இருந்ததால் தொழிலாளர்களுக்கு வருவாய் தேடவேண்டும் என்ற முனைப்பு குறைந்தது. அவர்களின் வாழ்வாதாரங்களை அரசே தர முன் வந்தது. உணவுத் தேவையின் அடிப்படையாகவுள்ள அரிசி இலவசமாகக் கிடைத்து விடுகிறது. குழந்தைகளுக்குக் கல்வியோடு உணவு, புத்தகங்கள், சீருடை இலவசம்.

தொலைக் காட்சிப் பெட்டி இலவசம்; அது இயங்கும் மின்சாரம் இலவசம். வீட்டுக்கு வருகிற தொழிலாளி தொலைகாட்சி முன்னால் அமர்ந்து கொண்டு வருவாயைத் தொலைத்து விட்டு, பின்னால் தங்கிவிடுகிறான். தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டதர்க்கு இவைதான் கரணம்.

இந்நிலை மாற வேண்டுமானால் அரசு இலவசங்களை ரத்து செய்யவேண்டும். தொழில் செய்ய மறுப்போர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். தொழில் என்பது எல்லாருக்கும் பொதுதான். தொழில்களை எல்லாரும் கற்றுக்கொள்ள வேண்டும். அதில் ஈடுபட்டு பொருள் ஈட்ட முன் வரவேண்டும். தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட காலம் இது. எந்தத் தொழிலையும் வெற்றிகரமாகச் செயய முடியும். அயல் நாடுகளில் எந்தத் தொழிலையும் செய்ய ஆயத்தமாக இருக்கும்போது, உள்நாட்டில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?

மாணவர்கள் தொழில் படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். தொழில் படிப்பு என்றும் கை கொடுக்கும். வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும். தொழில் வளர்வதற்கும் மக்களின் தேவைகள் நிறைவேறுவதற்கும் பொருளாதாரம் மேம்படுவதற்கும் தனி மனிதன் முதல் சமூகம் வரை அயராது பாடுபடவேண்டும்.

உழைப்பு உடல் நலத்தைத் தரும். வருவாயைத் தரும். மன மகிழ்வைத் தரும். நிம்மதியான வாழ்க்கை அமையும். நம் உயிர் காக்கும் உழைப்புக்கு உயிர் கொடுபோம்.

வாவன்னா

நன்றி: உமர்தென்றல்

குடி கெட்ட குடி.... 8

அதிரைநிருபர் | June 26, 2011 |

பணிக்குப்பின் பள்ளிக்கூடம் வந்து
என்னை பாசத்துடன் அழைத்து சென்று
வேண்டிய திண்ப‌ண்ட‌ம் வாங்கித்த‌ருவாய் என‌
தேட்ட‌மாய் இருந்து உன்னைத்தேடினேன்.

மாறாக‌ நீ காத்துக்கிட‌க்கிறாய்
சாராய‌க்க‌டையின் முன் சகதியாய்!
நான் வ‌ந்து அழைத்துச்செல்வேன்
உன்னை ப‌த்திர‌மாக‌ வீடு சேர்ப்பேன் என்று.

குடித்து விட்டு இப்ப‌டி க‌விழ்ந்து கிட‌க்கிறாயே!
என் எதிர்கால‌ க‌ன‌வுக‌ளை இப்ப‌டி க‌விழ்த்துவிடாதே!
வாழ்வில் வேத‌னையும், சோத‌னையும் எவ‌ர்க்கில்லை?
குடி பிர‌ச்சினைக‌ளுக்கு தீர்வ‌ல்ல, தொட‌க்க‌ம் என‌ அறிய‌மாட்டாயா?

அம்மாவும் உன் வ‌ருகைக்கு ஆசையுட‌ன் காத்திருப்பாள்
அல்வாவுடன் ம‌ல்லிகைப்பூவின் ந‌றும‌ண‌த்திற்காக‌ அல்ல
சேதாரமில்லாத உன் பாதுகாப்பான‌ வ‌ருகைக்காக‌
த‌ம்பியும், த‌ங்கையும் உன் கைப்பையின் திண்பண்ட‌த்திற்காக‌

குடித்து, குடித்து நீ எந்த‌ப்பிர‌ச்சினையை தீர்த்தாய்?
க‌ட‌ன் வாங்கி குடும்ப‌த்தை திண்டாட‌ வைத்த‌து தான் மிச்ச‌ம்.
எங்க‌ளுக்கு வேண்டிய‌தை வாங்கித்த‌ரும் ஆசைத்த‌ந்தையாய்
நீ என்று மாற‌ப்போகிறாய் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் ந‌ல்ல‌ த‌ந்தைய‌ரைப்போல்?

வேண்டாம‌ப்பா குடித்த‌து போதும் இன்றே நிறுத்தி விடு!
நினைத்த‌தை சாதிக்க‌ உழைப்பின் ப‌க்க‌ம் திரும்பி விடு!
மாட‌ மாளிகையில் ம‌ன‌ப்புழுக்க‌த்துட‌ன் வாழ‌ வேண்டாம்
குடிசையில் குடும்ப‌த்துட‌ன் கொண்டாட்ட‌மாய் வாழ்ந்திடுவோம்.

நான் உன்னிட‌ம் ஆசைக்க‌திக‌மாக‌ என்ன‌ அப்ப‌டி வாங்கி கேட்டேன்?
நீ குடிக்கு கொடுக்கும் காசில் ந‌ம் குடும்ப‌மே சாப்பிட்டு விட‌லாம‌ல்ல‌வா?
ம‌ற்ற‌ குழ‌ந்தைக‌ளைப்போல் காரில் ப‌வ‌னி வ‌ர‌ ஆசை இருந்தும்
உன்னை நல்ல‌‌ அப்பாவாக‌ நாள் தோறும் பார்க்க‌ ம‌ட்டுமே ஆசைப்ப‌டுகிறேன்.

எங்கோ சென்று கொண்டிருக்கும் அவ‌ச‌ர‌ உல‌கில்
நீ ம‌ட்டும் ஐந்த‌றிவு பிராணியாய் இப்ப‌டி
குடித்து சாக்க‌டையில் க‌விழ்ந்து
என்ன‌ சாதித்தாய்? சிந்திக்க‌மாட்டாயா?

வெந்த‌ புண்ணில் வேலைப்பாய்ச்சாதே!
இந்த‌ பிஞ்சு ம‌ன‌சிற்கு வேத‌னையை கொடுக்காதே!
குடியால் உன் துக்க‌ம் அரை ம‌ணி நேர‌ம் தீரலாம்
குடிக்காத‌ ந‌ம் வீட்டின‌ர் தீர துக்க‌த்தில் மூழ்கும்.

உன் ஆரோக்கியக்கேடு ஒட்டு மொத்த‌ குடும்ப‌த்தின் கேடு
உன் ந‌ல‌னே எங்க‌ளின் லாபம் தரும் முத‌லீடு
நீ ந‌ல்ல‌ த‌ந்தையாய் என‌க்கும்
ந‌ல்ல‌ த‌லைவ‌னாய் அம்மாவிற்கும் என்றும் வேண்டும்.

இன்று ச‌ர்வ‌தேச‌ போதை ஒழிப்பு தின‌ம் ஆத‌லால் த‌மிழ் இணைய‌ த‌ள‌மொன்றில் வெளியான புகைப்ப‌டத்தை வைத்து ஏதாவ‌து எழுத‌ வேண்டுமென‌ எண்ணி எழுத‌ப்ப‌ட்ட‌வைக‌ளே மேலே வ‌ரைய‌ப்ப‌ட்ட‌ வார்த்தைக‌ள். என்றோ குடியின் கேடுக‌ளை ஆணித்த‌ர‌மாக‌ எடுத்துரைத்த‌ ந‌ம் மார்க்க‌ம் இன்று தான் உல‌க‌ம் அத‌ன் கேடுக‌ளை மெல்ல‌, மெல்ல‌ உண‌ர‌த்தொட‌ங்கி இருக்கிற‌து.

ஒரு கால‌த்தில் ப‌ள்ளி, க‌ல்லூரிக‌ளை க‌ட் அடித்து விட்டு சாதாரன ப‌ட‌ம் பார்த்து‌ வ‌ந்தாலே பெரும் குற்ற‌மாக‌ குற்ற‌ உண‌ர்வுட‌ன் உண‌ர‌ப்ப‌ட்ட‌ மாண‌வ‌ர்க‌ள் இருந்த‌ அக்கால‌த்தில் இன்று போதை பழ‌க்க‌ம் மாண‌வ‌ர்க‌ளையும் மெல்ல‌, மெல்ல‌ ஆட்கொண்டு வ‌ருவ‌து அதிர்ச்சி த‌ரும் ஆய்வின் முடிவாக‌ உள்ள‌து.

போதை பொருட்க‌ள் ஒழிப்பை எவ‌ர் முன்னின்று ந‌ட‌த்தினாலும் நாம் அதில் தாராள‌மாக‌ க‌ல‌ந்து கொண்டு இத‌ன் தீமைக‌ள் ப‌ற்று ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌தொரு விழிப்புண‌ர்வை கொடுக்க‌லாம்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

(பணம் + அதிகபணம் )2 = சொத்து2 + வியாதி2 – (நிம்மதியான வாழ்க்கை)6 19

அதிரைநிருபர் | June 26, 2011 | , , , ,

கடல்கடந்து, கண்டம் கடந்து, கண்டெய்னரில் தன் உயிரேயே பணயம் வைத்து பணத்திற்காக, தன்னை சார்ந்து இருப்பவர்களின் நலனுக்காக செல்லும் சகோதரர்களுக்கு இதனை படித்து தப்பாக நினைக்கவேண்டாம், இது ஒரு சிந்தனை கட்டுரை அன்றி யாரையும் புண்படுத்துவதற்க்காக அல்ல, சமீபத்தில் வியாபார விசயமாக லண்டன் சென்றிருந்தபோது சந்தித்த ஒருவருரின் கதையை கேட்டபிறகு இந்த கட்டுரை எழுத விழைந்தேன்

பணம்

பணம் என்றால் பிணமும் வாயைப்பிளக்கும்,பணம் பாதாளம்வரை பாயும், பணமில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற வார்த்தைகள் மூலம் பணம் பணம் என்று நாம் மனமும்,மைண்ட்டும் செட்டாகி அது எங்கு கிடைத்தாலும் ஓட,ஆட வைக்கிறது.பணம் ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும் மாயப்பொருள்தான் அதில் டவுட் இல்லை,ஆனாலும் அதிகப்படியான “பணம்” நம்மை குஷிப்படுத்துமா அல்லது நம் மகிழ்ச்சியை குதறுமா என்பதுதான் என் கேள்வி....அலசிபார்ப்போமே..இந்த கட்டுரைக்கு 100% தகுதி படைத்தவன் நானும் அல்ல என்பதை நினைவுபடுத்துகின்றேன்

தன்னிறைவு

தன்னிறைவு என்ற வார்த்தையில் உள்ள அர்த்தத்தை நாம் அவசியம் அறிந்து கொள்ளவேண்டும்,பட்டுக்கோட்டையில் ஒரு நிலமும்,சென்னை ஜார்ஜ் கோட்டைக்கு பக்கத்தில் ஒரு பலமாடி கட்டிடமும் இருந்தால்தான் தன்னிறைவு என்று எண்ண கூடாது,ஒருவர் உயிர்வாழ என்ன அடிப்படை தேவைகள் அது எந்த சிரமும் இல்லாமல் பூர்த்தி ஆகுதோ அதனைதான் தன்னிறைவு என்று கொள்ளவேண்டும்.அடிப்படை வசதிகளைப் பெற பணம் முக்கியம்தான். ஆனால் அதுவே வாழ்க்கையாகி விடாது. ஒருவருக்குப் பணம் வந்தவுடனேயே பாதுகாக்க வேண்டிய அவசியமும் வந்து விடுகிறது. அதனால் பல சமயங்களில் நிம்மதி போகிறது. நிம்மதி போய் ராஜாமடம் ஆற்றுப்பாலத்தில் மனதை ஆற்ற விட்டவங்களும் உண்டு

ஒரு ஊரில் நடுத்தரகுடும்பத்தை சேர்ந்தவர், ஒரு சிறிய வீட்டைக்கட்டி அமைதியாக வாழ்ந்துவந்தார், நிம்மதியான தூக்கமும் இருந்தது, திடீரென அவருக்கு ஒரு பணக்காரர் வந்து , இறைவன் என் கனவில் வந்து இந்த வைரக்கல்லை உங்களிடம் கொடுக்க சொன்னார், அமானிதத்தை ஒப்படைப்பது என் கடமை எனவே இதை ஏற்றுக்கொள்ளுங்கள்,மனிதனுக்கு தலை,கால் புரியவில்லை சந்தோசமாக பெற்றுக்கொண்டார் ஆனால் அதனை பெற்றுக்கொண்ட நாள் முதல் அதனை எப்படி பாதுகாப்பது என்ற சிந்தனையிலயே அவர் தூக்கம் மறந்து நிம்மதி இழந்து பேயாக மாறிப்போனார்..இவ்வாறுதான் நாம் வாழ்க்கையும் கொடுத்ததை கொண்டு நிறைவடையாமல், மேலும் எடுத்து கொள்ள நினைக்கிறது, நிம்மதியை அணைக்கின்றது,ஆகையால் தன்னிறைவு தன்னம்பிக்கை தரும் வாழ்க்கையை செழிப்பாக்கும்.

வாழ்நாள் சாதனை

வாழ்க்கையில் நாம் என்ன சாதித்து இருக்கிறோம் என்பதற்க்கு நம் அக்கவுண்ட் பேலன்ஸ்/நிலம்/வீடு வாசல்/ கார் போன்றவற்றைதான் அளவு கோளாக எடுத்து இருக்கின்றோம்,யாரவது நாம் செய்துள்ள நற்காரியங்கள், உறவுகள், நண்பர்கள், பொதுநலப் பணிகள் போன்றவற்றை அளந்து வாய் பிளந்து இருப்போமென்றால் மிகக்குறைவுதான் மனிதனுடைய வாழ்க்கை என்னவோ அதிகபட்சமாக 65 வயதுவரைதான், அதுவும் இப்போதெல்லாம் 35 வயசுக்கு பிறகு படுக்கையில் எழுப்பிவிடுவதற்க்குட ஒர் ஆள் தேவைபடும் அளவிற்க்கு நோய்கள் மொய்க்கின்றன (அல்லாஹ் காப்பாதணும் ),வாலிபத்தை தொலைப்பதும் வாழ்வின் தோல்வியே

பணம் என்ற உப்புத் தண்ணியைக் குடிக்கக் குடிக்கத் தாகம் எடுத்துக் கொண்டேதான் இருக்கும். தாகம் தீரும் வரை காத்திராமல் மற்ற மகிழ்ச்சி தரும் விசயங்களில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வாழ்வைத் தொடரப் பழக வேண்டும். அதற்க்காக தேடலை நிறுத்திவிட்டு ஊரில் வெட்டியாக சுற்றவேண்டும் என்பதில்லை..எதற்க்கும் ஒரு எல்லையை வரையறை செய்து கொள்ளவேண்டும்,உண்மையான மகிழ்ச்சி எதில் உள்ளது என்பதை கண்டெறிய வேண்டும்..அதுவே நம் இலக்காக இருக்கவேண்டும்.

நாம் எது அதிக மகிழ்ச்சி என்பதில் தெளிவாக இருந்தால் நமக்குப் பணத்தின் மீதிருக்கிற பற்று குறையும், பொருள் தேடல் என்ற கடலில் நம்மையும் தொலைத்துவிட்டு, வாழ்க்கையும் தொலைத்து விடுகிறோம்..தெரிந்த நண்பர் ஒருவர் ஜப்பானுக்கு சென்று 8 வருடங்கள் கழித்து வந்தார்.. பணம் அவரிடம் வந்தது..ஆனால் வாழ்க்கை விலகி ஓடிவிட்டது...அவரிடம் நான் அதைப்பற்றி கேட்டபோது அவர் வெறுத்து சொன்ன வார்த்தயை இங்கு எழுத முடியாது …ஆனால் அந்த பணம் அவரின் இழந்த வாழ்க்கையை திருப்பி தர முடியவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

As they say ,everyone is fighting their own battle, to be free from their past, to live in their present and to create their future...

ஆகையால் இந்த போரை நடத்தி கொண்டிருக்கவேண்டியதுதான், அந்த போரில் வெற்றிபெற உதவுவது உழைப்பு ..உழைப்பால் பணம் வரவு மட்டும் இல்லை, உடலும் ஆரோக்கியமடைகிறது....உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் மன ஆரோக்கியம் முக்கியம் ,அந்த மன ஆரோக்கியத்திற்க்கு மருந்து மகிழ்ச்சி தரும் மற்ற விசயங்கள்தான் பணமல்ல….

என்ன நினைக்கிறீங்க நண்பர்களே !!!


இப்படிக்கு

முகமது யாசிர்
துபாய்

cmp லைன் வாய்கால் முறையாக சீர் செய்யப்படுமா? 8

அதிரைநிருபர் | June 25, 2011 | , ,

நீங்கள் கீழே பார்த்து கொண்டு இருக்கும் புகைப்படங்கள் (24.06.2011 எடுத்தது) CMP லைன் வாய்காலின் நிலை?



தமிழ்நாட்டில் தேர்தல் வரும்போது நமது தொகுதியில் அதிகமாக பேசபடுவது இந்த வாய்காலைதான். நமது தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் என்னை வெற்றி பெற வையுங்கள் நான் இந்த வாய்காலை சீர் செய்யுவேன் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு செல்வர்கள். இன்னும் ஒரு சில மாதத்தில் உறுப்பினரக போட்டியிட தயாராகும் வேட்பாளர்கள் என்னை வெற்றி பெற வையுங்கள் நான் இந்த வாய்காலை சீர் செய்யுவேன் என்ற சொல் தாரக மந்திரமாக இருக்கும். இங்குள்ள வாய்காலை ஒரு மாதத்திற்கு முன் அதிரை பேரூர் நிர்வாகம் தூர்வாரினார்கள். ஆனால் தூர்வாரிய பின்பு அங்கு உள்ள கழிவுகளை அப்படியே விட்டுச் சென்றுள்ளார்கள். வாய்கால் தூர் வாருவதற்கு முன்பு கூட இவ்வளவு மோசமாக இல்லை ஆனால் தற்போது இருக்கும் சூழல் அங்குள்ள மக்களுக்கு டெங்கு காலரா போன்ற கொடிய நோய் வரும் அபாயம் உள்ளது.

ஆகவே இந்த பகுதி வார்டு கவுன்சிலர் அவர்களும், பேரூராட்சி நிர்வாகமும் இதில் மிக அக்கரை எடுத்து வாய்க்கால் தூர்வாரிய பகுதிகளில் இருக்கும் குப்பைகளை உடனே அகற்றி இதனால் ஏற்படக்கூடிய கொடிய நோயிலிருந்து காப்பாற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இன்னும் சில நாட்களின் இதை சுத்தம் செய்யவில்லை என்றால் மக்கள் சாலை மறியல் செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கசியத்தொடங்கியுள்ளது.

மேலும் அதிரையில் குவிந்துள்ள குப்பைகள் அவ்வப்போது எடுக்கபடாததால் அப்பகுதி மக்களே அதற்கு தீ வைத்துவிடுகிறார்கள். இதனால் பெரிய விபரீதங்கள் ஏற்பட காரணமாகிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. வார்டு உறுப்பினர்கள் அனைவரும் மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படுமாறு அதிரைநிருபர் குழு அனைத்து அதிரை மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறது.

-- அதிரைநிருபர் குழு

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 4 18

அதிரைநிருபர் | June 25, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.


''உங்களின் (தொழுகை) அணிவகுப்பை சமப்படுத்துங்கள். (இல்லையெனில்) உங்கள் முகங்களுக்கிடையே அல்லாஹ் வேறுபாட்டை (பிரிவை) உண்டாக்கி விடுவான்''  என்று நபி(ஸல்) கூற நான் நான் கேட்டேன். (அறிவிப்பவர்: (அபூஅப்துல்லா என்கிற) நுஹ்மான் இப்னு பஷீர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).


''நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ உங்களின் தோற்றங்களையோ பார்க்கமாட்டான். எனினும் உங்களின் இதயங்களையும் உங்களின் செயல்களையும் பார்ப்பான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)  அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்:7 )


''ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரான் ஆவான். அவர் மற்றவருக்கு அநீதி இழைக்க வேண்டாம். அவரை ஆதரவற்றவராக விட்டு விட வேண்டாம்.  தன் சகோதரனின் தேவையை ஒருவன் நிறைவேற்றுபவனாக இருந்தால், அவனது தேவையில் (உதவிட) அல்லாஹ் இருப்பான். ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை (இவ்வுலகில்) ஒருவன் நீக்கி வைத்தால், மறுமையில் பல கஷ்டங்களில், ஒரு கஷ்டத்தை அவனை விட்டும் அல்லாஹ் நீக்கி வைப்பான். ஒரு முஸ்லிமின் குறையை (இவ்வுலகில்) மறைத்தால், மறுமை நாளில், அல்லாஹ் அவனது குறையை மறைப்பான்''  என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 233)


''மரணித்த நபரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை: குடும்பம், அவனது சொத்து, அவனது செயல் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று தங்கி விடுகிறது. (அதாவது) அவனது குடும்பமும் அவனது சொத்தும் திரும்பி விடுகிறது. அவனது செயல் (அவனுடன்) தங்கி விடுகிறது. '' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).

''உலகத்தின் கஷ்டங்களில் ஒரு கஷ்டத்தை ஒரு  மூஃமினை விட்டும் ஒருவன் நீக்கினால் மறுமை நாளின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை அவரை விட்டும் அல்லாஹ் நீக்குவான். கஷ்டப்படுபவனுக்கு (உதவி செய்து) இலகுவை ஏற்படுத்தினால் அவருக்கு இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் (உதவி செய்து) இலகுவாக்குவான். முஸ்லிமின் குறையை ஒருவர் மறைத்தால், இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவரின்(குறையை) மறைப்பான். ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவி செய்பவனாக இருக்கும்வரை அந்த அடியானுக்கு உதவி செய்பவனாக அல்லாஹ் இருப்பான். கல்வியைத் தேடியவனாக ஒரு வழியில் நடந்தால், அவருக்கு சொர்க்கத்திற்குச் செல்லும் வழியாக அதை அல்லாஹ் இலேசாக்குவான்.'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)அவர்கள்(முஸ்லிம்).(ரியாளுஸ்ஸாலிஹீன்:245)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

-- அலாவுதீன்


அதிரை கால்பந்து விளையாட்டுச் செய்தி: 24-06-2011 13

அதிரைநிருபர் | June 24, 2011 | , ,

இலவசம்... இலவசம்... இலவசம்... அனுமதி இலவசம் என்ற கணீர்குரலில் அதிரை இளைஞர் கால்பந்துக்கழகம் நடத்தும் எழுவர் கால்பந்து தொடர்ப்போட்டியில் இறுதிப்போட்டி என்று ஐடிஐ மைதானத்தில் நடைபெறும் என்று இன்று காலை முதல் ஒலிப்பெருக்கி மூலம் ஒலித்துக்கொண்டே இருந்தது.

அதிரை AFFA அணிக்கும் காலிகட் கேரளா அணிக்கும் கால்பந்து இறுதிப்போட்டி நடைப்பெற்றது. தொடக்கவிழாவில் இரு அணிகளில் அணிவகுப்பு மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. அதனைத் தெடர்ந்து காவல்துறை அதிகாரிகள் திரு. அசோக் குமார், திரு. செம்மலக்கண்ணன் மற்றும் மற்ற விருந்தினர்கள் ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.

விருவிருப்பாக நடைப்பெற்ற இவ்வாட்டத்தின் முதல் பகுதியில் இரு அணிகளும் கோல் ஏது போடாமல் மிகச்சிறப்பாக விளையாடினார்கள். ரசிகர்கள் ஆராவாரம் மிகவும் விருவிருப்பான ஆட்டத்தின் மூலம் ஐடிஐ மைதானத்தையே விழாகோலம் கொண்டிருந்தது. முதல் பகுதி நேரம் ஆட்டம் வரை கால்பந்தாட்ட ரசிகர்கள் மிக ரசனையுடன் கண்டு ரசித்தனர்.


இரண்டாம் பகுதிநேர ஆட்டத்தில் கேரளா அணி ஒரு கோல் அடித்து தங்களின் எண்ணிக்கையை துவக்கினர். இப்போது தான் கேரளா அணிக்கு ஆதரவு தந்து வரும் ரசிகர்கள் யாருமே எதிர்ப்பாராத வகையில் சக்திவாய்ந்த வெடிகளை வெடித்து தங்களின் மகிழ்ச்சியை கொண்டாடியதோடு அல்லாமல் ஏதோ ஒரு வகை மீன் பெயர் சொல்லி மீன் வியாபாரம் செய்வது போல் சத்தம் போட்டுக்கொண்டே இருந்தது அநேக மக்களுக்கு எரிச்சலூட்டியது.

இறுதியில் ஆட்ட முடிவில் 2- 1 என்ற கோல் கணக்கில் கேரளா அணி அதிரை AFFA அணியை வீழ்த்தி சுழல் கோப்பையை வென்றது.

இன்றைய ஆட்டம் எல்லோரும் எதிர்ப்பார்த்து போல் விருவிருப்பாக இருந்தாலும், கால்பந்தாட்ட ரசிகர்கள் பல அநாகரீகமாக தங்களின் செயல்பாடுகளில் ஈடுபட்டதால் இன்றைய கால்பந்தாட்டப்போட்டி அநேக ரசிகர்களிடையே மிக எரிச்சலூட்டிக்கொண்டே இருந்தது.

ஆட்டத்தில் வெற்றித்தோல்வி என்பது சகஜமே என்றாலும் ஒரு அணிக்கு ஆதரவு என்ற பெயரில் ஒட்டுமெத்த அதிரையின் அமைதிக்கு வேட்டு வைக்கு விதமாக இருந்தது ஒரு சில விசமத்தனமான அதிரை கால்பந்தாட்ட ரசிகர்களின் செயல்பாடுகள். ஏதோ ஒரு மீன் பெயரை சொல்லி ஒரு சாராரை சாடுவது, எல்லோரையும் எரிச்சலூட்டும் தேவையற்ற விசில் சாதனங்கள் மூலம் சத்தத்தை ஏற்படுத்துவம் என்று மாறி மாறி தங்களின் எனர்ஜ்ஜியை வீணடித்துக்கொண்டிருந்தது தான் மிச்சம். இவர்கள் ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டிருந்ததில் சாதித்தது என்ன? எமக்கு தெரிந்தது இவர்கள் சாதித்தது மேலும் பகைமையே..

கேரளா அணி வெற்றி பெற்று தனக்கான பரிசை எடுத்துக்கொண்டு தங்களின் ஊருக்கு சென்று விடுவார்கள். விளையாட்டில் ஒரு அணியை ஆதரிப்பதும், ரசிப்பதும் என்பது ஒரு வகை, இது எல்லா இடங்களில் நடப்பதே. அதுவும் செந்தஊர் சார்ந்த அணி விளையாடினால் எதிர்ப்பலைகள் அதிகம் இருக்காது. ஆனால் இன்று அதிரை AFFA அணி விளையாடியிருந்தும் எதிர்ப்பலைகள் மிக அதிகமே. காரணம் ஏனோ தெளிவாக தெரியவில்லை.

அடுத்த பதிவில் இதற்கான காரணத்தை பற்றி விளக்குவோம்.

மிக முக்கியமான மேட்டர் என்னவென்றால். ஆட்டம் முடிவடைந்து மஃரிப் தொழுகைக்கு பாங்கு சொல்லியும் பரிசளிப்பு விழா நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. அட்லீஸ்ட் தொழுகை முடிவடையும் நேரம் வரையிலாவது நிறுத்திவிட்டு பிறகு இந்த விழாவை நடத்தியிருக்கலாம். காரணம் ஒலிபெருக்கி சத்தம், அதிரையில் அநேக பள்ளிகளின் மஃரிப் தொழுகைக்கு இடையூராக இருந்தது மட்டும் எல்லோராலும் உணரப்பட்ட உண்மை. திருந்துவார்களா...

அடுத்து ஒரு அதிரை செய்தியில் தொடர்ந்து சந்திக்கலாம்....

அதிரைநிருபர் குழு.

காணொளி மற்றும் புகைப்படங்கள்: Mohamed, SIS Computers, Adirai. Phone: + 919842653248

புகைப்படங்கள்:

இளம் கால்பந்து ரசிகர்கள்


மேடையில் முன்னால் கால்பந்து வீரர் ஜனாப். கோடை இடி காசிம் அவர்கள்.

தாய் நாடா தற்போதிருக்கும் நாடா? 31

அதிரைநிருபர் பதிப்பகம் | June 24, 2011 |

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே இந்த கட்டுரையின் தலைப்பே தவறை உணரச்செய்யும் என்று எண்ணுகிறேன். குறிப்பாக இந்த தலைப்பு நமதூர் இளைய உள்ளங்களில் இன்ஷா அல்லாஹ் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதோடு என்னுடைய வாழ்வில் முதலும் முழுமையுமாக நடைமுறையில் வரவேண்டும் என்று பேராதரவு பெற்றவனாக எழுதுகிறேன்.

இன்று குறிப்பாக நமதூர் மக்களிடம் தாய்நாடு கடந்து சென்று (பொருளீட்டுகிறானோ இல்லையோ) விட்டால் தனி பாசமும் நேசமும் பாரபட்சமின்றி அவனின் மீது படர தொடங்குகிறது. இது குடும்பமும் சுற்றியிருப்பவர்களும் தருவது. இன்னொரு பக்கம் பொருளீட்டு முறையில் சற்று முன்னேறிச் சென்றால் "அவனுக்குத் தெரியாதா, ஹராம் ஹலால் பாராது மது கடையிலும், வட்டிகடையிலும் நோன்பு தொழுகை இல்லாமல் சம்பாதிக்கிறான்" என்று இழிவும் பொய் பட்டமும் சூட்டப்படுகிறான்.

குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருப்பவர்களுக்கு இந்த பெயர் வருவதில்லை என்பது எதார்த்த உண்மை. ஆனால் இதை நான் முழுமையாக எனது அனுபவபூர்வமாக ஆட்சேபிப்பதோடு அனுபவத்தோடு ஆனித்தரமாக எழுதுகிறேன்.

எனது வெளிநாட்டு வாழ்வில் இஸ்லாத்திற்கு இடையூறாக இருந்த நாடுகளில் இஸ்லாமிய நாடே முதன்மை பெறுகிறது என்பது வருந்ததக்க விஷயம், ஏனெனில் முதன் முதலாக குவைத்திற்கு வற்புறுத்தலின் பேரில் அனுப்பப்பட்டேன், அங்கு சென்று ஷரீ-அத்திற்கு நூற்றுக்கு நூறு விழுக்காடு முழுக்கும் முற்றுப்புள்ளியே. ஒருமுறை ஜும்ஆ தொழுதுவிட்டு வெள்ளையில் கோடுபோட்ட (செக்டு) வேஷ்டியோடு ஊருக்கு தொலைபேசியில் மனைவி மக்களோடு பேசலாமென்று அருகிலிருந்த அஞ்சல் அலுவலகத்திற்க்குள் நுழைந்தேன் பரிசோதனையாளர் உள்ளே செல்ல அனுமதி மறுத்தார். காரணம் கேட்டேன் ஆடையை மாற்றிவர சொன்னார் நம் மன்னுக்கே சொந்தமான முறையில் இந்த நாட்டு ஆண்கள் பெண்களை போன்று காலாடை, அரையாடையோடு வரவில்லையே முழு ஆடையோடு முழுமையாக தானே வந்துள்ளேன் என்றேன் கோபமாக உனது ஐடியை கொடு என்றார், எடுத்தேன் ஓட்டம் திரும்பி பார்க்காது தங்குமிடம் சென்றேன். (இஸ்லாமிய பெண்கள்) தன் உடம்பை 25% மட்டுமே மறைத்திருப்பதையும் அந்நிய ஆண்களோடு பழகுவதையும் பார்த்து வெறுன்டோட பார்த்தேன், கடன் பட்டு வந்துல்லோமே என்ற இக்கட்டான நிலமை இருக்கச் செய்தது இருந்துவிட்டேன் 3, 1/2 ஆண்டுகள்.

பிறகு ஜப்பான் சென்றேன் அல்ஹம்துலில்லாஹ் இன்றும் பசுமை நினைவுகள் உள்ளம் குளிரச் செய்கிறது. மறுபடியும் அந்த அனுபவத்தை அடைய துடிக்கிறது இன்று சவூதி அரேபியாவில் குடும்பத்தோடு வாழும் நம் தமிழகத்து இஸ்லாமியர்களை வாழ்வாதாரங்களை பார்த்தபோது. அல்லாஹ் மன்னிக்க வேண்டும்!

தனக்கு பொருளீட்டுவதே குறிக்கோள் என்பதால் ஷரீ-அத் பிரகாரம் வாழ எவ்வித முயற்சியும் எடுக்காமல் இஸ்லாத்தை குறை கூறுவது பெருங்குற்றமாகும். ஏனெனில் இது எனது அனுபவம் சந்தேகமிருந்தால் என்னோடு ஜப்பானில் இருந்த நமதூர் நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள் உண்மை விளங்கும். ஜப்பானில் தொழ முடியாது தொழ சென்றால் வேலை பரிபோகும், கடனை அடைக்க முடியாது என்பதெல்லாம் 100க்கு 100 பொய். அல்ஹம்து லில்லாஹ் 1.5 ஆண்டுகள் ஜப்பானில் இருந்தேன் 1ஆண்டு வேலை செய்தேன் இரண்டு ஜும்ஆ தொழுகைகள் தொழமுடியாமல் விடுபட்டது / கிடைக்கவில்லை. ஒன்று குன்மாக்கனில் இருந்து டோகியோ பிரயானம் செய்தபோது. மற்றொன்று இமிகிரேசனில் பிடிபட்டு உள்ளிருந்தபோது, மற்ற தொழுகைகள் தொழ முடிந்தது ஷரீஅத்தின் சலுகையை பயன்படுத்தி லுஹர் தொழுதேன். இன்னும் பெருமையோடு சொல்லப்போனால் வாரந்தோறும் குத்பாபேருரை ஆற்றும் வாய்ப்பும் கிடைத்தது அல்ஹம்து லில்லாஹ்.

இந்த 1.5 ஆண்டில் 4 தொழிற்ச்சாலைகளில் வேலை பார்த்தேன் எங்கேயும் எனக்கும் என்னோடு வேலை பார்த்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேச இஸ்லாமிய சகோதரர்களுக்கு அலட்சியமும் இடையூறும் இல்லை.

இந்த நேரத்தில் உடம்பை சிலிர்க்க வைக்கும் ஒரு உண்மை சம்பவத்தை எண்ணும்போது மீண்டும் நான் அங்கு செல்வதே சிறந்ததாக தெரிகிறது. நோன்பு காலங்களில் எனது (சச்சோ) முதலாளி எனக்கு நோன்பு திறக்க எனக்கு பிடித்தமான உணவையே இஸ்லாத்தில் கூடும் என்று அனுமதி பெற்றே வாங்கி தருவார். இன்று ஈரானிய முதலாளியிடம் மாட்டிக்கொண்டு நோன்பு தொழுகை என்று பாராமல் வேலை வாங்குவதோடு முஸ்லிம் என்று இடையிடையே சொல்லி கேவலப்படுதிறார்.

இன்னொரு முறை புதன்கிழமை அன்று புதிதாக வேலைக்கு சேர்ந்தேன் வியாழன் அன்று ஜும்ஆ தொழுகைக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக அனுமதி கேட்க போறேன் என்றதும் சுற்றி இருந்தவர்கள் சொன்னார்கள் நேற்று வேலையில் சேர்ந்து விட்டு இன்று அனுமதி கேட்டால் வேலை போய்விடும் என்றார்கள் என்மீது பொருளாதார அக்கறை கொண்டவர்கள் நான் பனிவோடு சொன்னேன் முறையிடுகிறேன் ஏனெனில் அல்லாஹ் என் உள்ளத்தை பார்க்கிறான் கொடுப்பதும் பறிப்பதும் அவனிடமே இருக்கிறது என்றேன்.

நான் இப்படி என் சச்சோவிடம் நாளை பகல் உணவு நேரத்தை 30 நிமிடங்கள் கூட்டித்தருமாறு ஜப்பானியர்களின் பானியிலே கேட்டேன் அப்போது அவர் எனக்கு அனுமதி தட்டும் தரவில்லை ருகூஉ, சுஜூது இரண்டையும் முறையே செய்து காட்டி இதற்காகவா செல்கிறாய் என்றார் நானும் பயந்து கொண்டே ஆம் என்றேன் பிறகு சந்தோஷமாக அந்நாட்டு முறைப்படி குனிந்து ஒரு மணிநேரம் முழுமையாக தந்து அனுப்பிவைத்தார். இதற்கு முன்பு நமதூரை சேர்ந்த அமீன் என்பவர் அங்கு வேலை செய்ததாகவும் பகல் நேரத்தில் இருமுறை அவர் இப்படி தொழுவார் என்றும் பெருமையோடு சுட்டிக்காட்டினார். வரட்டுப் பிடிவாதம் பிடிப்பவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் இதற்கு? அதே முதலாளி ஹஜ்ஜூப் பெருநாள் அன்று நான் இரவு வேளையில் இருந்தேன் இரவு 8 முதல் அதிகாலை 8 வரை எனது வேலை பெருநாள் தொழுகைக்காக ஸுபுஹுக்கு எல்லாம் பள்ளியில் இருக்கவேண்டும் என்றவுடன் அனுமதி தந்து அந்நேரத்தில் எப்படி அங்கு செல்வாய் என்று கேட்டதோடு என்றில்லாமல் அவரே முன்வந்து நானே அந்த நேரத்தில் உன்னை அழைத்து செல்கிறேன் என்று செய்தும் காட்டினார் என்ன அல்லாஹ் அவருக்கு ஹிதாயத் கொடுக்கவில்லை. இஸ்லாம் லேசானது என்று கூறி நாம் தான் நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம்- அல்லாஹ் மன்னிக்க வேண்டும்.

இந்த இடத்தில் உணவு விசயத்தில் சிரமும் குழப்பமும் இருந்தது ஆனால் நம் தாய் நட்டில் இந்த குழப்பமோ சிரமமோ இல்லை இவைகளுக்காகவும் தாய்நாடே சிறந்தது என்கிறேன்.

இன்று அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தின் முதன்மையிடமாக இருக்கும் சவூதியில் பொருளீட்ட வந்துள்ளேன். இங்கும் தவறுகளை தாமாகவே இழைத்து எமாற்றிக் கொள்கிறோம். என்னமோ குடும்பத்தோடு வெளிநாடு வந்துவிட்டால் சுதந்த்திரமாக சுற்றித்திரிய ஷரீ-அத்தையே சிலர் அறிந்தும் தாரை வார்கின்றனர். உலகில் சீர்கேட்டை உருவாக்குவதில் பெண்களே அதிக பங்கு பெறுகின்றனர். இங்கு ஒவ்வொரு இஸ்லாமியரும் அறிய வேண்டிய ஒன்றும் என்னவெனில் ஷரீ-அத்தில் பெண்கள் தனது உடலில் அன்னியரின் பார்வைக்கு திறந்துவைக்க அனுமதி கொடுக்கப்பட்ட இடங்கள் இரு கண் விழிகள் மட்டுமே. உம்ரா, ஹஜ் செய்தவர்களுக்கு தெரியும் தவாபு செய்துவிட்டு திரும்பும் ஆன்களின் இஹ்ராம் ஆடை தோல்புஜம் திரந்திருப்பதையும்,பென்களின் முகம் திறந்திருப்பதையும் அங்குள்ள உலமாக்கள் தடுப்பது. இதுதான் இஸ்லாத்தின் சட்டம். இப்படித்தான் நாம் இருக்கவேண்டும்.

ஒருமுறை நம் சமுதாய சகோதரரால் விருந்துன்ன நான் அழைக்கப்பட்டிருந்தேன். அங்கு மாற்று மத சகோதரரும் அவருடை சகாக்களோடு வந்திருந்தார் உணவு உண்டு விடை கொடுக்கும்போது மாற்றுமத சகோதரர் முதலில் அவர் போய்வருகிறேன் என்று புறப்பட (இதுவரை அந்த வீட்டில் எத்தனை பெண்கள் உள்ளனர் என்பதறியாது இருந்தேன்) விருந்துக்கு அழைத்த சகோதரர் தனது துனைவியாரை பெயர் சொல்லி அழைத்தார் அவரும் வந்து தான் உடுத்தி இருந்த ஆடைகளோடு சிரித்துக்கொன்டே போய் வாருங்கள் என்றார், எனக்கு வந்தது கோபம் மற்றுமத சகோதரர் இருப்பதால் பொருமையை கையான்டேன். ஒன்றும் பேச முடியாமல் நானும் வெளியேறிவிட்டேன். பிறகொரு முறை விருந்து கொடுத்தவரின் உறவினரிடம் இது பற்றி வருத்தத்தோடு எடுத்து சொன்னேன் அப்போது அவர் சொன்னார் இது அந்த பெண்ணின் தவறல்ல ஏனெனில் நமது சகோதரர்கள் தான் அவர்களை கட்டாயப்படுத்துகின்றனர் என்றார்.

தாய் நாட்டை விட்டு தவழ்ந்து விட்டால் தான் தோன்றி தனமாக நடக்கலாம் கேட்பாறில்லை என்ற எண்ணம் தானாகவே வந்து விடுகிறது, தாய் நாட்டிலிருந்தால் பெற்றோர் சொந்தம் பந்தமிருப்பதோடு கூடவே இறைவனும் இருக்கின்றான் என்று பயப்படுபவர்கள் எங்கு சென்றாலும் அல்லாஹ் கூடவே இருக்கின்றான் என்பதை மறக்கச் செய்வது ஏனோ? இப்படி செய்வது தவறு என்று சுட்டிக் காட்டினால் இதையெல்லாம் பார்த்தால் இங்கு குடும்பத்தோடு வாழ இயலாது, எனக்கு என் மனைவிமேல் பஹ்ட்தினி என்ற மேலெண்ணம் மிகைப்பாகவே இருக்கிறது என்று வாதத்தை தொடுத்து வாயடைக்கச் செய்கின்றனர். அல்லாஹ் விளங்க செய்ய வேண்டும்!

இதை வைத்துப் பார்க்கும்போது தாரத்தோடு வாழ நினைப்பவர்களுக்கு தவழ்ந்த நாட்டை விட தாய் நாடே சிறந்தது என்பது என் கருத்து.

எங்கே வாசகர்களே உங்களின் மேலான சிந்தனையை சிற்பமிடுங்களேன்.
என்றும் அனைவரின் மேலான துஆவை ஆதரவு வைக்கும்,

அப்துர் ரஷீது ரஹ்மானி.
தமாம்.

திருட்டை தடுக்க சில யோசனைகள்... 12

அதிரைநிருபர் பதிப்பகம் | June 23, 2011 | , ,


நம் ஊரில் திருமணமான இளைஞர்களும், பெரியவர்களும் பெரும்பாலும் அயல்நாடுகளுக்கு சென்று பொருளீட்டக்கூடியவர்களாக இருந்து வருகிறோம். அதனால் ஆண்களின் சதவிகிதம் பெண்களுடன் ஒப்பிடும் பொழுது நமதூரில் குறைவாகவே இருக்கும். இந்த தவிர்க்க முடியாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு சில சமூக விரோதிகளும், தீய எண்ணம் கொண்ட கயவர்களும், திருடர்களும் அவர்களின் கை வரிசையை எந்த நேரத்திலும் யார் வீட்டிலும் சமயம் பார்த்து அரங்கேற்ற முயற்சிக்கலாம். அதை முறியடிக்க‌ அல்லது தடுப்பதற்கு சில யோசனைகள் இதோ:

1. முதலில் நாம் எங்கு வசிக்கிறோமோ நம் வீட்டிற்கு அக்கம்பக்கத்து வீட்டினர்களுடன் அது யார் வீடாக இருந்தாலும் சரி நல்லுறவை வைத்து அதை மென்மேலும் வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ வேண்டும். அவ‌ர்க‌ளுட‌ன் ப‌ர‌ஸ்ப‌ர‌ம் கொடுக்க‌ல், வாங்க‌ல் வைத்துக்கொள்வ‌துட‌ன் அவ‌ர்க‌ள் தேவை அறிந்து நாமே சென்று உத‌வுத‌ல் அல்ல‌து ந‌ம் தேவைய‌றிந்து அவ‌ர்க‌ள் வ‌ந்து உத‌வுத‌ல் போன்ற‌ ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ள் மிக‌வும் ப‌ய‌னுள்ள‌தாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் ச‌மூக‌ விரோதிக‌ளிட‌மிருந்து.

2. இர‌வில் ப‌டுக்கும் முன் வீட்டின் அனைத்து க‌த‌வுக‌ளும், பூட்டுக‌ளும் முறையே பூட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌வா என்ப‌தை ச‌ரிபார்த்துக்கொள்ள‌ வேண்டும்.

3. பெண்க‌ள் ம‌ட்டும் இருக்கும் வீடுக‌ளில் இர‌வில் ஏதேனும் திருட‌ன் நுழைந்து அச‌ம்பாவித‌ங்க‌ள் நிக‌ழ‌ இருக்கின்ற‌ன‌ என்ற‌ அச்ச‌ம் வ‌ந்தால் இது போன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்களை எதிர்கொள்வதற்கு முன்ன‌ரே வீட்டின் கொல்லைப்புற‌மோ அல்ல‌து வெளிவாயிலின் உய‌ரமான‌ இட‌த்தில் யாருக்கும் தெரியாவ‌ண்ண‌ம் "விட்டு விட்டு எரியக்கூடிய சிக‌ப்பு விள‌க்கு ஒன்றை பொருத்தி அத்துட‌ன் ஒரு அவ‌ச‌ர‌ ஊர்தி போல் ச‌ப்த‌ம் த‌ரும் காலிங் பெல் பேட்ட‌ரியில் இய‌ங்கும் ஒரு அழைப்பு ம‌ணியை பொருத்தி அத‌ன் பொத்தானை ந‌ம் வீட்டின் த‌னிய‌றையில் யாருக்கும் எளிதில் தெரியா வ‌ண்ண‌ம் பொருத்திக்கொண்டால் அது மிக‌வும் ப‌யனுள்ள‌தாக‌வும், பாதுகாப்பான‌தாக‌வும் இருக்கும் இது போன்ற‌ அச்ச‌ உண‌ர்வு ஏற்ப‌டும் ச‌ம‌ய‌ம் அதை ப‌ய‌ன்ப‌டுத்தி அக்க‌ம்ப‌க்க‌ வீட்டின‌ருக்கு ஒரு எச்ச‌ரிக்கையுட‌ன் கூடிய‌ விழிப்புண‌ர்வை எந்த‌ நேர‌த்திலும் கொடுக்க‌ இய‌லும்". ச‌மூக‌ விரோதிக‌ளும் திடீர் ச‌ப்த‌ம் கேட்டு அக்க‌ம்ப‌க்க‌த்தின‌ர் வ‌ரும் முன் த‌ப்பித்து ஓடி விடுவ‌ர் இல்லை அவர்களால் பிடிப‌டுவ‌ர்.

4. மேற்க‌ண்ட‌ சிக‌ப்பு விள‌க்கு அல்ல‌து அழைப்பு ம‌ணி பொருத்த‌ப்ப‌டுவ‌தால் குறைந்த‌து இர‌ண்டாயிர‌ம் அல்ல‌து மூவாயிர‌ம் ரூபாய் செல‌வாக‌லாம். அத‌னால் வீட்டின் ப‌ல‌ ல‌ட்ச ம‌திப்பிலான‌ பொருட்க‌ளும், விலை ம‌திப்பிட‌ முடியாத‌ பொக்கிச‌ பெண்களும் பாதுகாக்க‌ப்ப‌ட‌லாம் அல்ல‌வா?

5. தீபாவ‌ளி ச‌ம‌ய‌ம் க‌டைக‌ளில் விற்கும் சிறிய ரக‌ ச‌ர‌வெடிகளை சில‌ பாக்கெட்க‌ள் வாங்கி வீட்டில் சிறியவர்களுக்கு எளிதில் தெரியாத‌ இட‌த்தில் ப‌த்திர‌மாக‌ ம‌றைத்து வைத்திருந்தால் இர‌வு நேர‌ங்க‌ளில் வீட்டில் திருட‌ர்க‌ள்/கொள்ளைய‌ர்க‌ள் நுழைந்து விட்டார்க‌ள் அவ‌ர்க‌ளை எதிர்கொள்ள‌ இய‌லாம‌ல் ப‌ய‌ந்து போய் ச‌ப்த‌மும் செய்ய முடியாமல் உரைந்து போய் இருக்கும் பெண்க‌ள் அந்த‌ ச‌ம‌ய‌ம் தான் முன்பே வாங்கி யாருக்கும் தெரியாம‌ல் பாதுகாத்து வ‌ந்த‌ அந்த‌ ச‌ர‌வெடிக‌ளை கொத்தாக‌ வைத்து அத‌ன் திரியை கொளுத்தி ஜ‌ன்ன‌ல் வ‌ழியே போட்டு விட்டால் அது தொடர்ந்து வெடித்து அக்க‌ம்ப‌க்க‌த்தின‌ரை எழுப்பி திருட‌ர்க‌ளை த‌லைதெறிக்க‌ ஓட‌ச்செய்து விடும் அல்ல‌வா? இது கொஞ்ச‌ம் க‌டின‌மான‌ முய‌ற்சி தான் பெண்க‌ளை பொருத்த ம‌ட்டில்.

6. இல்லை எனில் டேப் ரெக்கார்ட‌ரில் கொஞ்ச‌ம் க‌ன‌மான‌ த‌டித்த‌ ஆண் குரலை (அல்லது பேய், பிசாசு போன்ற சிரிப்பொலியை) ப‌திவு செய்து வைத்து திருட‌ன் வ‌ரும் ச‌ம‌ய‌ம் போட்டு விட்டால் அவன் அது கேட்டு ஓடி விடுவான்.

7. இது போன்ற‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் நாம் வீட்டின் க‌த‌வுக‌ளை உட‌னே திற‌ந்து கொண்டு தக்க துணையின்றி வெளியில் வ‌ருவ‌தை த‌விர்த்துக்கொள்வ‌து ந‌ல்ல‌து.

8. இது போன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் எல்லாம் மின்சார‌ம் துண்டிக்க‌ப்ப‌ட்ட‌ இர‌வு நேர‌ங்க‌ளில் தான் அதிகம் ந‌ட‌க்க‌ வாய்ப்பு இருக்கிற‌து. என‌வே பேட்ட‌ரி மூல‌ம் இய‌ங்கும் பொருட்க‌ளுக்கு (உதார‌ண‌ம் டார்ச் லைட்) முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌து ந‌ல்ல‌து.

9. முக்கிய‌மாக‌ அக்க‌ம்ப‌க்க‌த்து வீட்டில் உள்ள‌ பெரிய‌வ‌ர்களின் (ஆண்க‌ளாய் இருந்தால் அடுத்த வீட்டு ஆண்க‌ளின் அல்லது பெண்க‌ளாய் இருந்தால் அடுத்த வீட்டு பெண்க‌ளின்) மொபைல் போன் ந‌ம்ப‌ர்க‌ளை வாங்கி போனில் ப‌திந்து வைத்து கொள்ள‌ வேண்டும். திருட‌ர்க‌ள் வீட்டில் நுழைந்து விட்டார்க‌ள் என்ற‌ அச்ச‌ம் இருந்தால் உட‌னே அவ‌ர்க‌ளுக்கு எவ்வித‌ ப‌த‌ட்ட‌மும் இல்லாம‌ல் அமைதியாக‌ போன் செய்து விவ‌ர‌த்தை சொல்லி அவ‌ர்க‌ளின் உத‌வியை நாட‌லாம்.

10. மேற்க‌ண்ட‌ சில‌ ஏற்பாடுக‌ள் வீட்டில் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌தை ப‌ர‌ஸ்ப‌ர‌ம் அக்க‌ம்ப‌க்க‌த்து வீட்டின‌ருட‌ன் ர‌க‌சிய‌மாக‌ த‌னியே பேசி முன்பே ப‌கிர்ந்து கொள்வ‌து ந‌ல்ல‌து. திடீரென‌ அவ‌ர்க‌ளின் உத‌வியை நாடுவ‌து அவ‌ர்க‌ளுக்கு அசொள‌க‌ரிய‌மாக‌ இருக்க‌லாம். அதனால் முன்பே சில‌ த‌க‌வ‌ல்க‌ளை சொல்லி வைப்ப‌து ந‌ல்ல‌து.

11. இது போன்ற‌ இக்க‌ட்டான, பதட்டமான‌ சூழ்நிலையில் ந‌ம‌க்கு (ஆணாக‌ இருந்தாலும் ச‌ரி பெண்ணாக‌ இருந்தாலும் சரி) முத‌லில் கை கொடுத்து உத‌வுவ‌து "ம‌ன‌ திட‌ம்/தைரிய‌ம்" தான். அதை அந்த‌ நேர‌த்தில் வ‌ர‌ வைத்து அதை முறையே ப‌க்குவ‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்வ‌து பெரும் அச‌ம்பாவித‌ங்க‌ள் நம் வீட்டிலும் அல்லது அக்கம்பக்கத்து வீட்டிலும் ந‌டைபெறுவ‌தை த‌டுக்க‌லாம்/த‌விர்க்க‌லாம்.

12. இந்த காலத்தில் திருட‌ர்க‌ள் எந்த‌ ரூப‌த்தில் ந‌ம் வீட்டிற்குள் நுழைவார்க‌ள் என்று நாம் எதை வைத்தும் ஊர்ஜித‌ம் செய்ய‌ இய‌லாத‌ நிலை உள்ள‌து. எதிலும் க‌வ‌ன‌மும், விழிப்புண‌ர்வும் வேண்டும். ம‌ற்ற‌வைக‌ளை ந‌ம்மைப்ப‌டைத்து ப‌ரிபாலிக்கும் இறைவ‌ன் பார்த்துக்கொள்ள‌ போதுமான‌வ‌ன்.

13. கால‌மெல்லாம் நாம் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு (பொருள், ஆயுட்காலம், ஆசாபாசங்களை தியாகம் செய்து, ஊரின் இன்ப,துன்பங்களில் பங்கெடுக்காது, வியர்வை சிந்தி) ச‌ம்பாதித்து, சேமித்து வைத்திருப்பதை தன் தீய குணத்தாலும், திருட்டுத்தனத்தாலும் நொடிப்பொழுதில் அடைந்து விட‌ க‌ய‌வ‌ர்க‌ள் கூட்டம் (அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்) எந்த‌ நேர‌த்திலும் முய‌ற்சித்துக்கொண்டிருக்கும். அதை முறிய‌டித்து ந‌ம் உட‌மைக‌ளையும், வீட்டின‌ரையும் பாதுகாப்ப‌து ந‌ம் ஒவ்வொருவரின் தலையாய க‌ட‌மையும், பொறுப்பும் ஆகும்.

இந்த‌ ப‌திவு எழுதுவ‌த‌ற்கு கார‌ண‌ம் என்ன‌வெனில் ச‌மீப‌கால‌மாக‌ தொலைக்காட்சி செய்திக‌ளில் முதன்மைச்செய்தியாக வரும் க‌ண‌வ‌ன் முன் ம‌னைவி ந‌கைக்காக‌ வெட்டிக்கொலை, ப‌ண‌த்திற்காக‌ ம‌னைவி முன் கொள்ளைய‌ர்க‌ளால் க‌ண‌வனை வெட்டிக்கொன்ற கொடூரம், பூட்டி இருந்த‌ வீட்டில் பீரோவை உடைத்து துணிக‌ர‌க்கொள்ளை, வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணை க‌ட்டி வைத்து விட்டு பீரோவை உடைத்து ப‌ண‌ம், ந‌கை கொள்ளை, ப‌ண‌த்திற்காக‌ மாண‌வ‌ன்/மாண‌வி க‌ட‌த்த‌ல், வ‌ய‌தான‌ க‌ண‌வ‌ன், ம‌னைவி மீது மிளகாய்ப்பொடி தூவி கொள்ளை, விருந்தினர் போல் வீட்டிற்கு வந்து துணிகரக்கொள்ளை, என்று அன்றாட‌ம் ந‌ம் நாட்டில் குறிப்பாக‌ த‌மிழ‌க‌த்தில் ந‌ட‌ந்தேறும் கொள்ளைச்ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும், அத‌னால் ஏற்ப‌டும் கொலைக்குற்ற‌ங்க‌ளையும் அடுக்கிக்கொண்டே போக‌லாம்.

எல்லாவ‌ற்றிற்கும் காவ‌ல்துறையின் உத‌வியை ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்து முடிந்த‌தும் நாடுவ‌தை விட‌ ந‌ம‌க்கு நாமே குறைந்த‌ ப‌ட்ச‌ பாதுகாப்பு தேவைக‌ளை ஏற்ப‌டுத்திக்கொள்வ‌து சால‌ச்சிற‌ந்த‌து.

இத‌ற்கு ஒரு விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்த‌வும், த‌டுக்க‌ சில‌ வ‌ழிமுறைக‌ளும் மேலே த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. இன்னும் மேல‌திக‌ விவ‌ர‌ங்க‌ளையும், யோச‌னைக‌ளையும், வ‌ழிமுறைக‌ளையும் படிப்பவர்கள் த‌ங்க‌ளின் பின்னூட்ட‌ம் மூல‌ம் தாராள‌மாக‌ த‌ந்து இந்த‌ ச‌மூக சீர்கேட்டிலிருந்து சிற‌ப்பான‌ விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்த‌லாம்.

- மு.செ.மு.நெய்னா முஹம்மது

மேலே பதியப்பட்டுள்ள ஆக்கம் கட்டுரையாளரின் தன்னார்வத்தாலும், ஊர் நலன் கருதியும் அவரால் சேகரிக்கப்பட தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு