Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சீனி சக்கரை சித்தப்பா! சீட்டிலே எழுதி நக்கப்பா! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | September 30, 2015 | , , , ,

தவி ஏற்ற பதினாறு மாதங்களில் இருபத்தொன்பதாவது தடவையாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் திரு . நரேந்திர மோடி, இந்த முறை இரண்டாவது முறையாக அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார். அங்கே போய் அவர் நாட்டுக்காகப் பணியாற்றும் பல்வேறு திட்டங்களுக்கிடையிளும் பல்வேறு உலகத்தலைவர்களை சந்திக்கும் பணிகளுக்கிடையிலும் இந்தியாவை எங்கோ எடுத்துச் செல்லும் என்று அவராலும் அவரது துதிபாடிகளாலும் சொல்லப்படும் டிஜிடல் இந்தியா என்கிற திட்டத்தையும் அறிவித்து இருக்கிறார். 

இந்தத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியிலேயே அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன என்று முன்னாள் வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுவது வேறு விஷயம். இருந்தாலும் இந்த டிஜிடல் இந்தியா பற்றி நமது பார்வையை சற்று செலுத்துவோம். 


டிஜிடல் இந்தியா என்றால் என்ன?

இணையதள வசதிகளைப் பயன்படுத்துவதில் நாட்டின் நகரங்களை விட, கிராமங்கள் பின்தங்கியுள்ளன. இந்த நிலையை மாற்றி , குக்கிராமங்களில் வசிக்கும் மக்களும் இணைய வசதியை பயன்படுத்தும் வகையிலும், நாட்டை இணைய மயமாக்கும், டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தை, கடந்தாண்டு சுதந்திர தின உரையின் போது, பிரதமர் மோடி கரகோஷங்களுக்கிடையில் அறிவித்தார். இத்திட்டத்தின் படி 2019ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 2.5 லட்சம் கிராமங்களில் அகன்ற அலைவரிசை ( Broad Band ) வசதி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்குகளை மொபைல் போனில் கொண்டு வருதல் அனைத்து அரசு சேவைகளையும் கணினி மயமாக்குதல் போன்றவையே டிஜிட்டல் இந்தியா திட்டமும். 

சுதந்திர தின உரையில் பிரதமர் அறிவித்த 2.5 லட்சம் கிராமங்களில் அகன்ற அலைவரிசை என்ற இலக்கு அமேரிக்கா சென்றதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி. இ. ஓ. சத்யா நாதெள்ளா அறிவித்த படி ஐந்து இலட்சமாக இரட்டை இலக்காக உருவெடுத்துவிட்டது. ( தி இந்து தமிழ் 28/09/2015) . 

பிரதமர் அறிவித்ததாக இருந்தாலும் திரு. சத்யா நாதெள்ளா அறிவித்ததாக இருந்தாலும் அவைகள் அறிவிப்புகள்தான் என்பதை நாம் முதலில் மனதில் நங்கூரம் போட்டு நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இதற்கு முன்னரும் கூட , அதாவது நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவி ஏற்ற பிறகு பல்வேறு அறிவிப்புகள் வந்துவிட்டன. ஆனால் அவை பஞ்சாகப் பறந்து போன திசைகள்தான் தெரியவில்லை. 

மேக் இன் இந்தியா என்று ஒரு திட்டம் சொன்னார்; ஆனால் ராணுவத் தளவாடங்களை வெளிநாடுகளிலிருந்து பலகோடி ரூபாய்களுக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டார். மின்சாரம் இல்லாத மாநிலங்கள், அடிப்படை வசதிகள் இல்லாத தொழிற்சாலைகள் என்று ஆயிரம் தடைகள் இருக்கும் இந்த நாட்டில் மேக் இன் இந்தியா என்ற திட்டம் சரித்திர கால அரசர்கள் கட்டிய சத்திரங்களில் சாய்ந்து படுத்துக் கிடக்கிறது. 

தூய்மை இந்தியா என்று ஒரு திட்டம் அறிவித்தார் . அன்று ஒரு நாள் துடைப்பக்கட்டையை எடுத்துக் குப்பைகளைக் கூட்டியதோடு சரி. பிரதமர் துடைப்பத்தை எடுத்தது போதாது என்று சச்சின் தெண்டுல்கர், ஷாருக் கான் , சல்மான் கான், கமலஹாசன் போன்றவர்களையும் மார்கழிமாத பஜனை கோஷ்டி போல துடைப்பத்தை எடுக்க வைத்தார். அன்று ஒருநாள் மட்டுமே இந்தியாவில் சில பகுதிகள் சுத்தமாக இருந்தன. இன்று அந்த இடங்களில் நாய்கள் கூட குட்டி போட மறுத்து ஓடி ஒளிகின்றன. 

இதே போல் வளர்ச்சியின் நாயகன் என்று வடிவமைக்கப்பட்ட இந்த பிரதமர் வாரம் ஒரு திட்டத்தை வாயளவில் சொல்கிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஜன் தன் திட்டம், முத்ரா வங்கித் திட்டம், கிருஷி சின்ஜ்சாய் யோஜனா என்று பல்வேறு திட்டங்கள். இந்தத் திட்டங்கள் எல்லாம் இதுவரை செயல்பாட்டுக்கு வந்து இருந்தால் ஒரு கணிசமான அளவுக்கு வறுமை விரண்டோடி இருக்கும். ஆனால் நேற்று முன்தினம் வரை திருவண்ணாமலையில் தனது இரண்டு ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தானும் கிணற்றில் குதித்த நவீன நல்லதங்காள்களின் கதைகளுக்கு இன்னும் விடிவில்லையே.

இப்போது புதிதாக வந்திருக்கிறது இந்த டிஜிடல் இந்தியா திட்டம். இந்தத் திட்டத்தின் முன்னோடித் திட்டங்கள் மூச்சை விட்டதுபோல் மூச்சை விட்டுவிடுமென்று பல அரசியல் நோக்கர்கள் ஆரூடம் சொல்கிறார்கள். 

உலகத்தோடு ஒட்டல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார் – என்றார் திருவள்ளுவர். வளர்ந்து வரும் உலகோடு நாமும் பலவகையிலும் வளரவேண்டும் என்று நினைப்பதிலும் திட்டமிடுவதிலும் மாற்றுக் கருத்து இருக்க இயலாது. ஆனால் அதை விளம்பரத்துக்காகவும் வாய் அலங்காரத்துக்காகவும் அறிவித்து விட்டு மறந்து விடுவதும் – எந்தத்திட்டத்தை அரசு அறிவித்தாலும் அப்படி அறிவிக்கப்படும் திட்டத்தைவிட அவசியமான திட்டமும் செயல்பாடும் வேறு எதுவுமே இல்லையா என்று சிந்திப்பதும் நமது கடமை. அரிசி வாங்கும் பணத்தில் பானை வாங்கவேண்டுமா என்பதே நமது கேள்வி. 

டிஜிட்டல் இந்தியா திட்டம் அறிவிப்பு என்றால் அதை விட அவசியமான தேவைகள் நாட்டில் இல்லையா என்பதே நமது கேள்வி. நிர்வாக இயல் படித்தவர்களுக்கு (PRIORITY) முன்னுரிமை என்றால் என்னவென்று தெரியும். நம்மிடம் இருக்கும் மூலவளங்களை ( RESOURCES) வைத்து நாட்டுக்கோ அல்லது நமது நிர்வாகத்திலுள்ள நிறுவனத்துக்கோ எந்தப் பணியைச் செய்வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்பதே இந்த முன்னுரிமைத் தத்துவம். பொருளாதார ஒதுக்கீட்டுத் தத்துவங்களிலும் இந்தக் கோட்பாடு கவனிக்கப்பட வேண்டியதாகும். அந்த அடிப்படையில், நமது கேள்வி இன்று இந்தியா இருக்கும் நிலையில் டிஜிடல் இந்தியா போன்ற திட்டங்கள் இங்கு அத்தனை அவசியமா? அவசரமா? 

முதலாவதாக, இந்த நாட்டின் மக்கள் தொகை 120 கோடி. இந்த 120 கோடி மக்களில் 30 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறார்கள் என்று அரசின் புள்ளி விபரங்களே அடிக்கோடிட்டு ஆர்ப்பரித்து சொல்கின்றன. அதாவது, நாட்டில் கால்வாசிப் பேர்களுக்கு உண்ண உணவில்லை ; உடுக்க உடை இல்லை; படுக்க – இருக்க இடம் இல்லை;. அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் ஆடிக்காற்றில் இலவம் பஞ்சு பறப்பது போல் பறக்கிறார்கள். வயிற்றுக்குச் சோறிட வக்குவகை இல்லாத அரசு- வறுமைக் கோட்டின் ஆதிக்கத்திலிருந்து மக்களை மீட்டெடுக்கத் திட்டங்களைத் தீட்டாத அரசு அகன்ற அலைவரிசையை மக்களுக்கு வழங்குவதில் அர்த்தம் இருக்கிறதா என்று அறிவாய்ந்தோர் சிந்திக்க வேண்டும். கணினிப் பயிற்சிகளின் வளர்ச்சி கஞ்சிக்கு வழி வகுத்துவிடுமா?

இரண்டாவதாக, குக்கிராமங்களில் வசிக்கும் விவசாயிக்கும் இணைய தள வசதி என்று கூறுகிறார். சிரிப்பு அடக்க இயலவில்லை. நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளுக்கு விவசாயத்தின் ஆதாரமான நீர் கிடைக்கவில்லை. மாநிலத்துக்கு மாநிலம் நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வம்புகள்; வழக்குகள். இன்று 29/09/2015 அன்று காவிரி டெல்டாப் பகுதிகளில் இரயில், பஸ் மறியல். காரணம், நடவு முடிந்த பயிருக்கு கர்நாடகம் தரவேண்டிய தண்ணீரைத் தரவில்லை; மத்திய அரசும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து காவிரி நீரைப் பெற்றுத்தரவில்லை என்பதே. சம்பாப் பயிருக்கு தண்ணீர்தான் அவசரத் தேவை . Google , Yahoo இணைப்புகள் பயிரை வளர்த்துவிடுமா?. 

நதி நீர் இணைப்புத் திட்டங்கள் தேர்தல் காலங்களில் மட்டுமே பிரச்சார மேடைகளில் பேசப்படும் தலைப்பாகிவிட்டன. ஆறுகளும் குளங்களும் ஏரிகளும் ஒன்று ஆக்கிரமிப்புக்கு ஆளாகிவிட்டன அல்லது தூர்வாரப்படாமல் புதர்மண்டிப் போய்விட்டன. மழை பொய்த்துவிடுகிறது; பெய்யும் மழை நீரை சேமிக்க திட்டமில்லாமல் கடலில் ஓடிக் கலக்கின்றன. நீர் மேலாண்மைத்திட்டங்கள் இல்லை; நீர் மாசுபடுவதைத தடுக்கும் திட்டங்கள் இல்லை; நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்தும் திட்டங்கள் இல்லை. நீர்நிலைகளின் அருகில் போய் லேப் டாப்பை வைத்து மைரோ சாப்ட் விண்டோவை இயங்கவிட்டால் எல்லா இன்றியமையாத தேவைகளும் நிறைவேறிவிடுமா? 

நெஞ்சில் உரமின்றி நித்தம் தடுமாறும் விவசாயிகளுக்கு பயிர்களுக்கு இடுவதற்கான உரமும் பற்றாக்குறையாக இருக்கிறது. உரத்துக்கான மான்யம் நிறுத்தப்பட்டு விலை உயர்ந்துவிட்டது; 

காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்கான நகைக்கடனுக்கான வட்டி 0.33 பைசாவாக இருந்தது. அந்த வட்டிவீதத்தை ரூ 1.30 பைசாவாக ஆக்கி, விவசாயிகளின் நிதிநிலைகளின் மீது சுனாமியை ஏவிவிட்டுள்ளது இந்த வளர்ச்சியின் நாயகனின் அரசு. இதன் காரணமாக விவசாயிகள் வங்கிக் கடன்களை திருப்பி செலுத்த இயலாமல் அவர்களின் நிலங்கள் மட்டுமல்ல காளை மாடுகள் கூட ஜப்தி செய்யப்படுகின்றன. நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்கிற கத்தி அவர்களின் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டே இருக்கிறது. பயிரிடும் நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு பயிரிடும் நிலங்களின் பரப்பளவு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

நாட்டில் 58% தொழிலாளர்கள் விவசாயத்தை நம்பியே இருக்கும் நிலையில் அந்தத் தொழிலுக்குத் தேவையான ஆக்கமில்லாமல் விவசாயத் தொழிலாளர்கள் நகரங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். முப்போகம் விளைந்த பூமிகள் இன்று தரிசாகப் போடப்பட்டுக் கிடப்பதுதான் நாட்டை ஆண்டவர்கள் இந்த நாட்டுக்குத் தந்த பரிசாக இருக்கிறது. 

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் பேசும்போது மகாராஷ்ட்ராவில் உள்ள விவசாயி என்னுடன் Whatts App – ல் பேசலாம் என்று கூறி இருக்கிறார். இந்தக் கூற்று நம்மை வயிற்று வலி வந்தாலும் பரவாஇல்லை என்று விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. இந்தியாவிலேயே விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாநிலம்தானே மகாராஷ்டிரா. விஷம் வாங்கக்கூட காசில்லாமல் கிணற்றில் விழும் விவசாயி இடம் போய் விண்டோ – 7 , 10 என்று கதை அளக்க இயலுமா? 

விவசாயிகளை இப்படி டிஜிட்டல் கிச்சு கிச்சு மூட்டி தொல்லை செய்ய பிரதமர் அமெரிக்காவிலிருந்து விரும்ப வேண்டுமா? பாவம். மகராஷ்ட்ர விவசாயிகள். இப்போதுதான் தாங்கள் பயிரிட்ட வெங்காயப் பயிர்கள் வெள்ளத்தால் அழுகிப் போன சோகத்தில் அவர்கள் இருக்கிறார்கள். இதன் காரணமாகவே அண்மையில் வெங்காய விலை வானளவு உயர்ந்தது என்பது பிரதமருக்குத் தெரியாதா? 

டிஜிட்டல் இந்தியாத் திட்டம் இந்தியாவுக்குத் தேவைதான். ஆனால் அதற்கு முன் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு ஆரம்பப் பள்ளிக் கூடம் என்கிற லட்சியம் நிறைவேறி இருக்கிறதா அல்லது ஏட்டளவில் இருக்கிறதா என்று பாருங்கள் பிரதமரே! ஆனா ஆவன்னா படிக்கவே வக்கற்ற மக்களுக்கு அன்ராயிடும் ஆப்பிளும் தேவை இல்லை பிரதமரே! 

டிஜிட்டல் இந்தியாத் திட்டம் இந்தியாவுக்குத் தேவைதான். ஆனால் மருந்து மாத்திரைதான் இப்போது மக்களின் தேவை . காகிதத்தில் பொதிக்கப்பட்ட டேப்லேட்கள்தான் மக்களின் நோய் தீர்க்கத் தேவையே தவிர இணைய தள டேப்லேட் அல்ல. 

டிஜிட்டல் இந்தியாத் திட்டம் இந்தியாவுக்குத் தேவைதான்.ஆனால் அதற்குமுன் மீத்தேன் வாயுத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டோம் என்ற செய்தியைத் தாருங்கள் பிரதமரே! 

டிஜிட்டல் இந்தியாத் திட்டம் இந்தியாவுக்குத் தேவைதான். ஆனால் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை முழுமையாக திரும்பப் பெற்றோம் என்றும் மீண்டும் அந்த சட்டம் அறிமுகபடுத்தப்படாது என்றும் அறிவிப்புச் செய்யுங்கள் பிரதமரே! 

டிஜிட்டல் இந்தியாத் திட்டம் இந்தியாவுக்குத் தேவைதான். ஆனால் அதற்குமுன் ரேஷன் கடைகளில் அரிசி கிடைக்கிறதா மண்ணெண்ணெய் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லுங்கள் பிரதமரே! 

டிஜிட்டல் இந்தியாத் திட்டம் இந்தியாவுக்குத் தேவைதான். அதன் மூலம் நாட்டின் உள்ளே நுழையக்காத்து இருக்கும் அந்நிய முதலீடு உண்மையிலேயே அந்நியர் முதலீடுதானா என்று பாருங்கள் பிரதமரே! காரணம் இதுவரை வந்த முதலீட்டில் 35% முதலீடு மொரிஷியஸ் நாட்டிலிருந்து வந்திருக்கிறது என்று உங்கள் அரசின் நிதி அமைச்சகம் தகவல் தருகிறது. மொரிசியஸ் நாட்டு மக்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்யக் கூடிய அளவு வளம் படைத்தவர்களா என்பதை மனதில் கைவைத்து நாட்டுக்குச் சொல்லுங்கள் பிரதமரே! டுபாக்கூர் குஜராத்திகளின் கம்பெனிகள் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக ஆக்கப் பயன்படும் ஒரு கருவிதானே மொரிசியஸ் நாடு? கறுப்புப் பணத்தை நாட்டுக்குள் கொண்டுவருவோம் என்று தேர்தலுக்கு முன் நீங்கள் அறிவித்தது இதுதானா பிரதமரே!

டிஜிட்டல் இந்தியாத் திட்டம் இந்தியாவுக்குத் தேவைதான். ஆனால் அதற்கு முன் நாட்டு மக்களுக்கு நீங்கள் கொடுத்த வளர்ச்சி வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் பிரதமரே! வறுமையைப் போக்குங்கள் பிரதமரே! 

ஒருவேளை , வயிற்றுப் பசிக்கு சோறிடத் தகுதி இல்லாத – குடிக்க தண்ணீர் தரத் தகுதி இல்லாத- அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற தகுதி இல்லாத விவசாயிகளுக்கு வாழ வழி ஏற்படுத்தித்தர தகுதி இல்லாத டிஜிட்டல் இந்தியாத் திட்டம்தான் முக்கியத் தேவை என்று பிரதமர் கருதுவாரானால் அடுத்த தேர்தலுக்குப் பிறகு தான் ஒற்றையாய் வசிப்பதற்கு குஜராத்தில் ஆள் அரவமற்ற ஒரு கிராமத்தில் இப்போதே ஒரு வீட்டைப் பார்த்து வைத்துக் கொள்ளட்டும். அத்துடன் இதுவரை அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படாத அலங்காரத் திட்டங்களை ஒரு சீட்டில் வரிசைப்படுத்தி எழுதி நாட்டு மக்கள் அனைவரும் நக்கிக் கொள்ளட்டும்.

இப்ராஹீம் அன்சாரி

கன்னிப்பொழுது...! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | September 29, 2015 | , ,




பெரு வெடிப்பின்  சீற்றம்
குறைந்து  அமைதி தவழ்ந்த
அந்த புதிய பொழுதுகளின்  போது
தன்  ஆளுமையை  அழுத்தமாக
அனைத்திலும் பதித்தது சூரியன்...!
ஆனால்  ஒன்றை  தவிர...
அன்றுதான்  அதற்கும்
சூரியனுக்கும்  முதல் பரிச்சியம் !
அது ?....

கோபம்  தனந்த  சூரியன்
உக்கிரமாக  உதித்தது
அது மட்டும்
பணியவில்லை ! திமிறியது !
 சூரியனின் உக்கிரம் உச்சத்தை  தொட
 அது  கருகியதே  அன்றி   தன்
இயல்பை  தொலைக்கவில்லை !

சூரியன்  மேகத்தை
தூதிற்கு  அழைத்தது
மேகத்தினூடே  மெலிதாய்
நுழைந்து  தன்  ஜாலத்தை
அதனிடம்  காட்டியது !
அந்தோ ! பரிதாபம்  அதற்கும்
மயங்கவில்லை ! அதன்
இயல்பை தொலைக்கவில்லை  !

தளராத சூரியன்
துணைக்கு  மரம்
செடிகளின் இலைகளை
 இணைத்துக்கொண்டு
அதன் மீது
மென்மையாய்  படர்ந்தது !
ஆவலாய்  சூரியன்  காத்திருக்க
அதுவோ
அன்புடன்  நிராகரித்தது !

மனம் வெதும்பி  சூரியன்
நகர  ஆரம்பிக்க
உடன் பிறப்பான
நிலா   சோகத்தின்  காரணம்   விசாரித்தது !
சூரியன்  தன்  முயற்சியை
எடுத்துரைக்க   ஆவலாய்
நிலா  கேட்டது !

நிலா  சூரியனிடம்  சொன்னது
நீ சென்று வா
நான்  உன் அன்பை அதனிடம்
சேர்கிறேன்  என  கூறி
சூரியனின்  ஒளி  எனும்
அன்பை பெற்று
புதிதாய்  ஒரு
வெண்கலப்  பொழுதை
பாய்ச்சியது
அட்டகாசமாய்
மொட்டு  வெடித்து
சிதறி  இதழ்களை
விரித்து  சிரித்தது
நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera)
என்ற தாமரை !!!!!!!

-Harmys

அவசர உலகம்.! அவசர இழப்பு.!? 9

அதிரைநிருபர் பதிப்பகம் | September 27, 2015 | , ,


இன்றைய காலசூழலில் எங்கும் அவசரம் எதிலும் அவசரம் எல்லாம் அவசரம் என்று அவசர மயமாகிவிட்டதை தினம் தினம் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அர்ஜன்ட் என்கிற வார்த்தையை அதிக பட்சமாக அனுதினமும் நடைமுறையில் நாம் சொல்லி வருகிறோம் பெரும்பாலும் சாதாரணமாக இந்த வார்த்தையை உபயோகித்தாலும் காலப்போக்கில் நவீனங்கள் தலைதூக்கிய பிறகு இன்றைய நிலையில் இந்த வார்த்தை உயிர்பெற்று தற்போதைய வாழ்க்கை முறையாவும் அவசரமாகவே ஆகிவிட்டது என்பதே உண்மை.

இப்படி அவசரத்தால் செய்யும் காரியங்களும் அவசரப் போக்காலும் எதையும் நாம் பெரிதாக சாதிக்கப் போவதில்லை. மாறாக பல இழப்புக்களையே சந்திக்க வேண்டியுள்ளது. அவசரம் என்று செலுத்தப்படும் வாகனத்தால் விபத்துக்களே அதிகமாக ஏற்படுகிறது. அவசரம் என்று வெளியூர் பயணமோ, அல்லது பணிக்குச் செல்லும்போதோ அல்லது பள்ளி,கல்லூரிக்குச் செல்லும்போதோ முக்கிய ஆவணங்களை மறந்து விட்டுச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அத்தனை அவசரப்பட்டு போயும் புண்ணியமில்லாமல் திரும்பிச் செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது.

அவசியத்திற்கு அவசரப்படுவதை ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும் அதிகபட்சமாக அவசியமில்லாதவைகளுக்கெல்லாம் ஏன் அவசரப்படுகிறோம் என்று யாரும் யோசிப்பதில்லை. இந்த நிகழ்ச்சியை தினமும் .நம் வாழ்வில் காணலாம்.

உதாரணமாகச் சொன்னால் நாம் ஒரு கடைக்கு சாமான்கள் ஏதேனும் வாங்கச் சென்றால் அங்கு பொறுமை காப்பதில்லை. கடைக்காரரை அல்லது விற்பனையாளரை அவசரப்படுத்துகிறோம். அப்போது சில சாமான்களை தவற விட்டு விட்டோ அல்லது மீதிப்பணத்தை வாங்க மறந்து விட்டோ சென்று விட்டு ஞாபகம் வந்தால் திரும்ப வந்து பெற்றுக் கொண்டு போகிறோம்.. இதனால் நமக்கு மேற்கொண்டு காலதாமதமாவதுடன் பல நஷ்டங்களும் மேலும் நேரம் விரயமாகி இழப்புகளே ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் அதிகமாக அவசரப்படுவதால் சில எளிதாக ஆகவேண்டிய அலுவலக, காரியங்கள் கூட அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி இன்னும் காலதாமதமாகிப் போய்விடுகிறது. மருத்துவரிடம் சிகிச்சைக்குச் செல்லும்போதும் மற்ற பிற நம் தேவைக்கு செல்லும்போதும் அவசரப்படும்போது எரிச்சலுக்கு ஆளாகி மீண்டும் காலதாமதமாவதுடன் இழப்புகளுக்கே ஆளாகிறோம். ஆகையால் அவசரத்தால் அதிகமாக ஏதாவது ரூபத்தில் இழப்புக்களையே சந்திக்க நேரிடுகிறது.

இன்னும் சொல்லப்போனால் பின்விளைவுகளை யோசிக்காமல் அவசரப்பட்டு முடிவு எடுப்பதாலும் அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசிவிடுவதாலும் உறவுகளையும் நல்ல நட்புக்களையும் இழந்துவிட நேரிடுகிறது. அப்படியானால் எல்லாம் அவசரத்தால் வரும் இழப்புக்கள் தானே.

இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது யாதெனில் அவசரம் எப்போதும் ஏதாவது ஒருவகையில் நமக்கு இழப்பையே தருகிறது. கொஞ்சம் பொறுமையை கையாண்டு பின்விளைவுகளையும் சிந்தனையில் கொண்டு நடந்து கொண்டோமேயானால் இறைவன் நமக்களித்துள்ள இந்த நல்வாழ்வை வளமுடன் வாழ வகைசெய்யும். அத்துடன் கொஞ்சம் காலதாமதமானாலும் பரவாயில்லை என்கிற பழக்கத்தை கடைப்பிடித்து பழகிவிட்டோமேயானால் நம் வாழ்வில் இழப்பை அரிதாக்கி செழிப்புடன் வாழ வழி வகுத்துக் கொள்வதாக இருக்கும்

ஆகவே நாம் எதிலும் அவசரப்பட்டு இழப்புக்களை சந்திக்காமல் நிதானமாக செயல்பட்டு நிம்மதியாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். அவசரத்தின் தடுமாற்றத்தால் தவறுகள் ஏற்ப்படுவதை தவிர்த்து பொறுமையைக் கடைப்பிடித்து அவசரத்தினால் ஏற்படும் இழப்புக்களை தவிர்த்து நிம்மதியுடன் நாம் மேற்கொள்ளும் காரியங்கள் வெற்றியடைந்து மகிழ்வுடன் வாழ வழிவகுத்துக் கொள்வோமாக..!!!

அதிரை மெய்சா

தன்னிலை சுகாதாரம்.. 7

அதிரைநிருபர் பதிப்பகம் | September 26, 2015 | , ,

இதை எழுத காரணமாக இருந்த சூழ்நிலை இப்போது ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழியும் சூழ்நிழைதான்,


'உலகத்தில் இருக்கும் மதம் / மார்க்கங்களில் அதிகம் சுத்தம் சம்பந்தமாக முக்கியத்துவம் கொடுத்த ஒரே மார்க்கம் இஸ்லாம் தான், துரதிஸ்ட்டவசமாக் அதன் விழிப்புணர்வுகள் முஸ்லீம்களிடம் சரியாக போய்சேரவில்லையோ என நினைக்க தோனுகிறது....இது ஒரு முறை டாக்டர் K.V.S ஹபீப் முகமது சொன்னார் [ இவர் இஸ்லாமிய அறிஞரும் ஆவார்.]

அது முன்பு இருக்கலாம் இப்போது மாறிவிட்டது என நினைப்பவர்களுக்கு....

# எப்படி பப்ளிக் டாய்லெட்களில் அடிக்கும் ஒருவிதமான அமோனியா வாடை மூச்சுதினறவைக்கிறது

# தன் பல்லை சுற்றி கேரளாவில் உள்ள அரண்மணை சுவர்கள் மாதிரி பாசிபடிய விட்டு எப்படி சிலபேரால் பொதுவில் நடமாட முடிகிறது.

இதற்க்கும் மக்கள் தொகைதான் காரணமா????....எப்படி இதே மக்கள் தொகை [ஆட்கள்] பயன்படுத்தும் டாய்லெட் வெளிநாடுகளில் சுத்தமாக இருக்கிறது.

அவர்களுக்கு எல்லாம் மற்றவர்களை பற்றி கவலை இருக்கிறது. நம்மிடம் அது இல்லை ,

இருந்தால் வீட்டுவாசலில் ஏன் ஒவ்வொறு நாளும் ஒடும் சாக்கடையில் லாங் ஜம்ப் தாண்டுகிறோம்.

காலையிலும் இரவிலும் பல் தேய்க்க சொல்வது பள்ளிக்கூட படிப்பு. இது என்னவோ எக்ஸாமுக்கு உள்ள விசயம் மாதிரி நிரைய பேர் அந்த வருசத்து புத்தகத்தை பாதி விலைக்கு போட்ட அதே மூட்டையில் கட்டி அனுப்பி விட்டார்கள்./ வாங்கியவனும் பயன்படுத்த வில்லை என்று சகோ; சாகுல் ஹமீது தமாமிலிருந்து பின்னூட்டமிடலாம்.

இதற்கெல்லாம் அரைமணித்தியாலத்தில் பாலிசிங் ட்ரில்லர்/வாக்யும் வைத்து சுத்தபடுத்த பல்டாகடர்கள் வந்துவிட்டார்கள் கேட்டால்..."நேரமில்லை' நு SMS மாதிரி சொல்லிடுவானுக. இன்னும் செளசால்யம் [Toilet] இல்லாத வீடுகள் நமது ஊரில் இருக்கிரது என நினைக்கிறேன் , .காரணம் = வசதியில்லை..அதெ வீட்டில் உள்ள்வர்கள் எப்படி லட்சகணக்கில் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்ப பணம் புரட்டிகிறார்கள் என்ப்து 'பிடிவாதக்கொடுமை'

பக்கத்தில் ஆட்கள் இருக்கும்போது வாயில் கர்சீப் / அல்லது முடிந்தால் தூரம் போய் தும்மும் பணிவன்பு நிறைய பேரிடம் இல்லை. இது போன்ற கற்கால பழக்க வழக்கங்களால் Epidamic Disease பரவுகிறது என மருத்துவ துறையினர் தொடர்ந்து வழியுருத்திவருகிறார்கள்.இந்த லட்சனத்தில் 'பன்றிக்காய்ச்சல் பாய்மாருஙகளுக்கு வ்ராது' என ஒருவர் ["பாய்"தான்] இனையயத்தில் எழுதியிருந்தார்... [உன் அறிவியல் அறிவில் கொள்ளி வைக்க!!]

இன்னும் சிலர் ஜுரம் / தடுமலுக்கு டாக்டரிடம் போகும் போது ஏதோ எல்லாம் இழந்து விட்ட மாதிரி போவது [ அப்பதான் நல்ல ஊசி/மாத்திரை தருவார்!!] கொஞ்சம் பல் தேய்த்து , வாய் கொப்பளித்து , முகம் கழுவி போனால்தான் என்ன .

இவர்கள் வாய்திறந்து பேசி அந்த மயக்கத்தில் டாக்டருக்கு ஆம்புலன்ஸ் தேவைப்படும் அளவுக்கு போய்விடலாம் அல்லவா?

சிகரட் / வெத்திலை / சுருட்டு உபயோகிப்பவர்களை திருமணம் செய்த பெண்களுக்கு 'அமைதிக்கான நோபல் பரிசு' கொடுக்கலாமா என அதிரை எக்ஸ்பிரஸ் ஒரு இன்டெர்னெட் தேர்தல் தாராளமாக நடத்தலாம்.மலேசியாவின் இஸ்லாமியத்துறை சிகரட் ஒரு ஹ்ராமான வஸ்த்து என அறிவித்து சில வருடங்கள் ஆகிவிட்டது.

காரில் போகும்போது தும்மும்போது கவனமாக இருங்கள், உங்களிடமிருந்து வெளியாகும் பாக்டிரியா 30 நிமிடத்துக்கு உயிர்வாழமுடியும். [ கார் கண்ணாடி திறந்திருப்பது நல்லது.] அப்படி யாரும் தும்மிவிட்டால் உடனே கண்டித்து விடாதீர்கள்..சிலருக்கு நாக்கில் சனியன் AC ரூம் போட்டுதங்கியிருக்கும்.

Personal Hygiene பற்றி எழுத நிறையவிசயம் இருக்கிறது.

ZAKIR HUSSAIN

மெளன ஓலம்! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | September 25, 2015 | , , , , ,


மக்காவிலிருந்து
மரணச் செய்திகள்

எவன் ஒருவனிடமிருந்து
வந்தோமோ
அவன் ஒருவனிடமே
மீள்வோம்

எனினும்...

மாண்டவர் எண்ணிக்கை
கூடக்கூட
'ஆண்டவா போதுமெ'ன
அலறுகிறது மனம்

சுவாசக் குழாயைச்
சோகம் அடைக்க
கண்களில்
கண்ணீர்த் தழும்ப
கனக்கிறது மனம்

சிறியொதொரு ஒழுங்குமீறல்
சிதறடிக்க...
இரும்புக்காற்று
வீசியதுபோல்
இறந்து விழுந்தனர்
வீடுபேறு
நாடிவந்த நல்லோர்

எறும்புச்சாரையை
ஏறி மிதித்துபோல்
கரும்புத் தோட்டத்தில்
கருயானைப் புகுந்ததுபோல்
கதிகலங்கி
விதிமுடிந்து வீழ்ந்தனர்
சகோதர யாத்ரிகர்கள்

புயல்காற்றைப்போல்
பூகம்பம்போல்
கூட்டமும் ஒரு
காத்திருக்கும் பேரிடர்தான்...
வரிசையோ வேகமோ
சற்றே பிசகியதால்
விநாடிகளில்
வீழ்த்தியது
நூற்றுக்கணக்கில் யாத்ரிகர்களை

சென்றது மீள்பயணம்தான்
எனினும்
வந்துவிடுவர் என்று
நம்பி
வழியனுப்பிய சொந்தங்களும்
வாழ்த்திவிட்ட பந்தங்களும்
துக்கத்தைக்
துறந்து மறக்க
வகையறியாமல் தவிக்கின்றனர்

வாழ்க்கையின் வடிவமைப்பை
இத்தனை எளிதாக
எத்தி வைக்கும் இறைவா...

பாவச்சுமையின்
பகுதியையாவது குறைக்கவந்தோர்
புனித மக்காவில் மரணித்ததால்
இனிய சொர்க்கம்
ஏகட்டும்

தற்காலிகத்
தங்குமிடமாம்
தரைநீண்ட பூமியைவிட்டு

நிரந்தர வாழ்விடத்தில்
நீரோடும் சுவனம் நாடி
மக்காவில் மரணமுற்ற
மனிதர்கட்கு

நாடியவாரே -
நன்மையை
நல்கிவிடு நாயனே!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

ஈத்மிலன் - 2015 அனைத்து சமய நல்லிணக்க நிகழ்வு ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | September 25, 2015 | , , , ,

அனைத்து சமய நல்லிணக்க நிகழ்வு !

கடந்த வருடங்களைப் போன்றே இவ்வருடமும் அதிரை ஈத்மிலன் கமிட்டி சிறப்புடன் நடத்த இருக்கும் அனைத்து சமய நல்லிணக்க நிகழ்வு.

நாள் : 27-செப்டம்பர்-2015
கிழமை : ஞாயிறு
நேரம் : காலை 10:30 மணி முதல்...

இடம் : பவித்ரா திருமண மண்படம், அதிராம்பட்டிணம்.

நிகழ்வு நிரலாக !

வரவேற்புரை:

கே.செய்யது அஹ்மது கபீர் M.A., M Phil.
பேராசிரியர் காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டிணம்.

தலைமை:

எம்.ஏ. அப்துல் காதிர் M.A., M Phil. CIMC
முன்னாள் முதல்வர் காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டிணம்.

முன்னிலை : 

அதிரை அனைத்து முஹல்லாக்களின் தலைவர்கள்

சிறப்பு விருந்தினர்கள் :

சிவ. பாஸ்கர்
காவல் துறை உதவி ஆணையர் தேனாம்பேட்டை சென்னை.

Dr.மீனாட்சி சுந்தரம் M.D.D.A.
முதல்வர் திருவாரூ அரசு மருத்துவக் கல்லூரி, திருவாரூர்

சிறப்புரை:

ஏ.முஹம்மது அமீருதீன் D.M.E.
முன்னாள் திரைப்பட தொலைக்காட்சி நடிகர்

ஆளூர் ஷா. நவாஸ்
பிரபல எழுத்தாளர் ஆவணப்பட இயக்குனர்

நன்றியுரை:

மவ்லவி முஹம்மது இத்ரீஸ் M.A., M Phil.
தலைவர் & அரபி விரிவுரையாளர் காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டிணம்.

இந்த சமூக நல்லிணக்க நிகழ்வில் சமூக ஆர்வளர்களும் சகோதரர்களும் கலந்து கொண்டு விழாவிற்கு வரும் மாற்று மத சகோதரர்களை வரவேற்று விருந்தாளித்து கண்ணியப்படுத்த வாரீர்.

உங்கள் அனைவரின் வரவேற்பில் மகிழும்
ஈத்மிலன் கமிட்டி
அதிராம்பட்டிணம்
அலைபேசி : 9003983243 - 9952130909


நிகழ்வு சிறப்புடன் நடந்தேற வழ்த்தும்

பசுமை அதிரை 2020 - ஹஜ் பெருநாள் ஸ்பெஷல் ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | September 24, 2015 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும் !

அதிரையில் பெருநாள் பரபரப்பு களைகட்டியிருக்கும் இந்த அற்புதமான சூழலில், நாமும் நமது எதிர்காலமும் எவ்வாறு இருக்க வேண்டும் ஆயிரம் கனவுகளோடு அவரவர்களுக்கு ஏற்ற வேண்டுதலை படைத்தவனிடம் வைக்காதவர்கள் இருக்கவே முடியாது - அல்ஹம்துலில்லாஹ் !

அதிரையின் பெரும்பாலன இணைய பயனர்களின் நேரங்கள், உள்ளூரில் இருப்பவர்களை விட வெளிநாட்டில் இருப்பவர்கள் இணைய வழியிலேயே செலவிடப்படுவது அனைவரும் அறிவோம் !

குறிப்பாக அதிரையில் தான் / அதிரை பெயரில் அதிகம் வலைப்பூக்கள்... அதுவும் மரங்களின்றி ஆர்வமிக்க மனங்களைக் கொண்டு விதைக்கப்பட்ட வலைப்பூக்கள் அதில் சில (அதிரை)மனம் வீசுகிறது மேலும் பல வலைப்பூக்கள் மனமா / மானமா சுழற்சியிலேயே மலர்ந்து இருக்கிறது !

சமீபத்தில் அதிரையின் பன்னெடுங்காலமாக இணையத்தோடு ஒன்றர கலந்துவிட்ட சமூக அக்கரை கொண்ட சகோதரர்களால், `கரை` மறந்த, கலகம் களைந்த, வேறுபாடுகளை வேரறுக்க உள்ளொன்றும் புறமொன்றும் இருக்காமல் மனதோடு மனம் திறந்து பேசிக் கொள்ள கட்டுக்கோப்பான அதுவும் கூரையோடு இருக்கும் வீட்டுக்குள் அமர்ந்து தயாபுள்ளையலுவோ என்ற ஒருங்கிணைப்பில் விவாதிக்க, பகிர்ந்து கொள்ள, ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள என்று முகநூல் குழுமம் உருவக்காப்பட்டு சிறப்புடன் 629 முகநூல் தனிநபர்களின் அடையாளத்துடன் இணைந்திருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ் !

கூடிப் பேசவும், குழப்பதில் கும்மாளமிடவும், கொளுத்திப் போடவும் என்ற தளமாக இல்லாமல் கூடினால் நன்மைக்காகவும், குழப்பமிருந்தால் தீர்வை எடுத்துரைக்கவும், கொளுந்து விட்டு எரிந்தால் எழுந்து ஓடாமல் எதிர் கொண்டு `அணைத்துக்` கொள்ளவும் இங்கே களம் கண்டவர்கள் உடன்படுபடுவார்கள் என்ற நன்பிக்கையில் ஒவ்வொரு அசைவும் இருப்பவர்களின் (பெரும்பாலான) இசைவுகளுடனே இருக்கும் இன்ஷா அல்லாஹ் !

இந்த அருமையான களம் முன்னெடுத்த முதல் முயற்சியாக அதிரை முழுவதும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற பணி !

அதற்கென ஆரம்ப முதலே விதையிட்ட எங்கள் மூத்த சகோதரர் இபுராஹிம் அன்சாரி காக்கா அவர்களின் எழுத்தும் எண்ணமும் துளிர்விட இந்த தயபுள்ளையலுவோ தளம் அமைத்து களம் கொடுத்திருக்கிறது.

அதற்கான இலட்சினையையும் இங்கே அறிமுகப் படுத்துவதில் பேரானந்தம் கொள்கிறோம் !

அதிரை பசுமை 2020 - இலட்சினைக்கான கரு ! [LOGO]
  • ADIRAI என்ற ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்து மரங்களின் இலைகளின் அமைப்பு.
  • விரித்து வைக்கப்பட்ட விரல்கள் ஐந்தும் ஒன்றாக இல்லமால் அதன் தனித் தன்மையுடன் ஒரே கையில் விரிக்கப்பட்ட விரல்கள் கிளைகளாகவும்
  • மரத்தின் வேர் வேரூன்றி இருப்பது இன்னும் வர இருக்கும் 2020 வருடம் வரை இன்ஷா அல்லாஹ் !
  • அடியில் சாலை வடிவில் நீண்டிருக்கும் கோடு இன்னும் செல்ல வேண்டிய பாதை நீளமாக இருப்பதையும் அது 2020 வரை செல்ல இருப்பதையும் சொல்கிறது.
  • 2020 என்று வருடத்தை இலக்காக வைத்திருப்பதன் எழுத்து நடப்படும் மரக்கன்றுகள் பின்னர் மரமென எழுந்து நிழல் தரும்போது அதன் நிழலில் நமெக்கன் நன்மகைகள் கொட்டிக் கிடக்கும் (இன்ஷா அல்லாஹ்)

அதிரையில் முதற்கட்டமாக ஹஜ் பெருநாளைத் தொடர்ந்து நடக்க இருக்கும் ஈத் மிலன் சந்திப்பில் இதற்கான அறிவிப்பும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கிறோம்...

இலட்சினை போன்றதொரு ஒவ்வொரு விரலும் கிளையாக பசுமை அதிரை கனவை விரிவடையச் செய்ய அனைவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் இன்ஷா அல்லாஹ் !

பசுமை அதிரை 2020 வளர்க ! வளமிக்க அதிரையாக மிளிர்க ! சிறிய உடல் உழைப்பால் உடற்பயிற்சியென ஊக்கத்துடன் செயல்பட்டாலே வெற்றியைத் தொடும் இந்த திட்டம் !


அதிரைநிருபர் பதிப்பகம்
இலட்சினை வடிவமைப்பு : MSM(r)

வருமுன் 3

அதிரைநிருபர் பதிப்பகம் | September 23, 2015 | , , , ,

பழைய டைரிக் குறிப்பொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த வாக்கியம் கவனத்தைக் கவர்ந்தது. உறவினர் ஒருவர் ஹஜ்ஜுக்குச் சென்றிருக்கிறார். அரஃபாவிலிருந்து மினா செல்லும் வழியில் இறந்துவிட்டார். அங்கேயே நல்லடக்கம் செய்துவிட்டனர்.

அது, “வண்ணார் வாகனத்தின் மீதேறி பயணம் சென்றபோது அங்கேயே விழுந்து இறந்தார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது நடந்தது இருபதாம் நூற்றாண்டின் வெகு ஆரம்பக் காலங்களில். அப்பொழுதெல்லாம் பயண வாகனம் கால்நடைகள்! அவரவர் வசதிக்கேற்ப ஒட்டகம், குதிரை, சற்று சல்லிசாக என்றால் கழுதையாக இருந்திருக்கும் போலும்.

ஹஜ் பயணம் என்றாலே, அண்மைக் காலம்வரை, அது பெரும் பிரயத்தனமான விஷயம். பொருளாதார ஏற்பாடு. உடல் ஆரோக்கியம் என்பனவற்றை எல்லாம் தாண்டி, ஹஜ்ஜிற்கான பயணம் இருக்கிறதே அது மகா கடினம். ரயில் பிடித்து மதராஸ் வருவார்கள். பிறகு மற்றொரு ரயில் பிடித்து இரண்டு நாள் பயணமாக பம்பாய். அடுத்து அங்கிருந்து கப்பலில் ஒரு வாரமோ, பத்து நாளோ தண்ணீரில் மிதந்து ஜித்தா. அங்கிருந்து, மோட்டார் வாகனம் கொஞ்சம், மிருக சவாரி மிச்சம் என்று இருந்திருக்கிறது.

சென்ற இடத்தில் உணவு சமைக்க அதற்கான மளிகைகளையும் மூட்டையாகச் சுமந்து சென்றிருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கும்மேல் தங்கி, ஹஜ்ஜையும் ஜியாரத்தையும் முடித்துக்கொண்டு, மீண்டும் கப்பல், ரயில் மீண்டும் ரயில் என்று ஊர் வந்து சேர அனைத்தும் சொகுசுக்கு வாய்ப்பு அற்ற சிரமமான பயணம். தவிர சஊதியில் கழியும் பயண நாள்கள் கோடையானாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி, நம் சீதோஷ்ணத்திற்கு மட்டுமே பழகிய உடலுக்கு ஏக அவஸ்தை.


காரணங்களான இவையெல்லாம் சேர்ந்து, அக்காலத்தில் ஹஜ் பயணி என்றாலே முதியவர்களும் முதுமையைச் சார்ந்தவர்களும்தான். வயது ஒருபுறம், சந்திக்கவிருக்கும் சிரமம் மறுபுறம் என எல்லாமாகச் சேர்ந்து, எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டுப் பயணிகள் பிரியா விடை பெற்றுக்கொண்டு பிரிய, வழியனுப்புபவர்களும் “அல்லாஹ்வினுடைய காவலாய் போய் வாருங்கள். ஆயுள் மிச்சமிருந்து திரும்பி வந்தால் பார்ப்போம்” என்று கையசைக்க மனம் ஒரு முன்னேற்பாடான முடிவிற்கு வந்திருக்கும். சுருக்கமாகச் சொன்னால் அக்காலத்தில் ஹஜ் பயணமானது மரண அச்சம், இறையச்சம் இரண்டையும் அதிகப்படுத்துவதற்கான விஷயமாக அமைந்து போயிருந்தது.

பிறகு ஆகாயப் பயணம் பரவலாகி, அது அனைவருக்கும் ஏதுவாகி, மோட்டார் வாகனங்களில் சொகுசு அதிமாகி, அடிப்படை வசதிகளுக்காக என்றிருந்த தங்குமிடங்கள் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்து, ஹரம் ஷரீஃபும் ஹஜ் கிரியைகளுக்கான இதர இடங்களும் உசத்தியாய் உருமாறிவிட, பணப் புழக்கம் அதிகரித்துவிட்ட சமகால முஸ்லிம்கள் மத்தியில் ஹஜ் கடமையை நிறைவேற்ற ஓய்வூதிய வயதிற்குக் காத்திருக்கும் மனோபாவம் மாறிவிட்டது. இவையாவும் நலமே.

ஆனால் இவை இலேசான பக்க விளைவொன்றை நாமறியாமல் உருவாக்கிவிட்டது. என்ன அது?

ஹஜ் பயணத்துடன் இணைந்திருக்க வேண்டிய இறையச்சமும் மரண எதிர்பார்ப்பும் பெரும்பாலானவர்களின் மனங்களில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன; அல்லது மறக்கடிக்கப்பட்டு விட்டன. துரித பயணமும் நவீனத்தின் பளபளப்பும் ஆயுளின் தற்காலிகத் தன்மையை மக்களின் மனங்களில் மழுங்கடித்துவிட்டன. இப்படியான ஒரு நிலையில், ‘என்னுடைய சக்தியை வண்ணார் வாகனத்திலும் வெளிப்படுத்துவேன், கண்டுபிடித்து நட்டு வைத்திருக்கிறாயே இயந்திரங்கள், அதன் வாயிலாகவும் காட்டுவேன்’ என்று இறைவன் தன்னுடைய சக்தியை. தன்னுடைய நாட்டத்தை இலேசாக, வெகு இலேசாகக் கோடிட்டுக் காட்டும்போது திடுக்கிட்டு விழித்து அப்பொழுதுதான் அலறுகிறது மனம்.

யாத்திரை சென்றவர்கள் கவனித்திருப்பார்கள். மக்காவின் ஹரம் ஷரீஃபில் நடைபெறும் ஐவேளை தொழுகை ஒவ்வொன்றின் இறுதியிலும் ஜனாஸாத் தொழுகை இல்லாதிருக்காது. அதுவும் பலமுறை ஒன்றுக்கும் மேற்பட்ட மைய்யித்கள்தான். தாங்கள் தங்கியிருக்கும் நாற்பது நாள்களில் குறைந்தபட்சம் நானூறு மைய்யித்களுக்கான தொழுகையிலாவது அவர்கள் கலந்து கொண்டிருந்திருப்பார்கள். எதற்கு இந்தச் சங்கடமான புள்ளிவிபரம் எனில், மக்க மாநகரம் புனித எல்லைக்குள் அமைந்திருக்கிறதே தவிர, மரண மலக்குகளுக்குத் தடை விதிக்கப்பட்ட பகுதியிலன்று என்பதை நாம் உணரவே.

புனித யாத்திரையில் இருக்கும்போது மரணமானது இயற்கையாகவும் வரலாம்; விபத்து வடிவில் நேரலாம். ஒருவரது விதியின் முடிவு அங்குதான் என்று இறைவன் நிர்ணயித்திருந்தால் அதுதான். அவ்வளவுதான். உதிரியான மரணங்கள் நிகழும்போது அது நம் கவனத்தைப் பெரிதாக ஈர்ப்பதில்லை. பெரும் விபத்துகளில் ஒட்டுமொத்தமாகப் பலர் இறக்கும்போது நமது அடிவயிற்றில் பகீர் என்கிறது. இதற்கு முன்னர் 1990 ஆம் ஆண்டு குகைப்பாதை நெரிசலில் சிக்கி ஆயிரத்து நானூற்று சொச்ச யாத்ரீகர்கள், 1997 ஆம் ஆண்டு மினா பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் முந்நூறு என்று பெரும் எண்ணிக்கையிலான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதன் வரிசையில் இந்த ஆண்டு நிகழ்ந்த கிரேன் விபத்து பெரும் சோக நிகழ்வு.

விபத்தில் மரணமடைந்த ஒவ்வொருவருக்கும் ஒன்றேமுக்கால் கோடி ரூபாய் மரண ஈட்டுத் தொகை, அக்குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு அடுத்த அண்டு அரசாங்க செலவில் ஹஜ் என்று நிவாரணங்களை அறிவித்துள்ள சஊதி அரசர் விபத்திற்கான காரணம், அலட்சியம், விதி மீறல் ஆகியனவற்றை ஆராய்ந்து உரிய நிறுவனத்தின்மீது தகுந்த தண்டனையும் அபராதமும் விதிப்பதிலும் தீவிரம் காட்டுவார் என நம்புவோம். இவ்விதமான இவ்வுலகுசார் நடவடிக்கைகள் முக்கியம். அதைவிட முக்கியம் இத்தகைய விபத்துகளில் ஒளிந்துள்ள நமக்கான பாடம்.

சூரா ஆலு இம்ரானில் 185ஆவது ஆயத்தில் அல்லாஹ் கூறுகிறான், ”ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்…” என்று.

வளத்தைக் கொடுக்க நினைத்தால் அதை அவன் கூரையைப் பிரித்தும் கொட்டுவான் என நம்புகிறோமோ இல்லையோ, சுவைக்க வேண்டிய மரண நேரம் நெருங்கிவிட்டால் அது மக்காவின் பள்ளிவாசலாகவே இருந்தாலும்கூட, கூரை இடிந்து வந்தடையும் என்பது மறுக்கப்படலாகாது. நவீன உலகில் மயங்கிப்போய் அதில் சிதறிவிடாத மரண கவனம் நமக்கு அதி முக்கியம். ஏனெனில்-

மரணம் வரும்முன் வாழ்க்கையில் நமக்கான முன்னுரிமைகளைச் சீரமைக்க அதுவே உதவும்.

நூருத்தீன்

நன்றி :
 Darul Islam Family

பேறு பெற்ற பெண்மணிகள் - அரஃபா நாள் ஸ்பெஷல் ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | September 23, 2015 | , , , , ,

மக்களுக்கேற்ற மார்க்கம்

"அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! கபீரா! லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்! வ லில்லாஹில் ஹம்து!"

இப்படி, மக்காவின் 'அரஃபாத்' பெருவெளியில் அனைத்துலகக் காப்பாளன் அல்லாஹ்வைப் பெருமைப் படுத்திப் புகழ்ந்தும் அவனது அருள்வேண்டி அபயக்குரல் எழுப்பியும் ஹஜ்ஜுப் பயணிகள் ஒரே குரலில், ஒரே மொழியில் எழுப்பிய ஓசை, மேலை நாட்டுச் சகோதரி ஒருவரின் இதயத்தை உருகச் செய்தது என்றால், அதன் காரணம் யாது?

"இறைவனின் இறுதித்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தை இது நினைவூட்டுகின்றது, ஹஜ் எனும் புனிதப் பயணத்தின் இறுதியும் உச்ச கட்டமுமாகிய 'அரஃபாத்'தில் அனைவரும் ஒன்று கூடும் இத்தருணத்தை விடப் பொருத்தமான வேறு அனைத்துலகச் சமாதான ஒன்றுகூடல் எங்கேனும் உண்டா ?"

"கருப்பர், வெள்ளையர், மஞ்சள் நிறத்தவர், மாநிறங் கொண்டோர், அரசர்கள், ஏழைகள், பணக்காரர்கள் - அனைவருமே ஒரே உடையில், ஒரே குரலில், ஒரே இறைவனைப் புகழ்ந்து இறைஞ்சும் புனிதக் கூட்டமைப்பன்றோ இது?!?

"மனிதர் அனைவரும் அமைதியை, சமாதானத்தை விரும்புகின்றனர். அது உண்மையில் இங்கல்லவா கிடைக்கின்றது?! இதைவிடப் பொருத்தமான தருணம் வேறு என்ன இருக்கிறது?"

இவைதாம், அப்போது பேறு பெற்ற பெண்மணியின் இதயக் குரல்கள்.




அது 1931ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் அரச பதவி வகிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த செல்வி ஐரீன் ஜேன் வென்டவொர்த் ஃபிட்ஸ்வில்லியம், மதங்களின் ஒப்பீட்டுக் கல்வி (Study of Comparative Religions) பயில்வதற்காக எகிப்துக்குப் பயணமானார்.

அங்கே சென்று படிப்பைத் தொடங்கிய சில நாட்களிலேயே, இஸ்லாம் எனும் உண்மை மார்க்கம் இவரது இதயத்தை ஈர்த்தது. அதே ஆண்டிலேயே முஸ்லிமாக மாறி 'ஆயிஷா' என்ற பெயரைச் சூட்டிக் கொண்டார்!

1935ஆம் ஆண்டு ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றினார் ஆயிஷா, ஹஜ்ஜில் காணப்படும் அனைத்துலக ஒற்றுமை உணர்ச்சியைக் கண்டு வியந்து அடிக்கடி கூறுவார் ஆயிஷா. தன் தங்கை எவலினுக்கு இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்து, அவரை இஸ்லாத்தை தழுவச் செய்தார்.

அண்ணல் பெருமானார்(ஸல்) அவர்களின் அழகான அறிவுப் பூர்வமான - துணிவான உண்மை மார்க்கப் பிரச்சாரத்தைப் பற்றி அடிக்கடி வியந்துரைப்பார் ஆயிஷா.

"எனது தாய்நாட்டு மக்களுக்குத் தேவையான அவர்கள் பின்பற்றத் தகுந்த துணிவு, நேர்மை, கழிவிரக்கம், அநீதியிழைத்தோரை அற்புதமாக மன்னிக்கும் தன்மை ஆகிய அனைத்தும் அப்பெருமகனாரிடம் குடிகொண்டிருந்தன. அவர்களிடம் இயல்பாக அமைந்திருந்த துணிவும், வல்ல இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுமே, அவர்களை வெற்றிக் கொடி நாட்டச் செய்தன எனக் கூறினால், அது மிகையாது.

அந்த இறுதித் திருநபி அவர்கள்தாம் முதன்முதலாக எம் பெண்களின் சமூகத் தகுதியையும் மதிப்பையும் உயர்த்தியவர். இன்று கூடச் சில ஐரோப்பிய நாடுகளில் காணக் கிடைக்காத பெண்ணுரிமையினை 1400 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் இந்த நபியவர்கள்தாம்!

அயர்லாந்தின் அரச குடும்பக் கோட்டையைத் துணிவுடன் திறந்து வந்து, இஸ்லாமிய இன்பச் சோலையில் புகுந்த ஆயிஷா வென்டவொர்த் ஃபிட்ஸ்வில்லியம் பேறு பெற்ற பெண்மணிகளுள் ஒருவர்தானே!
இது ஒரு மீள்பதிவு
அதிரை அஹ்மது
புகைப்படங்கள் : Sஹமீது
ஹஜ் - பேசும் படங்கள்









Sஹமீது

பர்மா தேக்கு வீட்டுக்காரர் - தொடர்கிறது.... 17

அதிரைநிருபர் பதிப்பகம் | September 22, 2015 | , , ,

ஞாபகம் வருதே - [4] part - 2

அன்று இரவு சென்னையிலிருந்து கேலாலம்புருக்கு புறப்பட்டேன். காலை ஆறு மணிக்கு விமானாம் தரை இறங்கியது. முதலில் குடி நுழைவு துறை எல்லோ லைன் கடந்து பின் கஸ்டம்ஸ். இந்திய கஸ்டம்ஸ்காரர்களின் கண்ணில் விழித்தாலே நளவெண்பாவின் கதாநாயகன் நளனுக்கு பிடித்த ‘சனி’தமயந்தி நமக்கு மாலை. இடாத போதும் நம்மையும் வந்து பிடிக்கும். ஆனால் இங்கே சகோதரத்துவ-நட்பு முறை வாசனைப்பூ மணம் கமழும். செழிப்பான சிரித்த முகத்துடன் சுங்கதுரை அதிகாரிகள்.                    கொண்டு வந்த பெட்டியே தூக்கி மேஜையில் வைத்தேன். ‘’பெட்டிக்குள் என்னஇருக்கிறது?’’என்றார் ’என் சொந்த உபயோகத்துக்கான சாமான்கள்! என்றேன்

"புடைவைகள் எத்தனை இருக்கிறது?" என கேட்டார். 

"ஒரே ஒரு புடவை" என்றேன்.

"யாருக்கு? மனைவிக்கா?"

"மனைவி ஊரில் நானிங்கே?"

"அப்படியென்றால் Girl Friendகா கொண்டு போகிறாய்?" என்றார். 

"எனக்கு girl friend இல்லேயே" என்று செயற்கையான ஏக்கத்துடன் சொன்னேன்.

"u nampa handsome! cubalah.boleh dapat satu" என்றார் 

[நீ கவர்ச்சியாக இருக்கிறாய், முயற்சி செய்; ஒன்று கிடைக்கும்] இது போன்ற நட்பு-கேலி முறையிலான பேச்சுக்கள் வயது வரம்பு இன்றி அங்கே பேசிக்கொள்வது சகஜம். நம் பாரத பூமிபோல் பதவி பந்தாக்கள், மூஞ்சியே ‘உற்ர்ரர்ர்ர்’ என்று நாய் போல் நரி போல் வைத்துக் கொள்வதெல்லாம் அங்கே இல்லை!.

"பெட்டியே மூடு" என்றவர், அடுத்து கீழே  மாம்பழக்கூடையே பார்த்தார்.

"அது என்ன கூடையில் மாம்பழமா?’’

"ஆமாம்" 

"நிறைய இருக்கிறதே! வியாபாரம் செய்ய கொண்டு போகிறாயா?"

"இல்லை! என் நண்பர்களின் குடும்பம் இங்கே இருக்கிறது. அவர்களுக்கு கொடுக்ககொண்டுபோகிறேன். மற்றபடி இது மாதிரியான வியாபாரம் செய்யும் சில்லறைதனமான பழக்கமெல்லாம் என்னிடம் இல்லை!" என்றேன் 

"சரி! நம்புறேன்! நானொன்று கேட்கிறேன். நீ தப்பாக நினைக்காதே! என் பிள்ளைகள் இந்திய மாம்பழம் திங்க ஆசைப்படுகிறார்கள். இரண்டு பழம் கொடுக்க முடியுமா! காசு தந்து விடுகிறேன்!" எனக் கேட்டார்.

கூடையை திறந்து நாலு பழத்தை எடுத்துக் கொடுத்தேன். 

"இரண்டு போதுமே!  உன் நண்பர்களுக்கு வேண்டுமே?"

"நிறைய இருக்கிறது! பிள்ளைகளுக்கு கொடுங்கள்!"

காஸு கொடுக்க பர்ஸை திறந்து கொண்டே "பிறப்பா ரிங்கிட்?" [எத்தனை வெள்ளி] வினவினார்..

"இதை நான்காஸுக்கு விற்கவில்லை! உங்கள் பிள்ளைகளுக்கு என் அன்பளிப்பாக கொடுக்கிறேன்."

என்னை ஒரு பார்வை பார்த்தவர் "திரிமாகஸி! [நன்றி] என்றார். இந்த "திரிமாகசி" மலாய் மொழியில் அதிகம் உபயோகப்படும் வார்த்தை. அதிகம் உபோயோகப்பட்டதனால் அது தேய்ந்து போய் பழைய இரும்பு வியாபாரியிடம் பேரீச்சம் பழத்திற்கு எடை போட்டு கொடுத்து பண்டமாற்று செய்யப்பட வில்லை. மாறாக அது என்றும் வளர்ந்து கொண்டே வருகிறது. 

ஆனால் கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடிகள் வாழும் நம் நாட்டில் `நன்றி` என்ற வார்த்தை பேங்க்லாக்கரில் saftyயாக இருக்கிறது. சில சமயங்களில் இது ஒப்புக்காக சொல்லப்படுகிறது. அடிமனதின் ஆழத்திலிருந்து உணர்வுபூர்வமாக இந்த வார்த்தை வருவதில்லை. எப்படி வரும்? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்! 

நான் மலேசிய சுங்கசோதனையிலிருந்து மலர்ந்த முகத்துடன் வெளியாகி வீடு வந்து சேர்ந்தேன். 


அன்று ஞாயிற்றுக் கிழைமை. ஓய்வு! மறுநாள் மாலை சென்னையில் என் நண்பர் தந்த சாமான்களை எடுத்துக்கொண்டு ’லிட்டில்இந்தியா’ என்று அழைக்கப்படும் Malayan Mansion/Selangor Mansion பகுதிக்கு சென்றேன். அங்கே ‘வைர யாவாரி’ தங்கி இருக்கும் ரூமுக்கு போனேன். கதவில் பூட்டு தொங்கியது. ஆளில்லை. பக்கத்து ரூம்காரர் வெளியே வந்தார்.அவரிடம் கேட்டேன்.

"காலை எட்டு மணி சுமாருக்கு வெளியே போவார். ஒரு மணி சுமாருக்கு வருவார். கொஞ்சநேரம் இருந்து  விட்டு போறவர் இரவு ஒன்பது மணிக்கு மேல் வருவார்" என்றார்.

"நீங்கள் எந்த ஊர்?" எனக் கேட்டவரிடம், ஊர் பெயரைச் சொன்னேன்.

"அவர் உங்க ஊரா?" என்றார் 

"அடுத்த வீட்டுக்காரருக்கே இவரை யாரென்று இன்னும் தெரியவில்லை. இவருடைய பொது உறவு கொள்கையின் லட்சணம் இப்படி!

மண்ணுக்காகப் படைக்கப்பட்ட மனிதனை மனித நேயத்திலிருந்து எது பிரிக்கிறது?

"ஆமாம்! எங்க ஊர்தான். தெருவு வேறே!" என்றேன்.

அவருக்கு ஊரில் ஒருவர் கொடுத்த சாமானைக் கொடுக்க வந்திருக்கிறேன்! தயவுசெய்து அவரிடம் கொடுத்து விடுகிறீர்களா?’ என்றேன். 

இதைக் கேட்டு திடுக்கிட்டுப் போனவர்

"மன்னிச்சுக்கோங்க தம்பி! இதை வாங்கிட்டு அவரோடு என்னால் மல்லுக்கு நிக்க முடியாது! லாயர் Burrow* கேக்காத கேள்வி யெல்லாம் அவர் என்னிடம் கேட்பார். இந்த வம்பெல்லாம் நமக்கு வாணாம்! நீங்களே நேரடியா கொடுத்துடுங்கோ!" என்றார். 

கொண்டு போன சாமானுடன் திரும்பி விட்டேன். [*லாயர் Burrow. மலேயாவில் ஜப்பானியர் ஆட்சிக்கு முன் வெள்ளயார் ஆட்சிகாலத்தில் மேல் சொன்ன பெயரில் உச்ச நீதி மன்ற வழக்கறிஞராக வெள்ளைக்கார துரை ஒருவர் இருந்தாராம். அவர் தன் கட்சி காரருக்கு எதிரான சாட்சிகளை கூண்டில்லேற்றி ’எடக்கு-முடக்கான’ கேள்விகளைக் கேட்டு குழப்பு-குழப்பென்று குழப்பி திண்டாட வைத்து விடுவாராம். சாட்சிகள் குழம்பிப்போய் ‘உடும்பு வேணாம் கையைவிடு!’ என்று ஓடி விடுவார்களாம். இன்னும் புரியும்படி சொல்வதென்றால் ’ஆட்டைக் கழுதையாக்கிய ’நம்மூர்கதைதான்.] 

மறுநாள் பகல் ஒரு மணி சுமாருக்கு வைரயாவாரிக்கு டெலிபோன் போட்டேன். விஷயத்தைச் சொன்னேன்.

"நான் நீங்கள் வந்த அந்த நேரம் ரூமில் இருக்கமாட்டேன். ரெம்ப பிஸி. இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் ரூமில் இருப்பேன். அப்போ கொண்டு வந்து கொடுங்கள்!" என்றார். 

பேச்சில் கொஞ்சம் அதிகாரத் தொனி இழையோடியது.

"நான் மாலை 5.30க்குஅங்கே வருவேன்! 7.30க்கு திரும்பி விடுவேன். ஒன்பது மணிவரை அங்கிருந்தால் திரும்பி வர பஸ் கிடைக்காது. என் மாமா கடையில் கொடுத்து விட்டுப் போகிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்" என்றேன்.

"அங்கெல்லாம் நான் போய் வாங்க முடியாது! `யாரிடம் கொடுத்து விடுகிறேன்!` என்று ‘வாக்கு’கொடுத்து அதை வாங்கி வந்தீர்களோ அதை அவர் கையிலேயே ஒப்படைக்க வேண்டும். இதுதான் ’அமானிதம்’ என்பதன் அர்த்தம். இதுதான் முறை!" என்றுரைத்தார்.

"புண்ணியத்திற்கு உழைக்கும் மாட்டை பல்லை பிடித்து பதம் பார்ப்பது" என்று தமிழில் சொல்வார்கள். ஆங்கிலத்தில் Look not a gifted horse in the mouth. 

இதைக் கேட்ட எனக்கு ஏறியது ரத்தம்!

"நான் அதை உங்கள் திருவடி பணிந்து உங்களிடமே ஒப்படைக்கிறேன்" என்று வாக்கு கொடுத்து வாங்கி வரவில்லை. இது ஒன்றும் நேத்திக்கடன் அல்ல! வெள்ளிக்கிழமை இரவு அங்கே ’தலை போட்டு’ படுத்துவிட்டு நேத்திக் கடனையும் செலுத்தி வர!. வேண்டுமானால் ஒரு வாரத்திற்குள் இங்கே வந்து உங்கள்  சாமான்களை எடுத்துக் கொள்ளுங்கள். வருவதற்கு முன் அப்பாயின்மென்ட் வாங்கி வரவேண்டும். நான் ரெம்ப பிஸி" என்றேன்.

[வேணுமென்றே நானும் ஒரு’பந்தா’ பன்ணினேன்] டெலிபோனை வைத்து விட்டார். கொஞ்சநேரம் கழித்து டெலிபோன் மணி அடித்தது. என் மாமா பேசினார்

"என்னப்பா அவரிடம் தகராறு செய்கிறாயாமே?" கேட்க..

"ஒன்றும் தகராறு இல்லை" என்று நடந்ததை சொன்னேன்.

"அவர் குணம் அப்படித்தான். நாம்தான் பார்த்து அனுசரித்துப் போகணும் . பெரியமனுஷன். கொண்டுபோய் கொடுத்துவிடு"

"அவர் போடும் கண்டிசனுக்கும் சவுடாளுக்கும் நான் பணிந்து போக முடியாது. வேண்டுமென்றால் ஒரு வாரத்திற்குள் வந்து எடுக்கட்டும். இல்லையென்றால் இங்கேயே கிடக்கட்டும்" என்றேன்.  என் மாமாவுக்கு என் குணம் தெரியும்.

"நீ அதை என்னிடம் கொண்டு வந்து கொடுத்துவிடு. நான் கொடுத்து கொள்கிறேன்" என்றார். அடுத்த நாள் மாலை அங்கே போய் அதை என் மாமாவிடம் கொடுத்துவிட்டு வந்தேன்.  

பல மாதங்கள் கடந்து போனது. ஒரு நாள் மாலை லிட்டில் இந்தியா மலையன் மன்சனில் இருக்கும் புத்தக மொத்த வியாபாரம் செய்யும் கடைக்கு போனேன். அங்குள்ளவர்கள் அனைவரும் என் உடன் பிறவா சகோதரர்களும் நண்பர்களும் போல. நான் நம்மூர்காரர் ஒருவரின் நிறுவனத்தில் working partnerராய் இருந்து கடினமாக இரவு பகல் பாராமல் உழைத்து-உழைத்து ஓடாய்போய் பையிலும் கையிலும் காசில்லாமல் வீசியகையும் வெருங்கையுமாய் வெளியே வந்தபோது எனக்கு ஆதரவு கரம் நீட்டி நெஞ்சோடு நெஞ்சாக அணைத்துக் கொண்ட மனித இதயம் கொண்ட மனிதர்கள் அங்கே இருந்தார்கள். வாரத்திற்கு இரண்டு மூன்று தடவை அங்கே போய் வருவது என் வாடிக்கையான பொழுதுபோக்கு. 

ஒரு நாள் மாலைஅங்கே போய் பேசிக் கொண்டிருந்தபோது அந்த கம்பெனி டெலிபோன் மணி கினுகிணுத்தது. அதை எடுத்துக் கேட்ட மேனேஜர்

"உங்களுக்குத்தான். யாரோ பேச வேண்டுமாம்" என்று ரிஸிவரை என்னிடம் தந்தார். பேசியது வைரயாவாரி

"பாரூக்! நான் இங்கே மூனாவது மாடியில் பதினாளாம் நம்பர் ரூமில் இருக்கிறேன்! ஒரு செய்தி பேசவேண்டும். இங்கே வர முடியுமா?" என்றார். பேச்சில் பணிவும் கனிவும் சோகமும் இழையோடியது.

"அவர்தானா இவர்?" என்ற சந்தேகத்தை தூண்டும்படியான தொனி ஒலித்தது. அங்கே சென்றேன். முகத்தில் வாட்டம். ஆழ்ந்த யோசனை. என்னையே பார்த்துக்கொண்டு ஏதும் பேசாமல் யோசனையில் மூழ்கி இருந்தார். கொஞ்சநேரம் சென்றதும்.

"செய்தி சொல்ல கூப்பிட்டீர்களே? என்ன சேதி" என்று அவரை யோசனைலிருந்து கலைத்தேன். "ஒன்றுமில்லை! நானும் பல யாவாரங்கள் செய்தும் ஒன்றும் கை கொடுக்கவில்லை. ஜான் ஏறினால் முழம் வழுக்குது! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. ’கை’ முதல் எல்லாம் ’கை’ விட்டு  போய்விட்டது. தங்குமிடத்துக்கு மூன்று மாத பாக்கி நிக்கிது. கேட்டு இம்சை படுத்துகிறார். கையில் காசில்லை.கை செலவுக்கு நூறு வெள்ளி இருந்தால் கொடுங்கள் அப்புறம் தந்து விடுகிறேன்" என வேண்டினார்.

அப்பொழுது என்னிடம் இருந்தது ஆறுவெள்ளி சில்லரை மட்டுமே.

"இங்கேயே  இருங்கள் கொஞ்ச நேரத்தில் வருகிறேன்" என்று கீழேபோய் என் நண்பரிடம் பணம் வாங்கி கொடுத்து விட்டு வந்தேன்.

அவர் சொன்னது போல் யாவாரம் அவருக்கு மட்டும் தான் கை கொடுக்கவில்லை. பயறு கஞ்சி, பால் காய்ச்சி வித்தவர்கள் வடைசுட்டு வித்தவர்கள்," வாடா! வாடா! என்று மரியாதை குறைவாக கூறிகூறி "வாடா" விற்றவர்களும் ஆப்பம் சுட்டு யாவாரம் செய்தவர்களும் காஸு சம்பாதித்து ஊரில் மாடிவீடு கட்டினார்கள். அம்பாஸிடர் கார் வாங்கி விட்டார்கள். அவர்களையெல்லாம்  விட அனுபவத்திலும் கல்வியிலும் உடல் கவர்ச்சியிலும் பலமடங்கு மேலான இவர் ஏன் தோற்றார்? அவரை தடுத்த சீனத்து  சுவர் எது.? ஒரே ஒரு காரணம் "வாய்" அவருடைய ‘வாய்!’ வாயாலே கெட்டுச்சாம்  கௌதாரி’’ என்று சொல்வார்கள். 

அதன் முழுகதையும் தெரிந்தவர்கள் சொல்லலாம். சும்மாபோன குருட்டு பாம்பை பார்த்த தவளை வாயே வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் அதை பார்த்து கேலி செய்தது. கடைசியில் அந்த குருட்டு பாம்புக்கே அந்த தவளை இரையான கதை உங்களுக்கு தெரியும்.

1967 ஆண்டு வாக்கில் தென் இந்திய ரயில் நிலையங்களில் "வாய் நல்லதானால் ஊர் நல்லது" என்ற வாசகம் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது.

நீண்ட நாட்களாக அந்த நபரின் நடமாட்டம் லிட்டில் இந்தியா பக்கம் இல்லை. மாதங்கள் பல கடந்தது. ஒரு நாள் மாலை என் கடைக்கு திடீரென வந்தார். முகத்தில் வாட்டம் இழையோடியது. வந்தவருக்கு சேர் எடுத்து போட்டு உட்காருங்கள் என்று சொன்னேன். அது டி’டைம்! இரண்டு.டி வந்தது. டி குடித்த பின் கொஞ்ச நேரம் எதையோ யோசித்துக் கொண்டிருந்தார்.

"யாவாரம் ஏதும் செய்கிறீர்களா?" எனக் கேட்டேன். 

"இல்லை! இந்த சபுர் நான் புறப்பட்டு வந்த நேரம் சரி இல்லை. ஊர்போய் இரண்டு மூன்று மாதம் நின்று விட்டு வந்து யாவாரம் பாக்கலாம் என்று இருக்கிறேன். அடுத்த வாரம் பயணம் டிக்கட்டுக்கு தோது செய்து விட்டேன். ஊருக்கு போனால் பிள்ளைகள் கையை-கையை பாக்கும். அதுகளுக்கு கொடுக்க சாமான்கள் வாங்க கையிலே காசில்லை. ஒரு நூறு வெள்ளி கொடுங்கள் வந்ததும் தந்து விடுகிறேன்" என்றார். 

கொடுத்தேன்.போய்விட்டார்.

அவர் போன அரை மணி நேரம் கழித்து  என் டெலிபோன் மணி கினு கிணுத்தது. எடுத்துக் கேட்டேன். நம் மூர்காரரின் குரல்.

"அவர் அங்கே வந்தாரா?" 

நான் "இல்லை" யென்றேன். 

அவர் என்னிடம் வந்ததை இவரிடம் சொன்னால் ஊரெங்கும் பறையரைவார். சந்தர்ப்ப சூழலில் மனிதனுக்கு ஏற்ற-தாழ்வுகள் இயற்க்கை. அதை யறியாது   ஒரு மனிதனை மட்டம் தட்டுவதும் இழித்து பேசுவதும் இந்த மனிதனின் habit. அதனால் அந்த நபர் வந்ததை நான் அவரிடம் சொல்லவில்லை. 

அவரைப் பற்றி நண்பர் சொன்னார்:

"என்னிடம் வந்து ஊருக்கு போக போரதாகவும் கையில் காசில்லை" என்றவர். 

"கொஞ்சம் பணம் கொடுத்தால் போய் விட்டு வந்து தருகிறேன்" என்று கேட்டிருக்கிறார்

`போய்விட்டு வந்து எங்கே தரப்போகிறார்?’ என்று நூறு வெள்ளி கொடுத்ததைச் சொன்னதும்.

அடுத்து,

"என்ன! நூறு வெள்ளியை தூக்கி போடுகிறீர்கள்? இதை வைத்து நான் என்ன செய்ய முடியும்? என் பேரப் பிள்ளைகளுக்கு சோக்லேட்டே வாங்க முடியாதே! நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று கொடுத்த பணத்தை நண்பரின் பக்கமே தள்ளி விட்டிருக்கிறார் அவர்.

"உங்கள்  பேரப் பிள்ளைகளுக்கு சொக்லேட் வாங்க நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும்?" என்று பணத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். போய்விட்டார்.

இந்த நிலைக்கு அவரை தள்ளியது எது? அவரின் கடந்த கால செல்வ செழிப்பும் அதனால் ஊறிய மமதையும். கால ஓட்டத்தையும் மாற்றத்தையும் கணிக்காமல் கால்போன பாதையெல்லாம் கண் போனது! கண்போன பாதையெல்லாம் மனம் போனது.

மனம்போன பாதையெல்லாம் வாய் போனது.
        வில் விட்டு புறப்பட்ட அம்பும் வாய்விட்டு 
புறப்பட்ட சொல்லும் திரும்ப வராது.

பெரும்பாலோர் தங்களின் கடந்த கால `பாட்டன் பூட்டன்` பெருமைகளை பேசிபேசியே  நிகழ்காலத்தை கைவிட்டார்கள். 

இவர்கள் "பொய் நெல்லை குத்தியே பொங்க நினைத்து கை நெல்லும் விட்டவர்கள்".

S.முஹம்மது பாருக்

படித்தால் மட்டும் போதுமா !? 6

அதிரைநிருபர் பதிப்பகம் | September 21, 2015 | ,

படித்தால் மட்டும் போதுமா..??? இக்கேள்விக்கு கல்விபயிலும் மாணாக்கர்களாகிய நீங்களே பதிலுரைக்க வேண்டும். ஆனாலும் அறியாதவர்களுக்கு அறியத்தரும் நோக்கத்தில் இப்பதிவை தாங்களுக்கென பதிகிறேன்.

கல்வி அறிவு பெற்றிருப்பது ஒவ்வொருவருக்கும் மிக அவசியமானதாகும். கல்வியறிவு பெற்றிருப்பது எவ்வளவு அவசியமோ அதுபோல பொது அறிவையும் [General Knowledge] வளர்த்துக் கொள்வது மிகமிக  அவசியமானதாக இருக்கிறது.. பொது அறிவில் பின்தங்கி கல்வியறிவு மட்டும் பெற்றிருப்பது வாழ்க்கையில் மேலும் சாதிக்க சிரமமாகவே இருக்கும். பொது அறிவில்தான் கடந்தகால,நிகழ்கால மற்றும் உலக நிலைமைகளை நன்கு அறியமுடிகிறது. அப்படி அனைத்தும் அறிந்து வைத்திருந்தால்தான் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தாம் கற்ற கல்வியை பயன்படுத்தக் கொள்ளமுடியும்.

கல்வியறிவு எந்ததொரு வேலைக்கும் தகுதிக்கும் உள்ளே நுழைய பெறப்படும் அனுமதிச் சீட்டைப் போன்றதாகும். பொது அறிவானது கல்வியறிவை கூடவே தாங்கி வரும் தூணாக இருக்கிறது.இன்னும் சொல்லப் போனால் கல்வியறிவு பட்டைதீட்டாத  வைரத்தைப் போன்றது. பொது அறிவு என்பது அந்த வைரத்தை பட்டைதீட்டி அழகுபடுத்தி மதிப்பை ஏற்ப்படுத்துவதை போன்றதாகும். உதாரணமாகச் சொன்னால் ஒரு வேலைக்கான தேர்வுக்குச் சென்றால் அங்கு முதலில் தமது கல்வித்தகுதிகளையும் சான்றிதழ்களைச் சரிபார்த்தபிறகு பொது அறிவு சம்பந்தமான கேள்விகள்தான் கேட்கப்படுகிறது. அப்போது அது சம்பந்தமான கேள்விக்கு யார் சரியான விடையளிக்கிறார்களோ அவர்களே இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அப்படியானால் அங்கு கல்வியறிவைத் தாண்டி பொது அறிவே முன்னிலை பெறுகிறது.

அது மட்டுமல்ல பொது அறிவு பற்றி அறிந்து வைத்திருப்பது நமக்கு பலவகையிலும் பயனுள்ளதாக இருக்கிறது. அரசியல்,ஆன்மீகம்,மருத்துவம் என அனைத்திலும் பொது அறிவை வளர்த்துக் கொள்ளுதல் சிறந்ததாகும். .மற்றும் உலக நடப்புக்கள் நாட்டு நடப்புக்கள் மக்களின் தேவைகள், பிரச்சனைகள் இன்னும் பல நிகழ்வுகளை பொது அறிவின் மூலமாகத்தான் அறியமுடிகிறது. இன்னும் சொல்லப்போனால் போதிய விழிப்புணர்வையும் பொது அறிவின் மூலமாகத்தான் பெறமுடிகிறது

பொது அறிவின் உள்ளே நுழைந்தால் நம் வாழ்க்கைக்கு அவசியமான பலவகை செய்திகள் புலப்படும்.அதிலிருந்து அறியாதவைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.முன்னேற்றப் பாதைக்கு வழி காண முடியும். இப்படி பொது அறிவின் பலன்கள் நிறைய உள்ளன. எத்தனையோ உயர்கல்வி கற்று பட்டம் பெற்று வெளியில் வந்த மாணாக்கள் போதிய பொது அறிவு இல்லாமல் எந்தத் துறையை தேர்ந்தெடுப்பதென முடிவெடுக்கத் தெரியாமல் முழிபிதுங்கி நிற்கிறார்கள்.

நமது முன்னோர்கள் பலரும், பல சரித்திரத்திரங்களில் இடம் பெற்ற அரசியல்வாதிகள், அறிஞர்கள்,மேதாதைகள்,விஞ்ஞானிகள், யாவரும் பொது அறிவையே அதிகம் பெற்று இருந்தார்கள். எனவே இன்னும் உலகமக்களால் புகழாரம் சூட்டி பேசப்படுகிறார்கள்.

கல்வியறிவில் பின்தங்கி 8ம் வகுப்பைக் கூட சரியாக எட்டிப் பார்க்காத எத்தனையோ பேர் 7, 8 பாஷைகள் பேசக் கற்றுக் கொண்டு பெரிய முதலாளிகளாகவும், திறமையான தொழிலதிபர்களாகவும் கைதேர்ந்த பணியாளர்களாக திகழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதெல்லாம் பொது அறிவைக் கொண்டுதான் புகழ் பெற முடிந்தது. ஆகவே கல்வி அறிவுடன் பொது அறிவை பெற்றிருப்பது  கற்ற கல்விக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லையென்றே சொல்லலாம்.

இன்றையகால மாணாக்கள் நன்கு கல்வியறிவில் முன்னேறி வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதுபோல பொது அறிவை வளர்த்துக் கொள்வதிலும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆகவே சமுதாயச் சிந்தனைகள், உலக நிகழ்வுகள், வரலாற்றுப் பாடங்கள் சமூக வலைதளங்களில் அனாச்சாரங்களை தவிர்த்து தேவையானவைகளில் கவனம் செலுத்துதல் இப்படி மாறுபட்ட சிந்தனைகள் வர வேண்டும். அப்போதுதான் பொது அறிவை பெற வாய்ப்பாக இருக்கும். பொது அறிவுக்கான போட்டியில், பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவசியம் தவறாது பங்கேற்க வேண்டும். இதன் மூலம் அறியாத விசயங்களை அறிந்து கொள்ளவும் அறிந்த விசயங்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பாக இருக்கிறது.

எனவே  கல்வியறிவு எந்த அளவுக்கு முக்கியமோ அதுபோல  ஒருமாணவன் பொது அறிவையும் பெற்றிருப்பானேயானால் அவனது வருங்காலம் மிகப் பிரகாசமாக ஜொலிக்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.ஆகவே மாணவ மாணவியர்கள்  கல்வி கற்கும்போதே பொது அறிவையும் வளர்த்துக் கொள்வதில் நாட்டம்  கொள்ள வேண்டும் என்பதே எனது அறிவுரையாக இருக்கிறது.

அதிரை மெய்சா

ஆசிரியர் தினம் - 2015 - காணொளி 3

அதிரைநிருபர் பதிப்பகம் | September 20, 2015 | , , ,

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செப்டம்பர் 6-ம் தேதி சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் தினம் மற்றும் இலக்கிய மன்ற துவக்க விழா நிகழ்வின் காணொளித் தொகுப்புகள்.

முகவுரையும் வரவேற்புரையும் !


தலைமையுரை


வாழ்த்துரை




அதிரைநிருபர்

"நாளக்கி பெருநா, நம்மளுக்கு ஜோக்கு" (ஹஜ்ஜுப் பெருநாள் கால மலரும் நினைவுகளிலிருந்து) 8

அதிரைநிருபர் பதிப்பகம் | September 19, 2015 | , , , , ,


நானெல்லாம் சிறுவனாக இருந்து பள்ளி, பள்ளிக்கூட (வெள்ளி, சனி) விடுமுறை காலங்களில் சைக்கிள் டயரும், அதை விரட்ட கையில் ஒரு கம்பும் வைத்துக் கொண்டு தெருவைச் சுற்றி நண்பர்களுடன் விளையாடி வந்த காலம் அது. அப்பொழுதெல்லாம் ஊரிலிருந்து பறாக்கப்பலில் (விமானத்தில்) ஹஜ் செல்வது ரொம்ப, ரொம்ப அரிது. எங்கோ, யாரோ அதில் ஏறி பயணிப்பதாக கேள்விப்படுவதுண்டு. அக்காலத்தில் ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது கப்பல் பயணம் தான். ஹஜ்ஜை இனிதே முடித்து அவர்கள் வீடு திரும்ப குறைந்தது மூன்று, நான்கு மாதங்கள் ஆகும். இன்று போல் நொடிப்பொழுதில் கையில் தவளும் நவீன அலைபேசி சாதனங்களும், உலகச் செய்திகளெல்லாம் கனவில் கூட தவளாத, விஞ்ஞான முன்னேற்றங்கள் அத்துனை சாத்தியப்படாத காலம் அது.

மூன்று, நான்கு மாத கால ஹஜ்ஜுப் பயணத்திற்காக சாமான், சட்டிகளுடன் மூட்டை,முடிச்சுகளுடன்,மருந்து மாத்திரைகளுடனும் சென்னை வரை அல்லது மும்பை வரை ரயிலில் பயணம் மேற்கொள்வர் நம் முன்னோர்கள்.அவர்கள் திரும்பி வரும் வரை அவர்களுக்கு ஏதேனும், எங்கேனும் சம்பவித்தாலும் அல்லது வீட்டிலுள்ளவர்களுக்கு ஏதேனும்  நடந்தேறி விட்டாலும் அவரவர் நேருக்கு நேர் முகத்தை பார்க்கும் வரை ஒன்றுமே தெரிய வாய்ப்புகள் இல்லாத காலம் அது. திரும்பும் பயணமா? அது ஒரு திரும்பா பயணமா? என்பதை யார்தான் துல்லியமாக கூறிவிட முடியும் படைத்தவனைத்தவிர? அதனால் அவர்களை சீரும், சிறப்புடன் வாழ்த்தி கண்களின் ஓரம் கண்ணீர் ததும்ப வழியனுப்பி வைக்க நமதூர் ரயில் நிலையம் வரை அவர்களை பைத்து சொல்லி அழைத்துச் சென்று கழுத்தில் மல்லிகைப் பூமாலையெல்லாம் அணிவித்து (பைத்தும், பூமாலையும் இங்கு ஒரு விவாதப்பொருளாக மாறி விட வேண்டாம். நடந்தவைகளை நினைவு படுத்துவதே இப்பதிவின் நோக்கமேயன்றி இங்கு கருத்துமோதலை ஏற்படுத்துவது நோக்கமல்ல) சங்கை செய்து, கூச்சிக்கு,சிக்கு,சிக்கென்று ஊரின் எல்லையிலிருந்து உற்சாக சங்கூதி ஒய்யாரமாய் கரும்புகையை கக்கிக்கொண்டு நமதூர் வழியே சென்னை எழும்பூர் வரை செல்லும் கம்பன் ரயிலில் அவர்களுக்காக து'ஆச்செய்து, அவர்களையும் து'ஆச்செய்யச் சொல்லி அனுப்பி வைக்கும் காலம் அது. குதிரை வண்டி, மாட்டு வண்டி, பால்காரன் என சலங்கை,மணி ஒலி அங்குமிங்கும் ஊரில் கேட்டுக் கொண்டிருந்த காலம் அது.

பிறகு காலம் கொஞ்சம், கொஞ்சமாக முன்னேறி விமானப் பயணங்கள் மூலம் ஹஜ்ஜுக் கடமைகள் நிறைவேற துவங்கி ஹஜ்ஜுக்குக்கு செல்பவர்கள் நமதூர் புஹாரி ஷரீஃப் (ஜாவியா) முடிவதற்கு முன்னரே ஹஜ்ஜை முடித்து காலை ஊர் திரும்பி செல்லும் வழியில் நமதூர் ஜாவியாவில் வீடு சேரும் முன் அவர்களை பரக்கத்திற்காக, ஊர், ஈருலக நலன்களுக்காக து'ஆச்செய்யச்சொல்லி சிறப்பு படுத்தும் நமதூர். (ஜாவியா மேட்டரும் இன்று நமதூர் வலைதளங்களில் விவாதப்பொருளாக மாற்றப்பட்டுள்ளதை காண முடிகிறது. இது கூடுமா? கூடாதா? பித்'அத்தா? இல்லையா? என்றெல்லாம் விவாத மேடைகளில் இதுபற்றி இன்று அனல் பறந்தாலும் ஊரில் பல ஏழைக் குடும்பங்களின் காலை வேளை உணவு அந்த 40 நாட்கள் முழுவதுமோ அல்லது ஓரளவுக்கேனுமோ பூர்த்தியாகிறது என்பது மட்டும் உண்மை என்பதை உணர முடிகிறது). சரி நம் நினைவுகளுக்குள் பயணிப்போம்.

எங்கோ பிறந்து வளர்ந்த செம்மறியாடுகள் தன் குடும்பம், பிள்ளை குட்டிகள் சகிதம் ஊர்த்தெருக்களில் கீதாரிகள் மூலம் பெரும் பேரணி போல் செல்லும். சில ஆடுகளின் மேல் விலாசங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அது ஆட்டின் விலாசமா? அல்லது அதை வாங்கியவரின் விலாசமா? அந்த கீதாரிக்கே விளங்கும்.

துணிக்கடைகள் இந்த ஹஜ் மாதத்தில் மட்டும் துணிக்கடலாக உருமாறும். அதற்கான விளம்பர வாகனங்களின் சப்தமும் காதை பிளக்கும். நோட்டீஸும் ஆங்காங்கே கலியாண பத்திரிக்கை போல் வீடு வீடாக கொடுத்து செல்லப்படும். 

முடிவெட்டும் கடைகளும் கூட்டமாய், குதூகலமாய் தான் இருக்கும். ஹிப்பி, கிராப்பு, என்று அக்கால ஸ்டைலில் சிகை அலங்காரம் செய்து அந்நேர இளமை மகிழும்.

டைலர் கடைகளில் கூட்டம் அலைமோதும். இளைஞர்களின் மத்தியில் தெரு டைலரிடம் தைக்க கொடுப்பதா? எக்ஸ்போ டைலரிடம் கொடுப்பதா? எக்ஸ்பர்ட் டைலரிடம் கொடுப்பதா? அஹ்லன் டைலரிடம் கொடுப்பதா? பட்டுக்கோட்டை ரஹ்மான் டைலரிடம் கொண்டுபோய் தைக்க கொடுப்பதா? அல்லது சென்னையிலிருந்து கிரேஸி ஹார்ஸிலிருந்து ரெடிமேடாக வாங்கி வரச்சொல்வதா? அல்லது மாமா தந்த மார்டின் சட்டையை வைத்து வரும் ஹஜ்ஜுப் பெருநாளை சமாளிப்பதா? என்பதில் அதிகம் கன்ஃபூஸ் இருக்கும்.

தலையில் தொப்பியின்றி யாரும் காணப்பட மாட்டார். அதனால் கடைத்தெரு இலியாஸ், அன்சார் கேப்மார்ட்களில் வகை,வகையான, கலர்,கலரான தொப்பிகள் குவிந்து கிடக்கும். தலைக்கேற்ற தொப்பிகளை போட்டு பார்த்து வாங்கி மகிழ்வோம். மாப்ள தொப்பி, வெள்ளை தொப்பி, பின்னல் தொப்பி, ஓமன் தொப்பி, பங்களாதேஷ் தொப்பி என பலவகைகளில் விற்கப்படும். கடைசியில் இன்று அந்த கப்பல் போன்ற ஊதா தொப்பியே தலைமையிடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் அந்த பெரிய கப்பல் போன்ற ஊதா தொப்பியின் இருபக்க இடுக்கில் அப்பாமார்கள் ஏதாவது எழுதி வைத்த கடுதாசியும், காசு, பணமும் செருகி வைத்திருப்பர். பேரப்பிள்ளைகளுக்கு உடனே கொடுக்க அக்காலத்தின் ஏ.டி.எம். மெஷின் போல் அது அவர்களுக்கு பயன்பட்டது.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பெருநாளைக்கு எல்லாமே புதுசா இரிக்கணும்ண்டுதான் எல்லோரும் அன்று நினைப்போம். தெருவில் நடக்கும் பொழுது சரட், சரட் சப்தம் தந்து பிறரின் கவனத்தை சட்டென ஈர்க்கும் சிகப்பு பூ வைத்த அந்த சோலப்புரி செருப்பும் நம் கம்பீரத்தை கொஞ்சம் கூட்டியே காண்பிக்கும் காலம் அது. அப்பொழுதெல்லாம் சிக்ஸ்பேக் கலாச்சாரமும், அதன் மோகமும் இளைஞர் பட்டாளத்திடம் இருந்ததில்லை. மொத்தியா இருந்தாலும், ஒல்லிக்குச்சி போல் இருந்தாலும் கொஞ்சம் செவந்த தோலுக்கு மதிப்பு அதிகம் தான் அன்று. தோல் செக்கச்செவேண்டு இருந்தாலும், கன்னங்கரேண்டு இருந்தாலும் புத்திக்கூர்மையும், இறைவன் தந்த நல்அறிவும், ஆற்றலும், நேரான வழியில் கடின முயற்சியும் இருந்தால் எவருக்கும் ஏமாற்றமில்லா ஏற்றமே இருக்கும் இறைவனின் நாட்டத்தில்.

அப்பொழுதெல்லாம் அரஃபா ஒன்பதாம் நாள் சிறுவர்களாய் இருந்த நமக்கு அன்று நோன்பு வைக்க வேண்டும் என்ற மார்க்க விழிப்புணர்வு அத்துனை இருந்ததில்லை. அதனால் கண்டதையும் திண்டு திரிந்து வந்தோம். 

பெருநாள் இரவு ஆடவர், பெண்டிர் என ஊரே ஒரு விழாக்கோலம் பூண்டிருக்கும். சென்னையிலிருந்து பள்ளி, கம்பெனி விடுமுறையில் நிறைய பேர் குடும்பத்துடன் ஊர் வந்திருப்பர். அவர்களுக்கு என்னதான் சிங்கார சென்னையில் மெரீனா கடற்கரையும், நுனி நாக்கு இங்லீஸும் பரவசம் தரும் பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் நம்மூர் கலாச்சாரம் ரொம்பவே அவர்களுக்கு பிடித்திருக்கும். எங்கு சென்றாலும் வேட்டி உடுத்திக்கொண்டு காற்றோட்டமாய், மரங்கள் சூழ்ந்த இடம், புளியமரங்கள் இருபக்கமும் அரண் போல் நின்று நிழல் தரும் சாலைகள்,சப்தமில்லாமல் சிற்றோடை போல் ஓடிக்கொண்டிருக்கும் ராஜாமட பாலம், செல்லும் வழியில் பசுமை போர்த்திய வயல்வெளிகளும், அதில் கூட்டமாய் வந்தமரும் வெண்கொக்கு, மடையான்களும், தென்னந் தோப்புகள், அதில் ஓடும் மோட்டர் பம்பு செட்டுகள், அதன் தொட்டியில் இறங்கி குளித்து கும்மாளமிடும் சுகம், இருபுறமும் கருவேல மரங்கள் வரவேற்கும் ரயில் ரோடு தாண்டிய குண்டும், குழியுமாய் உப்புக்காற்று வீசும் நமதூர் கடற்கரை சாலை, தெரு ஆச்சிகளின் பொட்டிக்குள் மறைந்திருக்கும் நா ஊறும் விலை/விளை பொருட்கள், கடைத்தெரு நொறுக்குத் தீணிகள், மெயின் ரோடு சூப்பு கடைகள், நீர் நிறம்பி குளிர்காற்றை கொஞ்சம், கொஞ்சமாய் தவணை முறையில் தந்து மகிழும் தெரு குளங்கள், இராக்கால நிலவு கார் மேகப்போர்வைக்குள் புகுந்து,புகுந்து உலகோடு கண்டு விளையாட்டு விளையாடுவதும், அதை அப்படியே தெருக்குளங்கள் தன் மேனியில் அழகுற படம் பிடித்து ஊருக்கு காட்டி மகிழ்வதும், அதை குளக்கரையில் நின்று நண்பர்களுடன் ரசிப்பதும் என இன்னும் தொலைந்து போன எத்தனையோ இன்பங்களை இலவசமாய் அனுபவிக்க எவருக்குத்தான் பிடிக்காது......

ஹஜ்ஜுப் பெருநாள் வரும் முன்னரே சொந்த, பந்தங்களின் சிறுவர், சிறுமியர்களுக்காக பெருநாள் காசு என்று சொல்லி குடும்பங்களில் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சலவை/புது நோட்டுகள் சந்தோசமாய் கொடுத்து மகிழ்ந்து கொள்வர். அதை வைத்து வீட்டின் சிறுவர்களாய் இருந்த நாம் பாதி பணத்தை வீட்டில் கொடுத்தும் மீதி பணத்தில் நமக்கு விருப்பப்பட்ட விளையாட்டு சாமான்களையும், திண்பண்டங்களையும் வாங்கி மகிழ்வோம்.

பெருநாள் இரவு இறைச்சிக்கடை பெட்ரமாஸ் லைட்டு மேன்டிலின் வெளிச்சம் அதை காணும் நம் உள்ளத்திற்குள் ஊடுவி உற்சாக ஒளியேற்றி ஒரு பரபரப்பான பரவசத்தை நமக்கெல்லாம் தந்து மகிழும்.

ஹஜ்ஜுப் பெருநாளுக்கு ஒளிஹாவுக்காக ஊரெங்கும் ஆடுகளும், மதரஸா, பைத்துல்மால் போன்ற தொண்டு நிறுவனங்களில் அறுக்கப்பட்டு பகிரப்படும் மாட்டு கறிகளும் பரவலாக எல்லோர் வீடுகளிலும் குவிந்து குளிர்சாதனப் பெட்டி வசதியில்லா பெரும்பான்மையான வீடுகளில் அதை உடனே சுத்தம் செய்து கெட்டுப்போகாமல் இருக்க மசாலா தடவி உடனே சனலில் சாக்கு தைக்கும் ஊசி மூலம் ஒவ்வொன்றாக கோர்த்து மாலை போல் ஆக்கி அதை வெயிலில் துணிக் காயப்போடுவது போல் போட்டு வைப்பர். நன்கு காய்ந்ததும் அதை அப்படியே அடுப்பில் சுட்டோ, அம்மியில் தட்டியோ அல்லது எண்ணெய் ஊற்றி பொறித்தோ அதில் கூடுதலாக வெங்காயம், கேரட், மல்லி இலை, எலுமிச்சை போன்றவற்றை வேட்டிப்போட்டு கூடுதல் ருசியுடன் உண்டு மகிழ்வோம். அன்றெல்லாம் 80, 90 வயது அப்பாக்களை எல்லாத் தெருக்களிலும், வீடுகளிலும் பார்க்க முடிந்தது. கொலஸ்ட்ரால் பிரச்சினையில்லை, நடக்க முடியா முடக்கு வாதம் அதிகமில்லை, குழிக்குள் கொண்டு போய் சேர்க்கும் கேன்சரும் இல்லை, ஊரை பவனி வரும் லேன்சரும் இல்லை. ஆனால் இன்றோ நவீனங்கள் ஊரை நாலாப்புறமும் சூழ்ந்திருந்தாலும் 30 வயதை தாண்டியதும் உடல் கோளாறுகளும் மருத்துவ அறிவுரைகளும், மருந்து மாத்திரைகளும் நினைத்த எதையும் கவலையின்றி உண்டு மகிழ முடியாமல் ஸ்பீட் ப்ரேக் போட்டு ஏகத்துக்கும் வாயின் முன்புறம் செல்லும் முன் வேகத்தடை விதிக்கிறது.

நோன்பு பெருநாள் போல் ஹஜ்ஜுப்பெருநாளுக்காக பெருநாள் இரவு தெருப்பள்ளிகளில் நகரா அடிக்க மாட்டார்கள். குர்பானி கிடா அறுக்கும் முன்னர் பெருநாள் காலை பசியாற தேவையான கறிகளை வாங்க கறிக்கடை முன் கச்சல்கட்டியோ, கட்டாமலோ காத்துக்கிடப்பர்.

வெள்ளிக்கிழமை கூட கறி வாங்கி உண்டு மகிழ முடியா எத்தனையோ பல ஏழை,எளிய குடும்பங்களின் வீடுகளில் ஆடு,மாடு குர்பானி கறிகள் போதும், போதும் என்று சொல்லுமளவுக்கு பல வீடுகளிலிருந்து வந்து குமியும். அவர்கள் மனமும் குளிரும். வயிறும் நிறையும்.

அக்காலத்தில் கவாபுக்கும், நம் கல்புக்கும் நல்ல தொடர்பு இருந்து வந்தது. நாமும் வீடுகளில் சக வயது சிறுவர்களுடன் சேர்ந்து நான்கு செங்கல்லை எடுத்து சதுரமாய் அடுக்கி அதன் நடுவில் அடுப்புக்கரியை கொஞ்சம் போட்டு நெருப்பூட்டி அதன் நடுவில் குடைக்கம்பியில் மசாலா தடவிய கறியை வைத்து விசிறியில் வீசி அதை நன்கு வேகும் வரை சூடு காட்டி பிறகு தட்டையில் சூட்டோடு திண்டு மகிழ்வோம்.

கறிக்கடைகளிலும், டைலர் கடைகளிலும், இன்ன பிற பெருநாள் இரவு வேலைவெட்டிகளிலும் இரவின் பெரும் பகுதி கழிந்திருப்பதால் அசதியில் மீதி இரவில் நன்கு உறங்கி பெருநாள் காலை சுபுஹ் தொழுகை பள்ளியில் இமாம் ஜமாத்தோடு தொழுது விட்டால் அது ஒரு பெரும் சாதனை தான் அன்று. வீட்டில் எல்லோரும் ஒரே நேரத்தில் குளிக்க வேண்டி இருப்பதால் சுபுஹ் தொழுகை முடிந்ததிலிருந்து ஒவ்வொருவராய் குளிக்க ஆரம்பித்து ஒரு வழியாய் மெல்ல, மெல்ல எல்லோரும் பெருநாள் தொழுகைக்கு தயாராகி விடுவர். அதே சமயம் அடுப்பில் பசியாறவும் ரெடியாகிக் கொண்டிருக்கும்.

பள்ளியில் முன்னரே வந்தமரும் பெரியவர்களும், சிறியவர்களும் மைக்கில் தக்பீர் சொல்லிக்கொண்டிருப்பர். நாமும் இறைவனைப் புகழ்ந்தவர்களாய் மெல்ல, மெல்ல தக்பீரை முணு, முணுப்போம். சந்தோசம் ஊரெங்கும் காற்றில் கரைந்து கொண்டும், அந்த தியாகத்திருநாள் பெரும் ஆர்ப்பாட்டமும், ஆர்ப்பரிப்பும் இல்லாமல் அமைதியாய் எல்லோரிடமும் குடிகொண்டிருக்கும் அந்த அல்லாஹ்வே அவற்றை பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருப்பான்....

பசியாற காரியங்களும், குடும்ப, நட்பு நல விசாரிப்புகளும் என பெருநாள் தினமும் நம்மை விட்டு அந்த நாள் சூரியன் போல் மெல்ல, மெல்ல மறைந்து கொண்டிருக்கும். தக்பீர் முழக்கம் மட்டும் மார்க்கம் கூறும் நல்வழியில் நம் பள்ளிகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரும்.

ஹஜ்ஜுக்கு சென்று வந்தவர்கள் வீடுகளில் களரி என்னும் பசியாற,விருந்து உபசரிப்புகள் நடந்தேறும். "ஹஜ்ஜுக்கு போய்ட்டு வந்தவ்வோ" வீட்டுக்கு சென்று அவர்களை முசாபஹா செய்து வரும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஜம்ஜம் தண்ணீர், பேரிச்சம் பழமும், கொஞ்சம் நெருங்கியவர்களுக்கு அத்தரு, தொப்பி, தசுமணி, மக்கத்து மோதிரம் எல்லாம் கொடுத்துபசரிக்கப்படும். இந்த விஞ்ஞான முன்னேற்றம் அம்மி,குழவி,கொடக்கல்லை மட்டுமல்ல தசுமணியையும் விட்டு வைக்கவில்லை. காணாக்கி தொலைத்து விட்டது. எல்லாம் டிஜிட்டல் மயம். இப்படியே பலவிசயங்களை இங்கு எழுதிக் கொண்டிருப்பதால் கணிப்பொறியின் மை கறைகிறதோ? இல்லையோ? ஆனால் நம் காலம் கறைந்து கொண்டே இருக்கிறது.

காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. இவ்வுலகில் அவன் நாட்டத்தில் அந்த,அந்த நேரத்தில் வர வேண்டியது வந்து கொண்டும் போக வேண்டியது போய்க்கொண்டும் தான் இருக்கின்றன......

இந்த வருடம் பல சிரமங்கள்,உடல் நலக்குறைவுகள்,பிரச்சினைகள் என எல்லாவற்றையும் தாண்டி புனித ஹஜ் கடமையாற்ற மக்கமாநகரம், மதீனமாநகரம் வந்தடைந்துள்ள லட்சோப லட்ச ஹாஜிமார்களின் எல்லாப்பாவங்களையும் மன்னித்து அவர்களின் ஹஜ்ஜை மப்ரூரான ஹஜ்ஜாக்கி அவர்களின் ஹாஜ்ஜத்துக்களுடன் அகில உலக முஸ்லீம்களின் ஹாஜத்துக்களும், ஈருலக நலவுகளும் இனிதே நிறைவேறி அகிலமெங்கும் அமைதி நிலவ து'ஆச்செய்வோம்....

இந்த நல் நினைவுகளுடன் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் என் இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் இனிதாய், கனிவாய்  சென்றடையட்டுமாக.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு