Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை முன்னிட்டு - சமாதானக் கூட்டம் ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | April 30, 2014 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்று 30.4.2014இல் தொடங்கும் காட்டுப்பள்ளி தர்கா கந்தூரியைத் தடை செய்ய வேண்டி, மாவட்ட ஆட்சியருக்கு அதிரை தாருத் தவ்ஹீத் மனு ஒன்றை அனுப்பியது (இணைப்பு1).



அதைத் தொடர்ந்து நேற்று (29-04-2014) மாலை 4 மணி அளவில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் 'சமாதானக் கூட்டம்' ஏற்பாடு செய்யப்பட்டு, கந்தூரிக் கமிட்டியினரும் கந்தூரியை எதிர்க்கும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினரும் அழைக்கப்பட்டிருந்தோம்.

கலந்து கொண்டவர்கள்:

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக
1. எம்.பி. அஹ்மத் (அமீர்)
2. ஜமீல் எம் ஸாலிஹ் (செயலர்)
3. நிஜாமுத்தீன் (பொருளாளர்)
4. கமாலுத்தீன் (இஸ்லாமியப் பயிற்சி மையப் பொறுப்பாளர்)
5. அஹ்மது ஹாஜா
6. மாஜுதீன்

கந்தூரிக் கமிட்டி சார்பாக
1. எம்.எம்.எஸ் ஷேக் [அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு கமிட்டித் தலைவர்]
2. சுல்தால் அப்துல் காதர் (36)
3. மஸ்தான் கனி
4. பத்ருஸ் ஸமான் ( மதார் சா)
5. அப்துல் வாஹித் (கித்தில்)





தொடக்கமாக, கோட்டாட்சியரின் முன்னுரையை அடுத்து எங்களிடம் கருத்துகள் கேட்டபோது, தாருத் தவ்ஹீத் தொடங்கப்பட்ட 1982லிருந்து 32 ஆண்டுகால தாருத் தவ்ஹீதின் பிரச்சாரங்களில் இதுவரைக்கும் எந்தவொரு சிறு அசம்பாவிதமும் நடந்ததில்லை என்பதையும் சட்டம்-ஒழுங்குக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இதுவரை நாங்கள் நடந்துகொண்டதில்லை என்பதையும் தகவலாகப்  பதிவு செய்துகொண்டு, "எங்களுடைய கருத்துகளைக் கேட்டுப் பதிவு செய்து அதை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும் என்று நகரக் காவல்துறை ஆய்வாளர் எங்களை அழைத்தார். கந்தூரி என்பது இஸ்லாத்துக்கு எதிரானது; அதற்குத் தடை வேண்டும் என்ற எங்களுடைய உறுதியான கருத்துகளை ஏற்கனவே மாவட்ட ஆட்சியருக்கு எழுத்து மூலமாக அனுப்பிவிட்டோம்" என்றும் சுட்டிக் காட்டினேன். "லா இலாஹ இல்லல்லாஹ்வின் பொருள் உங்களுக்கே தெரிந்திருக்கும். வழிபாடுகள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று அதற்குப் பொருள். கந்தூரியை வழிபாடு என்று நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள். கந்தூரிக் கமிட்டியினரும் வழிபாடு என்றே குறிப்பிடுகின்றனர்.  இரண்டு பேருக்கு வழிபாடுகள் என்பது இஸ்லாத்தில் கிடையாது. உள்ளூரிலும் வெளியூரிலும் வசூல் செய்து, ஒருவருடைய இறந்த தினத்தை மேள தாளங்களோடு மகிழ்ச்சியோடு கொண்டாடுவது என்பது கந்தூரிக் கமிட்டியாரின் வழக்கமாக இருக்கிறது. இது எவ்வளவு மோசமான செயல்?

சட்டம்-ஒழுங்கைப் பற்றி மட்டும் உங்களுக்குப் பிரச்சினை. எங்களுடைய பிரச்சினை என்னவென்றால், கந்தூரி என்பது இஸ்லாத்தில் உள்ளதுதான் என்பதை நிறுவச் சொல்லுங்கள்; நாங்களும் சேர்ந்து செய்கிறோம். கந்தூரி என்பது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை நாங்கள் நிறுவுகிறோம்; நிறுத்திவிடச் சொல்லுங்கள்" என்று தீர்வு சொன்னேன்.

நாகூரிலும் அஜ்மீரிலும் முத்துப்பேட்டையிலும் போய் நிறுத்திவிட்டு வரும்படி அதிமேதாவித்தனமான பதிலை மதார் சா வைத்தார்.

"நாகூர் கந்தூரியைப் பற்றி நாகப்பட்டின ஆர்டிஒ ஆஃபிசிலும் முத்துப்பேட்ட கந்தூரியைப் பற்றி திருவாரூர் ஆர்டிஓ ஆஃபீஸிலும் பேச்சுவார்த்தை நடக்கும். பட்டுக்கோட்டை ஆர்டிஓ ஆஃபீஸில் நாம் உட்கார்ந்திருப்பது அதிராம்பட்டினத்துக் கந்தூரியைப் பற்றிப் பேசுவதற்காக" என்று விளக்கினேன்.

கந்தூரியை நிறுத்துவதற்குத் தமக்கு அதிகாரம் இல்லை என்று கோட்டாட்சியர் கூறிவிட்டு, கந்தூரியை அமைதியாக நடத்துவதற்கு உங்களுடைய கண்டிஷன் என்ன? என்று கேட்டார். அதற்கு, "கந்தூரியே கூடாது என்பதுதான் அவர்களுடைய கண்டிஷன்" என்று காவல்துறை ஆய்வாளர் பதிலளித்தார். நாங்கள் ஆமோதித்தோம்.

எம்.எம்.எஸ் ஷேக் அவர்கள் [அதிரை அனைத்து முஹல்லா கமிட்டி தலைவர்], கந்தூரிகள் ஆல் ஓவர் இந்தியாவில் நடப்பதாகக் குறுக்கிட்டார்.

அதுவரை பொறுமையாக இருந்த அமீர் அவர்கள் தம்மை ஆங்கிலத்தில் கோட்டாட்சியரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, "இந்தியா முழுக்கவும் நடந்தாலும் கந்தூரி என்பது இஸ்லாத்துக்கு முரணானது" என்பதை ஆங்கிலத்தில் எடுத்துக் கூறினார். கந்தூரி எதிர்ப்பாளர்களின் வீட்டுக்கு எதிரே வேண்டுமென்றே பாட்டும் கூத்தும் நெடிய நேரம் நடத்துவது வழக்கமாயிருக்கிறது என்ற அமீரின் குற்றச்சாட்டுக்கு, "பெண்கள் கூட்டம் நின்றால், கூத்து நடக்கத்தான் செய்யும்" என்று மஸ்தான் கனி கூறியதும் ஹாஜாவுக்குப் பற்றிக் கொண்டது. மறைந்த சகோ. அபுல்ஹஸன் அவர்களின் வீட்டுக்கு எதிரே நடந்த நீண்ட நேரக் கூத்தும் அதற்கு எதிர்வினையாக மிளகாய்த் தண்ணீர் அபிஷேகமும் நடத்தப்பட்டதை எடுத்துச் சொல்லி, யார் வீட்டுப் பெண்கள்? முஸ்லிம் வீட்டுப் பெண்கள் வீட்டுக்கு எதிரே கூத்துப் போடுவதுதான் வழிபாடா? அப்படி நடந்தால் கலவரம் ஏற்படாதா? எனப் பொங்கிவிட்டார். கோட்டாட்சியர் அமைதிப்படுத்த முயன்றபோது, தான் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இதே மேலத்தெரு கந்தூரி ஊர்வலத்தில் கொலைவெறியுடன் தாக்கப்பட்டதையும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியால் பாதிக்கப்பட்டு இன்றுவரை ச்சார்ஜ் ஷீட் போடப்படாமல் காவல்துறை இழுத்தடிப்பதையும் தான் ஹஜ்ஜுக்குப் போவது தாமதப்படுவதையும் எடுத்துரைத்தார்.

மேலத்தெருவில் கந்தூரிக்கு எதிர்ப்பு பலமாக இருப்பதாக நிஜாமுத்தீன் கூறியபோது எம்.எம்.எஸ் ஷேக், மேலத்தெரு கமிட்டிதானே கந்தூரி நடத்துகிறது? மேலத்தெருவில் எதிர்ப்பு எப்படி வரும்? எனக் கேட்டார். அதற்கு, "நாளைக்கு மேலத்தெரு ஜமா அத் கூட்டத்தைக் கூட்டுவோம். அப்போது தெரியும் எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதென்று" என்று நிஜாமுத்தீன் புள்ளி வைத்தார். கந்தூரி முடிந்து கூட்டுவோம் என்று எம்.எம்.எஸ் ஷேக் பதிலளித்தார். நிஜாமுத்தீன் விடாமல், "நாளைய கந்தூரிக்கு எதிர்ப்பு எவ்வளவு எனத் தெரிந்துகொள்வதற்குக் கந்தூரி முடிந்தபின் கூடி என்ன பிரயோஜனம்?" என்று எதிர் கேள்வி கேட்டபோது பதில் சொல்லாமல் சம்பந்தமில்லாத பேச்சுகள் குறுக்கிட்டன.

அல் பாக்கிதத்துஸ்ஸாலிஹாத் பள்ளி அருகில் பதட்டம் இருப்பதை நிஜாமுத்தீன் பதிவு செய்தபோது, மதார் சா "அவர்களில்தான் யாராவது சிலர் பிரச்சனை உண்டாக்குவார்கள்" எனப் பழியை எங்கள் மீது சுமத்தப் பார்த்தார். அதற்கு, "L&O பிரச்சனை வரக்கூடாது என்பதால்தான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளோம். L&O problem உண்டு பண்ணிதான் தீர்வு என நாங்கள் நம்பினால் அதையும் நாங்கள் செய்வோம்.  இரண்டாம் தர வேலை செய்ய மாட்டோம். நீங்கள் அதை விரும்பினால் அமைதிப் பேச்சு வார்த்தை மெத்தேடை மாற்றிக்கொள்வோம். எப்படி வசதி?" என நிஜாமுத்தீன் எதிர்க் கேள்வி வைத்தார்.

"மழையில்லாமல் செடிகளெல்லாம் கருகிக் கிடக்கின்றன. எங்கள் வீட்டுக்கு அருகில் வைத்துதான் வெடி விடுகிறார்கள். தீ விபத்து நடப்பதற்கு முன்னெப்போதையும்விட இந்த வறட்சி காலத்தில் வாய்ப்புகள் அதிகம்" என்பதை மாஜுதீன் பதிவு செய்தார்.

இறுதியாக சமாதானக் கூட்ட நடவடிக்கைகள் ப்ரிண்ட் செய்து வந்தது.

அதிலிருந்த 'மேலத்தெரு ஜமாஅத்தினரும்' என்பதை நிஜாமுத்தீன் எதிர்த்ததில் அது முழுதும் நீக்கப்பட்டது. காட்டுப்பள்ளிவாசல் என்பது காட்டுப்பள்ளி தர்கா என்று திருத்தப்பட்டது. கடைத்தெரு சாலையின் வடக்குப் பக்கம் முழுமையாகக் கந்தூரி ஊர்வலம் போகாது என்று கந்தூரிக் கமிட்டியினரால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட உறுதியை எழுத்தில் (ஆறாவது ப்பாயிண்ட்டாக) இணைக்க வலியுறுத்தினோம் (இணைப்பு).


SEC-ADT
மின்வாரியத்துக்கு அதிரை தாருத் தவ்ஹீதின் கடித நகல்

கண்கள் இரண்டும் - தொடர் - 34 7

அதிரைநிருபர் பதிப்பகம் | April 28, 2014 | , ,


சுர்மா – இத்மித் – குஹ்ல் என்னும் கண்-மை இட்டுக் கொள்வதை வழிபாடாகவே கருதுகிறது இஸ்லாம். அது நபிவழி (சுன்னத்) என்னும் அந்தஸ்த்தில் உள்ள காரியம். அது ஒப்பனையோ கற்பனையோ அல்ல. ஆன்மிகத்தின் அம்சம்.

’இத்மித்’ என்று அரபியில் அழைக்கப்படும் மூன்றாம் ஆண்டிமொனி சல்ஃபைடு பற்றி நபிகள் நாயகம் நயந்துரைத்த மொழிகள் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபி-மொழி:

“உங்கள் அஞ்சனங்களில் சிறந்தது இத்மித். அது பார்வையைத் தெளிவாக்குகிறது, இமையின் முடிகளை வளர்த்துகிறது” (நூற்கள்: சுனன் நஸாயீ #5113, சுனன் அபுதாவூத் #3837).

நபித்தோழர் அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

“நபி (ஸல்) தன் கண்களுக்கு மை இடுகையில் வலக் கண்ணில் மூன்று முறையும் இடக் கண்ணில் இரண்டு முறையும் இடுவார்கள்” (நூல்: முஸன்னஃப் இப்னு அபீஷைபா) 

சைக்கிள் கம்பியின் முனையை கூராக்கி சுர்மா டப்பாவுக்குள் தேய்த்து கண்களின் கீழும் இமைகளின் மேற்பரப்பிலும் ஒரு கோடு போடுவர் சில சமயம் கோடு போடும் போது இலேசாக கண்களுக்குள்ளும் சுர்மா தூள் சிதறி விழும் கண்கள் எறிந்து பின்னர் குளிர்ச்சியாக இருக்கும். சுர்மா இடுவது கண்ணுக்கு குளிர்ச்சி .

அந்த காலத்தில் பெரு நாட்களில் பள்ளிவாசல்களில் சில சுர்மா வியாபாரிகள் எல்லூருக்கும் கண்களில் சுருமாவிட்டு விடுவார்கள் பெருநாள் தொழுகை தொழப்போ னவர்கள் ஒவ்வொருவரும் வீடு திரும்பும்போது அவர்களின் கண்கள் எடுப்பாக காட்கியளிக்கும் அதை கானு துணைவியாருக்கோ அளவிலா மகிழ்ச்சியில் துணைவியாரிடமிருந்து கிடைக்க வேண்டியவை அதிகமாகவே கிடைக்கும் இப்பொழுதெல்லாம்  எங்கே ம்.. ஹூம் அந்த சுர்மா வியாபாரிகளை பார்க்கவே முடிவதில்லை

இஸ்மித் என்ற   (கருப்பு) கற்களால் சுர்மா இடுங்கள் அது பார்வையை கூர்மையாக்கும் இமைகளின் முடியை வளரசெய்யும்  என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்  என அறிவிக்கும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள்   (நபி ஸல்) அவர்களிடம் சுர்மாகூடு ஒன்று இருந்தது ஒவ்வொரு இரவிலும் இருகண்களிலும் மூன்று தடவை இட்டுக்கொள்வர்கள் என்றும் அறிவித்தார்கள்  நூல் :திர்மிதி 1757

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: எவர் சுருமா தீட்டுகிறாரோ அவர் ஒற்றைப்படையாக தீட்டுவாராக. எவர் (அவ்வாறு) செய்தாரோ அவர் நல்லதை செய்தவராவார்! எவர் (அவ்வாறு) செய்யவில்லையோ அதனால் தவறில்லை. 

கண்களுக்கு சுர்மா இடுவதினால் கண்பார்வையை கூர்மையக்குவதோடு கண் இமை முடிகளையும் வளரசெய்கிறது என்றும் மேலும் நபி (ஸல் ) அவர்களின் காலத்தில் கண்வலிக்கும் கண் நோய்களுக்கும் மருந்தாக இந்த சுர்மா பயன்பட்டிருக்கிறது

இஸ்லாமிய பார்வையில் முதல் தரமான சுர்மா

நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்தபோது, அவருடைய இறைவன் அவரிடம் பேசினான்; அப்போது மூஸா: ‘என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக!’ என்று வேண்டினார். அதற்கு அவன், ‘மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது. எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!’ என்று கூறினான். ஆகவே, அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியை தோற்றுவித்தபோது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், ‘(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்; ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்” (அல்குர்ஆன்: 7:143)

அன்று கருகிய சினாய் மலை   எகிப்தின்  சினாய் குடாவிலுள்ள ஒரு மலையாகும். இது கடல் மட்டத்திலிருந்து 2,285 [மீற்றர்] உயரமானதாகும். சூழவுள்ள சமவெளியிலிருந்து செங்குத்தாக உயர்ந்து காணப்படுகிறது. இந்த மலையிலிருந்து பெறப்பட்ட  கருகிய கற்களையும்   தூள்களை கொண்டும்  யுனானி முறையில் கற்களை மருத்துவ முறையில் தேய்த்து எடுக்கப்பட்டு சுத்தமான முறையில் சுர்மா தயாரிக்கப்படுகிறது இதுவே அன்றைய அரபியர்கள் பயன் படுத்திய முதன்மை தரம் வாய்ந்தவையாகும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது இந்த தயாரிப்பின்                         

மருத்துவ பயன்கள்  ஒவ்வாமை இமைப்படல அழற்சி மற்றும் கண்களை குளிர்விக்கவும் பயன்பட கூடிய ஒரு மருத்துவ  பொருளாக பயன்படுகிறது .

சுர்மா வின் பயன்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும் பொழுது சுர்மா இடுங்கள் அது  கண் பார்வையை கூர்மையாக்கும் என்கிறார்கள் அதுபோலவே இன்றைய ஆராய்ச்சியாளர்கள்  சுர்மாவின் பயன்கள் பற்றி கூறுகையில் சுர்மா தயாரிக்கப் பயன்படும் கலினா சல்பேட்டின் பொதுவான குணம் அசுத்தங்களை சுத்தகரிக்க கூடிய ஒரு தாதுப்பொருள் என்றும் சுத்தமான   சுர்மா இடுவதினால் கண்கள் சுத்தமடைவதுடன் சூரிய கதிர்களால் ஏற்படும் கண் நோய்களையும் போக்கவல்லது கண்நோய்கள் வராமல் தடுக்கும் கண்களுக்கு ஒளியூட்டக் கூடிய ஒரு சிறந்த மருத்துவ பொருள் என்றும் அவர்களது ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்து இருக்கிறர்கள் அரபு நாடுகளிலும் எகிப்திலும் பரவலாக சுர்மா பயன்படுதக் கூடியவர்களின் கண்களில் கண் நோய்கள் இல்லாமல் இருப்பதாகவும்   அறிவித்திருக்கிறார்கள்

இந்த சுர்மா கலினா [ஈயத் தாது]  galena (lead sulfide) மற்றும் சில கூட்டுப்பொருட்களைக்கொண்டு  தயாரிக்கப்படுகிறது ஆரம்பகாலம்  முதல் எகிப்தில் செங்கடலுக்கு அருகில் வெட்டியெடுக்கப்பட்ட Galena  சினாய் மலையில் கிடைக்ககூடிய Galena கொண்டும்  தயாரிக்கப்பட்டு வந்தது  இன்று சிலசமயங்களில் எகிப்து கிராமபுறங்களில்  சில வெள்ளை கார்பனேட், குங்கிலியம் கொண்ட வாசனை பொருட்கள்  சூரியகாந்தி விதைகள் மற்றும் பாதாம் கிளிஞ்சல்களின் புகைக்கரி,ஆகியவற்றின் மூலமும்  தயாரிக்கப்படுகிறது.  இந்தியாவில் ஆயுர்வேத , சித்த மருத்துவத்திலும் சுர்மா தயரிப்பினயும் சுர்மாவின் பயன்களையும் காணமுடிகிறது இம் மருத்துவத்தில்  சந்தனக்கட்டை,மஞ்சள், கரிசலாங்கண்ணி ,ஆமணக்கு எண்ணெய்.  சுத்தமான நெய்  கொண்டு பலவிதமான  பதப்படுத்தி எரியூட்ப்பட்ட புகைகரி மூலம் சுர்மா தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது .

சுர்மா என்பது மிகவும் பழமை வாய்ந்த ஒரு கண்மருத்துவ மற்றும் அலங்கார பொருள் என்றாலும் அலங்காரத்தை விட கண் மருத்துவமே மேலோங்கி இருப்பதை நாம் பார்க்கிறோம் பண்டைய எகிப்தியர்கள் அவர்களின் பாரம்பரிய விசயமாக இதனை கருதினார்கள்  மேற்கு ஆப்ரிக்கா பகுதிகளில்  ஆண்களும் பெண்களும் பயன்படுத்துகிறார்கள் .இந்தியாவில் அதிகமாக பெண்களே பயன் படுதக்க்கூடியவர்களாக இருக்கிறார்கள்

நாம் இடும் சுர்மா முக்கியமாக  தரம் வாய்ந்தக இருக்க வேண்டும் ஒருசமயம் நாம் மலிவான விலையிலும் தரமற்ற சுர்மாவினை இடும் பொழுது அதனுடைய விளைவு மிக பயங்கரமானதாக  இருக்கும் என்று  அறிவியல் ஆய்வாளர்களும் .. ஆராய்ச்சியாளர்களும் மிகவும் வலியுறுத்தி கூறுகிறார்கள்  கலினா அல்லாத சில ததுப்போருட்களின் மூலம் தயாரிக்கபடும்  சுர்மா பயன்படுத்துவதினால் போதை மற்றும்  இரத்த சோகை  கண்நோய்கள் மற்றும் இதன் மூலம் உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் …

பண்டைய கால எகிப்தியர்களின்  சினாய் மலையிலிருந்து பெறப்பட்ட  கருகிய கற்களையும்   தூள்களை கொண்டும்  யுனானி முறை தயாரிப்பான சுர்மா முதல் தரமாக இருக்கிறது எகிப்தியர்களின்சுர்மா  இடுவதினால் கண்களுக்கு எந்த தீங்கும் இல்லை எனவும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள் .. 

ஒரு பெண்ணின் கணவர் இறந்து விட்டார். ('இத்தா'வில் இருந்த அவளுடைய கண்ணில் வலி ஏற்பட்டதால்) அவளின் கண்கள் குறித்து அவ(ளுடைய உறவின)ர்கள் அஞ்சினர். எனவே, அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அப்பெண் அஞ்சனம் (சுர்மா) இட்டுக்கொள்ள அனுமதி கேட்டனர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அவள் அஞ்சனம் இடவேண்டாம். (அறியாமைக் காலத்தில் கணவன் இறந்தபின்) மனைவி அவளுடைய 'ஆடைகளிலேயே மோசமானதில்' அல்லது 'மோசமான வீட்டில்' தங்கியிருப்பாள். (கணவர் இறந்து) ஒருவருடம் கழிந்து விட்டால் (அவ்வழியாகக்) கடந்து செல்லும் ஏதேனும் ஒரு நாய் மீது ஒட்டகச் சாணத்தை அவள் வீசியெறிவாள். (அந்த அவலம் இப்போது இல்லை.) எனவே, அவள் நான்கு மாதம் பத்து நாள்கள் கழியும் வரை அஞ்சனம் இட வேண்டாம்' என்று கூறினார்கள். அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) (நூல்கள் - புகாரி 5336, 5338, முஸ்லிம் 2975-2977, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ)

கண்களுக்கு சுர்மா இடுவது பார்வையைக் கூர்மையாக்குவதோடு இமைகளின் முடியை வளரச்செய்யும் என்றும்  மேலும், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கண் வலிக்கு மருந்தாகவும் சுர்மா பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் மேல்கண்ட அறிவிப்புகளிலிருந்து அறியலாம்.

நபி (ஸல்) அவர்கள் தமது மேனியை பராமரிப்பதற்காக பிரத்தியேக ஏதும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார் என அறிவிப்புகள் எவற்றையும் நாமறியவில்லை.

இங்கே குறுப்பிடப்பட்டுள்ள சில கம்பனிகளின் தயாரிப்புகள் பயன்படுத்துபவர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக அறிவிக்கப்பட்டுள்ளது சிறந்த சுர்மா இட்டு சுன்னாவினை பேண அல்லாஹ் அருள் புரிவானாக நபிகளாரின் மருத்துவத்தில் சுர்மா இடுவது பற்றி நபிகளாரின் தோழர்கள் மூலம் நாம் அறிய முடிகிறது இறைதூதராக அனுப்பப்பட்ட நமது கண்மணி நாயகம் ஸல் அவர்களின் வாக்கினை மெய்ப்பிக்கும் வண்ணமாக அவர்கள் காட்டித்தந்த அனைத்திலும் நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது …. சுபுஹகாணல்லாஹ்..

சுர்மா பற்றிய அணைத்து தகவல்களும் நன்றியுடன் பிரபஞ்சகுடில் என்ற தளத்திலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது

இனி அடுத்த தொடரில் கண் இல்லாதோரின் கல்வி பற்றி தொடரும்

(வளரும்)

அதிரை மன்சூர்

என் இதயத்தில் இறைத்தூதர் ! - 8 - விட்டுக் கொடுத்தல் 6

அதிரைநிருபர் பதிப்பகம் | April 27, 2014 | ,

விட்டுக் கொடுத்தல்

குவைத் நாட்டின் ஒரு சூப்பர் மார்க்கெட், வழக்கம் போல, பணியைத் தொடங்கிவிட்ட அவனுக்கு சூப்பர் மார்க்கெட்டின் Biscuit Sectionல் வேலை, காலையில் வந்திறங்கும் பல நாடுகளின் பிஸ்கெட்டுகளை, இடம் தேர்வு செய்து, டிஸ்ப்ளே, சேல்ஸ் கவுண்டர் சர்வீஸ் என்பது அவன் வேலை.

அரபு நாடே அவனுக்கு புதிது என்பதால், ஃபீ - மாஃபீ வை வைத்து சமாளித்துக் கொண்டிருந்தான். ஆங்கிலம் தெரிந்த குவைத்திகளும் நிறைய பேர் இருந்தனர்.

ஒருநாள், வழக்கம் போல அங்கு வேலை செய்பவர்களுடன் பல்வேறு கம்பெனிகளிலும் உள்ள representativeகளும் தங்கள் கம்பெனியின் பொருட்களை அறிமுகப் படுத்தியும், displayக்கு உதவியும் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் பெரும்பான்மையோர் எகிப்து நாட்டவர்கள்தான்.

ஒரு நாள், இரு கம்பெனிகளின் repகளுக்கும் திடீரென வாக்குவாதம்,யாருடைய கம்பெனியின் பொருட்களை எங்கு வைப்பது என்று.வாக்குவாதம் அதிகரிக்க,கஸ்டமர்கள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

இருவரும் மிஸ்ரிகள். அந்த ஊர் பாஷையில் அதிகமாக ஜீம் போட்டுக் கத்த, அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அரபியும் தெரியாது. அதிலும், மிஸ்ரி அரபி என்றால் சும்மாவா ? ஒன்னும் விளங்கள. கையை மட்டுமே பிசைய முடிந்தது. ஒரு ஹிந்தியால் என்ன செய்ய இயலும் !?

சத்தம் பெரிதாகவும், பக்கத்து selfல் வேலையாக இருந்த மிஸ்ரி ஓடி வந்தார். இருவரையும் அருகில் அழைத்து ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார், "சல்லு அலன் நபி" என்று. என்ன ஆச்சரியம், அந்த கிர் கிர் வாஜித் கர்ஜித்துக் கொண்டிருந்த இரு மிஸ்ரிகளும், உடனே சண்டையை நிறுத்தி விட்டனர். அது மட்டுமல்ல, இரண்டு பேரும் கொஞ்சம் சத்தமாக, இறைவனின் இறுதித் தூதர் மீது சலவாத் சொல்ல ஆரம்பித்தனர். பிறகு கைலாகு செய்து விட்டு, அங்கிருந்து மாலிஷ் பண்ணிக் கொண்டு, அந்த இடத்தை விட்டு அகன்று விட்டனர்.சண்டை நின்றது, சமாதானம் ஆனது.


அதைப் பார்த்த அவனுக்கு ஆச்சரியம், ஆனந்தம், நபி (ஸல்) அவர்களின் மேல் உள்ள அம்மக்களின் பாசமும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மரணித்து விடாலும், அவர்கள் முன்மாதிரியாக காட்டிய எதுவும் மரணிக்க வில்லை. இறைவன் இப்பேறு பெற்ற தூதரின் உம்மத்தில் நம்மையும்  படைத்தானே என்ற மிகப் பெரும் சந்தோஷம் மேலிட அவன் கண்கள் பனித்து விட்டன.

அந்த தூதர் மீது, நாமும் அதிகமதிகம் சலவாத் சொல்வோமா?

இன்ஷா அல்லாஹ் தொடரும் !

இப்னு அப்துல் ரஜாக்

எண்ணிலடங்கா இஸ்லாமிய தியாகிகள் - மெளலானா முகமது ஜாபர் தானீசரி! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | April 26, 2014 | ,

தொடர் - 23
அம்பாலா !

ஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்த ஊர் பல வரலாற்றுச் சம்பவங்களுக்கு சொந்தமானது. இவற்றுள் சில வெறுப்புகளும் சில சிறப்புகளும் உள்ளன. அவற்றுள் ஒன்று , இஸ்லாமிய மெளலானாக்களையும் மார்க்க அறிஞர்களையும் அடக்க நினைத்த ஆங்கில அரசு அவர்கள் மேல் புனையப்பட்ட பொய் வழக்குகளைப் போட்டதுமாகும். அத்தகைய வழக்கால் பாதிக்கப் பட்ட ஒரு வீரத் தியாகியின் வரலாற்றின் பக்கங்களைப் பகிரும் முன்பு இந்த அம்பாலாவில் உள்ள சிறையைப் பற்றிய ஒரு சிறப்பை சொல்லிவிட மகிழ்வுடன் மனம் துடிக்கிறது. ஆம்! இந்தியாவில் எந்த சிறைக்கும் கிடைக்காத சிறப்பு இந்த சிறைக்குக் கிடைத்தது. தேசத்தந்தை- மகாத்மா காந்தியை ஒரு முஸ்லிம் போல் வேடமிட்டு தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு கொடூரமாக சுட்டுக் கொன்ற கோட்சேயை தூக்கிலிட்டு அவன் பிணத்தை தொங்கவிட்ட பெரும்பேறு இந்த அம்பாலா சிறைக்குத்தான் கிடைத்தது. 

சதி வழக்குகளும் அவதூறு வழக்குகளும் பொய்வழக்குகளும் புனையப்பட்ட வழக்குகளும் இன்றைய அரசியலில் மட்டும்தான் என்று இல்லை. அன்றைய அரசியலிலும் இருந்தன. அன்று இத்தகைய வழக்குகளை வெள்ளைக்காரன் போட்டான்; இன்று இந்த வழக்குகளை சொந்தக்காரன் போடுகிறான். ஆக, ஆட்சி அதிகாரம் இருந்தால் ஆணவம் பிடித்து அலையும் கூட்டம் அன்று மட்டுமல்ல இன்றும் இருக்கின்றன.

இந்திய சுதந்திர வரலாற்றில் "அம்பாலா சதி வழக்கு" என்ற ஆங்கிலேயரால் சதிவலை பின்னப்பட்ட வழக்கொன்று உண்டு. இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்கள் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களாவார்கள். இந்த மார்க்க அறிஞர்கள் லக்னோ, அலிகர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்தவர்கள். இவர்களுள் மெளலானா முகமது ஜாபர் தானீசரி, மெளலானா யஹ்யா அலி, முகமது ஷாபி லாஹூரி ஆகியோர்களாவார்கள். இவர்களுள் மெளலானா முகமது ஜாபர் தானீசரி அவர்கள் எழுதி வைத்த நாட்குறிப்பின் ஏடுகள் நமது நரம்புகளைப் புடைக்கச் செய்யும் சில செய்திகளை நமக்குச் சொல்கின்றன. தம்முடைய சொந்த வார்த்தைகளால் மெளலானா அவர்கள் வடித்துத்தரும் வரலாற்றின் வடுக்களையும் அவர்கள் அனுபவித்த வலிகளையும் இன்று இங்கு பகிர்வோம்.

இதோ மெளலானா தானீசரி அவர்களின் நாட்குறிப்பு நம்மோடு பேசுகிறது :-

“என் கை கால்களில் விலங்கிடப்பட்டேன். கழுத்தில் ஒரு கனத்த இரும்பு வளையம் மாட்டப்பட்டு , அதை ஒரு சங்கிலியால் பிணைத்து அதன் நுனியை ஒரு காக்கி உடை அணிந்த காவலன் தந்து கையால் பிடித்து இருந்தான். கால்நடைகள் போல நாங்கள் கட்டி இழுத்துவரப் பட்டோம். எனக்கு வலப்புறமும் இடப்புறமும் காவல்துறையின் உயர் அதிகாரியான பார்ஸனும் இன்னொருவனும் அமர்ந்திருந்தார்கள். அவர்களின் கரங்களில் கைத்துப்பாக்கிகள்! நான் அசைந்தாலும் என்னைச் சுட்டு எனது உடம்பை சல்லடையாக்கும் சக்திபடைத்த கைத்துப்பாக்கிகள். அலிகாரில் எங்களை ஏற்றிக் கொண்டு டில்லி நோக்கிப் புறப்பட்ட அந்த காவல்துறை வேன் வழியில் எங்குமே நிறுத்தப்படவில்லை. எனக்கு உணவோ, குடிக்கத் தண்ணீரோ தரப்படவில்லை. சிறுநீர் கழிப்பதற்கும் அவர்கள் விடவில்லை. ஆனால் தொழுகை நேரம் வரும்போதெல்லாம் உடனிருந்த அதிகாரிகளின் அனுமதி இல்லாமலேயே “ தயம்மம்” செய்து கொண்டு உட்கார்ந்த நிலையிலேயே தொழுது எனது இறைவனை வணங்கிக் கொண்டேன். எனது இந்தச் செயலை யாரும் தடுக்க முற்படவில்லை. 

டில்லியின் உயர் அதிகாரியின் அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டேன். அங்கிருந்த ஒரு இருண்ட சுரங்க அறையில் அடைக்கப்பட்டேன். மறுநாள் டில்லியில் இருந்து முதலில் கர்நாளுக்கும் அதன்பின் அம்பாலாவுக்கும் என்னைக் கொண்டு சென்றனர். அம்பாலாவில் தூக்கு மரம் ஊன்றி நடப்பட்டிருந்த அறையில் உண்ண உணவின்றி அடைக்கப்பட்டேன். பின்னர் , அளவு குறைந்த உணவு தரப்பட்டேன். இதே நிலையில் 1863 டிசம்பர் முதல் 1864 ஏப்ரல் வரை ஐந்து மாதங்கள் அடைக்கப்பட்டுக் கிடந்தேன். அப்போது நான் அடைக்கபப்ட்டதாக அல்ல புதைக்கப்பட்டதாகவே உணர்ந்தேன்.

இடையில் புனித ரமலான் மாதம் வந்தது. நான் நோன்பு பிடிக்கத் தொடங்கினேன். அந்த நிலையில் என்னைத் தனி அறையில் வைத்து நாங்கள் செய்த சதியின் திட்டங்கள் என்ன – அதில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்று விசாரித்தார்கள். நான் உண்மைகளைச் சொன்னால் விலங்குகளைக் கழற்றி விடுவித்துவிடுவதாக ஆசை காட்டினார்கள். நான் வாய் திறக்காவிட்டால் தூக்கில் இடுவோமென்று மிரட்டினார்கள். நான் எதற்கும் வாய் திறக்கவில்லை. 

இந்த நிலையில் பார்ஸன் என்கிற உயர் அதிகாரி என்னை அடித்தான். காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணிவரை என் மீது விழுந்த அடிகள் உலகில் மற்ற எவர் மீதும் விழுந்து இருக்குமா என்பது கேள்விக்குறி. இந்த மாதிரி சோதனையான நேரங்களில் அவற்றைத் தாங்கும் வல்லமையை வழங்கும்படி எனது இறைவனிடம் துஆச் செய்து கொள்வேன். அவ்வளவு அடிகளையும் நோன்பு பிடித்துக் கொண்டே தாங்கிக் கொள்ளும் வல்லமையை அந்த வல்லவன் வழங்கினான். நோன்பு திறப்பதற்கு மரங்களின் இலைகளைக் கூடப் பறித்துத் தின்னும் நிலமைகளெல்லாம் ஏற்பட்டன. 

நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்ட போது நீதிபதி என்னை நோக்கி, "நீ உனது மார்க்க அறிவை தெளிவாக ஓதிப் படித்து இருக்கிறாய். எனது கண்களுக்கு அறிவாளியாகவும் கல்வியாளராகவும் தென்படுகிறாய். ஆனாலும் உனது அறிவையும் ஆற்றலையும் ஆங்கில அரசுக்கு எதிராக இயங்க பயன்படுத்தினாய். இந்த அரசின் எதிரிகள் என்று கருதப் படுபவர்களுக்கு பணமும் படையும் உணவும் கிடைப்பதற்கு உதவி செய்து அவர்களுக்கு ஊக்கமூட்டினாய். பலமுறை விசாரித்தும் அதன் உண்மை விபரங்களை வெளியிடவும் மறுத்துவிட்டு உண்மைகளை ஒப்புக் கொண்டு ஒத்துழைப்பும் தரவில்லை. ஆகவே,
  • உனக்கு தூக்கு தண்டனை வழங்குகிறேன் ; 
  • உனது அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிடுகிறேன் ;
  • உனது உடல் கூட உனது சொந்தக்காரர்களிடம் தரப்படாமல் இறுதிக் காரியங்கள் செய்யவும் உத்தரவிடுகிறேன்"

என்று கடுமையானதும் கொடுமையானதுமான தீர்ப்பை வழங்கினார். 

நீதிமன்றத்தில் கூடி இருந்த எனது உறவினர்களும் நண்பர்களும் இந்த தீர்ப்பைக் கேட்டு கதறி அழுதனர். ஆனால் எனக்கோ, எனது இறைவன் எனது நாட்டுக்காக நான் செய்யும் தியாகத்துக்குப் பரிசாக தனது சொர்க்கத்தின் கதவைத் திறந்ததாகவே உணர்ந்தேன். அந்த சொர்க்கம் எனது கண்முன் நிழலாடியது. அதனால் எனது மனம் மகிழ்ந்ததை உணர்ந்தேன். 

எனக்கு மரண தண்டனை வழங்கப் பட்டதற்குப் பிறகு சிறைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள், “அழவேண்டிய நீ ஆனந்தப்படுகிறாயே!” என்று ஆச்சரியத்துடன் கேட்டனர். அதற்கு நான் ‘ஷஹாதத்’ என்கிற உயிர்த் தியாகம் செய்யும் பெரும் பேறு எனக்குக் கிடைக்கிறது என்ற நிலைமை என்னை மகிழ்ச் செய்துவிட்டது என்று பதில் அளித்தேன். 

தூக்கில் இடப்படும் நாளை, நானும் எனது நண்பர்களும் எதிர்பார்த்து இருந்த இடைப்பட்ட நாட்களில் எங்களுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி மாரடைப்பால் மாண்டு போனான் என்கிற செய்தியையும் என்னை கடுமையாகவும் கொடுமையாகவும் அடித்து சித்ரவதை செய்த பார்ஸன் என்கிற அதிகாரிக்கு பைத்தியம் பிடித்ததாகவும் கேள்விப்பட்டோம். அல்லாஹ்வே அனைத்தும் அறிந்த பெரியவன். 

அப்போது அல்லாஹ் இன்னொரு மாற்றத்தை எங்கள் வாழ்வில் ஏற்படுத்தினான். 1844ஆம் வருடம் செப்டம்பர் 16 ஆம் தேதி அம்பாலா சிறைகூடத்தின் தலைவர், நாங்கள் அடைபட்டுக் கிடந்த அறைக்கு வந்து, “நீங்கள் தூக்கு தண்டனையை வரவேற்று மகிழ்கிறீர்கள். அது உங்களின் இறைவனின் பரிசு என்று எண்ணுகிறீர்கள். உங்களை அப்படிப்பட்ட மகிழும் நிலையில் வைக்க இந்த அரசு விரும்பவில்லை ஆகவே உங்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகிறது” என்று சொன்னான். இறைவன் தரும் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் எங்களிடம் இருந்ததால் இதையும் ஏற்றுக் கொண்டோம். பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் இறைவனிடம் உதவி தேடினோம். 

அத்தோடு எங்களை அந்தமான் தீவில் இருந்த செல்லுலார் சிறைக்கு இட மாற்றம் செய்தார்கள். அந்த சிறைச்சாலையின் சட்டப்படி எங்களின் தாடி, மீசை மற்றும் தலை முடிகள் மழித்து சிரைக்கப்பட்டன. அப்போதுதான் எங்களுக்கு முதன்முதலில் கண்ணீர் வந்தது. எங்களில் மெளலானா யஹ்யா அலி அவர்கள் துண்டிக்கப்பட்டு தரையில் வீசப்பட்ட தாடியின் முடிகளைக் கைகளில் எடுத்துக் கொண்டு இந்த நாட்டின் சுதந்திரத்துக்கான அல்லாஹ்வின் பாதை என்று நாங்கள் தேர்ந்தெடுத்த பாதையின் வழியில் நீயும் பிடிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டாயா? என்று கேட்டு கண்ணீர் வடித்துக் கதறினார். “

இப்படி நம்மிடம் பேசிய மெளலானா தானீசரி அவர்களின் நாட்குறிப்பு அவர்களின் தியாகத்தின் ஒவ்வொரு நிலைகளையும் நம்மை நினைக்கச் சொல்லி நம்மை கண்ணீர் வடிக்க வைக்கிறது. 

நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தை அல்லாஹ்வின் பாதையின் போராடும் தூய போராட்டமாகவே மார்க்கம் படித்த அறிஞர்கள் கருதினார்கள் என்பதை மெளலானா தானீசரி அவர்களின் வரலாறு அவரது வார்த்தைகளிலேயே நமக்குச் சொல்கிறது. 

இன்ஷா அல்லாஹ் இந்தத் தொடர் விரைவில் நிறைவுறும்.

இபுராஹீம் அன்சாரி
==================================================================
எழுத உதவியவை:- 
வேலூர் அல்-பாகியாத் நூற்றாண்டு விழா மலர். 
பேராசிரியர் மு அப்துல் சமது அவர்களின் “தியாகத்தின் நிறம் பச்சை.”

அதிரையில் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2014 12

அதிரைநிருபர் பதிப்பகம் | April 25, 2014 | , , , , ,

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால் !

அதிரை தாருத் தவ்ஹீத், அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (கடற்கரைத் தெரு), இஸ்லாமிய பயிற்சி மையம் (பிலால் நகர்), ஏ.எல்.எம்.மெட்ரிகுலேஷன் பள்ளி (சி.எம்.பி.லேன்).

இணைந்து வழங்கும், குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் !

கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2014

மே மாதம் 3 முதல் 15 வரை (வெள்ளிக் கிழமை தவிர)

பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளாக...

தொலைவிலிருந்து வரும் மாணவர்களுக்குத் தனியாகவும், மாணவியர் & குடும்பத் தலைவியருக்குத் தனியாகவும் வரப் போக வாகன வசதி (இலவசமாக)!

மின்வெட்டின் பாதிப்பின்றி பயிற்சி முகாம்களில் ஜெனெரேட்டர் வசதி!

அகலத்திரை - ப்ராஜக்டரில் பாடங்கள் !

போட்டிகளில் பங்கு கொண்டு வெல்லும் மாணவ-மாணவியருக்குப் பரிசுகள் !

பதிவுக்கு முந்துங்கள் ! 

விண்ணப்பப் படிவம் தரவிறக்கம் (PDF-File) செய்து கொள்ள இங்கே சொடுக்கவும் [Download], மேலும் டிஜிடல் விண்ணப்ப படிவத்திலேயே டைப் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

இன்முகத்துடன் வரவேற்கிறது !

  அதிரைதாருத் தவ்ஹீத்  


அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 66 3

அதிரைநிருபர் பதிப்பகம் | April 25, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

பல் துலக்குவதின் சிறப்பு, மற்றும் இயற்கை நடைமுறைகள்

''என் சமுதாய – மக்களுக்கு சிரமமாக இருக்கும் என நான் பயப்படவில்லையானால், ஒவ்வொரு தொழுகையின் போதும் பல்துலக்கும் படி அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன் என்று நபி (ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1196)

''நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்தால், பல்துலக்கும் குச்சியால் பல் துலக்குவார்கள்.  (அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1197)

''நபி(ஸல்) அவர்களுக்காக அவர்கள் பல் துலக்கவும், அவர்கள் உளுச்செய்யவும் நாங்கள் தண்ணீரை தயாராக எடுத்து வைத்திருப்போம். இரவில் அவர்களை எழுப்பி நல்வணக்கம் புரிய, தான்  நாடியபடி அல்லாஹ் அவர்களை எழுப்புவான் (எழுந்தவுடனே) நபி (ஸல்) அவர்கள் பல் துலக்குவார்கள். உளுச் செய்வார்கள். தொழுவார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1198)

''பல் துலக்குவது, வாயை சுத்தப்படுத்தும். இறைவனை திருப்திபடுத்தும்'  என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (நஸயீ, இப்னு குஸைமா) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1202)

இயற்கை செயல்கள் ஐந்தாகும்.

1.'கத்னா' செய்தல், 2. மறைவுறுப்பு முடியை நீக்குதல், 3. நகங்களை வெட்டுவது, 4. 'அக்குள்' முடிகளை நீக்குவது, 5. மீசையை குறைப்பது என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)     (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1203)

ஜகாத்தின் கட்டாயம்.
அதன் சிறப்பு மற்றும் அது சம்பந்தப்பட்டவை

அல்லாஹ் கூறுகிறான் :
தொழுகையைப் பேணுங்கள், ஜகாத் கொடுங்கள். (அல்குர்ஆன்: 2:43)

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகைய நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம். (அல்குர்ஆன்: 98:5)

(முஹம்மதே) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! (அல்குர்ஆன்: 9:103)

''இஸ்லாம், ஐந்தின் மீது எழுப்பப்பட்டுள்ளது 1) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள், அவனது அடியார் மற்றும் அவனது தூதர் என்றும் சான்று பகர்வது 2) தொழுகையைப் பேணுவது 3) ஜகாத் கொடுப்பது 4)ஹஜ் செய்வது 5) ரமளானில் நோன்பு நோற்பது என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1206)

''பரட்டைத் தலையுடன் ''நஜ்து'' பகுதியில் இருந்து ஒருவர், நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவரின் சப்தத்தை குறைந்ததாக கேட்டோம். அவர் சொல்வது என்ன என நாங்கள் விளங்க முடியவில்லை. நபி(ஸல்) அவர்களிடம் நெருங்கினார். உடனே இஸ்லாம் பற்றிக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''ஒருநாள் முழுதும் ஐந்து நேரத் தொழுகைகள்'' என்று கூறினார்கள். ''இவை அல்லாதவை என் மீது கடமையா?'' என்றார். ''இல்லை, ஆனால் உபரியான (நபிலான) வணக்கங்கள் உண்டு'' என்று பதில் கூறினார்கள். மேலும் ''ரமளான் மாதம் நோன்பு வைப்பது'' என்று நபி(ஸல்) கூறியதும், ''இது அல்லாதவை என் மீது கடமையா?'' என்று கேட்டார். ''இல்லை, ஆனால் உபரியான (நபிலான) நோன்பு உண்டு'' என்று நபி(ஸல்) கூறிவிட்டு, ''ஜகாத் வழங்குவது கடமை''  என அவரிடம் கூறினார்கள். ''இது அல்லாதவை என் மீது  கடமையா?'' என்று வந்தவர் கேட்டவர். ''இல்லை, ஆனால் உபரியான (தர்மம்) உண்டு'' என்று கூறினார்கள். ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இதை விட நான் அதிகமாக்கவும் மாட்டேன். குறைக்கவும் மாட்டேன்'' என்று கூறிக்கொண்டே   அந்த மனிதர் திரும்பிச் சென்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் ''அவர் உண்மையாக நடந்து கொண்டால் வெற்றி பெற்றுவிட்டார்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: தல்ஹா இப்னு உபைதுல்லா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1207)

''சொர்க்கத்தில் என்னை நுழையச் செய்யும் செயலை எனக்குக் கூறுங்கள்''  என ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். ''நீர் அல்லாஹ்வை வணங்குவீராக! அவனுக்கு எதையும் இணைவைக்காதீர்! ஐந்து நேரத் தொழுகையை நிறைவேற்றுவீராக! ஜகாத்தைக் கொடுப்பீராக! உறவினர்களை ஆதரிப்பீராக! (இதன் மூலம் சுவனம் செல்வீர்)'' என்று நபி(ஸல்) பதில் அளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1211 )

ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''இறைத்தூதர் அவர்களே! சுவனத்திற்குச் செல்லத்தக்க ஒரு நற்செயலை எனக்கு அறிவித்து (கற்று)த் தாருங்கள்!'' என்று கேட்டுக்கொண்டார். அப்போது ''அல்லாஹ்வை வணங்குவீராக! எதையும் அவனுக்கு இணைவைக்காதீர்! தொழுகையைப் பேணுவீராக. கடமையான ஜகாத்தைக் கொடுப்பீராக! ரமளானில் நோன்பு வைப்பீராக!'' என்று கூறினார்கள். ''என் உயிரை கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! இதை விட நான் அதிகமாக்கமாட்டேன்!'' என்று அவர் கூறினார்.  அவர் புறப்பட்டதும், ''சொர்க்கத்தில் உள்ள ஒருவரை பார்க்க ஆசைப்படுபவர், இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்! என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1212 )

''தொழுகையைப பேணவும், ஜகாத்தை வழங்கவும், அனைத்து முஸ்லிம்களுக்கும் நல்லதை நாடவும் நான் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தேன். (அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)  ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1213 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் S.

(சமூக) எல்லை தாண்டும் பயங்கரவாதிகள் ! 5

அதிரைநிருபர் | April 24, 2014 | , , , ,

அன்பான வாசக நேசங்களே,

சகோதர வலைத்தளத்தில் வெளியான இந்த பதிவு நம் அதிரைநிருரில் கடந்த 10-06-2011 அன்று பதிக்கப்பட்டது, அதனை இங்கு மீள்பதிவு செய்கிறோம். நமதூர் நிகழ்வுகளை மையமாக வைத்து சமூக அக்கறையுடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளது, பயனுள்ள கருத்துபரிமாற்றம் செய்து, சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
  அதிரைநிருபர் பதிப்பகம்  

சில நிகழ்வுகளைக் கேள்விப்படும்போது நமதூர் இளம் தலைமுறை மீதான அச்சமும்நமது பொறுப்பற்ற தன்மையையும் நினைத்தால் எழும் ஆதங்கத்தை யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை.

"
கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடிப்போகலாமா?இல்லே ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா?"என்ற சமூக விரோத சினிமா பாடல்வரிகளுள் ஒளிந்து இருக்கும் கலாச்சாரச் சீரழிவு எத்தனை பேரின் கவனத்தை ஈர்த்திருக்கும் என்று தெரியவில்லை. சொல்ல வரும் விசயம் இந்தப்பாடல் வரிகள் குறித்தல்ல.இந்த அவலங்கள் நமதூரில், நமது சமகாலத்தில் நம் கண்முன்னே, அடிக்கடி நடந்தேறி வருகின்றன என்பதைப் பற்றிய கவலையும் இதைக்களைவதற்கான வழிவகைகள் யாவை? என்பதைக் கண்டறிய வேண்டும் என்ற அக்கறையும் இப்பதிவின் கருவாகும்.


தயவு செய்து இவ்விசத்தை ஒரு குடும்பத்தோடோ அல்லது தனிநபருடனோ தொடர்பு படுத்திப் பார்க்காமல்ஊர்நலன் சார்ந்த சமூக அக்கறையுடன் கூடிய விசயமாகக் கருதவும்.

நமதூரில் அங்கொன்றும் இங்கொன்றுமாகமிகச்சில 'ஓடுகாலி'களைப் பற்றிய நிகழ்வுகள் நடந்தேறியது. மாமாங்கத்திற்கு ஒன்று அல்லது இரண்டு என்று அரிதினும் அரிதாக நடந்த இந்த அவலம், தற்போது மாதம் ஒன்று என்ற அளவில் அதிகரித்துள்ளது சற்று கவலை தரக்கூடிய விசயம்.

'
ஓடிப் போகும்' நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் எல்லாம் திருமணம் தாமதமான முதிர்கன்னிகளோவறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளவர்களோ அல்லர். திருமணம் நிச்சயிக்கப்பட்டவர் முதல் வசதியான கணவருடன் சில வருடங்கள் வாழ்ந்து இல்லற இன்பத்தைச் சுவைத்தவர்களும் உள்ளனர் என்பதிலிருந்து நம்மையறியாமல் எங்கோ தவறு நிகழ்ந்துள்ளதுகடந்த 20-30 ஆண்டுகளாக இக்கொடுமை நடந்துவந்தாலும் அவற்றிலிருந்து நாம் படிப்பினை பெறவில்லை. இத்தகைய நிகழ்வுகளால் குடும்ப உறவுகளில் ஏற்படும் தீவிரத்தையும் பின்விளைவுகளையும் பற்றி நாம் உணரவில்லையே என்பது வருத்தம் தருகிறது.


முந்தைய ஓடுகாலிகளின் பின்னணியில் முஸ்லிம் அல்லாதவர்களே இருந்ததை வைத்துப் பார்க்கும்போதுமுஸ்லிம்களைக் கருவறுக்கும் பாசிச சக்திகளின் நீண்டகாலத் திட்டம்நம்தூரில் கொஞ்சம் கொஞ்சமாக நடந்தேறி வருகின்றதோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. (தலித் ஆட்டோ ஓட்டியின் பின்னணியில் நமதூர் RSS இருந்ததும், அதுகுறித்த வழக்கை நடத்தியதும் வெளிப்படையாக அறிந்த விசயம்.) சமீப மாதங்களில் நடந்த சம்பவங்களில் இருதரப்பிலும் முஸ்லிம்களே சம்பந்தப்பட்டுள்ளனர் எனபதால்சாதிமதம் கடந்த ஒருவகை எல்லை தாண்டும் பயங்கரம் நம்மைச் சூழ்ந்துள்ளது தெரிகிறது.

அதிரையில் பன்முக கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் கலந்திருந்த போதிலும் பிறமதப் பெண்ணுடன் முஸ்லிம் ஆண் ஊரைவிட்டே ஓடியதாக ஒரேயொரு சம்பவம்கூட நம் கவனத்தில் வரவில்லை. அப்படி ஓடினாலும்கூட அவரைத் தேடிப்பிடித்து ஆட்கடத்தல் முதல் தீவிரவாத வழக்குகள் வரை புனையப்பட்டுச் சிறையிலடைக்கப்படுவர் என்பது வேறு விசயம்அறிஞர்களும் கல்வியாளர்களும் நிறைந்துள்ள அதிரையில், நம் சமுதாயத்தின் பெயரை ஒட்டுமொத்தமாகச் சீரழிக்கும் இந்த சட்டமீறல் நடவடிக்கைகளை யாரும் கண்டு கொள்ளவில்லையா? அல்லது அதைவிட முக்கிய விசயங்களில் அவர்கள் மூழ்கியுள்ளனராஇவர்கள் தான் பாராமுகமாக உள்ளார்களெனில், தமிழகத்தின் பெரும்பாலான முஸ்லிம் இயங்கள் அதிரையில் கிளையோ குறைந்தபட்சம் கொடிக்கம்பமோ வைத்துள்ளனர். அவர்களும் இதில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. (ஓடுகாலிகளைத் தேடிப்பிடிக்க இந்த அமைப்புகளின் கிளைகளுக்கு தகவல் கொடுத்தாலே போதும்ஓடிப்போனவர்களை வலை வீசித் தேடும் வேலை பாதி மிச்சமாகும்அரசியல்அதிகார மட்டங்களின் தொடர்பும் இயக்கத்தவர்களுக்கு இருப்பதால் இவர்களுக்குச் சட்ட பாதுகாப்பும் அதிகம்.) 

இவ்வாறு எல்லை தாண்டும் ஓடுகாலிகளிடம் எத்தகையை நியாயங்களும் இருப்பதாகத் தெரியவில்லைஇவர்களின் துர்நடவடிக்கைளால் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்படுகிறது.ரோசப்பட்ட பெற்றோர் ஒருசிலர், ஓடுகாலிக் குற்றவாளிகளை தண்டிக்கவும் முடியாத வகையில் நமது சட்ட நடைமுறைகள், உணர்வுகளையும் கைகளையும் கட்டிப்போட்டுள்ளன.(சமீபத்தில், "கவுரவக் கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்" என்று உச்சநீதி மன்றம் பரிந்துரை செய்தது நினைவிருக்கலாம்.) 

தமது சகோதரி மகள் கல்யாணச் சந்தையில் கண்ணியமாக கரையேற வேண்டும் என்பதற்காக தமது இளமையை அடமானம் வைத்து விட்டு விமானம் ஏறும் எமது சகோதரர்களின் உணர்வுகளையும்குடும்பத்தாரின் கவுரவத்தையும் ஒரு பொருட்டாகக் கருதாமல்திருமண கட்டுப்பாடுகளையும்சமூக கடமைகளையும் புறந்தள்ளி விட்டு, எல்லை தாண்டும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்புதான் என்னஎனக்குத் தெரிந்த சில தீர்வுகளை முன்வைக்கிறேன்.மேலும் அறிந்தவர்கள் தங்கள் பரிந்துரைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்:

1) சமூகக் கட்டுப்பாடுகளை தகர்த்து, தமது சுயநலத்திற்காக ஊரை விட்டு ஓடுபவர்கள், சமூக விரோதிகளாகக் கருதப்பட்டு சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

2) ஓடியவர் திருமணமானவராக இருப்பின் முறையற்ற உறவு, விபச்சாரம், குடும்ப வன்முறை (Domestic Violence) சமூக ஒற்றுமைக்குக்கேடு விளைவித்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின்கீழ் தண்டிக்கப்பட வேண்டும்.

3) ஓடியவர் நகை மற்றும் பணத்துடன் ஓடியிருப்பின் திருட்டு வழக்கிலும் சேர்க்க வேண்டும்.

4) குடும்பத்தார நம்பவைத்து ஏமாற்றி ஓடிச்சென்றதால் நம்பிக்கை மோசடி வழக்கிலும் சேர்க்க வேண்டும்
.


பிடிக்காத கணவரை அடுத்த நிமிடமே குலா எனும் மணவிலக்கு செய்யும் உரிமையையும், விரும்பியவரோடு திருமண வாழ்க்கைப்படுவதற்கு வசதியாக பிடிக்காத வரனுக்கு எதிராக திருமணத்திற்கு முன்னரே மறுப்பு தெரிவிக்கும் உரிமையை மணப்பெண்ணுக்கு மார்க்கம் வழங்கியுள்ளதுமார்க்கம் பரிந்துரைக்காத மணப்பெண்ணுக்கு வீடு முதல் அனைத்து வகையான வாழ்வாதார வசதிகளையும் வழங்கிகுண்டாமாத்து திருமண உறவுக்காக தங்கள் எதிர்பார்ப்புகளை தியாகம் செய்த பிறகும்அதைப் பற்றிய கவலையின்றி ஓடும் இந்த சுயநலமிகள் சட்டப்படி தண்டனைக்குறியவர்களே.

சமூகக் கட்டமைப்புக்கு வேட்டுவைக்கும் இந்த விசயத்தில் அந்தந்த முஹல்லா பிரதிநிதிகள் கூடிமார்க்கம் மற்றும் வல்லுனர்களின் சட்ட ஆலோசனைகளுடன் செயல்பட்டு இனிவரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் நடக்காமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓடுகாலிகள் தங்கள் சமூக எல்லை தாண்டலுக்கான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு, தமது தரப்பில் நியாயம் எதுவும் இருப்பின் நிரூபித்து விட்டு எங்கு வேண்டுமானாலும் ஓடித் தொலையட்டும்.உன்னத இஸ்லாம் மார்க்கம் வழங்கியுள்ள விவாகம்/விவாக ரத்து மற்றும் வாழ்வுரிமைகளை உணராமல் சிற்றின்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து பேரிடரில் வீழத்துடிக்கும் ஓடுகாலி / ஊரோடிகளுக்கு இதைவிட அதிகமாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை

அதிரைகாரன்
இது ஒரு மீள்பதிவு


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு