அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). இந்த கட்டுரை 2007ஆம் வருடம் சத்தியப்பாதை மாத இதழில் நான் எழுதி வெளி வந்ததது. இன்றும் கட்டுரையில் உள்ள நிலைமையே உலகத்தில் தொடர்ந்து வருவதால் மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன். இதில் உள்ள புள்ளிவிபரம் இன்று பல மடங்கு பெருகி இருக்கிறது.
உலகமயமாக்கலால் ஏழைகள் தன்னிறைவு அடைந்து விடுவார்கள் என்பது இந்தியாவெங்கும் சிலரால் எடுத்து வைக்கும் வாதம். ஆனால் நடக்கும் நிகழ்வுகளோ எதிராக உள்ளது. உலகமய பொருளாதாரத்தால் ஏழை பணக்காரன் வித்தியாசம் அதிகரித்து வருகிறது. அதனால் உலகமயமாவது முடிவுக்கு வரக்கூடும் என்று சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப்பொருளாதாரக் கூட்டத்தில் உலக வங்கித் தலைவரே கூறியிருக்கிறார். வருடா வருடம் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் (பில்லியனர்கள்) பட்டியலை 'போர்ப்ஸ்' எனும் பிரபல பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). பிப்ரவரி 9 ம் தேதி 2007 வரை பட்டியல் தயாரித்தது. இதில் உலகில் 946 பில்லியனர்கள் உள்ளனர். கடந்த ஆண்டை விட 178 புது பில்லியனர்கள் அதிகமாகி உள்ளனர்.
அமெரிக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் உலகின் முதல் பணக்காரர் இடத்தில் தொடர்ந்து இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 56பில்லியன் டாலர் ( 2.52 லட்சம் கோடிகள்). ஆசியக் கண்டத்திலேயே, இந்தியாவில்தான் அதிக பில்லியனர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 22 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 36 பில்லியனர்கள். ஜப்பானில் இருக்கும் பில்லியனர்களோ வெறும் 22தான். ஜப்பானை முந்தி விட்டார்கள் நம் இந்தியர்கள் - இதனால் பெருமைப்பட முடியுமா? (சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் இந்தியா பல நாடுகளாக இருந்தது ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு மன்னர், குறுநிலமன்னா, ஜமீன்கள் இருந்தது போல்) இன்றைய 36 பில்லியனர்களும் தனித் தனி ஜமீன்கள் - குறுநில மன்னர்கள் போல் உருவாகி வருகிறார்கள். இதனால் ஏழைகள் அதிகம் உள்ள நாடாக மாறி செல்வங்கள் ஒரே பக்கம் குவிந்து வருவதை எப்படி பெருமையாக எடுத்துக்கொள்ள முடியும். நாட்டின் சட்டங்களும் பணம் உள்ளவர்களுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது.
இந்தியாவின் பில்லியனர்களில் ஒருவர் கூட முஸ்லிம் கிடையாது. முஸ்லிம்கள் வளமாக வாழ்கிறார்கள் என்று பொய்ப்பிரச்சாரம் செய்யும் பாசிச கூட்டங்கள், சுதந்திரத்திற்கு முன்பிருந்து சதி செய்து வரும் இந்த பாசிச கூட்டங்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களில் 1சதவீத அளவில் கூட இல்லாமல் சொந்த உழைப்பில் சேர்த்து வைக்கும் முஸ்லிம்களின் செல்வங்களையும் நாசம் செய்து வஞ்சித்து வருகின்ற மனித நேயமற்ற வெறிபிடித்த கூட்டங்கள் தினம் தினம் அதிகமாகி கொண்டே வருகிறார்கள். மேலும் பாசிச கூட்டங்கள் அப்பாவிகளை தூண்டிவிட்டு முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்று தொடர்ந்து திட்டங்களையும் தீட்டி வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனை அல்லாஹ்வால் (இறைவனால்) ஏற்றுக்கொள்ளப்பட்டால், இந்த மனித இரத்தம் குடிக்க அலைந்து கொண்டு இருக்கும் பாசிச கூட்டங்களால் இறைவனின் கோபத்தை தாங்க முடியுமா? முடியவே முடியாது!
(அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான். தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை. (அல்குர்ஆன் : 2:258)
உலகின் 1 சதவீதம் மிகப்பெரிய பணக்காரர்கள் 40சதவீத சொத்துக்களுக்கு அதிபதிகள். உலகின் 10சதவீத மக்கள் உலகின் 85சதவீத சொத்துக்களுக்கு உடமையாளர்கள். உலகில் ஆண்டிற்கு 80லட்சம் மக்கள் உண்ண உணவின்றி இறந்து போகின்றார்கள் என்று பிரபல டைம் பத்திரிக்கை தெரிவிக்கின்றது. உலகில் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் குழந்தைகள் பசிக் கொடுமையால் இறக்கின்றனர் என ஐ.நா. சபை அறிக்கை ஒன்று கூறுகிறது. உலகில் 50 சதவீத மக்கள் மாதத்திற்கு ரூ 2,700 வருமானம் கூட இல்லாதவர்கள். உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து, ஏழ்மையான 48 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் மேலாக உள்ளது.
21-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் 100 கோடி பேருக்கு மேல் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். உலகில் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வேலை இல்லை. 25 கோடி மக்கள் மாதத்திற்கு ரூ 1,350 கூட வருமானமில்லாத ஏழைகளைக் கணக்கிட்டு உலகில் அதிக ஏழைகள் உள்ள நாடு இந்தியா என்ற அவப்பெயரையும் பெற்றுள்ளது. 81 சதவீத இந்தியர்களின் மாத வருமானம் ரூ 2,700 க்கும் குறைவாகவே உள்ளது. இந்தியாவின் 36 பில்லியனர்கள் 25 சதவீத பொருளாதராத்தைக் கைக்குள் வைத்துள்ளனர். பணக்கார நாடுகள் வருடாவருடாம் கூடி, தங்கள் பொருளாதராத்தில் 0.7 சதவீதம், ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானம் போடுவதோடு சரி. தீர்மானத்தை நிறைவேற்ற அந்த பில்லியனர்கள் பணத்தின் மேல் கொண்டுள்ள ஆசை தடுக்கிறது.
பணம் ஒரே பக்கம் மலைபோல் சோந்து கொண்டு இருப்பதும், ஏழை மக்கள் பசி பட்டிணிக்கு ஆளாகும் முரண்பாட்டிற்கும் என்ன காரணம் இந்த பணக்கார உலக நாட்டின் சட்டங்கள் அனைத்தும் மனிதக்கரங்களால் எழுதப்பட்டவை. ஏழைக்கு ஒரு நீதியும், பணக்காரனுக்கு ஒரு நீதியும் நிறையவே காணப்படுகிறது. உலக நாடுகள் அனைத்திலும் பணக்காரன், மேற்கொண்டு பணம் சேர்ப்பதற்கு வழி வகுக்கும் வகையில்தான் ஒவ்வொரு ஆண்டும் சட்டங்களை இயற்றி வருகிறது. ஏழைகளை தன்னிறைவு அடையச் செய்ய வேண்டும் என்ற திட்டங்கள் அனைத்தும் திட்டங்களாகவே இருந்து சரியான முறையில் ஏழைகளைப்போய்ச் சேர்வதில்லை.
இந்த பில்லியனர்களுக்கு வாழும் வாழ்க்கை நெறி இஸ்லாம் போதிக்கப்பட்டு இருந்தால்; ஏழை வரியான ஜக்காத்தை இறைவனுக்காக மனமுவந்து ஏழைகளுக்கு வழங்குவார்கள். இஸ்லாம் போதிக்கும் சட்டங்கள் மனிதக் கையால் எழுதப்பட்டவை அல்ல. இந்த உலகையும், மனிதர்களையும் படைத்த ஒரே இறைவனால் மனிதர்களுக்கு வழங்கிய சட்டமாகும் இதனால் இறைச்சட்டத்தில் எந்த குளறுபடிகளையும் எந்த மனிதனாலும் காண முடியாது. உலக மனிதர்களுக்கு எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களையும் ஒருங்கே பெற்ற திருக்குர்ஆனை உண்மையான எண்ணத்துடன் ஆராய்ந்து பார்த்தால் புரிந்து கொள்வார்கள்.
மனிதர்களே! சிந்தியுங்கள்! நேர்வழி பெறுங்கள்.
- S.அலாவுதீன்