Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எழுத்துப் பிழைகள்! - 08 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 01, 2018 | ,

எழுத்துப் பிழைகள் – 8 வேற்றுமை உருபுகள்

இலகுவான இலக்கணப் பகுதியொன்றை இத்தொடரில் வாசகர்கள்
தெரிந்துகொள்வது, எழுதுவோர்க்குப் பயன் கூட்டும் என்று நினைக்கிறேன்.

“இலக்கணமா...!?” என்று மலைக்காதீர்கள். இயலுமானவரை, அதை இலகுவாக விளக்குவோம். ஏனெனில், ஒற்றெழுத்துகளைப் போக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் அது உதவும்.

‘வேற்றுமை உருபுகள்’ என்று தமிழிலக்கணம் சில சொற்பகுதிகளை இனங்காட்டும். அதாவது, ‘நிலைமொழி’ ஒன்றின் தன்மையை வேறுபடுத்திக் காட்ட உதவும் எழுத்து, அல்லது எழுத்துகள் அவை. அவற்றைத் தொல்காப்பியர்,

“ஐ ஓடு கு இன் அது கண் என்னும் 
அவ்வா றென்ப வேற்றுமை உருபே”
என்று எழுத்ததிகாரத்திலும்,
“வேற்றுமை தாமே ஏழென மொழிப 
விளிகொள் வதன்கண் விளியோ(டு) எட்டே” 

என்று சொல்லதிகாரத்திலும், வேற்றுமை உருபுகள் ஆறு என்றும் ஏழு என்றும் எட்டு என்றும் பகுப்பார். அவற்றுள் முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை. ஆனால், அவை சொல்லோடு உள்ளடங்கியவையாம். முதலாம் சூத்திரத்தில் ஆறு என்று சொன்னதன் பொருள் இதுதான். இனி, அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

1 ஆம் வேற்றுமை (உருபு இல்லை) – அண்ணன் வந்தார் – வருதல் எனும் செயல் அடக்கம். அதனால் உரூபு இல்லை. 

2 ஆம் வேற்றுமை (ஐ) – அண்ணனைக் கண்டேன். (இங்கே ஒற்று மிகுவதைக் காண்க)

3 ஆம் வேற்றுமை (ஆல், ஒடு, ஓடு, உடன் முதலியவை) – அண்ணனால் / அண்ணனோடு / அண்ணனுடன் போயிற்று. (ஒற்று மிகாது)

4. ஆம் வேற்றுமை (கு) – அண்ணனுக்குக் கொடுத்தேன் – (க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துகளின் முன் ஒற்று மிகுவதைக் காண்க)

5 ஆம் வேற்றுமை (இன்) – அண்ணனின் அறிவுரை (ஒற்று மிகாது) 

6 ஆம் வேற்றுமை (அது, உடைய) – அண்ணனது பணி (ஒற்று மிகாது)

7. ஆம் வேற்றுமை (இல், கண்) – அண்ணனிடத்தில் ஏற்பட்ட மாற்றம் (இங்கும் ஒற்று மிகாது) 

8. ஆம் வேற்றுமை (விளி வேற்றுமை) – உருபு இல்லை) – அண்ணா! (இதில் பொதிந்துள்ள விளித்தல், மற்ற சொற்களை விட்டுப் பகுத்துக் காட்டுகின்றது) – இதற்குப் பின் ஒற்றெழுத்துக்கு வேலையே இல்லை.

இந்தப் பயிற்சி விளக்கத்தை ஆழ்ந்து ஒருமுறை படித்தாலும், இலகுவில் மனத்துள் பதிந்துவிடும். இனி, ஒற்றுப் பிழை நம் எழுத்துகளில் அற்றுப் போய்விடும்.

எழுத்துப் பிழைகள்! - 07 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 25, 2018 | ,

எழுத்துப் பிழைகள் – 7 ஒவ்வாத ஒற்றுப் பிழை

எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டும்போது, சிலருக்கு அலட்சியம். ‘ஆமாம், இதெத் தெரிஞ்சுதான் நாம பெரிய எழுத்தாளனாப் போகப் போறோமா?’ எனும் எண்ணம். இன்னும் சிலருக்கோ, ‘இப்படியெல்லாம் பிழைத் திருத்தம் செய்வதற்குச் சான்று வேண்டாமா?’ என்ற எதிர்க் கேள்வி. இவ்விரு சாராருக்கும் இடையில் நின்று, வழக்கில் – நடைமுறையில் நிகழும் எழுத்துப் பிழைகளையும், அவற்றை எந்த அடிப்படையில் பிழைகள் என்று நிறுவும் இலகுவான இலக்கணக் குறிப்புகளையும் தொகுத்துரைப்பதே இத்தொடரின் நோக்கம்.

எழுத்தாளர்கள் செய்யும் எழுத்துப் பிழைகளுள் ஒற்றுப் பிழையே மிகையாக இருப்பதால், இதுபற்றி இன்னும் சற்று விரிவாக எழுத வேண்டியுள்ளது.

ஒரு சொற்பெயர் முற்றுப் பெறாமல் நின்றால், அது பெயர் எச்சம் எனப்படும் அல்லவா? எடுத்துக்காட்டாக, முழுச் சொற்றொடரின் ஒரு சொல், சிறிய, பெரிய, இன்றைய, நாளைய போன்றவையாக இருக்கும்போது, அவற்றை அடுத்த ‘வருமொழி’ க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துகளைக் கொண்டு தொடங்குமாயின், அங்கு ஒற்றெழுத்து மிகாது. அதாவது –

‘சிறிய பெட்டி’ என்பது, ‘சிறியப் பெட்டி’ என்றாகாது. ‘பெரிய கட்டிடம்’ என்பது, ‘பெரியக் கட்டிடம்’ என்றாகாது. ‘நடைபெற்றது’ என்று சரியாக எழுதுவதை விட்டுவிட்டுப் பெரும்பாலார், ‘நடைப்பெற்றது’ என்று தவறாகவே எழுதுகின்றனர். ‘நாளைய கூட்டம்’ என்றே எழுதவேண்டும்; நாளையக் கூட்டம் என்று எழுதுவது தவறு.

ஒரு பண்பு முற்றுப்பெறாமல் நிற்குமாயின், தமிழிலக்கணம் அதனைப் ‘பண்புத் தொகை’ எனப் பகுக்கும். ‘முதுபெரும் அறிஞர்’ என்பதில் உள்ள ‘முது’ என்பது, முதுமையைச் சுட்டும். அதனை அடுத்துள்ள ‘பெரும்’ எனும் சொல் வல்லினத்தில் இருப்பதால், இங்கே ‘முதுப்பெரும்’ என்று ஒற்றெழுத்து மிகாது. உயர்திணை, தொடுபொருள், சிறுபெட்டி போன்றவை, உயர்த்திணை, தொடுப்பொருள், சிறுப்பெட்டி என்றெல்லாம் ஒற்று சேர்த்து எழுதப்படமாட்டா.

‘நல்ல தமிழ் எழுதுவோம்; நம் மொழியைப் பேணுவோம்’ என்ற ஒரே நோக்கில் வரையப்பெறும் இத்தொடர், எனது ஆய்வையும் பட்டறிவையும் அடிப்படைகளாகக் கொண்டு அமைவதாகும். இதில் சுட்டிக் காட்டப்பெறும் திருத்தங்களுக்கான சான்றுகள் பண்டைத் தமிழ் இலக்கண நூல்களான தொல்காப்பியம், நன்னூல் போன்ற மொழியியல் நூல்களில் விரவிக் கிடக்கின்றன. ஆனால், அச்சான்றுகளையும் இங்கு எடுத்தெழுதினால், விரையும் நேரச் சூழலில் விளைவு போற்றத் தக்கதாக இருக்காது. அதனால்தான், சான்றுகளை விடுத்துச் சரக்குகளை இறக்கிவைக்கின்றேன்.

ஒற்றுப்பிழை நீக்க – நீங்க, இவ்வளவு போதுமா?

எழுத்துப் பிழைகள்! - 06 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 23, 2018 | ,

எழுத்துப் பிழைகள் – 6 ஒவ்வாத ஒற்றுப் பிழை

சென்ற பதிவில் சில ஒற்றுப் பிழைகளையும், அவற்றைக் களைய வழி காட்டும் சில இலக்கண வரம்புகளையும் பற்றி அறிந்தோம். பெரும்பாலோர் இதில் கவனம் செலுத்தாமல், மீண்டும் மீண்டும் பிழையாக எழுதி வருவதால், இதனை இன்னும் விரிவாக விளக்கவேண்டிய கடப்பாடு எமக்குண்டு.

தமிழிலக்கணப் பகுப்புகளில், ‘ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்’ என்ற விதியொன்று உண்டு. இதைக் கண்டு அஞ்சற்க! ஒவ்வொரு சொல்லாக இதனை விளக்குவோம். ‘ஈறு’ என்பது, ஒரு சொல்லின் இறுதி எழுத்தைக் குறிக்கும். ‘கெட்ட’ என்பது, இல்லாமல் போன என்பதன் குறிப்பாகும். ‘எதிர்மறை’ என்பது, எதிரான என்று பொருள்படும். ‘பெயரெச்சம்’ என்பது, ஒரு பெயர்ச்சொல் முடியாமல் எஞ்சி நிற்பதைக் குறிக்கும். இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். இதன் எடுத்துக்காட்டுகளாக – அறியாத, ஆகாத, இல்லாத, ஈடில்லாத, உணர்வில்லாத, ஓயாத, காணாத போன்ற எதிர்மறைச் சொற்களைக் காட்டலாம்.

இடையில் ஒரு சிறு விளக்கம். அதாவது, இரண்டு சொற்கள் அடுத்தடுத்து வருகின்றன. அவற்றுள் முதல் சொல்லை ‘நிலைமொழி’ என்று, அதற்கடுத்து வரும் சொல்லை, ‘வருமொழி’ என்றும் பகுக்கும் தமிழிலக்கணம்.

மேற்சொன்ன எடுத்துக்காட்டுகளை நிலைமொழிகளாகக் கொண்டால், அவற்றை அடுத்து வரும் வருமொழிகள் க, ச, த, ப, ஆகிய வல்லின எழுத்துகளைக் கொண்டு தொடங்கினால், நிலைமொழியின் இறுதியில் ஒற்று மிகும். அப்பாடா...! இவ்வளவு விளக்கமா? ஆம்; வேண்டும்போது விளக்கித்தான் ஆகவேண்டும்.

மேற்கண்ட ‘அறியாத, ஆகாத, இல்லாத, ஈடில்லாத, உணர்வில்லாத, ஓயாத, காணாத’ எனும் சொற்களை, ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களாக மாற்றி எழுத வேண்டுமாயின், அறியா, ஆகா, இல்லா, ஈடில்லா, உணர்வில்லா, ஓயா, காணா என்று ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களாகவும் எழுதலாம். அவ்வாறாயின், அவற்றுக்குப் பின் இருக்கும் வருமொழி மேற்கண்டபடி, க, ச, த, ப, ஆகிய வல்லின எழுத்துகளைக் கொண்டு தொடங்குமாயின், நிலைமொழியின் இறுதியில் ஒற்றெழுத்து மிகும். இவ்வாறு:


அறியாப் பிள்ளை, ஆகாச் செயல், இல்லாத் துணை, ஓயாப் பணி.
ஈறு கெடாமல் நிலைமொழி முழுமையாக இருந்தால், ஒற்று சேர்த்து எழுதுவது பெருங்குற்றம்!



அறியாதப் பிள்ளை, ஆகாதச் செயல், இல்லாதத் துணை, ஓயாதப் பணி என்றெல்லாம் எழுதினால், என்னைப் போன்ற வாசகன் ஏற்றுக்கொள்ள மாட்டான்! ஆனால், நம்மில் மிகப்பலர் இப்படித்தான் எழுதுகின்றனர்! திருத்திக்கொள்ள வேண்டும் என்பதுவே எனது வேட்கை.

எழுத்துப் பிழைகள்! - 05 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 23, 2018 | ,

எழுத்துப் பிழைகள் – 5 ஒவ்வாத ஒற்றுப் பிழை

‘ஒற்று’ என்ற சொல், பிறரை வேவு பார்த்தலையும் குறிக்கும். சிலபோது, அது கூடும்; ி இயலாளர். சிலபோது, அது கூடாது அல்லவா? தமிழில் புள்ளி எழுத்துகளை ‘ஒற்று’ எழுத்துகள் என்று வகைப்படுத்துவர் மொழி வல்லார். க், ச், ட், த், ப், ர், ய், ல், போன்றவை ஒற்றெழுத்துகள் ஆம். சொற்களுக்கிடையே, அல்லது ஒரே சொல்லுக்குள்ளேயே இவை போன்ற ஒற்றெழுத்துகளைச் சேர்ப்பது கூடும்; சிலபோது, கூடாது. இதை, ‘ஒற்று மிகுதல்’ என்றும், ‘ஒற்று மிகாமை’ என்றும் பகுப்பர் மொழ

பெயரெச்சத்தின் பின் ஒற்று மிகாது: 

சிறிய, பெரிய, நடைபெற்ற, இன்றைய, அன்றைய, நாளைய போன்ற சொற்கள் பெயரெச்சங்களாகும். அதாவது, ‘சிறிய’ முதலான சொற்களால் சொற்றொடர் முற்றுப் பெறாமல், ஏதோ ஒன்றை எதிர்நோக்கி நிற்பதை உணர முடியும். அவ்வாறு எதிர்பார்க்கப்படும் சொல் வல்லின எழுத்தில் (க, ச, ட, த, ப, ற) தொடங்கினால், கண்டிப்பாக ஒற்று மிகாது. சிறிய பெட்டி என்பதே சரி. சிறியப் பெட்டி என்று எழுதுவது தவறு. இதைப் போன்றே, சிறிய கண் என்பது, சிறியக் கண் என்றாகாது. பெரிய சண்டை என்பதைப் பெரியச் சண்டை என்று எழுதக் கூடாது. நடைப்பெற்றது என்று எழுதக் கூடாது. நடைபெற்றது என்பதே சரி. இன்றையத் தேவை, அன்றையச் சொல், நாளையக் கூட்டம் என்றெல்லாம் எழுதுவது பிழையாகும்.


பண்புத் தொகையில் ஒற்றெழுத்து மிகாது:

ஒரு பண்பு முடியாமல் தொக்கி நிற்குமாயின், அதைப் பண்புத் தொகை எனத் தமிழிலக்கணம் பகுக்கும். ‘முதுபெரும் எழுத்தாளர்’ என்பதில், முதலில் உள்ள ‘முதுமை’ என்ற பண்பை உணர்த்தி, ‘பண்புத் தொகை’ எனும் இலக்கண விதியில் படும். இது போன்ற பண்புத் தொகையின் பின் வல்லெழுத்து – ஒற்று - (‘முதுப்பெரும்’ என்று) மிகாது. உயர்சேவை, நனிசிறந்த, நல்ல தமிழ் போன்றவை ஒப்பு நோக்கத் தக்கன.


ஒற்று மிகாத வேற்றுமைத் தொகை:

ஒரு சொல்லின் தன்மையினை வேறுபடுத்திக் காட்டும் தன்மையவை, ‘வேற்றுமைகள்’ என்றும், அவை மறைந்து நின்றால், ‘வேற்றுமைத் தொகைகள்’ என்றும் வகைப்படுத்துவர். இதுபற்றிப் பின்னர் விரிவாக எழுதுவோம். ‘ஐ’ என்பது இரண்டாம் வேற்றுமை உருபாகும். இது மறைந்து நின்றால், ‘இரண்டாம் வேற்றுமைத் தொகை’ எனப்படும். தொகை = தொக்கி நிற்றல். எடுத்துக்காட்டாக, ‘தமிழ் பேசுவோர்’ என்பதில், தமிழ்(ஐ) என்ற இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்துள்ளது. எனவே, இங்கு ஒற்றெழுத்து (தமிழ்ப் பேசுவோர் என்று) மிகாது. அவ்வுருபு வெளிப்படையாக (தமிழை-ஐ என்று) வந்தால், ‘ப்’ எனும் ஒற்றெழுத்து (தமிழைப் பேசுவோர் என்று) மிகும்.


ஒற்று மிகவேண்டா இடங்களில் நம் கவிஞர் ஒருவர் தனது ‘சொல்லடுக்கில்’, நெடியப் பயணம், தலைக்கேறியப் பெருமையை, கவலையோடுக் கண்டெடுக்க, சேர்த்தப் பொருட்கள் என்றெல்லாம் எழுதியுள்ளார்...! கொடுமை...! திருந்தட்டும்...!

எழுத்துப் பிழைகள்! - 04 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 08, 2018 | ,

எழுத்துப் பிழைகள் – 4 நற்றமிழ் தேர்க!
‘மொழிப்பிழை நீக்கும் வழித்துணை நூல்’ என்ற அடிப்படையில், சென்னை ‘இலக்கியச் சோலை’ வெளியீடாக வந்த ‘நல்ல தமிழ் எழுதுவோம்!’ என்ற எனது சிறிய நூலைப் பற்றி உங்களுள் பலர் அறிந்திருக்கலாம்.

பள்ளி நாள்களில் / நாட்களில் தமிழாசிரியர், புலவர் கி.கு. அப்துல் வகாப், பின்னர் ‘மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர், கல்லூரிக் கல்வியின்போது ‘இறையருட்கவிமணி’ போன்ற சான்றோரின் தொடர்பாலும், நற்றமிழ் நூல்களின் வாசிப்பினாலும் வளர்த்துக்கொண்ட மொழியறிவே என் மூலதனம்.

எனது பதின்மப் பருவத்திலேயே, நற்றமிழ் மீது – அதாவது வடமொழி கலவாத தனித்தமிழ் மீது ஒரு காதல். புலவர் அப்துல் வகாபின் வகுப்பென்றால், அங்கே தனித்தமிழ் கோலோச்சும். “சுத்தமென்று சொல்லாதே! தூய்மை என்று சொல்லடா!” என்று எச்சரிப்பார். போதும், சுயபுராணம்! இல்லையா?

முதலில், இயலுமானவரையில், தூய தமிழில், பிறமொழிக் கலப்பின்றி எழுதப் பழகவேண்டும். வேற்று மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால்தான், தான் கூறவந்த செய்தி, படிப்பவர்களுக்கு முழுமையாக விளங்கும் என்றெண்ணினால், அரிதாக அதைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஏனெனில், தொல்காப்பியம் இப்படி ஓர் இலக்கணத்தை வகுத்துள்ளது:

“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் 
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி 
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ 
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.”
- சொல்லதிகாரம் (எச்சவியல்)

தாய்த் தமிழில் கருத்துப் பரிமாற்றமே சிறப்புடைத்து. வாசிப்போருக்கு இலகுபடுத்துவதற்காக, அரிதினும் அரிதாய்ப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தலாம். தனித்தமிழ், என்றும் சிறப்பு. தேர்ந்த தமிழறிஞர்களின் நூல்களைத் தேடிப் பிடித்துப் படிப்பது கொண்டு, மொழியறிவு தானே வளரும்.

வேற்று மொழியைக் களைந்து எழுதவேண்டுமாயின், ஓரளவேனும் அம்மொழி பற்றிய அறிவு வேண்டும் என்று நான் சொன்னால், பலருக்கு வியப்பாயிருக்கும். தனித்தமிழ் வித்தகர்களான மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் போன்றோர் வடமொழியறிவும் பெற்றிருந்தனர் என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்தி எதிர்ப்புப் போராட்டம் முழு வீச்சில் நடந்துகொண்டிருந்த போது, SSLCவரை நானும் இந்தி படித்தவன்தான்! இன்னொரு மொழி கற்றுக்கொள்வதில் தவறில்லை. தாய்மொழியில் பிழையின்றி எழுதப் பழகுவது மிக்க நன்று; பாராட்டத் தக்கது.

தொடரும்...

எழுத்துப் பிழைகள்! - 03 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] 2

அதிரைநிருபர் பதிப்பகம் | May 05, 2018 | ,

எழுத்துப் பிழைகள் – 3 ‘இதுதான் எனக்குத் தெரியுமே!’

இத்தொடரில் நான் சுட்டிக் காட்டும் திருத்தச் சொற்களும் சொற்றொடர்களும் சிலருக்குத் தெரிந்தவையாக இருக்கலாம். ‘இதுதான் எனக்குத் தெரியுமே’ என்று கடந்து செல்லாமல், தெரியாத மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதற்காக, அவற்றையும் படிக்கக் கோருகின்றேன். சிறு நிகழ்வு ஒன்று என் நினைவுக்கு வருகின்றது:

தெருவின் முச்சந்தி முனையில் பையன்கள் நால்வர் இரவில் நாள் தோறும் கூடிப் பல செய்திகளைப் பேசிக்கொள்வர். அவர்களுள் ஒருவன் மட்டும் ‘ஓவர் ஸ்மார்ட்’. மற்றவர்கள் எந்தச் செய்தியைச் சொன்னாலும், “இதுதான் முன்பே எனக்குத் தெரியுமே” என்று மட்டம் தட்டிச் சொல்லி மடக்கிவிடுவான். ஒரு நாள், மற்றவர்கள் மூவரும் தமக்குள் பேசி, அந்த ‘ஓவர் ஸ்மார்ட்’டை மடக்க எண்ணினர்.

வழக்கப்படி, அடுத்த நாள் வந்தான் நம் ‘ஓவர் ஸ்மார்ட்’. மூவரும் பேசாமல் இருந்த நிலையில், நம் OS ஒரு செய்தியைச் சொல்லத் தொடங்கினான். அதைக் கால்வாசி சொல்லிக்கொண்டிருந்தபோது, மூவரும் ஒரே குரலில், “இதுதான் எங்களுக்குத் தெரியுமே” என்றனர். அத்துடன் நின்றுபோயிற்று, OSன் புதிய செய்தி. அடுத்து ஒரு செய்தி. அதற்கும் மூவரும் ஒன்றாக, “இதுதான் எங்களுக்குத் தெரியுமே” என்றனர். மூன்றாவதாக, ‘கண்டிப்பாக இந்தச் செய்தி, இவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை’ என்றெண்ணி, ஒரு புதிய தகவலைச் சொன்னான் OS. அதையும் இடைமறித்து, “இதுதான் எங்களுக்குத் தெரியுமே” என்றனர். அப்போதுதான் நம் ஓவர் ஸ்மார்ட் தனது தவற்றை நினைத்து வருந்தினான்; திருந்தினான்.

வாசகர்களே! நீங்கள் அப்படி இருக்கமாட்டீர்கள்; நானும் ஓ எஸ் ஆக இருக்கமாட்டேன். சரி, இப்போது சில எழுத்துத் திருத்தங்களைப் பார்ப்போம்: 

ஒருவர், “எனது மகனிற்கு முஹம்மத் என பெயர் சூட்டுகிறோம்” என்று முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார். இந்த ஒற்றை வரியில் நான்கு பிழைகள் உள்ளன! (1). ‘எனது’ எனும் சொல், என் + அது என்று பகுபடும். ‘அது’ என்பது அஃறிணைக்குத்தான் பொருந்தும். ஆனால் இங்கு, ‘மகன்’ என்ற சொல் உயர்திணை. எனவே, ‘என் மகன்’ என்பதுவே சரியாகும். (2). ‘மகனிற்கு’ என்பது, ‘மகனுக்கு’ என்று சரியாக அமையவேண்டும். (3). ‘என பெயர்’ என்பதில், ஓர் ஒற்றெழுத்து ‘ப்’ விடுபட்டுள்ளது. எனப் பெயர் என்றிருக்க வேண்டும். (4). ‘எனது’ என்று ஒருமையில் தொடங்கி, ‘சூட்டுகிறோம்’ என்று பன்மையில் முடித்துள்ளார்! ‘சூட்டுகிறேன்’ அல்லது, ‘சூட்டினேன்’ என்றிருக்க வேண்டும். இவ்வாறு ஒருமையில் தொடங்கிப் பன்மையில் முடிப்பதும், பன்மையில் தொடங்கி ஒருமையில் முடிப்பதும், பலருக்கும் நிகழ்வதே. கருத்தூன்றி எழுதினால், களைந்துவிடலாம் பிழைகளை.


‘நமது மாணவச் செல்வங்களின்’ என்று ஒருவர் எழுதியுள்ளார். எப்படி எழுதியிருக்க வேண்டும்? ‘நம் + அது’. புரிகின்றதா? ‘நம் மாணவச் செல்வங்களின்’ என்றிருக்க வேண்டும். ‘மாணவச்செல்வங்கள்’ என்பது பன்மை.

இப்போதைக்கு, இவ்வளவு போதும்.

தொடரும்...

நன்றி ; https://www.facebook.com/adiraiahmadh/posts/1089010904573391

எழுத்துப் பிழைகள்! - 02 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] 1

அதிரைநிருபர் பதிப்பகம் | May 05, 2018 | ,

எழுத்துப் பிழைகள். – 2

அட, எனது எண்ணக் கீற்றுக்கு இவ்வளவு வரவேற்பா!? வாழ்த்தி வரவேற்றவர்களுள்,
என் அன்பிற்குரிய கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்கள் இருக்கின்றனர்! கவிஞர்கள் உள்ளனர்! எழுத்துலகின் ஏந்தல்கள் இடம் பெற்றுள்ளனர்! மார்க்க அறிஞர்கள் மனமார வரவேற்றுள்ளனர்! ஆழிய சிந்தனையாளர்கள் அடங்கியுள்ளனர்! ஊடகத் துறையினரும் உள்ளனர்! நட்பு வட்டாரத்தின் நல்லவர்கள் நாடி நிற்கின்றனர்! உறவினரும் ஊர்க்காரர்களும்...........

இவர்களுள் முதலில் வரவேற்க வந்தவர், ஆஸ்திரேலியாவில் இருக்கும் என் மருமகன் காலித்! காரணம் என்ன தெரியுமா? தமிழ் எழுத்தில் இவருக்கு நிறையப் பிழைகள் ஏற்படும்; அதனால்தான். நல்ல வேளையாகத் தனது ‘கம்மென்ட்டை’ ஆங்கிலத்தில் இட்டுவிட்டார். இல்லாவிட்டால், அந்த நான்கு வரிகளில், குறைந்தது நான்கு பிழைகளாவது செய்திருப்பார்!

அடுத்து, அமீரகத்தில் இருக்கும் மருமகன் ஒருவர். அவருடைய ‘கம்மென்ட்’டில், ‘நல்லதொரு’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வழக்கு, மிகையாக இலங்கை மக்களிடமே பயன்பாட்டில் உள்ளது. ‘நல்ல’ என்று சுருக்கமாகச் சொன்னால் போதும். நல்லது + ஒரு என்று இரண்டு சொற்களை இணைக்க வேண்டியதில்லை என்பது எனது புரிதல். ஏனெனில், ‘நல்ல’ எனும் பண்புத்தொகையை வினை முற்றாக்கி, அதனுடன் தேவையின்றி ‘ஒரு’ எனும் சொல்லைச் சேர்த்துவிடுகின்றனர். இவ்வகையில் சேர்ந்தவைதாம், கீழ்வரும் சொல்லாடல்கள்:

பெரியதொரு = பெரியது + ஒரு (‘பெரிய’ என்ற சொல்லே போதும்.) அருமையானதொரு (‘அருமையான’ என்பதே போதும்.)

சிறந்ததொரு (‘சிறந்த’ என்ற சொல்லே போதுமே.) அல்லது, ‘பெரிய ஒன்று’, ‘அருமையான ஒன்று’, ‘சிறந்த ஒன்று’ எனலாமே!?


கருத்துரையாளர்களுள் சிலர் ஒற்றுப்பிழை செய்துள்ளனர். இதுபற்றி, விரைவில் விரிவாக எழுதுவோம், இன்ஷா அல்லாஹ். 


இன்னொருவர் ஒருமைச் சொல்லை அடுத்துப் பன்மையைப் பயன்படுத்தியுள்ளார். இதுபற்றியும், விரிவாக எழுதுவோம், இன்ஷா அல்லாஹ்.


மற்றொருவர், ஒற்றெழுத்து மிகுதல், மிகாமையில் கருத்தைச் செலுத்தவில்லை. இதனையும் விரிவாக விளக்குவோம், இன்ஷா அல்லாஹ்.


தமிழிலக்கணத்தில், அடுக்குத் தொடர் என்ற ஒன்றுண்டு. அதைப் பற்றியும் விரிவாக விலாசுவோம். ஏனெனில், கருத்துரைத்தவர்களுள் ஒருவர் இதில் பிழை செய்துள்ளார்; அதனால்தான். 


‘ல’கர, ‘ள’கர, ‘ழ’கர, ‘ன’கர, ‘ண’கர, ‘ர’கர, ‘ற’கர வேறுபாடுகளைப்பற்றியும் விரிவாக எழுதுதற்கு இறைவனின் துணையினை வேண்டி, இப்பதிவை முடிக்கிறேன்.

தொடரும்...

எழுத்துப் பிழைகள்! - 01 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 05, 2018 | ,

எழுத்துப் பிழைகள்!

என்னுடன் முகநூல் இணைப்பில் 588 பேர் இருப்பதாக எனது முகநூல் தகவல் கூறுகின்றது. எனக்கும் அவர்களுக்கும் பயன்படும் விதத்தில் ஏதாவது செய்யலாம் என்று விரும்புகின்றேன். அதன் தொடக்கமே இந்தப் பதிவு.

முகநூலில் சிலர் பதிவு செய்கின்ற தகவல்கள் சிலவற்றில் மொழிப் பிழைகளைக் காணக் கண் கூசுகின்றது. அவ்வப்போது கண்ணில் படும் பிழைகளை – யார் எவர் என்று குறிப்பிடாமல் – நளினமாக, முறையோடு சுட்டிக் காட்டலாம் என்று என் தாய்மொழிப் பற்று என்னைத் தூண்டுகின்றது.

எனக்கு முன், இது போன்ற பணியைத் தமிழறிஞர் புலவர் மா. நன்னன் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் அவ்வப்போது ‘பிரின்ட் மீடியா’வில் காணும் எழுத்து, கருத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டித் தொடராக எழுதிவந்து, பின்னர் அதனை தனித்தனி நூல்களாக வெளியிட்டதும் நானறிவேன்.

எனது முகநூல் இணைப்பில், தமிழ் அறிஞர்களும் மார்க்க அறிஞர்களும் அரசியல் வித்தகர்களும் இருப்பதை நானறிவேன். அவர்களுக்கிடையில் ‘இந்த முந்திரிக் கொட்டை’த் தனமான முயற்சி பயன் தருமா? அன்பர்களின் கருத்துகளைப் பொறுத்தே, தொடர்வதும் நிறுத்துவதும்...!.

தொடரும்

நன்றி : https://www.facebook.com/adiraiahmadh/posts/1087133071427841


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு