Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆறிலிருந்து அறுபதுவரை 3

அதிரைநிருபர் பதிப்பகம் | March 31, 2016 | ,

ஹிஜ்ரீ ஆறாம் நூற்றாண்டு (ஹி. 508 - 597) பாக்தாதில் வாழ்ந்தவர் இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்). ஏகப்பட்ட நூல்கள் எழுதியுள்ள இஸ்லாமிய அறிஞர்.

ஏறக்குறைய 376 நூல்களை அவர் எழுதியள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வளவு குறைவெல்லாம் இல்லை; 700 நூல்கள் வரை எழுதியுள்ளார் என்கின்றனர் வேறு சிலர். எது எப்படியோ நவீன வசதிகள் எதுவும் இல்லாத அக்காலத்தில் மைக்கூட்டில் கட்டைப் பேனாவை நனைத்து நனைத்து எழுதுவது அப்படியொனறும் எளிய செயலெல்லாம் இல்லை. அதற்கு ஆழ்ந்த ஞானமும் பொறுமையும் தேவை.

அவர் எழுதிய நூல்களில் ஒன்று Sayd Al-Khatir. தமிழில் ‘மனச்சுரங்கம்’ என்று சொல்லலாம். அதில் ஓர் அத்தியாயத்தில் நிலையற்ற நம் வாழ்க்கையின் பல நிலைகளை விவரிக்கிறார் இமாம் இப்னுல் ஜவ்ஸி. உலக வாழ்க்கையின் பரபரப்பில் மூச்சு விடக்கூட அவகாசம் இன்றி ஓடிக்கொண்டிருக்கும் நாம் சற்று நின்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு நம் வாழ்க்கையின் முன்னுரிமைகளை பரிசீலனை செய்து கொள்ள இக்கட்டுரை உதவலாம். எனவே, அந்த அத்தியாயத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து சில கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மரணம் எப்பொழுது வந்தடையும் என்று தெரியாது. ஒருவன் அதற்கான ஏற்பாடுகள் செய்து கொள்ளாதிருப்பது எத்தகைய முட்டாள்தனம்! 60 வயதைக் கடந்து 70-ஐ நெருங்கிக் கொண்டிருப்பவர்கள் முட்டாள்தனத்தில் மிகைத்தவர்கள். நிச்சயமாய் 60-க்கும் 70-க்கும் இடையில்தான் விதியின் போர்க்களம் அமைந்துள்ளது. போருக்குக் களமிறங்குபவன் அதற்கான ஆயத்தங்கள் செய்துகொண்டுதானே இறங்குகிறான். இதுவே மனிதர்களின் இயல்பு. இருந்தும் முட்டாள் மட்டும் எத்தகைய ஆயத்தமும் செய்துகொள்வதில்லை.

இளையப் வயதில் இருக்கும்போது, “நான் முதுமையை எட்டியதும் பாவம் புரிவதை நிறுத்திக் கொள்கிறேன்” என்று சொல்கிறான் மனிதன்; சரி. முடி நரைத்தும் தோல் சுருங்கியும் உள்ள நிலையில் பாவம் புரிகிறானே அப்பொழுது என்ன சொல்வான்?

அல்லாஹ்வின் மீது ஆணையாக! கிழவனொருவன் சிரிக்கும் சிரிப்பில் அர்த்தமே இல்லை. அவனது கும்மாளம் அவனது மனம் மரத்துப்போனதை பறைசாற்றும் அவமானம். உலகமோ தன்னை விட்டு அவனைத் தள்ளிக் கொண்டே இருக்கிறது; அவன் இனி உலகத்தில் தங்கியிருக்கப் போகும் காலமெல்லாம் அவனது வலிமை குறைந்துகொண்டே வரப்போகிறது; மனமும் பலவீனமடைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் 60 வயதைத் தாண்டியவனுக்கு என்ன நம்பிக்கை பாக்கியிருக்கிறது?

சரி, அதைத் தாண்டி 70-ஐ அடைந்து விடுவோம் என்று அவன் நம்பிக்கை கொண்டால் அதை அவன் கடும் சோதனைகளுக்குப் பிறகே அடைய வேண்டியுள்ளது. தரையிலிருந்து எழுந்து நிற்பதற்கே பெருமுயற்சி தேவைப்படுகிறது. நடந்தாலோ அமர்ந்தாலோ மூச்சிரைக்கிறது.

இதெல்லாம்போக உலகத்தின் களியாட்டங்களில் எல்லாம் முன்போல் பங்கேற்கமுடியாமல் வெறுமனே பார்த்துக்கிடக்க வேண்டியிருக்கிறது. உணவு உண்டால் வயிற்றில் சிரமமும் செரிமானக் கோளாறும் ஏற்படுகின்றன. அவன் தம் மனைவியினுள் புகுந்தால் அது அவளுக்குத் துன்பம் அளிக்கிறது. கலவி முடிந்த பின் முறிந்து விழுகிறான்; சோர்வு, அவலம் எல்லாம் சூழ்ந்து மீண்டும் அவன் தன் சக்தியைப்பெற நெடுநேரமாகிறது. ஒரு கைதியைப் போல் ஆகிவிடுகிறது அவனது வாழ்க்கை.

சரி, அதையும் தாண்டி 80-ஐ அடைந்து விடுவோம் என்று அவன் நம்பிக்கை கொண்டால், அதை நோக்கி அவன் ஒரு குழந்தையைப்போல் தவழ வேண்டியிருக்கிறது.

மனிதனின் எண்பதாம் ஆண்டு வாழ்க்கை இருக்கிறதே, அது, அவனைத் தாக்கும் பேரிடர். வாழ்க்கையை அவன் நொந்துகொள்கிறான்.

விவேகமுள்ள மனிதன் மட்டுமே தன் வாழ்க்கையின் பல காலகட்டங்களின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்கிறான். பருவ வயதை அடைவதற்கு முன்பான அவனது வாழ்க்கையோ குழந்தைத் தனமானது. பெரும் முக்கியத்துவம் வாய்ந்த செயல்கள் எதுவும் அதில் அமைவதில்லை. விலக்காய், சில குழந்தைகளுக்கு அபரிமிதமான ஆற்றல் அமைந்திருந்து அதைக் கொண்டு அவர்கள் வயதிற்கு மீறிய செயல்கள் புரிந்திருக்கலாம்; கல்வி கற்றிருக்கலாம். அவை வெகு சில.

பருவ வயதை அடைந்ததும், கல்வி கற்க வேண்டிய களமாகவும் இச்சைகளுக்கு எதிரான போராட்டமாகவும் அமைந்து விடுகிறது அவனது வாழ்க்கை.

பின்னர் அவனுக்குக் குடும்பமும் குழந்தைச் செல்வமும் வாய்த்தபின் வாழ்வாதாரத்திற்கும் குடும்பத்திற்கான கடமைகளுக்குமாய் அவன் காலத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கிறது. 40 வயதை அடைந்ததும், அவன் வயதிற்கு வந்த பருவம் முழுமையடைகிறது. அவன் தனது காலவரைக்கான கடமைகளை முடித்தவனாகிறான். அதன்பிறகு அவன் தன் வீடு திரும்பும்வரை மெமெதுவே தளர்வுறுவதும் கீழ்நோக்கிச் செல்வதுமாக அவன் வாழ்க்கை அமைகிறதே தவிர வேறில்லை.

ஆண்டுதோறும் மனிதன் மேலே உயர்ந்து செல்கிறான்

பறந்த வண்ணம்

நாற்பதை அடைந்ததும் கீழ் நோக்கி இறங்குகிறான்

இறக்கும் வண்ணம்

எனவே ஒருவன் தன் நாற்பதாம் வயதைக் கடந்துவிட்டால் மறுமை வாழ்விற்கான நற்செயல்களைத் தேடித்தேடிச் சேர்த்துக்கொள்வதையே முக்கியக் கவலையாய் ஆக்கிக்கொள்ள வேண்டும். இவ்வுலகைச் சார்ந்த அனைத்துக் காரியங்களையும் தாண்டி தம் முன் காத்து நிற்கும் மரணத்தின் மீதே அவனது முழு கவனமும் பதிய வேண்டும். இறுதிப் பயணத்திற்கான ஆயத்தத்தில் அவன் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த அறிவுரைகளெல்லாம் அவனின் இருபது வயது மகனுக்கும் பொருந்தும்தான். என்றாலும் நாற்பது வயதை நெருங்கியவனுக்கு மரணம் நெருக்கமானதாயிற்றே.

இவ்வாறிருக்க ஒருவன் அறுபது வயதை எட்டிவிட்டால், அல்லாஹ் அந்த மனிதனுக்கு ஒரு முழு வாழ்க்கை வாழ அவகாசம் அளித்ததாய்க் கருத வேண்டும். சிறுவயதிலேயே மரணத்தைச் சந்திக்கும் ஆபத்திலிருந்து தப்பித்து வந்தவனாகிறான் அவன். இம்மனிதன் முழுக்க முற்றிலும் மரணத்திற்கான பயண ஏற்பாட்டிலேயே தன் கவனத்தைத் திருப்ப வேண்டும். இந்த மனிதன் தான் வாழும் ஒவ்வொரு நாளும் தனக்கு உபரியாய் அளிக்கப்பெற்ற செல்வம் என்று கருத வேண்டும். அவனது உடலின் பலவீனம் அதிகரிக்க அதிகரிக்க, ஒவ்வொரு நாளும் கடந்து சென்று கொண்டேயிருக்க, இது மேலும் மேலும் உண்மையாகிறது.

அதன்பின் கடக்கும் ஒவ்வொரு ஆண்டிலும் அவன் நல் அறத்திற்கான தனது போராட்டத்தை அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியே ஒருவன் தப்பித்தவறி தனது நூறாவது ஆண்டு என்றெல்லாம் எட்டிவிட்டால் இறப்புக்குக் கீழ்படிவதைத் தவிர வேறேதும் அவனுக்கு வழியில்லை. அப்பொழுது அவனிடம் வாழ்க்கையின் மீதம் என்று இருப்பதெல்லாம் வாழ்க்கையில் கவனக்குறைவாய் இருந்துவிட்டதை நினைத்துக் கவலையும் இறைவனை வழிபடுவதற்கான போரட்டமும்தான். அவ்வயதில் அந்நிலையில் சரியான முறையில் இறை வழிபாடு புரிவதே இயலாததாகிவிடும். (அதாவது எண்பது வயதை எட்டிய மனிதனின் வாழ்க்கை முடிவடைந்துவிடுகிறது. அவன் மரணத்திற்காகக் காத்திருக்கிறான். அவனால் எந்தச் செயலையும் தீவிரமாய்ச் செய்ய முடிவதில்லை.)

கவனமற்ற தூக்க நிலையிலிருந்து நம்மை நீக்கி விழிப்புற வைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் நாம் வேண்டுகிறோம். மறுமை நாளில் நாம் வருத்தமுறுவதைவிட்டுக் காக்கும் நற்செயல்களைப் புரிய நாம் அவனிடம் உதவி கோருகிறோம். நம் எண்ணங்களை நாம் அடைய அல்லாஹ்வை அன்றி வழிநடத்துபவர் யாருமில்லை.

நூருத்தீன்
 Darul Islam Family

அருவி... 13

அதிரைநிருபர் பதிப்பகம் | March 30, 2016 | , , ,



மலைமகனின்  பருவுடலைத்  தழுவ  வேண்டி
                 மழைமுகிலில்  பிறந்திடுவாள்  அருவி  மங்கை
நிலையுயர்ந்து  அழகொளிரப்  பருவம்  எய்தி
                 நிலம்குளிரச்  செய்கின்ற  நோக்கத்  தோடு
தலைமறைப்பாள்  தனமிரண்டை  இறுகச்  செய்வாள்
                 தனதிடையின்  திருப்பகுதி  திறக்கா  வண்ணம்
அலையலையாய்க்  கிளைகளையே  பெருகச்  செய்வாள்
                 அவளழகின்  முழுமையினை  மக்கள்  துய்ப்பார்!

அதிரை அஹ்மத்

இன்று 29-03-2016 7

அதிரைநிருபர் பதிப்பகம் | March 29, 2016 | , ,

தேசந்தந்தை காந்தி பிறந்த நாளை விட மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இந்தியா நினைத்து பார்க்கிறது. இரண்டு மதத்தவரும் இப்போது போடும் வழக்கை தொடர்ந்துகொண்டே இன்று வரை இழுத்தடித்து இருந்தால் இந்திய மண்ணில் இத்தனை உயிர்கள் அனாவிசயமாக போயிருக்காது. எப்போது நாகரீகம் எனும் ஒரு சர்க்யூட்டில் பிறச்சினையோ அப்போதெல்லாம் கொத்து கொத்தாக மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது...இதை இன்று வரை உலகவரலாறு எடுத்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.

ஒரு Flash Back


சென்னையின் கக்கூஸ் நாத்தமில்லாத இரவு நேரம் சென்னைக்கு செல்லும் கம்பன் எக்ஸ்பிரசில் திருவாரூர் ஸ்டேசனில் ரயில் நிக்க நான் ஆழ்ந்த நித்திரையில் என் எக்கோலாக் சூட்கேசில் [நியு-காலேஜ் மாணவர்களின் ஸ்டேடஷ் சிம்பள்] தலைவைத்து பெர்த்தில் தூங்கி கொண்டிருக்க... 'லத்தியால் நான் தலைவைத்து தூங்கிகொண்டிருந் பெட்டியில் அடித்து எழுப்பிவிட்டு "வெடிகுண்டு இருக்கானு இந்த ட்ரயினை செக் பண்ரோம்" என அந்த போலீஸ் சொல்ல நானும் இன்ஸ்டேன்ட்டா..' ஆமாய்யா வெடிகுண்டு உள்ள பொட்டியை தலைக்கு வச்சிதான் தூங்குவானுக'... இந்த போலீஸ்தான்ஸ்காட்லாண்ட் யார்ட்????......

ஞாயமான கேள்வி

எதற்க்கெடுத்தாலும் "துவாச்செய்யுங்க அத்தா..துவாச்செய்ங்க..." என சொல்பவர்கள் , எதிரில் நின்று கேட்கும் மனிதர் துவா எதற்க்கு செய்ய வேண்டும் என தெரியாமலேயே போய் விடுகிறார். துவா செய்ய சொன்னவரும் 'அன்றைக்கு சொன்னேனே துவா செஞ்சீங்களா?' என கேட்காமல் ரெக்கார்டெட் மெஸ்ஸேஜ் மாதிரி மற்றவரிடமும் அதை ஒப்பிக்க சென்று விடுகிறார்.

நீதி: "துவா செய்ய காரணம் 10 வரிக்கு மிகாமல் விளக்கவும்"

ஒரு சின்ன கதை:

ஒரு நல்ல அரசன் ஆளும் இடத்தில் ஒரு துறவி ஊர்க்கோடியில் இருந்தார். அங்கு எல்லா மக்களும் போய் அந்த துறவியிடம் அறிவுரை பெற்று வந்திருக்கின்றனர். அந்த மன்னனுக்கு ஒரு ஆச்சர்யம் துறவி..அதுவும் பிச்சைக்காரன் கோலத்தில் இருப்பவனிடம் ஏன் மக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக போகிறார்கள்?. ஆர்வத்தால் ஆட்களிடம் சொல்லி துறவியை அழைத்துவந்து 'ஏன் உங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ? " என கேட்க ..”நாளை சொல்கிறேன்” என துறவி சொல்லி இருக்கிறார். அந்த இரவு அரண்மனையில் தங்க அனுமதியை அரசன் தர...

' நீங்கள் எந்த விதமான அறையில் தங்க ஆசை?..---. அரசன்.

'உன் அறையை விட விசாலமான வசதியான அறையில்...' ---- துறவி

'என்னமாதிரியான சாப்பாடு'---அரசன்

'உன் சாப்பாட்டை விட ஆடம்பரமான சாப்பாடு'துறவி

அரசனுக்கு ஒரே குழப்பம் "எப்படி உங்களைப்போய் துறவி என சொல்கிறார்கள் மக்கள்? இப்படி பேராசை பிடித்து அலைகிறீர்கள்...அரசன்.


நாளை தெரிந்துகொள்வாய் அரசே...--- துறவி

மறுநாள் காலையில் துறவி புறப்பட்டு தனது இடத்துக்குபோக வேண்டும், போகும்போதும் அரசனுடைய குதிரையை விட நல்ல குதிரை , அரசனின் உடையை விட நல்ல உடை இப்படி துறவி கேட்க , எல்லாம் தரப்பட்டது. அரசனும் வழியனுப்ப அவருடன் செல்ல ஊர்க்கோடியில் அந்த துறவி தனக்கு கிடைத்த குதிரை, நல்ல உடை அனைத்தையும் திருப்பி அரசனிடமே கொடுத்துவிட்டு
தனது கிழிந்த உடையுடனும் வெறுங்காளுடனும் நடக்க.....

அரசன் 'இன்று தெரியும் என்று சொன்னீர்களே...'

'என்னால் நேற்று கிடைத்த அத்தனை சுகத்தையும் , வசதியையும் ஒறே நொடியில் தூக்கி எறிந்து விட்டு வாழ முடியும் அரசே உனக்கு அந்த மனப்பக்குவம் இருக்கிறதா?...துறவியின் கேள்வியில் அரசன் அசந்து விட்டான்.

வாழ்க்கையில் நமக்கு சார்ந்திருப்பது தவிர்க்க முடியாதது ஆனால் சொந்தம்

கொண்டாட எதுவும் இல்லை. இந்த தாமரை இலை நமக்கு கற்றுத் தரும் பாடம் என்ன தெரியுமா?...தண்ணீரில் இருந்தாளும் தண்ணீர் ஒட்டாத அந்த சூழல்...நம்மை சுற்றி எல்லாம் இருந்தாலும் எதுவும் நமக்கு சார்ந்ததல்ல. பல பிரச்சினைகளுக்கு காரணம் ' அது என்னுடையது” என்ற வாதம்தான்.

உடுத்தி கிழித்ததும் , உண்டு செரித்ததையும் தவிர எதுவும் நமக்கு சொந்தமில்லை.

ZAKIR HUSSAIN

மனசாட்சி ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | March 28, 2016 | , , ,


உள்ளமதில் நிலைகொண்டு
உண்மைதனை உரக்கச்சொல்லி
மனிதநேயம் மாறிடாது
மனதினுள்ளே ஒரு சாட்சியாய்
மதிசெய்திடுமோர் ஆட்சியாம்

கண்காணா தவறுகளை - இனம்
காண்பது  மனதன்றோ
கல்நெஞ்ச மனம்கூட
கரைந்திடுமே  மனசாட்சியாலே

ஆயிரம் சாட்சி வந்தாலும்
அகத்தில் உறுதியாய் மனசாட்சி
ஆறறிவு மனிதனுக்கு
ஆழ்மனதை ஆளும் கட்சி

பொய்சாட்சி சொல்வோர்க்கும்
பொல்லாங்கு செய்வோர்க்கும்
மனசாட்சி மட்டும் போதும்
மனம் திருந்த நல்ல தருணம்

எண்ணிலடங்கா சம்பவங்கள்
இவ்வுலகில் அனுதினமும்
அத்தனைக்கும் அடித்தளமே
அதன் தீர்வு மன சாட்சியிலே

இறைசாட்சி முதல் சாட்சி
இருக்கணும் அங்கு நிலைநிறுத்தி
மறையோனை தொழுதிடவும்
வேணுமங்கு மனசாட்சி

மனசாட்சி மறந்து போனால்
மனிதனவன் மிருகமாவான்
மறவாத மனமிருந்தால்
மகிழ்வுகளை வாரியணைபான்

மனசாட்சி இல்லாதோர்
மனித இனம் அல்லாதோர்
மனதினிலே இரக்கமுள்ளோர்
புனிதரான மனிதராவர்

அதிரை மெய்சா

அகமும் - புறமும் ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | March 27, 2016 | , ,

சங்க காலத்தில் அகத்தையும் (அன்பு, ஈகை) புறத்தையும் (வீரம்) பெருமைப் படுத்துவதற்காக அகநானூறு, புறநானூறு என்ற இலக்கியங்கள் உருவாகின. இலக்கியத்துக்கும் பெருமை சேர்ந்தது. ஆனால் இன்று அகமும் புறமும் நம்மைச் சிறுமைப் படுத்திக் கொண்டிருக்கின்றன.

அகம் :

அகம் என்ற சொல்லுக்கு உள், மனம் என்று பொருள். அகத்திற்கு கர்வம் என்ற பொருளும் உண்டு. தன்னைப் பற்றிய செய்திகளைப் பெருமையாக நினைத்துக் கொண்டு, மற்றவர்களை இழிவாக நினைப்பது. மனத்தினுள்ளே இதைத் தேக்கி வைத்திருப்பதால் அகம் என்று பெயர் வந்திருக்கலாம்.

இது பாவம் என்பதால் அகம்பாவம் பெரும்பாலும் பதவியில் இருப்பவர்களிடம் தான் அகம்பாவம் அதிகம் காணப்படுகிறது. இன்று அரசியலே அகம்பாவத்தில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு அகபாவம் தோற்றால் இன்னொரு அகம்பாவம் தலை தூக்குகிறது. இரண்டு அகம்பாவங்களுக் கிடையில் மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.

பணக்காரர்கள், படித்தவர்கள் அகம்பாவத்தின் சொந்தக்காரகள். பணக்காரரின் அகம்பாவம் அவரை நம்பி இருக்கும் ஏழைகளை மாய்க்கிறது; படித்தவர்களின் அகம்பாவம் அவர்களையே சாய்க்கிறது. அகம்பாவம் என்பது மனித இனத்துக்கே சொந்தமானது. ஒரு பிச்சைக்காரருக்கு காசைக் குறைத்துக் கொடுத்தால், “நீயே வெச்சுக்கோ” என்று சொல்லிவிட்டு நடக்கிறாரே! இது அவரது அகம்பாவம்.

தன் தவறை உணர்ந்தவர் கூட அதைத் திருத்திக் கொள்ளா திருப்பதற்கு அவருடைய அகம்பாவமே காரணம். தனது செயலே சரி என்ற நினைப்பு!

புறம்:

புறம் என்றால் வெளி என்று பொருள். ஒருவரைப் பற்றி அவர் அறியாத வகையில் மற்றவரிடம் வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருப்பதற்கு புறம் என்று பெயர்.

புறம் பேசுவது ஒரு பொழுது போக்காகவே ஆகிவிட்டது. இரண்டு பேர் பேசிக் கொண்டிருக்கும் போது மூன்றாவதாக ஒருவர் அரூபமாக வந்து விடுகிறார். அவரது கறை போகும்வரை அவர் நன்றாக அலசப்படுகிரார். பாவம்! யாருக்கு?

புறம் பேசுவதை எல்லா மதங்களும், நீதி நூல்களும் புறக்கணிக்கின்றன. இருந்தும் மனிதன் அவற்றைப் புறந்தள்ளி விடுகிறான்.

புறம் பேசப்படுவதற்கு முக்கிய காரணம் மனிதனுக்கு நேரம் இருப்பது. அதற்குக் காரணம், உழைப் பில்லாமல் இருப்பது. உழைப்பு என்பது உடல் உழைப்பு மட்டுமல்ல, தன் வசமுள்ள செயல்களை, அது படிப்பதாக இருந்தாலும் சரி, இறைவனைத் தொழுவதாகாக இருந்தாகும் சரி, அடுத்த பணிக்குப் போகும் வரை, அதைச் செய்து கொண்டு இருக்கவேண்டும்.

ஜப்பான் போன்ற நாடுகளில் புறம் பேசுவதைப் பார்க்க முடியுமா? பேச முடியாமல் உழைப்பு தடுக்கிறது. எந்த நாட்டில் அனத்துத் துறைகளிலும் உழைப்பு இருக்கிறதோ அங்கே புறம் பேசுதல் இருக்காது. புறம் பேசத் துடிப்பவர்கள் தங்களைப் பற்றி தங்கள் மனத்துக்குச் சொல்லிக் கொள்ளட்டும்! தன்னை உணரும் மனப் பக்குவம் ஏற்படும். அப்புறம் புறம் புற முதுகிட்டு ஓடும்.

அகமும் புறமும் நகையும் சதையுமல்ல; இரண்டும் வெவ்வேறானவை. கேடு விளைவிக்கக் கூடிவை. இணக்மான சமுதாயத்தில் பிணக்கை ஏற்படுத்தக் கூடிவை. இதை உணராமல் மனிதன் அகம் கொண்டு நன்நெறிகளைப் புறந்தள்ளி விடுகிறான்!

வாவன்னா
நன்றி : (உமர்)தென்றல்.

நேற்று ! இன்று! நாளை! - தொடரிலிருந்து ரிவைண்ட் ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | March 26, 2016 | , , , , , ,

நாவலர் நெடுஞ்செழியன் கட்சியில் மூத்தவர். அனுபவம் நிறைந்தவர், கட்சியின் முக்கியப் பொறுப்புகள் பலவற்றில் இருந்தவர். முக்கியமாக, அண்ணாவின் நம்பிக்கையைப் பெற்றவர். அண்ணா இருந்த போதே கட்சியின் பெரிய பதவியான  பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தவர். முதல்வர் பதவிக்குத் தகுதியானவர். இன்னொரு பக்கம், கருணாநிதிக்கும் கட்சிக்குள் நல்ல செல்வாக்கு. தட்ட வேண்டிய இடத்தில் தட்டி வெட்ட வேண்டிய இடத்தில் வெட்டி குட்ட வேண்டிய இடத்தில் குட்டி வளர்ந்த சுறுசுறுப்பான இளைஞர். கடுமையான உழைப்பாளி. கட்சி வளர்ச்சிக்காக நிதி சேகரிப்பதில் வல்லவர். தொண்டர்கள் மத்தியில் மாவட்டமெங்கும் இணைந்து பழகி ஒட்டி உறவாடி   நன்கு அறிமுகமானவர்.


போட்டி ஏற்பட்டுவிட்டது. வாக்கெடுப்பு நடத்தவேண்டிய சூழல். திடீரென நெடுஞ்செழியன் எழுந்தார்.  ‘தலைவர் தேர்தலில் போட்டி ஏற்படுவதை நான் விரும்பவில்லை. ஒரு மனதாக என்னைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் மட்டுமே நான் தேர்தலில் நிற்பேன் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு வந்துள்ளேன். எனக்குப் போட்டி ஏற்பட்டுவிட்ட நிலையில், நான் போட்டியிட விரும்பவில்லை. போட்டியில் இருந்து விலகிக் கொள்கிறேன்’ சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த அறையில் இருந்தும் வெளியேறிவிட்டார். கூட்டத்தில் லேசான சலசலப்புகள் ஏற்பட்டன. எனினும், முக்கியப் போட்டியாளர் விலகிக் கொண்டதால் திமுக சட்டமன்றக் குழுவின் தலைவராக கருணாநிதி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உண்மையில் அடுத்த முதல்வர் யார் என்ற பேச்சு எழுந்தவுடனேயே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலரையும் அழைத்துப் பேசத் தொடங்கி விட்டார் எம்.ஜி.ஆர். பேசப்பேச பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கருணாநிதிக்கு இருப்பது எம்.ஜி.ஆருக்குப் புரிந்துவிட்டது. விளைவு, முடிவெடுக்காமல் இருந்தவர்களையும் கருணாநிதியின் பக்கம் திருப்பத் தொடங்கினார். அதை எம்.ஜி.ஆரே பின்னாளில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் வெளியிட்டார். 

இதுகுறித்து நாவலர் நெடுஞ்செழியன் தனது சுயசரிதையில் ‘கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் திமுக எம்.எல்.ஏக்களை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து விருந்து கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆதித்தனாரும் தன் பங்குக்கு நிறைய உதவிகளைப் பொருளாதார ரீதியாகச் செய்து கொடுத்தார்’ என்று எழுதியிருக்கிறார்.

பெரிய அளவில் கருணாநிதிக்கு ஆதரவு உருவாகியிருக்கிறது என்று தெரிந்ததும் நேராக கருணாநிதியிடம் சென்று பேசினார் எம்.ஜி.ஆர். பெரும்பாலானோரின் விருப்பத்தைத் தட்டிக்கழிக்கவே கூடாது என்று எம்.ஜி.ஆரும் மற்ற திமுக முன்னணித் தலைவர்களும் முடிவெடுத்தனர்.   பெரியாரின் ஆதரவும் கருணாநிதிக்கே இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் தொடர்ந்து முதலியார் இனத்தவர்கள் முதல்வராக வந்த நிலை மாறி ஒரு பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் முதல்வராக வரட்டுமே என்றுதான்.  பக்தவத்சலத்தை தொடர்ந்து அண்ணா அதன்பின் நெடுஞ்செழியன் என்றால் தொடர்ந்து மூன்று முதலியார்களே முதல்வராக வந்திருப்பார்கள்.  

ஆக, அடுத்த முதலமைச்சராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. அந்த அமைச்சரவையில் யார், யார் இடம்பெறுவது என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நெடுஞ்செழியன். ‘ நான் திமுக சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பணியாற்றுவேன். கலைஞர் கருணாநிதி அமைக்கப்போகும் அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன். எப்போதும்போல் கழகத் தொண்டினை ஆற்றிக்கொண்டு வருவேன்.’ என்று சொன்னதோடு நிறுத்தாமல் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குச் சென்று தன்னுடைய அறையைக் காலி செய்யும் முயற்சியில் இறங்கினார். அதைப் பார்த்த க. ராசாராம் எம்.பி கருணாநிதிக்குத் தகவல் கொடுத்தார். உடனடியாகக் கோட்டைக்கு வந்த கருணாநிதி, நேரே நெடுஞ்செழியனின் அறைக்குச் சென்று அவரிடம் பேசினார். துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார். அவை முன்னவராகவும் நீங்களே இருங்கள் என்றார். சட்டமன்றத்தில் உங்களுக்கு அடுத்த இருக்கையில் நான் அமர்கிறேன் என்று சொல்லி நெடுஞ்செழியனின் கைகளைப் பற்றிக் கொண்டார். ஆனால் நெடுஞ்செழியனோ எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை. நான் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரமாட்டேன்; ஒரு முடிவுக்கு வந்தால் மாறமாட்டேன் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

அதிருப்தி காரணமாக அப்படியொரு முடிவை எடுத்திருந்தார் நெடுஞ்செழியன். ஆனாலும் கட்சியின் மூத்தவரான அவரை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள விரும்பினார் கருணாநிதி. உடனடியாக என்.வி. நடராசன், ப.உ. சண்முகம், ஏ. கோவிந்தசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று நெடுஞ்செழியனிடம் பேசினர். பெரியாரும் நெடுஞ்செழியனை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினார். இந்த நெருக்கடியான நேரத்தில் நாவலரும் மற்றவர்களும் கண்ணைமூடிக்கொண்டு கலைஞரை ஆதரிக்கவேண்டும் என்றார் பெரியார்.

இதனைத் தொடர்ந்து 10 பிப்ரவரி 1969 அன்று கருணாநிதி தலைமையில் திமுக அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.  

தி மு கவின் வரலாற்றில் நெடுஞ்செழியனின் பங்கு மகத்தானது. நாடெங்கும் சுற்றிப் பேசி நடமாடும் பல்கலைக் கழகம் என்று புகழப் பட்டவர். 1953 ல் திமுக நடத்திய மும்முனைப் போராட்டம் திராவிட இயக்க வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனை. அப்போது அண்ணா, ஈ.வெ.கி. சம்பத், நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராசன் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு ஐவர் வழக்கு என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் அவர்களே திமுகவின் ஐம்பெருந்தலைவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் கருணாநிதி யின் பெயர் இல்லை.  

பொதுச்செயலாளர் பொறுப்பை கட்சியின் மற்ற தலைவர்களுக்கும் கொடுக்க விரும்பியபோது அண்ணா முதலில் தேர்வுசெய்தது நெடுஞ்செழியனின் பெயரைத்தான். அப்போது நடந்த மாநாட்டில், ‘தம்பி வா, தலைமை ஏற்கவா!’ என்று நெடுஞ்செழியனுக்கு அழைப்பு விடுத்தார் அண்ணா. பின்னாளில் அண்ணாவுக்கும் ஈ.வெ.கி. சம்பத்துக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, திமுக பிளவுபட்டது. 1961 ல் திமுகவில் இருந்து வெளியேறினார் ஈ.வெ.கி. சம்பத். அதன்பிறகுதான் நெடுஞ்செழியனுக்கு முதன்முறையாக இரண்டாம் இடம் கிடைத்தது. ஆம். முதன்முறையாக திமுகவின் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார் நெடுஞ்செழியன். சட்டையைக் கிழித்துவிட்டு சம்பத்தைதி மு க`விலிருந்து வெளியேற்ற வேலூர் பொதுக் குழுவில் கருவியாக செயல்பட்டவர் கருணாநிதி என்கிற செய்தியும் அன்று பேசப்பட்டது. 

தமிழ் தேசியக் கட்சி என்னும் புதிய கட்சியைத் தொடங்கிய சமயத்தில், திமுக மீது கொள்கை ரீதியாக பல தாக்குதல்களைக் கொடுத்தார் ஈ.வெ.கி. சம்பத். அப்போது அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதினார் நெடுஞ்செழியன். சம்பத் எழுப்பிய  விமரிசனங்களுக்கு விளக்கம் கொடுக்கும் வகையிலும் கொள்கை தொடர்பாக திமுக தொண்டர்களுக்குப் புரிதலை ஏற்படுத்தும் வகையிலும் அந்தப் புத்தகம் அமைந்தது.  ‘ அன்று திராவிடர் கழகம் பிரிவதற்குத் தந்தை காரணமாக இருந்தார். இன்று திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவதற்குத் தனயன் காரணமாக இருக்கிறார்’ என்பது அந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த வரிகள். ( சம்பத் பெரியாரின் அண்ணன் மகன்). 

அன்று முதல் திமுகவின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் சமயங்களில் எல்லாம் நெடுஞ்செழியன் முக்கியப்பங்கு ஆற்றினார். பிரிவினைத் தடைச்சட்டம் அமலுக்கு வந்ததன்மூலம் திமுகவுக்கு ஆபத்து ஏற்பட்டபோது திமுகவின் கொள்கை சற்றே திருத்தியமைக்கப்பட்டது. அப்போது அவைத்தலைவராக இருந்தவர் நெடுஞ்செழியன். 1965ல் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடங்கும் முடிவை திமுக எடுத்தபோது அவைத்தலைவராக இருந்தவர் நெடுஞ்செழியன். 1962 தேர்தலுக்குப் பிறகு நெடுஞ்செழியன்தான் சட்டமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  

இன்னும் சொல்லப்போனால் 1967ல் திமுக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியபோது முதல்வர் பதவிக்கு அண்ணாவின் பெயரை முன்மொழிந்தவர் நெடுஞ்செழியன். திமுகவின் முதல் அமைச்சரவையில் கல்வி அமைச்சரானார் நெடுஞ்செழியன். கட்சியில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த அவருக்கு, ஆட்சியிலும் அதே இடம் கிடைத்தது.

அண்ணா மறைவுக்குப் பிறகு முதன்முறையாக முதலிடத்தை நெருங்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்காலிக  முதல்வரானார். பதவி நிரந்தரமாகவே அவர் வசம் இருந்துவிடும் என்று நினைத்தார். ஆனால் அந்த இடத்தில்தான் அரசியல் காய்நகர்த்தல்கள் அண்ணாவின் சவ அடக்கம் நடக்குமுன்னே தொடங்கின. அண்ணா இருக்கும்வரை எந்தப்பதவிக்கும் போட்டி போடாமல் இருந்த நெடுஞ்செழியன் முதன்முறையாக முதல்வர் பதவிக்காக கலைஞருடன் போட்டியிட வேண்டிய சூழல் உருவானது. அப்போது மேலே குறிப்பிட்டபடி எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் கலைஞரின் பக்கமே இருந்தனர். விளைவு, கலைஞர் முதல்வரானார்.

கருணாநிதி ஆதரவாக எம்.ஜி.ஆர் செயல்பட்டதில் நெடுஞ்செழியனுக்கு பலத்த அதிருப்தி. கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் எம்.ஜி.ஆர் திமுக எம்.எல்.ஏக்களை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து விருந்து கொடுத்ததும். ஆதித்தனாரும் தன் பங்குக்கு நிறைய உதவிகளைப் பொருளாதார ரீதியாகச் செய்துகொடுத்ததும் பெரும் மன உளைச்சலைக் கொடுத்தது. 

தொடர்ந்து கட்சியின்  பொதுச்செயலாளர் பதவிக்கும் இருவருக்கும்   போட்டி உண்டாகும் சூழ்நிலை  ஏற்பட்டது. கட்சி நிர்வாகப் பணிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. தலைவர் பதவி உருவாக்கப் பட்டு , திமுக தலைவராக கருணாநிதியும் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் வந்தனர். அண்ணா மறைந்த பிறகு அவரது எண்ணங்களுக்கு மாறான முதல் அத்து மீறல் இதுவே.  இப்போதும் கலைஞரின் பக்கமே எம்.ஜி.ஆர் இருந்தார்.

1972ல் கலைஞருக்கு எதிராக எம்.ஜி.ஆர் போர்க்கொடி தூக்கியபோது எம்.ஜி.ஆருக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதியவர் நெடுஞ்செழியன்.  அத்துடன் பொதுக் கூட்டங்களில் எம் ஜி யாரை காரசாரமாகத் தாக்கிப் பேசினார். அண்ணா தி மு கவின் தேர்தல் சின்னம் இரட்டை இலை  என்று அறிவிக்கப் பட்டபோது “ இரட்டை இல்லையா? முளைத்து மூன்று இலை  கூட விடவில்லை “ என்று நையாண்டி பேசினார்.  பதிலுக்கு எம் ஜியாரும் சர்க்காரியா கமிஷனில் கொடுத்த ஊழல் பட்டியலில் ஒரு  நிறுவனத்தில் சென்னை ஜெமினி மேம்பாலம் கட்டும் ஒப்பந்தம் பெற்றுத்தர வைர நெக்லசை பரிசாகப்  பெற்றார் என்று நெடுஞ்செழியன் மீது குற்றம் சாட்டி இருந்தார். 

என்றாலும், அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களும் தேர்தல் முடிவுகளும் நெடுஞ்செழியனை எம்.ஜி.ஆரின் பக்கம் கொண்டுசேர்த்துவிட்டன. முதலில் திமுகவில் இருந்து விலகி, மக்கள் திமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சியை நடத்த முடியவில்லை. பிறகு எம்.ஜி.ஆர் முதல்வரானதும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார். எம்ஜியாரால்  ப. உ . சண்முகம் உட்பட்ட பல முன்னாள் தி மு கவினர் இவ்விதம் அரவணைக்கப் பட்டனர். கருணாநிதி வசம்  தி மு க  சென்று சேர்ந்துவிட இவைகள் காரணமாயின. பேராசிரியர் அன்பழகனைத்தவிர ஒட்டு மொத்த திமுகவின் முன்னணித் தலைவர்கள் எம்ஜியாரோடு ஐக்கியம் ஆயினர்.  

நாஞ்சில் மனோகரன் அதிமுகவில் இருந்தவரை அவருக்குத்தான் இரண்டாம் இடம். அவர் வெளியேறியபிறகு அதிமுகவின் இரண்டாம் இடம் நெடுஞ்செழியன் வசம் வந்தது. அன்று தொடங்கி எம்.ஜி.ஆர் மறையும் வரை கட்சியிலும் ஆட்சியிலும் நிரந்தர இரண்டாம் இடம் அவருக்குத்தான். நிதியமைச்சர் என்ற முக்கியத்துவம் வாய்ந்த துறை அவர் வசமே இருந்தது. இடையில் எம்.ஜி.ஆர் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது தற்காலிக முதல்வராகச் செயல்பட்டார்.

எம்.ஜி.ஆர் மரணம் அடைந்தபோது மீண்டும் தற்காலிக முதல்வர் பதவி கிடைத்தது. அப்போது அதிமுக இரண்டு கூறுகளாகப் பிரிந்தது. நெடுஞ்செழியன், ஜெயலலிதா உள்ளிட்டோர் ஒரு பிரிவாகவும் ஜானகி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோர் இன்னொரு பிரிவாகவும் இயங்கினர். பிறகு ஜெயலலிதாவுடனும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா – நெடுஞ்செழியன் இடையே நடந்த கருத்துமோதலின்போது பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் ரசனை குறைவானவை.

இங்கு எழுதப் பட முடியாத வார்த்தைகளால் ஒதுக்கப் பட்ட  அலட்சியப்படுத்தப்பட்ட பின்னரும் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும இரண்டாம் இடம் பெற்றுக்கொண்டவர் சகிப்புத்தன்மைக்குப் பெயர் போன நாவலர்.  ஜெயலலிதாவுடன் மனஸ்தாபமானபோது ஒரு சுவாரசியம். சுயேட்சையாக சட்டசபைக்கு போட்டியிட்டு நெடுஞ்செழியன் மயிலாப்பூர் தொகுதியில்  ஐநூறு ஓட்டுக்கள் மட்டுமே  வாங்கினார். அப்போது அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர் திரைப்பட நடிகர் எஸ்.வி சேகர் இவரை விட அதிக ஓட்டு வாங்கினார். நடமாடும் பல்கலைக் கழகம் என்று நாடறிந்த ஒரு அனுபவம் பெற்ற அரசியல்வாதியின் அடையாளம் அலங்கோல அரசியலால் இப்படி வெளிப்பட்டது. தன்னை உணர்ந்தார். தனது பலத்தை யும் அறிந்தார். 

1991ல் ஜெயலலிதா வெற்றிபெற்று ஆட்சி அமைத்தபோது நெடுஞ்செழியனுக்கு அமைச்சரவையில் இரண்டாம் இடம் கிடைத்தது. அதன்பிறகு நெடுஞ்செழியனின் அரசியல் வாழ்க்கையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவுமில்லை. அண்ணா, கருணாநிதி எம்ஜியார், ஜெயலலிதா என்கிற  பல முதலமைச்சர்களின் அவையில் இரண்டாம் இடம் நெடுஞ்செழியனுக்கு நிறந்தரமாகிப் போனது. 12 ஜனவரி 2000 அன்று மரணம் அடைந்தார். 

திராவிட இயக்கத் தலைவர்களில் அதிகம் எழுதியவர்கள் என்று பட்டியல் போட்டால் அதில் நெடுஞ்செழியனுக்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக, அவர் எழுதிய திராவிட இயக்க வரலாறு புத்தகத்தைச் சொல்லவேண்டும். அதிமுக தொண்டர்களுக்கு வரலாறு புரியவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட புத்தகம் என்று முன்னுரையில் பதிவுசெய்திருப்பார். திராவிட இயக்க வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் விரும்புவோர் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்.

நெடுஞ்செழியனுக்கும் கருணாநிதிக்கும் ஏற்பட்ட மனத்தாங்களில் இவர்கள் பரிமாறிக்கொண்ட நாகரிகமான அரசியல் சொல்லாடல்கள் பலருக்கு உதாரணமாகத் திகழ வேண்டியவை. ஆனாலும் ஒரு முறை நெடுஞ்செழியனைப் பற்றி கருணாநிதி “ அவர் மனைவி பேச்சைக் கேட்பவர் ” என்று சொன்னபோது அதற்கு நெடுஞ்செழியன் சொன்ன பதில் , “ ஆமாம் ! நான் மனைவி பேச்சை கேட்பவன்தான். ஏனென்றால் நான் கேட்பதற்கு மனைவி மட்டுமே எனக்கு உண்டு “ என்று சொன்னார். இந்த வார்த்தைகள்,   பல சொல்ல மறந்த கதைகளை   ‘ கனிந்த மொழியில் ‘ சொல்லாமல் சொல்லும்.   

அரசியல் வாழ்வில் நெடுஞ்செழியன் தொட்ட உயரங்கள் முக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், வெற்றிக்கோட்டின்  மூச்சுக்காற்று முகத்தில் படும் அளவுக்கு நெருங்கியபிறகும் கோட்டைக் கடக்கமுடியாத வருத்தம் இறுதிவரை அவருக்கு இருந்திருக்கும். 

பல ஆண்டுகளாக தமிழக அரசியலை உற்று நோக்கும் பலருக்கு ஒரு ஆதங்கம் இருக்கலாம். ஒரு வேளை கருணாநிதியை எம் ஜி யார் ஆதரிக்காமல் நெடுஞ்செழியனை  அன்று முதல்வராக்கி இருந்து இருந்தால் அதன் பிறகு நடைபெற்ற அதிகாரப் போட்டிகளையும்  அறிவியல் ரீதியான ஊழல்களையும்  சட்டமன்ற குடுமிப்பிடி சண்டைகளையும்  நரகல் மொழி நாடகங்களையும்  இன்று வரை அரங்கேறிக் கொண்டு இருக்கும் பகைமை அரசியலையும் தமிழகத்தின் வரலாறு பார்க்காமலேயே இருந்திருக்கக் கூடும். அதே நேரம் திமுகவினர் வர்ணித்தது போல் வெண்டைக்காயாகவும் தான் ஒரு அரசியல் அசடு என்றும்  நிருபித்த நெடுஞ்செழியனின் நிர்வாக திறமையின்மையால் கட்சியும் ஆட்சியையும் இதுவரை காணாமலும் போயிருந்து இருக்கலாம். யார் கண்டது. ?

மீண்டும்   சந்திக்கலாம். இன்ஷா அல்லாஹ்….
முத்துப் பேட்டை  P. பகுருதீன் .B.Sc;

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 028 0

அதிரைநிருபர் பதிப்பகம் | March 25, 2016 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

அல்லாஹ்விடம் ஆதரவு கொள்ளல்:

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன்: 39:53)

(நம்மை) மறுப்போரைத் தவிர மற்றவர்களை நாம் தண்டிப்போமா? (அல்குர்ஆன் :34:17)

எனது அருள், எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறது. (அல்குர்ஆன்: 7:156)

''நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமப்புற அரபி வந்து, ''இறைத்தூதர் அவர்களே! சொர்க்கம் - நரகத்தை அவசியமாக்கிடும் இரண்டு விஷயங்கள் என்ன? என்று கேட்டார். ''ஒருவர் அல்லாஹ்வுக்கு  எதையும் இணை வைக்காமல் இறந்து விட்டால், அவர் சொர்க்கத்தில் நுழைவார். அவனுக்கு எதையேனும் இணை வைத்தவனாக இறந்து விட்டால், அவன் நரகில் நுழைவான்;'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி)  அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 414)

அல்லாஹ் படைப்புகளை படைத்தபோது, அர்ஷுக்கு மேலே தன்னிடம் உள்ள பதிவேட்டில், ''என் கருணை, என் கோபத்தை வென்று விட்டது'' என்று எழுதினான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 419)
  
''அல்லாஹ், கருணையை 100 பகுதிகளாக ஆக்கினான். தன்னிடம் 99ஐ வைத்துக் கொண்டான். ஒரு பகுதியை மட்டும் பூமியில் இறக்கினான். இந்த ஒரு பகுதி (கருணை) மூலம்தான், படைப்பினங்கள் கருணை காட்டிக் கொள்கின்றன. உதாரணமாக, ஒரு மிருகம் தன் கால் குளம்பு தன் குட்டியின் மீது படுவதை பயந்ததாக உயர்த்திக் கொள்கிறது''  என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:420)
  
''நிச்சயமாக இறை மறுப்பாளர் ஒரு நன்மையைச் செய்தால், அதன் மூலம் இவ்வுலகில் அவனுக்கு உணவாக (கூலி) கொடுக்கப்படும். இறை நம்பிக்கையாளன்  நன்மை செய்தால், நிச்சயமாக அல்லாஹ் அவனுக்காக அவனது நன்மைகளை மறுமைக்காக சேகரிக்கிறான். மேலும் இவ்வுலகிலேயே அவனது வழிபாட்டிற்காக உணவை அவனுக்கு வழங்குகிறான்''  என்று கூறினார்கள். (முஸ்லிம்)

மற்றொரு அறிவிப்பில் (கீழ்க்கண்டவாறு உள்ளது):
''நிச்சயமாக அல்லாஹ், இறை நம்பிக்கையாளனுக்கு ஒரு நன்மைக்காக அநீதம் செய்ய மாட்டான். அதற்காக இம்மையில் கூலி கொடுக்கப்படும். மேலும் அதற்காக மறுமையிலும் கூலி கொடுக்கப்படுவான். இறை மறுப்பாளன் அல்லாஹ்வுக்குரிய செயல்களைச் செய்தால் நன்மைகளை இவ்வுலகிலேயே கொடுக்கப்படுவான். மறுமையை அவன் அடைகிறபோது, அவனுக்கு கூலிக் கொடுக்கப்படத்தக்க நன்மை எதுவும் இருக்காது.'' (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 428)

''ஜந்து நேரத் தொழுகைகளின்  உதாரணம், உங்கள் ஒருவரின் வாசலில் நிரம்பி வழிந்தோடும் ஆற்றில் ஒவ்வொரு நாளும்  ஐந்து தடைவ குளிப்பது போலாகும்,'' என நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 429)

''என் அடியான்  என்னை எண்ணுமிடத்தில்  நான் உள்ளேன். என்னை நினைவு கூரும் சமயத்தில் அவனுடன் நான் உள்ளேன்'' என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக, வனாந்திரத்தில் வழி தவறிய ஒட்டகத்தை உங்களில் ஒருவர் பெற்றுக் கொள்ளும் போது  அடையும் மகிழ்ச்சியை விட, தன் அடியான் பாவமன்னிப்பு கோரும் போது அல்லாஹ்வுக்கு  அதிக மகிழ்ச்சி ஏற்படுகிறது'' என்றும் நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மேலும் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் கூறுவதாக (பின்வருமாறு) கூறினார்கள்:
என்னிடம் அவன் ஒரு சாண் நெருங்கினால், அவனிடம் நான் ஒரு முழம் நெருங்குவேன். என்னிடம்  ஒரு முழம் நெருங்கினால், அவனிடம் நான் இரண்டு முழம் நெருங்குவேன். என்பக்கம் அவர் நடந்து வந்தால், நான் அவர் பக்கம் விரைந்தோடி வருவேன். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 440)

''இறந்தவரின் உடல் (பெட்டியில்) வைக்கப்பட்டு, அதை மக்கள் தங்கள் தோள் பட்டைகளின் மீது சுமந்து சென்றால், அப்போது இறந்தவன் நல்லவனாக இருந்தால், ''என்னை சீக்கிரம் கொண்டு செல்லுங்கள். என்னை சீக்கிரம் கொண்டு செல்லுங்கள்''  எனக் கூறுவான். நல்லவனாக இல்லை என்றால், ''எனக்கு வந்த கேடே, என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்? என்று கேட்பான். மனிதனைத் தவிர மற்ற அனைத்தும் இந்த சப்தத்தைக் கேட்பார்கள். அதை மனிதன் கேட்டால், அவன் (மூர்ச்சையாகி) கீழே அடித்து விழுந்து விடுவான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் குத்ரீ  (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 444)

''சொர்க்கம் என்பது, உங்களில் ஒருவருக்கு அவரது செருப்பின் வாரை விட மிக நெருக்கமாக இருக்கும். நரகமும் இதுபோல் தான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 445)

''அல்லாஹ்வின் அச்சம் காரணமாக அழுகின்ற மனிதர், கறந்தபால் மடுவுக்குள் மீண்டும் நுழைந்தாலும் நரகில் நுழைய மாட்டார். அல்லாஹ்வின் வழியில் படிந்த புழுதியும், நரகப் புகையும், இணைந்திடாது''  என்றும் நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 448)

''ஏழுபேர், இவர்களுக்கு  தன் நிழலைத்தவிர வேறு நிழல் இல்லாத அந்த (மறுமை நாளில்) தன் அர்ஷின் நிழலில் அல்லாஹ் நிழல் தருவான். (1) நீதமான அரசன் (2) அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபடும் வாலிபர் (3) பள்ளிவாசல்களில் தன் உள்ளத்தைப் பறி கொடுத்த மனிதர் (4) அல்லாஹ்வுக்காக பிரியம் கொண்டு, அவனுக்காகவே ஒன்று சேர்ந்து, அவனுக்காகவே பிரிந்தும் நிற்கின்ற இருவர் (5) அழகும், குடும்பப் பெருமையும் நிறைந்தப் பெண் விபச்சாரத்திற்கு  அழைத்தும், ''நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்'' என்று கூறும் நபர் (6) தன் வலது கை செய்யும் செலவை இடது கைக்குத் தெரியாமல் அதை மறைத்துக் கொண்டு தர்மம் செய்கின்ற ஒருவர் (7) கலப்பற்ற நிலையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, இதனால் கண்கள் கண்ணீரைச்சிந்தும் ஒருவர்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 449)

 இர்பாழ் இப்னு ஸாரியா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''உள்ளங்கள் நடுங்கி கண்கள் கண்ணீரைச் சிந்தும் அளவுக்கு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்தார்கள்.''(அபூதாவூது, திர்மிதி)
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 456)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
  
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு