Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேசும் படம் ஊமையானதோ! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | March 31, 2015 | , ,

ஊரையே பேச வைத்த பேசும் படம் ஊமையானதோ என்று கேள்வியோடு எட்டிப் பார்க்கும் மின்னஞ்சல்களுக்கு பதிலுரை என்னவோ "வேலைப் பளு பேசாமல் வேலையைப் பாரு என்ற அழுத்தம்".

மூன்றாம் கண் கண்ட காட்சிகளைக் கொண்டு இனியொரு பேரணி நடத்தலாமென்ற அடுத்தக் கட்ட முடிவு :)


ஒரே  புகை மூட்டமா இருக்கு, கீழே குனிந்து பாருங்க விமானம் ஏதாவது விழுந்து கிடக்கப் போவுது !?


எதுக்கும் கொஞ்சம் தள்ளி நின்னே  பாருங்க போட்டோவை.


இங்கயும் ரோடு போட்டு தரணுமுன்னு கலக்டர்டே மனு கொடுத்துராதிய 


இந்த மாதிரி காட்டை பார்த்தால் முதலில் நினைவுக்கு வருவது காட்டு மிருகங்கள் அதற்கு அடுத்து வீரப்பன் 


ஆங்கிலத்தில் Couple (ஜோடி)இங்கே தமிழில் கப்பல் கப்பலாக 


கப்பலின் பெயரை பார்த்தாலே மைனாரிட்டி மெஜாரிட்டியை ஆட்சி செய்வது புரிய வருமே 


ஒண்டி கட்டை என்று சொல்வார்களே அதுக்கு  இது பொருந்துமா ?


ஆறு வித்தியாசமெல்லாம் ஒண்ணும் கிடையாது மேலே உள்ளது அப்படியோ கீழே தண்ணிரில் தெரிகின்றது 

Sஹமீது

“முற்போக்கு கூட்டணி – உட்கட்சிப் பிரிவு” 3

அதிரைநிருபர் பதிப்பகம் | March 30, 2015 | , , , ,

கிசு….. கிசு…..  இது உங்கள் காதுகளுக்கு மட்டுமே இந்த பிசு பிசு...!

'அழுக்கு' நல்லது !

உங்களில் எத்தனை பேர், பட்ஸ் அல்லது பின்னைக் கொண்டு காதில் உள்ள அழுக்கை எடுத்து சுத்தப்படுத்துகிறீர்கள்? அல்லது நம்மூரில் அந்தக் காலத்தில் செய்வதுபோல கோழி இறகை விட்டுக் கண்கள் சிறுக சொக்கிப்போய் குடய்கிறீர்கள்?

'நான்.. நான்...' என்று உற்சாகமாக யாரெல்லாம் காது குத்துக்கிறீர்களோ ஸாரி.. .கைதூக்குகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஒரு குட்டு, சுத்தம் என்ற பெயரில் காதுக்குள் நீங்கள் செய்யும் கலவரத்தால் சேதாராம்தான் ஏற்படுமே தவிர, உங்களின் நோக்கம் நிறைவேறாது.

அப்படியானால் காதுக்குள் இருக்கும் அழுக்கை எப்படி வெளியேற்றுவது? முதலில் அதை அழுக்கு என்று சொல்வதே தவறு. குரும்பி என்று பொதுஜன வழக்கில் அழைக்கப்படும் அந்தப் பொருள், ஒருவகையான மெழுகு போன்றது. அழுக்கு என்று நாம் நினைக்கும் இந்த மெழுகுதான் காதின் அரோக்கியத்தைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, செவிப்பறையைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம்போல் இது செயல்படுகிறது.

காது மடலில் இருந்து செவிப்பறை நோக்கி நீளும் பாதையில் சில தனித்தன்மை வாய்ந்த சுரப்பிகள் உள்ளன. அவைதான் காது மெழுகை உருவாக்குகின்றன. காதுக்குள் நுழையும் தூசிகளையும், அழுக்குகளையும் இந்த மெழுகு தன்னிடம் உள்ள ஈரப்பசையின் மூலமாக, தன்னுள் ஒட்டவைத்துக் கொள்கிறது. அதாவது, செவிப்பறையைத் தூசுகள் எட்டிவிடாமல் மெழுகு பாதுகாக்கிறது.

அது மட்டுமல்ல, காதுக்குள் இந்த மெழுகுப் படலம் பரவி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்கிறது. அதாவது, எண்ணெய்ப் படலத்தின் மீது தண்ணீர் ஒட்டாது இல்லையா? அதுபோல், மெழுகின் மீதும் தண்ணீர் ஒட்டிக்கொள்வதில்லை. மெழுகு இல்லாமல் போனால், காதுக்குள் உள்ளதோல் பகுதியில் தண்ணீர் பட்டுப் பட்டு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

பொதுவாக, ஓரளவு மெழுகு உருவானவுடனேயே அது உலர்ந்து தானாக வெளியே வந்து விடும். கூடவே, தூசிகளும் அழுக்குகளும்கூட அதனுடன் ஒட்டிக் கொண்டு வெளியேறிவிடும். காதுக்குள் இருந்து வெளிப்புறம் நோக்கி மெழுகு நகர்வதற்கான அமைப்பு இயல்பாக இருக்கிறது.

ஆனால், இது தெரியாமல், காதை சுத்தப்படுத்த நாம் முயற்சி செய்யும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. சுருளாக்கப்பட்ட துணி அல்லது பேப்பரை காதுக்குள் செருகிக் குடையும்போது மெழுகு வெளியேறுவதற்குப் பதிலாக உள்புறம் சென்றுவிட நிறைய வாய்ப்பு உண்டு. இதனால், காது அடைத்துக் கொள்ளலாம். நாளடைவில், இந்த மெழுகு மிகவும் இறுகிப் போகும்போது காது கேட்கும் தன்மைகூட பாதிக்கப்படலாம். அப்புறம், ஏழு கட்டை இ.எம்.ஹனீஃபாகூட பாடினால், பஸ்ஸில் பக்கத்து சீட்டில் அமர்ந்து பயணம் செய்யும் புது மனைவியின் கிசுகிசுப்புப் போல்தான் கேட்கும்.
மெழுகினால் காது எப்படி அடைபடும் என்பதற்கான காரணங்களை இப்படிப் பட்டியல் இடலாம்.
  • மடிக்கப்பட்ட துணி, மெல்லிய குச்சி போன்றவற்றால் நாமே மெழுகை நீக்க முயற்சிப்பது.
  • சில சமயம், தானாக மெழுகு மிக அதிகமாக உருவாவது.
  • வெளிக் காதின் பாதை குறுகிவிடுவதன் காரணமாக மெழுகு வெளிப்படுவதில் தடை ஏற்படுவது.
  • மெழுகின் அசாதாரண பண்பு காரணமாக, காதின் துவாரச் சுவர்களில் வந்து ஒட்டிக் கொள்வது.
செவித் துவாரத்தின் சுவருக்கும் மெழுகுக்கும் நடுவே மிக மெல்லிய இடைவெளி இருந்தால் கூட கேட்கும் சக்தி குறைந்துவிடாது. ஆனால், குளியல் அல்லது முகம் கழுவுதல் காரணமாக தண்ணீர் உள்ளே சென்றால் அது அந்த மெழுகை வீங்கச் செய்துவிடலாம் அல்லது எஞ்சியிருக்கும் கொஞ்சம் இடைவெளியை அந்தத் தண்ணீர் அடைத்துக் கொண்டுவிடலாம்.

இந்த நிலையில், அந்தக் காதின் சொந்தக்காரருக்கு அவரது குரலே எதிரொலிபோல் கேட்கும். காதுகளில் ஒருவித ரீங்கார ஒலி கேட்கும்.

வெளிக்காதில் உள்ள அழுக்கை, சுத்தமான துணியில் ஒருவிரலை நுழைத்துக் கொண்டு சுத்தம் செய்யலாம். மாறாக, காதுக் குழாய்க்குள் எதையும் நுழைக்க வேண்டாம்.

காது மெழுகு தானாகவே வெளியேறிவிடும் என்றோம். ஆனால், அபூர்வமாக சிலசமயம் அது கட்டிதட்டிப் போகலாம்.

அப்போது டாக்டரிடம் சென்றால் சொட்டு மருந்தை உள்ளே செலுத்துவதன் மூலம் உலர்ந்த மெழுகைக் கரைத்த பிறகு, கருவிகளின் மூலம் மெழுகை எடுத்துவிடுவார்.

சிரிஞ்ச் மூலமாகத் தண்ணீரைப் பீய்ச்சியும் எடுப்பது உண்டு. ஆனால், செவிப்பறையில் சிறிய ஓட்டை விழுந்திருந்தாலும் டாக்டர் இந்த முறையைப் பயன்படுத்தமாட்டார். மெழுகும் அழுக்கும் செவிப்பறைக்குள் சென்றுவிட வாய்ப்பு உண்டே!.

காதுக்குள் அளவுக்கு அதிகமாக மெழுகு அடைத்துக் கொண்டிருக்கிறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

  • காதுகளில் சத்தம் கேட்கும். சத்தம் கேட்டாத்தானே காது என்றெல்லாம் வியாக்கியானம் பேசக்கூடாது. இது வேறுவிதமான சத்தம்
  • காதுகளில் அதீத வலி
  • கேட்கும் சக்தி குறைவதுடன், இந்தக் குறைபாடு அதிகமாகிக் கொண்டே இருப்பது.
  • காது முழுவதும் அடைத்துக் கொண்டது போன்ற உணர்வு தொடர்ந்து ஏற்படுவது.

இந்த அறிகுறிகள் இருந்தால், உடனே தகுந்த மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், இங்கே முன்பே குறிப்பிட்டதுபோல், காதை மெழுகு நன்றாக அடைத்துக் கொண்டு, காது கேட்காத தன்மையை உருவாக்கி விடும்.

என்ன?  சொன்னதெல்லாம் காதில் விழுந்ததா?

இப்படிக்கு,
முற்போக்கு கூட்டணி

காரியம் ஆனதும் கறிவேப்பில்லை போல் தூக்கி எறியப்படும் வீட்டுப் பெரியவர்கள்.. 7

அதிரைநிருபர் பதிப்பகம் | March 29, 2015 | , , ,

சொல்ல வந்த விசயத்தை தலைப்பே தெள்ளத்தெளிவாக சொல்லி இருந்தாலும் சில நடப்புகளை இங்கு பகிர்வது ஏற்றம் என எண்ணுகிறேன். இதன் மூலப்பொருளை ஏற்கனவே சகோ. ஜாஹிர் ஹுசைன் தனக்கே உரிய நடையில் அழகாக, படிப்பவரின் கண்களிலிருந்து கண்ணீர் வடியும் விதம் தன் கட்டுரையை திற‌ம்ப‌ட‌ வடித்திருந்தார்.

ஒவ்வொரு வீட்டிலும் ஆண்களும், பெண்களும் அவர்களுக்கு திருமணம் ஆகி அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து அது தாய், தந்தையரின் பராமறிப்பில் வளர்ந்து காலப்போக்கில் அதுக்கும் திருமணங்கள் நடந்து பிள்ளைகள் பெற்று முதலில் சொன்ன ஆண்களும், பெண்களும் பேரன்,பேத்திகள் பெற்று வீட்டின் பெரியவர்கள் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தப்படுகிறார்கள்.

வீட்டுப்பெரிய‌வ‌ர்க‌ள் இந்த‌ அந்த‌ஸ்த்தை அடைய‌வ‌த‌ற்குள் ப‌ல‌ இன்ன‌ல்க‌ளையும், துன்ப‌ங்க‌ளையும், துய‌ரங்க‌ளையும், போராட்ட‌ங்க‌ளையும், நோய்நொடிக‌ளையும், ச‌ண்டைச‌ச்ச‌ர‌வுக‌ளையும், பொருளாதார‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ளையும் மற்றும் ப‌ல‌ பிண‌க்குக‌ளையும் ச‌ந்திக்காம‌ல் வந்து விடுவதில்லை.

அவ‌ர்க‌ள் உட‌ல் ந‌ல‌த்துட‌ன் இருக்கும் பொழுது வீட்டில் உள்ள‌ சிறுவ‌ர்க‌ளுக்கு ஏதேனும் துன்ப‌மும், நோய்நொடிக‌ள் வ‌ந்து விட்டால் துடித்துப்போகிறார்க‌ள். 'என் ஈர‌க்குலையே; என் தாம‌ர‌ங்காவே, என் கண்ணே, என் தாயே, என் உசுரே' என்றெல்லாம் அவ‌ர்க‌ள் பாச‌த்தின் உச்சிக்கே சென்று த‌ன் தூக்க‌த்தையும் தொலைத்து விடுவார்க‌ள். அவர்கள் சுகம் அடையும் வரை இவர்களும் சோகமாகவே இருப்பார்கள்.

ஆனால் அவ‌ர்க‌ள் யாருக்காக‌ ப‌ரிவும், பாச‌மும், இர‌க்க‌மும் கொண்டார்க‌ளோ அவ‌ர்க‌ள் நாளை வ‌ள‌ர்ந்து அவ‌ர்க‌ளுக்காக‌ பாச‌ ம‌ழை பொழிய‌ச்செய்த‌ வீட்டுப்பெரிய‌வ‌ர்களை சிறிதும் ம‌திப்ப‌து இல்லை மாறாக‌ ம‌ரியாதையில் மிதி ப‌டுவ‌தை நாம் ஆங்காங்கே காண‌ முடிகிற‌து. பெரிய‌வ‌ர்க‌ள் வயது முதிர்ச்சியால் உடலில் சுருக்க‌த்துடனும் உள்ள‌த்தில் இறுக்க‌த்துட‌னும் அவ‌ர்க‌ள் இறுதி நாட்க‌ளை எண்ணி அதை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களாக காலம் க‌ட‌த்துவ‌தை காணும் ச‌ம‌ய‌ம் நாம் ம‌ன‌ வேத‌னைப்ப‌டுவ‌தை த‌விர‌ வேறு என்ன‌ செய்ய‌ இய‌லும்?

"காய்ந்த‌ தென்ன‌ந்தோகையைப் பார்த்து ப‌ச்சைத்தோகை ஏள‌ன‌மாக‌ சிரித்த‌தாம் தானும் ஒரு நாள் காய்ந்த‌ தோகையாக‌ ஆக‌ இருப்ப‌தை ம‌ற‌ந்து" என்ற‌ ப‌ழ‌மொழி தான் இங்கு ஞாப‌க‌த்துக்கு வ‌ருகிற‌து.

கால‌ப்போக்கில் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வும், அனுசரிப்பும் இன்றி, ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வுக‌ள் முற்றி வீட்டுப்பெரிய‌வ‌ர்க‌ளை அவ‌ர்க‌ள் வாழ்ந்து அனுப‌வித்த‌ வீட்டை விட்டே வெளியேற்ற‌ நினைப்பது மற்றும் அவர்கள் உயிருடன் இருப்பதையே பெரும் சுமையாகவும், வேதனையாகவும், தொந்தரவாகவும் நினைப்பது ம‌ட‌த்த‌ன‌த்தின் உச்ச‌ க‌ட்ட‌ம். ம‌னித‌ நேய‌த்தின் பெரும் வீழ்ச்சி.

பாதிக்க‌ப்ப‌ட்ட அப்பெரியவர்களின் உள்ள‌க்குமுற‌லும், வேதனையின் வெளிப்பாடான‌ க‌ண்ணீரும் த‌ண்ணீருக்குள் அழும் மீன்க‌ளின் க‌ண்ணீர் போல் இவ்வுல‌குக்கு தெரியாம‌ல் போக‌லாம். அதை உலகம் அறிந்தும் அறியாதது போல் இருக்கலாம்/நடிக்கலாம். ஆனால் ப‌டைத்த‌ இறைவ‌னுக்கு தெரியாம‌ல் போய் விடுமா என்ன‌?

பெரிய‌வ‌ர்க‌ள் வ‌யோதிக‌த்தாலும், சுய நினைவு/உண‌ர்வு இன்றி ப‌டுக்கையில் கிட‌த்த‌ப்ப‌ட்ட‌ பிற‌கு அவ‌ர்க‌ள் ப‌டும் பாடு, அவ‌ர்க‌ளை ச‌ரிவ‌ர‌ க‌வ‌னிப்பாரின்றி ஏதோ குப்பைத்தொட்டி போல் தன் வீட்டிலேயே பாவிக்கப்படும் நிலை வேத‌னையின் உச்ச‌ கட்ட‌ம். இந்த‌ நிலை நாளை யார்,யாருக்கு வ‌ரும் அல்ல‌து வ‌ராது என்று யாரேனும் அறுதியிட்டு உறுதிப‌டுத்திக்கூற‌ முடியுமா? அதற்கே ஏதேனும் சக்தி உண்டா? இல்லை பள்ளிக்கூடம் சென்று தான் படித்து விட‌ முடியுமா?

அவ‌ர்க‌ளை க‌வ‌னிக்க‌ ச‌ம்ப‌ள‌த்திற்கு நிய‌மிக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் ப‌ண‌த்திற்கு தான் மார‌டிப்பார்க‌ளே அன்றி பாச‌ ம‌ழை பொழிந்து விடுவார்க‌ளா என்ன? நேசக்கரம் அவர்களை அரவணைக்க எங்கிருந்து வரும்? சிந்திக்க தவறுகிறோம் அதனால் சீரழிந்து நிற்கிறோம்.

சில‌ இட‌ங்க‌ளில் இது போல் ப‌டுக்கையில் கிட‌த்தப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் ம‌ர‌ண‌த்தை அன்றாடம் எதிர்பார்த்திருக்கும் இளைய‌ வ‌ய‌தின‌ர் ஏதோ கார‌ண‌த்தால் தீடீர் ம‌ர‌ண‌ம் ஏற்ப‌ட்டு ப‌டுக்கையில் கிட‌ப்ப‌வ‌ருக்கு முன்பே இவ்வுல‌கை விட்டு சென்று விடுவ‌தை காண‌ முடிகிற‌து.

ப‌டுக்கையில் இருந்தாலும் ம‌னித‌ன் ப‌ல்ல‌க்கில் சென்றாலும் ம‌ர‌ண‌த்திற்கு என்ன‌ விதிவில‌க்கு?

பெரிய‌வ‌ர்க‌ள் த‌ன‌க்கு ஏற்ப‌டும் இழிநிலைக்கும், கேவ‌ல‌த்திற்கும், ப‌ரிவ‌ற்ற‌ சூழ்நிலைக்கும், வேத‌னைக‌ளுக்கும், இர‌க்க‌ம‌ற்ற‌ செய‌லுக்கும் த‌ட்டிக்கேட்க‌வோ அல்ல‌து த‌ண்டிக்க‌வோ அவ‌ர்க‌ளுக்கு ச‌க்தியும், ம‌ன‌திட‌மும் இல்லாம‌ல் இருக்க‌லாம். ஆனால் அவ‌ர்க‌ளின் க‌ண்ணீருக்கு இறைவ‌னிடத்தில் அணுகுண்டை மிஞ்சிய‌ ச‌க்தி நிச்சயம் இருக்க‌த்தான் செய்யும்.

சம்பிரதாய சடங்குகளுக்கு மட்டுமே பெரியவர்கள் பயன்படுத்தப்பட்டு மீதி நேரங்களில் அவர்கள் மேல் இளைய வயதினர் ஆளுமை செலுத்தி கொடுங்கோல் ஆட்சி புரிவதை எங்கோ சென்று பார்க்கத்தேவையில்லை. பரவலாக எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது இந்த அவல நிலையை.

நாகரீக உலகில் இன்று 'பழையன கழிதலாய்' நினைக்கப்படும் வீட்டுப்பெரிய‌வ‌ர்க‌ள் வீட்டின் பொக்கிச‌ங்க‌ளாக பெரும்பாலும் க‌ருத‌ப்ப‌டுவ‌தில்லை மாறாக‌ ச‌மைய‌லில் ந‌ல்ல‌ ந‌றும‌ண‌த்திற்கு ப‌ய‌ன்படுத்தப்படும் க‌றிவேப்பில்லை போல் ம‌ட்டுமே கருதப்படுகிறார்கள் (திருமண பத்திரிக்கைகளில் குடும்பப்பெரியவர் பெயர் போடவும், வீட்டில் எவருக்கேனும் மரணம் ஏற்பட்டால் மய்யித் அடக்கம் செய்யப்பட்ட பின் சலாம் சொல்வதற்கு மட்டும்) அத‌ன் ம‌ருத்துவ‌ குண‌ம் அறியாத‌வ‌ர்க‌ளாய் அதை தூக்கி எறிந்து விடுகிறார்கள்.

வாழ்வின் இறுதி நாட்களில் தன் பிள்ளைகள் அல்லது பேரன்,பேத்திகள் தன்னை நன்கு கவனிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும் பிறகு கிடைக்கும் ஏமாற்றமும் அவர்கள் உள்ளத்தில் வெற்றிடமாய் நிறைந்திருப்பதை காண அதனுள் இறங்கிப்பார்ப்பவர் எவரோ? இஸ்லாமும் அதன் முக்கிய அங்கமான மனித நேயமும் இங்கு மாயமாய் மறைந்து போய் விடுவது ஏனோ?

வீட்டுப் பெரிய‌வ‌ர்க‌ளைப் போற்றுவோம்; வாழ்வில் உன்ன‌த‌ நிலை அடைவோம் இன்ஷா அல்லாஹ்....

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

காவந்து பண்ணும் கலை ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | March 28, 2015 | , , ,


(*)உழவுக்கு மாடு
ஒத்துழைக்க மறுத்தால்
எந்திரம் கொண்டு
எம் நிலம் உழுவோம்.

(*)வான் வழங்காது
வஞ்சகம் செய்திட்டால்
கேணி நீரிறைத்து
காணி நனைப்போம்.

(*)பொல்லாத பூச்சிகளின்
தொல்லை ஒழிப்பதற்கு
கொல்லி மருந்தடித்து
கொஞ்சம் காத்திட்டோம்.

(*)வளறும் பயிர்மேய
வரும் கால்நடைகள்,
தீண்ட விடாது
தடுக்குமெம் கைத்தடி.

(*)அறுத்து கதிரடித்து
விலைநெல் முக்காலும்
விளைநெல் காலுமென
வீட்டினுல் பிரித்துவைத்தோம்.

(*)கையகப் படுத்திய
கதிர்தந்த நெல்மணிகள்
பத்தாயம் ஒன்றில்
பத்திரமாய் எங்களிடம்.

(*)சர்க்கார் கண்படாது
சாமர்த்தியமாய் எம்நிலத்தை
எப்படி மடித்து
எதற்குள் மறைப்பதென்னும்

சூட்சுமம் தெரிந்தால்
சொல்லுங்கள் எம்மக்காள் !
ஆட்சியில் இருப்போர்-நிலத்தை
அபகரிக்கும் முன்னம்!

அதிரை என்.ஷஃபாத்

ஹிஜ்ராவின்போது தலைமைத்துவப் பண்புகள்... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | March 27, 2015 | ,

:::: தொடர் - 16 ::::

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா-மதீனா ஹிஜ்ராப் பயணம் பற்றி இத்தொடரில் கொஞ்சம் எழுதலாம் என்று நினைக்கிறேன்.  காலக் கணக்கு பற்றிய கருத்தாடல்கள் நடந்தபோது, பலரும் பல பரிந்துரைகளை முன்வைத்தனர்.  நபியின் பிறப்பு அல்லது இறப்பு  போன்ற தருணங்களை ஒட்டிக் காலக் கணிப்பு வைக்கலாம் என்றெல்லாம் தோழர்கள் தம் கருத்துகளை முன்வைத்தனர்.  ஆனால், அப்போது இஸ்லாமிய அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள்  இணைவைப்பில் மூழ்கியிருந்த மக்காவை விட்டு, ஓரிறைக் கொள்கையில் இணைந்துவிட்டிருந்த மதீனாவுக்கு வந்த நாட்களை அடிப்படையாகக் கொண்டு, காலக் கணிப்பை வைக்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.

காரணம், பற்பல தியாகங்களைச் செய்து, அமைதியான அடைக்கலம் தேடி வந்து, இஸ்லாமிய வாழ்வில் இன்பம் கண்ட திருக்கூட்டத் தியாகத்தின் நினைவாகக் காலக் கணக்கெடுப்பைத் தொடங்குவது எத்துணைப் பொருத்தம்?  ‘ஹிஜ்ரா’ நிகழ்வில்தான் தம் அறிவுக்கு முன்னால் தம் இரட்சகனின் நாட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர் முஸ்லிம்கள்.  அதில்தான் வெற்றியும் ஈடேற்றமும் உண்டு என்று நம்பினர்.  அதில்தானே குலம், இனம், நிறம் என்ற பாகுபாடுகள் பார்க்காமல், இறைநம்பிக்கை அடிப்படையில் முஸ்லிம்கள் ஒரே சமுதாயமாக மாறிய அற்புத நிகழ்வு ஏற்பட்டது?!

நூற்றாண்டுகளாக இருந்த குல வேறுபாடுகள் அழிக்கப்பட்டு, புதிய ஒரு சகோதரத்துவப் பிணைப்பு உண்டான நாட்கள் அவை. அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, நபியவர்களைப் பின்பற்றுதல் ஒன்று மட்டுமே மதீனத்துச் சமுதாயத்தின் முன்னிருந்த கோட்பாடாக இருந்தது.  ஆனால் இன்றோ, முஸ்லிம் சமுதாயம் இஸ்லாமியருக்கு உரித்தான ஹிஜ்ராக் கணக்கை விட்டுவிட்டு, அன்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் துடைத்தெறிந்த மூடக் கொள்கைகளை எல்லாம் பின்பற்றி வருவது கவலைக்குரியது.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:  அன்றொரு நாள் பட்டப்பகல் வேளையில் ஒருவர் தன் முகத்தை மறைத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தார்.  அவர் என் தந்தையாரை நெருங்கி நின்றபோது அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள்.  “முஹம்மத் அவசரமான ஒன்றுக்காக அன்றி, இந்தத் தகிக்கும் பகல் வேளையில் வெளிக் கிளம்பி வரமாட்டார்” என்று தந்தையார் சொன்னார்.  வந்தவர் வீட்டுக்குள் நுழைந்த பின்னர், “தயைகூர்ந்து இங்கிருப்பவர்கள் அனைவரையும் வெளியேற்றுங்கள்” என்றார்.  அதற்கு என் தந்தையார், “இறைத்தூதர் அவர்களே, அவர்கள் உங்கள் குடும்பத்தார்தாம்” என்றார்கள்.

இவ்வாறு கூறுவதற்கு, எவ்வளவு பாசப் பிணைப்பு அவர்களுக்கிடையில் இருந்திருக்க வேண்டும்! ‘உங்கள் வீடுதான் என் வீடும்’ என்று கூறுவதாக இருந்தால், அவர்களுக் கிடையில் எத்துணைப் பாசப் பிணைப்பு இருந்திருக்கவேண்டும்!  இது போன்ற அன்பும் பாசமும் நம்மிடத்தில் படிப்பினையாக இருக்க வேண்டும்?

“மக்காவை விட்டு ‘ஹிஜ்ரத்’ செய்து புறப்படுவதற்கு எனக்கு என் இரட்சகனின் அனுமதி கிடைத்துவிட்டது” என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.  அப்போது என் தந்தையார் கேட்டார்கள்:  “நானும் உங்களுக்குத் துணையாக வரலாமா?”  

“ஆம்” என்றார்கள் அண்ணலார் (ஸல்) அவர்கள்.  இதைக் கேட்டவுடன், மகிழ்ச்சிப் பெருக்கால் என் தந்தையாரின் கண்கள் கண்ணீரை உகுத்தன.  மகிழ்ச்சி மிகுப்பால் ஒருவருக்குக் கண்ணீர் வரும் என்று அப்பொழுதுதான் நான் அறிந்துகொண்டேன்.  ஹிஜ்ரா என்பது, அன்றையச் சூழலில் படுபயங்கரமான பிரயாணமாகும்.  இத்தகைய பயணம் எவ்வளவு அபாயம் நிறைந்த ஒன்றாகும் என்பதை அறிந்திருந்தும், என் தந்தையார் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள் என்றால், அவர்களுக்கிடையில் இருந்த அன்புப் பிணைப்பு எவ்வாறாக இருந்திருக்கும்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையாரிடம் இரண்டு ஒட்டகங்களை ஆயத்தம் செய்யுமாறு கூற, என் தந்தையார், “எனக்குத் தெரியும், இந்த மக்கத்துக் கொடுமையிலிருந்து உங்களைக் காக்க உங்கள் இரட்சகன் கட்டாயம் அனுமதி தருவான் என்று.  எனவே, நான் இரண்டு ஒட்டகங்களை ஆயத்தம் செய்து வைத்துள்ளேன்” என்று கூறினார்கள்.  

“இந்த வாகனங்களுக்கு வாடகையாக நான் பணம் செலுத்துவேன்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  “உங்களை எது மகிழ்விக்குமோ, அதற்கு நான் சம்மதிக்கிறேன்” என்றார்கள் என் தந்தையார்.  இதுதான் இஸ்லாமிய உபசரிப்பின் அடையாளம்.  விருந்தினர் விருப்பத்தையே ஏற்கவேண்டும்;  அவர்கள் மீது அன்பால் எதையும் திணிக்கக் கூடாது.

முன்னதாக, நபியவர்கள் தமது படுக்கையில் அலீ (ரலி) அவர்களைப் படுக்கச் செய்துவிட்டுப் புறப்பட்டார்கள்.  அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்த அடைக்கலப் பொருள்களை அவரவரிடம் திருப்பி ஒப்படைக்கும் பொறுப்பையும் அலீயிடம் கொடுத்திருந்தார்கள்.  அலீயவர்கள் இதற்கு முழுமையாகச் சம்மதித்தார்கள்.  இதுதான் நபித்தோழர்களின் நற்பண்பு.  அவர்கள் தம் குடும்பத்தைவிட, நபியின் குடும்பத்தையும் அவர்களின் கட்டளைகளையும் மேலாக மதித்தார்கள்.  அவர்களுக்கு இறைத்தூதர் மீது எத்தகைய பாசப் பிணைப்பு இருந்ததென்றால், தம்முடைய உயிரைவிட மேலாக நபியவர்களை நேசித்தார்கள்.  

நபியவர்களும் அருமைத் தோழர் அபூபக்ரும் புறப்படத் தொடங்கி, மக்கா மதீனா வழியை விட்டு மாறி, வேறு திசையில் புறப்பட்டுப் பின்னர் மதீனாவின் வழிக்கு மாறி, எதிரிகளின் பார்வையை விட்டுத் தப்பிக்க, வழக்கமான நெடுஞ்சாலையை விட்டும் தொட்டும் மாறி மாறிச் சென்றுகொண்டிருந்தார்கள்.  பயணத்தின்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் சிறிது தூரம் நபியவர்களின் முன்பாக நடப்பார்கள்; பின்னர் அதை விட்டு அண்ணலின் பின் பக்கமாக நடப்பவர்களாக இருந்தார்கள்.

இதன் காரணமென்ன என்று அவரிடம் கேட்டபோது, “எதிரி நம்மைத் தாக்க வரும்போது முன்னாலிருந்து வரக்கூடும்; அல்லது பின்னாலும் வரலாம்.  எனவேதான் நான் அவ்வாறு செய்கிறேன்” என்று என் தந்தையார் பதில் கூறினார்கள்.  “இதனால் ஆபத்து உமக்கு வருமா?  அல்லது எனக்கு ஏற்படுமா?” என்று நபியவர்கள் கேட்டார்கள்.  “எனக்குத்தான் யா ரசூலில்லாஹ்” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.  ஒரு வழியாக, இருவரும் மக்காவின் யமன் திசையில் இருக்கும் ‘தவ்ர்’ குகைக்கு வந்து சேர்ந்தார்கள்.  எதிரிகளின் பார்வையை விட்டு வெகு தூரம் வந்துவிட்டதாக ஆறுதல் கொண்டார்கள்.  அன்றிரவை அங்கேயே கழிக்க விரும்பி, அருமைத் தோழர் அபூபக்ர் அவர்கள், தாம் இருவருக்கும் பாதிப்பு ஒன்றும் இல்லாத அளவுக்கு அக்குகையைத் தூய்மைப் படுத்தினார்கள்.  இப்போது இருவரும் மக்கத்துக் குறைஷிகளின் தேடல் முயற்சியைவிட்டு வெகு தொலைவில் வந்துவிட்டார்கள் என்ற நிம்மதிப் பெருமூச்சை விட்டார்கள்.  

இருப்பினும், தேடியவர்களின் முயற்சியில் தொய்வு ஏற்பட்டிருக்கவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.  அடுத்த நாள் காலையில் குகையைச் சுற்றி மனிதர்களின் குரல் கேட்டபோது, தோழர் அபூபக்ர் அவர்கள் குகை வாசலை நோக்கியதும் திடுக்கிட்டார்கள்!  அங்கே தேடி வந்த சிலரின் காலடியைக் கண்டார்கள்.  “அல்லாஹ்வின் தூதரே!  நம்மைத் தேடிவந்துள்ள இவர்களுள் ஒருவன் குனிந்து நோக்கினாலும், நாம் அவனுடைய கண்ணில் பட்டுவிடுவோம்!” என்று பதட்டத்துடன் கூறினார்கள்.  அதற்கு அண்ணலார் (ஸல்) அவர்கள், “அபூபக்ரே! நாம் இருவர் மட்டுமன்றி, மூன்றாவதாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று ஆறுதல் படுத்தினார்கள்.

அந்த நிகழ்வை ஒட்டியே சில ஆண்டுகள் கழிந்து, கீழ்க்காணும் இறைவசனம் இறங்கிற்று:  “நம் தூதராகிய அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால், அவருக்கு யாதொரு இழப்புமில்லை.  இறைமறுப்பாளர்கள் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றியபோது, திண்ணமாக அவருக்கு அல்லாஹ் உதவி செய்தே இருக்கின்றான்.  இருவரும் குகையில் இருந்தபோது, இருவருள் ஒருவர் தம் தோழரிடம், ‘கவலைப் படாதீர்! திண்ணமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்’ என்று கூறிய நேரத்தில், அவர் மீது அல்லாஹ் தன்னிடமிருந்து அமைதியை இறக்கியருளினான்.  மேலும் நீங்கள் பார்க்க முடியாத படைகளைக் கொண்டு அவரை வலுப்படுத்தினான்.  இறைமறுப்பாளர்களின் வாக்கைக் கீழாக்கினான். எப்போதும் அல்லாஹ்வின் வாக்குதான் மேலோங்கும்.  அல்லாஹ் மிகைத்தவன்;  ஞானமுள்ளவன்.”                                                                               (9:40)

நபியவர்களுக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் இடையில், பிறர் பொறாமைப்படும் அளவுக்குச் சிறப்பான பிணைப்பொன்று இருந்தது.  அது அச்சம் மிகுந்தபோதும் துன்பங்கள் ஏற்பட்டபோதும் துணை நிற்கும் தோழர்களுக்கு இடையில் ஏற்படும் ஒன்றாகும்.  இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபாவாக உமர் (ரலி) அவர்கள் இருந்தபோது, சிலர் தமக்கிடையே, அபூபக்ர் – உமர் இவர்களுள் எவர் உயர்ந்தவர் என்பது பற்றித் தர்க்கம் செய்துகொண்டிருந்தனர்.  இதையறிந்த உமர் (ரலி) அவர்கள், “அபூபக்ரின் ஒரு நாள் வாழ்க்கையானது, இந்த உமரின் குடும்பத்தார் அனைவரின் வாழ்நாள் முழுவதைவிட மேலானதாகும்” என்று கூறிப் பொதுமக்களின் வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.  ஹிஜ்ராவின்போது தோழர்கள் மற்றவர்களைவிட, அபூபக்ரை நபியவர்கள் தேர்ந்தெடுத்ததற்கான சான்றுகளுள் இதுவும் ஒன்று.

அவர் இயல்பான தலைவர்; அறிவாளி;  பல சூழல்களில் சிறந்தவற்றை  நபியவர்களுக்குப் பரிந்துரைப்பவர்;   நபியவர்களின் மறைவுக்குப் பின்னர், இவர்தான் தலைவர் என்று தேர்வு செய்யப்பட்டு, மக்களால் இறைத்தூதரின் பிரதிநிதியாகப் பொறுப்பளிக்கப் பெற்றவர்;  வேறு யாரும் அடையப் பெறாத அளவுக்கு, அல்லாஹ்வின் தூதரின் அனுக்கத்தைப் பெற்றவர்; ‘ஷைக்’ என்னும் முதியவராக மக்களால் மதிக்கப் பெற்றவர்.

‘தவ்ர்’ குகையில் அவ்விருவரின் மூன்று நாள்கள் கழிந்தன.  அபூபக்ர் (ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ் தனது பகற்பொழுதை மக்காவில் கழித்துவிட்டு, இரவு முழுதும் இருவருக்கும் துணையாக அக்குகையில் கழிப்பார்.  அவர் மாலையில் குகையைவிட்டுப் புறப்பட்ட பின்னர், அவரின் காலடித் தடத்தை அழிக்கும் விதமாக, அபூபக்ரின் பணியாளர் ஆமிர் இப்னு ஃபுஹைரா என்பவர் தனது ஆட்டு மந்தையை ஓட்டிவந்து, அப்துல்லாஹ் சென்ற காலடித் தடத்தைப் போக்கிவிடுவார்.  அத்துடன் குகையில் இருக்கும் இருவருக்கும் ஆட்டுப் பாலைக் கறந்து உணவளிப்பார்.

அதுவரை இஸ்லாத்தைத் தழுவாதிருந்த அப்துல்லாஹ் இப்னு உரைக்கித் என்பவர் இருவருடனும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, நபிக்கும் அபூபக்ருக்கும் மதீனாவை நோக்கிய பெருவழியை விடுத்து, மாற்று வழியைக் காட்டி அழைத்துச் செல்வதற்காக அமர்த்தப் பட்டிருந்தார்.

இதற்கிடையில், மக்காவில் குறைஷிகள், முஹம்மதையும் அபூபக்ரையும் கொன்றோ உயிருடனோ பிடித்துத் தருபவர்களுக்கு நூறு ஒட்டகங்கள் கொடுப்பதாக அறிவித்திருந்தனர்.  அந்தக் காலத்தில் ஒட்டகம்தான் ஒருவருடைய செல்வாக்கின் அடையாளமாகக் கருதப்பட்டிருந்தது.  

குறைஷிகளின் அறிவித்தலைச் செவியுற்றிருந்த சுராக்கா இப்னு மாலிக் என்பவர் ஒரு நாள் தன் கூட்டத்தாருடன் பேசிக்கொண்டிருந்தார்.  அப்போது அந்த வழியாக வந்த ஒருவர், தான் இருவரைக் கண்டதாகவும், அவர்கள் நபியும் அபூபக்ருமாகத்தான் இருப்பர் என்றும் கருத்தறிவித்தார்.  இப்னு உரைக்கித்தின் மனத்தில் பொறி தட்டியது போன்ற உணர்வு!  ‘நிச்சயமாக அவ்விருவரும்தான்’ என்று தனக்குள் கூறிக்கொண்டு, தான் ஒட்டகப் பரிசைப் பெறவேண்டும் என்று தீர்மாணித்தவராக, செய்தி கொண்டுவந்த ஆளிடம், “நீ கண்டது வேறு யாரோ இருவர்” என்று மறுப்புரைத்தார்.  தன் கூட்டத்தார் அங்கிருந்து பிரிந்து சென்ற பின்னர், தன்னிடம் இருந்த வேகமாக ஓடும் குதிரையையும் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, வழிப்போக்கன் கூறிய திசையில் பறந்து சென்றார்.

அல்லாஹ்வின் தூதரவர்கள் இறைவசனங்களை ஓதியவர்களாக முன்னால் செல்ல, தோழர் அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்னால் நடந்துவர, அவர்கள் வலைந்து வலைந்து சென்றுகொண்டிருந்ததைப் பார்த்துவிட்டார் இப்னு உரைக்கித்!  அபூபக்ரும் இதைப் பார்த்துவிட்டார்!  நபியவர்களிடம், அந்த ஆபத்திலிருந்து தப்பிக்க இறைவனை இறைஞ்சுமாறு கேட்டுக்கொண்டார்.  மறுபடியும் திரும்பிப் பார்த்தபோது, குதிரையின் கால்கள் மணலில் புதைந்து இருந்ததையும், இப்னு உரைக்கித் கீழே வீழ்ந்து கிடந்ததையும் கண்டார்!  இறைவனைப் புகழ்ந்தவாறு இருவரும் முன்னேறிச் சென்றபோது, மீண்டும் சுதாரித்துக்கொண்டு, சுராக்கா வீழ்ந்த நிலையிலிருந்து தன் குதிரையை எழுப்பி அவ்விருவரையும் பின்தொடர்ந்தார்.

சிறிது தொலைவு சென்ற பின் மீண்டும் குதிரை மணலில் புதைய, சுராக்கா வீழ்ந்தார்!  அவருக்கோ வியப்பு! அடுத்த முறையும் குதிரையை எழுப்பிப் பயணத்தைத் தொடர்ந்தபோது, முன்னைப் போன்றே முகம் குப்புற வீழ்ந்தார்!  இது அசாதாரணமான நிகழ்வென்பதை உணர்ந்துகொண்ட சுராக்கா, வேறு வழியின்றி, நபியவர்களிடம் மன்னிப்பை வேண்டி மன்றாடினார்.  

மன்னிக்கும் மாண்பினை இயல்பாகப் பெற்ற மாநபி (ஸல்) அவர்கள், அவர் திருந்தட்டும் என்று கருதி, சுராக்காவை மன்னித்தார்கள்.  தமக்களித்த மன்னிப்பையும் உறுதி மொழியையும் எழுத்தில் தருமாறு வேண்டினார் சுராக்கா.  நபியவர்கள், எழுதத் தெரிந்த அப்துல்லாஹ் இப்னு உரைக்கித்திடம் வாசகத்தை எழுதுமாறு கூறவே, அவரும் எழுதினார்.  எழுத்தைப் பெற்ற சுராக்கா, குறைஷிகளிடம் திரும்பிச் சென்று, நபியவர்களைப் பிடிப்பது முடியாதது என்றும், அது வீண் முயற்சி என்றும் கூறினார்.  நபியும் அபூபக்ரும் வழிகாட்டியும் தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.

பாருங்கள்!  மூன்றுபேர், தகிக்கும் வெயிலில், பாலை வெளியில், அவர்களைப் பிடித்துக் கொலை செய்யத் துடிக்கும் எதிரியால் துரத்தப்படுகின்றனர்!  எத்துணை ஆபத்தான சூழ்நிலை!  ஆனால் இன்றோ, மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்றதை ஒரே சொல்லில் நாம், ‘ஹிஜ்ரத்’ என்று சொல்லிவிடுகின்றோம். அப்பயணம் எதற்காக மேற்கொள்ளப் பட்டது என்பது பற்றிய ஆய்வோ, சிந்தனையோ, பாராட்டோ, விளக்கமோ நமக்கில்லை. பசி, தாகம், ஆபத்து, சிரமம், பாதுகாப்பின்மை ஆகியவற்றுடன் இப்பயணம் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்ற சிந்தனை கொஞ்சம்கூட இல்லை.  இவற்றுக்கிடையில், அல்லாஹ்வின் தூதருக்கு இருந்த அசைக்க முடியாத அச்சமின்மை!  இதுதான் தலைமைத்துவத்திற்கு இருக்கவேண்டிய பண்புகளுள் தலையாயது.  அந்தச் சூழலில் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைவிட தைரியசாலி யாருமே கிடையாது.

இனி, அவர்களின் ஹிஜ்ராப் பயணத்தைத் தொடர்வோம்.  அண்ணலும் அபூபக்ரும் அந்தப் பாலைப் பயணத்தின்போது ஓர் இளைப்பாறும் இடத்தை வந்தடைந்தனர்.  அக்காலத்தில் தொலைதூரப் பயணிகள் இளைப்பாறிச் செல்வதற்காகப் பாலைப் பிரதேசத்தின் இடையிடையே வழிதங்கு கூடாரங்கள் அமைந்திருக்கும்.  அவற்றின் உரிமையாளர்கள், கணவன் மனைவி பிள்ளைகள் சகிதம், வழிப்போக்கர்கள் இளைப்பாறும் விதத்தில் தண்ணீர், ஆடு மற்றும் ஒட்டகப் பால், பேரீத்தம்பழம் போன்ற உணவுப் பண்டங்களை வழங்கிப் பயணிகளுக்கு ஆதரவளிப்பது வழக்கம்.  அத்தகைய ஒரு கூடாரம், ‘உம்மு மஅபத் கூடாரம்’ என்ற பெயரில் புகழ் பெற்றதாக இருந்தது.  அதைத் தமது பயண வழியில் கண்டு, பயண இடைநிறுத்தம் செய்தனர் அண்ணலும் அபூபக்ரும்.

அவ்விருவரும் வந்து தங்கிய நேரத்தில், உம்மு மஅபதின் கணவர் ஆடு மேய்க்கச் சென்றிருந்தார்.  அவர் இல்லாதபோதும், வருகின்ற பயணிகளை உபசரிப்பது, உம்மு மஅபதின் பொறுப்பாகும்.  “எமக்கு உணவாக ஏதேனும் உங்களிடம் உண்டா?” என்று அப்பெண்ணிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.  “என்னிடம் அப்படி ஏதேனும் இருந்தால், நீங்கள் கேட்கும்வரை நான் சும்மா இருந்திருக்க மாட்டேனே” என்று பதில் அளித்தார் அம்மாது.  

பாலைவனத்து அரபுகள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள்.  அப்பெண்ணின் ஆடுகள் அனைத்தும் மேய்ச்சலுக்குச் சென்றுவிட்ட நிலையில், கூடாரத்தின் மூலையில் ஒரு நோஞ்சான் ஆடு மட்டும் கட்டப்பட்டிருந்தது.  அதனைக் கண்ட பெருமானார் (ஸல்), “அதோ, அந்த ஆட்டில் நாங்கள் கொஞ்சம் பால் கறந்துகொள்ளலாமா?” என்று கேட்டார்கள்.  “அந்த ஆடு உடல் நலத்துடன் இருக்குமாயின், மற்ற ஆடுகளுடன் மேய்ச்சலுக்கு அல்லவா சென்றிருக்கும்?  இந்த நோய் பிடித்த நோஞ்சான் ஆட்டில் உங்களுக்கு என்ன இருக்கப்போகிறது?” என்று பதில் அளித்தாள் உம்மு மஅபத்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் மீண்டும் வலியுறுத்திக் கேட்கவே, அதற்கு அப்பெண் சம்மதித்தார்.  அந்தக் கூடாரத்தில் இருந்த மிகப் பெரிய பாத்திரத்தை எடுத்துத் தருமாறு கேட்டனர் அண்ணல்.  அப்பெண்ணும் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் பாத்திரத்தை எடுத்துக் கொடுத்தாள்.  ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள்,  அந்த ஆட்டின் மடியை ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி, வலக்கையால் தட்டினார்கள்.  என்ன ஆச்சரியம்!  அந்த நோஞ்சான் ஆட்டின் மடி புடைத்துப் பெரிதாகிற்று!  பாத்திரத்தில் பால் ஒழுகத் தொடங்கிற்று!  அப்பாத்திரத்தின் விளிம்பு வரை பால் நிறைந்தபோது நின்றது!  

முதலில் பால் பாத்திரத்தை உம்மு மஅபதிடம் கொடுத்து, தேவையான பாலை எடுத்துக்கொள்ளுமாறு நபியவர்கள் கூறினார்கள்.  அப்பெண்ணும் தன் வியப்பிலிருந்து விடுபடாத நிலையில், தனக்கு வேண்டிய பாலை எடுத்துக்கொண்டு, எஞ்சிய பாலைத் திருப்பிக் கொடுத்தார்.  நபியவர்கள் அபூபக்ரைக் குடிக்கச் சொன்னார்கள்.  அன்னார் குடித்து முடிந்தபின், வழிகாட்டியிடம் குடிக்கக் கொடுத்தார்கள்.  கடைசியாக, அண்ணலார் (ஸல்) அவர்கள் குடித்துவிட்டு, எஞ்சிய பாலுடன் பாத்திரத்தை உம்மு மஅபதிடம் திருப்பிக் கொடுத்தார்கள்.  பின்னர் அப்பெண்ணுக்கு நன்றி கூறிவிட்டுத் தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.

இருள் கவியத் தொடங்கியபோது, அப்பெண்ணின் கணவர் ஆட்டுக் கிடையுடன் கூடாரத்திற்குத் திரும்பி வந்தார்.  அதுவரை, சற்று முன் நடந்த நிகழ்வின் வியப்பிலிருந்து மீளாத உம்மு மஅபத், தன் கணவரிடம், நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறினார்:

“இன்று அற்புத மனிதர் ஒருவரைக் கண்டேன்.  அழகிய முகத்தை உடைய ஒல்லியான மனிதர்.  அவருடைய தலை நடுத்தரப் பருமன் கொண்டது.  நேரிய பார்வையுடையவர்.  நீண்ட முடிகளுடன்கூடிய  கண்ணிமைகளை உடையவர்.  அடக்கமான குரலையும் அறிவார்ந்த சொற்களையும் உடையவர்.  நீண்ட முடியையும் நெடிய கழுத்தையும் கொண்டவர்.  அடர்த்தியான தாடியை உடையவர்.  அவர் மவுனமாக இருக்கும்போது, கம்பீரமாகத் தோன்றினார்; பேசும்போது அவரின் அறிவு, இதயங்களில் இடம் பிடித்தது.  அவருடைய பேச்சு கவர்ச்சியாக இருந்தது.  முத்துப் பரல்கள் கொத்துக் கொத்தாகக் கோர்த்தது போன்ற அழகு அதில் இருந்தது.  தொலைவிலிருந்து பார்ப்பதற்கு அவரின் தூய்மை தெரிந்தது.  அருகிலிருந்து பார்ப்பதற்கு அமைதி தழும்பியது.  நடுத்தரமான உயரத்தை உடையவர்.  நெட்டையரும் அல்லர்; குட்டையரும் அல்லர். வந்த மூவருள் மிக அழகானவர்.  அவருடன் வந்தவர்கள், அவரின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டனர். சிறந்த உதவியாளர்களையும் பணியாளர்களையும் உடையவர்.  அவர்கள் இவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டனர்; மறுப்பு இல்லாத மாண்பாளர்!”    

இதற்கு அப்பெண்ணின் கணவர் சொன்னார்:  “இந்த மனிதர்தான் இறுதித் தூதர் முஹம்மதாக இருக்கக்  கூடும்.  மக்கத்துக் குறைஷிகள் இவரைத்தான் தேடுகிறார்களாம்.  அந்த மனிதரைச் சந்தித்திருந்தால், நான் அவரிடம் உறுதிமொழி கொடுத்து முஸ்லிமாகியிருப்பேன்.”  

அப்போதுதான், உம்மு மஅபத் அந்த நபியின் கையில் உறுதிமொழி அளித்து இஸ்லாத்தைத் தழுவிய தகவலைத் தன் கணவரிடம் கூறினார்.

எந்தத் திருநகரை நோக்கிச் சென்றார்களோ, அந்த நகரில் வாழ்வாதாரங்களும் வசதிகளும் முஸ்லிம்களுக்கு வேண்டும் எனும் நாட்டம் கொண்டு, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் ௮இவ்வாறு இறைஞ்சினார்கள்:

“அல்லாஹும்ம ஹப்பிப் இலைனல் மதீனத்த, கஹுப்பினா மக்கா அவ் அஷத்து” (அல்லாஹ்வே!  நாங்கள் மக்காவின் மீது நேசம் வைத்தது போல், அல்லது அதைவிடக் கூடுதலாக மதீனாவின் மீது எங்களை நேசம் கொள்ளச் செய்வாயாக!)

மதீனாவின் வளவாழ்விற்காக இன்னும் இறைஞ்சினார்கள்:  “யா அல்லாஹ்!   மக்காவின் வளவாழ்வைவிட இரு மடங்கு வளவாழ்வை மதீனாவில் ஆக்கித் தருவாயாக!”  யுகவாழ்வின் முடிவுக்கு முன்னால் ‘தஜ்ஜால்’ மதீனாவிற்குள் நுழைவதை அல்லாஹ் தடுத்து வைத்துள்ளான். துன்பங்களின்போது, சகிப்புத் தன்மையை மேற்கொள்பவர் களுக்கு இரு மடங்கு கூலியுண்டு.

முஸ்லிம்கள் மக்காவை விட்டு மதீனாவுக்கு வந்து சேர்ந்தபோது, மாறுபட்ட சூழலால், அங்கு நோய் பரவியிருந்தது.  நபித்தோழர்கள் மதீனாவுக்கு வந்து இருப்பிடங்களை அமைத்துக்கொண்டபோது, அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.  அங்கு தொடர்ந்து வாழ்வதற்கு முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.  அந்தச் சூழலில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  “எவரெல்லாம் இந்தக் கடுமையான சூழலைப் பொறுத்துக்கொண்டார்களோ, அவர்களுக்காக மறுமையில் நான் பரிந்துரைப்பேன். எவரெல்லாம் இந்த மதீனாவில் இறந்துபோக விரும்புவார்களோ, அவர்கள் அப்படியே செய்யட்டும்.  ஏனெனில், அவர்களுக்கும் நான் மறுமையில் பரிந்துரை செய்வேன்.”

நன்மனத்துடன் கேட்கும் துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்.  இரண்டாம் கலீஃபாவான உமர் இப்னுல் கத்தாபு (ரலி) மதீனாவில் இருக்கும் நிலையில் தமக்கு ‘ஷஹீத் என்னும் வீரத் தியாக இறப்பு நேரிடவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள்;  அன்னார் விரும்பியபடியே, ஒரு நாளன்று அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, கிருஸ்தவ அடிமை ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டு,  அவர்களின் இறப்பு ‘ஷஹீது’டைய நிலையில் மதீனாவில் நிகழ்ந்தது!

ஒருமுறை நபி (ஸல்) கூறினார்கள்:  “மதீனத்து மக்களுக்கு எதிராக எவர் சதித் திட்டம் தீட்டினாரோ, அவரை அல்லாஹ் உப்பு கரைவது போன்று கரைத்து வேதனை செய்வான்.  மதீனா புனிதமான நகராகும்.  இதிலுள்ள பசுமரங்களை வெட்டுவதும், உயிர்ப் பிராணிகளைக் கொள்வதும், போர்க்கருவிகளை வைத்திருப்பதும், போர் புரிவதும் தடை செய்யப்பட்டதாகும்.”  

இந்த ‘ஹிஜ்ரத்’துப் பணத்தின்போது நிகழ்ந்த நிகழ்வுகளுள் ஒன்றிலிருந்தேனும் பாடம் படித்துக்கொள்வது மிக விரும்பத் தக்கதாகும்.  இந்த ‘ஹிஜ்ரா’வையே இஸ்லாமிய நாள் கணிப்புக்கு ஆதாரமாகச் செயல்படுத்தத் தொடங்கியது, இதன் சிறப்புக்குச் சான்றாகும்.  நான் முன்பு குறிப்பிட்டதைப் போன்று,  இந்தப் பயணமானது,  அன்று பல தெய்வக் கொள்கையில் மூழ்கி  நெறியிழந்த மக்காவிலிருந்து, நபிக்கு அமைதியையும் ஆறுதலையும் வழங்கிய மதீனாவுக்குப் புலம்பெயர்ந்ததைத் தொடக்கமாகக்  கொண்ட  ‘ஹிஜ்ரா’தான், இஸ்லாமிய ஆண்டாகக் கொள்ள மிகப் பொருத்தமானதாகும். நபியுடைய பிறப்பு அல்லது இறப்பின் நினைவாகக் கொள்ளத் தக்கதன்று.  இஸ்லாமானது வெற்றுக் கொள்கைகளை விடுத்து, அல்லாஹ்வுக்கு அடிபணிந்த செயலாக்கத்தை அடிப்படையாகக்  கொண்டதாகும்.   

எனவே, ‘ஹிஜ்ரா’ என்பது, அல்லாஹ் விரும்பாதவற்றை விடுத்து, அவன் விரும்பும் ஒன்றின் பக்கம் கடந்து செல்வதாகும்.  புலம்பெயர்ந்து செல்லல் என்பது, மனித வாழ்வின் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி, அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்யாத, கட்டுப்பட்ட நிலைக்கு மாறிச் செல்வதாகும்.  இத்தகைய ‘ஹிஜ்ரா’தான் நம்மிடத்திலும் ஏற்படவேண்டிய ஒன்றாகும்.  சுருங்கச் சொன்னால், தீமைகள் நிறைந்த இடத்திலிருந்து நன்மைகள் நிறைந்த இடத்துக்குப் புலம்பெயர்ந்து செல்வதாகும்.  இந்தப் பாதையில் ஷைத்தான் குறுக்கிட்டு, ‘எல்லா இடங்களும் தீமைகள் நிறைந்தவையே’ என்று போதித்துக் குறுக்கே நிற்பான்.

அழைப்பியல் வரலாற்றில் ‘ஹிஜ்ரா’தான் உண்மையான நிலையாகும்.  முன் வாழ்ந்த இறைத் தூதர்கள் அவர்களின் வாழ்நாட்களில் அடித்துத் துரத்தப்பட்டார்கள்; கொலையும் செய்யப்பட்டார்கள்!  இறைத் தூதரல்லாத இன்னும் பலர்  தமது அழைப்புப் பணியின் காரணமாக, ஆனவக்காரர்களால் அழித்தொழிக்கப் பட்டார்கள்! இந்த நிலையானது, இக்காலத்திலும் உண்மையின் எதிரிகளால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. இதுதான், அன்று நபியவர்களுக்கு இறைமறை அருளப்பட்டபோது, வரகா இப்னு நவ்ஃபல் என்ற முதியவரால் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் முன்மொழியப்பட்ட உண்மையாகும்.  எதிர்ப்பு, வேதனை, நிந்தனை, ஊரை விட்டுத் துரத்துதல் முதலான சோதனைகளுக்குப் பின்னும், அழைப்பியல் நெறிகள் தொடரும்போது கிடைக்கும் ‘வெகுமதி’களோடு தொடர்புடைய சோதனையாகும்.  இதனால்தான், ‘ஹிஜ்ரா’ என்னும் புலம்பெயர்தல் குறிப்பிடத் தக்க ஒன்றாகின்றது.

குர்ஆனுக்கு, ‘ஃபுர்கான்’ எனும் மற்றொரு பெயரும் உண்டு.  காரணம், இவ்வேதமானது, நன்மையைத் தீமையிலிருந்து பிரித்துக் காட்டுகின்றது. இதனால்தான் நபியவர்களின் வாழ்நாளில் நடந்த முதல் பெரும்போரான ‘பத்ரு’ப் போரும், நன்மையைத் தீமையிலிருந்து பிரித்துக் காட்ட நடந்த போர்களும் ‘ஃபுர்கான்’ என்ற பெயரைப் பெறுகின்றன.  ‘தஅவா’ எனும் நற்பணிக்கு எதிராக ஷைத்தானும் அவனுடைய தோழர்களும் குறுக்கே நிற்பார்கள்.  இந்த நிலை இன்றும் நடைபெற்றே வருகின்றது.  இஸ்லாம் எப்பொழுதுமே தன்  அடியார்களுக்கு  நன்மையையும் தீமையையும் பிரித்துக் காட்டி, அவர்களைச் சிந்தித்துப் பார்க்கத் தூண்டுகின்றது.

இடையில், இத்தொடரின் மூல நூலாசிரியர் தனது ஹஜ்ஜின்போதான நிகழ்வுகளின் பக்கம் நமது கவனத்தைத் திருப்புகின்றார்.

எனது மக்கா-மதீனப் பயணத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் மதீனாவை நெருங்கியபோது ‘மஸ்ஜிதுன் நபவி’யின் மினாராக்களையும் பார்க்கின்றேன்.  மக்காவிலிருந்து மதீனாவுக்குச் செல்ல நபியவர்கள் எந்த வழியைத் தெரிவு செய்தார்களோ, அதே வழியில்தான் (‘தரீக் அல்ஹிஜ்ரா’) நாங்களும் செல்லுகின்றோம்.  அன்றைய சஊதி மன்னரின் ஆணைப்படி, எந்த வலைந்து நெளிந்த  பாதையில் பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்தார்களோ, அதே வழியை அடையாளம் கண்டு, புதிய நெடுஞ்சாலை அமையவேண்டும் என்ற நோக்கில் போடப்பட்ட ஹிஜ்ராவின் வழி என்ற பொருள்படும் ‘தரீக் அல்-ஹிஜ்ரா’வாகும் அந்த நெடுஞ்சாலை. அப்பணியை முடிக்க ஏராளமான பொருட்செலவு ஆகியிருக்கும்.  மலைகளையும் படுபாதாளங்களையும் ஊடுருவிச் சென்று, அமையப் பெற்றதாகும் இப்பெருவெளி.  1400 ஆண்டுகளுக்கு முன் நபியவர்கள் எந்த வழியில் மதீனாவுக்கு வந்தார்களோ, அதே வழியைக் கண்டுபிடித்து,   இன்றும் ஹாஜிகள் அதே வழியில்தான் மதீனாவுக்கு வரும் வகையில் அப்பெருவழி அமைந்துள்ளது!

ஆனால் இன்று நாமோ, புதுமையான வாகனங்களில் ஏர்கண்டிஷன் இணைப்புடன் சுகமாகச் சென்று வருகின்றோம்.  இதற்கு மாறாக, அன்று இறைத்தூதரும் அவர்களுடன் இப்பயணத்தில் பங்குபெற்ற இருவரும் எப்படி மதீனாவுக்குச் சென்றார்கள் தெரியுமா?  சுட்டெரிக்கும் வெயிலில், சுடுமணலிலும் செங்குத்தான மலைகளிலும், அதலபாதாளங் களிலும், மனித சஞ்சாரமற்ற காடுகளிலும் புகுந்து புகுந்து, எதிரிகளின் கண்களில் பட்டுவிடாமல் அஞ்சியஞ்சிப் பயணம் செய்தனர்!

இன்றோ நமக்கு?  ஆங்காங்கே எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள், மலைகளைத் தாண்டியுள்ள அதலபாதாளங்கள் எத்தனை அடி உயரம் என்றும், ‘எச்சரிக்கையாகச் செல்லுக’ என்ற அறிவிப்பும், பெருவழியின் ஒரு பக்கத்தில் நமது வாகனத்தை நிறுத்திவிட்டுக் குனிந்து நோக்கினால், அந்தப் பாதாள வழி மயக்கத்தை உண்டாக்கும் விதத்தில் கண்களுக்கு முன்னால் ஆழமாகக் காட்சி தரும்!  இன்றுபோல், அன்றைய வாழ்க்கை இலகுவானதன்று.  தம் உறுதியில் தளராத குணத்தைக் கொண்டவர் மாநபியவர்கள்!  போர் வீரர்!  தமது குறிக்கோளை அடைவதில் சளைக்காத மாமனிதர்!

அன்னாரின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பவர்கள் ஒரே வரியில், ‘அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்றார்கள்’ என்று படித்துவிடுவார்கள்.  ‘ஹிஜ்ரத்’ சென்றார்கள் என்ற இரு சொற்களில் எதைக் காண்பார்கள்?  எதைச் சிந்திப்பார்கள்?  உடலாலும் உணர்வாலும் ஆன்மிகத்தாலும்  தொடர்பு படுத்திச் சிந்தித்ததுண்டா?  நபி அவர்களைப் பொறுத்தவரை, ‘ஹிஜ்ரத்’ என்பது, சொந்த நாட்டை, பிறந்தகத்தை, உறவினர்களை, முன்னோரின் பதிவுகளைத் துறந்து, நிரந்தரமாக வேறொரு ஊரில் தங்கி வாழும் நோக்கில் செல்வதுதான் ‘ஹிஜ்ரத்’.  

இன உணர்வில் வாழும் நாடோடிச் சமுதாயங்களைப் பொறுத்தவரை, பிறந்தகத்தைத் துறந்து செல்வதென்பது, கடுமையான தண்டனைக்குரியதாகும்!  அந்த நாடோடிச் சமுதாயத்தில் இச்சட்டம், புரிதலில் மட்டும் இருந்ததே தவிர, கொடும் குழப்பத்தை உண்டாக்கிய கயவன் விஷயத்தில்கூட நடைமுறைப் படுத்தப் படாமல் இருந்தது.  ஆனால், எந்தக் குற்றமும் இழைக்காத இறுதித் தூதரின் விஷயத்தில் மட்டும் அது நடைமுறைப் படுத்தப்பட்டது!  விந்தைக்குரியதன்றோ இப்பாகுபாடு!

அந்த நாடோடிச் சமுதாயத்தில், விசுவாசம் என்ற ஒன்று மட்டும் வலுவாக இருந்தது.  அன்று ஒவ்வொரு சமுதாயமும் அந்தச் சமுதாயத்தின் ஆள் தவறிழைத்து இருந்தாலும்கூட, அவனுக்காகப் பரிந்துகொண்டு வாதாடுவது வழக்கமாக இருந்தது.  பல்லாண்டுகளுக்குப் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த வழக்கத்திற்கு உயிர் கொடுக்கும் விதத்தில், ஆனால் புதியதோர் அர்த்தத்தில் கூறினார்கள்:  “உங்கள் சகோதரன் அநீதி இழைத்திருந்தாலும், அநீதி இழைக்கப்பட்டிருந்தாலும், அவனுக்கு உதவி செய்யுங்கள்!”   

இதைக் கேட்ட நபித்தோழர்கள் வியப்புடன் கேட்டார்கள்:  “அல்லாஹ்வின் தூதரே!  அநீதி இழக்கப்பட்டவனுக்கு உதவி புரிதல் சரிதான்.  ஆனால் அந்த அநீதி இழைத்தவனுக்கு நாங்கள் எப்படி உதவுவோம்?”  

அதற்குப் பெருமானாரின் மறுமொழி என்ன தெரியுமா?  “அநீதி இழைத்தவனை அந்த அநீதியைச் செய்யாமல் இருக்கச் செய்வதுதான் அவனுக்கு உதவுவதாகும்.  நீங்கள் அவனுக்கு உதவாவிட்டால், அவனை அல்லாஹ் தண்டிப்பான்” என்றார்கள்.

ஆனால் இன்றோ, மக்கள் பழைய நிலைக்கே சென்றுவிட்டார்கள்.  அறியாமைக் காலத்தில் இருந்த நீதிக்குப் பகரமாக அநீதி இழைத்தவனுக்கு முழு ஆதரவும் கொடுத்து, நேர்மைக்கும் நீதிக்கும் புறம்பாக நிற்கின்றனர்!  இந்த நிலையின்போதுதான், முஹம்மத் (ஸல்) அவர்கள் வழங்கிய நீதியானது, காரிருளில் வெளிச்சமிட்டது போன்று வெளிச்சத்துடன் இலங்குகின்றது!  நீதியை நிலைநாட்ட வந்த தூதரைக் கொலை செய்வதனால் நீதி நிலைக்கும் என்ற பொய்க் கனவுதான், அன்னாரின் எதிரிகள் கொண்ட நோக்கமாகும்.

‘ஹிஜ்ரா’ என்பது, நபியவர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாகும்.  அன்னார் நேசித்த மக்கப் பதியை விட்டு அவர்களைத் தப்பியோட வைத்த ஒன்றாகும்.  அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்டது மக்கா!  அந்த ஊரின் ஒவ்வொரு மலை முகட்டையும் வீட்டையும் விட்டு, அவர்களைத் துரத்தியது கொடுஞ் செயலாகும்.  அந்த ஊரிலேயே பிறந்து, அதில் ஐம்பத்து மூன்றாண்டுகள் வசித்து, அங்கேயே கதீஜா என்னும் மாதரசியை மணமுடித்து, அவர் மூலம் குழந்தைப் பேற்றை அடைந்த ஊர்! எதிரிகள் அவருக்கு எதிரான வன்கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டபோது, மனைவி கதீஜாவின் ஆதரவைப் பெற்றுத் தந்த ஊர்! ஆதரவாக இருந்த இரண்டு ஜீவன்கள் – கதீஜாவும் அபூதாலிபும் – இறந்துவிட்ட நிலையில், அநாதை போன்று ஆகிவிட்ட நபியின் கவலையில் பங்குபற்றிய ஊர்!  நபியவர்களின் பிள்ளைகள் (குழந்தை இப்ராஹீம் தவிர) அனைவரும் பிறந்து வளர்ந்த ஊர்! தொடக்கத்தில் அன்னார் மீது பாசத்தையும் பரிவையும் பொழிந்து, பின்னர் நேர்மாறாக எதிர்ப்பைக் காட்டிய ஊர், இப்போது தொலைவில் ஆகிவிட்டது!  இத்தகைய பிறப்பிடத்தை இறைக் கட்டளையினால் விட்டுச் செல்ல வேண்டிய சூழல்.  நபியவர்களின் பிரச்சாரப் பணியினால் மக்கள் திருந்துவதைப் பொறுக்க முடியாதா மக்கத்துக்
குறைஷியரால் நபி தொல்லை கொடுக்கப்பட்டார்கள்!

இதனால்தான் ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:  “நபிமார் அனைவரும் அவரவர் சமூக மக்களால் வதைக்கப் பட்டார்கள்.  அவர்களுள் இறுதியான நான்தான் அதிகமாக வதைக்கப்பட்டவன்!”

சமூக மக்களின் ‘ஹிதாயத்’ என்னும் நேர்வழி நன்மைக்காகத் தூதர்கள் சொல்வதை எடுத்துக்கொள்ளாமல் முரண்படும் மக்கள், அக்காலம் தொட்டு இக்காலம்வரை இருந்தே வருகின்றனர்.  முற்காலத்தில் இது போன்ற சேவை செய்த சீர்திருத்தவாதிகளைக் கொலையும் செய்துள்ளனர் அக்கால மக்கள்!  அச்சீர்திருத்தவாதிகளுள் ஒருவர் பற்றிய வரலாற்றை நபியவர்கள் தம் தோழர்களுக்குக் கூறிவிட்டுக் கீழ்க்காணும் இறைவசனத்தை எடுத்தோதினார்கள்: “அந்தோ!  அடியார்கள் மீது கைசேதமே!  அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும், அவரை அம்மக்கள் ஏலனப் படுத்தாமல் இருந்ததில்லை.”  (36:30)

‘ஹிஜ்ரா’ எனும் புலம்பெயர்தலின்போது, தன் உற்றார் உறவினரை எந்தப் பாதுகாப்பும், எந்தப் பாதுகாப்பு வாக்குறுதியும் அவர்களுக்குக் கொடுக்காமல், அவர்களை விட்டுவிட்டுச் செல்லும் நிலைதான் நபிக்கும் தோழர்களுக்கும் ஏற்பட்டது!

மக்காவிலிருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றபோது, வெறுமனே தப்பியோடுதல் மட்டும் நிகழவில்லை.  மக்காவின் இன்னும் அதன் சுற்றுப்புரங்களின் இனத்தவர்களுக்குக் கூறப்பட்ட செய்தி அது.  நபியவர்களின் தலைக்கு விலை!  நூறு ஒட்டகங்கள்!  ஓரிரு ஒட்டகங்கள் வைத்திருந்தாலே அக்காலத்தில் ஒருவன் பணக்காரனாக மதிக்கப்பட்டான்.  இப்போது நூறு ஒட்டகங்கள் என்பதை அறிவித்தபோது, ஊர் பேர் தெரியாதவர்கள் பலர் உந்தி எழுந்து நான்கு திசைகளிலும் பறந்து சென்றனர்.  பலர் அந்தத் தேடுதல் வேட்டையில் இறங்கியது முதல் நபிக்குப் புதிய பகைவர்களானார்கள்!  

நபித்துவத்துக்குப் பிறகான பதின்மூன்று ஆண்டு கால மக்காவில், நபித்துவ வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைத்தது, ‘ஹிஜ்ரா’.  நபியவர்களின் உண்மை மார்க்கப் பிரச்சாரங்களின் வழியாகப் பலர் சிந்திக்க மறுத்தார்கள்;  தோல்விக்கு மேல் தோல்வி!  விரல் விட்டு எண்ணத் தக்கவர்களே முஸ்லிம்களானார்கள்.  

ஏமாற்றத்தை ஏற்படுத்தும் இது போன்ற நேரங்களில், நபியவர்கள் தமக்கு முன்னால் வாழ்ந்துவிட்டுச் சென்ற இறைத்தூதர்களின் வாழ்வைச் சிந்தித்துப் பார்ப்பார்கள். சத்தியப் பிரச்சாரகர்களான முந்தைய நபிமார்கள் தம் இரட்சகனிடம் கொண்டிருந்த இணைப்பின் காரணத்தால், அவர்களின் உள்ளம் உறுதியாயிற்று!  பின்னும் உறுதியாயிற்று!  

நபியவர்களின் அழைப்புப் பணியின் தொடக்க கால மக்கா வாழ்க்கையில் தோல்விக்கு மேல் தோல்வியைத்தான் அவர்கள் சந்தித்தார்கள் என்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.  அபூர்வமாக அவ்வப்போது ஓரிரு வெற்றிகளையும் பெற்றதாக அன்னாரின் வரலாற்றில்  காண முடிகின்றது.  வன்கொடுமைகளைத் தாங்கிக்கொள்ளும் உறுதியான உள்ளத்துடனும், வெற்றிக்கான எவ்வித அடையாளமும் காண முடியாத சூழலில், மிக விரைவில் வெற்றி கிட்டும் என்ற எதிர்பார்ப்புடனும் இருந்த அண்ணலின் நம்பிக்கையைப் போல், வேறு யாரிடம் நாம் காண முடியும்?

இனி, ஹிஜ்ராவின் முடிவுக்கு வருவோம்.  இன்றைப் போல் உயரமான கட்டிடங்கள் அன்று இருக்கவில்லை.  அதனால், வெகு தொலைவிலிருந்தும் அவர்கள் வருவதைக் காண முடியும்.  பாலைவனச் சோலையாக விளங்கிய அன்றைய ‘எத்ரிப்’ என்ற ஊரில்  அவர்களுக்குக் கிடைத்த வரவேற்பினை நாமும் ஓரளவுக்குக் கற்பனை செய்து பார்க்க முடியும்.  அவ்வூரின் மக்கள் ஆசையுடனும் ஆவலுடனும், நபி வருவார்கள் என்று ஒவ்வொரு நாளும் மதீனாவின் மலை முகடுகளில் ஏறி ஏறி எதிர்பார்த்து வந்தனர்.

“அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரியுண்டு...”  என்று இறைவன் கூறும் அந்த முன்மாதிரியை மதீனத்து மக்களின் ஆதரவுடன் உலகம் முழுவதற்கும் பரவச் செய்யும் இனி வரும் நாட்கள் மெய்ப்பிக்கும்.  தற்காலத்தில் நாகரிகமான உலகத்தில் அத்தகைய தலைமைத்துவத்திலிருந்து எத்தகைய முன்மாதிரியைக் காணமுடியும்?  நீதி, நேர்மை, எளிமை ஆகிய தன்மைகள் நமக்குப் பாடம் புகட்டுமா?  புகட்டும் என்றுதான் ஆழமாகப் படிக்க வேண்டிய அன்னாரின் வாழ்வு மெய்ப்பித்துக் காட்டுகின்றது.  

‘சீரா’ எனும் நபி வரலாற்றை நாம் படிக்கத் தொடங்கினால்,  நபியவர்கள் வாழ்ந்த காலமும், அதில் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளும், இன்று நாம் வாழும் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், ஏறத்தாழ ஒன்றே.  எனவே, பிரச்சினைகள் ஏற்பட்டால், நபியவர்கள் அவற்றை எப்படி எதிர்கொண்டு தீர்வு ஏற்படுத்தினார்களோ, அதையே நாமும் பின்பற்றிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.  பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவை நம் பிரச்சினைகளுக்குத் தீர்வாகும் என்பதை அன்னாரின் முன்மாதிரியால் உணர முடியும்.  காரணம், நபியவர்களுக்கு ‘வஹி’ என்னும் தெய்வீகத் தொடர்பும் இருந்ததால், அவற்றை எதிர்கொள்வதிலும் தீர்வு காண்பதிலும் ஒரே நிலைபாடு இருப்பதை உணரலாம்.  அது பொய்யாகாது; வெற்றி நிச்சயம்; இறைப் பொருத்தமும் அதில் உண்டு என்பதைக் காண முடியும்.  இந்த முன்மாதிரியில் நாம் தீர்வைக் காணத் தொடங்கி, அதில் வெற்றியும் காண முடியும்.  அது ஒருபோதும் தோல்வியைத் தழுவாது என்பது திண்ணம்.

அதிரை அஹ்மது

கனவும் நனவும் 3

அதிரைநிருபர் பதிப்பகம் | March 26, 2015 | ,

நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் - 8

கி.பி. 610ன் ஆரம்பத்தில் அண்ணலாருக்கு உறக்கத்தில் கனவு ஒளிப் படலங்கள் தோன்றத்துவங்கின! அரபியில் இதனை ‘ருஃயா  சாதிக்கா’ என்பர்.  எதை இரவு கனவாய்க் கண்டார்களோ அது அப்படியே அன்று விடிந்ததும்  நனவாய் நிகழும். நபித்துவத்தின்  நற்செய்தி ஆறு மாதங்களுக்கு முன்பே இப்படிக்  கனவுகள் மூலம் கனியத் துவங்கியது. அல்லாஹ்வின் அருள் ஒளி அகிலமெங்கும் தொடர்ந்து 23 ஆண்டுகள் பரிணமித்து அறியாமை இருளை அடித்துத் துரத்தியது! இன்ஷா அல்லாஹ், இறுதி நாள் வரை தொடர்ந்து நிற்கும் அந்த மனங்கவர் மாமனிதர் கொண்டு வந்த குர்ஆன் எனும் இந்தக் கலங்கரை விளக்கம்!  

இப்போது, நாம் காண்போம் சற்றுக்   கனவின் விளக்கம்:

கனவு காணாத மனிதரே கிடையாது! வாய் பேச இயலாதவர், கண் காண முடியாதவர், காது கேட்க வகை இல்லாதவர், சித்தப்பிரமை கொண்டவர்,  குழந்தைகள், வயோதிகர், ஏன்? விலங்குகளும் பறவைகளும் கூட கனாக் காணுகின்றன என்கின்றனர் மனக்கூறு வல்லுனர்கள்.

நாம் காணும் கனவுகள் மூன்று வகை:  

நற்செய்தி : அல்லாஹு ரப்புல் ஆலமீன்,  நம்பிக்கையாளனுக்கு அனுப்பும் ‘புஷ்ரா’  எனும் நன்மாராயம்! இது கண்டால் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று அல்லாஹ்வைப் புகழுங்கள். நல்ல கனவு கண்டவருக்கு அன்று முழுவதும் அலாதியான மகிழ்ச்சியும் மன அமைதியும் மனமெங்கும் வியாபித்து இருக்கும். தனக்கு நெருக்கமான, தோழமை கொண்ட நலம் விரும்பிகளிடம் கண்ட கனவைப் பகிர்ந்து கொள்ளலாம். 

தீய கனவுகள் : இது முற்றிலும் ஷைத்தானின் தீண்டுதலால் தோன்றுவது!  பயங்கரமான, மடத்தனமான, அருவருப்பான, ஆபாசமான, மிருகத் தனமான, இயற்கைக்கும் இயல்புக்கும் மாற்றமான, மொத்தத்தில்   பேய்த்தனமாகத்  தோற்றம் தரும் அனைத்தும் முஃமினின் ஈமானைச்  சற்று அசைத்துப் பார்ப்போமே என்று இப்லீஸ் ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் இருட்டு வாய்ப்பு!

“ஒருவர் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது”  என்றார்கள் உன்னத வழிகாட்டி கண்ணியத் தூதர்  (ஸல்) அவர்கள். (1)

அப்போதும் மனம் அமைதி பெறவில்லை எனில், எழுந்து இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு அந்தத் தீய கனவின் தீமைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடவேண்டும்.

மனப்பிரம்மை: அஜீரணத் தொல்லை  அதிகமானாலும் மனப்பிரம்மையான கனவுகள் அடிக்கடித்  தோன்ற வாய்ப்புள்ளதென்பது உடற்கூறு வல்லுனர்களின் கூற்று. இவை பெரும்பாலும் அர்த்தமில்லாத கனவுகளாகும். கற்பனையான,  தன் மனோ இச்சையின் பிரதிபலிப்பு கனவில்  வரலாம். (உதாரணம்: நாகூர் தர்காவிற்குச் சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றப் பேரவா கொண்ட ஒரு பித்துக்குளிப் பெண்மணியின் பிரம்மை!) 

குறிப்பாக, கனவில் அவுலியா வந்து அழைத்தார் (ஆகவே, நான் தர்காவிற்குச் செல்லத்  தயாராகி விட்டேன்)  என்று பொய்யுரைப்பது. இது மிகப்பெரும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

'பொய்களிலேயே மிகப் பெரும் பொய், ஒரு மனிதன் தன்னைத் தன் தந்தையல்லாதவருடன் இணைத்து (நான் அவரின் மகன் என்று) கூறுவதும், தன் கண்கள் பார்க்காத ஒன்றை (ஒரு கனவை) அவை பார்த்ததாகக் கூறுவதும், இறைத்தூதர் சொல்லாத ஒன்றை அவர்கள் சொன்னதாகச் சொல்வதும் ஆகும்' என்று உரைத்தார்கள்  உண்மை மிகுந்த உத்தமத் தூதர் (ஸல்) அவர்கள். (2)

இப்போது நாம் அந்த நபித் தோழரைச்  சந்திக்கும் நேரம் வந்துவிட்டது!

அரக்கப் பறக்க ஓடி வந்து, இறைத்தூதர் அவர்களே! என அழைத்தபடி இயல்புக்கு மாற்றமாக நின்று கொண்டிருக்கும் அவரைப் பார்த்ததுமே அண்ணலார் யூகித்துவிட்டார்கள். இவர் எதையோ பார்த்து பயங்கரமாக அதிர்ச்சி அடைந்திருக்கின்றார்! கசங்கிய உடை, கழுவாத முகம், வாரப்படாத பரட்டைத் தலை என்பதெல்லாம் அப்போதுதான் படுக்கையிலிருந்து எழுந்து நேராகக்  கண்மணி  நபி (ஸல்) அவர்களைக் காண வந்துள்ளார் என்பதைப் பறை சாற்றின!

"சொல்லுங்கள் தோழரே! என்ன நிகழ்ந்தது?"

"அல்லாஹ்வின் தூதரே! எனது தலை! எனது தலை துண்டிக்கப் படுவது போன்று நான் கனவு கண்டேன்” என்றார் பதட்டமாக! தொடர்ந்து, “அந்தக் கனவில் என் தலை வெட்டப்பட்டது. அதுமட்டுமல்ல! வெட்டப்பட்ட என் தலையைப்  பாய்ந்து  பிடிப்பதற்காக  நானே துரத்திக்கொண்டு  ஓடினேன் என் கனவில்" என்று கூறி நின்றார் பரிதாபமான தொனியில்!

செய்தி கேட்ட செம்மல் நபியவர்கள்  சிரித்து விட்டார்கள்!

வெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் நபியின் முகம், சிரிப்பால் மேலும் சிவந்து போனதைக் கனவு சொல்லி நின்ற அவர் கண்டு களித்தார். அண்ணல் நபியின் அழகிய சிரிப்பால் தோழரின் கவலை தொலைந்து போனது! எங்கிருந்தோ ஒரு நிம்மதி வந்து அமைதியுடன் அவர் மனதில் அமர்ந்துகொண்டது!

“உறக்கத்தில் ஷைத்தானின் விளையாட்டால் உங்களில் எவரும் கெட்ட கனவு கண்டால், மற்ற எந்த மனிதரிடமும் சொல்லித் திரிய வேண்டாம்” என, அவரை ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தார்கள் அன்பே வடிவாம் அண்ணல் நபியவர்கள். (3)
0o0o0o0o0o0o0o0o0o0
ஆதாரங்கள்:
(1) புஹாரி 6985 : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
(2) புஹாரி 3509 : வாஸிலா இப்னு அல் அஸ்கவு (ரலி)
(3) முஸ்லிம் 4665 : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) 

இக்பால் M. ஸாலிஹ்

ஞாபகம் வருதே - 3 [சில நேரங்களில் சில மனிதர்கள்!] 19

அதிரைநிருபர் பதிப்பகம் | March 24, 2015 | , , ,

ஒருமுறை நான் மலேசியா சென்றபோது முன்பு வேலை செய்த கடையில் மீண்டும் வேலைசெய்ய மனமில்லை. காரணம் ஜில்லா வாரியான [மாவட்ட அளவில்] தஞ்சாவூர் காரர்களுக்கு ராமநாதபுர காரர்களை பிடிக்காது. அதுபோலவே ராமநாதபுர காரர்களுக்கும். ஊர்வாரியான, ஜில்லாவாரியான வேற்றுமைகள் கொடி கட்டி பறக்கும். இருந்தாலும் தஞ்சை மாவட்டத்துk காரர்களிடம் வேலை செய்வது மிக கடினமே. அமரிக்காவில் ஆப்பிரிக்க அடிமை கருப்பர்கள் பட்ட துயரத்தை எல்லாம் இவர்கள் தரும் துயரம் தூசு ஆக்கிவிடும். இது பற்றி நிறையவே எழுதலாம். இன்ஷா அல்லாஹ் இன்னொரு முறை அதை காண்போம்.

வேலை தேடி ஒரு வாரம் காத்திருந்தேன்.

ஒரு நாள் ஒரு புத்தக கடையில் மேனேஜராக இருக்கும் எனக்கு தெரிந்த ஒருவர் கூப்பிடவிட்டார். “தைபிங்கில் இருக்கும் எங்கள் கடையில் வேலை செய்யப்போகிறாயா? சம்பளம் 150 இரண்டு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து இருந்தால் இரண்டு மாதச் சம்பளம் போனஸ்!” என்றார்.

‘சரி’ என்றேன்.

தமிழ் முஸ்லிம்கள் கடையில் போனஸ் என்பதற்கும் Working partner என்பதற்கும் அர்த்தமே வேறு. அதன் முழுபொருள் Stick and Carrot. ஒரு நீண்ட கம்பின் நுனியில் கேரட் கிழங்கை கைற்றில் கட்டி குதிரை அல்லது ஒட்டகத்து மீதுயேறி ஒருவர் உட்கார்ந்து கொண்டு வாய்பேச தெரியாத  பசி கொண்ட அந்த ஜீவன்களின் கண்களுக்கு முன்னே இந்த கம்பில் கட்டிய கேரட் கிழங்கை தொங்க விடுவார்கள். 


பசி கொண்டபோது புசிக்க கிடைக்காத அந்த அப்பாவி ஜீவன்களும் மனிதனின் ‘தந்திரம் அறியாமல்’ கரட் நமக்கு அருகில் தானே இருக்கிறது! திங்கலாம்! பசி தீரதிங்கலாம்’’! என்ற ஆசையோடு வேக வேகமாக எட்டு மேலே எட்டு வச்சு நடக்கும். நடக்க-நடக்க கம்பில் கட்டிய கேரட்டும் அந்தவாயில்லா ஜீவன்களின் வாய்க்கு எட்டாமல் நகர்ந்து நகர்ந்து போகும். அது போல்தான் மலேசியாவில் தொழில் நடத்திய தமிழ் முஸ்லிம் முதலாளிகள் தங்களிடம் பணிந்து பணிபுரிந்த loyal  (விசுவாசமான) வேலையாட்களுக்கு கொடுத்த போனஸ் அல்லது பங்கு. இந்த கானல் நீரை நம்பி கண்ணீரும் விட்டு கடையையும் விட்டு காணாமல் போனவர்கள் பலர். நான் இந்த மேனேஜர் சொன்ன போனஸை நம்பவில்லை. ஆனால் சும்மா இருந்து பொழுதை போக்க விரும்பாமல் ரயில் ஏறினேன்.

பகல் முழுதும் ரயில் பயணம். இரு பக்கங்களிலும் பசுமை கம்பளங்கள் போர்த்தது போல் புல்வெளிகள். அடர்ந்த மரங்கள் மலாய்காரர்களின் முற்றிலும் மரத்தினால் கட்டிய பாரம்பரிய வீடுகள். ரப்பர் தோட்டங்கள் மலையில் பிறந்து மண்ணில் நெளிந்து கடலில் கலக்கும் நதிகள் இவை எல்லாம் கண்ணுக்கு காட்சியாய் இருந்தது.மாலை மணி ஐந்துக்கு தைபிங் நிலையத்தில் வண்டி நின்றது. பெட்டி படுக்கையுடன் இறங்கினேன். அங்கு நின்ற டேக்ஸியில் ஏறி அட்ரஸை சொன்னேன். பத்து நிமிஷத்தில் டேக்ஸி கடை முன் நின்றது.

அடுத்த நாள் கடையில் நிர்வாகி நான் செய்ய வேண்டிய வேலைகளை சொன்னார். [பெரும்பாலான தமிழ் முஸ்லிம் கடைகளில் இன்னார் இன்னாருக்கு இன்ன இன்ன வேலை  யென்று ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டாலும் இட ஒதுக்கீட்டை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு எல்லா வேலைகளையும் எல்லோரும் செய்ய வேண்டும். இந்த ஒதுக்கீடெல்லாம் சம்பளத்தை குறைத்து பேச தூண்டிலில் கோர்க்கும் பூச்சியே.. முதலாளிக்கு சொந்தக்கார மாமன் மச்சாங்கள் தப்பு செஞ்சால்கூட வேறு எவனாவது ஒருத்தன்தான் முதலாளிக்கு ஜவாப் சொல்ல வேண்டும். இது எழுதப்படாத சட்டம்.] Formalityக்காக மேனேஜர் சொன்னதை Formalityக்காக நானும் ஒப்புக் கொண்டதாக டும்டும் மேல தாளத்திற்கு தலையாட்டும் கோயில் மாடுபோல் தலையாட்டினேன். மாதங்கள் ஓடியது.

ஒரு நாள் முதலாளிக்கும் மேனேஜருக்கும் சண்டை வந்தது! மச்சான் மச்சினன் சண்டை அன்றே மேனேஜர் கடையே விட்டு மூட்டை கட்டினார். நான் மேனேஜராக பதவி பிரமானம் எடுத்துக் கொண்டேன். பதவி எனக்கு வந்ததால் எனக்கு முந்திய சீனியருக்கு என் மேல் பொறாமை வந்தது. ‘முன்னவன் நான் இருக்க என் பின்னவனுக்கு பதவியா?’ என்று அவர் போர்க் கொடிதூக்கினார். கடையில் வேலை செய்த பையன்கள் எல்லாம் என் பின்னே நின்றார்கள். ஒரு மாதம் கழித்து அவரும் கடையே விட்டு எக்ஸிட்’ வாங்கினார். கடையில் எனக்கு வயதில் மூத்த ஒருவரும் இருந்தார். அவர் உண்டு அவர் வேலை உண்டு யென்று எதையும் கண்டும் காணாமல் இருந்தார்.

TAIPING என்னும் இந்த சீன மொழி சொல்லுக்கு [PEACE] அமைதி என்று பொருளாம். பெயருக்கு ஏற்றாற் போல் ஊரே ஒரே அமைதி பூங்காவாகவே இருந்தது. மலேசியாவின் முதல் ரயில்பாதை 1885-ஜூன் மாதம் முதல் தேதி தைபிங்கிலிருந்து Port Weld. வரை போடப்பட்டது.

மலேசியாவில் பல பழங்கள் விளைந்த போதிலும் இந்நாட்டு மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பது துரியான் [DURIAN] பழமே! ’தூறி’ என்ற மலாய் சொல்லுக்கு ’முள்’ என்பது தமிழ். முக்கனிகளில் ஓன்றான பலா பழவகையை சார்ந்தது. ஆனால் பழமோ நம்ம ஊரு தேங்காய் அளவில் இருக்கும். இதை முன்பின் தின்று ருசி காணாதவர்கள் இதன் கிட்டே நெருங்கினால் குமட்டலும் வாந்தியும் வந்து காத தூரம் காலெடுத்து ஓடுவார்கள்.

இவர்களுக்கு தாம்பாளம் நிறைய பொன்னும் மணியும் குவித்துக் கொடுத்து “சாப்பிடுங்கள்! சாப்பிடுங்கள்!” என்று என்னமாத்தான் கெஞ்சினாலும் ஊஹும் “கல்லசை! என்னசை!” என்று அசைச்சு கொடுப்பார்கள். நெருங்கவே மாட்டார்கள். அதன் வாசம் அப்படி!. ஆனால், இதை மனதைக் கட்டுப்படுத்தி மூக்கை பொத்திக் கொண்டு  ஒருமுறை இருமுறை தின்று ருசி கண்டு விட்டார்களேயானால் அடுத்தமுறை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் கொஞ்சமாவதும் சாப்பிடாமல் போகமாட்டார்கள்.

ருசியும் வெட்கம் அறியாது. ஆனால் இனிப்பு நீர்காரர்களுக்கு இது நஞ்சு. ஆண்மை விருத்திக்கு கைகண்ட மருந்து. விடுதிகளில் தங்கி ஆண்மை விருத்திலேகியம் கொடுக்கும் டாக்டர்களை தேடி விடுதிப்படி ஏற வேண்டியதில்லை. இந்த பழசீசனிலிருந்து சரியாக பத்து மாசம் சென்றதும்  பிறசவ வார்டில் இடநெருக்கடியும் ‘குவா-குவா’ சத்தமும் அதிகமாகும். Duriyan jatoh sarong naik இது இந்தோனேசியா  பழமொழி. தமிழில் “துரியான் பழம் விழுந்தால் கைலி உயரும்”.

தைபிங் நகரில் துரியான் சீசன் ஆரம்பமானது. ரோடுகளின் இருபக்கமும் பழங்கள் குவிந்தன. ஒரு இரவு நாங்கள் எல்லாம் துரியன் பழம் வாங்க கிளம்பினோம். எங்கள்திட்டம் எல்லோருக்கும் மொத்தமாக வாங்குவது எல்லோரும் ஒன்று சேர்ந்து உண்பது. விலையில் எல்லோரும் சரிசமமாக ஈவிச்சு கொள்வது. எங்களில் அந்நாட்டில் பிறந்து ரப்பர் தோட்டத்தில் கூலி வேலை செய்த ஏழை குடும்பத்து பையனும் மிகக்குறைந்த சம்பளத்தில் வேலைசெய்து கொண்டிருந்தான் [குறிப்பு: குறைவான சம்பளத்துக்கு நிறைய வேலை செய்வோர்களை தமிழ் முஸ்லிம் முதலாளிகளுக்கு ரெம்ப பிடிக்கும்] அவன் திண்ணும் பழத்திற்கு அவனிடம் காஸு வாங்குவதில்லை அவனுக்கு நல்ல  பழம் எது, பூச்சி பழம் எது என்று நன்றாகத் தெரியும். மேலும் அவன் நாட்டுபுற மலாய் மொழி Slang நன்றாக பேசுவதால் அதை இதை சொல்லி விலை குறைத்து வாங்கி விடுவான். மலாய்காரர்களுக்கு மலாய்மொழியை அவர்களைப் போல் பேசுபவர்களை பிடிக்கும். அது ஒன்றையே மூலதனமாக கொண்டு பல காரியங்களை சாதித்து விடலாம்.


நாங்கள் துரியான் பழ பஜார் நோக்கி துரிதமாக நடந்தோம். அங்கே மலை மலையாய் பழம் குவித்திருந்தது Mari-marilah Tuan! buah yang bagus.dan sedap.Harga murah saja என்று வொவ்வொரு கடைகாராரும் கூவினார். இதன் பொருள். ”[வாங்க பெரியவரே! நல்ல பழம்! ருசியான பழம்! விலையோ மலிவுதான்]’’. ஒவ்வொரு குவியலாக பார்த்துக் கொண்டே போனோம். அந்த நாட்டுப்புற தெலுங்கு பையன் ஒருகுவியல் அருகில் போய் உட்கார்ந்து கவனமுடன் பார்த்து பார்த்து பலபழங்களை பொறுக்கி சேர்த்து விலைபேசினான். கொஞ்ச நேரம் விற்பவருக்கும் வாங்குபவருக்கும் பேரம் நடந்து பரஸ்பர நல்லெண்ணத்துடன் பேரம் முடிந்தது.

காசை கொடுத்த பையன் “சாயாசூடா பிள்ளி”, [நான் உன்னிடம் வாங்கி விட்டேன்].

பழம் விற்றவன் பதில் சொன்னான் “சாயாசூடா ஜூவால். செலாமத் மாக்கான் திரிமாகஸி” [நான் விற்று விட்டேன். நல்லபடியாக சாப்பிடுங்கள்.நன்றி.]

இது அந்த சின்னஞ் சிறிய நாட்டின் பண்பாடு. கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடியான நம்மைவிட எவ்வளவோ பின் தங்கியவர்களின் பண்பாடு இப்படி. நம்நாட்டின்நிலைஎப்படி?

நம் ஊர்  மெயின் ரோட்டில் ஒருபத்திரிகை கடைக்கு சென்று கைற்றில் தொங்கிய ‘ஆனந்தவிகடன்’னை எடுத்தேன் “ஆஆஆஆ… அதை எடுக்காதீர்கள்! என்னிடம் கேட்டால் நானே தருவேனே!” என்று அதட்டலாக சொன்னார்.

“சரி! கொடுங்கள்” என்றேன். உள்ளே இருந்த ஒரு பிரதியை எடுத்து அங்கிருந்தே தூக்கி மேஜைமீது வீசினார். அது வெளியே வந்து மண்ணில் விழுந்தது. கல்லாவில் இருந்த முதலாளி இந்த மரியாதை கெட்ட செயல் கண்டு கொஞ்சங்கூட கவலையில்லாமல் யாரோ ஒருவருடன் சுவாரசியமாக,தன்னை மறந்து கருணாநிதி-versus ஜெயலலிதா அரசியல் பேசிக்கொண்டிருந்தார்.

விகடனுக்கு. விலைRs15 போட்டிருந்தது. இருபது ரூபாய்கொடுத்து “பாக்கிகாஸு தாங்க!” என்றேன்.

நோட்டை வாங்கியவர் அதை மேஜை மேல் வைத்து காற்றில் நோட்டு பறந்து விடாமல்இருக்க கையை நோட்டின் மேல் வைத்துக் கொண்டார். இப்பொழுது அவர் கையே நோட்டுக்கு பேப்பர் வெய்ட்.

“பாக்கி கொடுங்கள் போகனும்! பாக்கி கொடுங்கள் போகனும்!” என்று நான் ’பலமுறை’ கத்தியும்கூட கடைகாரர்காதில்.அது ஏறவேஇல்லை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் அங்கே சேர்ந்து வந்து இந்த இருவர் வாதங்களை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

“பா..ஆஆஆக்கி கொடுங்கள்” என்று ஏழுருக்கு அப்பாலும் கேக்கும்படி சத்தம் போட்ட பின்பே கடை முதலாளி கருணாநிதி ஜெயலலிதாவை விட்டு விட்டு தன் சுயநினைவுக்கு வந்தார்.

“இன்னும் பாக்கி வாங்கலையா?” என்று அவர் என்னையே கேட்டுக் கொண்டு அஞ்சு ரூவா நோட்டைஎடுத்து வீசினார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இங்லாந்திலிருந்து வெளிவந்த Psychologist என்ற மாத இதழில்  Herbert Cason என்பவர் எழுதினார் ’ஒரு வாடிக்கையாளர் உன் கடையிலிருந்து திருப்தியுடன் வெளியானால் அதுவே நூறு வாடிக்கையாளர்களை உன் கடைக்குள் கொண்டுவரும்’’ என்றார். இங்கே பாக்கிகாசைத் தூக்கி வீசுகிறார்கள். கொடுத்த காஸுக்கு பாக்கி கேட்டு பிச்சைகாரன் போல் ஒத்தைக் காலில் நிற்கவேண்டிய திருக்கிறது. [‘’இவர்கள் என்ன Psychologist-டா படித்தார்கள்? ஹெர்பர்ட்காசன் சொன்னது போல்செய்ய’’ என்று நீங்கள் கிசுகிசுப்பது காதில் விழுகிறது].

இப்பொழுது பேசு பொருளுக்கு திரும்புவோம். வாங்கிய பழங்களை எல்லாம் தூக்கி கொண்டு அருகிலுள்ள தனியிடத்திற்கு சென்று சாப்பிட உட்கார்ந்தோம்.பெரியவர் மட்டும் உட்காராமல் நின்றார்.

“ஏன் நிற்கிறீர்கள்? உட்காருங்களேன்!” என்றேன்.

’’நான் தனியாக ஒரு இடத்தில் போய் சாப்பிடுகிறேன். என் பங்குக்கு உள்ள பழத்தை கொடுங்கள்!’’ என்றார்.

பையன்கள் எல்லோருமே என்னை பார்த்தார்கள். ‘பழம் வாங்க வரும் போது பேசியது ஒன்று. இப்பொழுது இவர் மட்டும் ஏன் மக்கர் பண்ணுகிறார்? என்று எனக்கு குழப்பமாக இருந்தது.

“ஏன்? என்ன விஷயம்? வரும் போது இப்படித்தானே பேசி வந்தோம். இடையில் யாரும் ஏதும் தவறாக சொல்லி விட்டார்களா?” என்றேன்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை! எனக்கு எல்லோர் கூடவும் ஒன்றாக இருந்து சாப்பிட பிரியமில்லை” என்றார்.

அங்கிருந்த எல்லோரும் என்னைப் பார்தார்கள். அவர்கள் என்னை நோக்கிய நோக்கம் ‘அங்கிருந்தவர்களில் நானும் அந்தப் பெரியவரும்தான் முஸ்லிம்கள். மற்ற அனைவரும் இந்துக்கள்’. ‘இந்துக்களோடு ஒன்றாக இருந்து நான் சாப்பிடமாட்டேன்’ என்று அவர் சொல்கிறாரோ என்பதே அந்தப் பார்வையின் பொருளாய் எனக்கு பட்டது.

"எல்லோரும் அண்ணன் தம்பிகளாய் ஒன்றாக இருந்து வேலை செய்யும் போது நீங்கள் மட்டும் குழப்பம் செய்வதில் பல பிரச்சனைகள் வரும். அப்புறம் கடை வேலைகளிலும் அது எதிரொலிக்கும். அது எனக்கு தலைவலியை கொண்டு வரும். அதனால் விஷயம் என்னவென்று கூறுங்கள் அது எதுவானாலும் உங்கள் விருப்பபடியே செய்யலாம் என்றேன்"

“ஒன்றுமில்லை! நீங்கள் எல்லாம் இளம் வயதுகார்கள். சீக்கிரம் சீக்கிரம் சாப்பிடுவீர்கள். நான் மெதுவாதான் சாப்பிடுவேன். நான் ஒன்னு சாப்பிட்டு முடிப்பதற்குள் நீங்கள் லெல்லாம் ரெண்டு மூனை முடித்து விடுவீர்கள். காசு கொடுத்தும் எனக்கு கெடைக்க வேண்டிய பங்கு கெடைக்காது அதனால் என்பங்கை தனியே கேட்டேன்’’ என்றார்.

உள்ளம் திறந்துவிட்டார். அவர்உள்ளத்தில் சைத்தான் குடிகொண்டான். அங்கிருந்தவர்களில் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். அந்தப் பார்வையின் பொருள் “இதுதான் உங்கள்இஸ்லாமா?” என்று கேட்பது போல் இருந்தது. 

அவர் அப்படி நினைத்தால் அவர்பங்கை அவருக்கு கொடுத்துடலாமே!’’ என்று ஒரு பையன் சொன்னான்’’ முதலில் பழத்தை அவரையே சாப்பிட சொல்லுங்கள். மீதியை நாம் சாப்பிடலாம்’’ என்று இன்னொரு பையன் சொன்னான்.

“என் பங்கைத்தான் நான் கேட்டேன்! யாரும் எனக்கு தர்மம் கொடுக்க வேண்டாம்’’என்றார்.!

‘சரி! இதற்கு மேல் கெஞ்சினால் குரங்கு மரத்துக்கு மேலே ஏறும்’’! என “எத்தனை பழம் இருக்கிறது’ என்று எண்ணும்படி சொன்னேன். ஆள் ஒன்னுக்கு மூனு பழம் வீதம் வந்தது போக.ஒரு பழம் மீத மிருந்தது.

‘’ஆள் ஒன்னுக்கு மூனு பழம் வருகிறது. உங்கள் பங்கை நீங்களே பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்றேன்.

அவரே நன்றாக பார்த்து பார்த்து எடுத்துக் கொண்டு சற்று ஒதுங்கிபோய் உட்கார்ந்தார். மீதமிருந்த அந்த ஒரு பழத்தையும் அவரிடம் கொடுத்தேன். 

“வேண்டாம் !ஒருபழம்தானே? நீங்கள்தான் அதிகம் பேர் இருக்கிறீர்கள். உங்கள் பங்கிலேயே இருக்கட்டும்!’’ என்று பெரும்தன்மையுடன் சொன்னார். செய்த்தான் வேதம் ஓதியது!

‘’பரவாயில்லை! எங்களிடம் நிறைய பழம் இருக்கிறது. அதில் ஒன்று பூச்சிப் பழமானால் இன்னொன்றை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு ஒரு பழம் பூச்சியானால் மிஞ்சுவது இரண்டுதான். அதிலும்கூட பூச்சி இல்லாத பழம் கிடைப்பது அல்லாவின் நாட்டம். கைகாவலுக்கு இதையும் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றேன். என் முகத்தை பார்க்காமல் வாங்கிக் கொண்டார்.

பழங்களை உடைத்து திண்ண ஆரம்பித்தோம். ஒரு பழத்திற்கு நாலு compartment-இருக்கும். ஒரு  compartment-டில் மூனுசுலை இருந்தால் அதில் ருசி அதிகமும் விதை சிறிதாகவும் இருக்கும். விதையைச் சுற்றிலும் வெண்ணைபோல் மெல்லிய இலேசான மஞ்சள் நிற க்ரிம் பத்தை போல் படிந்திருக்கும்.இது பழத்தின் கீரிம் compartment-டில் ஒட்டாமல்அப்படியே எடுத்துசாப்பிட அல்லாஹ் படைத்திருக்கும் அற்புதங்களில் இதுவும் ஒன்று அவன் படைப்பின் ஓவ்வொன்றிலும் உற்று நோக்கினால் இதைக் காணலாம்.

நாங்கள் பழங்களை ருசித்து-ருசித்து சாப்பிட்டோம். பக்கத்தில் இருந்த பையன் “அண்ணே! அங்கே பாருங்கள்!’’ என்றான். 

இலேசாக அந்தப் பெரியவர் பக்கம் பார்வையை போகவிட்டேன். ஒரு பழம் முழுதும் பூச்சி. அது ஒரு ஓரத்தில் தூக்கி வீசிக் கிடந்தது. மற்றொரு பழத்தில் பாதி பூச்சி. பாதியை ருசித்துக் கொண்டிருந்தார். ஆக உடைத்த இரண்டில் ஒன்னரை பழம் பூச்சி. பூச்சியில்ல பாதியை ருசிதுக் கொண்டிருந்தார். அவரிடத்தில் பாக்கி இருந்தது அவர் பங்குக்கு கிடைத்த ஒன்று, துண்டு விழுந்ததில் நாங்கள்கொடுத்தஒன்று.ஆக இரண்டு உடைக்காமல் வெய்டிங் லிஸ்ட்டில் இருந்தது. எங்கள் பழங்களிலும் இரண்டு பழத்தில் பாதிபூச்சியும் ஒன்று முழுதும் பூச்சியாய் போனது. அவரும் நாங்களும் துரியான் தின்று எழுந்த போது அவர் துரியானில் ஒன்னரை பூச்சியும் எங்களில் ரெண்டு பழ நட்டதிற்க்கும் எழுந்தோம் எங்களில் ஆறுபேர். அவர் ஒருவர் மட்டுமே.! 

நாங்கள் எல்லோரும் கடைக்கு நடந்தோம். தனித்து போனவரும் கூடவே வந்தார். யாரும் யாருடனும் பேசவில்லை. மௌனத்தின் ஆட்சி சிம்மாசனம் ஏறியது. மறுநாள் வேலைகள் வழக்கம் போல் நடந்தது. அவர் யாருடனும் ஏதும் பேசாமல் தன்வேலைகளை செய்து கொண்டிருந்தார். எப்பொழுதும் பேச்சும் சிரிப்பும் கிண்டலும் நையாண்டியுமாக ஓடியபொழுது சோகமாய் ஓடியது. ஒரு வெள்ளிகிழமை மாலை பினாங்கு தலைமை நிலையத்திலிருந்து டெலிபோன் வந்தது” அவர் கடையை விட்டு நின்றுகொள்கிறேன்” என்று டெலிபோன் போட்டார். நாளைக்கு அவர் கணக்கை பார்த்து பாக்கியே கொடுத்து எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவிடு! ’போனஸ் கீனஸ்’ என்று ஏதெனும் ’’கிக்கிரிபுக்கிரி’’ என்றால் என்னிடம் பேசிக்கிடசொல்’’ என்றார்.

அந்த முதலாளிக்கு பிடிக்காத ஒரே ஒருவார்த்தை ’’போனஸ்’ தான் அந்தக் கடையில். வேலைபார்த்த அத்தனை பேருக்கும் அவர்கடைசியாக உச்சரித்த வார்த்தை இதுதான். பினாங்கு தொடங்கி சிங்கப்பூர் வரை கிளைகளை நிறுவி ’ஓகோ! ஹோ’வென்று ஆலமரம் போல விழுதுகள் விட்டு வளர்ந்த இந்த விருட்சம் வீழ்ந்தது உழைத்துஉழைத்து ஓடாய்போன தொழிலாளிகளின் சாபமே.

இவைகளுக்கு காரணம் தலைமை நிலையத்தில் ஒருசெய்த்தான் மேனேஜராக இருந்து கெடுத்தான். துரியான் பழ செய்தானிடம் விஷயத்தை சொன்னேன் ’’அவன் நாசமாய் போகட்டும் என்று பாக்கிகாசை வாங்கி கொண்டு போய் விட்டார். நானும் அங்கிருந்து விலகியபோது எனக்கும் அந்த செய்த்தான் ஓதிய வேதம் ‘போனஸ் இல்லை! ’மலேசியாவில் தஞ்சாவூர் காரர்கள் கடையில் மேனேஜராக இருந்தவர்களும் முதலாளியும் வேதம் ஓதும் செய்த்தான்களே! வேதம் ஓதிய அவர்கள் கடைகளில் எல்லாம் இப்பொழுது YALE-பூட்டு தொங்குகிறது.!

S.முஹம்மது ஃபாருக்

சுவாசத்தின் வாசல் ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | March 23, 2015 | , , , , ,

மூக்கு மிக முக்கியமான பாகம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது என்றே தோன்றுகிறது. ஜீரண மண்டலம் எப்படி வாயில் இருந்து தொடங்குகிறதோ, அதேபோல் சுவாச மண்டலமும் மூக்கில் இருந்துதான் தொடங்குகிறது.

வாய் மூலமாக சுவாசிக்க முடியும் என்றாலும் நம்மில் பெரும்பாலானோர் மூக்கின் மூலமாகத்தான் சுவாசிக்கிறோம். மூக்கு ஏதாவது ஒரு காரணத்தால் அடைபடும்போதுதான் அவசரத் தேவைக்காக வாய் உதவுகிறது. எனவே, நம் உயிர் ஆதாரமான ஆக்சிஜனை உடலுக்குள் அனுப்பி வைக்கின்ற நல்ல காரியத்தைச் செய்வது மூக்குதான்.

வாயால் தொடர்ந்து சுவாசிப்பதும் நல்லதல்ல. தேகப் பயிற்சியின்போதும் நீச்சல் அடித்த பிறகும் வாயால் சுவாசிக்கலாம். அப்போது மூக்கோடு, வாயின் துணையும் தேவைப்படும். மற்ற சமயங்களில் சுவாசிக்க மூக்கே சிறந்தது.

வாசனையை முகர்ந்து பார்த்து இன்றைக்கு வீட்டில் இறைச்சி ஆனமா ? கோழிக் குருமாவா ? இல்லே பொரிச்ச மீனா ? என்று முதலில் அறிவிப்பது மூக்குதான் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் ஆச்சர்யமான தகவல் என்னவெனில், நம் மூக்கில் உள்ள ஒரு சிறிய பகுதியால் கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாசனைகளைப் பிரித்து உணர முடியுமாம்.

மூக்கின் பயன் இதோடு முற்றுப் பெறுவதில்லை.நாம் நன்றாகப் பேசுவதற்கும் மூக்குக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. பேச்சு என்றால் வாய்க்கும் தொண்டைக்கும் தானே வேலை? மூக்கோடு அதை எப்படி முடிச்சு போடுவது என்பவர்கள், ஜலதோஷத்தால் மூக்கு அடைபட்டவர்கள் பேசுவதைக் கவனியுங்கள். ஒலி ஒழுங்கு இல்லாமல் வரும்.

நம்மிடம் இருந்து வெளிப்படுகிற ஒலிக்கு ஓர் ஒழுங்கான வடிவத்தையும் இனிமையையும் தருவதில் தொண்டைக்கு மட்டுமல்ல, மூக்குக்கும் அதில் உள்ள சைனஸ் அறைகளுக்கும் கூட முக்கிய பங்கு இருக்கிறது.

மூக்கு நாம் சுவாசிக்கும் காற்றைத் தனது முன்பக்கத்தில் உள்ள மயிரிழைகளால் வடிகட்டி, சுத்தப்படுத்தி பின்னர் மூக்கிலே சுரக்கும் திரவத்தால் குளிரூட்டி உள்ளே அனுப்புகிறது. காற்றை ஏன் குளிரூட்டி அனுப்ப வேண்டுமா ? அப்படி இல்லையென்றால் நாம் சுவாசிக்கும் காற்றின் வெப்பம் நுரையீரலைப் பாதிக்கும். இது மட்டுமின்றி, மூக்கில் இருந்து சுரக்கும் இந்தத் திரவத்தில் 'லைசோசைம்' என்ற ஒரு கிருமி நாசினி உள்ளது. இது மூக்கின் வழியாக நமது உடலுக்குள் எந்தக் கிருமியும் நுழையாமல் பார்த்துக் கொள்கிறது.

சகஜமாக மூச்சுவிட வேண்டுமானால், உள்ளே இழுக்கப் பட்ட காற்று மூக்கின் வழியாகத் தடை எதுவும் இல்லாமல் உள்ளே செல்ல வேண்டியது அவசியம். மூக்கு வழியாகச் செல்லும் காற்றில் தூசிகள், மூக்கில் உள்ள சிறிய ரோமங்களால் வடிகட்டப்பட்டு, ரத்தம் எந்த வெப்ப நிலையில் உள்ளதோ அந்த அளவுக்கு சுடாக்கப்பட்ட நிலையில் உள்ளதோ அதே அளவுக்கு சூடாக்கப்பட்டு உள்ளே அனுப்பப்படுகிறது. அந்தக் காற்று உலர்ந்தால் அதை ஈரமாக்கும் வேலையையும் மூக்கு செய்கிறது.

மூக்கில் உண்டாகும் மிக முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்று சைனஸ், சைனஸ் என்ற பகுதி பாதிக்கப்பட்டால் உண்டாகும் தொந்தரவின் பெயர் சைனுசைடிஸ், இந்தப் பாதிப்பையே சைனஸ் தொந்தரவு என்று குறுப்பிடுவது நம் வழக்கமாக இருக்கிறது.

நம் முகத்தில் மூக்கைச் சுற்றி உள்ள காற்றுப்பைகள்தான் சைனஸ் எனப்படுகிறது. இவற்றில் சில, கண் இமைகளுக்கு அருகே இருக்கும். சில, கண் எலும்புகளுக்கு உள்புறம் அமைந்திருக்கும். வேறு சில, கண்களுக்கு நடுவே அமைந்திருக்கும்.

நம் உடல் அரோக்கியமாக இருக்கும்போது, இந்த சைனஸ் பகுதிகள் காற்றினால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் காரணமாக, நம் முகத்தில் உள்ள எலும்புகள் எடை குறைந்தவையாகவும் இருக்கும். சைனஸ் மட்டும் இல்லை என்றால் நம் மண்டை ஓடு மிகவும் அதிக எடை கொண்டதாக மாறிவிடும்.

சைனஸால் பாதிக்கப்படுவதற்கு பாக்டீரியா, வைரஸ் அல்லது இரண்டுமேகூட காரணமாக அமையக்கூடும், பொதுவாக, ஒருவரது சைனஸ் பகுதி பாதிக்கப்படும்போது அவருக்கும் கடும் ஜலதோஷம் ஏற்படுவது உண்டு. இப்படி ஏற்படுவதை Viral Sinusitis என்பார்கள்.

ஒவ்வாமை காரணமாகவும் சைனுசைடிஸ் உண்டாகலாம். ஜலதோஷம் மற்றும் ஒவ்வாமை காரணமாக மூக்கடைப்பு ஏற்படும்போது, சைனஸ் பகுதியில் பாக்டீரியா பரவியிருப்பதன் காரணமாக, இந்தச் சளியை வெளியேற்ற முடியாமல் போகலாம். இந்த நிலையை Bacterial Sinusitis என்று அழைப்பார்கள். வைரஸால் ஏற்படும் சைனஸில் அதிக வலி இருக்கும். வீக்கமும் அதிகமாக இருக்கும். காய்சலும் இருக்கக்கூடும்.

பாக்டீரியா காரணமாக சைனுசைடிஸ் உண்டாகியிருந்தால் மூக்கில் இருந்த அடர்த்தியான சளி வெளியாகும். தொடர்ந்து இரு வாரங்களுக்கு மூக்கு ஒழுகும். இருமலுக்கும் குறைவிருக்காது. கண்களைச் சுற்றி வீக்கமோ வலியோ இருக்கக் கூடும். கன்னது எலும்புகளைச் சுற்றி வலி தோன்றும்.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் முன்புறம் குனிந்தாலே தலைவலி உண்டாகும். என்னதான் பற்களைத் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் உண்டாகும்ம். மேல் வரிசை பல்லில் வலி இருக்கும் 102 டிகிரியைத் தாண்டலாம்.

தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தை டாக்டர் எழுதிக்கொடுக்கக்கூடும். உடல்நிலை சரியாகிவிட்டதென்று எண்ணி பாதியிலேயே மருந்து சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டாம். அடங்க தொடங்கியிருக்கும் பாக்க்டீரியா மீண்டும் பலம் பெற்று எழ வாய்ப்பு உண்டு.

சைனஸ் பாதிப்பு, தொற்று நோய் அல்ல. ஆனால், இருமலும் இத்துடன் இணையும்போது அதைச் சுற்றி இருப்பவர்களுக்குப் பரவக்குகூடும். சைனஸ் பாதிப்பு ஏற்படும்போது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், நிறைய திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உப்பு அடங்கிய, மூக்குல் விடக்கூடிய சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

மூக்கில் இருந்து இரத்தம் வெளியேறினால் ஏதோ உயிருக்கு ஆபத்து வந்துவிட்டதாக எண்ணி சிலர் பதறுவார்கள். மூக்கில் முன்பக்கத்தில் இருந்து இரத்தம் வெளியேறினால் அது ரொம்ப சாதரணமான விஷயம். இதில் கவலைப்ட எதுவும் இல்லை.

மூக்கில் அடிபட்டுக் கொண்டதாலோ, மிகவும் பலமாக மூக்கை சிந்திவிட்டுக் கொண்டதாலோ மூக்கின் முன்பகுதியில் உள்ள மிக மெல்லிய ரத்தக் குழாய்கள் வெடிப்பதன் காரணமாக இரத்தம் வெளியேறலாம்.

இப்படி இரத்தம் வெளியேறினால் தலையை முன்புறமாக சாய்த்துக் கொள்ளுங்கள். மூக்கின் முன்பகுதியை சுமார் 5 நிமிடத்திற்கு அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள் (வாய் வழியாக மூச்சு விட்டால் பரவாயில்லை). இரத்தம் வெளியேறுவது நின்றவுடன் முமூக்கை சிந்திவிட்டுக் கொள்ள வேண்டாம் சொல்லப்போனால் அடுத்த நாள் முழுவதும் மூக்கை சிந்தவிட்டுக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

சில சமயம், மூக்கின் பின்புறம் இரத்தம் வெளியேறி அது தொண்டைக்குள் போகலாம், பெரும்பாகும் இதனால் உபத்திரவம் இல்லை. தானாக நின்றுவிடும்.

ஆனால், அதிக நேரம் இது தொடர்ந்தால் இரத்த இழப்பு அதிகமாகும். இப்படி நேர்வதற்கு எது காரணமாக இருக்கக்கூடும்? அதிக ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை போன்றவை காரணங்களாக இருக்கலாம். அதிக மதுப் பழக்கமும் காரணமாக அமையக்கூடும்.

மூக்கில் இருந்து இரத்தம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டு இருந்தால் மருத்தவ ஆலோசனை பெறுங்கள்.

'ஆகா என்ன ஒரு மணம்' என்று ரோஜாவையோ மல்லிகையையோ நாம் பாராட்டக் காராணம், நம் மூக்கு சரியாக வேலை செய்வதனால்தான். இதற்கு நம்மூக்கு மற்றும் நாக்கு நரம்புகள் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும்.

உணவுப்பொருள் கெட்டுபோயிருந்தால் அது நமக்குத் தெரிய வேண்டாமா ? அதற்கு மூக்கு மற்றும் நாக்கு நரம்புகளின் ஒத்துழைப்பு அவசியம். இந்த நரம்புகள் சரிவர வேலை செய்யவில்லை என்றால் வாசனை மற்றும் சுவையை அறிந்து கொள்வதில் கோளாறுகள் ஏற்படும்.

மூக்கில், வாசனை அறிவதில் கோளாறு ஏற்பட்டால் பலவித சங்கடங்கள் உண்டாகும், விபரீதங்களும் ஏற்படலாம். சந்தேகமாக இருக்கிறதா? சமையல் அறையில் காஸ் கசியத் தொடங்கும்போது அதை உங்கள் மூக்கு உணரவில்லை என்றால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.

மூக்கில் கோளாறுகள் உண்டானால் முன்பு ரசித்த வாசனைகளை கூட "நாத்தம்டிக்குதே" என்று ஒதுக்கத் தோன்றும்.

சுவை மர்றும் வாசனையை அறிவதில் ஏன் கோளாறுகள் உண்டாக வேண்டும் ? தலையில் அடிபட்டால் இப்படி நேரலாம். கடுமையான ஜலதோஷத்தின் காரணமாகவும் இந்தக் கோளாறுகள் உண்டாகலாம். சிலவகை மருந்துகள்கூட நம் வாசனை மற்றும் சுவை அரும்புகளைப் பாதிக்கக்கூடும். வயதுகூட இதில் பங்கு வகிக்கலாம். முதியவர்கள் சரியான வாசனையையும், சுவையயும் அறியாமல் தவிப்பதும் நாம் அடிக்கடி காணும் காட்சிதானே. இந்தக் கோளாறுகளை, உரிய மருந்துகளின் மூலம், டாக்டர் மெல்ல மெல்ல குணப்படுத்துவார்.

அடிக்கடி தும்மல் வருகிறது, மூக்கு ஒழுகிறது, இருமலுக்கும் குறைவில்லை. கண்கள், மூக்க்கு, தொண்டைப் பகுதிகளில் அரிப்பு உண்டாகிறது. கண்ணைச் சுற்றி சமீபகாலமாக கருவளையங்கள் தோன்றியுள்ளன.

மேலே உள்ள அத்தனை அறிகுறிகளும் இருக்க வேண்டும் என்பதில்லை. அவற்றில் சில இருந்தாலே கூட, அது ஹே காய்ச்சலின் (Hay Fever) அறிகுறியாக இருக்கக்கூடும்.

இது எதனால் ஏற்படுகிறது ? கீழே விழும் மரம், புல் அல்லது களை, போன்றவை மகரந்தப் பொடிகளை வெளிப்படுத்தலாம். அவற்றில் சில காற்றின் வழியாக உங்கள் மூக்கு அல்லது தொண்டையை அடையக்கூடும். இந்தப் புதிய பொருள் ஒவ்வாமை உண்டாக்கி, அது ஹே காய்ச்சலில் முடியலாம்.

அலர்ஜி எனப்படும் ஒவ்வாமைக்குரிய மருந்துகளின் மூலம் இதனைக் குணப்படுத்த முடியும்.

என்ன மூக்கைப் பொத்திட்டீங்க ? இனிமேல்தான் இருக்கு இன்ஷா அல்லாஹ்...

இப்படிக்கு,
கா.மூ.தொ. முற்போக்கு கூட்டணி.

நன்றியுடன் : காது-மூக்கு-தொண்டை (பிரச்சினைகள் - தீர்வுகள்) கையடக்க புத்தகத்திலிருந்து (காசு கொடுத்து) சுட்டதும், மனதைத் தொட்டதும்... அங்கே சுவாசித்ததும் உங்களின் மேலான பார்வைக்கு... - அபுஇபுறாஹிம்.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு