Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வாப்புச்சா ! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | June 20, 2011 | , ,

வேதனை வந்தெனை
வாட்டும் போதெல்லாம்
வாப்புச்சா மடிதேடும்
வலிகண்ட மனம்!

வட்ட முகத்தில்
வரிவரியாய் ரேகைகள்
வாழ்ந்த வாழ்க்கையின்
விளக்க உரைகளாய்!

வாப்புச்சா வார்த்தைகளில்
வகைவகையாய் அன்பிருக்கும்
வாஞ்சையுடன் வருடும்போது
வாழ்க்கையிலே தெம்பு வரும்

வாப்பா மறுத்த தெல்லாம்
வாப்புச்சா வாங்கித்தரும்
உம்மா அடிக்கவந்தால்
ஒருபார்வையில் தடுக்கும்

சுருக்குப்பை யொன்று
இடுப்பினில் தொங்கும்
இறுக்கிய முடிச்சவிழ்த்து
எனக்கு மட்டும் கொட்டும்

முந்தானை முனையிலெல்லாம் - என்
மூக்கைச் சிந்திவைக்கும்
மொத்தியாகப் போகவேண்டி
முதல்வனிடம் கோரும்

புரைவிழுந்த பார்வைக்கு
பகல்கூட மங்கல்தான்
பாசமான பேரன்மட்டும்
பிரகாச பிம்பம்தான்

சாப்பாட்டை வைத்துக்கொண்டு
காத்திருக்கும் உம்மா
தட்டோடு என்னைத்
தேடிவரும் வாப்புச்சா

தென்னையாய் நினைத்து
எனைவளர்த்த வாப்புச்சா
என்றும் என் நெஞ்சில்
இனிக்கும் இளநீராய்!

- சபீர்

24 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

"உம்மா" என்று என் நினைவு தெரிந்த நாள் முதலாக அவர்களின் மறைவு வரை அழைத்தது என் வாப்பிச்சாவையும்தான். யார் மீது கோபமிருந்தாலும் பேரன்மீது கோபமென்பது வந்ததே இல்லை !

தன் மகன் வீட்டுப் பேரனுக்கு என்று எடுக்கும் சிரத்தைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்... விடிந்ததும் விவரிக்கலாம் இன்னும் !

நல்ல கிளரி விட்டீங்க கவிக் காக்கா ! வாப்பிச்சா ஞாபகத்தை !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வாப்ச்சாவின் நினைவுகளை தட்டி எழுப்பிய கவி மிக இனிமை.

தன் மகளுக்கு (மாமிக்கு) தெரியாமல் வாப்பிச்சா ரகசியமாக காசு தந்த இன்பம் தனி மகத்துவம் தான்.சென்று விட்ட வாப்ச்சாக்களுக்கு நாயன் நற்கூலி வழங்கட்டும்.ஹயாத்தானவர்களுக்கும் நற்கூலி வழங்கட்டும்.

sabeer.abushahruk said...

வாப்ச்சா பற்றிய என் கச்சா நினைவுகளை கலர்ஃபுல்லாக்கித் தந்த எங்கள் ஆசான் ஜமீல் காக்காவுக்கு என் நன்றி!

crown said...

வேதனை வந்தெனை
வாட்டும் போதெல்லாம்
வாப்புச்சா மடிதேடும்
வலிகண்ட மனம்!

வட்ட முகத்தில்
வரிவரியாய் ரேகைகள்
வாழ்ந்த வாழ்க்கையின்
விளக்க உரைகளாய்!
--------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.வலிக்கு நிவாரணம், நீ வரனும் வாப்பிச்சா மடிதேடி என்பதை ஆரம்பத்திலேயே சொல்லி நம்மை தம் பக்கம் இழுத்துவிட்டார் கவிஞர். இது வாய்(ச்சா)தால் நீதான் கொடுத்துவைத்தவன் வாப்பிச்சா மடிசேர.
வாப்பிச்சா அவர்முகத்தில் உள்ளவரி
" நம் குலத்துக்கே ,குடும்பத்திற்கே முதல் வரியும், முகவரியும்.

crown said...

வாப்புச்சா வார்த்தைகளில்
வகைவகையாய் அன்பிருக்கும்
வாஞ்சையுடன் வருடும்போது
வாழ்க்கையிலே தெம்பு வரும்
------------------------------------------
விரல்கள் நுனியில் அன்பூறும் .வாப்பிச்சா தொட்ட கண்ணம் தூங்கையிலே எரும்பூரும்.

crown said...

வாப்பா மறுத்த தெல்லாம்
வாப்புச்சா வாங்கித்தரும்
உம்மா அடிக்கவந்தால்
ஒருபார்வையில் தடுக்கும்

சுருக்குப்பை யொன்று
இடுப்பினில் தொங்கும்
இறுக்கிய முடிச்சவிழ்த்து
எனக்கு மட்டும் கொட்டும்.
--------------------------------------------------
வாப்பிச்சா மாதிரி தோழி இல்லை! தோழனும் இல்லை.தோளில் தூங்க வைக்க வேறு தூளியும் இல்லை. அன்பின் உருவே வாப்பிச்சாதான். சாத்தான் வேலைசெய்து அடிவாக்கும்போது. நமக்காக வரிந்து கட்டி அரனாய் இருக்கும் அன்பு கோட்டை வாப்பிச்சா.காசு கேட்டா காசுதரும், கேட்காமலே மிட்டாய் தரும் ,அன்புடனே முத்தம் தரும் அளாவிலா செல்லம் தரும் அற்புத உறவே வாப்பிச்சா.

crown said...

புரைவிழுந்த பார்வைக்கு
பகல்கூட மங்கல்தான்
பாசமான பேரன்மட்டும்
பிரகாச பிம்பம்தான்.
-------------------------------------------------------------------
இந்த வார்தை ஜாலம் எப்படி ? மாஸா அல்லாஹ். எல்லா புகழும் அல்லாஹுக்கே!.எப்படி இதற்கு விளக்கம் எழுத? எப்படி தேடினாலும் பாரட்ட நல் வார்தை கிடைக்கல.பேரன் என்றால் புரையோடிய கண்களும் புரையும் திரை விலகி தெளிவாக தெரியும் விந்தை! என் தந்தையின் தாய்க்கும் மட்டும் கிடைத்த வரம்.

crown said...

crown சொன்னது…
சாப்பாட்டை வைத்துக்கொண்டு
காத்திருக்கும் உம்மா
தட்டோடு என்னைத்
தேடிவரும் வாப்புச்சா

தென்னையாய் நினைத்து
எனைவளர்த்த வாப்புச்சா
என்றும் என் நெஞ்சில்
இனிக்கும் இளநீராய்!
--------------------------------------------------------------
நம்மை தேடி வரும் உணவும்,உபசரிப்பும்,உதட்டில் மெல்லிய சிரிப்பும். நம் மேனி சிலிர்கவைக்கும் வாப்பிசாவின் கரிசனம் தரும் தரிசனம்.
-----------------------------
வாரி இறைத்தாளும் வற்றாத நீராய்
உள்ளமெனும், தென்னையில் உள்ள இள நீராய் . என்னை தென்னையாய் பார்த்து,பார்த்து வளர்த்த என் தந்தையின் அன்னை
அப்பப்பா! கற்பனை வளம். நல்ல தொரு கோடை மழை.வாழ்துக்கள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//crown சொன்னது…
" நம் குலத்துக்கே ,குடும்பத்திற்கே முதல் வரியும், முகவரியும்.//
மிகச்சரியான 'வைர வரிகள்'

ZAKIR HUSSAIN said...

To Sabeer & All

ஒரு நாள் வாப்புச்சா போட்டோ தேடி பிறகு ஒரு க்ரூப் போட்டாவில் உள்ள மனுசியை ரீ-ஷூட் செய்து படமாக வைத்திருக்கிறேன். [ நான் அழைப்பது வாப்சி என ஏதொ மங்கோலியர்களை அழைப்பதுபோல் இருக்கும்] , எந்த விதமான டிகிரி , செமினார் எதுக்கும் போகாமல் தனிமனுசியாக இருந்து தனது குடும்பத்தை தூக்கி சுமந்த சுமைதாங்கி. அவர்களது போட்டோவுக்கு கீழ் இப்படி எழுதி வைத்திருக்கிறேன்.

ONE LIFE WITH COURAGE MAKES MAJORITY.


அவர்களது favorite motivational quote
"மேயப்போர மாட்டுக்கு கொம்புலெ எதுக்கு புல்?'

ZAKIR HUSSAIN said...

உம்மம்மாவின் சுருக்குப்பை தேடி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். வாப்புச்சாவின் பாக்கு இடிக்கும் 'இடிஉரல்' மற்றும் ஒலை பெட்டி முடையும் "சூர்க்கத்தி" இன்னும் தேடுகிறேன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//வாப்புச்சாவின் பாக்கு இடிக்கும் 'இடிஉரல்' மற்றும் ஒலை பெட்டி முடையும் "சூர்க்கத்தி" இன்னும் தேடுகிறேன்//

ஆஹா ! வெகுவிரைவில் புகைப்படம் கிடைத்திடும் !

காக்கா: சிறுவயதில் உறங்கி காலையில் எழுந்ததும் வலது கை / இடது கை இறுக்கமாக இருந்திடும் கண்விழித்ததும் வலிக்கும் கையைப் பார்த்தால் அங்கே ஒரு தாயத்து கட்டப்பட்டிருக்கும் இலகுவாக புரிந்து விடும் வாப்பிச்சா வந்து பேரனை மோந்துட்டு போயிட்டாங்கன்னு ! ஏன்னா கண்ணூர் பட்டுவிடுமாம் ! வழக்கம்போல் அடுப்படி கத்தியைக் கொண்டு அறுத்து அதனை தூக்கியெறிந்து விட்டு இருக்கும் தருவாயில் மீண்டும் அது தொடரும் அடுத்த வாரமும் !

வாப்பிச்சாவின் அன்பிற்கு எல்லையென்பது குறிக்கபட்டதே இல்லை !

அப்துல்மாலிக் said...

ஒவ்வொரு வாப்புச்சாவும்/உம்மம்மாவும் குழந்தைகளின் பெற்ரோரைவிட அதிகம் அக்கரைஎடுத்துப்பார்த்துக்கொண்டவர்கள் இதை யாராலும் மறுக்கமுடியாது, அவர்களையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவுக்கூர்ந்தது பாராட்டத்தக்கது. நன்றி சகோ. சபீர்

அதிரைநிருபர் பதிப்பகம் said...

Sabeer Ahmed சொன்னது...

//மகளுக்கு தெரியாமல்
ரகசியமாக
காசு தந்த இன்பம்//

// நம் குலத்துக்கே
குடும்பத்திற்கே
முதல் வரியும்
முகவரியும்.//

//வாப்பிச்சா தொட்ட கண்ணம்
தூங்கையிலே எரும்பூரும்.//

// வாப்பிச்சா மாதிரி
தோழி இல்லை!
தோழனும் இல்லை//

// தனிமனுசியாக
குடும்பத்தை
தூக்கி சுமந்த
சுமைதாங்கி//

//வாப்பிச்சா வந்து
பேரனை
மோந்துட்டு போயிட்டாங்க//

.. இந்த கவிதையை வரிகளெல்லம் நான் எழுதியவை அல்ல...

Sabeer Ahmed

Yasir said...

அனுபவித்ததை கவியாக படிக்கும்போது உள்ள சுகமே தனிதான்..அந்த வகையில் கவிகாக்கா கிங் காக்காதான்..அந்த கிங்ற்க்கு கீரிடம் வைத்து அழகு பார்த்து இருக்கிறார் சகோ.கிரவுன்

Yasir said...

அநியாயத்தை பாருங்கள்.....சாரி சபீர் காக்கா
Iraq hunting $17bln missing after US invasion
(Reuters): thanks : Khaleej Times

19 June 2011 BAGHDAD - Iraq’s parliament is chasing about $17 billion of Iraqi oil money it says was stolen after the 2003 U.S.-led invasion and has asked the United Nations for help to track it down.
The missing money was shipped to Iraq from the United States to help with reconstruction after the ouster of Saddam Hussein.

In a letter to the UN office in Baghdad last month, parliament’s Integrity Committee asked for help to find and recover the oil money taken from the Development Fund of Iraq (DFI) in 2004 and lost in the chaos that followed the invasion.

All indications are that the institutions of the United States of America committed financial corruption by stealing the money of the Iraqi people, which was allocated to develop Iraq, (and) that it was about $17 billion,’ said the letter sent to the UN with a 50-page report.

The committee called the disappearance of the money a ‘financial crime’ but said UN Security Council resolutions prevent Iraq from making a claim against the United States.

‘Our committee decided to send this issue to you ... to look into it and restore the stolen money,’ said the letter, a copy of which was obtained by Reuters.

UN officials were not immediately available for comment.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நல்லதொரு உணர்பூர்வமாக அனுபவித்து எழுதிய கவிதை : வாப்பிச்சா, உம்மம்மா இருவரின் அன்பு என்பது எந்த எல்லைக்கும் உட்பட்டது இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான அன்பு. அதிரை கவி சபீருக்கு வாழ்த்துக்கள்!

நட்புடன் ஜமால் said...

உங்களுக்கு வார்த்தைகள் மிகவும் வசமாகி உணர்வுகளை கொட்டிவிட்டது

எழுத்துகளாக இவை எமக்கு பரிட்சியமாகி இருப்பினும், இப்படி வார்த்தைகளாக மாறி வாக்கியங்களில் வளைந்து கவிப்புயலாகி உள்ளங்களை கொள்ளை கொண்டதிலை, என் தாயோடு தாயின் நினைவு எப்பொழுதும் என்னை விட்டு அகன்றதில்லை, சற்றே மறைந்திருந்தவை மீண்டும் வெளி வர வைத்து விட்டது ...

அபு ஆதில் said...

------------
------------
------------
-------------
சொல்ல தெரியாத வார்த்தைகள்

அபு ஆதில் said...

//வாப்புச்சா வார்த்தைகளில்
வகைவகையாய் அன்பிருக்கும்
வாஞ்சையுடன் வருடும்போது
வாழ்க்கையிலே தெம்பு வரும்//

மனத்தூளியிலே உறங்கி கொண்டிருக்கும் நினைவுகளையெல்லாம் தொட்டு எழுப்பிவிட்டன உங்கள் கவிதை வரிகள்.

sabeer.abushahruk said...

கருத்துப்பதிந்தவர்களுக்கு
சுறுக்குப்பை புதையல் கிடைக்க வாழ்த்துகளும் நன்றியும்.

அ.நி.: கடைசிப்பெட்டியும் டி டி இ ஆரும் கடந்து போயாச்சு. வண்டியின் கடைசிப்பெட்டியின் கருப்புச் சதுரமும் மெல்ல மெல்ல குறைந்து மறைந்தாயிற்று... கொண்டாட்டங்களை அறிவிக்க வேண்டியதுதானே?

Unknown said...

வேதனை வந்தெனை
வாட்டும் போதெல்லாம்
வாப்புச்சா மடிதேடும்
வலிகண்ட மனம்!
--------------------------------------------
Real!!!!!!! Real!!!!!!!! Real!!!!!!!!!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"கவிக்காக்கா எதை எழுதினாலும் அது கவி பாடும்".

பழைய நினைவுகளுக்கு வர்ணம் பூசுவதென்பது நமக்கு எப்பொழுதுமே பிடிக்கும்.

வாப்பிச்சாவாக இருந்தாலும், பெரியம்மாவாக இருந்தாலும் அவர்கள் நம் வாழ்வின் சரித்திரக்குறியீடுகள்.

அவர்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் அவர்களின் நினைவுகளில் நிழலைத்தேடுகிறோம்.

"கண்ணான வாப்பா" என்றொரு வார்த்தை கூறி எம்மை அன்பால் இறுகக்கட்டிப்போட்டு விடும் சொல் ஜாலம்.

அவர்கள் திறந்தது சுருக்குப்பை அல்ல; எம் ஆசை உள்ளக்கிடங்கு.

அவர்கள் தரும் காருவா, எட்டனாவில் எட்டாததையும் வாங்கிக்கொள்ளும் பிஞ்சு மனசு.

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" இல்லை என்ற‌ ம‌ன‌ம் என்றும் இல்லாத‌வ‌ர்க‌ள்.

உச்ச‌நீதி ம‌ன்ற‌ தீர்ப்பு கூட‌ அவ‌ர்க‌ள் தீர்ப்பில் ப‌ல‌ பாட‌ம் ப‌டிக்கும்.

அவ‌ர்க‌ள் வெள்ளைத்த‌லை முடி ந‌ரைக‌ள் கூட‌ இன்று எம‌க்கு பச்சைபசேல் விருச்ச‌மாய் விருப்ப‌மாய் காட்சி த‌ரும்.

சொல்லிக்கொண்டே போக‌லாம் சோர்வின்றி அவ‌ர்க‌ளின் சேதிக‌ளை.

வ‌ல்ல‌ இறைவ‌னே அவ‌ர்க‌ளுக்கு சுவ‌ன‌த்தில் உய‌ர்ந்த‌ ப‌த‌விக‌ளை அள்ளித்த‌ர‌ போதுமான‌வ‌ன்.

ம‌னித‌ர்க‌ள் ம‌றைந்திருக்க‌லாம் அவ‌ர்க‌ளின் ந‌ல்ல‌ ப‌ல‌ நினைவுக‌ள் ஒரு போதும் ம‌ர‌ணிப்ப‌தில்லை என்று கூறி நிறைவு செய்கிறேன்.

காசுக‌ள் த‌ர‌ வாப்பிச்சா/பெரிய‌ம்மாக்க‌ள் இல்லை; காசு இருந்தும் அந்த‌ கால‌ சுக‌மில்லை என்ற‌ ஏக்க‌ம் இன்று ந‌ம் எல்லோருக்கும் இருக்கும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா,

தற்சமையம் இணையத் தொடர்பு இல்லாத இடத்தில் இருப்பதால் உடன் கருத்திட முடியவில்லை.


//புரைவிழுந்த பார்வைக்கு
பகல்கூட மங்கல்தான்
பாசமான பேரன்மட்டும்
பிரகாச பிம்பம்தான்//

உண்மை காக்கா... அது என்னமோ மகனூட்டு பேரன் பேத்தி என்றாலே ஒரு பாசம் தான் எல்லா வாப்பிச்சாமார்களுக்கும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.