Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கல்வியும் கற்போர் கடமையும் ! - குறுந்தொடர் - 1 9

அதிரைநிருபர் பதிப்பகம் | July 15, 2011 | ,

தேடல்:

"தேடல்" என்பது மனிதனின் சமுதாய வாழ்கையில் அத்தியாவசிய அம்சங்களில் ஒன்று. ஆனால் எவற்றைத் தேடுவது ? எவ்வாறு தேடுவது? என்பதை உணர்ந்து தக்க பொருளைத் தக்க வழியில் தேடுவதே நல்லவர்கள் நாடும் நண்ணெறியாகும்.

இன்றைய மனிதர்கள் எவற்றையெல்லாமோ தேடியலைந்து கொண்டிருக்கிறார்கள் "இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு; அது எங்கிருந்த போது அதை நாடி ஓடு என இசை பாடி இன்பத்தை தேடியலைகிறது ஒரு கூட்டம். "பணமே பிரதானம்; அது இல்லையேல் அவமானம்" என்ற கொள்கை கொண்டு பணத்தை தேடியலைகிறது இன்னொரு கூட்டம் "பதவி வந்திடப் பத்தும் பறந்து வரும்" எனப் புதுமொழி பேசிப் பதவியைத் தேடித் திறிகிறது மற்றொரு கூட்டம்.

அறிவு:

இன்பம், பணம், பதவி போன்றவையெல்லாம் முதலிடம் கொடுத்துத் தேடப்பட வேண்டைய பொருளா ? நிச்சயமாக இல்லை. தேட்டத்தோடு தேடப்பட வேண்டிய பொருள் ஒன்றுண்டு, அதுதான் "அறிவு". அறிவே அகிலத்தின் அணையா ஜோதி" என்கிரார் கிரேக்க நாட்டு தத்துவ ஞானி சாக்ரடீஸ். "அறிவு அற்றம் காக்கும் கருவி" என்கிறார் வண்டமிழ்ப் புலவர் வள்ளவப் பெருந்தகை. "பணம், பதவி, அதிகாரம், செல்வாக்கு,அழகு எதைக் கொண்டும் சத்தியத்தை விளங்கில் கொள்ள முடியாது. அறிவு இருந்தால் மட்டுமே சத்தியத்தை விளங்கிக் கொள்ள முடியும்" என்பது அருமை திருமறைக் குர்ஆன் காட்டும் தெளிவுரை.

அறிவுதான் இன்று உலகை ஆட்சி செய்கிறது, ஆயுதம், பணம், பதவி எல்லாம் கூட அறிவுக்குப் பின்தான் பயன்படுகிறது என்பதை உலகறிந்த உண்மை. இத்தகைய அறிவையே தேடிப் பெறச் சொன்னார்கள் அருமை நபி(ஸல்) அவர்கள். "அறிவு இறை நம்பிக்கையாளர்களின் காணாமல் போன பொருள், அதைத் தேடி அடைய வேண்டிய உரிமை அவருக்குண்டு" என்பது அண்ணலார் அவர்களின் வாக்கு.

கல்வி:

மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் சக்திதான் அறிவு. மண்ணுக்குள் மறைந்திருக்கும் தண்ணிரைப் போல் அறிவு மனிதனுக்குள் மறைந்திருக்கிறது. அதை வெளிக் கொணரும் ஒப்பற்ற கருவியாகக் கருதப்படுவது தான் "கல்வி" ஆகும்.

மண்ணைத் தோண்டத் தோண்ட நீர் ஊற்றெடுத்துப் பெருகுவது போல் கற்க கற்க அறிவும் ஊற்றெடுத்துப் பெருகும். எனவே தான் கல்வி கற்பது மனிதனின் அடிப்படைக் கடமை எனக் கருதப்படுகிறது.

கல்வி கற்றவரே சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறார். "கற்றவரும் கல்லாதவரும் சமமாவரா" என்பது இறைவன் தன் திருமறையில் தொடுக்கும் வினா. "கற்பவனாக இரு; அல்லது கற்பிப்பவனாக இரு" என்பது பெருமானார் (ஸல்) அவர்களின் போதனை. "கேடு இல் விழுச் செல்வம் கல்வி" என்பது வள்ளுவர் வாக்கு "கற்றவர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பு" என்பது அவ்வையின் அமுத மொழி. "செல்வம் பெரிதா ? கல்வி பெரிதா" எனப் பட்டிமன்றங்கள் நடத்தப்படுகின்றன. இதை முடிவு செய்ய பட்டிமன்றங்களே தேவையில்லை கல்விதான் என்பது கண்கூடு. செல்வத்தை நாம் பாதுகாக்க வேண்டும்; கல்வியோ நம்மை பதுகாக்கும். செல்வம் செலவழிக்க செலவழிக்க அதிரகரிக்கும். செல்வம் இன்றிருக்கும் நாளை சென்று விடலாம்; ஆனால் கல்வி உயிருள்ளவரை உடனிருக்கும். எனவே தான் "கல்வி கற்க வேண்டியது ஆண் பெண் எல்லோருடைய கடமை" என இயம்பினார்கள் ஏந்த நபி(ஸல்) அவர்கள்.

எல்லை இல்லை:

'கல்வி கரையில; கற்பவர் நாள் சில' என்ற கூற்றும் 'கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு' என்ற கூற்றும் நாம் கற்க கூடிய கல்விக்கு எல்லை இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. காலத்தின் அருமை கருதிக் கல்விக் கூடங்களில் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் குறிப்பிட்டப் பாடத்திட்டத்தின் படி குறிப்பிட்ட நூல்களை மட்டும் கற்று நமது அறிவை வளர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறுகிய வரம்பிற்குட்பட்ட அக்கல்வியைக் கூட பல மாணவர்கள் முனைப்போடு கற்பதில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். முனைப்போ முயற்சி மேற்கொண்டு கற்றால் மட்டுமே தேவையான அறிவை நாம் தேடிக் கொள்ள இயலும் என்பதை கற்போர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்காக சில நெறிமுறைகளைக் கைக் கொள்ள வேண்டும்.

தன்னம்பிக்கை:

கல்விக்குத் தடையா இருப்பவை நான்கு. 1. மறதி, 2. சோம்பல், 3. அலட்சியம், 4.தூக்கம். கல்விக்குத் துணையாக இருப்பவை நான்கு.1.ஆசையும் ஆர்வமும், 2.முயற்சியும் உழைப்பும், 3.துணிவும் உற்சாகமும், 4.கவலையும் பிரார்த்தனையும். கல்விக்குத் தடையாக இருப்பவற்றைக் கல்விக்குத் துணையாக இருப்பவற்றைக் கொண்டு வீழ்த்தி வெற்றிகாண முயற்சிக்க வேண்டும்.

'சாதிக்க வேண்டும்' என்ற தன்னம்பிக்கையும், 'சாதித்தே தீர்வேன்' என்ற விடா முயற்சியும் கற்போரிடம் கட்டாயம் இருந்தாக வேண்டும். இவற்றோடு சோர்வற்ற உழைப்பும் சேர்ந்து விட்டால் அவர்களின் வெற்றியை தடுத்து நிறுத்தும் சக்தி வேறு எதற்கும் இல்லை.

காலந்தவறாமை:

கல்வியில் சாதிக்க விரும்பும் மாணவர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய ஒன்று காலம் தவறாமை. "கடமை கண்போன்றது; காலம் பொன் போன்றது" என்ற மூதுரை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும். குடிக்க நீர் கிடைக்காத பாலைவனத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் ஒருவன் தன்னிடமுள்ள சிறு அளவு நீரைச் சிக்கனமாகச் செலவழிப்பதில் எவ்வளவு கவனமாக இருப்பானோ அந்த அளவு, நேரத்தை செலவிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். படிப்பைப் பாதிக்கும் வேறு எதிலும் நேரத்தை வீண் விரயம் செய்யக் கூடாது.

தேர்வுக்காக மட்டும் படிப்பது என்ற வழக்கம் நல்லதல்ல, நாள் தோறும் படிக்கின்ற வழக்கத்தைக் கொள்ள வேண்டும். வகுப்பில் அன்று நடந்த பாடத்தை அன்றிரவே மீண்டும் படித்து மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். இதைத் திட்டமிட்டுச் செய்தால் அதுவே திகட்டாத பழக்கமாகிவிடும்.

தொடரும்...

-SKM ஹாஜா முகைதீன் M.A. Bsc., BT.

 (முன்னால் தலைமையாசிரியர். கா.மு. மேல்நிலை பள்ளி, அதிரை)




9 Responses So Far:

sabeer.abushahruk said...

எங்கள் கணக்கு வாத்தியாரின் நீதி போதனை வகுப்புபோல தெளிவாகவும் தீர்வாகவும் சொல்லப்பட்டிருப்பது தொடர்மீது ஆர்வம் ஏற்படுத்துகிறது.

தொடரும் தங்கள் ஆயுளும் நீஈஈஈளட்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தேர்வுக்காக மட்டும் படிப்பது என்ற வழக்கம் நல்லதல்ல, நாள் தோறும் படிக்கின்ற வழக்கத்தைக் கொள்ள வேண்டும். வகுப்பில் அன்று நடந்த பாடத்தை அன்றிரவே மீண்டும் படித்து மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். இதைத் திட்டமிட்டுச் செய்தால் அதுவே திகட்டாத பழக்கமாகிவிடும்.//

இது எல்லாவற்றிற்கும் பொருந்தும் !

ஒரு குறுந்தொடரோடு தொடர்ந்து இன்னும் நிறைய எழுத வேண்டும் என வேண்டுகிறோம் இன்ஷா அல்லாஹ் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கல்வி பற்றிய பயனுள்ள தொடர்.மேலும் பல ஆக்கங்களும் ஆயுளும் தொடரட்டும்.

ZAKIR HUSSAIN said...

To SKMH sir,

//'சாதிக்க வேண்டும்' என்ற தன்னம்பிக்கையும், 'சாதித்தே தீர்வேன்' என்ற விடா முயற்சியும் கற்போரிடம் கட்டாயம் இருந்தாக வேண்டும். இவற்றோடு சோர்வற்ற உழைப்பும் சேர்ந்து விட்டால் அவர்களின் வெற்றியை தடுத்து நிறுத்தும் சக்தி வேறு எதற்கும் இல்லை.//


வாழ்க்கையில் சொல்லப்படும் முன்னேற்ற தத்துவங்கள் இந்த 4 வரிக்குள்தான் இருக்கிறது. இதை சரியாகப்புரிந்ந்து கொண்டவர்கள் வெற்றியடைகிறார்கள். புரியாதவர்கள் "வெட்டி' என அழைக்க்கப்படுகிறார்கள்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------

கணிதம் என்றால் சிலருக்கு கசப்பாக இருக்கும். ஆனால் அந்த கசப்பை இனிப்பாக மாற்றி இனிய இலக்கிய நடையில் எங்களுக்கு கணிதத்தை போதித்தவர் எங்கள் ஆசான் ஹாஜி SKM ஹாஜா முகைதீன் M.A., B.Sc., B.T.

கூறுவதற்கு எண்ணற்ற நிகழ்வுகள் இருப்பின் உதாரணத்திற்கு ஒன்றை கூறுகிறேன்.

ஏற்றக் கோணம், இறக்கக் கோணம் என்ற பாடப் பகுதியை நடத்தும் போது, ஏற்றக் கோணம், இறக்கக் கோணம் இரண்டும் ஒரே நேர்கோட்டில் அமையும் என்பதை, "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினால்" அதாவது அண்ணலின் பார்வை ஏற்றக் கோணம், அவளின் பார்வை இறக்கக் கோணம், இரண்டு பார்வையும் ஒன்றை ஒன்று கவ்வி ஒரே நேர் கோட்டில் அமைந்தன. அது போல் ஏற்றக் கோணம், இறக்கக் கோணம் இரண்டும் ஒரே நேர் கோட்டில் அமையும் போது அதன் இரு கோணங்களும் ஒன்றே என்று போதித்தவர் எங்கள் ஆசான் ஹாஜி SKM ஹாஜா முகைதீன் M.A., B.Sc., B.T.

காலமும் வேலையும் என்ற கணித பாடப் பகுதியை நடத்தும் போது, ஓர் ஆண் ஒரு பெண் என்று எழுதியிருப்பதை, தமிழில் உயிர் எழுத்தைக் கொண்டு ஆரம்பிக்கும் பதத்தின் ஒருமைக்கு ஓர் என்றுதான் குறிப்பிட வேண்டுமென தமிழாசிரியரிடமிருந்து நான் அறிவதற்கு முன்னால் எங்களுக்கு போதித்தவர் எங்கள் ஆசான் ஹாஜி SKM ஹாஜா முகைதீன் M.A., B.Sc., B.T.

இன்னும் உள.

நூர் முஹம்மது / கதீப்-தமாம் / சவூதி அரேபியா.

Yasir said...

அறிவைத்தேடு,கல்வியை எல்லைபாரமல் கற்று,தன்னம்பிக்கையை வளர்த்து காலந்தவறாமையை கடைபிடி...வெற்றிக்கு இவைகளைவிட வேறு என்ன தாரக மந்திரம் வேண்டும்....உங்கள் வகுப்பில் நீங்கள் போதித்தை 15வருடங்கள் கழித்து மீண்டும் கேட்பது என் பாக்கியம் சார்...தொடருங்கள் சார் நாங்களும் தொடர்ந்து வருவோம்

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------

சார் உங்களின் எழுத்து தொண்டு தொடர கடவுளை வேண்டுகிறேன்.

நீங்கள் எங்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும்போது நிகழ்ந்த ஒரு சம்பவம்.

வகுப்பின் மேற்கூரையிலிருந்து ஒரு "பல்லி" கேர்ள்ஸ் அமர்திருந்த பெஞ்சின் மீதி விழுந்தது அங்கிருந்த மாணவிகள் அலற அதனைக் கேட்டு நாங்களும் அலறிவிட்டோம் பக்கத்து வகுப்பிலிருந்தவர்கள் வெளியில் வந்து விட்டனர். அந்த நேரத்தில் எங்களை சகஜ நிலைக்கு வரவைக்க தாங்கள் அங்கே சொன்ன கமெண்ட் இன்றும் எனது ஞாபகத்தில் இருக்கிறது.

"பள்ளிக் கூடத்திலிருக்கும் மாணாவர்களுக்கு "பல்லி"யே பாடம் எடுக்கிறது பயம் கொள்ளாதேன்னு" என்றது எங்கள் நிலை மறந்து சிரித்தோம்.

சார், எனது பிள்ளைகளுக்கு ஏதாவது சொல்வதாக இருந்தாலும் எனது ஆசான்களிடம் கற்றது, கேட்டது அவர்களால் சொன்னது என்று ஞாபகத்தில் இருப்பதை சொல்லிக் காட்டுவேன்.

முன்னாள் மாணவி

Mohamed Meera said...

//'சாதிக்க வேண்டும்' என்ற தன்னம்பிக்கையும், 'சாதித்தே தீர்வேன்' என்ற விடா முயற்சியும் கற்போரிடம் கட்டாயம் இருந்தாக வேண்டும். இவற்றோடு சோர்வற்ற உழைப்பும் சேர்ந்து விட்டால் அவர்களின் வெற்றியை தடுத்து நிறுத்தும் சக்தி வேறு எதற்கும் இல்லை//
சார்
சாதிக்க வேண்டும் என்ற 'எண்ணங்களை' நம் மாணவர்கள் மத்தியில் விதைக்க, உங்களை போன்ற அறிவு ஆசான்களின் தன்னம்பிக்கை வழிகாட்டல்கள் அவசியம்.
உங்கள் சேவையினை தேவை அறிந்து பயன்படுத்திக்கொள்வோம்.
எங்கள் பிள்ளைகள் படிக்கும் இந்த காலத்தில் உங்களை போன்று அறிவு ஆசான்கள் இல்லாமல் , தொழில் முறை ஆசிரியர்கள் தான் அதிக மாக உள்ளார்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்.
உங்கள் குறுந்தொடர் படித்துவிட்டு 1984 - 1986 பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது நடந்த பல சம்பவங்களை நினைத்தேன் ( அது ஒரு கன காலம் )

குறுந்தொடர்- 1 அப்போ 2 , 3 என்று தொடரும் என்று சொல்லுங்கள்...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அருமையான வழிகாட்டல்கள், கல்வி கற்போருக்கு ஊக்கம் தரும் வரிகள்.

//கல்விக்குத் தடையா இருப்பவை நான்கு. 1. மறதி, 2. சோம்பல், 3. அலட்சியம், 4.தூக்கம். கல்விக்குத் துணையாக இருப்பவை நான்கு.1.ஆசையும் ஆர்வமும், 2.முயற்சியும் உழைப்பும், 3.துணிவும் உற்சாகமும், 4.கவலையும் பிரார்த்தனையும். கல்விக்குத் தடையாக இருப்பவற்றைக் கல்விக்குத் துணையாக இருப்பவற்றைக் கொண்டு வீழ்த்தி வெற்றிகாண முயற்சிக்க வேண்டும்.


'சாதிக்க வேண்டும்' என்ற தன்னம்பிக்கையும், 'சாதித்தே தீர்வேன்' என்ற விடா முயற்சியும் கற்போரிடம் கட்டாயம் இருந்தாக வேண்டும். இவற்றோடு சோர்வற்ற உழைப்பும் சேர்ந்து விட்டால் அவர்களின் வெற்றியை தடுத்து நிறுத்தும் சக்தி வேறு எதற்கும் இல்லை//

ஒவ்வொரு பள்ளிக்கூட தகவல் பலகைகளில் எழுதி வைக்க வேண்டிய வரிகள்.

தொடருங்கள் தங்களின் கல்வி சேவையை...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.