Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பயம்.... பயம்.... பயம்.... 26

அதிரைநிருபர் பதிப்பகம் | July 14, 2011 | , , , ,

நான் சிறு பிள்ளையாக இருக்கும் சமயம் என் வீட்டில் மட்டுமல்ல என்னைபோன்று சிறுவர்கள் இருக்கும் வீட்டிலெல்லாம் அவர்களுக்கு தாய்மார்கள் சோறூட்ட அன்புடன் அம்புலிமாவை (நிலாவை) காட்டி ஊட்டுவார்கள். அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு சற்று பயம் காட்டும் விதமாக மாக்காண்டி,பூச்சாண்டி,பேயி, சாக்குமஸ்தான், பிள்ளை பிடிப்பவன் என்று ஏதேதோ சொல்லி அச்சத்துடன் உணவை ஊட்டி விடுவார்கள். உணவுடன் பயத்தையும் உண்டு வளர்ந்தோம்.

அதனால் ஒரு அச்ச உணர்வுடனேயே சிறுவயதில் வளர்க்கப்பட்டோம் இருளைக்கண்டால் பயம், தனிமையில் செல்ல பயம், சமீபத்தில் மரணமடைந்தவர்கள் வீட்டருகே செல்ல பயம், உச்சி பொழுதில் பயம், சூரியன் மறைந்தால் பயம் உதயம் இப்படி பயம் அன்றாடம் நம் வாழ்வில் கலந்து விட்ட ஒன்றாகவே நாம் வளர்க்கப்பட்டோம்.

அந்த பக்கம் செல்லாதே, இந்தப்பக்கம் செல்லாதே, அந்த மரத்தடியில் உண்டு, இந்த குளக்கரையில் உண்டு, அது ஒரு பேய் வீடு என்று யாரும் அறியா, ஊர்ஜிதம் செய்யப்படாத மர்மக்கதைகள் பல சொல்லி நாம் சிறுவயதில் அச்சத்துடன் வளர்த்தெடுக்கப்பட்டோம்.

மீன் சாப்பிட்டு விட்டு கை, வாயை நன்கு கழுவி நறுமணம் பூசாமல் வெளியில் செல்வதனாலும் மற்றும் இரவில் மல்லிகைப்பூ நறுமண சென்ட் பூசி தனியே செல்வதனாலும் பேய் எளிதில் நம்மை பிடித்து விடும் என்று பயமுறுத்துவார்கள். அதனால் மீன் சாப்பிட்டு பின் வெளியில் கிழம்பும் சமயம் பாண்ட்ஸ் பவுடரை நன்றாக பூசி சென்றோம். என்ன செய்வது? யார்ட்லி பவுடர் எல்லாம் அப்பொழுது புழக்கத்தில் இல்லை.

ஆனால் இது வரை யாரும் பேய், பிசாசுகளை நேரில் கண்டிருக்கிறார்களா? என்றால் தெளிவான பதில் இதுவரை இல்லை. ஆனால் அது பற்றிய கதைகளும், மர்மங்களும், அச்சங்களும் மர்மப்புதையல் போல் இன்றும் பொதிந்து கிடக்கிறது நம்மிடையே கேரளாவைப்போல்.

சிலர் அதன் சப்தத்தை கேட்டிருக்கிறேன் அல்லது தூரத்தில் நெருப்பெறிய கண்டிருக்கிறேன் அல்லது ஒரு ஒளியைப்போல் கண்டிருக்கிறேன், நிழலைப்போல் கண்டிருக்கிறேன் என்று எதேதோ அச்சத்திற்கு தகுந்த வடிவம் கொடுத்து நம்மிடம் சொல்லி எல்லோரையும் உரைய வைத்து விடுவார்கள்.

இரவு ஒன்பது மணிக்கெல்லாம் ஊர் ஓசையின்றி அடங்கிப்போகும் நம்மூர் போன்ற சிற்றூர்களில், கிராமப்புறங்களில் வாழும் மக்களிடம் தான் இது போன்ற இனம்புரியாத அச்சம் நிலவி வருவது இயற்கை. ஒரு சில தைரியமான ஆண்களும், பெண்களும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கிறார்கள். போக்குவரத்து இரவு பகலாய் ஓடிக்கொண்டிருக்கு மின்விளக்கு வெளிச்சம் அதிகம் உள்ள நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு இது போன்ற அச்ச உணர்வு இயற்கையில் இருப்பதில்லை. இரவு ஒரு மணிக்கு கூட தனியே வெளியில் சென்று வந்து விடுவார்கள்.

ரமளான் மாதத்தில் அல்லாஹ்வே குர்'ஆனில் அட்டூழியம் புரியும் சைத்தான்கள் கட்டப்பட்டுவிடும் என்று குறிப்பிட்டு சொல்வதால் நம் மக்கள் ரமளானில் மட்டும் ஆண்களும், பெண்களும் இரவு நேரங்களில் பயமின்றி வெளியில் சென்று வர அச்சப்படுவதில்லை. சிறுவயதில் ரமளான் அல்லாத காலங்களில் இஷா தொழுகை முடிந்து நண்பர்களுடன் தெரு முனையில் சிறிது உரையாடி விட்டு சந்தில் (முடுக்கு) உள்ள வீட்டிற்கு திரும்பி வர யாராவது பெரியவர்கள் சந்தில் செல்கிறார்களா என்று காத்துக்கிடந்து அல்லது தெரிந்த ஆயத்தை பயத்துடன் ஓதி வேகமாக வீடு திரும்பிய‌ அனுபவமும் உண்டு. அடுத்த சந்தில் வீடு உள்ள ஒரு நண்பன் தனிமையில் இரவில் வீடு செல்லும் பொழுது நாகூர் ஈ.எம். ஹனீஃபா பாடல்களை (இறைவனிடம் கையேந்துங்கள்....) சப்தமாக பாடிக்கொண்டு வேகமாக ஓடி செல்வான் என நண்பன் ஒருவன் சொல்ல அறிந்தேன். இப்பொழுது நினைத்தால் சிரிப்பு தான் வரும் அந்த நேரத்தில் வரவழைக்கப்படும் தைரியம் அலாதியானது தான்.என் சொந்தக்கார‌ வீட்டின் முன் நன்கு குலை,குலையாக காய்த்து நிழல் தந்து கொண்டிருந்த மாமரத்தில் பேய் இருப்பதாக பல பேர் சொல்லி அதை அவ்வீட்டினர் வெட்டிவிட்டனர். பிறகென்ன மாங்காய் ஊறுகாயாக இருந்தாலும், மாம்பழமாக இருந்தாலும் காசு கொடுத்து தான் இனி அவர்கள் வெளியில் வாங்க வேண்டும்.

என்ன தான் தைரியமாக பகலில் பேய்,பிசாசு சமாச்சாரத்தில் வியாக்கியானம் படித்தாலும் எவரேனும் இரவில் நான் மைத்தாங்கரையில் (மையவாடி) தனியே பாய் போட்டு படுத்து வருவேன். இரவில் குளக்கரையில் தனிமையில் படுத்துறங்குவேன் என்று வீராப்பு பேசி சவால் விட்டு அதில் வெற்றி கண்டவர்கள் யாரேனும் என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. நீங்கள் கண்ட யாரேனும் உண்டா?

நடு இரவில் நாய் ஊளையிட்டாலே பேய் வருவதற்கு அறிகுறி என்பார்கள். (பேய் வருவதற்கு முன்னரே நாயிக்கு எஸ்.எம்.எஸ். எப்படி கொடுக்கின்றது என்று தெரியவில்லை).

ஊரில் சில பெரியவர்கள் நம் கண்ணுக்கு புழப்படாத குர்'ஆனில் சொல்லப்பட்டுள்ள ஜின்களை தன் வசப்படுத்தி அதை தனக்கு பணிவிடைகள் செய்ய பணித்திருந்தார்கள் என சிலர் கூறக்கேட்டிருக்கிறேன். அதில் நல்ல ஜின்களும் உண்டு, பிறருக்கு கேடு விளைவிக்கும் கெட்ட ஜின்களும் உண்டு என்று சொல்வார்கள். இதில் உள்ள மர்மங்களையும், மாச்சரியங்களையும் இதையெல்லாம் படைத்து அதன் கட்டுப்பாட்டை தன் வசம் வைத்துள்ள வல்ல ரஹ்மானே நன்கறியக்கூடியவன்.

முப்பத்தாறு வருட உலக அனுபவத்தில் பல அச்சங்களையும், அதனால் வரும் பயங்களையும் சொல்லக்கேட்டிருக்கிறேன் அதனால் அஞ்சியும் இருக்கிறேன். ஆனால் அதன் உண்மைக்கருவை இதுவரை எங்கும் நான் கண்டதில்லை. அதைக்காண முயற்சி எடுக்க விரும்பவும் இல்லை அதற்கு போதிய தைரியமும் மனவசம் இல்லை.

இரவில் ஆவுசம் (பேயின் ஒரு வகை) கத்தியதை கேட்டிருக்கிறேன் என்று என் நண்பன் ஒருவன் சொல்லவும் கேட்டிருக்கிறேன். இந்த மர்ம முடிச்சுகளுக்கெல்லாம் தெளிவான தீர்வு நிச்சயம் இறைவேதத்தில் இல்லாமல் இல்லை என்பதை நாம் அறிவோம்.

கல்லூரி படிக்கும் சமயம் ஒரு நாள் சுபுஹ் பாங்கு சொல்லியதும் எழுந்து தொழுவதற்காக தனியே மரைக்காப்பள்ளி சென்று கொண்டிருந்தேன். செல்லும் வழியில் சில வீடுகளில் பெண்கள் அதிகாலையில் எழுந்து வீட்டின் முன் சுத்தம் செய்து பெருக்கி தெரு குழாயில் வரும் தண்ணீரையும் பிடித்துக்கொண்டிருப்பர். அவ்வாறு சற்று தூரத்தில் அவர்கள் இருக்கும் சமயம் நான் தனியே நடந்து சென்று கொண்டிருந்தேன். திடீரென என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. கால்கள் ஒன்றோடொன்று பிண்ணிப்பிணைந்து கயிறால் கட்டியது போல் என்னால் நகர முடியாமல் போனதை உணர்ந்தேன். தூரத்தில் உள்ள பெண்கள் என்னை பார்த்து எதுவும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக அப்படியே கைலியை கட்டுவது போல் அங்கேயே நின்று விட்டேன். சிறிது நேரத்திற்கு பின் என் நடையை தொடர்ந்தேன் பள்ளியை நோக்கி. அந்த நேரம் எனக்கு உடல் நலக்குறைவு எதுவும் இல்லை. நன்றாகத்தான் உறங்கினேன் பிறகு விழித்தெழுந்தேன். எனக்கறியாமல் வந்த உடல்நலக்குறைவா? இல்லை தீய (சைத்தான்) சக்தி ஏதும் என்னை குறிக்கிட்டதா? என்பதை இன்றும் என்னால் ஊர்ஜிதம் செய்ய இயலவில்லை. அல்லாஹ்வுக்கே எல்லாம் வெளிச்சம்.

என் நண்பன் ஒருவன் ஒருநாள் சுபுஹ் தொழுகைக்காக பாங்கொலி கேட்காமல் எப்பொழுதும் போல் எழுந்து செக்கடிப்பள்ளி சென்றிருக்கிறான். அவன் செல்லும் பொழுது வழியில் யாரும் இல்லை. பள்ளியும் வந்து விட்டது. ஆனால் பள்ளியின் வாயில்கள் பூட்டப்பட்டிருக்கின்றன. காரணம் ஒன்றும் அறியாதவனாய் கேட்பதற்கு யாரும் அங்கில்லாமல் வீடு திரும்பி விட்டான். கடைசியில் வீட்டில் கடிகாரத்தை எதார்த்தமாக பார்த்திருக்கிறான் மணி இரவு ஒன்று தான் ஆன‌து. அச்சத்தில் அப்படியே உறங்கி இருப்பான்.

இன்னொருவர் இரவில் வெளியூர் சென்று தனியே வீடு திரும்பும் பொழுது யாரோ அவர் பெயரை எங்கிருந்தோ கூப்பிட்டது போல் இருந்ததாக‌ ஒரு பிரம்மை அவருக்கு. உடனே அதிர்ச்சியில் மூன்று நாட்கள் கடும் காய்ச்சலில் அவதிப்பட்டதாக கேள்விப்பட்டேன்.

நான் கல்லூரி படிப்பு முடித்ததும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் திருப்பூரில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்தேன். விடுமுறையில் ஊர் வரும் பொழுது பஸ்ஸில் இரவில் திருப்பூரிலிருந்து புறப்பட்டு தஞ்சாவூருக்கு அதிகாலை ஒன்றரை மணிக்கு வந்திறங்குவேன். பிறகு தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை, பிறகு பட்டுக்கோடையிலிருந்து அதிரைக்கு சுமார் அதிகாலை மூன்றரை மணிக்கு வந்திறங்குவேன். சேர்மன் வாடி வந்திறங்கியதும் சந்தோசத்துடன் பயமும் என்னை பற்றிக்கொள்ளும். எப்படி தனியே வீடு செல்வது? செக்கடி மோடு வழியே செல்வதாக இருந்தால் குளக்கரையில் ஒருவர் சமீபத்தில் அகால மரணமடைந்துள்ளார். சரி வேறு வழியை தேர்ந்தெடுத்து வாய்க்கால் தெரு பக்கம் செல்லலாம் என்றால் அங்கு ஒரு பெண்ணும் சமீபத்தில் அகால மரணமடைந்துள்ளார். பிறகு எப்படி வீடு செல்வது? சுபுஹ் பாங்கு சொல்லும் வரை சேர்மன் வாடியில் உள்ள ஹாஜியார் கடையில் உட்கார்ந்து இருந்து விட்டு பிறகு பாங்கு சொன்னதும் வீட்டு பெரியவர்கள் வீட்டை திறந்து பள்ளிக்கு செல்ல வெளியில் வரும் சமயம் அவர்களுடன் மெல்ல,மெல்ல எப்படியோ சிரமப்பட்டு வீடு வந்து சேர்வேன். திக், திக் என்று தான் இருக்கும். அந்த நேரம் இடையில் ஒரு பூனை குறிக்கிட்டாலும் எமக்கு ஒரு டைனோசரே குறிக்கிட்டு சென்றது போல் பகீரென்றிருக்கும். இதெல்லாம் என் வாழ்வில் மறக்க இயலா பயம் கலந்த மலரும் நினைவுகள்.

ஒரு முறை மரைக்காப்பள்ளியில் இயங்கி வரும் மத்ரஸத்துந்நூர் ஹிஃப்ள் மத்ரஸாவில் அக்கம் பக்கத்து ஊரில் உள்ள சில மாணவர்கள் ஓதிக்கொண்டிருந்தனர். மத்ரஸாவிற்கு பக்கத்திலேயே அவர்கள் தங்க அறைகளும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு கோடை காலத்தின் இரவில் பழைய‌ மரைக்காப்பள்ளியின் வராண்டாவில் படுக்க மாணவர்கள் சென்றிருக்கிறார்கள். அதில் ஒரு மாணவன் பள்ளியின் உள் கதவின் குறுக்கே படுத்துறங்கி இருக்கிறான். ஒரு மூலையில் நம் ஊரைச்சார்ந்த ஒரு நபரும் படுத்துறங்கி இருக்கிறார். நடு இரவில் பள்ளியின் கதவறுகே படுத்துறங்கிய அந்த மாணவன் அவனறியாது "ஓ வென ஓலமிட்டவனாக" தண்ணீர் ததும்பிக்கொண்டிருக்கும் அருகில் உள்ள ஹவுதில் விழுந்து அதனுள் இருக்கும் பாசிக்குள் புதைந்து விட்டான். உடனே திடுக்கிட்டு எழுந்த அந்த நபர் ஓடிச்சென்று அல்லாஹ் அக்பர் என்று சொல்லி ஹவுதுக்குள் புதைந்திருப்பவனை தைரியத்தை வரவழைத்து உள்ளே இறங்கி வெளியே கொண்டு வந்திருக்கிறார். மறுநாள் காலையில் நானே அந்த மாணவனிடம் நடந்த சம்பவத்தை பற்றி கேட்டேன். அவன் என்ன நடந்தென்று அவனுக்கே தெரியாமல் போனதை அச்சத்துடன் சொன்னான். அல்லாஹ் பாதுகாத்தான் அந்த நேரம் யாரும் அவனை கவனிக்கவில்லை எனில் அவன் இறந்திருக்கக்கூடும். அந்த நாள் முதல் பள்ளியின் குறுக்கே படுத்துறங்குவதால் வரும் விபரீதங்களை அறிந்து கொண்டேன்.

இப்பதிவு யாரையும் அச்சமூட்டி தேவையற்ற பயத்தை ஊட்டுவதற்காக அல்ல. கண்டதற்கெல்லாம் பயந்து, பயந்து வாழ்வில் நல்ல பல வாய்ப்புகளையும், உரிமைகளையும், உடமைகளையும் மற்றும் பெற வேண்டியவைகளை அநியாயமாக நாம் இழந்திருக்கிறோம் என்று சொல்ல வந்தேன். இருளால் நமக்கு வரும் இரவு பயங்களால் சில சமூக விரோதிகளும், திருடர்களும், தவறான தொடர்புள்ளவர்களும் தங்கள் தீய செயல்களை அரங்கேற்றிக்கொள்ள வாய்ப்பாக‌ பயன்படுத்திக்கொள்ள‌ நாம் அனும‌திக்க‌ கூடாது.

இதுவ‌ரை வாழ்நாளில் பேய்பிடித்த‌ ம‌னித‌ர்க‌ளை பார்த்திருக்கிறேன். ஆனால் அவ‌ர்க‌ளை பிடித்த‌ பேயை ஒரு த‌ட‌வை கூட‌ பார்த்த‌தில்லை. அத‌னால் பிடிக்காத‌ பேயை நீங்க‌ள் பார்த்திருக்கிறீர்க‌ளா? என்று யாரும் கேட்டுவிடாதீர்க‌ள்.

இன்றைய சிறுவர்களுக்கு பயம் காட்ட பூச்சாண்டி போல் வேசமிட்டு திடீர் அச்சமூட்ட முயன்றாலும் "என்னா இது ஜெட்டிக்ஸ்லெ வர்ர மாதிரி இருக்கு, ஹாரி பாட்டர்லெ வர்ர மாதிரி இருக்கு" என்று அலட்சியமாக சொல்லி விடுவார்கள் பயமின்றி.
வாழ்வில் என்ன தான் தைரியமான ஆளாக இருந்தாலும், சரியான பயந்தாங்கொல்லியாக இருந்தாலும் ஒரு நாள் எல்லாவற்றையும் தனியே தவிக்க விட்டு விட்டு இவ்வுலகை விட்டு இருண்ட கபுர் குழிக்குள் செல்லத்தான் போகிறோம். இறைவ‌ன‌ன்றி வேறு எவ‌ர் எம்மை பாதுகாத்திட‌ இய‌லும்?

நிச்சயம் இது போன்ற சம்பவங்கள் உங்கள் வாழ்நாட்களில் குறிக்கிட்டிருக்கலாம். இங்கு எழுதுங்கள் நாமும் தெரிந்து கொள்வோம்.

மலரும் நினைவுகள் ப‌ல‌ வித‌ம் ஒவ்வொன்றும் ஒரு வித‌ம்.


-மு.செ.மு.நெய்னா முஹம்மது

26 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n): உம்மாடி ஒரே பட படப்பா வருதுமா பயமா இருக்கு! மாலமவதி நேரம் கழியட்டும் அப்புறமா படிச்சுட்டு கருத்து போடுறேன்

Yasir said...

சகோதர் நெய்னா சொல்வதுபோல்...உணவைக்காட்டிலும் பயமே அதிகம் ஊட்டப்பட்டு வளர்ந்தோம்....அதற்க்கு தோதாக சில சம்பவமும் நடந்து அதனை உறுதி படுத்தின....பிறகு அதனை பதிகிறேன்....பயமும் அதனை நம்புவதும் ஒரு விதமான இணைவைப்புதான்..அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்...நன்றாகவும் பயமாகவும் நகைச்சுவையாகவும் எழுதி உள்ளீர்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இதுவ‌ரை வாழ்நாளில் பேய்பிடித்த‌ ம‌னித‌ர்க‌ளை பார்த்திருக்கிறேன். ஆனால் அவ‌ர்க‌ளை பிடித்த‌ பேயை ஒரு த‌ட‌வை கூட‌ பார்த்த‌தில்லை. அத‌னால் பிடிக்காத‌ பேயை நீங்க‌ள் பார்த்திருக்கிறீர்க‌ளா? என்று யாரும் கேட்டுவிடாதீர்க‌ள்.//

அட ஆமா ! இதுவரை நானும் பார்த்ததில்லையே !?

//எவரேனும் இரவில் நான் மைத்தாங்கரையில் (மையவாடி) தனியே பாய் போட்டு படுத்து வருவேன். இரவில் குளக்கரையில் தனிமையில் படுத்துறங்குவேன் என்று வீராப்பு பேசி சவால் விட்டு அதில் வெற்றி கண்டவர்கள் யாரேனும் என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. நீங்கள் கண்ட யாரேனும் உண்டா?//

பள்ளி கூடத்தில் படிச்சுகிட்டு இருந்த நாட்களில் ஒரு முறை மரைக்காப்பள்ளி மைத்தாங்கரையில் இஷா தொழுகைக்கு பிறகு மையத்தை அடக்கம் செய்து விட்டு வெளியில் வரும்போது செருப்பை மையத் அடக்கம் செய்த இடத்திற்கு அருகில் விட்டு வந்துவிட்டதை அறிந்து நான் எடுக்கச் சென்றேன் இருட்டில் சிறிய அளவு உயரம் கொண்ட தடுப்புச் சுவரைத் தாண்டும் போது கீழே விழுந்து விட்டேன், எனது முழங்கையில் அடிபட்டு லேசாக ரத்தம் வந்துவிட்டது சத்தம் போட்டதும் பெரியப்பா ஓடிவந்து விட்டார்கள் அப்புறம் கழுவி விட்டு வீட்டுக்கும் வந்து விட்டேன்.

அடுத்த நாள் காலை எழுந்திருக்க முடியவில்லை, உடம்பெல்லாம் வலித்தது, வாப்பிச்சா பக்கத்தில் உட்கார்ந்து இருந்தார்கள் இவர்கள் எப்படி இங்கே என்று நான் சுதாகரிக்கும் முன்னரே புரிந்து போனது. அன்று அதிகாலையிலேயே எனது பெரியப்பா என்னை வந்து பார்த்து விட்டுச் சென்றிருக்கிறார்கள், முந்தைய இரவே எனது வாப்பிச்சாவிடம் அப்போது நடந்ததை சொல்லியிருக்கிறார்கள் ஒரே அலம்பல் மைத்தாங்கரைக்கு போனதாலேதான் இப்படியெல்லாம் (ஆமாம் அவர்கள் சொல்வதும் சரிதானே) அதற்காக ஏராளமான பெயர்களைச் சொல்லி எதோ ஒன்னுதான்னு குத்தம் சொல்லிகிட்டு இருந்தாங்க ஆனால் நான் ஒன்னுமே அங்கே பார்க்கலைன்னு சொன்னேன் அதெல்லாம் உனக்கு ஒன்னும் தெரியாதுன்னும் சொன்னார்கள் !!! இது வரைக்கும் தெரியலையே

MSM(n) பழசு ஞாபகத்திற்கு வந்திடுச்சு !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நெய்னாவுக்கு மலரும் நினைவுகள் ப‌ல‌ வித‌ம் ஒவ்வொன்றும் ஒரு வித‌ம். அவை எல்லாமே அருமை தான்.
பெற்றோர்கள் பக்குவமாக எடுத்துச்சொல்லி குழந்தையை தன் வசப்படுத்தாமல் ஈஸியாக காணாததையெல்லாம் பயமுறுத்திச் சொல்லி சட்டென்று தன்வசப்படுத்த மேற்கொண்ட முயற்சிதான் பல்வேறு இன்னல்களுக்கு காரணம்.
என் உம்மாவின் பயமுறுத்தலையும் தாண்டி என் அப்பாவின்(மர்ஹூம் மு.செ.மு.சேக்காதி அப்பா)மிகச்சிறந்த அறிவுரையால் கிட்டத்தட்ட பயம் என்பதே எனக்கில்லை நெய்னா.அல்ஹம்துலில்லாஹ்.
நம் குழந்தைகளை காணாததுக்கெல்லாம் அச்சமூட்டாமல் பயனுள்ள முறையில் எடுத்துச் சொல்லி பக்குவமாக தன் வசப்படுத்துவதன் மூலம் அவர்களின் எதிர்காலம் எப்போதும் நிச்சயம் வெளிச்சமாகவே இருக்கும்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

சகோதரர் மு.செ.மு.நெய்னா முஹம்மது : சிறு வயதில் நடந்தவை அனைத்தையும் மறக்காமல் விரிவாக தெளிவாக தங்களுக்கு நடந்ததையும், நண்பர்களுக்கு நடந்ததையும் பதிந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது நல்ல காரியமே! மக்கள் திருந்தவும் விழிப்புணர்வு பெறவும் நல்லதொரு வாய்ப்பாக அமையட்டும்.


பேய்??? இஸ்லாமிய பார்வையில்!!!

பயம் மனிதன் கூடவே உள்ள ஒருவித வியாதி. உடம்பில் எத்தனையோ வியாதியைப்போல் பயமும் ஒரு வியாதிதான்.

வல்ல அல்லாஹ்வை நம்பும் ஒருவன் பேயை நம்பக்கூடாது. பேய் இருப்பதாக நம்பும் ஒருவன் அல்லாஹ்வை நம்பக்கூடாது.

ஒருவர் மரணித்துவிட்டால் இந்த உலகிற்கும் அவருக்கும் இடையில் திரை இருக்கிறது. அதை மீறி வெளியே வரமுடியாது. பேய் இருக்கா இல்லையா என்பதை அல்லாஹ்வின் வசனம் மூலமே தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புவாயாக! என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தைதான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது. (அல்குர்ஆன் : 99,100)

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் : 39:42)

மரணித்த உயிர் இறைவனின் வசம் உள்ளது. என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது. இறைவனை மீறி இறந்த உயிர் பூமிக்கு வந்து மற்றவர்களின் உடலில் வரமுடியாது. வெளியில் நடமாடவும் முடியாது.

பேய் இருக்கிறது என்று நம்பி விட்டால் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார். வல்ல அல்லாஹ் நம் ஈமானை உறுதிபடுத்தட்டும்.

அதிரை என்.ஷஃபாத் said...

அலாவுதீன் காக்கா,

கீழ்க்காணும் இரண்டு வாக்கியங்களை எழுதி இருப்பது எதன் அடிப்படையில் ?
/*வல்ல அல்லாஹ்வை நம்பும் ஒருவன் பேயை நம்பக்கூடாது. பேய் இருப்பதாக நம்பும் ஒருவன் அல்லாஹ்வை நம்பக்கூடாது*/
/*பேய் இருக்கிறது என்று நம்பி விட்டால் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார்*/


இறைத்தன்மையையும் பேய் மீதான நம்பிக்கையையும் எப்படி சமப்படுத்தி இருக்கின்றீர்கள் ? பேயை நம்புவதற்கும் அல்லது பேயை பயப்படுவதற்கும் இறைவனை நம்புவதற்கும் அல்லது இறைவனை பயப்படுவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கின்றது. பேயை விடுங்கள், பலருக்கு இருள் என்றாலே பயம். இருளை பயப்படுவர்.. அல்லாஹ் இருக்கின்றான் என்று இருளில் தைரியமாக நடப்பவர்களும் இருக்கின்றார்கள். இருளில் செல்ல பயப்படுகிறவர்களும் இருக்கின்றார்கள். இருளுக்கு பயப்படுவதால், அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கின்றது ?

Meerashah Rafia said...

//பேய் இருக்கிறது என்று நம்பி விட்டால் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார். வல்ல அல்லாஹ் நம் ஈமானை உறுதிபடுத்தட்டும்.//

என் கண்ணுக்கு தெரிந்த இரண்டு சம்பவத்தால் எனக்கு ஒரு சந்தேகம்..

1)நான் ஆறாம் வகுப்பு/ஏழாம் வகுப்பு மன்னார்குடி விடுதியில் படிக்கும்போது தரையில் மேலும், கீழுமாக இரண்டு அடுக்காக படுத்திருப்போம். அப்பொழுது என் தலைக்கு மேல்வாட்டில் படுத்திருந்த நபர் நடு ராத்திரியில் திடீர் என்று கத்தினார்..நான்தான் ஈஸ்வர் வந்திருக்கேன், அது செய்ய போறேன் இது சிய போறேன் என்று..ஆனால் அவர் உண்மை பெயர் ஷேக். பிறகு ஹஜரத் வந்து ஓதிய பிறகு சிறுது நேரத்தில் குணமாகி தூங்கினார்..

2)எனது மச்சான் எதையோ பார்த்து பயந்தார்..பின் பல நாட்களாக உயிருடன் உள்ள கோழியின் ரத்தத்தை கேட்பார். முழு கோழியை தன வாயால் கடித்து ரத்தத்தை குடிக்கும் அளவிற்கு ஒரு வெறி அவரிடம் இருந்தது..இதுபோல் பல விஷயம் அவர் செய்தார். இத்தனைக்கும் சாதரணமாக அவர் மிக மிக சாதுவான ஒரு நபர்..

ஆதலால் எனக்கு இரு சந்தேகம்..
1)பேய்க்கும், ஜின்னிற்கும் வித்தியாசம் உண்டா இல்லையா?
2)நான் பார்த்தவை பேயா, ஜின்'னா?


Abu Tha`labah al-Khushni says that the Prophet (peace and blessings be upon him) says: “The jinn are of three types: a type that has wings and they fly through the air; a type that looks like snakes and dogs; and a type that stops for a rest then resumes its journey.” (Reported by At-Tahawi in Mushkil Al-’Athar)

The food and drink of jinn

Ibn Mas`ud reports that the Prophet (peace and blessings be upon him) says: “There came to me an inviter on behalf of the Jinn and I went along with him and recited to them the Qur’an.” He (the narrator) said: The Prophet then went along with us and showed us their traces and traces of their embers. The Jinn asked the Prophet about their provision and he said: “Every bone on which the name of Allah is recited is your provision. The time it will fall in your hand it would be covered with flesh, and (you can have) all the droppings as food for your animals.” The Prophet (peace and blessings of Allah be upon him) said, “So do not use (these things) for cleaning yourselves (after relieving oneself), for they are the food and provision of your brothers (Jinn).” (Reported by Muslim)

The dwelling-places of the jinn

The jinn live where we do live on this earth. They are mostly to be found in ruins and unclean places like bathrooms, dunghills, garbage dumps and graveyards. Hence the Prophet (peace and blessings be upon him) taught us to take precautions when entering such places, by reciting the adhkar (mentioning Allah’s Name) prescribed by Islam.

In a number of Hadiths from the Messenger of Allaah Salallaahu alayhi wasallaam, recorded by Imaam Ahmad and Al-Bayhaqi, it is reported that he met a boy who was possessed. So the Prophet Salallaahu alayhi wasallaam began saying, "Come out, O enemy of Allaah. Come out, O enemy of Allaah." (Ibn Majah no.3548)

இந்த பச்ச புள்ளைய பயமுறுத்தாம யாராச்சும் பதில் தெரிஞ்சா சொல்லுங்கோ..மார்க்க அறிங்கரா இருந்தா மேலும் சிறந்தது..

sabeer.abushahruk said...

பயம் பற்றிய எம் எஸ் எம்மின் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்களும் பின்னூட்ட சம்பவங்களும் பலபேருக்கு நடந்தவைதான். சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள் நெய்னா.

தம்பி ஷஃபாத்,
மரணித்தவர்களின் உயிர் இறைவனின் வசம் உள்ளது என்பதை அலாவுதீன் தந்துள்ள இறை வசனங்கள் ஆணித்தரமாக சொல்வதால், அவை பேயாக பூமிக்கு வரவே முடியாது. ஆதலால் இறந்தவர்களின் பேய் இருப்பதாக நம்புவது இறை வசனத்திற்கு எதிரான நிலைப்பாடு என்பதால் இஸ்லாத்தைவிட்டு வெளியேறினார் என்பது சரிதானே?

மற்றபடி, நீங்கள் குறிப்பிடும் இருளை பேயென்றோ, பயப்படத்தகு நோயை பேயென்றோ அஞ்சுபவர் இஸ்லாத்தைவிட்டு வெளியேறினர் என அலாவுதீன் சொல்லவில்லை. அப்படியொரு தவறான உரிமையை அவன் எடுத்துக்கொள்ளவில்லையென்றே தோன்றுகிறது. இறந்தவரின் பேய் மட்டும்தான் அவன் பேசும் உள்ளடக்கம்.

அப்புறம், எனக்குத் தெரிந்த ஒருவர் அவர்தம் அடங்காப்பிடாரி மனைவியை பேய் என்றுதான் சொல்வார். ரொம்ப பயப்படுவார். அவரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறினார் என்று அலாவுதீன் சொன்னால் நான் அவனை கண்டிக்க அபுதபி போய்விடமாட்டேனா:)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா : ஆமாம் காக்கா ! ஒரு சிலர் / பலர் "ஏன் பிசாசு மாதிரி கத்துறே"ன்னு சொல்றாங்களே... அவங்க அதனையும் DTH சவுண்டில் நல்லா தெள்ள்ள்ளிவா நுனுக்கமா கேட்டிருப்பாங்களோ !?

ஏன் நடுத்தெருவில் (!!??) அதுவும் நடுவில் இருக்கும் தெரு அங்கேயே ஒரு சந்திலிருந்து மற்றொரு சந்திற்கு செல்ல என்ன முஸ்தீபுகள் செய்ய வேண்டும் என்று மேலே MSM(n) சொல்லியிருக்கிறார்...

சின்ன வயதில் எங்கள் பழைய வீட்டிலிருந்து வெளியானதும் ஒரு வீடு தள்ளி நான்கு சந்துகளின் சிறிய சந்திப்பு அதனை இரவு நேரங்களில் கடக்க எத்தனை போராட்டங்கள் அதனைத் தாண்டி விட்டு விட்டு வந்துடுமான்னு வயசானவங்களே துணைக்கு அழைப்பார்கள் இந்த பயம் கண்டிப்பாக பேய் அல்லது பிசாசு என்றிருக்காது, காரணம் சந்திப்பின் மற்ற சந்திலிருந்து எதிர்பாராமல் ஏதும் வந்திடலாம் அல்லது நிகழ்ந்திடலாம் என்ற அச்சமே ! :)

ZAKIR HUSSAIN said...

பேய் பற்றி பேயாய் கத்தி சில கருத்துக்கள் இங்கு பதியப்பட்டாலும், பேய் ஒரு வகையில் ஒரு "குரு". எங்கள் தெரு மைத்தாங்கரையை பின்னிரவில் கடக்கும் போது சில பேர் அபஸ்வரமாய் பாடிக்கொண்டு போவார்கள். எனவே "குரு நாதர் இல்லாத குயில் பாட்டை" பேய்தானே கற்றுத்தருகிறது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// "குரு நாதர் இல்லாத குயில் பாட்டை" பேய்தானே கற்றுத்தருகிறது ///

அசத்தல் காக்கா : ஹாஹ்ஹா... ! சரியான டைமிங் !

அந்த "குரு நாதரை"த்தான் தேடித் தேடி பார்த்தும் கிடைக்க மாட்டேங்கிறாரே ! :))

Yasir said...

//அவரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறினார் என்று அலாவுதீன் சொன்னால் நான் அவனை கண்டிக்க அபுதபி போய்விடமாட்டேனா:)// ஹாஹாஹா....தம்பி ஷஃபாத் உங்கள் டவுட் கிளியர் என்று நினைக்கின்றேன்...

Yasir said...

நான் சொன்ன “இணைவப்பு” என்ற வார்தைக்கு அழகான ஆதாரங்களை அள்ளிதந்த அலாவுதீன் காக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Yasir said...

பேயாடுவதும்..அது சம்பந்தமான சகல விளையாட்டுகளும் ஒரு விதமான மனநோய்தான் + சைத்தானின் செயல்தான்..அரபு நாடுகளில் யாரும் பேயாடியதாக நான் கேள்விப்படவில்லை....நம் நினைப்பும்,சிந்தனைகளும் நாம் வாழும் வளர்க்க பட்ட சூழ்நிலையும்தான் இதுபோன்ற செயல்களை நம்ப வைக்கின்றன ..டிவி சீரியல்கள் வந்த பிறகு பெண்கள் பேயாடுவது பெருமளவு குறைந்து இருக்கிறது..ஏன் ?? ...எங்கள் குடும்பத்தில் ஒருவர் பேய் ஆடுவார்...தமிழ் கூட எழுத படிக்க தெரியாத அவர் ஆங்கிலத்தில் பேய் ஆடும்போது பேசுவார்...நான் குரானை எடுத்து ஒத ஆரம்பித்தால் என் உடம்பு எரிகிறது நிறுத்து என்பார்....இது ஒரு சைத்தானின் நாரதர் கேம்தான் என்பது எங்களுக்கு தெரியும்...நம்மை வழிகெடுக்க சைத்தான் தன்க்கு உள்ள சில சக்திகளை வைத்து சித்து வேலை செய்வான்...நாம்தான் நம் ஈமானை பத்திரபடுத்தி வைத்து கொள்ளவேண்டும்..அல்லாஹ் காப்பதனும்...

ZAKIR HUSSAIN said...

To Bro Meerasha,

///அப்பொழுது என் தலைக்கு மேல்வாட்டில் படுத்திருந்த நபர் நடு ராத்திரியில் திடீர் என்று கத்தினார்..நான்தான் ஈஸ்வர் வந்திருக்கேன், அது செய்ய போறேன் இது சிய போறேன் என்று..///

அவருக்கு நிச்சயம் வீட்டு ஞாபகம் [Home Sick] வந்திருக்கனும்., இப்படியெல்லாம் டகால்ட்டி வேலை செய்தால் வீட்டுக்கு கூட்டியாந்து பிரியாணி போடுவாய்ங்கல்ல ..[ அவர் வேரெ "பாய்" னு சொல்லிட்டீங்க... நிச்சயம் தான். வேனும்னா அதை நான் பேய் தலையில் அடிச்சி சத்தியம் பன்றேன்

Yasir said...

//எனவே "குரு நாதர் இல்லாத குயில் பாட்டை" பேய்தானே கற்றுத்தருகிறது//ஜாஹிர் காக்கா வீடு மையத்தான்கரைக்கு பக்கத்து வீடுதான்...பேயின் முழு பழக்க புழக்கங்களும் காக்காவிற்க்கு தெரிந்து இருக்கும்

காக்கா மனநோயைபற்றியும் அதன் காரணங்களை பற்றியும் ஒரு ஆக்கத்தை எழுதுங்கள்

ZAKIR HUSSAIN said...

சகோதரர் யாசிர் விருப்பம் எப்போதும் மற்றவர்களுக்கும் நன்மையாக இருக்கும். எனக்கு தெரிந்த ஒரு டாக்டர் மலேசியாவின் மிக முக்கியமான சைக்யாட்ரிஸ்ட். அவரிடம் அடுத்த வாரம் லன்ச் அப்பாயின்ட்மென்ன்டில் கதைத்து பிறகு கட்டுரையாக வெளியிடலாம். சரியா யாசிர்?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் நெய்னா முகம்மது,

பயம் பற்றி நகைச்சுவையாக எல்லோரும் ரசிக்கும்படி எழுதியிருந்தாலும், இது ஒரு சீரியஸான சப்ஜெட்.

சிறுவயதிலிருந்தே இறையச்சத்தை ஊட்டி வளர்க்கு நிலையை உருவாக்க வேண்டும். பேய், பிசாசு, முனி, அம்மாக்கல்லன் என்று பல போலி கேரக்டர்களை உருவாக்கி பயமுறுத்துவதால் என்னவோ நம் சமுதாயம் இன்று பல இன்னல்களை சந்தித்துவருகிறது. முன்னேற்றத்திற்கு தடை என்று சொன்னாலும் தவறில்லை என்று நம்புகிறேன்.

சிறுவயதிலிருந்தே இறைவனுக்கு மட்டுமே அஞ்சிக்கொள், என்ற உணர்வை ஊட்ட வேண்டும், இவ்வுலகில் மட்டுமல்ல மறுமையிலும் வெற்றி என்ற கருத்தை ஆழமாக இளம் உள்ளத்தில் பதிய வைக்க வேண்டும்.

இதை தவிர்த்து பேய் இருக்கா? இல்லையா? என்ற புலனாய்வு எல்லாம் நம்முடைய நேரத்தை வீண்டிக்கும் செயலே அன்றி வேறில்லை.

நெய்னா முகம்மது, நீங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் போல் என்னிடமும் சில சம்பவங்கள் நிறையவே உள்ளது. நேரம் கிடைத்தால் பின்னூட்டமிடுகிறேன்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நான் எழுதிய கருத்திற்கு சில விளக்கங்கள்: அதிரை என்.ஷஃபாத் சொன்னது...

///இறைத்தன்மையையும் பேய் மீதான நம்பிக்கையையும் எப்படி சமப்படுத்தி இருக்கின்றீர்கள் ? பேயை நம்புவதற்கும் அல்லது பேயை பயப்படுவதற்கும் இறைவனை நம்புவதற்கும் அல்லது இறைவனை பயப்படுவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கின்றது. பேயை விடுங்கள்இ பலருக்கு இருள் என்றாலே பயம். இருளை பயப்படுவர்.. அல்லாஹ் இருக்கின்றான் என்று இருளில் தைரியமாக நடப்பவர்களும் இருக்கின்றார்கள். இருளில் செல்ல பயப்படுகிறவர்களும் இருக்கின்றார்கள். இருளுக்கு பயப்படுவதால்இ அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கின்றது ? ///

தங்களின் கேள்விக்கு பதில் சகோதரர் சபீர் தந்திருக்கிறார்.

/// தம்பி -- ஷஃபாத்
மரணித்தவர்களின் உயிர் இறைவனின் வசம் உள்ளது என்பதை அலாவுதீன் தந்துள்ள இறை வசனங்கள் ஆணித்தரமாக சொல்வதால் அவை பேயாக பூமிக்கு வரவே முடியாது. ஆதலால் இறந்தவர்களின் பேய் இருப்பதாக நம்புவது இறை வசனத்திற்கு எதிரான நிலைப்பாடு என்பதால் இஸ்லாத்தைவிட்டு வெளியேறினார் என்பது சரிதானே? ///
*******************************************************************************

மேலதிகமாக நான் கூறுவது: இருளை கண்டு மட்டும் நாம் பயப்படவில்லை இன்னும் நிறைய காரியங்களில் நமக்கு பயம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பேயை நம்புவதற்கும் - இறைவனை நம்புவதற்கும் - இருளை கண்டு பயப்படுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. பேய் இஸ்லாத்தின் கொள்கைப்படி கிடையாது என்று சொன்ன பிறகு நம்புவேன் என்பது ஈமானுக்கு சோதனையாகி விடும். வல்ல அல்லாஹ் தெளிவாக சொன்ன பிறகும் நாம் நம்புவது கூடாது. இருளுக்கு பயப்படுவதாலும் வேறு எதற்கு பயப்பட நேர்ந்தாலும் நமது ஈமான் பாதிக்கப்படாது. பயம் வேறு நம்பிக்கை என்பது வேறு.

Meerashah Rafia said...

ZAKIR HUSSAIN

//அவருக்கு நிச்சயம் வீட்டு ஞாபகம் [Home Sick] வந்திருக்கனும்., இப்படியெல்லாம் டகால்ட்டி வேலை செய்தால் வீட்டுக்கு கூட்டியாந்து பிரியாணி போடுவாய்ங்கல்ல ..//

சரி எப்புடியோ உங்களால முடிஞ்ச அளவு சாமர்த்தியமா சமாளிச்சிட்டீங்க..(அவர் அடுத்தநாள் அதபத்தி அடுத்தநாள் அத பத்தி பேசவும் இல்லை, ஊருக்கு போகவும் இல்லை).
நான் சொன்ன இரண்டாவது ஆளுக்கு 'ரத்த வறுவல் மீது ஆசைன்னு சொல்வீங்களோ!?!'

எது எப்படியோ நமதூரில் சொல்லப்படும் பேய் என்பது இஸ்லாமியப்படி சைத்தான் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் விளக்கமளிக்கபட்டுள்ளது..

http://www.makkamasjid.com/index.php?option=com_content&view=article&id=162:qanda-online&catid=64:peipisasu

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அவரிடம் அடுத்த வாரம் லன்ச் அப்பாயின்ட்மென்ன்டில் கதைத்து பிறகு கட்டுரையாக வெளியிடலாம். சரியா யாசிர்? //

அதிரைக்கு செல்ல பயனம் காசு கொடுப்பதற்கு முன்னரே தானே காக்கா ! :)

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
--------------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ நெய்னா சொல்வது போல் // சிறுவர்கள் இருக்கும் வீட்டிலெல்லாம் அவர்களுக்கு தாய்மார்கள் சோறூட்ட அன்புடன் அம்புலிமாவை (நிலாவை) காட்டி ஊட்டுவார்கள். அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு சற்று பயம் காட்டும் விதமாக மாக்காண்டி,பூச்சாண்டி,பேயி, சாக்குமஸ்தான், பிள்ளை பிடிப்பவன் என்று ஏதேதோ சொல்லி அச்சத்துடன் உணவை ஊட்டி விடுவார்கள். உணவுடன் பயத்தையும் உண்டு வளர்ந்தோம்.//

அதன் தாக்கம்தான் ஸ்கூலுக்கு போனா வாத்தியாருக்கு பயம், ஆஸ்பத்திரி என்றால் ஊசிக்கு பயம்,ரோட்டில் கலவரம் என்றால் போலிசுக்கு பயம்,இது போன்ற எல்லா விசங்களுக்கு பயந்து நம் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால் நாம் தவறு செய்யும்போது அல்லாஹ்வுடைய பயம் இல்லை. தொழுகைக்காக தக்பீர் கட்டினால் அல்லாஹ்வுடைய பயம் இல்லை.

ஆதலால் எனக்கு இரு சந்தேகம்..

1)பேய்க்கும், ஜின்னிற்கும் வித்தியாசம் உண்டா இல்லையா?

2)நான் பார்த்தவை பேயா, ஜின்'னா?

சகோ மீராஷா: இன்று மனிதர்கள் தான் பேயாக இருக்கிறாகள் அல்லாஹ் குர்
ஆனில் மனிதர்களையும்,ஜின்களையும் என்னை வணக்குவதற்க்காக படைத்தேன் என்று கூறிகிறான்.

சுலைமான் நபிக்குத்தான் அல்லாஹ் ஜின்னை வசப்படுத்தி கொடுத்தான். இன்று சில மூடர்கள் அவரிடம் ஜின்னு இருக்கிறது இவரிடம் ஜின்னு இருக்கிறது என்று உளறுகிறார்கள்.

புதுமனைத் தெரு பெண்கள் மதரசா பக்கம் பேய் இருக்கிறது இரவில் அந்தப் பக்கம் போவாதிய என்பார்கள் நான் வீட்டுக்கு போவது வருவதெல்லாம் சில நேரங்களில் இரவு 12 & 1 மணிக்கெல்லாம் அந்தப் பக்கம்தான். இதுவரையிலும். என் கண்ணுக்கு பேயும் ஜின்னும் தெரியவில்லை எங்கு போனாலும் ஆயத்துகுர்சியை ஓதுங்கள் சைத்தான் உங்களை நெருங்க மாட்டன்.

லெ.மு.செ.அபுபக்கர்

அலாவுதீன்.S. said...

////sabeer.abushahruk சொன்னது…

மற்றபடி, நீங்கள் குறிப்பிடும் இருளை பேயென்றோ, பயப்படத்தகு நோயை பேயென்றோ அஞ்சுபவர் இஸ்லாத்தைவிட்டு வெளியேறினர் என அலாவுதீன் சொல்லவில்லை. அப்படியொரு தவறான உரிமையை அவன் எடுத்துக்கொள்ளவில்லையென்றே தோன்றுகிறது. இறந்தவரின் பேய் மட்டும்தான் அவன் பேசும் உள்ளடக்கம்.

அப்புறம், எனக்குத் தெரிந்த ஒருவர் அவர்தம் அடங்காப்பிடாரி மனைவியை பேய் என்றுதான் சொல்வார். ரொம்ப பயப்படுவார். அவரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறினார் என்று அலாவுதீன் சொன்னால் நான் அவனை கண்டிக்க அபுதபி போய்விடமாட்டேனா:)///

முஸ்லிம்களுக்கு பேயைப் பற்றிய மார்க்க தெளிவு இல்லாத காரணத்தால்தான் (மார்க்கத்தை நமக்கு சரியானபடி போதிக்க ஆள் இல்லாத காரணத்தால்) இப்படி ஆரம்ப காலம் முதல் நம் மனதில் பேயின் பயம் நம்மை விட்டு போகவில்லை.

பேய் என்று சொல்வதால், இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்று சொல்லமுடியாது. ஆனால் இஸ்லாத்தில் நம்பிக்கை ஈமான் என்பது முக்கியம் அல்லவா?

மனைவியை, பிள்ளைகளை நிறைய நேரங்களில் : நீ ஒரு பிசாசு, அடங்காப்பிடாரி பேய் என்று சொல்கிறார்கள்.

நாம் பேயை பார்த்ததில்லை நம் வாய் வார்த்தைகளில் பேய் என்று திட்டி கொண்டு இருக்கிறோம். நாம் பேய் என்று திட்டுவதையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.!(((( பயத்தின் காரணமாக யாரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடமாட்டார்கள்.))))


இன்றுவரை பேய், பிசாசு என்று திட்டியவர்கள்!
நோயை பார்த்து பேய் என்று அஞ்சியவர்கள்!
இருளை கண்டு பேய் என்று அஞ்சியவர்கள்!
தர்கா பக்கங்களில் நான் அவள், அவன் வந்திருக்கிறேன் என்று உருண்டு கொண்டு இருந்தவர்களை பார்த்தவர்கள்! அனைவரும்:::

இந்த குர்ஆன் வசனத்தை மனதில் வைத்து தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

******உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும்இ மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் : 39:42)*********

மேலதிக விளக்கம் தேவைப்பட்டால் பேய் பிசாசு உண்டா? என்ற புத்தகத்தில் விபரமாக உள்ளது. (இந்த புத்தகம் சென்னையில் கிடைக்கிறது). விபரம் தேவைப்படுபவர்கள் வாங்கிப்படிக்கலாம்.

Yasir said...

//அப்பாயின்ட்மென்ன்டில் கதைத்து பிறகு கட்டுரையாக வெளியிடலாம். சரியா யாசிர்?// ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் காக்கா..பலபேர்க்கு மனத்தெளிவையும் அது கொடுக்கட்டும்

அலாவுதீன்.S. said...

பேய் பிசாசு உண்டா? என்ற நூல் இணையத்தில் கிடைத்தது. இந்த லிங்கில் சென்றால் விபரமாக தெரிந்து கொள்ளலாம்.

http://onlinepj.com/books/pey_pisasu_unda/

Anonymous said...

சகோதரர் : நெய்னா சொன்னது போல் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை பேய்,பிசாசு,அம்புலிமாவை (நிலாவை) காட்டி ஊட்டுவார்கள். அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு சற்று பயம் காட்டும் விதமாக மாக்காண்டி,பூச்சாண்டி,பேயி, சாக்குமஸ்தான், பிள்ளை பிடிப்பவன் என்று ஏதேதோ சொல்லி அச்சத்துடன் உணவை ஊட்டி விடுவார்கள். உணவுடன் பயத்தையும் உண்டு வளர்ந்தோம்.ஆனால் இன்றை காலத்து பிள்ளைகளுக்கு பயம் என்றால் என்னாண்டு கூட தெரிவதில்லை மாட்டங்குது.பேய்,ஜின்கல் உண்டா அதை நெய்னா பார்த்தியிருக்கிறாரா.நான் இதுவரைக்கும் பேயும்,ஜின்னையும் பார்த்ததுயில்லை.பயம்புருத்திதான் நாம் சிறு பிள்ளைகளாக
இருக்கும் பொழுது வளர்ந்தோம்.ஆனால் இந்தகாலத்து பிள்ளைகளுக்கு நாம் பயம் புருத்தினால் அட போமா பேயாவது,பிசாசாவது நான் எதற்கும் பயப்புட மாட்டேமா.நீ கொன்ஜ நேரம் சும்மா இரிமா எனக்கு எல்லாம் தெரியும்.நான் எதற்கும் பயப்புடுற ஆள் இல்லம்மா.மாலமவதி நேரம் வெளியில் போகாதடா பேய்,பிசாசு,பிடித்திவிடும் என்றல்லாம் சொல்வார்கள்.ஆனால் இப்பொழுது அது சொல்வதற்கு ஆள் இல்லை இனிதான் தேடனும்.
மீன் சாப்பிட்டு விட்டு கை, வாயை நன்கு கழுவி நறுமணம் பூசாமல் வெளியில் செல்வதனாலும் மற்றும் இரவில் மல்லிகைப்பூ நறுமண சென்ட் பூசி தனியே செல்வதனாலும் பேய் எளிதில் நம்மை பிடித்து விடும் என்று பயமுறுத்துவார்கள். அதனால் மீன் சாப்பிட்டு பின் வெளியில் கிழம்பும் சமயம் பாண்ட்ஸ் பவுடரை நன்றாக பூசி சென்றோம். என்ன செய்வது? யார்ட்லி பவுடர் எல்லாம் அப்பொழுது புழக்கத்தில் இல்லை.

மு.செ.மு.அபூபக்கர்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.